Monday, March 26, 2018

திருக்குறளும் பௌத்தமும்


சங்ககாலம், சங்கம் மருவிய காலங்களில்  தமிழர்கள்  உலகாயதம், ஆசீவகம், சார்வாகம், சமணம்,  பௌத்தம், யோகம், வேதம் எனப் பல்வேறு வகையான மத வழிபாட்டு முறைகளை பின்பற்றி வந்துள்ளனர். மாற்று கருத்துகளுக்கு இடம் கொடுத்து  சமத்துவத்துடனே தமிழர் வாழ்ந்து வந்தனர். அப்போது தோன்றிய மதம் சார்ந்த காப்பியங்களில் அனைத்து மதக்கருத்துகளும் வாதங்களாக இடம்பெற்றிருந்தன.  உலகப்பொதுமறையான திருக்குறளை இயற்றிய திருவள்ளுவரும் அனைத்து மதங்களில் உள்ள நல்ல கருத்துகளை எடுத்து மக்களின் நல்வாழ்விற்கு கொடையாக அளித்துள்ளார்.  பல்வேறு மதங்களின் கருத்துகளின் தாக்கம் திருக்குறளில் இருந்தாலும், அவற்றுள் பௌத்தமதக் கருத்துக்களை மட்டும் இங்கு காண்போம்.

மலர்மிசை ஏகினான்

வள்ளுவரின் காலத்தில் மகாயான பௌத்த மதத்தில் புத்தரின் திருவடித் தாமரைகளை வணங்கும் மரபு இருந்துள்ளது. அதை, “மலர்மிசை ஏகினான் மாணடிஎன்று இறைவனை குறிக்கும் குறியீடாக கடவுள் வாழ்த்தில் வருவதைச் சான்றாகக் கொள்ளலாம். மாணடி, அடி, தாள், நற்றாள் எனத் திருவடிகள் கடவுள்வாழ்த்தின் குறட்பாக்களில் வருவதும் இம்மரபை ஒட்டியதற்கான சான்றே!

அமராவதி சிற்பங்களிலும், மணிமேகலை காப்பியத்திலும் புத்தரின் திருவடி வழிபாடு காணப்படுகிறது. புத்தர் பிறந்து நடக்க ஆரம்பிக்கும்போது அவரது பாதம் மண்ணில் படாமல் ஏழு தாமரை மலர்கள் தாங்கின  என்பது பௌத்தமத நம்பிக்கை. எனவே, புத்த பகவானை மலர்மிசை நடந்தான் என்றும் கூறுவர். இதுவும், புத்தரின் திருவடி வழிபாட்டை குறள் சுட்டுவதற்கான சான்று.


அறவாழி அந்தணன்

கடவுள் வாழ்த்தின் எட்டாவது குறளில்அறவாழி அந்தணன் தாள்என்ற சொல் இறைவனின் திருவடியைக் குறிக்கிறது. ஆழி என்பது சக்கரம் என்றும் பொருள்படும். காலச்சுழற்சியை காலச்சக்கரம் என்று கூறுதல் முறை. அதுபோல், அறம் என்னும் ஆழியை (சக்கரம்)  புத்த பகவான் இயக்குபவர் என்பதால் ஆழி முதல்வன் என்பர். இதன்பொருட்டே,  பௌத்த மதத்தின் ஹீனயானப் பிரிவின்  குறியீடாக சக்கரம் இருந்துள்ளது. அசோகரின்  தருமச்சக்கரமும் பௌத்த மதக் குறியீடே!  

அந்தணர் என்னும் சொல்லுக்கு அம்+தணன் என்றும் அந்தன்+அர் என்றும் பதம்பிரித்து பொருள் கூறுவர். அம் (அழகிய) + தணன் (தண்மையன்) என்பது அழகிய குளிர்ச்சியான குணம் கொண்டவன் என்று பொருள்படும். அத்தன் (தந்தை, ஐயா) என்ற சொல் அந்தன் என்றும் வழங்கப்படும். எனவே, அந்தணர் என்னும் சொல் மதிப்பிற்குரிய உயர்ந்தநிலையில் இருப்போரைக் குறிக்கும் சொல். வள்ளுவரே நீத்தார் பெருமையில்அந்தணர் என்போர் அறவோர்என்கிறார். எனவே, அந்தணர் என்பதற்கு அறம் சார்ந்தொழுகும் அறவோர் என்பது பொருள். இதன்மூலம், அறவாழி அந்தணன் என்பது புத்தரைக் குறிக்கும் சொல் என்பது தெளிவு.

வாலறிவனும் மெய்யறிவும்

சாத்திரம் சொல்வதையே செய்யவேண்டும் என்பது வேதமத முறைமை. அதில், சாத்திரங்களைக் கேள்வி கேட்பதற்கு இடமில்லை. ஆனால், பேதமையினைக் களைந்து மெய்யறிவு காணுதல் புத்தர் காட்டிய வழி. வள்ளுவரும் அதையே அறிவுடைமையில் கூறுகிறார்:

எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு [குறள் 423]

பேதைமை உணர்வு சார்ந்தது; மெய்யறிவு சார்ந்தது. உணர்வை ஒடுக்குதலே மெய்யறிவை அடையும் வழி. இதையே அறன் வலியுறுத்தலில்மனத்துக்கண் மாசிலன் ஆதல்என்றும் குறிப்பிடுகிறார். மெய்யறிவு தூய அறிவு! மெய்யறிவு உடையோனே வாலறிவன்!

எண்குணத்தானும் மும்மலங்களும்

கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை [குறள் 9]

என்று கடவுள் வாழ்த்தில் வருகிறது. எண்குணத்தான் என்று குறிப்பிட்டு, சமண சமயக் கடவுளான அருகனைப் பற்றி குறிப்புகள் இருந்தாலும், புத்தர் ஞானமடையத் தேவையான எண்குணங்களை பற்றி தெளிவாக குறிப்பிடுவதும் கவனிக்கத்தக்கது. புத்தர் கூறும் எண்குணங்கள்  ‘நல்நம்பிக்கை, நல்லெண்ணம், நல்வாய்மை,  நற்செய்கை, நல்வாழ்க்கை, நன்முயற்சி, நற்சாட்சி, நல்ல தியானம் ஆகியவை. அசோகரது தரும சக்கரத்தில்  உள்ள எட்டு ஆரங்கள், இந்த எட்டு குணங்களையே குறிக்கிறது. எனவே, எண்குணத்தான் என்ற பதமும் புத்தரை குறிக்க வாய்ப்புள்ளது.

மேலும், புத்தர் மனிதனின் துன்பங்களுக்கு காரணமாக மும்மலங்களைக் குறிப்பிடுகிறார். அவை முறையே விருப்பு, வெறுப்பு, அறியாமை ஆகியவை. இதையே வள்ளுவரும் கீழ்க்காணும் குறளில் குறிப்பிடுகிறார்:

காமம் வெகுளி மயக்கம் இவைமூன்றன்
நாமங் கெடக்கெடு நோய் [குறள் 360]

மனித நேயம்

பௌத்தம், ஏற்றத்தாழ்வுகளை மறுத்து அன்புடைமையை வலியுறுத்தும் கோட்பாடு கொண்டது. இதுவே, வேதமதத்தின் நால்வர்ண முறைக்கு எதிராக சமத்துவத்தை வலியறுத்தும் சீர்திருத்த மதமாக அமையக்காரணமானது. வள்ளுவரும் புத்தரின் சீர்திருத்தக் கருத்தை நேரிடையாக கீழ்க்காணும் குறளில் பதிவுசெய்கிறார்:

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான் [குறள் 972]

மக்கள் அனைவரும் பிறப்பால் சமமே; அவரவர் செய்யும் செயல் வேறுபாடுகளால் மட்டுமே பெருமை வேறுபடும் என்பது இதன்பொருள்.

ஒழுக்கங்கள்

சங்ககாலத்தில் கள் உண்ணும் வழக்கம் தமிழரிடம் காணப்பட்டது. அதேபோல், வேதமதம் சார்ந்த சமுதாயத்திலும் சுரா பானம், சோம பானம் குடிப்பதும் வழக்கிலிருந்தது. மாறாக, பௌத்தமதம் கள்ளுண்ணாமையை மிக ஆழமாக போதிக்கிறது. பௌத்த வழியில், திருவள்ளுவரும் கள்ளுண்ணாமையை வலியுறுத்தி ஒரு தனி அதிகாரமே படைத்துள்ளார்.

இதேபோன்று, சங்ககாலத்தில் புலால் உண்ணும் வழக்கம் மக்களுக்கு இருந்தது. வேதமரபில் கூட வேள்விகளில் குதிரை, ஆடு, மாடு, மான் ஆகிய விலங்குகளை பலியிட்டு அவியாக தீயிலிட்டு புசிக்கும் வழக்கம் இருந்துள்ளது.  ஆனால், பௌத்த மதமோ புலால் உண்ணலை மறுக்கும் மதமாகும். திருவள்ளுவரும் புலால் உண்ணாமையை கடுமையாக வலியுறுத்துகிறார். அவற்றுள்,

அவிசொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன்
உயிர்செகுத்து உண்ணாமை நன்று [குறள் 259]

என்னும் குறள் குறிப்பிடத்தக்கது.

அதேபோல் பொய்யாமை, கள்ளாமை, இல்லறத்தார்க்கு பிறனில் விழையாமை, ஐம்பொறிகளை அடக்குதல் போன்ற பல்வேறு அறங்கள் பற்றி கூறும் பௌத்த மதக்கூறுகளைத் திருக்குறளில் காணலாம். மேற்கூறிய பல்வேறு ஒப்புமைகளைக் காணும் போது திருக்குறளில் மற்ற மதங்களின் தாக்கத்தை விட பௌத்த மதத்தின் தாக்கம் அதிகம் உள்ளது  என்று அறியலாம்.

 குறிப்பு -  விரிகுடாக் குறள் கூடத்தின் “திருக்குறள் விழா ௨018”  விழாமலரில் வந்த கட்டுரை