Wednesday, August 05, 2009

சீனாவின் Shopping Mania




முதல் பதிவில் டாலர் வலையில் வீழ்ந்துள்ள சீனாவின் நிலையை பற்றியும்,அடுத்த பதிவில் சீனாவின் தற்போதைய பொருளாதார யுக்திகளையும் பற்றி பார்த்தோம்.

சீனா தன்னிடம் குவிந்திருக்கும் டாலர் கையிருப்பை வைத்து என்ன செய்ய போகிறது?. தன்னிடம் உள்ள அமெரிக்க அரசின் பாண்டுகளை பொது சந்தையில் விற்றால் டாலரின் மதிப்பு குறைந்து சீனாவின் சேமிப்பின் மதிப்பும் குறையும். இந்த பிரச்சனையை சீனா நூதனமாக கையாளும் முறைகளை பற்றி முன் பதிவில் பார்த்தோம். இப்பதிவில் உலகளவில் சீனா வாங்கி குவிக்கும் சொத்துக்களை பற்றி பார்ப்போம்.

தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி சீனாவுக்கு பல நெருக்கடிகளை ஏற்படுத்தினாலும் அதுவே அவர்களுக்கு ஒரு பிரகாசமான வாய்ப்பாகவும் உள்ளது.இதில் என்ன வாய்ப்பு என்று நினைக்கிறீர்களா?கடந்த வருடம் சீனா நிதி துறை சாராத பிற துறைகளில் வெளி நாடுகளில் செய்துள்ள முதலீட்டின் மதிப்பு சுமார் $41 பில்லியன். 2002ம் ஆண்டு மட்டும் இது சுமார் $143 மில்லியன் மட்டுமே!. உலகிலேயே அதிக அளவு டாலரை சேமிப்பாக சீனா வைத்துள்ளது. இதன் மூலம்

1.தற்போதைய பொருளாதார நெருக்கடியில் பல நாடுகள் அன்னிய செலாவணி குறைவால் சிக்கி தவிக்கின்றனர். ஆனால் அது போன்ற பல நாடுகளிடம் தாது பொருட்கள் மற்ரும் எண்ணெய் வளம் குவிந்து உள்ளன. சீனாவோ உற்பத்தி துறையிலும், மக்கள் தொகையிலும் உலகளவில் முதலிடத்தில் உள்ளது. எனவே அதன் உற்பத்தி துறைக்கும், வளரும் மக்கள் தொகைக்கும் தாது பொருட்கள் மற்றும் எண்ணெய் வளம் அதிக அளவு தேவை படுகிறது. இத்தகைய சூழ்நிலையை நன்றாக பயன் படுத்தி பிற்கால எண்ணெய் மற்றும் தாது பொருட்கள் இறக்குமதியை உறுதி செய்து அதற்கிணையான கடனாக டாலரை தற்போது தேவையான நாடுகளுக்கு கொடுக்கிறது.

உதாரணமாக ஈக்வெடார் நாடு $1 பில்லியன் பணத்தை முன் பணமாக பெற்று சீனாவுக்கு அடுத்த இரு ஆண்டுகளுக்கு 69 மில்லியன் பேரல்கள் கொடுக்க சம்மதிதுள்ளது.ரஸ்யாவில் உள்ள எண்ணெய் கம்பெனிகளுக்கு கடனாக $25 பில்லியன் டாலர்களை சீனா தற்போது கொடுத்து அதற்கு இணையான எண்ணெயை பிற்காலத்தில் சீனாவிற்கு இறக்குமதி செய்ய ஒப்பந்தமிட்டுள்ளது.


2. தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சி காரணமாக தாது பொருட்களின் விலை அதல பாதாளத்திற்கு சென்று விட்டது. காற்றுள்ள போதே தூற்றி கொள் என்ற பழமொழிக்கேற்ப, சீனா தன் பிற்கால தேவைக்கு தாது பொருட்களை இப்போதே குறைந்த விலைக்கு வாங்கி குவிக்க ஆரம்பித்துள்ளது.

உதாரணமாக சென்ற காலாண்டில் சீனாவின் இரும்பு இறக்குமதி 41 சதம் அதிகமாகவும்(தற்போதுள்ள மோசமான பொருளாதார நிலையிலும்!),காப்பர் இறக்குமதி 148 சதம் அதிகமாகவும்,நிலக்கரி இறக்குமதி 300 சதம் அதிகமாகவும்,அலுமினியம் இறக்குமதி 400 சதம் அதிகமாகவும் ஆகி உள்ளது.

இந்த அளவு தாது பொருட்களை இறக்குமதி செய்து வைத்திருப்பதால், உலக பொருளாதாரம் மீண்டும் சூடு பிடிக்கும் போது தாது பொருட்களின் விலை உலக மார்கெட்டில் அதிகரித்தாலும் குறைந்த விலைக்கு பொருட்களை உற்பத்தி செய்து மற்ற நாடுகளின் போட்டியை தவிர்த்து உற்பத்தி துறையில் உலக அளவில் மோனோபோலி ஆக முடியும்.


3.எண்ணெய் வளம் மற்றும் இயற்கை வளம் அதிகம் கொண்ட நாடுகள் பலவற்றில் மூலதனம் மற்றும் தொழில் நுட்பம் குறைவாக உள்ளது.இந்த நிலை மற்றும் பொருளாதார வீழ்ச்சி ஆகியவற்றால் மேல் நாட்டு கம்பெனிகளிடம் வேறு நிறைய விட்டு கொடுத்து உதவி பெரும் நிலையில் உள்ள இந்த நாடுகள் மற்றும் அங்கு உள்ள கம்பெனிகளிடம் சீனா ஒரளவு அவர்களுக்கும் ஆதாயமாக இருக்கும் படி ஒப்பந்தங்கள் இட்டு, அந்த கம்பெனியின் பங்குகளை வாங்கி, அவற்றை விரிவாக்கி அதிலிருந்து கிடைக்கும் தாது பொருட்களை சீனாவிற்கு கொண்டு செல்ல முயற்சி செய்கிறது.

உதாரணமாக வெனிசூலா எண்ணெய் நிறுவனங்களுக்கு $33.5 பில்லியன் டாலர்கள் உதவி செய்ய உள்ளது. பிரேசில் நாட்டின் பெட்ரோபாஸ் நிறுவனத்திற்கு $10 பில்லியன் டாலர் தற்போது கடனாக கொடுத்து விட்டு அடுத்த 10 வருடங்களுக்கு 2000000 பேரல்கள் ஒரு நாளைக்கு சீனாவிற்கு இறக்குமதி செய்ய ஒப்பந்தம் இட்டுள்ளது.அது மட்டுமன்றி கனிம பொருட்களை எடுக்கும் உலகின் பல கம்பெனிகளின் பங்குகளையும் வாங்கி உள்ளது.

4.அதுமட்டுமன்றி ஆப்ரிக்க,ஆசிய மற்றும் தென்னமரிக்க நடுகளிடம் பல்லாயிரகணக்கான ஹெக்டேர் நிலத்தை சீனா பணம் கொடுத்து வாங்கி குவித்துள்ளது. தனது வளரும் மக்கள் தொகைக்கு உணவிட இப்போதே திட்டமிட்டு செயல் படுகிறது.

சீனாவின் பிற்காலத்திற்கு தேவையான அளவு இந்தியாவிற்கும் மூல பொருட்கள் தேவையே.இந்தியா ஒரு சில சிறிய முயற்சி எடுத்தாலும் சீனாவை போல் பெரிய அளவு முயற்சி எடுக்க வில்லை. இந்த நிலை தொடர்ந்தால் பிற்காலத்தில் சீனாவிடம் எந்த துறையிலும் போட்டி இட முடியாமல் இந்தியர்களின் வளர்ச்சியும் வாழ்க்கை தரமும் அதல பாதாளத்திற்கு செல்ல வாய்ப்புள்ளது

சீனா தற்போது செய்துவரும் செயல்முறைகள் அனைத்தையும் பன்னாட்டு கம்பெனிகள் பல ஆண்டுகளாக அதை விட அதிக அளவே செய்து வருகின்றனர். ஆனால் தற்போது ஒரு அரசாங்கமே அவ்வாறு செய்வதால் ஏற்படும் விளைவுகள் என்னவாவக இருக்கும் என்பதை காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.

சீனாவின் அடுத்த முக்கிய குறிகோள் உலக சேமிப்பு நாணயமாக டாலரை நீக்க வேண்டும் என்பதே. அதன் மூலம் தான் அது பொருளாதார வல்லரசு ஆக முடியும். அந்த நோக்கத்தை அடைய சீனா எவ்வாறு காய் நகர்த்துகிறது என்று அடுத்த பதிவில் பார்ப்போம்.

--

2 comments:

Thomas Ruban said...

//சீனாவின் பிற்காலத்திற்கு தேவையான அளவு இந்தியாவிற்கும் மூல பொருட்கள் தேவையே.இந்தியா ஒரு சில சிறிய முயற்சி எடுத்தாலும் சீனாவை போல் பெரிய அளவு முயற்சி எடுக்க வில்லை. இந்த நிலை தொடர்ந்தால் பிற்காலத்தில் சீனாவிடம் எந்த துறையிலும் போட்டி இட முடியாமல் இந்தியர்களின் வளர்ச்சியும் வாழ்க்கை தரமும் அதல பாதாளத்திற்கு செல்ல வாய்ப்புள்ளது//

உண்மை தான் சார்.

இது நம்முடைய இந்திய அரசின் தொலைநோக்கு பார்வை இல்லாததை கட்டுகிறது.

நல்ல பதிவு தொடருங்கள். (தாமதமான வருகைக்கு மனிக்கவும்.)

சதுக்க பூதம் said...

நன்றி Thomas Ruban.இந்தியா தன் 2020 வல்லரசு கனவை எப்போது நடைமுறை படுத்த தொடங்கும் என்று தெரியவில்லை.