Sunday, August 24, 2014

தமிழ் Unicode எழுத்துரு அரசியல் - இந்தி வெறியர்களால் தமிழுக்கு கணிணி பயன்பாட்டில் ஏற்பட்ட பின்னடைவு

இந்திய அரசின் சர்வாதிகார போக்கினால் கணிணிக்கு ஏற்ற மொழியான தமிழை தேவையில்லாமல் தேவநாகரி மொழியுடன் இணைத்து Unicode எழுத்துறுவில் தமிழை பயன்படுத்த complex rendering engine உதவியின் தேவையை திணித்துள்ளனர். இதனால் இணையத்தில் தமிழை பயன்படுத்துவது மற்றும் தமிழ் மொழி சார்ந்த தேடல் பெரிய பின்னடைவை சந்தித்துள்ளது. நம் முன்னோர்கள் செம்மையாக தமிழ் மொழியின் எழுத்துக்களை சில ஆயிரம் ஆண்டு முன்பே தரபடுத்தி இருக்கிறார்கள். அதன் படி கணிணிக்கு ஏற்ற மொழியாக தமிழ் மொழி உள்ளது. ஆனால் இந்தி வெறியர்களின் முயற்சியால் தமிழின் இந்த பயனை கணிணியுகத்தில் அனுபவிக்க முடியாது இருக்கிறோம்.

திரு மணி மணிவண்ணன் மற்றும் பேரா. செல்வகுமார் ஆகியோரின் தமிழ் கணிணி பற்றிய நேர்கோணல் சிறகு இதழில் வெளி வந்துள்ளது. இது.Unicode எழுத்துறு பற்றிய வரலாறை அறிந்து கொள்ள அனைவரும் படிக்க வேண்டிய நேர்கோணல்

http://siragu.com/?p=14890

நேர்கோணலிலிருந்து ஒரு பகுதி

கேள்வி: கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் Unicode, பல சிக்கல்கள், பிரச்சனைகள் நடந்துகொண்டிருந்தது. அதில் தமிழுக்கான இடம் வேண்டும், இத்தனை இடம் வேண்டும், இந்த மாதிரியான பல பிரச்சனைகள் வந்தது. அதற்குப் பிறகு ஒரு முடிவுக்கு வந்து இன்று நாம் அனைவரும் பயன்படுத்தக்கூடிய Unicode, அனைவரும் பயன்படுத்துகிறோம். ஆனால் அதிலும் சிலர் குறைகள் இருப்பதாக உணர்கிறார்கள். Unicode, ல் அடைந்த வெற்றி, நிறை மற்றும் குறை, அந்தக்குறைகளுக்கு என்ன தீர்வு?

பதில்(மணிவண்ணன்): தமிழ் யூனிகோடு, என்பது என்னைப்பொறுத்தவரையில் போற்றத்தக்க ஒரு குறியீடு. ஏனென்றால் பல்வேறு தனித்தனி குறியீடுகள் தமிழில் இருந்தபொழுது ஒருவர் எழுதியதை இன்னொருவர் படிக்கமுடியாத சிக்கல்கள் எல்லாம் இருந்தன. தமிழக அரசு TAM/TAB தரத்தை உருவாக்கியபொழுதும் அதையும் பலர் ஏற்றுக்கொள்ளாத நிலை இருந்தது. இப்படிச் சிதறுண்டு கிடந்த தமிழ்ப்புலத்தை ஒரு குடையின் கீழ் கொண்டுவந்தது யூனிகோடு. அது அதனுடைய மாபெரும் நிறை என்று சொல்லவேண்டும். யூனிகோடு ஒரு பன்னாட்டுத் தரம் என்பதால் பன்னாட்டு அமைப்புகள் எல்லாமே இதை ஆதரிக்கின்றன. ஆதலால் முகநூல் என்று நாம் அன்போடு அழைக்கும் facebook இருக்கிறதே அதில் தமிழ் இயல்பாகவே வருகிறது. இதற்காகவென்று தனியாக facebook செய்யவேண்டிய தேவையில்லை. கூகுள் (google) வழியாகத் தமிழில் மின்னஞ்சல் அனுப்பமுடிகிறது. அதைப் பார்க்கவோ, தட்டச்சு செய்யவோ இயல்பாக முடிகிறது. இதுபோன்ற பன்னாட்டு அமைப்புகள் எல்லாமே ஒரே தரத்தை பின்பற்றுவதால் இது, என்ன கணினியாக இருந்தாலும் சரி மேசைக்கணினியாக இருந்தாலும் சரி, பலகைக் கணினியாக இருந்தாலும் சரி அல்லது smartphone என்னும் திறன்பேசிகளாக இருந்தாலும் சரி எல்லாவற்றிலும் தமிழ் இருக்கிறது. இதற்கென்று தனியாக யாரும் எதுவும் செய்யவேண்டியத் தேவையில்லை. இதுதான் உலகத்தரம் என்ற ஒரு ஆணிவேர் தரும் மிகப்பெரிய நிறைவு. ஆனால் இந்த மிகப்பெரிய நிறை ஒரு வலுவான தளத்தில் அமைக்கப்பட்டிருந்தால் மிக நன்றாக இருந்திருக்கும். யூனிகோடு ஒரு நல்ல நோக்குடன் அமைக்கப்பட்டது. உலகத்திலிருக்கும் எல்லா மொழிகளுக்கும் உள்ள குறியீடுகள் அதில் இருக்கவேண்டும் என்ற அடிப்படை நோக்கோடு கொண்டுவரப்பட்டது. அவர்கள் இந்திய மொழிகளுக்கு என்று குறியீடுகள் அமைக்க வந்தபொழுது அவர்கள் இந்திய அரசை வந்து கேட்டார்கள். அப்பொழுது இந்திய அரசு தமிழுக்கு என்று ஒரு தரத்தைக் கொண்டுவரும்பொழுது தமிழ்நாட்டைக் கலந்து ஆலோசித்திருந்தால் அப்போது தமிழக அரசு கணினித்தமிழர்களை, வல்லுனர்களைக் கேட்டு பேசியிருந்தால் ஒரு நல்ல தீர்வைக் கொடுத்திருக்க முடியும். ஆனால் என்ன காரணத்தாலோ யூனிகோடு க்கும் இந்தியாவிற்கும் நடந்த அந்த உரையாடலில் தமிழகத்தின் கணினி வல்லுநர்கள் யாருமே பங்கேற்கவில்லை. அதனால் யூனிகோடு இந்தியமொழி அனைத்தையும் ஒரே கட்டமைப்பில் பார்த்தது.
இந்திய மொழிகள் அனைத்தையும் தேவநாகரி என்ற ஒரு கட்டமைப்பு. அந்தச்சட்டத்திற்குள்ளேயே கட்டுப்பட்டவை. இது பல இந்திய மொழிகளுக்கு பெரிய குறைபாடாக இல்லை. ஏனென்றால் இந்தியமொழிகளில் கூட்டெழுத்துக்கள் என்று ஒரு அமைப்பு இருக்கின்றது. கூட்டெழுத்துக்கள் இருக்கும் ஒரே காரணத்தால் ஒரு எழுத்துக்கு ஒரு குறியீடு (one to one mapping) என்றவாறு பல இந்திய மொழிகளை அமைக்க முடியாது. இந்தி, சமஸ்கிருதம் இதற்கு ஒன்றுக்கு ஒன்று அமைக்க வேண்டும் என்றால் கோடிக்கான குறியீடுகள் தேவை என்று சொல்கிறார்கள். ஆனால் தமிழ் அப்படியல்ல. தமிழில் இரண்டே இரண்டு கூட்டெழுத்துக்கள்தான் இருக்கின்றன. அந்த இரண்டும் தமிழுக்குரிய இயல்பான எழுத்துக்கள் கிடையாது. ஸ்ரீ என்பது ஒரு கூட்டெழுத்து என்பது பல தமிழர்களுக்குத் தெரியாது. ஸ்ரீ என்பதில் இருக்கும் இரண்டு எழுத்துகள்:- ரீ அது தமிழ் எழுத்து, அந்த ஷ், வ வைத்திருப்பிப் போட்டால் வரும் கிரந்த எழுத்து. அது நிறையபேருக்கு அப்படி ஒரு எழுத்து இருக்கிறது என்பதே தெரியாது. இன்னொன்று க்ஷ; இது லக்ஷ்மி என்பதில் வரும். தமிழில் பெரும்பாலும் அவ்வாறு எழுதுவதில்லை. ரிக்.ஷா என்று உடைத்துத்தான் எழுதுவோம். சென்னையெங்கும் சுற்றிப் பார்த்தால் ரிக்.ஷா என்று எழுத்து வரக்கூடிய இடங்களிலெல்லாம் தமிழர்கள் உடைத்துத்தான் எழுதுகிறோம் இது தமிழின் இயல்பு. 

இந்த கூட்டெழுத்து வடமொழிக்கு தேவைப்பட்டது. வடமொழிக்கு மெய்யெழுத்து கிடையாது. புள்ளி கிடையாது. அதனால் ஒரு மெய்யெழுத்து இன்னொரு உயிர்மெய் எழுத்தோடு இணையும் பொழுது அதை எப்படிக் காட்டுவது என்பது அவர்களுக்கு ஒரு சிக்கலாக இருந்தது. அதனால்தான் அவர்கள் கூட்டெழுத்தை பயன்படுத்தினார்கள். தமிழுக்கு அது தேவையில்லை.


உங்களுக்கு ஒரு மெய்யெழுத்து வேண்டுமென்றால் அதற்கு மேலே ஒரு புள்ளி வைத்தால் போதும். ரிக்.ஷா என்பதை எப்படி உடைக்க முடிகிறது. க மேல் புள்ளி வைத்தால் க் ஆக மாறிவிடுகிறது. இடது பாகம் க் வலது பாகம் ஷா என்று சொல்லவேண்டிய தேவையேஇல்லை. அதேபோல் ஸ்ரீ என்பதில் உள்ள சிக்கல் என்னவென்றால், அது தமிழ் மொழியே கிடையாது. இந்த இரண்டுமே வடமொழியிலிருந்து இரவலாக வாங்கியது. தமிழுக்கென்று உள்ள எழுத்துக்கள் இயல்பான தனி எழுத்துக்கள். கூட்டெழுத்துக்கள் தேவையே இல்லை. இந்த கூட்டெழுத்துக்கள் தேவையே இல்லை எனும்பொழுது தமிழின் மொத்த எழுத்துக்களே மொத்தம் 247 தான். இவையில்லாமல் நாம் இரவலாக வாங்கியிருக்கும் ஸ், ஷ், ஜ், ஹ் என்ற கிரந்த எழுத்துக்களும் அவற்றின் உயிர்மெய் வடிவங்களும், ஸ்ரீயும் வழக்கில் இருப்பதால் இந்த 247 எழுத்துக்களைத் தாண்டி மேலும் 53 எழுத்துகளைக் கூட்டி 300 எழுத்துகளோடு முற்றுப்புள்ளி வைத்திருக்கலாம். இவைதான் தமிழுக்கு இருக்க வேண்டிய மொத்தக் குறியீடுகள். 


இப்படி தமிழுக்கு ஒரு எழுத்துக்கு ஒரு குறியீடு என்று இருந்தால் ஆங்கிலத்தில் என்னென்ன செய்கிறோமோ அனைத்தையும் தமிழில் செய்ய முடியும். அப்படி இல்லாததால் என்னாகிறது என்றால், யூனிகோடில் அகரமேறிய மெய்யெழுத்துக்களைத் தனியாக எழுதுகிறார்கள் (க,ங,ச,..). பிறகு துணைக்குறியீடுகளைத் (கால், கொம்பு, புள்ளி,..) தனியாக எழுதுகிறார்கள். இப்போது மெய்யெழுத்துகளையும், ஏனைய உயிர்மெய்யெழுத்துகளையும் காட்டவேண்டும் என்றால் இவ்விரண்டு குறியீடுகளையும் திரையில் நமக்குத் தெரியாமல் ஒட்டவைக்கிறார்கள். இவற்றை ஒட்டவேண்டி இருப்பதால் இதற்கு என்று தனியாக செயலிகள் தேவைப்படுகிறது. எளிமையான தமிழ் எழுத்துகளைத் தேவநாகரி எழுத்துகளைப் போலச் சிக்கலான எழுத்துகளாகப் பார்க்கிறார்கள். திரையில் காட்டுவதற்கு இடியாப்பச் சிக்கலான வடிவமைப்புச் செயலி (complex rendering engine) தேவைப்படுகிறது. இந்தச் செயலி இருக்கும் இடங்களிலெல்லாம் தமிழைத் திரையில நன்றாக காட்டமுடியும். இந்தச் செயலிகள் சரியாக இல்லாத இடங்களில் தமிழ் எழுத்துகள் சரியாக வராது. மேலும் தேடுவது கடினமாகிறது. அதனால்தான் அடோபியில் (Adobe) பல நேரங்களில் தமிழ்ச் சொற்களைத் தேடுவது வேலை செய்வதில்லை. பல திறன்பேசிகளில் தமிழ் உடைந்து உடைந்து தெரியும். பிடிஎப் (PDF) கோப்பில் தமிழை சேமித்து வைக்கிறீர்கள் என்றால் தேடமுடியாமல் போவதற்கும் இதுதான் காரணம். தமிழ் ஒரு சிக்கலான எழுத்தே அல்ல.
இதை இன்றைக்கு மாற்றமுடியுமா? மாற்றமுடியும் என்ற நம்பிக்கையில் யூனிகோடிடம் நாங்கள் பேசியிருந்தோம். தமிழ் அனைத்து எழுத்துக் குறியீடு என்பதை நாங்கள் பரிந்துரைத்தோம். முதலில் அவர்கள் குழம்பினார்கள், ஏன் நாங்கள் இந்தியஅரசோடு பேசும்பொழுது தமிழில் எந்தச் சிக்கலும் இருப்பதாகச் சொல்லவில்லையே என்றார்கள். 2007ல் யூனிகோடு தொழில்நுட்பக் குழுக்கூட்டத்தில் கலந்து கொண்டு நாங்கள் பேசியபொழுது இந்தக் கேள்வி இந்திய அரசின் பிரதிநிதியிடம் கேட்கப்பட்டது. இங்கே தமிழக அரசு ஒவ்வொரு எழுத்துக்கும் தனிக்குறியீடு வேண்டுமென்று கேட்கிறார்கள். ஏற்கனவே நாங்கள் பதினேழு ஆண்டுக்கு முன்னரே இந்திய அரசிடம் கேட்டபொழுது நீங்கள் எதுவும் சிக்கல் இருப்பதாக சொல்லவில்லையே, இப்போது இருப்பதாக சொல்கிறார்களே என்ன செய்வது என்றார்கள். அப்பொழுது இந்திய அரசின் பிரதிநிதி ஆணித்தரமாக கூறினார். பதினேழு ஆண்டுகளுக்கு முந்திய கதையை விடுங்கள். இந்தியா ஒரு கூட்டாட்சி, இந்திய மொழிகள் ஒவ்வொன்றிற்கும் அதற்கான தரப்பாடுகளை நிர்ணயிக்கும் முழுஉரிமையும் அந்தந்த மாநில அரசிற்கே உரியது. தமிழக அரசு தமிழுக்கென்று என்ன தரத்தை உருவாக்குகிறதோ அந்தத் தரத்தை இந்திய அரசு ஆதரிக்கும். இந்திய அரசு எந்த தரத்தை ஆதரிக்கிறதோ அந்தத் தரத்தை பன்னாட்டுத் தர அமைப்பிடம் (ISO) பரிந்துரைப்போம். அதனால் அரசுத்தரத்துக்கும் யூனிகோடுக்கும் வேறுபாடு இல்லாமல் என்ன செய்யலாம் என்று கேட்டார். இது யூனிகோடுக்கு அதிர்ச்சியளித்தது. ஏனென்றால் யூனிகோடு தரத்துக்கும், பன்னாட்டுத் தரம் அமைப்பின் தரமும் வேறுபட்டால் உலகில் இரண்டு தரங்களாகப் பிளவு வரும். யூனிகோடு, இதைச் சற்றிலும் விரும்பவில்லை. ஆனால், இந்திய அரசு அப்படி வலியுறுத்தியதால் முதலில் தமிழக அரசு ஒரு தரத்தை அறிவிக்கட்டும். பிறகு இந்தத் தரத்தில் தமிழகஅரசு பல ஆவணங்களை உருவாக்கட்டும். அதன்பிறகு இந்தியஅரசு அதை தரமாக ஏற்றுக்கொள்ளட்டும். பிறகு எங்களது கொள்கைகளை நாங்கள் மீண்டும் பரிசீலனை செய்கிறோம். நாங்கள் ஏற்கனவே அமைத்துள்ள ஒரு குறியீட்டை மாற்றுவது என்பது இயலாத காரியம்” என்று சொன்னார்கள். தமிழக அரசு 2010ல் தமிழ் அனைத்து எழுத்து குறியீட்டை தரமாக ஏற்றுக்கொண்டுவிட்டது.


தமிழக அரசின் ஆவணங்களில் தமிழ் யூனிகோடு குறியீட்டை ஒரு தரமாகவும் எங்கெல்லாம் தமிழ் யூனிகோடு -வேலை செய்யவில்லையோ அங்கெல்லாம் தமிழ் அனைத்தெழுத்து குறியீட்டை (TACE – Tamil All Character Encoding) மாற்றுத் தரமாகவும் ஏற்றுக்கொண்டு அறிவித்திருக்கிறது. அதன் பிறகும் 2010ல் இந்த அறிவிப்பு வந்த பிறகும் கூட இன்றுவரை தமிழக அரசின் வலைத்தளங்களில் யூனிகோடு -குறியீட்டிலும் சரி, அனைத்தெழுத்து குறியீட்டிலும் சரி அதிகமாக ஆவணங்கள் பதிப்பிக்கப்படவில்லை. அதனால் யூனிகோடைப் பொறுத்தவரை இது வெறும் வெற்றுப்பேச்சு. இந்த வெற்றுப்பேச்சிற்குப் பிறகு வேறு எந்த நோக்கும் இல்லையென்று அவர்கள் கருதுவதால் அனைத்து எழுத்துக் குறியீட்டிற்கான ஆதரவை அவர்கள் எந்தக்காலத்திலும் தெரிவிக்கப்போவதில்லை. இது மாறவேண்டுமென்றால் முதலில் தமிழ்நாட்டின் தமிழர்கள் தமிழில் இருக்கும் கணினி மென்பொருள்களைக் காசு கொடுத்து வாங்க வேண்டும். சந்தைக்கு ஏற்ப எந்த நிறுவனமும் இயங்கும். வாடிக்கையாளர்கள் எதை வாங்குகிறார்களோ அதை விற்பது எந்தவகையிலும் சாதாரண எண்ணமாக இருக்கும். தமிழர்கள் முதலில் காசுகொடுத்து வாங்கிப் பழகிக்கொள்ளவேண்டும். பிறகு தமிழக அரசு வெறும் தரத்தை அறிவிப்பதோடு மட்டும் நிற்காமல் இந்தத் தரத்தை அவர்கள் செயலுக்குக் கொண்டுவரவேண்டும். தமிழக அரசின் ஆண்டறிக்கைத் திட்டத்தையே இன்னும் யூனிகோடிலோ அல்லது அனைத்து எழுத்துக் குறியீட்டிலோ கொண்டுவரவில்லை. இன்னும் அவர்கள் பத்தாண்டுக்கும் பழமையான வானவில் – என்ற குறியீட்டில் தான் புழங்கிக்கொண்டிருக்கிறார்கள். இதற்குக் காரணம் என்னவென்றால் முதலமைச்சர் செயலகத்தில் இருப்பவர்களுக்கு வானவில் -மட்டும்தான் தெரியும். சென்ற ஆண்டில் அவர்கள் எதைப் பயன்படுத்தினார்களோ அதை வெட்டி ஒட்ட வேண்டும் என்றால் வானவில் -இருந்தால்போதும்.

வானவில்லிலிருக்கும் ஆவணங்களிலிருந்து சில பகுதிகளை வெட்டி எடுத்து யூனிகோடு ஆவணங்களில் ஒட்டினால் கட்டம் கட்டமாகத்தான் தெரியும். இவற்றிற்கெல்லாம் எளிமையான தீர்வுகள் இருக்கின்றன. யூனிகோடு -வந்தால் குழப்பமிருக்காது. வெட்டி ஒட்டுவதெல்லாம் மிக எளிமையான வேலை. இதை எத்தனை முறை வலியுறுத்தினாலும் அவர்களுக்குத் தெரியவில்லை. அண்மையில் 2014ல் தமிழக அரசு ஒரு ஆணையை பிறப்பித்தது. அந்த ஆணையின் படி தமிழக அரசின் துறைகள் அனைத்தும் தமிழகத்தின் மாவட்டம், வட்ட அரசுகள் யாராக இருந்தாலும் 2010ல் அறிவிக்கப்பட்ட அந்த யூனிகோடு/ அனைத்தெழுத்துக்குறியீட்டை மட்டும்தான் புழங்கவேண்டும் என்பது அரசின் ஆணை. அந்த அரசின் ஆணை இதுவரை முதலமைச்சரின் செயலகத்தில் கூடச் செயல்படவில்லை. எப்பொழுது அது முதலமைச்சர் அலுவலகத்தில் செயல்படுகிறதோ, அதன் பின்னால்தான் தமிழகமெங்கும் பரவும். அப்படிப் பரவினால்தான் உலகத்தில் இருக்கும் தரப்பாட்டுக்குழுக்கள் தமிழகம் சொல்வதை மதிப்பார்கள். நம்பேச்சு வெறும் வெற்றுப்பேச்சாக இருக்காமல் இருக்கவேண்டும் என்றால் செயல்பாட்டில் காட்டவேண்டும். தமிழர்கள் வாய்சொல் வீரர்கள், வேறு என்ன சொல்ல முடியும்?

