Sunday, October 25, 2009

இப்படியும் ஒரு பொழைப்பு!

ஒவ்வொரு கம்பெனியும் திவாலாகும் போது அதை ஏற்று நடத்தும் நிறுவனத்திற்கு ஏற்படும் இழப்பு அளவிட முடியாததாக இருக்கும். இது தானே நாம் அனைவரும் நினைப்பது.ஆனால் உண்மை அது இல்லை. கேட்க ஆச்சிரியமாக இருக்கிறதா? திவாலாகும் நிறுவனத்தை ஏற்று நடத்திய நிறுவனங்கள் கொள்ளை லாபம் அடிக்கின்றன. இது நடப்பது அமெரிக்காவில்.

சந்தையில் ஏற்படும் ஏற்ற இறக்கத்தின் போது ஒரு சில வலுவான கம்பெனிகளும் நட்டமடைந்து திவாலாகும் நிலைக்கு வர வாய்ப்புண்டு. ஆனால் அந்நிறுவனங்களுக்கு அதிக அளவு சொத்துக்களும், சந்தையில் நல்ல பிராண்டு பெயரும் இருக்கும். அதை வீணாக்காமல் புதிய தனியார் முதலீட்டு நிறுவனம் அது போன்ற திவாலாகும் நிறுவனங்களை திவாலுக்கு பின் புதிதாக எடுத்து நடத்தும். ஒரு முறை இது போல் தனியார் முதலீட்டு நிறுவனங்கள் கையில் மாட்டினால் அவ்வளவு தான். அடுத்த சில வருடங்களில் தொடர்ச்சியாக இது போன்ற தனியார் முதலீட்டு நிறுவனங்கள் வீழும் நிறுவனத்தை சூறையாடி விடுவார்கள். அதன் முதன்மை முதலீட்டாளர்கள் பணத்தை இழப்பர். வேலை செய்பவர்களும் பல இன்னலுக்கும் வேலை இழப்பிற்கும் உள்ளாவார்கள் ஆனால் அதை ஏற்று நடத்தும் தனியார் முதலீட்டு நிறுவனங்கள் கொள்ளை லாபம் அடிப்பார்கள்.

எப்படி என்கிறீர்களா?. உதாரணமாக ஒரு நிறுவனம் திவாலாக போகிறது என்று வைத்து கொள்வோம். அது திவாலான உடன் ஒரு சில தனியார் நிறுவனங்கள் அதை புதிதாக எடுத்து நடத்தும். திவாலாகும் நிலையில் உள்ள நிறுவனங்களின் மதிப்பு அடிமாட்டு விலையில் இருக்கும். தனியார் முதலீட்டு நிறுவனங்கள் பெரும்பாலும் கடன் மூலம் கிடைத்த பணத்தை கொண்டு குறைந்த விலைக்கு இந்த நிறுவனத்தை வாங்குவார்கள். அதை வாங்குவதற்கு மற்றும் நடத்துவதற்கு என்று அந்நிறுவன பணத்தையே தட்சணையாக பெருவர். பல மில்லியன் டாலர்களையும் சிறப்பு டிவிடெண்டாக பெருவர். அமெரிக்க வங்கிகளும் இந்த நிர்வாக மாற்றம் மற்றும் பாண்டுகளை விற்க என பல மில்லியன் லாபம் அடைவர்.

இதற்கெல்லாம் பணம் எவ்வாறு வருகிறது என்று கேட்கிறீர்களா? இந்நிறுவனத்தை அளவுக்கு மீறி கடன் வாங்க வைப்பர்கள்.வாங்கிய கடனின் பெரும் பகுதியை மேற் கூறிய வகையில் சுருட்டி கொள்வார்கள். மீதி பணம் மட்டும் கம்பெனியின் வளர்ச்சிக்கு செலவிடபடும்.இவ்வாறாக ஏற்று நடத்தும் ஒரு சில வருடத்தில் முதலை எடுத்து கொண்டு நன்கு லாப பணத்தையும் எடுத்து கொல்வார்கள். பிறகு கம்பெனி நிலை மீண்டும் மோசமானவுடன் அதை மீண்டும் திவாலாக்க அறிவிப்பார்கள். தற்போது வேறொரு தனியார் முதலீட்டு நிறுவனம் அதை எடுத்து நடத்தும். ஆனால் நடக்கும் நிகழ்வுகள் ஒன்றாகாவே இருக்கும். கம்பெனியின் கடன் அதிகமாகும். அதை எடுத்து நடத்தும் நிறுவனம் மட்டும் ஒன்றன் பின் ஒன்றாக லாபமடையும்.10 - 12 வருடங்களில் கரும்பு சக்கையை புழிவது போல் பணத்தை ஒவ்வொரு தனியார் நிதி நிறுவனங்களாக புழிந்து எடுத்து சக்கையாக்கி போட்டு விடுவார்கள்.

உதாரணமாக சிம்மன்ஸ் என்கின்ற படுக்கை தயாரிப்பு கம்பெனி 1991ம் ஆண்டு வெறும் $164 மில்லியன் கடன் கொண்டிருந்தது. ஆனால் அதன் பிறகு மேற்கூறியவாறு பல தனியார் முதலீட்டு கம்பெனிகளின் கைக்கு சென்று அதன் கடன் $1.3 பில்லியனாக மாறி விட்டது. தனியார் முதலீட்டு நிறுவனக்களோ திவாலாகி கொண்டிருந்த அந்த நிறுவனத்திலிருந்து சுமார் $750 மில்லியன் லாபம் எடுத்து விட்டனர். அந்த கம்பெனியின் கடன் பாண்டுகளை வாங்கியவர்களுக்கோ $575 மில்லியனுக்கும் மேலாக நட்டம். ஒவ்வொரு முறை அது கடன் வாங்கும் போதும் அதன் வட்டி அதிகமாகி கொண்டே செல்வதால் அது போன்ற நிறுவனக்களை பொருளாதார சரிவு நேரங்களில் வெற்றிகரமாக நடத்துவதும் கடினம்..

ஒரு சில தனியார் நிதி நிறுவனங்கள் கம்பெனியை மீண்டும் லாபமாக நடத்த முயற்சி செய்கிறார்கள் என்பது உண்மை தான். ஆனால் தற்போது ஒட்டுண்ணியாக பணத்தை உறிஞ்சும் செயல் இவ்வகை நிறுவனங்களிடம் அதிகரித்து உள்ளது

2003 லிருந்து 2008ம் ஆண்டு வரை மட்டும் தனியார் நிதி நிறுவனங்களால் கட்டு பாட்டுக்கு எடுக்க பட்ட 188 கம்பெனிகளிலிருந்து மட்டும் சுமார் $75 பில்லியன் கடனாக பெறபட்ட பணம் தனியார் நிதி நிறுவனக்களுக்கு டிவிடென்டாக சென்று கம்பெனிகளை கடனில் மூழ்கடிக்க செய்துள்ளது.

திவாலாகும் நிறுவனத்திலிருந்தும் பணத்தை கறக்கும் அதிசயம் இன்றும் நடந்து கொண்டுள்ளது. இப்படியும் ஒரு பொழைப்பு!

--

Monday, October 19, 2009

சீனாவிடம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்

இந்தியாவுக்கு எதிராக சீனா நகர்த்தி வரும் காய்களை பற்றி தெளிவாக விவரிக்கும் இந்திய பத்திரிக்கைகள், சீனா வளர்ச்சி அடைய செய்யும் முயற்சிகளை பற்றியும் இந்தியா எந்த அளவு பின் தங்கி உள்ளது என்பது பற்றியும் முக்கியத்துவம் கொடுத்து செய்தி வெளியிடுவதில்லை!. இது பற்றிய செய்தியும் விழிப்புணர்வும் சராசரி இந்தியருக்கு மிகவும் குறைவாகவே உள்ளது. அரசியல்வாதிகளுக்கு அது பற்றிய அக்கறை சிறிதும் இல்லை. அமெரிக்காவில் உயர் கல்வி படிக்கும் என் நண்பன் ஒருவன் பேசும் போது கூறிய செய்திகள் மிகவும் ஆச்சிரியமாக இருந்தது.

சீனாவின் பல்கலைகழகங்கள் எவ்வாறு அடிப்படை ஆராய்ச்சி மற்றும் தொழில் நுட்ப ஆராய்ச்சிகளில் மனித வளத்தை பெருக்க முயற்சி செய்கிறது என்பது பற்றியது தான் அந்த செய்தி. சீனாவிலிருந்து ஒரு சில அறிவியல் வல்லுனர்கள் அமெரிக்காவுக்கு சில மாத காலத்திற்கு வந்து தங்கி இருந்து, அமெரிக்காவில் ஆராய்ச்சியில் ஈடு படும் சிறபபான சீன மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களை நேரடியாக சந்தித்து அவர்களிடம் பேசி அவர்களுக்கு வேண்டிய வசதிகளை செய்து கொடுத்து சீன பல்கலைகழகங்களில் வேலை செய்ய அழைத்து செல்கிறார்கள். அவ்வாறு வருபவர்களின் வேலையே இது போல் அறிவியல் வல்லுனர்களை அங்கு கூட்டமாக அழைத்து செல்வது தானாம். அது மட்டுமின்றி அமெரிக்காவிலிருந்து செல்லும் பேராசிரியர்களுக்கு ஐந்து வருடத்திற்கு இத்தனை அறிஞ்சர்களை அமெரிக்காவிலிருந்து அழைத்து வர வேண்டும் என்று ' Target ' வைத்து ஆட்களை இழுக்கிறார்களாம். இது மட்டுமன்றி பலவாறாக அறிவியல் வல்லுனர்களை சீனா நோக்கி தூண்டில் போட்டு கொண்டு செல்கின்றனராம். தற்போது சீனா வெளிநாட்டு விஞ்ஞானிகளையும் அழைத்து கொள்ள முடிவெடுத்துள்ளனராம்.

அதே நேரத்தில் இந்தியாவில் உள்ள என் நண்பர் (மரபனு மாற்றம் மூலம் வெற்றிகரமாக புதிய பயிர் வகையை இந்தியவில் உள்ள ஆராய்ச்சி நிறுவனத்தில் இருந்தே உருவாக்கியவர்) ஒருவரிடமிருந்து கேட்ட செய்தி. இந்தியாவில் தமிழகத்தில் இருக்கும் ஒரு புகழ் பெற்ற பல்கலை கழகத்தில் ஆராய்ச்சி பணிக்கு ஆட்கள் எடுக்க போகிறார்கள். அதற்கு அடிப்படை தேவை 10 - 25 லட்சம் மந்திரி மற்றும் அதிகாரிகளுக்கு லஞ்சமாக கொடுக்க வேண்டும். இந்தியாவில் பெரும்பான்மையான பல்கலை கழகங்களில் லஞ்சம் புகுந்து விளையாடுகிறது. இந்த ஊழல் துனைவேந்தர் பதவி நியமனத்தில் இருந்து தொடங்குகிறது. எல்லா மட்டத்திலும் இது புகுந்து விளையாடுகிறது.

ஒரு நாட்டின் தொழில் வளர்ச்சி மற்றும் அதன் மூலம் ஒட்டு மொத்த வளர்ச்சிக்கு ஆதாரமாக இருப்பது பல்கலை கழகங்கள். அமெரிக்கா மற்றும் மேலை நாடுகளின் தொழில் வளர்ச்சியின் முழு முதல் காரணம் பல்கலை கழகங்கள். பெரும்பான்மையான கண்டு பிடிப்புகள் நடப்பது பல்கலை கழகத்தில் தான். முக்கியமாக அடிப்படை ஆராய்ச்சிகள் அனைத்தும் நடப்பது பல்கலை கழகத்தில் தான். முதலாளித்துவ நாடுகளில் பல்கலை கழகத்தில் நடக்கும் ஆராய்ச்சியின் பயனை இறுதில் தனியார் கம்பெனிகள் அறுவடை செய்யும்.

இந்திய அரசு துறையினரால் ஆராய்ச்சிக்கு வழங்கும் நிதியும் அரசியலில் இருக்கும் அரசியல்வாதிகளுக்கும், பல்கலை கழகங்களில் இருக்கும் அரசியல்வாதிகளின் கைகளுக்கும் தான் பெருமளவு செல்கிறதே அன்றி உண்மையான விஞ்ஞானிக்கு ஒரு பகுதியே செல்கிறது.
பன்னாட்டு கம்பெனியினர் தன் அறிவியல் தொழில் நுட்பம் மூலம் பெரு வளர்ச்சி அடைவதை பற்றி பேசுபவர்கள் கூட இந்தியாவில் ஆராய்ச்சிக்காக செலவிட படும் தொகை எந்த அளவுக்கு ஒழுங்காக ஆராய்ச்சிக்கு செல்கிறது, அதன் மூலம் கண்டு பிடிக்க பட்டவை என்ன? என்று யாரும் கேள்வி எழுப்புவதில்லை.
அதைவிட மிக கவலைக்குறிய செய்தி தற்போது ஆராய்ச்சி செய்ய வரும் இடுத்த தலை முறையினர் நிலை. தற்போது பேராசிரியர்களாக இருப்பவர்கள் 20 - 40 வருடத்திற்கு முந்தய தொழில்நுட்பம் மட்டும் தெரிந்தவர்கள். அவர்களிடம் ஆராய்ச்சி செய்ய வரும் மாணவர்களுக்கு அவர்கள் கொடுக்கும் தலைப்பு ஒன்றுக்கும் உதவாத 20 வருட பழைய ஆராய்ச்சி தலைப்பாக இருக்கும். தற்போது இந்தியாவில் செய்யபடும் ஆராய்ச்சிகளில் பெரும்பான்மையானவற்றை தலைப்பு கொடுத்தவுடனேயே அறையில் அமர்ந்தே 4 மாதத்தில் எழுதி விட முடியும்.. ஒரு சில பல்கலைகழகங்களில் ஆராய்ச்சி கட்டுரையை பரிசீலிக்கும் பொறுப்பு அந்த துறையில் புகழ் வாய்ந்த வெளி நாட்டு அறிஞ்சர்களிம் அனுப்புவார்கள். முன்பெல்லாம் அது அமெரிக்கா மற்றும் அய்ரோப்பா போன்ற இடங்களில் உள்ள பெரிய ஆரய்ச்சி கூடத்தில் வேலை செய்யும் விஞ்ஞானிகளிடம் செல்லும். தற்போது அது வங்காளதேசம், சூடான், எத்தியோப்பியா போன்ற தேசங்களில் வேலை பார்க்கும் பேராசிரியர்களிடம் செல்கிறது.

இந்தியாவில் CCMB(Center for cellular and Molecular Biology)போன்ற ஒரு சில ஆராய்ச்சி நிறுவனங்கள் இதற்கு மாற்றாக நல்ல ஆராய்ச்சியாளர்களை இருத்து உலக தரம் வாய்ந்த ஆராய்ச்சி செய்தாலும் 1 பில்லியன் மக்கள் தொகை கொண்ட இந்தியா போன்ற நாட்டில் ஒவ்வொரு மாநிலத்திலும் தரம் வாய்ந்த 10 பல்கலைகழகங்களாவது இருக்க வேண்டும்

பல்கலை கழகத்தையும் அங்கு நடக்கும் ஆராய்ச்சியையும் வலுபடுத்தாமல் எந்த நாடும் வல்லரசாக முடியாது. மிகவும் அதிர்ச்சியான செய்தி,இந்தியாவில் இது பற்றிய விவாதம் கூட பெரிய அளவில் தொடங்க வில்லை. இந்தியாவில் அரசயல்ப்வாதிகளுக்கும் இது பற்றி கவலை இல்லை. இந்தியா வல்லரசாகும் என்று கனவு கொண்டிருக்கும் சிந்தனை வாதிகளும் கனவில் இருந்து வெளி வந்து அதை செயல் படுத்த நேரம் இல்லை.

Sunday, October 11, 2009

அமைதியாக நடக்கும் ஒரு சமுதாய புரட்சி - 2



அமைதியாக நடக்கும் ஒரு சமுதாய புரட்சி - 1


சென்ற பதிவில் தேசிய வேளாண் நிறுவனம் பற்றியும் அது விவசாய வளர்ச்சிக்கு ஆற்றி வரும் பணிகள் பற்றியும் பார்த்தோம். இப்பதிவில் அந்நிறுவனம் வேளாண் வளர்ச்சிக்கு ஆற்றி வரும் பிற பணிகளை பார்ப்போம்.



5.சென்னை தரமணியில் உள்ள அண்ணா பல்கலை கழக வளாகத்தில் இந்நிறுவனத்தின் ஆராய்ச்சி மையம் செயல் பட்டு வருகிறது.பயிரின் வளர்ச்சி மற்றும் மகசூலுக்கு முக்கிய பங்கை அளிப்பது மண்ணின் வளம். பயிருக்கு தேவையான சத்துக்கள் எந்த அளவு மண்ணில் உள்ளது என்பதை கண்டறிந்து மீதி தேவையான சத்துக்களை உரம் மூலம் அளிப்பதன் மூலம் மகசூலை பெருக்க முடியும். இந்த மண் பரிசோதனையை துள்ளியமாக செய்ய மண் பரிசோதனை மையத்தை இங்கு அமைத்துள்ளனர்.அமெரிக்காவில் உயர் பரிசோதனை கூடங்களில் பயன் படுத்தும் முறையை இந்தியாவிலும் கையாண்டு துள்ளிய மண் பரிசோதனை செய்கிறார்கள். தழை,மணி மற்றும் சாம்பல் சத்துக்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை பிற நுண்ணூட்ட சத்துக்களுக்கும் கொடுக்கிறார்கள். அந்த பரிசோதனையின் முடிவுகளை வேளாண் வல்லுநர்கள் ஆராய்ந்து பயிர்களுக்கு தேவையான சத்துக்களை சரியான அளவு, சரியான நேரத்தில், சரியான முறைப்படி இட பரிந்துரை செய்கிறார்கள்.

6.மகளிர் சுய உதவி குழுக்களால் உற்பத்தி செய்ய படும் உணவு பொருட்களின் தர கட்டு பாடு மற்றும் அவ்வுணவு பொருட்களில் இருக்கும் சத்துக்களின் அளவை பட்டியலிடுவது போன்றவை அப்பொருட்களை சந்தை படுத்துவதற்கு மிகவும் அவசியமானவை ஆகும். இந்த ஆராய்ச்சி மையத்தில் இதற்கான வசதியும் உள்ளது.

7.உயிர் தொழில்நுட்பம் மூலம் நோய் தாக்குதல் குறைந்த அதிக மகசூல் கொடுக்க கூடிய செடிகளை உற்பத்தி செய்யவும் இங்கு ஆராய்ச்சி நடைபெருகிறது.

8.தற்போது வேளாண் கூலி தொழிலாளர்கள் எல்லாம் வேலை வாய்ப்பை தேடி நகர் புறங்களுக்கு சென்று விட்டதால் விவசாய வேலைக்கு ஆட்கள் கிடைப்பது அரிதாக உள்ளது. எனவே விவசாயத்தை தொடர்ந்து நடத்த பண்ணை உபகரணங்களின் தேவை முக்கியமாக உள்ளது. இந்நிறுவனம் தமிழ்நாட்டு நிலவரத்திற்கு ஏற்ற பண்ணை உபகரணங்களை கண்டறிந்து அவற்றை விவசாயிகளுக்கு விளக்கி அவர்கள் உபயோகபடுத்த ஊக்குவிக்கிறது.வெளிநாட்டிலிருந்து கூட நமக்கு தேவையான உபகரணங்களை தருவித்து இங்கு உபயோகபடுத்த முடியுமா என்று முயற்சி செய்கிறார்கள்.







9.இந்திய விவசாயத்தில் தற்போது முக்கிய பிரச்சனையாயிருப்பது தண்ணீர் தான். அவ்வப்போது அதிகம் பெய்யும் மழை நீரை தேக்கி வைத்து வறட்சி காலத்தில் விவசாயத்திற்கு உபயோக படுத்துவது அவசியம். தேசிய வேளாண் நிறுவனம், நாபார்டு வங்கியுடன் இணைந்து கிராம அளவில் நீர் சேமிப்பு கலங்களை அமைத்து, வாய்க்கல்களை சுத்த படுத்தி அதை அந்த கிராம மக்களே நிர்வகிக்கவும் ஏற்பாடு செய்துள்ளது. இதன் பயனை பல கிராம விவசாயிகள் தற்போது அனுபவித்து வருகிறார்கள்.



10.மாடு வளர்ப்பது என்பது விவசாயிகளுக்கு மற்ரொரு லாபம் தரும் தொழிலாக உள்ளது. மிகவும் தரம் வாய்ந்த வெளி நாட்டு மாடுகளின் விந்துக்களை உபயோகபடுத்தி உள் நாட்டு மாடுகளுடன் கலப்பு ஏற்படுத்தி அதிக பால் உற்பத்தி மற்றும் நோய் ஏதிர்த்து வளர கூடிய மாடுகளை விவசாயிகள் பெற உதவி செய்கிறது.

11.விவசாயிகளை தொழில் நிறுவனங்களோடு நேரடி தொடர்பை ஏற்படுத்தி, உற்பத்தியின் லாபம் இடை தரகர்களுக்கு கிடைக்காமல் விவசாயிகளுக்கு கிடைக்க உதவி செய்கிறது. உதாரணமாக பால் உற்பத்தி, love birds பறவை வளர்ப்பு மற்றும் பலவற்றில் இது போல் உதவி செய்கிறது.

12.விவசாயிகளுக்கு வங்கியில் கடன் வாங்க தானே முன்னின்று உதவி செய்து அந்த கடனில் தொடங்கும் வேளாண் தொழிலுக்கும் இறுதி வரை தொழில்நுட்ப ஆலோசனை வழங்குகிறது.

அடுத்த பதிவில் பிற பணிகளை பற்றி தொடர்ந்து பார்ப்போம்

--

Wednesday, October 07, 2009

அமைதியாக நடக்கும் ஒரு சமுதாய புரட்சி


எதிர் மறையான செய்திகளை பார்த்து பார்த்து சமச்சீரான வளர்ச்சியே நடக்க வாய்ப்பில்லை என்று அலுத்து போனவர்களுக்கு நம்பிக்கையூட்டும் பதிவுதான் இது.

தற்போது உண்மையான வளர்ச்சி என்பது நகர் புறங்களை நோக்கி கடத்த பட்டு விட்டது. உலகமயமாதல் விளைவாக லண்டனுக்கும் சென்னைக்கும் உள்ள இடைவெளியை விட சென்னைக்கும் அதன் அருகில் 100 கி.மீ தொலைவில் இருக்கும் கிராமத்திற்கும் இடைபட்ட இடைவேளி தான் அதிகம் ஆகி உள்ளது. அமெரிக்காவில் உள்ள மக்களின் வாழ்க்கை தரமும், நன்கு படிக்க வாய்ப்பு வசதி பெற்று, மூலதனம் அதிகம் உள்ள குடும்பத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை தரமும் ஒரளவு ஒப்பீடு செய்ய கூடியதாக இருக்கிறது. ஆனால் அதே வாய்ப்பு வசதி பெற்ற நகரத்தில் இருக்கும் மக்களின் வாழ்க்கை தரமும் , கிராமத்தில் விவசாயத்தை மட்டுமே நம்பியுள்ளவர்களின் வாழ்க்கை தரமும் இரு வேறு துருவங்களை நோக்கி நகர தொடங்கி உள்ளன. நகர் புறத்தில் வேலை வாய்ப்பு மிக அதிகமாக உள்ளது. அதிக சம்பளம் கிடைக்காவிட்டாலும் வருடத்தில் அதிக நாட்கள் வேலை கிடைக்கும் வசதியும் அங்கு உள்ளது. ஆனால் அதே சமயம் ஆட்கள் தட்டுபாடும் பெரு நகரங்களில் அதிகம் உள்ளது. இன்றைய விவசாயத்தின் போக்கும் கவலைகுறியதாக இருக்கிறது. இடு பொருட்களின் விலை ஏறி கொண்டே போகிறது. விவசாயிகளுக்கும் உண்மையிலேயே விஞ்ஞான ரீதியான அறிவுரை கிடைப்பது அரிதாகி, தேவையான தொழில் நுட்பங்கள் மற்றும் அறிவுரை கிடைக்காமல் தேவையான இடுபொருட்களை தேவையான நேரத்தில் இடாமல், தேவையற்ற இடுபொருட்களை இட்டு பணத்தை விரையமாக்கி கடன் சுமையில் வாழ்க்கையை தள்ள வேண்டிய பரிதாப நிலையில் உள்ளனர்.

இந்த நிலையை மாற்ற யார் தான் முன் வர போகிறார்கள் என்று அனைவரும் நினைக்க தோன்றும். இந்த மாற்றத்தை கொண்டு வர ஆங்காங்கு ஒரு சில அரசு சாரா நிறுவனங்கள் முயன்று வருகின்றன. அந்த முயற்சியில் வெற்றிகரமாக குறிப்பிட்டு சொல்ல கூடிய அளவு செய்து வரும் நிறுவனங்களில் ஒன்று தான் தேசிய வேளாண் நிறுவனம். வெளி உலகுக்கு தெரியாமல் கிராம புறங்களில் ஒரு மறுமலர்ச்சியே செய்து வருகிறது இந்த நிறுவனம்.

பசுமை புரட்சியை ஏற்படுத்தி உணவு உற்பத்தியில் தன்னிறைவை ஏற்படுத்திய சி.சுப்ரமணியம் அவர்களால் ஆரம்பிக்கபட்ட நிறுவன்ம் தான் தேசிய வேளாண் நிறுவனம். 60களில் தொடங்கிய பசுமை புரட்சியால் ஏற்பட்டு வந்த முன்னேற்றம் 90களில் முடிவடைய தொடங்கியதையும், பசுமை புரட்சியின் நன்மை பெரும்பாலும் சிறு மற்றும் குறு விவசாயிகளை அடைய முடியவில்லை என்பதையும் கண்டார். மேலும் தற்போது மண்வளம் பெருக்கத்திற்கான முக்கியத்துவம் மிகவும் குறைந்து வருவதையும் கண்டார். விவசாயிகளுக்கும் சந்தைக்கும் நேரடி தொடர்பு இல்லாததால், பெரும்பான்மையான லாபம் விவசாயிகளை சென்றடையாமல் இருப்பதையும் கண்ட அவர் இந்த பிரச்சனைக்கு தீர்வு காண ஆரம்பித்த தொண்டு நிறுவனம் தான் தேசிய வேளாண் நிறுவனம்.

இந்த நிறுவனம் விவசாய வளர்ச்சிக்கு மற்றும் கிராம புற வளர்ச்சிக்கு எடுத்து வரும் முயற்சிகள் பற்றி பார்ப்போம்.

விவசாய வளர்ச்சி
1.நவீன விஞ்ஞான ரீதியான யுக்திகளை கடை பிடித்து விவசாய உற்பத்தி திறனை பெருக்கும் முறைகளை விவசாயிகளின் நிலங்களிளே நேரடியாக செயல் படுத்தி காட்டி, நவீன விவசாயத்திற்கும் இதுவரை அவர்கள் செய்யும் விவசாயத்திற்கும் இடையே உள்ள வேறூபாட்டை எடுத்து காட்டி அறிவியல் ரீதியான விவசாயத்தில் கிடைக்கும் லாபத்தை உணர்த்துகிறார்கள். காஞ்சீபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் சுமார் 1000க்கும் மேற்பட்ட பண்ணைகளில் இந்த முறையை கையாண்டு உள்ளனர்.




2.நவீன தொழில் நுட்பங்களை செயல்படுத்தி விவசாயம் செய்த விவசாயிகளின் லாபமும் நன்கு உயர்ந்துள்ளது.ஒரு சில பயிர்வகைகளில் கிடைத்த உற்பத்தி பெருக்கம் கீழே தர பட்டுள்ளது.
மக்காசோளம் - 150%
தர்பூசனி - 116%
நிலகடலை - 113%
நெல் - 55%
கரும்பு - 40%


3.மதுராந்தகம் அருகில் உள்ள சூனாம்பேடு என்ற கிரமத்தில் ஊரக மேம்பாட்டு மையம் ஒன்றை ஆரம்பித்துள்ளனர். அங்கு விவசாயிகளுக்கு தேவையான பயிற்ச்சிகளை கொடுக்க தரமான ஒலி-ஒளி சாதனங்களுடன் தரமான வகுப்பரை கட்டி உள்ளனர். அது மட்டுமின்றி விவசாயிகள் தங்குவதற்கு வசதியும் உள்ளது. இங்கு விவசாயிகள் மட்டுமின்றி வேளாண் விரிவாக்க துறையினரும் பயிற்ச்சி எடுக்கின்றனர்


4.அங்கு ஒரு மாதிரி பண்ணையும் அமைக்க பட்டுள்ளது. புது வகை பயிர்களை அந்த பகுதியில் பயிரிட தேவையான தொழில் நுட்பங்கள் அங்கு இறுதி செய்ய படுகிறது.அது மட்டுமின்றி மதிரி பண்ணையாகவும் அது செயல் படுகிறது.



அந்த நிறுவனம் ஆற்றும் பிற பணிகளை அடுத்த பதிவில் தொடர்கிறேன்.

--

Tuesday, September 22, 2009

உலக வங்கி பிடியில் மாட்ட போகும் இந்திய வங்கிகள்?



தற்போதைய பொருளாதார நெருக்கடியிலிருந்து இந்தியா தப்பித்ததற்கு முக்கிய காரணம் இந்திய வங்கி துறை வெளி நாடுகளின் தலையீடு இல்லாமல் தனி தன்மையாக இருப்பது என்பது பெரும்பான்மையானவர்களால் ஏற்று கொள்ள பட்ட உண்மை.அதற்கு ஆப்பு வைத்து விட்டது தற்போதைய மன்மோகன் அரசாங்கம். உலக வங்கியிடமிருந்து வங்கிகளுக்கு $2 பில்லியன் கடன் வாங்க முடிவு செய்துள்ளது மத்திய அரசு.

இதன் விளைவாக இனி பன்னாட்டு வங்கிகள் மற்றும் வெளி நாடுகளின் தலையீடு வங்கி துறையில் அதிகம் இருக்க போகிறது. இந்தியாவின் வங்கி துறையும் மேல் நாட்டு வங்கி துறை போன்று நிச்சயமற்ற நிலையை நோக்கி போக போகிறது. பிற் காலத்தில் அடுத்த பொருளாதார நெருக்கடி வந்தால் அதன் விளைவு இந்தியாவில் அதிகம் உணர பட வாய்ப்புள்ளது.

தற்போதைய பொருளாதார நெருக்கடியின் விளைவாக வங்கிகளின் மூலதனத்தில் பிரச்சனை இருப்பது உண்மை தான். ஆனால் அதை தீர்க்க பிற வழிகள் உள்ளது. அதை விடுத்து நாட்டின் ஜீவாதாரமாக விளங்கும் வங்கி துறையை உலக வங்கியிடம் பணயம் வைப்பது மிகவும் அபாயகரமான செயல்.

இதற்காக உலக வங்கியிடம் கடன் பெற போவது $2 பில்லியன் மட்டுமே. இதை எளிதாக நாட்டின் அன்னிய செலாவணி கையிருப்பிலிருந்து எடுத்து கொடுக்கலாம்.இந்தியாவிடம் இருக்கும் $250 பில்லியன் டாலர் அன்னிய செலாவணி கையிருப்பில் இருந்து நாட்டின் ஜீவதாரமாக இருக்கும் வங்கிகளுக்கு $2 பில்லியன் கொடுப்பதால் பெரிய பாதிப்பு எதுவும் வந்து விட போவது இல்லை. அது மட்டுமின்றி ஒரு சில கணிப்புகளின் படி இந்திய அன்னிய செலாவணி தர்போது வட்டியாக சம்பாதித்து கொடுக்கும் பணம் 2 - 3%. ஆனால் உலக வங்கியிடம் வாங்கும் கடனுக்கு வட்டி 10 - 12%(இது உறுதி படுத்த படாத தகவல்). ஆயுதம் வாங்கவும் அதற்கு லஞ்சம் கொடுக்கவும் ஆகும் செலவில் ஒரு சிறு பகுதியை இதற்கு உபயோகித்தால் இப்பிரச்சனையை தீர்த்து விடலாம்.

--

Monday, August 31, 2009

சீனாவின் தூண்டிலில் மத்திய அமைச்சர் கபில் சிபல்

இந்தி தெரியாத மக்கள் எல்லாம் இந்தியர் என்ற உணர்வு இல்லாமல் தேசிய நீரோட்டத்தில் கலக்காமல் தேச விரோதிகளாக உள்ளனர். இதை கூறுவது ஏதோ R.S.S தலைவர்களோ அல்லது முலயாம் கட்சியினரோ இல்லை. சோசியலிச கட்சியாக தன்னை காட்டி கொள்ளும் காங்கிரஸ் தான். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் அமைதியாக இருப்பது அ.தி.மு.க இல்லை. இந்தி எதிப்பு போரில் பல்லாயிரம் பேர் சிந்திய ரத்தத்தில் வளர்ந்த தி.மு.க.

கபில் சிபல் கூறியதை பாருங்கள்.
All children are not fluent in Hindi as they are in their mother tongues. Hindi is necessary for students to integrate with the rest of the country.

இந்தி தெரிந்தால் தான் நீங்கள் தேசிய நீரோட்டத்தில் "Integrate" ஆவதாக ஒத்து கொள்வீர்களா என்ன?. அது மட்டுமல்ல. இந்தியா "Knowledge Economy" ஆக வந்த பிறகு ஆங்கிலத்தை எடுத்து விட்டு இந்தியை இந்தியா முழுதும் திணிப்பார்களாம். மற்ற மொழி எல்லாம் வளர கூடாதாம். இந்தி தான் இந்தியா முழுதும் ஏற்று கொள்ள பட வேண்டிய மொழியாக இருக்க வேண்டுமாம்.

//"Now the lingua franca is English for professionals. When we become producers of knowledge then we can set our language as the lingua franca," Sibal said.
//
இது என்ன நம்முடைய(our) மொழி. உங்களுடைய மொழி என்று சொல்லி கொள்ள வேண்டியது தானே.இதை கடுமையாக எதிர்க்காமல் பதவிக்கும் பணத்திற்கும் அடிமை ஆகி உள்ள கட்சிகள் தயவு செய்து தங்களை திராவிட கட்சிகள் என்று சொல்லாமல் இருந்தால் நன்றாக இருக்கும்.

இலங்கையில் தமிழர்கள் கொல்ல பட்ட போது அது வெளியுறவு கொள்கையை பாதிக்கும் என்ற பெயரில் அமைதியாக இருந்தீர்கள். இந்த அமைதிக்கு என்ன காரணம்?.

பா.ஜ.க வாக இருந்தாலும் சரி. காங்கிரசாக இருந்தாலும் சரி. கடிசியில் இந்து-இந்தி- இந்தியாவில் வந்து நிற்கின்றனர்.தமிழர்களும் தொலை நோக்கி பார்வையில் சிந்திக்க வேண்டிய தருணம் விரைவில் வந்து விடும் என்றே தோன்றுகிறது.

இதற்கும் தலைப்பிற்கும் என்ன சம்பந்தம் என்று கேட்கிறீர்களா? சீனா இந்தியாவை 25 துண்டாக்க வேண்டும் என்று திட்டமிடுவதாக செய்திகள் வந்தன. நம்ப ஊர் அரசியல்வாதிகள் கபில் சிபல் போல் இருந்தால், சீனா கஷ்டபட்டு இந்தியாவை உடைக்க வேண்டிய தேவையே இருக்காது. தானாகவே அது நடக்கும் .

--

Sunday, August 30, 2009

வளரும் வங்கிகள்! இடம் மாறும் அதிகாரங்கள்?



முந்தைய பதிவுகளில் சீனா எவ்வாறு உற்பத்தி துறையில் போட்டியில்லாத வளர்ச்சி அடைய எடுக்கும் செயல்பாடுகள் பற்றி பார்த்தோம். இந்த பதிவில் அமெரிக்காவின் ஒட்டு மொத்த நிதித்துறை செயல்பாடுகளும் எவ்வாறு ஒரு சில கம்பெனிகளுக்கு போய் கொண்டிருக்கிறது மற்றும் அதனால் ஏற்பட கூடிய விளைவுகள் பற்றியும் என்று பார்ப்போம்.

தற்போதைய நிதி நெருக்கடி வந்த போது அமெரிக்கா எங்கும் பேசபட்டது 'Too Big to Fall'. அதாவது மிக பெரிய நிறுவனங்கள் வீழ்ந்தால் அதன் பாதிப்பு அதிகமாக இருப்பதால், அவர்கள் தவறு செய்து வீழ்ந்தாலும் காப்பாற்ற பட்டே ஆக வேண்டும் என்பது தான். நிதி நெருக்கடியிலிருந்து எழும் முன்னே தற்போது அமெரிக்க நிதி நிறுவனங்கள் நிலையை பார்ப்போம்.

கடந்த சூன் மாதம் பாங்க் ஆப் அமெரிக்கா, வெல்ஸ் பார்கோ மற்றும் ஜெ.பி. மார்கனிடம் மட்டும் 30 சதவிதத்துக்கும் மேலான அமெரிக்க டெப்பாசிட்டுகள் உள்ளன.இந்த மூன்று வங்கிகள் மற்றும் சிட்டி வங்கி ஆகியவையிடம் 50 சத மார்ட்கேஜ் பத்திரங்களும் மூன்றில் இரு கிரடிட் கார்டுகளும் உள்ளது.இதற்கு முக்கிய காரணம் நிதி நெருக்கடியின் போது பிரச்சனையில் உள்ள வங்கிகளை பெரிய வங்கிகள் வாங்கியது தான். கடந்த இரு வருடத்தில் பாங்க் ஆப் அமெரிக்கா 138%, ஜெ.பி.மார்கன் 51% மற்றும் வெல்ஸ் பார்கோ 43% வளர்ந்து உள்ளது. அமெரிக்க அரசு குறிபிட்ட இடத்தில் குறிபிட்ட சதவிதத்திற்கு மேல் டெபாசிட் வைக்க கூடாது என்று போட்டியை ஊக்க படுத்த வைத்துள்ள கட்டு பாட்டையும் மீறி இவ்வங்கிகள் வளர்ச்சி அடைந்து உள்ளது.

இதனால் ஏற்பட கூடிய விளைவுகளை பார்ப்போம். பொருளாதார மந்த நிலையிலேயே இந்த வளர்ச்சி என்றால் பொருளாதாரம் நல்ல நிலைக்கு வரும் போது அதன் வளர்ச்சியை பற்றி நினைத்து பாருங்கள். அது மட்டுமன்றி இந்நிறுவனக்களின் வளர்ச்சி மிக பெரியதாகி விட்டதால், இனி எக்காலத்திலும் இவற்றிற்கு அழிவு ஏற்பட போவது இல்லை என்ற நிலை ஏற்படும். எதாவது பிரச்சனை ஏற்பட்டால் தான் அரசு காப்பற்றி ஆக வேண்டுமே!. அதன் விளைவு, எந்த பயமும் இல்லாமல் முதலீட்டாளர்கள் நிறுவனங்களுக்கு தைரியமாக பணத்தை அள்ளி கொடுப்பார்கள். சிறு மற்றும் குறு நிதி நிறுவனங்களுக்கு முதலீடு கிடைப்பது குதிரை கொம்பாகும். எனவே பிற நிறுவனங்கள் அழிந்து விடும் அல்லது இப்பெரிய நிறுவனக்கள் அவற்றை வாங்கி விடும். இப்பெரும் நிறுவங்கள் மிகவும் அசாதாரமான வளர்ச்சி அடையும்.

மற்ற உற்பத்தி துறைகளில் ஒரு சிலரது ஆதிக்கம் இருந்தால் கூட பரவாயில்லை. ஆனால் நிதி துறையின் பங்கு உலகில் விரல் விட்டு எண்ண கூடிய ஒரு சிலரது கைக்கு சென்றால் அதன் விளைவு கடுமையானதாக இருக்கும்.அது மட்டுமன்றி உலகில் பெரும்பான்மையான கடன்கள் குடுக்கும் அதிகரம் ஒரு சில நிறுவனக்களுக்கு மட்டும் இருந்தால் உலக சந்தையில் எந்த துறையிலும் எந்த நிறுவனம் வளர்ச்சி அடைய வேண்டும் என்பதும் ஒரு சிலரால் நிர்ணயிக்க படும்.போட்டிகள் குறைந்தால் சாதாரண மக்களுக்கும் அவர்களுக்கு சாதகமான வட்டி மற்றும் பிற காரணிகளில் கடன் கிடைப்பது கடினம். தற்போதைய சூழ்நிலையிலேயே பங்கு வர்த்தகத்தில் சர்வ சாதாரணமான ஏற்ற இறக்கத்தை இந்நிறுவனக்கள் ஏற்படுத்துகின்றன.இந்த நிறுவனங்களின் வளர்ச்சி மிக அதிகமானால், இந்த நிலை மோசமாகும்.வளரும் நாடுகளின் பொருளாதார ஸ்திரதன்மை கேள்வி குறியாகும்

இது போல் ஒரு சில நிறுவனங்கள் உலக பொருளாதாரத்தின் பெரும் பங்கை ஆட்டி வைக்க தொடங்கினால் அதிகாரம் எந்த அளவுக்கு அரசுகள் கையில் இருக்கும் என்பது சிந்திக்க வேண்டிய செய்தி.அப்படியே பணத்தை உருவாக்கும் அதிகாரமும் பெரிய நிறுவனக்களுக்கு போய் விட்டால்?!

