Sunday, February 21, 2016

உலக தாய்மொழி தினம் - தேசத்தை துண்டாக்கிய தேசிய மொழி

மக்களின் எழுச்சியால் உருவான ஒரு புதிய தேசம், தேசிய மொழி என்ற பெயரால் மொழி, கலாச்சாரம் மற்றும்  பொருளாதார ரீதியான தாக்குதாலால் 34 ஆண்டுகளில் துண்டான வரலாறு தான் இன்று உலக தாய்மொழி தினம் கொண்டாடுவதற்கான அடிப்படை.

“தேசிய மொழி என்பதே நாட்டின் ஒருமைப்பாட்டிற்கும் வளர்ச்சிக்கும் அடித்தளம்” - என்ற கோட்பாட்டுடன் மொழிவாரிச் சிறுபான்மையினரின் மீதான அடக்குமுறையும், அதற்கு எதிரான புரட்சியையும் சென்ற இரண்டு பகுதிகளில் பார்த்தோம். சோவியத் யூனியனில் Russification என்ற பெயரில் பல உக்ரேனியர்கள் கொல்லப்பட்டதும், இந்தியாவில் கட்டாய ஹிந்தி என்ற பெயரில் பல தமிழ் மாணவர்களின் உயிர்கள் பறிக்கப்பட்டதும் உலக வரலாற்றில் அழியாத வடுக்கள்.

வரலாறு பல பாடங்களைக் கற்றுக் கொடுத்தாலும், ஒரே மாதிரியான அடக்குமுறைகள் உலகின் பல பகுதிகளில் நிகழ்ந்து கொண்டேதான் இருக்கின்றன. தாய்மொழியென்பது ஒரு சமூகத்துடனும் அதன் பண்பாட்டுடனும் பின்னிப்பிணைந்தது. ஒரு மொழி அழிந்தால், அதைத் தாய்மொழியாகக் கொண்ட இனம் அழிந்துவிடும். தங்களது மொழி, பண்பாடு, தன்மானம், அடிப்படை உரிமைகள் , சமத்துவம் ஆகியவை காக்க எண்ணிலடங்காப் போராட்டங்களும் தியாகங்களும் உலகின்  பல பகுதிகளில் நடந்துள்ளது.

உலக மக்கள் பயன்படுத்தும் அனைத்து மொழிகளையும் பாதுகாக்கவும், அவற்றை அடுத்த தலைமுறையினருக்குக் கொண்டு செல்ல  ஊக்குவிக்கவும் UNESCO நிறுவனம் பிப்ரவரி மாதம் 21ம் தேதியை உலகத் தாய்மொழி நாளாக அறிவித்துள்ளது. அந்தத் தேதியை UNESCO தேர்ந்தெடுத்ததின் காரணம், அந்த நாள் ஒரு மொழியின் மீதான அடக்குமுறையினால் இரத்த ஆறு ஓடிய நாள். அதுவும் சுட்டுக் கொல்லப்பட்ட பல மாணவர்களின் இரத்தம்! அந்த நாடு, கிழக்குப் பாகிஸ்தான் என்று சென்ற நூற்றாண்டின் முற்பகுதியில் அழைக்கப்பட்ட இந்தியாவின் அண்டை நாடான பங்களாதேஷ்!
மொழித்திணிப்பிற்கான அரசின் அடக்குமுறையால் ஓடிய ரத்தம், பாகிஸ்தான் இரு நாடாக உடைந்ததற்கும் காரணமாக அமைந்தது. அரசின் அடக்குமுறையில் தன் நாட்டு மக்களின் மீதான மொழி அடிப்படையிலான பொருளாதாரத் தாக்குதலும் அடங்கும். அந்த வரலாற்றை இந்தக் கட்டுரையில் காண்போம்.
பாகிஸ்தான் உருவாக்கம்
வங்கமொழிப் பிரச்சனையைப் பற்றி முழுமையாகத் தெரிந்து கொள்ள வரலாற்றில் சற்றே பின்னோக்கிச் சென்று பார்ப்போம்.
மத அடிப்படையில் இந்தியா பிரிந்தபோது, இஸ்லாமியர்கள் அதிகமாக வாழும் இந்தியாவின்  கிழக்குப் பகுதியில் ஒரு துண்டும், மேற்குப் பகுதியில் ஒரு துண்டும் இணைந்து உருவானதுதான் பாகிஸ்தான் என்ற நாடு. மத அடிப்படையில் மக்கள் இணைந்திருந்தாலும், மொழி அடிப்படையில் வெவ்வேறு மொழியை தாய்மொழியாக கொண்டவர்கள் அப்போதைய பாக்கிஸ்தானியர்கள்.
மொழிச் சிக்கல்
பாகிஸ்தான் என்ற நாடு உருவானபோதே தேசியமொழி தேவை என்ற குரலும் வலுத்திருந்தது. அரசியலிலும் பொருளாதாரத்திலும் வலுவாக இருந்த மேற்குப் பாகிஸ்தானியர்கள் உருதுமொழி மட்டும்தான் நாட்டின் தேசிய மொழியாக வேண்டும் என்ற கோட்பாட்டில் உறுதியாக இருந்தனர். உண்மையான இஸ்லாமியர்களின் மொழி உருதுமொழியே என்பதே அவர்களின் முழக்கமாக இருந்தது.
உண்மையில் உருதுமொழிக்கும் இஸ்லாத்திற்கும் எந்த ஒரு அடிப்படையான பிணைப்பும் இல்லை. இஸ்லாம் தோன்றி கிட்டத்தட்ட இரண்டாயிரம் ஆண்டுகள் ஆகின்றன. ஆனால், உருதுமொழியின் வயதோ எண்ணூறு ஆண்டுகளுக்குக் குறைவானதுதான். தில்லி சுல்தான்களின் காலத்தில் உருவான ஹிந்துஸ்தானி மொழி, கிபி 1600 வாக்கில் உருது என்ற பெயரில் அழைக்கப்பட்டது. கவிஞர்களாலும் இலக்கியவாதிகளாலும் உருதுமொழி செழித்து வளர்ந்தது. 19-ஆம் நூற்றாண்டுவரை அதனை ஹிந்துக்களும் பேசிவந்தனர். பின்னரே, ஹிந்தி உருவாக்கப்பட்டு உருது இஸ்லாமியர்களின் மொழியாகவும் ஹிந்தி ஹிந்துக்களின் மொழியாகவும் இனங்காணப்பட்டன.
கிழக்குப் பாகிஸ்தானில் பேசப்பட்ட வங்கமொழி, நாட்டின் மொத்த மக்கள்தொகையில் 54 விழுக்காடு மக்கள் பேசும் மொழியாக இருந்தது. இருப்பினும் அரசியலிலும் பொருளாதாரத்திலும் மேற்குப் பாகிஸ்தான் வலுவாக இருந்ததால், உருதுமொழி தேசியமொழியாக வேண்டும் என்போரின் கையோங்கியிருந்தது. இதன் விளைவாக வங்காள மொழி பேசும் இஸ்லாமியர்கள், மதத்தின் அடிப்படையிலும் நாட்டின் அடிப்படையிலும் இரண்டாம் தரக் குடிமக்களாக ஆக நேர்ந்தது.

நாட்டின் ஒரு வட்டாரத்தில் பேசப்படும் மொழிக்குத் தேசியமொழி என்று முன்னுரிமை அளிக்கப்படும்போது, அந்தமொழியே கல்விக்கூடங்களிலும், அரசியல் கோப்புகளிலும், நீதிமன்றங்களிலும், செய்தித் தொடர்பு ஊடகங்களிலும் பயன்படுத்தப்படும். முப்பதாண்டுகளுக்கு ஒருதலைமுறை என்ற கணக்கில் எடுத்துக்கொண்டால் மூன்று தலைமுறைக்குள், அதாவது ஒரு நூற்றாண்டுக்குள், தேசியமொழி பேசுவோரின் எண்ணிக்கை பலமடங்கு கூடியிருக்கும். அதேநேரம், மற்றமொழிகள் தேசியமொழியின் தாக்கத்தால் திரிபடைந்து போய், அடுத்து வரும் தலைமுறையினர் அவற்றைக் கற்றுக்கொள்ள வலுவானப் பொருளாதாரக் காரணம் ஏதுமின்றிச் சிதையத் தொடங்கியிருக்கும். ஓராயிரம் ஆண்டுகளுக்குள் ஏட்டளவில் மட்டுமே வாழும் மொழிகளாகிவிடும்.
வங்கமொழியைக் கல்வி கற்பதிலிருந்தும், அரசு வேலைவாய்ப்பிலிருந்தும் முழுமையாக நீக்கி விட்டால் ஏற்படும் விளைவு கிழக்குப் பாகிஸ்தான் மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியது. வங்காள மொழி படித்தோர் எல்லாம் கல்வி கற்காதவர்கள் என்ற நிலை ஏற்பட்டு எந்த ஒரு அரசு வேலை வாய்ப்பும் பெற முடியாமல் போய்விடும்.  இந்த உண்மையை உணர்ந்த கிழக்குப் பாகிஸ்தான் மக்கள் தேசியமொழிக்கு எதிரான போராட்டத்தில் குதித்தனர்.
கிழக்குப் பாகிஸ்தானில் மொழிப் போராட்டம் நடந்து கொண்டிருந்த போது, முகமது அலி ஜின்னா 1948ம் ஆண்டு மார்ச் மாதம் டாக்கா சென்றார். அங்கு அவர்  உரையாற்றிய  போது உருது மட்டுமே பாகிஸ்தானின் தேசிய மொழி என்று அடித்து கூறினார். வங்காள மொழிக்கு, தேசிய மொழிக்கு இணையான நிலை கேட்போரை பாகிஸ்தானின் எதிரிகள் என்று அறிவித்தார். அதை விட ஒரு படி மேலே போய், தன் தாய் மொழியை  தேசிய  மொழியாக ஆக்க வேண்டும் என்று போராடிய வங்காளர்களை உள் நாட்டில் இருந்து கொண்டு நாட்டின் அழிவிற்கு வேலை செய்யும் வஞ்சகர்கள் (Fifth Column)  என்று முத்திரை குத்தினார். தேசியவாதம் மூலம்  ஒரு குறிப்பிட்ட மொழியைத் தாய்மொழியாகக் கொண்டவர்களை இரண்டாம் தரக் குடிமக்கள் ஆக்கும் உலக வரலாறு அங்கும் நடந்தது.
மொழிப் போராட்டமும், அரசின் அடக்குமுறையும்
1952ம் ஆண்டு இந்த மொழிச் சிக்கல் மேலும் தீவிரமடைந்தது. கிழக்குப் பாகிஸ்தான் பகுதியில் இருந்த கல்லூரி மாணவர்களும் அனைத்துக் கட்சி அரசியல் தலைவர்களும் இணைந்து அனைத்துக் கட்சி நடுவண் மொழி நடவடிக்கைக் குழு (All-Party Central Language Action Committee)) ஏற்படுத்தப்பட்டது. அப்போதைய பாகிஸ்தான் கவர்னர் ஜெனரல் நிசாமுதீன், வங்காள மொழியை இஸ்லாமிய மதத்துக்கும் பாகிஸ்தானுக்கும் ஏற்புடையதாக ஆக்க, பழமையான வங்காள மொழி எழுத்துருவை அழித்து விட்டு அராபிய மொழி சார்ந்த புதிய
எழுத்துரு தொடங்க வேண்டும் என்றார்.  இது வங்காள மக்களை மேலும் காயப்படுத்தியது.
