Saturday, July 10, 2010

கிழக்கிந்திய கம்பெனி 3 - தேயிலை அரசியல்



கிழக்கிந்திய கம்பெனி இந்தியாவை சுரண்டிய கதை 1


கிழக்கிந்திய கம்பெனி 2 - ஆரம்ப காலம்



உலகிலேயே தண்ணீருக்கு அடுத்த படியாக அதிகம் குடிக்கபடும் பாணம் தேயிலை. தேயிலை தோன்றியது வடகிழக்கு இந்தியா,பர்மா, சீனா போன்ற பகுதியாக இருக்கலாம் என்று கருதபடுகிறது.இந்தியாவில் பல நூற்றாண்டுக்கு முன்பே தேயிலையை உபயோகபடுத்திய சான்று இருந்தாலும் சீனாவில் தான் தேயிலை அதிக அளவில் உபயோகபடுத்த பட்டு, அதிக அளவில் பயிரிட பட்டும் வந்தது.இங்கிலாந்தில் தேயிலை 17ம் நூற்றாண்டின் ஆரம்பம் வரை அறிமுகம் இல்லாமல் தான் இருந்தது. சார்லஸ் 2ம் மன்னர் 1660ல் ஆட்சிக்கு வந்தார். அவருடைய போர்ச்சுகீசிய மனைவிக்கு டீ குடிக்கும் பழக்கம் இருந்தது.இதை தொடர்ந்து 1664 ம் ஆண்டு 100 பவுண்டு தேயிலையை கிழக்கிந்திய கம்பெனி முதன் முதலாக ஜாவாவிலிருந்து இறக்குமதி செய்தது. நாட்டின் ராணி டீ குடிப்பார் என்ற உண்மையை பயன் படுத்தி சிறிது சிறிதாக ராஜ குடும்பம் மற்றும் பணக்கார இங்கிலாந்து பிரபுக்களிடம் அதை விற்க தொடங்கியது. ( இன்றும் பன்னாட்டு கம்பெனிகள் தங்கள் உற்பத்தி செய்யும் புதிய பொருட்களுக்கு விளம்பரம் மற்றும் மற்ற வழிகளில் சந்தையை உருவாக்குவது போல்?).தேயிலையின் பயன்பாடும் இங்கிலாந்தில் சிறிது சிறிதாக அதிகரிக்க ஆரம்பித்தது.1813ம் ஆண்டு இறக்குமதி செய்ய பட்ட தேயிலையின் அளவு 1.45 கோடி கிலோவை தொட்டது.அந்த கால கட்டத்தில் கி.இ.கம்பெனியின் ஒட்டு மொத்த வர்த்தக மதிப்பில் 60% தொட்டது தேயிலை வர்த்தகம்.இங்கிலாந்து அரசின் வரி வருவாயில் 10% வருவாய் தேயிலையின் மீது விதிக்க பட்ட வரி மூலம் மட்டும் கிடைத்தது என்றால் தேயிலை இறக்குமதியின் அளவை புரிந்து கொள்ளுங்களேன்!.

இங்கிலாந்து வேலு நாயக்கர்கள்

சீனா மற்றும் இந்தியாவுடனான வர்த்தகத்துக்கு கி,இ.கம்பெனிக்கு ஏக போக உரிமையை அளித்திருந்தது ஆங்கில அரசு. அதன் விளைவாக தேயிலையின் விலையை மிக அதிக அளவிற்கு நிர்ணயித்து பெரும் லாபத்தை கண்டது கம்பெனி. அதே நேரத்தில் இங்கிலாந்து அரசு நடத்திய போர்களுக்கு செலவிழிக்க தேயிலைக்கு அதிக வரி விதித்தது. அதன் விளைவாக தேயிலையின் விலை அதிகமானது.சாதாரண மக்கள் தேயிலையை வாங்குவது கடினமானது. அதே நேரத்தில் மற்ற அய்ரோப்பிய நாடுகளில் தேயிலை மிக குறைந்த விலைக்கு கிடைக்க ஆரம்பித்தது. அதன் விளைவு இங்கிலாந்தில் பல "வேலு நாயக்கர்கள்" தோன்றினர். தேயிலை கடத்தல் மிக பெரிய தொழிலாக வளர்ந்தது. தேயிலை கடத்தல் மூலம் சாதாரண மக்களுக்கு குறைந்த விலையில் டீ கிடைத்ததால், தேயிலை கடத்தல் மன்னர்கள் சாதாரண மக்களிடையே ஹீரோவானார்கள். அது மட்டுமல்ல. கி.இ.கம்பெனி ஊழியர்கள் கப்பலில் திரும்பி வரும் போது தனிபட்ட முறையில் நிறைய தேயிலை கொண்டு வந்து நன்கு பணம் பார்த்தார்கள்.

சீனாவும் அபினி போரும்

தேயிலை இறக்குமதியின் அளவு அதிகம் ஆகி கொண்டே சென்`ற போது மற்றொரு விளைவும் ஏற்பட்டது. தேயிலையை எதாவது கொடுத்து தானே வாங்க வேண்டும். இங்கிலாந்து பொருட்களை சீனர்கள் விரும்பி வாங்குவது இல்லை. சீனர்கள் தேயிலைக்கு மாற்றாக கேட்டது வெள்ளி.17ம் நூற்றாண்டின் நடு பகுதி வரை அய்ரோப்பிய நாடுகள் சுமார் 28 மில்லியன் கிலோகிராம் வெள்ளியை சீனாவிடம் கொடுத்து தேயிலையை வாங்கின. இதன் விளைவு பெருமளவு செல்வம் சீனா நோக்கி செல்ல ஆரம்பித்தது. வெள்ளிக்கு மாற்று எது என்று அய்ரோப்பியர்கள் யோசித்து கொண்டிருக்கையில் அவர்களுக்கு ஒரு அதிசய பொருள் கிடைத்தது. அது தான் ஓப்பியம். அதாவது நம்ம ஊர் அபின் தான் அது.சீனர்களுக்கு ஒப்பியத்தை விற்று அதற்கு மாற்றாக தேயிலையை வாங்க ஆரம்பித்தார்கள்.அதனால் ஓப்பியத்தின் தேவை அதிகமானது. இந்திய வங்க மாநிலத்தில் பெருமளவு ஓப்பியத்தை பயிரிட தொடங்கியது. ஒப்பியம் என்பது போதை பொருள் ஆனாலும் லாபம் ஒன்றே குறிக்கோளான கி.இ.கம்பெனிக்கு நியாய தர்மம் பற்றி யோசிக்க அவசியமில்லை.சீன மக்கள் போதைக்கு அடிமை ஆவதை தடுக்க சீன அரசு ஒப்பியம் விற்பனையை தடை செய்தது. ஆனால் கி.இ.கம்பெனி சீன வியாபாரிகளிடம் சீனாவில் கடனுக்கு தேயிலை வாங்கி, வங்காலத்தில் அதற்கு ஈடான ஓப்பியத்தை சீனா வியாபரிகளுக்கு விற்பனை செய்தது. அது கி.இ.கம்பெனியின் கப்பலில் சீனாவின் கடல் ஓரத்தில் இறக்க பட்டு அதை சினாவிற்குள் சீன வியாபரிகளால் கடத்த பட்டு கொண்டு செல்ல பட்டது.இந்த போதை பொருள் வியாபாரத்தை சீனா முழுமையாக தடை செய்ய முயன்ற போது கி.இ.கம்பெனி மற்றும் சீனாவிடையே இரு ஓப்பியம் போர்கள்(அபினி போர்கள்) நடந்தது. இதன் மூலம் கி.இ.கம்பெனிக்கு சீனாவில் நிறைய இடங்களில் வியாபாரம் செய்யும் உரிமையும் ஹாங்காங் நகரின் மீது முழு கட்டுபாடும் கிடைத்தது.

போஸ்டன் தேனீர் விருந்து

கி.இ.கம்பெனிக்கும் இந்திய அரசியலுக்கும் இடைபட்ட தொடர்பை தான் நம்மில் பெரும்பாலோர் அறிந்திருப்பர். கி.இ.கம்பனிக்கும் அமெரிக்க விடுதலை போருக்கும் மிக பெரிய நெருக்கம் உள்ளது.கி.இ.கம்பெனியின் நிதி நிலை மோசமாக இருந்ததாலும் இங்கிலாந்து அரசு போர்களை புரிய அதிக அளவு செலவிட வேண்டியதாலும் அரசு மற்றும் கி.இ.கம்பெனியின் வருமானத்தை பெருக்க புதிய யுத்தியை கையாண்டது. அதன் படி அமெரிக்கா உட்பட்ட இங்கிலாந்து காலனி நாடுகளில் தேயிலையை இங்கிலாந்தில் இருந்து மட்டும் வாங்க வேண்டும் என்று சட்டமியற்றியது. அதாவது சீனாவிலிருந்து இங்கிலாந்திற்கு தேயிலையை க்.இ.கம்பெனி மட்டும் வாங்கி விற்க முடியும். அந்த தேயிலை இங்கிலாந்தில் விற்பனை செய்ய பட்ட பின் , அதை வர்த்தகர்கள் இங்கிலாந்திலிருந்து வாங்கி அமெரிக்காவில் விற்பனை செய்வார்கள்.இங்கிலாந்தில் தேயிலைக்கு விதிக்க பட்ட வரி அதிகமாக இருந்ததாலும் டச்சு காரர்கள் அய்ரோப்பாவில் வரியின்றி தேயிலை விற்றதாலும் டச்சு காரர்கள் மற்றும் பிற அய்ரோப்பியர்களின் தேயிலை மிக மலிவாக கிடைத்தது. இதனால் அமெரிக்காவில் பெருமளவு கடத்தல் தேயிலை விற்பனை ஆனது..இங்கிலாந்திலிருந்து பல இடை தரகர்களை கடந்து அமெரிக்காவிற்கு தேயிலை செல்ல வேண்டியிருந்ததால், கடத்தல் தேயிலையை விட இந்த தேயிலையின் விலை மிக அதிகமாக இருந்தது. எனவே அங்கீகரிக்க பட்ட தேயிலை வியாபாராம் மிகவும் குறைந்தது. இதனால் கி.இ.கம்பெனியின் வருமானமும், அரசுக்கு தேயிலை வரி மூலம் வரும் வருமானமும் குறைந்தது.


இதை சரிகட்ட 1773ம் ஆண்டு கி.இ.கம்பெனிக்கு தேயிலையை அமெரிக்காவில் நேரடியாக விற்பனை செய்ய இங்கிலாந்து அரசு அனுமதி அளித்தது. மேலும் காலனி நாடுகளில்(அமெரிக்காவில்) விற்பனை செய்யும் தேயிலைக்கென்று தனி வரி விதித்தது..இதன் விளைவாக கி.இ.கம்பெனி இடை தரகர்களை நீக்கி குறைந்த விளைக்கு தேயிலையை அமெரிக்காவில் விற்க தொடங்கினர். இது அமெரிக்காவில் தேயிலையை கடத்தல் தொழிலில் ஈடுபட்டவர்களுக்கு பேரிடியாக இருந்து. அமெரிக்கர்களுக்கோ காலனி நாட்டின் மீது இங்கிலாந்து தனி வரியை விதித்ததை ஏற்று கொள்ள முடியவில்லை. மேலும் கி.இ.கம்பெனி பிற பொருட்களின் விற்பனைக்கும் பிற்காலத்தில் தனியுரிமை பெற்றுவிடுமோ என்ற அச்சமும் இருந்தது. அந்த நேரத்தில் இங்கிலாந்திலிருந்து அமெரிக்காவிற்கு தேயிலை ஏற்றி வந்த கப்பல் போஸ்டன் துறைமுகத்தில் நின்றது..கி.இ.கம்பெனியின் தேயிலையை எதிர்த்த அமெரிக்கர்கள் போஸ்டன் துறைமுகத்தில் நின்ற கப்பலில் இருந்த தேயிலையை தூக்கி வீசி கடலில் எரிந்தார்கள். இது அமெரிக்க சுதந்திர போருக்கு முன்னோடியாக இருந்தது எனலாம்.இதன் மூலம் கி.இ.கம்பெனி அமெரிக்கா சுதந்திர போருக்கு காரணியாகவும் இருந்தது.

போஸ்டன் தேனீர் விருந்து காந்தி அடிகள் இந்தியாவில் உப்பு சத்தியாகிரகத்தை தொடங்க முன்னோடியாக இருந்தது.அன்று அமெரிக்கர்கள் தேயிலை மூலம் சுதந்திர போராட்டத்தை நடத்தினார்கள். காந்தி அதையே உப்பு மூலம் இந்தியாவில் தொடர்ந்தார். இன்று அதே பாஸ்டன் தேனீர் விருந்து ஒபாமாவின் அரசாங்க செலவு மற்றும் அரசாங்க அதிகார விரிவு படுத்தலை எதிர்த்து திரும்ப ஆரம்பிக்க பட்டுள்ளது


இந்தியாவில் தேயிலை




சீன தேயிலையை இங்கிலாந்தில் விற்க ஏக போக உரிமை இருந்த வரை கி.இ.கம்பனி தேயிலை வர்த்தகத்தில் மட்டும் ஈடுபட்டு வந்தது. அதாவது சீனாவிலிருந்து வாங்கி இங்கிலாந்தில் விற்றது. தன் ஆதிக்கத்தில் இருக்கும் இந்தியாவில் தேயிலையை பயிரிட்டு அதிக உற்பத்தி செய்ய வேண்டும் என்று தோன்றவில்லை. கி.இ.கம்பெனியின் ஊழியரான புரூஸ் முதன் முதலில் 1831ம் ஆண்டு அசாமில் தேயிலை உற்பத்தி செய்யலாம் என்றும் அசாம் தேயிலை சுவையும் நன்றாக இருக்கும் என்று கண்டறிந்தார்.அதன் பிறகு சிறிது சிறிதாக இந்தியாவில் தேயிலை பயிரிடும் பகுதி அதிகமானது.1888ம் ஆண்டு இந்திய தேயிலை இறக்குமதியின் மதிப்பு சீனாவிலிருந்து இறக்குமதியாகும் தேயிலையின் மதிப்பை விட அதிகமானது

கி.இ.கம்பெனியின் தேயிலை அரசியலும் இன்றைய பன்னாட்டு கம்பெனிகளும்

கி.இ.கம்பெனியின் மேற் கூறிய செயல்பாட்டுக்கும் தற்போதைய பன்னாட்டு கம்பெனிகளின் செயல்பாட்டிற்கும் பல ஒற்றுமைகள் உள்ளன. அவற்றில் சிலவற்றை பற்றி பார்ப்போம்

1.எந்த ஒரு தொழிலிலும் ஒரு சில கம்பெனியின் கைக்கு மட்டும் முழு உரிமை வந்துவிட்டால் அது நுகர்வோர்களை பெருமளவில் பாதிக்க படுவதை பார்த்தோம். முன்பு கி.இ.கம்பெனி அரசின் கட்டுபாட்டின் மூலம் தனியுரிமை பெற்றது. தற்போது ஒவ்வொரு துறையிலும் ஒரு சில கம்பெனிகள் நிதி நிறுவனக்கள் மற்றும் தனியார் முதலீட்டாளர்கள் மூலம் தனது துறையில் உள்ள சிறு கம்பெனிகளை வாங்கியும், பெரிய கம்பெனிகளுடன் Merger and Acqusition மூலம் ஒன்றினைந்தும் oligopoly ஆக மாறுவதை காண்கிறோம். இதன் விளைவு முக்கியமாக மருந்து மற்றும் வேதியல் பொருட்கள் துறையில் தற்போது காண ஆரம்பிக் கிறோம்

2.கி.இ.கம்பெனி தேயிலை இறக்குமதியில் ஏகபோக உரிமை பெற்றவுடன் அதற்கு போட்டி இல்லாததால் இந்தியா போன்ற தன் ஆதிக்கத்தில் இருந்த பகுதிகளில் தேயிலை உற்பத்தியை பெருக்கி , அதிக தேயிலையை உற்பத்தி செய்து தேயிலை குறைந்த விலையில் அனைவருக்கும் கிடைத்து தன்னுடைய லாபத்தையும் அதிகரிக்க முயலாமை பற்றி பார்த்தோம்.

தற்போது பன்னாட்டு கம்பெனிகள் காப்புரிமை என்ற பெயரில் ஒரு சில கண்டுபிடிப்புகளுக்கு தனியுரிமை பெற்று அதன் மூலம் பெரிய அளவில் லாபம் அடைகின்றனர். உதாரணமாக பன்னாட்டு மருந்து கம்பெனிகள் (கண்டு பிடிப்பின் பெரும்பான்மையான பகுதி மேல் நாட்டு அரசு பணத்தில் பல்கலை கழகத்தில் நடைபற்றதாக இருந்தாலும்) ஒரு சில மருந்துகளுக்கு காப்புரிமை பெற்று அதை கொள்ளை லாபத்திற்கு விற்று பணம் சம்பாதிக்கின்றனர். அதில் வரும் லாபத்தை கூட புதிய கண்டுபிடிப்புகளுக்கு செலவிடுவதில்லை. பழைய மருந்துகளிளேயே சிறிய மாறுதல் செய்து விளம்பரம் செய்து வருவாயை பெருக்குகின்றனர்.

3.கி.இ.கம்பெனி சீனாவில் போதை மருந்தை விற்று லாபம் அடைந்ததை பார்த்தோம்.

இன்றைய பன்னாட்டு கம்பெனிகளும் பங்கு சந்தையில் தன் மதிப்பை நிலை நிறுத்த எது வேண்டுமானாலும் செய்ய தயாராக உள்ளனர். உணவு பொருட்கள் மற்றும் மருந்து பொருட்களில் கலப்படம், பழுதுள்ள கார்களை தெரிந்தே விற்பனை செய்வது என பல அடுக்கி கொண்டே செல்லலாம்.

வரலாற்றில் காலமும், கம்பெனிகளின் பெயர்களும் தான் மாறி வருகிறது. நிகழ்வுகள் என்னவோ மீண்டும் மீண்டும் அதே தான் நடக்கிறது!

இந்தியாவிலிருந்து எவ்வாறு செல்வங்கள் சூறையாட பட்டது என்பது பற்றியும், இந்திய தொழில் துறையை எவ்வாறு கி.இ.கம்பெனி நசித்தது என்பது பற்றியும் அடுத்த பதிவில் காண்போம்

--

Sunday, July 04, 2010

கிழக்கிந்திய கம்பெனி 2 - ஆரம்ப காலம்



கிழக்கிந்திய கம்பெனி இந்தியாவை சுரண்டிய கதை 1





முதல் பகுதியில் ஆசியாவுக்கான வர்த்தக வழிகளை பற்றியும் கிழக்கிந்திய கம்பெனி(கி.இ.க) ஆரம்பிக்க பட்ட வரலாறு பற்றியும் பார்த்தோம். கி.இ.க இந்தியாவில் இருந்த கால கட்டத்தை இரு பிரிவாக பிரிக்கலாம்.முதல் கால கட்டம் அது இந்தியாவிடம் வர்த்தகம் மட்டும் செய்த காலம். இரண்டாம் கால கட்டம் அது இந்தியாவை சிறிது சிறிதாக அரசியல் ரீதியாக தன் கட்டுபாட்டில் எடுத்து வைத்து கொண்ட காலம்.

இவற்றில் முதல் கால கட்டத்தில் இந்தியாவிற்கு நிறைய நன்மை கிடைத்தது எனலாம்.கி.இ.க ஆரம்பிக்க பட்ட போது அது 30,000 ஸ்டெர்லிங் பவுண்டு மதிப்புள்ள தங்கம் மற்றும் வெள்ளியை இங்கிலாந்தில் இருந்து ஏற்றுமதி செய்து அதற்கு ஈடான வாசனை பொருட்கள், துணி மற்றும் பிற பொருட்களை இறக்குமதி செய்ய அனுமதி அளிக்கபட்டது.அனுமதிக்க பட்ட தங்கம் மற்றும் வெள்ளியின் ஏற்றுமதி மதிப்பு சிறிது சிறிதாக வருடந்தோரும் அதிகரிக்கபட்டது. உதாரணமாக 1629ம் ஆண்டு அது 160,000 பவுண்டாக(125,000 -வெள்ளி, 40,000 - தங்கம்) அதிகரிக்க பட்டு இருந்தது.அதாவது செல்வமாக கருதபடும் தங்கம், வெள்ளி இந்தியாவிற்கு இறக்குமதி செய்ய பட்டு இந்தியாவிலிருந்து வாசனை பொருட்கள் மற்றும் உற்பத்தி பொருட்கள் இங்கிலாந்திற்கும் அதன் பிறகு அங்கிருந்து பிற மேலை நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டது. அதனால் தொழில் வளர்ச்சி மற்றும் செல்வ வளம் இந்தியாவில் பெருகியது. ஆனால் அப்போது இருந்த முகலாய அரசாங்கமோ அந்த செல்வங்களை மாட மாளிகைகள் கட்டவும் பிற ஆடம்பர செலவுகளுக்கும் செலவிட்டது. பிற்காலத்தில் கிழக்கிந்திய கம்பெனியால் கிடைத்த செல்வ பெருக்கை முதலாளித்துவ இங்கிலாந்தோ தொழிற்புரட்சி ஏற்படுத்த முதலீடாக மாற்றியது.

கி.இ.க ஆசியாவிலிருந்து பொருட்களை வாங்க பெருமளவு தங்கம் வெள்ளி செலவிட்டதால் இங்கிலாந்தின் செல்வம் வெளியேற தொடங்கியது.இதை தவிர்க்க இங்கிலாந்தில் உற்பத்தி ஆன துணிவகைகளையும் இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்து அதன் மூலம் வருமானம் ஈட்ட பணிக்க பட்டது. இங்கிலாந்து துணிவகைகள் கடுங்குளிரில் அணிபவையாக இருப்பதால் ஆசியாவில் உள்ள வெப்ப பிரதேசங்களில் உடுத்தி கொள்ள உகந்ததாக இல்லை. எனவே இங்கிலாந்து துணிகள் ஆசிய மக்களுக்கு மிதியடிகளாகவும் ஜன்னல் விரிப்புகளாக மட்டும் பயன் பட்டன. அது மட்டுமின்றி இந்திய மற்றும் சீன துணிகளின் தரத்திற்கும் அது இல்லை.நம்மில் பெரும்பாலானோர் வாசனை பொருட்கள் உற்பத்தியில் இந்தியா தான் எப்போதும் முதலிடம் பெற்றிருந்தது என்று நினைத்து கொண்டு இருப்போம். ஆனால் அது உண்மையில்லை. கிழக்கு இந்திய தீவுகள் என்று அழைக்கபடும் ஜாவா, சுமத்திரா, இந்தோனேசியா போன்ற நாடுகள் வாசனை பொருட்கள் உற்பத்தியிலும், வாணிபத்திலும் முதலிடத்தில் இருந்தது(அதனால் தான் என்னவோ ராஜேந்திர சோழன் இந்நாடுகள் மீது போர் தொடுத்து தன் ஆதிக்கத்தில் வைத்திருந்தான் போலும்!). எனவே கி.இ.க- பொதுவாக வாசனை பொருட்களை ஜாவா சுமத்திரா போன்ற நாடுகளில் பெருமளவு கொள்முதல் செய்தது. அந்நாட்டினர் இங்கிலாந்து துணிகளை வாங்க விரும்பவில்லை. எனவே வெள்ளியை கொடுத்தே வணிபம் செய்ய வேண்டி இருந்தது. அப்போது இந்திய துணிகளுக்கு அந்நாட்டு மக்களிடம் வரவேற்பு இருப்பதை கண்ட கி.இ.க, உடனே இந்தியாவில் துணி தொழிற்சாலை நிறுவி, அந்த துணிகளை கீழை நாடுகளில் வாசனை பொருட்களுக்கு மாற்றாக விற்க தொடங்கியது. இதன் மூலம் கி.இ.க கம்பெனிக்கும் வருமானம் கிடைத்தது. இங்கிலாந்தின் வெள்ளியும் சேமிக்க பட்டது, இந்திய துணிகளுக்கு பெருமளவில் புதிய சந்தை கிடைத்ததால் இந்திய தொழில் துறையும் வளர்ந்தது.

இந்திய துணிகளை கிழக்காசிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதோடு இருந்து விடாமல், அதை இங்கிலாந்திலும் விற்க ஆரம்பிக்க பட்டது. இங்கிலாந்தில் இந்திய துணிகளுக்கு பெருமளவு கிராக்கி ஏற்பட்டது.இந்திய துணிகளின் இறக்குமதியும் கிழக்கிந்திய கம்பெனியின் செல்வ செழிப்பும் பல மடங்கு பெருகியது. அது இங்கிலாந்து துணி தொழில் துறையையே அழித்து விடும் அளவு வளர்ந்ததால் ஒரு கட்டத்தில் இந்திய துணிகளை அணிவதையே இங்கிலாந்து அரசு தடை செய்யும் அளவிற்கு சென்றது.1770 ஆண்டு கம்பெனியின் வணிப மதிப்பில் 60% இடத்தை துணி வர்த்தகமே பிடித்து கொண்டது. இந்திய துணி தொழிற்துறை பெருமளவு வளர இது உதவியது.

அந்த காலத்தில் வாசனை பொருட்களை அதிக அளவு உற்பத்தி செய்த ஜாவா,சுமத்திரா போன்ற கிழை நாடுகள் பிற ஐரோப்பியர்களின் ஆதிக்கத்தில் இருந்ததால், தமிழ் நாடு மற்றும் கேரளா பகுதியில் வாசனை பொருட்கள் உற்பத்தியை பெருமளவு பெருக்க அதிக முயற்சி எடுத்து வாசனை பொருட்கள் வாணிபத்தையும் இந்தியாவில் பெருக்கியது.

1664ம் ஆண்டு முதன் முதாலாக கி.இ.க சீன டீயை இங்கிலாந்தில் அறிமுக படுத்தியது. அதன் பிறகு இங்கிலாந்தில் டீயின் தேவை அதிகமாக இருந்ததால் , டீயை சீனாவிலிருந்து பெருமளவு இறக்குமதி செய்தது. பிறகு சீனாவை மட்டும் நம்பி இருக்காமல் இந்தியாவிலும் பெருமளவு டீயை பயிரிட தொடங்கி தோட்டக்கலை வளர்ச்சிக்கும் உதவியது.

மேற்கூறிய வியாபார பொருட்களை இங்கிலாந்துக்கு மட்டும் ஏற்றுமதி செய்யவில்லை. இங்கிலாந்துக்கு ஏற்றுமதி செய்ய பட்ட பொருட்கள் அங்கிருந்து பிற அய்ரோப்பிய நாடுகள் மற்றும் அய்ரோப்பிய நாடுகளின் காலனி நாடுகளாக இருந்த அமெரிக்க,ஆப்ரிக்க நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யபட்டது. இந்திய பொருட்களின் சந்தை உலகலவில் பெரிதாக விஸ்தரிக்கபட்டது.

கிழக்கிந்திய கம்பெனியின் வரவால் இந்திய வியாபாரிகள் முக்கியமாக குஜராத்திய வியாபாரிகள் மற்றும் பிற ஆசிய நாடுகளின் வியாபாரிகள் மற்றும் துருக்கி போன்ற நாடுகளின் வியாரிகளின் வியாபாரம் பெருமளவு பாதிக்க பட்டது எனலாம்.

கிழக்கிந்திய கம்பெனி என்றவுடன் அது இந்தியாவை அடிமை படுத்தி, வர்த்தக ரீதியாக சுரண்டியது பற்றி தான் அனைவரின் நினைவிற்கும் வரும். ஆனால் கிழக்கிந்திய கம்பெனியால் வர்த்தக ரீதியாக மேற் கூறிய நன்மைகளும் இந்தியாவிற்கு கிடைத்தது.

அடுத்த பதிவில் கிழக்கிந்திய கம்பெனியின் தேயிலை தொடர்பையும் அது உலக அரசியலில் ஏற்படுத்திய மாற்றத்தையும் பார்ப்போம்


--