Monday, January 28, 2013

கமலை அதிர வைத்த அமெரிக்க ரவுடி கூட்டம்!

 விஸ்வரூபம் திரைபடத்தை ஹாலிவுட்டில் சென்ற வியாழகிழமை அறிமுக படுத்தினார் கமல். அதை தொடர்ந்து வெள்ளிகிழமை சான்பிரான்சிஸ்கோ குடா பகுதியில் சில திரையரங்கங்களுக்கு  நேரே வந்து  ரசிகர்களிடம் தனது படத்தை அறிமுக படுத்தினார். இந்த தலைப்பை படித்தவுடன் அமெரிக்காவிலும் இஸ்லாமிய இயக்கங்களின் எதிர்ப்பால் பிரச்சனை என்று நினைக்க வேண்டாம். ஹாலிவுட்டில் இது போல் எத்தனையோ படங்களை எடுத்து விட்டனர். பிரச்சனை படத்தில் அல்ல. கமலின் வருகையின் போது செய்ய பட்டிருந்த ஏற்பாட்டில் தான். பிரச்சனை என்னவென்று பார்ப்போம்.

இந்த படத்துக்கு கமல் வருகை தர இருக்கும் நேரத்தில் சிறப்பு கட்டணம் ($40) என்று அறிவிக்கபட்டிருந்தது.தமிழ் ஊடகங்களில் வந்தது போல் அறிவிப்பு வெளியான இரண்டு மணி நேரத்தில் டிக்கெட்கள்  விற்று தீரவில்லை. கடைசி நேரத்தில் தான் முழுமையாக  விற்று தீர்ந்தது.

கமல் ரசிகர்கள் கட் அவுட் தயார் செய்து திரைபட வாசலில் வைத்திருந்தனர்.எட்டு மணி திரைபடத்திற்கு 7  மணியிலிலிருந்தே கூட்டம் வர ஆரம்பித்து விட்டது. சிறிய தியேட்டர் என்பதால் அந்த பகுதி முழுவதும் சிறிது சிறிதாக கூட்டம் நிரம்ப ஆரம்பித்தது.

பிறகு டிரம்ஸ் போன்ற இசை கருவிகள் வந்திறக்கபட்டன. ஒரு குழுவினர் கமலஹாசன் என்ற பெயரை ஒவ்வொருவரும் ஒரு எழுத்தையும் அவர் படத்தையும் உடையில் அணிந்து  நடனமாட தொடங்கினர்.கட் அவுட்டை  ஊர்வலமாக வாத்திய முழக்கம் மற்றும் நடனத்துடன் ஊர்வலம் சென்றனர். அந்த பகுதி வழியே சென்ற அமெரிக்கர்கள் கூட்டத்தையும், இரைச்சலையும் வேடிக்கை பார்த்தபடியே சென்றனர்.

நேரம் ஆக ஆக கூட்டம் அதிகரித்தது. கூட்டத்தை கட்டு படுத்தவோ, கமல் அங்கு வந்தால் எந்த வழியாக வருவார், எங்கு பேசுவார்,  என்ற அறிவிப்போ அல்லது ஏற்பாடோ எதுவும் செய்யவில்லை. கட்டுபாடற்ற கூட்டமாக இருந்தது. அந்த நேரத்தில் கமல் தன் குழுவினருடன் (ஆண்ட்ரியா,பூஜா குமார்) போன்றோருடன் வந்திறங்கினர். இரண்டு காவலர் மட்டுமே இருந்தனர். கூட்டத்தில் இருந்த மக்கள் முண்டியடித்து கமலருகே செல்ல முயன்றனர். இரு புறமும் கூட்டம் கமலை நோக்கி முண்டியடிக்க கடுமையான நெரிசலில் சிக்கினார். மக்கள் கடலுக்கிடையே நீந்திய படி தியேட்டரின் உள் சென்றார். இவ்வளவு கஷ்டத்திற்கிடையே தியேட்டர் லாபிக்கு சென்றாலும் அங்கும் அவர் பேசுவதற்கு ஏற்ற ஏற்பாடு எதுவும் இல்லை.இதை அடுத்து மிக கோபமாக வந்த வழியே காரை நோக்கி வெளியேறினார். அவரை காணவும் அவர் பேச்சை கேட்கவும் காத்திருந்த ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர்.
                                         இந்த வீடியோ மட்டும்  YouTube தொடுப்பு

அதன் பிறகு திரைபடம் ஆரம்பித்தது.படம் ஓடி கொண்டிருக்கும் போது பாதியில் நிறுத்தபட்டு ஒரு அறிவிப்பாளர் வந்தார். மிகவும் கஷ்டபட்டு கமலை சமாதான படுத்தி மீண்டும் அழைத்து வந்திருப்பதாகவும் ரசிகர்கள் அமைதியாக அமர்ந்து அவர் பேசுவதை கேட்குமாறும் சொன்னார்.(இதை முதல்லே செஞ்சிருக்குலாம்ல!). மேலும் கமல் மிகவும் கோபமாக இருப்பதாகவும் உலகெங்கும் சுற்றி பார்த்த அவர் இது போன்ற ரவுடி கூட்டத்தை வாழ்நாளில் எங்குமே பார்த்ததில்லை என்று கூறியதாக சொன்னார்.

பின் கமல் தன் குழுவினரிடம் வந்து பேசினார்.தமிழகத்தில் அவரது படம் தடை செய்யபட்டதன் வருத்தத்தையும், இஸ்லாமியர்களுக்கு அவரது செய்தியினையும் கூறினார். அந்த வீடியோவை முன் பதிவுகளில் வெளியிட்டிருந்தேன்.

தமிழகத்தில் தீடிரென்று ஏற்பட்ட பிரச்சனையிலும், தான் அமெரிக்க ரசிகர்களை சந்திக்க கொடுத்த உறுதிமொழியை தட்டாமல் ரசிகளை சந்தித்து அன்றிறவே இந்தியா பறந்து சென்றார். அவரது இந்த செயல் உண்மையில் பாராட்டதக்கதே.

எது எப்படியோ? வெளி நாடுகளில் வாழும் தமிழர்கள் மற்ற விஷயத்தில் தங்கள்  பாரம்பர்யத்தை கடை பிடிக்கிறார்களோ இல்லையோ, சினிமா விஷயத்தில் தெளிவாக நமது பாரம்பர்யத்தை கடை பிடிக்கிறார்கள்!

கமல் சார் ! இதுக்கெல்லாம் கோவபட்டா எப்புடி? ரசிகர்கள் அப்படியே maintain ஆனா தானே நீங்க இப்படியே maintain  ஆக முடியும்!

Sunday, January 27, 2013

விஸ்வரூபம் - பிரியாணிக்கு ஆப்பு வைத்தது யார்?

விஸ்வரூபம் படத்தை பார்க்க முதலில் விருப்பம் இல்லாவிட்டாலும்,கமலின் வருகையாலும் இந்த படம் சமீப காலமாக ஏற்படுத்திய சர்ச்சை காரணமாக என்ன தான் இருக்கிறது இந்த படத்தில் என பார்க்கலாம் என்று முடிவு செய்திருந்தேன். படத்தை பற்றி பல பேர் விமர்சன்ம் எழுதியாகி விட்டது. அதை படித்தால் படத்தின் கதை என்ன என்று தெரிந்திருக்கும்.

கமலின் நடிப்பு பற்றி ஒன்றும் சொல்ல தேவையில்லை.பழைய கதையையும் தற்போது நடக்கும் கதையையும் mix  செய்து parallel ஆக  காட்டுவது அந்த அளவு ஒட்டி செல்ல வில்லை என்றே தோன்றுகிறது.படம் நிச்சயம் ஒரு முறை பார்க்கலாம். படத்துடன் ஒத்து போகின்ற வன்முறை நிறைய இருக்கிறது. நிச்சயம்  Adult Only தான். ஹாலிவுட் படங்கள் நிறைய பார்த்து அது போல் எடுக்க வேண்டும் என்று நினைத்திருப்பதால் நிச்சயம் ஓரளவிற்கு ஆங்கில படத்துக்கு இணையாக எடுத்துள்ளார்.  ஆப்கான் செட்கள் பிரமிக்க தக்க வகையில் இருந்தன( செட்கள் அல்லது அது போன்ற பகுதியில் எடுக்க பட்டதா என்று தெரியவில்லை).கொஞ்சம் விறிவிறுப்பு குறைவு.மற்ற படி அதை திரைப்பட பார்வையில் பார்த்தால் படம் நன்றாகவே உள்ளது. (ஆனால் திரை சரித்திரத்தில் பொன்னெழுத்தால் பொறிக்கபட வேண்டிய படம் எல்லாம் இல்லை).அதிகம் ஹாலிவுட் படம் பார்ப்பவர்களுக்கு இது மிகவும் பிடித்த படமாகவே இருக்க வாய்ப்பு உள்ளது.

படத்தின் போக்கு டாக்குமென்ட்ரி போல் உள்ளது. இந்த படத்தை சாதாரண மக்கள் பொருமையாக பார்ப்பார்களா என்பது சந்தேகமே.எந்த ஒரு எதிர்ப்பு, பரபரப்பும் இல்லாமல் இந்த படத்தை வெளியிட்டிருந்தால் ஒரு சில வாரம் மட்டுமே ஓடியிருக்க வாய்ப்பு உள்ளது. DTHல் முதலில் வெளியிட நினைத்திருக்க இது ஓர் காரணமாக கூட இருக்கலாம்.

இனி படத்தில் இஸ்லாமிய எதிர்ப்பு சலசலப்பு பற்றி பார்ப்போம்.ஹே ராம் படத்தின் மூலம் கமல் தெளிக்க முயன்ற இஸ்லாமிய வெறுப்பில் 10% கூட இந்த படத்தில் இல்லை.ஆனால் இந்த படத்தின் கதைகளம் மற்றும் போக்கின் காரணமாக இதை விவாதிப்பது கடினமான செயல்.இந்த கதை களத்தில் தமிழ் படம் தேவைதானா? என்றால் தேவை இல்லை என்பது என் தனி கருத்து. ஆனால் இது கூடாது என்று யாரும் சொல்ல முடியாது.

1. முதலாவதாக இந்த படத்தில் தமிழக முஸ்லீம்களை அவமதித்துள்ளதாக முக்கிய குற்றசாட்டை வைத்துள்ளார்கள். இந்த படம் முழுமையும் ஆப்கான், அமெரிக்க சூழலில் எடுக்க பட்டுள்ளது.எனக்கு தெரிந்து ஒரே ஒரு இடத்தில் மட்டும்  அது சம்பந்தமான காட்சி வருகிறது. (அதை கூட ஒலியை மறைத்து தடுத்திருக்களாம். கதையின் போக்கை அது பாதிக்க போவது இல்லை)ஆப்கான் தீவிரவாத குழுவின் தலைவன் தமிழில் பேசுவதற்கான காரணம் இரு வருடங்கள் கோவை,மதுரை,அயோத்தியா மற்றும் இன்னொரு நகரில் தங்கியுள்ளதாக  கூறுகின்றான். (ரோஜா படத்தில் காஷ்மீர் தீவிரவாதி தமிழில் பேச காரணம் தமிழ்நாடு வேளாண் கல்லூரியில் படித்தது என்று கூறியிருப்பான்). இது ஒன்றும் தமிழக முஸ்லீம்களை இழிவு படுத்துவது போல் இருப்பதாக தெரியவில்லை.
இந்த படத்தை தமிழகத்தில் அனைவரும் பார்க்கும் பட்சத்தில், இந்த குற்றசாட்டை முக்கிய குற்றசாட்டாக கூறியதன் மூலம் முஸ்லீம்
இயக்கங்களின் நம்பகதன்மை மற்றும் அவர்களின் நோக்கம் பற்றி சந்தேகம் எழ வாய்ப்புள்ளது. அவர்களுடைய மற்ற குற்றசாட்டில் கூட சில நியாயம் உள்ளது. ஆனால் மேற்சொன்ன குற்ற சாட்டில் நியாயம் இல்லை. (பிற மொழியில் இந்த படத்தை வெளியிடும் போது அந்த மாநில ஊர்களின் பெயரை சொலவது போல் இருக்க வாய்ப்புண்டு.)
இன்னும் சொல்ல போனால் அந்த தீவிரவாத தலைவன் தற்போது அமெரிக்காவில் தான் இருப்பதாக காட்டுவார்கள். அதற்காக அமெரிக்க முஸ்லிம்களைஒட்டு மொத்தமாக குறை சொல்கிறார் என்று  எடுத்து கொள்ள முடியாது .


2. இந்த படத்தின் முக்கிய கதை களம் ஆப்கான் நாட்டு மக்களும் தலிபான் தீவிரவாதிகளும் தான். அந்த நாட்டில் மத அடிப்படைவாதம் எவ்வாறு மக்களின் வாழ்வியலோடு கலந்துள்ளது என்றும் , மத அடிப்படைவாதிகளின் கையில் அதிகாரம் இருந்தால் மக்களின்  கதி எப்படி இருக்கும் என்பது முக்கியமாக காட்டபட்டிருக்கிறது.இந்த படத்தில் காட்டபடும் தகவல் எல்லாம் நாளேடுகளில் படித்ததும்,  தீவிரவாதிகள் வெளியிடும் வீடியோவில் வந்ததும்  தான்.இதில் ஓரிரு காட்சிகளை விட மற்றவை எல்லாம் வரலாறு ரீதியாக  மிகை படுத்தி எடுக்கபட்டது இல்லை என்பதே என் கருத்து.(கடத்தபட்ட வீரர்களை காப்பாற்ற ஆப்கானிய மக்கள் மேல் நாட்டு தாக்குதலால் செத்து கிடக்கும் போது, பெரிதாக வருத்தம் படாமல் இந்த பாவம் மேல் நாட்டு அரசை தான் போய் சேரும் என்று சொல்வது போன்ற சீன்கள் விதி விலக்கு.)

மத அடிபடைவாத தீவிரவாதிகளின் மதத்துடன் உள்ள தொடர்பின்  நெருக்கம் மறுக்கமுடியாது. படத்தில் நிறைய இடங்களில் தீவிரவாதிகளின் இஸ்லாமிய தொழுகைகள் மற்றும் குரான் உபயோகம், கொலை செய்யும் போதும், தீவிரவாத தாக்குதல் போதும்  செய்வதாக காட்ட படுகிறது.இதை ஆதார பூர்வமாக நிருபிக்க இயலும் என்றாலும், சமூகபொறுப்புணர்வோடு கமல் இது போன்ற காட்சிகளை ஒரு சில இடத்தில் மட்டும் வைத்திருக்க வேண்டும். அப்படி செய்யாததால் அவரது நோக்கத்தில் பலர் நியாயமான  சந்தேகம் எழுப்ப வாய்ப்பு உள்ளது.

3.மேலை நாடுகளின் விமான தாக்குதலின் கொடூரம் காட்டபட்டாலும், அதற்கான நியாயம் காட்ட படுகிறது. தீவிரவாதிகளின் பக்கம் உள்ள ஒரு சில நியாயங்களை அவர்கள் கூறுவது போல் காட்டபடவில்லை.ஆனால் நிச்சயம் தீவிரவாதிகளின் பக்கம் உள்ள நியாயத்தை எடுத்து கூறாததை தமிழகத்தில் யாரும் எதிர்ப்பிற்கான காரணமாக கூற முடியாது. (குருதிபுனல் படத்தில் நக்சல்கள் பக்கம் உள்ள நியாயம் கூறாதது போல்)

4.கமலை பொருத்தவரை மத அடிப்படைவாத தீவிரவாத இஸ்லாமியர்கள் தீவிர மதவாதிகள்.

இந்த படத்தை பார்க்கும் சாதரண் முஸ்லீம்களை பொருத்தவரை, இனி இஸ்லாமிய அடையாளங்களுடன் தொழுவதற்கு சென்றால் கூட பிற மதத்தவர் சந்தேக கண்களுடன் பார்க்க தோன்றும் என்ற பயம்.

தற்போது தமிழகத்தில் வளர்ந்து வரும் இஸ்லாமிய மத அடிப்படைவாத இயக்கங்களை  (ஒரு உதாரணம் - பாக்கிஸ்தானில் தற்போது தீவிர இஸ்லாத்தை கடைபிடிக்காத பிற உட்பிரிவினர்களில் பல்லாயிரம் பேரை ஒவ்வொரு வருடமும் தீவிர மத அடிப்படைவாதிகள் கொன்று குவித்து வருகிறார்கள். தற்போது அதே போன்று தமிழகத்திலும் அதன் ஆரம்பமாக  பல இடங்களில் ஒரு சில இஸ்லாம் மத உட்பிரிவினரை எதிர்த்தும் அவர்களது வழிபாட்டு முறைகளை எதிர்த்தும் போஸ்டர்கள் ஒட்ட பட்டு வருகின்றன in organized way)பொருத்தவரை, அவர்களது சிந்தாந்தங்கள் கடுமையாக கடை பிடிக்க பட்டால் மக்கள் வாழ்க்கை எப்படி இருக்கும் என்று தமிழக முஸ்லீம்கள் இது போல் திரையில் பார்த்தால் நாளை அவர்களின் வளர்ச்சி பாதிக்கபடும் என்ற பயம் இருக்களாம் .

நிச்சயம் தமிழக இஸ்லாமிய மத அடிப்படைவாத இயக்கங்கள் இது போன்ற படங்களை மிகை படுத்தி  உணர்வு ரீதியாக இஸ்லாமியர்களிடம் வெறியை ஊட்டி தங்களது வளர்ச்சிக்கு உபயோகபடுத்த வாய்ப்புள்ளது. மிதவாத இஸ்லாமிய தலைவர்களின் செல்வாக்கு குறைய கூடும். இது இஸ்லாமிய சமூகத்திற்கும் நாட்டிற்கும் நல்லது அல்ல.

அதே நேரத்தில் இந்து மதவாத அமைப்புகள் தலிபான் தீவிரவாதியை குறை கூறினால் தமிழக முஸ்லீம்களுக்கு ஏன்  கோபம் வருகிறது? அவர்களுக்கும் இவர்களுக்கும் தொடர்பா என்று  விஷ பிரச்சாரத்தை ஏற்படுத்துவர்.

 மத அடிப்படைவாதிகளால் ஆப்கான்  மக்கள் பாடும் பாடை காட்டியது பாராட்டுக்குறியது. இந்த அடிப்படைவாதிகளின் செல்வாக்கு பாக்கிஸ்தான்,ஆப்ரிக்க நாடுகள் என்று எங்கும் விரிந்து வருகையில் அந்த ஆபத்தை எதிர்கொள்ள தமிழக இஸ்லாமிய மற்றும் அனைத்து சமூக மக்களும் விழிப்புணர்வோடு இருப்பது அவசியம்.

                                      இஸ்லாமியர்களுக்கு கமலின் விளக்கம்
 
 

கமல் இந்த படத்தில் தீவிரவாதிகள் குரானை உபயோகிக்கும் காட்சிகளையும் , அவர்களின் தொழுகை காட்சிகளையும் நிச்சயம் குறைத்திருக்க வேண்டும்.அவ்வாறு குறைத்திருந்தால் அவர் சொல்லும் "அன்பே அல்லாவின்" எதிரி இஸ்லாம் அல்ல. மத அடிப்படைவாத தீவிரவாதம் தான் என்ற செய்தி தெளிவாக அனைவருக்கும் சென்றிருக்கும்.ஆக பிரியாணிக்கு ஆப்பு வைத்ததில் கமலின் பங்கும் பெரிதாக உள்ளது என்பது மறுப்பதற்கில்லை.

Saturday, January 26, 2013

அமெரிக்காவில் கமலின் வருத்த வீடியோ - என் தமிழகம் என்னிடம் விளையாடி பார்த்து விட்டதே!

கமலஹாசன் இன்று சான் பிராசிஸ்கோ வளைகுடா பகுதி தியேட்டருக்கு  விஸ்வரூபம் திரைப்பட வெளியீட்டிற்காக நேரடியாக வந்திருந்தார். அப்போது விஸ்வரூபம் திரைப்படம் தமிழகத்தில் வெளியிட முடியாமைக்கு வருந்தி பேசினார். அவர் கூறியதாவது

இந்த திரைபடத்தை தமிழகத்தில் வெளியிட முடியாத வருத்தம் என் தமிழ்நாட்டில் எனக்கு ஏற்பட்டிருக்கிறது.நீங்கள் வெளியில் இருக்கிறீர்கள். நானும் தற்போது வெளியில் தான் இருக்கிறேன் .என் தமிழகம் என்னை விளையாடி பார்த்து விட்டதே.அனால் அனைத்தும் மாறும் ஏனெனில் நான் செய்ததில் எந்த தவறும் இல்லை என்று கூறினார்.
அவருடைய பேச்சை மேலும் கான இங்கு காணொளியை காணுங்கள்.இந்த நிகழ்ச்சியில் நடந்த கலாட்டா பற்றியும், இந்த படம் பற்றிய இஸ்லாமியர்களின் கேள்விக்கு அவரது பதிலையும் , படத்தின் விமர்சனத்தையும் நாளை பதிவிடுகிறேன்.

Tuesday, January 22, 2013

அமெரிக்காவில் ஒரு பாரம்பரிய பொங்கல் விழா!

சான்பிரான்சிஸ்கோ வளைகுடா பகுதி தமிழ் மன்றத்தின்(Bay Area Tamil Manram - BATM) சார்பாக கடந்த சனியன்று  (19/1/2012) பொங்கல் விழா பிரிமாண்ட் நகரில் மிக விமரிசையாக கொண்டாடபட்டது.இம்முறை பாரம்பரிய வாசனையுடன் தமிழர்களின் பண்பாட்டை பறை சாற்றும் விளையாட்டு, சம்பர்தாயங்கள் மற்றும் கலை நிகழ்ச்சியுடன் அனைவரும் ரசிக்கும் படியாகவும் இருந்தது.

காலையில் விழா வளாகத்தில் பொங்கல் வைத்தலுடன் கோலாகலமாக தொடங்கியது பொங்கல் விழா. விழாவிற்கு சிறிது தாமதமாக சென்றதால் பொங்கல் வைப்பதை முழுமையாக காண முடியவில்லை. நான் முடியும் தருவாயில் தான் போய் சேர்ந்தேன்.

பிறகு தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான உறி அடித்தல் நடைபெற்றது. சிறுவர்கள் மற்றும் பெரியவர்களின் கண்கள் கட்ட பட்டு உறி அடிக்க கட்டையுடன் கிளம்பினர். அனுபவமின்மையால் பெரும்பாலோரானால் சரியாக அடிக்க முடியவில்லை. அடுத்த வருடம் நிறைய உரியடிகளை எதிர்பார்க்கலாம் என நினைக்கிறேன்.

அடுத்து சிறுவர்களின் சிலம்பாட்டம் செய்முறை விளக்கம் நடைபெற்றது. சிறுவர்கள் அழகாக சிலம்பு சுழற்றி காட்டினர். அமெரிக்காவில் இருந்து கொண்டு சிலம்பம் கற்று கொண்டு இவ்வளவு சிறப்பாக சுழற்றுவது அதிசயமே!


பிறகு கலை நிகழ்ச்சிகள் ஆரம்பித்தன.முன்னாள் தமிழ்மன்ற தலைவர்களை மேடைக்கு அழைத்து நன்றி தெரிவித்து  நினைவு பரிசை கொடுத்தார்கள். முன்னாள் தமிழ்மன்ற தலைவர் திரு பிரபு வெங்கடேஷ் தமிழ் மன்றத்தின் பொருளாதார நிலையை உயர்த்த பாடு பட்டு வெற்றியும் பெற்றுள்ளார்.பிறகு பல்வேறு நடன நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அனைத்து நடனங்களும் அனைவரும் ரசிக்கும் படி இருந்தன. முக்கியமாக கும்கி பாடலின் கையளவு படலுக்கான நடனமும் மார்கழி தான் ஓடி போச்சு பாடலுக்கான நடனமும் மிக மிக அருமையாக இருந்தது. அனைத்து நடனங்களின் நேர்த்தியையும் பார்த்தால் அதற்கு பின் இருந்த அவர்களின் கடின உழப்பை உணர முடிந்தது.முக்கியமாக கர்னாடக சங்கீதம் அல்லது மேற்கத்திய இசைக்கு நடனமாடாமல் அழகிய தமிழ் பாடல்களுக்கு, பாரம்பரிய நடனத்தை கண்ட போது மனதுக்கு மிகவும் இனிமையாக இருந்தது.

வெறும் நடனம் என்று இல்லாமல் உறுமி மேளம், நையாண்டி நாயனம் போன்ற பழந்தமிழ் இசை கருவிகளை காட்டி, விளக்கி , வாசித்தி காட்டியது முத்தாய்ப்பாக இருந்தது.(நாயன கருவி மட்டும் கடைசி நேரத்தில் உடைந்து காலை வாரிவிட்டது!)

பிறகு கவியரங்கம் ஒன்றும் ஏற்பாடு செய்யபட்டிருந்தது. கலந்து கொண்ட அனைவரும் அருமையாக உணர்வு பூர்வமான கவிதை வாசித்தனர்.மக்கள் கூட்டமும் மிக திரளாக வந்திருந்தது. இரு முறை மதிய உணவு தீர்ந்து மீண்டும் மீண்டும் வருவித்தனர் என்றால் பார்த்து கொள்ளுங்களேன். சாப்பாடு வருவதற்கு முன் பசியால் வாடிய குழந்தை மற்றும் பெரியவர்களுக்கு வடை, பிசா என்று இருந்ததை வழங்கி கொண்டே இருந்தார்கள்.
கவியரங்கம்


சென்ற வருடம் ஒரு தமிழ் மன்ற விழாவிற்கு சென்ற போது தொடர்ச்சியாக வெறும் கர்னாடக இசை நிகழ்ச்சியே இருந்தது. ஆனால் இந்த முறை அனைத்து வித நிகழ்ச்சிகளும் அனைவரும் ரசிக்கும் படி இருந்தன இந்நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர்களுக்கு வாழ்த்துக்கள் மற்றும் நன்றி. இனி வரும் நிகழ்ச்சிகள் இது போல தொடரும் என்ற நம்பிக்கை உள்ளது.Monday, January 21, 2013

களிபாறை எரிவாயு/கச்சா எண்ணெய் - மாறுமா அரபு - அமெரிக்கா பெட்ரோல் உறவுகள்

2017ம் ஆண்டு அமெரிக்கா சவுதி அரேபியாவை பின் தள்ளி உலகின் முன்னனி கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடாகவும், 2030 ல் அமெரிக்கா நிகர எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடாகவும் மாற போகிறது என்ற செய்தியை கேட்டால் உங்களுக்கு ஆச்சர்யமாக இருக்கிறதா? களிப்பாறை எரிவாயு மற்றும் களிப்பாறை எண்ணையை எடுக்கும் ஆராய்ச்சியில் கடந்த பத்தாண்டுகளில் ஏற்பட்ட அராய்ச்சியின் முன்னேற்றத்தால் அமெரிக்காவின் எண்ணெய் சுயசார்பு பெற வேண்டும் என்ற 1970களின் கனவு நினைவாக தொடங்கியிருக்கிறது.

சமீபத்தைய பொருளாதார மந்த நிலையால் வலுவிழந்து இருக்கும் அமெரிக்க பொருளாதாரத்தை மீண்டும் புத்தணர்வு ஊட்டும் ஒரு காரணியாக இருக்க இது வாய்ப்புள்ளது.இது அமெரிக்க பொருளாதாரத்திலும் உலக பொருளாதாரத்திலும், நாடுகளுக்கிடையிளான உறவுகளிலும் ஏற்படுத்த போகும் மாற்றம் கணிசமாக இருக்க கூடும்


களிப்பாறை எரிவாயு/எண்ணெய் என்றாள் என்ன?

களிப்பாறை எரிவாயு மற்றும் எண்ணெயும் பெட்ரோல் போன்றே பல மில்லியன் அண்டுகளுக்கு முற்பட்ட தவர விலங்குகள் மக்கியதால் உருவானவை. இந்த எண்ணெயும் எரிவாயுவும் பூமிக்கு சில ஆயிரம் அடிகளுக்கு கீழே களிப்பாறை எனப்படும் கடினமான பாறைகளுக்கு இடையே அடைபட்டுள்ளன. இவை பூமிக்கு மிக அடியில் இருப்பதாலும் பாறைகளுக்கு அடியில் சிக்கி இருப்பதாலும் இவற்றை வெளி கொணர்வதில் பொருளாதார ரீதியாகவும் தொழில்நுட்ப ரீதியாகவும் பல பிரச்சனைகள் இருந்தன. தற்போது ஏற்பட்டுள்ள கச்சா எண்ணெய் விலை உயர்வால் பொருளாதார ரீதியாகவும், 1970ம் ஆண்டுகளிலிருந்து ஏற்பட்ட தொழிற்நுட்ப வளர்ச்சிகளாலும் களிப்பறை எரிவாயு மற்றும் எண்ணெயை எடுப்பது சாத்தியமாக தொடங்கியுள்ளது. இந்த எரிவாயுவை எப்படி எடுக்கிறார்கள் என்பது பற்றியும், அது பற்றிய சுற்றுசூழல் காப்பளர்களின் அச்சம் பற்றியும் அது உலக பொருளாதாரத்தில் ஏற்படுத்தும் மாற்றம் பற்றியும் காண்போம்.


களிப்பாறை எண்ணெய் மற்றும் எரிவாயுவை எடுக்கும் முறை

1. முதலில் குழாய்களை ஆழ் துளையிடும் சாதனம் மூலம் உள்ளே செலுத்தி கீழ் நோக்கி கொண்டு செல்வார்கள். பூமியில் தண்ணீர் இருக்கும் ஆழத்திற்கும் மேலாக கீழ் செலுத்துவர்.

2. பிறகு குழாயை வெளியே எடுத்து அந்த ஓட்டையை சுற்றியும் வலிமையான மேற்பரப்பு வார்ப்பு (surface casting)கொடுத்து அதன் மேல் மீண்டும் சிமெண்டு அடுக்கு ஒன்றை பூசி வெளி பரப்பிற்கும் குழய்க்கும் இடையே ஒரு கடுமையான தடுப்பை ஏற்படுத்துவர். இதன் மூலம் பின்னாளில் செலுத்த இருக்கும் வேதி பொருட்கள் நிலத்தடி நீரில் கலந்து விடாமல் இருக்க உதவும்.

3.பிறகு மீண்டும் வெளியில் எடுக்க பட்ட ஆழ் துளையிடும் சாதனங்களை கொண்டு கீழ் நோக்கி துளையிடுவது தொடரப்படும். இது சில ஆயிரம் அடிகளுக்கு மேலானதாக இருக்கும். களிப்பாறையை நெருங்கியவுடன் வளைவாக துளையிட தொடங்குவர். அது களிப்பாறைக்குள் நன்கு சென்றவுடன் செங்குத்தாக செல்வதை விடுத்து மட்ட வாக்கில் (Horizontal Drilling) துளையிட தொடங்குவர்,

4. மட்ட வாக்கில் செல்லும் துளை மூலம் அதனை சுற்றியுள்ள களிபாறையிலிருந்து எண்ணெய் மட்டும் எரிவாயுவை எடுக்க முடியும் . எனவே இந்த துளையின் நீளம் அதிகமாக இருக்கும். துளையிடுவது முடிந்த பின் வழக்கம் போல் மேற்பரப்பு வார்ப்புகளும் சிமெண்ட் பூச்சுகளும் பூசபடும்.

5. அதன் பின் துளையிடும் துப்பாக்கி அந்த மட்ட வாக்கு குழியின் உள் செலுத்த படும். துளையிடும் துப்பாக்கி என்பது இரும்பு குழாயில் பல துளைகளை கொண்டதாகும். இந்த குழாய்கள் மட்ட வாக்கு துளையினுள் செலுத்த படும். அந்த குழாயினுள் மின்சாரம் பாய்ச்ச பட்டு துளை வழியே வெளியே அனுப்பி வார்ப்புகள் மற்றும் களிபாறையினுள் சிறு துளையை ஏற்படுத்துவர்.

6. மிகவும் இருக்கமான களிபாறையினுள் எண்ணெயும் வாயுவும் மாட்டி கொண்டு இருப்பத்தால் பாறைக்குள் பல வெடிப்புகளை ஏற்படுத்த வேண்டும் அந்த வெடிப்புகளின் வழியே எரிவாயுவையும் எண்ணெயையும் எடுக்க முடியும். வெடிப்புகளை ஏற்படுத்த கடைபிடிக்கும் முறைக்கு நீரியல் முறிவு (Hydralic Fracturing ) என்று பெயர் .நீர் (90%), மணல்(9.5%) மற்றும் வேதி பொருட்கள் (0.5% - சோடியம் குளோரைடு,எத்திலின் கிளைக்கால்,போரேட் உப்பு, சோடியம்/பொட்டாசியம் கார்பனேட்,ஐசோ புரொப்பனால் மற்றும் பாலிசாக்கரைடுகள் கலந்த கலவை) கலவையை மிகவும் அதிகமான அழுத்தத்துடன் உள் செலுத்துவர். இந்த கலவை துளையிடும் துப்பாக்கி ஏற்படுத்திய துளைகளின் வழியே வேகமாக வெளி சென்று கடினமான களிபாறையினுள் பல வெடிப்புகளை ஏற்படுத்தும்

7. களிபாறையின் வெடிப்பு மூலம் வெளிவரும் வாயு குழாயினுள் உள்ள துளை மூலம் குழாயினுள் வந்து அது பூமிக்கு மேல் வரும் பொது அவற்றை சேகரித்து சேமிக்க படுகிறது.

சுற்றுசூழல் பிரச்சனைகள்

பெட்ரோல் துறப்பணம் சார்ந்த தொழில்நுட்பம் என்றாலே அது ஏற்படுத்த கூடிய சுற்றுசூழல் சீற்கேடு பற்றிய கவலை அனைவருக்கும் இருக்கும். களிப்பாறை எரிவாயு தொழில் நுட்பமும் சுற்றுசூழல் ஆர்வலர்களின் கடுமையான எதிர்ப்புக்கு உள்ளாகி உள்ளது. உதாரணமாக நீரியல் முறிவு ஏற்படுத்த பயன்படுத்தும் வேதி பொருட்கள் நிலத்தடி நீரில் சேர்ந்தால் , அது தண்ணீரை விஷமாக்க கூடும் என்று கருதுகிறார்கள். ஆனால் எரிவாயு கம்பெனிகளோ வலிமையான வார்ப்பு இருப்பதால் இந்த தொழில்நுட்பத்தில் பயன் படுத்தும் வேதி பொருட்கள் நிலத்தடி நீரில் சேர வாய்ப்பில்லை என்கிறார்கள்.இந்த பணியின் போது வெளியேறும் மீத்தேன் வாயு தண்ணிரில் கலக்க வாய்ப்புள்ளது என்று குற்றம் சாட்டுகிறார்கள். மேலும் எண்ணெய் துறப்பண பகுதியில் பூகம்பம் ஏற்பட்டால் வேதி பொருட்கள் பெருமளவு தண்ணீரில் கலக்கவும் வாய்ப்புள்ளது.

எங்கும் கிடைக்கும் களிப்பாறை எரிவாயு ஆனால்?

தற்போது உலக கச்சா எண்ணெய் சந்தையை பெரும்பன்மையாக கட்டு படுத்துவது அரபு நாடுகள் மற்றும் ரஸ்யா மட்டுமே. களிப்பாறை எரிவாயு மற்றும் எண்ணெய் ஒரு சில நாடுகளின் பிடியில் மட்டும் சிக்காமல் உலகெங்கும் பரவியிருக்கிறது. தற்போது ஒவ்வொரு நாட்டின் கையிருப்பும் தோராயமாக தான் கணக்கிட பட்டுள்ளது. இந்தியாவில் எந்த அளவு இவ்வகை எரிபொருள் இருக்கிறது என்பது இன்னும் முழுமையாக கணக்கிட படவில்லை

உலகின் பல்வேறு பகுதிகளில் இருப்பதாக கணக்கிட பட்டுள்ள களிப்பாறை எரிவாயுவை கீழே காணலாம்.(இந்த கணக்கு எரிவாயு கையிருப்பு பற்றி மட்டும் காட்டுகிறது. களிப்பாறை எண்ணெய் சேர்க்கபடவில்லை)

பகுதிஎரிவாயு இருப்பு(Trilliyan cubic meter)
கிழக்கு ஐரோப்பா/சோவியத் பகுதிகள்174
அரபு நாடுகள்137
ஆசியா/பசுபிக்132
அமெரிக்கா122
ஆப்ரிக்கா74
லத்தின் அமெரிக்கா71
இதர ஐரோப்பா45

அமெரிக்கா, சவுதி அரேபியா, ஈரான் மற்றும் குவட்டாரில் எளிதில் கிடைக்கும் களிப்பாறை எரி வாயு மிகுந்துள்ளது. அமெரிக்காவில் மக்கள் நெருக்கம் குறைந்த பகுதியில் அதிகம் எரிவாயு/எண்ணெய் உள்ளது. மேலும் அங்கு நில உரிமையாளர்களுக்கே பூமிக்கடியில் உள்ள இயற்கை வளம் சொந்தம். மேலும் அங்கு தொழில் நுட்ப வளர்ச்சியும் முதலீடும் அதிகம் உள்ளதால் தற்போது அமெரிக்காவில் பெருமளவு களிப்பாறை எரிவாயு எடுக்க படுகிறது.மேற்கு ஐரோப்பாவில் மக்கள் நெருக்கம் அதிகம் உள்ள பகுதியில் எரிவாயு இருக்கிறது. எனவே அதனை எடுப்பதில் மக்கள் எதிர்ப்பும் சுற்றுசூழல் ஆர்வலர்களின் எதிர்ப்பும் அதிகமாக இருக்ககூடும்.சீனாவில் எளிதில் எடுக்க முடியாத நிலையில் இந்த எரிபொருள் இருப்பதால் புதிய தொழில்நுட்பம் தேவை படலாம். மேலும் எரிபொருள் கிடைக்கும் இடமும் உபயோகிக்கும் இடமும் வெகு தொலைவில் உள்ளதால் நீண்ட தூர குழாய் கட்டமைப்பு தேவை படலாம்.ஆனால் சீனாவுக்கு இது போன்ற மிக பெரிய அடிப்படை கட்டமைப்பு செய்வது ஒன்றும் பெரிய விஷயமில்லை.இந்தியாவில் அசாம் மற்றும் அருணாச்சல் பிரதேசத்தில் அதிக அளவு எரிபொருள் இருப்பதாக கருதபடுகிறது. சமீபத்தில் சீனா அருணாச்சல் பிரதேசம் மீது அதிக அளவில் உரிமை கோரிவருவது குறிப்பிட தக்கது.

அமெரிக்காவில் களிப்பாறை எரிவாயு புரட்சி

பொதுவாக எரிவாயு பெட்ரோலுக்கு மாற்றாக இருப்பதால் அதன் விலையும் சந்தையில் பெட்ரோல் விலையை சார்ந்தே இருக்கும். அது மட்டுமின்றி எரிவாயுவின் விலையை நிர்ணயிப்பதில் அது எவ்வாறு உற்பத்தியாகும் இடத்திலிருந்து உபயோகபடுத்தும் இடத்திற்கு கொண்டு செல்லபடுகிறது என்பதும் முக்கிய பங்கை வகிக்கிறது. குழாய் மூலம் எரிவாயுவை கொண்டு செல்ல முடிந்தால் அதன் விலை குறைவாக இருக்கும். ஆனால் எரிவாயுவை திரவமாக்கி கொண்டு செல்ல வேண்டுமானால் அதற்கு கூடுதல் செலவாகும். (அதனால் தான் இந்தியா ஈரானிடமிருந்து குழாய் மூலம் எரிவாயுவை கொண்டு வர முயற்சித்தது நினைவிருக்களாம்).

அமெரிக்காவில் தற்போது அதிக அளவில் உற்பத்தியாகும் களிப்பாறை எரிவாயுவின் விளைவாக அமெரிக்க சந்தையில் கச்சா எண்ணெய்க்கும், எரிவாயுவிற்கும் இடையே இருந்த விலை நிர்ணய உறவு அறுக்கபட்டு எரிவாயுவின் உற்பத்தி மற்றும் தேவையை கொண்டு அமெரிக்காவில் விலை நிர்ணயிக்க படுகிறது. அதன் விளைவாக அமெரிக்காவில் எரிவாயுவின் விலை $2.50 mBtu ஆகவும், ஐரோப்பாவில் குழாய் மூலம் கிடைக்கும் எரிவாயுவின் விலை $12 mBtu ஆகவும், திரவ நிலையில் எரிவாயுவை வாங்கும் ஆசியாவில் $16 mBtu ஆகவும் உள்ளது.

குறைந்த விலையில் எரிபொருள் கிடைத்தவுடன் அமெரிக்காவில்  மாற்றங்கள் பல தொடங்கி விட்டன.

1. அமெரிக்கா தனது திரவ எரிபொருள் தேவையில் தற்போது 45% மட்டுமே இறக்குமதி செய்கிறது. 2005ல் இது சுமார் 60% இருந்தது.(பொருளாதார வளர்ச்சி மந்த நிலை கூட இதற்கு சிறிய பங்கு வகிக்கிறது) .இது நிகர ஏற்றுமதி - இறக்குமதி பற்றாகுறையை ஓரளவு கட்டுபடுத்த உதவுகிறது. கடந்த 3 ஆண்டுகளில் OPEC நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யும் எண்ணெயில் 20% குறைந்துள்ளது குறிப்பிடதக்கது.

2. அமெரிக்க மக்களின் எரி பொருள் செலவில் இந்த விலை குறைப்பின் விளைவாக சேமிப்பு மட்டும் 2015ம் ஆண்டில் $113 பில்லியன் இருக்கும் என கணக்கிட பட்டுள்ளது.

3. எரி வாயுவை முக்கிய தேவையாக கொண்ட பிளாஸ்டிக், உரம், வேதி பொருட்கள் உற்பத்தி தொழிற்சாலைகள் ஆசியாவிலிருந்து அமெரிக்க இடம் பெயர ஆரம்பித்துள்ளது. டௌ கெமிக்கல்ஸ் போன்ற கம்பெனிகள் 91 வகை பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளை சுமார் $70 பில்லியன் முதலீட்டில் அமெரிக்காவில் தொடங்க முடிவு செய்துள்ளது. இதன் மூலம் சுமார் 3 மில்லியன் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்க வாய்ப்புள்ளது.

4. கடந்த 5 வருடங்களில் $600 பில்லியனுக்கு மேலாக இந்த துறையில் முதலீடு குவிந்துள்ளது.

சர்வ தேச பொருளாதார,அரசியல்,சுற்றுசூழல் மற்றும் அதிகார மாற்றங்கள் 

இந்த களிப்பாறை எரிவாயுவும், எண்ணெயும் சர்வ தேச பொருளாதாரம், அரசியல் மற்றும் சுற்றுசூழலியலில் ஏற்படுத்த கூடிய  மாற்றங்கள் பற்றி காண்போம்.

1.சுற்று சூழலுக்கு தீங்கை ஏற்படுத்தும் நிலக்கரிக்கு மாற்றாக மின் உற்பத்தியில் எரிவாயு விளங்குவதால், சுற்றுசூழல் சீர்கேடு ஓரளவு குறைய வாய்ப்புள்லது. ஏனென்றால் புவியை சூடேற்றும் வாயுக்களை நிலக்கரியை விட எரிவாயு குறைவாகவே வெளியிடுகிறது.

2. அதே சமயம் தற்போது மரபு சாரா பசுமை எரி சக்தி ஆராய்ச்சி மற்றும் உபயோகத்துக்கு இந்த மலிவான எரிபொருள் ஆபத்தாக முடிய வாய்ப்புள்ளது.

3. மக்கள் நெருக்கம் உள்ள ஆசிய, ஆப்ரிக்க பகுதிகளில் இவ்வகை எரிபொருளை அதிக அளவில் எடுக்க ஆரம்பித்தால் மனித செலவு (Human Cost) அதிகமாக இருக்க கூடும். அது மட்டுமன்றி நிலத்தடி நீர் மாசு படுதல் பற்றி நிறைய சர்ச்சைகுறிய செய்திகள் வருவதையும் கவனிக்க வேண்டும்.

4. சமீபத்தைய பொருளாதார நெருக்கடியாளும், அரசு மற்றும் வர்த்தக பற்றாகுறையாளும் அமெரிக்க நாணயத்தின் நம்பக தன்மை மேல் சந்தேகம் வந்து உலக பொது நாணயமாக யூரோ, யுவான் போன்ற நாணயங்கள் வருமா என்று விவாதிக்க பட தொடங்கபட்டது. ஆனால் இந்த களிபாறை எரிவாயுவின் மூலம் வர்த்தக பற்றாகுறை குறைந்து, தொழில் வளர்ச்சியின் மூலம் அரசு பற்றாகுறை குறைந்தால் மீண்டும் டாலர் வலிமையுடன் தன்னுடைய பழைய ஆதிக்கத்தையே தொடர வாய்ப்புள்ளது.

5. அமெரிக்கா தன் எண்ணெய் மற்றும் உற்பத்தி பொருட்கள் இறக்குமதியில் பெருமளவு குறைந்து உலக சந்தையில் டாலர் கிடைப்பது அறிதாக கூடிய நேரத்தில் அது சர்வ தேச சந்தையில் ஏற்படுத்த கூடிய மாற்றங்களை கணிப்பது கடினம்.

6. அமெரிக்காவின் ஆற்றல் தேவைக்காக அரபு நாடுகளை சார்ந்திருக்கும் நிலை மாறகூடும். தன் தேவைக்காக அரபு சர்வாதிகார நாடுகளின் ஆட்சியாளர்களை காக்க நடத்த வேண்டிய போர்கள் குறைய கூடும்.

7. பெட்ரோல் வியாபாரத்துக்கு தற்போது மேலை நாடுகளை பெருமளவு சார்ந்து இருக்கும் அரபு நாடுகள் இனி தன் பார்வையை வளர்ச்சி பாதையில் செல்லும் சீனா, இந்தியா போன்ற ஆசிய நாடுகள் மீது அதிகம் காட்ட கூடும்.மேலை நாடுகளின் கட்டுபாடு குறைந்த  OPEC நாடுகளின்  எரிபொருள் வியாபாரம் நல்ல மாற்றத்தை கொடுக்குமா இல்லையா என்பதை காலம் தான் பதில் சொல்லும்.தற்போது எரிவாயுவின் விலை சர்வ தேச அளவில் ஒரே மாதிரியாக நிர்ணயிக்காமல் அமெரிக்காவில் தனியாகவும் இதர பகுதிகளில் தனியாகவும் நிர்ணயிக்க படும் நிலை பெட்ரோலுக்கும் வருமா என்பது முக்கிய கேள்வியாக இருக்கும்.

8. எரிபொருள் சுயசார்பு பெற்ற அமெரிக்கா அரபு நாடுகளிலிருந்து உலக எரிபொருள் சப்ளையில் ஆர்வம் காட்டாவிட்டால் எரிபொருள்  தேவை நிறைந்த மேற்கு ஐரோப்பா நாடுகளின் நிலை கவலைக்குள்ளாக வாய்ப்புள்ளது. அவர்கள் தேவையை அவர்களே பார்த்து கொள்ள வேண்டிய நிலை வரலாம்.

9. மலிவு எரிபொருள் வளர்ந்த நாடுகளில் அமெரிக்காவில் அதிகம் கிடைத்து மேற்கு ஐரோப்பாவில் குறைவாக கிடத்தாலும், வளரும் நாடுகளில் சீனாவில் அதிகம் கிடைத்து இந்தியாவில் (தற்போதைய நிலவரபடி) குறைவாக கிடைத்தாலும் சர்வ தேச அளவில் பல்வாறு நாடுகளின் வளர்ச்சியில் மிக பெரிய மாற்றங்கள் ஏற்படலாம்.

10. களிப்பாறை எரிவாயுவினால் சர்வதேச கச்சா எண்ணையின் விலை குறைப்பு ஏற்பட்டால் அது அரேபிய மற்றும் ரஸ்ய நாடுகளின் பொருளாதாரம்,அரசியல் மற்றும் சமூக மாற்றங்கள் கணிசமாக இருக்க கூடும்.

பல்வேறு நாடுகளில் கிடைக்க வாய்ப்புள்ள எரிபொருள்கள் பற்றியும் அது சர்வதேச அளவில் ஏற்படுத்த கூடிய மாற்றம் பற்றி பார்த்தோம். சர்வ தேச எரிபொருள் விலையை நிர்ணயிப்பதில் பன்னாட்டு எண்ணெய் கம்பெனிகளின் பங்கு முக்கியவத்துவம் வகிப்பதால், களிப்பாறை எரிவாயு விஷயத்தில் எண்ணெய் கம்பெனிகள் எப்படி  செயல்பட போகின்றன என்பதும் முக்கிய பங்கை வகிக்க கூடும்.

தற்போது கிடைக்கும் மலிவான முதலீடு காரணமாகவும், கடுமையான போட்டி காரணமாகவும் களிப்பாறை எண்ணெய் /எரிவாயு எடுக்கும் நிறுவனங்கள் வருங்கால வருமானத்தை நம்பி தற்போது நட்டத்தில் இயங்குவதாகவும் கூற படுகிறது. அதன் விளைவாக இது ஒரு பொருளாதார குமிழை மட்டும் ஏற்படுத்தும் என்று ஒரு சில பொருளாதார நிபுணர்கள் எச்சரிப்பதும் கவனிக்க தக்கது.

எது எப்படியோ. பிற்காலத்தில் எரிபொருள் குறைந்த விலையில் கிடைத்தால் பணவீக்கம் குறைந்து அனைத்து தரப்பு மக்களின் வாழ்க்கை தரமும் உயர வாய்ப்பிருக்கும். 

கொசுறு செய்திகள்

1. களிபாறை எரிவாயு/எண்ணெய் எடுக்கும் நீர்ம பிரிப்பு(hydraulic fracturing) முறைக்கு தேவை படும் மூலபொருட்களுள் ஒன்று நம்ப ஊர் கொத்தவரங்காய். இதனால் ராஜஸ்தான் மற்றும் வட மாநிலங்களில் கொத்தவரங்காய் விலை சுமார் 10 மடங்கு உயர்ந்துள்ளதால் விவசாயிகள் நல்ல லாபம் அடைந்து வருகின்றனர்.

2.  களிப்பாறை எரிவாயுவிற்கு எதிரான கருத்துகளை  அமெரிக்க மக்களிடையே விதைக்க அரபு நாடுகளின் நிதி உதவியுடன் ஹாலிவுட் படம்  (The Promised Land) எடுக்கபட்டு வருகிறது.


Wednesday, January 02, 2013

சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு - மேலை நாடுகளும் இந்தியாவும்


சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு பற்றி பலரும் பல்வேறு கோணத்தில் விவாதத்தை எடுத்து வைத்துள்ளனர். இந்த கட்டுரையில் விவசாயம் சார்ந்த உணவு பொருட்கள் மற்றும் இதர நுகர்வு பொருட்களில் மேலை நாடுகளில் பெரு நிறுவனங்களின் தாக்கம்பற்றியும் இந்தியாவில் அது ஏற்படுத்த கூடிய தாக்கம் பற்றியும் சாதக மற்றும் பாதக அம்சங்களையும் விவாதிப்போம். உணவு பொருட்கள் மற்றும் பிற வணிப பொருட்களை வேறு பட்ட கோணத்தில் பார்ப்பது முக்கியம்

1.சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டினால் நுகர்வோருக்கு குறைந்த விலையில் உணவு பொருட்கள் கிடைக்கும் என்பது ஒரு முக்கிய வாதமாகும். மிக பெரிய நிறுவனங்கள் பல்வேறு நிலைகளில் உள்ள இடை தரகர்களை ஒழித்து திறமை வாய்ந்த விநியோகசங்கிலியை உருவாக்கி நுகர்வோருக்கு குறைவான விலையில் உணவு பொருட்களை கொடுப்பர் என்பது வாதமாகும். ஆனால் உண்மையில் நடக்க போவது அதீதமான முதலீட்டின் மூலம் ஆரம்ப காலத்தில் குறைந்த விலையில் (நஷ்டம் ஏற்பட்டால் கூட) உணவுபொருட்களை விற்க ஆரம்பித்து , போட்டியின் மூலம் பிற சிறு கடைகளை மூடிய பின் போட்டிகளற்ற நிலையில் பழைய விலைவாசியை நோக்கி போகத்தான வாய்ப்பு அதிகம் உள்ளது.

அமெரிக்கா மற்றும் மேலை நாடுகளின் வர்த்தகத்தில் முழுமையாக தற்போது பெரு நிறுவனங்களிடம் தான் உள்ளது. ஆனாலும் ஒரு சில ஆசிய மற்றும் ஆப்ரிக்க கடைகள் அந்தந்த குறிபிட்ட மக்களின் தேவையை பூர்த்தி செய்ய சிறு கடைகளை வைத்துள்ளனர். மேலேகுறிபிட்ட வாதத்தில் உண்மை இருக்கும் என்றால் அந்த சிறு கடைகளில் காய்கறிகளின் விலை அதிகமாகவும் பெரு நிறுவனங்களில் விலை குறைவாகவும் இருக்க வேண்டும். இரண்டு கடைகளிலும் கிடைக்கும் பொதுவான காய் கறிகளான தக்காளி, பீன்ஸ், காரட், வெள்ளரி, லெட்டியூஸ், கொத்தமல்லி, காளான்மற்றும் திராட்சை , மாதுளை , செர்ரி போன்ற பழங்களின் விலைகளை ஒப்பிட்டு பார்த்தால் உங்களுக்கு ஆச்சர்யம் தான் மிஞ்சும்.

மேலே குறிபிட்ட அனேகமான காய்கறி மற்றும் பழங்களின்விலை இந்திய மற்றும் ஆசிய கடைகளில் 50 முதல்100 விழுக்காடு குறைவாக இருக்கும். அதனால் எந்த ஒரு இந்தியரும் இந்திய மற்றும் ஆசிய (சிறு) கடைகளுக்கு தான் காய் கறிகளை வாங்க செல்வர். இதற்கு சில விதி விலக்குகளும்இருக்களாம். பொதுவாக இந்திய மற்றும் ஆசிய கடைகளில் தான் காய் கறி மற்றும் பழங்களின் விலை குறைவாக இருக்கும்.

2.சில நேரங்களில் காய்கறிகளை அதிக கொள்முதல் செய்து விட்டாலோ அல்லதுஅதன் சேமிப்பு திறன் முடியும் நிலை வந்தாலோ அந்த காய்கறி/பழங்களை முழுமையாக விற்று விட தள்ளுபடி விலையில் பெரு நிறுவனங்கள் விற்கும் போது அதன் விலைஉண்மையிலேயே குறிப்பிடும்அளவில் குறைவாகவே இருக்கும். இது ஜவுளி மற்றும் பிற பொருட்களுக்கும் பொருந்தும். இந்த அளவு விலை குறைப்பை சிறு கடைகளில் எதிர்பார்க்க முடியாது.

3.பெரு நிறுவனங்களால் மேலை நாடுகளில் ஏற்பட்ட மிக பெரிய ஆபத்து காய் கறி மற்றும் பழங்களின் பன்முக தன்மை (diversity) அழிய தொடங்கியதுநாடு முழுவதும் ஒரே வடிவமைப்பு மற்றும் சுவையை கொடுக்க கூடிய, குறைந்த விலையில் உற்பத்திசெய்ய கூடியமற்றும் அதிக நாள் சேமித்து வைக்க கூடியகாய் கறி/பழங்களின் வகைகள் தேர்வு செய்ய பட்டு அவை மட்டுமே அனைத்து கடைகளிலும் விற்க படும்.இதனால் நுகர்வோருக்கு ஒரே மாதிரியான வடிவமைப்பு மற்றும் சுவை உடைய பொருட்கள்கிடைத்தாலும் அவர்கள் பல்லாயிர கணக்கான சுவைகளை இழக்கிறார்கள். இந்தியாவில் இந்த கலாச்சாரம் தொடங்கி விட்டாலும் பெருநிறுவனக்களின் வருகை இதை வேகமாக்கி நிரந்திரமாக்கும்.

4.பெரு நிறுவனங்களின் லாபத்திற்கு முக்கிய காரணி அவர்களுடைய மிக நீண்ட உலகளாவிய உணவு சங்கிலி மற்றும்நீண்ட கால குளிர் பதன சேமிப்பு முறைகளும் ஆகும். அதன் விளைவு நுகர்வோருக்குfresh காய் கறி மற்றும் பழங்கள் கிடைப்பது அரிதாகிவிடும்.அது மட்டுமன்றி உடலுக்குபக்க விளைவுகளை ஏற்படுத்தும் வேதி பொருட்களின் பயன்பாடும் அதிகரிக்கும்.

5.சிறு மற்றும் பெரு விவசாயிகளை கொண்டு ஒரே மாதிரியான வடிவமைப்பு, தரம் கொண்ட காய் கறி பழங்களை உற்பத்தி செய்வது என்பது இயலாத காரியம். அதன் விளைவு மேலை நாடுகளில் சிறு மற்றும் பெரு விவசாயிகளிடம் இருந்து காய் கறி உற்பத்தி ஒரு சிலமாபெரும் நிறுவனங்களிடம் அடைந்தது. சிறு மற்றும் பெரு விவசாயிகள் முற்றிலும் விவசாய தொழிலிருந்து வெளியேறினர். உதாரணமாக அமெரிக்காவின் ஒட்டு மொத்த கேரட் உற்பத்தியில் 85% போல்ட்ஹவுஸ் மற்றும் மற்றொரு நிறுவனத்திடம் உள்ளது. மேலைநாடுகளில் விவசாயத்தை நம்பி இருந்த குறைந்த மக்கள்வளர்ந்த பொருளாதாரத்தில் கூடுதலாக ஏற்படுத்த பட்ட சேவை துறை மற்றும் பிற தொழில் துறைகளில் வேலை தேடி செல்ல முடிந்தது. ஆனால் இந்தியாவில் இந்த நிலை ஏற்பட்டால் வாழ்வாதாரத்தைஇழந்து நிற்க போகும் பல கோடி மக்களுக்கு இந்தியாவின் பிற துறைகள் வேலை கொடுத்து காப்பாற்றுமா என்பது கேள்வி குறியே.

6.சில்லறை வர்த்தகத்தில் முழுமையான அன்னிய முதலீட்டினால் ஏற்பட போகும் மற்றொரு முக்கிய தாக்கம் விவசாயம் சாராத பிற பொருட்களின் உற்பத்தியில் ஏற்பட கூடிய தாக்கம் ஆகும். பன்னாட்டு கம்பெனிகளின் லாபத்தின் அடிபடையே மலிவாக பொருளைஉற்பத்தி செய்யும் நாடுகளில் பொருட்களை கொள்முதல் செய்து பிற நாடுகளில் குறிபிட்ட லாபம் வைத்து அந்நாட்டு பொருட்களின் உற்பத்தி செலவை விட குறைத்து விற்பதாகும். அதன் படி நாணய மதிப்பு குறைவாக உள்ள அண்டை நாடுகள் அல்லது அரசு ஆதரவோடுகுறைந்த விலையில் பொருட்களை உற்பத்தி செய்ய கூடிய சீனா போன்ற நாடுகளில் உற்பத்தியாகும் பொருட்கள் பெரிய அளவில் இந்தியாவில் இறக்குமதி செய்ய பட்டு இந்திய தொழிற்துறை மிக பெரிய அளவில் பாதிக்கபட வாய்ப்புள்ளது.சீனாவில் மலிவாக உற்பத்திசெய்தால் இந்தியாவில் அதையே பின்பற்ற வேண்டியது தானே என்ற கேள்வி எழ கூடும். சீனா தொழிற்துறைக்கு தேவையான மூல பொருட்களை எல்லாம் குறைந்த விலையிலும் தடையில்லாமலும் கிடைக்க ஆப்ரிக்க, தென்னமெரிக்கா, ஆஸ்திரேலியா என அனைத்துகண்டங்களிளும் உள்ள நாடுகளில் தொடர்பை ஏற்படுத்தி தானே உற்பத்தியை கையக படுத்தி உள்ளது. அது மட்டுமன்றி சிறு,பெரு மற்றும் மாபெரும்தொழிற்சாலைகளுக்குதேவையான அனைத்து கட்டமைப்பு வசதிகளையும் செய்து கொடுத்துள்ளது. அதற்கும் மேலாகதெளிவான திட்டமிடல் மூலம் தொழிற்சாலை வெற்றிகரமாகஇயங்க உதவுகிறது. அதுமட்டுமன்றி பெருமளவு நேரடி மற்றும் மறைமுக மானியமும் கொடுக்கிறது. அப்படிபட்ட சீன தொழிற்துறையோடு எந்த அடிப்படை கட்டமைப்பு வசதியும் இல்லாத நிலையில் ஒருநாளுக்கு 2 மணி நேரம் மட்டும் மின்சாரம் பெற்று இயங்கி கொண்டிருக்கும் இந்திய தொழிற்துறை போட்டி இட முடியுமா என்பது கேள்வி குறியே. ஏற்கனவே விவசாய துறையில் வேலை இழந்து இருக்கும் மக்களுடன் இந்த தொழிற்துறை வேலை இழப்பும் சேர்ந்துகொண்டால் மிக பெரிய சமூக பிரச்ச்னையாக உருவெடுக்க வாய்ப்புள்ளது..

7.மேலை நாடுகளில் தற்போது வட்டியில்லா கடனுக்கு கிடைத்த முதலீட்டுடன் வர கூடிய பெரு நிறுவனங்களுடன் கந்து வட்டிக்கு வாங்கி பிழைப்பை நடத்தும் இந்திய சிறு வியாபாரிகள் போட்டியிட கூடிய நடைமுறை சாத்தியம் இல்லை.

8.பன்னாட்டு பெரு நிறுவனங்கள் உலகளவில் பரந்து இருப்பதால் அவர்களுடைய நிகர விற்பனை மதிப்பு மிக அதிகம். இந்தநிறுவனங்கள் ஆரம்பத்தில் சில வருடங்கள் மிக குறைந்த விலையில் நட்டத்திலேயே பொருட்களை விற்று சந்தையில் பெரு விழுக்காட்டைஅடைய முடியும். அதன் பிறகு போட்டி இல்லாத நிலையில் அதிக விலையில் மீண்டும்வியாபாரத்தை தொடர முடியும்.

9.தற்போது சில்லறை வர்த்தகத்தில் மொத்த விற்பனையில் ஒரு குறிபிட்ட வட நாட்டு சாதியினரிடமும் சில்லறை வர்த்தகத்தில், ஒரு குறிபிட்ட தமிழக சாதியிடனரிடமும் தான் பெருமளவு உள்ளது. சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டினால் இந்த நிலை மாறிகல்லூரி படித்த பல்வேறு பிரிவினருக்கு அந்த துறையில் வேலைவாய்ப்பு கிடைக்க வாய்ப்பிருக்கும். இட ஒதுக்கீட்டை முழுமையாக செயல்படுத்தும் தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் அனைத்து சாதியினரும் பயனடைவர். ஆனால் பெரும்பான்மை வடமாநிலங்களில்கல்வி வாய்ப்பு கிடைத்த உயற்சாதியினர் மட்டுமே பயனடைவர். அதே நேரத்தில் தற்போதைய அமைப்பு அதிக முதலாளிகளை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் அன்னிய நேரடி முதலீடு பெருமளவில் தொழிலாளிகளை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.

10.பன்னாட்டு பெரு நிறுவனங்களின் வருகையால் உயர் நடுத்தர மற்றும் உயர் வர்க்க மக்கள் விரும்பும் பிராண்டேட் நுகர் பொருட்கள் ஒரளவு மலிந்த விலையில்தங்கு தடையின்றி கிடைக்க வாய்ப்புள்ளது.

11.ஏற்கனவே அதிகரித்து வரும் ஏற்றுமதி - இறக்குமதிக்கான பற்றாக்குறை, இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.இது இந்தியாவின் பெரும பொருளியிலில் (macroeconomic) மிக பெரிய தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.ஆரம்ப காலங்களில் கிடைக்கும் சிறியஅளவு அன்னிய முதலீட்டிற்கு ஆசை பட்டு நீண்ட காலத்தைய பேரழிவிற்கு கொண்டு செல்ல வாய்ப்புள்ளது.

12. பொதுவாக அமெரிக்காவில் வால்மார்ட் போன்ற நிறுவனங்கள் ஒரு கடையை தொடங்க வேண்டுமானால் அந்த பகுதியில் வாழும் மக்களின் ஒப்புதலை பெற வேண்டும். இதற்காக  பல வருடம் மல்லு கட்டி நின்று தோற்ற சம்பவம் எல்லாம் உள்ளது. சில இடங்களில் குறுக்கு வழியில் ஆரம்பிக்க முனைந்து மக்கள் எதிர்ப்பை சமாளிக்க முடியாத சம்பவம் எல்லாம் உண்டு. ஆனால் இந்தியாவில் அது போன்ற நிலை இருக்குமா என்பது கேள்விகுறியே.(அரசியல் தலைவரின் மூன்றவது மனைவியின் 4 வது பிள்ளையின் இரண்டாவது மனைவிக்கு ஒரு பெட்டியை கொடுத்தால் சுலபமாக காரியம் முடிந்து விடகூடும்!))
வளர்ந்த மற்றும் நாணய மதிப்பு உள்ள  பொருளாதாரத்தை கொண்ட மக்கள் தொகை குறைவாக உள்ள நாடுகளில் பெரு வணிக நிறுவனங்கள் மலிவான இறக்குமதி மூலம் விற்பனை செய்வதால் பண வீக்கத்தை கட்டுபாட்டில் வைத்து கொள்வதில் முக்கிய பங்கை வகிக்கிறது. அதை "Magic Wand" ஆக நினைத்து இந்தியாவிலும் உபயோகபடுத்தலாம் என்று மன்மோகன்சிங் போன்ற பொருளாதார மேதைகள் நினைக்க கூடும். இந்தியாவின் பொருளாதாரத்தை பற்றியோ, பெரும்பான்மை இந்தியர்களின் வாழ்வாதாரத்தையோ அவர்கள் மனதில் கொள்வார்களா என்பது கேள்விகுறியே.

அமெரிக்கா மற்றும் மேலை நாடுகளிடமிருந்து இந்தியா கற்க வேண்டிய பாடங்கள் பல நூறு உள்ளது. நிச்சயம் சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீடு என்பது அவற்றில் ஒன்றல்ல.
 
என்னதான் பொதுமக்கள் இது பற்றி விவாதித்தாலும் மத்திய அரசின் முடிவு இறுதியானதாக இருப்பதால் பொதுமக்கள் குறைவான பாதிப்புடன் எப்படி தப்பிப்பது அல்லது அதிக பயனடைவது என்று விவாதிக்கவும் திட்டமிடலை தொடங்கவும் நேரம் வந்தாயிற்று