வங்காள மொழியைத் தேசிய மொழியாக்க 1952ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 21ம் தேதி போராட்ட நாளாக அறிவிக்கப்பட்டது. மாபெரும் கடையடைப்புக்கும் பொது கூட்டத்திற்கும் அழைப்பு விடப்பட்டது. அரசாங்கம் பேரணிக்குத் தடைவிதித்து 144 தடை உத்தரவு பிறப்பித்தது. காலை 8 மணி முதல் பல்வேறு பகுதியிலிருந்து டாக்கா பல்கலைகழகத்தை நோக்கி மக்கள் பெருந்திரளாகக் கூடத் தொடங்கினர். டாக்கா பல்கலைக்கழகம், ஜகன்னாத் பல்கலைக்கழகம், டாக்கா மருத்துவக் கல்லூரி ஆகியவற்றின் மாணவர்களும் ஆயிரக்கணக்கில் திரண்டனர். சுமார் 25000 பேர் அங்கு கூடிவிட்டார்கள். போராட்டக் குழுவினர் அரசின் தடை உத்திரவை மதித்து அகிம்சை வழியில் போராட உறுதி பூண்டனர்.
Picture -mukto-mona.com

அப்போது நகரின் பிற பகுதியில் போலீசார் போராட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகை கொண்டு தாக்கிய செய்தி வந்தது. உடனே கூட்டத்தில் இருந்தவர்கள் 144 தடையை மீறிப் போராட வேண்டும் என்று வலியுறுத்தினர்.  25000 பேர் தடையை மீறி வெளியே சென்றால் மிகப் பெரிய கலவரம் நடக்கலாம். எனவே, அதைத் தவிர்த்து தடையை மீறி அமைதியான முறையில் போராட வேண்டும் என்று முடிவு செய்தனர். அதன் படி 10 பேர் கொண்ட ஒரு சிறு குழுவாக வெளியே ஊர்வலமாகச் சென்று காவல்துறையிடம் தங்களைக் கைது செய்ய ஒப்புவித்தார்கள். மூன்று 10 பேர் கொண்ட குழு சென்றபின், 10 பேர் கொண்ட பெண்கள் குழு சென்று கைதானது. அதைத் தொடர்ந்து பல குழுக்கள் கைதாகிக் கொண்டிருந்தன.
போராட்டக்காரர்களும் அமைதியாகவே தங்கள் போராட்டத்தை நடத்தி கொண்டிருந்தனர். தாய் மொழிக்காக அமைதியாகப் போராடிய மக்கள் மீது எந்த ஒரு காரணமும் இன்றிக் காவல் துறையினர் திடீரெனத் தடியடி நடத்தத் தொடங்கினர். மாணவர்கள் சிதறி ஓட முயன்ற போது காவல் துறையினர் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசத் தொடங்கினர்.
அதுவரை அமைதியாகப் போராடிய மாணவர்கள் கற்களையும், காலணிகளையும் வீசி காவல் துறையினரைத் தாக்கத் தொடங்கினர். இரு தரப்பினருக்கும் தொடர்ந்து சண்டை நடந்தது. மாலை 3 மணி வாக்கில் துப்பாக்கியுடன் வந்த மிகப் பெரிய படைப்பிரிவு மாணவர்களை நோக்கிச் சுடத் தொடங்கியது. ஆங்காங்கே மாணவர்கள் குண்டடி பட்டும், குண்டடியில் மடிந்தும் ரத்தம் சொட்டச் சொட்ட விழுந்தார்கள். எங்கும் ரத்த வெள்ளம்! மக்களைக் காக்கத் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு, சட்டம் ஒழுங்கு என்ற பெயரில் இளம் மாணவர்களின் உயிரைக் காவு வாங்கி வெறியாட்டம் ஆடிய களமாய் டாக்கா உயர்நீதி மன்றத்தைச் சுற்றியுள்ள பகுதிகள் காணப்பட்டன.
அடிபட்ட மாணவர்களையும், இறந்த மாணவர்களையும் மக்கள் மருத்துவக் கல்லூரிக்கு எடுத்துச் சென்றனர். அடக்குமுறையின் உச்சக் கட்டமாய்,  துப்பாக்கி ஏந்திய காவல்துறையினர் மருத்துவக் கல்லூரியில் புகுந்து இறந்த மாணவர்களின் உடல்களைப் பிணவறையிலிருந்து வலுக்கட்டாயமாக வாகனத்தில் எடுத்துச் சென்று ஒதுக்குப் புறமான சுடுகாட்டின் மறைவிடத்தில் தூக்கி எரிந்தனர். தீரத்துடன் அவர்களைத் தொடர்ந்து சென்ற ஒரு சில மாணவர்களால் அந்த உடல்கள் மீண்டும் கொண்டுவரப்பட்டு, அடுத்த நாள் மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டன.
இதற்கிடையே, ஒரு பகுதி மாணவர்கள் நீதி கேட்டு சட்டசபை நோக்கிச் சென்றனர். மாணவர்களின் படுகொலைச் செய்தி நகரில் தீபோலப் பரவியது. ஒட்டு மொத்த டாக்காவினரும் கடை அடைப்பும் வேலையை விட்டு வெளிநடப்பும் செய்து மாணவர்களுக்கு ஆதரவு அளித்தனர். இந்த போராட்டத்தின் சிறப்பு என்னவென்றால் இது முழுமையாக மாணவர்களால் முன்னெடுத்து செல்லப்பட்ட போராட்டம் என்பதுதான். எந்த ஒரு அரசியல் கட்சித் தலைவர்களும் இந்தப் போராட்டத்தை முன்னின்று நடத்தவில்லை. அடுத்த நாள், சுமார் 30000 பேர், இறந்த ஈகியர்களுக்கும் மொழிப் போராட்டத்திற்கும் ஆதரவாக டாக்காவின் புகழ்பெற்ற கர்சன் கட்டிடம் முன்பு கூடினர். மீண்டும் காவல்துறையின் வெறிச்செயலால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலர் சுட்டுக் கொல்லப்பட்டனர். சொந்த நாட்டிலேயே எதிரிகள் போலச் சூறையாடப்பட்டதால், அரசுக்கு எதிராக மக்களின் கோபம் உச்ச நிலையை அடைந்தது.
1954ம் ஆண்டு சட்டசபைக்கான தேர்தல் வந்தது. மக்களின்  கோபத்தைக் கண்டு அஞ்சிய முஸ்லிம் லீக் கட்சியினர் தேர்தலின் தோல்வியிலிருந்து தப்பிக்க வங்காள மொழியையும் தேசிய மொழியாக்கத் தீர்மானம் இயற்றினர். ஆனால், உருதுமொழி ஆதரவாளர்கள் கை ஓங்கி இருந்ததால், எதிர்ப்பும் வலுவாக இருந்தது. ஆளும் கட்சியும் அவர்களது எதிர்ப்புக்குப் பணிந்தது. வங்காள மொழியை தேசிய மொழியாக்க ஆதரிக்கும் தீர்மானத்தைத் திரும்பப் பெற்றுக் கொண்டது. அதன் விளைவாக ஆளும் கட்சியான முஸ்லீம் லீக் கட்சி தேர்தலில் தோல்வி அடைந்தது. வங்காள மொழியைத் தேசிய மொழியாக்கப் பாடுபட்ட ஐக்கிய முன்னணி வெற்றி பெற்றது.

