Monday, January 23, 2012
பரம்பிகுளம் திட்டம் - தமிழகம் கேரளாவிடமிருந்து நீர் வாங்கிய கதை 2
முதல் பதிவில் பரம்பிக்குளம் திட்டத்தின் முதல் கட்டம் எப்படி செயல்படுத்த பட்டது என்பது பற்றியும் இரண்டாம் கட்டம் நிறைவேற்ற கேரள அரசு தடையாக இருந்தது பற்றியும் மத்திய அரசிடம் மத்யஸ்தம் போகும் முன் கேரள முதல்வரை தனியாக பார்த்து பேச சி.சுப்ரமணியம் அவர்கள் முடிவு செய்தார் என்றும் பார்த்தோம்.
பரம்பிகுளம் திட்டம் - தமிழகம் கேரளாவிடமிருந்து நீர் வாங்கிய கதை
தொடர்ந்து நடந்ததை சி.சுப்ரமணியம் அவர்களின் சுயசரிதையில்(திருப்பு முனை) பின் வருமாறு விவரிக்கிறார்.
கேரள முதல்வர் ஏற்றார்
பட்டம் தாணுப்பிள்ளை உடனடியாக ஒரு முடிவுக்கு வர முடியவில்லை.. உடன்பாடு காண்பதில் நாங்கள் ஏற்கெனவே தோல்வி அடைந்துவிட்டோம் என்றும் மீண்டும் பேச்சு நடத்துவதில் பயனில்லை என்றும் அவர் கூறினார்."நீங்கள் கேரள முதமைச்சர் மட்டுமல்ல; நீங்கள் ஒரு தேசிய தலைவர் என்ற வகையில் நீங்கள் என்ன முடிவு எடுத்தாலும் அதை நான் ஏற்க தயாராக இருக்கிறேன்." என்று நான் கூறினேன்.
எனது பேச்சு பட்டம் தாணு பிள்ளையை திடுக்கிட வைத்தது. தகராறின் விவரங்கள் அவருக்கு முழுமையாக தெரியாது என்பதை அறிந்தேன்."திரு. சுப்ரமணியம் அவர்களே! எது சிறந்த தீர்வாக இருக்கும் என்று நீங்கள் கருதுகிறீர்கள்?" என்று அவர் சிறிது நேர யோசனைக்கு பிறகு அவர் கேட்டார். இந்த திட்டத்தின் மூலம் ஏராளமான நீர் கிடைக்கும். ஆனால் தகராறு ஒரு சிறிய அளவு நீர் பற்றியதே என்று நான் குறிப்பிட்டேன்.
நீரை இரு மாநிலங்களும் நியாயமாக பகிர்ந்து கொள்ள என்ன முறையைப் பின் பற்றலாம் என்று அவர் கேட்டார். நான் ஒரு திட்டத்தை அவரிடம் சமர்பித்தேன். அவர் அதை ஒப்புகொண்டார்.
அவர் எந்த முடிவை எடுத்தாலும் அதை நான் ஏற்பேன் என்று நான் முதலில் மனந்திறந்து கூறியதால் தான் அவர் எனது திட்டத்தை ஏற்று கொண்டார் என்று கருதுகிறேன்.எனது திட்டம் இரு மாநிலங்களுக்கும் நியாயமாக இருக்கும் என்று அவர் கருதி இருக்க கூடும்.
நம்பிக்கையின் பயன்
பட்டம் தாணுப்பிள்ளை எனது திட்டத்தை ஏற்று கொண்டார் என்று காமராஜரிடம் டெலிபோன் மூலமும், பிறகு நேரிலும் தெரிவித்தேன்.காமராஜர் மகிழ்ச்சியும் வியப்பும் அடைந்தார்.
விவாகாரத்தை நாங்கள் சுமூக தீர்த்து கொண்டோம் என்றும், மத்திய அரசின் மத்தியஸ்தம் அவசியம் இல்லை என்றும் அடுத்த நாள் மத்திய உள் துறை அமைச்ச்ர் பந்த் அவர்களிடம் தெரிவித்தோம்.முதல் நாள் மாலை கொச்சி இல்லத்தில் என்ன நடந்தது என்பதையும் பந்த் அவர்களிடம் விவரமாக கூறினேன்.
பந்த் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்.இரு தரப்பினரையும் அவர் பாராட்டினார்."நம்பிக்கை வைத்தால் நம்பிக்கை பிறக்கும்" என்ற முது மொழி மிகவும் சரியே என்பதை இந்த நிகழ்ச்சி எடுத்துக் காட்டுகிறது.
