Friday, December 28, 2012

மங்கோலிய உணவகம் - Create Your Own Dish

ஒரு காலத்தில்  ஸ்டெப்பி புல்வெளிகளில் நாடோடிகளாக வாழ்ந்த மங்கோலியர்களின் உணவு வகைகளில் வேட்டையாட பட்ட விலங்குகளின் மாமிசம் முக்கிய பங்கு வகித்தது. பெரும்பாலும் வேட்டையாடபட்ட விலங்குகளை தீயில் வாட்டி அல்லது வேகவைத்து அப்படியே உண்ணும் பழக்கம் உள்ளவர்கள் மங்கோலியர்கள். மங்கோலியர்களின் உணவு வகைகளை அனைவரும் உண்ணுமாறு மக்கள்  ரசனைகேற்ப நூதன முறையில் "Create Your Own Dish" என்ற முறையை  மேலை நாடுகளில் அறிமுகபடுத்தி தங்களுக்கென்று ஒரு தனி தன்மையை ஏற்படுத்தி விட்டனர் மங்கோலியர்கள்.

மங்கோலிய உணவகங்களில் நுழைந்தவுடன் நீங்கள் கையில் இரண்டு கிண்ணங்களை எடுத்து கொள்ள வேண்டும். ஒரு கிண்ணத்தில் உங்களுக்கு பிடித்த மாமிச உணவுகளை வேண்டிய அளவு எடுத்து கொள்ள வேண்டும். சிக்கன்,ஆடு,மாடு,பன்றி இறால் என அனைத்து வகை மாமிசங்களும் வைக்க பட்டிருக்கும் .(கிண்ணம் கொள்ளும் அளவு மட்டும்!) உங்களுக்கு பிடித்த மாமிசத்தை வேண்டிய அளவு எடுக்களாம். சைவ உணவு உண்போர் வேண்டிய அளவு நூடுள்ஸ் எடுத்து கொள்ளளாம்.

காய் கறிகளும், மாமிசங்களும்
 
அடுத்து காய்கறிகளின் பகுதி. இங்கு கேரட்,பிராகோலி,வெங்காயம், பீன்ஸ் முலை, டோபு,காளான், செலரி என பல காய்கறிகள் குவிந்திருக்கும். இன்னொரு கிண்ணத்தில் வேண்டிய காய்கறிகளை நிரப்பி கொண்டு அடுத்த முக்கிய பகுதிக்கு செல்ல வேண்டும்.மாமிச பிரியர்கள் இரண்டு கிண்ணத்திலும் மாமிசத்தை எடுத்து கொள்ளளாம். உங்கள் விருப்பம் போல் அங்கு உள்ள எந்த காய் கறி மற்றும் மாமிசத்தையும் இரண்டு கிண்ணங்களில் நிரப்பி கொள்ளளாம்.
 
அடுத்து பலவகை Sauceகள் வரிசையாக அடுக்கி வைக்கபட்டிருக்கும். இனிப்பு, உரைப்பு,புளிப்பு என அனைத்து வகை களும் இங்கு இருக்கும். உங்களின் விருப்பம் போல் வேண்டிய sauceயை வேண்டிய அளவு எடுத்து உங்கள் உணவின் சுவையை நீங்களே முடிவு செய்யலாம்.

எத்தனை வகையான Sauce! Decide பண்றது ரொம்ப கஷ்டம்!

அங்கு இருக்கும் ஒரு சில sauce வகைகள் இனிப்பு மற்றும் புளிப்பு sauce  ,அதி கார sauce  ,தேன் சார்ந்த இனிப்பு sauce ,சிப்பி sauce  ,கரி sauce  ,இஞ்சி சாறு, பூண்டு சாறு,சோயா sauce  மற்றும் பல!.  அது தவிர பார்பிக்யூ எண்ணெய், நல்லெணெய், கார எண்ணெய் என பல்வேறு எண்ணெய்களும் உள்ளன.
நமது சுவைகேற்ப தேவையான sauce மற்றும் எண்ணெய்களை வேண்டிய அளவு கிண்ணங்களில் கலந்து கொண்டு அடுத்த பகுதிக்கு செல்ல வேண்டும்.

உங்கள் இரண்டு கிண்ணங்களை அடுத்த பகுதியில் இருக்கும் சமைப்பவரிடம் கொடுத்தால் அவர் கிண்ணத்தில் உள்ள உணவு பொருட்களை ஒன்றாக கலந்து சூடான கல்லில் (நம்ப ஊர் கொத்து பரோட் டா கல் போல ) கொட்டி சுமார் 2 - 3 நிமிடங்கள் நம் கண் முன்னே சமைத்துஒரு பெரிய கிண்ணத்தில் போட்டு கொடுப்பார்.
கண் முன் சமையல்

உணவு ரெடி!

ஒருவர் நிறைவாக உண்ண கூடிய அளவுக்கு உணவு இருக்கும். அது மட்டுமன்றி ,நூடுள்ஸ்,Fried Rice,Spring rolls,  சமைத்து வைக்க பட்ட பல்வேறு மாமிச வகைகளும், சூப் வகைகளும் வேண்டிய அளவு எடுத்து கொள்ளளாம்.

இன்ன பிற

ஒரு வகையான நூடுள்ஸை நமது சுவைகேற்ப தயாரித்து உண்பது போல் ஒரு அனுபவம் கிடைக்கும். பொதுவாக உணவகங்களில் உண்டபின் உப்பு சரியில்லை, உரைப்பு சரியில்லை, புளிப்பு தூக்கல் என குறை கூறும் வழக்கம் உள்ளவர்கள் இங்கு ஒன்றும் சொல்ல முடியாது. ஏனெனில் இங்கு நீங்கள் தான் Chef!

பின் குறிப்பு - தீவிர சைவ உணவு முறையை பின் பற்றுவோருக்கு ஏற்ற உணவகம் மங்கோலிய உணவகம் இல்லை. ஏனெனில் உங்கள் கண் முன்னே மாமிச உணவு சமைத்த கல்லிலேயே உங்கள் சைவ உணவையும் சமைப்பார்கள்! மற்ற உணவகங்களின் சமையல் எப்படியோ?. ஏனென்றால் அதை நாம் பார்க்க இயலாது.இங்கு நாம் கண் முன்னே பார்க்கின்றோம்.
 

Sunday, December 16, 2012

தீயணைப்பு நிலையத்தில் ஒரு நாள்


சிறுவயதில் சிகப்பு நிறம் என்றவுடன் மனதில் நினைவிற்கு உடனே வருவது தீயணைப்பு வண்டியாகத்தான் இருக்கும். வளர்ந்தவுடன் தீயணைப்பு வீரர்களின் சாகசத்தை படித்த போதும், தொலைகாட்சிகளில் பார்த்த போதும் அவர்கள் மீது மரியாதையும் ஆச்சர்யமும் ஏற்பட்டது. எனது குழந்தையிடம் வளர்ந்தவுடன் என்னவாக ஆக நினைக்கிறாய் என்று பள்ளியில் கேட்ட போது முதலில் சொன்னது தான் ஒரு தீ அணைப்பு வீரராக ஆக வேண்டும் என்பதே!. தற்போதைய கிறிஸ்துமஸ் விழா நாட்களில் எங்கள் வீட்டுக்கு அருகில் உள்ள தீயணைப்பு நிலையத்தில் "Holiday with Santa" என்ற  நிகழ்ச்சியை நடத்தி அதன் மூலம் வரும் வருமானத்தை தொண்டு நிறுவனங்களுக்கு கொடுக்க முடிவு செய்திருந்தார்கள். தீயணைப்பு நிலையத்திற்கு செல்ல வேண்டும் என்ற என் மகளின் நீண்ட நாள் ஆசையை நிறைவேற்ற இது ஒரு நல்ல தருணமாக அமைந்தது. தீயணைப்பு நிலையத்தில் கண்ட மற்றும் கேட்ட செய்திகளை இந்த பதிவில் இட்டால் உபயோகமாக இருக்கும் என்று நினைத்ததால் இந்த பதிவிடுகிறேன்.
Santa உடன் தீயணைப்பு நிலையத்தில் ஒரு நாள்

பழைய தீயணைப்பு வண்டி


ஒவ்வொரு தீயணைப்பு நிலையத்திற்கும் ஒரு குறியீட்டு எண் இருக்கும். அந்த எண், தீயணைப்பு வீரர்களின் சாதனங்களில் இருக்கும். தீயை அணைக்கும் போது எந்த வீரர் எந்த வாகனம்/பகுதியிலிருந்து வந்தவர் என்று தூரத்திலிருந்தே அறிந்து கொள்ள இது உதவும்.

தீயணைப்பு வீரரின் உடை பிரத்யோகமாக வடிவமைக்க பட்டிருக்கும். அது தீ மற்றும் புகையிலிருந்து வீரரை காப்பாற்ற மிகவும் உதவிகரமாக இருக்கும். அவர்களின் உடை சுமார் 40 பவுண்டுகள் இருக்கும். விபத்து பற்றிய செய்தி கிடைத்தவுடன் இந்த உடையை சுமார் 30 வினாடிகளில் அணிய வேண்டும். அதற்கு ஏற்றார் போல் தங்கள் உடையை turnouts என்று சொல்ல கூடிய வகையில் திருப்பி வைத்திருப்பார்கள். அது மட்டுமின்றி இந்த உடையுடனேயே அவர்களுடைய பூட்சும் இணைந்திருக்கும். எனவே பூட்சுக்குள் காலைவிட்டு உடையை மேலே விரைவாக இழுத்து கொண்டு , குறுகிய நேரத்தில் தங்களை தாயார் படுத்தி கொள்வர்.

Boots உடன் இணைந்த உடை

தீயணைப்பு வீரரின் தலை கவசத்தில் விளக்கு பொருத்த பட்டிருக்கும். இருட்டில் விபத்தில் சிக்கியுள்ளவர்களை கண்டு பிடிக்க உதவும். சாதாரண தொப்பிகளில் சூரிய ஒளியிலிருந்து காத்து கொள்ள முன்பகுதியில் நீண்டிருப்பதை போல தீயணைப்பு வீரரின் தலை கவசத்தின் பின் பகுதி நீண்டிருக்கும். இது மேலிருந்து விழ கூடிய தீ மற்றும் பிற பொருட்கள் அவர்கள் தோள் பட்டை மற்றும் முதுகு பகுதியில் விழாதவாறு காக்கும்.

முக கவசம்

தீயணைப்பு வீரரின் முக கவசம் மேல் அணிய கூடிய அங்கியின் (hood) பெயர் Nomex hood  அது தலை கவசம் மற்றும் முகமூடியால் மறைக்க முடியாத பகுதியை தீ மற்றும் அனலிலிருந்து காக்க உதவுகிறது.

Nomex hood

தீயணைப்பு வீரர்கள் உபயோகபடுத்தும் ஆக்சிசன் சிலிண்டர் போல் தோற்றம் அளிக்கும் சிலிண்டரில் சாதாரண காற்று தான் அடைக்க பட்டிருக்கும். இதற்கு Self-Contained Breathing Apparatus   என்று பெயர். இது சிலிண்டர், அழுத்தத்தை கட்டு படுத்த கூடிய வால்வு மற்றும் முக கவசம் ஆகிய மூன்றும் சேர்ந்ததாகும். இந்த சிலிண்டரில் உள்ள வாயு சுமார் 45 நிமிடத்துக்கு மட்டும் போதுமானதாகும். கடுமையான புகை மற்றும் பிற விஷ வாயுக்களிலிருந்து பாதுகாக்க இது உதவும்.

Self-Contained Breathing Apparatus  

முக கவசத்தில் ஒலி பெருக்கி பொருத்த பட்டிருக்கும். இது அவர்கள் பேசுவதை மற்றவர்கள் கேட்க உதவும். தீ அணைப்பு வீரருக்கு ஆபத்து ஏற்பட்டு நகர முடியாத சூழ்னிலை ஏற்படும் போது  Scott Electronic Management System என்ற கருவி ஒலி எழுப்ப ஆரம்பிக்கும். அதன் மூலம் ஆபத்தில் இருக்கும் வீரரை பிறர் தேடி கண்டுபிடித்து காப்பாற்ற உதவும்.இந்த நிகழ்ச்சியின் போது குழந்தைகளிடம் தீயணைப்பு வீரர்கள் அன்புடன் பழகி, அவர்கள் கேள்விகளுக்கு பதிலளித்து அவர்கள் உடைகள் மற்றும் கவசத்தை தொட்டு பார்க்க அனுமதித்து, அவர்களுக்கு பிடித்த திண் பண்டங்களை கொடுத்தும் நட்புடன் பழகினர்.குழந்தைகளை தீயணைப்பு வண்டியில் ஏறி சென்று பார்க்கவும் அனுமதித்தார்கள்.


வாங்க நட்புடன் பழகலாம்!

பொதுவாக தீ விபத்து நடக்கும் இடத்தில் மாட்டி கொண்டுள்ள குழந்தைகள் தீயணைப்பு வீரர்களின் உடை மற்றும் கவசங்களை கண்டு அஞ்சி ஓடவோ அவர்களிடமிருந்து மறைந்து கொள்ளவோ வாய்ப்பு அதிகம். இது போன்ற நிகழ்ச்சிகள் மூலம் குழந்தைகள்  தீயணைப்பு வீரர்களிடம் நட்புடன்,அவர்கள் கவசத்தை கண்டு அஞ்சாமல், பழக்கபடுத்தி கொள்ள உதவுகிறது. விபத்து தருணங்களில் குழந்தைகள் உடனையாக அவர்களை அடையாளம் கண்டு கொள்ள உதவியாக உள்ளது.

செய்முறை விளக்கம் .

அது மட்டுமின்றி தீ விபத்து நடக்கும் போது குழந்தை மறைந்திருப்பது போல் மறைய வைத்து எவ்வாறு குழந்தையை காப்பாற்றி வருவார்கள் என்று நடைமுறை பயிற்சி செய்து காட்டினர். 

தீ விபத்தின் போது கடை பிடிக்க வேண்டிய ஒரு முக்கிய குறிப்பையும் சொன்னார்கள்.  தீ விதத்தில் புகை எப்போதும் மேல் நோக்கி செல்வதால் தரையில் குனிந்தபடியே தவழ்ந்து தவழ்ந்து பாதுகாப்பான பகுதிக்கு  செல்ல வேண்டும்.

--

Wednesday, December 05, 2012

எழில் மிகு ஹவாய் 6 - பசுமை அழகு

ஹவாய் என்றவுடன் அனைவரின் மனதிலும் முதலில் வருவது கடல் மற்றும் நீர் விளையாட்டுகள் தான்.ஆனால் ஹவாய் தீவின் பசுமை கொஞ்சும் இயற்கை அழகை வார்த்தையால் வர்ணிக்க முடியாது.ஜுராசிக் பார்க் திரைபடத்தில் வரும் அடர்ந்த காடும் அருவிகளும் ஹவாய் தீவில் (கௌவா'யி kaua'i) தான் படமாக்க பட்டன.பெருந்தீவின் மேற்கு கடற்கரை பகுதியான கோனா கடற்கரை பகுதி வறண்ட வானிலையுடன் கடல் சார்ந்த விளையாட்டுகளுக்கு ஏற்றதாக இருக்கும். பெருந்தீவின் கிழக்கு பகுதி பெரு மழை பொழிவுடன் அடர்ந்த வெப்ப மண்டல மழை காடுகளை கொண்டதாக உள்ளது. உலகில் உள்ள 13 வகையான சீதோஷ்ண மண்டலங்களில் 11 வகையான சீதோஷ்ண மண்டலங்கள் பெருந்தீவில் உள்ளன. அதன் விளைவாக பாலைவன செடிகளையும் காணலாம். அழகிய புல்வெளிகளையும் காணலாம். தோட்ட பயிர்களையும் காணலாம். அடர்ந்த காடுகளையும் காணலாம். இவை அனைத்தையும் 4000 சதுர மைல்களுக்குள்ளே கண்டு களிக்க முடியும். பெருந்தீவு முழுவதையும் சுற்றி காண்பிக்க ஒரு நாள் பேருந்து மூலம் செல்லகூடிய டூர் வசதி உள்ளது. அந்த சுற்றுல்லாவில் சென்றால் சுமார் 30 நிமிடத்துக்கு ஒன்றாக புது புது சீதோஷ்ண நிலையை காணமுடியும். அவ்வாறு செல்லும் போது வெயில்/குளிர்/மழை அனைத்தையும் தாங்க கூடிய வெவ்வேறு வகை உடைகளை ஒன்றன் மேல் ஒன்றாக அணிந்து செல்வது நலம்!

 

பெருந்தீவின் கிழக்கு கடற்கரை பகுதியில் காரில் சென்றாலே கண்ணுக்கினிய வெப்பமண்டல காடுகளை ரசித்து கொண்டே செல்லலாம். ஹெலிகாப்டர் சுற்றுல்லா மூலம் வானிலிருந்து இயற்கை அழகை கண்டு மகிழலாம்.பெருந்தீவின் மிக பெரிய நீர்வீழ்ச்சியான அகாஅகா நீர்வீழ்ச்சியை காரில் சென்று பார்க்கலாம். நீர்வீழ்ச்சிக்கு அருகில் சென்று பார்க்க வேண்டுமானால் கடினமான டிரக்கிங் செய்து மலை/காடுகளின் வழியே நடந்து தான் பார்க்க வேண்டும். கம்பி சருக்களில் சறுக்கிய படியே zipline மூலம் அகாஅகா நீர்வீழ்ச்சியின் அழகை மற்றுமொரு கோணத்தில் காண்பது மறக்க முடியாமல் இருக்கும்.பெருந்தீவில் நீர்வீழ்ச்சிகளின் எண்ணிக்கைக்கும் அழகுக்கும் குறைச்சல் இல்லை. கிழக்கு கடற்கரை பகுதி முழுவதும் கணக்கிலடங்கா நீர்வீழ்ச்சிகள் உள்ளன. ஆனால் இவற்றில் பலவற்றை மலையேற்றம் மூலம் தான் அடைய முடியும்
 
 
அகாஅகா நீர்வீழ்ச்சி
 
வானவில் நீர்வீழ்ச்சி
 பெருந்தீவின் பசுமை அழகை முழுமையாக கண்டுகளிக்க செல்ல வேண்டிய இடம் வைப்பியோ பள்ளதாக்கு(Waipio Valley).ஹவாய் பூர்வ குடியினரின் முக்கிய அரசியல் மற்றும் கலாச்சார மையமாக திகழ்ந்தது இந்த பள்ளதாக்கு.தாஜ்மகாலை பார்த்தவுடன் எப்படி மனதிற்குள் ஒரு பிரமிப்பு ஏற்படுமோ அது போல் வைப்பியோ பள்ளதாக்கை பார்த்தவுடன் மனதுக்குள் ஒரு பிரமிப்பு ஏற்படுவது தவிர்க்க முடியாதது.நீல நிற கடற்கரை ஓரத்தில் பசுமையான புல்வெளிகளும், அதனருகில் பசுமையான மலையும் அதிலிருந்து கடல் நோக்கி வீழும் மிக பெரிய நீர் வீழ்ச்சியையும் காண கண் கோடி வேண்டும்.இந்த பள்ளதாக்கை முழுமையாக கண்டுகளிக்க வைப்பியோ பள்ளதாக்கு பார்வையாளர் பகுதிக்கு (Waipio valley lookout) காரில் பயணித்து சென்று பார்க்களாம்.இந்த பள்ளதாக்கினுள் செல்ல சாதாரண கார்களால் முடியாது. கனரக மோட்டார் வாகனங்களை கொண்டு ATV (All-terrain vehicle) சுற்றுல்லா அழைத்து செல்ல குழுக்குள் உள்ளன.இதன் மூலம் நீங்களே இந்த வாகனங்களை புல்வெளிகள், அடர்ந்த காடுகள் வழியே ஓட்டி சென்று இயற்கை அழகை கண்டு ரசிக்க முடியும். இந்த சுற்றுல்லாவிற்கு பொருள் செலவு அதிகமானாலும் இயற்கை ஆர்வலர்கள் கண்டிப்பாக தவறவிட கூடாத ஒன்று.(2 வயதிற்கும் குறைவான குழந்தைகளை அழைத்து செல்ல முடியாததால் என்னால் இந்த சுற்றுல்லாவில் செல்ல இயலவில்லை).

சோக சரித்திரம்

ஹவாய் தீவின் பசுமை அழகை என்ன தான் ரசித்தாலும் அதன் பின்னனியில் உள்ள சரித்திரத்தை பார்த்தால் வருத்தம் தான் மிஞ்சும். ஹவாய் தீவு பசுபிக் பெருங்கடலின் நடுவே பிற நிலபரப்புகளால் எளிதில் நெருங்க முடியாத அளவு தனித்து அமைந்துள்ளது. பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன் தென் கிழக்கு ஆசியாவிலிருந்து பெர்ன் செடியின் ஸ்போர் பல்லாயிரம் மைல்கள் காற்றில் பயணித்து எரிமலை லாவா படிமத்தில் விழுந்து உயிரின தோற்றத்தை ஏற்படுத்தியது. பூச்சிகளும்,விதைகளும் சிலந்திகளும் காற்றின் மூலம் ஹவாயை அடைந்தது.இடம்பெயர் பறவைகள் விதைகளையும், கடல் மூலம் உப்பு எதிர்ப்பு தன்மை கொண்ட விதை, செடி, பூச்சிகளும் இத்தீவை வந்தடைந்தன. சுமார் 32 மில்லியன் ஆண்டுகளாக பரிணாம முறைபடி புது புது வகையான உயிர்கள் தோன்றின. அதாவது சுமார் 30 வகை வெளியூர் பறவையிலிருந்து 110 வகை பறவைகள் பரிணமித்தன.280 பூக்கும் செடியிலிருந்து1100 வகை செடிகள் தோன்றின.

உலகின் பிற பகுதியிலிருந்து வந்த உயிரிணங்கள் இங்கு தனக்கு மிக சில எதிரிகளே(Predator and parasite) இருக்கும் சூழ்நிலையில் வளர்ந்தன்.அதன் விளைவாக எதிரிகளிடமிருந்து தங்களை தற்காத்து கொள்ளும் பரிணாம தகவமைப்புகள் அவைகளுக்கு தேவையில்லாமல் இருந்தது. அதன் விளைவாக புதிதாக தோன்றிய உயிரிணங்கள் அந்த தகவமைப்புகளை இழக்க தொடங்கின. உதாரணமாக பறக்கவே முடியாத பறவைகளும், வாசனையையே வெளிபடுத்தாத stink bug போன்றவைகளும் தோன்றின,


காட்டு இஞ்சி
சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் பாலினேசியன் மக்கள் இந்த தீவிற்கு வர ஆரம்பித்த பின் நிலமை மாற ஆரம்பித்தது. காடுகள் அழிக்க பட தொடங்கின. அவர்கள் கொண்டு வந்த மிருகங்களும், செடிகளும் பல்கி பெருகின. அதன் சூழியல் விளைவு மோசமாக இருந்தது. உதாரணமாக பாலினேசியன் மக்களின் பன்னிகள் பெர்ன்(fern) செடிகளையும், ஒகியா காடுகளையும் அழித்தன. பன்னிகள் கூடாரத்திலிருந்து பல்கி பெருகிய கொசுக்கள் பறவை மலேரியா மற்றும் பிற நோய்களை பறவைகளுக்கு பரப்பின. பூனை, எலி போன்றவை பறவைகள் மற்றும் முட்டையை தின்று தீர்த்தன. காட்டு இஞ்சி போன்ற செடிகள் விரைவாக பெருகி உள்ளூர் செடிகளை அழித்தன.அதன் பிறகு ஐரோப்பிய மகக்ளின் வருகைக்கு பிறகு ஏற்பட்ட இயற்கை அழிவு பற்றி எழுத தேவை இல்லை.கடந்த சில நூற்றாண்டுகளில் கரும்பு தோட்டத்தை மிக பெரிய அளவில் ஏற்படுத்த காடுகள் அழிக்க பட்டது. ஜப்பான், பிலிபைன்ஸ் போன்ற நாடுகளில் இருந்து தொழிலாளர்கள் கொண்டு வரபட்டனர். இந்த பேரழிவுகளையும் மீறி மிஞ்சிய உயிரினங்களும், அறிமுக படுத்த பட்ட செடி கொடிகளின் அழகுமே மறக்க முடியாததாக இருக்கிறது என்றால் மிகையாகாது.

ஹவாய் தாவரவியல் பூங்கா

உலகில் பல்வேறு வெப்ப மண்டல காடுகளில் வளரும் அழகிய ஆர்கிட்கள் மற்றும் மலர் செடிகளை ஹவாய் தாவரவியல் பூங்காவில் வைத்துள்ளனர். வித விதமான, பல்வேறு  வண்ண மய மலர்கள் மனதை மயக்கும் வண்ணம் உள்ளன. இந்த பூங்கா கடற்கரை ஓரம் மலையை ஒட்டி ரம்மியமான சூழ்நிலையில்  அமைந்து உள்ளது.சுமார் 125 தாவர குடும்பத்தை சேர்ந்த 2000க்கும் மேற்பட்ட செடிவகைகள் இங்கு உள்ளன.
மொத்தத்தில் ஹவாய் பெருந்தீவு இயற்கை ஆர்வலர்களின் ஆசையை முழுமையாக பூர்த்தி செய்யும் என்பதில் சந்தேகமே இல்லை.

இந்தியாவில் உள்ள மனுதர்மத்தை ஒத்த  வர்ணாசிரம முறை ஹவாய் பழங்குடியினரிடமும் இருந்தது. ஹவாய் பழங்குடியினரின் மத நம்பிக்கையை பற்றி பிரிதொரு பதிவில் காண்போம்

முந்தய பதிவு

எழில் மிகு ஹவாய் - 5 எரிமலை எப்படி வெடிக்கும்?
--

Wednesday, November 28, 2012

எழில் மிகு ஹவாய் - 5 எரிமலை எப்படி வெடிக்கும்?


பருவ நிலை மாற்றத்தால் பல தீவுகள் தண்ணீரில் மூழ்க போவது  அனைவரும் அறிந்ததே. ஆனால் ஒரு தீவு தற்போது தனது பரப்பளவில் விரிந்து வருகிறது என்ற செய்தியை கேட்டால் ஆச்சரியமாக இருக்கிறதா? ஆம். ஹவாய் பெருந்தீவு தனது பரப்பளவில் விரிந்து வருகிறது. அதற்கு காரணம் அங்கு உள்ள எரிமலை  வெடித்து வெளியாகும் குழம்பு கடலில் கலந்து நிலபரப்பை அதிகரிக்கிறது. உலகில் உள்ள ஒரு சில செயல் திறன் உள்ள எரிமலைகளில் ஹவாய் பெருந்தீவில் உள்ள எரிமலையும் முக்கியமானது.

எரிமலை பற்றிய செய்திகளை பாடத்திலும், ஊடகங்கள் மூலமும் சிறு வயதிலேயே கேள்வி பட்டிருப்பதால் எரிமலையை காணும் ஆசை எப்போதும் மனதில் இருந்து கொண்டே இருப்பதில் வியப்பில்லை.  உலகிலேயே மிக பெரிய எரிமலையான மோன லோவா எரிமலையும், .உலகில் உள்ள மிக பெரிய செயல் திறன் உள்ள எரிமலைகளாகிய மோன லோவா மற்றும் கிளோவியா எரிமலைகளும் ஹவாய் தீவின் பெருந்தீவில் உள்ளது. இந்துக்கள் இயற்கை சக்திகளை பஞ்ச பூதமாக வழி படுவதை போல ஹவாய்  பழங்குடியினரும் இயற்கை சக்திகளை வழி பட்டனர். அவர்களின் எரிமலைக்கான (நெருப்பு) கடவுளின் பெயர் பீலே.கிளோவியா எரிமலை தான் கடவுளின் உடலாக கருதபடுகிறது.ஹவாய் பழங்குடி இனத்தவரின் மதத்திற்கும் இந்து மதத்திற்கும் பல ஒற்றுமை உள்ளது. அது பற்றி பிரிதொரு பதிவில் விரிவாக எழுதுகிறேன்.

உலகிலேயே மிக பெரிய மலையான மோனலோவா மலை சுமார் 19000 கன மைல்கள் கொள்ளளவு கொண்டது. கடல்  மட்டத்திற்கு கீழே உள்ள அதன் அடி பகுதியிலிருந்து  அதன் உயரத்தை கணக்கிட்டால் அது சுமார் 56000 அடிகள்(17000 மீ) ஆகும். அதாவது எவரெஸ்ட் சிகரத்தை விட சுமார் 27000 அடிகள் உயரமானது.

ஹவாய் தீவில் உள்ள இந்த எரிமலைகளை கண்டு களிக்க பல்வேறு வழிமுறைகள் உள்ளன. அமெரிக்க அரசாங்கம் கிளோவியா  எரிமலை பகுதியில் எரிமலை தேசிய பூங்காவை அமைத்து உள்ளது. அங்கு பார்வையாளர்கள் அரங்கமும் அதனுள் எரிமலை அருங்காட்சியகமும் உள்ளது.எரிமலை பற்றிய அறிவியல் பூர்வமான செய்திகளை இங்கு காணலாம். பார்வையாளர்கள் அரங்கத்திற்கு வெளியில் இருந்து பார்த்தால் தற்போது ஆயத்த நிலையில் உள்ள ஒரு எரிமலையை பார்க்களாம். எரிமலையிலிருந்து வெளியாகும் கந்தக வாயுவை  அருகில் இருந்து பார்க்களாம்.

எரிமலை தேசிய பூங்கா பார்வையாளர் அரங்கிலிருந்து எரிமலை 


எரிமலை சார்ந்த பகுதிகளில் சுமார் 36 மைல் சுற்று வட்ட பாதையில் மோட்டார் வாகனத்தில் பயணித்த படியே கண்டுகளிக்களாம். அதனால் இந்த எரிமலையை Drive-in எரிமலை என்று கூட சொல்லலாம். அந்த பாதையில் ஆங்காங்கே நிலத்திலிருந்து வெளியாகும்  கந்தக வாயுவையும், எரிமலையிலிருந்து வெளியேறிய குழம்பு  நில பரப்பில் குவிந்து கிடப்பதையும் பார்க்களாம். பல வருடங்களுக்கு முன்னர் எரிமலை வெடித்த போது எரிமலை குழம்பு சீறி பாய்ந்த எரிமலை லாவா குழாய்கள்(lava tube) தற்போது குளிர்ந்து குடைய பட்ட குகைகள் போல உள்ளது. ஒரு காலத்தில் எரிமலை குழம்பு பாய்ந்த அந்த எரிமலை குழாய் வழியில் நாம் இப்போது நடந்து சென்று  பார்க்கவும் வாய்ப்பு உள்ளது.
லாவா குழாய்கள்

அது மட்டுமின்றி டிரக்கிங் செய்ய விருப்பம் உடையவர்களுக்கும், கேம்பிங் செய்ய விருப்பம் உடையவர்களுக்கும் அதற்கான வாய்ப்பு உள்ளது.

நிலம் மூலம் எரிமலையை பார்த்தால் ஓரளவிற்கு தான் பார்க்க முடியும்.
புகை படங்களிலும். வீடியோக்களிலும் காண்பது போன்ற சீறி பாயும் எரிமலையை காணலாம் என்ற நினைப்போடு எரிமலையை  காண சென்றால் ஏமாற்றம் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். எப்போதாவது ஒரு சில சமயங்களில் தான் எரிமலையிலிருந்து லாவா போக்கு அதிகம் இருக்கும். பெரும்பாலான சமயங்களில் எரிமலை குழம்பு சிறிய அளவே இருக்கும்.அவ்வாறு குறைவான எரிமலை குழம்பு இருக்கும் நேரத்தில் எரிமலையை ஓரளவு நன்கு பார்க்க வேண்டுமானால் ஹெலிகாப்டர் பயணத்தின் மூலம் தான் பார்க்க முடியும்.எரிமலையின் முழுமையான பார்வை கிடைக்க ஒரே வழி  எரிமலைக்கு நேர் மேலே வானத்திலிருந்து  பார்ப்பது தான். ஹெலிகாப்டர் பயண செலவு அதிகமாக இருந்தாலும் வாழ்நாளில் எப்போதாவது ஒரு முறை கிடைக்கும் இந்த வாய்ப்பிற்காக செலவழிப்பதில் தவறில்லை என்று முடிவெடுக்க தோன்றியது.எரிமலை உள்ள ஹீலோ பகுதியில் பெரும்பான்மையான நேரங்களில் மேக மூட்டத்துடன் காணபடும். மேக மூட்டம் உள்ள நேரத்தில் ஹெலிகாப்டரிலிருந்து பார்த்தால் கூட எரிமலை தெளிவாக தெரியாது. அதிர்ஷ்டவசமாக நாங்கள் சென்ற நேரத்தில் மேக மூட்டம் இல்லாமல் இருந்ததால் எரிமலையை நன்றாக தரிசிக்க வாய்ப்பு கிடைத்தது.

ஹீலோ விமான நிலையம் மற்றும் கோனா விமான நிலையத்திலிருந்து  ஹெலிகாப்டர் மூலம் சுமார் 1- 2 மணி நேரத்திற்கு எரிமலை பகுதிகளை சுற்றி பார்க்கவும், எரிமலையின் நேர் மேலேயிலிருந்து பார்த்து ரசிக்கவும் வழி வகை உள்ளது.ஹவாய் பெருந்தீவின் எரிமலையையும், அழகிய கடற்கறை பகுதிகளையும்,நீர் வீழ்ச்சிகள் நிறைந்த அடர்ந்த காட்டு பகுதிகளையும் பறவையை போல் வானத்தின் மேலிருந்து பார்த்து ரசிப்பது வாழ்நாளின் மறக்க முடியாத அனுபவம் என்றால் மிகையாகாது.

Bird's Eye View
எரிமலை குழம்பு படர்ந்த இடம்
விரியும் தீவு - அமெரிக்காவின் தென் முனை

பழைய எரிமலை( crater)

மலை அருவி
ஹவாயின் கடற்கரை அழகையும் , எரிமலை பற்றியும் பார்த்து விட்டோம். இனி வரும் பதிவில்  ஹவாயின் பசுமை அழகை பற்றி பார்ப்போம்.


முந்தய பகுதி

எழில் மிகு ஹவாய் - 4 Snorkeling  Parasailing

அடுத்த பகுதி

எழில் மிகு ஹவாய் 6 - பசுமை அழகு
 

Monday, November 26, 2012

எழில் மிகு ஹவாய் - 4 Snorkeling & Parasailing

ஹவாய் தீவுகளுக்கு மக்களை ஈர்ப்பதில் முக்கிய பங்கை வகிப்பது அங்கு Snorkeling செய்ய கிடைக்கும் வாய்ப்பு. ஸ்னார்கெலிங் என்பது முகத்தில் ஒரு நீச்சல்  முகமூடி அணிந்து சுமார் 30 சென்டிமீட்டர் நீளமுள்ள டியூபை வாயில் மாட்டி கொண்டு தண்ணீரில் நீந்தியவாறே கடலுக்கடியில் இருக்கும் பவழபாறைகளையும், வண்ண மய மீன்களையும் இதர கடல் வாழ் உயிரிணங்களையும் கண்டு களித்தபடியே கடலில் நீந்தி செல்வது தான்.வாயில் வைத்துள்ள டியூப் மூலம் சில நிமிடங்கள்  கடலின் நீருக்கடியில் இருந்து மூச்சு விட முடியும்.

ஸ்னார்கெலிங்ல் இரு வகை உள்ளது. ஒன்று கடற்கரை ஓரத்தில் ஆழம் குறைந்த பகுதியில் ஸ்னார்க்கலிங்(Shallow water Snorkel) செய்து கடல் வாழ் உயிரிணங்களை பார்ப்பது ,மற்றொன்று  ஓரளவு கடலின் உள்ளே மிதமான ஆழம் உள்ள பகுதியில்(deep water snorkel) ஸ்னார்க்கலிங் செய்து கடல்  வாழ் உயிரிணங்களை பார்ப்பது.

ஹவாய் பெருந்தீவின் பெரும்பான்மையான கடற்கரைகள் Shallow Water Snorkeling செய்ய ஏற்றவை. அதற்கு தேவையான உபகரணங்கள் கடற்கரை ஓரங்களிலேயே வாடகைக்கு கிடைக்கும்.

பல தனியார் நிறுவனங்கள் deep water snorkeling tourஅழைத்து செல்கின்றனர்.ஹவாய் பெருந்தீவில் பெரிய  நீராவி படகுகள் மூலம் கடலில் சிறிது தூரம் பயணம் செய்து ஸ்னார்க்கலிங் செய்ய ஏற்ற பகுதிக்கு கூட்டி செல்வார்கள். அந்த படகிலேயே ஸ்னார்க்கலிங் செய்ய தேவையான உபகரணங்களும், உயிர் காப்பு உடைகளும் கொடுப்பார்கள். பிறகு ஸ்ணார்க்கலிங் செய்ய தேவையான அறிவுரைகளை கூறுவார்கள். அதன் பிறகு ஒன்னரை மணி நேரம் கடலில் ஸ்னார்க்கலிங்  செய்து மகிழலாம். நன்கு நீச்சல் பயிற்சி பெற்றவர்கள் படகின் மேற்பகுதியிலிருந்து கடலில் குதிக்கலாம். நீச்சல் சிறிதும் தெரியாதவர்கள்( என்னை போன்றவர்கள்!) கூட உயிர்காப்பு உடை அணிந்து கடலில் சிறிது நேரம் மிதந்து பார்க்கலாம்.அது மட்டுமன்றி கண்ணாடி பதிக்கபட்ட மிதக்கும் பலகையும் உள்ளது. அந்த பலகையில் மிதத்தவாறே கண்ணாடி வழியே கடல் வாழ் உயிரிணத்தை காணலாம்.

பசுபிக் பெருங்கடலில் நீந்திய படியே கடல் வாழ் உயிரிணங்களை கண்டு களிப்பது உண்மையிலேயே மறக்க முடியாத அனுபவமாகும்.இந்த ஆழ்கடல் ஸ்ணார்க்கலிங் செல்வதில் மற்றொரு லாபம் பசுபிக் பெருங்கடலுக்குள் சுமார் 1 மணி நேரம் கடற்பயணம் செய்ய வாய்ப்பு கிடைக்கிறது. இந்த பயணத்தின் போது கூட்டம் கூட்டமாக  டால்பின்களையும் அதிர்ஷ்டம் இருந்தால் திமிங்களத்தையும் காணக்கூடிய வாய்ப்பு உள்ளது.நாங்கள் செல்லும் போது டால்பின் கூட்டத்தை காணும் வாய்ப்பு கிடைத்தது.


Parasailingபடகில் கட்டபட்ட பாராசூட்டில் இருந்து பறப்பது பாராசைலிங் எனபடுவது ஆகும்.கோனா கடற்கரை பகுதியில் இருந்து கடலுக்குள் படகு மூலம் அழைத்து செல்வார்கள். பிறகு படகில் கட்ட பட்ட பாராசூட்டில்  நம்மை கட்டி கொள்ள வேண்டும்.பிறகு சிறிது சிறிதாக பாராசூட்டின் கயிறை பட்டம் போல் மேலே விடுவர். அதிக பட்சமாக 1200 அடிவரை வானத்தின் உயரத்தில் பறக்க விடுவர். வானத்திலிருந்து பறவை போல் பறந்து பெருந்தீவின் கடற்கரையையும் மலைகளையும் கண்டுகளிக்கும் சுகமே தனிதான்.

முந்தய பகுதி
எழில் மிகு ஹவாய் 3 - ஆழ் கடலில் பவழபாறைகளும் வண்ண மீன்களும்

அடுத்த பதிவு
எழில் மிகு ஹவாய் - 5 எரிமலை எப்படி வெடிக்கும்?
--

Tuesday, October 23, 2012

கூடங்குளம் போராட்டமும் அமைதியாக சாதித்த மம்தா பானர்ஜியும்

கூடங்குளம் அணுமின் நிலையத்தை எதிர்த்து காலம் காலமாக மக்கள் கடுமையாக போராடியும் ஒன்றும் செய்ய முடியாததை பார்க்கிறோம். போராட்டத்தை எதிர்த்து அனைத்து ஊடகங்களும், போலீசும்  கடுமையாக தாக்குதல் நடத்துவதை காண்கிறோம்.

ஆனால் எந்த வித எதிர்ப்பும் இன்றி கமுக்கமாக மம்தா பானர்ஜி ஒரு காரியத்தை செய்துள்ளார். மேற்கு வங்கத்தில் ரஸ்ய உதவியுடன் தொடங்க பட இருந்த அணுமின் நிலைய திட்டத்தை தொடங்க விடாமல் அனுமதி மறுத்துவிட்டார். கூடங்குளம் அணுமின் திட்டம் நிறைவேற்ற பட்டவுடன் மேற்கு வங்கத்தில் ஹரிபூரில் அணுமின் நிலையம் தொடங்க இருந்தது. தற்போது  மம்தா அதை தடுத்துள்ளார். தனது மாநிலத்தின் தேவைகளை நிறைவேற்ற மம்தா எந்த அளவிற்கும் இறங்குவார் என்பதற்கு இது ஓர் எடுத்துகாட்டு.

மம்தா பற்றிய ஓர்  flashback செய்தி- ராஜீவ் காந்தி கொலை செய்யபட்ட போது மேற்கு வங்கத்தில் குறிப்பாக  கல்கத்தாவில் தமிழர்களை கொல்ல கிளம்பியது ஒரு கும்பல். அப்போது அந்த கும்பல் முன் தன் ஆதரவாளர்களுடன் தடுத்து அமர்ந்து முதலில் தன்னை தாக்கி விட்டு பிறகு தமிழர்களை தாக்க செல்லுமாறு கூறி போராடி தடுத்தார் (இந்த செய்தியை அப்போது கல்கத்தாவில் இருந்தவர்  கூற கேட்டேன்)!

--

Wednesday, September 19, 2012

எழில் மிகு ஹவாய் 3 - ஆழ் கடலில் பவழபாறைகளும் வண்ண மீன்களும்

           கடற்கறையின் அழகை ரசித்த பின் மனதிற்குள் தோன்றும் கேள்வி  ஆழ் கடலின் அடியில் என்னதான் இருக்கும் என்பது? நீச்சலின் மூலம் ஆழ் கடலுக்குள் சென்று பார்ப்பது கடினம். நன்கு பயிற்சியுடைய ஸ்கூபா டைவராக இருந்தால் சிறிது முயற்சி செய்து பார்க்களாம். சாதாரண மனிதர்கள்  ஆழ்கடலை டிஸ்கவரி சேனல் போன்ற தொலைகாட்சி மூலம் தான் பார்க்க முடியும். ஆனால் நேரில் பார்க்க ஒரே வழி அதி நவீன நீர்மூழ்கி கப்பல் தான்.

          நூறு அடிக்கும் மேல் கடலுக்கு அடியில் நீர் மூழ்கி கப்பல் மூலம் பயணம் செய்து ஆழ்கடலின் அழகை பார்க்க ஹவாய் பெருந்தீவில் வசதி உள்ளது.இதன் மூலம் நிஜ நீர் மூழ்கி கப்பலில் பயணம் செய்யும் அனுபவத்தையும் , ஆழ் கடலின் அழகை கண்டு களிக்கும் அதிசய அனுபவத்தையும் ஒரு சேர பெறலாம்.
நீர்மூழ்கி வழியே ஓர் பார்வை

      கோனா கடற்கரையிலிருந்து விசை படகு மூலம் கடலின் உட் பகுதிக்கு சிறிது தூரம் கூட்டி செல்கிறார்கள். அங்கு நீர்மூழ்கி கப்பல் தயராக நிற்கிறது. இந்த நீர்மூழ்கி கப்பலுக்கு அட்லான்டிஸ் என்று பெயர். அது 64 பேரை ஏற்றி செல்லும் உலகிலேயே பெரிய பயணிகள் நீர்மூழ்கி கப்பல் வகையை சேர்ந்தது.விசை படகுகிலிருந்து நீர்மூழ்கிக்கு மாறி ஏணி படி மூலம் நீர்மூழ்கிக்குள் அழைத்து செல்கிறார்கள். நீர்மூழ்கியில் அனைவரும் கடலை பார்க்க கண்ணாடி ஜன்னல் உள்ளது. நீர்மூழ்கி நகர தொடங்கியதும் சிறிது சிறிதாக கடலின் கீழ்மட்டத்தை நோக்கி செல்கிறது.
நீர்மூழ்கி உள்ளே! வெளியே!

      ஹவாய் பகுதி கடற்கரை பவழ பாறைகளுக்கு பெயற்பெற்றது. பவழ பாறை என்றவுடன் ஏதோ உயிறற்ற பாறை என்று நினைத்துவிடாதிர்கள்.பவழம் என்பது ஒரு வகை கடற்வாழ் உயிரினங்கள். அவை வெளியிடும் கால்சியம் கார்பனேட் பாறைகளாக வளர்ந்து நிற்கிறது.இந்த பவழ பாறைகள் மீன்கள். புழுக்கள், மொளாஸ்காக்கள்( 12ம் வகுப்பு விலங்கியல் பாடத்தில் படித்தது) மற்றும் பல்வேறு கடல்வாழ் உயிரினங்களுக்கு இருப்பிடமாக உள்ளது.  இந்த பவழ பாறைகள் வண்ண மயாமாக இருந்தாலும் புகை படங்களில் பார்ப்பதை போல் பளீர் வண்ணத்துடன் இல்லை.
பவழ பாறைகளும் மீன்களும்

பவழ பாறைகள்

   கடல் அடியில் கூட்டம் கூட்டமாக வண்ண மயமாக செல்லும் மீன்களை பார்ப்பது கண்கொள்ளா காட்சியாக உள்ளது.கோனா கடற்கரை பகுதியில் உள்ள பல வகை மீன்களை கொண்ட புகைபட அட்டையை கையில் கொடுத்து விடுகிறார்கள். அது மற்றுமின்றி அந்த நீர்மூழ்கியில் வரும் விவரிப்பாளர் கண்ணில் தென்படும் மீன் வகைகள் பற்றி விவரிக்கிறார்.மீன்கள் மற்றும் பவழ பாறைகளை தவிர கடலில் மூழ்கிய இரு கப்பலையும் கடலின் அடியே காண முடிகிறது.அனைத்து வண்ண மீன்களும் கூட்ட்ம் கூட்டமாக செல்லும் இது போன்ற காட்சிகளை டிஸ்கவரி சேனலில் மட்டுமே காண முடியும்.அதை நேராக பார்க்கும் அனுபவத்தை வார்த்தைகளால் விவரிக்கமுடியாது..

  நீர்மூழ்கி கப்பல் கடலின் அடியே 100 அடிகளுக்கு மேல் கீழ் நோக்கி செல்கிறது.இது போன்ற நீர்மூழ்கி பயண அனுபவமும் ஆழ்கடலை பார்த்து ரசிக்கும் வாய்ப்பும் நிச்சயம் ஒரு அறிய வாய்ப்பாகும்.

ஆழ்கடலின் அழகை கண்டு ரசித்தாகி விட்டது. நடுகடலில் நீந்திய படி கடல்வாழ் உயிரினங்களை கண்டு களித்தால் எப்படி இருக்கும். அடுத்த பதிவில் பார்ப்போம்.

முந்தய பகுதி
எழில் மிகு ஹவாய் 2 - அழகிய கடற்கரைகள்

அடுத்த பகுதி
எழில் மிகு ஹவாய் - 4 Snorkeling & Parasailing

--