Monday, December 27, 2010

பெரிய வங்கிகளின் பிடியில் உலக வர்த்தகம்

அமெரிக்காவை உலக அதிகார மையமாக உலகமே பார்க்கிறது. அமெரிக்காவைவிட ஒரு பெரிய அதிகார மையம் உலகில் உருவாகி இருப்பது நம்மில் பெரும்பாலோருக்குத் தெரியாது. அது என்ன பெரிய அதிகார மையம் என்று அறிய ஆவலாக இருக்கிறதா? தொடர்ந்து இந்த பதிவைப் படியுங்கள்.

உலகிலேயே பணக்கார நாடாக இருக்கும் அமெரிக்காவின் ஒட்டு மொத்த GDP மதிப்பு 15 ட்ரில்லியன் டாலர்கள். ஆனால் 700 ட்ரில்லியன் டாலர் பெருமான வர்த்தகங்களை 9 வங்கிகள் மட்டும் வெளி உலகத்துக்குத் தெரியாதபடி செய்கிறது என்றால் அந்த வங்கள் எவ்வளவு வலிமையானதாக இருக்கும் என்று நீங்கள் யூகித்து கொள்ளுங்கள்.

தற்போது உலகிலேயே அதிக லாபம் கொழிக்கும் தொழிலாக இருப்பது வங்கித் துறை தான்(பொருளாதார சரிவின்போது பெரிய வீழ்ச்சி ஏற்பட இருந்தாலும் அரசாங்கத்தை மிரட்டி தங்களைக் காப்பாற்றிக் கொள்வது தொடர்கதையாகத் தான் இருந்து வருகிறது). கடன் கொடுப்பது, கடன் அட்டை கொடுப்பது, பெரிய அளவில் பணத்தை பல வகையில் முதலீடு செய்து பணம் சம்பாதிப்பது போன்ற வழி முறை தான் அதிக பணம் சம்பாதிக்கும் முறையாக நாம் நினைத்துக் கொண்டுள்ளோம். ஆனால் அதை விட அதிக அளவு பணம் சம்பாதிக்கும் முறை ஒன்று உள்ளது அது தான் பங்குகளைச் சார்ந்த வர்த்தகம். ஆங்கிலத்தில் derivatives என்று கூறுவார்கள்.

எந்தத் தொழிலிலும் ஏற்படக்கூடிய அபாயத்தை குறைக்க காப்பீடு எடுப்பது போல், இதுவும் ஒரு அபாயத்தைக் குறைக்க ஏற்படுத்தப்பட்ட பொருளாதார வழி முறை. நாம் தற்போது அதிகம் கேள்விப்படும் Commodity Tradingம் இதில் ஒரு வகையில் அடக்கம். கடந்த பத்தாண்டுகளில் இந்த derivative வர்த்தகத்தின் மதிப்பு $700 டிரில்லியனைத் தாண்டி விட்டது. இது ஒட்டு மொத்த உலக GDP மதிப்பை விட ($59 டிரில்லியன்) பல மடங்கு அதிகம்!

உதாரணமாக அரிசி சார்ந்த உணவுப்பொருளை உற்பத்தி செய்யும் ஒரு நிறுவனம் (Hotel உரிமையளர்), உலகில் அரிசி ஏற்றுமதி செய்யும் ஒரு நாட்டில் ஏற்படும் இயற்கை சீரழிவு காரணமாக 6 மாதம் கழித்து கடுமையான விலை ஏற்றம் ஏற்படும் என்று அனுமானித்து அந்த விலை ஏற்றத்திலிருந்து தன்னை காத்து கொள்ள வேண்டும் என நினைக்கிறார் என்று வைத்து கொள்வோம்.

மறுபுறம் பெரிய அளவில் நெல் விளைவிக்கும் கம்பெனி அல்லது அரிசி கொள்முதல் செய்து விற்கும் கம்பெனி (Producer) 6 மாதத்திற்குப் பிறகு ஓரளவு லாபம் தரகூடிய விலையில் அரிசியை விற்றால் லாபகரமானதாக இருக்கும் என நினைக்கிறது என்று கொள்வோம்.

உணவுப் பொருளை விற்கும் கம்பெனி (Hotel உரிமையளர்) 6 மாதத்திற்குப் பிறகு சந்தை நிலவரத்தின் போக்கு எப்படி இருக்கும் என்பதைக் கணித்து குறிப்பிட்ட விலைக்கு வாங்க பத்திரம் கொடுப்பார். அதே போல் நெல்லை விளைவிக்கும் கம்பெனி (producer) 6 மாதம் கழித்து அரிசியை குறிபிட்ட விலைக்கு விற்க பத்திரம் கொடுக்கும். உற்பத்தியாளர் பத்திரத்தை வாங்குபவர்க்கு வங்கிகள் மூலம் விற்பார்.

ஆறு மாதத்துக்குப் பின் அரிசியின் விலை, விற்ற விலைக்குக் குறைவாக வந்தால் விற்பவருக்கு லாபம். வாங்கியவருக்கும் அவரால் தாக்குப் பிடிக்க முடிந்த விலையில் வாங்கி இருப்பதால் நட்டம் ஏற்று கொள்ளக் கூடியதாக தான் இருக்கும். அதே நேரம் 6 மாதத்துக்குப் பின் அரிசியின் விலை விற்ற விலையை விட அதிகமானால் வாங்கியவருக்கு லாபம். விற்பவரும் கட்டு படியாகும் விலையில் விற்பதால் விற்பவருக்கு நட்டம் அதிகமில்லை. உற்பத்தியாளர் மற்றும் வாங்கியவர் இருவருக்குமே இந்த ஏற்பாடு நல்லதுதானே என்று உங்களுக்குத் தோன்றும். இந்த வியாபாரத்தில் விற்பவர் மற்றும் வாங்குபவர் மட்டும் இருந்தால் இது நல்லது தான். ஆனால் இடையில் தரகர்களாக வரும் பெரிய வங்கிகளால் தான் பிரச்சனையே!

விவசாயப் பொருட்கள், பெட்ரோல் என்றில்லை, அமெரிக்க வீட்டுக் கடன்கள் கூட இம்முறையில் தான் பெருமளவில் நடை பெருகிறது. உலக அளவில் உணவு பொருட்கள், பெட்ரோல், அமெரிக்க வீட்டு கடன் பத்திர வர்த்தகம் போன்றவற்றின் derivative வர்த்தகத்தின் பெரும்பான்மையான பகுதி நடைபெருவது Inter Continental Exchange(ICE) என்ற அமைப்பின் மூலம் தான்.இந்த வர்த்தகத்தை முழுமையாகக் கட்டுபடுத்துவது JPMorgan Chase, Goldman Sachs, Morgan Stanley, Citigroup, UBS, Barclays, Credit Suisse, Bank of america போன்ற வங்கிகள் மட்டும் தான்.

பங்குச் சந்தையில் நடக்கும் வர்த்தகம் அனைத்தும் மையப்படுத்தப்பட்ட கணிணி மயமாக்கப்பட்டு விட்டதால் பங்கு வர்த்தகத்தில் அந்த நிமிடத்தில் நடக்கும் வர்த்தகம் அனைவருக்கும் தெரியும். ஆனால் derivativeல் நடக்கும் வர்த்தகம் அனைத்தும் ரகசியமாகவே நடக்கிறது. அதாவது தற்போது அரிசிக்கு 6 மாதம் பின் derivative மூலம் விற்கும் விலை வெளி உலகத்துக்கு சரியாக தெரியாது. அது போல் இந்த வர்த்தகத்தில் வங்கிகள் வாங்கும் கட்டணமும் யாருக்கும் தெரியாது. அதன் விளைவு வாங்குபவர்களுக்கும், விற்பவர்களுக்கும் சந்தையின் உண்மை நிலவரம் தெரியாது. வாங்குபவர்களின் விலைக்கும் விற்பவர்களின் விலைக்கும் இடையில் உள்ள வித்தியாசம் வங்கிகள் கைக்கு லாபமாக சென்றடையும். இதன் மொத்த மதிப்பு மிக பெரிய அளவிற்கு இருக்க வாய்ப்புள்ளது. ஒரு சில கணக்குகள்படி பெரிய வங்கிகள் வாங்கும் கட்டணம் மட்டும் $700 பில்லியன் தாண்டி இருக்க கூடும் என்று கருதப்படுகிறது.

இத்தகைய வர்த்தகத்தை கணிணிமயமாக்கி பங்கு வர்த்தகம் போல் செயல்படவும், பிற வங்கிகளை இந்த வர்த்தகத்தின் உள் நுழைய அனுமதிக்கவோ அல்லது கூடுதல் அரசு கட்டுப்பாட்டை கொண்டு வரவோ இந்த வங்கிகள் அனுமதிப்பது இல்லை. அதற்கு அரசாங்கம் எடுத்த முயற்சிகள் அனைத்தும் ஓரளவு தோல்வியிலேயே முடிவடைந்துள்ளது.

இன்னொரு முக்கிய செய்தி இது போன்ற வர்த்தகத்தில் derivativeஐ வாங்குபவர்கள் கட்டாயம் அந்தப் பொருளை வாங்க வேண்டும் என்று இல்லை. அவர்கள் அந்தப் பொருளை கையில் எடுத்துக் கொள்ளாமல் அடுத்தவர்களுக்கு derivative ஆக விற்று விடலாம். அதன் விளைவு யூக வர்த்தகர்கள் (Speculative Traders) பொருளின் விலையைத் தாறுமாறாக ஏற்றிவிட வாய்ப்பு உள்ளது.

அது மட்டுமல்ல ஒரு வங்கி ஒரு derivativeஐ மற்றொரு வங்கிக்கு ஒரு குறிபிட்ட விலைக்கு விற்கும். மீண்டும் அதே வங்கி விற்ற வங்கியிடமிருந்து அதே derivativeஐ கிட்டதட்ட அதே விலைக்கு வாங்கிக் கொள்ளும். இதனால் ஒட்டு மொத்த வர்த்தக மதிப்பு அதிகரித்துக் காட்டப்படும். (வங்கியின் வருமானமும் அதிமாக காட்டப்படும்). இந்த அளவைக் கொண்டு பொருளின் விலை உயர வாய்ப்புள்ளது. அது மட்டுமன்றி இந்த வர்த்தகத்துக்கு கட்டணத்தையும் வங்கிகள் வசூலித்துக் கொள்ளும். அதனால் ஏற்படும் விலை ஏற்றத்தை பொருளை கடைசியாக வாங்கும் சாதாரண மனிதன் தான் கொடுக்க வேண்டும். அதாவது செல்வம் சாதாரண மனிதர்களிடமிருந்து வங்கிக்கு இடம் பெயர்கிறது. இதற்கு சுற்று வட்ட வர்த்தகம் (round trip trade) என்று கூறுவார்கள்.

இதற்கு சிறந்த உதாரணமாக பெட்ரோல் விலை ஏற்றத்தை கூறலாம். 5 பில்லியன் பேரல் கச்சா எண்ணெய் ஒவ்வொரு மாதமும் அமெரிக்காவில் இது போல் derivative மூலம் விற்பனை செய்யப்படுகிறது. ஒவ்வொரு விற்பனைக்கும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால் 40 மில்லியன் பேரல் மட்டுமே வாங்கப்பட்டுள்ளது. அப்படி என்றால் 99.2% விற்பனை வெறும் புத்தகத்தில் தான் நடந்து உள்ளது. அதில் வசூலிக்கப்படும் கட்டணம் அனைத்தும் நுகர்வோர் தலையில் தான் விடிந்துள்ளது. இது ஒரு புறமிருக்க தற்போதைய பொருளாதார வீழ்ச்சியால் எண்ணெய் விலை ஏற்றம் குறைவாக இருப்பதால், அது மேலும் குறையாமல் இருக்க பெரிய எண்ணெய் கம்பெனிகளும், வங்கிகளும் நடுக்கடலில் கப்பலில் சுமார் 100 - 120 மில்லியன் பேரல் எண்ணெயை சேமித்து (பதுக்கி) நிறுத்தி வைத்துள்ளார்கள்.

மேற்சொன்ன speculative Trading மூலம் எண்ணெய் விலையை உயர்த்தி சில மாதம் கழித்து கொள்ளை லாபத்துக்கு விற்பதற்கான வழி முறை இது! பொதுவாக அரசாங்கம் தான் இந்த அளவு எண்ணையை அவசரத் தேவைக்காக சேர்த்து வைப்பது வழக்கம்.

சமீபத்தில் ஐரோப்பாவில் தேவையையும் (24000 டன் - $1 பில்லியன் மதிப்பு) 7 பேர் (வங்கிகளின் இடைத்தரகர்கள் மற்றும் hedge fund) வாங்கி எடுத்துக்கொண்டு கொக்கோவின் விலையை தாறுமாறாக உயர்த்தி மிகுந்த லாபம் கண்டு உள்ளனர். மிக அதிக அளவு பணம் வங்கிகளிடமும், ஒரு சில தனி மனிதர்கள் கைக்கும் செல்வதால் இனி வரும் காலங்களில் இது போன்ற விலை ஏற்றம் பிற உணவுப் பொருட்களுக்கும் உலக சந்தையில் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

உலகின் பெரும்பான்மையான நுகர்வுப் பொருட்களின் ஒட்டு மொத்த வர்த்தகம் ஒரு சில வங்கிகளின் வசம் சென்றுள்ளது. அதன் மதிப்பு உலகின் ஒட்டு மொத்த உற்பத்தி மதிப்பை விட பல மடங்கு அதிகம். பெரிய வங்கிகளின் வளர்ச்சியும் அளப்பறியதாக உள்ளது. மேலை நாடுகளின் அரசின் கடன் சுமையும் தற்போது அதிகரித்து வருகிறது. மேலை நாடுகளின் பொருளாதாரம் வளர்ச்சிப் பாதையை நோக்கிச் செல்லும்போது இந்த வங்கிகளின் வளர்ச்சி நினைத்துப் பார்க்க முடியாததாக இருக்கும். அதன் விளைவு விரைவில் அதிகாரங்கள் மற்றும் அரசாங்கம் எடுக்கும் முடிவுகளைக் கட்டுப்படுத்தும் திறன் அரசிடமிருந்து இந்த வங்கிகளுக்கு இடம் பெயர அதிக வாய்ப்புள்ளது.


--

Sunday, December 05, 2010

இந்தியாவிற்கு வரும் அன்னிய முதலீடு ஏற்படுத்தும் விளைவுகள்

பெடரல் ரிசர்வின் Quantitative Easing மற்றும் அதனால் இந்தியாவிற்கு வெள்ளமென பாயும் குறுகிய கால கணிப்பு சார்ந்த்த அந்நிய முதலீடு பற்றி முந்தைய பதிவுகளில் எழுதி இருந்தேன்.


இந்தியாவிற்கு தேவையான முதலீடு எப்படி பட்டது என்றும் இந்த கணிப்பு சார்ந்த முதலீடுகளால் இந்தியாவிற்கு ஏற்படும் விளைவுகள் பற்றியும் நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் Joseph Stiglitz, Economic Times பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில் அழகாக கூறியுள்ளார் . அனைவரும் பார்க்க வேண்டிய பேட்டி இது.



--

Sunday, November 28, 2010

அயர்லாந்து பெயில் அவுட் - நடந்தது என்ன?

தற்போது உலகெங்கிலும் பரபரப்பாக பேச படும் செய்தி அயர்லாந்து பெயில் அவுட். வெளிப்படையாக செய்தியை பார்ப்போர் எல்லாம் அனுமானிப்பது அயர்லாந்து அரசு பொறுப்பில்லாமல் வரவுக்கு மீறி செலவு செய்து நாட்டை படு பாதாளத்தில் தள்ளி இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய நாடுகளின் உதவியால் மீட்க படுகிறது என்ற செய்தி. ஆனால் உண்மையான செய்தி அதுவல்ல. தற்போது உண்மையில் பெயில் அவுட் நடப்பது அயர்லாந்துக்கு அல்ல. இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய தனியார் வங்கிகளுக்கு தான். இதன் பயனை அனுபவிக்க போவது அயர்லாந்து மக்கள் அல்ல. ஐரோப்பிய தனியார் வங்கிகளும் , இங்கிலாந்து மற்றும் யூரோ அரசாங்கமும் தான். ஆனால் இதனால் ஏற்பட போகும் இழப்புகள் விழ போவது அயர்லாந்து மக்களின் தலை மீது தான். ஆச்சரியமாக இருக்கிறதா? அது தான் உண்மை. முன் பதிவில் அமெரிக்காவில் உள்ள வங்கிகளை காக்க நடந்த நூதன பெயில் அவுட் பற்றி எழுதி இருந்தேன். இது ஐரோப்பிய வங்கிகளை காக்க நடக்கும் நூதன பெயில் அவுட்.

ஒவ்வொரு நாடும் தனது வரவுக்கு மீறி செலவு செய்யும் போது மிக பெரிய பட்ஜெட் பற்றாக்குறை ஏற்படுகிறது. பொதுவாக அரசுகள் போரில் ஈடு படும் போது இந்த நிலை ஏற்படும். மக்கள் நல பணிகளை வரவுக்கு மீறி அதிக அளவு செய்தாலும் இது போல் பற்றாக்குறை ஏற்படும். பற்றாக்குறையின் அளவு நாட்டின் உற்பத்தியை விட மிக அதிகமாக சென்றால் அந்த நாட்டினால் கடனை திருப்பி தர முடியுமா? என்ற சந்தேகம் வருவதால், ரிஸ்க் அதிகமாக இருப்பதை காரணம் காட்டி கடனுக்கான வட்டி வீதம் மிக அதிகமாகும். இதன் விளைவாக புதிய கடனை வாங்கும் போதும், பழைய கடனை புதுப்பிக்கும் போதும் நிதி பிரச்ச்னை ஏற்பட்டு பெயில் அவுட் தேடி நாடுகள் செல்ல கூடும். ஆனால் அயர்லாந்தின் உண்மை நிலை அதுவல்ல. கடந்த இரு ஆண்டுக்கு முன்பு வரை அந்நாட்டு அரசின் பட்ஜெட் பற்றாக்குறை விகிதம் GDP இல் 12% தான் இருந்தது. இது பிற ஐரோப்பிய நாடுகளை(ஜெர்மனி - 40% , பிரான்ஸ் - 60% ) விட குறைவு.அப்படி என்றால் அரசு மிகவும் பொறுப்பாக அரசாங்கம் நடத்தி வந்து இருக்கிறது.

அயர்லாந்துக்கு வில்லன் ஐரோப்பிய வங்கிகள் மற்றும் அந்நாட்டு நிதி துறையில் இருந்த கட்டு பாடற்ற சுதந்திரத்தால் வந்தது.அமெரிக்க வங்கிகள் அமெரிக்க அரசு நடத்திய போர்களாளும், SubPrime கடன்களாளும் மிக பெரிய லாபத்தை குறுகிய காலத்தில் காட்ட தொடங்கிய போது, ஐரோப்பிய வங்கிகளும் அவர்களோடு போட்டி போட்டு லாபம் காட்ட எதாவது செய்ய முயன்றன.(அமெரிக்காவிலிருந்தும் ஐரோப்பிய வங்கிகள் பெருமளவு லாபம் காட்டியது என்பதும் குறிப்பிட தக்கது).ஜெர்மனி பிரான்சு நாட்டு வங்கிகள் தங்கள் நாடுகளில் நிதி துறையில் கட்டுபாடு அதிகம் இருந்ததால் அங்கு கண்ட படி கடன் கொடுத்து லாபம் காட்ட முடியவில்லை. இந்த ஐரோப்பிய வங்கிகளோடு இங்கிலாந்து மற்றும் அமெரிக்க வங்கிகளும் புதிய சந்தை தேடி ஐரோப்பாவில் வேட்டையை தொடங்கின. அப்போது ஐரோப்பாவில் அதிக அளவு செலவு செய்து கொண்டு இருந்த நாடுகளின் பட்ஜெட் பற்றாகுறையை தீர்க்க கடன் கொடுத்தும் , அங்கு வங்கி துறை கட்டுபாடு குறைவாக இருந்த நாடுகளில் கடனை அள்ளி கொடுத்தும் தன் பேலென்ஸ் ஷீட்டை பெருக்கி காட்டினர்
.அயர்லாந்து நாடு இதில் இரண்டாவது ரகம்.வங்கிகள் தங்கள் கட்டுபாட்டில் இருந்த மீடியா மூலம் அயர்லாந்தில் மிக பெரிய வளர்ச்சி தொடர்ச்சியாக பல ஆண்டுகளுக்கு வர போவதாகவும்,நாட்டின் ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமான துறை வரலாறு காணாத வளர்ச்சி காண போவதாக செய்திகளை பரப்பின.அயர்லாந்தில் நிதி துறையில் கட்டுபாடு சிறிதளவே இருந்ததால் கட்டுமான துறை மற்றும் ரியல் எஸ்டேட் துறைக்கு அளவில்லா கடன் வழங்க பட்டது.இந்த கடனுக்கான பணம் எல்லாம் ஐரோப்பிய மற்றும் அமெரிக்க வங்கிகள் மூலம் வந்தது. இந்த கடனின் அளவு எவ்வளவு அதிகம் என்று அறிய கீழ் காணும் படத்தை பார்த்தால் புரியும். இந்த படத்தில் ஐரோப்பிய நாடுகளின் அரசின் பட்ஜெட் பற்றாகுறையும், அந்த நாடுகளின் தனியார் வங்கிகள் அயர்லாந்துக்கு அளித்த கடனும் ஒப்பிட பட்டுள்ளது.ஜெர்மனி நாட்டின் பட்ஜெட் பற்றாகுறையை விட அந்நாட்டு வங்கிகள் அயர்லாந்துக்கு கொடுத்துள்ள கடன் தொகை அதிகம்!



வழக்கம் போல் ஒரு வீக்கம் வந்தால் ஒரு வாட்டம் வரத்தானே வேண்டும். அந்த வாட்டம் வர தொடங்கிய போது அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தில் நடந்ததை போலே ரியல் எஸ்டேட் வீழ்ச்சி அடைந்தது. உண்மையில் சந்தை பொருளாதார கூற்று படி பார்த்தால் தவறான கணிப்பின் மூலம் கடன் கொடுத்த ஐரோப்பிய வங்கிகள் தங்கள் முதலீட்டில் நட்டத்தை சந்திக்க வேண்டும்.தாங்க முடியாத நட்டத்தை அடையும் அயர்லாந்து வங்கிகள் திவாலாக வேண்டும்.ஆனால் தங்களது தவறான முடிவால் ஏற்பட்ட நட்டத்தை ஏற்று கொள்ள ஐரோப்பிய வங்கிகள் தயாரக இல்லை. அயர்லாந்து நாட்டுக்கு ஐரோப்பிய யூனியன் மற்றும் IMF மூலம் அழுத்தம் தர பட்டது.அரசு வேறு வழியின்றி திவாலை சந்திக்க இருந்த வங்கிகளை அரசுடமையாக்கியது. அதாவது வங்கிகள் சுமக்க வேண்டிய சிலுவையை அரசு சுமக்க தொடங்கியது. இதுவே அமெரிக்காவாக இருந்தால் பணத்தை வேண்டிய அளவு பிரிண்ட் செய்து Quantitative Easing என கூறி நிலமையை சமாளித்து விடலாம்.அயர்லாந்து ஐரோப்பிய ஒன்றியத்தில் இல்லாவிட்டலாவது நாணய மதிப்பை குறைத்தல் அல்லது வேறு எதாவது யுக்தியை பின் பற்றி இருக்கலாம்.பாவம் அதற்கும் வழி இல்லாமல் போய் விட்டது.

வங்கிகளின் கடன் அரசின் தலையில் விழுந்ததால் அதன் கடன் சுமை அதிகமாகியது. அதன் கடனை திருப்பி செலுத்துமா என்ற நம்பக தன்மையும் குறைய ஆரம்பித்தது.அது மட்டுமல்ல, சந்தையில் அனுமானிப்பவர்கள் (Speculators) வெந்த புண்ணில் வேலை பாய்ச்ச ஆரம்பித்து விட்டனர்.சந்தையில் அயர்லாந்து கடன் பெற 8% க்கும் மேலாக வட்டி செலுத்த வேண்டிய கட்டயத்திற்கு தள்ள பட்டது. தனது அதிகமான கடனை 8% மேல் கொடுத்து வாங்கினால் , அந்நாடு மீண்டும் கடனுக்கான Vicious Circleல் வீழ வாய்ப்புள்ளது.அயர்லாந்து அரசு வட்டிக்கு கடன் வாங்க ஐரோப்பிய யூனியன் மற்றும் IMF நோக்கி செல்ல ஆரம்பித்தது. IMF இடம் சென்றால் தான் என்ன நடக்கும் என்பது உங்களுக்கு தெரியுமே!. அது ஐரோப்பிய தனியார் வங்கிகளுக்கு விழுந்திருக்க வேண்டிய பாரத்தை அயர்லாந்து மக்களிடம் இறக்கி வைக்க சொல்லி விட்டது. இந்த பிர்ச்ச்னைக்கு முன் நியாயமான பட்ஜெட் போட்டு அளவோடு மக்கள் நலனுக்காக செலவு செய்த அரசை மக்கள் நலனுக்கு எதிரான முடிவுகளை எடுக்க சொல்லி அழுத்தம் கொடுத்து வெற்றியும் பெற்று விட்டது.அரசு எடுத்துள்ள ஒரு சில முடிவுளை நீங்கள் பார்த்தால் என்ன நடக்கிறது என்று நீங்களே யூகித்து கொள்வீர்கள்.

1.குறைந்த பட்ச தொழிலாளர் ஊதியம் 10 சதத்துக்கும் மேலாக குறைக்க பட்டுள்லது
2. ஏற்கனவே வீட்டு கடனை கட்ட முடியாதவர்கள் இருக்கையில் 530மில்லியன் யூரோவுக்கான புதிய வீட்டு வரி
3.மக்கள் நலவாழ்வுக்கான பட்ஜெட் 3பில்லியனுக்கும் மேல் கட்.
4. வருமான வரி உயர்வு.
5. பொது துறை தொழிலாளர்கள் ஆட் குறைப்பு மற்றும் சம்பள குறைப்பு.


இது போன்ற முடிவுகளை எடுத்துள்ளதால் அயர்லாந்து அரசுக்கு சிறிது குறைந்த வட்டியில் ஐரோப்பிய மத்திய வங்கியிலிருந்தும் இங்கிலாந்திடமிருந்தும் IMFஇடமிருந்தும் கடன் கிடைக்கும்.இதில் முக்கியமாக கவனிக்க வேண்டியது இந்த கடன் அயர்லாந்து மக்களின் நன்மைக்காக செலவிட போவது இல்லை. இவை ஐரோப்பிய வங்கிகளின் கடனை வட்டியோடு திருப்பி செலுத்த தான் இவை உதவும். அதாவது ஐரோப்பிய மத்திய வங்கி மற்றும் இங்கிலாந்து மத்திய வங்கியிடம் கடன் வாங்கி ஐரோப்பி மற்றும் இங்கிலாந்து தனியார் வங்கிகளுக்கு பணத்தை கொடுப்பார்கள். இரண்டு கடனுக்கான வட்டியையும் முதலையும் அயர்லாந்து மக்களின் உழைப்ப்பின் மூலம் திருப்பி கொடுக்க வேண்டும்.இதை பார்த்தால் நம்மூர் கந்து வட்டி காரர்களின் கதை போல் உள்ளதள்ளவா?

இங்கிலாந்தில் பலர் அயர்லாந்துக்கு பெயில் அவுட் பணம் கொடுப்பதை எதிர்க்கிறார்கள். இங்கிலாந்து மத்திய வங்கி அயர்லாந்துக்கு பணம் கொடுக்கவில்லை என்றால் இங்கிலாந்தின் பல தனியார் வங்கிகளின் கதியும் அதோ கதி தான்!.உண்மையில் என்ன நடக்கிறது என்றால் இதன் மூலம் இங்கிலாந்து நாட்டிற்கு தான் மிக பெரிய லாபம். அயர்லாந்து நாடு வெளி சந்தையிலிருந்து கடன் வாங்க வேண்டும் என்றால் 8% வட்டி கொடுக்க வெண்டும். ஆனால் இங்கிலாந்து 3.3% வட்டிக்கு பணம் வாங்க முடியும்( Quantitative easing முறையிலும் பணத்தை 0% வட்டியிலும் உற்பத்தி செய்யலாம்). எனவே இங்கிலாந்து அரசு 3.3% க்கு கடன் வாங்கி 5.8%க்கு அயர்லாந்துக்கு கொடுக்க போகிறது. ஆக மொத்தம் அனைத்து வகையிலும் இங்கிலாந்துக்கு லாபம் தான்.

இந்தியாவும் அயர்லாந்தின் நிலைக்கு வராது என்று நம்புவோம்.


--

Sunday, November 21, 2010

சோனியா, ராகுலுக்கு எதிராக E.V.K.S.இளங்கோவன் போர்கொடி!

தி.மு.க அல்லது அதிமுக என எந்த கட்சி தமிழகத்தில் ஆட்சியில் இருந்தாலும், ஆட்சியில் இருக்கும் கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணி வைத்திருந்தால் , தி.மு.க/அதிமுக போன்ற கட்சிகளை எதிர்த்து அரசியல் நடத்தி காங்கிரஸ் கட்சியினுள்ளே ஓர் கம்யூனிஸ்ட்டாக செயல் பட்டு வருகிறார் E.V.K.S இளங்கோவன் என்பது அனைவருக்கும் தெரிந்ததே!

ஆனால் தற்போது அவர் காங்கிரஸின் அகில இந்திய தலைமைக்கு எதிராக முக்கியமாக ராகுல் மற்றும் சோனியாவிற்கு எதிராக போர்கொடி தூக்கி நாடெங்கிலும் உள்ள காங்கிரஸ் கட்சி தலைவர்களின் ஆச்சரியத்தை தூண்டியுள்ளார்.இதோ அவர் பேசியுள்ள பேச்சின் ஒரு பகுதியை நீங்களே இங்கு பாருங்களேன்!( பேச்சை புரியாதவர்களுக்கு நான் சில விளக்கத்தை பிராக்கெட்டில் கொடுத்து உள்ளேன்).

தலைப்பு:

(சோனியா மற்றும் ராகுல் போன்றோரின்)குடும்ப ஆட்சியிலிருந்து தமிழக மக்களை காக்க வேண்டும்-ஈவிகேஎஸ் இளங்கோவன்
காங்கிரஸ் கட்சியில் பல பேருக்கு திறமை இருந்தாலும் வாய்ப்புகள் இல்லாமல் போய் விடுகிறது(காங்கிரஸ் கட்சியில் குடும்ப ஆட்சியின் விளைவாக ஒரு குடும்பத்தினரே ஆதிக்கம் செலுத்தி வருவதால் இது போல் திறமை வாய்ந்த பலருக்கு வாய்ப்பு கிடைக்க வில்லை).

தமிழகத்தில் மீண்டும் பரம்பரை ஆட்சி வந்து விடும் என்ற பயம் ஏற்பட்டுள்ளது.(தமிழகத்திலேயே பரம்பரை ஆட்சி வர இப்படி கோபபடுபவர் இந்தியாவில் வருவதை கண்டு தீபிழம்பாக மாறி கொண்டு உள்ளார்) தவறுகளை சுட்டிக் காட்டினால் கோபப்படுகின்றனர். நீயும் இதையே செய். ஜால்ரா போடு என்கின்றனர். நான் யாருக்கும் ஜால்ரா போடுகிறவன் இல்லை.

தமிழகத்தில் குடும்ப ஆட்சியை நீடிக்க விடக்கூடாது. இதன் பிடியில் இருந்து தமிழக மக்களை காப்பாற்றியாக வேண்டும். இந்த நிலை நீடித்தால் தமிழகம் என்னவாகும் என நினைத்துப் பாருங்கள் என்றார்.("தமிழகத்தில் " என்ற வார்த்தையை எடுத்து விட்டு இந்தியாவில் என்று போட்டு படித்து பாருங்கள்)

தற்போது ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டி சோனியாவை எதிர்த்து போர் கொடி தூக்கியுள்ள இந்த சூழ்நிலையில் தமிழகத்திலிருந்து இளங்கோவன் சோனியாவை எதிர்த்து பேசி உள்ளதால் இருவருக்கும் இடையே உள்ள ரகசிய தொடர்பு இருக்களாம் எனவும் , சோனியாவை எதிர்த்த புதிய கோஷ்டி அகில இந்திய அளவில் உருவாகி வருவதையும் காட்டுகிறது என்று அரசியல் ஆர்வலர்கள் கருதுகிறார்கள்.

அடுத்த ஆண்டுக்குள் ராகுலை பிரதமாராக்க நினைக்கும் சோனியாவின் முயற்சிக்கு இது ஒரு பெரிய பின்னடைவாகவே கருத படுகிறது.

ஆனால் உண்மையில் அவருடைய பேச்சு அவரை எதிர்த்து அவரே பேசி கொண்டதாகவும் காங்கிரசின் எதிர் கோஷ்டியினர் கூறுகின்றனர். என்ன கேட்பதற்கே ஆச்சர்யமாக உள்ளதா?அதுவும் உண்மைதான். ஈவிகேஎஸ் இளங்கோவன் அரசியலில் அடி மட்டத்திலிருந்து உழைத்து உயர்ந்தவர் இல்லை. அவரும் ஒரு வாரிசு அரசியல்வாதி தான். அவர் பெரியாரின் குடும்பத்தை சேர்ந்த E.V.K.சம்பத்தின் புதல்வராவார். E.V.K.சம்பத் திக, திமுக,தமிழ் தேசிய கட்சி என்று பல கட்சிகளில் இருந்து விட்டு காங்கிரசில் ஐக்கியமானவர்.

மனசாட்சியின் படி தன்னை எதிர்த்து தானே அறிக்கை விடும் ஈவிகேஎஸ் இளங்கோவன் கட்டாயம் ஒரு தனி தன்மை வாய்ந்த அரசியல்வாதிதான்!


--

ஒபாமாவின் இந்திய படையெடுப்பு

உலகின் மிக பெரிய வர்த்தக நிருவனங்களின் முன்னனி அதிகாரிகள் 250 பேருடன் இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ளார் அமெரிக்க பிரதமர்.அமெரிக்க சரித்திரத்தில் வேறு எந்த ஜனாதிபதியின் வெளி நாட்டு விஜயத்திலும் இத்தனை வர்த்தக நிறுவனங்களின் தலைவர்கள் வந்ததில்லை. இது ஒரு பயணமா? அல்லது படையெடுப்பா?.

ஒபாமாவின் இந்திய பயணத்திற்கான காரணம் பற்றி பலவிதமாக பலர் கூறி வந்தாலும் ஒபாமா வெளிபடையாக கூறும் காரணம் அமெரிக்க உற்பத்தி பொருளுக்கு இந்தியாவில் சந்தை ஏற்படுத்த வேண்டும் என்பது தானாக இருக்கும்.

சரி ஒபாமா கூற வருவது எந்த வகை உற்பத்தி பொருட்கள் என்றும் அது எவ்வாறு உற்பத்தி செய்யபடுகிறது என்றும் பார்ப்போம். முதலில் பல்லாயிரம் கோடி பெருமான ஆயுதங்களை இந்தியாவிற்கு விற்க கையொப்பம் இட்டுள்ளார். நிச்சயம் இந்த ஆயுத தடவாடங்களின் பெரும் பகுதி அமெரிக்காவில் தான் உற்பத்தி செய்ய படும். இதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் ஒபாமா மூச்சிக்கு முன்னூறு தடவை தன்னுடைய ஆதர்ச நாயகனாக கூறுவது மகாத்மா காந்தியடிகளையும் அவரது அகிம்சை தத்துவத்தையும் தான். காந்தியின் அகிம்சை வழியில் நாடுகளுக்கெல்லாம் ஆயுதத்தை விற்பது வடிவேலு பட காமெடி போல் தான் உள்ளது.

அமெரிக்காவில் முக்கியமாக உற்பத்தி செய்யும் பொருள் ஆயுதத்துக்கு அடுத்த படியாக கம்ப்யூட்டர் மென்பொருட்களாகத்தான் இருக்கும் . தற்போது இந்தியாவில் மென்பொருட்கள் விற்பனைக்கு எந்த கட்டுபாடும் இல்லை. எனவே அவர் கூற வருவது நிச்சயம் கம்ப்யூட்டர் மென்பொருட்களாக இருக்காது.ஒபாமா முக்கியமாக கேட்பது சில்லறை வியாபாரத்தில் வால்மார்ட் போன்ற அமெரிக்க நிறுவனங்களுக்கு முழுமையான அனுமதியும் அமெரிக்க நிதி நிறுவனங்களுக்கு இந்திய வங்கி மற்றும் காப்பீட்டு துறையில் முழுமையான அனுமதியும் தான்.

முதலில் வால்மார்ட் கதைக்கு வருவோம். வால்மார்ட்டுக்கு இந்தியாவில் முழு அனுமதி கொடுப்பதால் எப்படி அமெரிக்க பொருட்களுக்கு சந்தை விரிவாகுமா என்று பார்ப்போம். இன்று அமெரிக்காவில் வால்மார்ட்டில் விற்க படும் பொருட்களில் பெரும்பாலான பொருட்கள் உற்பத்தி செய்ய படும் இடம் சீனா தான். எனவே வால்மார்ட் இந்தியாவில் கடைகளை தொடங்கினால் நிச்சயம் அமெரிக்க பொருட்களுக்கான சந்தை விரிவடைய போவது இல்லை. அப்படி என்றால் ஒபாமா கூறிய அமெரிக்க உற்பத்தி பொருள் எதுவாக இருக்கும்? இது பற்றி அறிந்து கொள்ள அமெரிக்க பொருளாதாரத்தில் கடந்த இரு ஆண்டுகளாக நடந்து வரும் நிகழ்வுகளை பற்றி பார்ப்போம்.

கடந்த பொருளாதார நெருக்கடியை அடுத்து அமெரிக்காவில் பண புழக்கத்தை அதிகரிக்க முதல் கட்டமாக பெடரல் ரிசர்வ் வட்டி விகிதத்தை சிறிது சிறிதாக குறைத்தது. தற்போது அங்கு வட்டி விகிதம் கிட்ட திட்ட 0 சதவிதமாக இருக்கிறது. எனவே அமெரிக்காவில் உள்ள நிதி நிறுவனங்கள் வட்டி இல்லா பணத்தை வாங்கி குவித்து உள்ளனர். அது மட்டுமன்றி அமெரிக்க நிதி நிறுவனங்களிடம் இருந்த நட்டத்தை கொடுக்கும் கடன் பத்திரங்களை எல்லாம் பணம் கொடுத்து வாங்கி விட்டது. அதன் விளைவு அமெரிக்க நிதி நிறுவனங்களிடம் பண கையிருப்பு நிறைய உள்ளது. தற்போது இந்தியாவில் கடனுக்கான வட்டி விகிதம் மிக அதிகமாகவே உள்ளது. மேலும் பொருளாதாரமும் மிக வேகமாக வளர்ந்து வருவதால் இந்திய நிதி நிறுவனங்களில் அன்னிய முதலீட்டை முழுமையாக திறந்து விட்டால், அமெரிக்காவில் வட்டி இல்லாமல் வாங்கிய பணத்தை இந்தியாவில் முதலீடு செய்து மிக பெரிய லாபம் அடைய முடியும். அவ்வாறு செய்வதால், அமெரிக்க நிதி நிறுவனங்கள் இந்திய பொருளாதாரத்தையும் அமெரிக்க பொருளாதாரத்தை போல சூதாட்ட களமாக்கி நடுத்தர மற்றும் ஏழை மக்களின் எதிர்காலத்தை, முக்கியமாக பணி ஓய்வு பெற்ற பின் வரும் வாழ்க்கையை கேள்வி குறியாக்கி விட வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

அடுத்தது வால்மார்ட் போன்ற கம்பெனிகளின் கதைக்கு வருவோம். அமெரிக்க மத்திய வங்கி கடன் விகிதத்தை 0% கொடுப்பதால் வெளி மார்க்கெட்டில் கம்பெனிகளின் பாண்டுகளுக்கான கடன் விகிதம் மிக குறைவாக உள்ளது. உதாரணமாக வால்மார்ட் நிறுவனம் 0.75% வட்டிக்கு அமெரிக்காவில் கடன் வாங்கியுள்ளது. இது போல் வட்டியில்லா கடன் மூலம் பல பில்லியன் வைத்திருக்கும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு இந்தியாவில் தொழில் நடத்த முழு அனுமதி கொடுத்தால், இவர்களுடன் தினமும் கந்து வட்டிக்கு கடன் வாங்கி கடை நடத்தும் சிறு மற்றும் நடுத்தர வியாபாரிகள் போட்டியிட முடியாமல் நலிந்து போக போவது திட்ட வட்டம்.

அதைவிட முக்கிய நிகழ்வு தற்போது Quantitative Easing என்ற பெயரில் அமெரிக்காவில் நடந்து வருவது. தற்போது QE என்ற பெயரில் அமெரிக்க மத்திய வங்கி அமெரிக்க அரசின் கடனையும், அமெரிக்க நிதி நிறுவனங்களின் கடனையும் வாங்கி வருகிறது. மத்திய வங்கி அரசின் கடனை வாங்குகிறது என்றால், அது எந்த அடிப்படையும் இல்லாமல் பணத்தை பிரிண்ட் செய்து வெளியிடுகிறது என்று பொருள்.அதாவது எந்த அடிப்படையும் இல்லாமல் பணத்தை உற்பத்தி செய்கிறது. இவ்வாறு உற்பத்தி செய்ய படும் பணத்தின் விளைவாக தான் அமெரிக்க வட்டி விகிதமும், பெரிய நிறுவனங்களின் கடன் பத்திரத்துக்கான வட்டியும் மிக குறைவாக உள்ளது. இது போல் உற்பத்தி செய்யபடும் பணம் வளரும் நாடுகளுக்குள் வெள்ளமாக புகுந்து பங்கு சந்தை வீக்கம்-வாட்டத்தையும், வளரும் நாடுகளின் தொழில் துறையின் கட்டு பாடுகளை மிக பெரிய பன்னாட்டு நிதி நிறுவனங்கள் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களின் கைக்கும் கொண்டு செல்ல உதவுகிறது. இந்த நிகழ்வுகள் சுலபமாக நடக்க தேவையானவற்றை செய்ய வலியுறுத்துவதுதான் அமெரிக்க அதிபரின் பயணத்தின் முக்கிய குறிக்கோள்.



உண்மையில் இதன் மூலம் சாதாரண இந்தியருக்கோ அல்லது சாதாரண அமெரிக்கருக்கோ அதிக பயன் இருக்க போவது இல்லை. பலன் அனைத்தும் மிக பெரிய நிதி நிறுவனங்களுக்கும், மிக பெரிய பன்னாட்டு நிறுவனங்களுக்கும் தான்.

தைமூர் மற்றும் நாதிர் ஷா போன்றோரின் படையெடுப்பின் மூலம் இந்திய செல்வம் ஒரு முறை மட்டும் கொள்ளை போனது. ஆங்கிலேயர்களின் ஆட்சி மூலம் ஒரு சில நூற்றாண்டு செல்வம் கொள்ளை போனது. ஆனால் தற்போதைய ஒபாமாவின் படையெடுப்பின் விளைவு எப்படி இருக்கும் என்பதை காலம் தான் பதில் சொல்லும்.

அமெரிக்க அதிபர் கூறிய படி இந்திய சந்தையில் அதிக இடம் தேடும் அமெரிக்க உற்பத்தி பொருள், தற்போது அமெரிக்க மத்திய வங்கி பெருமளவில் உற்பத்தி செய்யும் டாலராகத்தான் இருக்க வாய்ப்பு உள்ளது. இதன் மூலம் இன்றைய மற்றும் பிற்கால இந்தியர்களின் உழைப்பின் பலன்கள் பன்னாட்டு நிறுவனங்களுக்கு செல்ல வாய்ப்புள்ளது.

--

Monday, November 01, 2010

Federal Reserveன் நூதன Bailout

2008 ம் ஆண்டு அமெரிக்காவில் உள்ள பெரிய வங்கிகள் அனைத்தும் திவாலாக ஆகும் நிலையில் இருந்த போது, வங்கிகள் அனைத்தும் அமெரிக்க அரசின் உதவியை தேடியது. அதற்கு அமெரிக்கா எங்கிலும் எதிர்ப்பு அலை பரவியது. மக்களின் பணத்தை கொண்டு வங்கிகளை காப்பதா என்று பத்திரிக்கை எல்லாம் எழுதி தள்ளியது. ஆனால் தற்போது அமெரிக்க பெரிய வங்கிகள் எல்லாம் முன்பை விட பெரிய அளவில், டிரில்லியன் கணக்கில் Bail Out பெற்று கொண்டு உள்ளது.இம்முறை மறைமுகமாக!. இந்த Bail Out , பழைய Bail Out ஐ விட அதிக மதிப்புள்ளது. அது அமெரிக்க மக்களுக்கு மிக பெரிய பாதிப்பை ஏற்படுத்த வல்லன. ஆனால் அதற்கு எதிர்ப்பு குரலே சிறிதளவும் இல்லை.

2008ம் ஆண்டு அமெரிக்க அரசிடம் இருந்து வங்கிகள் பணம் பெற்ற போது அவர்களது Subprime கடன்களின் risk அப்படியே இருந்தது. பண புழக்கத்தின் தேவைக்காக(Liquidity Crisis) மட்டும் கடன் பெற்றனர்.ஆனால் இம்முறை கமுக்கமாக தங்களது riskயும் பொருளாதார வீழ்ச்சியால் வந்த ரியல் எஸ்டேட் நட்டத்தையும் அப்படியே Federal Reserve(Fed) கைக்கு மாற்றி விட்டு, மிக பெரிய அளவில் Fedஇடமிருந்து பணத்தை வாங்கி குவிக்கிறார்கள்.கேட்க ஆச்சிரியமாய் உள்ளதா? இதன் பின்னனியை பற்றி பார்ப்போம்.

2008ல் வங்கிகள் கடன் வாங்கிய போது அமெரிக்க அரசு தன் கையில் இருந்த பணத்தை கொடுக்கவில்லை. Federal Reserve இடம் கடன் பத்திரத்தை கொடுத்து பணத்தை பெற்று வங்கிகளுக்கு கொடுத்தது. பெரும்பான்மை பணத்தை கூட முதலீட்டாளர்கள் அல்லது வெளிநாடுகளிடமிருந்து கடனாக பெறவில்லை. Federal Reserve உழைத்து சம்பாதித்த பணத்தையும் கொடுக்கவில்லை. பணத்தை எந்த அடிப்படையும் இல்லாமல் அச்சடித்து தான் கொடுத்து உள்ளது.(இது பற்றி பிறிதொரு பதிவில் விளக்கமாக எழுதுகிறேன்)

வங்கிகள் இது பற்றி யோசிக்க ஆரம்பித்தது. எதற்காக அமெரிக்க அரசிடம் போய் கைகட்டி நின்று பணம் வாங்க வேண்டும். எப்படியும் அரசும் Fed இடமிருந்து தான கடைசியில் பணம் வாங்க போகிறது. நேரிடையாகவே தானே Fed இடமிருந்து பணம் வாங்கி விட்டால் என்ன என்று நினைக்க ஆரம்பித்தது.Federal Reserve என்பது அமெரிக்காவின் பெரிய வங்கிகளின் மறைமுக கட்டுபாட்டில் உள்ளது என்பது ஊறறிந்த ரகசியம்.

தற்போது அறிவித்துள்ள Quantitative Easing-2 முறைப்படி ,வங்கிகளின் கடன் பத்திரங்களை FED நேரிடையாகவே வங்கிகளிடமிருந்து வாங்க ஆரம்பித்துள்ளது.
இதனால் வங்கிகளுக்கு ஏற்படும் ஆதாயம் பற்றியும் இது எவ்வாறு முந்தய Bail Outகளிடமிருந்து வேறுபட்டது என்றும் பார்ப்போம்.

1.முந்தய Bail outல் தங்களிடமிருந்த Subprime Mortgageகளின் ரிஸ்க் வங்கிகளிடமே இருந்தது. ஆனால் இந்த பெயில் அவுட்டின் மூலம் வங்கிகள் தங்களிடம் இருக்கும் நட்டத்தை கொடுக்கும் பத்திரங்களை FED இடம் விற்று விடும். அதன் மூலம் மிக அதிக அளவு பணம் வங்கிகளுக்கு கிடைக்கும்.

2.நட்டத்தை கொடுக்கும் பத்திரங்களை தங்களது லாப - நட்ட கணக்கிலிருந்து Fed கணக்கிற்கு மாற்றி விடுவதால் வங்கிகள் நட்டத்தை குறைத்து நல்ல லாபம் காண்பிக்க முடியும். எப்படியும் Fed Balance Sheet ஐ யாரும் தணிக்கை செய்ய முடியாது. எனவே Fed ன் தற்போதைய நட்டம் பற்றி யாருமே கண்டு கொள்ள போவது இல்லை.

3.வங்கிகளும் நட்டமில்லாமல் தங்களது பத்திரங்களை Fedஇடம் விற்று விடும். உதாரணமாக அமெரிக்க மார்க்கெட் ஏறுமுகத்தில் இருந்த போது ஒரு ரியல் எஸ்டேட் பத்திரத்தின் மதிப்பு $10000 க்கு வங்கி வாங்கியுள்ளது என்று வைத்து கொள்வோம். அமெரிக்க பொருளாதார வீழ்ச்சியின் பின் அதன் மதிப்பு $5000 ஆக குறைந்து விட்டது என்றால் அந்த பத்திரத்தின் மார்கெட் மதிப்பு $5000 தான் இருக்கும். ஆனால் இடம் அந்த பத்திரத்தை $10000க்கோ அல்லது அதை விட அதிகமாகவோ Fed இடம் விற்க வாய்ப்பு உள்ளது.

4.இதன் மூலம் கிடைக்கும் பணத்தை சிறு மற்றும் நடுத்தர கம்பெனிகளுக்கு கடனாக கொடுக்கும் என்று எதிர் பார்ப்போடு இந்த பிரிவர்த்தனை நடக்கிறது. ஆனால் கடந்த ஆண்டு வங்கிகளின் செயல்பாட்டை பார்த்தால் இந்த பணத்தின் பெருமளவு Speculative Trading மற்றும் இந்தியா போன்ற வளரும் நாடுகளின் பங்கு சந்தையில் செயற்கையான ஏற்ற இறக்கத்தை ஏற்படுத்தி லாபத்தை சம்பாதிக்கவே பயன் பட போகிறது என்பது தெரிய வரும்.

5.இதில் முக்கிய அம்சம் Fed எந்த வங்கியிடமிருந்து எவ்வளவு டாலருக்கு பத்திரங்களை வாங்கியது என்று வெளியில் சொல்ல அவசியம் இல்லை. எனவே 2008 ந் போது எவ்வளவு பணம் எந்த வங்கிக்கு சென்றது என்று மக்களுக்கு தெரிந்ததால் மக்களிடம் அந்த வங்கிகளின் உண்மை நிலவரத்தை அறிந்து கொள்ள உதவியது. அது மட்டுமல்ல, fed எந்த வங்கிக்கு உதவ வேண்டும் எதற்கு உதவ வேண்டாம் என்று முடிவெடுக்கும் அதிகாரம் உள்ளது. எனவே மிக பெரிய வங்கிகள் தங்களது influence கொண்டு Fed இடமிருந்து உதவியை பெற்று கொள்ளவும் சிறு வங்கிகளை அழித்து, பெரிய வங்கிகள் முழுங்கி கொள்ளவும் இது வழி வகுக்கும்.

6.இவற்றிற்கெல்லாம் முத்தாய்ப்பாக பொது மக்களுக்கு எதுவுமே தெரியாமல், அவர்களிடமிருந்து எந்த எதிர்ப்பும் இல்லாமல் கமுக்கமாய் பணத்தை கறக்கும் வேலையையும் வங்கிகள் முடித்து கொண்டனர்.

இது ஒரு நூதன் Bail Out தானே?

--

Saturday, October 30, 2010

உலகமயமாதல் இன்றைய நிலை பற்றி Free Market ஆதரவாளர் Friedman

கடந்த சில ஆண்டுகளாக உலகளவில் நடை பெற்றுவரும் உலகமயமாதல் இந்தியாவுக்கு நன்மையா? அல்லது தீமையா? என்று பல விதமாக விவாதங்கள் நடக்கிறது. ஆனால் இது நாள் வரை உலகமயமாதலை வேதமாக ஓதிய அமெரிக்கா தற்போது அதையே சாத்தானாக பார்க்க ஆரம்பித்து உள்ளது.இந்த நிலையில் அமெரிக்காவில் இருக்கும் உலகமயமாதல் ஆதரவாளர்கள் அமெரிக்க பொருளாதார வீழ்ச்சியை அடுத்து அதிகம் பேசாமல் இருந்தனர். தற்போது நியூயார்க் டைம்ஸ்ல் Free Market ஆதரவாளரான FRIEDMAN, இதை பற்றி ஒரு பதிவிட்டுள்ளார். இந்தியர்களுக்கு உலகமயமாதல் நம்பிக்கையையும் அமெரிக்கர்களுக்கு அவநம்பிக்கையும் தந்துள்ளது(?) பற்றி எழுதி உள்ளார்.

வாரத்திற்கு 35 மணி நேரம் வேலை செய்யும் பிரான்ஸ் காரர்களை நாளைக்கு 35 மணி நேரம் வேலை செய்ய முயலும் இந்தியர்களை பார்த்து நிதர்சனத்தை உணர்ந்து முதலாளித்துவத்தை காக்க உழைக்க அழைக்கும் செய்தி குறிப்பிட தக்கது.Free marketக்கு ஆதரவான பதிவாக இருந்தாலும் அவருடைய பதிவு முதலாளித்துவம் எப்படி வளர்ந்த மற்றும் வளரும் நாடுகளில் வாழும் மக்களை தங்களின் வளர்ச்சிக்காக exploit செய்ய முயலுகிறதோ என்று அனைவரையும் சிந்திக்க வைக்க கூடிய பதிவு.

It’s Morning in India

மேம்போக்காக படித்தால் உலகமயமாதல் ஆதரவாளர்களை சந்தோஷ பட வைக்கும் பதிவு.நீங்களும் இங்கு சென்று படித்து பாருங்கள்.

--

Sunday, October 24, 2010

ஒபாமாவை அதிர வைத்த எந்திரன் வெற்றி

எந்திரன் படத்தின் சிறப்பு பற்றியும் அதன் வரலாறு காணாத வெற்றி பற்றியும் அனைத்து ஊடகங்களும் பத்திரிக்கைகளும், பதிவர்களும் எழுதி தள்ளி கொண்டு உள்ளனர். அதுவும் அமெரிக்காவில் பாக்ஸ் ஆபிஸில் முதலிடத்தை பிடித்து (டைட்டானிக், அவதார் போன்ற படங்களுக்கு சவால் விடும் வகையில்?) வசூலை கொட்டி உள்ளதாக பல ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதில் முக்கியமாக கவனிக்க வேண்டியது ஆங்கில படங்கள் அமெரிக்கா முழுவதும் பல்லாயிரம் தியேட்டர்களில் வெளியிட பட்டு பெற்ற வசூலை எந்திரன் சில தியேட்டர்களில்(100 க்கும் குறைவான) மட்டும் வெளியிட பட்டு வசூலை குவித்து சாதனை புரிந்திருக்க வேண்டும்.

தற்போது எந்திரன் படம் ஹாலிவுட்டையும் அதனையும் தாண்டி அமெரிக்க அதிபர் வரை கலக்கிய செய்தியை யாரும் வெளியிட வில்லை.நம்ப முடியவில்லையா? ஆனால் அது தான் உண்மை!அமெரிக்க வரலாற்றில் இது வரை இல்லாதவாறு, முதன் முதலாக ஒரு வளரும் நாட்டு படம் வசூல் சாதனையில் முதலிடம் பிடித்தது ஒபாமா காதுக்கு போகாமலா இருக்கும்?. இந்த செய்தியை கேட்டதும் முதலில் அவர் அதிர்ந்து போயிருக்கிறார். ஏற்கனவே உற்பத்தி தொழில் வேலை வாய்ப்புகள் சீனாவுக்கும் சேவை தொழில் வேலை வாய்ப்புகள் இந்தியாவிற்கும் சென்று கொண்டிருப்பதால் அமெரிக்க வேலை வாய்ப்பு குறைவதோடு இறக்குமதி அதிகரித்து கொண்டே வருகிறது. இந்த கால கட்டத்தில் அமெரிக்கா, உலகுக்கே பெரிய அளவில் ஏற்றுமதி செய்து வரும் தொழில் ஹாலிவுட் படங்களாக தான் இருக்கும்(ஆயுதம் மற்றும் மென்பொருள் புராடெக்ட்ஸ் தவிர). தற்போது தமிழ் படத்தால் அதற்கும் ஆப்பு வந்து விட்டதால் அவுட்சோர்சிங்க்கு தடை விதிப்பது போல் தமிழ் படத்துக்கும் தடை விதிக்கலாமா என்று யோசித்து வருவதாக தெரிகிறது.இவ்வாறு தடை விதித்தால் உண்மையான நஷ்டம் அடைய போவது படத்தை பார்க்க வாய்ப்பு கிடைக்காத அமெரிக்க ரசிகர்கள் தான்!

இந்த தடை Sun Picturesக்கு படத்துக்கு மட்டும் பொருந்துமா? அல்லது ரஜினி படத்துக்கு மட்டும் பொருந்துமா என்று தெரியவில்லை. எப்படியும் ஒபாமா அடுத்த மாதம் இந்தியாவிற்கு வரும் போது தன் எதிர்ப்பை தமிழக அரசு நிச்சயம் தெரிவிக்கும் என்று தெரிகிறது..(இந்த படத்தின் உண்மையான வெற்றிக்கு காரணம் ஐஸ்வர்யா ராய் கட்டியிருந்த சேலையின் அழகு தான் போன்ற உண்மைகளை ஞானி போன்றவர்கள் அமெரிக்க அதிபருக்கு உணர்த்தினால் நன்றாக இருக்கும்.).

இது ஒருபுறமிருக்க அமெரிக்க பன்னாட்டு கம்பெனிகள் எல்லாம் எந்திரன் வெற்றியால் அரண்டு போய் உள்ளனர். என்னடா இது பன்னாட்டு கம்பெனியிக்கும் எந்திரன் வெற்றிக்கும் என்ன சம்பந்தம் என்று பார்க்கீறிற்களா? பன்னாட்டு கம்பெனியினர் தங்களது நுகர்வு கலாச்சாரத்தை வளரும் நாடுகள் மீது திணிக்க ஹாலிவுட் படங்களை தான் முக்கிய ஆயுதமாக பயன் படுத்துகிறார்கள். தற்போது எந்திரன் வெற்றி ஹாலிவுட்டை மட்டுமல்லாமல் உலகையே ஒரு ஒரு கலக்கு கலக்கி உள்ளது. இனி ஹாலிவுட் படங்களை தமிழ் படங்களோடு போட்டி போட முடியுமா என்று சந்தேகம் தலை தூக்கி உள்ளது.

இனி தமிழ் படங்கள் ஹாலிவுட்டை ஆக்கிரமித்தால் வளரும் நாடுகளுக்கு தங்கள் கலாச்சாரத்தை திணிக்க வேறு ஒன்றை தேட வேண்டுமே என்ற கவலையில் இருக்கிறார்கள்.(சன் பிக்சர்ஸ் நிறுவனம் ஹாலிவுட் நிறுவனக்களை விட அழகாக இந்த வேலையை செய்யும் என்று யாரோ கூறுவது கேட்கிறது) அவர்கள் கவலை அடைவதோடு நிற்காமல் தமிழ் படங்களை உலகளவில் தடை செய்ய ஒபாமாவுக்கு தங்களது பலம் வாய்ந்த லாபிகள்(lobby) மூலம் முயன்று வருகிறார்கள். அமெரிக்காவில் கூடிய விரைவில் தேர்தல் வருவதால் அதிபருக்கு கிடைக்கும் அழுத்தத்தின் அளவும் அதிகமாக இருக்கும் என்று தெரிகிறது.

அமெரிக்கா என்றால் முதலாளித்துவம் தானே. லாபத்துக்காக எந்த மாற்றத்தையும் உடனடியாக உணர்ந்து கொண்டு செயல் படுபவர்கள் தானே அமெரிக்க முதலாளிகள். தமிழ் படங்களின் இந்த அசுர வளர்ச்சியை கண்டு ஹாலிவுட் பட தயாரிப்பு நிறுவனங்கள் தமிழ் டைரக்டர்கள் மற்றும் தமிழ் நடிகர்கள் வீடுகளுக்கு படையெடுக்க ஆரம்பித்துவிட்டனர். உதாரணமாக கடுமையான முயற்சிக்கு பிறகு ஹாலிவுட்டின் முன்னனி நிறுவனமான ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோ நிறுவனம் தமிழ் இயக்குனர் முருகதாசை வளைத்து விட்டது.

இது ஒருபுறமிருக்க இந்த வருட ஆஸ்கார் விருது தங்களுக்கு கிடைக்கும் என்று தவம் இருந்து கொண்டிருந்த ஹாலிவுட் நட்சத்திரங்கள் நினைப்பில் எந்திரன் படத்தின் ஆங்கில் 3-D பதிப்பு மண்ணை வாரி போட்டு விட்டது. ஒட்டு மொத்த ஆஸ்கார் விருதுகளையும் எந்திரன் வாங்கி குவிக்க போவதை பார்வையாளர் வரிசையில் அமர்ந்து கை தட்டி வேடிக்கை பார்க்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளபட்டு விட்டனர் ஹாலிவுட்டின் முன்னனி கலைஞர்கள்!.

அது மட்டுமல்ல அவதார் படத்தின் அடுத்த பாகத்தை எப்படி எடுக்கலாம் என்று ஜேம்ஸ் கேமரூன் நினைத்திருந்தாரோ அதே ஓட்டத்தில் அதைவிட சிறப்பாக எந்திரன் வெளிவந்து விட்டதை கண்டு அதிர்ந்து போய் உள்ளார் கேமரூன். சாதாரணமாக ஒரு படம் எடுக்க பல வருடங்கள் சிந்திக்கும் கேமரூன், தன் சிந்தனை எல்லாம் செயல் வடிமாக எந்திரன் வெளிபடுத்தி விட்டதால் புது கதை பற்றி சிந்தித்து படம் எடுக்க இன்னும் பல காலம் பிடிக்கும்.

இதைவிட முத்தாய்ப்பான செய்தி Massachusetts Institute of Technologyயின் Robotics and Artificial Intelligence துறை தலைவர் கூறியிருக்கும் செய்தி. பல ஆண்டுகளாக Artificial Intelligence பற்றி மண்டையை பிய்த்து கொண்டு ஆராய்ச்சி செய்து கொண்டு இருந்தவரின் பல கேள்விகளுக்கு எந்திரன் படத்தில் ரஜினி காந்த் செய்யும் ஆராய்ச்சியை பார்த்த பின்பு விடை தெரிந்து விட்டதாம். ஆக எந்திரன் ஒரு படம் அல்ல. பல்கலைகழகங்களுக்கே வைக்க வேண்டிய பாடம் இதே பல்கலை கழகத்தை சேர்ந்த Disaster Management Instituteஇன் பேராசிரியர்கள் சுனாமிக்கான மூல காரணத்தை கண்டு பிடிக்க முடியாமல் திணறிய போது, கமலின் தசாவதாரம் படம் மூலம் தில்லை வாழ் அந்தணர்களை சோழ மன்னன் கொடுமை படுத்தியதும், நாராயண மூர்த்தியை கடலில் போட்டதும் தான் சுனாமிக்கான மூல காரணம் என்பதை String Theory மூலம் அறிவியல் பூர்வமாக நிருபித்து அறிவியல் அறிஞ்சர்களிடம் பாராட்டை பெற்றது உங்களுக்கு நினைவிருக்களாம்.

உலகம் முழுதும் இவ்வாறாக எந்திரன் கலக்கி கொண்டு இருந்தாலும் இந்தியாவில் டிக்கெட் விலை காரணமாக ஏழை மக்களால் இந்த படத்தை பார்க்க முடியவில்லை. இன்றைய தேதியில் எந்திரன் படத்தை பார்க்காதவர்களை பள்ளிக்கு செல்ல வேண்டிய வயதில் உள்ள தங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பாத பெற்றோரை பார்ப்பது போல் கேவலமாக பார்க்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே எந்திரன் படத்தை பார்ப்பதையும் இன்றைய உணவு, தொலைகாட்சி போன்று அடிப்படை தேவையாக மாறி உள்ளதால் தமிழக அரசு மொத்தமாக மார்க்கெட் விலைக்கு எந்திரன் டிக்கட்டுகளை வாங்கி மானிய விலையில் ஒரு ரூபாய்க்கு ஒரு டிக்கெட் என்று ஏழைகளுக்கு வினியோகிப்பது பற்றி சிந்திக்க வேண்டும்.

ரஜினி காந்த இவ்வாறாக ஹாலிவுட்டையே கலக்கி தமிழக சூப்பர் ஸ்டார் அந்தஸ்திலிருந்து ஹாலிவுட் சூப்பர் ஸ்டார் அந்தஸ்திற்கு உயர்ந்து விட்டார் என்றால் பொய்யாகாது.

பின் குறிப்பு: எல்லோரும் எந்திரன் பற்றி பெரிதாக பில்ட் அப் கொடுத்து எழுதுகிறார்களே. நானும் முயன்றால் என்ன? என்று நினைத்ததால் தான் இந்த பதிவு. பெரும்பான்மையான செய்திகள் கற்பனை தான்(இதை போடா விட்டால் இதையும் உண்மை செய்தியாக வலையுளகில் உலா வந்து விட போகிறது என்ற பயம்?). எந்திரன் படம் பார்த்தேன் கிராபிக்ஸ் நிச்சயம் உலக தரத்தில் இருந்தது.

--

Sunday, October 17, 2010

Food Inc -விவசாயமும் உணவு சார்ந்த தொழிலிலும் பன்னாட்டு கம்பெனிகளின் ஆதிக்கம்

உணவு உற்பத்தி, உணவு பதபடுத்துதல் மற்றும் உணவை சந்தை படுத்தும் தொழில் ஒரு சில கம்பெனிகளின் கைக்கு சென்றதால் அமெரிக்காவில் ஏற்படும் பிரச்ச்னைகள் பற்றி விளக்கும் அழகிய படம் இது.


முதல் பகுதி அமெரிக்கவில் துரித உணவு எவ்வாறு வளர்ச்சி அடைந்துள்ளது என்றும் அதன் விளைவுகளை பற்றியும் அளசுகிறது. அமெரிக்காவில் McDonalds போன்ற துரித உணவு கூடங்கள் மக்களின் உணவு தேவையின் பெரும் பகுதியை பூர்த்தி செய்கிறது. அவர்களிடம் உள்ள உணவுகளை தயாரிப்பதற்கும் தொழிற்சாலை முறையை பின்பற்றுகிறார்கள். ஒவ்வொரு தொழிலாளியும் ஒரே வேலையை மீண்டும் மீண்டும் செய்ய வேண்டும். அதன் விளைவு எளிதாக வேறு ஒருவரை அந்த வேலைக்கு மாற்ற முடியும் .எனவே சம்பளம் குறைவாக கொடுத்தால் போதுமானது. இந்த விரல் விட்டு எண்ண கூடிய ஒரு சில துரித உணவு நிறுவனங்கள் அமெரிக்காவின் பெரும்பான்மையான மாமிசம்(மாடு, கோழி, பன்னி) போன்றவற்றை வாங்குகிறார்கள். எனவே அவர்களுக்கு இத்தகைய பொருட்களை வினியோகிக்க பெரிய நிறுவனங்கள் தேவை படுகிறது. மேலும் அனைத்து பொருட்களின் சுவையும் ஒன்றாக இருக்க வேண்டும். அதன் விளைவு, இந்த மாமிச வினியோகம் என்பது ஒரு சிலரின் கைக்கு சென்று விட்டது.

பல்வேறு விவசாயிகள் மாமிசத்தை உற்பத்தி செய்தாலும் அதை வாங்க போவது இந்த ஒரு சில நிறுவனங்கள் தான். அதன் விளைவு ஒட்டு மொத்த மாமிச தொழிலையும் இந்த நிறுவனங்கள் கையில் உள்ளது. அதாவது தற்போது விவசாயிகள் தங்கள் உற்பத்தி செய்யும் கோழியை உரிமை கொண்டாட முடியாது. இக்கம்பெனிகள் கொடுக்கும் கோழியை இவர்கள் வளர்த்து கொடுக்க வேண்டியதுதான்.

அதாவது இந்தியாவில் சுகுணா கோழி நிறுவனம் செய்வது போல்.

இந்தியாவிலாவது கோழியை வெளி சந்தையில் விற்கலாம். ஆனால் அமெரிக்காவில் ஒட்டு மொத்த வினியோக உரிமையும் இந்த ஒரு சில நிறுவனங்கள் கையில் உள்ளதால், இந்த நிறுவனங்களை எதிர்த்து தனியே கோழியை உற்பத்தி செய்தாலும் அவற்றை பெரிய அளவு வாங்க யாருமே இருக்க மாட்டார்கள். அதன் விளைவு விவசாயிகள் இந்த நிறுவனங்களின் அடிமையாக மாற தொடங்கி விட்டார்கள்.

ஒரு சிறிய கோழி பண்ணை ஆரம்பிக்க ஆகும் செலவு சுமார் $3,00,000. ஆனால் அதை ஆரம்பித்தவுடன் இந்த கம்பெனிகள் அந்த பண்ணையில் மாற்றம் செய்ய வேண்டும் என்று பல்லாயிரம் பெருமான இயந்திரங்களையும், மாற்றியமைப்புக்கும் செலவு செய்ய கூறுவார்கள். விவசாயிகளுக்கோ வேறு வழி இல்லை. செலவு செய்தே ஆக வேண்டும். இல்லையென்றால் கம்பெனியுடனான ஒப்பந்தம் ரத்து செய்ய படும். அதன் விளைவு விவசாயி கடனாளியாக மாறுகிறார். ஆனால் அவர்களது வருமானமோ $10000 மட்டும் தான்!
1970களில் முதல் ஐந்து மாமிச பதபடுத்துவோர் 25% சந்தையையை மட்டும் கொண்டிருந்தார்கள். ஆனால் தற்போது முதல் 4 கம்பெனிகள் 80% சத சந்தையை தன்னகத்தே கொண்டு உள்ளது!



அடுத்து மக்காசோளம் விவசாயத்தை பற்றி விளக்குகிறது. அமெர்க்கவில் கடைகளில் விற்கும் பெரும்பாலன உணவு பொருட்கள் சோளத்திலிருந்து தயாரிக்க பட்டதாகத்தான் இருக்கும். ஆடுமாடுகளுக்கு உணவாகவும் சோளம் தான் அதிக அளவு இருக்கிறது. எனவே மிக பெரிய கம்பெனிகள் சோளத்தை குறைந்த விளைக்கு வாங்க அரசாங்கத்திடம் தங்களுக்குள்ள செல்வாக்கை பயன்படுத்தி சோளம், சோயா போன்ற விவசாய் பொருட்களுக்கு அதிக மானியம் பெற்று தருகிறார்கள். அதன் விளைவு அவர்களால் தானியங்களை உற்பத்தி விளையிலிருந்து மிக குறைவான விளைக்கு வாங்க முடிகிறது( இந்தியாவில் உர மானியம் போன்றவற்றால் தானியங்கள் விலை ஒரளவு குறைவாக சந்தையில் அரசால் வாங்கபட்டு பொது வினியோக முறைபடி குறைந்த விளைக்கு ஏழைகளுக்கு விற்க படுகிறது. ஆனால் அமெரிக்காவிலோ அந்த லாபம் பன்னாட்டு கம்பெனிகளுக்கு தான் போகிறது)

அதன் விளைவு, உலக சந்தையில் தானியத்தின் விலை குறைவாக உள்ளது. இது நல்லது தானே என்று நீங்கள் நினைக்க கூடும் . ஆனால் இந்த செயற்கையான மலிவான தனிய உற்பத்தியை எதிர்த்து போட்டி போட முடியாமல் ஏழை ஆப்ரிக்க நாட்டு விவசாயிகள் விவசாயத்தை விட்டு விட தொடங்கி உள்ளனர். அதன் விளை இந்த நாடுகளில் பசியும் பட்டினியும் தலை விரித்து ஆடுவதோடு இல்லாமல் எப்போதும் உணவுக்கு மேலை நாடுகளை நோக்கி கையேந்த வேண்டி உள்ளது.

குறைந்த இடத்தில் அதிக கல்நடைகளை உற்பத்தி செய்ய தொழிற்சாலை முறை இருப்பதால் அதிக சுகாதாரம் இன்மை காணபடுகிறது. மனிதனுக்கு நோய் ஏற்படுத்தும் வகை E.Coli பாக்டீரியாக்கள் உணவு பொருளில் கலந்து விடுகிறது. இதை தடுக்க அரசு இது போன்ற தொழிற்சாலைகளில் தணிக்கை செய்து இந்த பாக்டிரியாக்கள் அதிகம் இருக்கும் தொழிற்சாலையை மூட அதிகாரம் கேட்டு புதிய சட்டம் இயற்ற முயன்றால் பணம் படைத்த பன்னாட்டு கம்பெனிகளின் பணபலத்தால் அது தடுக்க பட்டுள்ளதையும் காட்டுகிறார்கள்.

அது மட்டுமன்றி இது போன்ற தொழிலை கட்டு படுத்தும் அரசின் அமைப்புகளுக்கு இந்த நிறுவங்களின் அதிகாரிகளையே தலைவர்கள் ஆக நியமித்து ஒட்டு மொத்த அமைப்பையே கடந்த 25 ஆண்டுகளாக சிறிது சிறிதாக கேளிகூத்தாக ஆக்க தொடங்கி உள்ளனர்.


இந்த துரித உணவகங்களில் விற்க படும் உணவுகளும் ஆரோக்கியம் குறைந்ததாக உள்ளது. அதன் விளைவு மக்கள் அதிக அளவு நோய்வாய் படுகின்றனர். அரசும் தானியங்களுக்கு கொடுக்கும் மானியத்தை போல் காய்கறி மற்றும் பழம் போன்றவற்றிற்கு கொடுப்பத்தில்லை. எனவே குறைந்த வருமானம் பெருவோர், இது போன்ற துரித உணவு வகைகளையே வாழ்நாள் முழுதும் உண்கிறார்கள்.

ஆனாலும் ஒரு சில கம்பெனிகள் ஆர்கானிக் உணவு பொருட்களை உற்பத்தி செய்ய ஆரம்பித்தனர். இந்த உணவு பொருட்களை மக்களும் விரும்பி உண்ண ஆரம்பித்த உடன் இது போன்ற ஆர்கானிக் உணவு பொருட்களை உற்பத்தி செய்யும் கம்பெனிகளை பன்னாட்டு கம்பெனிகள் வாங்க தொடங்கி விட்டனர்.

இந்த படத்தை பார்த்து கொண்டு இருக்கும் போது வினவின் தளத்தில் உள்ள இந்த பதிவை பார்த்தேன். இந்த பதிவில் அவர்கள் கூறியிருக்கும் செய்தியும் இந்த படத்தில் வரும் செய்தியும் அப்படியே ஒத்து போய் உள்ளது.

இது போன்ற பிரச்ச்னைகள் தற்போது இந்தியாவிலும் வர தொடங்கி உள்ளது. வரும் முன் காப்பதே நலம்!

அடுத்தது தான் மிக முக்கியமான பகுதி. அது விவசாய விதை உற்பத்தியில் மான்சான்டோவின் பங்கு பற்றியது. அது பற்றி மருதம் தளத்தில் தனி பதிவிடுகிறேன்

--

Wednesday, October 13, 2010

ஆங்கிலம் - தமிழ் மொழி பெயர்ப்பு Widget

தமிழ் நமக்கெல்லாம் தாய்மொழியாக இருந்தாலும் ஆங்கிலத்தில் உள்ள பல வார்த்தைகளுக்கு தமிழில் மொழி பெயர்ப்பு நமக்கு சரியாக தெரிவதில்லை. அதுவும் அறிவியல், தொழில் நுட்பம் மற்றும் பொருளாதாரம் சார்ந்த கலை சொற்களுக்கு ஏற்ற தமிழ் வார்த்தைகளை கண்டு பிடிப்பதும் மிகவும் கடினம். தமிழில் பதிவிடும் போது பல ஆங்கில வார்த்தைகளுக்கு இணையான தமிழ் வார்த்தைகளை தேடியே அலுத்து போய் ஆங்கில வார்த்தையையே உபயோகிப்பது உண்டு.

அப்போது எல்லாம் ஒரு நல்ல ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மாற்றும் அகராதி இணையத்தில் இலவசமாக இருந்தால் நன்றாக இருக்கும் என்று நினைப்பேன். அதையே அவர்கள் இனைய சேவையாக(Web Service) கொடுத்தால் எவ்வாறு நன்றாக இருக்கும் என்று நினைத்தேன்.அதிர்ஷ்டவசமாக இன்று அண்ணா பல்கலைகழகம் உண்டாக்கியிருக்கும் இந்த தளத்தை பார்த்தேன்.ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழி மாற்றம் செய்து தரும் அகராதியை இணையத்தில் அவர்கள் உருவாக்கி இருக்கிறார்கள்.வார்த்தைகளின் அர்த்தம் மட்டுமல்லாது அது சம்பந்தான திருக்குறளையும் கொடுத்துள்ளனர்.அண்ணா பல்கலைகழகத்தின் இந்த் சேவை மிகவும் பாராட்டதக்கது.

ஆனால் அவர்கள் இணைய சேவையாக தரவில்லை. ஒவ்வொரு முறையும் அந்த தளத்திற்கு சென்று வார்த்தைகளின் தமிழ் அர்த்தத்தை அறிந்து கொள்வதற்கு பதில் அதையே நமது தளத்தில் வைத்து கொண்டால் எப்போதும் உபயோகபடுத்துவது எளிதாக இருக்கும் அல்லவா? எனவே அதையே Widget ஆக நான் உருவாக்கி இருக்கிறேன். இந்த தளத்தின் வலது புறத்தில் அது உள்ளது. அதை நீங்கள் வேண்டுமானாலும் உங்கள் தளத்தில் எளிதாக இணைத்து கொள்ளளாம்.

இந்த எப்படி மேம்படுத்தலாம் என்பது பற்றிய உங்களது ஆலோசனையும் வரவேற்க்கபடுகிறது.

பின் குறிப்பு: Web Serviceக்கு இணையான வார்த்தை இணைய சேவை என்பதை இந்த அகராதி கொண்டுதான் கண்டு பிடித்தேன்!

--

Tuesday, October 12, 2010

அரசாங்கங்களுக்கு ஆப்பு வைக்க போகும் Google Price Index

பொதுவாக நாட்டில் விலைவாசி ஏற்றம் எந்த அளவு உள்ளது அன்று அறிய மத்திய அரசுகள் வெளியிடும் பண வீக்க மதிப்பீடு மட்டுமே ஒரு அளவுகோளாக இருக்கும். ஆனால் பெரும்பாலான சமயத்தில் அரசு வெளியிடும் பணவீக்க அளவு குறைவாக இருந்தாலும் உண்மையில் விலைவாசை ஏற்றம் அதிகமாகவே இருக்கும். அரசு பணவீக்க மதிப்பை குறைத்து காட்டுவதன் மூலம் மக்களிடையே அரசின் மீது ஏற்படும் அதிருப்தியை சிறிது குறைக்க முடியும்.

இந்தியா போன்ற நாடுகளின் பண வீக்க மதிப்பீடே ஒரு காமெடியானது. இங்கு மொத்த விலையை பொருத்தே பணவீக்க மதிப்பு இருக்கும்(Wholesale Price index). மக்கள் பொருளை வாங்கும் போது கொடுக்கும் விலை எடுத்து கொள்ள பட மாட்டாது(Consumer Price Index). அது மட்டுமன்றி பணவீக்கத்தின் கணக்கீட்டிற்கு எடுத்து கொள்ளும் பொருட்கள் பலவற்றின் தேவையே தற்போது மக்களிடம் இருக்காது.

தற்போது இணைய வழி வர்த்தகம் வளர்ந்த நாடுகளில் மிகவும் அதிகரித்துள்ளது. கூடிய விரைவில் வளரும் நாடுகளிளும் இது அதிக முக்கியத்துவத்தை பெற போகிறது. எனவே பொருட்களின் உண்மை விலையை துள்ளியமாக இணையத்திலிருந்து அதுவும் பல தளங்களிளிருந்து பெருவது சாத்தியமே. அதை பயன் படுத்தி கூகிளில் வேலை பார்க்கும் பொருளாதார நிபுணர்கள்(திரு.Hal Varian) Google price Index என்னும் புதிய பணவீக்க மதிப்பீட்டு முறையை உருவாக்கி உள்ளார்கள்.

இது அரசாங்கம் பண வீக்கத்தை கண்டறிய கணக்கில் எடுத்து கொள்ளும் பொருட்களை மட்டும் கணக்கில் எடுக்காமல் மக்களின் உபயோகத்தை பொருத்து வேறு வகை பொருட்களை கணக்கில் எடுத்து கொண்டுள்ளதாக தெரிகிறது.

தற்போது கூகிள் இந்த பண வீக்க அளவுகளை வெளியிடுவதா? வேண்டாமா? என்று முடிவு செய்யவில்லை.இந்த முடிவுகளை வெளியிட தொடங்கினால் அதன் தாக்கம் மிக அதிகமாகவே இருக்கும். கூகிள் நேர்மையான முறையில் இந்த கணக்கிட்டை செய்தால் (ஓரளவு) உண்மையான பணவீக்க மதிப்பீடை மக்கள் அறிவார்கள். அதே சமயம் இதையே தவறாக உபயோக படுத்த நினைத்தால் உலக நாடுகளில் தனக்கு பிடிக்காத அரசுகளுக்கு நெருக்கடி ஏற்படுத்த புள்ளியியல் மதிப்பை உயர்த்தி/தாழ்த்தி கூட துஷ்பிரயோகம் செய்யலாம். எப்படியும் மக்களுக்கு இது ஒரு மாற்று அளகாக இருக்கும்.

தற்போது மீடியாக்களில் மிக சிறிய செய்தியாக வந்து இருந்தாலும் பிற்காலத்தில் மிக பெரிய தாக்கத்தை ஏற்படுத்த போவது என்னமோ உண்மைதான்!

--

Sunday, October 10, 2010

Capitalism:A Love Story திரை விமர்சனம்

மைக்கேல் மூர் படம் என்றாலே சமூகத்தில் நிகழும் அவலங்களை மிக ஆழமாக கூறுவார் என்பது அனைவருக்கும் தெரிந்தது. இந்த படத்தில் படத்தின் தலைப்புக்கு ஏற்ப முதலாளித்துவத்தின் தீய விளைவுகள் பற்றி அழகாக கூறியுள்ளார். சோவியத் இருந்த வரை கம்யூனிசம் அல்லது மக்களாட்சி ஆகிய இரண்டு மட்டும் வாத பொருளாக இருந்தது. அப்போது முதலாளித்துவம் என்பது மக்காளாட்சியின் போர்வையில் ஓரளவு கட்டுபாட்டிலும் இருந்தது.

ஆனால் சோவியத் வலுவிழக்க ஆரம்பித்தவுடன், முக்கியமாக ரீகன் மற்றும் தாட்சர் ஆட்சியில் முதலாளித்துவத்தின் தாக்கம் மக்களாட்சியில் அதிகம் ஏற்பட ஆரம்பித்தது. அரசாங்கம் என்பது மக்கள் நன்மைக்காக கட்டுபாடுகளை நடைமுறைபடுத்துவது மக்களாட்சியாகவும், அரசாங்கமே அனைத்தையும் எடுத்து நடத்துவது சோசியலிசமாகவும் இருந்தது. ஆனால் சோவியத் யூனியன் மறைவிற்கு பின் உண்மையான மக்களாட்சி என்பது சோசியலிசம் போலவும் அதற்கு மாற்றாக முழு முதலாளித்துவமும் உள்ளது போன்ற நிலை ஏற்பட தொடங்கியது. மக்கள் நலனுக்காக அரசு தனியார் மீது விதிக்கும் கட்டுபாட்டுகள் அகற்றபடுவதால் ஏற்படும் விளைவுகளை உணர்ச்சி பூர்வமாக கூறி மக்களின் மனதிற்கு எடுத்து சென்று உள்ளார். ஆனால் தன் கருத்துக்களின் ஆழத்தையும் அதன் பின்னனி மற்றும் ஆதாரங்களையும் இன்னும் தெளிவாகவே விளக்கி இருக்கலாம் என்பதே என் கருத்து.



இப்படத்தில் அமெரிக்காவின் அரசு அதிகாரத்தில், முடிவுகளை எடுக்கும் அதிகாரத்திற்கு எந்த அளவு நிதி நிறுவனங்களின் அதிகாரிகள் பங்களிப்பு ரீகன் காலத்திலிருந்து இருந்து வந்துள்ளது என்று கூறியுள்ளார். வால் ஸ்ட்ரீட்டிலிருந்து மெயின் ஸ்ட்ரீட்டிற்குள் புகுந்து எவ்வாறு தங்களுக்கு தேவையான சட்டங்களை போட்டு கொண்டிருக்கிறார்கள் என்று அழகாக கூறியுள்ளார். இந்த நிகழ்வின் பெரும் பகுதியை நடத்திய கிளிண்டன் நிர்வாகத்தை பற்றி அதிகம் கூறாதது அவருடைய மனதில் உள்ள டெமாக்ரெட்ஸ் மீது உள்ள அபிமானத்தை காட்டுகிறது !பாதிக்க பட்ட மக்களிடம் பேட்டி எடுத்து , பாதிக்கபட்ட நிகழ்வுகளை காட்டி(முக்கியமாக வீடுகளை இழந்த) உணர்வு ரீதியாக மக்கள் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளார்.

அமெரிக்காவில் விமானியின் ஆரம்ப சம்பளம் வருடத்திற்கு $20000 தான் என்பது வியப்பை ஏற்படுத்துகிறது.ஜன்னல் செய்யும் நிறுவனம் மஞ்சள் நோட்டீசு கொடுத்த பின் அதில் பாதிக்க பட்ட தொழிலாளிகள் நியாயமான இழப்பீடுக்காக போராடிய விதம் நெஞ்சை தொடுவதாக உள்ளது.இந்த நிதி நெருக்கடி முடிவுக்கு வந்தபின் மிக பெரிய மான்ஸ்டராக வளர்ந்து இருக்க போகும் நிதி நிறுவனங்கள் பற்றி அவர் கூறுவது அனைவரும் தெரிந்து கொள்ளவேண்டிய அதிர்ச்சிகரமான உண்மை. இது பற்றி முன்பு பல பதிவுகள் எழுதி உள்ளேன்.

லெஹ்மேன் பிரதர்ஸின் வீழ்ச்சிக்கு பிறகு, மிக பெரிய நிதி நிறுவனங்களை காப்பாற்ற செனட்டர்கள் எப்படி நிர்பந்திக்க பட்டார்கள் என்ற செய்தியையும் விளக்கி உள்ளார். நிதி நிறுவனங்களை கட்டு படுத்தும் அமைப்புகளின் தலைவர்களுக்கும் நிதி நிறுவனங்களுக்குமேயான தொடர்பையும் அழகாக காட்டி உள்ளார்

இந்த படத்தை பார்க்கும் போது எனக்கு முதலில் மனதில் தோன்றியது இந்தியாவில் தற்போது மிக முக்கியமாக தேவை படும் உண்மையான தொழிலாளர்களின் யூனியனின் அவசியம். அமெரிக்காவில் ரீகன் காலத்திலிருந்து systemically யூனியன்கள் சிறிது சிறிதாக அழிக்க பட்டு விட்டது. தற்போது அவர்களுக்கு நியாயமான உரிமைகள் மறுக்கபடும் போது இணைந்து போராடுவதற்கான கட்டமைப்பே அவரகளிடம் இல்லை. அதே சமயம் மீடியாக்கள் முழுதும் ஒரு சில செல்வந்தர்கள் கையில் இருப்பதால் தொழிலாளர்களின் உண்மை நிலை ஒட்டு மொத்தமாக வெளி உலகுக்கு தெரியாமல் இருட்டடிக்க படுகிறது.இந்தியாவிலோ தற்போது ஒருபுறம் தொழிலாளர்களின் உரிமையை காப்பற்ற வேண்டியவர்கள் முதலாளிகளோடு கூட்டு சேர்ந்து யூனியன்களின் செயல்பாட்டையே கேலி கூத்தாக்குகிறார்கள். மறுபுறம் அரசாங்கங்கள் தொழிலாளர்களின் போராட்ட உரிமையை சிறிது சிறிதாக சட்டம் மூலம் பறித்து கொண்டு உள்ளார்கள்.

கம்யூனிஸ்டுகள் அமெரிக்க அணு ஒப்பந்தத்துக்கு எதிராக போராடிய திறனில் நூற்றில் ஒரு பகுதியாவது இந்தியாவில் உள்ள தொழிலாளிகளின் நலனுக்கு ஆதரவாக அல்லது ஏழைகளின் நலனுக்காக செலவிட்டார்களா என்பது கேள்வி குறியே.மேற்கு வங்காளத்தில் அவர்கள் நடத்தும் ஆட்சி பற்றி எதுவும் கூற வேண்டியது இல்லை. மற்ற கட்சியை பற்றி கூறாமல் கம்யூனிஸ்டுகளை பற்றி மட்டும் ஏன் கூறுகிறேன் என்றால் ஒடுக்க பட்ட மக்களுக்கு ஆதராவாக ஒரு இயக்கம் தோன்றுவது மிக மிக கடினம். அதையெல்லாம் மீறி ஒரு இயக்கம் தோன்றி விட்டால், ஒட்டு மொத்த ஒடுக்க பட்ட மக்களின் பார்வையும் அவர்கள் பக்கமே செல்லும். அந்த இயக்கங்களின் தலைமை ஒரு சில சுயநல கும்பலிடம் மாட்டி விட்டால் அந்த இயக்கங்களின் அடிமட்ட தொண்டர்கள் உண்மையானவர்களாகவும், தலைமை அவர்களின் சக்தியை வீணடித்து , போராட்டதை மழுங்கடித்து விடுவர். மக்களின் உண்மையான தேவையை திசை திருப்பி, குறைந்த முக்கியத்துவம் உள்ள பிரச்ச்னையை மக்கள் முன் பூதாகரமாதாக்குவார்கள். கம்யூனிஸ்டு கட்சிகளின் பொலிட்பீரோவிற்கு அடி மட்டத்திலிருந்து உழைத்து முன்னிரியவர்கள் செல்வதை விட வங்கி மற்றும் காப்பீடு துறையில் உள்ள புரோக்கர்கள் ஆதிக்கமும் theoritically கம்யூனிசம் படித்து மேல் தர வர்க்கத்திலிருந்து(உயர் நடுத்தர) வந்தவர்கள் ஆதிக்கமும் அதிகமாவது கூட இதற்கு முக்கிய காரணமாக இருக்கலாம். இதன் விளைவாக பிற்காலத்தில் அது போன்ற எந்த இயக்கத்தையும் மக்கள் நம்ப மறுப்பார்கள். அது அவர்களின் ஒட்டு மொத்த வீழ்ச்சிக்கு வழி வகுக்கும்.

இந்த படம் நமக்கு கற்று கொடுக்கும் பாடம் - நாட்டிற்கு உடனடி தேவை தொழிலாளர்கள் நலனை பேனி பாதுகாக்க கூடிய உண்மையான தொழிற்சங்கங்களும் அவர்களின் உரிமையை நிலை நிறுத்த தேவையான சட்ட திட்டங்களும் தான்.சந்தை மற்றும் நிதி நிர்வாக அமைப்புகளின் மீது அரசின் கண்காணிப்பின் தேவையும் கட்டுபாடும் எவ்வளவு அவசியம் என்பது இந்த படத்தை பார்ப்பவர்களுக்கு புரியும். நாட்டின் பொருளாதாரத்தை சூதாட்ட களமாக மாற்றிய நிறுவனக்களுக்கு இந்தியாவிலும் அதிக முக்கியத்துவம் தர வேண்டும் என்று நமது பிரதமர் கூறி வருவதை அனைவரும் கவனிக்க வேண்டும்.

--

Sunday, October 03, 2010

உல்லாச தலைநகரம் லாஸ் வேகஸ் -3 - சூதாட்டங்கள்

லாஸ் வேகாஸ் என்றவுடனே அனைவரின் நினைவிற்கும் முதலில் வருவது சூதாட்டம், மது ,மாது மற்றும் மாமிசம். சூதாட்டத்தில் உலக அளவில் சில காலம் முன்பு வரை முதலில் இருந்தது இந்த நகரம் தான். ஆனால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் உலகளாவிய பன்னாட்டு வங்கிகளும், முதலீட்டு வங்கிகளும் நூதனமான பல புதிய LIVE சூதாட்டங்களை அறிமுகபடுத்தி , சூதாட்டத்தின் மதிப்புகளும் டிரில்லியனை தாண்ட வைத்து நியூயார்க் நகரை சூதாட்டத்தின் முதல் இடத்திற்கு கொண்டு சென்றுவிட்டர்கள்.

நெவேடா மாகாணத்தில் விபச்சாரம் ஒரு சில இடங்களில் அனுமதிக்க பட்டு இருந்தாலும் லாஸ்வேகாஸ் பகுதியில் அதற்கு அனுமதி இல்லை. இது சட்ட படி மட்டுமே. ஆனால் அங்கு தெருவெங்கும் மக்களுக்கு விபச்சாரத்துக்கு விசிட்டிங் கார்டு கொடுத்து அழைப்பவர்கள் ஏராளம். இந்த சட்டத்திற்கு புறம்பான நிகழ்ச்சி மறைமுகமாக நடைபெறுவதில்லை. நேரடியாகவே அனைத்து தெருக்களிலுமே நடைபெறுகிறது. ஆனால் இந்த தொழில் மிக பெரிய மபியாக்களின் கட்டு பாட்டில் உள்ளதால் அந்த விடுதிகளுக்கு செல்லும் மக்களின் உடமைகளுக்கு உத்தரவாதம் இல்லை என்று கேள்வி பட்டிருக்கிறேன்.அரை நிர்வாண மற்றும் முழு நிர்வாண நடன நிகழ்ச்சிகள் அனைத்து பெரிய விடுதிகளிளும் நடக்கும். அது மட்டுமன்றி ஒரு சில காசினோக்கள் நள்ளிரவு ஆப் சீசன் நேரங்களில் இது போன்ற நடனங்களை இலவசமாக சூதாடும் இடங்களில் நடத்தி வாடிக்கையாளர்களை இழுப்பதும் உண்டு.





தண்ணீர் பிரச்சனை இல்லாத ஒரு பாலைவனம் உண்டு என்று சொன்னால் அது லாஸ்வேகாசாக தான் இருக்கும். இங்கு அனைத்து வகை மது பாணங்களும் கிடைக்கும். வித்தியாசமான கோப்பைகளில் கிடைக்கும் மார்க்கரிட்டா இங்கு பிரபலம்

உணவு இங்கு மிக பிரபலம். ஒவ்வொரு விடுதியும் buffet வகை உணவை வைத்திருக்கும். அது மட்டுமன்றி பல வகையான சிறப்பு உணவுகளுக்குகான உணவு விடுதிகள் பல ஒவ்வொரு விடுதியிலும் இருக்கும். buffetல் உலகில் உள்ள அனைத்து வகையான உணவு(சீனா,மலசியா,தாய்லாந்து,ஜப்பான்,கொரியா,இத்தாலி,இங்கிலாந்து,பிரான்ஸ்,மெக்சிகன் ,american) வகைகளும் வைக்க பட்டிருக்கும். உணவு பிரியர்களுக்கு இது ஒரு நல்ல வர பிரசாதம்.

சூதாட்ட விடுதியில் நீங்கள் 1 செண்டு முதல் பல்லாயிரம் வரை வைத்து சூதாட்ட வசதி உள்ளது( மகாபாரதத்தில் வருவது போல் நாடு,நகரம் போன்றவற்றை வைத்து சூதாட வசதி உள்ளதா என்று தெரியவில்லை!). அங்கு இருக்கும் slot Machineகளில் 1 செண்டு முதல் சில டாலர் வரை வைத்து சூதாடலாம். குறைந்த முதலீட்டில் விளையாட வாய்ப்புள்ளதால் பெரும்பாலானோர் இதை தான் விரும்புவார்கள். ஸ்லாட் இயந்திரங்களில் பல வகை உள்ளது. அவற்றில் முக்கியமானது எண்கள்/எழுத்துக்கள் சுத்தும் வகை தான். அதாவது ஒவ்வொரு முறை விளையாடும் போதும் 3 - 5 row-க்களில் எண்கள் சுழன்று கொண்டு randomஆக ஒரு இடத்தில் நிற்கும். அப்போது கிடைக்கும் எண்களின் ஒப்பீட்டிற்கு(Combination) ஏற்றவாறு பரிசு இருக்கும். உதாரணமாக 333 என்று ஒரே எண் வந்தால் அதற்கு ஒரு பரிசு பொருள் இருக்கும். குறிப்பிட்ட எண்கள் combination வருவதற்கான நிகழ்தகவு(probability) குறைவாக இருந்தால் அதற்கு பரிசு அதிகம் இருக்கும்.



இந்த விளையாட்டுகளில் வரும் லாபமும் முதலீட்டை போலவே மிக குறைவு என்பது தான் பல பேருடைய கணிப்பு. ஆனால் உண்மை அது இல்லை. அமெரிக்காவில் இது போன்ற Slot Machine களை வைத்து விளையாடுவதில் ஒரு சில சட்ட திட்டங்கள் உள்ளது. அதன் படி ஒவ்வொரு விடுதியிலும் ஸ்லாட் இயந்திரங்களில் மக்கள் விளையாட போடும் பணத்தில் ஒரு கணிசமான சதவீதத்தை, கட்டாயமாக சூதாட்ட விடுதிகள் பரிசு பொருளாக விளையாடுபவர்களுக்கே கொடுத்து விட வேண்டும்.உதாரணமாக நெவேடா மாகாணத்தில் குறைந்தது 75% பணத்தை விளையாடுபவர்களுக்கு பரிசாக அளிக்க வேண்டும்.இந்த பரிசு பொருள் randomஆக வெவ்வேறு slot mnachineமூலம் jackpot என்ற பெயரில் பெரிய தொகையாக வழங்கபடும். எனவே அதிர்ஷ்டம் இருந்தால் குறைந்த முதலீட்டில் ஜாக்பாட் அடித்து நிறைய பணம் பார்க்கலாம். இங்கு விளையாட வருபவர்களில் ஒரு சிலர் இது போன்ற ஸிலாட் இயந்திரங்களில் நிறைய நேரம் விளையாடி விட்டு எழுந்து போகும் மக்களின் body language-ஐ கூர்ந்து கவனிப்பார்கள். அவர்களிடம் ஏமாற்றம் அதிகம் தெரிந்தால் அந்த இயந்திரங்களில் நிறைய நேரம் ஜாக்பாட் வரவில்லை என்று பொருள். எனவே அங்கு விளையாடினால் ஜாக்பாட் அடிக்க வாய்ப்பு அதிகம் உள்ளதால் அந்த இயந்திரங்களில் விளையாட ஆரம்பித்து விடுவார்கள்.

ஸிலாட் இயந்திரங்களுக்கு அடுத்த படியாக உள்ளது பிற Board Gameகள். கள் விளையாட மிக அதிக பணம் செலவ்ழிக்க வேண்டும் என்பது பலரின் நினைப்பு. ஆனால் உணமை அதுவல்ல. குறைந்த பணத்தை கொண்டே போர்ட் கேம்கள் விளையாடலாம். இனிவரும் பதிவுகளில் BlackJack,Roulette,Craps போன்ற விளையாட்டுகள் எப்படி விளையாடுவது என்று பார்ப்போம்.

உல்லாச தலைநகரம் - லாஸ்வேகஸ்(Las Vegas)

உல்லாச தலைநகரம் - லாஸ்வேகஸ்(Las Vegas) 2

--

Sunday, September 26, 2010

வாழும் வள்ளலார் - நாரயணன் கிருஷ்ணன் CNN Hero ஆக வாக்களியுங்கள்


வாடிய பயிரை காணும் போதெல்லாம் வாடினார் ராமலிங்க வள்ளலார். பசியில் வாடும் அனைவருக்கும் உணவளிப்பதே இறைப்பணி என்று வாழ்ந்தார்.இந்த காலத்திலும் வீதியில் அனாதையாய் இருக்கும் ஏழைகளுக்கு உணவளிப்பததையே வாழ்வின் லட்சியமாக கொண்டு ஒருவர் வாழ்கிறார் என்றால் கேட்பதற்கே ஆச்சரியமாக உள்ளது அல்லவா? இந்த அதிசயத்தை நடத்தும் நல்ல மனிதர் மதுரையை சேர்ந்த திரு.நாராயணன் கிருஷ்ணன். ஸ்டார் ஹோட்டலில் வேலை பார்த்து வந்த அவர் வீதியில் சமுதாயத்தால் கைவிட பட்டு ஆனாதையாய் திரியும் ஏழைகளுக்கு தினமும் தானே உணவு தயார் செய்து அவர்களது பசியை போக்கி வருகிறார்.தினமும் 400 பேருக்கும் மேல் 3 வேளை உணவு அளித்து வருகிறார்.







உலகளவில் நல்ல மாற்றத்தினை கொண்டு வருபவர்களில் 10 பேரை தேர்ந்தெடுத்து மக்கள் வாக்களிப்பின் மூலம் அவர்களில் ஒருவரை ஒவ்வொரு ஆண்டும் ஹீரோவாக தேர்ந்தெடுக்கும் CNN. இந்த வருடம் CNN தேர்ந்தெடுத்த 10 பேரில் நாராயணன் கிருஷ்ணனும் ஒருவர். இவருக்கு விருது கிடைத்தால் விருதுக்கு தான் பெருமையாக இருக்கும். ஆனால் இந்த விருதின் மூலம் அவர் பணி மேலும் வளர வாய்ப்புள்ளது. நீங்களும் அவருக்கு ஆதரவாக வாக்க அளிக்க இங்கு சென்று வாக்களிக்களாம்.

http://heroes.cnn.com/vote.aspx


இதை படிக்கும் பதிவர்கள் தங்கள் வலை பூவில் அவருக்கு ஆதரவாக வாக்களிக்க வாசகர்களுக்கு ஒரு லிங்க் கொடுத்தால் நன்றாக இருக்கும்.நவம்பர் 18 தான் வாக்களிக்க கடைசி நாள்.

CNN பத்திரிக்கையின் செய்தி அளிக்கும் விதம் குறித்து எனக்கு பெருத்த ஏமாற்றமாக இருந்தாலும் இந்த CNN Hero என்ற வகையில் பல நல்ல உள்ளங்களை உலகுக்கு அறிமுக படுத்துகிறார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை. இது பாராட்ட பட வேண்டிய செயல். பிற டி.வி நிறுவனங்கள் மற்றும் பிரபல செய்தி தாள்கள் கடைபிடிக்க வேண்டிய செய்தி.

--

Wednesday, September 22, 2010

இந்தியாவுக்கான ஒளி மயமான எதிர்காலம்

ஆண்டு முழுவதும் ஒட்டு மொத்த இந்தியாவுக்கு ஆன மத்திய பட்ஜெட்டின் ஆரம்ப கல்வி செலவு(பட்ஜெட்டில் ஒதுக்கபட்டது) - 36000 கோடி

ஒபாமா இந்திய வரும் போது போயிங் நிறுவனத்திடம் இருந்து C-17 Globmaster III ரக விமான படைக்கான விமானம் 10 மட்டும் வாங்க ஆகும் செலவு - 26680 கோடி

--

Sunday, September 19, 2010

சீன பணத்தை சேமிப்பு நாணயம்(Reserve Currency) ஆக்கிய மலேசியா

இது நாள் வரை சீனா தன் சேமிப்பு கரன்ஸியாக டாலரை வைத்திருக்குமா அல்லது யூரோவுக்கு மாறுமா அல்லது தங்கம் வாங்கி குவிக்குமா என்ற செய்திகளே உலக பொருளாதாரத்தில் விவாதத்தில் இருந்தது. நீண்ட நாட்களாக எதிர்பார்க்க பட்டு கொண்டு இருந்த இன்னோரு செய்தி தற்போது வந்துள்ளது. பொருளாதாரத்தில் மிக பெறிய அளவில் முன்னேறி வரும் சீனாவின் யுவானையே பிற நடுகள் சேமிப்பு கரண்சியாக சேர்க்க தொடங்கும் நாள் விரைவில் இல்லை என்பது அனைவரும் அறிந்ததே. சீனாவே இந்த முயற்சிக்கு தடை விதித்து வந்தது. சீனா தனது தடைகளை சிறிய அளவில் விளக்க ஆரம்பித்துள்ளது.

அந்த நிலையில் முதன் முதலாக சீனாவின் பாண்டுகளை வாங்கி தனது சேமிப்பு கரன்ஸியின் ஒரு பங்காக மாற்றி மலேசியா வரலாற்றில் இடம் பிடித்துள்ளது. நீண்ட காலங்களுக்கு பிறகு சீனாவின் நாணயம் சர்வ தேச சேமிப்பு கரண்சியாக மாறினால், அந்த மாற்றத்தை முதன் முதலாக கொண்டு வந்த நாடு என்ற பெயரை மலேசியா பெருகிறது. பினான்சியல் டைம்ஸ் பத்திரிக்கை இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. மலேசியாவை தொடர்ந்து வேறு சில நாடுகளும் சீனாவின் நாணயத்தை சேமிப்பு கரன்ஸியாக வாங்க தொடங்கியுள்ளதாக கூறினாலும் அந்த நாடுகளின் பெயர்களை அந்த செய்தி தாள் வெளியிடவில்லை.

சீனா பெருமளவில் இந்த நடைமுறையை அனுமதிக்குமா என்பது கேள்விக்குறியே. ஏனென்றால் அதன் விளைவாக சீனாவின் நாணய மதிப்பு கூட வாய்ப்புள்ளது. அது மட்டுமன்றி சீனா அமெரிக்க பாண்டுகளை வாங்குவதை போல் அமெரிக்கா சீனாவின் பாண்டுகளை தடையின்றி வாங்க ஆரம்பித்தால் சீனாவின் நாண்ய மதிப்பு உயர்ந்து அதன் ஏற்றுமதி தொழில் பாதிப்படைய வாய்ப்புள்ளது. எனவே சீனாவின் நாணயம் உலக சேமிப்பு நாணயத்தில் ஒரு முக்கிய பங்கை பிடிக்க பல வருடங்கள் ஆகலாம்.

--

Saturday, September 18, 2010

அமெரிக்கா , சீனா --இரு செய்திகள் இந்தியாவிற்கு?

கடந்த வாரம் இரு வேறு செய்தி தாள்களில் வந்த இரு செய்திகள் அனைவரின் சிந்தனைக்கும் உரியது.

முதலில் நியுயார்க் டைம் செய்திதாளில் வந்த இந்த செய்தி பற்றி பார்ப்போம்.

இந்த செய்தி அமெரிக்கா சிறந்த நாடுகள் வரிசையில் 11ம் இடத்துக்காக தள்ள பட்டதாக நியீஸ் வீக் பத்திரிக்கையில் வந்த செய்தியை பற்றிய பிரெட்மேன் இன் அலசல். அமெரிக்காவின் இந்த பின்னைடைவுக்கு முக்கிய காரணம் அமெரிக்காவில் பள்ளியிலேயிருந்து மாணவர்கள் படிப்பின் ஆர்வம் குறைந்து வருவது தான் என்கிறார்.மேலும் அவர் முக்கிய காரணமாக கூறுபவை

the decline in U.S. education, competitiveness and infrastructure, as well as oil addiction and climate change.

அவர் அமெரிக்காவின் வளர்ச்சிக்கு போட்டியாக இந்தியா, சீனா வருவதற்கான காரணங்கள் பற்றி பின் வருபவற்றை குறிப்பிடுகிறார்

China and India have been catching up to America not only via cheap labor and currencies. They are catching us because they now have free markets like we do, education like we do, access to capital and technology like we do, but, most importantly, values like our Greatest Generation had

இதில் முக்கியமாக நாம் பார்க்க வேண்டியது இந்தியாவின் கல்வி வளர்ச்சி பற்றியது.முதலாவதாக இந்தியாவில் பல்கலை கழக மற்றும் உயற் கல்வி கூடங்களின் தரம் பற்றி பார்ப்போம். மேலை நாடுகளின் இந்த வேகமான வளர்ச்சிக்கு முக்கிய காரணம் பல்கலை கழகங்கள். அனைத்து அடிப்படை ஆராய்ச்சிகளும் அங்கு பல்கலை கழகங்களில் தான் நடைபெருகிறது. அடிப்படை ஆராய்ச்சியில் கண்டு பிடிக்க பட்ட உண்மைகளை கொண்டு அதை சந்தை படுத்தலுக்கு தேவையான பொருளாக மாற்றும் ஆராய்ச்சியும் பல்கலை கழகங்களில் தான் நடக்கும். அதற்கு பின் தனியார் கம்பெனிகள் உள் புகுந்து சிறிது முதலீடு செய்து மீண்டும் பல்கலை கழகங்களின் உதவியோடு ஆராய்ச்சியை தொடர்ந்து சந்தைக்கு உரிய பொருளாக கொண்டு வருவார்கள். எனவே பல்கலை கழக ஆராய்ச்சி என்பது முதலாளித்துவத்தின் முதுகெலும்பு. இந்தியாவிலோ முதலாளித்துவ பாதை தான் ஏற்றது என்று தேர்ந்தெடுத்தாலும் பல்கலைகழக ஆராய்ச்சியை உயர்த்துவது பற்றி யாருமே சிந்திப்பது இல்லை.

இங்கு உள்ள மத்திய கல்வி அமைச்சர்களின் குறிக்கோள் எல்லாம் எவ்வாறு இந்தியை அனைத்து மாநிலங்களிலும் புகுத்தி, ஆங்கிலத்தை ஒழித்து ஒட்டு மொத்த இந்திய கல்வி கட்டுமானத்தையே சீரழிப்பது என்பது பற்றி தான் உள்ளது.

எதோ வளர்ந்த நாடுகள் தான் பல்கலை கழக ஆரய்ச்சியில் முன்னேற்றம் செலுத்துகிறது என்று இல்லை. சீனா பல்கலை கழக ஆராய்ச்சிக்கு மிக அதிக முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்துள்ளது. தற்போது அமெரிக்காவில் திறமை வாய்ந்த ஆராய்ச்சியாளர்களுக்கு 5 வருடத்துக்கு 1 மில்லியன் டாலர் என்று நிதி உதவி அளித்து சீனா பல்கலைகழகத்துக்கு அழைக்கிறது. அவர்களுக்கு கொடுக்க படும் டார்கெட் எல்லாம் சயின்ஸ், நேச்சர் போன்ற உயர் தர அராய்ச்சி இதழ்களில் கட்டுரை வெளியிட வேண்டும் என்பதே.அவ்வாறு கட்டுரை வெளியிட இல்லை என்றால் 5 வருடத்துடன் அவர்களுடைய கான்ட்ராக்ட் விலக்க படும்.மிக பெரிய விஞ்ஞானிகள் அங்கு சென்று ஆராய்ச்சி செய்வதால் அங்கு தரமான ஆராய்ச்சி ஆரம்பிக்க படுவதுடன், பல்கலைகழகத்தில் படிக்கும் மாணவர்களின் ஆராய்ச்சி திறன் அதிகமாகிறது. பிறகு ஒவ்வோரு மாணவனும் தரமான மற்றும் லேட்டஸ்டான ஆரய்ச்சி செய்ய வாய்ப்பு கிடைக்கிறது.

இந்தியாவின் பல்கலை கழகங்களில் பல மாணவர்கள் நல்ல தரமான ஆராய்ச்சி செய்ய வேண்டும் என்று சேர்கிறார்கள். ஆனால் பல்கலைகழகங்களில் உள்ள பேராசிரியர்களின் அறிவோ 40 வருட பின் தங்கியதாக உள்ளது. அவர்கள் கொடுக்கும் ஆராய்ச்சி தலைப்பும் ஒன்றுக்கும் உதவாத தலைப்பாக இருக்கும். பல்கலைகழகங்களில் நடக்கும் அரசியலில் மாணவர்கள் வீழ்ந்து கடைசியில் அந்த ஜோதியில் ஐக்கியமாகிவிடுகிறார்கள். தற்போது மத்திய அரசு ஆராய்ச்சிக்கு என பல கோடி செலவு செய்தாலும், பலன் மிக குறைவே. அந்த பிராஜெக்ட் வாங்கவே சில சமயம் நீங்கள் திறமையான அரசியல்வாதியாக இருக்க வேண்டும். இந்திய பல்கலை கழக ஆராய்ச்சி பற்றிய என்னுடைய அனுபவத்தை தனி பதிவாக இடுகிறேன்.

அடுத்தது கல்லூரிகளில் கல்வி தரம். 3 முதல் 6 ஆண்டுகளுக்கு மாணவர்கள் கல்வி கற்க கல்லூரிகளுக்கு செல்கிறார்கள். அங்கு கொடுக்க படும் கல்வியின் தரம் மிக கவலை கூறியதாக உள்ளது. மேலை நாடுகளில் ஒரு பாடத்தில் மேல் படிப்பு வரை படித்தால் உண்மையிலேயே அவருக்கு அந்த பாடத்தில் நுண்ணிய அறிவு இருக்கும். ஆனால் இந்தியாவிலோ கல்லுரி முடித்து வெளி வரும் மாணவர்களுக்கு அந்த பாடத்தில் இருக்கும் அறிவு மிக மிக குறைவு. பாடத்தின் சிலபஸ் எல்லாம் மிக நன்றாகவே உள்ளது. ஆனால் கல்வி தரம் மிக குறைவாக உள்ளது. லோக்கல் கல்லூரிகளை சேர்ந்த ஆசிரியர்கள் ,பள்ளி கூடத்தில் படிக்கும் போது அந்த பாட புத்தகத்துக்கு உள்ள தரத்தை விட குறைவாக ஒவ்வொரு பேப்பருக்கும் புத்தகம் போட்டு விடுகிறார்கள். மாணவர்களும் அதை மனபாடம் செய்து விட்டு சென்று வாந்தி எடுத்து விடுகிறார்கள். மேலை நாடுகளில் உள்ள மிக பெரிய பேராசிரியர்கள சிந்தனையை தூண்டும் விதமாக புத்தகங்கள் போடுகிறார்கள். அதை வாங்கி யாரும் படிப்பது கிடையாது. மேலும் ஆராய்ச்சி ஜேர்னல்கள் போன்றவற்றை புரட்டி பார்த்து படிப்பது என்பது விரல் விட்டு எண்ணும் நிலையில் தான் உள்ளது(அவை கல்லூரிகளில் வர வழிப்பதே குதிரை கொம்பு)

பல்கலை கழக ஆராய்ச்சி இப்படி என்றால் மற்றொரு முக்கிய பிரச்சனை கிராமபுற பள்ளிகளின் கல்வித்தரம்.கிராமபுறங்களில்(முக்கியமாக அரசு பள்ளிகளில்) உள்ள படிக்கும் பெருபான்மையான மாணவர்களின் கல்வி தரம் மிக மோசமாக உள்ளது. தற்போது தமிழகமெங்கும் கல்லூரிகள் பல அரசு மற்றும் தனியார் துறைகளில் தொடங்க பட்டதாலும், ஏழை மக்களுக்கு பள்ளி இலவச கல்வி கிடைப்பதாலும், அரசு உணவு பொருட்களை இலவசமாக வழங்குவதால் ஏழைமக்களின் சேமிப்பு மூலம் அவர்கள் குழந்தைகளின் கல்விக்கு செலவிட முடிவதாலும், அதை விட முக்கியமாக ஏழை மக்கள் தங்கள் குழைந்தைகளின் படிப்பு மற்றும் வளர்ச்சிக்கு பல தியாகங்களை செய்வதாலும் கிராம புரங்களிளிருந்து ஏழை மக்கள் தங்கள் பிள்ளைகளை கல்லூரி படிப்புக்கு அனுப்புவது அதிகரித்துள்ளது. அவர்களை பள்ளி படிப்பில் வலுவான கட்டுமானத்தை ஏற்படுத்த வேண்டிய கிராம புற பள்ளிகள் தன் கடமையிலிருந்து தவறுகின்றனர். இதற்கு பல காரணம் உள்ளன, ஆசிரியர்களின் அலட்சியம்,முக்கியமாக ஆசிரியர்கள் நியமிக்க படாமல் இருப்பவை, அதை விட முக்கியமாக ஒவ்வொரு வகுப்பிலும் ஏதும் படிக்காமலேயே பாசாகி வந்து விடலாம் என்ற நிலமை. கடுமையான கஷ்ட்டதிற்கு நடுவில் தன் பிள்ளைகளை கல்லூரிக்கு அனுப்புகிறார்கள் பெற்றோர். ஆனால் கல்வி தரத்தில் போட்டி போட முடியாததால் அவர்களால் நல்ல வேலைகளுக்கும் போட்டியிட்டு செல்ல முடியாத நிலை.அரசு வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடின் பயனையும் முந்தய தலைமுறையில் முன்னேறிய பெற்றோரின் பிள்ளைகளே அனுபவிக்கும் நிலை. நேற்று பல்கலை கழகத்தில் ஆசிரியராக இருக்கும் என் நண்பரிடம் பேசி கொண்டு இருக்கும் போது அவர் தற்போது கிராம புறத்திலிருந்து வந்திருக்கும் மாணவர்களின் தரம் பற்றிய கூறிய செய்திகள் மிக அதிர்ச்சியாக இருந்தது(அவர் கிராம புற மாணவர்கள் நன்கு படிக்க வேண்டும் என்று, கிராம புற மாணவர்களுக்கு உதவ பல முயற்சி எடுப்பவர். ஆனால் அவர் உதவ முன் வந்தாலும் அதை ஏற்று முன்னேற 90% மணவர்கள் தயாரக இல்லை என்பது கொடுமை)

இந்த நிலை தொடர்ந்தால் ஒரு புறம் கல்வியின் தரம் குறைவதுடன் மறுபுறம் ஏழை மக்கள் கல்விக்கு முக்கியத்துவம் கொடுப்பது தேவையா? என்று எண்ண தோன்றக்கூடிய நிலை வந்தாலும் ஆச்சரிய படுவதற்கு இல்லை.

மற்றொரு செய்தி பினான்சியல் டைம்ஸ் பத்திரிக்கையில் வந்திருக்கும் இந்த செய்தி. இது சீனாவின் சமீபத்தய பொருளாதாரம் மற்றும் வணிப ரீதியான செயல்பாடுகள் பற்றியது.

சீனா தற்போது மூல பொருட்கள் அதிகம் உள்ள தென் அமெரிக்க மற்றும் ஆப்ரிக்க நாடுகளில் பெரும் அளவு மூல பொருட்கள் சார்ந்த துறைகளில் முதலீடு செய்கிறது.இதில் குறிப்பிட தக்க நாடு பிரேசில். உலகளவில் மூலபொருட்கள் உற்பத்தியில் முக்கிய இடத்தை வகிப்பது பிரேசில். இங்கு தற்போது மூல பொருட்களோடு பெட்ரோலும் பெருமளவு கண்டு பிடிக்க பட்டுள்ளது.கடந்த ஆண்டு வரை 100 மில்லியனுக்கும் குறைவாக இருந்த பிரேசிலுக்கான சீன முதலீடு இந்த ஆண்டு 10 பில்லியனை தாண்டும் என்று எதிர் பார்க்க படுகிறது.உதாரணமாக சீனா, பிரேசிலின் எண்ணெய் கம்பெனியான பெட்ரோபிராசில் 10 பில்லியன் டாலரும் , இரும்பு கம்பெனியில் 1.25 பில்லியனும் முதலீடு செய்துள்ளது.மூல பொருட்களின் முதலீடு மட்டுமல்ல. இரயில் போக்குவரத்து, கப்பல் கட்டுமானம், மின் உற்பத்தி நிலையங்கள் என உயர் தொழில்நுட்ப துறைகளிலும் தென் அமெரிக்க மற்றும் ஆப்ரிக்க நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது. சீனாவிடம் அதிகம் இருக்கும் அன்னிய செலாவனி கையிருப்பு இதற்கு பெருமளவில் கை கொடுக்கிறது. சீனா அமெரிக்க பாண்டுகளில் மட்டும் முதலீடு செய்து வளர்ந்த நாடுகளை மட்டும் நம்பி இருக்காமல் வளரும் நாடுகளின் தொழிற்துறையிலும் தற்போது கவனம் செலுத்த தொடங்கி உள்ளது.

கீழ் காணும் வர்த்தக ஒப்பந்தத்தை பார்த்தால் இரு நாடுகளுக்கான வர்த்தகம் எப்படி நடக்கிறது என்று புரியும்.வேல் எனப்படும் பிரேசிலின் இரும்புதாது வெட்டி எடுக்கும் கம்பெனி சீனாவை சேர்ந்த இரு வங்கிகளிடமிருந்து 1.23 பில்லியன் கடன் வாங்க உள்ளது. இந்த கடன் மூலம் அது 12 மிக பெரிய கார்கோ கப்பல்களை வாங்கும். அந்த கப்பல்கள் சீனாவில், சீன தொழிலாளிகளால் தயாரிக்க படும். அவ்வாறு வாங்கிய கப்பல் பிரேசிலில் உற்பத்தி செய்த இரும்பை சீனாவிற்கு ஏற்றுமதி செய்ய உபயோக படுத்தபடும்.

தற்போது உலகளவில் டாலர் அடிப்படையில் நடக்கும் வர்த்தகத்தை சிறிது சிறிதாக குறைத்து சீனா தன்னுடைய நாணயத்தின் அடிப்படையில் நடத்த முயற்சிகள் எடுக்க தொடங்கி உள்ளது. உலகளவில் பெருமளவில் மூல பொருட்களை உற்பத்தி செய்யும் தென் அமெரிக்கா மற்றும் ஆப்ரிக்க நாடுகளும், உலகளவில் உற்பத்தி தொழிலில் முதலிடத்தில் இருக்கும் சீனாவும் தன் வர்த்தகத்தை முழுமையாக டாலரில் நடத்தாமல் சீனாவினுடைய நாணயத்தில் நடத்தினால் அதன் விளைவு உலக பொருளாதாரத்தில் மிக பெரியதாக இருக்கும்


சீனாவின் உற்பத்தி துறை வளர்ச்சி பற்றி அனைவருக்கும் தெரிந்ததே. இந்திய உற்பத்தி துறை தொழில் சீனாவுடன் போட்டி போட்டு கொண்டு வளர வேண்டிய நிலையில் உள்ளது. உற்பத்தி தொழிலுக்கு முக்கிய தேவை மனித உழைப்பு, மூல பொருட்கள் மற்றும் மின் மற்றும் எரிசக்தி. மனித உழைப்பு இந்தியா மற்றும் சீனாவில் எளிதாக கிடைக்கும். மின் தேவையை பூர்த்தி செய்ய இந்தியா எவ்வாறு "தெளிவான" திட்டமிடலுடன் செயல் படுத்துதல் உள்ளது என்பது பற்றி நான் கூற வேண்டிய அவசியம் இல்லை. உற்பத்தி தொழிலுக்கான அடிப்படை தேவையான் மூல பொருட்களை அடைய சீனா எவ்வாறு முயற்சி செய்கிறது என்று மேல் சொன்ன செய்தியில் பார்த்தோம். இந்தியா அது போன்ற பெரிய முயற்சிகளை எடுக்க வில்லை என்றால் வருங்காலத்தில் மூலபொருட்கள் பற்றாக்குறையால் அனைத்து தொழில்களும் சீனா நோக்கி செல்ல தொடங்கிவிடும்.ஏற்கனவே பல தொழில் துறைகளில் சீனா மூல பொருட்கள் சப்ளையை இந்தியாவிற்கு தடுப்பதாக செய்திகள் வந்து கொண்டு இருக்கிறது.'

இந்தியாவில் தொழில்மயமாக்கள் அறைகுறையாக நடைபெற்று பின் மீண்டும் உற்பத்தி தொழிற்துறை நலிவடைந்தால் என்ன நடக்கும் என்று பார்ப்போம். தொழில்மயமாக்கள் நடை பெரும் போது கிராமத்தில் உள்ள சிறு ,குறு விவசாயிகள் தங்கள் நிலங்களை விற்று நகர் நோக்கி தொழிற்சாலைகளில் வேலை தேடி வந்து இருப்பார்கள். விவசாய கூலி தொழிலாளர்களும் நகர் நோக்கி வந்திருப்பார்கள். இதனால் கிராமபுரங்களில் நில உடமையின் அளவு அதிகமாகி, விவசாயியின் கையிருப்பு நிலத்தின் அளவு அதிகமாகும். கூலி தொழிலாளர்கள் கிடைப்பதும் அரிதாகும். தற்போது தமிழக கிராமத்தில் அந்த நிலை வர தொடங்கை உள்ளது. அதனால் விவசாயம் இயந்திர மயமாகும். அங்கு தொழிலாலர்களின் தேவையும் இருக்காது.சில காலம் கழித்து தொழில்துறை நலிவடைந்து தொழிலாளிகள் மீண்டும் கிராமத்திற்கு விவசாயம் செய்ய சென்றாலும் அங்கு வழி இருக்காது.அதன் சமூக மற்றும் பொருளாதார விளைவுகள் கடுமையானதாக இருக்கும்.

ஏற்கனவே பிரதமர் மன்மோகன் சிங் விவசாயத்தை நம்பி இருக்கும் மக்களின் பெரும்பாலோனோரை தொழிற்துறைக்கு கொண்டு செல்வதன் மூலம் தான் இந்தியாவின் வறுமையை ஒழிக்க முடியும் என கூறி உள்ளார். தொழிற் துறை வளர்ச்சி பிற்காலத்தில் இந்தியாவில் நிலையாக இருக்க தேவையான மூல பொருட்கள் சப்ளை பற்றியோ , மின் மற்றும் எனர்ஜி தேவையை சரி செய்வது பற்றியோ அவர் தெளிவாக சிந்தித்து செயல் பட்டு கொண்டிருக்கிறாரா?

--

Tuesday, September 14, 2010

கம்யூனிசத்துக்கு சமாதி கட்டும் கியூபா?

சோவியத் யூனியன் வீழ்ச்சிக்கு பின்னும், சீனா சந்தை வழி பொருளாதாரத்துக்கு முழுமையாக திரும்பிய பின்னும் உலக கம்யூனிச இயக்கத்துக்கு ஒரு பெரும் பின்னடைவாக இருந்தது. அதை பயன் படுத்தி முழுமையான சந்தை பொருளாதாரத்தை நோக்கி சென்ற உலகுக்கு கடந்த அமெரிக்க மற்றும் ஐரோப்பிய பொருளாதார வீழ்ச்சி அதிர்ச்சியாக இருந்தது. இது நாள் வரை கம்யூனிஸ்ட்டுகளுக்கு எடுத்து காட்டாக இருந்த கியூபா தற்போது கம்யூனிச பாதையை மாற்ற ஆரம்பித்து விட்டது.



சோவியத் யூனியன் போல் நடுவண் அரசு திட்டமிடல் செய்து தேவையான தொழில்களை அரசே தொடங்கி மக்களை அதில் வேலைக்கு அமர்த்தும் முறை கியூபாவில் இருந்தது. நாட்டின் தொழிற்துறையின் முழு கட்டுபாடும் அரசே கட்டு படுத்தியது. உலகில் சுகாதார வசதியில் வளர்ந்த நாடுகளை விட முன்னிலை பெற்றது.அமெரிக்கா கூட அந்த நாட்டிடமிருந்து கற்று கொள்ள வேண்டும் என்று மைக்கேல் மூர் தன்னுடைய சிக்கோ என்ற டாக்குமென்ட்ரியில் கூறி இருப்பார்.சோவியத் வீழ்ச்சிக்கு பின் அதற்கு சோவியத் யூனியனிலிருந்து கிடைத்த உதவிகள் நிறுத்த பட்டன. இரு ஆண்டுக்கு முன் பிடல் கேஸ்ட்ரோவின் சகோதரர் அதிகாரத்து வந்த பின் மாற்றத்திற்கான அறிகுறிகள் தோன்ற தொடங்கின.கடந்த ஏப்ரல் மாதத்தில் முடி வெட்டும் கடைகள் பலவற்றை அரசு தன் கட்டு பாட்டிலிருந்து விளக்கி தொழிலாளர்கள் சேர்ந்து நடத்தும் கூட்டுறவிற்கு கொடுத்தது. விவசாய நிலங்கள் தனியார் வசம் ஒப்படைக்க தொடங்கியது.

கடந்த ஜூலை 26ம் நாள் கியூப புரட்சியின் நினைவு தினத்தில் காஸ்ட்ரோ பேசாத போதே பெரும் மாற்றம் நிகழ போகிறது என்று நினைத்தேன். சில நாட்களுக்கு முன் காஸ்ட்ரோ கியூப கம்யூனிச முறை தோல்வி அடைந்து விட்டதாக கூறி பின்னர் அவ்வாறு கூறவில்லை என்றார். நேற்று கியூப அதிபர் கம்யூனிச மாதிரிக்கு முடிவு கட்டும் வகையில் ஒரு அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதன் படி அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்துக்குள் அரசு வேலையில் உள்ள 50,000 பேர் பணி நீக்கம் செய்ய படுவார்கள். அவர்கள் வேறு வேலைக்கு செல்ல வேண்டும் அல்லது தொழிலாளிகள் நடத்த போகும் புதிய கூட்டுறவு தொழிற்துறையில் இணைந்து வேலை செய்யவேண்டும். அவர்களுக்கு அரசு தரும் இலவச உணவோ, போக்குவரத்து உதவியோ கிடைக்காது.

ஆனால் கியூபா முழுமையான சந்தை பொருளாதாரத்துக்கோ அல்லது மக்களாட்சிக்கோ போக போவது இல்லை. தற்போதைய செய்தி படி அது அரசு முழுமையாக கட்டு படுத்தும் தனியார் துறை மற்றும் கூட்டுறவு துறையை வெனிசூலாவின் சாவஸ் ஸ்டைலிலும், சீன வழி ஒற்றை கட்சி ஆட்சி முறையும் பின் பற்றபோவதாக தெரிகிறது.

ஆனால் இந்த முடிவு குறுகிய காலத்தில் அவசர அவசரமாக எடுக்க பட்டது அல்ல. கடந்த இரு வருடங்களாக திட்டமிட்டு எடுக்க பட்டது. எனவே வேலை இழக்கும் தொழிலாளர்கள் பாதிக்க படுவது குறைவாகவே இருக்கும்.


முழு சந்தை பொருளாதாரம் எவ்வாறு வசதியற்றவர்களுக்கு கல்வி மற்றும் மருத்துவ உதவிகளை மறுக்கிறது என்று அமெரிக்காவின் அனுபவத்தில் பார்க்கிறோம்.வறுமை மிக மிக குறைவாக உள்ள அமெரிக்காவிலேயே இப்படி என்றால் இந்த முறை இந்தியாவில் நடமுறை படுத்த பட்டால்(தற்போது சிறிது சிறிதாக நடை முறை படுத்த பட்டு வருவது வேறு விஷயம்), அதன் விளைவு எப்படி இருக்கும் என்பதும் யூகிக்க முடிகிறது. அதே போல் அனைத்து வேலைகளையும் நடுவண் அரசின் மூலம் திட்டமிட்டு அரசே அனைத்து வேலைகளையும் செய்து கொள்வதும் நடைமுறை சாத்தியம் இல்லை என்பதை சோவியத்,(மாவோ கால) சீனா மற்றும் கியுபா போன்றவற்றில் பார்க்கிறோம். இனியும் UTOPIAN கம்யூனிச கொள்கையை கனவாக கொண்டு, கனவை நோக்கியே பயனிப்பதும் பயனில்லாதது.(நிச்சயம் முதலாளித்துவம் தன் நிஜ முகத்தை உலகெங்கும் காட்ட தொடங்கிய பின் அடுத்த cycleல் கம்யூனிசம் மீண்டும் வரும் என்பதும் நிஜம். ஆனால் அதற்காக காத்து கொண்டிருந்தால் தற்போதைய காலத்தில் ஒடுக்க பட்டவர்களை முன்னேற்ற எடுக்க கூடிய, நடைமுறை சாத்தியம் உள்ள வகைகளை பற்றி சிந்திக்க யாரும் இருக்க மாட்டார்கள்)
தற்போதைய சூழ்நிலையில் வசதி வாய்ப்பற்ற மக்களின் வாழ்வாதாரத்தை காக்கவும், அவர்களின் முன்னேற்றத்துக்காகவும் அரசு கல்வி(இலவச கட்டணத்துடன் கூடிய அரசு கல்லூரிகள்), மருத்துவம்( தனியார் இன்சூரன்ஸ் கம்பெனிகளிடம் தாரை வாக்காமல் இலவச அரசு மருத்துவமனை) , முன்னேற்றக்கடன்( அரசு வங்கி மூலம் விவசாயம் மற்றும் சிறு தொழில்) தருவது மற்றும் அடைப்படை வசதிகளை செய்து தருவது போன்றவை இன்றி அமையாதவை.இவற்றை லாப நோக்குள்ள தனியார் வசம் முழுமையாக கொடுக்க முயற்சி செய்வது தவறானது ஆகும்.

அதே போல் தங்கு தடை இல்லாத சந்தை பொருளாதாரம் என்ற பெயரில் மக்களை தனியார் நிறுவங்களின் வேட்டை காடாக்கி அரசின் கட்டுபாட்டை முழுமையாக விளக்குவது என்பதும் மிக தவறாகும்.கட்டுபாடற்ற சந்தை பொருளாதாரம் பற்றி பேசி வந்த அமெரிக்காவே தற்போது அரசின் கட்டுபாடுகளை அதிகரிக்க வேண்டும் என்று கூறி அதற்கான செயல்பாட்டிலும் இறங்கி உள்ளது.

தற்போதைய கியூபாவின் இந்த முடிவானது மக்கள் நலம் சார்ந்தது மட்டுமின்றி அனைத்து தொழில்களையும் அரசே எடுத்து நடத்தும் கம்யூனிசத்தின் தோல்வி மட்டும் தான். இதை உதாரணம் காட்டி ஒடுக்க பட்ட மக்களின் அடைப்படை நலனுக்காக அரசு நேரிடையாக மற்றும் மறைமுகமாக செய்து வரும் உதவிகளை முழுதும் நிறுத்த வேண்டும் என்ற கூக்குறல் எழ கூடும்.கூடிய விரைவில் ஊடகங்கிளில், கியூபாவின் இந்த செய்தியை மேற்கோள் காட்டி ஒபாமாவின் மக்கள் நல திட்டங்களை எதிர்த்து நிறைய கட்டுரைகளை காணலாம்.