தொடர்ந்த புறக்கணிப்பு
மொழித் திணிப்பு என்பது பிறமொழி மக்களின் பண்பாட்டின் மீதும், பொருளாதார வளர்ச்சியின் மீதும் நடத்தப்படும் தாக்குதலின் ஒரு பகுதியே. மேற்குப் பாகிஸ்தானின் வளர்ச்சிக்கு ஒதுக்கப்பட்ட தொகையில் பாதிகூட வங்காள மக்களுக்கு ஒதுக்கப்படவில்லை. ராணுவத்தில் வங்காள மக்களின் எண்ணிக்கை ஐந்து விழுக்காட்டிற்குக் கீழேயே இருந்தது. வங்கமொழி பேசும் கிழக்குப் பாகிஸ்தானியர்கள் ராணுவத்தில் பணிபுரியத் தகுதியற்றவர்கள் என்று மொழி அடிப்படையில் புறக்கணிக்கப்பட்டனர். அரசு உயர்பதவிகள் வங்காள மக்களுக்கு எட்டாக்கனியாகவே இருந்து வந்தது.
ஆட்சிகள் மாறும்போது வங்கமொழிக்குக் கிடைத்த சமநிலை பறிக்கப்படுவதும், மீண்டும் கிடைப்பதாகவும் தொடர்ந்தது. வங்காளியர்கள் தங்கள் சொந்த நாட்டிலேயே அந்நியர்கள் போல வாழும் நிலையே தொடர்ந்தது.
தனிநாடாக வங்காள தேசம்
கிழக்குப் பாகிஸ்தானியர்கள் தற்போதைய அமெரிக்க குடியரசு போன்ற "நடுவண் அரசில் கூட்டாட்சி, மாநிலத்தில் தன்னாட்சி" என்ற அடிப்படையில் ஆறு அம்சக் கோரிக்கையை வைத்தனர். அமெரிக்காவின் மாநில ஆட்சி உரிமையைக் காட்டிலும் அதிக அளவு உரிமையைக் கேட்பதாக அந்தக் கோரிக்கை இருந்தது.
1970ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் கிழக்குப் பாகிஸ்தானைச் சேர்ந்த அவாமி லீக்கின் கட்சியினர் ஷேக் முஜ்புர் ரஹ்மான் தலைமையில் மாபெரும் வெற்றி பெற்றனர். கிழக்குப் பாகிஸ்தானுக்கு  ஒதுக்கப்பட்ட 169 தொகுதிகளில் 167 தொகுதிகளை வென்றனர். இதனால் ஷேக் முஜ்புர் ரஹ்மான் ஒட்டு மொத்த பாகிஸ்தான் நாட்டின் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்படும் நிலை உருவானது. ஆனால், மேற்குப் பாகிஸ்தான் அரசியல்வாதிகளும், பாகிஸ்தான் ராணுவமும் அவரைப் பிரதமராக ஏற்றுக் கொள்ள மறுத்தனர்.
அதன் பின்பு நடந்த பல அரசியல் நிகழ்வுகள் பங்களாதேஷ் போருக்கு அடிகோலியது. இப்போரில் பாகிஸ்தான் ராணுவத்தினர் செய்த வன்முறை எண்ணிலடங்காது. போரில் இறந்த வங்காள தேசத்தினரின் எண்ணிக்கை 3 லட்சத்திலிருந்து 30 லட்சம் வரை இருக்கும் என்று கணக்கிடப்படுகிறது.
போர் நடந்த 1971ம் ஆண்டு  வங்காள அறிஞர்கள் வாழ்வில் ஒரு கருப்பு ஆண்டு ஆகும். வங்க மொழி அறிஞர்கள் முனீர் சவுத்ரி, ஹைதர் சவுத்ரி, அன்வர் பாஷா உட்பட சுமார்  1000க்கும் அதிகமான வங்கமொழி பேசும் அறிஞர்கள் கொல்லப்பட்டனர். டிசம்பர்  மாதம் 14ம் நாள் அறிஞர்கள் உயிர் ஈகிய நாளாக (Martyred Intellectuals Day) இன்றும் வங்க தேசத்தினர் கடைப்பிடிக்கின்றனர். அப்போதைய இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி துணிகரமாகக் கிழக்குப் பாகிஸ்தானுக்கு ஆதரவாகப் போரில் தலையிட்டதால் இறந்தவர் எண்ணிக்கை இந்த அளவோடு நின்றது.
