Monday, August 31, 2009

சீனாவின் தூண்டிலில் மத்திய அமைச்சர் கபில் சிபல்

இந்தி தெரியாத மக்கள் எல்லாம் இந்தியர் என்ற உணர்வு இல்லாமல் தேசிய நீரோட்டத்தில் கலக்காமல் தேச விரோதிகளாக உள்ளனர். இதை கூறுவது ஏதோ R.S.S தலைவர்களோ அல்லது முலயாம் கட்சியினரோ இல்லை. சோசியலிச கட்சியாக தன்னை காட்டி கொள்ளும் காங்கிரஸ் தான். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் அமைதியாக இருப்பது அ.தி.மு.க இல்லை. இந்தி எதிப்பு போரில் பல்லாயிரம் பேர் சிந்திய ரத்தத்தில் வளர்ந்த தி.மு.க.

கபில் சிபல் கூறியதை பாருங்கள்.
All children are not fluent in Hindi as they are in their mother tongues. Hindi is necessary for students to integrate with the rest of the country.

இந்தி தெரிந்தால் தான் நீங்கள் தேசிய நீரோட்டத்தில் "Integrate" ஆவதாக ஒத்து கொள்வீர்களா என்ன?. அது மட்டுமல்ல. இந்தியா "Knowledge Economy" ஆக வந்த பிறகு ஆங்கிலத்தை எடுத்து விட்டு இந்தியை இந்தியா முழுதும் திணிப்பார்களாம். மற்ற மொழி எல்லாம் வளர கூடாதாம். இந்தி தான் இந்தியா முழுதும் ஏற்று கொள்ள பட வேண்டிய மொழியாக இருக்க வேண்டுமாம்.

//"Now the lingua franca is English for professionals. When we become producers of knowledge then we can set our language as the lingua franca," Sibal said.
//
இது என்ன நம்முடைய(our) மொழி. உங்களுடைய மொழி என்று சொல்லி கொள்ள வேண்டியது தானே.இதை கடுமையாக எதிர்க்காமல் பதவிக்கும் பணத்திற்கும் அடிமை ஆகி உள்ள கட்சிகள் தயவு செய்து தங்களை திராவிட கட்சிகள் என்று சொல்லாமல் இருந்தால் நன்றாக இருக்கும்.

இலங்கையில் தமிழர்கள் கொல்ல பட்ட போது அது வெளியுறவு கொள்கையை பாதிக்கும் என்ற பெயரில் அமைதியாக இருந்தீர்கள். இந்த அமைதிக்கு என்ன காரணம்?.

பா.ஜ.க வாக இருந்தாலும் சரி. காங்கிரசாக இருந்தாலும் சரி. கடிசியில் இந்து-இந்தி- இந்தியாவில் வந்து நிற்கின்றனர்.தமிழர்களும் தொலை நோக்கி பார்வையில் சிந்திக்க வேண்டிய தருணம் விரைவில் வந்து விடும் என்றே தோன்றுகிறது.

இதற்கும் தலைப்பிற்கும் என்ன சம்பந்தம் என்று கேட்கிறீர்களா? சீனா இந்தியாவை 25 துண்டாக்க வேண்டும் என்று திட்டமிடுவதாக செய்திகள் வந்தன. நம்ப ஊர் அரசியல்வாதிகள் கபில் சிபல் போல் இருந்தால், சீனா கஷ்டபட்டு இந்தியாவை உடைக்க வேண்டிய தேவையே இருக்காது. தானாகவே அது நடக்கும் .

--

Sunday, August 30, 2009

வளரும் வங்கிகள்! இடம் மாறும் அதிகாரங்கள்?



முந்தைய பதிவுகளில் சீனா எவ்வாறு உற்பத்தி துறையில் போட்டியில்லாத வளர்ச்சி அடைய எடுக்கும் செயல்பாடுகள் பற்றி பார்த்தோம். இந்த பதிவில் அமெரிக்காவின் ஒட்டு மொத்த நிதித்துறை செயல்பாடுகளும் எவ்வாறு ஒரு சில கம்பெனிகளுக்கு போய் கொண்டிருக்கிறது மற்றும் அதனால் ஏற்பட கூடிய விளைவுகள் பற்றியும் என்று பார்ப்போம்.

தற்போதைய நிதி நெருக்கடி வந்த போது அமெரிக்கா எங்கும் பேசபட்டது 'Too Big to Fall'. அதாவது மிக பெரிய நிறுவனங்கள் வீழ்ந்தால் அதன் பாதிப்பு அதிகமாக இருப்பதால், அவர்கள் தவறு செய்து வீழ்ந்தாலும் காப்பாற்ற பட்டே ஆக வேண்டும் என்பது தான். நிதி நெருக்கடியிலிருந்து எழும் முன்னே தற்போது அமெரிக்க நிதி நிறுவனங்கள் நிலையை பார்ப்போம்.

கடந்த சூன் மாதம் பாங்க் ஆப் அமெரிக்கா, வெல்ஸ் பார்கோ மற்றும் ஜெ.பி. மார்கனிடம் மட்டும் 30 சதவிதத்துக்கும் மேலான அமெரிக்க டெப்பாசிட்டுகள் உள்ளன.இந்த மூன்று வங்கிகள் மற்றும் சிட்டி வங்கி ஆகியவையிடம் 50 சத மார்ட்கேஜ் பத்திரங்களும் மூன்றில் இரு கிரடிட் கார்டுகளும் உள்ளது.இதற்கு முக்கிய காரணம் நிதி நெருக்கடியின் போது பிரச்சனையில் உள்ள வங்கிகளை பெரிய வங்கிகள் வாங்கியது தான். கடந்த இரு வருடத்தில் பாங்க் ஆப் அமெரிக்கா 138%, ஜெ.பி.மார்கன் 51% மற்றும் வெல்ஸ் பார்கோ 43% வளர்ந்து உள்ளது. அமெரிக்க அரசு குறிபிட்ட இடத்தில் குறிபிட்ட சதவிதத்திற்கு மேல் டெபாசிட் வைக்க கூடாது என்று போட்டியை ஊக்க படுத்த வைத்துள்ள கட்டு பாட்டையும் மீறி இவ்வங்கிகள் வளர்ச்சி அடைந்து உள்ளது.

இதனால் ஏற்பட கூடிய விளைவுகளை பார்ப்போம். பொருளாதார மந்த நிலையிலேயே இந்த வளர்ச்சி என்றால் பொருளாதாரம் நல்ல நிலைக்கு வரும் போது அதன் வளர்ச்சியை பற்றி நினைத்து பாருங்கள். அது மட்டுமன்றி இந்நிறுவனக்களின் வளர்ச்சி மிக பெரியதாகி விட்டதால், இனி எக்காலத்திலும் இவற்றிற்கு அழிவு ஏற்பட போவது இல்லை என்ற நிலை ஏற்படும். எதாவது பிரச்சனை ஏற்பட்டால் தான் அரசு காப்பற்றி ஆக வேண்டுமே!. அதன் விளைவு, எந்த பயமும் இல்லாமல் முதலீட்டாளர்கள் நிறுவனங்களுக்கு தைரியமாக பணத்தை அள்ளி கொடுப்பார்கள். சிறு மற்றும் குறு நிதி நிறுவனங்களுக்கு முதலீடு கிடைப்பது குதிரை கொம்பாகும். எனவே பிற நிறுவனங்கள் அழிந்து விடும் அல்லது இப்பெரிய நிறுவனக்கள் அவற்றை வாங்கி விடும். இப்பெரும் நிறுவங்கள் மிகவும் அசாதாரமான வளர்ச்சி அடையும்.

மற்ற உற்பத்தி துறைகளில் ஒரு சிலரது ஆதிக்கம் இருந்தால் கூட பரவாயில்லை. ஆனால் நிதி துறையின் பங்கு உலகில் விரல் விட்டு எண்ண கூடிய ஒரு சிலரது கைக்கு சென்றால் அதன் விளைவு கடுமையானதாக இருக்கும்.அது மட்டுமன்றி உலகில் பெரும்பான்மையான கடன்கள் குடுக்கும் அதிகரம் ஒரு சில நிறுவனக்களுக்கு மட்டும் இருந்தால் உலக சந்தையில் எந்த துறையிலும் எந்த நிறுவனம் வளர்ச்சி அடைய வேண்டும் என்பதும் ஒரு சிலரால் நிர்ணயிக்க படும்.போட்டிகள் குறைந்தால் சாதாரண மக்களுக்கும் அவர்களுக்கு சாதகமான வட்டி மற்றும் பிற காரணிகளில் கடன் கிடைப்பது கடினம். தற்போதைய சூழ்நிலையிலேயே பங்கு வர்த்தகத்தில் சர்வ சாதாரணமான ஏற்ற இறக்கத்தை இந்நிறுவனக்கள் ஏற்படுத்துகின்றன.இந்த நிறுவனங்களின் வளர்ச்சி மிக அதிகமானால், இந்த நிலை மோசமாகும்.வளரும் நாடுகளின் பொருளாதார ஸ்திரதன்மை கேள்வி குறியாகும்

இது போல் ஒரு சில நிறுவனங்கள் உலக பொருளாதாரத்தின் பெரும் பங்கை ஆட்டி வைக்க தொடங்கினால் அதிகாரம் எந்த அளவுக்கு அரசுகள் கையில் இருக்கும் என்பது சிந்திக்க வேண்டிய செய்தி.அப்படியே பணத்தை உருவாக்கும் அதிகாரமும் பெரிய நிறுவனக்களுக்கு போய் விட்டால்?!

--

Tuesday, August 25, 2009

சீனாவின் பிரம்மாஸ்த்திரம்



சீனா, அமெரிக்கா ஆடும் பொருளாதார சதுரங்கம்

சீனா ஏற்படுத்தும் பொருளாதார சுனாமி

சீனாவின் Shopping Mania

சீனாவின் அசுர வேக வளர்ச்சியின் பின்னனியை பற்றியும், அது டாலர் வலையில் சிக்கிய நிலை பற்றியும், சீனாவின் தற்போதைய முயற்சிகள் பற்றியும் முற்பதிவுகளில் பார்த்தோம். வருங்காலத்தில் சீனா எவ்வாறு பொருளாதார வல்லரசு நிலையை மேலை நாடுகலிடமிருந்து பறிக்க முயலுகிறது என்று இப்பதிவில் பார்ப்போம்.

உலகில் எந்த ஒரு நாடும் பொருளாதார வல்லரசாக ஆக வேண்டுமானால் அதற்கு தேவைபடும் முக்கிய தகுதி, அந்நாட்டின் நாணயம் உலக நாடுகளிடம் இருக்கும் சேமிப்பு செல்வத்தில் முக்கிய பங்காக இருக்க வேண்டும். உலக சேமிப்பு நாணயமாக இருப்பதன் மூலம் அந்த நாணயத்தின் தேவை உலக சந்தையில் மிகவும் அதிகமாக இருக்கும். வியாபார பரிவர்த்தனைக்கும், நாடுகளின் சேமிப்பிற்கும் அந்த நாணயம் தேவையாக இருப்பதால் அந்நாணயத்திற்கு அதிக கிராக்கி ஏற்படுகிறது.

சீனாவின் அடுத்த குறி, உலக சந்தையில் யுவானை சேமிப்பு நாணயமாக ஆக்க முயற்சி செய்வதாக தான் இருக்கும். ஒரு நாணயத்தை உலக சேமிப்பு நாணயமாக மாற்றுவது அவ்வளவு எளிதான செயல் அல்ல. அதுவும் சீனா போன்ற மூடிய பொருளாதார கொள்கை கொண்ட நாடுகளின் கரண்சியை பொது நாணயமாக ஆக்குவது மிகவும் கடினமே. ஆனால் சீனா அதற்கான ஆய்த்த வேலையில் தற்போதே இறங்க தொடங்கி விட்டது.

உலக சேமிப்பு செல்வத்தில் தற்போது டாலரின் பங்கு 65%. அதே போல் உலக டாலர் சேமிப்பு செல்வத்தில் 30%க்கும் மேலாக சீனாவிடம் உள்ளது!.எனவே டாலரின் மதிப்பு உடனடியாக குறையாமல், சீனா சிறிது சிறிதாக யுவானின் பங்கை உலக வர்த்தகத்தில் அதிகரிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

இதன் முதல் முயற்சியாக சீனாவின் மத்திய வங்கி தலைவர், டாலருக்கு பதிலாக உலக நிதி நிறுவனத்தின் SDRஐ(Special Drawing Right) சேமிப்பு கரண்சியாக்க வேண்டும் என்று குரல் எழுப்பி உள்ளார். SDR என்பது ஒரு நாட்டின் நாணயம் அல்ல. இது டாலர், யூரோ,பவுண்ட் மற்றும் யென் ஆகிய நாணயங்களை கூட்டாக கொண்ட ஒரு கணக்கீட்டு அளகு. தற்போது டாலரின் பங்கு தான் இதில் முக்கியமாக இருக்கிறது. ஆனால் சீனா தற்போது இந்த SDRல் யுவான் உள்பட பிற நாணயங்களையும் சேர்க்க வேண்டும் என்று போர் கொடி எழுப்பி உள்ளது. இதன் மூலம் யுவானையும் சிறிது சிறிதாக உலக சந்தையில் கலக்க முடியும். இதன் மூலம் நாடுகள் டாலர் சேமிப்புகளை சர்வதேச நிதி இணையத்திடம் கொடுத்து SDR வாங்கி கொள்ளவும் கோரிக்கை விடுத்துள்ளது. இதன் மூலம் சீனாவும் தன்னிடம் உள்ள டாலர் சொத்துக்களை இழப்பின்றி விடுவிக்க முடியும். ஆனால் தற்போது SDR சார்ந்த பாண்டுகளை மத்திய வங்கிகள் தான் வாங்கி விற்க முடியும். தனியார் நிதி நிறுவனக்கள் இவ்வர்த்தகத்தில் ஈடு பட முடியாது.

அடுத்ததாக உலக வர்த்தகத்தில் டாலரின் தேவையை குறைத்து யுவானின் தேவையை அதிகரிக்க தேவையான யுக்திகளை எடுத்து வருகிறது. இதன் முதல் கட்டமாக சீனாவின் சில கம்பெனிகளின் வெளிநாட்டு வர்த்தகத்திற்கு (முக்கியமாக ஹாங்காங், ஆசியான் ஆகிய பகுதிகளுக்கு) யுவானை உபயோகிக்க அனுமதி அளித்துள்ளது. இதனால் வெளி நாடுகள் தங்களுக்கு தேவையான யுவானை சீனாவிடமிருந்து கடனாகவோ அல்லது வாங்கவோ முடியும்.

ரஸ்யாவும் சீனாவும் தங்களுக்கிடையான வர்த்தகத்தில் தங்கள் சொந்த நாடுகளின் நாணயத்தை உபயோகிக்க முடிவு செய்துள்ளது. பிரேசிலுடனும் இவ்வாறு சொந்த நாணயத்தில் வத்தகம் செய்ய முயற்சி செய்து வருகிறது. இதனால் டாலரின் தேவை சிறிதளவு உலக வர்த்தகத்தில் குறைய வாய்ப்புள்ளது.
அது மட்டுமின்றி அர்ஜென்டினா,பெலாரஸ்,இந்தோனேசியா,மலேசியா,தென் கொரியா போன்ற நாடுகளிடம், டாலருக்கு பதில் யுவானில் வர்த்தகம் செய்ய வசதியும் செய்து கொடுத்துள்ளது.அதன் மூலம் யுவான் பணத்தை கடனாக சீனாவிடம் இந்நாடுகள் வாங்க முடியும்.

ஒரு சில பொருளாதார வல்லுனர்களின் கணிப்பு படி 2012ல் உலக வர்த்தகத்தில் $2 டிரில்லியன் மதிப்பு யுவான் அடிப்படையில் நடைபெற வாய்ப்புள்ளது.

ஆனால் யுவானை சேமிப்பு நாணயாமாக்க சீனா தன் பொருளாதாரத்தில் பல மாறுதல்கள் செய்ய வேண்டும். முக்கியமாக வெளிநாட்டினர் சீன சொத்துக்களில் எளிதாக முதலீடு செய்வது போலவும், அதில் கிடைக்கும் லாபத்தை எளிதாக வெளியில் எடுத்து செல்லவும் அனுமதிக்க வேண்டும். அது மட்டுமன்றி யுவான் அடிப்படையிலான பாண்டு மார்க்கெட் அரசு கட்டுபாடு இன்றி எளிதில் வர்த்தகம் செய்ய கூடியதாக இருக்க வேண்டும். கம்யூனிச அரசால் இது போன்ற முடிவுகளை அவ்வளவு எளிதில் எடுக்க முடியுமா என்பது சந்தேகமே. அமெரிக்காவின் மொத்த உற்பத்தி சீனாவை விட 3 மடங்கு அதிகம் என்பதையும் மறந்து விட கூடாது.

எனவே யுவான் சேமிப்பு நாணயமாகும் காலம் வெகு விரைவில் இல்லை என்றாலும் அந்த மாற்றத்தின் தொடக்கம் ஆரம்பித்து விட்டதாகவே தோன்றுகிறது.

--

Wednesday, August 05, 2009

சீனாவின் Shopping Mania




முதல் பதிவில் டாலர் வலையில் வீழ்ந்துள்ள சீனாவின் நிலையை பற்றியும்,அடுத்த பதிவில் சீனாவின் தற்போதைய பொருளாதார யுக்திகளையும் பற்றி பார்த்தோம்.

சீனா தன்னிடம் குவிந்திருக்கும் டாலர் கையிருப்பை வைத்து என்ன செய்ய போகிறது?. தன்னிடம் உள்ள அமெரிக்க அரசின் பாண்டுகளை பொது சந்தையில் விற்றால் டாலரின் மதிப்பு குறைந்து சீனாவின் சேமிப்பின் மதிப்பும் குறையும். இந்த பிரச்சனையை சீனா நூதனமாக கையாளும் முறைகளை பற்றி முன் பதிவில் பார்த்தோம். இப்பதிவில் உலகளவில் சீனா வாங்கி குவிக்கும் சொத்துக்களை பற்றி பார்ப்போம்.

தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி சீனாவுக்கு பல நெருக்கடிகளை ஏற்படுத்தினாலும் அதுவே அவர்களுக்கு ஒரு பிரகாசமான வாய்ப்பாகவும் உள்ளது.இதில் என்ன வாய்ப்பு என்று நினைக்கிறீர்களா?கடந்த வருடம் சீனா நிதி துறை சாராத பிற துறைகளில் வெளி நாடுகளில் செய்துள்ள முதலீட்டின் மதிப்பு சுமார் $41 பில்லியன். 2002ம் ஆண்டு மட்டும் இது சுமார் $143 மில்லியன் மட்டுமே!. உலகிலேயே அதிக அளவு டாலரை சேமிப்பாக சீனா வைத்துள்ளது. இதன் மூலம்

1.தற்போதைய பொருளாதார நெருக்கடியில் பல நாடுகள் அன்னிய செலாவணி குறைவால் சிக்கி தவிக்கின்றனர். ஆனால் அது போன்ற பல நாடுகளிடம் தாது பொருட்கள் மற்ரும் எண்ணெய் வளம் குவிந்து உள்ளன. சீனாவோ உற்பத்தி துறையிலும், மக்கள் தொகையிலும் உலகளவில் முதலிடத்தில் உள்ளது. எனவே அதன் உற்பத்தி துறைக்கும், வளரும் மக்கள் தொகைக்கும் தாது பொருட்கள் மற்றும் எண்ணெய் வளம் அதிக அளவு தேவை படுகிறது. இத்தகைய சூழ்நிலையை நன்றாக பயன் படுத்தி பிற்கால எண்ணெய் மற்றும் தாது பொருட்கள் இறக்குமதியை உறுதி செய்து அதற்கிணையான கடனாக டாலரை தற்போது தேவையான நாடுகளுக்கு கொடுக்கிறது.

உதாரணமாக ஈக்வெடார் நாடு $1 பில்லியன் பணத்தை முன் பணமாக பெற்று சீனாவுக்கு அடுத்த இரு ஆண்டுகளுக்கு 69 மில்லியன் பேரல்கள் கொடுக்க சம்மதிதுள்ளது.ரஸ்யாவில் உள்ள எண்ணெய் கம்பெனிகளுக்கு கடனாக $25 பில்லியன் டாலர்களை சீனா தற்போது கொடுத்து அதற்கு இணையான எண்ணெயை பிற்காலத்தில் சீனாவிற்கு இறக்குமதி செய்ய ஒப்பந்தமிட்டுள்ளது.


2. தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சி காரணமாக தாது பொருட்களின் விலை அதல பாதாளத்திற்கு சென்று விட்டது. காற்றுள்ள போதே தூற்றி கொள் என்ற பழமொழிக்கேற்ப, சீனா தன் பிற்கால தேவைக்கு தாது பொருட்களை இப்போதே குறைந்த விலைக்கு வாங்கி குவிக்க ஆரம்பித்துள்ளது.

உதாரணமாக சென்ற காலாண்டில் சீனாவின் இரும்பு இறக்குமதி 41 சதம் அதிகமாகவும்(தற்போதுள்ள மோசமான பொருளாதார நிலையிலும்!),காப்பர் இறக்குமதி 148 சதம் அதிகமாகவும்,நிலக்கரி இறக்குமதி 300 சதம் அதிகமாகவும்,அலுமினியம் இறக்குமதி 400 சதம் அதிகமாகவும் ஆகி உள்ளது.

இந்த அளவு தாது பொருட்களை இறக்குமதி செய்து வைத்திருப்பதால், உலக பொருளாதாரம் மீண்டும் சூடு பிடிக்கும் போது தாது பொருட்களின் விலை உலக மார்கெட்டில் அதிகரித்தாலும் குறைந்த விலைக்கு பொருட்களை உற்பத்தி செய்து மற்ற நாடுகளின் போட்டியை தவிர்த்து உற்பத்தி துறையில் உலக அளவில் மோனோபோலி ஆக முடியும்.


3.எண்ணெய் வளம் மற்றும் இயற்கை வளம் அதிகம் கொண்ட நாடுகள் பலவற்றில் மூலதனம் மற்றும் தொழில் நுட்பம் குறைவாக உள்ளது.இந்த நிலை மற்றும் பொருளாதார வீழ்ச்சி ஆகியவற்றால் மேல் நாட்டு கம்பெனிகளிடம் வேறு நிறைய விட்டு கொடுத்து உதவி பெரும் நிலையில் உள்ள இந்த நாடுகள் மற்றும் அங்கு உள்ள கம்பெனிகளிடம் சீனா ஒரளவு அவர்களுக்கும் ஆதாயமாக இருக்கும் படி ஒப்பந்தங்கள் இட்டு, அந்த கம்பெனியின் பங்குகளை வாங்கி, அவற்றை விரிவாக்கி அதிலிருந்து கிடைக்கும் தாது பொருட்களை சீனாவிற்கு கொண்டு செல்ல முயற்சி செய்கிறது.

உதாரணமாக வெனிசூலா எண்ணெய் நிறுவனங்களுக்கு $33.5 பில்லியன் டாலர்கள் உதவி செய்ய உள்ளது. பிரேசில் நாட்டின் பெட்ரோபாஸ் நிறுவனத்திற்கு $10 பில்லியன் டாலர் தற்போது கடனாக கொடுத்து விட்டு அடுத்த 10 வருடங்களுக்கு 2000000 பேரல்கள் ஒரு நாளைக்கு சீனாவிற்கு இறக்குமதி செய்ய ஒப்பந்தம் இட்டுள்ளது.அது மட்டுமன்றி கனிம பொருட்களை எடுக்கும் உலகின் பல கம்பெனிகளின் பங்குகளையும் வாங்கி உள்ளது.

4.அதுமட்டுமன்றி ஆப்ரிக்க,ஆசிய மற்றும் தென்னமரிக்க நடுகளிடம் பல்லாயிரகணக்கான ஹெக்டேர் நிலத்தை சீனா பணம் கொடுத்து வாங்கி குவித்துள்ளது. தனது வளரும் மக்கள் தொகைக்கு உணவிட இப்போதே திட்டமிட்டு செயல் படுகிறது.

சீனாவின் பிற்காலத்திற்கு தேவையான அளவு இந்தியாவிற்கும் மூல பொருட்கள் தேவையே.இந்தியா ஒரு சில சிறிய முயற்சி எடுத்தாலும் சீனாவை போல் பெரிய அளவு முயற்சி எடுக்க வில்லை. இந்த நிலை தொடர்ந்தால் பிற்காலத்தில் சீனாவிடம் எந்த துறையிலும் போட்டி இட முடியாமல் இந்தியர்களின் வளர்ச்சியும் வாழ்க்கை தரமும் அதல பாதாளத்திற்கு செல்ல வாய்ப்புள்ளது

சீனா தற்போது செய்துவரும் செயல்முறைகள் அனைத்தையும் பன்னாட்டு கம்பெனிகள் பல ஆண்டுகளாக அதை விட அதிக அளவே செய்து வருகின்றனர். ஆனால் தற்போது ஒரு அரசாங்கமே அவ்வாறு செய்வதால் ஏற்படும் விளைவுகள் என்னவாவக இருக்கும் என்பதை காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.

சீனாவின் அடுத்த முக்கிய குறிகோள் உலக சேமிப்பு நாணயமாக டாலரை நீக்க வேண்டும் என்பதே. அதன் மூலம் தான் அது பொருளாதார வல்லரசு ஆக முடியும். அந்த நோக்கத்தை அடைய சீனா எவ்வாறு காய் நகர்த்துகிறது என்று அடுத்த பதிவில் பார்ப்போம்.

--

Sunday, August 02, 2009

சீனா ஏற்படுத்தும் பொருளாதார சுனாமி

சென்ற பதிவில் டாலர் வலையில் சிக்கிய சீனாவின் நிலை பற்றி பார்த்தோம். இப்பகுதியில் சீனா தற்போதைய சூழ்நிலையை எதிர் கொள்ள எடுக்கும் உத்திகளை பற்றி பார்ப்போம்.
உலகில் சேமிப்பு செல்வமாக உள்ள டாலரில் மூன்றில் ஒரு பங்கு தற்போது சீனாவிடம் உள்ளது.எனவே அது முள்ளின் மேல் விழுந்த துணியை கிழியாமல் பொருமையாக எடுக்க வேண்டியது போன்ற நிலையில் உள்ளது.

தற்போது சீனாவின் முக்கிய குறிக்கோள்

1. சிறிது சிறிதாக உலக அளவில் தனது நாணயத்தை பல படுத்தி உலக அளவில் பொருளாதார வல்லரசாக ஆக வேண்டும்

2. டாலரின் மதிப்பை உடனடியாக வீழாமல் பார்த்து கொள்ள வேண்டும்

3. சிறிது சிறிதாக டாலருக்கு இணையாக பிற நாணயங்களை உலக சேமிப்பு நாணயமாக கொண்டு வரவேண்டும்(அதே சமயத்தில் தனக்கு பாதிப்பு எதுவும் ஏற்படாமல் பார்த்து கொள்ள வேண்டும்).

4.ஆற்றல் வளம்(பெட்ரோல் போன்றவை), தாது பொருட்கள் மற்றும் உணவு பொருட்களை உற்பத்தி செய்யும் ஏழை நாடுகளுக்கு கடனாக தன்னிடம் குவிந்து கிடக்கும் டாலரை கொடுத்து, எதிர்காலத்தில் சீனாவிற்கு மட்டும் அவற்றை இறக்குமதி செய்ய ஒப்பந்தம் இட்டு கொள்வது.

5. தன்னிடம் உள்ள டாலர் கையிருப்பை கொண்டு உலகில் உள்ள தாது பொருட்கள் மற்றும் எண்ணெய் உற்பத்தி நிறுவனக்களை முடிந்த அளவு வாங்கி குவிப்பது. தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சி காரணமாக பல நிறுவனங்களின் மதிப்பு அடி மாட்டு விலைக்கு வந்துள்ளது சீனாவிற்கு மேலும் சாதகமாக உள்ளது

6. தன்னுடைய சேமிப்பு செல்வத்தில் டாலர் சொத்துக்கள் தவிர யூரோ, தங்கம் போன்றவற்றின் பங்கையும் அதிகரிக்க வேண்டும்.

சீனா தன் குறிகோளை எவ்வாறு நிறைவேற்றுகிறது என்று ஒவ்வொன்றாக பார்ப்போம்

சீனாவின் தங்க கையிருப்பு கடந்த சில வருடங்களில் 70% மேலாக அதிகரித்து 1000டன்னை தாண்டி விட்டது. இது வளர்ந்த நாடுகளின் தங்க கையிருப்பை ஒப்பிட்டு பார்க்கும் போது குறைவாக இருந்தாலும் அது தங்கத்தை வாங்கி குவிக்கும் வேகம் மிக அதிகமாகவே உள்ளது.

இனி வரும் பதிவுகளில் சீனாவின் மற்ற குறிக்கோளை அடையும் வழி பற்றி பார்ப்போம்.

--