--

Friday, September 10, 2010

திரைப்படம் - The Yes Men Fix The World (2009)

2004ம் ஆண்டு டிசம்பர் மாதம். போபால் விஷ வாயு விபத்து நடந்து 20ம் ஆண்டு நிறைவடையும் வேலை. விபத்தினால் பாதிக்க பட்ட மக்களுக்கோ போதிய இழப்பீடு கிடைக்க வில்லை. இன்னும் பல்லாயிர கணக்கான மக்கள் தினந்தோறும் பலியாகி கொண்டும், பல வகை நோயினால் பாதிக்க பட்டு கொண்டும் உள்ளனர். விபத்தை உண்டாக்கிய தொழிற்சாலை இன்னும் விஷத்தை நிலத்தடி நீரிலும், மண்ணிலும் கக்கி கொண்டே இருக்கிறது. விபத்தில் பாதிக்க பட்டவர்கள் இழப்பீடுக்காக பல ஆண்டுகளாக போராடி கொண்டே இருந்த நேரம்.

அப்போது BBC தொலைகாட்சியில் DOW Chemicals கம்பெனியின் செய்தி தொடர்பாளர் தோன்றி DOW Chemicals போபால் விஷவாயு விபத்துக்கான பொறுப்பை ஏற்று $12 பில்லியன் பணத்தை விபத்தில் பாதிக்க பட்ட மக்களுக்காக கொடுக்க போகிறது என்றும் அவர்களுக்கு மருத்துவ வசதி மற்றும் தொழிற்சாலையில் மீதமுள்ள விஷ கழிவுகளை அகற்ற ஒப்பு கொண்டதாக அறிவித்த உடன் உலகமே( DOW Chemicals பங்கு வைத்திருப்பவர்கள் தவிர) மகிழ்ச்சியில் ஆரவாரித்தது.




ஆனால் அந்த மகிழ்ச்சி சில மணி நேரங்களுக்கு பின் நீடிக்கவில்லை. பின்னர் தான் தெரிந்தது, அந்த அறிவிப்பை வெளியிட்டவர் DOW Chemicals கம்பெனிக்கு சம்பந்தமில்லாத போலி என்றும் போபால் விஷ வாயு விபத்தையும், அதில் பாதிக்கபட்டவர்களுக்கு இழப்பீடு கிடைக்காததையும்,அந்த தொழிற்சாலையின் இன்றைய நிலையையும் உலக மீடியாவிற்கு வெளிச்சம் போட்டு காட்ட நடத்தபட்ட நாடகம் என்பது.

இதை திட்டமிட்டு நடத்தியவர்கள் Andy Bichlbaum மற்றும் Mike Bonanno. இவர்களுடைய வேலையே இதுபோல் லாப நோக்கை மட்டும் கொண்டு மக்கள் நலம் , அதிலும் ஏழை நாடுகளின் மக்கள் உயிரை கிள்ளு கீரையாக நினைத்து பேரழிவை ஏற்படுத்தும் பன்னாட்டு கம்பெனிகள் மற்றும் தடையில்லா சந்தையும், தனி மனிதனின் பேராசையும் தான் உலக முன்னேற்றத்துக்கு வழி என்று நினைத்து மக்கள் நலனில் கவலை படாத அரசாங்கங்களின் நிஜ முகத்தை உலக மக்கள் முன் காட்ட, பெரிய பன்னாட்டு கம்பெனிகள் அல்லது அரசின் பிரதிநிதிகள் என்று பொய்யாக வேடமணிந்து மிக பெரிய மீடியா அல்லது மிக பெரிய தொழிற் கருத்தரங்குகளுக்கு சென்று, உண்மையை நக்கலாக கூறி அதன் மூலம் நிதர்சனத்தை மீடியாவின் மூலம் மகக்ளிடம் கொண்டு செல்வது.இதையே தனது வேலையாக கொண்டு,உலகில் நல்ல மாற்றத்தை கொண்டு வர த்ங்களால் ஆன சிறிய முயற்சியை செய்கின்றனர்.

அவர்கள் நடத்திய திருவிளையாடல்கள் எலலாம் படத்துக்காக எழுத பட்ட கதையல்ல நிஜம்!

போபால் பிபீசி பேட்டி அவர்கள் நடத்திய திருவிளையாடள்களில் ஒன்று. இது போல் அவர்கள் நடத்திய பல நாடகங்களை தொகுத்து படமாக வெளியிட்டுள்ளனர். அந்த படம் தான் The Yes Men Fix the World (2009)

இது தான் அந்த படத்தின் டிரெயிலர்



இதை நடத்த அவர்கள் என்ற DowEthics பொய்யான வலை தளத்தை உருவாக்கி பல காலம் காத்திருந்தனர். அப்போது தான் பிபீசி தொலைகாட்சி நிறுவனம் அவர்களது வலை தளத்தை Dow Chemicals நிறுவனத்தின் உண்மையான வலைதளம் என்று நம்பி, போபால் விபத்தின் 20ஆவது ஆண்டு நிறைவின் போது, அவர்களை பேச அழைத்தது. அது நடந்த விதம் பற்றி தெரிந்து கொள்ள கட்டாயம் இங்கு போய் பாருங்கள்.

அவர்கள் செய்த வேறு சில திருவிளையாடல்கலையும் இந்த படத்தில் காட்டியுள்ளனர். அவற்றில் சில.

லண்டனில் நடந்த மற்றொரு கான்பிரன்ஸில் டௌ நிறுவன அதிகாரி போல் சென்றுள்ளனர். அங்கு டௌ நிறுவனம் புதிதாக கண்டு பிடித்துள்ளதாக கூறி Acceptable Risk Calculator என்ற ஒன்றை அறிமுக படுத்தினர். Acceptable Risk Calculator என்பது ஒரு புதிய பிராஜெக்டை தொடங்கும் போது, அதன் விளைவாக மனித உயிர்கள் பலியாக வாய்ப்பு இருந்தாலும் , லாபம் கொடுக்கும் தொழிலாக இருந்தால் எவ்வாறு ஏற்புடைய ரிஸ்க்கை கணக்கிடுவது என்பது பற்றியது.அதாவது எந்த பகுதியில் அந்த தொழிற்சாலையை கட்டலாம்(ஏழை மற்றும் வளரும் நாடுகளில்), எந்த மக்கள் இறந்தால் கம்பெனிக்கு பாதிப்பு ஏற்படுத்தாது போன்றவை பற்றியது.தங்க முலாம் பூசபட்டை எலும்புகூட்டை அதற்கு குறியாக காட்டி உலக மக்களின் கவனத்தை டௌ மருந்து கம்பெனியின் மீது விழ வைத்தனர்.

கனடாவில் 2007ம் ஆண்டு நடந்த Gas & Oil Exposition 2007 ல் அவர்கள் நடத்திய கூத்து தான் அற்புதமானது. இது எண்ணெய் கம்பெனிகள் சுற்றுபுற சூழல் பற்றி கவலை படாமல் பொறுப்பில்லாமல் நடந்து கொள்வதை உலகுக்கு காட்ட செய்த ஏற்பாடு.

Exxon Mobil என்ற மாபெரும் கம்பெனியின் முன்னாள் தலைவர் Lee Raymond, தனது வேலையிலிருந்து ஓய்வு பெற்றபின், அமெரிக்க அரசுக்கு பெட்ரோலிய கொள்கை பற்றி ஆலோசனை கூறும் National Petroleum Council என்ற அமைப்பின் தலைவரானார்.அவருக்கு பதிலாக அவரது ஆலோசகராக அந்த கான்பிரன்ஸில் முக்கிய பேச்சாளராக உள் நுழைந்தார் நமது ஹீரோ.NPC செய்து வரும் புதிய ஆராய்ச்சியின் விளைவாக வரும் புதிய கண்டுபிடிப்பை பற்றி அறிவிப்பு வரும் என்று அனைவரும் ஆவலாக எதிர்பார்த்து கொண்டிருந்தார்கள்

மக்களின் எதிர்பார்ப்பை ஏமாற்றாமல் புதிய வகை எண்ணெய் விவீலியம் கண்டு பிடிக்க பட்டதாக அறிவித்தார். அது எதிலிருந்து எடுக்க பட்டது தெரியுமா? உலகில் மிக எளிதாக, மலிவாக கிடைக்கும் பொருளான மனித உடல் பகுதியிலிருந்து எடுக்கபட்டது. புவி வெப்பமாவதால் வருடந்தோறும் ஏழை நாடுகளில் பல்லாயிய கணக்கான மக்கள் சாவதால்,சாவிலிருந்தும் பணம் பண்ணுவதுதான் முதலாளித்துவத்தின் குறிக்கோள் என்று கூறி, அந்த உடலிலிருந்து எண்ணெய் எடுக்கும் புதிய தொழில் நுட்பத்தை உலகுக்கு காட்டி உலகெங்கிலும் அதிர்வலை ஏற்படுத்தினார். எக்சான் மொபில் கம்பெனியின் கழிவுகளை அகற்றி நோய் வந்து இறந்த தொழிலாளியின் உடல் பாகத்திலிருந்து மெழுகு வர்த்தியை தயாரித்து அதை அனைவரையும் ஏற்ற வைத்தார்.

காட்ரீனா புயலுக்கு பின் அங்கு வாழ்ந்த ஏழை மக்களின் வீடுகளை அபகரித்து ஏழைகளுக்கு அரசு கட்டி தரும் திட்டத்தை ஒழித்து பண முதலைகளை உள் கொண்டுவரும் அரசின் முயற்சியையும், நியூ ஆர்லியன்ஸ் மறுவாழ்வு என்ற பெயரில் மக்களின் பயன்பாட்டிற்கு நடக்கும் கண்காட்சிகளில் நடக்கும் கூத்தினை அவர்கள் வெளி கொண்ட விதம் பற்றியும் ,அவர்களாகவே வெளியிட்ட Newyork Times பத்திரிக்கை பிரதி பற்றியும் படத்தை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

இந்த படத்தின் ( உண்மையிலேய தான் நடத்திய திருவிளையாடல்கள்) மூலம் சந்தையில் அரசின் தலையீட்டின் அவசியத்தை அழகாக மக்கள் மனத்தில் பதிய வைத்திருக்கிறார்கள்.இந்த படம் சந்தை பொருளாதாரம் ஏற்படுத்தும் விளைவுகளை மிக நகைச்சுவையான முறையில் அழகாக எடுத்து காட்டுகிறது. விழிப்புணர்ச்சிக்கு இல்லை என்றாலும் கூட ஒரு நல்ல நகைச்சுவை படமாகவாவது கட்டயம் அனைவரும் பார்க்க வேண்டிய படம்.


இந்த படத்தின் நாயகர்கள் தற்போதும் Yes Lab என்ற பெயரில் லேப் நடத்தி வருகிறார்கள். மகக்ளை பலிகடா ஆக்கும் பன்னாட்டு/ அரசு நிறுவங்களின் தோலுரித்து காட்ட நினைக்கும் தன்னார்வ நிறுவனக்கள், இந்த லேபை அனுகினால் அவர்கள் நல்ல ஐடியா கொடுப்பதுடன் அதை நடத்தி முடிக்க திட்டமிட்டு, அது முழுதும் கூட இருந்து நடத்தி முடிப்பார்கள். சமுதார நலனுக்காக அவர்கள் நடத்தும் நாடகத்தில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் அவர்களை தொடர்பு கொண்டால், நீங்கள் இருக்கும் இடத்தின் அருகாமையில் அவர்கள் எதாவது நாடகம் நடத்தினால் உங்களை பயன் படுத்தி கொள்வார்கள்.

பின் குறிப்பு: முதலாளிகளை எதிர்த்து இந்தியாவில் இது போல் செய்தால், அதில் கலந்து கொள்பவர்களின் நிலை என்னவாகும் என்பது அவர்களுக்கு தெரியாது என்று நினைக்கிறேன்.

--

--

Monday, September 06, 2010

கிழக்கிந்திய கம்பெனி 6 - இங்கிலாந்தில் கி.இ.கம்பெனி



கிழக்கிந்திய கம்பெனி இந்தியாவை சுரண்டிய கதை 1

கிழக்கிந்திய கம்பெனி 2 - ஆரம்ப காலம்

கிழக்கிந்திய கம்பெனி 3 - தேயிலை அரசியல்

கிழக்கிந்திய கம்பெனி 4 - இந்தியாவின் நெசவு தொழில் - வளர்ச்சியும் வீழ்ச்சியும்

கிழக்கிந்திய கம்பெனி 5 - கொள்ளை போன செல்வங்கள்



இது வரை இந்தியாவில் கிழக்கு இந்திய கம்பெனியின் செயல்பாடுகளை பற்றி பார்த்தோம். இப்பதிவில் இங்கிலாந்தில் கி.இ.கம்பெனியின் செயல்பாடுகளை பற்றி பார்ப்போம்.

கி.இ.கம்பெனி என்பது வியாபாரிகள், வங்கி முதலாளிகள், அதிகார இடைதரகர்கள் மற்றும் ஒரு சில பணகாரர்களின் கூட்டணியால் ஆரம்பிக்க பட்டது. தற்போதுள்ள பன்னாட்டு கம்பெனியினரை போலவே அதுவும் லஞ்சங்களை இங்கிலாந்தில் உள்ள அரசியல்வாதிகளுக்கு வாரி வழங்குவதில் கில்லாடிகள். இந்நிறுவனம் ஆரம்பிக்க பட்ட சில வருடங்களுக்கு பிறகு(1693) அது கணக்கில் காட்டி அரசியல்வாதிகளுக்கு அன்பளிப்பாக(!) கொடுத்த பணம் 100000 பவுண்டை தாண்டியது, இந்த பணத்தின் மதிப்பு அந்த காலத்தில் மிக அதிகமானது.

ஆரம்ப காலத்தில் கம்பெனியின் வருமானம் இந்தியாவிலிருந்து நடை பெற்ற வர்த்தகம் மூலம் தான் கிடைத்தது. இங்கிலாந்து அரசு கிழக்கிந்திய தீவுகளுக்கான வர்த்தகத்துக்கு
கி.இ.கம்பெனிக்கு ஏகபோக உரிமையை கொடுத்து இருந்தனர். இது தான் கம்பெனியின் லாபத்துக்கான துருப்பு சீட்டு. இந்த ஏக போக உரிமையை நிலை நிறுத்தி கொள்ள அரசியல்வாதிகளுக்கு பெருமலவில் லஞ்சம் கொடுக்க வேண்டியிருந்தது. அரசியல்வாதிகளுக்கு லஞ்சம் மட்டுமல்ல. இங்கிலாந்து மத்திய வங்கிக்கு பெருமளவில் கடனும் கொடுத்து வந்தது. இங்கிலாந்து அரசு நடத்தும் போர்களுக்கும் இங்கிலாந்து மத்திய வங்கி பணம் கொடுக்கும், அந்த பணத்தின் ஒரு பகுதி கி.இ.கம்பெனி கொடுத்து வந்தது.

கி.இ.கம்பெனியின் வளர்ச்சியால் அதில் பங்கு தாரர்களாக இருந்த பல பேர் பெரும் பணக்காரர்களாக மாறினர். இது அப்போது பரம்பரை பணக்காரர்களாக இருந்த ஒரு சில செல்வந்தர்களுக்கு பிடிக்க வில்லை. அது மட்டுமன்றி இங்கிலாந்தில் இருந்த நெசவு தொழில் லாபியும் கி.இ.கபெனிக்கு எதிரியாக இருந்தது. இவர்களின் வற்புறுத்தலால் இங்கிலாந்து அரசு கி.இ.கம்பெனியின் ஏக போக உரிமையை உடைக்க 1698 ல் புதிய கம்பெனியை தொடங்கியது. தற்போதைய பன்னாட்டு கம்பெனியினரை போன்றே வலுவான நிதி நிலையில் இருந்த கி.இ.கம்பெனியின் உரிமையாளர்கள் புதிய கம்பெனியின் பங்குகளை வாங்கி தள்ளினர். அந்த கம்பெனிக்கு பெரும் நெருக்கடி கொடுத்தனர். இருந்தாலும் அந்த புதிய கம்பெனி கி.இ.கம்பெனியுடன் போட்டி போட்டு சில காலம் இருந்தது. மீண்டும் பெரிய அளவு மறைமுக வேலைகளில் இறங்கிய கி.இ.கம்பெனியினர், இங்கிலாந்து அரசிடம் 3200000 பவுண்டுகள் கொடுத்து புதிய கம்பெனியை தன்னுடன் இணைத்து கொண்டனர். மேற் சொன்ன பணம் 3 ஆண்டுகளுக்கு கிழக்கிந்திய தீவுகளில் ஏக போக உரிமையுடன் வியாபாரம் செய்ய பொருந்தும். அதற்கப்புறம் ஒவ்வொரு ஆண்டும் பெருந்தொகையை அரசுக்கு கொடுத்து கொண்டே இருக்க வேண்டும்.

தற்போதைய பங்கு வர்த்தகம் போலவே அப்போதும் இருந்தது. கி.இ.கம்பெனியினர் ஒவ்வொரு முறை போரில் வெற்றி பெரும் போதும் இங்கிலாந்தில் அதன் பங்கின் மதிப்பு பெருமளவு உயரும். உதாரனமாக பிரான்சை வென்ற போது அதன் மதிப்பு 263 பவுண்டை தொட்டது. அது கொடுத்த டிவிடெண்ட் மதிப்பும் 12.5 சதவிதத்தை தாண்டியது. வங்காளத்தை வென்றவுடன் அதன் மதிப்பு இன்னும் கூடியது.ஒரு புறம் இந்தியாவில் இந்திய மக்களின் ரத்தத்தை உறிஞ்சி தன் லாபத்தை அதிக படுத்தியது. மறுபுறம் இங்கிலாந்தில் தன் பங்கின் மதிப்பு விடு விடுவென வேகமாக உயர்ந்தது.

கம்பெனியின் லாபம் அதிகமானவுடன் கம்பெனியின் உரிமையாளர்கள் அரசியலில் ஈடுபட்டு 1780ல் சுமார் 10 சதவித இங்கிலாந்து பாரளுமன்ற உறுப்பினர்கள் கம்பெனி சார்ந்தவர்களாக
இருந்தனர்.கி.இ.கம்பெனியின் அதிகார வளர்ச்சி போலவே அதன் எதிரிகளின் வளர்ச்சியும் இருந்து. கி.இ.கம்பெனி லாபியை உடைக்க பல பேர் பல காலம் கடுமையாக போராடினர். 1780களில் கி.இ.கம்பெனியின் உரிமையை பார்லிமெண்ட் அமைக்கும் கமிட்டியிடம் கொண்டு வர முயன்று வெற்றி பெறும் நிலையில் இருந்த போது கி.இ.கம்பெனிக்கு அதிகார வர்க்கத்திடம் இருந்த சக்தி மூலம் ஆட்சியையே கலைத்து விட்டனர்.

ஆனால் கி.இ.கம்பெனியின் மீதான எதிர்ப்பு மேன் மேலும் அதற்கு பின்னர் அதிகமானது.1813ம் ஆண்டு கொண்டு வரபட்ட புதிய சட்டம் மூலம் இந்திய நாட்டை ஆளும் தலைமை பொறுப்பு இங்கிலாந்து மன்னரிடம் கொடுக்கபட்டது. இந்தியாவிற்கு இடையேயான வியாபார ஏக போக உரிமையும் பறிக்க பட்டது. 1833ம் ஆண்டு முதல் அதன் வியாபர உரிமையும் ரத்து செய்யபட்டது, இங்கிலாந்து மன்னரின் பிரதிநிதியாக இந்தியாவை ஆளும் பொறுப்பு மட்டும் கொடுக்க பட்டது. முதல் இந்திய சுதந்திர போருக்கு பின் இங்கிலாந்து அரசின் நேரடி கட்டுபாட்டுக்குள் இந்தியா வந்தது.

சஞ்சீவ் மேத்தா என்ற இங்கிலாந்து வாழ் இந்தியர் தற்போது கி.இ.கம்பெனியை வாங்கி உள்ளார்.

கி.இ.கம்பெனிக்கும் இந்தியாவிற்குமான உறவில் முக்கியமாக பார்க்க வேண்டிய விஷயங்கள் சில .

1. மதவாதிகளுக்கும் அதற்கும் உள்ள உறவு. அந்த காலத்தில் போர்ச்சுகீசியர்கள் போன்ற ஐரோப்பியர்கள் தாங்கள் சென்ற காலனி நாடுகளில் எல்லாம் தங்களுடைய மதத்தை(கிறித்துவம்), முக்கியமாக தங்கள் மதத்தின் பிரிவை பின் பற்றாத வேற்று மதம் மற்றும் தன் மதத்தின் வேற்று பிரிவை சார்ந்த மக்களை கூட்டம் கூட்டமாக எரித்து (inquisition) கொன்ற காலம் அது. ஆனால் கி.இ.கம்பெனியோ தங்கள் ஆதிக்கம் செலுத்திய பகுதிகளில் கிறித்துவ மிஷினரிகளின் செயல்பாட்டுக்கு தடை விதித்திருந்தது. இது உண்மையிலேயே நம்ப முடியாத அதிசயம்.ஏனென்றால் அப்போது மத்தத்திற்கும் அதிகாரத்திற்கும் இடையேயான உறவு மிக நெருக்கமானது. ஆனால் மக்களிடையே தங்கள் மதத்தை புகுத்துவதால் மத ரீதியான பிணக்கு அதிகரிக்கும் என்று மிஷனரிகளை அனுமதிக்கவில்லை. ஆனால் வியாபாரிகள் போர்வையில் மத போதகர்கள் இங்கு வந்திருந்ததும், கி.இ.கம்பெனியில் மத நம்பிக்கை அதிகம் கொண்டிருந்த அதிகாரிகள் அவர்களை அனுமதித்ததும் உண்மை. 1813 ல் இங்கிலாந்து அரசு கட்டயமாக மிஷனரிகளை அனுமதிக்க ஆணை பிறப்பித்தது. அதன் பின் புற்றீசல் போல் வந்த மிஷனரிகளின் வருகையும், அவர்களின் செயல்பாடும் 1857ல் முதல் இந்திய சுதந்திர போர் நடை பெற ஒரு காரணியாக ஆயிற்று.ஆனால் அதற்கு பின் கிறித்தவ மிஷனரிகள் இந்தியாவின் கல்வி மற்றும் மருத்துவ வளர்ச்சிக்கு ஆற்றிய பங்கு அளவிட முடியாது என்பதும் குறிப்பிட தக்கது.