மொழிப்போர் ஈகியரின் நினைவுச் சின்னம் (ஷாகித் மினார்)
1952ல் மொழிப்போர் நடக்கும் போது ஒரு புறம் ரத்த ஆறு ஓடிக் கொண்டிருக்கும் போதே மாணவர்கள் ஒன்று கூடி மாணவர்கள் இறந்து விழுந்த டாக்கா மருத்துவக் கல்லூரி வளாகத்தில்  மொழிப்போர் ஈகிகளுக்கு நினைவுச் சின்னம் அமைக்கத் தொடங்கினர். ஊரடங்கு உத்தரவு இருந்த போதிலும் கூட நினைவுச் சின்னத்தை இரவோடு இரவாகக் கட்டி முடித்து விட்டனர். ஒரு சில நாட்களிலேயே காவல்துறையும் ராணுவமும் அதை இடித்து அழித்தனர்.
ஐக்கிய முன்னணியின் வெற்றிக்குப் பின்னர், மாநில ஆட்சியில் வங்காள மொழியின் பயன்பாட்டை அதிகரிக்கும் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.  மொழிப்போர் ஈகியரின் நினைவுச் சின்னம் மீண்டும் எழுப்பப்பட்டது. அவர்களது  அயராத முயற்சியால் பிப்ரவரி மாதம் 29ம் நாள் 1956ம் ஆண்டு வங்காள மொழி நாட்டின் தேசிய மொழியாக அரசு ஒப்புதல் அளித்தது. உருது மொழிக்கு இணையான நிலையும் மதிப்பும் வங்காள மொழிக்கும் கிடைத்தது.
1971ம் ஆண்டு நடந்த வங்காள தேசப் போரின் போது, பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் அந்த நினைவுச் சின்னத்தை உடைத்து நொறுக்கியது. வங்காள தேசம் தனிநாடாக உருவான பின் மீண்டும் நினைவுச் சின்னம் உருவாக்கப்பட்டது. அது இன்று வரையில் உலக அளவில் தாய்மொழிக்காக உயிர் நீத்தவர்களின் நினைவுச் சின்னமாக வரலாற்றில் அழியா இடத்தை பெற்றுள்ளது.
உலகத் தாய்மொழி நாள்
தாய்மொழி காக்க வங்காள தேசத்தினர் நடத்திய போராட்டம் உலக வரலாற்றில் நீங்கா இடம் பெற்றிருக்கிறது. இந்தப் போராட்டம் பெரிய அளவில் தொடங்கப்பட்ட பிப்ரவரி மாதம் 21ம் நாள் உலக மக்களால் மறக்கமுடியாத நாள். UNESCO நிறுவனம் உலகெங்கும் தாய்மொழி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், பல மொழி பண்பாடு சார்ந்த சமுதாயத்தை உறுதி செய்யவும் இந்த நாளை உலகத் தாய்மொழி நாளாக அறிவித்துள்ளனர்.
தாய்மொழியே ஒரு இனத்தின் அடையாளம். மொழி தாழ்ந்தால் இனம் தாழும். மொழி உயர்ந்தால் இனம் உயரும். தாய்மொழி உணர்வைப் பாவேந்தர் பாரதிதாசன் இப்படிக் கூறுகிறார்:
செந்தமிழே! உயிரே! நறுந் தேனே!
செயலினை மூச்சினை உனக்களித் தேனே!
நைந்தா யெனில்நைந்து போகுமென் வாழ்வு,
நன்னிலை உனக்கெனில் எனக்குந் தானே!


இந்த கட்டுரை சான்பிராசிஸ்கோ தமிழ் மன்றத்தின் விழுதுகள் இதழில் வெளிவந்தது
Reference:
http://www.sas.upenn.edu/~dludden/LuddenFrontlineHeroes.htm
https://en.wikipedia.org/wiki/Bangladesh_Liberation_War

Picture https://nonviolentmovements.wordpress.com/2013/07/16/so-far-the-1st-non-violent-movement-language-movement-of-1952/