அனைவரையும் முழுமையாக இந்த நேர்கோணலை படிக்க வேண்டுகிறேன். தொடர்ந்து படிக்க இங்கு செல்லுங்கள்
http://siragu.com/?p=14890

Tuesday, August 12, 2014

இந்தியாவில் Pepsiயின் வரவேற்கதக்க முயற்சி

தமிழகத்தில் வட மாவட்டங்களில் மழை குறைவாக பெய்யும் வட மாவட்டங்கள் பலவற்றில் முந்திரி பரவலாக பயிரிட படுகிறது. தானே புயல், குறைவான விளைச்சலை கொடுக்கும் ரகங்கள், முறையான முதல்லிடு இன்மை போன்ற பல பிரச்சனைகளால் முந்திரி விவசாயம் பெரிதும் பாதிக்க பட்டது. சில ஆண்டுகள் முன் வரை முந்திரி ஏற்றுமதியில் ஆதிக்கம் செலுத்தி வந்த கேரள மாநிலத்தவர் மற்றும் இடை தரகர்களால் முந்திரி விவசாயிகள் பெரிய அளவில் பாதிக்கபட்டு இருந்தார்கள்.

ஒரு விஷயத்தை பற்றி பேசும் போது முழுவதும் கேட்காமல் முந்தி கொண்டு பேசுபவர்களை முந்திரி கொட்டை என்பது வழக்கம். இந்த வழக்கம் எப்படி வந்தது என்று உங்களுக்கு நினைக்க தோண்றலாம். மற்ற பழங்களில் எல்லாம் பழத்திற்கு உள் தான் கொட்டை இருக்கும். ஆனால் முந்திரி பழத்தில் மட்டும் பழத்தை முந்தி முந்திரி கொட்டை வெளியில் நீட்டி இருக்கும். அதனால் தான் அந்த வழக்கம் வந்தது.

நன்றி Wiki
முந்திரியை பொருத்த வரை முந்திரி பருப்பு நல்ல விலை பொருளாக உள்ளது.ஆனால் ஒவ்வொரு பருப்பிறிகும் மேல் இருக்கும் முந்திரி பழம் மிக பெரிதாக இருக்கும். இதன் சுவையும் நன்றாக இருக்கும். இதற்கு சிறிது உவர்ப்பு தன்மை உள்ளதால் இதில் உப்பு தடவி சாப்பிடலாம். இதன் சுவையே தனி.ஆனால் இந்த பழத்தை பரித்த உடனே உண்ண வேண்டும். இல்லை என்றால் நொதித்தல் ஏற்பட்டு வீணாகி விடும்.இதன் காரணமாக முந்திரி பழத்தை விவசாயிகள் உபயோக படுத்தாமல் அழித்து விடுவார்கள்.

நான் கல்லூரியில் படிக்கும் போது பல்கலைகழகங்கள் எதாவது செய்து இந்த முந்திரி பழத்தை மற்றும் விளைபொருளாக மாற்றி விட்டால் முந்திரி விவசாயம் மிகவும் லாபகரமானதாக மாறிவிடும் என்று பேசி கொண்டிருப்போம்.அப்போது ஆராய்ந்த போது கோவாவில் முந்திரி பழத்திலிருந்து தயாரிக்க படும் Feni என்ற மது பானம் மிகவும் பிரபலமானது என்றும் கோவா பகுதி விவசயிகள் அதனால் ஓரளவு பயனடைகிறார்கள் என்றும் படித்தோம்.தமிழ்நாடு அரசும் இது போன்ற முயற்சி எடுத்தாலோ அல்லது இந்தியாவில் இருக்கும் மது பான கம்பெனிகள் தமிழகத்தில் இந்த ஆலை அமைத்தால் முந்திரி விவசாயத்துக்கு உதவியாக இருக்கும் என்று பேசி கொண்டு இருப்போம்.

முந்திரி பழத்திலிருந்து வேறு எந்த உணவு பொருள் எடுக்கும் முயற்சி பெரிய அளவில் எடுக்க பட்டதா என்று எனக்கு தெரியவில்லை. தற்போது
பெப்சி நிறுவனம் இந்த முந்திரி பழத்திலிருந்து பழச்சாறு எடுக்க முயற்சி செய்துள்ளதாக வந்த செய்தி மிகவும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே பிரேசில், தாய்லாந்து போன்ற நாடுகளில் இந்த முந்திரி பழ சாறு உபயோகம் உள்ளதை பார்த்த பெப்சி நிறுவனத்தினர் இதை பெரிய அளவில் கொண்டு செல்ல முடிவி செய்துள்ளனர்.பெப்சி நிறுவனம் முந்திரி பழத்திலிருந்து மதுபான வகை தயாரிக்காமல் பழச்சாறு தயாரிக்க முன் வந்துள்ளதாக தெரிகிறது. பழத்தை பறித்த 24 மணி நேரத்தில் பத படுத்தி சாறு எடுக்க வேண்டும்.அதற்கு கிளிண்டன் தோன்டு நிறுவனத்தின் உதவியை நாடி உள்ளனர். கிளிண்டன் தொண்டு நிறுவனத்தின் உதவியால் உருவாக்கபட்ட Acceso Cashew Enterprise என்ற நிறுவனம் தற்போது கோவா பகுதியில் சிறு விவசாயிகளிடமிருந்து  முந்திரி பழத்தை வாங்க தொடங்கி உள்ளது.இந்த நிறுவனம் விவசாயிகளிடமிருந்து கிலோ ஒன்றுக்கு 2.50 - 3 ரூபாய்க்கு முந்தரி பழத்தை கொள்முதல் செய்கிறது. இதனால் விவசாயிகளுக்கு சுமார் 20% கூடுதல் லாபம் கிடைக்கிறது.

முந்திரி பழத்தில் வைட்டமின்கள், பிற சத்துக்கள் மற்றும் உடல் கொழுப்பை குறைக்கும் தன்மையுள்ள பொருட்கள் இருப்பதாலும், விலை குறைவாக இருப்பதாலும்  முறையாக விளம்பர படுத்தினால் இந்தியா மட்டுமின்றி மேலை நாடுகளில் மிக பெரிய சந்தையை உருவாக்க கூடிய சாத்தியகூறு உள்ளது ( அக்காய்பெரிக்கு சந்தையை உருவாக்கியது போல்) . இந்தியாவின் சிறு மற்றும் பெரிய குளிர்பான கம்பெனிகளை அழித்தது என்று பெப்சியை விமரிசித்தவர்கள், பல்லாண்டு காலமாக வீணாகி கொண்டிருந்த  முந்தரி பழம் போன்ற வற்றை  முறையாக பத படுத்தி பழசாறாக மாற்ற முயற்சி எடுக்காத அன்றைய இந்திய பெரு வணிக நிறுவனங்களை பற்றி விமர்சித்து  பேசுவது இல்லை.விவசாயிகளுக்கு நன்மை ஏற்படுத்தி கொடுக்கும் பெப்சி நிறுவனத்தின் இந்த முயற்சியை பாராட்டியே ஆக வேண்டும்.இந்த முயற்சி வெற்றி பெற்றால் விவசாயிகள் பயனடைவார்கள் என்ற கருத்தில் எந்த மாற்றமும் இல்லை.

இதில் முக்கியமாக கவனிக்க வேண்டிய செய்தி இந்த முயற்சி தற்போது கோவாவில் தான் ஆரம்பிக்க பட்டுள்ளது. தமிழ் நாடு அரசு மற்றும் தமிழக முந்திரி விவசாயிகள் இந்த முயற்சியை தமிழகத்திலும் கொண்டு வர முயற்சிக்க வேண்டும்.

Sunday, August 10, 2014

இந்தி திணிப்பு எதிர்ப்பு - வரலாறு முக்கியம் -உக்ரேனிய பிரச்சனையும் இந்தி எதிர்ப்பு போராட்டமும்

1960களின் இறுதி காலத்தில் தமிழ் இளைஞர்களின் தியாகத்தால் ஜாடிக்குள் அடைக்க பட்ட இந்தி திணிப்பு என்ற பூதம் தற்போது சிறிது சிறிதாக வெளியே எட்டி பார்க்க  தொடங்கியுள்ளது.இன்றைய தலைமுறையினரில் (முக்கியமாக உயர் நடுத்தர வர்க்க மக்கள்) பெரும்பான்மையானோருக்கு  இந்தி திணிப்பின் பின்னனியில் உள்ள  அரசியல் பற்றியோ அது ஏற்படுத்த கூடிய  மோசமான தாக்கம் பற்றியோ தெரிவதில்லை. ஆதிக்க வர்க்கத்தினரால் கட்டு படுத்த பட்டுள்ள வெகுஜன ஊடகங்களினால்  மூளை சலவை செய்ய பட்டுள்ள நிலமையையே காண்கிறாம்.இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு அதனால் பயனடைந்த ஒரு சில தலைவர்களின் குடும்பத்தினர்  இந்தி படித்த செய்தியே மக்களிடம் இந்தி திணிப்பிற்கு ஆதரவாய் விளம்பர படுத்த படுகிறது.இந்தி திணிப்பு எதிர்ப்பிற்கு ஒரு சில தனிபட்ட மனிதர்களோ அல்லது  இயக்கமோ மட்டும் பொறுப்பல்ல. அது பல லட்சம் தமிழர்களின் ஒட்டு மொத்த போராட்ட வெளிப்பாடு. மாபெரும் போராட்டங்களில் தலைவர்களும், தொண்டர்களும்  வருவார்கள், செல்வார்கள், வெல்வார்கள், வீழ்வார்கள்  அல்லது மாறுவார்கள். போராட்டத்தின்  தேவையை தீர்மானிப்பது அதற்கான அடிப்படை காரணங்களும், அந்த  போராட்டத்திற்கான தேவை தற்போது இருக்கின்றதா? என்ற ஆய்வு தான். இங்கு தனிபட்ட மனிதர்கள் முக்கியமில்லை. அடிப்படை கொள்கை தான் முக்கியம்.இந்தி எதிர்ப்பு போராட்டத்தின்  கடந்த கால மற்றும் நிகழ் கால தேவை ,இந்திய மற்றும் உலக வரலாற்றை முழுமையாக படித்தால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும். பன்முக மொழி கலாச்சாரம் உள்ள நாட்டில் பெரும்பான்மையினரின் மொழியையோ ,கலாச்சாரத்தையோ திணிக்க முயல்வதன் அரசியலையும், இது போல் வரலாற்றில் இதற்கு முன் நடந்த நிகழ்வுகள் பற்றியும் இந்த கட்டுரையில் சிறிது காண்போம்.

பெரும்பான்மை மொழியை சிறுபான்மையினர் மீது திணிப்பது அது அவர்களின் தாய் மொழியின் மீது மட்டும் ஏற்படுத்தும் தாக்குதல் அல்ல. அது மக்களின்  கலாச்சாரம் மற்றும்  பொருளாதாரத்தின் மீதும் ஏற்படுத்தும் தாக்குதல் ஆகும்.ஏனென்றால் மொழி என்பது எண்ணங்களை பரிமாற்றம் செய்ய உதவும் காரணி  மட்டுமல்ல. அது மக்களின் கலாச்சாரம் மற்றும் வாழ்வியல் கோட்பாடுகளோடு ஒண்றிணைந்தது.அதானால் தான் உலகில் பெரும்பாலான நாடுகளின் எல்லைகளை  முடிவு செய்வது மொழியாக உள்ளது.

சுதந்திரத்துக்கு பிறகு இந்தியாவின் மொழி கொள்கையை வடிவமைக்க உதாரணமாக எடுத்து கொள்ளபட்ட நாடு சோவியத் யூனியன் ஆகும்.அதற்கு முக்கிய காரணம்  இந்தியாவை போன்று சோவியத் யூனியனிலும் ரஸ்ய மொழியை பேசும் மக்கள் பெரும்பான்மையாகவும், பிற மொழியை பேசும் இனகுழுக்கள் சிறு  நாடுகள்/மாநிலங்களில் மட்டும் பெரும்பான்மையாகவும் உள்ளனர். அதே சமயம் ஒட்டு மொத்தமாக சோவியத் யூனியனில் கணக்கிட்டால்  பிற மொழியை பேசுபவர்கள்  சிறுபான்மையாகவும் உள்ளனர். இந்தியா சுதந்திரம் அடைந்த கால கட்டத்தில் இந்திய அரசியலில் ஆதிக்கம் செலுத்தி வந்த பெரும்பான்மை "இந்தி"யர்களும், இந்து -  இந்தி - இந்தியா என்ற சித்தாந்தத்தை கொண்ட"இந்து"யர்களும்  தங்களது ஆதிக்கத்தை நிலை நாட்ட அன்றைய சோவியத் மாதிரி மொழி கொள்கை உதவியாக   இருக்கும் என்று கருதினர். அன்றைய சோவியத் மாதிரி கொள்கை என்றால் என்ன என்றும் சோவியத் யூனியனின் மொழி கொள்கை லெனின் காலத்தில் எவ்வாறு  வரையறுக்க பட்டது என்றும் , அவரது காலத்திற்கு பிறகு என்ன ஆனது என்பது பற்றியும் அதன் விளைவுகள் மற்றும் தற்போதைய நிலை என்ன என்றும் முதலில்  பார்ப்போம்.

ரஸ்யா - சோவியத் - யுக்ரேன் - மொழி கொள்கை - Russification

சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன் சோவியத் யூனியன் சுக்கு நூறாக உடைந்ததையும் தற்போது யுக்ரேனில் நடக்கும் கலவரங்களில் பலர் கொல்ல படுவதையும்  பார்க்கிறோம். இதற்கு பல காரணங்கள் இருந்தாலும் ரஸ்ய பெரும்பான்மையினரின் மொழி மற்றும் கலாசாரத்தை சிறுபான்மையினர் மீது திணித்ததும் ஒரு முக்கிய   காரணம் என்றால் உங்களுக்கு ஆச்சர்யமாக உள்ளது அல்லவா? ஆனால் அதுவே உண்மை. அந்த உண்மையை கண்டறிய வரலாற்றின் பின்னோக்கி சிறிது  பயணிப்போம். ரஸ்யாவை ஆண்ட சார் மன்னர்களின்  ஆட்சிக்குட்பட்ட பகுதியில் கிழக்கு ஐரோப்பா மற்றும் மத்திய ஆசியாவை சேர்ந்த  பல்வேறு மொழிவாரி  சிறுபான்மையினரின் பகுதிகள் இருந்தது. சார் மன்னரின் ஆட்சி காலத்திலேயே ரஸ்ய மொழியை புகுத்தும் முயற்சிகள்  பல முறை எடுக்க பட்டது. ஆனால் அவை  மிக கடுமையாக புகுத்த படவில்லை. சோவியத் யூனியனில் உள்ள பல்வேறு மொழிவாரி சிறும்பான்மையினரின் வரலாறும் ஒத்துள்ளதால் இன்று உலகளவில்  அனைவராலும் கவனிக்க படும் உக்ரேனிய மொழியினரை சோவியத் மொழி சிறும்பான்மையினருக்கான எடுத்துகாட்டாக எடுத்து கொள்வோம்.

ரஸ்ய புரட்சிக்கு பின் போல்ஷ்விக்குகளிடம் ஆட்சி அதிகாரம் மாறியவுடன் அதுவரை சார் ஆட்சியில் நடைபெற்ற ரஸ்ய திணிப்பு முடிவுக்கு கொண்டு வர முடிவு  செய்யபட்டது.  லெனினால் இது பற்றி ஆராய பணிக்க பட்ட ஸ்டாலின், ஆரம்ப காலங்களில் சோவியத் யூனியனின் மிக பெரிய ஆபத்து அப்போது  பெரும்பான்மையினரான இருந்த ரஸ்ய மொழி மற்றும் அதிகார வெறியர்களின் ரஸ்ய பேரினவாதமும் அதை கண்டு பயம் கொண்ட பிற உள்ளூர் தேசியவாதமும் தான்  என கூறினார். இவற்றில் முக்கிய பிரச்சனை ரஸ்ய பேரிணவாதமே என்றார். (பிற்காலத்தில் கட்டுபாடற்ற அதிகாரத்தை கைப்பெற்ற ஸ்டாலின் ரஸ்ய பேரினவாதத்தை  முன்னெப்போதும் இல்லாதவாறு எடுத்து சென்றது சோக வரலாறு). சிறுபான்மை மக்களின் மொழி மற்றும் கலாச்சாரத்தை காப்பற்றவும் அவர்களுடைய  கலாச்சாரத்துடன் தேசிய நீரோட்டத்தில் இணைக்கவும் Korenizatsiya (உள்ளூர்மயமாக்கம்) என்ற கொள்கை வகுக்கபட்டது. அதன் படி சோவியத் யூனியனின்  அனைத்து பகுதிகளிளும் அந்த பகுதியில் இருந்த தாய் மொழி மொழியின் வாயிலாக கல்வி கற்று கொடுக்க ஊக்க படுத்த பட்டது. மக்கள் தங்கள் தாய் மொழியில்  படிக்கவாய்ப்பு கிடைத்ததாலும், கல்விக்கு அதிக அளவு செலவு  செய்ததாலும், நகரங்கள் மட்டுமின்றி கிராமங்களிலும்மக்களிடம் வரலாறு காணாத அளவு  எழுத்தறிவு பரவியது.கிராமங்களில் இருந்த உக்ரேனிய மக்களின் படிப்பறிவு அதிகமானதால் பலர் படித்து நகரங்களுக்கு இடம் பெயர்ந்தார்கள்.   அப்போது படித்த  ரஸ்ய மக்கள் முழுவதுமாக நகரங்களில் உருவாகும் வேலை வாய்ப்புகளை எடுத்து கொண்டிருந்த நிலை மாறி  கிராமங்களிலிருந்து இடம் பெயர்ந்த உக்ரேனியர்களும்  வேலை வாய்ப்பை பெற முடிந்தது.கிராமங்களில் இருந்த மொழி அடிப்படையில் நடந்த புரட்சி மொழியினை தொடர்ந்து உக்ரேனிய மக்களின் கலாச்சாரம், உக்ரேனிய  மொழி பேசும் மக்களின் பொருளாதார வளர்ச்சி, சமூக முன்னேற்றம் என தொடர்ந்தது. முக்கியமாக பெரும்பான்மை ரஸ்யர்களின் மத்திய அதிகார திணிப்பு குறைவாக  இருந்ததால் உள்ளூர் உக்ரேனியர்கள் பொருளாதாரத்தில் முன்னேற முடிந்தது. இந்த மாற்றத்தை ஏற்படுத்திய பெருமை அப்போது கல்விஅதிகாரியாக  நியமிக்க  பட்டிருந்த Mykola Oleksiyovych Skrypnyk என்பவரையே சாரும். இந்த காலத்தில் உக்ரேனிய மொழியின் எழுத்து இலக்கணம் வரையரை செய்யபட்டது.  இதைSkrypnykivka அல்லது கார்கிவ் எழுத்திலக்கணம் என்ற பெயர் பெற்றது. உக்ரேனிய மொழியிலும் ஒரு மறுமலர்ச்சி ஏற்பட்டது.,இந்த மறுமலர்ச்சி மொழி,  கலாச்சாரம், வாழ்க்கைதரம் மற்றும் பொருளாதார வளர்ச்சியில் மட்டும் நடைபெறவில்லை.அப்போதைய கம்யூனிச கட்சி மற்றும் அரசியலில் முழுமையாக ரஸ்யர்களே  அதிக்கத்தில் இருந்த நிலை மாறி உக்ரேனியர்கள் பலர் கம்யூனிச கட்சியின் முக்கிய பதவிகளிலும் அரசு பதிவிகளிலும் பங்கு பெற்றனர்.

ரஸ்ய பேரினவாதத்தின் துணையோடு ஸ்டாலின் கட்டற்ற அதிகாரத்தை எடுக்க முனைந்த பின் நிலைமை மாற தொடங்கியது. (இதில் ரஸ்ய பேரினவாதத்தின் துணை  கொண்டு அதிகாரத்தை எடுக்க கடுமையான வழிமுறைகளை கையாண்ட ஸ்டாலின் ரஸ்யாவை சேர்ந்தவர் அல்ல என்பது சோகமான வரலாறு.). லெனின் ஆதரவுடன்  வந்த உள்ளூர்மயமாக்கல் முடிவுக்கு கொண்டு வரபட்டது. ரஸ்ய பேரினவாதம் முழுமையாக மொழிவாரி சிறும்பான்மையினரின் மேல் திணிக்கபட்டது.உக்ரேனில் ரஸ்ய  மொழி திணிப்பு மற்றும் ரஸ்ய பேரினவாத திணிப்பிற்கு ஸ்டாலினால் உக்ரேனுக்கு அனுப்பபட்ட அதிகாரியின் பெயர் PavelPostyshev. அவர் பதவியேற்ற சில  மாதத்திலேயே Skrypnyk பதவி விலகி சித்ரவதையிலிருந்து தப்பிக்க தற்கொலை செய்து கொண்டார். அதை தொடர்ந்து உக்ரேனில் ரத்த அறு ஓட  தொடங்கியது.உக்ரேனிய மக்கள் தாய் மொழியில் படிக்கும் உரிமை சிறிது சிறிதாக பறிக்க பட்டு அனைத்து பள்ளிகளிலும்  ரஸ்ய வழி கல்வி கட்டாயமாக்கபட்டது.  மக்களின் தாய் மொழியான உக்ரேனிய மொழி சிறிது சிறிதாக வழக்கத்திலிருந்து மறைக்க பட தொடங்கி இரண்டாம் தர மொழியாக தாய் நாட்டிலேயே  பொலிவிழக்கபட தொடங்கியது.அனைத்து பத்திரிக்கைகள், புத்தக அச்சகம்  போன்றவை உக்ரேனிய மொழியிலிருந்து  ரஸ்ய மொழிக்கு மாற்றபட்டது.மொழியின்  எழுத்துருவின் மீதும் தாக்குதல் தொடங்கியது. உக்ரேனிய மொழியின் எழுத்து வடிவத்தில் பல மாறுதல்களை ஏற்படுத்தி ரஸ்ய மொழியின் எழுத்து வடிவுடன் அதிக  அளவு ஒத்து போகும் படி செய்தனர் . (ஜெயமோகனின் எழுத்து சீர்திருத்ததுடன் இந்த எழுத்து சீர்திருத்தத்தை ஒப்பிட்டு நீங்கள் பார்த்தால் நான்  பொருப்பல்ல,)பல்லாயிரக்கணக்கான உக்ரேனிய மொழியியல் அறிஞர்கள் மற்றும் மொழியியலாளர்கள் கடுங்குளிரில் அடிமை முகாமுக்கு கொண்டு செல்ல பட்டனர்  அல்லது கொலை செய்ய பட்டனர். இதற்கு Executed Renaissance என்று பெயர்(The term Executed Renaissance is used to describe generation of Ukrainian writers and  artists of 1920s and early 1930s who were performing in Ukrainian Socialist Soviet Republic and were executed  or repressed by Stalin's totalitarian regime.).சுமார் 2.5 லட்சம் உக்ரேனியர்கள் அரசியல் அதிகாரம் கொண்ட கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து  வெளியேற்றபட்டு,பெரும் பாலோனோர் படுகொலை செய்யபட்டனர். ரஸ்ய மொழி ஆதிக்கமும், ரஸ்ய பேரினவாதமும் நாம் கனவிலும் காண முடியாத கோர  தாண்டவத்தை உக்ரேனில் நிகழ்த்தியுள்ளது. உக்ரேன் நாட்டை சோவியத்தின் கோதுமை களஞ்சியம் என்பார்கள்.  உக்ரேனிய விவசாயம் பிரசித்தி பெற்றது. கூட்டு  பண்ணை விவசாயத்தை  நடைமுறை படுத்தி விவசாயிகளிடமிருந்து பெரும்பான்மையான விளை பொருட்களை பறிமுதல் செய்து ரஸ்யர்களுக்கு உணவளிக்க  ரஸ்யாவிற்கு அனுப்பி விட்டு உக்ரேனிய மக்களிடம்செயற்கையான பஞ்சத்தை ஏற்படுத்தி சுமார் 40 லட்சம் உக்ரேனியர்களை படுகொலை செய்தனர்.இதற்கு   Holodomor என்று பெயர்.ஒரு புறம் உக்ரேனியர்கள் படுகொலை செய்யபட்டனர். மறுபுறம் ரஸ்யர்கள் மிக பெரிய அளவில் ரஸ்யாவிலிருந்து கொண்டு வரபட்டு  உக்ரேனில் குடியமர்த்த பட்டனர்.நகர்புற தொழிற்சாலை சார்ந்த வேலைகள் பெருமளவில் ரஸ்யர்களுக்கு கிடைத்தது. அதிகாரம் மிக்க   உக்ரேனிய கம்யூனிஸ்ட்  கட்சியிலும் ரஸ்யர்கள் பெருமளவு நிரப்பபட்டு அரசியல் அதிகாரத்தை கைப்பற்றினர். பெரும்பான்மை  பள்ளி , உயர் கல்வி மற்றும் அரசு வேலைவாய்ப்புகளில் ரஸ்ய  மொழி கட்டயமாக்க பட்டு உக்ரேனிய மொழி வீழ்த்தபட்டது. இந்த கொடுமையான நிலை ஸ்டாலின்  உயிருடன் இருக்கும் வரை தொடர்ந்தது.இதற்கு  Russification  என்பார்கள்

Holodomor - நன்றி www.worldtruth.org/


குருசேவ் பதவி ஏற்றவுடன் ரஸ்ய பேரிணவாதம் மற்றும் மொழி ரீதியான அடக்குமுறை குறைந்தது. எந்த மொழியில் படிக்க வேண்டும் என்பதை படிப்பவர்கள் முடிவு  செய்ய வாய்ப்பளிக்க பட்டது. ஆனால் பெரும்பாலான அரசு வேலைகள் மற்றும் வெகுஜன தொடர்பு போன்றவற்றிற்கு ரஸ்ய மொழியை கட்டாயமாக்கி மற்ற  மொழியினருக்கு வாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்காததால் கட்டயத்தின் மூலம் ரஸ்ய மொழி திணிக்காவிட்டலும் அவசியத்தின் மூலம் ரஸ்ய மொழி திணிக்க  பட்டது.

அன்று ஸ்டாலின் காலத்தில் இடபட்ட ரஸ்ய மொழி திணிப்பு மற்றும் ரஸ்ய பேரிணவாத தீ 1980 களில் சோவியத் நாட்டின் முப்புறத்திலும் கொழுந்து விட்டு  எரிந்து மாபெரும் மக்கள் புரட்சிக்கு  ஒரு காரணியாக வித்திட்டு  சோவியத் யூனியனை சுக்குநூறாக செய்தது.

உக்ரேனின் இன்றைய நிலை

சோவியத் யூனியன் உடைந்து உக்ரேன் தனி நாடான பின்  உக்ரேனிய மொழியை படிப்பு, அரசு அலுவல் , வணிகம்  என அனைத்து வழிகளில் மீண்டும் உயிரூட்ட தொடங்கி உள்ளனர். ஆனால்  50 க்கும் மேற்பட்ட ஆண்டுகளாக ரஸ்ய மொழியும், ரஸ்ய பேரிணவாதமும் பெருமளவில் திணித்து  உக்ரேனிய  தாய் மொழியை அழித்து வந்ததால் உக்ரேனிய மக்கள் பெருமளவு russified  ஆகி விட்டிருந்தனர்.
2001 புள்ளி விவரத்தின் படி உக்ரேனின் தலைநகரான கீவ் நகரில் தாய் மொழியாக மக்கள் கூறிய மொழி
75% உக்ரேனை தாய் மொழியாகவும்
25% ரஸ்ய மொழியை தாய்மொழியாகவும் கொண்டுள்ளதாக கூறியுள்ளனர்.

அதே நேரத்தில் பெரும்பான்மையாக உபயோகிக்க படும் மொழியாக
52% பேர் ரஸ்ய மொழியையும்
32% ரஸ்ய மற்றும் உக்ரேனிய மொழியையும்
14% பெரும்பாலும் உக்ரேனிய மொழியையும்
4.3% முழுமையாக உக்ரேனிய மொழியய்யும்  பயன் படுத்துவதாக கூறியுள்ளனர்.
அதாவது சுமார் 60% உக்ரேனிய மொழியை தாய் மொழியாக கொண்ட மக்கள் ரஸ்ய மொழியை பெரும்பான்மையாக பயன்படுத்த தொடங்கியுள்ளனர்..ஆனால் தற்போது  நிலைமை  சிறிது சிறிதாக மாற தொடங்கி உள்ளது.

இதுதான் பெரும்பான்மையானோரின்  மொழி திணிப்பும் , பெரும்பான்மையானோரின் பேரிணவாத  திணிப்பும் மொழிவாரி சிறும்பான்மையினர் மீது திணிக்கபடுவதன்  விளைவு..இன்று உக்ரேனில் நடக்கும் பிரச்ச்னைகளின் அடிப்படையும் அன்று ரஸ்ய பேரிணவாத திணிப்பின் விளைவே ஆகும். அதாவது  ரஸ்ய பேரிணவாதிகளால்  குடியேற்ற பட்டு பல்கி பெருகி வந்த ரஸ்ய மொழி வாரி மக்களுக்கும் , உக்ரேனிய மக்களுக்கும் இடையே நடைபெறும் போராட்டமே இன்று உக்ரேனில் நடக்கும்  போராட்டம. உக்ரேனியர்கள் தங்களது மொழி, கலாச்சாரம் மற்றும் தனித்தன்மை வாய்ந்த அரசை மீண்டும் நிலை நாட்ட துடிக்கிறார்கள்.உக்ரேனியர்களுக்கோமீண்டும் ரஸ்யாவுடன் தங்களது பகுதி இணைக்க பட்டால் மீண்டும் ரஸ்ய  பேரிணவாத திணிப்பு ஆரம்பித்து மீண்டும் மாபெரும் சமுதாய கொலை (genocide) நடக்குமோ என்று பயப்படுகிறார்கள்.எனவே உக்ரேனியர்கள் ரஸ்யாவின்  ஆபத்திலிருந்து தப்பிக்க ஐரோப்பிய யூனியனுடன் சேர்ந்து விட வேண்டும் என துடிக்கின்றனர்.ஆனால் உக்ரேனிய பொருளாதாரம் எரிசக்தி, ஏற்றுமதி, இறக்குமதி  போன்றவற்றில் ரஸ்ய நாட்டினை சார்ந்து இருக்க வேண்டி உள்ளது.அதை துருப்பு சீட்டாக ரஸ்யா தற்போது பயன்படுத்தி மக்களால் தேர்ந்தெடுக்க பட்ட அரசுகளை  மிரட்டி வந்தது. தற்போது நிலமை கைமீறி போய் உள்னாட்டு போர் தொடங்கி உள்ளது. உக்ரேனிய தேசியவாத அரசுகளால் தங்களது உயிருக்கும் உடமைக்கும் பாதிப்பு ஏற்படும் என்று கருதி ரஸ்யர்கள் அதிகம் இருக்கும் பகுதிகளில் உள்ள  மக்கள் ரஸ்யாவோடு தங்களது பகுதியை இணைக்க துடிக்கின்றனர். சுமார் 80 ஆண்டுகளுக்கு முன் ரஸ்யாவிலிருந்து குடியேறி  சில தலைமுறைகளாக உக்ரேனில் வாழ்ந்து , அதிக கல்வி அறிவு மற்றும் முக்கிய பதிவியில் இருக்கும் ரஸ்ய இனத்தவரின் எதிர்காலமும் கேள்வி குறியாகியுள்ளது.

வரலாற்றை படிக்கும் போது நாம் அறிந்து கொள்ளூம் உண்மை என்னவென்றால்  பெரும்பான்மையான தலைவர்கள் மற்றும் சமூகத்தின் தோல்விகளுக்கு காரணம்  அவர்கள் வரலாறை படித்து உண்மையை உணர்ந்து கொள்ளாதது தான் எனலாம்.அன்று நெப்போலியன் சீதோஷ்ண நிலை மற்றும் புவியியல் அமைவிடம்பற்றி புரிந்து  கொள்ளாமல் ரஸ்யாவின் மீது போரிட்டு தன் பெரும்பான்மை படைகளை இழந்து, நம்பிக்கை இழந்து தனது உலகளாவிய பேரரசு லட்சியத்தை கனவாக்கி மாய்ந்து  போனான். அந்த சரித்திர உண்மையை படித்து உணராத  ஹிட்லர் மீண்டும் அதே தவறை செய்து அழிந்து போனான். அதே போல, மத, இனம் மற்றும் கலாச்சார வழி  பன்முக சமுதாயமான சோவியத் யூனியன் ரஸ்ய மொழி திணிப்பு மற்றும் ரஸ்ய பேரினவாத திணிப்பு மூலம் சிதறுண்டு போனது. அந்த உண்மையை உணராத "இந்து -  இந்தி - இந்தியா"  தேசியவாதிகள் இந்தி மொழியையும், இந்து ஆதிக்கவாதத்தையும் திணித்து பேரழிவுக்கு இட்டு செல்ல முயல்கிறார்கள்.

இதே நிலையை ஈழத்தில் சிங்கள பேரினவாதம் நடைமுறைபடுத்த துடிக்கிறது.உக்ரேனிய மொழிக்கும் உக்ரேனிய மக்களுக்கும் ஏற்பட்ட கையறு நிலை பிற்கால தமிழ் சந்ததியினருக்கு வராமல் தடுத்த பெருமை அன்று இந்தி திணிப்பு எதிர்ப்பு  இயக்கத்தில் கலந்து கொண்ட  தியாகிகளின் ரத்தத்தினால் தான் என்றால் மிகையாது. 


சிறகுவில் வெளி வந்த கட்டுரை


Wednesday, August 06, 2014

FeTNA நடத்தும் இலவச தொலைபேசி வழி தமிழ் இலக்கண பட்டரை

வட அமெரிக்க தமிழ் சங்க பேரவை பல்வழி தொலைபேசி தொடர்பின் மூலம் இலவச தமிழ் இலக்கண பட்டறை நடத்த உள்ளது. தமிழ் இலக்கணத்தை கற்க விரும்புவோர் இந்த வாய்ப்பை பயன் படுத்தி  கொள்ளலாம்.மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள படத்தை பாருங்கள். (இதில் கொடுக்க பட்டுள்ள தொலைபேசி எண்கள் அமெரிக்க தொலைபேசி எண்கள்)

இந்த வகுப்பிற்கான பாட திட்டம் http://www.classicaltamil.org/# என்ற இணைய தளத்தில் உள்ளது.வகுப்பில் இணைய முடியாதவர்கள் இணைய தளத்திற்கு சென்று படித்து கொள்ளலாம்.
தொடரட்டும் FeTNAவின் தமிழ் பணி!