2. கி.இ.கம்பெனியின் கால கட்டத்தில் இங்கிலாந்தின் மேற்கேயும் இது போலவே வியாபரம் நடந்தது. ஆனால் அங்கு வியாபாரம் நடத்தியவர்களின் முக்கிய குறிக்கோள் மக்களை அடிமைகளாக பிடித்து விற்று லாபம் சம்பாதிப்பது. ஆனால் கி.இ.கம்பெனியோ அது போன்ற அடிமை வியாபாரத்தை இந்தியாவில் செய்ய்வில்லை(வேறு சில தீவுகளில் செய்தது உண்மை).

3. கி.இ.கம்பெனி தன் லாபத்துக்காக இங்கிலாந்து நெசவு தொழிலாளிகளின் எதிர்ப்பையும் மீறி இந்திய துணிகளை பெருமளவு ஏற்றுமதி செய்தது. இதனால் இந்திய தொழில் துறையும் ஆரம்ப காலங்களில் பெருமளவு விரிவடைந்தது

கி.இ.கம்பெனியின் செயல்பாட்டிற்கும் தற்போதைய பன்னாட்டு கம்பெனிகளின் செயல்பாட்டிற்கும் இடையே உள்ள ஒற்றுமை என்ன என்று யோசிப்பதை இந்த பதிவை படிக்கும் உங்களிடமே விட்டு விடுகிறேன்.

--

Sunday, August 29, 2010

தர்மபுரி பஸ் எரிப்பு- அன்று கோவை பல்கலையில் நடந்த போராட்டம்


வழக்கமான நான் இடும் பதிவை விட வேறுபட்ட பதிவு இது. தர்மபுரியில் வேளாண் கல்லூரி மாணவிகளை அநியாயமாக உய்ரோடு கொளுத்தி எரிய செய்த செய்தி அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்த செய்தி. அந்த நிகழ்வு பற்றி அனைவருக்கும் தெரிந்திருக்கும்.ஆனால் அந்த நிகழ்ச்சி நடந்த அன்று கோவை வேளாண் பல்கலை கழகத்தில் மாணவர்கள் போராட்டம் நடத்திய செய்தியும் அதை எவ்வாறு நடந்தது என்பதும் ஒரு சிலருக்கே தெரிந்திருக்கும். அது பற்றி பல நாட்களாக எழுத வேண்டும் என்று நினைத்திருந்தேன்.அந்த போரட்டத்தில் பங்கு பெற்றவன் என்பதாலும் அப்போது நடந்த செய்திகள் பற்றி அனைவரும் அறிய வேண்டும் என்பதால் இதை எழுதுகிறேன். இது எந்த கட்சியையும் குறை கூற எழுதபட்டதல்ல. ஆனால் உண்மையில் நடந்த செய்தி

இந்த துயர செய்தி நடந்து பல காலங்கள் ஆகி விட்டதால், அன்று நடந்த ஒரு சில நிகழ்வுகள் மறந்து இருக்கவும் ஒரு சில பிழைகள் இருக்கவும் சாத்தியகூறு உள்ளது. ஆனால்
தற்காலத்தில் நடக்கும் மாணவர் போராட்டம் எவ்வாறு தலைமை, வழி நடத்தல் மற்றும் தெளிவான குறிக்கோள் இல்லாமல் நடை பெறுகிறது என்றும் எவ்வாறு அரசியல் கட்சிகள் குறுக்கிடுகின்றன என்றும் அதிகாரம் எப்படி பயன் படுத்தபடுகின்றன என்பது பற்றியும்
அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இந்த பதிவை எழுதுகிறேன்.

பிப்ரவரி 2ம் நாள் 2000ம் ஆண்டு அந்த துயர நிகழ்ச்சி நடந்த போது கோவை வேளாண் பல்கலையில் அனைத்து இளம் அறிவியற் (Bachelors) படிக்கும் மாணவர்களும் வெவ்வேறு காரணங்களுக்காக கல்லூரியை விட்டு வெளியே சென்றிருந்தனர். எனவே அங்கு இருந்தது
முதுகலை மாணவர்களும் ஆராய்ச்சி மாணவர்களும் தான்.மாணவர்கள் மத்தியில் மாபெரும் துயரமும் மறுபுறம் கொந்தளிப்பும் இருந்தது. ஏதாவது போராட வேண்டும் என்ற வெறி இருந்தது. ஆனால் இந்த கொடுஞ்செயலை நிறைவேற்றியவர்களோ அப்போதைய எதிர்
கட்சியினர். எனவே ஆளுங்கட்சி நடைவடிக்கை எடுக்க போவது நிச்சயம். அது மட்டுமன்றி போராட்டம் என்று போராடி என்ன கோரிக்கையை வைப்பது? ஆனாலும் உணர்வு ரீதியாக கொந்தளித்திருந்த மாணவர்கள் நீதி கேட்டு ஏதாவது போராட வேண்டும் என்ற வெறியில் இருந்தனர். மாணவர்கள் அனைவரும் போராட்டத்திற்கு ஆயத்தமானார்கள்.

ஆனால் போராட்டத்தை தலைமை ஏற்று, நூதனமான முறையில் வழி நடுத்தும் அளவிற்கு திறமை வாய்ந்த மாணவர்கள் யாரும் இல்லை. இந்த போராட்டத்தை நடத்த வேண்டும் என்று முடிவு செய்தது முழுக்க முழுக்க மாணவர்கள் தான். ஆனால் அப்போது என்ன
கோரிக்கைகளை வைப்பது என்று முடிவாக இல்லை. அந்த நேரத்தில் தான் பெரும்பாலான மாணவர்கள் அறியாமலேயே ஒரு நிகழ்வு நடந்தது. மணவர்களில் ஒரு சிலர் கம்யூனிச கட்சிகளுடன் தொடர்பு இருந்தது(அந்த மாணவர்கள் போராட்ட களத்தில் முன்னனியில் இல்லை என்பது வேறு விஷயம்). அந்த மாணவர்களுக்கு கம்யூனிச மாணவர்கள் அமைப்பிலிருந்து தொலைபேசி வந்தது. அப்போது கை தொலைபேசி எல்லாம் இல்லை. மாணவர்களை தொடர்வு கொள்ள ஒரே வழி விடுதியில் இருக்கும் பொது தொலைபேசி தான். விடுதி பொது தொலை பேசி மூலம் மாணவர்களை அவர்கள் தொடர்பு கொண்டனர். ஆனால் விடுதி தொலைபேசி முழுவது அரசாங்கத்தால் ஒட்டு கேட்க பட்டது அவர்களுக்கு அப்போது தெரியாது.

அப்போது கம்யூனிஸ்டு கட்சி அ.தி.மு.க வுனருடன் கூட்டில் இருந்தனர். அது மட்டுமன்றி தமிழக சட்டமன்றத்திற்கான இடை தேர்தல் அப்போது நடை பெற இருந்த சமயம். தர்மபுரி சம்பவத்தால் மக்களிடம் அதிமுக எதிர்ப்பு அலை பரவ தொடங்கி இருந்தது. அந்த எதிர்ப்பு அலையை எப்படியாவது தணிக்க வேண்டிய சூழ்நிலையில் இருந்தனர் எதிர்கட்சி கூட்டணியினர். அதனால் மிக பெரிய அளவில் மாணவர்கள் போராட்டத்தை நடத்துவதன் மூலம் இந்த எதிர்ப்பு அலையை ஆளும் கட்சிக்கு எதிராக திருப்பியோ அல்லது
இடைதேர்தலை சிறிது காலம் தள்ளி போடவைப்பதோ அவர்களுடைய முக்கிய நோக்கமாக இருந்தது.மேலும் பஸ் எரிப்பு விசாரனையை CBI வசம் ஒப்ப்டைக்க வேண்டும் போன்ற கோரிகைகளும் இருந்தது. ஆனால் கம்யூனிஸ்டுகள் மாணவர்களிடையே தொடர்பு
கொண்ட செய்தியை அறிந்தவுடன் ஆளும் அரசு தரப்பினர் உஷாராக ஆகினர். அது மட்டுமன்றி மாணவர் போராட்டமே எதிர் கட்சியினரின் தூண்டுதல் பேரில் தான் நடக்க உள்ளதோ என்ற சந்தேகம் ஆளும் தரப்பினரிடம் பரவ தொடங்கியது.

வழக்கமான மாணவர் போராட்டங்கள் எதிர் நோக்கும் அத்தனை பிரச்சனைகளையும் இந்த போராட்டம் எதிர் கொண்டது. கல்லூரிக்கு கால வரையற்ற விடுமுறை விட்டு கல்லூரி விடுதியிலுருந்து வலுகட்டாயாமாக மாணவர்கள் வெளியேற்ற பட்டனர்.உணவு, தண்ணீர் போன்ற அடிப்படை தேவைகள் கூட மறுக்க பட்டன. (அப்போதைய விடுதி வார்டன் மிகவும் நல்ல மனிதர் என்பதால் சில உதவிகளை செய்தார்) அப்போது போராட்டத்தில் ஈடுபட்டது முதுகலை மற்றும் ஆராய்ச்சி மாணவர்கள் என்பதால் அவர்களுடைய ஆராய்ச்சிக்கு பொறுப்பான ஆசிரியர்கள் மூலமாக மாணவர்களுக்கு அழுத்தம் கொடுக்க பட்டு போராட்டத்தை கைவிட அறிவுருத்தபட்டனர்.கல்லூரி எங்கும் போலீஸ்
குவிக்க பட்டு தீயணைப்பு வண்டி என அனைத்தும் கல்லூரியை சுற்றி நிறுத்த பட்டது.பல்கலையின் கதவுகள் அனைத்தும் மூட பட்டு அதை சுற்றியும் பல்லாயிரகணக்கான போலீசார் குவிக்க பட்டனர். வெளியிலிருந்து எந்த மாணவர்களோ அல்லது பொது மக்களோ
பல்கலை கழகத்தின் உள்வர தடை விதிக்க பட்டது பல்கலை கழகம் இருந்த தெருவே போலிசாரால் மறிக்க பட்டது. இதன் மூலம் பிற கல்லூரி மாணவர்களோ அல்லது மாணவர் அமைப்புகளோ போராடத்தில் ஈடுபடும் மாணவர்களை தொடர்பு கொள்வது தடுக்க பட்டது.கல்லூரி எங்கிலும் ஒரு சில புது முகங்கள் உலவ ஆரம்பித்தனர். அவர்கள் அனைவரும் உளவு துறையை சேர்ந்தவர்கள். மாணவர்கள் அவர்களை ஒவ்வொருவராக விரட்டி அடித்து கொண்டு இருந்தார்கள்

இனி மாணவர்கள் பக்கம் வருவோம். போராட்டம் ஆரம்பித்தாகி விட்டது. இனி கோரிக்கைகளை தொகுக்க வேண்டுமே. போராட்டத்திற்கான கோரிக்கைகள் பற்றி மாணவர்களிடையே விவாதிக்க பட்டது. ஒரு புறம் மாணவர்கள்(முக்கியமாக மாணவிகள்) உணர்ச்சி வசத்தில் இருந்தனர். மறுபுறம் எதிர்கட்சி சார்பு கொண்ட மாணவர்களோ மாணவர்களின் இந்த மனநிலையை நன்கு பயன் படுத்த தொடங்கினர். ஒரு சிலர் இடை தேர்தலை தள்ளி வைக்க வேண்டும் என்றனர். ஒரு மாணவர் முதல்வர் நேராக கோவை பல்கலை கழகத்திற்கு வந்து போராட்ட மாணவர்களிடம் நேரிடையாக பேச வேண்டும் என்றார். (அப்போது முதல்வன் திரைப்டம் வந்த சமயம் என்று நினைக்கிறேன்). அது நடக்கும் விஷயமா என்று ஒரு சிலர் கேட்டவுடன், கட்சி காரர்களின் திருமண விழாவுக்கு வரும் முதல்வர் இதற்கு ஏன் வர கூடாது? என்றார். பிறகு அது போராட்டத்தின் முக்கிய கோரிக்கையாக வைக்க பட்டது. முதல்வர் வந்து நேரிடையாக பேசும் வரை போராட வேண்டும் என்று கோரினர்.இறந்த மாணவிகளின் குடும்பத்தினருக்கு வேலை வாய்ப்பு கொடுக்க வேண்டும், இந்த பிரச்ச்னையை தேர்தலுக்கு பயன் படுத்த கூடாது(அவ்வாறு பயன் படுத்தினால் பிறகு ஒவ்வொரு தேர்தலிலும் யாராவது மாணவர்களை கொன்று பிரச்ச்னையாக்க முயல்வார்கள் என்ற சந்தேகத்தால்), மாணவர்கள் மேல் தாக்குதல் நடத்தும் சமூக விரோதிகள் மேல் நடவடிக்கை எடுக்க புதிய சட்டம் வேண்டும், நடு நிலையான விசாரணை வேண்டும் என்று பல கோரிக்கைகள் வைக்க பட்டன.அது தவிர பலகலை கழகம் சார்ந்த பொதுவான கோரிக்கைகளும் இருந்தது. முதல்வர் நேரில் வர வேண்டும் என்பது தவிர மற்ற கோரிக்கைகள் பற்றி அரசு பேச்சுவார்த்தை நடத்த தயாராகவே இருந்தனர்.

ஆனால் முதல்வர் நேரில் வர வேண்டும் என்ற கோரிக்கையால் போராட்டம் இழுத்து கொண்டே சென்றது. அப்போது த.மா.க மற்றும் பிற கட்சியினரும் இதை பயன் படுத்த முனைந்தனர். த.மா.கவின் உள்ளூர் தலைவர் மூலம் மாணவர்கள் ஆமோதித்தால் மூப்பனார் உடனடியாக மாணவர்களை சந்திக்க வர தயாராயிருப்பதாக் தெரிவிக்க பட்டது. மாணவர்கள் இதை ஒட்டு மொத்தமாக நிராகரித்தனர். அது மட்டுமன்றி ஒரு சில உள்ளுர் வாரிசு அரசியல்வாதிகள் இப்பிரச்ச்னைக்குள் நுழைந்து சமரசம் செய்து தன் நிலையை உயர்த்தி கொள்ள பார்த்தனர். ஆனால் மணவர்கள் அதற்கும் ஒத்து கொள்ளவில்லை.

அப்போதைய துணைவேந்தர் கண்ணையன் பிரச்ச்னையை தீர்க்க கடுமையாக முயற்சி செய்தாலும், அவர் சசிகலா சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் ஆளும் கட்சிக்கு அவர் மேலும் சிறிய சந்தேகம் இருந்ததாக தெரிகிறது.அப்போது தீவிரமாக போரட வேண்டும் என்பதில் மாணவர்களை விட மாணவிகள் தீவிரமாக இருந்தனர்.போராட்டம் அப்படியே சென்று கொண்டு இருந்த போது கடைசியாக மாணவர்களில் ஒரு 10 பேரை தேர்ந்து எடுத்து அவர்கள் துணைவேந்தரிடம் பேச்சுவார்த்தை நடத்த சென்றனர்.துணைவேந்தருடனான பேச்சு வார்த்தைக்கு பிறகு அந்த மாணவர்கள் குழு சனி ஞாயிறு விடுமுறைக்கு பின் முதல்வரை சென்னை கோட்டையில் சந்திப்பது என முடிவானது.பிறகு தான் பிரச்சனைகள் பின் புறமாக வர தொடங்கின. முதல்வரை சந்திக்க சென்ற 10 மாணவர்கள் வீட்டு விலாசமும் காவல் துறையினரால் சேகரிக்க பட்டு அனைவரின் வீட்டுக்கும் போலீசார் நேரிடையாக சென்றனர். மாணவர்களின் பெற்றோரிடம் போலீசார் நேரிடையாக அழுத்தம் கொடுக்க தொடங்கினர். போராட்டத்தை உடனடியாக முடிக்கவில்லை என்றால் ஏற்பட போகும் பின் விளைவுகளை(மிரட்டல்?) அவர்களிடம் சொன்னார்கள். அதன் விளைவு பெரும்பாலான பெற்றோர்கள் உடனடியாக கோவை கல்லூரி விடுதிக்கே வந்து மாணவர்கள் போராட்டத்தை உடனடியாக முடிக்க நடவடிக்கை எடுக்க சொல்லி வற்புறுத்தினார்கள்.

பிறகு மாணவர்கள் குழு தனி வேனில் சென்னை நோக்கி சென்றது. முன்புறம் பின் புறம் காவல் துறை பாதுகாப்பு வாகனங்களோடு வேறு யாரும் மாணவர்களை இடையில் சந்திக்காத படி வாகனம் சென்னை சென்றது. பேச்சி வார்த்தையின் போது மாணவர்களின் பெரும்பாலான கோரிக்கைகள் ஏற்று கொள்ளபட்டன அல்லது பரிசீலனை செய்வதாக ஒத்து கொள்ள பட்டன. மாணவர்கள் இந்த பிரச்சனையை தேர்தல் பிரச்சாரத்துக்கு பயன் படுத்த கூடாது என்று முதல்வரிடம் கோரிக்கை வைத்த போது அவர் கூறியது-

நாங்கள் சாதனைகளை சொல்லி தான் ஓட்டு வாங்குவோமே தவிர
வேதனைகளை சொல்லி ஓட்டு வாங்க மாட்டோம்

இறந்த மாணவியின் குடும்பத்தில் ஒருவருக்கு வேலை கொடுப்பதாக கூறிய அரசு அதை நிறைவேற்றவும் செய்தது.

இந்த சம்பவத்திலேயே மிகவும் சோகமான செய்திகள் சில.

தர்மபுரியில் பஸ்ஸில் மாணவிகள் எரிந்து கொண்டிருந்த போது அந்த பகுதியில் இருந்த பொது மக்கள் வேடிக்கை பார்த்தார்களே தவிர , யாருமே காப்பாற்ற முன்வரவே இல்லை. மனித நேயம் எங்கு போனது என்றே தெரியவில்லை.

மேலும் இந்த நிகழ்ச்சியை மூவர் இறந்த செய்தியாகவே பார்க்கிறோம். ஆனால் உண்மையில் அந்த பஸ்ஸில் இருந்த அனைத்து மாணவிகளையும் முழுவதுமாக எரிப்பதே இந்த செயலை நடத்தியவர்களின் நோக்கம். பஸ்ஸில் பின் புறம் முழுவதும் மாணவிகளின் பெட்டிகள் இருந்ததால் பின் புற கதவை திறக்க வழியே இல்லை. வன்முறை கும்பலோ பஸ்ஸின் முன் வாசம் முழுவதும் பெட்ரோலை ஊற்றி எறிய விட்டு விட்டதால் முன் வாசல் வழியேயும் தப்ப வழி இல்லை. அப்போது அடுத்த பஸ்ஸில் இருந்த வேளாண் கல்லூரி மாணவர்களின் துணிச்ச்லான முயற்சியால் தான் மற்ற மாணவிகளை காப்பாற்ற முடிந்தது. பின் கதவின் கண்ணாடியை உடைக்க கூட அப்பகுதி பொது மக்களிடமிருந்து அவர்களுக்க உதவி கிடைக்க வில்லை.அந்த மாணவர்களின் துணிச்சலையும் முயற்சியையும் அளவிடவே முடியாது.

பேருந்தில் தர்மபுரி அருகே சென்று கொண்டு இருந்த போது ஜெயலலிதாவின் கோர்ட் தீர்ப்பு பிரச்சனை பற்றி தெரிந்தவுடன் அந்த வாகன ஓட்டுனர் பாதுகாப்பான பகுதியில் நிறுத்த வேண்டும் என்பதால் தர்மபுரி கலெக்டர் அலுவலகம் அருகில் நிறுத்தினார்.கலெக்டர்
அலுவலகம் அருகில் பஸ் நிறுத்தினாலும் பஸ் முழுமையாக கருகி எரியும் வரை தீயணைப்பு வண்டி அங்கு வரவே இல்லை.

கல்லூரி நிர்வாகத்தினர் மாணவர்களை ஒரு பஸ்ஸிலும் மாணவிகளை ஒரு பஸ்ஸிலும் அமர்த்தி அழைத்து சென்றுள்ளனர். மாணவர்களுக்கு உள்ள maturityகூட ஆசிரியர்களுக்கு இல்லாதது கொடுமை. மாணவ மாணவிகள் என்று பிரிக்காமல் பேட்ச் வாரியாக பிரித்து
இருந்தால் அந்த பஸ்ஸின் உள் இருந்திருக்க கூடிய மாணவிகளை மாணவர்கள் நிச்சயம் முழுமையாக காப்பாற்றி இருப்பார்கள்.

அப்போது போலீசார் நடந்து கொண்ட விதம் கொடுமையிலும் கொடுமை.கதறிய வேளாண் கல்லூரி மாணவர்களை மிரட்டிய சம்பவம் கூட நடந்துள்ளது.
அந்த மாணவர்கள் கூறிய ஒரு சில போலீஸ் அதிகாரிகள் மேல் நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைக்கபட்டது. ஆனால் அவர்கள் மேல் நடவடிக்கை எடுத்தனரா என்று தெரியவில்லை.


கோர்ட்டில் வன்முறை கும்பலின் பலவகை மிரட்டலையும் மீறி தைரியமாக சாட்சி சொன்ன பேராசிரியர்கள் மற்றும் மாணவிகளின் நெஞ்சுரம் அதசயிக்க தக்கது.

அதன் பிறகு இறந்த குடும்பத்தினரின் குடும்பத்துக்கு ஆறுதல் சொல்ல பல்கலை கழகம் சார்பில் சென்ற குழுவில் நாமக்கல்லை சேர்ந்த மாணவியின் வீட்டுக்கு சென்றிருந்தேன். தன் மகளை எறியும் தீயில் இழந்த அந்த குடும்பத்தினரின் கதறல் மிகவும் கொடுமையாக இருந்தது.

இந்த போராட்டத்தின் விளைவாக முதல்வருக்கு கோவை வேளாண் பல்கலை கழகம் மேல் ஏற்பட்ட கோபத்தை தவிர்க்க, புதிதாக கட்டபட்ட பட்டமளிப்பு விழா கட்டிடத்துக்கு "கலைஞர் அரங்கம்" என்று பெயர் வைக்க பட்டது. கோவை வேளாண் பல்கலைகழகத்தின்
மேல் ஜெயலலிதாவுக்கு இருந்த கோபத்தை அகற்ற மகராசி சிலை( மக - ராசி- ஜெயலலிதா மக ராசியை சேர்ந்தவர்) வைக்க பட்டது.

இந்த பதிவை எழுதி முடிக்கும் போது அந்த கொடும்பாவிகளுக்கான தூக்கு தண்டனை உறுதி செய்யபட்ட செய்தி வந்துள்ளது. நீதி இன்னும் இந்தியாவில் முழுமையாக சாகவில்லை!

--