Sunday, August 02, 2009

சீனா ஏற்படுத்தும் பொருளாதார சுனாமி

சென்ற பதிவில் டாலர் வலையில் சிக்கிய சீனாவின் நிலை பற்றி பார்த்தோம். இப்பகுதியில் சீனா தற்போதைய சூழ்நிலையை எதிர் கொள்ள எடுக்கும் உத்திகளை பற்றி பார்ப்போம்.
உலகில் சேமிப்பு செல்வமாக உள்ள டாலரில் மூன்றில் ஒரு பங்கு தற்போது சீனாவிடம் உள்ளது.எனவே அது முள்ளின் மேல் விழுந்த துணியை கிழியாமல் பொருமையாக எடுக்க வேண்டியது போன்ற நிலையில் உள்ளது.

தற்போது சீனாவின் முக்கிய குறிக்கோள்

1. சிறிது சிறிதாக உலக அளவில் தனது நாணயத்தை பல படுத்தி உலக அளவில் பொருளாதார வல்லரசாக ஆக வேண்டும்

2. டாலரின் மதிப்பை உடனடியாக வீழாமல் பார்த்து கொள்ள வேண்டும்

3. சிறிது சிறிதாக டாலருக்கு இணையாக பிற நாணயங்களை உலக சேமிப்பு நாணயமாக கொண்டு வரவேண்டும்(அதே சமயத்தில் தனக்கு பாதிப்பு எதுவும் ஏற்படாமல் பார்த்து கொள்ள வேண்டும்).

4.ஆற்றல் வளம்(பெட்ரோல் போன்றவை), தாது பொருட்கள் மற்றும் உணவு பொருட்களை உற்பத்தி செய்யும் ஏழை நாடுகளுக்கு கடனாக தன்னிடம் குவிந்து கிடக்கும் டாலரை கொடுத்து, எதிர்காலத்தில் சீனாவிற்கு மட்டும் அவற்றை இறக்குமதி செய்ய ஒப்பந்தம் இட்டு கொள்வது.

5. தன்னிடம் உள்ள டாலர் கையிருப்பை கொண்டு உலகில் உள்ள தாது பொருட்கள் மற்றும் எண்ணெய் உற்பத்தி நிறுவனக்களை முடிந்த அளவு வாங்கி குவிப்பது. தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சி காரணமாக பல நிறுவனங்களின் மதிப்பு அடி மாட்டு விலைக்கு வந்துள்ளது சீனாவிற்கு மேலும் சாதகமாக உள்ளது

6. தன்னுடைய சேமிப்பு செல்வத்தில் டாலர் சொத்துக்கள் தவிர யூரோ, தங்கம் போன்றவற்றின் பங்கையும் அதிகரிக்க வேண்டும்.

சீனா தன் குறிகோளை எவ்வாறு நிறைவேற்றுகிறது என்று ஒவ்வொன்றாக பார்ப்போம்

சீனாவின் தங்க கையிருப்பு கடந்த சில வருடங்களில் 70% மேலாக அதிகரித்து 1000டன்னை தாண்டி விட்டது. இது வளர்ந்த நாடுகளின் தங்க கையிருப்பை ஒப்பிட்டு பார்க்கும் போது குறைவாக இருந்தாலும் அது தங்கத்தை வாங்கி குவிக்கும் வேகம் மிக அதிகமாகவே உள்ளது.

இனி வரும் பதிவுகளில் சீனாவின் மற்ற குறிக்கோளை அடையும் வழி பற்றி பார்ப்போம்.

--

6 comments:

Btc Guider said...

சீனா உண்மையிலேய அமெரிக்காவை முந்தி முதலிடத்தில் வரக்கூடிய சாத்தியங்கள் அதிகம் மேலும் மக்களுக்கு அந்த நாடு கொடுக்கும் சலுகைகள் நம் நாட்டிற்கு கொடுத்தால் சீனாவை நாம் வெகு சீக்கிரத்தில் முந்திவிடுவோம் இந்திய அரசியலில் நல்ல முடிவெடுக்கக்கூடிய அருமையான தலையை எதிர்ப்பார்க்கிறோம்

சதுக்க பூதம் said...

