Monday, October 03, 2011

சவுக்கு தளத்தில் காணாமல் போன பதிவு?

பல ஊழல் அரசியல்வாதிகலையும், காவல்துறை அதிகாரிகளையும் மக்களுக்கு தோலுரித்து காட்டுவதில் சவுக்கு முதலிடம் வகிக்கிறது என்பதை யாராலும் மறுக்க முடியாது. திரைக்கு பின் நடக்கும் பல ஊழல்களை ஆதாரத்தோடு வெளி கொண்டுவருவதில் சவுக்குக்கு நிகர் சவுக்கு தான். பிற்காலத்தில் நடு நிலையான அரசியல் நாளிதழை அது தொடங்கும் என்னும் நம்பிக்கை நிறையவே இருக்கிறது. சில தினங்களுக்கு முன் என்ன ஒரு கரிசனம் ? என்ற தலைப்பில் முதல்வர் ஊழல் வழக்கிலிருந்து விடுவிக்கபட்டது பற்றி அருமையான கட்டுரை வெளியிட்டது.தி.மு.க ஆதரவு பத்திரிக்கைகள் கூட அப்படி செய்தி வெளியிடவில்லை. அந்த பதிவின் link http://www.savukku.net/home1/1307-2011-10-01-11-42-00.html (facebookல் பகிர்ந்தவர்களில் நானும் ஒருவன்) தற்போது அந்த பதிவை காணவில்லை. அது வேறு எதாவது linkல் அந்த தளத்திலேயே உள்ளதா என்று தெரியவில்லை. அது தொழில்நுட்ப பிரச்ச்னை காரணமாக காணவில்லை என்றால் பரவியில்லை. இல்லையென்றால் அது மிகவும் வருத்தமளிக்கும் செய்திதான் --

Tuesday, August 16, 2011

Wall Street - One Way



Wall Street - One Way
இது போக்குவரத்துக்கு மட்டுமா?
இல்லை அங்கு செல்லும் செல்வங்களுக்குமா?

--

Tuesday, June 21, 2011

கூகிள் மொழி பெயர்பு சேவையில் தமிழும் இணைந்தது

கூகிள் மொழி பெயர்பு சேவையின் மூலம் பல மொழிகளை மொழி பெயர்பு செய்ய முடிந்தது அனைவரும் அறிந்ததே. இந்த சேவை என்று தமிழுக்கும் கிடைக்கும் என பல நாட்களாக நாம் எதிர்பார்த்திருந்தோம். கடைசியாக கூகிள் மொழி பெயர்பு சேவையில் தமிழும் இணைக்க பட்டு விட்டது.

இனி ஆங்கில வார்த்தைகளுக்கான தமிழ் வார்த்தைகளையும், தமிழ் வார்த்தைகளுக்கான ஆங்கில மொழி பெயர்பையும் இங்கு சென்று பார்க்கலாம்.
http://translate.google.com/?sl=ta&tl=en#en|ta|test.

அது மட்டுமல்ல. எந்த ஒரு தமிழ் இணைய பக்கத்தை பிறமொழிகளுக்கும், பிற மொழி(ஆங்கிலம் உட்பட) இனைய பக்கங்களை தமிழிலும் மொழி பெயர்பு செய்து வாசிக்க முடியும்.என்னுடைய பதிவை கூகிள் சேவை மூலம் ஆங்கிலத்துக்கு மொழி பெயர்த்த போது, இது போல் மொழி பெயர்பு செய்தது.

இந்த சேவை ஆல்பா நிலையில் தான் உள்ளது. எனவே நிறைய தவறுகள் இருக்களாம்.தனி பட்ட வார்த்தைகளை மொழி பெயர்பு செய்யும் சேவை தற்போது நன்றாக உள்ளது. ஆனால் இணைய பக்கங்களை மொழி மாற்றம் செய்யும் போது நிறைய தவறுகள் உள்ளது.

இது பற்றி கூகிள் வெளியிட்டிருக்கும் அறிவிப்பு இங்குள்ளது.


இதை பார்த்தவுடன் Google Translation API கொண்டு தமிழ் மொழிபெயர்பு செய்யும் Widget செய்யலாம் என்று முயற்சி செய்தேன். ஆனால் Translation APIல் இன்னும் தமிழுக்கு support கொடுக்கவில்லை!

--

Thursday, June 02, 2011

அபாயத்தில் இந்திய சீனா உறவு

இந்தியாவிற்கு சீனாவிடம் ராணுவ ரீதியான அபாயம் பற்றி பல செய்தி வந்து விட்டது. அதை விட மிக அபாயமான செய்தி தற்போது வளர்ந்து வரும் சீனாவுடனான வர்த்தக பெருக்கம் தான். கடந்த சில காலமாக இந்தியா சீனாவுடனான வர்த்தக உறவு பெருமளவு வளர்ந்து சீனா இந்தியாவின் வெளிநாடுகளுடனான வர்த்தகத்தின் முதலிடத்தை பெருமளவுக்கு வந்துள்ளது.

இந்தியா சீனாவிடமிருந்து செய்யும் இறக்குமதியின் மதிப்பு சீனாவுக்கு இந்தியா செய்யும் ஏற்றுமதியை விட பெருமளவு அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. இதில் முக்கியமாக கவனிக்க வேண்டியது இந்தியா சீனாவுக்கு ஏற்றுமதி செய்யும் பொருட்களில் 70% மூல பொருட்கள் ஆகும். அதாவது இந்தியாவின் இயற்கை வளத்தை நேரடியாக வெட்டி எடுத்து ஏற்றுமதி செய்கிறோம். அதே சமயம், சீனாவிடமிருந்து உற்பத்தி செய்ய பட்ட பொருளை அதிக அளவு இறக்குமதி செய்கிறோம்.

இந்தியாவிடமிருந்து இறக்குமதி செய்ய பட்ட மூல பொருட்களை கொண்டு சீனா, தன்நாட்டில் உள்ள தொழிற்சாலைகள் மூலம் தன்நாட்டு மக்களுக்கு வேலை வாய்ப்பளித்து பொருட்களை உற்பத்தி செய்து இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்கிறது. இந்த நிலை தொடர்ந்தால் இந்தியாவின் சிறு மற்றும் குறு தொழிற்கள் முற்றிலுமாக அழிய வாய்ப்புள்ளது.

தற்போதைய மத்திய அரசுக்கு இதை பற்றியெல்லாம் சிந்திக்க நேரமெங்கு இருக்க போகிறது!.

--

Sunday, May 29, 2011

ஜெயலலிதாவும், சர்வதேச நிதி நிறுவனமும் , அமெரிக்க நிதி நெருக்கடியும்

என்னாடா இது ஒன்றுக்கொன்று சம்பந்தம் இல்லாத பெயர்களை கொண்ட தலைப்பாக இருக்கிறது என்று நினைக்க தோன்றுகிறதா? கண்ணுக்கு தெரியாத சர்வ தேச நிகழ்வுகள் ஏற்படுத்தும் அரசியல் , பொருளாதார மற்றும் சமுக பிரச்சனையின் உண்மயான காரண கார்த்தாக்களை பெரும் பாலான மக்கள் உணராமல் உள்ளார்கள் என்பது பற்றி தெரிந்தது கொள்ளத்தான் இந்த பதிவு.

கடந்த முறை ஆட்சி அதிமுக அரசு பதவி ஏற்ற பின் ஜெயலலிதா எடுத்த மக்கள் விரோத நடவடிக்கைகளை மக்கள் இன்னும் மறந்தது இருக்க மாட்டார்கள். அதிமுக ஆட்சி என்றவுடன் மக்கள் மனதில் பயத்துடன் தோன்றும் நிகழ்வு இது தானாக தான் இருக்கும்.அதற்கான விளைவையும் அது அனுபவித்து விட்டது.இந்த முறை அதிமுகவின் செயல்பாடு அதே போல் இருக்கும் என்ற பயம் நிறைய பேருக்கு இருக்கலாம். ஆனால் அதற்கான சாத்தியம குறைவே(மக்கள் விரோத முடிவு எடுக்க மட்டும் சாத்தியம குறைவு! நல்லாட்சி நடக்குமா என்பதற்கு எந்த கியாரண்டியும் இல்லை!).அது எவ்வாறு என்று புரிந்து கொள்ள ஒரு சின்ன Flash Back.

பசுமை புரட்சிக்கு பின் இந்தியா உணவு உற்பத்தியில் தன்னிறைவு பெற்றது. அதன் பின் எழுபதுக்களின் நடுப்பகுதி வரையிலும் இந்தியாவின் இறக்குமதி மற்றும் ஏற்றுமதிக்கு இடையேயான விகிதாச்சாரம் ஏற்று கொள்ளும் நிலையில் இருந்தது. 70க்களில் அமெரிக்கா டாலருக்கான தங்க மாற்றை கைவிட்டதும் அதை தொடர்ந்து நடந்த பெட்ரோல் விலை ஏற்றமும், இந்தியாவின் அப்போதைய நேச நாடான சோவியத் யுனியன் சிதைவும்( சோவியத் சார்பு நாடுகளிடம் வர்த்தகம் செய்ய டாலர் மட்டுமே முழுமையாக தேவை இல்லை. ) பொருளாதார போக்கை மாற்ற தொடங்கின.

அனைத்து நாடுகளுக்கும் உணவு மற்றும் எனர்ஜி (பெட்ரோல்) மிக அத்தியாவசியமானது. இந்தியா பெட்ரோல் தேவைக்கு வெளி நாடுகளை தான் நம்பியுள்ளது. 70க்களில் 2௦ டாலருக்கும் குறைவான கச்சா எண்ணெய் விலை மும்மடங்கு ஏறி 80களின் ஆரம்பத்தில்
80 டாலராகவும் தற்போது 1௦௦ டாலரையும் கடந்தது விட்டது.இந்தியாவின் முக்கிய இறக்குமதி கச்சா எண்ணெயாக இருப்பதால், இந்தியாவின் இறக்குமதி செலவு பல மடங்கு ஏறியது. இந்தியா மட்டுமல்லாமல் பெரும்பாலான நாடுகளின் நிலையும் இது.கச்சா எண்ணையின் விலையை அதிகரித்து கொண்டே போக தொடர்ந்து வந்த இராக், குவைத் போர்கள் உதவின.அதன் விளைவு இந்தியாவின் பேலன்ஸ் ஓப் பேமென்ட் (Balance of payment) அதிகரித்து கொண்டே வந்தது.வறுமை ஒழிப்பு, சமுக முன்னேற்றம் போன்றவற்றிற்காக அரசு செலவு செய்ய வேண்டி வந்ததாலும் இந்த சுமை மேலும் அதிகமானது.

90க்களில் இந்த பிரச்சனை மேலும் அதிகமானது.இந்தியா தன் தங்கத்தை அடமானம் வைக்க வேண்டி இருந்தது. இந்தியாவின் 90களின் பொருளாதார நெருக்கடிக்கு முக்கிய
காரணம் மேற்கூறய காரணிகளாக இருந்தாலும் அதை சோசியலித்துவத்தின் தோல்வி என ஊடகங்களால் செய்தி பரப்ப பட்டு வந்தது
(அது பற்றி தனி பதிவிடுகிறேன்).

அப்போது இந்தியா சர்வதேச நிதி நிறுவனத்திடம் கையேந்த்தியது. IMF கடன் கொடுக்க பல நிபந்தனைகளை விதித்தது. அதற்கு Structural Adjustment என்ற பெயரிட பட்டது.அதில் ஒரு சில கட்டுபாடுகளை கிழே பாருங்கள்.

1. வறுமை ஒழிப்பு மற்றும் மக்கள் நல திட்டங்களை குறைக்க வேண்டும்.

2.ஏற்றுமதி பெருக்கம் சார்பான வளர்ச்சியும், விரைவில் ஆதாரங்களை ஏற்றுமதி செய்ய திட்டம்.(Resource Extraction)

3.நாணயங்களின் மதிப்பு குறைக்க பட வேண்டும்.

4.கட்டுபாடற்ற இறக்குமதி - ஏற்றுமதி

5.வெளிநாட்டு முதலீட்டுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு

6.தனியார் மயமாக்கல்

6.பட்ஜெட் கட்டுப்பாடு

7.விலை கட்டுப்பாடு மற்றும் மான்யம் நீக்கம்

8.வெளிநாட்டு முதலிட்டாளர்களின் தேவைகேற்ப சட்டம் மாற்றி அமைப்பு.

9.ஊழல் ஒழிப்பு.

மேல் சொன்ன நிபந்ததனைகளை ஒத்து கொண்டால் பெருமளவு கடனை உலக வங்கி தயாராக இருந்தது. அரசியல்வாதிகளுக்கு பெருமளவு ஊழல் பணம் பெறவும், ஒரு சில நல திட்டங்களை நிறைவேற்றவும் இந்த கடன் தேவை. பன்னாட்டு கம்பெனிகளுக்கும் உள்நாட்டு முதலீட்டாளர்களுக்கும் தங்கள் தொழிற்சாலை தொடங்க மற்றும் ஏற்றுமதிக்கு கொண்டு செல்ல அடிப்படை வசதிகளை நகர்புறங்களில் பெருக்க கடன் தேவை.அதிமுக ஆட்சி செய்யும் முன் இருந்த திமுக அரசு மேற்சொன்ன நிபந்ததனைகளை ஏற்று கொள்வதாக கூறி முதல் தவணையாக கடன் பெற்றது. ஆனால் அடுத்து வந்த அதிமுக தொடர்ந்தது கடன் பெற உலக வங்கியின் நிபந்ததனைகளை ஏற்று கொள்ள வேண்டிய கட்டாயத்தில் மக்கள் விரோத கொள்கைகளை எடுக்க ஆரம்பித்தது. அவ்வாறு செய்தால் மேலும் பல கடன் கிடைக்க வாய்ப்பு உள்ளது. அதிக கடன் அதிக வருமானம் அரசியல்வாதிகளுக்கு. கம்பெனிகளுக்கு பெரும் லாபம். ஆனால் மக்கள் உழைப்பு பிற்காலத்தில் தொடர்ந்தது சுரண்ட படும். வாங்கிய கடனை உண்மையான நாட்டின் வளர்ச்சிக்கு ஊழல் இன்றி உபயோக படுத்தினால் நிச்சயம் நன்மை தான். ஆனால் பொதுவாக அது நடப்பதில்லை. பல்லாயிரம் கோடி கடன் வாங்கி ரோடு போட்டால் அது 3 மாதத்துக்கு கூட வருவதில்லை.மேலும் கொடுக்க படும் கடன்கள் உண்மையான வளர்ச்சி திட்டத்துக்கு தர படுவதும் இல்லை.( ஜான் பெர்கின்ஸ் புத்தகம இது பற்றி அழகாக விளக்குகிறது).

உலக வங்கியின் கட்டுபாட்டால் எடுக்க பட்ட முடிவு தான் முந்தய அதிமுக அரசின் முடிவுகள்.மக்களின் கோபம் எல்லாம் ஆட்சியாளர்களின் மீது தான்.உலக வங்கியின் பங்கு பற்றி சாதாரண மக்களுக்கு ஒன்றும் தெரிவதில்லை. தமிழ் நாடு என்றில்லை. மத்திய ஆசியா, ஆப்ரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் மக்கள் புரட்சி நடப்பதற்கான அடிப்படை காரணி கண்ணில் தெரியாத இடத்தில் இருக்க கோபம் மட்டும் ஆட்சியாளர்கள் பக்கம் திரும்பியுள்ளது. மக்களாட்சி உள்ள நாடுகளில் மக்களின் கோபம் வாக்கு பெட்டிகளின் மூலம் ஆட்சி மாற்றத்திலும்,முடி ஆட்சி நாடுகளில் மக்கள் கோபம் தெருக்களில் புரட்சியாகவும் வெளிபடுகிறது.

தற்போது மட்டும் உலக வங்கி தன் நிலையிலிருந்து எப்படி மாறி விட்டது என்கிறிர்களா? ஆசியா மற்றும் ஆப்ரிக்கா நாடுகளில் நிதி நெருக்கடி வந்தால் பட்ஜெட் சமநிலை, கடுமையான கட்டுப்பாடு என போதனை செய்த உலக வங்கி, அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளில் அதே பிரச்சனை ஏற்பட்டவுடன் கினிசியன் பொருளாதார ( அதாவது நிதி நெருக்கடி காலங்களில் அரசாங்கம் செலவு அதிக செலவு செய்தால் தான் நாடு பழைய நிலைக்கு திரும்பும் என்ற கொள்கை) கொள்கையே கடை பிடிக்கலாம் என்று தன கண்டிப்பிலிருந்து சிறிது குறைத்து கொண்டு விட்டது.அதாவது ஆசிய நாடுகளுக்கு கடுமையான கொள்கை மேலை நாடுகளுக்கு அந்த பிரச்சனை என்றவுடன் கொள்கை மாற்றம். அமெரிக்காவின் டாலர் உலக பொது நாணயமாக இருப்பதால் எவ்வளவு வேண்டுமானாலும் அரசின் செலவினத்தை அதிகரித்து கொள்ளலாம்.எனவே அதிமுக அரசு தற்போது உலக வங்கியிளிருந்து தொடர்ந்து
கடன் பெற கடுமையான முடிவுகளை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்காது.(அதை பயன் படுத்தி கடந்த திமுக அரசு தேவையற்ற இலவசங்கள் மூலம் தமிழகத்தின் பற்றாக்குறையை இமாலய அளவுக்கு ஏற்றி விட்டது வேறொரு சோகமான கதை.)



அடுத்து ஸ்டிராஸ் கான் அரசியலுக்கு வருவோம். ஸ்ட்ராஸ் கான் தற்போது பதவி விலகிய பின் அந்த இடத்தை பிடிக்க போவது யார் என்ற போட்டி உலகளவில் எழுந்து உள்ளது. அந்த இடம் ஐரோப்பியர்க்கு தான் என்று ஐரோப்பிய நாடுகள் வரிந்து கட்டி கொண்டு நிற்கின்றன.( எப்போதும சர்வதேச நிதி அமைப்பின் தலைமை ஐரோப்பியரிடம் தான் இருக்கும்). இப்போது ஐரோப்பியரை அந்த பதவிக்கு கொண்டு வர முக்கிய காரணம் இருக்கிறது. ஐரோப்பிய யூனியனில் பல நாடுகள் தற்போது கடன் பிரச்சனையில் சிக்கி கொண்டு உள்ளன (கிரிஸ்,அயர்லாந்து, போர்ச்சுக்கல் etc). அந்த நாடுகளின் கடன் பிரச்சனையை தீர்க்க சர்வ தேச நிதி நிறுவனத்திடம் கடன் வாங்க வேண்டும். ஆனால் ஐரோப்பிய நாடுகள் ஆசிய நாடுகள் உண்ட கசப்பான மாத்திரைகளை உட்கொள்ளாமலேயே கடனை மற்றும் பெற வேண்டும். அதை திறம்பட நடத்தி காட்ட ஐரோப்பியர் தலைவராக இருக்க வேண்டிய தேவை உள்ளது.

மிக பெரிய பன்னாட்டு வங்கிகளுக்கோ வங்கி துறையில் கட்டுபாடுகளை விதிப்பதை எதிர்ப்பவர் சர்வதேச நிதி இணையத்தின் தலைவராக வர விரும்புவார்கள். அமெரிக்காவை பொறுத்தவரை உலக பொது நாணயமாக டாலரை தொடர்வதை விரும்புபவர் தலைவராக வர விரும்பும். இவை அனைத்திற்கும் ஏற்ற பிரான்ஸ் நிதி அமைச்சர் கிரிஸ்டின் லகார்டிற்கே அந்த நிறுவனத்தின் தலைவராக வாய்ப்பு அதிகம் உள்ளது என்று நினைக்கிறேன்.

--

Tuesday, April 26, 2011

தி.மு.கவின் முதல் தேர்தல் வெற்றி! திராவிட இயக்கத்திற்கு ஒரு பின்னடைவு

தேர்தல் தொகுதி உடன் பாட்டின் போது காங்கிரஸ் கட்சிக்கு தகுதிக்கு மீறி பல சீட்டுகள்

தொகுதி உடன் பாடு பேச்சுவார்த்தையின் போது அடிமையை போல் கை கட்டி நின்ற தி.மு.க தலைமை.

ஆயிர கணக்கான இலங்கை தமிழர்கள் கொலை செய்ய பட்ட போது காங்கிரசுக்கு ஆதரவு.

அதற்கெல்லாம் விடை கிடைப்பது போல் தற்போது 60% பங்கு வைத்திருந்த தயாளு அம்மாளுக்கு குற்றத்திலிருந்து விடுதலை.

அதை விட காமடி, இந்த கேள்வி பதில்

செய்தியாளர்: குற்றப்பத்திரிக்கையில் உங்கள் குடும்பத்தினரின் பெயர்கள் இடம்பெற்றால் காங்கிரஸ் கூட்டணியில் இருந்து தி.மு.க. வெளியேறுமா?

பெண்ணாக இருந்துகொண்டு இதுமாதிரிப் பேசக்கூடாது. பெண் நிருபர் இப்படி இதயத்தை தூக்கி எறிந்துவிட்டு பேசக்கூடாது.


நாட்டு பணத்தை கொள்ளை அடிக்கும் போது ஆண், பெண் வித்தியாசம் கிடையாது. ஊழலில் மாட்டினால் மட்டும் இதயம் இடிந்து விடுமா என்ன?

இலங்கையில் ஆயிர கணக்கான பெண்கள் கொன்று குவிக்கபட்ட போது எங்கே போனது இதயம்?

அப்படி பார்த்தால் ஜெயலலிதாவும் ஒரு பெண் தானே. அவரை கைது செய்த போது தி.மு.கவினரின் இதயம் நொறுங்கி விட்டதா என்ன?

திராவிட இயக்கம் தொடங்க பட்ட லட்சியம் என்ன? இப்போது அது எங்கு நோக்கி சென்று கொண்டு இருக்கிறது?

தொண்டர்களோ கொள்கையை விடுதலை செய்து விட்டு தலைவர்களின் சிறையில் ஆயுள் கைதியாக உள்ளனர்.

மக்களுக்கோ மோசத்தில் கொஞ்சம் மோசத்தை மாறி மாறி தேர்ந்து எடுக்க வேண்டிய கட்டாயம்.

சி.பி.ஐயின் 2G குற்ற பத்திரிக்கை - தேர்தலால் திமுகவிற்கு கிடைத்த மாபெரும் வெற்றி.
திராவிட இயக்கத்திற்கு மாபெரும் பின்னடைவு.

இந்த பின்னடைவால் நீண்ட கால அளவில் பாதிக்க பட போவது , உண்மையிலேயே சமூக மற்றும் பொருளாதார ரீதியாக பிற்படுத்தபட்ட மக்கள் தான்.

--

Tuesday, March 01, 2011

விவசாயம் தொழிலாக தெரியவில்லையா அரசுக்கு?

இன்று பதிரிக்கையில் வந்த செய்தி படி பள்ளிகளில் மற்ற பாடத்தோடு தொழிற்கல்வியும் சொல்லி கொடுக்க போகிறார்களாம். இது நல்ல செய்தி தான். அது பற்றிய செய்தி

//
பள்ளிகளில் வழக்கமான பாடங்களுடன் தொழில் கல்வியையும் கற்றுத் தரும் வகையிலான திட்டம், வரும் மே மாதத்துக்குள் செயல்படுத்தப்படும் என, மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் கபில் சிபல் கூறினார்.



இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது, பள்ளிகளில் வழக்கமான பாடங்களுடன், மாணவர்களுக்கு தொழில் கல்வியையும் கற்றுத் தர திட்டமிடப்பட்டுள்ளது. எட்டாம் வகுப்பில் துவங்கி, 10ம் வகுப்பு வரை, இந்த தொழில் கல்வி கற்றுத் தரப்படும். தச்சு, இசை, ஆட்டோமொபைல் இன்ஜினியரிங், சுற்றுலா, சேவைத் துறை மற்றும் மருத்துவம் சார்ந்த தொழில் உள்ளிட்டவை, இந்த தொழிற்கல்வியில் கற்றுத் தரப்படும்.

இது தொடர்பான பாடத் திட்டங்களை உருவாக்குவது தொடர்பாக, தொலை தொடர்புத்துறை, கட்டுமானம் மற்றும் ஆட்டோமொபைல்ஸ் நிறுவனங்களிடம் ஆலோசனை கேட்டுள்ளோம். வரும் மே மாதத்துக்குள், தேசிய அளவிலான தொழிற்கல்வி பாடத் திட்டம் உருவாக்கப்பட்டு, செயல்படுத்தப்படும். தொழிற்கல்வி படிக்கும் மாணவர்கள், உயர் கல்வியை தொடர முடியாவிட்டாலும், உடனடியாக வேலை வாய்ப்பு கிடைப்பதற்கு, இத்திட்டம் வகை செய்யும் என்றார்
//
நன்றி நக்கீரன்


இந்தியாவில் பாதிக்கும் மேற்பட்ட மக்கள் கிராமத்தில் வாழ்கிறார்கள். எனவே பாதிக்கும் மேற்பட்ட மாணவர்கள் கிராமத்தில் தான் படிக்கிறார்கள். அவர்களில் பலர் பள்ளி படிப்பு முடிந்த பின் விவசாயம் செய்ய செல்கிறார்கள். அது மட்டுமின்றி விவசாயமும் தற்போது நவீன மயமாகி புதிய தொழில் நுட்பத்துடன் நாள் தோறும் புதுமை அடைந்து வருகிறது. முன்பு போல் இல்லாமல் தற்போது விவசாயமும் லாபம் பெரும் தொழிலாக மாறி வருகிறது.

இசை துறையெல்லாம் தொழில் துறையாக தெரியும் அரசுக்கு விவசாயம் தொழில் துறையாக தெரியவில்லை.

விவசாயத்தை தொழிலாக பாவித்து மாணவர்களிடம் நவீன விவசாய தொழில் நுட்ப யுக்திகளை தொழிற் கல்வியில் சொல்லி கொடுத்தால், அதை கற்ற மாணவர்கள் அதை உபயோகித்து விவசாய உற்பத்தியை பெருக்கத்துக்கு உதவுவதுடன் நவீன விவசாய தொழில் நுட்பங்களையும் கிராமத்தில் அறிமுக படுத்துவார்கள்.இதன் மூலம் வருமானமும் அதிகரிக்கும்.

மேலே உள்ள செய்தியை பார்த்தால் விவசாயத்தை மட்டும் ஒதுக்கி மற்ற தொழிற்கல்விகளை பள்ளியில் சொல்லி தருவது போல் உள்ளது. மேலும் அது பற்றி ஆட்டோமொபைல் தொழிற்சாலை மற்றும் தொலை தொடர்பு நிறுவனங்களிடம் ஆலோசனை கேட்ட அரசுக்கு மத்திய வேளாண் நிறுவனத்திடம் ஆலோசனை கேட்க தோன்றவில்லை.

விவசாயத்தை ஒரு தொழிலாக மதித்து, பெருகி வரும் மக்கள் தொகையை சமாளிக்க இந்தியாவின் வேளாண் உற்பத்தியை பெருக்குவதன் அவசியத்தை உண்மையிலேயே உணர்ந்து இருந்தால் அது பற்றி யோசிப்பார்கள்.

இனி வரும் காலங்களில் மக்கள் மக்கள் தொகை வளர்ச்சிக்கு ஏற்ப உணவு உற்பத்தியை பெருக்க முடியாமல் சோத்துக்கு கையேந்தி உலகமெங்கும் இறக்குமதி செய்ய அலைய நேரிடும். அப்போது நம் தேவையை ஏற்றுமதி செய்யும் அளவுக்கு யாரிடமும் உற்பத்தி இருக்காது.

அப்போது புரியும் விவசாயத்தின் அருமை இந்த அரசியல்வாதிகளுக்கு. அப்போதும் அரசியல்வாதிக்கு ஒன்றும் பிரச்ச்னை இல்லை. உணவுக்கு வழியில்லாமல் (பஞ்சம் மற்றும் உணவு பொருள் விலை ஏற்றத்தால் உணவு பொது வினியோகத்துக்கு (ரேசன்) ஏற்பட போகும் பாதிப்பு) அலைய போகும் ஏழை மக்களின் நிலை தான் பரிதாபமாகும்.

--

Monday, February 21, 2011

அமெரிக்காவில் ஒரு தொழிலாளர்கள் புரட்சி!

அரபு நாடுகளில் சர்வாதிகார ஆட்சியாளர்களை எதிர்த்து மக்கள் செய்யும் புரட்சி பற்றி ஊடகங்கள் எங்கிலும் பார்க்கிறோம். ஆனால் அமெரிக்காவில் தொழிலாளர்கள் தங்கள் உரிமை பறி போவதை எதிர்த்து நடக்கும் போராட்டம் பற்றி வெகு சில ஊடகங்களே முக்கியத்துவம் தந்து செய்தி வெளியிடுகிறது.தற்போது விஸ்கான்சின் மாநிலத்தில் அரசு ஊழியர்கள் தொழிற்சங்கங்களின் உரிமையை பறிக்க சட்டம் இயற்ற முடிவு செய்துள்ளனர். அதை எதிர்த்து போராட்டம் தீப்பொறியாக ஆரம்பித்து தற்பொழுது பெரிதாக வெடிக்க தொடங்கி உள்ளது.




சுமார் 75000 அரசு ஊழியர்கள் கலந்து கொண்ட மாபெரும் ஆர்பாட்டம் அங்கு நடைபெற்றது. அமெரிக்காவில் இவ்வளவு ஊழியர்கள் தங்கள் உரிமயை காக்க போராடுவது சமீபத்திய நிகழ்வுகளில் புதுமையானது.இது போன்ற பெரிய அளவிலான மக்கள் போரட்டங்கள் லத்தீன் அமெரிக்க மக்கள் தவிர யாரும் செய்யவில்லை என்பது குறிப்பிட தக்கது. வங்கிகள் அமெரிக்காவில் ஏற்படுத்திய சமீபத்திய பொருளாதார நெருக்கடி காரணமாக பெரும்பாலான மாநிலங்களின் நிதி நிலமை மோசமாக உள்ளது.இதை காரணமாக காட்டி மாநில அரசு ஊழியர்களின் யூனியன் கட்டமைப்பை ஒட்டு மொத்தமாக அழிக்க விஸ்கான்சின் அரசு முயன்று வருகிறது. புதிய சட்ட திட்டத்தின் படி யூனியன் மூலம் அரசு ஊழியர்கள் சம்பள உயர்வு பேச்சு வார்த்தை நடத்துவது, யூனியனுக்கு பணம் வசூலிப்பது போன்ற யூனியன் சம்பந்தபட்ட அனைத்து நடிவடிக்கைகளிலும் நிறைய கட்டுபாடு விதிக்க படும். மொத்தத்தில் அரசு துறையில் தொழிற்சங்கங்களின் நடவடிக்கையை ஒட்டு மொத்தமாக முடக்கிவிட்டு அரசு துறை தொழிலாளர்களின் சலுகைகளை சிறிது சிறிதாக இனி வரும் காலங்களில் பற்றிப்பது தான் இந்த சட்ட திட்டத்தின் நோக்கமாக கருத படுகிறது.

இனி இதன் பின்னனியில் இருக்கும் அரசியல் பற்றி பார்ப்போம். சமீபத்திய பொருளாதார நெருக்கடியால் மக்கள் கோபம் தனியார் வங்கிகளின் மீதும் தனியார் முதலீட்டு நிறுவனங்களின் மீதும் திரும்பி இருந்தது. அந்த கோபத்தை அரசின் மீது திருப்ப தேனீர் விருந்து இயக்கம் குடியரசு கட்சி சார்ந்தவர்களால் தொடங்க பட்டது. அந்த இயக்கத்தினர் வலியுறுத்துவது சிறிய அரசாங்கம், குறைந்த அரசு கடன் மற்றும் குறைவான வரி. ஆனால் அமெரிக்காவின் இந்த நிலைக்கு காரணமான தனியார் வங்கிகள், தனியார் லாபிக்கள் மற்றும் அவர்கள் மூலம் உடைத்து எறியபட்ட அரசின் கட்டுபாடு பற்றி இந்த இயக்கம் வாய் திறப்பது இல்லை.இத்தனைக்கும் அமெரிக்காவில் அடிப்படை பள்ளி கல்வி, அரசு நிர்வாகம், ராணுவம், முதியோர் நலம் போன்றவை மட்டும் அரசின் கையில் உள்ளது. சுகாதாரம், தொழிற் துறை, வங்கிகள் போன்ற அனைத்தும் தனியார் கையில் தான் உள்ளது. ஏனெனில் இந்த இயக்கத்தின் செயல்பாட்டுகளை வழி நடத்துபவர்கள் பலம் வாய்ந்த தனியார் லாபிக்களின் ஆதரவை பெற்றவர்கள்.கடந்த தேர்தலில் இந்த இயக்கத்தினரின் சிலர் வெற்றி பெற்றார்கள். அவர்களுடைய முக்கிய நோக்கமே அரசு பணியாளர்களின் தொழிற்சங்கங்களை அழித்து விட்டு அரசு தொழிலாளர்களின் எண்ணிக்கையையும் குறைத்து அரசு கட்டுபாடற்ற தனியார் தொழிற் துறையை வளர்ப்பது தான் இந்த செயல்களுக்கு ஒரு சில பெரிய தனியார் தொழில் நிறுவனங்கள் ஆதரவு அளிப்பதாகவும் செய்தி உள்ளது.

கடந்த 20 - 30 வருடங்களில் அமெரிக்காவில் தனியார் துறைகளில் தொழிற்சங்கங்களின் அதிகாரங்களும் பல சட்ட திட்டங்கள் மூலம் கட்டு படுத்த பட்டு தனியார் துறைகளில் தொழிற்சங்கங்கள் பெயரளவுக்கு தான் உள்ளது. (அரசு துறை தொழிற்சங்கங்கள் 23% லிருந்து 36% ஆக 1973லிருந்து இன்றுவரை உயர்ந்துள்ளது. ஆனால் தனியார் துறை தொழிற்சங்கமோ 24% லிருந்து 7% ஆக குறைந்துள்ளது.) அமெரிக்க உற்பத்தி துறை சிறிது சிறிதாக அழிந்து மெக்சிகோ மற்றும் சீனா போன்ற நாடுகளுக்கு சென்ற போது கூட அந்த தொழிற்சங்கங்களால் ஒன்றும் செய்ய இயலவில்லை. தற்போது தனியார் தொழிற்துறையில் இருப்பவர்களை பொருத்தவரை தங்களுடைய சம்பளமும் குறைந்து, சலுகைகளும் குறைந்து எதிர்கால வளம் கேள்விக்குள்ளான நிலையில் இருக்கும் போது அரசு துறை ஊழியர்கள் மட்டும் நியாயமான உரிமைகளை தொழிற்சங்கம் மூலம் பெற்று வருவது அவர்களிடம் கோபத்தையே ஏற்படுத்துகிறது.

அடுத்து அரசு துறை தொழிலாளர்களின் நிலையை பார்ப்போம்.அமெரிக்காவில் அரசு துறையில் வேலை செய்வோரின் கல்வி தகுதியும் குறைந்தது இல்லை. அரசு துறை தொழிலாளர்களில் 54% பேர் நான்கு வருட கல்லூரி படிப்பு படித்துள்ளனர். தனியார் துறையில் இது 35% மட்டுமே. ஆனால் கல்லூரி படிப்பு படித்துள்ள அரசு துறை ஊழியர்கள் அதே தகுது உள்ள தனியார் ஊழியர்களை விட 28% குறைவான சம்பளம் பெருகிறார்கள். அவ்வளவு குறைவான சம்பளம் பெற்றும் அங்கே தொடர்ந்து இருப்பதற்கான காரணம் பணி ஓய்வு அடைந்த பின் அவர்களுக்கு கிடைக்க போவதாக நினைத்து கொண்டு இருக்கும் பலன்கள். ஆனால் அரசோ தொழிற்சங்கங்களை அழித்து பின் அவற்றையும் சிறிது சிறிதாக அழிக்க தொடங்கி உள்ளது . அதன் விளைவே மேற்சொன்ன போராட்டம்.

Animal Farm என்ற புத்தகத்தில் George Orwell கம்யூனிசத்தை பற்றி எழுதும் போது All are equal என்பது All are equal but some are more equal than others என்ற நிலைக்கு மாறிவிடும் என்பார்.தற்போது அதே நிலை அமெரிக்காவிலும் வந்துள்ளதாக நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் பால் கிரக்மேன் கூறுகிறார்.

இதோ அவருடைய கூற்றை படியுங்கள்.

In principle, every American citizen has an equal say in our political process. In practice, of course, some of us are more equal than others. Billionaires can field armies of lobbyists; they can finance think tanks that put the desired spin on policy issues; they can funnel cash to politicians with sympathetic views (as the Koch brothers did in the case of Mr. Walker). On paper, we’re a one-person-one-vote nation; in reality, we’re more than a bit of an oligarchy, in which a handful of wealthy people dominate.

உலகம் ஒரு உருண்டை!

நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கையில் இந்த பிரச்ச்னை பற்றி வந்த தலையங்கம்


--

Sunday, February 06, 2011

எகிப்து புரட்சியின் பின்னனியில் சீனா?

எகிப்து புரட்சி பற்றி பலரும் பல விதமாக எழுதுகிறார்கள். அந்த பிரச்ச்னையை முற்றிலும் வேறு கோணத்தில் அனுகிய ஒரு பதிவை பார்த்தேன். அதாவது எகிப்து புரட்சிக்கும் சீனாவுக்கும் இடையே உள்ள தொடர்பு பற்றியது. உலகமயமாதலின் விளைவு தான் எகிப்து புரட்சியின் ஒரு காரணி என்று சொல்கிறார் Friedman. இத்தனைக்கும் இவர் ஒரு Free market ஆதரவாளர்.

சீனாவின் உற்பத்தி பொருட்கள் குரைந்த விலையில் எகிப்து சந்தையில் விற்பனை செய்ய ஆரம்பித்தவுடன், எகிப்தின் தொழிற்துறை நாசமடைந்து வேலை இல்லா திண்டாட்டம் அதிகரித்தது தான் எகிப்து புரட்சிக்கு ஒரு காரணம் என்று கூறுகிறார்.(தற்போது பாரத பிரதமர் சீனாவுடனான வர்த்தகத்தை உயர்த்த கடுமையாக முயன்று வருகிறார். ஏற்கனவே $60 பில்லியனை தாண்டியுள்ள இந்த வர்த்தகத்தால் இந்தியாவுக்கு $20 பில்லியன் நட்டம். அதாவது இந்தியா $20 பில்லியன் மதிப்புள்ள சீனாவின் பொருட்களை ஏற்றுமதியை விட அதிகமாக இறக்குமதி செய்கிறது. )

//But China is a challenge for Egypt and Jordan in other ways. Several years ago, I wrote about Egyptian entrepreneurs who were importing traditional lanterns for Ramadan — with microchips in them that played Egyptian folk songs — from China. When China can make Egyptian Ramadan toys more cheaply and appealingly than low-wage Egyptians, you know there is problem of competitiveness.

//
அதே நேரம் சீனாவின் உணவு மற்றும் energy தேவை அதிகரித்ததால் அனைத்து பொருட்களின் விலை ஏற்றம் எகிப்தில் நடந்ததும் ஒரு காரணம் என்று கூறிகிறார்.இஸ்ரேல் -பாலஸ்தீன பிரச்ச்னை உடனடியாக தீர்க்க படாததும் ஒரு காரணம் என்கிறார்.

அந்த பதிவை முழுவதும் படிக்க இங்கு செல்லவும்

--

Sunday, January 30, 2011

பெடரல் ரிசர்வ் என்பது மத்திய அரசு வங்கியா?

பெரும்பான்மையானோர் பெடரல் ரிசர்வ் என்பது அமெரிக்க மத்திய வங்கி (நம்முடைய ரிசர்வ் வங்கி போல்) என்றும், அது அமெரிக்க அரசு கட்டுபாட்டில் இருப்பதாகவும் அது அமெரிக்கர்களின் நன்மைக்காக செயல்படுவதாகவும் நினைத்து கொண்டு இருப்பார்கள்.
உண்மையில் பெடரல் ரிசர்வ் என்பது உலகளவில் தனியார் வங்கிகளால், தனியார் நலனுக்காக ஆரம்பிக்கபட்டது. உலக பொருளாதாரமே பெடரல் வங்கியை நம்பி இருக்கும் போது, பெடரல் வங்கி தனியார் வங்கிகளின் நலனுக்காக ஆரம்பிக்க பட்ட்து/ நடந்து வருவது என்றால் ஆச்சிரியமாக இருக்கிறதா? அது யாருடைய நலனுக்காக நடக்கிறது என்று அறிய ஆவலாக உள்ளதா?

உண்மையை தெரிந்து கொள்ள இந்த வீடியோவை பாருங்கள். அதை பார்த்து விட்டு அதன் அருகில் இருக்கும் அதனுடன் தொடர்புடைய வீடியோக்களையும் பார்க்க தவறாதீர்கள். அனைத்தையும் பார்த்தால் உலக பொருளாதாரத்தின் அடிப்படை பிரச்சனை புரியும்.

http://video.google.com/videoplay?docid=-515319560256183936#

--

சித்தாந்தமா? சுயலாபமா? தீர்மானிக்க வேண்டிய நேரம்

கம்யூனிசமும் முதலாளித்துவமும் சம அளவில் இருந்த போது உலகளவில் கம்யூனிச நாடுகளை எதிர்த்து போராட மேலை நாடுகளுக்கு ஒரு காரணம் தேவை பட்டது. கம்யூனிசத்தை சர்வாதிகாரம் என்று சொல்லி உலகெங்கிலும் மக்களாட்சியை கொண்டு வருவதையே தங்கள் சித்தாந்தம் என்று கூறி அதற்கான முயற்சியில் ஈடுபட்டனர். கம்யூனிசம் மறையும் வரை அதில் எந்த பிரச்ச்னையும் இல்லை. அதன் பிறகு கூட மேல் நாட்டு வளர்ச்சிக்கு தடையாக இருக்கும் சர்வாதிகார ஆட்சியாளர்களை ஆட்சியிளிருந்து நீக்க அதே சித்தாந்தம் தொடர்ந்தது.

தங்களது வளர்ச்சிக்கு தடையாக இருக்கும் சர்வாதிகார ஆட்சியாளர்களை நீக்க ராணுவமும், சாதகமான சர்வாதிகாரிகளுக்கு அறிக்கையும்( கலைஞர் மத்திய அரசுக்கு கடிதம் அனுப்புவாரே அது போல்!) ஆயுதமானது. சோவியத் யூனியனிலிருந்து பிரிந்த நாடுகளில் மேலை நாடுகளுக்கு ஆதரவனவர்களால் வண்ண புரட்சிகள் நடந்தன.

தனது வளர்ச்சிக்கு சாதகமான சர்வாதிகளை எதிர்த்து மக்கள் மக்களாட்சி கேட்டு போராடினால் என்ன செய்வது. அவ்வாறு போராடுபவர்கள் தேர்தலில் நின்று வெற்றி பெற்று மேலை நாடுகளின் interestகு எதிராக செயல் பட்டால் என்ன செய்வது?

அந்த நிலை தற்போது ஆரம்பித்துள்ளது. ஏற்கனவே வண்ண புரட்சி நடந்த நாடுகளில் மாற்று புரட்சி நடக்க ஆரம்பித்து விட்டது. தற்போது டுனிசியா எகிப்து போன்ற நாடுகளில் நடைபெரும் புரட்சி புதிய மாற்றத்தை நோக்கி கொண்டு செல்கிறது.

ஜார்ஜ் புஷ் இரண்டாம் முறையாக பதவி ஏற்ற போது சொன்னது

"America's vital interests and our deepest beliefs are now one." The claim was that the source of threats to the welfare and security of the wealthy democratic world lay in the unfreedom of the populations of authoritarian countries:"

இனி சித்தாந்தம் முக்கியமா? சுய லாபம் முக்கியமா என அனைத்து நாடுகளும் அறிவிக்க வேண்டிய நாள் வந்துவிட்டது.

--

Saturday, January 29, 2011

ஐ.நா பாதுகாப்பு சபையில் இடம் - இந்தியாவின் கனவு தகர்ந்தது?

கடந்த சில வருடங்களாக ஐ.நா சபை பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்திர உறுப்பினராக பல வகையிலும் இந்தியா முயற்சி செய்வது அனைவரும் அறிந்ததே. தற்போது பாதுகாப்பு சபை நிரந்திர உறுப்பினர் நாட்டின் தலைவர்களை எல்லாம் ஒவ்வொருவராக அழைத்து அந்நாட்டின் பொருளாதாரம் உயர அவர்களிடம் இருந்து ராணுவ தளவாடங்களை வாங்கி குவிக்க, இந்திய அரசாங்கம் ஒப்பந்தம் இடுவது அனைவருக்கும் தெரிந்ததே.

அது மட்டுமன்றி இந்திய தொழில் துறைகளை/ நிதி துறைகளை ஒட்டு மொத்தமாக அழித்து மேலை நாட்டு கம்பெனிகளுக்கு இந்தியாவை தாரை வார்த்தால் தான் இந்தியாவுக்கு ஐ.நா பாதுகாப்பு சபையில் நிரந்திர இடம் கிடைக்கும் என்று கூறி அதற்கான முயற்சியிலும் இறங்கி வருகிறது.

அந்த முயற்சிகளுக்கு எல்லாம் இப்போது பெரிய ஆப்பு விழ போவதாக செய்திகள் வந்துள்ளது. தன் நாட்டு பிரஜைகளை ஒரு குட்டி தீவு நாட்டால் வெளிபடையாக கொன்று குவிக்கும் போது, அதை தடுக்க திரணியற்ற ஒரு நாட்டுக்கு ஐ.நா பாதுகாப்பு சபையில் நிரந்தர இடம் கொடுத்தால் அது ஐ.நா பாதுகாப்பு சபையையே கேலி கூத்தாக்கும் என்று மேலை நாடுகள் நினைப்பதால் இந்த முயற்சிக்கு ஒரு பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.

தன் நாட்டு அப்பாவி மீனவர்களை காக்க திரணியற்ற ஒரு நாட்டுக்கு உலக நாட்டமை பதவி கொடுப்பது பொருத்தமாக இருக்காது என்ற மேலை நாடுகளின் வாதங்களை எதிர் கொள்ள வழி இல்லாமல் இந்திய அரசும் திணறுவதாக தெரிகிறது.

பின் குறிப்பு: இந்த செய்தி உண்மையானால் மட்டுமே மன்மோகன் சிங் இந்திய மீனவர்களை காக்க எதாவது முயற்சி செய்வார்.வட நாட்டு மீடியாக்களும் தமிழர்களின் உயிருக்கு சிறிது மதிப்பு கொடுத்து இந்த பிரச்ச்னை பற்றி மீடியாவில் பெரிய செய்தியாக எழுதும்


--

கோவில் இல்லா மதுரை வீரன்

அரசு திட்டங்களை செயல் படுத்தும் போது அத்திட்டங்களுக்கு செலவிடும் பணத்தை அபகரிக்கும் அதிகாரிகள் பற்றி தினந்தோறும் படிக்கிறோம். ஆனால் மக்களின் வறுமையை போக்கும் ஒரு நீர்பாசன திட்டத்தை தன் மனைவியின் நகைகளை விற்ற பணத்தை கொண்டு கட்டி முடித்த ஒரு அரசு அதிகாரி பற்றி அறிந்து கொள்ள ஆச்ச்ரியமாக உள்ளதா? அதுவும் அந்த அதிகாரி தன் தாய் நாட்டு மக்களுக்காக செய்யாமல் வேறு நாட்டு மக்களுக்காக செய்தார் என்றால் நம்ப முடிகிறதா?

தமிழக கேரள எல்லையில் இருக்கும் பெரியார் அணை பற்றி பெரும்பாலோருக்கு தெரிந்திருக்கும் பழைய மதுரை மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களில் பல பகுதி விவசாய நிலங்களாக ஆனதற்கும் அந்த பகுதியில் உள்ள மக்கள் வறுமையின் பிடியிலிருந்து விடுபட்டதற்கும் இந்த அணை தான் முக்கிய காரணியாக இருக்கிறது.தற்போது கேரள அரசு கடலில் கலக்கும் நீரை தமிழகத்துக்கு தர மறுப்பதால் இந்த அணை பற்றியும் அது சார்ந்த பிரச்ச்னையும் அனைவருக்கும் தெரிந்திருக்கும்.ஆனால் இந்த அணை கட்ட பட்ட வரலாறு பற்றி தெரிந்தால் அனைவரும் ஆச்சரிய பட்டு போவீர்கள்.

ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் பென்னிகுயிக்(John Pennycuick) என்ற அதிகாரி தமிழகத்தின் தண்ணீர் பிரச்ச்னையை எப்படி தீர்ப்பது என்பது குறித்து ஆராய்ந்தார். அப்போது அவரது மனதில் தோன்றிய திட்டம் பெரியாறு அணை திட்டம். கேரளாவில் வீணாக கடலில் கலக்கும் நீரை தமிழகம் நோக்கி திருப்பி விட்டால் தமிழகத்தின் தென் மாவட்டங்களான மதுரை மற்றும் ராமனாதபுரம் ஆகியன பாசன வசதி பெறும் என்பது அவரது திட்டம். ஆனால் தண்ணீரை தமிழகத்தை நோக்கி திருப்பி விட்டால் அது மலையை கடந்து வர வேண்டும். எனவே அந்த திட்டத்திற்கு நிறைய செலவாகும் . எனவே ஆங்கிலேய அரசு அதற்கு ஒத்து கொள்ளவில்லை. ஆனால் பெனின்குயிக்கோ தன் முயற்சியை தளர விடாமல், அந்த திட்டத்தால் பயனடையும் லோக்கல் தொழிலாளர்களை கொண்டு வேலையை குறைந்த செலவில் முடிப்பதாக வாக்குறுதி கொடுத்து அரசிடம் வாதாடி இந்த திட்டத்துக்கான ஒப்புதலை பெற்றார்.

ஆனால் இந்த திட்டம் நடந்து வந்த போது செலவு அதிகமானதால் அரசு இந்த திட்டத்தை பாதியில் கை விட்டு விட்டது. ஆனாலும் மனம் தளராத ஆங்கிலேய அதிகாரி இங்கிலாந்து சென்று தன் மனைவியிடம் இந்த திட்டத்தின் முக்கியத்துவத்தையும் அதனால் பயனடைய போகும் ஏழை மக்களை பற்றியும் எடுத்து கூறினார். அவரது மனைவி தனது நகைகளையும், சில சொத்துக்களையும் விற்று பணமாக தன் கணவரிடம் கொடுத்தார். அந்த பணத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்து, அணை கட்டும் திட்டத்தை தொடர்ந்து வெற்றிகரமாக முடித்தார்.

அவருடைய தியாகம் இன்றைக்கு மதுரை பகுதியை சேர்ந்த பல லட்சம் மக்களை வ்றுமையின் பிடியிலிருந்து மீட்டுள்ளது. அரசு பணத்தை கொள்ளையடிக்கும் அரசியல்வாதிகளுக்கு எத்தனையோ சிலைகளும், நகர்களின் பெயரும் இருந்தாலும், பென்னிகுயிக்கிற்கு மதுரை பொது பணித்துறை அலுவலகத்தில் ஒரு சிலை மட்டுமே உள்ளது.ஒவ்வொரு தமிழனும் தன் வாழ்நாளில் நன்றியுணர்வோடு பார்க்க பட வேண்டியவர் பென்னிகுயிக்.

தமிழக கிரிகெட் ரசிகர்களும் இந்த அதிகாரியிடம் நன்றி கடன் பட்டவர்கள். ஏன் என்கிறீர்களா? இவர் தான் சென்னை சேப்பாக் ஸ்டேடியத்தை முதல் முதலாக கிரிகெட் விளையாட தயார் செய்தவர். இவர் அரசிடமிருந்து கிரிகெட் கிளப்பிற்காக சேப்பாக் ஸ்டேடியத்தின் இடத்தை வாங்கி கிரிகெட் மைதானத்தை உருவாக்கினார்.

இவர் ஒரு கோவில் இல்லாத மதுரை வீரன் கடவுள் தானே?

இன்னொரு பதிவில் நாம் வில்லனாக பார்க்கும் ஒரு ஆங்கிலேய அதிகாரி இந்தியாவிற்காக செய்த தியாகத்தை பற்றி பார்ப்போம்.


--

Thursday, January 27, 2011

திராவிட ஆட்சிகளின் சாதனைகளும் வேதனைகளும்

திராவிட கட்சிகள் ஆட்சிக்கு வந்து 40 வருடங்களுக்கு மேல் ஆகிறது. சினிமா மற்றும் மீடியா போன்ற ஊடகங்களை பொருத்த வரை, கடந்த 40 வருடத்தில் ஒட்டு மொத்த தமிழகமே மாபெரும் வீழ்ச்சியை சந்தித்திருப்பதாக செய்திகளை தொடர்ந்து வெளியிட்டு கொண்டு உள்ளனர். திராவிட கட்சிகளோ தன் எதிர் (திராவிட) கட்சிகளின் தவறை கூறுவதில் முக்கியத்துவம் காட்டுகிறார்கள்.

வாரிசு அரசியல் மற்றும் ஊழல் போன்றவற்றை மட்டுமே கருத்தில் கொள்ளாமல் ஒட்டு மொத்த தமிழகத்தின் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு மற்றும் வீழ்ச்சிக்கு திராவிட ஆட்சியின் பங்களிப்பை பற்றிய் பார்வையை எங்குமே காணுவது அரிதாக உள்ளது. அனைத்து துறைகளிலும் திராவிட ஆட்சி ஏற்படுத்தி உள்ள தாக்கத்தை பற்றி பார்ப்போம்.

மக்களாட்சி

1.காங்கிரஸ் ஆட்சிக்கும் திராவிட ஆட்சிக்கும் இடையில் உள்ள மிக பெரிய வேறுபாடு, அரசியல் அதிகாரத்தில் சாதாரண மக்களின் பங்களிப்பை கொண்டு வந்தது எனலாம். காங்கிரஸ் ஆட்சியில் MLA மற்றும் MPக்கள் மிக பெரிய பணக்காரர்களாகவே இருந்தார்கள்(காமராஜர் மற்றும் கக்கன் போன்ற ஒரு சில விதி விலக்கு இருந்தாலும்). அது மட்டுமன்றி அரசியல் அதிகாரத்தில் இருந்தோரில் பெரும்பாலானோர் ஆதிக்க சாதியை சார்ந்தவர்கள். திராவிட கட்சி ஆட்சியை பிடித்த போது பின் தங்கிய வகுப்பை சேர்ந்தவர்கள் மற்றும் ஏழை/நடுத்தர வகுப்பை சார்ந்தவர்களுக்கு அரசியல் அதிகாரம் கிடைத்தது.அடித்தளத்தில்/ களத்தில் இருப்பவர்களுக்கு அதிகாரம் கிடைத்ததால், அவர்கள் அன்றாடம் பார்க்கும், தங்களை சுற்றி உள்ள மகக்ளின் தேவை சிலவற்றையாவது நிறைவேற்றினார்கள். சாதாரண மக்களுக்கும் அவர்களுக்கும் இடையில் இருக்கும் தொடர்பும் பலமானது. MGR ஆட்சியில் இருக்கும் போது MLAக்கள் சட்டசபை நடக்காத காலத்தில் கட்டாயம் தங்களது தொகுதியில் இருக்க பணித்திருந்தார்.மிக பெரிய மிராசுதாரர்கள் பதவியில் இருந்திருந்தால் அவர்கள் அடிமட்ட மக்களின் தேவையை உணர்ந்து அடிமட்ட கட்டமைப்பு வளர்ச்சிக்கு உதவியிருப்பார்களா எனபது கேள்வி குறியே

2 MGR அட்சி காலத்தில் கிராம அளவில் பட்டாமணியார்களாக இருந்த ஆதிக்க சாதியினரை பதவியில் இருந்து நீக்கி ஆதிக்க சாதியினரின் கட்டுபாட்டை ஓரளவு குறைத்தார். ஆனால் ஒரு சிலர் இதனால் கிராம புறங்களில் மக்களிடமிருந்த கட்டுபாடு குறைந்து விட்டது என்று கூறுவார்கள்.

3.அரசியலில் அடிமட்ட மக்களின் பங்களிப்பு அதிகமானதால், அது சாதி அரசியலுக்கு கொண்டு சென்று விட்டதாக ஒரு குற்றசாட்டு உள்ளது.தற்போது நடக்கும் தேர்தலில் எல்லாம் அந்தந்த் தொகுதியில் இருக்கும் பெரும்பான்மை சாதியினரை நிறுத்தினால் தான் வெற்றி பெற முடியும் என்ற நிலை உள்ளது. இதை ஒரு சிலர் தமிழகம் சாதியத்தை நோக்கி தள்ளபட்டு விட்டதாக பெரும் பாலோனோர் கூறுவார்கள்.ஆனால் பிற மாநிலங்களை பார்த்தால் அங்கு அரசியல் அதிகாரத்தில் ஒரு சில ஆதிக்க சாதியினர் மட்டும் இருப்பது தெரிய வரும்.உதாரணமாக ஆந்திராவில் ரெட்டிகள், நாயுடுக்கள் மற்றும் ஒரு சில ஆதிக சாதியினர் 25 சதத்துக்கு குறைவாக இருந்தாலும் அவர்களின் அரசியல் அதிகாரம் பெரும்பான்மையாக இருக்கிறது.பெரும்பான்மை பிற்படுத்தபட்ட மக்கள் சிறுபான்மை அதிகாரம் மட்டுமே கொண்டுள்ளார்கள்.உண்மையில் இது சாதி ரீதியாக மக்கள் தொகை விகிதாசாரத்திற்கு ஏற்ப பிரதிநித்துவம் கிடைப்பதாக எடுத்து கொள்ளலாம்.ஆனால் அவ்வாறு அதிகாரம் பெறுபவர்கள் உண்மையில் எந்த அளவுக்கு அடிமட்ட மக்களின் வளர்ச்சிக்கு பாடு படுகிறார்கள் என்பது கேள்வி குறி.

4.மேற் சொன்ன கூற்றுகள் எல்லாம் கடந்த சில வருடங்களாக மாறிவிட்டன. தற்போது முன்பு போல் அடிமட்டத்திலிருந்து தலைவர்கள் வருவது நின்றுவிட்டது. வாரிசு அரசியலும், அரசியலை வியாபாரமாக கொள்பவர்களும் தான் அரசியல் தலைவர்களாக வரும் நிலை ஏற்பட்டுள்ளது. உணர்வு ரீதியான தொண்டர்கள் தலைவர்கள் ஆவது சாத்தியமில்லாதது ஆகிவிட்டது. இது திராவிட கட்சிகளுக்கு மிக பெரிய பின்னடைவு அல்லது அழிவின் ஆரம்பம் என்று கூட கூறலாம். இதன் விளைவாக திராவிட கட்சிகளுக்கும் பிற கட்சிகளுக்கும் இருந்த வேறுபாடு குறைந்து விட்டது.

சமூகநீதி

1. திராவிட ஆட்சியின் முக்கிய சாதனையாக கருதபடுவது சமூக நீதியை நிலைநாட்ட எடுக்கும் முயற்சி. இட ஒதுக்கீடு என்பது நீதி கட்சி காலத்தில் அறிமுகபடுத்த பட்டாலும் திராவிட ஆட்சிகாலத்தில் அது முழுமையாக கடை பிடிக்க பட்டு சமூகத்தின் அனைத்து பிரிவு மக்களும் முன்னேற வழி வகுத்தனர் என்றால் மிகையாகாது. (காமராஜர் காலத்தில் இந்த முயற்சி பலவிதமாக நடை முறைபடுத்தபட்டது. உதாரணமாக கிண்டி பொறியியல் கல்லூரி போன்ற உயர் கல்வி நிறுவனங்களில் G.R. தாமோதரன், ராஜகோபால், முத்தையன் போன்ற பிராமணரல்லாதவர்களை கொண்டு நேர்முக தேர்வு நடத்த பணித்தார்.).இட ஒதுக்கீடு ஆரம்ப காலத்திலே நடைமுறை படுத்த பட்டதால் ஒவ்வொரு கிராமத்திலும் முதல் தலைமுறையில் வேலைக்கு போவோரை கண்டு சுற்று புறத்தில் இருப்பவர்களும் படிக்க ஆவல் காட்டியதால், அனைத்து தரப்பினரும் பரவலாக முன்னேற வாய்ப்பு கிடைத்தது.

2.உண்மையில் சொல்ல போனால் அரசு வேலை வாய்ப்புகளில் இட ஒதுக்கீடு வந்ததன் மூலம் முன்னேறிய வகுப்பினரின் வளர்ச்சியும் அதிகமானது எனலாம்.முன்னேறிய வகுப்பினரின் போட்டியிடும் தன்மை அதிகமானது.அரசு வேலை வாய்ப்பு கிடைக்காததால் தனியார் துறையில் வேலைக்கு சென்ற முதல் தலைமுறையினரின் குழைந்தைகளுக்கு விழிப்புணர்வும், உலகளாவிய நோக்கும் அதிகமானது.

3.பெண்களுக்கான அரசியல் மற்றும் வேலை வாய்ப்பு ஒதுக்கீடு பெண்களின் மேம்பாடுக்கு பெருமளவு உதவியது என கூறலாம்.

4.தற்போது முதல் தலைமுறையில் இட ஒதுக்கீடை அனுபவித்தவர்களால் அதன் பயன் தேவையானவர்களை சென்றடைவது முற்றிலுமாக தடை பட்டுவிட்டது. அரசியல்வாதிகளுக்கும் பாமர ஓட்டு வங்கி தேவை என்பதால் உணமையில் உதவி தேவை படுவர்களுக்கு உதவ எந்த முயற்சியும் எடுக்க படுவது இல்லை. இந்த நிலை தொடர்ந்தால் ஒடுக்க பட்ட மக்கள் நக்சல்பாரி இயக்கம் நோக்கி செல்ல வாய்ப்பு அதிகம் உள்ளது. இது பற்றி தற்போதைய திராவிட ஆட்சியாளர்கள் கவனம் செலுத்தாமல் இருப்பது பிற்காலத்தில் தமிழகத்தை பேரழிவுக்கு இட்டு செல்லும்.(M.G.R ஆட்சி காலத்தில் இதை தடுக்க முயற்சி எடுத்தாலும் கடுமையான எதிர்ப்பினால் அவர் கை விட்டு விட்டார்.)

5.கிராமபுற மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு கொடுக்க கருணாநிதி ஆட்சி காலத்தில் முயற்சி எடுத்தாலும் அது நீதி மன்றத்தால் தடைசெய்ய பட்டது வருத்தமான செய்தி

6.M.G.R காலத்து மருத்துவ மற்றும் பொறியியல் கல்லூரி சேர்க்கைக்கான நேர்முக தேர்வு தடை, கருணாநிதி காலத்து நுழைவு தேர்வு தடை போன்றவை அனைவருக்கும் உயர் கல்வி கிடைக்க வாய்ப்பளித்தது எனலாம்.

7.இட ஒதுக்கீடு காரணமாக தரம் குறைகிறது என்பது ஒரு சிலரின் குற்றசாட்டு. ஆனால் தற்போது பொறியியல் கல்லூரி சேர்க்கைக்கான மார்க்கை ஒவ்வொரு பிரிவிலும் பார்த்தால் பெரிய அளவில் தரம் இல்லாதவர்களுக்கு சீட்டு கிடைப்பதாக தெரியவில்லை.அதிக மார்க் எடுத்த முன்னேறிய பிரிவினருக்கு முக்கிய கல்லூரிகளில் இடம் கிடைப்பது கடினம் என்பதும் உண்மை)


கல்வி

1.காமராஜர் கிராம புற கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்தார். ஆனால் திரவிட கட்சிகள் அரசு பள்ளிகளை மிக அதிக அளவில் அனைத்து கிராமங்களிலும் திறந்து ஒரு அறிவு புரட்சி ஏற்படுத்தினார்கள் என்றால் அது மிகையாகது.

2.கிராம பள்ளிகளின் தரம் மிகவும் கவலை கூறியதாக இருக்கிறது. அதை உயர்த்த திராவிட ஆட்சிகள் எடுக்கும் முயற்சி மிக குறைவே.

3.அரசு பொறியல் கல்லூரிகள் மற்றும் மருத்துவ கல்லூரிகள் பலவற்றை தற்போதைய தி.மு.க அரசு திறப்பது மிகவும் பாராட்டுக்கு உரியது. தமிழகத்தில் தான் இது போன்ற அரசு உயர் கல்லூரிகள் அதிகம் உள்ளது என்பது குறிபிடதக்கது.

4.தமிழகத்தின் இட ஒதுக்கீட்டின் பயானால் படித்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்ததால், தனியார் கல்லூரிகள் அதிகம் எம்.ஜி.ஆர் காலத்தில் தொடங்க பட்டு தற்போது ஊருக்கு பல கல்லூரிகள் திறக்க பட்டுள்ளன. கல்வி பெருமளவு வணிகமயமாக்க பட்டுள்ளது என்ற நிலை ஏற்பட்டாலும், பணம் இருந்து படிக்க விரும்புவர்கள் தாங்கள் படிக்க விரும்புவதை படிக்க வாய்ப்பு கிடைக்கிறது. அதே சமயம் அரசு கல்லூரிகளும் பல திறக்கபட்டுள்ளதை கணக்கில் கொள்ள வேண்டும்

5.எம்ஜிஆரின் சத்துணவு திட்டம் கிராம கல்வி வளர்ச்சியில் ஒரு புரட்சியையே ஏற்படுத்தி உள்ளது. ஐக்கிய நாடுகள் சபை கூட இதை மாதிரி திட்டமாக அறிவித்துள்ளது.

6.பள்ளி மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ், இலவச சைக்கிள், புத்தகம், முட்டை என பல திட்டங்கள் நல்ல விளைவையே ஏற்படுத்து உள்ளன.தமிழகத்தில் அனைத்து குழைந்தைகளும் தற்போது பள்ளியில் சேர்க்க படுகிறார்கள் எனபது குறிப்பிட தக்கது.

போக்குவரத்து

1.தி.மு.க ஆட்சி காலத்தில் தனியார் பஸ்களை அரசுடமை ஆக்கியதன் விளைவாக கிராமங்களுக்கும் அனைத்து பகுதிகளுக்கும் பஸ் வசதி கிடைத்தது(இதற்கு முக்கிய காரணம் அந்த காலத்தில் தனியார் பஸ் உரிமையாளர்களில் பெரும்பான்மையானோர் காங்கிரஸ்காரர்கள் தான். உதாரணம் - TVS, பொள்ளாச்சி மகாலிங்கம், காசி ராமன்,சிம்சன்,சக்திவிலாஸ் etc).மற்ற மாநிலங்களை ஒப்பிட்டு பார்க்கும் போது தமிழகம் பஸ் வசதியில் எவ்வளவோ முன்னேறி உள்ளது.

2.போக்குவரத்து கழகங்களை ஒவ்வொரு பகுத்திக்கும் ஒரு கார்ப்பரேசனாக பிரித்து இருப்பதால் தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் போக்குவரத்து வசதி ஓரளவு சீராக வளர்ச்சி அடைந்து உள்ளது.

3..தி.மு.க ஆட்சி காலத்தில் கிராமபுறங்களில் அறிமுக படுத்திய மினி பஸ் திட்டம் கிராம மக்களுக்கு ஒரு வர பிரசாதம்.

4.திராவிட கட்சிகள் மத்திய அரசிடம் அழுத்தம் கொடுக்காததால் தமிழகத்தில் ரயில்வே துறை மிகவும் பின் தங்கியுள்ளது குறிப்பிட தக்கது.இது தமிழகத்துக்கு மிக பெரிய இழப்பு ஆகும்.

முக்கியமான அனைத்து துறைகளிலும் ஏற்பட்டுள்ள சாதக பாதக அம்சங்களை இனி வரும் பதிவுகளில் பார்ப்போம். அதே போல் இந்திய அளவிலான மாநிலங்களுக்கு இடையேயான வளர்ச்சி குறியீடுகளின் (Human Development Index,GDP,Industrialization, Agriculture growth rate etc) மாநிலங்களுக்கு இடையேயான ஒப்பீடுகளையும் பார்ப்போம்..

மேலே உள்ள தலைப்புகளில் விடுபட்ட சாதக/பாதக அம்சங்களை பின்னூட்டத்தில் இட்டால் நன்றாக இருக்கும்.

--

தமிழக மீனவர்களின் ரத்தக்கண்ணீர்

இலங்கை ராணுவத்தினரின் ரத்தவெறிக்கு தமிழக மீனவரகளின் பலி தொடர் கதையாகிறது. தமிழக மீனவர்கள் உண்மையில் இந்தியாவை சேர்ந்தவர்கள் என்ற உண்மையை இந்திய அரசு மறந்து விட்டது. பிரான்சு நாட்டில் தன் இனத்தவர்கள் தலை பாகை அணிய தடை விதிக்க பட்டதை கண்டு பொங்கி எழுந்த நமது பாரத பிரதமர், பிரான்சு ஜனாதிபதியிடம் அதை முக்கிய பிரச்ச்னையாக பேசி, தீர்வை காண முயன்றார். ஆனால் இன்று இந்தியாவை சேர்ந்த மீனவர்கள் அன்னிய நாட்டு ராணுவத்தால் படுகொலை செய்ய படுவதை தடுக்க நடவடிக்கை எதுவும் எடுக்க நினைக்க கூடவில்லை.

மத்திய அரசு மந்திரி பதவியில் இருக்கும் தமிழக அமைச்சர்கள் தமிழர்களின் பிரச்சனைக்கு தீர்வ காண நினைப்பதையே பாவமாக கருதுகிறார்கள்.தன் மீதான ஊழல் வழக்கை தள்ளுபடி செய்யவும், தன் குடும்பத்தினருக்கு பதவி வாங்கவும் வித விதமான சத்தியாகிரக போராட்டங்களை நடத்தும் தமிழக அரசியல்வாதிகள் நம் மக்கள் மாண்டு வீழவதை பற்றி கவலை கொள்வதே இல்லை.

இதற்கு தீர்வு தான் என்ன. அரசியல்வாதிகளிடம் ரத்தக்கண்ணீர் விட்டால் தீர்வு கிடைக்காது. மீனவர்கள் தங்கள் சாதி மத வேறுபாடுகளை தூக்கி எறிந்து விட்டு ஒன்று சேர்ந்து தங்கள் பலத்தை தேர்தலில் காட்ட வேண்டும். ஒரு 50 தொகுதியிலாவது தாங்கள் ஒற்றுமையின் மூலம் தேர்தல் முடிவுகளை நிர்ணயிக்க முடியும் என்று நிருபித்தால் தான் நீங்கள் சொல்வதை நாளை யாரும் கேட்பார்கள். ஆளும் கட்சியை எதிர்த்து வாக்களித்தால் பிரச்சனை தீரும் என்று சொல்ல வில்லை. ஆனால் தேர்தல் முடிவுகளையும் ஆட்சியாளர்களையும் முடிவு செய்யும் வலிமை உங்களுக்கு இருக்கிறது என்று நீங்கள் நிருபிக்க வேண்டும். இதற்கு தேவை உங்கள் ஒற்றுமை.

ஏனென்றால் ஆட்சியாளர்கள் காதுக்கு கேட்பது இரண்டு ஓசைகள் மட்டும். ஒன்று நோட்டு. மற்றொன்று ஓட்டு.

மீனவர்கள் பிரச்சனை பற்றி எழுத வேண்டுகோள் விடுத்த பதிவர் செந்தழல் ரவிக்கு நன்றி

--

Wednesday, January 26, 2011

என் முதல் காதல் தோல்வி

பெரும்பான்மையோருக்கு முதல் காதல் தோன்றுவது கல்லூரியில் தான். எனக்கும் கல்லூரியில் தான் முதல் காதல் தோன்றியது. பொதுவாக கண்டதும் காதல் வருவது இயல்பு. எனக்கும் கண்டதும் காதல் தோன்றியது. ஆனால் என் காதல் சற்றே வித்தியாசமானது.கல்லூரியில் முதலாமாண்டு இரண்டாவது செமெஸ்டர் ஆரம்பித்தவுடன் தான் என் காதலி எனக்கு முதன் முதலில் அறிமுகமானால். அந்த காதலியை அறிமுக படுத்தியது பல்கலை கழக பேராசிரியர் தான். என்ன ஆச்சிரியமாக உள்ளதா? உண்மையில் அவர் எனக்கு என் காதலியை அறிமுக படுத்திய விதம் தான் காதல் தோன்ற முக்கிய காரணம் எனலாம். என் பேராசிரியர் எனக்கு அறிமுகபடுத்திய காதலியின் பெயர் மைக்ரோபயாலஜி. ஆம் மைக்ரோபயாலஜி பாடம் தான் என் முதல் காதலி .

நான் படித்தது விவசாய கல்லூரியில். அங்கு பெரும்பாலான பாடங்கள் உழவியல் மற்றும் களப்பணி சம்பந்தமாக இருக்கும். அங்கு படிக்கும் பாடங்களிளேயே அந்த காலத்தில் மிகவும் மாடர்னாக இருந்தது மைக்ரோபயாலாஜி. அது மட்டுமன்றி இந்தியாவிலேயே முதன் முதலில் மைக்ரோபயாலஜி தொடங்க பட்ட கல்லூரி எங்கள் கல்லூரி தான். மத்திய அரசு மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களிடமிருந்து பல லட்சம் பெருமான பிராஜெக்ட்கள் அங்கு நடந்து கொண்டு இருந்ததால் பல நவீன ஆராய்ச்சி உபகரணங்கள் அங்கு இருந்தன. பல தரபட்ட நவீன ஆராய்ச்சி செய்ய கூடிய வாய்ப்பு இருந்தது. அதெல்லாம் தான் எனக்கு ஈர்ப்பு ஏற்பட காரணம் என கூறலாம்.

மற்றவர்களுக்கெல்லாம் காதல் பார்க்கிலும் பீச்சிலும் வளரும். எனக்கு காதல் லைப்ரரியிலும், மைக்ரோ பயாலஜி ஆராய்ச்சி கூடங்களிலும் வளர்ந்தது. லைப்ரரியில் மேலை நாடுகளிலிருந்து வரும் சயின்ஸ்,நேச்சர் போன்ற பத்திரிக்கைகளில் வரும் துறை சார்ந்த ஆராய்ச்சியை படித்து மைக்ரோபயாலஜி மேல் வரும் காதல் அதிகமானது. என் அண்ணணை பார்க்க சென்னை சென்ற போது ஹிக்கின் பாதம்ஸில் பல கலர் கலரான படம் கொண்ட வெளி நாட்டு புத்தகங்களை அள்ளி கொண்டு சென்றேன். அந்த புத்தகங்களை படித்த போது என் காதலியின் அடி மனதை( foundation/basics) புரிந்து கொண்டேன்.

மற்ற காதலர்கள் எல்லாம் கிளப்களில் காதலியோடு நேரம் செலவு செய்த போது நான் மாணவர்களுடன் மைக்ரோபயாலஜி கிளப் ஆரம்பித்து சிறிய ஆராய்ச்சிகளை(?) செய்து நேரம் கழித்தேன்.மற்ற காதலர்கள் கனவுலகில் பூம்புகாருக்கும், ஸ்விட்சர்லாந்துக்கும் செல்லும் போது, நான் கனவுலகில் MIT மற்றும் UC-Berkley பல்கலை கழகத்தில் அராய்ச்சியாளனாகவும், நோபல் பரிசு பெற காதலியுடன் ஆராய்ச்சி செய்வதாகவும் கனவை கழித்தேன்.காதலின் ஆழத்தின் அடையாளம் கல்லூரி படிப்பில் கவர்னரிடமிருந்து கிடைத்த அவார்டின் மூலம் வெளிபட்டது.

இளங்களை விவசாயம் படித்து முடித்த பின் ஸ்டெர்லிங் டிரீ மேக்னம் நிறுவனத்தில் கருத்தம்மா மண்ணில் கிடைத்த வேலையை 5 மதங்களில் உதறி விட்டு காதலியை தேடி முதுகலை படிக்க வந்தேன்.

முது கலை படிப்பின் போதும் என் காதல் தொடர்ந்தது. நான் செய்ய நினைத்த ஆய்வுகளை இந்தியாவில் செய்வது மிகவும் கடினம் என்பதை அப்போது தான் உணர்ந்தேன். ஆனாலும் பாடத்தின் மீது இருந்த காதலின் ஆர்வம் மட்டுமே குறையவில்லை.காதலர்களுக்கு எப்போதாவது கிடைக்கும் அறிய வாய்ப்பை தவற விட்டால் காதலில் வெற்றி பெருவது கடினம். GRE எழுதி மேலை நாடுகளில் மேற்படிப்புக்கு சென்றிறுந்தால் காதல் வெற்றி பெற வாய்ப்பிருந்திருக்கும். அந்த வாய்ப்பை தவற விட்டது என் காதல் தோல்விக்கான முக்கிய காரணமானது.

அனைவருக்கும் காதலுக்கான எதிர்ப்பு சமூகத்தில் இருந்து தான் வரும். எனக்கும் எதிர்ப்பு சமூகத்திலிருந்து தான் வந்தது.என்னத்தான் படித்து கல்லுரியில் முதல் மதிப்பெண் வாங்கினாலும் ஒவ்வொருவரின் தகுதியும் அவர்கள் வாங்கும் சம்பளத்தின் மூலம் மட்டும் தான் இந்த சமூகத்தில் எடை போட படுகிறது.என்னுடைய ஆராய்ச்சி கட்டுரை பற்றி ஹிந்து பத்திரிக்கையில் வந்த செய்தி பற்றி வெளியில் கூறினால் கிடைத்த பதில், இப்ப கல்லுரி முடித்த உறவினர்கள் எல்லாம் சாப்ட்வேரில் 30000 ரூபாய் சம்பளம் வாங்குகிறார்கள். நீ இவ்ளோ மார்க் வாங்கியும் நல்ல சம்பளத்துடன் வேலை கிடைக்கவில்லையா என்பது.

கல்லூரியில் வாங்கிய பதக்கங்களும், அறிவும் தனியார் கம்பெனியின் வாட்ச்மேனை தாண்டி HR Department கூட சென்றடையவில்லை. Resumeகள் வாட்மேனின் குப்பைதொட்டியில் தான் விழுந்தது.1990களில் கல்லூரி படிப்பை முடித்தவர்கள் பெரும் பாலானோருக்கு வேலையின்மையின் வலி நன்கு தெரிந்து இருக்கும்.அப்போது எல்லாம் எம்ப்ளாய்மெண்ட் நியூஸ் வரும் நாள் தான் தீபாவளி. அதில் எதாவது ஒரு மூலையில் வேலை வாய்ப்பு எதுவும் வருமா என்று ஆவலுடன் தேடும் நாட்கள் இனியவை. பல கனவுடன் பணம் செலவு செய்து ரெசியூம் xerox எடுத்து கவரிங் லட்டர் அடித்து கவர் வாங்கி போஸ்ட் செய்ய செலவு செய்தது தான் மிச்சம்.அப்போது எல்லாம் வருடத்தில் ஓரிரு முறை வேலை வாய்ப்பை கொடுப்பது வங்கிகள் தான்.வங்கிகளுக்கான தேர்வில் பல லட்சம் பேருடன் போட்டியிட்டு நேர்முக தேர்வுக்கு செலக்ட் ஆனாலும் அங்கு நடக்கும் முறைகேடுகளை தாண்டி வேலை கிடைப்பது கடினமே

காதலின் மோகத்தால் ஆராய்ச்சி செய்ய வேளாண் பல்கலைகழகத்தில் சேர்ந்தேன்.ஆனால் பெரும்பாலான ஆராய்ச்சிகள் 1970களில் நடக்க வேண்டியவையே அப்போதும் அங்கு நடந்து கொண்டிருந்தது. நவீன ஆராய்ச்சிக்கும் தற்போது நடக்கும் ஆராய்ச்சிகளுக்கும் இடைவேளி வெகு தொலைவு. அது மட்டுமன்றி ஆராய்ச்சிக்கான தலைப்பும், ஆராய்ச்சிக்கான கைடும் தேர்வு செய்யும் உரிமை ஆராய்ச்சி மாணவர்களுக்கு இல்லை.பெரும்பாலான ஆராய்ச்சிகளின் முடிவை தலைப்பை பெற்றதுமே முடிவை கணித்து புள்ளியியல்(statistics) அறிவு மூலம் தலைப்பு கிடைத்தவுடனேயே thesis எழுத ஆரம்பித்து விடலாம்.இதெல்லாம் எனக்கு ஒரு சிறு ஊடலை ஏற்படுத்தினாலும் சமூக அழுத்தங்கள் தான் காதலின் முக்கிய எதிரியாக இருந்தது.

அப்பொழுது எல்லாம டெல்லி வேளாண் மையத்தில் ஆராய்ச்சி நிதி உதவி செய்ய பரிச்சை எழுதினால் முடிவு தெரிய ஒரு வருடம் ஆகும்.உண்மையில் ஆராய்ச்சி மாணவர்களின் நிலை இந்தியாவில் பரிதாபமானது. உண்மையிலேயே அறிவியலில் ஆர்வம் இருந்து மிகவும் பிரகாசமான மாணவர்கள் இந்தியாவில் ஆராய்ச்சி படிப்பை தொடங்க விரும்பினால் நிலமை மிகவும் மோசம். ஆராய்ச்சி படிப்பு வரை முடிக்க கல்லூரி படிப்பை சேர்த்து சுமார் 10 - 15 வருடங்கள் ஆகும். இங்கு இருக்கும் கைடுகளுடன் சண்டை போட்டு நல்ல தலைப்பை வாங்கி, பல்கலை கழகத்தில் இருக்கும் மோசமான infrastructure கொண்டு ஆராய்ச்சியை முடிப்பதற்குள் போதும் போதும் என்று ஆகி விடும்.ஆராய்ச்சியை முடித்தாலும் நல்ல வேலை கிடைப்பது என்பது குதிரை கொம்பு.(தற்போது ஓரளவுக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கிறது என்று கேள்வி பட்டேன்).

மேலை நாடுகளில் இந்தியாவை போல் சம்பளம் மட்டும் அளவு கோலாக பார்க்க படுவதில்லை. ஆனால் இந்தியாவிலோ ஆராய்ச்சி பேப்பரை நேச்சர் ஜேர்னலில் போட்டால் கூட அதை ஒரு பொருட்டாக கருத மாட்டார்கள். அவர்கள வாங்கும் சம்பளம் மட்டும் தான் அளவுகோல்.
சமூக அவலத்தை தட்டி கேட்கும் நக்சலைட்டாக இருப்பவர்கள் சமூக அளவீடுகள் அனைத்தையும் தூக்கி எறிந்து தன் லட்சியம் மட்டும் குறிக்கோளாக கொண்டு வேறு எந்த சிந்தனையும் இல்லாமல் இருப்பார்கள். அதே பொன்ற மன நிலைதான் ஒரு ஆராய்ச்சி மாணவருக்கும் இருக்க வேண்டும்
. அந்த அளவு உறுதியான மனநிலை எனக்கு இல்லாமல் போனது என் துரததிர்ஷ்டம்.சிறுவர்களாய் பார்த்த உறவினர்கள் எல்லாம் கல்லூரி முடித்தவுடன் சாப்ட்வேரில் நல்ல சம்பளத்தில் வேலைக்கு போகும் போது வேலைக்கு போகாமல் ஆராய்ச்சியை விருப்பமாக செய்து கொண்டு இருப்பது சமூக அளவில் ஒரு குற்ற உணர்வையே ஏற்படுத்தியது.

கடுமையான மன அழுத்தத்திற்கு பின் காதலியை (தற்காலிகமாக?) பிரிந்து மென்பொருள் துறைக்கு சென்று பின் Bioinformatics துறைக்கு சென்று காதலியுடன் சேரலாம் என்ற முடிவை எடுத்தேன்.விவசாயமும் வேளாண் நுண்ணியிரியலும் என் மனதுக்கு பிடித்தமான பாடமாக இருந்தாலும் 8 வருட தொடர்பை ஒரு நாளில் அறுத்து விட்டு மென்பொருள் துறைக்கு நுழைய முதலில் டைப் ரைட்டிங் கிளாசில் வந்து சேர்ந்தேன். மென்பொருள் துறையில் ஒரு நல்ல நிலைக்கு தற்போது வந்தாலும் என்றுமே மனதின் அடிமட்டத்தில் விவசாயம் மற்றும் நுண்ணியிரியல் மீது உள்ள காதலின் தோல்வி வாட்டத்தை கொடுத்து கொண்டு தான் உள்ளது.

சில மாதத்துக்கு முன் இந்தியாவில் உள்ள முக்கிய NGO வில் உயர் பதவியில் இருக்கும் என் நண்பனிடம் பேசும் போது, விவசாய நாடான இந்தியாவில் , எத்தனையோ கணிபொறியாளர்கள் தோன்றினாலும், விவசாயத்துக்கு உதவும் வகையில் உள்ள மென்பொருட்கள் மிகவும் குறைவாகவே உள்ளது என்பது பற்றி பேசி கொண்டிருந்தேன். அதற்கு அவன் எனக்கு விவசாயத்தில் எந்த இடத்தில் மென் பொருள் தேவை என்று தெரியும். உனக்கு மென்பொருள் தெரியும். நாம் ஏன் தீர்வை நோக்கி சிந்திக்காமல் பிரச்ச்னையை பற்றி பேச வேண்டும் என்றான். சரி விவசாயம் சம்பந்தான மென்பொருள் செய்யலாமே என்று பேச ஆரம்பித்தோம். என் இரண்டாவது காதல் தொடங்கியது.(நேரமின்மை, பிற பொறுப்புகள் மற்றும் சோம்பேரி தனத்தை காரணம் கொண்டு இந்த காதலும் தோற்றுவிட கூடாது).

பிற கல்லூரி சம்பந்தமான பதிவுகள்

அண்ணாமலை பல்கலை நினைவுகள்- சண்முகம் கடை பஜ்ஜி

கல்லூரி நினைவுகள் 2 - தேர்வு திருவிழா


--

தீர்வை தேடும் அமெரிக்கா! பிரச்சனையை தேடும் இந்தியா?

சமீபத்தைய பொருளாதார நெருக்கடியால் அமெரிக்காவின் வேலை இழந்தோர் எண்ணிக்கை மிக அதிகமாகி இரட்டை இலக்கத்தை நெருங்குகிறது. அரசின் எந்த நடவடிக்கையும் வேலை வாய்ப்பை பெருக்க முடியவில்லை. வேலை வாய்ப்பை பெருக்க அமெரிக்கா முன் இரண்டு வழிமுறைகள் இருப்பதாக பொருளாதார வல்லுனர்கள் கணிக்கின்றனர். ஒன்று கீனிசியன் (Keynesian)பொருளாதார முறைப்படி அரசின் செலவீனங்களை அதிகரிக்க வேண்டும். அதாவது அரசு உள் கட்டமைப்பு வளர்ச்சிக்கு என்ற பெயரில் ரோடுகள் போடுவது, பாலம் அமைப்பது, அரசு அலுவலங்களில் மரபு சாரா சக்தி முறைப்படி அனைத்து மின் பொருட்களையும் மாற்றி அமைப்பது போன்ற செயல்களை செய்வதன் மூலம் வேலை வாய்ப்பை பெருக்குவது. ஆனால் இது அமெரிக்காவின் முதலாளித்துவ சித்தாந்தத்திற்கு எதிரானது. மேலும் அரசு வேலை செய்ய ஒதுக்கும் நிதி, அதற்கான வேலையை சென்றடையும் போது பாதி கரைந்து போயிருக்கும் என்று கருதபடுகிறது.ஆனாலும் ஒபாமா பெரிய தொகையை அரசு செலவினத்துக்கு ஒதுக்கியும் வேலை வாய்ப்பை உயர்த்த முடியவில்லை.

அமெரிக்க அரசுக்கு அடுத்து இருக்கும் வழிமுறை தனியார் துறைகளில் வேலை வாய்ப்பை அதிகபடுத்த முயற்சி செய்வது. முதலாளித்துவ நாடான அமெரிக்காவிற்கு இது சிறந்த வழிமுறை.தனியார் துறையில் வேலை வாய்ப்பை பெருக்க தனியார் நிறுவனங்களுக்கு பெருமளவு கடன் வசதி போய் சேர வேண்டும். தற்போதைய பொருளாதார வீழ்ச்சியால் பண புழக்கம் குறைவானதால் கம்பெனிகளின் பண தேவையை பூர்த்தி செய்வதும் கடினமானது.தனியார் துறைக்கு கடன் வங்கிகள் மூலமாக தான் வர வேண்டும். அங்கு தான் பிரச்ச்னையே ஆரம்பிக்கறது!. நாட்டின் வேலை வாய்ப்பை பெருக்க சிறிய மற்றும் நடுத்தர கம்பெனிகளின் வளர்ச்சியால் தான் முடியும் என்பதை அனுபவபூர்வமாக உணர்ந்துள்ளது அமெரிக்கா. மிக பெரிய பன்னாட்டு கம்பெனிகளின் வளர்ச்சியின் மூலம் மிக பெரிய அளவில் வேலை வாய்ப்பை உருவாக்க முடியாது. அது மட்டுமன்றி பன்னாட்டு கம்பெனிகள் வேலையை குறைவான சம்பளம் உள்ள நாடுகளுக்கு அனுப்பி, லாபத்தை அதிகரித்து வளர்ச்சியை அதிகரிப்பது வழக்கம்.

தற்போது அமெரிக்காவின் முக்கிய பிரச்ச்னையாக இருப்பது அமெரிக்க வங்கி துறைதான்.

1.அமெரிக்க வங்கி துறையில் பெரும்பான்மையான விழுக்காடு விரல் விட்டு எண்ண கூடிய மிக பெரிய வங்கிகளின் கையில் உள்ளது.அந்த வங்கிகளின் வளர்ச்சி மிக பெரியதாக இருப்பதால் எதாவது ஒரு வங்கி வீழ்ந்தாலும் அதன் விளைவு அமெரிக்க பொருளாதாரம் மட்டுமின்றி உலக பொருளாதாரத்தையே பாதிக்க கூடியதாக உள்ளது. வங்கிகள் அதிக லாபம் பெற அளவுக்கு அதிகமான அபாயகரமான வழிமுறைகளை கையாள ஆரம்பித்தன. தங்களின் அபாயகரமான முதலீட்டினால் நட்டம் அடையும் போது அரசை மிரட்டி(too big to fail) பணம் வாங்கி தங்களை காத்து கொள்ள ஆரம்பித்தது.

2. பெடரல் வங்கி தற்போது கிட்ட திட்ட வட்டியில்லா கடனாக வங்கிகளுக்கு பணத்தை அள்ளி இறைக்கிறது. அது மட்டுமின்றி தற்போது பெரும்பான்மை மதிப்பிழந்த வீட்டு கடன் பத்திரங்களை அதிக விலை கொடுத்து வங்கிகளிடமிருந்து வாங்குகிறது.இதற்காக செலவிடபட்டுள்ள( அச்சடிக்க பட்டுள்ள) பணத்தின் மதிப்பு சில டிரில்லியன் டாலர்களை தாண்டி விட்டது. இதற்கெல்லாம் கை மாறாக அரசு எதிர் பார்ப்பது வங்கிகள் சிறு மற்றும் நடுத்தர வங்கிகளுக்கு கடன் கொடுத்து நாட்டின் வேளைவாய்ப்பின்மையை குறைக்கும் என்ற நம்பிக்கை தான்.ஆனால் லாபம் ஒன்றே குறிக்கோளாக இருக்கும் பெரிய வங்கிகள் தற்போதைய பொருளாதார சூழ்நிலையை காரணம் காட்டி சிறு மற்றும் நடுத்தர வங்கிகளுக்கு கடன் கொடுக்கவில்லை. நாட்டின் ஒட்டு மொத்த வங்கி துறையும் தனியாரிடமும், அதுவும் ஒரு சிலரின் கையில் இருப்பதால் அமெரிக்க அரசால் எதுவும் செய்ய முடியாத நிலையில் உள்ளது. சிறு மற்றும் நடுத்தர கம்பெனிகளுக்கு உதவி செய்ய அரசால் எதுவும் செய்ய முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது..

3.அமெரிக்க பெடரல் வங்கி அள்ளி கொடுக்கும் பணத்தை இந்த வங்கிகள் யூக வணிகத்திற்கும், பங்கு சந்தையிலும், வளரும் நாடுகளின் பொருளாதாரத்திற்கும் வெள்ளமாக அள்ளி விடுவதால் அந்த பணம் செல்லுமிடம் எல்லாம் ஒரு ஸ்திரமற்ற நிலை ஏற்படுகிறது.விளை பொருட்கள் மற்றும் தாது பொருட்களின் விலை யூக வணிகத்தால் ஏறவும் செய்கிறது.

4.வங்கிகள் பெரியதாக வளர்ந்து உள்ளதால் அவர்களின் பணபலத்தால் வங்கிகள் மீதுள்ள அரசின் கட்டுபாடு அனைத்தையும்(Glass–Steagall Act etc) கிளிண்டன் மற்றும் புஷ் காலத்தில் விளக்க பட்டு விட்டன. கட்டுபாடு இல்லாததால் வங்கிகள் எடுக்கும் அபயகரமான முடிவகளும்(risk) அதிகமாகி வீழ்ச்சியும் தவிர்க்க முடியாதது ஆனது

இதற்கெல்லாம் முக்கிய காரணம் ஒரு சில வங்கிகள் மிக மிக பெரியதாக இருப்பதும், அவை லாபம் ஒன்றே குறிக்கோளாக இருக்கும் தனியாரிடம் இருப்பதும் தான். இந்த பிரச்சனையை எப்படி தீர்ப்பது என்று பலவாறாக அமெரிக்கா யோசித்து வருகிறது.

இனி இந்தியா கதைக்கு வருவோம். கடந்த பொருளாதார சரிவின் போது குறைவான பாதிப்பில் தப்பியதற்கு காரணம் இந்தியவின் பொது துறையின் வங்கியின் வலிமை தான் என்பது பலராலும் ஏற்று கொள்ள பட்ட உண்மை.சிறு மற்றும் நடுத்தர கம்பெனிகளுக்கு கடனுதவி செய்வது மற்றும் விவசாயிகளுக்கு கடனுதவி செய்வது போன்றவற்றில் இந்த பொது துறை வங்கிகளின் பங்கு மகத்தானது.ஆனால் கடந்த சில வருடங்களாக மன்மோகன் அரசு( மற்றும் பா.ஜ.க அரசு) வங்கிகளை சிறிது சிறிதாக தனியாரிடம் விற்றுவிட துடிப்போடு செயல்படுகின்றது. அமெரிக்க பொருளாதார வீழ்ச்சி அவர்களின் வேகத்திற்கு ஒரு வேக தடையாக இருந்தாலும் அவர்கள் தங்கள் நோக்கத்தை கை விடுவதாக தெரியவில்லை.

வங்கிகளை தனியார் மயபடுத்துவது மட்டுமன்றி பல பொது துறை வங்கிகளை இணைத்து ஒரு சில வங்கிகளாக மாற்றவும் முயற்சி செய்கிறது. அமெரிக்காவில் வங்கியின் அளவு பெரியதாக இருப்பதன் பிரச்ச்னையை பற்றி பார்த்தோம். தற்போது தனக்கே ஆப்பு வைத்து கொள்வது போல் அரசு செயல்படுகிறது.வங்கிகளை இணைத்து ஒரு சில வங்கிகளாக்குவதன் நோக்கம் பிற்காலத்தில் அவற்றை தனியார் மயமாக்குவது எளிதாக இருப்பது கூட இருக்கலாம்.பொது துறை வங்கிகளை தனியார் மயமாக்குவதன் விளைவு குறித்து விளக்கமாக இந்த பதிவில் எழுதி உள்ளேன்.

தற்போது RBI வெளியிட்டிருக்கும் கொள்கை குறிப்பின் படி நீரா ராடியா டேப்பில் சிக்கிய கம்பெனிகள் மற்றும் தனியார் வங்கிகளை பெரிய அளவில் இந்தியாவில் வங்கி துறையில் அனுமதித்து இந்திய வங்கி துறையை வளர்க்க முடிவிட்டுள்ளதாக தெரிகிறது. அதுவும் இந்த தனியார் வங்கிகளை கொண்டு கிராமபுற ஏழைகளுக்கு கடன் அளிக்க வழி செய்ய போவதாக கூறியுள்ளது. ஏழை மக்களின் பொருளாதார வளர்ச்சிக்கு எவ்வாறு இந்த தனியார் வங்கிகள் செயல் பட போகிறது என்பதை போக போக தான் தெரியும் Microcreditல் தனியாரின் பங்கு அத்திட்டத்தை எங்கு கொண்டு சென்றது என்பது பற்றி இந்த பதிவில் பார்த்தோம்.

வங்கிகளை தனியார் மயமாக்குவதன் மூலம் அரசியல்வாதிகளுக்கு நிச்சயம் ஒரு ஜாக்பாட் அடிக்கும். ஆனால் மக்களுக்கு?

ஆக மொத்தம் பிரச்ச்னைக்கு தீர்வை சிந்திக்கிறது அமெரிக்கா. இந்தியாவோ தீர்வை விலக்கி பிரச்சனையை நோக்கி செல்ல நினைக்கிறது.

--

Tuesday, January 25, 2011

பள்ளி மேம்பாட்டிற்கு $10 ல் ஓர் புரட்சி

அனைவருக்கும் குடியரசு தின நல்வாழ்த்துக்கள்.

வெளி நாடுகளில் வாழும் தமிழர்கள், தமிழகத்தின் பின் தங்கிய பகுதியில் இருக்கும் கிராம புற பள்ளிகளின் மேம்பாட்டிற்காக சிறிய பங்களிப்பில் பெரிய அளவில் எதாவது செய்ய நினைப்பவர்கள் இந்த பதிவை தொடர்ந்து படியுங்கள். இது ஒரு மீள் பதிவு. நல்ல விஷயம் பலரை தமிழ்மணம் நட்சத்திர வாரம் மூலம் சென்றடைய மீள்பதிவிடுகிறேன்.

இது வெறும் donation பெறும் இயக்கமல்ல. ஈடுபடும் நீங்கள் ஒவ்வொருவரும் அணி சேர்ந்து கிராம புற வளர்ச்சிக்கு பங்களிக்கும் கூட்டு முயற்சி.

கீழே உள்ள சுட்டியை பார்த்துவிட்டு பதிவை தொடர்ந்து படியுங்கள்.

எங்கள் கிராம பள்ளிக்கு கிடைத்த கட்டமைப்பு வசதி


வெளி நாடுகளில் தமிழர்கள் பொது இடத்தில் கூடி பேசும் போது தவறாமல் விவாதிக்க படும் விஷயம் தாயகத்தில் நடக்கும் லஞ்சம் ஊழல் பற்றிய பேச்சாக இருந்தாலும்
தமிழ் நாட்டின் ஆக்க பூர்வமான வளர்ச்சிக்கு எதாவது செய்ய வேண்டும் என்ற விவாதமும் சில சமயங்களில் இருக்கும்.ஆனால் பெரும் பாலான நேரம் அது பேச்சோடே முடிந்து விடும்.
தாய் நாட்டு வளர்ச்சிக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தாலும் அதை எப்படி செய்ய முடியும் என்ற மலைப்போடு மறந்து விடுவோம். இந்தியாவில் இருக்கும் ஒரு சில
சேவை நிறுவனங்களுக்கு பண உதவி செய்ய முடிந்தாலும் அது எந்த அளவு வளர்ச்சிப்பணியை அடையும் என்ற கேள்விக்குறி தான் முன் நிற்கும்.
.தனியே நாமே எதாவது உருப்படியாக செய்யலாம் என்றால் மிக பெரிய தொகை செலவாகுமே என்ற மலைப்பு ஏற்படும். என்வே இது போன்ற சிந்தனைகள் பேச்சோடு முடிந்து விடும்.
10 வருடங்களுக்கு முன் இதே போன்ற விஷயம் ஒரு குழுவினரிடம் விவாதிக்க பட்டது. ஆனால் அது பேச்சோடு நிற்காமல் ஒரு திட்டமாக தீட்டப்பட்டு
இன்று வரை சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருவதோடு மிக வேகமாக வளர்ச்சி அடையவும் செய்கிறது.

அது என்ன முயற்சி என்று அறிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறதா?இந்தியாவில் கல்வி வளர்ச்சி மிக வேகமாக இருந்தாலும் கிராமப்புற மற்றும் நகர்புற பள்ளிகளில் உள் கட்டமைப்பின்
நிலை மிக மோசமாகவே உள்ளது.பெரும்பாலான பள்ளிகளுக்கு கட்டிடம் சரியாக இல்லை. உட்கார மேஜை வசதி சரியாக இருக்காது.மேலும் பிற வசதிகளும் ஒழுங்காக இருக்காது.
கி.பி 2000 ஆண்டில் ஏப்ரல் மாதம் ஏழைப்பள்ளிகளின் வளர்ச்சி பற்றி ஒரு சிலரிடையே விவாதிக்கப்பட்டு பின் தொலை பேசியிலும் மின்னஞ்சலிலும் விவாதத்தில் வளர்ந்து விதையாக வித்திடப் பட்டது தான்
TEAM(TEAM for Educational Activities in Motherland)(http://www.IndiaTEAM.org)
என்ற அமைப்பு..மிகப்பெரிய தொகையை தாயகக்கல்வி வளர்ச்சிக்காக ஒதுக்குவது என்பது நடைமுறையில் கடினம். எனவே இத்திட்டதின் படி ஒவ்வொரு உறுப்பினரும் ஒரு குறுந்தொகையை
,அதாவது $10 ஒவ்வொரு மாதமும் குழுவிடம் செலுத்துவார்கள். உதாரணமாக 100 பேர் மூன்று மாதம் $10 கொடுத்தால் ,அது $3000 டாலராக பெருகும். குலுக்கல் முறையில்
6 பேரை தேர்ந்தெடுத்து ஆளுக்கு $500 டாலர் பிரித்து கொடுக்க படும். தேர்ந்தெடுக்கப்பட்ட 6 பேரும் இந்தியாவில் உள்ள ஏழைப்பள்ளிகளை தேர்ந்தெடுத்து $500 டாலருக்குண்டான
பள்ளி உட்கட்டமைப்புக்கான பணிகளை மேற்கொள்ளுவார்கள். பணிகள் செவ்வனே முடிந்த பின், ரசீது மற்றும் புகைப்படங்களை அமைப்பிடம் சமர்பிப்பர். 50 மாதங்களில்
ஒவ்வொரு உறுப்பினரும் ஒரு பள்ளியையாவது மேம்படுத்தி இருப்பார்கள்.

இதை படிக்கும் போது ஒருவர் மாதம் $10 டாலர் கொடுப்பதால் என்ன பெரிய மாற்றம் நிகழ்ந்துவிட போகிறது என்று தோன்றும். ஆனால் கடந்த பத்தாண்டுகளில் இவ்வமைப்பினர்
தாயகக்கல்வி வளர்ச்சிக்காக செய்த மொத்த தொகை அரை மில்லியன் டாலரையும் தாண்டி விட்டது .ஆச்சரியமாக இருக்கிறதா? தமிழ் நாட்டுப்பள்ளிகளுக்கு இவ்வமைப்பினரால் செய்ய பட்ட உதவிகளை
காண இந்தச் சுட்டியை(http://www.indiateam.org/projects/Pub_PrjList.php?state=TamilNadu) அழுத்திப்பாருங்கள்.
.இந்த அமைப்பின் மூலம் பயனடைந்ததில் தமிழகப்பள்ளிகள் முதலிடம் வகிக்கிறது. நூற்றுக்கணக்கான பள்ளிகளுக்கு இந்த அமைப்பின் மூலம் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள்
அமர மேஜை, கட்டிடங்கள் மற்றும் பிற அடிப்படை தேவைகள் நிறைவேறியுள்ளன.\\
கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா முழுவதும் இந்த அமைப்பின் மூலம் பயன் பெற்றுள்ள பள்ளிகளை இங்கு

(http://www.indiateam.org/projects/Pub_PrjList.php?state=All)காணலாம்.(இந்த சுட்டியில் 6 பக்கங்கள் உள்ளது.கவனம்).இந்த அமைப்பின் உறுப்பினர்களால் தற்போது செயல்
படுத்த பட்டு வரும் பணிகளை காண இங்கு
http://www.indiateam.org/projects/Pub_qCurrent_PrjList.php சுட்டுங்கள்

இந்த அமைப்பின் சிறப்பம்சமே இந்த அமைப்பு நிறைவேற்றும் பணிகள் யாவும் யாரோ ஒரு தெரியாதவர்கள் மூலம் நடை பெறாமல் இந்த அமைப்பில் உள்ளவர்கள் மூலம் செயல்படுத்துவது தான்.
இந்த அணுகுமுறையே இந்த அமைப்பிற்கும் அதன் செயல் பாட்டிற்குமான வெற்றியை ஈட்டிக்கொடுத்து வருகிறது என்று கூறலாம்.

இதைப்படிக்கும் வெளி நாடு வாழ் இந்தியர்கள் அனைவரும் தமிழக பள்ளிகளின் உள் கட்டமைப்பை மேம்படுத்துவதை ஒரு சமுதாயக்கடமையாக ஏற்று கொண்டு இவ்வமைப்பில்
தங்களையும் ஈடுபடுத்தி சேவை மனப்பன்மையோடு பணி செய்தால் தாய் நாட்டின் கல்வி வளர்ச்சியில் ஒரு புரட்சியே ஏற்படுத்த முடியும்..இதை படிக்கும் உங்களுக்கும்
இது போன்ற சமூகப்பணியை ஆற்ற ஆர்வமாக இருந்தால் info@indiateam.org என்ற மின்னஞ்சலுக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

--

பூனைக்கு யார் மணி கட்டுவது?

இந்தியாவின் வளரும் மக்கள் தொகைக்கு ஏற்ப விவசாய வளர்ச்சி இல்லை. இந்த நிலை தொடர்ந்தால் இந்தியா உணவு தானியங்களை இறக்குமதி செய்யும் நிலை வரலாம். கடந்த ஆண்டு ஒரு சில நாடுகளில் ஏற்பட்ட இயற்கை சீரழிவால் உணவு உற்பத்தியின் அளவு குறைந்தது. அதனால் உணவு தானியங்களின் விலை உலக சந்தையில் பெருமளவு ஏறியது. இத்தனைக்கும் இந்த கால கட்டத்தில் இந்தியா மற்றும் சீனா(உலக மக்கள் தொகையில் 40% மக்கள் வசிக்கும் பகுதி) உணவு தானிய தன்னிறை அடைந்திருந்தது. இந்தியாவோ அல்லது சீனாவோ தன் உணவு தானிய தேவையின் 10% வெளி நாடுகளிலிருந்து இறக்குமதி செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டால் கூட நமக்கு தேவையான உணவு பொருட்கள் உலக சந்தையில் கிடைப்பது அறிது.அது மட்டுமன்றி உணவு தானியத்தின் விலை பல மடங்கு ஏற வாய்ப்புள்ளது. அவ்வாறு விலை ஏறினால், இந்திய அரசால் பொது வினியோக முறையில் ஏழை மக்களுக்கு குறைந்த விலையில் உணவு அளிப்பது கடினமாகி பட்டினி சாவு வர கூடும். எனவே எக்காரணம் கொண்டும் இந்தியா தன் உணவு தானிய தேவையில் தன்னிறைவை கடைபிடிக்க வேண்டியது கட்டாய தேவையாகும்.

விவசாய உற்பத்தி பெருக்கத்திற்கு வேளாண் ஆராய்ச்சி அடிப்படையாகும். விவசாய ஆராய்ச்சிக்கு இந்தியா செலவிடும் தொகை மிக மிக குறைவு. இந்த பதிவு அதை பற்றியதல்ல. இந்த பதிவு வேளாண் பல்கலை கழகங்கள் மற்றும் வேளாண் ஆராய்ச்சி நிலையங்களில் தற்போது நடக்கும் ஆராய்ச்சியின் தரம் பற்றியது.

பெரும்பாலான வேளாண் பல்கலைகழகங்கள் வேளாண் ஆராய்ச்சி journal வெளியிடும். அவற்றில் தற்போது வெற்றிகரமாக நடந்து முடிந்த ஆராய்ச்சி பற்றி கட்டுரை இருக்கும். இந்திய ஆராய்ச்சி journal கட்டுரைகளின் முடிவை பார்த்தால் இந்திய வேளாண்மை ஆராய்ச்சியில் ஒரு புரட்சியே நடப்பதாக தோன்றும். பெரும்பாலான கட்டுரைகளின் படி நவீன தொழில் நுட்பத்தை பயன் படுத்தி உணவு பயிர்களின் விளைச்சளை 30 லிருந்து 200 சதவீதம் அதிகரிக்களாம் என்று தெரிவிக்க பட்டிருக்கும். ஆராய்ச்சி கட்டுரையில் உள்ள தொழில் நுட்பங்களை விவசாயிகள் பயன் படுத்தி இருந்தால் இந்தியா உலகுக்கே உணவு கொடுக்க முடியும் என்று கணக்கிட முடிந்திருக்கும். ஆராய்ச்சி முடிவுகள் விவசாயிகளை சென்றடையாதது தான் பிரச்ச்னை என்று நினைக்க தோன்றும்.

ஆனால் உண்மை அதுவல்ல. அந்த ஆராய்ச்சி கட்டுரையில் கொடுக்க பட்டுள்ள தொழில் நுட்பத்தை பயன் படுத்தினால் அவர்கள் குறிபிட்டுள்ளது போல் விளைச்சல் பெரும்பாலான சமயம் அதிகரிக்காது. ஏனென்றால் பெரும்பாலான ஆராய்ச்சிகளின் போது விளைச்சல் மற்றும் பிற குறியீடுகளின் அளவு ஆராய்ச்சியின் போது வளரும் பயிரின் விளைச்சல் மற்றும் பயிரின் வேதியல் பகுப்பாய்வு(Chemical Analysis) மூலம் அளவிட படுவதில்லை. ஆராய்ச்சியின் தலைப்பு முடிவு செய்ய பட்ட உடனே ஆராய்ச்சியின் முடிவும் முடிவு செய்ய பட்டு விடும். பெரும்பாலான வேளாண் ஆராய்ச்சிகள் புள்ளியியல் ரீதியான ஆராய்ச்சி கட்டமைப்பு (Statistically deriven Experimental Design) மூலம் உறுதி செய்ய வேண்டும். உண்மையான ஆராய்ச்சி செய்து, முடிவை புள்ளியியல் முறைபடி analysis செய்தால் ஓரளவு உண்மை நிலை கிடைக்கும்.ஆனால் ஆராய்ச்சியாளர்களோ புகை படம் எடுக்க மட்டும் பயிரை நிலத்தில் விதைப்பார்கள். பயிரின் விளைச்சளை நிலத்தில் அளக்காமல் கணிபொறியில் புள்ளியியல் மென்பொருள் மூலம் டேட்டாவை கூட்டி குறைத்து போட்டு தமக்கு தேவையான முடிவை கொண்டுவந்து விடுவார்கள். வேளாண் ஆராய்ச்சியில் முடிவுகள் அது செய்ய படும் சுற்றுசூழல் கொண்டும் பாதிக்க படுவதால் இன்னொரு இடத்தில் அந்த விளைச்சல் கிடைக்காவிட்டால் சுற்றுசூழல் மீது கை காட்டிவிட்டு சென்று விட முடியும்.அனைத்து வேளாண் ஆராய்ச்சிகளும் இப்படி நடக்கிரது என்று சொல்ல வரவில்லை. பெரும்பாலான ஆராய்ச்சிகள் இப்படி தான் நடக்கிறது.

அடுத்தது தனியார் துறை கொடுக்கும் பிராஜெக்ட் பற்றி பார்ப்போம். பெரும்பாலான பூச்சி கொள்ளி மருந்து கம்பெனிகள் மற்றும் உர கம்பெனிகள் தங்களுடைய பிராடக்ட்டின் தரம் குறித்து சான்றிதழ் கொடுக்க ஆராய்ச்சி பிராஜெக்ட் கொடுப்பார்கள். அவர்கள் விருப்ப படும் முடிவை ஆராய்ச்சி முடிவாக கொடுத்தால் தான் அடுத்த பிராஜெக்ட் கிடைக்கும் என்று அவர்களுடைய விருப்பத்துக்கு ஏற்றவாறு முடிவை கொடுப்பர்கள்.தனியார் துறைக்கான ஆராய்ச்சி இப்படி என்றால் அரசு துறை பற்றி கேட்கவே வேண்டாம். முதலில் அரசு பிராஜெக்ட் வாங்கவே அதிகார வர்க்கத்தினரிடம் சிபாரிசு பெற்றவர்களாகவோ, அரசியல் செல்வாக்கு கொண்டவர்களாகவோ இருக்க வேண்டும். அது மட்டுமன்றி வட நாடு- தென் நாடு பிரிவினை வேறு.இந்த பலத்தை எல்லாம் கொண்டு பிராஜெட் வாங்கிவிட்டால் போதும். பிராஜெக்ட் முடியும் போதும், ரிவியூ போதும் அழகாக ரிப்போர்ட் எழுத தெரிந்தால் போது. பிராஜெக்ட் முடித்து விடலாம்.உண்மையான கண்டு பிடிப்பு பற்றி யாரும் கவலை பட போவது இல்லை.இதையெல்லாம் மீறி விரல் விட்டு எண்ணகூடிய அளவில் சில பேர் ஒழுங்காக ஆராய்ச்சி செய்கிறார்கள். அவர்கள் எல்லாம் உண்மையிலேயே பாராட்ட பட வேண்டியவர்கள்.

ஒரு சில ஆராய்ச்சி மாணவர்கள் உண்மையான ஆர்வத்துடன் ஆராய்ச்சி செய்ய வருவார்கள். ஆனால் அவரக்ளுக்கு அமையும் கைடோ ஆராய்ச்சியில் பல தலைமுறை பின் தங்கி இருப்பவராக இருப்பார். ஆராய்ச்சிக்கான அடிப்படை கட்டமைப்பு வசதியும் குறைவாக இருக்கும். பல்கலை கழகங்களில் நடக்கும் அரசியலோ மிக பயங்கரமானதாக இருக்கும்.இவற்றையெல்லாம் கடப்பதற்குள் அந்த மாணவன் ஜோதியில் ஐக்கியமாகி விடுவார்.விவசாய கல்லூரிகள் மற்றும் விவசாய ஆராய்ச்சி நிறுவனங்களில் இது போன்றே ஆராய்ச்சி தொடர்ந்தால் விவசாயிகளிடம் விவசாய பல்கலை கழகத்தின் ஆராய்ச்சியில் நம்பிக்கை குறைந்து விடும். அதுமட்டுமன்றி மக்கள் தொகை பெருக்கத்திற்கிணையான உணவு உற்பத்தி பெருக்கத்திற்கு வழி வகை இல்லாமல் போய்விடும்.இந்த பிரச்சனை எல்லாம் அதிகார வர்க்கத்திற்கும், ஆராய்ச்சியாளர்களுக்கும் நன்கு தெரியும். யார் பூனைக்கு மணி கட்டுவது?

--

Monday, January 24, 2011

Wikileak- FedLeak - நீரா ராடியா Tape Leak

சமீப காலமாக இந்தியா மற்றும் உலகை கலக்கி வரும் செய்தி Wikileak,FedLeak ,நீரா ராடியா Tape Leak என்ற மூன்று செய்தியாகத்தான் இருக்கும். இந்த மூன்று செய்தியும் ஊடகங்களால் பல தரபட்ட கோணங்களில் மக்களிடம் கொண்டு செல்ல பட்டாலும் அனைத்திற்கும் அடிப்படையாக உள்ள Crony Capitalism பற்றி யாருமே வாய் திறக்காதது ஆச்சரியமான செய்தி.

முதலில் நாம் அனைவரும் அறிந்த நீரா ராடியா டேப்பிற்கு வருவோம்.நீரா ராடியா டேப்பின் மூலம் தி.மு.கவும், அக்கட்சியின் அதிகார வர்க்கத்தினரும் அடித்த கொள்ளை பற்றி மட்டும் மிக அதிக அளவில் பேச படுகிறது. ஊழலில் ஈடுபட்ட அரசியல்வாதிகளை விசாரணைக்கு உட்படுத்துவது அல்லது தண்டனை பெற்று தருவதன் மூலம் இந்த பிரச்ச்னையை தீர்க்க வேண்டும் என்று அனைத்து ஊடகங்களும் போர்கொடி நாட்டி வருகிறது. ஆனால் இந்த பிரச்ச்னை Tip of the iceberg தான். இந்த பிரச்சனையின் அடிப்படையை ஆராய்ந்தால் நமது கட்டமைப்பிலேயே பெரிய பிரச்சனை இருப்பது தெரியவரும்.

நான் கல்லூரியில் படிக்கும் போது எனது தோட்டகலை ஆசிரியர் ஒரு செய்தி கூறுவார். மின் கம்பங்களின் அருகில் மரம் இருக்கும் போது அதன் கிளை மின் கம்பியை உரசும் போது, மின் வாரிய தொழிலாளி அடிப்படை காரணத்தை புரியாமல் கிளையை மட்டும் கழித்து விடுவார். அது மரத்திற்கு prunning செய்தது போல் ஆகி,அடுத்த சீசனில் பல கிளைகளை உருவாகி கம்பியை மீண்டும் உரசும். எனவே கிளை எவ்வாறு வளர்கிறது, அதன் வளர்ச்சியை தடுக்க, நிரந்திர தீர்வை உண்டாக்க அறிவியல் பூர்வமாக எவ்வாறு prunning செய்ய வேண்டும் என்று புரிந்து செயல்பட வேண்டும்.இது மரத்திற்கு மட்டும் பொருந்த கூடியது அல்ல. இன்றைய அரசியல் ஊழல்களுக்கும் பொருந்தும். பிரச்சனையின் அடிப்படையை ஆராய்ந்தால் ஒழிய இதற்கு தீர்வு இல்லை.

நீரா ராடியா டேப் விஷயம் ஒரே ஒரு ஊழல் பற்றியது மட்டும் அல்ல. நாட்டில் நடக்கும் பல்லாயிரம் ஊழல்கள், ஏன் மிக பெரிய அளவில் நடக்கும் ஊழல்கள் அனைத்தின் சம்பத்த பட்டது.இந்த விவகாரத்தில் முக்கியமாக பார்க்க வேண்டியது மீடியாக்களுக்கும் இடை தரகர்களுக்கும் இடையில் உள்ள தொடர்பு மற்றும் மிக பெரிய வர்த்தக குடும்பங்களுக்கு அரசியலில் இருக்கும் செல்வாக்கும் ஆகும். மிக பெரிய வியாபார குடும்பங்கள் தரகு லாபியை கொண்டு அரசு சொத்தை கொள்ளை அடிப்பதும், ஒவ்வொரு துறையிலும் monopoly அல்லது oligopoly ஆக வளர முயல்வதும் குறிப்பிட தக்கது. இதே வியாபார குடும்பங்கள் மீடியாக்களை வளைத்து போட்டு அரசின் கையில் இருக்கும் தொழில் துறைகளை தனியாருக்கு(தங்களுக்கு) தாரை வார்க்க அழுத்தம் கொடுத்து சந்தை பொருளாதாரம் பற்றி வாய் கிழிய பேசி crony capitalism நோக்கி அழைத்து செல்வது தான் கொடுமை.

இதில் அதிர்ச்சியான செய்தி மீடியாக்களுக்கும்(முக்கியமாக வட இந்திய ஊடகங்கள்) இடை தரகர்களுக்கும் இடைபட்ட தொடர்பு. தேர்தல் நேரத்தில் பல பெரிய ஊடகங்கள் தவறான முன்னிலை நிலவரங்களை கருத்து கணிப்பு என்ற பெயரில் வெளியிட்டு மக்களின் மனதை மாற்ற முயற்சி செய்வது வாடிக்கையான செய்தி. ஆனால் தற்போது வெளி வந்திருக்கும் செய்தியை பார்த்தால் அவர்கள் வெளியிடும் பொருளாதார மற்றும் அரசியல் செய்தி யாவும் இடை தரகர்களிடம் பணம் வாங்கி கொண்டு Power Broker ஆக செயல்பட்டு திரிக்க பட்ட செய்தி என்பது தெளிவாகிறது. ஒரு புறம் திரிக்க பட்ட செய்தி வெளியாகிறது. மறுபுறம் பல முக்கிய செய்திகள் இருட்டடிப்பு செய்ய படுகிறது. உதாரணமாக தனியார் பெட்ரோலுக்கு கொடுக்க படும் மான்யம் குறித்த செய்தி. அரசுக்கு பல கோடி இழப்பை ஏற்படுத்தும் முடிவுகள் பத்திரிக்கைகள் வெளியிடாவிட்டால் மக்களை சென்றடையாது. இது போல் எத்தனை லட்சம் கோடி ஊழல்கள் பற்றிய செய்தி மறைக்க பட்டது என்பது கடவுளுக்கு தான் வெளிச்சம்.ஜனநாயகத்தின் காவலர்களாக இருக்க வேண்டிய ஊடகங்கள் பணநாயகத்தின் காவலர்களாக மாறுவது வருத்தத்திற்கு உரியது.

அடுத்து ஒரு சில பெரிய வர்த்தக குடும்பத்தின் பிடியில் ஒட்டு மொத்த இந்திய அரசே இருப்பது.டேப்பில் வெளி வந்த செய்தி படி பார்த்தால் ஒவ்வொரு துறை சார்ந்த தொழிலில் இருக்கும் மிக பெரிய வர்த்தக நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான நபர்களை மந்திரியாக அமர்த்த லாபி செய்து வெற்றியும் பெருகின்றனர். அதன் விளைவு அந்த துறைகளில் இருக்கும் பொது துறையின் வளர்ச்சி systematic ஆக ஆழிக்க பட்டு தனியார் மயமாக்கபடும். தனியார் மயமாக்களும் முறையாக நடு நிலையுடன் சந்தை பொருளாதாரத்துக்கு ஏற்ற வாறு தனியார் துறையில் போட்டியை அதிக படுத்தி, பல கம்பெனிகளை களத்தில் கொண்டு வந்து போட்டியின் மூலம் மக்களுக்கு நல்ல சேவையை தருவதாக இருக்காது. இந்த குடும்ப நிறுவனங்களும், ஒரு சில அரசியல்வாதிகளும் மலிந்த குத்தகைக்கு ஒட்டு மொத்தமாக ஏலம் எடுத்து(நேரடியாக அல்லது மறைமுகமாக) பெரிய லாபம் சம்பாதிக்க உதவுவர்( வரும் காலத்தில் அவர்கள் ஒரு பன்னாட்டு கம்பெனியிடம் விற்று சென்றாலும் சென்று விடுவார்கள்).இது நமது பொருளாதாரத்தில் கேன்சரை விட கொடிய வியாதி. இதை தடுப்பது பற்றி யாருமே வாயை திறக்கவில்லை.மீடியாகளின் மூலம் நேர்மையான நிறுவனம் என்று அடையாளபடுத்தி வரும் டாடா நிறுவனம் கூட இதற்கு விதி விலக்கு அல்ல என்பது வருத்தமான செய்தி.

இது போன்ற செயல்களால் அரசுக்கோ, சாதாரண மனிதர்களுக்கோ, போட்டி சார்ந்த தனியார் துறைக்கோ பயனில்லை. பயனடைய போவது எல்லாம் ஒரு சில அரசியல்வாதிகளும், அவர்களது குடும்பமும், பெரிய வர்த்தக குடும்பங்களும் தான்.தற்போதைய பிரச்சனை ராசா மட்டும் அல்ல. ஒட்டு மொத்த system தான். அதை சரி செய்ய தற்போது முயற்சி எடுக்காவிட்டால் அதன் விளைவு மிக பயங்கரமாக இருக்கும்.ராசாவை மட்டும் CBI விசாரிப்பதால் இதற்கு முடிவு ஏற்பட போவது இல்லை.காங்கிரஸ் கட்சியில் ஒவ்வொரு துறையிலும் நிபுணுத்துவம் வாய்ந்தவரக்ளை ஒட்டு மொத்தமாக அழித்து ஜால்ராக்களை தலைவர்களாக இந்திரா காந்தி கொண்டு வந்ததாலும், திடீரென அதிகாரம் கிடைக்கும் மாநில கட்சிகளில், அறிவு ஜீவிகள் யாரும் இல்லாததும் திறமை வாய்ந்த மந்திரிகள் கிடைப்பதில் பற்றாக்குறையை ஏற்படுத்தி உள்ளது( பா. ஜ. க பற்றி கேட்கவே வேண்டாம். அவர்கள் இந்திய முதலாளிகளின் ஏஜெண்டுகளாக தான் கொள்கை அளவிலேயே இருக்கிறார்கள்)..

ஒட்டு மொத்த மீடியாக்களும் ராசாவையும், தி.மு.கவின் ஊழல் பற்றி மட்டும் செய்தி வெளியிட்டு, பிரச்சனையின் அடிப்படை காரணியாக இருக்கும் Corporate lobbying மற்றும் பெரிய வியாபார குடும்பங்களின் சுரண்டல்களை ஒட்டு மொத்தமாக இருட்டடிப்பு செய்துவிடும். மக்களும் அரசியல்வாதியை திட்டி விட்டு, எதாவது ஒரு நடிகையின் விபச்சாரம் பற்றிய செய்திகள் செய்தி தாளில் வந்தால் இந்த பிரச்ச்னையை மறந்து விடுவார்கள். பெரிய வியாபார நிறுவனங்களின் அரிச்சந்திரன் வேடமும் கொள்ளையும் தொடர்ந்து நடக்கும்.சில வருடங்களில் அரசியல்வாதியும் பிரச்ச்னையிலிருந்து நீதிமன்றம் மூலம் விடுவிக்க படுவார்.

அடுத்தது Federal Reserve வெளியிட்டுள்ள கடன் கொடுத்தோர் பட்டியல் செய்திக்கு வருவோம். பொருளாதார நெருக்கடியின் போது கணக்கு வழக்கின்றி தனியார் நிறுவனங்களுக்கு வட்டியில்லா கடனை அள்ளி வீசியது Fed. ஆனால் அந்த விபரங்களை வெளியிட்டால் நாட்டின் பொருளாதார ஸ்திரதன்மை பாதிக்க படும் என்று காரணம் கூறி மறித்து வந்தது . தற்போது மிகுந்த அழுத்தத்திற்கு பிறகு அது உண்மைகளை வெளியிட்டது. இதன் மூலம் டிரில்லியன் கணக்கிலான கடன்கள் அமெரிக்கா, ஐரோப்பிய தனியார் வங்கிகள் மற்றும் பன்னாட்டு கம்பெனிகளுக்கு கொடுக்க பட்டுள்ளது. இதில் முக்கியமாக கவனிக்க வேண்டியது கடன் பெருவோரை முடிவு செய்யும் உரிமை. இந்த கடன்களின் பயனாளிகளை தேர்வு செய்வதற்கு எந்த ஒரு வெளிபடையான முறையையும் செயல்படுத்த படுவது இல்லை. Fed அதிகாரிகள் யாருக்கு கொடுக்க வேண்டும் என்று நினைக்கிறார்களோ அவர்களுக்கு கொடுக்களாம். இந்த நடைமுறையும் ரகசியமாக இருக்கும். அதுமட்டுமன்றி Fed கணக்குகள் முறையாக தணிக்கை செய்ய படுவது இல்லை. கடன் கொடுக்க பணத்தை உருவாக்குவதும் எளிது. கம்ப்யூட்டரில் ஒரு பட்டனை தட்டுவதன் மூலம் பில்லியன் டாலரை உருவாக்க முடியும். அவ்வாறு உருவாக்க படும் பணத்தை முறையான தணிக்கை இல்லாததால் எப்படியும் பயன் படுத்த முடியும்.

இதுவும் ஒரு வகையில் இந்திய ஊழலோடு ஒப்பிடலாம். அதாவது Fed நிறுவனத்தினர் பலம் வாய்ந்த வங்கிகளுக்கும், பன்னாட்டு வங்கிகளுக்கும் நிதி நெருக்கடி காலத்தில் இவ்வாறு கடன் கொடுப்பதன் மூலம், பிரச்ச்னையில் சிக்கியுள்ள அவரது போட்டி நிறுவனங்களை விழுங்கி ஒவ்வொரு துறையுள்ளும் oligpoly அல்லது monopoly நிலைக்கு கொண்டு வர உதவும்.இது சந்தை பொருளாதாரத்தை முழுவதுமாக crony capitalism நோக்கி கொண்டு சென்று விட்டது.

அடுத்து wikileaks செய்திக்கு வருவோம். wikileaks செய்திகளில் குறிப்பிட தக்க செய்திகளில் ஒன்று ஈரான் மீது தாக்குதலை நடத்த சவுதி அரேபியா அமெரிக்கா மீது அழுத்தம் கொடுத்தது.சில மாதங்களுக்கு முன் ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்த சவுதி அரேபியா ஆதரவளித்ததாக வந்த செய்தியை நான் நம்பவில்லை. ஆனால் தற்போதைய செய்தி அதை உறுதி படுத்துவதாக உள்ளது.இது நாள் வரை உலகெங்கிலும் உள்ள மக்கள், முக்கியமாக இசுலாமிய மக்கள் அமெரிக்கா மற்றும் மேலை நாடுகள் இராக் போன்ற நாடுகளின் மீது நடந்த தாக்குதலை இசுலாத்தின் மீது நடந்த தாக்குதலாக தான் பார்த்தார்கள். ஆனால் தற்போது மக்களுக்கு உண்மை புரித்திருக்க வாய்ப்புண்டு. அரபு நாடுகளை பொருத்த வரை இது போன்ற போர்களின் மூலம் பெட்ரோல் விலை விண்ணை நோக்கி உயர்ந்து பெரும் லாபம் ஈட்ட முடியும்.சர்வாதிகார அரசுகளின் மீது வளர கூடிய வெறுப்பை மேல் நாடுகள் மீது திருப்பி ஆட்சியாளர்கள் மக்கள் வெறுப்பிலிருந்து தப்பிக்க முடியும்.

--

பள்ளியில் இந்தி - தேவை ஒரு உடனடி மாற்றம்

இந்தியா சுதந்திரம் அடைந்த போது பள்ளிகளில் மும்மொழி கொள்கை அறிமுக படுத்த பட்டது. மும்மொழி கொள்கையின் படி வட இந்திய மாணவன் தன் தாய் மொழியான இந்தி, உலக மொழியான ஆங்கிலம் மற்றும் வேறொரு இந்திய மொழி(தென்னிந்திய மொழியாக இருக்களாம்) கற்க வேண்டும். தென்னிந்திய மாணவர்கள் தங்களது தாய் மொழி, ஆங்கிலம் மற்றும் இந்தி கற்க வேண்டும்.உண்மையில் கொள்கை மேற்சொன்னதாக இருந்தாலும் நடைமுறையில் தென்னிந்திய மாணவர்கள் தாய் மொழி, ஆங்கிலம் மற்றும் இந்தி கற்க வேண்டும் என்றும் வட இந்திய மாணவர்கள் இந்தி மட்டும் கற்றால் போதும் என்ற நிலையில் இருந்தது. இந்தியா முழுமைக்கும் இந்தியை திணிக்க இது ஒரு கருவியாக பயன்பட்டது.அதற்கு அன்றைய அரசியல்வாதிகள் சொல்லும் காரணம் தென்னாட்டு மக்கள் வட நாட்டுக்கு வேலை பார்க்க வரும் போது,இந்தி தெரிந்து இருப்பது அவசியம் என்பதாகும்.

சுதந்திரம் அடைந்த போது காங்கிரஸ் கட்சியின் பெரும்பான்மையான எம்.பிக்கள் வட இந்தியாவிலிருந்து வந்ததாலும், அவர்களின் அழுத்தம் காரணமாக பெரும்பான்மையான பொது துறை நிறுவனங்கள் வட இந்தியாவில் தொடங்க பட்டது. வேலை வாய்ப்பும் அங்கு பெருகியது. அப்போது இந்தியா சோசியலிச பாதையில் இருந்ததால் அரசின் முதலீடு அதிகம். தனியாரின் பங்கு குறைவு. எனவே தமிழகத்திலிருந்து வட நாடு தேடி வேலை போவோரின் எண்ணிக்கையும் அதிகமாக இருந்தது.அப்போது வெளிநாடுகளுக்கு வேலை தேடி போவோரின் எண்ணிக்கையும் மிக குறைவு.

வேலைக்கு போகும் போது இந்தி கற்று கொள்வது ஒன்றும் கடினமான காரியமாக இல்லாவிட்டால் கூட அன்றைய சூழ்நிலையில் இந்தி படிக்க்காதது தான் தமிழக மக்களின் வளர்ச்சிக்கு பெரும் தடையாக இருந்ததாக தேசியவாதிகளால் செய்தி பரப்பபட்டது.

மாற்றம் தானே வாழ்வின் நியதி. மாற்றத்திற்கு ஏற்ப தன்னை தகவமைத்து கொள்பவர்கள் தானே வெற்றி கொள்ளவும் முடியும்.

தற்போது அரசு முதலீடு என்பது மிகவும் குறைந்து விட்டது. தனியார் முதலீடு தான் தொழிற்வளர்ச்சியில் பெரும் பங்கு வகிக்கிறது. தற்போதைய தொழிற் வளர்ச்சி அனைத்தும் தென்னிந்தியாவிலும், மகாரஷ்ட்ரா போன்ற மாநிலங்களிளும் தான் உள்ளது. அதன் விளைவு வட இந்தியாவை சேர்ந்த மாணவர்கள் தெற்கு நோக்கி சாரை சாரையாக இடம் பெயர ஆரம்பித்து உள்ளனர்.தென்னிந்தியாவின் நகர் புறங்களில் பெரும்பான்மையான கூலி தொழிலாளர்கள் வட இந்தியாவிலிருந்து தான் வந்து கொண்டிருக்கிறார்கள். வேலை மட்டும் என்று இல்லை. தொழிற்கல்வி படிக்க கூட வட இந்திய மாணவர்கள் தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களுக்கு வர வேண்டி உள்ளது.

அவர்களுக்கு பெரும் பிரச்ச்னையாக உள்ளது மொழி தான். மகாராஷ்டிராவில் கூட மராட்டி தெரியாமல் நாள் தோறும் அடி வாங்கும் வட இந்திய தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகம்.தமிழகத்தில் அவர்கள் இந்தியை மட்டும் வைத்து கொண்டு பரிதவிப்பது பார்க்கவே பரிதாபமாக உள்ளது. .இதை உணர்ந்து கொண்டு மத்திய அரசு உடனடியாக புதிய மொழி கொள்கையை அறிவிப்பது அவசியம். வட இந்திய பள்ளிகளில் தமிழ் உட்பட தென்னிந்தய மொழிகள் மற்றும் மராட்டி போன்ற மொழிகளை கட்டாய பாடமாக்க வேண்டும். இதை மத்திய அரசு செய்ய வேண்டும் என்று இல்லை. நித்தீஷ் குமார் போன்ற "மக்கள் நலம்" உயர விரும்பும் மாநில முதல்வர்கள் தங்களது மாநில அளவிளாவது உடனடியாக இதை நிறைவேற்ற வேண்டும்.

கபில் சிபல் போன்ற அமைச்சர்கள் மொழி கொள்கையில் உணர்ச்சி பூர்வமாக சிந்திப்பதை விட்டு அறிவு பூர்வமாக சிந்திக்க கற்றுகொள்ள வேண்டும்.வட இந்திய மாணவர்கள் மட்டும் மூன்று மொழிகளை படிப்பது தென்னிந்திய மாணவர்கள் இரு மொழி மட்டும் படிப்பது ஏற்று கொள்ள முடியாது தான்.இதற்கு என்ன தீர்வு? தமிழர்கள் வட இந்தியர்களை போல் தேசியவாதி இல்லை என்பது சோகமான உண்மை தான். எனவே நமக்கு பிரன்ச்சு, ஜெர்மனி, சீன மொழி போன்ற அன்னிய மொழி படிப்பது ஏற்று கொள்ள கூடியது தான். எனவே தமிழக பள்ளிகளில் மூன்றாம் மொழியாக ஒரு அன்னிய மொழியை அறிமுகபடுத்தலாம். தமிழர்களும் வெளி நாடுகளுக்கு வேலை தேடி செல்வதும் மிக அதிகமாக உள்ளது. எனவே தமிழக மாணவர்களுக்கும் இது உதவும்.

--

Sunday, January 23, 2011

அமெரிக்காவை தாக்க தயாராகும் அணுகுண்டு

இந்த தலைப்பை பார்த்தவுடன் ஏதோ அமெரிக்காவை தாக்க சீனாவோ, வட கொரியாவோ அல்லது ஈரானோ தாக்க திட்டமிட்டுள்ளதாக நீங்கள் நினைக்கலாம். ஆனால் இந்த தாக்குதலை அமெரிக்காவின் மேல் நடத்த போவது அமெரிக்கர்கள் தான். இது ஒரு போர் தாக்குதல் அல்ல. ஆனால் அதைவிட வலிமையான பொருளாதார தாக்குதல். இந்த தாக்குதலை நடத்த இருப்பவர்கள் அமெரிக்காவில் பணி மூப்படைந்த முதியவர்கள்.புரியவில்லையா? தொடர்ந்து படியுங்கள் இந்த பதிவை!

அமெரிக்காவில் Baby Boomers என்று அழைக்க படும் தலைமுறை 1946 முதல் 1964 வரை பிறந்த மக்களை குறிப்பதாகும்.76 மில்லியன் குழந்தைகள் அந்த காலத்தில் பிறந்துள்ளனர். இரண்டாம் உலக போருக்கு பிந்தய அந்த கால கட்டத்தில் மக்கள் தொகை பெருக்க விகிதமும் பொருளாதார மேம்பாடும் அதிகம் இருந்த காலம். அந்த பேபி பூமர் தலைமுறையினர் தற்போது பணி மூப்படைந்து பென்ஷன் தொகையையும், அரசின் இலவச மருத்துவ சேவையையும் நம்பி பணி ஓய்வு வாழ்க்கையை தொடரபோகிறார்கள்.

பணி ஓய்வு பெற்றவர்களுக்காக அரசு அளிக்கும் இலவச மருத்துவ உதவியை(medicare) நம்பி இருக்கும் மக்களின் எண்ணிக்கை 4.7 கோடியிலிருந்து 8 கோடியை இன்னும் சில வருடங்களில் கடக்கும்.மத்திய அரசின் முதியோருக்கான உதவி தொகையை(Social Security) பெருபவர்கள் எண்ணிக்கை 4.4 கோடியிலிருந்து 7.7 கோடியை இன்னும் சில வருடங்களில் கடக்க இருக்கிறது. இந்த உதவிக்கெள்ளாம் பணியில் இருக்கும் போது மத்திய அரசிடம் பணத்தை கொடுத்தாலும், பெரும்பான்மையான பணத்தை அரசு வாங்கி நாட்டின் அடிப்படை கட்டமைப்பு, போர், பெரிய அரசாங்கம் போன்றவற்றிற்கு செலவிட்டு விட்டது.எனவே இந்த நிதியை அரசு தனது வருவாயிலிருந்து தான் செலவிடமுடியும். தற்போது அமெரிக்காவில் மக்கள் தொகை பிறப்பு விகிதம் மிக குறைவாக உள்ளது. அதன் விளைவு அரசின் வருமானம் குறைவாக வாய்ப்புள்ளது. அதாவது குறைவான மக்களின் உழைப்பில் அதிக மக்களின் தேவையை பூர்த்தி செய்ய வேண்டும்.இதன் விளைவாக அரசின் பற்றாக்குறை விண்ணை நோக்கி எகிற வாய்ப்புள்ளது. அமெரிக்காவின் மருத்துவ துறை முழுதும் தனியார் வசம் உள்ளதால் இந்த செலவினங்களை குறைப்பதும் மிக கடினம்.(தமிழகத்தில் மருத்துவ காப்பீடு அடிப்படையிலான தனியார் மருத்துவமனை சார்ந்த மருத்துவம் வளர்ந்து வருவது குறிப்பிட தக்கது)

இந்த பிரச்சனை மத்திய அரசோடு நிற்கவில்லை.அதிக அளவு பேபி பூமர்ஸ் மாநில அரசு ஊழியர்களும், நகர ஊழியர்களும் பணி ஓய்வு பெருவதால் மாநில அரசு மற்றும் நகரங்களின் நிதி நிலைமையும் கவலைக்குறியதாக மாற தொடங்கி உள்ளது. அது மட்டுமன்றி பொருளாதார வாட்டத்தால்,இதுவரை முதலீடு செய்யபட்டிருந்த ஓய்வூதிய பணத்திற்கான முதலீட்டின் மதிப்பும் அதிகளவு குறைந்து உள்ளதால் பிரச்ச்னையின் வேகம் அதிகமாகி உள்ளது.இதில் முக்கிய பிரச்ச்னை பெரும்பாலான ஓய்வூதிய கணக்கீடுகளை,முதலீடின் மேல் 8% லாபம் கிடைக்கும் என்ற ரீதியில் கணக்கிட்டு உள்ளனர். பெரும்பான்மையான காலங்களில் 8% லாபம் கிடைக்காது என்று அனைவருக்கும் தெரியும். இருந்தும் மாநில அரசுகள் மற்றும் நகர் அரசுகள் எவ்வாறு 8% கணக்கிட்டது என்பது வியப்பாக உள்ளதா? அங்கும் நம்மூர் சிட் பண்டு அதிகாரிகள் போல் பலர் தேனொழுக பேசி, புரியாத பொருளாதார மாடல்களையும் கணக்கையும் காட்டி 8% லாபம் பெற்று தரும் வகையில் முதலீடு செய்ய ஆலோசனை தருவதாக பேசி, பணத்தை வாங்கி பெருமளவு கட்டணத்தையும் வசூலித்து விடுவார்கள்.

இதனால் நகர மற்றும் மாநில அரசுகள் தங்கள் வருவாயில் பெருமளவு பென்சனுக்கு மட்டும் செலவிட வேண்டி இருப்பதால் நகர அடிப்படை கட்டமைப்பு வசதி மற்றும் சட்டம் ஒழுங்கு, கல்விக்கான செலவினங்களை குறைக்க வேண்டி வரும். இது அமெரிக்கர்களின் வாழ்க்கை தரத்தில் பெரிய மாறுதல்களை ஏற்படுத்த கூடும்.

அரசு பென்சன் உதவியையோ, முதியோருக்கான மருத்துவ உதவியையோ குறைத்து பற்றாக்குறையை சரி படுத்த முடியாதா? என்று கேள்வி கேட்க தோன்றும்.ஆனால் தற்போது 17% சதமாக இருக்கும் முதியோர்களின் ஓட்டு சிறிது சிறிதாக அதிகரித்து 26% கடக்க உள்ளது. மேலும் இளைஞ்சர்கள் முதியோர்களை விட அதிக அளவில் ஓட்டளிக்க செல்வார்கள். எனவே முதியவர்களுக்கான சலுகையை குறைத்து அவர்களின் கோபத்துக்கு ஆளானால் ஆட்சியை இழக்க வேண்டும்.

இந்த பேபி பூமர்ஸ் மக்கள் முதலாளித்துவத்தால்(1970 - 1990) நன்மை அடைந்தவர்கள். எனவே அவர்களின் மனதில் என்றுமே குடியரசு கட்சியின் பால் ஈர்ப்பு அதிகம். அவர்களின் மக்கள் தொகை பெருக்கம் குடியரசு கட்சிக்கு நன்மை தரும். ஆனால் தற்போது முதியவர்களின் சலுகைக்காக போராடுவது ஜனநாயக கட்சி தான். இந்த உண்மையின் தாக்கம் முதலாளித்துவத்தின் அபிமானத்தை விட அதிகமானால் அரசியல் கள நிலை மாறலாம்.மேற்சொன்ன காரணங்களால் அரசின் பற்றாக்குறை கட்டு படுத்த முடியாத அளவு அதிகமானால் அமெரிக்காவின் வல்லரசு நிலையும், பிற நாட்டின் மீதான தலையீடும் குறைய வாய்ப்பு அதிகம் உள்ளது.

அமெரிக்காவின் மற்றொரு பிரச்சனை அது வாங்கியுள்ள கடனுக்கு கட்ட வேண்டிய வட்டியின் மதிப்பு. தற்போதைய அமெரிக்க அரசின் கடனின் மதிப்பு $12 டிரில்லியன் ஆகும். தற்போது அந்த கடனுக்கு அது வட்டியாக செய்ய போகும் செலவு சுமார் $202 பில்லியன். 2019ம் ஆண்டு அமெரிக்கா தன் கடனுக்கு வட்டியாக கொடுக்க வேண்டிய மதிப்பு $700 பில்லியனை தாண்டும் என்று கணக்கிட பட்டுள்ளது. $700 பில்லியன் என்பது தற்போது அமெரிக்கா கல்வி, ஆற்றல், பாதுகாப்பு மற்றும் ஈராக்,ஆப்கானிஸ்தான் போருக்கு செலவிடும் பணத்தை விட அதிகம்.

இந்த தாக்குதலிலிருந்து அமெரிக்காவை தாக்க ஒரு வலிமையான ஆயுதம் உள்ளது. அதுதான் அமெரிக்க Federal Reserve Printing Press.தற்போது அமெரிக்க மத்திய அரசின் கடன் பிரச்ச்னையை தீர்க்கும் Fed, மாநில வங்கிகளை காக்குமா என்பது கேள்விகுறி. தனியார் வங்கிகளையும், பன்னாட்டு கம்பெனிகளையும் நிதி நெருக்கடியிலிருந்து மீட்டு கொடுத்த மத்திய ரிசர்வ் வங்கி தற்போது நிதி பிரச்ச்னையில் சிக்கி தவிக்கும் மாநில அரசுகளை காப்பாற்ற விருப்பம் இல்லை என்று கூறிவிட்டார்.

அடுத்த 10 - 20 ஆண்டுகளில் நடை பெற போகும் பொருளாதார மாற்றங்கள் தான் இதற்கு பதில் சொல்லும். 1970 வரை டாலருக்கு இணையாக தங்கத்தை வெளி நாடுகளுக்கு கொடுக்க ஒப்புதல் தெரிவித்திருந்த அமெரிக்க அரசு, நிக்சன் ஜனாதிபதியாக இருந்த போது அவ்வாறு தர முடியாது என்று உலகுக்கு அறிவித்திருந்தது .

--

Saturday, January 22, 2011

தமிழ்மணம் நட்சத்திர வாரம்

இந்த வாரம் நட்சத்திரமாக என்னை தமிழ்மணம் அறிவித்துள்ளது. பதிவுலகத்துக்கு நான் வந்ததுக்கும், என் பதிவு பலரை சென்றடைந்ததுக்கும் தமிழ்மணத்தின் பங்கு முக்கியமானது. தமிழ்மணத்தில் நட்சத்திர பதிவராக தேர்ந்தெடுத்திருப்பது மிகவும் மகிழ்ச்சிக்கு உரிய செய்தி.பேரியல் பொருளாதாரம்(Macroeconomics) மற்றும் விவசாயம் பற்றிய செய்திகள் தமிழ் பதிவுகள் மூலமாக தமிழர்கள் பலரை சென்றடைய வேண்டும் என்ற ஆசையில் பதிவை ஆரம்பித்தேன். நாம் இன்று விவாதித்து கொண்டிருக்கும் அரசியல் சமூக பிரச்சனைகளின் ஆணிவேர் உலகளாவிய Money Supply,Debt Creation போன்ற பல macroeconomics(பேரியல் பொருளாதாரம்) சம்பந்தமான துறைகளில் உள்ளது. நம்மில் பெரும்பாலோனோர் உலக பொருளாதாரம் மற்றும் அரசியல் கட்டமைப்பின் அடிப்படையான macroeconomics(பேரியல் பொருளாதாரம்) பற்றி அதிகம் தெரிந்து கொள்ள விரும்புவது இல்லை. இதற்கு காரணம் அந்த துறை மிகவும் dryயாக இருப்பதோ அல்லது நம்மால் அது பற்றிய எந்த மாற்றத்தையும் கொண்டு வர முடியாததாலோ இருக்கலாம்.என் பதிவுகளில் ஓரளவு உலக பொருளாதார நிகழ்வுகள் பற்றி எழுத முயற்சி செய்து கொண்டு உள்ளேன்.

இந்தியா விவசாய நாடு என்றாலும் தகவல் தொழில்நுட்பத்தின் பயன் விவசாயிகளை சென்றடையவில்லை. அதனால் விவசாயம் சார்ந்த பதிவுகள் மிகவும் அறிதாகவே உள்ளது.இன்னும் சில வருடங்களில் இந்த நிலை மாறும் என்னும் நம்பிக்கை உள்ளது. விவசாய தொழில்நுட்பத்திற்கு ஒரு பதிவு ஆரம்பிக்கவேண்டும் என்ற ஆசை வெகு நாளாக இருந்தது. என் கல்லுரி(நான் விவசாய கல்லூரியில் படித்தவன்) தோழர்கள் தற்போது தன்னார்வ தொண்டு நிறுவனங்கள்,ஆராய்ச்சி,வேளாண் தொழில் என பல துறைகளில் முக்கிய நிலைகளில் இருப்பதால் அனைவரையும் ஒன்றினைத்து மருதம் என்ற வேளாண் தொழில் நுட்பம் சார்ந்த பதிவை ஆரம்பித்தோம். ஆனால் அனைவராலும் வாரத்திற்கு சில நேரம் செலவு செய்து நல்ல பதிவுகளை தொடர்ந்து இட முடியவில்லை.உண்மையிலேயே விவசாயிகளை தகவல் தொழில்நுட்பம் சென்றடையும் போது பதிவுகளின் எண்ணிக்கையும் அதிகமாகும் என்ற நம்பிக்கை உள்ளது. அது வரை விவேக் சொல்வது போல் "யாருமே இல்லாத கடைக்கு யாருக்கு டீ ஆத்துர" என்கிற கதைதான்!

இந்த பதிவில் என் முந்தைய பதிவுகளில் அதிகம் பேர் படித்த ஒரு சில பதிவுகளின் தொடுப்பை கொடுக்கிறேன்.

1.பெட்ரோடாலர் பற்றி சில வருடங்களுக்கு முன் எழுதிய டாலர் அரசியல் என்ற பதிவு

2.சீனாவின் வளர்ச்சி பற்றி எழுதிய பதிவு

3.மெக்காலே கல்வி திட்டம் பற்றி எழுதிய பதிவு

4.கிழக்கு இந்திய கம்பெனி பற்றிய பதிவு

5.இந்திய வேளாண்மையை எதிர் நோக்கும் பிரச்சனை பற்றி பற்றி மருதத்தில் என் நண்பர்களின் அலசல்

6.எந்திரன் படம் பற்றிய நகைச்சுவை பதிவு

--

Tuesday, January 18, 2011

இந்தியா - ஈரான் - அமெரிக்கா - பெட்ரோல்

இந்தியாவின் பெட்ரோல் தேவையை பூர்த்தி செய்வதில் இரண்டாவது இடத்தை வகிப்பது ஈரான். அது இந்தியாவின் கச்சா எண்ணெய் தேவையில் 15% பூர்த்தி செய்கிறது. ஒபாமாவின் பதவி ஏற்ற பின் ஈரானுக்கு எதிரான பொருளாதார தடையை அமெரிக்கா தீவிரமாக அமுல் படுத்த தொடங்கி உள்ளது.

இந்தியா ஈரானிடமுருந்து எண்ணெய் வாங்கும் போது பணத்தை ஈரானிய வங்கி மூலமாக ஈரானுக்கு பைசல் செய்யும். இந்த பண பரிவர்த்தனையில் ஈடு பட்ட வங்கிகள் ஈரானிய அணு ஆயுத உற்பத்திக்கு உதவுவதாக அமெரிக்கா பல காலமாக குற்றம் சாட்டி வந்தது, இந்த பரிவர்த்தனையை நிறுத்த அமெரிக்கா கடுமையான அழுத்தத்தை இந்தியாவிற்கு கொடுத்து வந்தது. ஒபாமாவின் இந்திய விஜயத்தின் போது இந்த அழுத்தம் அதிகமானது. தற்போது இந்தியா அமெரிக்காவின் அழுத்தத்துக்கு பணிந்து ஈரானுடனான தற்போதைய பண பரிவர்த்தனையை நிறுத்துவதாக அறிவித்துள்ளது. அதற்கு மாற்றாக எதையும் பரிந்துரைக்கவில்லை. ஆனால் ஈரானுடனான கச்சா எண்ணெய் வர்த்தகம் மட்டும் தொடரும் என்று அறிவித்துள்ளது.

சில காலத்துக்கு முன் இந்தியாவின் எண்ணெய் தேவைக்காக ஈரானுடன் நெருங்கிய உறவை விரும்பிய மணி சங்கர் அய்யர், பெட்ரோலிய அமைச்சரவையிலிருந்து மாற்ற பட்ட விவகாரத்திலும் மேலை நாடுகளின் அழுத்தம் இருப்பதாக பரவலாக பேச பட்டது.

எண்ணெய் வளம் அதிகம் இருந்தாலும், எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் ஈரானில் மிகவும் குறைவு. எனவே தனது சுத்திகரிக்க பட்ட பெட்ரோல் தேவையை பிற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்து வந்தது. இந்தியாவை சேர்ந்த ரிலையன்ஸ் போன்ற நிறுவனங்கள் பெட்ரோலை ஈரானுக்கு ஏற்றுமதி செய்து வந்தது. தற்போது அமெரிக்காவின் வர்த்தக தடைக்கு பயந்து ரிலையன்ஸ் நிறுவனம் இந்த ஏற்றுமதியை நிறுத்தி விட்டது. இந்த இடத்தை தற்போது சீனா பிடித்து விட்டது.

ஈரானுக்கு எதிரான தடையை உலக நாடுகளுக்கு கடுமையாக பின் பற்ற அழுத்தம் கொடுத்தாலும் அமெரிக்கா, தன் நாட்டு கம்பெனிகளை ஈரான் போன்ற நாடுகளுடன் வர்த்தகம் செய்ய தற்போது அனுமதி அளித்து உள்ளது .

இனி இந்திய ஈரான் பெட்ரோல் வர்த்தக பிரச்சனைக்கு வருவோம். ஈரான் இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் விற்பதை நிறுத்தினால் இந்தியாவில் மிக பெரிய பெட்ரோல் தட்டுபாடு ஏற்படும். அதனால் மிக பெரிய அளவில் பெட்ரோல் விலை ஏற்றமும் ஏற்படும். அதுமட்டுமன்றி இந்தியா தன் 15% தேவைக்கு உலக எண்ணெய் மார்கெட்டை நோக்கி சென்றால் உலகளவில் கச்சா எண்ணெய் விலையும் அதிகமாகும். ஆனால் ஈரானுக்கு இந்தியாவுடனான வர்த்தகம் மிகவும் தேவையானது என்பதால் இந்திய - ஈரான் பெட்ரோல் வர்த்தகம் உடனடியாக தடை பட வாய்ப்பில்லை.

இந்த வர்த்தகம் தொடர புதிய பண பரிவர்த்தனை எப்படி நடப்பது? ஈரான் அதற்கு ஒரு வழிமுறை கூறி உள்ளது. அதன் படி ஈரானிய வங்கிக்கு ஐரோப்பாவில் உள்ள இந்திய ஸ்டேட் வங்கி கிளை மூலம் யூரோவில் கச்சா எண்ணெய்க்கான பணத்தை கொடுக்க வேண்டும்.

இதில் பிரச்ச்னை என்னவென்றால் இந்த பரிவர்த்தனையை இந்திய ஸ்டேட் வங்கி நடத்தினால், அமெரிக்காவால் இந்திய ஸ்டேட் வங்கியை தடை செய்ய வேண்டிய நிறுவனங்களின் பட்டியளில் சேர்க்க வாய்ப்புள்ளது! இந்த பரிவர்த்தனை நடக்காவிட்டால் இந்தியாவின் வளர்ச்சிக்கே பேராபத்து. இந்தியா இந்த பிரச்ச்னையை எப்படி கையாள போகிறது என்று உலகமே பார்த்து கொண்டுள்ளது.

இதில் முக்கியமாக கவனிக்க வேண்டியது ஈரான் கூறியுள்ள வர்த்தக முறை. இதன் படி எண்ணெய்க்கு மாற்றாக ஈரானுக்கு பணத்தை யூரோவில் கொடுக்க வேண்டும்.இது நாள் வரை இந்திய ஈரான் வர்த்தகம் டாலர் அடிப்படையில் நடக்கிறது. உலகளவில் பெரும்பாலான எண்ணெய் வர்த்தகம் டாலர் அடிப்படையில் ந்டக்கிறது. டாலரின் மதிப்பு அதிகமாக இருப்பதற்கு இதுவும் ஒரு காரணம். இந்த வர்த்தகம் யூரோ அடிப்படையில் நடக்க ஆரம்பித்தால் உலக வரலாற்றில் இது ஒரு முக்கியமான செய்தியாக இருக்கும். இதற்கு முன் ரஸ்யாவும் சீனாவும் டாலர் அடிப்படை இல்லாமல் வர்த்தகம் செய்ய முடிவு செய்துள்ளது குறிப்பிட தக்கது.

--

Saturday, January 15, 2011

பாதை மாறும் MicroCredit

Microcredit - இது சிலகாலம் வரை உலகில் ஏழ்மையை அழிக்க போகும் ஆயுதமாக அனைவராலும் கருத பட்டது. பங்களாதேஷை சேர்ந்த முகமது யூனசால் 1970களில் தொடங்கபட்ட ஒரு ரத்தமில்லா புரட்சி இந்த மைக்ரோகிரடிட். கிராமங்களில் ஏழ்மையில் வாடி வறுமை சக்கரத்தில் உழன்று கொண்டிருக்கும் ஏழை மக்களுக்கு தொழில் தொடங்க முதலீடு கொடுத்து, சேமிப்பை ஊக்க படுத்தி, தொழில் தொடங்கும் திறனை வளர்த்து, தலைமை பண்பை வளர்த்து மக்களை வறுமையின் பிடியில் இருந்து விடிவிப்பது தான் இந்த திட்டத்தின் நோக்கம். பசுமை புரட்சிக்கு பின் மாபெரும் வறுமை ஒழிப்பு திட்டமாக வெற்றி பெற்றது இந்த திட்டம். ஆசியா, ஆப்ரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளில் வெற்றிகரமாக செயல்படுத்த பட்டது.

நன்றாக போய் கொண்டிருந்த இந்த திட்டத்திற்கு தற்போது மாபெரும் நெருக்கடி வர ஆரம்பித்துள்ளது. இது வரை லாப நோக்கில்லாமல் நடந்து கொண்டிருந்த இந்த திட்டத்தின் மீது காளை மாட்டில் கூட பாலை கறக்கும் முதலாளிகளின் பார்வை விழுந்து விட்டது. அதன் விளைவு பெருமளவு லாபத்தை ஈட்ட மற்றும் லாபத்தை மட்டும் நோக்கமாக பெரிய அளவில் பணம் பெரு முதலாளிகளால் முதலீட்டாக அளிக்க பட்டது.அவர்களின் நோக்கமெல்லாம் லாபத்தை பார்ப்பது தான். அது மட்டுமன்றி இந்தியா மெக்ஸிகோ போன்ற நாடுகளில் பங்கு சந்தையின் மூலமும் மூலதனம் திரட்ட பட்டு புதிய மைக்ரோகிரடிட் கம்பெனிகள் ஆரம்பிக்க பட்டன. இதற்கு பின்னனியில் உலகின் பெரும் பணக்காரர்கள் கூட இருந்தார்கள். தங்கள் லாபத்தை அதிகரிக்க பெருமளவு வட்டிக்கு பணம் கொடுத்தனர். அதை வசூலிக்க அடியாள் பலத்தை உபயோகிக்க ஆரம்பித்தனர். அதன் விளைவு கந்து வட்டி வாங்கும் ரவுடிகளின் கடனுக்கு இணையாக இது மாறியது.

அது மட்டுமல்ல. மக்களின் தேவை அறியாமல் , மக்களால் திருப்பி கொடுக்க முடியாத அளவு பணத்தை கடனாக கொடுத்தனர். அந்த பணத்தை கொண்டு தொழில் தொடங்கி லாபம் அடையவும் வழி காட்டுவது இல்லை. அதன் விளைவு கடன் வாங்கியவர்களால் பெருமளவு திருப்பி கொடுக்க முடியவில்லை. ஆனால் அந்த நிறுவனங்கள் கடனை வன்முறையை ஏவி திருப்பி பெற முயன்றனர்.

அந்த நிறுவனங்களின் லாபம் பல மடங்கு பெருகியது. கடன் வாங்கிய ஏழைகளின் நிலையோ பரிதாபமாக மாறியது. ஒரு சில மாநில அரசுகள் கடுமையான முறையை பின் பற்றி பணத்தை வசூலிப்பதை தடை செய்யும் நிலைக்கு வந்தது.அதுமட்டுமன்றி பல பன்னாட்டு கம்பெனிகள் இந்த மைக்ரோகிரடிட் மற்றும் சுய உதவி குழுக்கள் கொண்டு தன் வளர்ச்சியை பெருக்கி கிராமம் மற்றும் சிறு நகரம் சார்ந்த தொழில்களை அழித்து வருவதாகவும் செய்திகள் வந்து கொண்டு உள்ளது கவனிக்க தக்கது.

இதில் முக்கியமாக கவனிக்க பட வேண்டிய செய்தி இந்தியாவில் தான் இந்த திட்டம் அதிக அளவு லாப நோக்கில் வணிகமயமாக்க பட்டுள்ளது.லாப நோக்கமுள்ள தனியார் நிறுவனங்களை ஏழை மக்களுக்கு கடன் உதவி தரும் வங்கி துறையில் ஈடு படுத்தினால் என்ன விளைவு ஏற்படும் என்பதற்கு இது ஒரு சிறந்த உதாரணம்.இந்த மாதம் மத்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள குறிப்பு படி இனி வரும் காலங்களில் இந்தியாவின் தனியார் துறையை வங்கி துறையில் ஈடுபடுத்தி கிராம புற மக்களின் கடன் தேவையை பூர்த்தி செய்ய போவதாக கூறியுள்ளது.

அமெரிக்காவில் தனியார் வங்கி துறையின் மூலம் வீட்டு கடன் கொடுக்க முயன்றதன் விளைவு சப் பிரைம் பிரச்சனை வந்தது. இந்தியாவில் லாப நோக்கிளான தனியார் துறையை மைக்ரோ கிரடிட்டில் ஈடுபடுத்தியதன் விளைவாக வறுமையின் பிடியிலிருந்து விடுவிக்க வேண்டிய திட்டம், ஏழைகளை வறுமையின் பிடியில் மாட்ட வைத்துள்ளது. வரலாற்றை மறந்து மீண்டும் ஒரு தவறு செய்வது நல்லதா? அல்லது தவறை திருத்த நினைப்பது நல்லதா என்பதை பற்றி ஆட்சியாளர்களும், அதிகார வர்க்கத்தினரும் சிந்திக்க வேண்டும்.