இன்று தீர்க்க படமுடியாதவை என்று கருதபடும் பல விஷயங்களுக்கு நம்பிக்கை, நல்லெண்ணம் ஆகியவற்றின் அடிப்படையில் தீர்வு காணலாம் என்பதற்கு இது ஒரு எடுத்துகாட்டு.
ஆளியாறு திட்டம்
பட்டம் தாணுப்பிள்ளை தலைமையிலான கேரள அரசுக்கும் தமிழ்நாடு அரசுக்கும் மேற்குறிப்பிட்டவாறு உடன்பாடு ஏற்பட்டதும், திட்டத்தின் இரண்டாவது கட்டம் அமல் செய்யபட்டது.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் சுமார் 70000 ஏக்கர் புஞ்ஜை நிலங்களுக்குப் பாசனவசதியும், ஆளியாறு நதி ஏற்கனவே பாசன வசதி அளித்துவந்த சுமார் 70000 ஏக்கர் நிலங்களுக்குத் தண்ணீர் தங்கு தடையின்றி கிடைக்கும் ஏற்பாட்டையும் திட்டத்தின் இரண்டாவது கட்டம் அளித்தது.
பழைய ஆளியாறு திட்டமும் பரம்பிக்குளம் திட்டமும் ஒருங்கிணைக்கப்பட்டன. இவ்வாறு இதற்குப் பரம்பிக்குளம்-ஆளியாறு திட்டம் என்று பெயர் வந்தது.
மூன்றாவது திட்டம்
தி.மு.க ஆட்சி பொறுப்பை ஏற்ற பிறகு இந்த திட்டத்தின் மூன்றாவது கட்டம் குறித்து உடன்பாடு காண முயற்சி நடந்தது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக இப்போது கூட (1994) எந்தவிதமான தீர்வும் ஏற்படவில்லை.
ஆயக்கட்டு பகுதி நிர்ணயிக்க பட்டு இதற்கான கால்வாய்களும் தோண்டப்பட்ட பிறகு, கோயம்புத்தூர் மாவட்டத்தில் இதர வறண்ட பகுதிகளுக்கும் பசன வசதியை விரிவு படுத்தவேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்தன. தி,மு.க அரசும் அதற்கு பிறகு அ.இ.அ.தி.மு.க அரசும், கூடுதல் நீர் எதுவும் இல்லாமல் புதிய கால்வாய்களை வெட்டி ஆயகட்டு பகுதியின் பரப்பை அதிக படுத்தி கொண்டே வந்தன. இப்போது (1994) இந்த திட்டத்தின் ஆயகட்டு பகுதியின் பரப்பு 2.5 லட்சம் ஏக்கர்களுக்கும் அதிகம். ஆனால் இவ்வளவு பெரிய ஆயகட்டு பகுதிக்கு போதிய நீர் வரத்து இல்லை.
இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டும், சுமார் 3 மாதங்களுக்கு தண்ணீர் விடப்படுகிறது.ஆயகட்டு பகுதிக்காக கால்வாய்களை வெட்டுவதற்கு அவசியமற்ற செலவு செய்யபட்டுள்ளது. ஏரளமான பரப்பு நிலம் பாசன கால்வாய்களாக தோண்டபட்டிருக்கிறது. தேர்தலில் அந்த பகுதியை சேர்ந்த மக்களின் வாக்குகளை பெருவதற்காக தேர்தல் நேரத்தில் இந்த கால்வாய்கள் வெட்ட பட்டுள்ளன.
கட்சி அரசியல்
நமது நட்டில் வளர்ச்சி திட்டங்களில் கூட கட்சி அரசியல் நுழைந்து சரியான முடிவுகளை எடுக்கமுடியாமல் சிரமங்களை உண்டாக்குகிறது. செலவுகளுக்கு ஏற்ற பயன்கள் கிடைக்குமா என்பது கவனிக்க படாமல், பணம் விரயம் செய்யபடுகிறது.இதனால் தான் நமது நாட்டில் பல பாசன திட்டங்கள் எதிர்பார்க்க படும் பயன்களை தருவது இல்லை; பொருளாதார ரீதியில் அவை கட்டுபடியாகவும் இருப்பது இல்லை.
காங்கிரஸ் ஆட்சியில் மக்களுக்கு பயன் தரும் திட்டங்கள் மேற்கொள்ள பட்டபோது தேர்தலில் வாக்களர்களின் ஆதரவை அவை பெறவில்லை.பாசன திட்டங்கள் நிரைவேற்றபட்ட போது, சில சந்தர்ப்பங்களில் தண்ணீர் மிகவும் தேவைபட்ட பகுதிகளுக்கு அது கிடைக்காமல் போயிற்று என்பது இதற்கு ஒரு காரணம்.பாசன வசதியை பெற்றவர்கள் மிக்க மகிழ்ச்சி அடைந்தார்கள். ஆனால் அதே சமயத்தில் பாசன வசதி பெறாதவர்கள் ஏமாற்றம் அடைந்தார்கள் என்பதும் உண்மை.
அரசியல் காரணங்கள்
புதிய திட்டங்களை வகுக்கும் போது இதை கருத்தில் கொள்ளவேண்டும்.தேர்தலில் வாக்குகளை பெற உதவும் என்ற நோக்கம்,எந்த திட்டத்திற்கும் அடிப்படையாக இருக்க கூடாது.அரசியல் நோக்கங்களை மறுத்துவிட்டு,ஒவ்வொரு திட்டத்தையும் அதன் தகுதியின் அடிப்படையில் தான் முடிவு செய்யவேண்டும்,ஏனெனில் ஒரு திட்டத்தினால் ஒருவர் பயனடைந்தால் ஏமாற்றம் அடைபவர்கள் பலர் இருப்பார்கள்.பிரிட்டிஷ் ஆட்சி காலத்தின் போது அன்றைய சென்னை மாகான முதலமைச்சராக இருந்த பனகல் ராஜா "ஒருவரின் நியமனம் பத்து பேருக்கு ஏமாற்றம்" என்று கூறுவது வழக்கம், அரசியல்வாதிகள் இதை கருத்தில் கொண்டு ஒரு திட்டத்தினால் மக்கள் ஆதரவு கிடைக்கிறதா அல்லது அரசியல் ரீதியாக பலம் பெருகுமா என்றெல்லாம் பார்க்காமல், பாரபட்சம் இல்லாமல் செயல்படுவது நலம்.ஓர் அரசியல் கட்சியின் அல்லது ஒரு தனி நபரின் சாதனைகள் குறித்து வருங்கால சந்ததியார் முடிவு செய்ய விட்டுவிட வேண்டும்.
சி.சுப்ரமணியம் அவர்களின் சுயசரிதையிலிருந்து மேற்கூறிய பகுதிகளை எடுத்து பதிவிட்டுள்ளேன்.
புத்தகம் பெயர்: என் வாழ்க்கை நினைவுகள் . முதல் தொகுதி-திருப்பு முனை.
சி.சுப்ரமணியம் போன்ற அரசியல்வாதி மீண்டும் தமிழகத்துக்கு கிடைத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்!
--
Subscribe to:
Post Comments (Atom)
5 comments:
//தேர்தலில் வாக்குகளை பெற உதவும் என்ற நோக்கம்,எந்த திட்டத்திற்கும் அடிப்படையாக இருக்க கூடாது.அரசியல் நோக்கங்களை மறுத்துவிட்டு,ஒவ்வொரு திட்டத்தையும் அதன் தகுதியின் அடிப்படையில் தான் முடிவு செய்யவேண்டும்,//
நீர்வளம் போன்றவற்றில் அவசியம் கடைப்பிடிக்க வேண்டிய அரசியல் நெறிகள் இவை.ஆனால் மக்கள் குரலையும் உள்வாங்கிக்கொண்டு தகிடுதத்தம் செய்யும் அரசியல் முடிவுகள் இந்தியா தனக்குத்தானே சூன்யம் செய்யும் தற்போதைய,எதிர்கால ஆபத்துக்கள்.
சமூகம் சார்ந்த பதிவுகளுக்குத்தான் கூட்டம் சேராதே:)
வாங்க ராஜ நடராஜன்
//ஆனால் மக்கள் குரலையும் உள்வாங்கிக்கொண்டு தகிடுதத்தம் செய்யும் அரசியல் முடிவுகள் இந்தியா தனக்குத்தானே சூன்யம் செய்யும் தற்போதைய,எதிர்கால ஆபத்துக்கள்//
சரியாக சொன்னீர்கள்
//சமூகம் சார்ந்த பதிவுகளுக்குத்தான் கூட்டம் சேராதே:)//
உண்மைதான்.
சி.சுப்ரமணியம் போன்ற அரசியல்வாதி மீண்டும் தமிழகத்துக்கு கிடைத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்!
அருமையான பதிவு.
நன்றி.
நன்றி Rathnavel Natarajan
Post a Comment