வாங்க share market tips .
//சீனா உண்மையிலேய அமெரிக்காவை முந்தி முதலிடத்தில் வரக்கூடிய சாத்தியங்கள் அதிகம் மேலும் மக்களுக்கு அந்த நாடு கொடுக்கும் சலுகைகள் நம் நாட்டிற்கு கொடுத்தால் சீனாவை நாம் வெகு சீக்கிரத்தில் முந்திவிடுவோம் இந்திய அரசியலில் நல்ல முடிவெடுக்கக்கூடிய அருமையான தலையை எதிர்ப்பார்க்கிறோம்

//

மக்கள் தொகை வளர்ச்சி அமெரிக்காவில் குறைய போகிறது. ஆனால் சீனாவில் அதிகரிக்க போகிறது. மக்கள் தொகை வளரும் வேகத்தில் அதன் ஏற்றுமதியும் அதிகரிக்கிறது. எனவே சீனாவின் ஒட்டு மொத்த பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும். ஆனால் அது அமெரிக்காவின் தனி நபர் பொருளாதார வளர்ச்சியை நிலையை சீனா முந்துமா என்பது கேள்விகுறியே.
இந்தியாவின் ஒட்டு மொத்த வளர்ச்சியை விட ஏற்ற தாழ்வு குறைந்த, அனைத்து மக்களுக்கும் அடிப்படை வசதிகள் கிடைக்குமாறு ஏற்படும் வளர்ச்சியே முக்கியம். அதுவும் மிக கடினமே

Unknown said...

என்னுடைய தாழ்மையான கருத்து என்னவென்றால், இன்னும் ஒரு பத்து பதினைந்து வருடங்களுக்காவது அமெரிக்கா-வை சாய்க்க முடியாது.

யாரவது ஒரு மாணவன் சீனாவில் படிக்க ஆசையாக இருக்கிறது என்று கூறுவானா? இன்னும் மேல் படிப்பு என்றால் அமெரிக்கா-தானே?

அமெரிக்கா-வின் பலம் அதன் சுதந்திர காற்று தான். சீனா-வில் சுதந்திரம் என்பது ஒரு அரிதான பொருள்.

நிறைய மக்கள்-ஐ விட திறமையான மக்கள் முக்கியம். எவ்வித சுனாமி-யையும் யும் எதிர்க்கும் சக்தி இன்னும் அமெரிக்கா-விடம் உள்ளது.

தற்போது உள்ள நிலைமையை வைத்து அமெரிக்கா ஒழிந்தது என்று கூற முடியாது.

சீனா முயற்சி செய்கிறது என்று மட்டுமே கூற முடியும். ரஷ்ய-வும் ஒரு காலத்தில் முயற்சி செய்யவில்லையா? மோதினால் இன்னொரு பனிப்போர்
நிச்சியம்.

அமெரிக்கா-வின் சரித்திரமே ஒரு போராட்டம் தான். நல்லவனா கெட்டவனா என்பது வேறு விசியம்.

சதுக்க பூதம் said...

வாங்க வருண்

//என்னுடைய தாழ்மையான கருத்து என்னவென்றால், இன்னும் ஒரு பத்து பதினைந்து வருடங்களுக்காவது அமெரிக்கா-வை சாய்க்க முடியாது.
//
நிச்சயமாக 10 - 15 வருடத்தில் பொருளாதாரத்தில் அமெரிக்காவை முந்துவது மிக மிக கடினமே. பொருளாதாரத்தில் அமெரிக்காவை முந்தினாலும், அமெரிக்காவில் சாதாரண குடிமகனுக்கு கிடைக்கும் வாழ்க்கை தாரத்தை சீனாவில் தருவதற்கு பல ஆண்டுகள் பிடிக்கும்.

//அமெரிக்கா-வின் பலம் அதன் சுதந்திர காற்று தான். சீனா-வில் சுதந்திரம் என்பது ஒரு அரிதான பொருள்.
//
இது ஓரளவுக்கு உண்மையே. ஆனால் அமெரிக்காவின் வளர்ச்சிக்கு கல்லுரிகளின் மூலம் நடந்த அடிப்படை ஆராய்ச்சி முக்கியம். அதற்கு செலவிட அமெரிக்காவின் அரசாங்கத்தால் முடிந்தது. அதற்கு காரணம் அது பொருளாதார வல்லரசாக இருந்தது. மேலும் அதிகம் சம்பாதிக்கலாம் என்ற நம்பிக்கை இருந்தால் கண்டுபிடிப்புக்கும் மக்கள் மற்றும் அரசு அதிகம் செலவிடுவர். தற்போதுசீனா அரசாங்கம் அதை நோக்கி தான் போய் கொண்டிருக்கிறது. அதன் பொருளாதாரம் மேலும் வளமானால் மேற்கண்டவற்றை அதனால் ஒரு 10 வருடத்தில் சாதிக்க தொடங்க முடியும்


//நிறைய மக்கள்-ஐ விட திறமையான மக்கள் முக்கியம். எவ்வித சுனாமி-யையும் யும் எதிர்க்கும் சக்தி இன்னும் அமெரிக்கா-விடம் உள்ளது//
பொருளாதார பலம் இருந்தால் எந்த திறமையும் விளைக்கு வாங்களாம். இன்று இந்தியாவில் உள்ள creamy layer அமெரிக்காவுக்கு செல்வதற்கு முக்கிய காரணம் பணம் தான்(வேறு காரணங்கள் இருந்தாலும் பணம் மிக முக்கியமானது)

//அமெரிக்கா-வின் சரித்திரமே ஒரு போராட்டம் தான். நல்லவனா கெட்டவனா என்பது வேறு விசியம்.
//
ஒவ்வொரு நாட்டின் சரித்திரமும் ஒரு போராட்டம் தான். தற்போது நடக்கும் உலகமயமாதல் போக்கை பார்த்தால், நாடுகளை விட ஒரு சில பணம் படைத்தவர்கள் மற்றும் அதிகாரம் படைத்தவர்களின் ஆதிக்கம் அதிகமாகிறது. அவர்களது பொருளாதார மற்றும் அதிகார வளர்ச்சிக்கு அமெரிக்கவை விட சீனா அதிகம் உதவி புரிந்தால் அவர்கள் தரும் முக்கியத்துவம் அமெரிக்காவிலிருந்து சீனாவுக்கு மாற வாய்ப்புள்ளது. அப்போது உலகின் ஒட்டு மொத்த பொருளாதார சூழலும் மாறலாம்.சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சியும் தங்களது அதிகாரத்தை பாதிக்காமல் அதை அனுமதிக்கலாம்.

அதே நேரத்தில் அமெரிக்காவும் தன் மேலாதிக்கத்தை அவ்வளவு எளிதாக விட்டு கொடுக்காது. இனி வரும் மாற்றங்களை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

இன்னொன்றையும் மறந்து விட கூடாது. முன்பு இங்கிலாந்து பொருளாதார சக்தியாக இருந்த போது அமெரிக்கா அதை மாற்றும் என்பதை யாரும் ஒப்புக்கொள்ளவில்லை.

இந்தியாவை பொருத்த வரை சீனாவின் வளர்ச்சி அபாயகரமானது தான்

Thomas Ruban said...

//என்னுடைய தாழ்மையான கருத்து என்னவென்றால், இன்னும் ஒரு பத்து பதினைந்து வருடங்களுக்காவது அமெரிக்கா-வை சாய்க்க முடியாது.
//

இந்தியா, சீனா,ரஷ்யா,நாடுகள் இணைந்து செயல்ப்பட்டால் அமெரிக்காவின் ஆதிக்கத்தை
முடிவக்கு கொண்டு வரலாம்.

//இன்னொன்றையும் மறந்து விட கூடாது. முன்பு இங்கிலாந்து பொருளாதார சக்தியாக இருந்த போது அமெரிக்கா அதை மாற்றும் என்பதை யாரும் ஒப்புக்கொள்ளவில்லை.//

CHANGE IS PERMANENT மாற்றம் ஒன்றே நிலையானது.

பதிவுக்கு நன்றி..

சதுக்க பூதம் said...

வாங்க Thomas Ruban
//இந்தியா, சீனா,ரஷ்யா,நாடுகள் இணைந்து செயல்ப்பட்டால் அமெரிக்காவின் ஆதிக்கத்தை
முடிவக்கு கொண்டு வரலாம்.//

இந்தியாவும் சீனாவும் ஒன்றினைவது கடினம் என்றே நினைக்கிறேன். ஏனென்றால் இரண்டு நாடுகளும் உற்பத்தி பொருள் மற்றும் சேவைகள் கொடுக்க வளரும் நாடுகளுக்கு போட்டி போடுகின்றன.

//CHANGE IS PERMANENT மாற்றம் ஒன்றே நிலையானது.
//

நிச்சயமாக!. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி