Tuesday, March 01, 2011

விவசாயம் தொழிலாக தெரியவில்லையா அரசுக்கு?

இன்று பதிரிக்கையில் வந்த செய்தி படி பள்ளிகளில் மற்ற பாடத்தோடு தொழிற்கல்வியும் சொல்லி கொடுக்க போகிறார்களாம். இது நல்ல செய்தி தான். அது பற்றிய செய்தி

//
பள்ளிகளில் வழக்கமான பாடங்களுடன் தொழில் கல்வியையும் கற்றுத் தரும் வகையிலான திட்டம், வரும் மே மாதத்துக்குள் செயல்படுத்தப்படும் என, மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் கபில் சிபல் கூறினார்.



இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது, பள்ளிகளில் வழக்கமான பாடங்களுடன், மாணவர்களுக்கு தொழில் கல்வியையும் கற்றுத் தர திட்டமிடப்பட்டுள்ளது. எட்டாம் வகுப்பில் துவங்கி, 10ம் வகுப்பு வரை, இந்த தொழில் கல்வி கற்றுத் தரப்படும். தச்சு, இசை, ஆட்டோமொபைல் இன்ஜினியரிங், சுற்றுலா, சேவைத் துறை மற்றும் மருத்துவம் சார்ந்த தொழில் உள்ளிட்டவை, இந்த தொழிற்கல்வியில் கற்றுத் தரப்படும்.

இது தொடர்பான பாடத் திட்டங்களை உருவாக்குவது தொடர்பாக, தொலை தொடர்புத்துறை, கட்டுமானம் மற்றும் ஆட்டோமொபைல்ஸ் நிறுவனங்களிடம் ஆலோசனை கேட்டுள்ளோம். வரும் மே மாதத்துக்குள், தேசிய அளவிலான தொழிற்கல்வி பாடத் திட்டம் உருவாக்கப்பட்டு, செயல்படுத்தப்படும். தொழிற்கல்வி படிக்கும் மாணவர்கள், உயர் கல்வியை தொடர முடியாவிட்டாலும், உடனடியாக வேலை வாய்ப்பு கிடைப்பதற்கு, இத்திட்டம் வகை செய்யும் என்றார்
//
நன்றி நக்கீரன்


இந்தியாவில் பாதிக்கும் மேற்பட்ட மக்கள் கிராமத்தில் வாழ்கிறார்கள். எனவே பாதிக்கும் மேற்பட்ட மாணவர்கள் கிராமத்தில் தான் படிக்கிறார்கள். அவர்களில் பலர் பள்ளி படிப்பு முடிந்த பின் விவசாயம் செய்ய செல்கிறார்கள். அது மட்டுமின்றி விவசாயமும் தற்போது நவீன மயமாகி புதிய தொழில் நுட்பத்துடன் நாள் தோறும் புதுமை அடைந்து வருகிறது. முன்பு போல் இல்லாமல் தற்போது விவசாயமும் லாபம் பெரும் தொழிலாக மாறி வருகிறது.

இசை துறையெல்லாம் தொழில் துறையாக தெரியும் அரசுக்கு விவசாயம் தொழில் துறையாக தெரியவில்லை.

விவசாயத்தை தொழிலாக பாவித்து மாணவர்களிடம் நவீன விவசாய தொழில் நுட்ப யுக்திகளை தொழிற் கல்வியில் சொல்லி கொடுத்தால், அதை கற்ற மாணவர்கள் அதை உபயோகித்து விவசாய உற்பத்தியை பெருக்கத்துக்கு உதவுவதுடன் நவீன விவசாய தொழில் நுட்பங்களையும் கிராமத்தில் அறிமுக படுத்துவார்கள்.இதன் மூலம் வருமானமும் அதிகரிக்கும்.

மேலே உள்ள செய்தியை பார்த்தால் விவசாயத்தை மட்டும் ஒதுக்கி மற்ற தொழிற்கல்விகளை பள்ளியில் சொல்லி தருவது போல் உள்ளது. மேலும் அது பற்றி ஆட்டோமொபைல் தொழிற்சாலை மற்றும் தொலை தொடர்பு நிறுவனங்களிடம் ஆலோசனை கேட்ட அரசுக்கு மத்திய வேளாண் நிறுவனத்திடம் ஆலோசனை கேட்க தோன்றவில்லை.

விவசாயத்தை ஒரு தொழிலாக மதித்து, பெருகி வரும் மக்கள் தொகையை சமாளிக்க இந்தியாவின் வேளாண் உற்பத்தியை பெருக்குவதன் அவசியத்தை உண்மையிலேயே உணர்ந்து இருந்தால் அது பற்றி யோசிப்பார்கள்.

இனி வரும் காலங்களில் மக்கள் மக்கள் தொகை வளர்ச்சிக்கு ஏற்ப உணவு உற்பத்தியை பெருக்க முடியாமல் சோத்துக்கு கையேந்தி உலகமெங்கும் இறக்குமதி செய்ய அலைய நேரிடும். அப்போது நம் தேவையை ஏற்றுமதி செய்யும் அளவுக்கு யாரிடமும் உற்பத்தி இருக்காது.

அப்போது புரியும் விவசாயத்தின் அருமை இந்த அரசியல்வாதிகளுக்கு. அப்போதும் அரசியல்வாதிக்கு ஒன்றும் பிரச்ச்னை இல்லை. உணவுக்கு வழியில்லாமல் (பஞ்சம் மற்றும் உணவு பொருள் விலை ஏற்றத்தால் உணவு பொது வினியோகத்துக்கு (ரேசன்) ஏற்பட போகும் பாதிப்பு) அலைய போகும் ஏழை மக்களின் நிலை தான் பரிதாபமாகும்.

--