--

Tuesday, August 25, 2009

சீனாவின் பிரம்மாஸ்த்திரம்



சீனா, அமெரிக்கா ஆடும் பொருளாதார சதுரங்கம்

சீனா ஏற்படுத்தும் பொருளாதார சுனாமி

சீனாவின் Shopping Mania

சீனாவின் அசுர வேக வளர்ச்சியின் பின்னனியை பற்றியும், அது டாலர் வலையில் சிக்கிய நிலை பற்றியும், சீனாவின் தற்போதைய முயற்சிகள் பற்றியும் முற்பதிவுகளில் பார்த்தோம். வருங்காலத்தில் சீனா எவ்வாறு பொருளாதார வல்லரசு நிலையை மேலை நாடுகலிடமிருந்து பறிக்க முயலுகிறது என்று இப்பதிவில் பார்ப்போம்.

உலகில் எந்த ஒரு நாடும் பொருளாதார வல்லரசாக ஆக வேண்டுமானால் அதற்கு தேவைபடும் முக்கிய தகுதி, அந்நாட்டின் நாணயம் உலக நாடுகளிடம் இருக்கும் சேமிப்பு செல்வத்தில் முக்கிய பங்காக இருக்க வேண்டும். உலக சேமிப்பு நாணயமாக இருப்பதன் மூலம் அந்த நாணயத்தின் தேவை உலக சந்தையில் மிகவும் அதிகமாக இருக்கும். வியாபார பரிவர்த்தனைக்கும், நாடுகளின் சேமிப்பிற்கும் அந்த நாணயம் தேவையாக இருப்பதால் அந்நாணயத்திற்கு அதிக கிராக்கி ஏற்படுகிறது.

சீனாவின் அடுத்த குறி, உலக சந்தையில் யுவானை சேமிப்பு நாணயமாக ஆக்க முயற்சி செய்வதாக தான் இருக்கும். ஒரு நாணயத்தை உலக சேமிப்பு நாணயமாக மாற்றுவது அவ்வளவு எளிதான செயல் அல்ல. அதுவும் சீனா போன்ற மூடிய பொருளாதார கொள்கை கொண்ட நாடுகளின் கரண்சியை பொது நாணயமாக ஆக்குவது மிகவும் கடினமே. ஆனால் சீனா அதற்கான ஆய்த்த வேலையில் தற்போதே இறங்க தொடங்கி விட்டது.

உலக சேமிப்பு செல்வத்தில் தற்போது டாலரின் பங்கு 65%. அதே போல் உலக டாலர் சேமிப்பு செல்வத்தில் 30%க்கும் மேலாக சீனாவிடம் உள்ளது!.எனவே டாலரின் மதிப்பு உடனடியாக குறையாமல், சீனா சிறிது சிறிதாக யுவானின் பங்கை உலக வர்த்தகத்தில் அதிகரிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

இதன் முதல் முயற்சியாக சீனாவின் மத்திய வங்கி தலைவர், டாலருக்கு பதிலாக உலக நிதி நிறுவனத்தின் SDRஐ(Special Drawing Right) சேமிப்பு கரண்சியாக்க வேண்டும் என்று குரல் எழுப்பி உள்ளார். SDR என்பது ஒரு நாட்டின் நாணயம் அல்ல. இது டாலர், யூரோ,பவுண்ட் மற்றும் யென் ஆகிய நாணயங்களை கூட்டாக கொண்ட ஒரு கணக்கீட்டு அளகு. தற்போது டாலரின் பங்கு தான் இதில் முக்கியமாக இருக்கிறது. ஆனால் சீனா தற்போது இந்த SDRல் யுவான் உள்பட பிற நாணயங்களையும் சேர்க்க வேண்டும் என்று போர் கொடி எழுப்பி உள்ளது. இதன் மூலம் யுவானையும் சிறிது சிறிதாக உலக சந்தையில் கலக்க முடியும். இதன் மூலம் நாடுகள் டாலர் சேமிப்புகளை சர்வதேச நிதி இணையத்திடம் கொடுத்து SDR வாங்கி கொள்ளவும் கோரிக்கை விடுத்துள்ளது. இதன் மூலம் சீனாவும் தன்னிடம் உள்ள டாலர் சொத்துக்களை இழப்பின்றி விடுவிக்க முடியும். ஆனால் தற்போது SDR சார்ந்த பாண்டுகளை மத்திய வங்கிகள் தான் வாங்கி விற்க முடியும். தனியார் நிதி நிறுவனக்கள் இவ்வர்த்தகத்தில் ஈடு பட முடியாது.

அடுத்ததாக உலக வர்த்தகத்தில் டாலரின் தேவையை குறைத்து யுவானின் தேவையை அதிகரிக்க தேவையான யுக்திகளை எடுத்து வருகிறது. இதன் முதல் கட்டமாக சீனாவின் சில கம்பெனிகளின் வெளிநாட்டு வர்த்தகத்திற்கு (முக்கியமாக ஹாங்காங், ஆசியான் ஆகிய பகுதிகளுக்கு) யுவானை உபயோகிக்க அனுமதி அளித்துள்ளது. இதனால் வெளி நாடுகள் தங்களுக்கு தேவையான யுவானை சீனாவிடமிருந்து கடனாகவோ அல்லது வாங்கவோ முடியும்.

ரஸ்யாவும் சீனாவும் தங்களுக்கிடையான வர்த்தகத்தில் தங்கள் சொந்த நாடுகளின் நாணயத்தை உபயோகிக்க முடிவு செய்துள்ளது. பிரேசிலுடனும் இவ்வாறு சொந்த நாணயத்தில் வத்தகம் செய்ய முயற்சி செய்து வருகிறது. இதனால் டாலரின் தேவை சிறிதளவு உலக வர்த்தகத்தில் குறைய வாய்ப்புள்ளது.
அது மட்டுமின்றி அர்ஜென்டினா,பெலாரஸ்,இந்தோனேசியா,மலேசியா,தென் கொரியா போன்ற நாடுகளிடம், டாலருக்கு பதில் யுவானில் வர்த்தகம் செய்ய வசதியும் செய்து கொடுத்துள்ளது.அதன் மூலம் யுவான் பணத்தை கடனாக சீனாவிடம் இந்நாடுகள் வாங்க முடியும்.

ஒரு சில பொருளாதார வல்லுனர்களின் கணிப்பு படி 2012ல் உலக வர்த்தகத்தில் $2 டிரில்லியன் மதிப்பு யுவான் அடிப்படையில் நடைபெற வாய்ப்புள்ளது.

ஆனால் யுவானை சேமிப்பு நாணயாமாக்க சீனா தன் பொருளாதாரத்தில் பல மாறுதல்கள் செய்ய வேண்டும். முக்கியமாக வெளிநாட்டினர் சீன சொத்துக்களில் எளிதாக முதலீடு செய்வது போலவும், அதில் கிடைக்கும் லாபத்தை எளிதாக வெளியில் எடுத்து செல்லவும் அனுமதிக்க வேண்டும். அது மட்டுமன்றி யுவான் அடிப்படையிலான பாண்டு மார்க்கெட் அரசு கட்டுபாடு இன்றி எளிதில் வர்த்தகம் செய்ய கூடியதாக இருக்க வேண்டும். கம்யூனிச அரசால் இது போன்ற முடிவுகளை அவ்வளவு எளிதில் எடுக்க முடியுமா என்பது சந்தேகமே. அமெரிக்காவின் மொத்த உற்பத்தி சீனாவை விட 3 மடங்கு அதிகம் என்பதையும் மறந்து விட கூடாது.

எனவே யுவான் சேமிப்பு நாணயமாகும் காலம் வெகு விரைவில் இல்லை என்றாலும் அந்த மாற்றத்தின் தொடக்கம் ஆரம்பித்து விட்டதாகவே தோன்றுகிறது.

--

Wednesday, August 05, 2009

சீனாவின் Shopping Mania




முதல் பதிவில் டாலர் வலையில் வீழ்ந்துள்ள சீனாவின் நிலையை பற்றியும்,அடுத்த பதிவில் சீனாவின் தற்போதைய பொருளாதார யுக்திகளையும் பற்றி பார்த்தோம்.

சீனா தன்னிடம் குவிந்திருக்கும் டாலர் கையிருப்பை வைத்து என்ன செய்ய போகிறது?. தன்னிடம் உள்ள அமெரிக்க அரசின் பாண்டுகளை பொது சந்தையில் விற்றால் டாலரின் மதிப்பு குறைந்து சீனாவின் சேமிப்பின் மதிப்பும் குறையும். இந்த பிரச்சனையை சீனா நூதனமாக கையாளும் முறைகளை பற்றி முன் பதிவில் பார்த்தோம். இப்பதிவில் உலகளவில் சீனா வாங்கி குவிக்கும் சொத்துக்களை பற்றி பார்ப்போம்.

தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி சீனாவுக்கு பல நெருக்கடிகளை ஏற்படுத்தினாலும் அதுவே அவர்களுக்கு ஒரு பிரகாசமான வாய்ப்பாகவும் உள்ளது.இதில் என்ன வாய்ப்பு என்று நினைக்கிறீர்களா?கடந்த வருடம் சீனா நிதி துறை சாராத பிற துறைகளில் வெளி நாடுகளில் செய்துள்ள முதலீட்டின் மதிப்பு சுமார் $41 பில்லியன். 2002ம் ஆண்டு மட்டும் இது சுமார் $143 மில்லியன் மட்டுமே!. உலகிலேயே அதிக அளவு டாலரை சேமிப்பாக சீனா வைத்துள்ளது. இதன் மூலம்

1.தற்போதைய பொருளாதார நெருக்கடியில் பல நாடுகள் அன்னிய செலாவணி குறைவால் சிக்கி தவிக்கின்றனர். ஆனால் அது போன்ற பல நாடுகளிடம் தாது பொருட்கள் மற்ரும் எண்ணெய் வளம் குவிந்து உள்ளன. சீனாவோ உற்பத்தி துறையிலும், மக்கள் தொகையிலும் உலகளவில் முதலிடத்தில் உள்ளது. எனவே அதன் உற்பத்தி துறைக்கும், வளரும் மக்கள் தொகைக்கும் தாது பொருட்கள் மற்றும் எண்ணெய் வளம் அதிக அளவு தேவை படுகிறது. இத்தகைய சூழ்நிலையை நன்றாக பயன் படுத்தி பிற்கால எண்ணெய் மற்றும் தாது பொருட்கள் இறக்குமதியை உறுதி செய்து அதற்கிணையான கடனாக டாலரை தற்போது தேவையான நாடுகளுக்கு கொடுக்கிறது.

உதாரணமாக ஈக்வெடார் நாடு $1 பில்லியன் பணத்தை முன் பணமாக பெற்று சீனாவுக்கு அடுத்த இரு ஆண்டுகளுக்கு 69 மில்லியன் பேரல்கள் கொடுக்க சம்மதிதுள்ளது.ரஸ்யாவில் உள்ள எண்ணெய் கம்பெனிகளுக்கு கடனாக $25 பில்லியன் டாலர்களை சீனா தற்போது கொடுத்து அதற்கு இணையான எண்ணெயை பிற்காலத்தில் சீனாவிற்கு இறக்குமதி செய்ய ஒப்பந்தமிட்டுள்ளது.


2. தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சி காரணமாக தாது பொருட்களின் விலை அதல பாதாளத்திற்கு சென்று விட்டது. காற்றுள்ள போதே தூற்றி கொள் என்ற பழமொழிக்கேற்ப, சீனா தன் பிற்கால தேவைக்கு தாது பொருட்களை இப்போதே குறைந்த விலைக்கு வாங்கி குவிக்க ஆரம்பித்துள்ளது.

உதாரணமாக சென்ற காலாண்டில் சீனாவின் இரும்பு இறக்குமதி 41 சதம் அதிகமாகவும்(தற்போதுள்ள மோசமான பொருளாதார நிலையிலும்!),காப்பர் இறக்குமதி 148 சதம் அதிகமாகவும்,நிலக்கரி இறக்குமதி 300 சதம் அதிகமாகவும்,அலுமினியம் இறக்குமதி 400 சதம் அதிகமாகவும் ஆகி உள்ளது.

இந்த அளவு தாது பொருட்களை இறக்குமதி செய்து வைத்திருப்பதால், உலக பொருளாதாரம் மீண்டும் சூடு பிடிக்கும் போது தாது பொருட்களின் விலை உலக மார்கெட்டில் அதிகரித்தாலும் குறைந்த விலைக்கு பொருட்களை உற்பத்தி செய்து மற்ற நாடுகளின் போட்டியை தவிர்த்து உற்பத்தி துறையில் உலக அளவில் மோனோபோலி ஆக முடியும்.


3.எண்ணெய் வளம் மற்றும் இயற்கை வளம் அதிகம் கொண்ட நாடுகள் பலவற்றில் மூலதனம் மற்றும் தொழில் நுட்பம் குறைவாக உள்ளது.இந்த நிலை மற்றும் பொருளாதார வீழ்ச்சி ஆகியவற்றால் மேல் நாட்டு கம்பெனிகளிடம் வேறு நிறைய விட்டு கொடுத்து உதவி பெரும் நிலையில் உள்ள இந்த நாடுகள் மற்றும் அங்கு உள்ள கம்பெனிகளிடம் சீனா ஒரளவு அவர்களுக்கும் ஆதாயமாக இருக்கும் படி ஒப்பந்தங்கள் இட்டு, அந்த கம்பெனியின் பங்குகளை வாங்கி, அவற்றை விரிவாக்கி அதிலிருந்து கிடைக்கும் தாது பொருட்களை சீனாவிற்கு கொண்டு செல்ல முயற்சி செய்கிறது.

உதாரணமாக வெனிசூலா எண்ணெய் நிறுவனங்களுக்கு $33.5 பில்லியன் டாலர்கள் உதவி செய்ய உள்ளது. பிரேசில் நாட்டின் பெட்ரோபாஸ் நிறுவனத்திற்கு $10 பில்லியன் டாலர் தற்போது கடனாக கொடுத்து விட்டு அடுத்த 10 வருடங்களுக்கு 2000000 பேரல்கள் ஒரு நாளைக்கு சீனாவிற்கு இறக்குமதி செய்ய ஒப்பந்தம் இட்டுள்ளது.அது மட்டுமன்றி கனிம பொருட்களை எடுக்கும் உலகின் பல கம்பெனிகளின் பங்குகளையும் வாங்கி உள்ளது.

4.அதுமட்டுமன்றி ஆப்ரிக்க,ஆசிய மற்றும் தென்னமரிக்க நடுகளிடம் பல்லாயிரகணக்கான ஹெக்டேர் நிலத்தை சீனா பணம் கொடுத்து வாங்கி குவித்துள்ளது. தனது வளரும் மக்கள் தொகைக்கு உணவிட இப்போதே திட்டமிட்டு செயல் படுகிறது.

சீனாவின் பிற்காலத்திற்கு தேவையான அளவு இந்தியாவிற்கும் மூல பொருட்கள் தேவையே.இந்தியா ஒரு சில சிறிய முயற்சி எடுத்தாலும் சீனாவை போல் பெரிய அளவு முயற்சி எடுக்க வில்லை. இந்த நிலை தொடர்ந்தால் பிற்காலத்தில் சீனாவிடம் எந்த துறையிலும் போட்டி இட முடியாமல் இந்தியர்களின் வளர்ச்சியும் வாழ்க்கை தரமும் அதல பாதாளத்திற்கு செல்ல வாய்ப்புள்ளது

சீனா தற்போது செய்துவரும் செயல்முறைகள் அனைத்தையும் பன்னாட்டு கம்பெனிகள் பல ஆண்டுகளாக அதை விட அதிக அளவே செய்து வருகின்றனர். ஆனால் தற்போது ஒரு அரசாங்கமே அவ்வாறு செய்வதால் ஏற்படும் விளைவுகள் என்னவாவக இருக்கும் என்பதை காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.

சீனாவின் அடுத்த முக்கிய குறிகோள் உலக சேமிப்பு நாணயமாக டாலரை நீக்க வேண்டும் என்பதே. அதன் மூலம் தான் அது பொருளாதார வல்லரசு ஆக முடியும். அந்த நோக்கத்தை அடைய சீனா எவ்வாறு காய் நகர்த்துகிறது என்று அடுத்த பதிவில் பார்ப்போம்.

--

Sunday, August 02, 2009

சீனா ஏற்படுத்தும் பொருளாதார சுனாமி

சென்ற பதிவில் டாலர் வலையில் சிக்கிய சீனாவின் நிலை பற்றி பார்த்தோம். இப்பகுதியில் சீனா தற்போதைய சூழ்நிலையை எதிர் கொள்ள எடுக்கும் உத்திகளை பற்றி பார்ப்போம்.
உலகில் சேமிப்பு செல்வமாக உள்ள டாலரில் மூன்றில் ஒரு பங்கு தற்போது சீனாவிடம் உள்ளது.எனவே அது முள்ளின் மேல் விழுந்த துணியை கிழியாமல் பொருமையாக எடுக்க வேண்டியது போன்ற நிலையில் உள்ளது.

தற்போது சீனாவின் முக்கிய குறிக்கோள்

1. சிறிது சிறிதாக உலக அளவில் தனது நாணயத்தை பல படுத்தி உலக அளவில் பொருளாதார வல்லரசாக ஆக வேண்டும்

2. டாலரின் மதிப்பை உடனடியாக வீழாமல் பார்த்து கொள்ள வேண்டும்

3. சிறிது சிறிதாக டாலருக்கு இணையாக பிற நாணயங்களை உலக சேமிப்பு நாணயமாக கொண்டு வரவேண்டும்(அதே சமயத்தில் தனக்கு பாதிப்பு எதுவும் ஏற்படாமல் பார்த்து கொள்ள வேண்டும்).

4.ஆற்றல் வளம்(பெட்ரோல் போன்றவை), தாது பொருட்கள் மற்றும் உணவு பொருட்களை உற்பத்தி செய்யும் ஏழை நாடுகளுக்கு கடனாக தன்னிடம் குவிந்து கிடக்கும் டாலரை கொடுத்து, எதிர்காலத்தில் சீனாவிற்கு மட்டும் அவற்றை இறக்குமதி செய்ய ஒப்பந்தம் இட்டு கொள்வது.

5. தன்னிடம் உள்ள டாலர் கையிருப்பை கொண்டு உலகில் உள்ள தாது பொருட்கள் மற்றும் எண்ணெய் உற்பத்தி நிறுவனக்களை முடிந்த அளவு வாங்கி குவிப்பது. தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சி காரணமாக பல நிறுவனங்களின் மதிப்பு அடி மாட்டு விலைக்கு வந்துள்ளது சீனாவிற்கு மேலும் சாதகமாக உள்ளது

6. தன்னுடைய சேமிப்பு செல்வத்தில் டாலர் சொத்துக்கள் தவிர யூரோ, தங்கம் போன்றவற்றின் பங்கையும் அதிகரிக்க வேண்டும்.

சீனா தன் குறிகோளை எவ்வாறு நிறைவேற்றுகிறது என்று ஒவ்வொன்றாக பார்ப்போம்

சீனாவின் தங்க கையிருப்பு கடந்த சில வருடங்களில் 70% மேலாக அதிகரித்து 1000டன்னை தாண்டி விட்டது. இது வளர்ந்த நாடுகளின் தங்க கையிருப்பை ஒப்பிட்டு பார்க்கும் போது குறைவாக இருந்தாலும் அது தங்கத்தை வாங்கி குவிக்கும் வேகம் மிக அதிகமாகவே உள்ளது.

இனி வரும் பதிவுகளில் சீனாவின் மற்ற குறிக்கோளை அடையும் வழி பற்றி பார்ப்போம்.

--

Thursday, July 30, 2009

அசர வைக்கும் மைக்ரோசாப்டின் Project Natal

பொதுவாகவே மைக்ரோசாப்டுக்கு பிற நிறுவனங்களை காப்பி அடித்து(reengineering செய்து) புதிய பிராடக்ட்கள் வெளியிடும் என்ற பெயர் உள்ளது.அந்த பெயரை மாற்றும் வகையில் தற்போது Project Natal என்ற புதிய முயற்சியில் இறங்கி உள்ளது.கையின் அசைவுகளை கண்டு பிடித்து அதன் மூலம் வீடியோ விளையாட்டு கொண்டு வந்து Wii விளையாட்டு மாபெரும் புரட்சி செய்த்தது.மைக்ரோசாப்ட் நிறுவனம் அதை காப்பி செய்யாமல் தற்போது புதிய புரட்சிகரமான தொழில்நுட்பத்தில் அடுத்த தலைமுறைக்கான வீடியோ விளையாட்டுக்கான தொழில்நுட்பத்தில் இறங்கி உள்ளது.அதற்கு தான் Project Natal என்று பெயர்.

இந்த விளையாட்டை விளையாட எந்த சென்சார்கலையும் உடலில் அணிய வேண்டியது இல்லை. மேலும் மற்ற விளையாட்டை போல கையை மட்டும் பயன் படுத்த வேண்டியது இல்லை.நம் உடலின் அனைத்து பகுதிகளையும் விளையாட்டிற்கு பயன் படுத்தலாம். நம் உடலின் அசைவுகளை இன்ப்ரா ரெட் கேமரா மூலம் பல புள்ளிகளிலிருந்து கண்டறிந்து அதன் மூலம் கம்ப்யூட்டரின் உள் முப்பரிமான உருவம் செயற்கையாக வடிவமைக்கிறது. பிறகு நாம் செய்யும் அசைவுகள் அனைத்தையும் அந்த உருவத்தின் மூலம் செய்ய வைத்து உண்மையான விளையாட்டு போல் உணர செய்கிறார்கள்.

நான் கூறுவதை கேட்பதை விட மைக்ரோசாப்ட்டின் இந்த demo வீடியோவை நீங்களே பாருங்களேன்! இது Science Fiction படத்தை விட அருமையாக உள்ளது. உண்மையிலேயே நம்பவே முடியவில்லை.



http://www.xbox.com/en-US/live/projectnatal/


http://www.youtube.com/watch?v=I9tmr8VDqN8



வீடியோ விளையாட்டு துறையில் நிச்சயமாக இது evolution ஆக இருக்காது.revolution ஆக இருக்கும்!


--

Thursday, July 23, 2009

சீனா, அமெரிக்கா ஆடும் பொருளாதார சதுரங்கம்

.

கடந்த சில ஆண்டுகளாக உலகளவில் உள்ள அனைத்து பொருளாதாதார வல்லுனர்களாலும் கேட்க படும் கேள்வி -சீனா மேலை நாடுகளை மீறி பொருளாதார வல்லரசாக மாறுமா என்பதாக தான் இருக்கும். இன்றைய உலக பொருளாதாரத்தில் நடப்பது தான் என்ன? சீனாவின் இன்றைய உண்மையான நிலை தான் என்ன? அது பற்றி இப்போது பார்ப்போம்.

1970 வரை சீன கம்யூனிச தலைவர்களுக்கும் மேலை நாடுகளுக்கும் சரியான உறவில்லை. ஆனால் மா.சே.துங்கிற்கு பிறகு சீனாவின் அணுகுமுறையில் மாற்றம் ஏற்பட தொடங்கியது.அந்த கால கட்டத்தில் தான் அமெரிக்காவும் (ஓரளவுக்கு?) தங்கம் கையிருப்பு அடிப்படையில் டாலரை அச்சடிப்பதை நிறுத்தி விட்டு சந்தையின் தேவைகேற்ப டாலரை அச்சடிக்க தொடங்கியது. டாலரின் மதிப்பை நிலை நிறுத்த அரபு நாடுகளிடம் பெட்ரோலை டாலருக்கு மட்டும் விற்க ஒப்பந்தமிட்டது.இதன் மூலம் மேலை நாட்டு பொருளாதார நிறுவனங்கள்(வங்கிகள்,காப்பீட்டு நிறுவனங்கள், Investment bank போன்றவை) குறைந்த வட்டிக்கு அதிக பணத்தை பெற்று பன்னாட்டு கம்பெனிகளின் அசுர வளர்ச்சிக்கு உதவியதோடு,உலகளவில் பெரும் சொத்துக்கள் இந்த பொருளாதார நிறுவனங்கள் மற்றும் சில ஆயிரம் பணகாரர்களின் கைக்கு மாறியது.

மேலை நாடுகளின் பொருளாதார வளர்ச்சி இருந்த அளவு மக்கள் தொகை வளர்ச்சி இல்லை.பொருளாதார வளர்ச்சி மற்றும் பணத்தின் புழக்கம் நாட்டு மக்கள் அனைவரிடமும் அதிகமாக இருந்தால் பண வீக்கம் அதிகமாகி, அவர்கள் உற்பத்தி செய்யும் பொருட்களின் விலையும் அதிகமாக கூடும்.

பொருளாதார வளர்ச்சி அதிகம் இருக்க வேண்டும். அப்போது தான் பெரும் நிறுவனக்களின் லாபம் அதிகம் இருக்கும்.ஆனால் சாதாரண மக்களிடம் வளர்ச்சியின் முழு பயனும் செல்லாமல் முதலீட்டாளர்களிடம் பெரும் பங்கு செல்ல வேண்டும்.சாதாரண மக்கள் இதனால் அதிகம் பாதிப்படையாமல் இருக்க அவர்கள் வாங்கும் பொருட்களின் விலை குறைவாக இருக்க வேண்டும்.
அதற்கு பொருட்களை மலிவாக உற்பத்தி செய்ய வளரும் நாடுகளின் உதவி தேவை பட்டது.அப்போது அமெரிக்க அரசு மற்றும் பன்னாட்டு கம்பெனிகளின் கண்ணில் பட்டதுதான் சீனா. சீனாவில் சர்வாதிகாரம் கம்யூனிசத்தின் பெயரில் வலுவாக இருந்ததால் ஒரு முடிவை எடுத்து பெரிய அளவில் எந்த எதிர்ப்பும் இல்லாமல் விரைவில் செயல் படுத்துவது வசதியாக இருந்தது. சீனாவும் அதிக மக்கள் தொகையை விவசாயத்திலிருந்து உற்பத்தி துறைக்கு மாற்ற வேண்டிய கட்டயத்தில் இருந்ததால், அந்நாட்டு விவசாயிகளை அமெரிக்காவிற்கு தேவையான பொருட்களை உற்பத்தி செய்ய தொழிற் துறைக்கு மாற்ற தொடங்கியது. இதன் மூலம் நாட்டின் தொழிலாளர்களின் உற்பத்தி திறன் அதிகரித்தது.

சீனர்கள் பொதுவாகவே சேமிப்புக்கு பெயர் போனவர்கள்.மக்களின் சேமிப்பு அதிகமானது.கடந்த சில ஆண்டுகளாக உலகமயமாதல் உச்சத்திற்கு சென்ற போது அமெரிக்காவுக்கு சீனா செய்த ஏற்றுமதியின் அளவு மிகவும் அதிகரிக்க ஆரம்பித்தது. அதன் விளைவாக சீனாவின் டாலர் கையிருப்பு பில்லியனிலிருந்து சில டிரில்லியனுக்கு உயர்ந்தது. மறுபுறம் போர்,ஆயுத உற்பத்தி மற்றும் பிற காரணிகளால் அமெரிக்க அரசின் பற்றாகுறையும், ஏற்றுமதியை விட இறக்குமதி குறைந்து வணிப பற்றாக்குறையும் அதிகமாகியது. இந்த பற்றாக்குறையை சரி செய்ய வெளி நாடுகளிடம் கடன் வாங்க வேண்டும். உலக சேமிப்பு நாணயமாக டாலர் இருப்பதாலும், சீனா,ஜப்பான் போன்ற நாடுகளிடம் கையிருப்பாக டாலர் அதிகம் இருந்ததாலும், அமெரிக்காவிற்கு குறைந்த வட்டிக்கு டாலரை சீனா கொடுக்க ஆரம்பித்தது.

சீனாவின் வளர்ச்சியை பாராட்டுபவர்கள் அமெரிக்க அரசாங்கமே சீனாவை நம்பி தான் உள்ளது. எனவே சீனா தான் மிக பெரிய பொருளாதார சக்தி என்பார்கள். ஆனால் இந்த வளர்ச்சியின் மறுபுறத்தையும் பார்க்க வேண்டும். சீனா அமெரிக்காவிடம் நடை பெரும் வாணிபத்தை பார்த்தால், சீனாவின் ஏற்றுமதி இறக்குமதியை விட மிக அதிகமாக உள்ளது. சீனாவின் நாணயமான யுவானின் மதிப்பை சந்தையின் காரணிகளால் கட்டுபாடற்ற முறையில் நிர்ணயிக்க பட்டால் (floating exchange rate), அதன் மதிப்பு மிக அதிகமாகி இருக்கும்.அவ்வாறு யுவானின் மதிப்பு அதிகமானால் அமெரிக்காவிடம் இவ்வளவு மலிவாக பொருட்களை ஏற்றுமதி செய்ய முடியாது.தற்போது சீனாவின் பொருளாதாரத்தில் ஏற்றுமதியின் பங்கு 40 சதம் உள்ளது.சீனாவின் ஏற்றுமதி குறைந்தால் உள் நாட்டில் மாபெரும் வேலையில்லா திண்டாட்டம் உண்டாகி , பெரிய சமூக பிரச்சனைகளை உருவாக்கும்.
இதை சீனா தடுத்தே ஆக வேண்டும். அதற்கு யுவானின் மதிப்பை ஓரளவு கட்டுபாடன முறையில் நிர்ணயித்துள்ளது. இவ்வாறு குறிபிட்ட மதிப்பை பராமரிக்க சந்தையில் குவியும் டாலர் சொத்துக்களான அமெரிக்க அரசு பத்திரம் போன்றவற்றை வாங்கியே ஆக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

தற்போதைய நிதி நெருக்கடியை அடுத்து அமெரிக்கா அரசின் பற்றாகுறை பெரிய அளவில் அதிகமாவதாலும், அதிக அளவு டாலரை அச்சிட்டு வருவதாலும் டாலரின் மதிப்பு குறையுமோ என்ற அச்சம் சீனாவுடம் எழுந்துள்ளது.

சீனாவின் சேமிப்பு செல்வத்தில் 70 சதவிதம் டாலர் சார்ந்த சொத்துக்களாக உள்ளது.டாலரின் மதிப்பு குறைந்தால் அது அந்நாட்டுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பாக இருக்கும்.அதனாலேயே சீனா மிகவும் கலக்கம் அடைந்து உள்ளது. இதிலிருந்து தப்பிக்க டாலர் மதிப்பு நன்கு இருக்கும் போதே தன் டாலர் சொத்துக்களை விற்று விடலாம் என நீங்கல் எண்ண தோன்றும். தற்போது உள்ள சூழ்நிலையில், சீனா அவ்வாறு டாலர் சொத்துக்களை சர்வ தேச சந்தையில் விற்க ஆரம்பித்தால்,டாலரின் மதிப்பு வேகமாக குறைந்து சீனாவுக்கு இழப்பு தான் ஏற்படும். அது மட்டுமன்றி சீனாவின் ஏற்றுமதியும் பாதிக்கபடும


இந்த வலையிலிருந்து சீனாவால் மீளவே முடியாதா? இதிலிருந்து தப்பிக்க சீனா என்னதான் செய்ய போகிறது? அது தற்போது எடுத்து வரும் முயற்சி தான் என்ன? அடுத்த பதிவில் பார்ப்போம்


--

Monday, July 13, 2009

அமெரிக்காவுக்கு ஏன் இந்தியாவின் வளர்ச்சி தேவை?

India’s prosperity is good news for US - ஒபாமாவின் இந்த பேச்சை தான் இந்தியாவில்(மட்டும்) அனைத்து பத்திரிக்கைகளும் முக்கிய செய்தியாக வெளியிட்டு உள்ளது. அமெரிக்காவில் தற்போதுள்ள பொருளாதார பின்னடைவு காரணமாக ஏற்பட்ட அமெரிக்க கம்பெனிகளின் இழப்பை ஈடுகட்ட இந்தியாவின் வளரும் பொருளாதாரம் உதவியாக இருக்கும் என்று தான் அனைவரும் நினைக்க தோன்றும். அதற்கு பின் வேறொரு முக்கிய காரணமும் உள்ளது. அது என்ன காரணம் என்று பார்ப்போம்.

எந்த ஒரு நாட்டின் வளர்ச்சிக்கும் முக்கிய காரண கார்த்தாவாக உள்ளது அந்நாட்டில் உள்ள இளைஞர்களின் சக்தியே. இளைஞர்களிடம் கடின உழைப்பு, புதுமையான சிந்தனை எளிதில் மாற்றத்தை ஏற்று கொள்ளும் தன்மை போன்றவை இருப்பதுடன் அதிகம் செலவழிக்கும் மன போக்கு இருப்பதால் நாட்டின் வளர்ச்சிக்கு அச்சாணியாக உள்ளனர்.

வருங்காலத்தில் அமெரிக்கா மற்றும் மேலை நாடுகளை எதிர் நோக்கி இருக்கும் மிக பெரிய பிரச்சனை இளைஞர்கள் எண்ணிக்கை குறைந்து முதியவர்கள் எண்ணிக்கை பெருக போவதுதான்.அங்கு மக்கள் தொகை பெருக்கம் என்ற நிலை மாறி மக்கள் தொகை குறைய தொடங்க போகிறது. அங்கு 2050ல் இரண்டு பேர் வேலை பார்த்தால் ஒருவர் பென்ஷன் வாங்குபவராக இருப்பார். பத்தில் ஒருவர் 80 வயதிற்கு மேற்பட்டவராக இருப்பர்.கீழே உள்ள புள்ளிவிவரத்தை பார்த்தால் இது பற்றிய விவரம் உங்களுக்கு புரியும்.



15 முதல் 59 வயது வரை உள்ள மக்களின் எண்ணிக்கை அமெரிக்காவில் சிறிது சிறிதாக குறைந்து கொண்டே வருகிறது. அதே சமயம் 60 வயதிறிகும் மேற்பட்டவர்களின் எண்ணிக்கை மிக கணிசமாக உயர்ந்து கொண்டே வருகிறது. 2050 வரை இந்தியாவில் இந்த மாற்றம் மிக குறைவாகவே இருக்கும். இந்தியாவின் மக்கள் தொகையை கணக்கில் எடுத்து கொண்டால் இளைஞர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாக இருக்கும்.

மேல் நாட்டு பன்னாட்டு கம்பெனியின் முக்கிய சந்தையாக அமெரிக்கா இது வரை இருந்து வந்தது. மக்கள் தொகை பெருக்கம் குறைவால் பன்னாட்டு கம்பெனிகள் தங்கள் வளர்ச்சிக்கு புதிய சந்தைகளை தேட வேண்டிய கட்டாயத்திற்கு தள்ள படும். அப்போது அதிக இளைஞர்களை கொண்ட வளரும் நாடுகளாக இருப்பது இந்தியாவும் சீனாவும் தான். எனவே இந்தியாவின் வளரும் மத்திய தர மக்கள் தான் பன்னாட்டு நிறுவனங்களின் வளர்ச்சியின் அச்சாணியாக இருக்க போகிறது.

பொருட்களின் மதிப்பிற்கும் உற்பத்தி செலவிற்கும் உள்ள வித்தியாசம் அதிகரிக்கப்படும். ஏனென்றால் மேலை நாடுகளில் வேலை செய்பவர்கள் எண்ணிக்கை குறைய போவதால் உற்பத்தி இந்தியா போன்ற நாடுகளுக்கு அவுட்சோர்ஸ் செய்ய பட்டு விடும். உலக வர்த்தக நிறுவனம் மூலம் பொருட்களுக்கான உரிமமுறை(patent) உலகெங்கிலும் கடுமையாக பின் பற்ற பட்டு, பன்னாட்டு நிறுவனக்களின் உற்பத்தி பொருட்களுக்கான விலையும் லாபமும் அதிகரிக்கப்படும்(அவுட்சோர்சிங் மூலம் உற்பத்தி செலவு கணிசமாக குறைக்க படும்). அதற்காக தான் உலக வர்த்தக பேச்சுவார்த்தையை மேலை நாடுகள் துரித படுத்துகிறது.

அடுத்ததாக வேகமாக குறைந்து வரும் தொழிளாளர்களின் எண்ணிக்கையை ஒரளவாவது அதிகரிக்க வேண்டும். நல்ல தரமான புதிய தொழிளாளர்கள் உலக சந்தையில் உருவாக்க பட வேண்டும்.அதற்கு இந்தியா போன்ற நாடுகளின் வளர்ச்சி மிகவும் தேவை. அப்போது தான் நல்ல தரமான தொழிளாளர்கள் இந்தியா போன்ற நாடுகளில் அதிக அளவு உற்பத்தி செய்யப்படுவர். தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார சுனக்கம் காரணமாக வெளி நாட்டு தொழிளாளர்களின் தேவை சிறிது குறைந்து இருந்தாலும், பொருளாதாரம் வளர்ச்சி பெற ஆரம்பிக்கும் போது வெளி நாட்டு தொழிளாளர்களின் தேவையும் அதிகமாகும்.தற்போது அமெரிக்க மக்கள் தொகை பெருக்கத்தில் 40 சதவிதம் புதிதாக வெளி நாடுகளிருந்து வரும் தொழிளாளர்களே என்பது குறிப்பிட தக்கது.

அமெரிக்காவிற்கு இந்திய மத்திய வர்க்கத்தின் வளர்ச்சியின் தேவைக்கான முழு காரணமும் உங்களுக்கும் இப்போது தெரிந்திருக்கும் என நினைக்கிறேன். அடுத்த பதிவில் அமெரிக்காவில் வயதானவர்களால் ஏற்பட போகும் பிரச்ச்னை பற்றி பார்போம்

--

Tuesday, July 07, 2009

பெட்ரோல் விலை ஏற்றத்திற்கு கடிவாலம் போட ஒபாமா முயற்சி?

    கடந்த ஒரிரு ஆண்டுகளாக கச்சா எண்ணெய் விலை தாறுமாறாக ஏறுவதும் இறங்குவதும் ஆக இருப்பது அனைவரும் அறிந்ததே.இதற்கு காரணம் உலக பொருளாதாரத்தில் ஏற்படும் வளர்ச்சியும் பின்னடைவும் என்று கூற பட்டாலும், அது மட்டும் உண்மையான காரணமாக இருப்பதில்லை. இந்த ஏற்ற இறக்கத்திற்கு முக்கிய காரணம் மிக பெரிய பன்னாட்டு வங்கிகள், முதலீட்டு நிறுவனங்கள் , தனியார் முதலீட்டார்கள் போன்றவை கச்சா எண்ணை விலையை ஏற்ற இறக்க கணிப்பு வர்த்தகம்(speculative trading) மூலம் கட்டுபடுத்துவது தான் என்று பெரும்பாலானோரால் நம்ப பட்டது.பொருளாதாரம் மந்த நிலையில் உள்ள கடந்த மாதத்தில் கூட இது போன்ற நிதி நிறுவனங்களின் பங்கு மட்டும் 20 சதவிதத்தை தாண்டி இருந்துள்ளது.

அமெரிக்காவில் இது போன்ற வர்த்தகங்களை கட்டு படுத்தும் Commodity Futures Trading Commission என்ற அமைப்பு கச்சா எண்ணையில் நடக்கும் கணிப்பு வர்த்தகத்தை தடுக்க முயற்ச்சி எடுக்க தொடங்கி உள்ளது. எண்ணெயை உபயோகபடுத்தும் நிறுவனங்கள் கச்சா எண்ணெயின் விலை ஏற்ற இறக்க அபாயத்திலிருந்து காக்க உதவும் வர்த்தகத்தை தவிர்த்து(Futures Trading),குறுகிய லாப நோக்கோடு இது போன்ற வர்த்தகத்தில் ஈடுபடும் நிதி நிறுவனங்களின் வர்த்தகத்தை தடை செய்ய முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

அமெரிக்காவில் உள்ள பலமான லாபிக்களை எல்லாம் தாண்டி இது நடைமுறபடுத்த பட்டால் ஒபாமாவின் சாதனையாகவே இது இருக்கும். எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகளை எல்லாம் இது போன்ற செயற்கையான விலை ஏற்றத்திலிருந்து அமெரிக்கா காப்பாற்றினால் பல கோடி ஏழை மக்கள் பயனடைவார்கள்.


--

Sunday, July 05, 2009

இந்தியா கற்க மறுக்கும் பாடம்

" Too Big to Fail. " இது தான் அமெரிக்கர்கள் அனைவராலும் வெறுப்பாக பேச படும் பாடம். "Too Big to Fail" என்றால் என்ன? கடந்த எழுபது ஆண்டுகளாக அவ்வப்போது நடைபெற்ற பொருளாதார பின்னடைவின் காரணமாக அமெரிக்க வங்கி துறையில் சிறிய, நடுத்தர மற்றும் பெரிய வங்கிகளை எல்லாம் ஒரு சில வங்கிகள் முழுங்கி விட்டன. அதன் விளைவு தற்போது அமெரிக்காவில் மூன்று மாபெரும் வங்கிகளும் சில சிறிய வங்கிகளும், பல மிக சிறிய வங்கிகளும் மட்டும் நிலைத்து நிற்கின்றன. அமெரிக்காவில் மூன்று வங்கிகள் மட்டும் 30 சதவிதத்துக்கும் மேற்பட்ட சேமிப்புகளை வைத்துள்ளது. அதன் விளைவு - இந்த மூன்று வங்கிகளில் ஒன்று வீழ்ந்தாலும் அமெரிக்க பொருளாதாரமே நிலை குலையும் நிலையில் உள்ளது. எனவே மிக பெரிய வங்கிகள் வீழவே கூடாது(Too big to fail) என்ற நிலை ஏற்பட்டது.அதை நன்கு உணர்ந்த பெரிய வங்கிகளும் பொறுப்பில்லாமல் பெரிய அளவில் ஆபத்தான முடிவுகளை குறுகிய கால அதிக லாபத்துக்கு எடுக்க தொடங்கின.நீண்ட கால அளவில் அது பெரும் நட்டத்தை ஏற்படுத்தும் என்றும் தெரிந்தும், நட்டத்திலிருந்து அரசாங்கம் தங்களை காத்து ஆக வேண்டும் என்ற கட்டயத்தில் இருப்பதை நன்கு பயன் படுத்தி கொள்ள ஆரம்பித்தன. அமெரிக்க அரசாங்கமே பெரிய வங்கிகளின் கட்டு பாட்டில் வந்தது போன்ற நிலை ஏற்பட்டுள்ளது.

இதிலிருந்து இந்தியா கற்று கொள்ள மறுக்கும் பாடம் என்ன என்று கேட்கிறீர்களா? இந்தியாவின் வங்கி துறையில் அரசு துறை வங்கிகள் மிக முக்கிய பங்கை வகிக்கிறது. அரசு துறை வங்கிகளும் ஒன்றாக இல்லாமல் பலவாக உள்ளது.

தற்போதய மத்திய அரசோ அனைத்து அரசு துறை வங்கிகளையும் ஒன்றினைத்து ஒரு சில பெரிய வங்கிகளாக உருவாக்க வேண்டும் என்றும் அரசு துறை வங்கிகளில் தனியாரின்(முக்கியமாக தற்போது சிக்கலில் சிக்கி தவிக்கும் மேல் நாட்டு வங்கிகளின்) முதலீட்டை அதிகரித்து சிறிது சிறிதாக முடிவில் அவர்களிடமே விற்று விடவும் முயற்சி செய்கிறது.(அதை உடனே நிறைவேற்றா விட்டால் கூட அது தான் அரசின் அனுகுமுறை என்று பல மூறை கூறபட்டுள்ளது) அதற்கு அரசு கூறும் முக்கிய காரணம் வங்கிகளை நடத்தும் செலவை குறைத்து பல வங்கிகளின் கிளையை மூடி லாபத்தை அதிகரிக்க செய்ய வேண்டும் என்பதே.

இதனால் ஏற்படும் விளைவுகளை இப்போது பார்ப்போம்

1. சிறு சிறு வங்கிகளை ஒன்றினைத்து பெரிய வங்கிகளாக ஆக்குவதன் மூலம் ஒவ்வொரு பெரிய வங்கியும் இந்திய பொருளாதாரத்தில் ஏற்படும் தாக்கம் மிக அதிகமாகும். ஒரு வங்கியின் தலைவர் தவறு செய்பவராக இருந்து அதன் மூலம் அந்த வங்கி வீழும் நிலைக்கு தள்ளபட்டால், அந்த வங்கியை காப்பாற்றுவது என்பது அரசுக்கு மிக பெரிய சுமையாகவும், அதே சமயத்தில் அதை காப்பாற்றியே ஆக வேண்டிய நிலைக்கும் தள்ளபடும்.அதுதான் அமெரிக்காவில் தற்போது நடக்கிறது. இதுவே சிறிய வங்கியாக இருந்தால் அதன் தாக்கம் சிறிதாக இருப்பதாலும் அதை காப்பாற்ற அரசுக்கு ஆகும் செலவும் குறைவாக இருக்கும். உதாரணமாக இந்தியன் வங்கி கோபால கிருஷ்ணனின் தலமையில் பல்லாயிரம் கோடி நட்டமடைந்து மூடும் நிலைக்கு வந்த போது அதை அரசால் காப்பற்ற முடிந்தது. அதுவே பல வங்கிகளை ஒன்றினைத்த பெரிய வங்கியாகி வீழும் சூழ்நிலை ஏற்பட்டால் அதை காப்பாற்ற பல லட்சம் கோடி தேவைபடும். இதுவே அமெரிக்கவாக இருந்தால் மிக குறைந்த பின் விளைவில் பல்லாயிரம் கோடி ரூபாய் அச்சிட்டு கொள்ளலாம். ஏனென்றால் அமெரிக்க டாலர் இப்போது உலக சேமிப்பு நாணயமாக உள்ளது.(இதை பற்றி முழுவதும் படிக்க இங்கு சுட்டவும்) ஆனால் இந்தியாவின் நிலை அப்படி இல்லை என்பதால் அதன் விளைவு மிக மோசமானதாக இருக்கும். (பொது துறை வங்கி என்று இல்லை. பெரிய தனியார் துறை வங்கி வீழ்ந்தாலும் அரசு காப்பாற்றி தான் ஆக வேண்டும்). வங்கிகளின் நடவடிக்கையை முழுமையாக நெறிமுறை படுத்துவது என்பதும் தற்போது நடைமுறையில் சாத்தியம் இல்லாத செயல்

2. சிறு வங்கிகளை ஒன்றாக்குவதால் முதலில் மூடபபோவது கிராம் புறங்களை சேர்ந்த வங்கிகளை தான். இதன் விளைவாக ஏழை விவசாயிகள், சுய தொழில் தொடங்கும் ஏழை மற்றும் ந்டுத்தர மக்கள் போன்றோர் மிகவும் அதிக அளவில் பாதிக்க படுவர். தற்போதைய உலகமயமாதல் சூழ்நிலையில் இது போன்ற மிக பெரிய வங்கிகள் பெரிய கார்பொரேட்டுகளுக்கும் பண காரர்களுக்கும் மட்டுமே கடன் கொடுத்து லாபம் செய்ய முனைவர்.

3. ஒவ்வொரு வங்கியும் நாட்டின் ஒவ்வொரு குறிபிட்ட பகுதியில் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். உதாரணத்திற்கு பார்த்தால் இந்தியன் வங்கியும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியும் தமிழகத்தில் அதிக அளவு கவனம் செலுத்துகிறது. அதன் தலமையகமும் தமிழ் நாட்டில் உள்ளது. அது தமிழகத்தில் உள்ளவர்களின் தேவையை உடனுக்குடன் அறிந்து அதற்கேற்ற சேவையை வழங்குகின்றது. இந்தியன் வங்கியை மற்ற வங்கியுடன் சேர்த்தால் இந்த தனி தன்மை முழுமையாக பாதிக்க படும்(முழுமையாக அழியாவிட்டால் கூட பாதிப்பு அதிகம் இருக்கும்). பின் வரும் காலங்களில் வங்கிக்கு வரும் அதிகாரிகளின் தனிபட்ட விருப்பு வெறுப்புக்காக அந்த வங்கியின் கவனிப்பு இருக்கும் இடமும் மாறி போக வாய்ப்புள்ளது

4. அதிகார பரவலாக்கத்தின்(Decentralization) மூலம் தான் எந்த ஒரு துறையின் செயல்பாட்டின் திறனையும் அதிகரிக்க முடியும் என்பது இத்தனை நாள் அனுபவத்திலிருந்து கிடைத்த உண்மை. .தற்போது வங்கிகள் அதிகார பரவலாக்கத்தோடு நன்கு செயல் பட்டு வருகிறது. வங்கிகளை ஒன்றினைப்பது மூலம் அதிகார பரவலாக்கம் என்பது மாறி அதிகரம் ஒருமுனை படுத்த பட்டு அதன் செயல் திறன் குறைய வாய்ப்புள்ளது.

5. வங்கிகள் என்பது ஒவ்வொரு நாட்டின் வளர்ச்சியின் ஆணி வேர். அதை குறுகிய லாப நோக்கம் கொண்ட பன்னாட்டு தனியார் கம்பெனிகளின் கையில் கொடுத்தால் இன்று அமெரிக்கா அடைந்த நிலையை இந்தியாவும் அடையும்.

6. பன்னாட்டு வங்கிகள் சமூகத்தில் பின் தங்கியவர்களின் வளர்ச்சியை பற்றி கவலை பட போவது இல்லை. அவர்களுக்கு லாபம் மட்டுமே குறிக்கோள். பசுமை புரட்சியின் மூலம் உணவு உற்பத்தியில் தன்னிறைவு அடைந்ததிற்கு வங்கிகளின் பங்கு முக்கியம். தற்போதய வளர்ந்து வரும் மக்கள் தொகை சூழ்நிலையில், விவசாய உற்பத்தியை பெருக்க வங்கியின் சேவை மிகவும் தேவை இக்கனம். மத்திய அரசின் தற்போதைய முயற்சியால் அது தடை பெற அதிக வாய்ப்புள்ளது.


இதை உணர்ந்து மத்திய அரசாவது ஒரு சில தனிபட்டவர்களின் நன்மையை பார்க்காமல் இந்தியாவின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு செயல் பட்டால் நன்றாக இருக்கும்.


--

Wednesday, June 17, 2009

பொன்னியின் செல்வன் வரலாற்று படத்தின் Trailer

கல்கியின் பொன்னியின் செல்வன் கதையை படித்தவர்களுக்கு எல்லாம் அதை திரைப்படமாக பார்ப்பது என்பது வாழ்வின் முக்கிய ஆசையாக இருக்கும்.

இந்த கதையை கமல் படமாக எடுக்க போவதாகவும் சீரியலாக வர போவதாகவும் செய்திகள் வந்த வண்ணம் இருந்தது நாமும் ஆவலுடன் கத்திருந்ததுதான் மிச்சம்.

ஆனால் தற்போது Rewinda Movietoons என்ற கார்டூன் பட தயாரிப்பு நிறுவனம், பொன்னியின் செல்வன் கதையை கார்டூன் படமாக எடுக்கின்றனர்.
டிரெய்லரையும் வெளியிட்டுள்ளனர். டிரெய்லர் மிகவும் நன்றாக வந்துள்ளது. நீங்களும் பாருங்களேன்




தமிழக வரலாற்று செய்திகளை விவாதிப்பதில் ஆர்வம் உள்ளவர்கள் பொன்னியின் செல்வன் என்னும் யாகு குழுமத்தில் இணைந்தால் உங்கள் ஆர்வத்திற்கு நல்ல தீனி கிடைக்கும்


--

Monday, June 15, 2009

அபாயத்தில் இந்தியா-டோகா பேச்சுவார்த்தை?

கடந்த பத்து பதினைந்து ஆண்டுகளாக இந்தியாவின் அடிப்படை உரிமைகளையும், ஏழை இந்தியர்களையும்,விவசாயிகளையும் காப்பாற்ற மிக கடினமான பேச்சுவார்த்தை உலக வர்த்தக அமைப்போடு நடைபெற்று வருகிறது. முரசொலி மாறன் வர்த்தக அமைச்சராக இருந்த போது, தன்னுடைய சொல்லாற்றலாலும் அறிவு கூர்மையாலும் இந்தியாவுக்காக மிக கடுமையாக வாதாடி இந்தியாவின் பக்கம் ஏற்பட இருந்த மிக பெரிய இழப்பை தவிர்த்திருந்தார்.முந்தய அமைச்சரவையில் இருந்த கமல் நாத் கூட அந்த பொருப்பை திறமையாக எடுத்து நடத்தினார். ஆனால் தற்போது புதிய அமைச்சராக இருக்கும் ஆனந்த் சர்மா உலக வர்த்தக அமைப்பின் பேச்சுவார்த்தையில் முக்கிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளார். அதை பற்றிய விவரங்களை வெளியிட வில்லை.

இந்த முன்னேற்றம் இந்தியவின் முக்கிய நலன்களை விட்டு கொடுக்காமல் வந்திருந்தால் நல்லதுதான். ஆனால் அதற்கான சூழ்நிலை இப்போது ஏற்பட்டுள்ளதாக நம்பமுடியவில்லை. இந்திய நலன்களை விட்டு கொடுத்து இந்த முன்னேற்றம் ஏற்பட்டிருந்தால் அது மிக பயங்கர அபாயகரமான விளைவுகளை பிற்கால சந்ததியினருக்கு ஏற்படுத்தலாம்.

இந்தியாவின் எதிர்காலத்தை பெரிய அளவில் பாதிக்க கூடிய உலக வர்த்தக அமைப்பின் பேச்சுவார்த்தையை முன்னின்று நடத்தும் வர்த்தக அமைச்சர் பதவியை , இத்துறையில் அந்த அளவு அனுபவம் இல்லாத ஆனந்த் சர்மாவிடம் கொடுத்த போதே, புதிய அரசின் உண்மையான நோக்கம் பற்றி சந்தேகத்தை எழுப்பியது.

மற்ற பொதுதுறைகளை குறைந்த விலைக்கு விற்று ஒரு சில தனி நபர்கள் சம்பாதிக்க திட்டமிடுவதை போல், உலக வர்த்தக அமைப்பிலும் ஒரு சில தனி நபர்களின் நன்மைக்காக இந்தியாவின் எதிர்காலத்தை அடகு வைத்து விடாமல் இருந்தால் நல்லது.

அதே நேரம் இந்தியாவின் முக்கிய தேவைகளை விட்டு கொடுக்காமல் ஒரு சில சிறு இழப்போடு இதனை நிறைவேற்றினால், நிச்சயம் வரவேற்க தக்கதே.

ஒரு துப்பாக்கி சுட்டால் ஒருவர் மட்டும் இறப்பார்
ஒரு தீவிரவாத தாக்குதலில் சில நூறு பேர் மட்டும் இறப்பார்கள்
ஒரு போரில்(அணு ஆயுதம் ஈடுபடுத்தாத) சில ஆயிரம் பேர் இறப்பார்கள்.

ஆனால் தற்போதயை நிலையில் உள்ள உலக வர்த்தக ஒப்பந்தத்தினால் பல லட்சம் விவசாயிகளும்,கூலி தொழிலாளர்களும்,சிறு தொழிலாளர்களும் இறக்க வாய்ப்புள்ளது!


இப்போது உள்ள அரசியல் சூழ்நிலையில் தவறு ஏற்பட்டால் அதை எதிர்த்து கேட்கும் நிலையில் முக்கிய எதிர்கட்சியான பா.ஜ.கவும் இல்லை.இடது சாரிகளும் இல்லை.

சாதாராண மக்களுக்கும் அது பற்றி கவலை இல்லை.


--

Wednesday, June 10, 2009

கலக்கும் Virtual Conference

வழக்கமாக ஒரு பெரிய கம்பெனியின் கான்பெரென்ஸ் நடத்தி முடிப்பதற்கு பல மில்லியன்கள் செலவாகிறது. அதில் கலந்து கொள்ள வருபவர்களுக்கும் ஏர் டிக்கெட் மற்றும் லாட்ஜ் என்று பல்லாயிரம் செலவாகிறது.அதுவுமின்றி ஒரே நேரத்தில் பல செசன்கள் நடப்பதால் சிலவற்றை பார்க்க முடியாமலும் போய் விடுகிறது. இந்த பிரச்சனைகளுக்கு எல்லாம் ஒரு தீர்வாக தான் இப்போது Virtual conference வந்துள்ளது.

முதலில் Virtual conference என்றால் என்ன என்று பார்ப்போம். நிஜத்தில் நடக்கும் கான்பெரன்ஸில் என்னன்ன இருக்குமோ அத்தனையும் Virtual conference லும் உண்டு.சமீபத்தில் VMWare நடத்திய Virtual conferenceலிருந்து சிலவற்றை பார்ப்போம்.



முழு conferenceம் flashல் அழகாக வடிவமைக்க பட்டிருந்தது. முதலில் வெளியிலிருந்து உள்ளே வரும் போது கட்டடத்தின் வெளியே ரிசப்ஸன் இருக்கிறது. அங்கு இந்த கான்பெரென்ஸ் பற்றிய விவரங்கள் சொல்ல படுகிறது.



உள்ளே நுழைந்தவுடன் அனைத்து கம்பெனிகளின் ஸ்டால்களும் உள்ளன. நாம் விரும்பிய ஸ்டாலுக்கு நாம் செல்லலாம். ஸ்டாலுக்குள் நுழைந்தவுடன் அங்கு அப்போது நடக்கும் பிரசன்டேசனை பார்க்கலாம்.



இந்த ஸ்டாலில் அந்த கம்பெனியின் அலுவலர் இருப்பார். அவரிடம் நமக்கு தேவையான தகவலை Chat மூலம் கேட்டு தெரிந்து கொள்ளளாம். அங்கு அதற்கு முன் நடந்த செமினார்களின் வீடியோ தொகுப்பு மற்றும் தேவையான அனைத்து ரிசோர்ஸ்களும் இருக்கும். தேவையானவற்றை நாம் தரவிறக்கி(Download) கொள்ளளாம்.




அதுபோல முக்கிய கான்பெரன்ஸ் அறைக்கு செல்லலாம். அங்கு அனைத்து கான்பெரன்ஸ் தலைப்புகளும், அது நடக்கும் நேரத்தோடு வரிசை படுத்த பட்டிருக்கும். நமக்கு விரும்பிய தலைப்பை அங்கு தெரிவிக்க பட்டுள்ள நேரத்தில் கலந்து கொள்ளளாம். அங்கு நமக்கு தேவையான கேள்விகளையும் கேட்டு கொள்ளளாம். நடந்து முடிந்த செமினார்களின் வீடியோ ரெக்கார்டிங் இருக்கும். தேவையானால் நாம் அவற்றை தரவிறக்கி கொள்ளளாம். அது முடிந்த பின் தகவலை கொடுத்தவர் சாட் அறைக்கு வருவார். அங்கு அனைத்து கேள்விகளையும் கேட்டு கொள்ளளாம். அது ரெக்கார்டிங்காகவும் இருக்கும்.

இது தவிர அங்கு வந்திருக்கும் அனைவரையும் சாட் மூலம் சந்தித்து தகவல் பறிமாரி கொள்ளளாம்.



மொத்தத்தில் கான்பெரன்ஸில் நடக்கும் எல்லாம் இருக்கும் ஆனால் இறுதியில் ஓசியாக கிடைக்கும் பேனா,நோட்டு,கை பை போன்றவை மட்டுமே மிஸ்ஸிங்.


--

Wednesday, June 03, 2009

உலகம் இவர்கள் கையில்!- பில்டெர்பெர்க் குழுமம்

உலகில் நடக்கும் மற்றும் நடைபெற போகும் பொருளாதார மற்றும் சமூக மாற்றங்களுக்கு யார் காரணம்? இந்த கேள்வியை சாதாரண மக்களிடம் கேட்டால் பொது மக்கள் என்ற விடை தான் கிடைக்கும். இடது சாரி சார்புடைய மக்களிடம் கேட்டால் அமெரிக்கா மற்றும் மேலை நாட்டு அரசாங்கம் என்பார்கள். சோஷியலிஸ்டுகளிடம் கேட்டால் பணத்தாசை பிடித்த பன்னாட்டு கம்பெனியினர் என்பார்கள். ஆனால் சர்வ தேச நடப்புகளை உன்னிப்பாக கவனித்து வருபவர்களை கேட்டால் அவர்களது பதில் புதுமையானதாக இருக்கும். அந்த புதுமையான பதில் தான் பில்டெர்பெர்க் குழுமம். என்ன இது உங்களுக்கு புதுமையான பெயராக இருக்கிறதா?

முதலில் பில்டெர்பெர்க் குழுமம் என்றால் என்ன என்று பார்ப்போம். இது மேலை நாட்டு அரசாங்கம், மிகபெரிய வங்கி,கம்பெனிகள் மற்றும் பிற சக்தி வாய்ந்த அதிகார வர்க்கங்களில் இருக்கும் ஒரு சில முக்கியமான புள்ளிகளின் அதிகார பூர்வமற்ற குழுமம். 1954ல் மேற்கு அய்ரோப்பிய நாடுகளில் ஏற்பட்ட அமெரிக்க எதிர்ப்பு அலைகளை பற்றி ஆராய முதன் முதலாக நெதர்லாந்து நாட்டில் உள்ள பில்டெர்பெர்க் என்ற உணவகத்தில் கூட்டபட்டதால் இதற்கு பில்டெர்பெர்க் குழுமம் என்ற பெயர் ஏற்பட்டது. சக்தி வாய்ந்த அரசு அதிகாரிகள்,அரசியல்வாதிகள்,வங்கி நிறுவனர்கள்,அரச குடும்பத்தை சேர்ந்தவர்கள் மற்றும் பன்னாட்டு கம்பெனியை சேர்ந்தவர்கள் என சுமார் 150 பேரை கொண்ட குழுமம் இது.இதன் கூட்டத்தில் நடைபெறும் விவாதங்களும், கூட்டத்தில் கலந்து கொள்பவர்களும் மிகவும் ரகசியமாக வைக்க படுகிறது.இதில் கலந்து கொள்வர்களின் முக்கியத்துவமும்,அதன் ரகசியம் காக்கும் தன்மையாலும் அந்த கூட்டத்தில் நடைபறும் செய்தி பற்றி பலவாறாக ஊகங்களும், புரளிகளும் வெளிவரும். பில்டெர்பெர்க் குழுமம் என்பது அதிகார பூர்வமற்ற குழுமமாதலால் அது பற்றி வரும் செய்திகள் பற்றி யாரும் மறுப்பு தெரிவிப்பதில்லை .

இந்த வருடத்திற்கான பில்டெர்பெர்க் கூட்டம் மே மாதம் 14 - 17 வரை கிரீஸ் நாட்டில் நடந்தது. இந்த கூட்டத்தின் கரு பொருள் உலகின் தற்போதய பொருளாதார மந்த நிலையை குறுகிய காலத்தில் முடிப்பதா? அல்லது இதனை நீண்ட நாட்களுக்கு இழுப்பதா? என்பதுதான் என்று கூறபடுகிறது. உலகில் உள்ள முக்கியமான அறிவு ஜீவிகள் ஒன்று கூடி உலகில் உள்ள பிரச்சனைகளை நாடுகளின் எல்லைகளை தாண்டி சிந்திப்பதன் மூலம் தெளிவான முடிவை எடுக்க முடியும் என்பது இவர்களின் கருத்தாக கூறபடுகிறது.ஆனால் பெரும்பான்மையானோரின் கருத்தோ, அதிகாரம் மற்றும் பொருளாதாரத்தை நாடுகளை தாண்டி உலக அளவில் குவித்து அவற்றை தங்கள் கட்டு பாட்டில் எடுப்பதுதான் இவர்களது நோக்கம் என்கிறார்கள். ஐரோப்பிய யூனியனை உருவாக்கி ஐய்ரோப்பிய நாடுகளிடமிருந்து அதிகாரத்தை இந்த யூனியனுக்கு மாற்ற முயற்சி செய்வது இக்குழுவின் முயற்சி என்றும் பேச்சு உள்ளது.

இந்த வருட கூட்டத்தில் உலக அளவில் மத்திய வங்கி உருவாக்குவது, IMF இன் பங்கை விரிவாக்குவது மற்றும் பெடரல் ரிசர்வ் வங்கியின் அதிகாரத்தை அதிகரிப்பது போன்றவற்றை பற்றியும் பேசியதாக செய்திகள் கசிய தொடங்கி உள்ளன.
“உலக முதலாளிகளே ஒன்று சேருங்கள்‘ என்ற புதிய முழக்கம் எந்த அளவு வெற்றி பெரும் என்று பொருத்து இருந்து பார்ப்போம்.


--

Monday, June 01, 2009

கையிருப்பு தங்கத்தை விற்று தீர்க்கும் அமெரிக்கா?

அமெரிக்க நிதி நெருக்கடியை தொடர்ந்து, நிலமையை சரி செய்ய பெடரல் ரிசர்வ் வங்கி அதிக அளவு பணத்தை வெளியிட தொடங்கியது அனைவரும் அறிந்ததே. அதனால் டாலருக்கு மாற்றாக வேறு நாணயமோ அல்லது தங்கம் போன்ற பொருட்களோ அதிக முக்கியதுவம் பெறும் என்று பரவலாக எதிர் பார்க்க பட்டது .பெரும்பாலோனோரின் கணிப்பு தங்கம் அதிக விலை போகும் என்பதாயிருந்தது. ஆனால் தற்போது இன்னொரு உண்மை வெளியாக தொடங்கி உள்ளது. அமெரிக்கா தன்னிடம் உள்ள தங்கத்தை மிக வேகமாக விற்க தொடங்கி உள்ளது. கடந்த 2007 - 2008 ஆம் ஆண்டு மட்டும் 5000 மெட்ரிக் டன் எடையுள்ள தங்கத்தை விற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது சுமார் 62% கையிருப்பு தங்கம் என்று கூறபடுகிறது. இதற்கு பின்னனியில் இருக்கும் உண்மையான காரணம் என்ன என்று தெரியவில்லை.

--

Friday, May 29, 2009

மன்மோகன் சிங் இனிமேல் இதை மட்டும் செய்ய வேண்டாம்

20,000 மக்களை சில நாளில் கொன்று குவித்த இலங்கை அரசாங்கத்துக்கு வக்காலத்து வாங்கி ஐக்கிய நாடுகள் சபையில் வாதிட்டு தன் மன சாட்சியை கழற்றி வைக்க முடிவெடுத்தது மிகவும் கண்டிக்க தக்க செயல். இத்தனை நாட்களாக பணத்துக்காக எதையும் செய்வார்கள் என்று மேல் நாட்டு அரசாங்கத்தையும், மேல் நாட்டு கம்பெனிகளையும் பற்றி ஆப்ரிக்க ஆசிய நாடுகளை உதாரணம் காட்டி பல காலம் பேசினோம். தற்போது அதைவிட மோசமான செயலை இந்தியா,சீனா போன்ற சோசியலிச நாடுகள் செய்து வருகிறது. மேலை நாடுகள் இவ்வாறு தவறு செய்யும் போதாவது அங்குள்ள மீடியா மற்றும் சிறு பிரிவினர் அந்த செய்தியை அந்நாடுகளில் உள்ள மக்களுக்கு கொண்டு செல்வர். ஆனால் இந்திய பெரும்பான்மை மீடியாக்கள் இந்த செய்தியை கையாண்ட விதம் அனைத்து இந்தியரையுமே தலை குனிய செய்கிறது.

இந்த மனித பேரவலத்தின் மூலம் இந்திய கம்பெனிகளுக்கு பல கோடி பெருமான காண்டிராக்ட்கள் இலங்கையில் கிடைக்கலாம். அதனால் பல கோடி பெரும்பாலான பணம் ஆட்சியாலர்களுக்கும், கட்சிக்கும்,பின்னனியில் இருந்த அரசு அதிகாரிகளுக்கும் லஞ்சமாக கிடைக்கலாம்.



இந்தியரின் பல கோடி பணத்தை லஞ்சமாக பெற்ற குவாட்ரோச்சி போன்ற ஆயுத இடை தரகர்கள் மீது நடவடிக்கை எடுக்க முயலும் போது அவர்களுக்கு ஏற்படும் மன உளைச்சளை கண்டு மனம் உருகும் ஜீவ காருண்ய சீலரான மன்மோகனுக்கு பல்லாயிரம் மக்கள் கொல்ல படும் போதும் அதற்கு அவர் நேரிடையாக மற்றும் மறைமுகமாக உதவும் போது மட்டும் மன உளைச்சல் வராதது யாருக்கும் புரியாத புதிர்.

இதற்கு தனி மனித வன்மம்,ராஜ தந்திரம், பேராசை என எந்த பெயர் வேண்டுமானாலும் வைத்து கொள்ளலாம். இனி தயவு செய்து காந்தி படத்துக்கு மட்டுமாவது அஞ்சலி செலுத்தாமல் இருக்கட்டும். காந்தியின் அற வழி கொள்கையை ஒட்டு மொத்தமாக புறக்கணித்து விட்டு அவர் படத்துக்கும் அவர் சமாதிக்கும் மட்டும் உலகை ஏமாற்ற அஞ்சலி செலுத்தாமல் இருந்தால் நன்றாக இருக்கும்.

--

Monday, May 25, 2009

டாலரிலிருந்து யூரோவுக்கு மாறும் ரஸ்யா

டாலரின் மதிப்பை உலக பொருளாதார சந்தையில் உயர்த்தி பிடிப்பதில் முக்கிய பங்கு வகிப்பது உலகில் பெரும்பாலான நாடுகளின் சேமிப்பு நாணயமாக இருப்பது என்பது அனைவரும் அறிந்த ஒன்று.

உலக நாடுகளின் சேமிப்பு செல்வங்களில் 64% டாலரே உள்ளது.சமீபத்தில் வெளியிட பட்ட யூரோ நாணயமும் தன் பங்கை அதிகரித்து 26% என்ற அளவில் முன்னேறி உள்ளது. சமீபத்திய நிதி நெருக்கடி காரணமாக அமெரிக்க அரசு தன் கடன்களை வேகமாக அதிகரித்து வருவதால் உலக சேமிப்பு நாணயத்தில் டாலரின் பங்கு குறையும் என ஒரு சில பொருளாதார நிபுணர்களால் கணிக்க பட்டு வந்தது.நிதி நெருக்கடியால் டாலரின் புழக்கம் சர்வதேச சந்தையில் சிறிதளவு குறைந்துள்ளது. ஆனால் பெரும்பாலான நிதி பரிவர்த்தனைகள்(முக்கியமாக பெட்ரோல்) டாலரிலேயே நடைபெருகிறது. அதே சமயம் அமெரிக்க அரசின் டிரசரி பாண்டுகள் மிகவும் பாதுகாப்பான முதலீடாக கருத படுவதால் இந்தியா மற்றும் சீனா போன்ற நாடுகள் டாலர் சொத்துக்களை கடந்த சில மாதங்களாக அதிக அளவில் வாங்கி குவிக்க தொடங்கியுள்ளன.

சீனா முதன் முறையாக அமெரிக்க அரசின் செயல்பாட்டால் தங்களது முதலீட்டுக்கு பாதிப்பு ஏற்படும் என்று சில மாதங்களுக்கு முன் அறிவித்தது.ஆனால் அது சேர்த்து வைத்துள்ள டாலர் சொத்துக்களின் மதிப்பை காப்பாற்ற மேன்மேலும் டாலர் சொத்துக்ளை வாங்க வேண்டிய கட்டயத்தில் டாலர் வலையில் வீழ்ந்துள்ளது. அந்த வலையிலிருந்து மீண்டு வர சில முயற்ச்சிகளை எடுக்க தொடங்கி உள்ளது.

இது உலக அரங்கில் ஒரு மாற்றத்தின் தொடக்கமாக கருத பட்டது. தற்போது மற்றொரு மிக பெரிய நாடு இம்மாற்றத்திற்கான முயற்சியில் ஈடு பட தொடங்கி உள்ளது. அதுதான் ரஸ்யா. கடந்த ஆண்டு வரை தன் சேமிப்பு செல்வத்தில் பெரும் பகுதி டாலர் சார்ந்த சொத்துக்களையே வைத்திருந்தது. ஆனால் தற்போது அது டாலர் சொத்துக்களை பெருமளவு யூரோ சார்ந்த சொத்துக்களாக மாற்ற தொடங்கி உள்ளது.ரஸ்யாவின் 47.5 சதவித சேமிப்பு செல்வங்கள் யூரோ சார்ந்ததாக உள்ளது. ஆனால் டாலர் சார்ந்த செல்வங்களோ 41.5% தான் உள்ளது.

டாலருக்கு மாற்றாக மற்றொரு நாணயம் வளர்வது என்பது உடனடியாக நடக்க கூடிய செயல் அல்ல. கிரிகெட் தர வரிசையில் முதலிடம் மாறுவது போல் இது எளிதாக நடக்க கூடியது அள்ள. ஏனென்றால் பல நாடுகளின் சேம்ப்பின் மதிப்பு இதன் மூலம் குறைய கூடும். ஆனால் இந்த மாற்றத்தின் ஆரம்பம் தொடங்கிவிட்டதாகவே தோன்றுகிறது

--

Tuesday, May 05, 2009

ஏழை நாடுகளுக்கு outsource ஆகும் விவசாயம்


அவுட் சோர்ஸிங் என்பது உற்பத்தி, சேவை என அனைத்து துறைகளிலும் கொடி கட்டி பறக்கும் காலமிது. விவசாயம் மட்டும் இதற்கு விதி விளக்கா என்ன? விவசாயமும் தற்போது ஆப்ரிக்க மற்றும் ஆசிய நாடுகளுக்கு அவுட் சோர்ஸ் ஆக தொடங்கி உள்ளது. மற்ற துறைகளில் அவுட் சோர்ஸிங் என்றால் வளரும் நாடுகளுக்கு புதிய வேலை வாய்ப்பு, அன்னிய முதலீடு என்று ஒரு சில பயன்கள் கிடைக்கும். ஆனால் விவசாயத்தை அவுட் சோர்ஸ் செய்ய படுவதால் ஏழை நடுகள் மிக பெரிய பட்டினி சாவிற்கு அழைத்து செல்ல பட இருக்கின்றனர்.

சோமாலயா, சூடான் போன்ற நாடுகள் பற்றி கேள்வி பட்டாலே நம் அனைவரின் கண் முன்னாலும் நிற்பது அந்நாட்டு மக்கள் பட்டினியில் வதை படுவது பற்றி நாம் பார்த்த புகை படங்களாக தான் இருக்கும். அவ்வாறு பஞ்சத்தில் வாழும் நாடுகள் உணவு பொருட்களை சீனா மற்றும் அரபு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய போகிறார்கள் என்றால் ஆச்சிரியமாக இருக்கிறதா? அது தான் உண்மை!

உலக மக்கள் தொகை இன்று இருப்பதைவிட 2050ல் ஐந்து பில்லியன் உயரக்கூடும்.ஆனால் விவசாய நிலமோ அதற்கேற்ப்ப உயர சாத்தியம் இல்லை. தற்போது பெட்ரோலிய பொருட்களுக்கு ஏற்பட்டுள்ள தட்டுபாடு நாளை உணவு பொருளுக்கும் வர கூடிய சாத்திய கூறு அதிகம் உள்ளது. இன்று அரபு நாடுகளிடம் பெட்ரோடாலர் பணம் அதிகம் குவிந்துள்ளது. சீனா, கொரியா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளிடம் ஏற்றுமதி மூலம் அதிக அன்னிய செலாவனி குவிந்துள்ளது. இந்த இரண்டு வகை நாடுகளும் வருங்காலத்தில் தனது மக்களின் உணவு பொருட்களுக்கான தேவைக்கு வெளி நாடுகளை சார்ந்திருக்கும் கட்டாயத்தில் உள்ளது. இது ஒருபுறம் இருக்க மறுபுறமோ முதலீடுகளுக்கு வழி இல்லாமல், நல்ல இயற்கை வளங்கள், ஊழல் எதேச்சதிகார ஆட்சியாளர்களை கொண்டு, அவ்வப்போது பஞ்சத்தில் வாடும் ஏழை ஆப்ரிக்க நாடுகளும், ஒரு சில ஆசிய நாடுகளும் உள்ளன.

இவ்வகை நாடுகளிடம் அன்னிய முதலீட்டு கையிருப்பும் மிக குறைவு. அதன் விளைவு

1.உணவு பற்றாக்குறையை எதிர் நோக்கும் அரபு மற்றும் ஆசிய நாடுகள் ஏழை ஆப்ரிக்க மற்றும் ஆசிய நாடுகளில் பணத்தை முதலீடு செய்கின்றனர். மிக அதிக அளவில் நிலங்களை வாங்கி குவித்து அல்லது நீண்ட கால குத்தகைக்கு எடுத்து, சிறு மற்றும் குறு ஏழை விவசாயிகளின் நிலத்தை பிடுங்கி தங்கள் நாடுகளுக்கு தேவையான உணவை நவீன விவசாயம் செய்து தங்கள் நாட்டுக்கு இறக்குமதி செய்து கொள்ள திட்டமிட்டுள்ளனர்.

2.தற்போது ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியால் நிதி துறையில் பெரும் லாபம் குறைவதாலும், உணவு பொருளின் விலை ஏற்றத்தாலும் தனியார் முதலீட்டு நிறுவனங்களும், மிக பெரிய பன்னாட்டு கார்போரேசன்களும் ஏழை நாடுகளின் விவசாயத்தில் அதிக முதலீடு செய்து பெரும் லாபம் பார்க்க முனைகின்றனர்.
இதனால் பெரும்பாலான ஏழை விவசாயிகள் தங்கள் நிலத்தை இழந்து வறுமையின் பிடிக்கு கொண்டு செல்ல வாய்ப்பு உள்ளது

விவசாயிகளிடமிருந்து நிலத்தை பிடுங்குவது வரலாற்றில் புதிது அல்ல. அமெரிக்கா செவ்விந்திய மக்களிடமும், ஆப்ரிக்க, ஆஸ்திரேலிய பழங்குடி மக்களிடம் ஐரோப்பியர்கள் நிலத்தை பிடுங்கியது வரலாற்று செய்தி. ஆனால் இன்று ஏழை நாடுகளிடம் மீண்டும் நிலத்தை பிடுங்கும் அவல நில உலகெங்கும் நடக்க ஆரம்பித்துள்ளது. ஆனால் பத்திரிக்கைகளில் பெரிய அளவு இந்த செய்தி வெளியாவது இல்லை.

சமீபத்தில் தென் கொரிய நிறுவனம் மடகாஸ்கர் நாட்டின் பாதி விவசாய நிலங்களை குத்தகைக்கு எடுத்து தென் கொரிய நாட்டுக்கு தேவையான உணவு பொருட்களை உற்பத்தி செய்ய ஒப்பந்தம் இட்டது. அந்நாட்டு மக்கள் புரட்சிக்கு பின் இத்திட்டம் கை விட பட்டது. இது போன்ற செயல்களில் முக்கியமாக இறங்கியிருக்கும் நாடுகள் சினா,கொரியா,ஜப்பான்,அரபு நாடுகள் மற்றும் சில மேலை நாடுகள். இந்தியாவை சேர்ந்த கம்பெனிகளும் இது போன்ற செயலில் ஈடுபட்டுள்ளனர். இந்திய கம்பெனிகள் மடகாஸ்கரில் நெல்,கோதுமை மற்றும் பயறு வகைகள், மலேசியா ,இந்தோனேசியா போன்ற நாடுகளில் எண்ணெய் வித்து மற்றும் பயிறு வகைகள் போன்றவற்றை உற்பத்தி செய்வதில் அர்வம் காட்டுகிறார்கள்.

இவ்வகை வியாபரத்தில் சீனாவின் பங்கு மிகவும் குறிப்பிட தக்க அளவில் வளர்ந்து வருகிறது. சீனாவின் மக்கள் தொகை வளர்ச்சியாலும்,தொழிற்மயமாதலும் விவசாய நிலம் குறைந்து வருகிறது. சீனா தன் வருங்கால விவசாய தேவையை பூர்த்தி செய்ய ஆப்ரிக்க(காங்கோ,சாம்பியா,சூடான்,சோமாலியா என பல நாடுகள்),தென் அமெரிக்க,ரஷ்யா,பாக்கிஸ்தான் என பல நாடுகளில் பெருமளவு நிலத்தை வாங்கி குவித்து வருகிறது. இனி வரும் காலங்களில் சீனா சுமார் ஒரு மில்லியன் சீன விவசாயிகளை ஆப்ரிக்க நாடுகளில் விவசாயத்துக்காக குடி அமர்த்த போவதாக செய்திகள் வந்து கொண்டுள்ளது.

அது போல் அரபு நாடுகள் தங்கள் நாடுகளில் விவசாயம் செய்ய அதிக செலவு ஆவதாலும் ,தண்ணீர் பற்றாக்குறையாலும் தங்கள் வருங்கால உணவு தேவையை சரி செய்ய பாக்கிஸ்தான்,கம்போடியா,பிலிபைன்ஸ் போன்ற ஆசிய நாடுகளிலும், தென் அமரிக்க நாடுகள் மற்றும் ஆப்ரிக்க நாடுகளில் பெருமளவில் நிலங்களை வாங்கி குவிக்கிறது. இதற்கு சமீபத்திய உதாரணம் கம்போடியா நாட்டில் குவைத், குவத்தார் போன்ற நாடுகள் சுமார் 125,000 ஏக்கர் நிலங்களை குத்தகைக்கு வாங்கி உள்ளது.

தற்போதய நிதி நெருக்கடியால் மற்ற துறைகளில் லாபம் குறைவதாலும், விவசாய பொருட்களின் விலை ஏற்றத்தாலும் பெரும்பாலான மேலை நாட்டு முதலீட்டு நிறுவனங்களும் இது போல் பெரிய அளவு ஏழை நாடுகளில் விவசாய நிலங்களில் முதலீடு செய்ய தொடங்கி உள்ளனர்

இதனால் ஏழை நாடுகளுக்கு ஏற்படும் நன்மைகளாக கூற படுபவை

1.ஏழை நாடுகளிடம் விவசாயத்தில் முதலீடு செய்ய அதிக பணம் இல்லாததால் புதிய தொழில் நுட்பம் பயன்படுத்தி தேவையான் இடு பொருட்களை இட்டு அதிக உற்பத்தியை பெருக்க வாய்ப்பு இல்லாமல் உள்ளது. இவ்வகை முதலீடுகளால் நவீன தொழில் நுட்பத்தை பயன் படுத்தி அதிக அளவு உற்பத்தியை ஏற்படுத்த் முடியும்.

2. பல நாடுகளில் அதிக அளவு விவசாயம் செய்யும் நிலங்கள் இருந்தாலும் முதலீடு இல்லாததால் அவற்றை அந்நாட்டு மக்கள் விவசாயம் செய்வதில்லை. இது போன்ற வெளி நாட்டு முதலீடு மூலம் அந்த நிலங்களில் விவசாயம் செய்து உற்பத்தி பெருக்கம் செய்யலாம்

3. வெளி நாட்டினர் முதலீடு செய்யும் போது அவர்கள் நல்ல சாலை, சேமிப்பு கிடங்கு, துறைமுகம் போன்ற உள் கட்டமைப்பு வசதிகளை பெருக்குவர். அதை பயன் படுத்தி ஒட்டு மொத்த நாடே வளர்ச்சி அடையும்.

4.பெரும்பாலான நாடுகள் ஏழை நாடுகளிடம் நிலத்தை குத்தகைக்கு எடுக்கும் போது அந்நாடுகளில் நல்ல மருத்துவமனை கட்டி தருவது, கல்வி நிறுவனங்கள் அமைப்பது போன்ற வளர்ச்சி பணியில் அதிக கவனம் செலுத்த உறுதி அளித்துள்ளனர்.

5.ஏழை நாடுகளில் இது அதிக வேலை வாய்ப்பை உருவாக்கும

இந்த நில பிடுங்கல் ஏழை நாட்டு மக்களுக்கு தீமையை ஏற்படுத்தும் காரணங்கள்

1. நிலத்தை விற்கும் ஏழை நாடுகள் இது போன்ற ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் போது அவர்களுடைய நன்மையை ஒப்பந்தத்தில் சேர்க்கும் அளவு பேசுவதற்கு ஏற்ற உயர்ந்த நிலையில் (bargaining power) இல்லை.அதாவது அவர்களது பொருளாதார நிலை மிகவும் மோசமாக உள்ளது. அந்நிய செலாவணி மற்றும் முதலீட்டை கவர எதற்கும் அவர்கள் ஒத்து கொள்ளும் நிலையில் உள்ளனர். மேலும் இது போன்ற நாடுகளின் உயர்மட்டத்தில் ஊழல் அதிக அளவு இருப்பதால் விவசாயிகளின் நன்மைக்கான சரத்துகளை ஒப்பந்தத்தில் சேர்ப்பது கேள்வி குறியே.

2. லாப நோக்கில் பெரிய அளவில் இந்த ஒப்பந்தம் செய்ய படுவதால், சிறு மற்றும் குறு விவசாயிகளின் நிலங்கள் பிடுங்க பட்டு பெரிய அளவில் இயந்திரங்கள் கொண்டு விவசாயம் செய்ய தொடங்கபடும்.

3. சிறு மற்றும் குறு விவசாயிகள் நிலம் இழந்து விடுவர். அதே நேரம் இயந்திரமயமான விவசாயம் செய்ய போவதால் நிலம் இழந்த அனைவருக்கும் வேலை கிடைப்பது கடினம்.

4. ஏற்கனவே இந்த நாடுகளில் அவ்வப்போது பஞ்சமும் பட்டினியும் காணப்படுகிறது. இனி பெரும்பாலான உணவு பொருட்களை விளைவித்து வெளி நாட்டுக்கு ஏற்றுமதி செய்வதால் இது போன்ற பஞ்சத்தின் பாதிப்பு மேலும் அதிகறிக்க கூடும்.

5. ஒப்பந்தத்தால் பயிரிட படும் பயிர்கள் பெரும்பாலான நாடுகளில் அந்த நாட்டினரால் விரும்பி உண்ணபடுவது இல்லை. அதனால் இந்த பயிரினால் உள் நாட்டு மக்களுக்கு எந்த உபயோகமும் இருக்காது.

6, அந்நாடுகளில் பாரம்பரிய வகையில் செய்ய படும் விவாசயமும், பாரம்பரிய பயிர் வகைகளின் பன்முகமும் (crop diversity) அழிக்க படும்.
7. நவீன விவசாயத்தால் சுற்று புற சூழ்நிலை பாதிப்படைவதுடன், காடுகள் போன்ற இயற்கை வளங்கள் அதிக அளவு அழிக்க பட வாய்ப்புள்ளது

8. வேளாண் இடு பொருட்களான விதை, உரம், பூச்சி மருந்து போன்றவறை அதிக அளவு இறக்குமதி செய்ய வேண்டிய சூழ்நிலையை உருவாக்கும்.

ஏழை நாடுகளுக்கு முதலீடு அதிகம் கிடைத்தாலும் அதனால் பயனடைய போவது அங்கு பெரும்பான்மையாக இருக்கும் ஏழை விவசாயிகளாக இருப்பது சந்தேகமே .

தற்போது உள்ள சூழ்நிலையில் இந்திய சிறு மற்றும் குறு விவசாயிகள் சற்று ஜாக்கிரதையாக இருப்பது நல்லது தான். அரசு அந்நிய செலவானி கிடைக்கும் என்பதால் நம்ப ஊர் நிலங்களையும் பெ ரிய பன்னாட்டு கம்பெனிகளுக்கு விற்றாலும் ஆச்சிரிய படுவதற்கில்லை.

Control oil and you control nations; control food and you control the people,”--Henry Kissinger in 1970.


--

Tuesday, April 28, 2009

தொழிலாளர்கள் கையில் அமெரிக்க கார் கம்பெனி?


கிரைசிலர் கார் கம்பெனி சில காலமாகவே அதிக நட்டத்தில் இயங்கி கொண்டுள்ளது. அமெரிக்க அரசின் நிதி உதவி இல்லாமல் அதை இயக்க முடியாது என்ற நிலை இருந்தது. அதற்கு முக்கிய காரணம் கார் விற்பனை சரிவு, மார்கெட்டுக்கு தேவையான காரை உற்பத்தி செய்யாமை,கடன் மற்றும் தொழிலாளர்களின் சம்பளம் மற்றும் வேலை செய்யும் மற்றும் பணி ஓய்வு பெற்ற தொழிலாளர்களின் மருத்துவ காப்பீடு செலவு என்று கூறபட்டது. இந்நிலையில் ஒபாமாவின் உத்திரவு பேரில் தற்போதைய சூழ்நிலைக்கு ஏற்ற வளர்ச்சி திட்டத்தை கம்பெனி தயாரித்தது. அமெரிக்க அரசும் முறையான திட்டங்கள் இல்லாமல் பணத்தை மேன் மேலும் கொடுக்க விருப்பம் இல்லை என்று தெரிவித்து விட்டது. அதன் அடிப்படையில் புதிய திட்டம் வடிவமைக்க படுகிறது.

இத்திட்டத்தின் முன்வரைவு இன்னும் வெளி வர இல்லை என்றாலும் அது பற்றிய செய்திகள் அனைத்து அமெரிக்க பத்திரிக்கைகளும் வெளியிட்டுள்ளது. அதன் படி தொழிற் சங்கத்துக்கு 55% சதவித பங்கு வழங்க படும் என்று தெரிகிறது. இதனால் தொழ்ற்சங்கத்துக்கு கம்பெனியின் முடிவுகளை எடுக்கும் அதிகாரம் கிடைக்கும். ஆனால் இதற்கு அவர்கள் கொடுக்கும் விலையும் அதிகம்.இதன் மூலம் தொழிலாளர்களுக்கு கிடைக்க இருந்த மருத்துவ காப்பீடு மிக அதிக அளவில் குறைய வாய்ப்புள்ளது.அதே சமயம் இம்முடிவை தொழிலாளர்கள் யூனியன் ஒத்து கொள்ளாவிட்டால் அக்கம்பெனி ஒட்டு மொத்தமாக மூட படலாம். அதனால் இழப்பு மிக அதிகம் இருக்கும்.தற்போதைய திட்டத்தின் மூலம் கம்பெனி காப்பாற்ற பட்டால் பிற்கலத்தில் அதனால் கிடைக்கும் லாபம் கொண்டு தொழிலாளிகள் பயன் பெற வாய்ப்புள்ளது.

இத்திட்டதினால் இழப்பு தொழிலளர்களுக்கு மட்டும் இல்லை. அக்கம்பெனிக்கு கடன் கொடுத்த வங்கி மற்றும் அக்கம்பெனியின் தற்போதயைய முதலீட்டளர்கள் அனைவரும் பெரும் இழப்பை சந்திக்க வேண்டும்.

மருத்துவ காப்பீடு செலவு என்பது கார் கம்பெனிகளுக்கு மட்டும் முக்கிய பிரச்சனை இல்லை. அமெரிக்க அரசுக்கே இது ஒரு பெரிய பிரச்சனையாக வளர்ந்து வருகிறது. இன்னும் சில ஆண்டுகளில் இப்பிரச்சனை தற்போதைய நிதி நெருக்கடி போன்று பெரிய நெருக்கடியை ஏற்படுத்த வாய்ப்புகள் அதிகம்.

--

Monday, April 27, 2009

துபாயை காப்பாற்றிய அபுதாபி


கடந்த சில வருடங்கலுக்கு முன்பு வரை வளம் கொழிக்கும் இடமாக வளர்ந்து வந்த துபாய்க்கு தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி அதன் வளர்ச்சிக்கு பெரிய தடை கல்லாக வந்துள்ளது. துபாயின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிப்பது ரியல் எஸ்டேட் மற்றும் சுற்றுல்லா. சமீபத்திய நிதி நெருக்கடியால் இந்த இரண்டு துறையும் மிக பெரிய இழப்பை சந்தித்துள்ளது. மிக அதிக செலவில் ஆரம்பிக்க பட்ட துபாயின் கனவு திட்டங்களான 300 செயற்கை தீவு திட்டம் மற்றும் உலகிலேயே உயரமான கட்டட திட்டம் ஆகியவை பெரும் பிரச்சனையில் தவிக்கிறது.துபாய் அரசு மற்றும் அரசு சார்ந்த கம்பெனிகளின் கடன் மட்டும் $80 பில்லியனை தாண்டி விட்டது. இரண்டு ஆண்டுகளில் அது திருப்பி தர வேண்டிய கடன் தொகை $22 பில்லியன் ஆகும்.

மார்கெட் நல்ல நிலையில் உள்ள போது துபாயில் உள்ள ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் மிகபெரிய கட்டிடங்களை கட்டும் முன்னே அவற்றை வாடிக்கையாளர்களுக்கு விற்று விட்டனர்(சென்னையில் DLF செய்தது போல்).வெளி நாட்டினரை துபாயில் ஒரு சில குறிபிட்ட பகுதியில் வீடு வாங்க அனுமதித்த உடன் ரியல் எஸ்டேட் மிக வேகமாக சூடு பிடிக்க தொடங்கியது. முதல் தவனையாக 10% பணத்தை மட்டும் பெற்று கொண்டனர். அதனால் இடைதரகர்கள் ஒரு வீடு வாங்குவதற்கு பதில் 10 வீடுகளை 10% கொடுத்து வாங்கி தள்ளி விட்டனர். ஏனெனில் இரண்டாவது தவணை வரும் முன் அதன் மதிப்பு மேலும் உயரும்.எனவே அதை விற்று லாபம் காணலாம் என்பது அவர்களின் கணிப்பு.ஆனால் ரியல் எஸ்டேட் துறை வீழ்ச்சியால் கட்டிடம் கட்ட முதல் கிடைக்காததால் கட்டும் வேகமும் வெகுவாக குறைந்து போனது. இதன் விளைவாக 17% வேலை வாய்ப்பு அங்கு குறையும் என வல்லுனர்கள் கணித்துள்ளனர்.

இப்படி பட்ட இக்கட்டான நிலையில் தான் அபுதாபி உதவி கரம் நீட்டி உள்ளது.துபாய் வெளியிடும் கடன் பத்திரங்களில் சுமார் $10 பில்லியன் முதலீடு செய்ய முடிவு செய்துள்ளது. இதன் விளைவாக துபாயும் புதிய உத்வேகத்தோடு முன்னேற்ற பாதை நோக்கி இறங்கி உள்ளது.அபுதாபி தன் முதலீடை இவ்வளவு தாமதமாக செய்ததற்கு காரணம் இரு அரசுகளுக்கு இடையே உறவில் ஏற்பட்ட உரசல் என் சில கிசுகிசுக்கள் கசிய தொடங்கின. ஆனால் இவை பத்திரிக்கைகள் கிளப்பிய கட்டு கதை என துபாய் ஆட்சியாளர் கூறுகிறார்.


எது எப்படியோ, துபாயின் வளர்ச்சியில் தான் அங்கு வேலை பார்க்கும் பல்லாயிர கணக்கான தமிழர்களின் எதிர்காலமும், இந்தியாவின் எதிர்கலமும் உள்ளது. விரைவில் துபாய் மீண்டும் உத்வேகத்தோடு வளர்ச்சி பாதியில் செல்லட்டும்.

--

Saturday, April 18, 2009

நீதி கேட்கும் செருப்புகள்

பெரும் பாலான மனிதனுக்கு அநீதி இழைக்கும் போது அவர்கள் முறையிட நீதி மன்றம் இருக்கிறது. வாயில்லா மிருகங்களுக்கு நீதி தேடி தர புளு கிராஸ் போன்ற அமைப்புகள் இருக்கிறது.ஆனால் எங்களை அவ மரியாதை செய்தால் நாங்கள் எங்கு போய் முறையிடுவது? சத்தம் எங்கிருந்து வருகிறது என்று பார்க்கிறீர்களா? சிறிது குனிந்து பாருங்கள். நீங்கள் காலில் அணிந்து இருக்கும் காலணி பேசுகிறேன்!

காடு, மலை, கல், கரடு,மழை, வெய்யில், சேறு, சகதி என்று எங்கு போனாலும் உங்கள் காலை பாது காக்கிறேன். இதற்கு பலனாக உங்களிடம் நான் எந்த உபகாரமும் எதிர் பார்க்கவில்லை. தயவு செய்து கேடு கெட்ட இந்த அரசியல்வாதிகளின் மேலெரிந்தும், அவர்களுக்கு என்னை மாலையிட்டும் அவ மரியாதை செய்யாதீர்கள். எங்களுக்கு உணர்வு இல்லை என்ற ஒரே காரணத்துக்காக எங்களை இப்படி அவ மரியாதை செய்கிறீர்கள். அதுவும் எந்த உணர்வும் இல்லாத இந்த அரசியல்வாதிகள் மீது எங்களை விட்டெறிந்து.

இனியாது எங்களை இப்படி அவ மரியாதை செய்யாமல் இருக்க உங்களை இரு கால் கூப்பி வேண்டி கொள்கிறேன்


புகைப்படம்:நன்றி தினபூமி

--

Tuesday, April 14, 2009

பாதை மாறும் முதலாளித்துவமும், சந்தை பொருளாதாரமும்



1970 க்கு பிறகு உலகம் முழுதும் மிக வேகமாக பரவ தொடங்கிய தத்துவம் முழுமையான சந்தை பொருளாதாரம்(Free Market) மற்றும் முதலாளித்துவம். அப்போது மிக வேகமாக ஏறிய எண்ணெய் விலை உயர்வால் வளரும் நாடுகளின் அன்னிய கையிருப்பின் நிலை மோசமாக போனது. அன்னிய கையிருப்பின் தேவையை நிவர்த்தி செய்ய வளரும் நாடுகள் மேலை நாடுகள் மற்றும் அது சார்ந்த நிதி அமைப்புகளை நோக்கி கையேந்தி நிற்க தொடங்கியது.அதற்கு வளரும் நாடுகள் மீது விதிக்க பட்ட கட்டுபாடு - முழுமையான சந்தை பொருளாதாரத்தை அமல் படுத்த பட வேண்டும், அரசின் கட்டுபாட்டை முழுமையாக விளக்க வேண்டும் மற்றும் பன்னாட்டு தனியார் நிறுவங்களுக்கு தடங்கள் இல்லாமல் முதலீடு செய்ய அனுமதிக்க வேண்டும்.சோவியத் யூனியன் வீழ்ச்சிக்கு பிறகு இந்த சந்தை பொருளாதாரம் தான் பெரும் பாலான உலக நாடுகளின் ஒரே வாய்ப்பாக மாற தொடங்கியது. சில காலம் இந்த சந்தை பொருளாதாரமும் ஓரளவு அனைவருக்கும் நன்மை பயப்பதாகவே அறிய பட்டது.

ஆனால் சந்தை பொருளாதாரத்தின் அடிப்படை மாற தொடங்கிய பின் தான் பல பிரச்சனைகள் வெடிக்க ஆரம்பித்தது. பொதுவாக சந்தை பொருளாதாரத்தில் தேவை அதிகமாக இருக்கும் போது அதை உற்பத்தி செய்ய பல நிறுவனங்கள் போட்டி போட்டு கொண்டு வரும்.பல நிறுவனங்கள் உற்பத்தி செய்ய போட்டி இருப்பதால், நல்ல தரமான பொருட்கள் குறைந்த விலையில் கிடைக்கும். நிறைய நிறுவனக்கள் தொடங்க படுவதால் வேலை வாய்ப்பும் அதிகரிக்கும். அதிக வேலை வாய்ப்பு பெருகுவதால் மக்களின் வாங்கு திறன் கூடி ஒட்டு மொத்த பொருளாதாரத்தையே வளர்க்கும். ஆனால் உண்மையில் நடப்பது அதுவல்ல.வளரும் நாடுகளுக்கு வரும் முதலிடு அதிகம் உள்ள பெரிய பன்னாட்டு நிறுவனங்கள் விளம்பர யுக்தி மற்றும் பிற வழிகளில் வியாபாரத்தை பெருக்கி உள் நாட்டில் உள்ள சிறு மற்றும் நடுத்தர நிறுவனக்களை ஒட்டு மொத்தமாக அழிக்கிறது. பொதுவாக இவ்வகை சிறு நிறுவனங்கள் அதிக மக்களை வேலைக்கு வைத்திருப்பர். பன்னாட்டு நிறுவனங்கள் இயந்திரமயமான தொழிற் சாலை வைத்திருப்பதால் அவற்றின் வேலைக்கான ஆட்களின் தேவையும் குறைவு. இந்தியாவில் மட்டும் நடக்கும் நிகழ்வு அல்ல இது. வளர்ந்த நாடுகளிலும் இது தான் நடக்கிறது. ஆனால் அங்கு மக்கள் தொகை வளர்ச்சி மிகவும் குறைவாக இருப்பதால் அதன் விளைவு அதிகம் தெரிவதில்லை.
கடந்த சில காலமாக முதலாளித்துவம் தன் முழு வேகத்தை அடைய தொடங்கி உள்ளது. மிக பெரிய பன்னாட்டு நிறுவனங்கள் எல்லாம் ஒன்றுடன் ஒன்று இணைந்து மிக பெரிய ஜெயன்ட்களாக மாற தொடங்கி உள்ளது. அவ்வாறு பெரிதாக வளர்ந்த நிறுவனங்களும் அத்துறையில் உள்ள பிற நிறுவனக்களை வாங்கி தன் துறையில் போட்டி இல்லாத மோனோபொலி என்ற நிலைக்கு முன்னேறுகிறது. முன்பு அரசாங்கம் துறைகளை தன் கட்டு பாட்டில் வைத்திருந்த போது இதே மோனோபொலி தான் இருந்தது. அரசாங்கமாவது ஒரு சில நேரத்தில் மக்களுக்கு பதில் சொல்ல வேண்டும். ஆனால் இந்த தனியார் நிறுவனக்களின் நோக்கம் லாபம் மட்டும் தான். அவர்களுக்கு சமூக அக்கறை எல்லாம் இல்லை. இந்த நிறுவனங்கள் சந்தையில் போட்டி என்பதையும் வெகுவாக குறைத்து சந்தை பொருளாதாரத்தின் நோக்கத்தையே கேள்வி குறியாக்கி உள்ளது.
சந்தை பொருளாதாரத்தின் அடிப்படை, வாழ்க்கை போராட்டம் மற்றும் தகுதி உள்ளவை பிழைத்தல் போன்ற டார்வின் கொள்கை. அதாவது சந்தையின் போக்கை உணர்ந்து அதற்கேற்ற வியாபார நுணுக்கம் பின் பற்றும் திறமையான நிறுவனங்கள் சந்தையில் நிலைத்து நிற்கும். வியாபார நிறுவனக்களின் அசுர வளர்ச்சியால், தனிபட்ட நிறுவனங்கள் பொருளாதாரத்தில் ஏற்படுத்தும் தாக்கம் அதிகமாகிறது. சந்தையின் வளர்ச்சி நன்றாக இருக்கும் போது அந்நிறுவன அதிகாரிகள் பெரும் பணத்தை வருமானமாக குவிக்கின்றனர். ஆனால் சரியான முடிவை சரியான நேரத்தில் எடுக்காமல் அந்நிறுவனக்கள் வீழ்ச்சியை சந்திக்கும் போது நிறுவனங்களின் அழிவை ஏற்று கொள்ளாமல் மக்களின் வரி பணத்தை கொண்டு அந்நிறுவனங்களை காப்பாற்ற அரசை நிர்பந்திக்கின்றது. அரசும் அந்நிறுவங்கள் அழிந்தால் நாட்டின் பொருளாதாரத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் மக்களின் வரி பணத்தை கொண்டு காப்பற்ற வேண்டிய கட்டயத்தில் உள்ளது. அது மட்டும் அல்ல. இந்த பெரிய நிறுவனங்களின் தாக்கம் மிக பெரியது என்பதால் அரசை மிரட்டி பணம் பறிக்கும் நிலையில் உள்ளன. இதற்கு அமெரிக்க மோட்டார் நிறுவங்களும், நிதி நிறுவனக்களும் சிறந்த உதாரணங்கள் ஆகும். சுருங்க கூற வேண்டும் என்றால் லாபம் முதலாளிகளுக்கு, நட்டம் பொதுமக்களுக்கு என்பது விதியானது. அதாவது


Privatizing the Profit
Socializing the Loss.



சந்தை பொருளாதாரத்தின் அடுத்த அடிப்படை போட்டி அதிகம் என்பதால் புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கும் என்பது. ஆனால் உண்மையில் அப்படி நடக்க வில்லை. உதாரணமாக அதிக கண்டுபிடிப்புகள் தேவை படும் மருந்து தொழிலை பார்த்தால் புரியும். மற்ற துறை போல் இங்கும் ஒரு சில நிறுவனங்களின் ஆதிக்கம் தான் அதிகம் உள்ளது. மருந்து கம்பெனிகள் கண்டுபிடிப்புக்கு அதிகம் செலவு செய்யாமல் சந்தையில் உள்ள மருந்துகளையே சிறு மாறுதல் செய்து தனிபட்ட விற்பனை உரிமம் பெற்று விளம்பரம் மற்றும் பண பலத்தின் மூலம் தன் வளர்ச்சியை பெருக்குகின்றனர்.மேலும் அவர்களின் பெரும்பான்மையான கண்டு பிடிப்புகள் அமெரிக்க அரசின் வரி பணத்தில் நடக்கும் ஆராய்ச்சிகள் மூலம் வருபவையே. மருந்து கம்பெனிகளின் ஆராய்ச்சியை பற்றி அறிய அனைவரும் கட்டாயம் படிக்க வேண்டிய புத்தகம் The Truth About the Drug Companies: How They Deceive Us and What to Do About It

அதை விட மிகவும் கவலை பட வேண்டிய செய்தி மேலை நாடுகளின் நிதி நிறுவனக்களின் வளர்ச்சி. இந்த நிதி நிறுவனங்கள் எந்த கண்டு பிடிப்பும் இல்லாமல் வெறுமனே கணிப்புகளை(speculation) மட்டுமே முதலீடாக கொண்டு , எந்த வித பொருளாதார செயல் பாடும் இல்லாமல் ஒருவரிடமிருந்து ஒருவருக்கு பணத்தையும்,ரிஸ்க்கையும் வரிசையாக கைமாற்றி ஒட்டு மொத்த பொருளாதாரத்தின் மதிப்பை செயற்கையாக உயர்த்தி மாபெரும் அழிவிற்கு இட்டு சென்றனர். கடந்த வருடத்தில் உச்ச கட்டத்தில் அமெரிக்காவின் கார்ப்போரேட்டுகலின் லாபத்தில் இது போன்ற நிதி பரிமாற்ற மதிப்பு மட்டும் 41% அடைந்தது. எந்த அளவிற்கு தங்களுக்குள் பணத்தை பறிமாறிகொள்கிறார்களோ அந்த அளவு நிதி நிறுவனங்களின் மதிப்பும் வளர்ச்சியும் இருக்கும். அந்த அளவு அந்நிறுவனக்களில் பணியாற்றும் இடை தரகர்களின் லாபமும் இருக்கும். செயற்கையாக இது போல் மிக பெரிய வளர்ச்சி அடைந்த நிறுவங்கள் உண்மை நிலை தெரிந்த உடன் நட்டமடையும் போது, இதன் அளவு மற்றும் அது பொருளாதாரத்தில் அதன் பாதிப்பு கருதி அதை அரசு காப்பாற்ற வேண்டிய கட்டயத்தில் உள்ளது.

மொத்தத்தில் சந்தை பொருளாதாரம் என்பது அதன் அடிப்படையை இழந்து, லாபம் ஒன்றையே குறிக்கோளாக கொண்ட சிறிய அளவிலான முதலாளிகளின் கையில் சிக்கி திசை மாறி செல்ல தொடங்கி உள்ளது. அரசாங்கத்தால் எந்த அளவு இப்போக்கை கட்டு படுத்த முடியும் என்பது ஒரு கேள்வி குறியே.

--

Friday, April 10, 2009

பாக்கிஸ்தானின் வியாபார தந்திரம்

ஒரு தொழிலில் 100 ரூபாய் முதலீடு செய்து 1000 ரூபாய் சம்பாதித்தால் அது லாபம் என்போம். அதையே 100 ரூபாய் முதலீடு செய்து 1 லட்சம் ரூபாய் சம்பாதித்தால் அது கொள்ளை லாபம். அந்த அளவு கொள்ளை லாபம் கிடைக்கும் தொழில் ஒன்று உண்டா? ஆம் இருக்கிறது. பாக்கிஸ்தான் அந்த வியாபார தந்திரத்தை கண்டுபிடித்து பெரிய அளவில் பயனடைகிறது. என்ன என்று கேட்கிறீர்களா? பாக்கிஸ்தான் தலிபான், லஸ்கர்-இ-தொய்பா என பல தீவிரவாத இயக்கங்களை சில மில்லியன் டாலர் முதலீட்டில் உருவாக்கி, அதன் பலனாக இன்று பல பில்லியன் டாலர்களை அமெர்க்காவிடமிருந்து நிதி உதவியாக பெற்று கொள்ளை லாபம் அடைகிறது. 21ம் நூற்றாண்டில இதுவும் ஒரு லாபமிகு தொழில் தான்.

--

Wednesday, April 01, 2009

எங்கே போனது பணம்? - டாலர் அரசியல்- 4




தற்போதைய நிதி நெருக்கடியால் பண புழக்கம் திடீரென குறைந்ததை அடுத்து அனைவரின் மனதிலும் எழும் கேள்வி- இது வரை உலகில் இருந்த பணம் எல்லாம் எங்கே போனது? அவை எல்லாம் திடீரென மாயமான மர்மம் என்ன?.

இது பற்றி அறிய பணம் எவ்வாறு உற்பத்தி செய்ய படுகிறது என்று அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும். 1970க்கு முன் அரசாங்கத்தால் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ உற்பத்தி செய்ய படும் பணத்திற்க்கு (ஒரு பகுதிக்காவது) தங்கத்தை கையிருப்பாக வைத்திருப்பர். ஆனால் 1970க்கு பிறகு gold convertibility என்பது பெருமளவு மறைந்து போனது. மத்திய அரசு ஒரளவு தங்கம் மற்றும் அன்னிய பணங்களை கையிருப்பாக வைத்திருந்தாலும் அவை அச்சடிக்கப்படும் பணத்துடன் ஒப்பீடு செய்து பார்க்கும் போது அதன் மதிப்பு மிக குறைவே.பிரச்சனை ஏற்படும் போது பணத்திற்கு ஈடாக தங்கம் இருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லாததால் அதிக அளவு பணத்தை அச்சிடுவதன் மூலம் பிரச்சனையை தீர்க்க முயல்கின்றது.

இதனால பணம் என்பது செல்வத்தை சேமிக்கும் ஒரு கலமாக இருந்த நிலை மாற தொடங்கி அரசாங்கங்கள் கொடுக்கும் நம்பிக்கையின் பத்திரமாக மட்டும் இருந்து அதன் மதிப்பும் குறைய தொடங்கி விட்டது. தற்போது பெரும்பலான பணம் வெளியிட படுவது "Money As Debt." என்று கூறபடும் பணத்தை கடனாக கொடுத்து அதன் மூலம் உற்பத்தி பெருக்கத்தை ஏற்படுத்தலாம் என்ற நம்பிக்கையில் தான்.

உலக அளவில் மத்திய வங்கிகளிடம் உள்ள சேமிப்பு செல்வமாக இருக்கும் தங்கத்தின் மதிப்பு $0.84 ட்ரில்லியன்.அவை வெளியிட்டிருக்கும் பணத்தின்(M0) மதிப்பு $3.9 ட்ரில்லியன் . என்னுடைய முந்தய பதிவில் கூறியது போல் வங்கிகளால் கடன் மூலம் பெருக்க பட்ட பணம் $39 ட்ரில்லியன். பணம் எவ்வாறு பெருக்க பட்டுள்ளது என்று கூர்ந்து கவனியுங்கள்.

கடந்த பத்து வருடங்களாக நிழல் வங்கி அமைப்பு (Shadow banking System) என்று அழைக்கபடும் முதலீட்டு வங்கி(investment bank), ஹெட்ஜ் முதலீடு மற்றும் பிற வங்கி சாரா பொருளாதார அமைப்புகளின்(Non banking financial institutions) வளர்ச்சி மிக வேகமாக வளர்ந்து வருகிறது. இவ்வகை அமைப்புகளுக்கு, வங்கிகளுக்கு இருக்கும் கட்டுபாடு போல் எதுவும் இல்லை. இவை கொடுக்கும் கடன் மற்றும் எடுக்கும் Riskக்கிற்க்கு இணையாக ஒரு பகுதியை வைப்பு தொகையாக வைக்க வேண்டியதில்லை. இவர்கள் எடுக்கும் Risk மிக அதிகமாக இருக்கும். வங்கி பிறருக்கு கடனை கொடுக்கும் போது அதற்கான Riskஐ Shadow banking System எடுத்து கொண்டு அந்த Riskக்கிற்கான பணத்தை வங்கியிடம் இருந்து வசூளித்துக் கொள்ளும். இதனால் வங்கிகள் எந்த கவலையும் இல்லாமல் கடன் பெருபவரின் தரத்தை பற்றி கவலை படாமல் பெருமளவு கடன் கொடுக்க ஆரம்பிக்க தொடங்கினர். இது போன்று குழபத்தை ஏற்படுத்தும் பல புது வகையான பொருளாதார பொருட்கள்(Financial products) உருவாக்கபட்டன. இது கடன்களின் மொத்த மதிப்பை $62 ட்ரில்லியன் ஆக்கியது. மேற்கண்ட நிகழ்வுகளால் எளிமையான, வரவுக்கு சம்பந்தம் இல்லாத கடன்களால் நிலம்,பங்கு சந்தை போன்ற முதலீடுகளின் மதிப்பு வளர்ச்சிக்கு(growth) பதில் வீக்கமடைந்து(swelling) $290 ட்ரில்லியன்களானது.

தற்போதைய பொருளாதார வளர்ச்சி பற்றி கூற வேண்டுமானால் உற்பத்தி என்னும் அஸ்திவாரம் மிக குறுகலாக உள்ளது.ஆனால் அதன் மேல் கடனை அடிப்படையாக கொண்டு அரசு மற்றும் வங்கிகள் மூலம் கட்டப்பட்டுள்ள கட்டிடமோ அஸ்திவாரத்திற்கு சம்பந்தமே இல்லாமல் மிக பெரியது. அந்த கட்டிடம் ஆட்டம் காணும் போது அதிக செலவிட்டு மீண்டும் கட்டிடத்தின் அளவை பெரியதாக்க முயற்ச்சி செய்வது போல் உள்ளது.

பிஷ்சரின்(Fisher) எளிமை படுத்த பட்ட கீழ் காணும் சமன்பாடு(equation) பொருளாதாரத்தின் அடிப்படையை விளக்குகிறது

MV=PQ

M=ஒட்டு மொத்த பணத்தின் அளவு
V= பணத்தின் திசைவேகம். அதாவது பணம் எந்த அளவு மிக வேகமாக ஒவ்வொருவரிடமும் கை மாறுகிறது என்பது.
P=ஒட்டு மொத்த முதலீடுகளின் விலை
Q=ஒட்டு மொத்த பொருளாதார உற்பத்தி.


ஒட்டு மொத்த உலக பொருளாதாரமும் அமெரிக்க பொருளாதாரத்தை சார்ந்து இருப்பதால் மேற்கண்ட சமன்பாட்டை அடிப்படையாக வைத்து எவ்வாறு அமெரிக்க பொருளாதாரம் செயல் பட்டுள்ளது என்று பார்ப்போம். முதலில் அமெரிக்காவில் எந்த அளவு பணம் உருவாக்க பட்டுள்ளது என்று பார்ப்போம். கீழே உள்ள் படத்தை பார்த்தால் பணம் உருவாக்க படும் வேகத்தை பார்க்கலாம். முக்கியமாக 1970க்கு பிறகு டாலருக்கான தங்க மாற்று மறுக்க பட்டு, OPEC நாடுகளுடன் பெட்ரோலை டாலருக்கு விற்க ஒப்பந்தம் செய்ய பட்டவுடன் டாலர் உற்பத்தி மிகவும் அதிகமானது. கீழ் கண்ட படத்தில் 2009ம் ஆண்டுக்கான கணக்கு மட்டும் அரசால் வெளியிட பட்ட கணக்கு அல்ல. ஏனென்றால் அரசு M3 வெளியிடுவதை நிறுத்தி விட்டது. எளிதான கடன் அனைவருக்கும் கிடைத்ததால் பணத்தின் திசைவேகம் அதிகமாக இருந்தது.




நன்றி -Wikipedia and shadowstats.com


பணம் அதிகளவு உற்பத்தி செய்ய பட்டு "Money as debt" ஆக வெளியில் வந்தால் அது அதிக அளவு பொருளாதார உற்பத்தியை அதிகரிக்க வேண்டுமே! ஒட்டு மொத்த பொருளாதாரமும் முன்னேற வேண்டுமானால் பணம் அனைவருக்கும் செல்ல வேண்டும். அப்போது தான் அனைவரும் செலவு செய்வார்கள். அது ஒட்டு மொத்த பொருளாதார வளர்ச்சிக்கும் உதவும். ஆனால் உண்மையில் நடந்ததோ வேறு. பணம் சென்றது எல்லாம் ஒரு சிலரின் கைகளுக்கு தான்.

உயர்தட்டு மக்களின் (ஒரு சதவிதம் மட்டுமே) வருட வருமானம் $325,000லிருந்து $1.1 மில்லியனை அடைந்தது. ஆனால் நடுத்தர மக்களின் வருமானமும் கீழ்தட்டு மக்களின் வருமானமும் மிகவும் சொற்ப அளவே உயர்ந்துள்ளது. அதாவது சுமாராக 80% மக்களின் வருமானம் குறிப்பிட தகுந்த அளவு உயரவில்லை. ஆனால் பணம் அச்சிடபட்டு வெளியிடபடும் அளவு மட்டும் மிக அதிகமானது.







நன்றி--Lane Kenworthy


மற்றொரு புறம் பணம் அச்சிட்ட அளவு நாட்டின் ஒட்டு மொத்த உற்பத்தி அதிகரிக்க வில்லை. நாட்டின் உற்பத்தி உயர்ந்த அளவுகூட மக்களின் வருடாந்தர வருமான உயர்வு இல்லை.இதை கீழ் காணும் கிராப்பை பார்த்தால் புரியும்.



நன்றி—Lane Kenworthy


இதே நிலை, அதாவது பண புழக்கம் அதிக அளவு வந்து உற்பத்தி திறன் குறைவாக இருந்தால் மிக பெரிய பணவீக்கம் வரும். அதாவது உற்பத்தி பொருட்களின் விலை பல மடங்கு ஏறும். அதை தடுப்பதற்கு தான் உலகமயமாதல் என்னும் கொள்கை பயன் பட்டது.1970களில் திடீரென உயர்ந்த பெட்ரோல் விலையால் வளரும் நாடுகளின் பொருளாதாரம் அனைத்தும் பாதாளத்தை நோக்கி செல்ல ஆரம்பித்தது. அதன் விளைவாக அந்நாடுகளின் பணத்தின் மதிப்பு குறைக்க பட்டது. இதன் விளைவாக வளரும் நாடுகளில் உள்ள கனிம வளங்கள் மற்றும் மனித வளங்கள் மலிவாக்க பட்டு பொருட்களின் விலையும் குறைக்க பட்டு, அவற்றை இறக்குமதி செய்ய அமெரிக்கா தொடங்கியது.
இதன் விளைவாக உற்பத்தி பொருட்களின் விலை குறைத்து வைக்க பட்டது.

மேலே சொன்ன சமன்பாட்டில்(MV=PQ) உள்ள படி ஒட்டு மொத்த பணத்தின் அளவு(M) அதிக பணம் அச்சிட பட்டதால் மிக அதிகமானது. பணத்தின் திசைவேகமும்(V) அதிகமானது. பணம் அனைத்து பிரிவினருக்கும் சரியாக பரவி இருக்காததால் ஒட்டு மொத்த பொருளாதார உற்பத்தி(Q) அளவும் அந்த அளவு உயரவில்லை. உலகமயமாதலால் சாதாரன பொருட்களின் விலை அந்த அளவு உயராமல் உள்ளது. எனவே கடைசியில் ஒட்டு மொத்த முதலீடுகளின்(P) விலை அளவு உயர்ந்தே ஆக வேண்டிய சூழ்நிலை. அதாவது ரியல் எஸ்டேட், பங்கு வர்த்தகம் போன்றவற்றின் மதிப்பு அதிகரித்தே ஆக வேண்டிய சூழ்னிலை ஏற்பட்டது. பணம் அனைத்தும் ஒரு சிலரையே சென்றடைவதால், இந்த பொருளாதார அமைப்பு மிக பெரிய அழிவுக்கு இட்டு சென்று விட்டது. கடன் வாங்கிய பெரும்பான்மையினரால் கடனை திருப்பி செலுத்த முடியாத நிலை ஏற்படும் போது ஒட்டு மொத்த பொருளாதாரமும் ஆட்டம் காண தொடங்கி விட்டது.

பணத்தை அதிகம் வெளியிடுவதன் மூலம் பங்கு வர்த்தகம் மற்றும் ரியல் எஸ்டேட் போன்ற முதலீடுகளின் விலை வங்கிகளின் மூலம் பல மடங்கு உயர்த்த பட்டு பின் மீண்டும் அது உண்மை நிலையை அடைய முயற்சிக்கும் போது உண்டாகும் இழப்பே தற்போது ஏற்படும் இழப்புகள் எல்லாம். இந்த விலை ஏற்றத்தின் போது நன்கு லாபம் அடைந்த வங்கிகள் இப்போது நட்டம் அடைவது இயற்கையானது தான். ஆனால் இந்த இழப்பை செயற்கையாக தடுக்க எடுக்க படும் முயற்சியின் விளைவை இனி வரும் காலங்களில் காணலாம்.

இந்த பதிவிற்கு தொடர்புடைய மற்ற பதிவுகள்:

டாலர் அரசியல்

டாலர் அரசியலும் இந்திய பொருளாதாரமும்


டாலர் அரசியல் 3- மாறுமா உலக பொருளாதார அதிகார மையங்கள்?

--