Monday, January 23, 2012

பரம்பிகுளம் திட்டம் - தமிழகம் கேரளாவிடமிருந்து நீர் வாங்கிய கதை 2


முதல் பதிவில் பரம்பிக்குளம் திட்டத்தின் முதல் கட்டம் எப்படி செயல்படுத்த பட்டது என்பது பற்றியும் இரண்டாம் கட்டம் நிறைவேற்ற கேரள அரசு தடையாக இருந்தது பற்றியும் மத்திய அரசிடம் மத்யஸ்தம் போகும் முன் கேரள முதல்வரை தனியாக பார்த்து பேச சி.சுப்ரமணியம் அவர்கள் முடிவு செய்தார் என்றும் பார்த்தோம்.

பரம்பிகுளம் திட்டம் - தமிழகம் கேரளாவிடமிருந்து நீர் வாங்கிய கதை

தொடர்ந்து நடந்ததை சி.சுப்ரமணியம் அவர்களின் சுயசரிதையில்(திருப்பு முனை) பின் வருமாறு விவரிக்கிறார்.

கேரள முதல்வர் ஏற்றார்

பட்டம் தாணுப்பிள்ளை உடனடியாக ஒரு முடிவுக்கு வர முடியவில்லை.. உடன்பாடு காண்பதில் நாங்கள் ஏற்கெனவே தோல்வி அடைந்துவிட்டோம் என்றும் மீண்டும் பேச்சு நடத்துவதில் பயனில்லை என்றும் அவர் கூறினார்."நீங்கள் கேரள முதமைச்சர் மட்டுமல்ல; நீங்கள் ஒரு தேசிய தலைவர் என்ற வகையில் நீங்கள் என்ன முடிவு எடுத்தாலும் அதை நான் ஏற்க தயாராக இருக்கிறேன்." என்று நான் கூறினேன்.

எனது பேச்சு பட்டம் தாணு பிள்ளையை திடுக்கிட வைத்தது. தகராறின் விவரங்கள் அவருக்கு முழுமையாக தெரியாது என்பதை அறிந்தேன்."திரு. சுப்ரமணியம் அவர்களே! எது சிறந்த தீர்வாக இருக்கும் என்று நீங்கள் கருதுகிறீர்கள்?" என்று அவர் சிறிது நேர யோசனைக்கு பிறகு அவர் கேட்டார். இந்த திட்டத்தின் மூலம் ஏராளமான நீர் கிடைக்கும். ஆனால் தகராறு ஒரு சிறிய அளவு நீர் பற்றியதே என்று நான் குறிப்பிட்டேன்.

நீரை இரு மாநிலங்களும் நியாயமாக பகிர்ந்து கொள்ள என்ன முறையைப் பின் பற்றலாம் என்று அவர் கேட்டார். நான் ஒரு திட்டத்தை அவரிடம் சமர்பித்தேன். அவர் அதை ஒப்புகொண்டார்.

அவர் எந்த முடிவை எடுத்தாலும் அதை நான் ஏற்பேன் என்று நான் முதலில் மனந்திறந்து கூறியதால் தான் அவர் எனது திட்டத்தை ஏற்று கொண்டார் என்று கருதுகிறேன்.எனது திட்டம் இரு மாநிலங்களுக்கும் நியாயமாக இருக்கும் என்று அவர் கருதி இருக்க கூடும்.

நம்பிக்கையின் பயன்

பட்டம் தாணுப்பிள்ளை எனது திட்டத்தை ஏற்று கொண்டார் என்று காமராஜரிடம் டெலிபோன் மூலமும், பிறகு நேரிலும் தெரிவித்தேன்.காமராஜர் மகிழ்ச்சியும் வியப்பும் அடைந்தார்.

விவாகாரத்தை நாங்கள் சுமூக தீர்த்து கொண்டோம் என்றும், மத்திய அரசின் மத்தியஸ்தம் அவசியம் இல்லை என்றும் அடுத்த நாள் மத்திய உள் துறை அமைச்ச்ர் பந்த் அவர்களிடம் தெரிவித்தோம்.முதல் நாள் மாலை கொச்சி இல்லத்தில் என்ன நடந்தது என்பதையும் பந்த் அவர்களிடம் விவரமாக கூறினேன்.

பந்த் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்.இரு தரப்பினரையும் அவர் பாராட்டினார்."நம்பிக்கை வைத்தால் நம்பிக்கை பிறக்கும்" என்ற முது மொழி மிகவும் சரியே என்பதை இந்த நிகழ்ச்சி எடுத்துக் காட்டுகிறது.

இன்று தீர்க்க படமுடியாதவை என்று கருதபடும் பல விஷயங்களுக்கு நம்பிக்கை, நல்லெண்ணம் ஆகியவற்றின் அடிப்படையில் தீர்வு காணலாம் என்பதற்கு இது ஒரு எடுத்துகாட்டு.

ஆளியாறு திட்டம்

பட்டம் தாணுப்பிள்ளை தலைமையிலான கேரள அரசுக்கும் தமிழ்நாடு அரசுக்கும் மேற்குறிப்பிட்டவாறு உடன்பாடு ஏற்பட்டதும், திட்டத்தின் இரண்டாவது கட்டம் அமல் செய்யபட்டது.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் சுமார் 70000 ஏக்கர் புஞ்ஜை நிலங்களுக்குப் பாசனவசதியும், ஆளியாறு நதி ஏற்கனவே பாசன வசதி அளித்துவந்த சுமார் 70000 ஏக்கர் நிலங்களுக்குத் தண்ணீர் தங்கு தடையின்றி கிடைக்கும் ஏற்பாட்டையும் திட்டத்தின் இரண்டாவது கட்டம் அளித்தது.

பழைய ஆளியாறு திட்டமும் பரம்பிக்குளம் திட்டமும் ஒருங்கிணைக்கப்பட்டன. இவ்வாறு இதற்குப் பரம்பிக்குளம்-ஆளியாறு திட்டம் என்று பெயர் வந்தது.

மூன்றாவது திட்டம்

தி.மு.க ஆட்சி பொறுப்பை ஏற்ற பிறகு இந்த திட்டத்தின் மூன்றாவது கட்டம் குறித்து உடன்பாடு காண முயற்சி நடந்தது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக இப்போது கூட (1994) எந்தவிதமான தீர்வும் ஏற்படவில்லை.

ஆயக்கட்டு பகுதி நிர்ணயிக்க பட்டு இதற்கான கால்வாய்களும் தோண்டப்பட்ட பிறகு, கோயம்புத்தூர் மாவட்டத்தில் இதர வறண்ட பகுதிகளுக்கும் பசன வசதியை விரிவு படுத்தவேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்தன. தி,மு.க அரசும் அதற்கு பிறகு அ.இ.அ.தி.மு.க அரசும், கூடுதல் நீர் எதுவும் இல்லாமல் புதிய கால்வாய்களை வெட்டி ஆயகட்டு பகுதியின் பரப்பை அதிக படுத்தி கொண்டே வந்தன. இப்போது (1994) இந்த திட்டத்தின் ஆயகட்டு பகுதியின் பரப்பு 2.5 லட்சம் ஏக்கர்களுக்கும் அதிகம். ஆனால் இவ்வளவு பெரிய ஆயகட்டு பகுதிக்கு போதிய நீர் வரத்து இல்லை.

இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டும், சுமார் 3 மாதங்களுக்கு தண்ணீர் விடப்படுகிறது.ஆயகட்டு பகுதிக்காக கால்வாய்களை வெட்டுவதற்கு அவசியமற்ற செலவு செய்யபட்டுள்ளது. ஏரளமான பரப்பு நிலம் பாசன கால்வாய்களாக தோண்டபட்டிருக்கிறது. தேர்தலில் அந்த பகுதியை சேர்ந்த மக்களின் வாக்குகளை பெருவதற்காக தேர்தல் நேரத்தில் இந்த கால்வாய்கள் வெட்ட பட்டுள்ளன.

