Sunday, December 16, 2012

தீயணைப்பு நிலையத்தில் ஒரு நாள்


சிறுவயதில் சிகப்பு நிறம் என்றவுடன் மனதில் நினைவிற்கு உடனே வருவது தீயணைப்பு வண்டியாகத்தான் இருக்கும். வளர்ந்தவுடன் தீயணைப்பு வீரர்களின் சாகசத்தை படித்த போதும், தொலைகாட்சிகளில் பார்த்த போதும் அவர்கள் மீது மரியாதையும் ஆச்சர்யமும் ஏற்பட்டது. எனது குழந்தையிடம் வளர்ந்தவுடன் என்னவாக ஆக நினைக்கிறாய் என்று பள்ளியில் கேட்ட போது முதலில் சொன்னது தான் ஒரு தீ அணைப்பு வீரராக ஆக வேண்டும் என்பதே!. தற்போதைய கிறிஸ்துமஸ் விழா நாட்களில் எங்கள் வீட்டுக்கு அருகில் உள்ள தீயணைப்பு நிலையத்தில் "Holiday with Santa" என்ற  நிகழ்ச்சியை நடத்தி அதன் மூலம் வரும் வருமானத்தை தொண்டு நிறுவனங்களுக்கு கொடுக்க முடிவு செய்திருந்தார்கள். தீயணைப்பு நிலையத்திற்கு செல்ல வேண்டும் என்ற என் மகளின் நீண்ட நாள் ஆசையை நிறைவேற்ற இது ஒரு நல்ல தருணமாக அமைந்தது. தீயணைப்பு நிலையத்தில் கண்ட மற்றும் கேட்ட செய்திகளை இந்த பதிவில் இட்டால் உபயோகமாக இருக்கும் என்று நினைத்ததால் இந்த பதிவிடுகிறேன்.
Santa உடன் தீயணைப்பு நிலையத்தில் ஒரு நாள்

பழைய தீயணைப்பு வண்டி


ஒவ்வொரு தீயணைப்பு நிலையத்திற்கும் ஒரு குறியீட்டு எண் இருக்கும். அந்த எண், தீயணைப்பு வீரர்களின் சாதனங்களில் இருக்கும். தீயை அணைக்கும் போது எந்த வீரர் எந்த வாகனம்/பகுதியிலிருந்து வந்தவர் என்று தூரத்திலிருந்தே அறிந்து கொள்ள இது உதவும்.

தீயணைப்பு வீரரின் உடை பிரத்யோகமாக வடிவமைக்க பட்டிருக்கும். அது தீ மற்றும் புகையிலிருந்து வீரரை காப்பாற்ற மிகவும் உதவிகரமாக இருக்கும். அவர்களின் உடை சுமார் 40 பவுண்டுகள் இருக்கும். விபத்து பற்றிய செய்தி கிடைத்தவுடன் இந்த உடையை சுமார் 30 வினாடிகளில் அணிய வேண்டும். அதற்கு ஏற்றார் போல் தங்கள் உடையை turnouts என்று சொல்ல கூடிய வகையில் திருப்பி வைத்திருப்பார்கள். அது மட்டுமின்றி இந்த உடையுடனேயே அவர்களுடைய பூட்சும் இணைந்திருக்கும். எனவே பூட்சுக்குள் காலைவிட்டு உடையை மேலே விரைவாக இழுத்து கொண்டு , குறுகிய நேரத்தில் தங்களை தாயார் படுத்தி கொள்வர்.

Boots உடன் இணைந்த உடை

தீயணைப்பு வீரரின் தலை கவசத்தில் விளக்கு பொருத்த பட்டிருக்கும். இருட்டில் விபத்தில் சிக்கியுள்ளவர்களை கண்டு பிடிக்க உதவும். சாதாரண தொப்பிகளில் சூரிய ஒளியிலிருந்து காத்து கொள்ள முன்பகுதியில் நீண்டிருப்பதை போல தீயணைப்பு வீரரின் தலை கவசத்தின் பின் பகுதி நீண்டிருக்கும். இது மேலிருந்து விழ கூடிய தீ மற்றும் பிற பொருட்கள் அவர்கள் தோள் பட்டை மற்றும் முதுகு பகுதியில் விழாதவாறு காக்கும்.

முக கவசம்

தீயணைப்பு வீரரின் முக கவசம் மேல் அணிய கூடிய அங்கியின் (hood) பெயர் Nomex hood  அது தலை கவசம் மற்றும் முகமூடியால் மறைக்க முடியாத பகுதியை தீ மற்றும் அனலிலிருந்து காக்க உதவுகிறது.

Nomex hood

தீயணைப்பு வீரர்கள் உபயோகபடுத்தும் ஆக்சிசன் சிலிண்டர் போல் தோற்றம் அளிக்கும் சிலிண்டரில் சாதாரண காற்று தான் அடைக்க பட்டிருக்கும். இதற்கு Self-Contained Breathing Apparatus   என்று பெயர். இது சிலிண்டர், அழுத்தத்தை கட்டு படுத்த கூடிய வால்வு மற்றும் முக கவசம் ஆகிய மூன்றும் சேர்ந்ததாகும். இந்த சிலிண்டரில் உள்ள வாயு சுமார் 45 நிமிடத்துக்கு மட்டும் போதுமானதாகும். கடுமையான புகை மற்றும் பிற விஷ வாயுக்களிலிருந்து பாதுகாக்க இது உதவும்.

Self-Contained Breathing Apparatus  

முக கவசத்தில் ஒலி பெருக்கி பொருத்த பட்டிருக்கும். இது அவர்கள் பேசுவதை மற்றவர்கள் கேட்க உதவும். தீ அணைப்பு வீரருக்கு ஆபத்து ஏற்பட்டு நகர முடியாத சூழ்னிலை ஏற்படும் போது  Scott Electronic Management System என்ற கருவி ஒலி எழுப்ப ஆரம்பிக்கும். அதன் மூலம் ஆபத்தில் இருக்கும் வீரரை பிறர் தேடி கண்டுபிடித்து காப்பாற்ற உதவும்.



இந்த நிகழ்ச்சியின் போது குழந்தைகளிடம் தீயணைப்பு வீரர்கள் அன்புடன் பழகி, அவர்கள் கேள்விகளுக்கு பதிலளித்து அவர்கள் உடைகள் மற்றும் கவசத்தை தொட்டு பார்க்க அனுமதித்து, அவர்களுக்கு பிடித்த திண் பண்டங்களை கொடுத்தும் நட்புடன் பழகினர்.குழந்தைகளை தீயணைப்பு வண்டியில் ஏறி சென்று பார்க்கவும் அனுமதித்தார்கள்.


வாங்க நட்புடன் பழகலாம்!

பொதுவாக தீ விபத்து நடக்கும் இடத்தில் மாட்டி கொண்டுள்ள குழந்தைகள் தீயணைப்பு வீரர்களின் உடை மற்றும் கவசங்களை கண்டு அஞ்சி ஓடவோ அவர்களிடமிருந்து மறைந்து கொள்ளவோ வாய்ப்பு அதிகம். இது போன்ற நிகழ்ச்சிகள் மூலம் குழந்தைகள்  தீயணைப்பு வீரர்களிடம் நட்புடன்,அவர்கள் கவசத்தை கண்டு அஞ்சாமல், பழக்கபடுத்தி கொள்ள உதவுகிறது. விபத்து தருணங்களில் குழந்தைகள் உடனையாக அவர்களை அடையாளம் கண்டு கொள்ள உதவியாக உள்ளது.

செய்முறை விளக்கம் .

அது மட்டுமின்றி தீ விபத்து நடக்கும் போது குழந்தை மறைந்திருப்பது போல் மறைய வைத்து எவ்வாறு குழந்தையை காப்பாற்றி வருவார்கள் என்று நடைமுறை பயிற்சி செய்து காட்டினர். 

தீ விபத்தின் போது கடை பிடிக்க வேண்டிய ஒரு முக்கிய குறிப்பையும் சொன்னார்கள்.  தீ விதத்தில் புகை எப்போதும் மேல் நோக்கி செல்வதால் தரையில் குனிந்தபடியே தவழ்ந்து தவழ்ந்து பாதுகாப்பான பகுதிக்கு  செல்ல வேண்டும்.

--

No comments: