Monday, December 01, 2014

பெட்ரோல் விலை அரசியல்

கடந்த சில மாதங்களாக சர்வதேச அளவில் கச்சா எண்ணையின் மதிப்பானது பெருமளவில் குறைந்து வருவது எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகளையும் , பொதுமக்களையும் நிம்மதி அடைய செய்துவருகிறது. இந்த விலை இறக்கத்திற்கான காரணத்தையும் அதற்கு பின் இருக்கும் அரசியலையும் பார்த்தால் இந்த விலை குறைப்பு நிரத்தரமா? என்று புரிந்து கொள்ள முடியும். சர்வதேச அளவில் 60% கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகள் ஒன்று சேர்ந்து பெட்ரோல் ஏற்றுமதி செய்யும் நாடுகள் கூட்டமைப்பை (OPEC) ஏற்படுத்தியுள்ளன. இந்த அமைப்பில் சவுதி அரேபியா, எமிரேட்டுகள், இராக், இரான் போன்ற அரபு நாடுகளோடு  வெனிசூவேலா,ஈக்வேடார் போன்ற பிற நாடுகளும் உள்ளனர். உலகின் பெரும்பான்மையான கச்சா எண்ணெயை உற்பத்தி செய்யும் நாடுகள் இவை என்பதால் கச்சா எண்னெய் விலை நிர்ணயிப்பதில் இந்த நாடுகளின் பங்கு முக்கியமானது ஆகும். சர்வதேச மார்க்கெட்டில்  தேவை - உற்பத்தி - விலை நிர்ணயம் போன்ற மார்கெட் விதிகளுக்கு ஏற்ப  கச்சா எண்ணெயின் விலையை  நிர்ணயிக்க விடாமல் தனது உறுப்பு நாடுகளின் நலன்களுக்கு ஏற்றவாறு கச்சா எண்ணெயை நிர்ணயிப்பதில் இந்த அமைப்பு முக்கிய பங்கு வகிக்கிறது.


பெட்ரோல் விலை கட்டுபாடு
2000ம் ஆண்டுகளின் தொடகத்தின் போது உலக பொருளாதாரம் மிக வேகமாக வளர்ச்சி அடைந்து வந்தது. பொருளாதார வளர்ச்சி கச்சா எண்ணெயின் தேவையை அதிகரித்தது. அதனால் கச்சா எண்ணெயின் மதிப்பு சர்வதேச சந்தையில் பெருமளவு அதிகரித்தது.இந்த அபரிதமான வளர்ச்சியை தொடர்ந்து பொருளாதார தேக்க நிலை ஏற்பட்டது. அதன் விளைவாக கச்சா எண்ணெயின் தேவை குறைந்தது. எனவே பெருமளவு கச்சா எண்ணெய் விலை குறைப்பு நடந்திருக்க வேண்டும். ஆனால் அந்த அளவு கச்சா எண்ணெயின் விலை குறையவில்லை. அதற்கு காரணம் எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகள் தங்களது உற்பத்தியை குறைத்தது தான்.  கச்சா எண்ணெயின் தேவை மார்கெட்டில் குறைந்த போது தனது உற்பத்தியை குறைத்து விலை குறைவை கட்டுபடுத்தியது.அதன் விளைவாக மோசமான பொருளாதாரத்திலும் அதிக எண்ணெய் விலை இருந்துததால் எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகளும் பொதுமக்களும் பெருமளவு அவதிபட்டனர். நாடுகளின் வெளிநாட்டு செலாவணி கையிருப்பு பிரச்சனையும் ஏற்பட்டது.

இன்று புதிய நாள்
கடந்த சில ஆண்டுகளாக  உலகளவில் எதிர்பார்த்த அளவு பொருளாதார  வளர்ச்சி அடையவில்லை. அதன் விளைவாக கச்சா  எண்ணெயின் விலையும் குறைய தொடங்கி உள்ளது.  கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் நடந்தது போல் தற்போதும் OPEC அமைப்பு உற்பத்தியை குறைத்து கச்சா எண்ணெயின் விலையை எற்றி விடுமா என்னும் எதிர்பார்ப்பு இருந்தது. தற்போது கூடிய அமைப்பின் மாநாட்டில் கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைப்பதில்லை என்று முடிவெடுத்தது அனைவரது ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தியது. இதன் பின்னனியில் உள்ள பொருளாதார அரசியல் காரணங்களை பற்றி பார்ப்போம்.

கடந்த ஐந்தாண்டுகளாக சர்வதேச அளவில் அமைதியாக மாபெரும் மாற்றம் களிப்பாறை எரிவாயு/களிப்பாறை  எண்ணெய் என்ற பெயரில் நடந்து வருகிறது. கடந்த ஐந்தாண்டுகளுக்கு முன் சர்வ தேச அளவில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்த போது , அமெரிக்காவில்   களிப்பாறையினுள் புதைந்துள்ள எரிவாயு மற்றும் எண்ணெயை பொருளாதார ரீதியாக லாபத்துடன் வெளிக்கொணறும் தொழில்நுட்பங்கள் வெளிவர தொடங்கின.  களிப்பாறை கச்சா எண்ணெயும் பெருமளவு எடுக்க பட்டது. அமெரிக்கா சுமார் 4 மில்லியன் பேரல் எண்ணெயை தினமும் புதிதாக இந்த தொழில் நுட்பத்துடன் எடுத்தது. இந்த தொழில்நுட்பம்   சுற்றுபுறசூழல் பிரச்சனை  ஏற்படுத்தினாலும் அதிகரித்து வந்த சர்வதேச கச்சா எண்ணெய் விலையால் பொருளாதார ரீதியாக லாபமடைய அதிக எண்ணெய் எடுக்க பட்டு வருகிறது.களிப்பாறை தொழில்நுட்பம் மூலம் எணெணெய் எடுக்க பேரல்  ஒன்றுக்கு குறைந்த பட்சமாக பேரலுக்கு $40ம் அதிக பட்சமாக $110ம் தேவைபடுகிறது.கடந்த ஐந்தாண்டுகளுக்கு முன் செய்தது போல் எண்ணெய் உற்பத்தியை அரபு நாடுகள் குறைத்து அதிக எண்ணெய் விலையை சர்வ தேச சந்தையில் நிலை நாட்டினால் என்ன நிகழும் என்பதற்கு வரலாற்று சான்றும் உள்ளது.

1980களின் நடுவில் கச்சா எண்ணெயின் விலை இது போலவே குறைந்தது. அப்போது அரபு நாடுகள் தங்களது உற்பத்தியை குறைத்து கச்சா எண்ணெய் விலையை உயர்த்தி பிடிக்க முயன்றன. அனால் அதற்கான விளைவுகள் வேறு மாதிரியாக இருந்தது. எண்ணெய் விலை உயர்வதற்கு பதில் அமைப்பு OPEC அல்லாத பிற நாடுகள் தங்களது எண்ணெய் உற்பத்தியை அதிகரித்து கொள்ள ஆரம்பித்தன.அதன் விளைவாக சர்வதேச கச்சா எண்ணெய் மார்கெட்டில் பிற நாடுகளின் பங்கு அதிகரித்தது.அரபு நாடுகளை பொருத்தவரை தற்போது எண்ணெய் உற்பத்தியை குறைத்தால் வரலாறு திரும்பி அமெரிக்க களிப்பாறை எண்ணெய் நிறுவனங்களின் முதலீடு, உற்பத்தி மற்றும் சர்வதேச அளவிலான அதன் பங்கு அதிகரிக்க வாய்ப்பை ஏற்படுத்துமோ என்று அஞ்சுகிறது.குறுகிய காலத்திற்கு கச்சா எண்ணெயின் விலையை குறைவாக வைத்திருப்பதன் மூலம் களிப்பாறை எண்ணெய் உற்பத்தியை லாபமில்லாதாக மாற்றி அதற்கு வரும் முதலீடுகளை  குறைத்து  அந்த எண்ணெய் உற்பத்தி தொழிலுக்கு முட்டுகட்டை போட வாய்ப்புள்ளதாக  கருதுகிறது.

அரசியல்
பெரும்பாலான OPEC நாடுகள் தங்களது பட்ஜெட் பற்றாகுறையை தீர்க்க அதிக அளவு கச்சா எண்ணெய் விலையை நம்பி உள்ளனர். ஆனால் இந்த  தேவையானது ஒவ்வொரு நாட்டிற்கும் தனது பொருளாதரத்தை பொருத்து வெவ்வேறாக உள்ளது. உதாரணமாக குவைத், அபுதாபி, சவுதி அரேபியா போன்ற நாடுகள் குறைவான கச்சா எண்ணை விலையிலேயே தனது பட்ஜெட் பற்றாகுறையை தீர்க்க முடியும். அதுமட்டுமின்றி தங்களிடம் உள்ள வெளிநாட்டு கரன்சி சேமிப்பு மூலம் பல வருடங்களுக்கு  குறைந்த எண்ணெய் விலையை தாக்கு பிடிக்க முடியும். ஆனால் அரசியல் ரீதியாக எதிரியாக கருதபடும் ஈரான், ஈராக் போன்ற நாடுகள் நிலை குறைவான கச்சா எண்ணெய் விலையால் பலவீனமடையும். தங்களது நாட்டின் மக்கள் நல திட்டங்களை குறைத்து பட்ஜெட் பற்றாகுறையை சமாளிக்க வேண்டும்.அது நாட்டின் பொருளாதாரம், அரபு நாடுகளின் அதிகார சமநிலை போன்றவற்றில் மாற்றத்தை ஏற்படுத்தும்

எது எப்படி  இருந்தாலும் சர்வதேச கச்சா எண்ணெய் விலை குறைப்பு ஒட்டு மொத்த மகக்ளின் வாழ்க்கை தரத்தில் சிறிது காலத்துக்கு நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை. அதே நேரத்தில் இந்தியாவில் இந்த பலனை அதிக அளவு அனுபவிக்கும் வகையில் குறைந்த விலையில் எண்ணெயை வாங்கி சேமித்து வைக்க வசதி இல்லை என்பதும் குறிப்பிடதக்கது.