கட்சி அரசியல்

நமது நட்டில் வளர்ச்சி திட்டங்களில் கூட கட்சி அரசியல் நுழைந்து சரியான முடிவுகளை எடுக்கமுடியாமல் சிரமங்களை உண்டாக்குகிறது. செலவுகளுக்கு ஏற்ற பயன்கள் கிடைக்குமா என்பது கவனிக்க படாமல், பணம் விரயம் செய்யபடுகிறது.இதனால் தான் நமது நாட்டில் பல பாசன திட்டங்கள் எதிர்பார்க்க படும் பயன்களை தருவது இல்லை; பொருளாதார ரீதியில் அவை கட்டுபடியாகவும் இருப்பது இல்லை.


காங்கிரஸ் ஆட்சியில் மக்களுக்கு பயன் தரும் திட்டங்கள் மேற்கொள்ள பட்டபோது தேர்தலில் வாக்களர்களின் ஆதரவை அவை பெறவில்லை.பாசன திட்டங்கள் நிரைவேற்றபட்ட போது, சில சந்தர்ப்பங்களில் தண்ணீர் மிகவும் தேவைபட்ட பகுதிகளுக்கு அது கிடைக்காமல் போயிற்று என்பது இதற்கு ஒரு காரணம்.பாசன வசதியை பெற்றவர்கள் மிக்க மகிழ்ச்சி அடைந்தார்கள். ஆனால் அதே சமயத்தில் பாசன வசதி பெறாதவர்கள் ஏமாற்றம் அடைந்தார்கள் என்பதும் உண்மை.

அரசியல் காரணங்கள்

புதிய திட்டங்களை வகுக்கும் போது இதை கருத்தில் கொள்ளவேண்டும்.தேர்தலில் வாக்குகளை பெற உதவும் என்ற நோக்கம்,எந்த திட்டத்திற்கும் அடிப்படையாக இருக்க கூடாது.அரசியல் நோக்கங்களை மறுத்துவிட்டு,ஒவ்வொரு திட்டத்தையும் அதன் தகுதியின் அடிப்படையில் தான் முடிவு செய்யவேண்டும்,ஏனெனில் ஒரு திட்டத்தினால் ஒருவர் பயனடைந்தால் ஏமாற்றம் அடைபவர்கள் பலர் இருப்பார்கள்.பிரிட்டிஷ் ஆட்சி காலத்தின் போது அன்றைய சென்னை மாகான முதலமைச்சராக இருந்த பனகல் ராஜா "ஒருவரின் நியமனம் பத்து பேருக்கு ஏமாற்றம்" என்று கூறுவது வழக்கம், அரசியல்வாதிகள் இதை கருத்தில் கொண்டு ஒரு திட்டத்தினால் மக்கள் ஆதரவு கிடைக்கிறதா அல்லது அரசியல் ரீதியாக பலம் பெருகுமா என்றெல்லாம் பார்க்காமல், பாரபட்சம் இல்லாமல் செயல்படுவது நலம்.ஓர் அரசியல் கட்சியின் அல்லது ஒரு தனி நபரின் சாதனைகள் குறித்து வருங்கால சந்ததியார் முடிவு செய்ய விட்டுவிட வேண்டும்.

சி.சுப்ரமணியம் அவர்களின் சுயசரிதையிலிருந்து மேற்கூறிய பகுதிகளை எடுத்து பதிவிட்டுள்ளேன்.
புத்தகம் பெயர்: என் வாழ்க்கை நினைவுகள் . முதல் தொகுதி-திருப்பு முனை.

சி.சுப்ரமணியம் போன்ற அரசியல்வாதி மீண்டும் தமிழகத்துக்கு கிடைத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்!

--


Sunday, January 22, 2012

பரம்பிகுளம் திட்டம் - தமிழகம் கேரளாவிடமிருந்து நீர் வாங்கிய கதை
கேரளாவில் கடலில் கலக்கும் நீரை தமிழ்நாடு உபயோகித்து கொள்ள பிரிட்டிஷ் காலத்தில் போட பட்ட திட்டங்களை(முல்லை பெரியாறு) தற்போதய கேரள அரசியல்வாதிகளும், மக்களும் கண்மூடி தனமாக எதிர்ப்பதை பார்க்கிறோம். இன்றைய தமிழக மற்றும் கேரள அரசியல்வாதிகளின் குறுகிய மற்றும் அரசியல் லாபம் பார்க்க தூண்டும் பார்வையே இதற்கு முக்கிய காரணம்.

ஆனால் ஒரு தமிழக அரசியல்வாதி கேரள அரசிடம் நயமாக பேசி தமிழகத்தின் பல்லாயிரம் ஏக்கர் நிலங்களுக்கு பாசன வசதி பெரும் வகையில் கேரள நீரை வாங்கி தந்தார் என்றால் ஆச்சிரியமாக உள்ளது அல்லவா?அப்போதைய கேரள ஆட்சியாளர்களுக்கு உண்மை புரியும் படியும் அவர்களது மனநிலை அறிந்து அதற்கேற்றவாறு சாதுர்யமாக பேசி தமிழகத்துக்கு வேண்டிய தேவைகளை நிறைவேற்றினார்.

அந்த அரசியல்வாதியின் பெயர் சி.சுப்ரமணியம்.அவர் நிறைவேற்றிய திட்டம் பரம்பிகுளம் ஆளியாறு திட்டம்.அதை நிறைவேற்றிய விதத்தை தனது சுய சரிதையான "திருப்பு முனை" என்ற நூலில் அழகாக விளக்குகிறார். அந்த புத்தகத்தில் உள்ளதை அப்படியே பதிவிடுகிறேன்.இன்றைய அரசியல்வாதிகளும், இளைய தலைமுறையினரும் கட்டாயம் படிக்க வேண்டிய பதிவு.

சி.சுப்ரமணியம் அவர்களின் சுயசரிதை(திருப்பு முனை)யிலைருந்து --

பரம்பிக்குளம் திட்டம்

மேற்கு தொடர்ச்சி மலைகளில் உற்பத்தி ஆகி மேற்கு நோக்கி ஓடி கொண்டிருக்கும் நதிகளின் நீரைக் கிழக்கு திசையில் திருப்பி விடுவதற்காக ஒரு திட்டம் மேற்கொள்ள பட்டது. அது தான் பரம்பிக்குளம் திட்டம்.

சில நதிகள் தமிழ் நாட்டில் உற்பத்தியாகி, மேற்கு நோக்கிச் சென்று கேரளத்தில் பாய்கின்றன.கோயம்புத்தூரை சேர்ந்த பிரபல காங்கிரசாரும், கோவை மாவட்ட போர்டின் தலைவராய் இருந்தவருமான வி.கே. பழனிச்சாமி கவுண்டர் பரம்பிக்குளம் திட்டம் பற்றி சிறிது காலமாக வற்புறுத்தி வந்தார்.

1952 -ம் ஆண்டில் சென்னை மாகானச் சட்ட பேரவை உறுப்பினராக பழனிச்சாமி கவுண்டர் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் சட்ட பேரவையில் உரையாற்றுகையிலும் இந்த திட்டம் பற்றி அடிக்கடி குறிப்பிட்டார். எனக்கு இந்த திட்டம் பற்றியோ அதன் இட அமைப்புக் குறித்தோ அப்போது எதுவும் தெரியாது.

அந்த திட்டத்தை எங்கே அமைக்கலாம் என்பது பற்றிப் பார்வையிட வருமாறு பழனிச்சாமி கவுண்டர் என்னை அழைத்தார். மேற்கு தொடர்ச்சி மலை பாதையில் சுமார் 48 கி.மி தொலைவு நாங்கள் காரில் சென்றோம். பின்னர், யானைகள் மீது ஏறி சென்று நதிகளின் உற்பத்தி பகுதியை அடைந்தோம். அந்த பயணம் ஆபத்து நிறைந்ததாக இருந்தது என்ற போதிலும், பரம்பிக்குளம் திட்டத்தினால் ஏற்பட கூடிய பயன்கள் குறித்து நான் நன்கு அறிந்து கொள்ள முடிந்தது.

இந்த திட்டம் குறிந்து ஆரம்ப அறிக்கை ஒன்றை தயாரிக்குமாறு பாசனை துறை தலைமை பொறியாளரிடம் கூறினேன். இதற்கிடையே திட்டப் பகுதிக்கு நான் சென்றது பற்றி கேரள பத்திரிக்கைகளில் செய்திகள் வெளியாயின. கேரள அரசின் அனுமதி இல்லாமல் நான் அங்கு எவ்வாறு செல்லலாம் என்று சில மலையாளப் பத்திரிக்கைகள் கேள்வி எழுப்பின.இதை கண்டு நான் வியப்புற்றேன். இந்திய பிரஜை ஒருவர் இந்தியாவின் எந்த பகுதிக்கும் செல்ல எவரிடம் இருந்தும் அனுமதி பெற வேண்டிய அவசியம் இல்லை. எனினும் குறுகிய மனபான்மைக்குத்தான் எத்தனை விசித்திர முகங்கள்.

கேரள முதல்வர் இசைவு

அப்போது ஈ.எம்.எஸ்.நம்பூதிரிபாட் கேரள முதலமைச்சராக இருந்தார். பாசன துறை அமைச்சராக வி.ஆர்.கிருஷ்ணய்யர் பொறுப்பு வகித்து வந்தார்.அவர்கள் இருவரும் எனது சிறந்த நண்பர்கள். 1932ம் ஆண்டில் வேலூர் சிறையில் நான் இருந்த போது நம்பூதிரிபாட் அங்கே இருந்தார்.

கேரள முதல்வரையும் பாசன துறை அமைச்சரையும் சந்திக்க ஏற்பாடு செய்து கொண்டு, நான் கேரளத்துக்கு சென்றேன்.என்னுடன் அதிகாரிகள் எவரையும் அழைத்து செல்லவில்லை. பரம்பிக்குளம் திட்டம் பற்றி நம்பூதிரி பாட்டிடம் பேசினேன். அவர் கிருஷ்ணய்யரையும் எங்களது பேச்சில் கலந்து கொள்ள அழைத்தார். நாங்கள் பல்வேறு அம்சங்களையும் பற்றி விரிவாக விவாதித்தோம். இந்த திட்டம் பற்றி ஒரு முழுமையான அறிக்கையைத் தந்தால் இது குறித்து பரிசீலிப்பதாக நம்பூதிரிபாட் ஒப்பு கொண்டார். இவ்வாறு ஒரு அறிக்கையைத் தயாரிக்க தமிழ்நாடு அரசு பொறியாளர்கள் திட்ட பகுதிக்கு செல்ல வேண்டி இருந்தது.திட்ட பகுதியில் கேரளத்தில் உள்ள பகுதியும் அடங்கி இருந்தது.எனவே நமது பொறியாளர்கள் கேரள பகுதியையும் ஆய்வு செய்வதற்கு அனுமதி வேண்டினேன். அது உடனே ஒப்பு கொள்ள பட்டது.

பின்னர், திட்டம் குறித்து முழுமையாக ஆய்ந்து, அறிக்கை தயாரிக்குமாறு தமிழ்நாடு பொறியாளர்களுக்கு கூறினேன். ஒரு பள்ளதாக்கிலிருத்து மற்றொரு பள்ளதாக்கிற்கு நீரோட்டத்தை மாற்றும் முயற்சி இந்தியாவிலேயே அப்போது தான் முதன்முறையாக மேற்கொள்ள பட்டது. இதற்காக பெறிய மலைகளை குடைந்து நீண்ட சுரங்க பாதைகளை அமைக்க வேண்டி இருந்தது.

இந்த தொழிற்நுட்பம் நமக்கு புதிது. எனினும் இந்த திட்டத்தை தங்களால் செயல்படுத்த முடியும் என்று தமிழ்நாடு அரசு பொறியாளர்கள் நம்பிக்கை தெரிவித்தார்கள்.எனினும் திட்டத்தை செயல்படுத்த குறிப்பாகச் சுரங்க பாதைகளை அமைக்க ஓரளவு வெளி நாட்டு உதவி தேவை படும் என்று அவர்கள் கூறினர்.

நீர் பகிர்வு

திட்டத்தின் முதற் கட்டத்தில் பிரதான நதியான் பரம்பிக்குளம் திசையைய்த் திருப்ப வேண்டி இருந்தது. திட்டத்தின் இரண்டாவது, மூன்றாவது கட்டங்களில் மூன்று சிறிய நதிகளை இந்த பிரதான திட்டத்துடன் ஒருங்கிணைக்க தீர்மானிக்க பட்டது.

ஒரு ஆண்டில் மொத்தம் எவ்வளவு நீர் கிடைக்கும் என்பதை மதிப்பிட வேண்டியிருந்தது.முப்பது ஆண்டுகளில் திட்ட பகுதிகளில் பெய்த மழை சம்பத்தமான புள்ளி விபரங்களை கருத்தில் கொண்டு, மதிப்பீடு செய்யபட்டது.

இந்த திட்டத்தின் மூலம் கிடைக்க கூடிய நீரைத் தமிழ்நாடு, கேரளாவும் எவ்வாறு பகிர்ந்து கொள்வது என்பது பற்றி அரசியல் அளவிலும், தொழில்நுட்ப நிபுணர்கள் அளவிலும் மிக விரிவான பேச்சுகள் நடந்தன.

கேரள முதலமைச்சர் ஒத்துழைத்ததால் திட்டத்தின் முதல் கட்டம் சம்பந்தமாக இந்த விஷயத்தில் ஓர் உடன்பாடு ஏற்பட்டது. இரண்டாவது, மூன்றாவது கட்டங்கள் அமலாகத்தொடங்கியதும், மேற்கொண்டு பேச்சுக்களை நடத்துவது என்று முடிவு செய்ய பட்டது. மத்திய அரசின் தலையீடு அல்லது மத்தியஸ்தம் எதுவும் இல்லாமல் இரு மாநிலங்களுக்கு இடையே இவ்வாறு ஓர் உடன்பாடு உருவானது, உண்மையிலேயே பெருமைக்குறிய விஷயம் ஆகும்.

இந்த உடன்பாட்டை தொடர்ந்து பரம்பிக்குளம் திட்டம் மிகவும் தீவிரமாக செயல் படுத்தபட்டது. ஒரு கட்டத்தில் திட்ட பகுதியை பார்வையிட வருமாறு நேருஜியை நான் அழைத்தேன். திட்டம் செயல் படுத்த பட்ட இடத்தில் ஒரு விருந்தினர் விடுதியை சிறந்த முறையில் அமைத்திருந்தோம். அதை திறக்க வருமாறு நேருஜியை அழைத்தோம். நேருஜி வந்து அதை திறந்து வைத்தார். அந்த திட்டம் அவரை பெரிதும் ஈர்த்தது. தமிழ்நாடு பொறியாளர்களின் திறமையை நேருஜி பாராட்டினார்.

இரண்டாவது கட்டம்

பின்னர் இந்த திட்டத்தின் இரண்டாவது கட்டம் குறித்து பேச்சு நடத்தவேண்டி இருந்தது. இதற்கிடையே கேரளத்தில் கம்யூனிஸ்ட் அமைச்சரவை விழுத்து விட்டது. காங்கிரஸ் ஆதரவுடன் பிரஜா சோசியலிஸ்ட்டுக் கட்சியின் சார்பில் ஒரு அமைச்சரவை அமைக்க பட்டிருந்தது. பட்டம் தாணுப்பிள்ளை முதலமைச்சராக இருந்தார். நான் அவருடன் பேச்சு நடத்தினேன்.

கம்யூனிஸ்டு அமைச்சரவையுடன் சுமூகமாக பேசி உடன்பாடு கண்ட எனக்கு,பட்டம் தாணுப்பிள்ளையைச் சமாளிப்பது சிரமமாக இருந்தது. நானும் பட்டம் தாணுப்பிள்ளையும் உடன்பாடு காண முடியவில்லை. எனவே தலையிட்டு மத்யஸ்தம் செய்யும் படி மத்திய உள்துறை அமைச்சர் கோவிந்த வல்லப பந்த்தை நாங்கள் கேட்டு கொண்டோம். இரு தரப்பினரையும் அவர் டெல்லிக்கு அழைத்தார்.


பட்டம் தாணுப்பிள்ளையும், அவரது பாசன துறை அமைச்சரும், கேரள பொறியாளர்களும் டெல்லிக்கு சென்றார்கள். காமராஜரும், நானும் தமிழ்நாடு அரசு பொறியாளர்களுடன் டெல்லிக்கு பயணமானோம்.

மத்திய உள்துறை அமைச்சர் ஏற்பாடு செய்திருந்த கூட்டம் அடுத்த நாள் நடைபெறுவதாய் இருத்தது.அதற்கு முன்னர் ,பட்டம் தாணுப்பிள்ளையைத் தனியாகச் சந்தித்துப் பேசலாம் என்று எனக்கு ஓர் யோசனை தோன்றியது. உடனே அவருக்கு டெலிபோன் செய்தேன். அவர் தங்கி இருந்த கொச்சி இல்லத்தில் என்னை சந்திக்க அவர் உடனடியாக ஒப்பு கொண்டார்.

அவ்வாறே அவரைச் சந்தித்தேன்.பரம்பிக்குளம் திட்டத்தின் முதல் கட்டம் குறித்து மத்திய அரசின் தலையீடு இல்லாமல் கேரளமும், தமிழ்நாடும் ஒரு உடன்பாட்டுக்கு வர முடிந்ததை அவருக்கு சுட்டி காட்டினேன். இந்த கட்டத்தில் மத்திய அரசு இந்த விஷயத்தில் மத்தியஸ்தம் செய்வதை நான் விரும்பவில்லை என்றும், கேரளமும் தமிழ்நாடும் மத்தியஸ்தம் இல்லாமல் முடிவு செய்வதையே நான் விரும்புகிறேன் என்று சொன்னேன்.

கேரள முதல்வரை சி.எஸ் எவ்வாறு சமாளித்தார் என்றும் அந்த திட்டத்தின் இன்றையை நிலை மற்றும் அந்த திட்டத்தை திராவிட இயக்கங்கள் எவ்வாறு தொடர்ந்தன என்பது பற்றியும் அடுத்த பதிவில் பார்ப்போம்

--

Thursday, January 19, 2012

உலகிலே அதிக லாபகரமான வங்கி!

உலகின் லாபகரமான வங்கி எதுவாக இருக்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? சேஸ் வங்கி?சிட்டி வங்கி?ஸ்விஸ் வங்கி? இல்லை.அந்த வங்கியின் லாபம் எக்சான் மொபில்,ஆப்பில் மற்றும் IBM நிறுவனங்களின் கூட்டு லாபத்தை விட அதிகம்.அதன் லாபம் $78 பில்லியனுக்கும் மேல்.கேட்கவே ஆச்ச்சரியமாக இருக்கிறதா? வங்கியின் பெயரை அறிந்து கொள்ள ஆவலாக உள்ளது. அந்த வங்கியின் பெயர் தான் பெடரல் ரிசர்வ் வங்கி.பெடரல் ரிசர்வ் வங்கி தான் உலகின் பொருளாதாரத்தின் அஸ்திவாரம்.இந்த லாபம் எப்படி வந்தது என்று பார்த்தால் இன்னும் வியப்பாக இருக்கும்

1.அமெரிக்க அரசாங்கம் அளவிற்கு மீறிய செலவீனங்களால் (போர், நிதி நெருக்கடியிலிருந்து பன்னாட்டு நிறுவனங்களை காப்பாற்றுதல்,மக்கள் நல திட்டங்கள்) பெருமளவில் கடன் வாங்க வேண்டி உள்ளது. அமெரிக்க அரசு மட்டுமன்றி அரசு சார்ந்த நிறுவனங்களும் பெருமளவில் கடன் வாங்க தேவை உள்ளது.

2.அரசு கடனை கருவூல பத்திரமாக விற்பனை செய்கிறது.

3.அந்த பத்திரத்தை பெருமளவிற்கு பெடரல் ரிசர்வ் வாங்குகிறது.(இதற்கு நடுவே வேறு சில நிகழ்வுகள் இருந்தாலும் எளிமைக்காக இவ்வாறு வைத்து கொள்வோம்)

4.அது போன்ற பத்திரங்களின் மதிப்பு சுமாரக $3 டிரில்லியன் டாலர்கள் ஆகும். அந்த அளவு பணத்தை சம்பாதிக்க எவ்வளவு உழைத்திருக்க வேண்டும் என்று நீங்கள் நினைக்க தோன்றும். ஆனால் இந்த பணம் உழைப்பில் வருவதில்லை. கம்ப்யூட்டரில் ஒரு கிளிக் செய்தால் இந்த பணம் உருவாகி விடும். கடந்த காலங்களிலாவது பிரிண்ட்டிங் பிரஸ் வைத்து பிரிண்ட் செய்ய வேண்டும்.

5.அவ்வாறு உருவாக்க பட்ட பணத்தை அரசுக்கு கடனாக கொடுக்கிறது.

6.அரசு அந்த கடனுக்கு வட்டியாக பணத்தை பெடரல் ரிசர்விற்கு கொடுக்க வேண்டும்.

7.அவ்வாறு கிடைத்த வட்டியின் மதிப்பு $70 பில்லியன் டாலருக்கு மேல்.

8.அந்த வட்டி பணத்தை பெடரல் ரிசர்வ் வங்கி என்ன செய்யும்? தன் செலவுக்கு போக மீண்டும் அரசிடமே கொடுக்கும்.

அதாவது அரசிடம் கடன் கொடுத்து அதற்கு வட்டி வாங்கி, லாபமாக உள்ள அந்த வட்டியை அரசுக்கே திரும்ப கொடுக்கும். ஆக மொத்தம் அரசுக்கு வட்டியில்லா கடன் கிடைக்கிறது.

உலக பொருளாதாரத்தின் அஸ்திவாரமாக பொது நாணயமாக உள்ள டாலர் பெருமளவில் உருவாக்கபடும் கதை இது தான்.
பிற நாடுகள் இது போல் செய்வதில்லையா என்று நினைக்க தோன்றும்.இந்திய ரிசர்வ் வங்கி கூட சுமார் $2 பில்லியன் (சிறிய அலவில்?) பணத்தை உருவாக்கி உள்ளது.

அதற்கு பணவீக்கம் மற்றும் பணத்தின் மதிப்பு சரிவு போன்ற கடுமையான விலையை கொடுக்க வேண்டும். ஆனால் டாலர் சர்வதேச பொது நாணயமாக உள்ளதாலும் அமெரிக்க பொருளாதாரம் பெரியதாக உள்ளதாலும், முதலீட்டாளர்களுக்கு வேறு மாற்று (தங்கம் தவிர) இல்லாததாலும் டாலர் மிக கடுமையான விலையை என்றுமே கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை.

--

Tuesday, January 10, 2012

ரான் பால் - மாற்றமா? ஏமாற்றமா?

அமெரிக்காவில் பொதுஜன பத்திரிக்கைகளால் முற்றிலும் புறக்கணிக்க பட்டும் குடியரசு கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர்க்கான போட்டியில் முன்னனியில் நிற்கும் தலைவர் தலைவர் ரான் பால்.அமெரிக்க அரசியலில் லிபரடேரியன் என அழைக்கபடும் தனி மனித சுதந்திரம் தத்துவத்தை அடிப்படையாக கொண்டு ஜனாதிபதி வேட்பாளர் வரை நெருங்கியிருக்கும் தலைவர் ரான் பால்.இவருக்கு ஆதரவு வலது சாரி தேநீர் விருந்து (Tea party Movement) இயக்கத்தினரிடமும் இருக்கிறது. இடது சாரி வால் ஸ்ட்ரீட் ஆக்கிரமிப்பு (Occupy Wallstreet) இயக்கத்தினரிடமும் இருக்கிறது.இவர் ஒரு ஆஸ்திரிய பொருளாதார வல்லுனர் ஆவார். போலி முதலாளித்துவத்திற்கும் லிபரடேரியன் இயக்கத்திற்குமான வித்தியாசத்தை அமெரிக்க மக்களுக்கு மாநிலம் மாநிலமாக சென்று பிரச்சாரம் செய்து வருகிறார்.(நம்மூரில் கூட இந்த வித்தியாசம் புரியாமல் பல பேர் லிபரடேரியன் இயக்க ஆதரவாளர்களாக தங்களை நினைத்து குழம்பி உள்ளனர். இங்கு வந்து அவர்களுக்கும் விளக்கம் கூறினால் நன்றாக இருக்கும்).

முதலில் லிபரடேரியன் தத்துவம் என்றால் என்ன என்று பார்ப்போம்.லிபரடேரியன் இயக்கம் என்பது தனி மனித சுதந்திரம் தான் சமூகத்தின் அடிப்படை தேவை என்ற தத்துவத்தை அடிப்படையாக கொண்டது. மேலை நாடுகளில் தற்போது பிரபலமாகி வரும் இந்த தத்துவம் இந்தியாவிலும் கூடிய விரைவில் பரவ வாய்ப்புள்ளதால், இது பற்றி அறிந்து கொள்வது அவசியம் ஆகும்.லிபரடேரியன் தத்துவத்தில் பல பிரிவுகள் உள்ளது. உண்மையான தனி மனித சுதந்தரம் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்றால் அதற்கேற்ற பொருளாதார மற்றும் சமூக சமநிலை நாட்டில் நிலவ வேண்டும். அதை கொண்டுவருவதற்கு அரங்காத்தின் தலையீடும் முதலீடும் தேவை என்பதே சமூக லிபரடேரியன்களின்(Social Liberalism) கொள்கை. இது இந்தியா போன்ற சமூக மற்றும் பொருளாதார ஏற்ற தாழ்வுகள் நிறைந்த நாடுகளுக்கு ஏற்றதாகும்.

லிபரடேரியன்களின் அடுத்த பிரிவு நியோலிபரடேரியனிஸம்(Neoliberalism) ஆகும்.இது பொருளாதார மற்றும் சமூக கொள்கைகள் மற்றும் செயல்பாடுகளில் அரசின் தலையீட்டை முழுமையாக எதிர்க்கிறது.மிக சிறிய அளவான அரசாங்கம், முற்றிலும் தனியார் மயமாக்கபட்ட தொழிற்துறை,குறைவான வரி,தாரளமயமாக்கபட்ட பொருளாதாரம்,அரசின் கட்டுபாடுகள் தளர்த்த பட்ட வணிகம் மற்றும் தொழில் துறை,ஒழிக்க பட்ட அரசு மான்யம் மற்றும் குறைக்க பட்ட நலிந்தோருக்கான நிதி உதவி போன்றவையே வலது லிபரடேரியன்களின் கொள்கைகள்.ரான் பால் இந்த வகை நியோலிபரல் மற்றும் அடிப்படையில் சிறிது (குடியரசு கட்சியினருக்கே உரித்தான) பழமைவாத கொள்கை உள்ளவர் என்று கூறலாம்.

சந்தையில் அரசின் கட்டுபாடு இல்லாததால் தான் தற்போதய அமெரிக்க பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது என்பது பெரும்பாலானோரால் ஏற்கபட்ட கருத்து ஆகும். ஆனால் ரான் பாலின் கருத்து படி அரசாங்கத்தின் முறையற்ற உதவியோடு கார்பொரேட்டுகள் தடையற்ற சந்தயை(Free Market capitalism) அழித்து போலி முதலாளித்துவத்தை(Crony Capitalism) உருவாக்கியது தான் பொருளதார நெருக்கடிக்கு காரணம் என்று கருதுகிறார்.

சோவியத் மறைவிற்கு பின் தற்போது அதிகரித்து வரும் விவாதம் தடைகள் மற்றும் கட்டுபாடற்று முற்றிலும் தனியார் மயமாக்க பட்ட பொருளாதாரமா அல்லது மக்கள் நலனை பேணும் அரசாங்கமும் மக்கள் நலனுக்காக கட்டுபடுத்த பட்ட சந்தையை கொண்ட அரசாங்கமா என்பதாக உள்ளது. இதனிடையே தடையற்ற பொருளாதரம் என்ற பெயரில் மறைமுக செல்வாக்கு கொண்ட போலி முதலாளித்துவம் உலகெங்கிலும் பரவி வருகிறது.இந்தியாவிலும் இது போன்ற சிந்தனைகள் மற்றும் விவாதம் விரைவில் பரவலாம். எனவே லிபரடேரியன் சிந்தனையாளர்களின் கருத்து மற்றும் செயல்பாடுகளை அறிந்து கொள்வது மிகவும் அவசியமாகிறது.

இந்த கட்டுரை லிபரடேரியன் சிந்தனையாளர் ரான் பால் கருத்துகளை ஆதரித்தோ எதிர்த்தோ எழுத பட்டது அல்ல. ஆனால் அதன் அடிப்படையை புரிந்து கொண்டு அது இந்தியாவிற்கு வந்தால் எந்தெந்த இயக்கங்களால் எவ்வாறு உபயோகிக்க பட்டு எந்த வடிவில் இந்த சிந்தனை வெளிப்படும் என்பதை வாசகர்களே புரிந்து கொள்ள உதவியாக இருக்கும் என நம்புகிறேன்.

இனி அவருடைய கருத்துகளையும் அது அமெரிக்க அரசியலில் ஏற்படுத்த கூடிய எதிர் விளைவுகளையும் ,அவர் சார்ந்த லிபரடேரியன் கொள்கை இந்தியாவில் நடைமுறை படுத்தபட்டால் என்ன விளைவு ஏற்படுத்தபடும் என்றும் பார்ப்போம்.

1.போர் எதிர்ப்பு
அவருடைய மிக முக்கியமான கொள்கை போர் எதிர்ப்பு. ஈராக் போரை கடுமையாக எதிர்த்தவர் அவர். ஈரான் மீது போர் தொடுக்க கூடாது என்று ஆணித்தரமாக பேசுகிறார். தற்போதைய அமெரிக்க அரசியல்வாதிகளிளேயே கடுமையான் போர் எதிர்ப்பு கொள்கை கொண்டவர். அமெரிக்க தீவிரவாத தாக்குதலுக்கு அடிப்படை காரணம் அமெரிக்க வெளியுறவு கொள்கை தான் என்று வெளிபடையாக பேசியவர் அவர்.ராணுவத்துக்கான செலவை பெருமளவில் குறைக்க வேண்டும் என்று கோரி வருகிறார்.போர் ஆதரவு மற்றும் அமெரிக்காவின் உலகளாவிய செல்வாக்கை வளர்க்க விரும்பும் பழமைவாத ஜனநாயக கட்சியினரிடம் இவரது கொள்கையால் அதிருப்தியை சம்பாதித்து கொள்ள சாத்தியம் இருந்தாலும் தனது கொள்கையில் உறுதியாக இருக்கிறார் ரான் பால்.போர்கள் காரணமாக அரசின் கடன் அதிகரிக்கிறது என்பதும் போரின் பின் விளைவுகளால் அமெரிக்காவின் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் ஏற்படும் என்பதும் அவரின் போர் எதிர்ப்பு கொள்கைக்கு முக்கிய காரணம்.

2.அமெரிக்க வெளியுறவு கொள்கை
ரான் பால் அமெரிக்காவின் வெளி நாட்டு தலையீடுகளை அறவே ஒழிக்க வேண்டும் என்று கூறுகிறார். அதாவது அவர் அமெரிக்காவை மட்டுமே ஆள விரும்புவதாகவும் உலகத்தை ஆள விரும்ப வில்லை என்றும் கூறுகிறார்.லிபரடேரியன் தத்துவ படி எந்த ஒரு நாட்டின் பிரச்ச்னையையும் அவர்கள் தான் தீர்த்து கொள்ள வேண்டுமே அன்றி அயல்நாடுகளின் தலையீடு கூடது என்பதும் ஒரு காரணம்.அவருடைய கூற்றுபடி (கார்போரேட்டுகளின் நன்மைகளுக்காக கொடுக்க படும்) வெளி நாட்டு உதவி தொகைகள் நிறுத்தபட வேண்டும் என்கிறார்.இதன் விளைவாக உண்மையிலேயே ஏழை நாடுகளுக்கு வறுமை ஒழிப்புக்கு கொடுக்கபடும் நிதிகள் குறைய வாய்ப்புள்ளது. ஆனால் அமெரிக்க கார்ப்போரேட்டுகளின் நலன்களுக்காக தான் இந்த நிதிகள் பயன் படுத்தபடுகிறது என்று இடதுசாரி இயக்கங்கள் கூறுவதையும் கருத்தில் எடுத்து கொள்ள வேண்டும்.

3.இஸ்ரேல் உறவு
அவருடைய வெளி நாட்டு கொள்கையில் அமெரிக்க பத்திரிக்கையாளர்களால் கூர்ந்து கவனிக்க படுவது இஸ்ரேலுடனான உறவு குறித்த கொள்கை.இஸ்ரேலுக்கு நிதி மற்றும் ராணுவ உதவிகளை அளிப்பதை கடுமையாக எதிர்க்கிறார். இஸ்ரேல் பாலஸ்தீன பிரச்ச்னைக்கு அமெரிக்க தலையீட்டை எதிர்க்கும் அவர் அமெரிக்க மீது நடத்தபட்ட தீவிரவாத தாக்குதலுக்கு அமெரிக்காவின் பாலஸ்தீன விரோத போக்கும் அரபு நாடுகளில் அமெரிக்க தலையீடுமே காரணம் என்கிறார். பாலஸ்தீன மக்களின் குரலுக்கும் மதிப்பளிக்க வேண்டு என்கிறார். அமெரிக்காவில் ஊடக துறை மற்றும் நிதி துறையில் ஆதிக்கம் செலுத்தி வரும் யூத மக்களிடம் அவர் பெரும் எதிர்ப்பை பெற்று வருகிறார்.

4.போதை பொருள் மற்றும் துப்பாக்கி தடை
போதை பொருள் மற்றும் துப்பாக்கி தடை போன்றவற்றை மத்திய அரசாங்கம் சட்டம் போட்டு தடை செய்வதை எதிர்க்கிறார்.இது போன்ற தடைகள் பிரச்ச்னையை அதிகம் ஆக்குகின்றது என்றும் அவற்றை சட்ட ரீதியாக விற்பனை செய்ய அனுமதிப்பது மூலம் பிரச்ச்னைக்கு தீர்வு காணமுடியும் என்கிறார். போதை பொருள் விற்பனையை சட்ட படுத்துவதை ஆதரிக்கும் கல்லூரி மாணவர்களின் கூட்டம் அவருக்கு அதிகம் வருவதாக அவருடைய போட்டி வேட்பாளர்கள் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

5.பெடரல் ரிசர்வ்
பெடரல் ரிசர்வ் மீதான அவரது பார்வை அமெரிக்க அரசியலில் வேறு யாரிடமும் இல்லாதது. அடிப்படையில் ஆஸ்திரிய பொருளாதார வல்லுனரான அவர் மத்திய அரசாங்கம் எந்த அடிப்படையும் இல்லாமல் பணம் உற்பத்தி செய்வதை எதிர்க்கிறார். பழங்காலத்தில் இருந்தது போல் தங்கத்துக்கு மாற்றுரிமை உடைய பணத்தை அடிப்படையாக கொண்ட பொருளாதாரத்தை கொண்டு வர ஆதரவு தெரிவிக்கிறார். பெடரல் ரிசர்வ் கணக்கில்லாமல் பணத்தை உற்பத்தி செய்வதால் அரசாங்கம் பொது நலம் மற்றும் ராணுவ செலவை அளவுக்கு அதிகமாக கடன் வாங்கி செலவு செய்ய முடிகிறது. அதனால் டாலர் உற்பத்தி அதிகமாகி, பணவீக்கம் அதிகமாகி மக்கள் வாழ்க்கை தரம் குறைகிறது என்பது அவரது கருத்து.

அது மட்டுமன்றி ஒரு சில பெரிய பன்னாட்டு வங்கிகள் பணபலம் மற்றும் அதிகார பலம் மூலம் பெடரல் ரிசர்வ் மற்றும் அரசாங்கத்தின் மீது நேரடி மற்று மறைமுக செல்வாக்கு செலுத்தி அமெரிக்க மற்றும் உலக பொருளாதாரத்தை தங்கள் கையில் கொண்டுள்ளதை எதிர்க்கிறார்.பெடரல் ரிசர்வ் வங்கி ட்ரில்லியன் கணக்கிலான பணத்தை பல்வேறு பன்னாட்டு நிதி நிறுவனங்கள் மற்றும் தொழில் துறைக்கு வெளியில் யாருக்கும் தெரியாமல் கொடுக்கிறது. ஆனால் அதை தணிக்கை செய்ய அமெரிக்க சட்டத்தில் வழி வகை இல்லை. அதனால் பன்னாட்டு நிறுவனங்கள் மற்ற சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை அழித்து தனியுறிமை ஏகாப்திபத்தியத்தை ஏற்படுத்துகின்றன. எனவே அவரது முக்கிய கோரிக்கை பெடரல் ரிசர்வ் வங்கி கணக்குகளை தணிக்கை(audit) செய்ய வேண்டும் என்பதாகும்.

ஆனால் தற்போதைய நிலையில் உடனடியாக தங்க மற்றும் பணத்தை அறிமுகபடுத்த போவதாக அவர் கூற வில்லை.

ஆஸ்திரிய பொருளாதார தத்துவப்படி தடையற்ற பொருளாதாரத்தில் சிறிய அளவிலான வளர்ச்சிகளும் சிறிய அளவிளான வீழ்ச்சிகளும் அவ்வப்போது ஏற்படுவது வழக்கம். ஆனால் சிறிய வீழ்ச்சிகளை அரசும் பெடரல் ரிசர்வும் சேர்ந்து பண புழக்கத்தின் மூலம் தடை செய்வதால் , பொருளாதார வளர்ச்சிக்கு பதில் வீக்கங்கள் ஏற்பட்டு மிக பெரிய பொருளாதார வீழ்ச்சியை அமெரிக்கா சந்திக்கிறது என்பது அவரது கருத்து.

6.அதிகார பரவலாக்கம்
அவருடைய மற்றொரு கருத்து மத்திய அரசிடம் இருந்து அதிகாரகங்கள் குறைக்கபட்டு மாநில அரசிற்கு அதிக அதிகாரம் கொடுக்க பட வேண்டும் என்பதாகும். இந்தியா போன்ற வேற்றுமைகள் நிறைந்த நாடுகளில் அவர் கூறும் மாநில சுயாட்சி நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும். மத்திய அரசாங்கம் மொழி,குறிப்பிட்ட தத்துவம் , இனம், மதம் சார்ந்த கருத்துக்களை புகுத்துவதை தடுக்க முடியும்.மத்திய அரசிடமிருந்து மாநில அரசிற்கு அதிகாரம் பரவலாக்குவதை ஆதரிக்கும் அவர் மாநில அரசின் அதிகாரத்திலிருந்து தனிமனித சுதந்திரம் பாதுகாப்பது பற்றி முழுவதுமாக கூறவில்லை.

7.பொது நல அரசாங்கம்(Welfare state)
அவர் பொதுநல அரசாங்கத்தை கடுமையாக எதிர்க்கிறார். சொத்துரிமை மற்றும் பேச்சுரிமை மட்டுமே தனி மனித உரிமை என்பது அவர் கருத்து. கல்வி மற்றும் மருத்துவம் போன்றவை தனி மனித உரிமை இல்லை என்கிறார். அதாவது அரசு பொது பள்ளிகள், படிக்க அரசு நிதி உதவி போன்றவறை எதிர்க்கிறார். அமெரிக்காவில் அரசு பொது பள்ளிகள் இல்லை என்றால் நடுத்தர மற்றும் ஏழை மக்கள் தங்கள் பிள்ளைகளை பணம் கொடுத்து படிக்க வைப்பார்களா என்பது கேள்வி குறியே. இது போன்ற கொள்கைகள் தற்போது பணக்காரர்களாக இருப்பவர்களது பிள்ளையை மட்டும் படிக்க வைத்து படித்து முடித்த பின் அவர்களுக்கு எளிதில் வேலை வாய்ப்பு கிடைக்க வாய்ப்பளிக்களாம். நல்ல வேலையாக அவர் உடனடியாக அரசு பொது பள்ளிகளை மூட போவதாக கூறவில்லை. அவர் கூறுவது போல் பள்ளிகளை முழுமையாக தனியார் மயமாக்கினால் தனியார் பள்ளிகளின் கட்டணம் குறைந்து அனைவருக்கும் கட்டுபடியாகும் தனியார் கல்வி கிடைக்குமா என்பது கேள்விகுறியே..மேலும் சமூகம் மற்றும் பொருளாதார ரீதியில் பின் தங்கியவர்களுக்கு அளிக்கும் எந்த உரிமையையும் எதிர்க்கிறார். இந்தியாவில் பள்ளி மற்றும் வேலைவாய்ப்புகளில் இட ஒதிக்கீட்டிற்கு எதிர்ப்பதற்கு இணையானது இது. இந்தியாவில் இது போன்ற கொள்கைகள் நிலை நிறுத்தபட்டால் பொருளாதார மற்றும் சமூக ரீதியில் பின் தங்கிய மக்கள் இனி வரும் தலைமுறைகளில் முன்னேறவே வாய்ப்பு இல்லாமல் போகலாம்.

அரசு ஆதரவிலான முதியோர் காப்பீட்டு மற்றும் ஓய்வூதிய திட்டத்தை கடுமையாக எதிரிக்கிறார். தற்போதைய மருத்துவ காப்பீட்டு திட்டத்தையும் எதிர்க்கிறார். தற்போது அமெரிக்காவில் முழுமையான தனியார் மயமான மருத்துவ காப்பீடு தான் உள்ளது. மருத்துவ காப்பீடின் செலவு மக்களுக்கு கட்டுபடி ஆகாத அளவிற்கு இமாலய அளவில் உள்ளது.இந்த நிலையில் அரசின் உதவிகளையும் கட்டுபாடுகளையும் எடுத்துவிட்டால் மருத்துவ செலவு அனைவருக்கும் கட்டுபடியாகும் நிலையில் குறையும் என்ற கோட்பாட்டை ஏற்று கொள்வது கடினம்.

வசதி இல்லாதவர்கள் மருத்துவ உதவிக்கு டாக்டர்களின் இலவச உதவியையும் கிறித்துவ மதவாத மிசனரிகளின் கடைக்கண்ணையும் எதிர்பார்க்க வேண்டும் என்று கூறுவதையும் கூர்ந்து கவனிக்க வேண்டும். இது போன்ற கொள்கைகள் பழமைவாத குடியரசு கட்சியினர் விரும்பும் மதம் சார்ந்த அமைப்பினருக்கு அதிகாரத்தை பெற்று தருவதையே வரவேற்கும்.

அவரது கொள்கை படி ஒருவரது வரிபணத்தை பொருளாதார ரீதியாக பின் தங்கிய மற்றொரு ஏழையின் நலனுக்காக செலவு செய்வதை ஏற்று கொள்ள கூடியது அல்ல. ஏற்ற தாழ்வுகள் நிறைந்த இந்தியா போன்ற நாடுகளுக்கு இந்த கொள்கை பொருந்துமா என்பது சிந்திக்க வேண்டிய செய்தி.

ஓய்வூதியம் தர அரசு சார்பில் வரி வசூலிக்க படுகிறது. ரான் பால் அரசுக்கு வரி கொடுத்து பின் அரசை நம்பி இருக்காமல் தனி நபர்களே தங்கள் ஓய்வு கால தேவைக்கு முதலீடு செய்து கொள்ள வேண்டும் என்கிறார்.

அதே போல் அரசு மான்யங்கள் விவசாயம் உட்பட அனைத்து தொழில்களிலும் ஒழிக்க படவேண்டும் என்கிறார்.இந்தியாவில் விவசாயத்திற்கான உர மான்யம் ஒழித்தால் விவசாயம் முழுமையாக அழிந்து விடும் அல்லது விவசாய விளை பொருட்களின் விலை கடுமையாக அதிகரித்து விடும். அதே போல் மான்ய விலையில் அரசு பொது விநியோக துறையில் மலிவு விலையில் உணவு பொருட்களை விநியோகிப்பதை நிறுத்திவிட்டால் பசியும் பட்டினி சாவும் அதிகமாக வாய்ப்புள்ளது.

8.மெல்லிய அரசு(Lean Government)

ரான் பால் அதிகாரம் குறைந்த முழுதும் தனியார் மயமாக்க பட்ட அரசாங்கத்தை ஆதரிக்கிறார். அரசாங்கம் எந்த துறையிலும் ஈடுபடகூடாது என்கிறார். இது தனி மனித சுதந்திரம் மற்றும் கட்டுபாடற்ற சந்தைக்கு வழி வகுக்கும் என்பது அவர் கருத்து. இந்தியா போன்ற ஏழை நாடுகளில் இது எந்த அளவிற்கு நன்மை தரும் என்பது கேள்விகுறியே. உதாரணமாக கிராமங்களில் வங்கி நடத்துவதால் லாபம் கிடைக்காததால் ஏழை மக்களுக்கு நியாயமான கடன் கிடைக்க இந்தியாவில் வங்கிகள் தேசிய மயமாக்க பட்டன. கிராமங்களுக்கு பேருந்து வசதி கிடைத்ததும் போக்குவரத்து துறையில் அரசு நுழைந்தது தான். ஆனால் இது போன்ற கொள்கைகளால் ஒர் சில நன்மையும் உள்ளது. இருபது ஆண்டுகளுக்கு முன்பு வரை தொலைகாட்சி அரசு வசம் இருந்த போது அது இந்தி திணிப்புக்கு ஒரு கருவியாகவே பயன் பட்டு மக்கள் விரும்பும் தாய் மொழி நிகழ்ச்சிகள் முற்றிலும் புறக்கணிக்க பட்டன. தொலைகாட்சியில் தனியார் பங்களிப்பு கிடைத்த் பின்பு தான் நாம் தினம் தோறும் முழுமையாக தமிழ் நிகழ்ச்சிகள் பார்க்க முடிகிறது.

9.அரசு கட்டுபாடுகள் தளர்வு
அரசு கட்டுபாடுகளை முழுமையாக விலக்க வேண்டும் என்பது அவரது கொள்கை.உதாரணமாக குழந்தைகளின் விளையாட்டு பொருட்களில் காரீயம் (lead) கலப்பதை தடை செய்யவும் (காரீயம் குழந்தைகளுக்கு அபயகரமான பின் விளைவுகளை ஏற்படுத்தும் என்பதால்) காரீயம் கலப்பதை அரசு சோதிக்க அனுமதி அளிக்க மசோதா வந்த போது அதை எதிர்த்தவர் ரான் பால்.பொருளாதார துறைகளில் அரசு கட்டுபாடுகளை குறைத்ததன் மூலம் அமெரிக்கா பெரும் பொருளாதார நெருக்கடியில் வீழ்ந்தது நினைவு கூற தக்கத

எரிசக்தி துறை,கல்வி துறை,வீட்டுவசதி & நகர்புற வளர்ச்சி துறை மற்றும் வணிக துறைகளை முழுமயாக ஒழிக்க வேண்டும் என்பது அவர் கொள்கை.மேற் கூறிய துறைகள் அமெரிக்காவில் முக்கிய பங்கு அளிக்கிறது. அவை ஒழிக்கபட்டால் பெருமளவு பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.

10.உலகமயமாதல்
உற்பத்தி பொருட்கள் மற்றும் சேவை துறை வேலைகள் (Goods and Services) நாடுகளை கடந்து செல்ல கட்டுபாடுகளை எதிர்க்கும் ரான் பால், வேலையாட்கள் (Labour) மட்டும் வெளிநாடுகளில் இருந்து அமெரிக்காவிற்கு வெருவதை எதிர்க்கிறார்.

11.மதம்,அறிவியல் மற்றும் நிறவெறி எதிர்ப்பு
ரான் பால் அரசாங்கத்தில் மதம் கலப்பதை முழுமையாக ஆதரிக்கிறார்.மேலும் பள்ளிகளில் கிறித்துவ கொள்கைகளை கட்டாயமாக திணிப்பதையும் சிறுபான்மையினர் தங்கள் மத சுதந்திரத்தை இழந்து பெரும்பான்யோரின் மத திணிப்பிற்கு கட்டாய படுத்துவதையும்ஆதரிக்கிறார். இதுபோன்ற கொள்கைகள் இந்தியாவில் வந்தால் இந்துத்துவா வாதிகளின் கனவு நிறைவேறும் நாள் நெருங்கி விடும்.

ஆப்ரிக்க அமெரிக்க்கர்கள் மற்றும் பெண்களை பாகுபடுத்தி பார்ப்பதை தடை செய்யும் கென்னடியின் கனவு சட்டத்தை எதிர்ப்பவர் ரான் பால். நிறவெறி கொள்கையை கடை பிடிப்பதை தடுப்பது தனி மனித உரிமையை பறிக்கும் செயல் என்பது அவர் கருத்து. அதாவது நிறவெறி கொள்கையை கடை பிடிப்பது தனி மனித உரிமை எனவும் அதை தடை செய்வதை செயல் படுத்த கண்காணிக்க அரசாங்கம் நுழைவதும் தனி மனித உரிமையை பறிக்கும் செயல் என்கிறார். இந்தியாவில் இந்த கொள்கை நடைமுறை படுத்த பட்டால் வர்ணாஸ்ரம கொள்கைகள் நாடெங்கும் தழைத்தோங்க வழிவகுக்கும்.

சில வருடங்களுக்கு முன்பு வரை அவரது பெயரில் அவரது ஆதரவாளர்களால் வெளியிட படும் பத்திரிக்கைகளில் நிறவெறி ஆதரவு கருத்துகள் பெருமளவில் வெளி வந்தன.பத்திற்கும் மேற்பட்ட நிறவெறி ஆதரவு அமைப்புகள் அவருக்கு ஆதரவளித்த போது அவர் அதனை ஏற்று கொள்ள மறுக்கவில்லை..தற்போது அவரது ஆதரவு அமைப்புகள் அவரது போட்டி வேட்பாளர் சீன மற்றும் இந்திய குழந்தைகளை தத்தி எடுத்ததை அமெரிக்க எதிர்ப்பு செயலாக சித்தரித்து விளம்பரம் செய்து வருகிறது.

புவி வெப்பமயாமாதல் ஆராய்ச்சி முடிவுகளை கடுமையாக எதிர்ப்பவர் ரான் பால்.அதற்கு அவரது மத நம்பிக்கைகூட காரணமாக இருக்களாம்.அல்லது சுற்றுசூழலை பாதுகாக்க மற்றும் கரியமில வாய்வு கசிவை தடுக்க அரசு எடுக்கும் முயற்சிகளால் பெட்ரோல் சார்ந்த தொழில்கள் வளர்ச்சி பாதிக்கபடும் என்ற காரணமாக கூட இருக்களாம்.டார்வினின் பரிணாம வளர்ச்சி கொள்கையில் நம்பிக்கை இல்லாதவர் ரான் பால்.சில ஆண்டுகளுக்கு முன் வாட்டிகன் போப்பால் ஏற்று கொள்ள பட்ட கலிலியோவின் பூமி சூரியனை சுற்றி வருகிறது என்ற கொள்கையை ஏற்று கொண்டவரா என்று தெரியவில்லை.அவர் ஆட்சிக்கு வந்தால் அறிவியல் பூர்வமான கருத்துகளை பள்ளி பாடமாக வைப்பதை விட்டு தனி மனித சுதந்திரம் என்ற பெயரில் மதம் சார்ந்த கொள்கைகளை அறிவியல் பாடமாக கொண்டு வர வாய்ப்புகள் நிறையவே உள்ளது.

பொதுவாக அமெரிக்காவில் எந்த கட்சியை சேர்ந்தவர்கள் அதிபர்களாக வந்தாலும் அரசு நிர்வாகத்தில் பெரிய அளவில் மாற்றம் இருக்காது. ஆனால் ரான் பாலுடைய கொள்கைகள் அமெரிக்க அரசியலில் பெரிய அளவில் மாற்றம் ஏற்படுத்த கூடியவை. ஆனால் அந்த மாற்றங்களால் ஏற்பட போவது மகிழ்ச்சியா அல்லது ஏமாற்றாமா என்பது கேள்வி கேள்வி குறியே.

மேற்கோள்கள

1.http://www.ronpaul.com/2011-08-19/its-official-ron-paul-was-ignored-by-the-media/
2.http://en.wikipedia.org/wiki/Social_liberalism
3.http://spectator.org/archives/2011/08/23/ron-paul-and-the-neoliberal-re/
4.http://www.nytimes.com/2011/12/29/us/politics/ron-pauls-young-iowa-volunteers-clean-up-for-the-cause.html?_r=1&hp=&adxnnl=1&adxnnlx=1325162791-ncDd9xJQpqPrWHSRf3nbgg 5.http://www.youtube.com/watch?v=BvaWLcgc-hc
6.http://mondoweiss.net/2011/09/ron-paul-says-our-unfairness-to-palestinians-led-to-911-attacks.html (palestine)
7.http://www.ronpaul.com/on-the-issues/health-care/ ( healthcare)
8.http://lewrockwell.com/paul/paul767.html ( self determination)
9.http://www.nytimes.com/2011/09/16/opinion/krugman-free-to-die.html
10.http://www.ronpaul.com/on-the-issues/health-care/ (missionary)
11.http://www.youtube.com/watch?v=tD8rJCbEVMg - (education for poor)
12.http://abcnews.go.com/blogs/politics/2011/10/ron-pauls-economic-plan-eliminates-department-of-education-and-5-others/ (dept abolition)
13.http://www.nytimes.com/2011/12/28/opinion/mr-pauls-discredited-campaign.html?_r=2 ( racial)
14.http://www.irregulartimes.com/ronpaulseparation.html (Chrurch-State)
15.http://www.mediaite.com/tv/ron-paul-tells-cnns-candy-crowley-civil-rights-act-destroyed-privacy/ (civil right)


--

Sunday, January 08, 2012

கடைசியாக மதுரை வீரனுக்கு ஒரு கோவில்!

கடந்த வருடம் இதே மாதத்தில் பென்னி குயிக் பற்றி கோவில் இல்லா மதுரை வீரன் என்ற தலைப்பில் ஒரு பதிவை எனது தமிழ்மணம் நட்சித்திர வாரத்தில் இட்டிருந்தேன். சமீபத்திய முல்லை பெரியாறு பிரச்ச்னை காரணமாக அவருடைய பெருந்தன்மை மற்றும் தியாகம் பற்றி பல பத்திரிக்கைகளும் செய்தி வெளியிட்டு அவர் பற்றிய செய்திகளை மக்களை சென்றடைய உதவின.அந்த பதிவில் அவருக்கு நல்ல நினைவிடம் கூட கட்டபடவில்லை என்று பின் வருமாறு எனது மன வருத்தத்தை தெரிவித்திருந்தேன்.


//அவருடைய தியாகம் இன்றைக்கு மதுரை பகுதியை சேர்ந்த பல லட்சம் மக்களை வ்றுமையின் பிடியிலிருந்து மீட்டுள்ளது. அரசு பணத்தை கொள்ளையடிக்கும் அரசியல்வாதிகளுக்கு எத்தனையோ சிலைகளும், நகர்களின் பெயரும் இருந்தாலும், பென்னிகுயிக்கிற்கு மதுரை பொது பணித்துறை அலுவலகத்தில் ஒரு சிலை மட்டுமே உள்ளது.ஒவ்வொரு தமிழனும் தன் வாழ்நாளில் நன்றியுணர்வோடு பார்க்க பட வேண்டியவர் பென்னிகுயிக். இவர் ஒரு கோவில் இல்லாத மதுரை வீரன் கடவுள் தானே? //


தற்போது முதல்வர் அவருக்காக மணி மண்டபம் கட்ட முடிவு செய்துள்ளார். இது உண்மையிலேயே மகிழ்ச்சி அளிக்க கூடிய செய்தி.

மணி மண்டபம் கட்டுவதால் என்ன பயன் என்று நீங்கள் நினைக்ககூடும். மணிமண்டபம் கட்டுவதன் மூலம் அவருடைய வரலாற்றை பல்லயிரகணக்கான மாணவர்களும் இளைஞர்களும் இனி வரும் காலங்களில் படிக்க வாய்ப்பு கிடைக்கும்.அரசியல் மற்றும் அனைத்து துறைகளிளும் எதிர்மறையான தலைவர்களையே பார்க்கும் அவர்களுக்கு பென்னி குயிக் வரலாறு நேர்மறையான உத்வேகத்தை (Positive Inspiration)கொடுக்க வாய்ப்புள்ளது.

அதே போல பள்ளி பாடங்களில் அரசியல் காரணத்திற்கு வைக்க பட்டுள்ள ஊழல் பெருச்சாளிகளின் பாடங்களை நீக்கி விட்டு பென்னி குயிக், சி.சுப்ரமணியம், காமராஜர் போன்றோரது வாழ்க்கை வரலாறை பாடங்களாக வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

--