Tuesday, March 24, 2009

டாலருக்கு மாற்று- சீனா முதல் முறையாக போர்கொடி

உலக சேமிப்பு நாணயமாக டாலர் இருப்பது அனைவருக்கும் தெரிந்ததே. சேமிப்பு நாணயமாக டாலர் இருப்பதால் அதற்கு ஏற்படும் நன்மையை பற்றி டாலர் அரசியல் என்ற பதிவில் விரிவாக விளக்கியிருந்தேன். சமீபத்திய பொருளாதார நெருக்கடியாலும் அதை தொடர்ந்து அமெரிக்கா எடுக்கும் quantitative easing முறையாலும், அமெரிக்காவிற்கு கடன் அளித்துள்ள மற்றும் அமெரிக்காவில் முதலீடு செய்துள்ள நாடுகள்,முக்கியமாக சீனா போன்ற நாடுகள் அதிருப்தி அடைந்திருந்தனர். சீனாவின் பிரதம மந்திரி சில நாட்களுக்கு முன் அமெரிக்காவில் சீனா செய்துள்ள முதலீடுகளின் மதிப்பு பற்றி கவலை தெரிவித்திருந்தார்.

G - 20 நாடுகளின் கூட்டமைப்பு தற்போதைய நிதி நெருக்கடியில் இருந்து உலகம் தப்பிப்பதற்கான வழிமுறை பற்றி ஆராய ஏப்ரல் முதல் வாரத்தில் இங்கிலாந்தில் கூட உள்ளனர். இந்த சூழ்நிலையில் சீனாவின் மத்திய வங்கியின் தலைவர் உலக அளவில் டாலருக்கு மாற்றாக IMF உதவியுடன் புதிய சேமிப்பு நாணயத்தை உருவாக்க வேண்டும் என்கிறார்.சீனாவிடமிருந்து, அதுவும் சீனாவின் மத்திய வங்கி தலைவரிடமிருந்து இச்செய்தி வந்திருப்பது உலகலவில் அனைவரையும் ஆச்சிரியத்தில் ஆழ்த்தியுள்ளது.அமெரிக்க ட்ரசரி செக்ரட்டரி கெயிட்னர் சில நாள்களுக்கு முன் சீனாவின் நாணயத்தின் மதிப்பை குறைக்க வலியுறித்தியதிலிருந்து அமெரிக்கா சீனாவுடனான பனிபோர் வெளிபடையாக தெரிய ஆரம்பித்தது.

தற்போது IMFஇன் சிறப்பு பிரதிநித்துவம்(SDR) பெற்ற பண கூட்டமைப்பை பிற நாடுகளை சேர்த்து வலிமையாக்கி அதன் அடிபடையில் புதிய நாணயத்தை உருவாக்க வேண்டும் என்று சீனா அதிகாரி கூறியுள்ளார். இதன் மூலம் கடன் அடிபடையான நாடுகளின்(அமெரிக்கா) நாணயத்தை சேமிப்பு நாணயமாககொண்டுள்ளதால் ஏற்படும் ஆபத்திலிருந்து தப்பி, உலக அளவில் வலுவான பொருளாதார கட்டமைப்பு ஏற்படுத்தலாம் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இது பற்றி சீனாவின் மத்திய வங்கி தலைவர் கூறியுள்ளது

Zhou Xiaochuan, the governor of the Chinese central bank, implicitly criticised the status of the dollar as the world's sole reserve currency. "The price is becoming increasingly high, not only for the users, but also for the issuers of the reserve currencies," Mr Zhou said.

He added: "The role of the SDR has not been put into full play due to limitations on its allocation and the scope of its uses. However, it serves as the light in the tunnel for the reform of the international monetary system.

"The goal of reforming the international monetary system, therefore, is to create an international reserve currency that is disconnected from individual nations and is able to remain stable in the long run, thus removing the inherent deficiencies caused by using credit-based national currencies."

இந்த முடிவுக்காக சீனா எந்த அளவு அழுத்தம் தெரிவிக்க போகிறது என்றும் அமெரிக்காவும் ஐரோப்பிய யூனியன் நாடுகளும் அதை எவ்வாறு எதிர் கொள்ள போகிறது என்று இனி வரும் நாட்களில் பார்ப்போம்

--

Thursday, March 19, 2009

பண வீக்கமும் முதலீடுகளின் மதிப்பும்- அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டியது

உலகில் உள்ள வரிகளிலேயே கடுமையான வரி பண வீக்கம் தான் என்று கூறுவர். அது மிகவும் உண்மைதான்.பண வீக்கத்தால் நமக்கு வருமானத்தை விட கூட ஆகும் செல்வை அரசு வரியாக போட்டுருந்தால் யாருமே அதை ஏற்று கொள்ளாமல் போராட்டம் நடத்தி வாபஸ் பெற்றிருப்பர். ஆனால் நம் கண்ணுக்கு நேரிடையாக தெரியாமல் மறைமுக வரியாக வருடம் தோரும் வருமானத்தை மிஞ்சும் பண வீக்கம் பற்றி அவ்வளவாக நாம் கவலை படுவதில்லை.

சூடான வெந்நீரில் ஒரு தவளையை தூக்கி போட்டால் அது உடனே முயற்ச்சி செய்து வெளியே குதித்து தப்பி விடும். ஆனால் அதே தவளையை சாதாரண நீரில் போட்டு சிறிது சிறிதாக கொதிக்க விட்டால் அது தப்பிக்க முயலாமல் இறந்து விடும். பண வீக்கம் என்பது இரண்டாவது வகையை சேர்ந்தது.

பண வீக்கம் என்பது குறைவான பொருளை நிறைய பணம் துரத்துவது எனலாம். கடந்த சில காலமாக உலகில் உள்ள அனைத்து நாடுகளும் பணத்தை வரலாறு காணாத அளவில் அடித்து வெளியிடுவதால் கூடிய சீக்கிரம் மிக பெரிய பண வீக்கம் வர கூடிய வாய்ப்புகள் உள்ளது. 1990களில் ஜப்பானில் இது போன்ற பொருளாதார நெருக்கடி வந்த போது ஜப்பான் அரசு எடுத்த நடவடிக்கைகளை ஒத்தே தற்போது மற்ற நாட்டு அரசுகள் செயல் படுகின்றனர்.

இந்த பதிவு பண வீக்கத்தின் காரணத்தை ஆராய்வது இல்லை.

. தற்போது அரசுகள் எடுத்து வரும் நடவடிக்கையால் இரு வகை நிகழ்வுகள் நிகழும் என்று பொருளாதார வல்லுனர்கள் கணிக்கினர்.

1. Price Inflation (வாழ்க்கைக்கு தேவையான பொருட்கள் மற்றும் சேவை பொருட்கள் வாங்குவது போன்றவற்றின் மதிப்பு அதிகரித்தல்)

2. Asset Deflation (வீடு, நிலம் மற்றும் பங்கு சந்தை போன்ற முதலீடுகளின் மதிப்பு குறைதல்)

அதாவது நாம் அன்றாட தேவைகளுக்கு வாங்கும் பொருளின் விலை அதிகரிக்கும் ஆனால் நம்முடைய முதலீட்டின் விலை அந்த அளவுக்கு உயராது. இந்த நிலை தற்போதே இந்தியாவில் வர தொடங்க உள்ளதாக சில செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த நிலை மேலை நாடுகளில் ஏற்படுத்த போகும் தாக்கத்தை விட இந்தியா போன்ற வளரும் நாடுகளில் குறைவாக இருக்கும். ஆனாலும் இதை பற்றி தற்போதைய நடுத்தர வயதினர் தெரிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். நீங்கள் வேலையிலிருந்து ஓய்வு பெரும் காலத்தில் செலவிட என்று பல முதலீடுகளை செய்து வைத்திருப்பீர்கள். அதாவது நிலம், வீடு,மியூச்சுவல் பண்ட் மற்றும் பங்கு சந்தை முதலீடு என்று. ஆனால் அவற்றின் உண்மயான மதிப்பு பண வீக்கத்தை வைத்து பார்க்கும் போது மிகவும் குறைந்திருக்கும். அப்போதைய விலை வாசியும் மிக அதிகமாக இருக்கும். இது போன்ற நிகழ்வுகளால் அதிகம் பாதிக்க பட போவது பணி ஓய்வு பெற்றவர்களாக இருப்பர். அமெரிக்காவில் தற்போதைய பொருளாதார சரிவால், பணியிலிருந்து ஓய்வு பெற நினைத்தவர்கள் போதிய பணம் இல்லாததால் இன்னும் நிரைய ஆண்டுகள் தங்கள் தள்ளாத வயதில் வேலை செய்ய வேண்டி உள்ளது.

இத்தகைய நிகழ்வு பற்றி டேனியல் அமெர்மேன் என்னும் பொருளாதார வல்லுனர் கூறுவதை கேளுங்கள்

If Your asset doubles in price, but a dollar will only buy what a quarter used to, then you didn’t double your money,you just lost half your savings, and any measures that doesn’t pick up on the difference isn’t worth using

இது போன்ற நிகழ்வுகளால் மக்கள் பொருட்களின் பண வீக்கம் (price inflation)மற்றும் சேமிப்பு பண வடிதல்(asset defalation) ஆகிய இரண்டாலும் பாதிக்க படுவர். இந்த பாதிப்பு முக்கியமாக பணி ஓய்வு பெற்றவர்களுக்கு அதிகம் இருக்கும்.

--

Tuesday, March 17, 2009

கல்லூரி நினைவுகள் 2 - தேர்வு திருவிழா

கல்லூரியில் திருவிழா என்றால் நான்கு சம்பவ தினங்களை கூறலாம்.அது கல்லூரி கலை நிகழ்ச்சி தினம், கல்லூரி மாணவர் அமைப்புக்கான தேர்தல்(இப்போது எல்லாம் அது உண்டா என்று தெரியவில்லை),சுற்றுல்லா மற்றும். தேர்வு காலங்கள். தேர்வு காலம் என்பது கஷ்ட காலம் தானே இதில் திருவிழா எங்கு வந்தது என்று நினைக்கிறீர்களா? தேர்வுக்கு முன் நடுக்கும் ஏற்பாடுகளையும்,தேர்வு அன்று இரவு மாணவர்கள் விதம் விதமாக படிக்கும் முறை மற்றும் தேர்வு நடக்கும் போது நடக்கும் நிகழ்வுகளை இப்போது நினைத்து பார்த்தால் அது ஒரு திருவிழா என்று தான் கூற வேண்டும். நீங்களும் படித்து பார்த்து சொல்லுங்களேன்!
தேர்வுக்கான அணுகுமுறையை கையாளும் விதத்தை வைத்து மாணவர்களை பல பிரிவுகளாக பிரிக்கலாம். அவர்களில் சில முக்கிய பிரிவுகள்.

1.சிலபஸ்ஸில் உள்ள பாட திட்டத்தை வைத்து தேவையான பாடத்துக்கு மட்டும் கல்லூரி லக்ச்சரின் நோட்ஸ் வைத்தும், சரியாக கவர் ஆகாத பாடங்களை வாங்கிய புத்தகங்கள் மட்டும் நூலக புத்தகங்கள் மூலம் கவர் செய்து படிக்க நினைப்பவர்கள். இந்த பிரிவினரது எண்ணிக்கையை விரல் விட்டு எண்ணி விடலாம்.

2.இவ்வகை மாணவர்களுக்கு சிலபஸ் பற்றி எல்லாம் கவலை இல்லை. இவர்கள் ஆசிரியர் தரும் நோட்ஸை மட்டும் படிப்பார்கள்.அது தான் அவர்களுக்கு வேத வாக்கு.(இவர்கள் பார்வையில் நன்றாக, படிக்க எளிதான நோட்ஸ் வாசிக்கும் ஆசிரியர்கள் சிறந்த ஆசிரியர்கள்!)

3.மூன்றாவது வகை மாணவர்களுக்கு ஆசிரியர், நோட்ஸ் பற்றி எல்லாம் கவலை இல்லை. அவர்கள் நம்பி இருப்பது தேர்வுக்கு முந்தய group study யை தான். பல குழுக்களாக இந்த மாணவர்கள் இருப்பார்கள். ஒவ்வொரு குழுவுக்கும் ஒரு தலைவன் இருப்பான். அவனது வேலை படத்திற்கு தேவையான் நோட்ஸ் மற்றும் தேவையெனில் புத்தகம் எடுத்து வைத்து பரிட்சைக்கு முந்தய நாள் குரூப் ஸ்டடியில் அவரது குழு மாணவர்களுக்கு சொல்லி கொடுக்க வேண்டும்

4. நான்காவது வகை மாணவர்கள் புத்தகம், நோட்ஸ்,மாணவர்கள் எதையும் நம்பாதவர்கள். அவர்கள் நம்புவது எல்லாம் பிட் அடிப்பதை மட்டும் தான். படிப்பது என்பது அவர்களை பொருத்தவரை விஷயம் தெரிந்தவர்களிடம் முக்கிய கேள்விகளை collect செய்து அதற்கான பிட்களை பக்குவமாக எழுதி வைப்பதுதான். இதிலும் இரு பிரிவினர் உள்ளனர். புத்திசாலி பிட் அடிப்பவர்கள். கொஞ்சம் மந்தமானவர்கள். புத்திசாலி பிட் அடிப்பவர்களுக்கு அவர்கள் எழுதியுள்ள விடையை எப்படி கேள்வியாக மற்றி கேட்டிருந்தாலும் சரியான பிட்டை கண்டு பிடித்து விடுவார்கள். மந்தமானவர்கள் பரிட்சையின் போது சரியான பிட்டை புத்திசாலி பிட் அடிப்பவர்களிடம் சைகை முறையில் கேள்விக்கேற்ற பிட்டை கேட்டு பதில் எழுதுவர்.


இனி கல்லூரிக்கு வருவோம். செமஸ்டரின் கடைசி வேலை நாள் வந்த உடன் பெரும்பான்மை மாணவர்களின் முதல் வேலை நன்றாக கையெழுத்துள்ள மாணவர்களின் நோட்ஸை ஜெராக்ஸ் எடுப்பது. ஜெராக்ஸ் எடுப்பதற்கென்று ஒவ்வொரு குழு மாணவர்களும் ஒவ்வொரு மாணவரின் நோட்ஸை தேர்ந்தெடுத்திருப்பர். அந்த குழுவுக்குள் ஒரு ஏஜெண்ட் இருப்பார். அவர் எத்தனை பேருக்கு நோட்ஸ் வேண்டும் என்று கணக்கிட்டு மொத்தமாக ஜெராக்ஸ் எடுத்து வருவார். அவரிடம் தேவையானவர்கள் பணம் கொடுத்து நோட்ஸ் ஜெராக்ஸ் பெற்று கொள்வர். ஜெராக்ஸ் கடைகளில் இது போன்ற நாட்களில் கூட்டம் நிரம்பி வழியும்.

இனி தேர்வுக்கான படிப்பிற்கான விடுமுறை ஆரம்பித்த பின் நடை பெறுவதை பார்ப்போம். விடுமுறை ஆரம்பித்தவுடன் எப்பொழுதும் மனதில் நினைப்பது, சென்ற செமஸ்டருக்கான படிப்பு விடுமுறையை வீணாக்கியது போல் இந்த முறையும் வீணாக்க கூடாது(கடைசி செமஸ்டர் வரை இதே நினைப்புதான்!). திட்டமிடல் மட்டும் மிக தெளிவாக இருக்கும்.எந்தெந்த நாள் எந்த பேப்பருக்கு செலவிடுவது எவ்வளவு நேரம் எந்த சாப்டருக்கு செலவிடுவது, ரிவிசன் செய்ய எவ்வளவு நேரம் என்று எல்லாம் செயற்கோளுக்கு எழுதும் மென்பொருள் போல துள்ளியமாக இருக்கும். முதல் நாள் விடுமறை வந்தவுடன் காலை மெதுவாக எழுந்து(technically speaking மதியம் எழுந்து) ஆற அமர மதிய உணவு உண்டு ,மெஸ்ஸிலிருந்து ரூம் செல்வதற்குள் பலருடன் அரட்டை அடித்து மதியம் குட்டி தூக்கம் போட்டு( இன்னும் நிறைய நாள் விடுமுறை இருக்கிறதல்லவா) மாலை எழுந்ததும் நண்பர்கள் கூறுவார்கள்- ஒழுங்கா கோவிலுக்கு போய் சாமி கும்பிட்டு பாடம் படிக்க ஆரம்பிக்கலாம். சிதம்பரம் நடராஜர் கோவில் மடபள்ளி புளி சாதம் மற்றும் வெளியில் விற்கும் பஜ்ஜி மீது அலாதி பிரியம் உண்டு.சரி என்று கிளம்பி விடுவோம் கோவில் போய் வந்து, அரட்டை அடித்தால் அன்று போய்விடும். சரி நளையிலிருந்து படிக்கலாம் என்று முடிவு செய்வோம். மறு நாள், எங்களிடம் விவாதிக்க படும் செய்தி, இனி தேர்வு முடியும் வரை கண்டிப்பா கடினமாக(?) படிக்க வேண்டும். அதை ஆரம்பிக்கும் முன் fresh ஆக ஒரு படம் பார்த்து விட்டு ஆரம்பித்தால் என்ன? இதுகூட லாஜிக்கலாக தான் தெரிகிறது என அன்று படம் பார்க்க கிளம்பி விடுவோம்.

இரண்டு நாள் வீணாகி விட்டதால் இனி நாட்களை வீணாக்க கூடாது என்று முடிவெடுப்போம். இனி அடுத்த நாள்.

காலை(?) வழக்கம் போல் மெதுவாக எழுந்து மதிய உணவு உண்டவுடன் நன்றாக களைப்பு வரும். இன்று night out செய்து விட வேண்டியது தான் என்று முடிவு எடுத்து விடுவோம். அதற்கு மதியம் நன்றாக தூங்கி எழுந்தால் தான் முடியும்.எனவே மீண்டும் ஒரு நல்ல தூக்கம். மாலை எழுந்து ஒரு நள்ள குளியல் போட்டு fresh செய்து வெளியில் வந்தால் நண்பர்களிடமிருந்து அழைப்பு வரும். PC போய் சண்முகம் கடையில் ஒரு தேனீர், பஜ்ஜி சாப்பிட்டு விட்டு படிக்க உட்காரலாம். இது கூட நல்ல ஐடியா தானே. உடனடியாக நண்பர்கள் கூட்டத்துடன் PC நோக்கி செல்வோம். சண்முகம் கடையில் டீ,பஜ்ஜி சாப்பிட்டு விட்டு கல்லூரி,மாநில மற்றும் உலக விஷயத்தை எல்லாம் அலசி முடிப்பதற்குள் இரவு 9 ஆகி விடும். மீண்டும் விடுதி வந்து இரவு உணவு உண்டு வரும் வழியில் மாணவர்களுடன் பேசி ரூமுக்குள் வந்து செட்டில் ஆவதற்குள் இரவு 10.30 ஆகி விடும். ரூமில் உள்ள மாணவர்களிடம் பேசி விட்டு புத்தகத்தை எடுத்து படிக்க ஆரம்பித்தால் சிறிது பசிப்பது போல் தெரியும். பசியா? இருக்கவே இருக்கிறது சண்முகம் கடை. மீண்டும் நண்பர்களுடன் அரட்டையுடன் கடை நோக்கி பயணம். ஆம்லெட் அல்லது தோசை உண்டு டீ குடித்து, அரட்டை முடித்து விடுதி வந்து சேர இரவு 12 மணிக்கு மேல் ஆகிவிடும். சரி இனி என்ன படிக்க போகிறோம் என்று நினைத்து, இன்று நாளே சரியில்லை என்று முடிவு செய்து நாளையிலிருந்து படிக்கலாம் என்று முடிவெடுத்து மீண்டும் தூக்கம்.

இனி அடுத்த நாள்.இது நாள் வரை நடந்த நிகழ்வுகளிளிருந்து கற்ற பாடம்- எப்படியும் பசங்களோடு சேர்ந்து இருக்கும் வரை படிக்க முடியாது. எனவே realisticகாக பிளான் செய்ய வேண்டும் என்று முடிவெடுப்போம். படிப்பதற்கு சரியான் நேரம் அதிகாலை தான். அப்பொழுதுதான் நண்பர்கள் எல்லாம் தூங்குவார்கள். எனவே disturbance இல்லாமல் படிக்கலாம்.

சரி அதிகாலை படிப்பு என்று தான் முடிவெடுத்து விட்டோமே. இன்றைய தினத்தை நன்றாக enjoy செய்ய வேண்டியது தான். அன்றைய தினமும் வழக்கம் போல் ஓடும். காலை 1 மணிக்கு(?) அலாரம் வைத்து படுப்போம். அலாரத்தில் ஸ்னூஸ் என்ற ஆப்சனை யார் தான் கண்டு பிடித்தார்களோ தெரியவில்லை. மீண்டும் மீண்டும் கடிகார அலாரம் ஸ்ணூஸ் செய்ய பட்டு பிறகு நிறுத்த படும்.

இப்படியாக ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாக படிக்காமல் சென்று கொண்டிருக்கும். விடுமுறை நாட்களின் முடிவை நெருங்கும் போது , சரி தலைக்கு மேல் வெள்ளம். இனி சாண் என்ன? முழம் என்ன? என்று பரிட்சை தினத்திலேயே பாடங்களை அட்டாக் செய்து விடலாம் என்று முடிவாகும். எங்களை தேற்றி கொள்ள மர்பி'ஸ் லா கை கொடுக்கும். அதான்
Time and efforts are inversely proportional to each other.

இது போன்ற தேர்வுக்கான விடுமுறை காலங்களில் நடக்கும் அதிசயம் ஒன்றுள்ளது. பெண்கள் விடுதியின் வாசலே கதி என்று இருக்கும் நண்பர்களை சாதாரன நாட்களில் அவ்வளவு எளிதாக பார்க்க முடியாது. ஆனால் பெரும் பாலான பெண்கள் இவ்விடுமுறைகளில் ஊருக்கு சென்று விடுவதால் அந்த குரூப் மணவர்களிடம் நிறைய நேரம் செலவிடலாம். க்ரூப் ஸ்டடி மட்டும் நம்பி பாஸ் செய்தால் போதும் என்றும் நினைக்கும் மாணவர்களும் பிட் அடிக்கும் மாணவர்களும் தான் மனதில் படிக்க வேண்டும் என்ற கவலை இல்லாமல் மிகவும் enjoy செய்வார்கள்(மற்றவர்கள் படிக்க வேண்டும் என்று மனதில் நினைத்து கொண்டே enjoy செய்வார்கள்).

இவ்வாறு விடுதியில் இருந்தால் படிக்க முடியவில்லை என்று ஊருக்கு சென்று படிக்கலாம் என்ற் நினைத்து ஒரு மூட்டை புத்தகத்தை ஊருக்கு கொண்டு சென்றாலும் அங்கும் படிக்கும் மூட் வராது. ஒரு முறை இவ்வாறு புத்தகத்தை ஊருக்கு எடுத்து வந்த போது, எப்படியும் இங்க படிக்க போறதில்லை. அப்புறம் எதற்கு இந்த மூட்டையை இங்க தூக்கிட்டு வர? என்று என் அம்மா கூறியது நினைவிற்கு வருகிறது.

சரி படிப்பிற்கான விடுமுறை தான் இப்படி போய் விட்டது. எனி தேர்வு அன்று எப்படி போகிறது என்று பார்ப்போம். தேர்வு வந்தவுடன் அன்று இரவு அனைவரும் உண்மையிலேயே படிக்க ஆரம்பிப்பர். குரூப் ஸ்டடி படிக்கும் ரூம்களில் கலை கட்டும். பெரிய கும்பல் சேரும். கும்பலின் தலைவன் நோட்ஸை ஒரு பகுதியை படிப்பான். கூட்டத்தில் இருப்பவர்கள் நன்றாக கேட்பார்கள். மீண்டும் அவன் அதை அனைவருக்கும் புரியும் படி விளக்குவான். அனைவரும் அவரவருக்கு புரியும் படி புரிந்து கொண்டு, ரிவிசன் செய்ய தலைப்புகள் மட்டும் முக்கிய குறிப்புகளை குறிப்பெடுத்து கொள்ளுவார்கள். கொஞ்சம் கடுமையான பாடம் வந்தால் அதை எப்படி சாய்ஸ்ல் விடலாம் என்று ஆராய்வார்கள். அல்லது அதில் உள்ள முக்கிய தலைப்புகளை மட்டும் வைத்து எப்படி கதை எழுதி சமாளிக்கலாம் என்று திட்டமிடுவர். சில கடினமான பாடம் படித்தே ஆகவேண்டிய பகுதி வந்தால் முன்பு குறிபிட்டதில் உள்ள முதல் வகை பிரிவு மாணவர்களிடம் சென்று விளக்கம் கேட்டு கொள்வார்கள். குரூப் ஸ்டடியில் கலந்து கொள்ளும் மாணவர்களில் சிலரின் முக்கிய நோக்கம், பரிட்சையின் போது காப்பி அடிக்கும் போது ஒரு சில பகுதி மட்டும் பார்த்து மற்றதை தம் கேள்வி ஞானத்தில் வந்த சொந்த சரக்கின் மூலம் ஒப்பேத்தலாம் என்பது. மேலும் அவர்களில் சில சாதூரியமான மாணவர்கள் காப்பி அடிக்கும் போது ஒரு மாணவர் தவறாக எழுதினால் , அதை அறிந்து அடுத்தவரிடம் காப்பி அடித்து ஒரளவு நல்ல மதிப்பெண் பெறுவர். இவ்வகை மாணவர்கள் இரவு குரூப் ஸ்டடி செய்து நள்ளிரவு அல்லது அதிகாலை ரிவிசன் செய்து விடுவார்கள். பிட் அடிக்கும் மாணவர்கள் அதற்குள் தெளிவாக பிட் எழுதி வைத்து கொள்வர். நன்றாக படிப்பவர்களில் சிலர் இரவு நண்பர்களுக்கு அவ்வப்போது தேவையான் கடினமான பாடத்தை சொல்லி கொடுத்து விட்டு அதிகாலை எழுந்து முறையாக படிப்பர்.
இனி தேர்வு அன்று நடப்பதை பார்ப்போம்.

தேர்வு கூடத்தில் யார் மேற்பார்வையளராக வருவார்? இது தான் காப்பி அடிப்பவர்கள் மற்றும் பிட் அடிப்பவர்களின் கேள்வி. ஒரு சில ஆசிரியர்கள் பிட்/காப்பி அடிப்பவர்களை பிடிப்பதில் பேர் போனவர்கள். அவ்வகை ஆசிரியர்கள் வந்தால் பிட் அடிப்பவர்கள் எந்த முயற்சியும் செய்யாமல் விதியை நொந்த படியே அரை மணி நேரத்தில் தேர்வு கூடத்தை விட்டு வெளியில் சென்று விடுவர்.

ஒரு சிலருக்கு தேர்வின் மதிப்பெண்ணும் தான் எழுதும் கூடுதல் விடை தாளின் என்ணிக்கையும் நேர் விகிதத்தில் இருக்கும் என்று நினைப்பு. பரிட்சை எழுத ஆரம்பித்த 10 நிமிடத்தல் கூடுதல் விடைதாள் கேட்டு விடுவர்.அது கடினமான வினா தாளாக இருந்தாலும் சரி.எளிதான வினா தாளாக இருந்தாலும் சரி. கல்லூரியில் நான்காம் ஆண்டு படிக்கும் போது என்று நினைக்கிறேன். பரிச்சையின் போது மூன்றாம் ஆண்டிற்கான வினாதாளை தவறுதலாக கொடுத்து விட்டனர். வினாதாளை வாங்கி முதலில் கேள்வியை பார்த்த போது குழப்பமடைந்தோம். பிறகு தவறு புரிந்து விட்டது. எங்களுக்குள் சைகையில் தகவல் பறிமாரி கொண்டிருந்தோம்.யார் அதை மேற்பார்வையாளரிடம் சொல்வது. யோசித்தி கொண்டு இருக்கும் போதே 10 நிமிடம் ஆகி விட்டது. பிறகு மெதுவாக நான் எழுந்து மேற்பார்வையாளரிடம் சொல்லி கொண்டிருந்த போது ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. அப்போது ஒரு மாணவர் எழுந்து கூடுதல் விடைதாள் கேட்டார். மேற்பார்வையாளரும் என்னப்பா? கூடுதல் விடைதாள் வாங்கி அவர் எழுதுகிறார். நீ தவறான கேள்விதாள் என்கிறாயே? என்றார். நாங்கள் எல்லாம் அந்த மாணவரை பார்த்து ஆடி போய் விட்டோம். பிறகு அந்த எக்சாம் கேன்சல் செய்ய பட்டு மறு தேர்வுக்கு ஆணையிட்டனர். இன்று வரை அந்த மாணவர் விடை தாளில் என்னதான் எழுதினார் என்பது எங்கள் அனைவருக்கும் கேள்விகுறியே.

தேர்வு எழுதும் தினத்தின் ஹீரோ என்றால் பிட் அடிக்கும் மாணவர்களை தான் கூற வேண்டும். பிட் அடிப்பதை கலை என்றும் கூறலாம் அறிவியல் என்றும் கூறலாம். ஒவ்வொரு முறை அவர்கள் பிட் அடிக்க கடை பிடிக்கும் முறைகளை கண்டால் பிரமிப்பை ஏற்படுத்தும்.

நான் படிக்கும் காலத்தில் இருந்த சில பிட் அடிக்கும் முறைகள்

1. முழு கை சட்டையின் கை பகுதியின் பின் புறம் பிட் எழுதுவர்
2. டேபிலின் அடியில் மடித்து வைக்க பட்ட பேப்பரை ஒட்டி வைத்தல்
3. ஸ்கேலின் பின் புறம்
4. ரீபில் பேனாவின் ரீபிலை எடுத்து விட்டு அதனுள் பிட் சுருள் வைத்தல்
5. சட்டை காலர் உள் பகுதி
6. கால்குலேட்டர் பின் புறம்
7. சிலீப்பரின் பின் புறம்
8. சட்டை அடிபுறத்தின் பின் புறம் பிட் எழுதி டக் செய்து கொள்வர்

இவை எல்லாம் சில வகை பிட் அடிக்கும் தொழில் நுட்பங்கள்.


பரிட்சை காலத்தில் தான் தூக்கத்தின் அருமை புரியும். அனைத்து தேர்வும் முடிந்தால் நிம்மதியாக ஒரு தூக்கம் போடுவோமே? அது உண்மையிலேயே ஒரு சுகமான அனுபவம்.

அண்ணாமலை பல்கலை நினைவுகள்- சண்முகம் கடை பஜ்ஜி


--

Friday, March 06, 2009

நாணயமில்லாத நாணயம்- பணத்தை உற்பத்தி செய்யும் வங்கிகள்

அனைவரது வாழ்விலும் இன்றியமையாத பங்கை வகிப்பது பணம். பணம் என்றவுடன் நம் மனக்கண்ணில் தோன்றுவது காகிதத்தாலான ஒரு பொருள். அனால் அது எவ்வாறு உருவாக்கப்படுகிறது, அதன் மதிப்பு எவ்வாறு நிர்ணயிக்கப்படுகிறது என்பது பற்றி சிந்திப்பவர்கள் நம்மில் சிலரே. இந்த பணத்தை உற்பத்தி செய்வது யார்? இது என்ன கேள்வி? அரசாங்கம் தானே என்று நம்மில் பலர் எண்ணுவோம். ஆனால் உண்மை அதுவல்ல. ஒரு சாதாரண வங்கிதான் பெரும்பாலான பணத்தை உற்பத்தி செய்கிறது என்றால் நம்ப முடிகிறதா?இது எப்படி சத்தியமாகும் ?ஆனால் உண்மை அதுதான்.

The other way around - Bank Robber

நன்றி- jugsi.com

வங்கிகள் தங்களிடம் உள்ள கையிறுப்பு தொகைக்கு அதிகமாக கடனை கொடுக்கிறது.அவ்வாறு கடனாக கொடுக்கப்படும் பணத்தை உபயோகபடுத்தப்பட்டு மீண்டும் வங்கியில் கையிறுப்பாக வைக்கப்படும் போது மீண்டும் அதிக அளவு கடன் கொடுக்கப்படுகிறது.உதாரணமாக 10,000 ரூபாயை ஒருவர் வங்கியில் டெபாசிட் செய்கிறார் என்று வைத்து கொள்வோம். அந்த வங்கி மத்திய அரசு நிர்ணயிக்கும் ஒரு குறிப்பிட்ட சதவித பணத்த கையிறுப்பாக வைத்திருக்க வேண்டும். பொதுவாக இது 5 லிருந்து 20 சதவிதமாக இருக்கும். இந்த உதாரணத்தில் 10% என்று வைத்து கொள்வோம்.வங்கி 1000 ரூபாயை கையிறுப்பாக வைத்து விட்டு 9000 ரூபாயை மற்றொருவருக்கு கடனாக கொடுக்கும். அந்த 9000 ரூபாயை கடன் வாங்குகிறவர் அந்த பணத்திற்கான காசோலையை இன்னொருவருக்கு கொடுத்து, அந்த மற்றொருவர் அந்த காசோலையை மீண்டும் ஒரு வங்கியில் செலுத்துவதாக வைத்து கொள்வோம்.

இந்த உதாரணத்தில் அனைவரும் ஒரே வங்கியை உபயோகப்படுத்துவதாக வைத்துக் கொள்வோம்.அந்த வங்கி அந்த பணத்தில் 900 ரூபாயை கையிருப்பாக வைத்து 8100 ரூபாயை கடனாக மற்றொருவருக்கு கொடுக்க முடியும். இது போல் தொடர்ச்சியாக கடன் கொடுப்பதாக வைத்துக் கொள்வோம். அந்த பணத்திலிருந்து பல பேருக்கு அவ்வாறு கடன் கொடுப்பதன் மூலம் 100,000 ரூபாய் கொடுக்க முடியும். ஆனால் வங்கி வைத்திருக்கும் கையிருப்பு தொகையோ 10,000 ரூபாய் மட்டுமே. இந்த படத்தில் உள்ள புள்ளி விவரத்தை பார்த்தீர்களானால் வங்கி எவ்வாறு அதிக அளவு பணத்தை உருவாக்குகிறது என்பது விளங்கும்(Fractional Reserve System). கடன் வாங்குகிறவர் நேரடையாகவோ அல்லது மறைமுகமாகவோ பணத்தை மீண்டும் வங்கியில் செலுத்தாவிட்டால் இந்த சுழற்சி நடுவில் நின்று விடும். ஆனால் அவ்வாறு நடப்பது அரிது. இந்த சுழற்சசியின் வேகம் அப்போதைய பொருளாதார நிலையை பொறுத்து அமையும்.

இதில் முக்கியமாக கவனிக்க வேண்டிய செய்தி என்னவென்றால், ஒவ்வொரு முறை அது கடன் கொடுக்கும் போதும் அந்த பணத்திற்கு வட்டியாக ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு வருடமும் பெருமளவு வசூலிக்கிறது. மிக குறைந்த முதலீடு மட்டும் கொண்டு, இல்லாத பணத்தை உருவாக்கி கொள்ளை லாபம் சம்பாதிக்கின்றனர். நாட்டில் பொருளாதாரம் மிகவும் வளர்ச்சி அடையும் போது பணமும் வேகமாக கை மாறி கொண்டிருக்கும்(velocity of money) போது மேற்கூறிய நிகழ்வும் வேகமாக நடக்கிறது. அதனால் தான் வங்கிகளும் அனைவருக்கும் முடிந்த வரை பணத்தை கடனாக கொடுத்து தங்களது வளர்ச்சியை மிக வேகமாக பெருக்கி கொள்ள முனைகிறது.இந்த செயல்முறைக்கு ஆதரவானவர்களின் கருத்து, இவ்வாறு பணத்தை அதிக அளவு உற்பத்தி செய்து கொடுப்பதினால் அது பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் என்பது.

வங்கிகள் கடனுக்கு அடமானமாக பொருளை வைத்து தருவதால் கடன் வாங்கியவர்கள் பணத்தை திருப்பிக் கொடுக்காவிட்டாலும் அவர்களுக்கு பணம் கிடைக்கிறது. அடமானமாக வைத்திருக்கும் பொருளின் விலை பெருமளவு குறைந்தால் தான் வங்கிகளுக்கு பிரச்சனை ஏற்படுகிறது அல்லது அடமானமாக பொருளை பெறாமல் பெருமளவு கடன் கொடுத்தாலும் நட்டம் ஏற்பட வாய்ப்புள்ளது. இவ்வாறு வங்கிகள் பணத்தை அதிக அளவு உருவாக்கி கடனாக கொடுத்துக் கொண்டே செல்வதனால் நாட்டில் பணப் புழக்கம் அதிகமாகிக் கொண்டே வருகிறது. பொருட்கள் உற்பத்தியை விட பணத்தின் உற்பத்தி மிக அதிகமானால் அது பெரிய பண வீக்கத்தை உண்டாக்குகிறது.

மேலும் இது முக்கியமாக நிலம் மற்றும் வீடுகளின் விலையை பெரிய அளவில் உயர்த்துகிறது. இந்தியா போன்ற நாடுகளில் கடன் கொடுக்கும் முன் வாடிக்கையாளர்களிடமிருந்து ஒரு குறிபிட்ட தொகையை வாங்கி மீதி தொகையை வங்கி கடனாக கொடுக்கிறது. எனவே கடன் வாங்கி பொருளை, உதாரணமாக வீடு வாங்குகிறார் என்று வைத்துக் கொள்வோம். அவர் வாங்கிய வீட்டின் மதிப்பு குறைந்தாலும் கணிசமான அளவு சொந்த பணத்தை போட்டிருப்பதால் எப்படியாவது முழு கடனையும் அடைத்து விட முயற்சி செய்வர், ஆனால் அமெரிக்கா போன்ற நாடுகளில் தன் கையிலிருந்து மிக சொற்ப தொகை மட்டும் போட்டு வீடு வாங்க கடன் வாங்கி கடனுக்கான வட்டியை மட்டும் தவணை முறையில் செலுத்த முடியும்.

அவ்வாறு வீடு வாங்குபவர்களின் நோக்கமே, வீட்டின் விலை உயர்ந்தவுடன் விற்று விடலாம் என்பது தான். வரைமுறையின்றி இவ்வாறு கடன் கொடுத்ததால் அமெரிக்க ரியல் எஸ்டேட்டின் விலை பல மடங்கு செயற்கையாக உயர்த்தப்பட்டது. உண்மையில் சராசரி நடுத்தர வர்க்கத்தினரின் சம்பளத்தில் உயர்வில்லை. செயற்கையாக உயர்ந்த விலை உண்மையான நிலைக்கு வர தொடங்கிய போது கடன் வாங்கியவர்கள் கடனை திருப்பிக் கொடுக்க விருப்பம் இல்லாமலும், திருப்பிக் கொடுக்க முடியாமலும் கடனை திருப்பிக் செலுத்தாத போது வங்கிகளின் கையில் மதிப்பு பெருமளவில் குறைந்த வீடுகளின் பத்திரம் மட்டுமே எஞ்சியது. அது உலக பொருளாதாரத்தையே படுபாதாளத்திற்கு தள்ளியது.

இவ்வாறு வங்கிகள் பெருமளவு கடனாக கொடுப்பதினால், முக்கியமாக நாட்டின் உற்பத்தி திறனை விட மிக அதிகமாக பணபுழக்கத்தை ஏற்படுத்துவதால் மற்றொறு பிரச்சனையும் ஏற்படுகிறது. கடனின் அளவு அதிகரிக்க அதிகரிக்க வட்டியின் அளவும் அதிகரிக்கும். அந்த வட்டியை திருப்பிக் செலுத்த பணபுழக்கத்தை மேலும் அதிகரிக்க வேண்டியிருக்கும். வங்கிகளின் நிலை மோசமானாலும் பெருக்கபட்ட வட்டியை திருப்பிக் கொடுக்க அரசுகள் செயற்கையாக பணத்தை வங்கிகளிடம் செலுத்தி பண புழக்கத்தை அதிகரிக்க செய்ய வேண்டும். இது சுழற்ச்சியாக மாறும். இதுதான் அமெரிக்காவில் இன்று நடக்கிறது. இவ்வாறான செயலால் ஏற்படும் மற்றொரு விளைவு, இந்த பணபுழக்கம் ஆரம்பிப்பதற்கு முன் மக்களிடம் இருந்த பணத்தின் (சேமிப்பு மற்றும் சம்பளம்) வாங்கு திறன் குறைந்து செல்வ சீரழப்பு (wealth destruction) நிகழ்கிறது.இது போன்ற boom மற்றும் bustஇனால் அதிகம் பாதிக்க பட போவது நடுத்தர மற்றும் ஏழை மக்கள் தான்.

வங்கிகள் பற்றி படிக்கும் போது கல்லூரி காலங்களில் படித்த புது கவிதை தான் ஞாபகம் வருகிறது(அப்துல்ரகுமான் அல்லது கல்யாண்ஜியினுடையது என்று நினைக்கிறேன்)

வரங்களே இங்கு
சாபங்களானால்
தவங்கள்
எதற்காக?வங்கிகள் இந்த முறையால் அடையும் லாபத்தை பார்ப்போம். அமெரிக்காவில் $1 மில்லியன்(10 லட்சம்) பணம் டெபாசீட் வைத்து கொண்டு மேற் சொன்ன முறையில் $10(1 கோடி) மில்லியன் வரை கடன் கொடுக்க முடியும். வங்கி 6 சத வட்டிக்கு கடன் கொடுக்கிறது என்று வைத்து கொள்வோம், வங்கிக்கு 1 ஆண்டில் வட்டியாக கிடைக்கும் பணம் $600000(6 லட்சம்). பணம் கையிறுப்பாக(depositors) வைத்திருப்பவர்களுக்கு 2% வட்டி கொடுத்தால் சுமாராக $200000($2 லட்சம்) கொடுக்க வேண்டும். எனவே $1 மில்லியன்(10 லட்சம்) வைப்பு நிதியின் மூலம் ஒரு வருடத்தில் வங்கி அடையும் லாபம் $400000(4 லட்சம்)! (குறிப்பு: இந்த கணக்கீடு ஒரு உதாரணமே. பணத்தின் திசைவேகம் மற்றும் திரும்ப கொடுக்க படாத கடன்களால் வங்கிகளுக்கு ஏற்படும் இழப்பு இதில் சேர்க்கபடவில்லை)


--

Sunday, March 01, 2009

தங்கத்தின் விலை தொடர்ந்து உயருமா?


இனி வரும் காலங்களில் தங்கம் விலை எந்த அளவு உயரும்? இதுதான் இன்று உலக பொருளாதார வல்லுனர்கள் மற்றும் மக்கள் முக்கியமாக இந்திய மக்களிடம் அதிகம் விவாதிக்க படும் செய்தியாக உள்ளது?

ஆறிலிருந்து அறுபது வரை அனைத்து இந்திய பெண்மணிகளும் விரும்பி அணிவது தங்க ஆபரணங்கள். அப்படிபட்ட தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்திற்கான சாத்திய கூறுகளுக்கான காரணங்களை பற்றி பார்ப்போம்.

பொருளாதார வல்லுனர்களில் இரு பிரிவினர் உள்ளனர். ஒரு பிரிவினர் தங்கம் என்பது பணத்தை போல் நினைத்த அளவு அதிகம் உற்பத்தி செய்ய முடியாது.அதை உற்பத்தி செய்யும் செலவும் பணத்தை உற்பத்தி செய்வதை விட மிக அதிகம். மேலும் தங்கத்தின் மதிப்பு பல காலமாக நிலை நிறுத்த பட்டுள்ளது(Stable Price). முக்கியமாக பணத்தை நாடுகள் செய்யும் உற்பத்தியை(Production) விட அதிக அளவு வெளியிடுவதால் பண வீக்கம் அதிகரித்து பணத்தின் மதிப்பு குறைந்து விடும் நேரங்களில், மக்கள் தங்களிடம் உள்ள பணத்தை பணவீக்கத்தில் இருந்து காக்க தங்கத்தில் முதலீடு செய்ய முனைவதால் தங்கத்தின் மதிப்பு இனி வரும் காலங்களில் அதிகரிக்கும் என்று வாதிடுவர்.

தங்கத்தின் விலை உயராது என்று கூறுகிறவர்கள் தங்கம் என்பது ஆபரண மதிப்பு மட்டுமே உள்ள ஒரு பொருள். தங்கத்தின் மதிப்பு பணத்துக்கு பதிலாக தங்கத்தை மாற்றாக (gold convertibility) அரசுகள் கொடுத்த வரை இருந்தது. அமெரிக்கா 1971ல் இந்த முறையை கைவிட்டதிலிருந்து தங்கத்தின் செயற்கையான மதிப்பு குறைய தொடங்கி விட்டது. மேலும் பங்கு சந்தை, ரியல் எஸ்டேட் போன்றவை அரசாங்கம் அச்சிடும் பணத்தை அடிப்படையாக கொண்டவை,என்வே பணத்தை அடிப்படையாக கொண்ட இவ்வகை சொத்துக்களில் முதலீடு செய்தால் அவற்றின் வளர்ச்சி தற்போது குறைவாக இருந்தாலும் நிச்சயம் பொருளாதார சீர்கேடு சரியான பிறகு , தங்கத்தில் செய்யும் முதலீடு தரும் லாபத்தை விட அதிகமாக இருக்கும் என்பர். இவ்வகை காரணங்களால் தங்கத்தை Anti dollar(பணம்) என்று கூறுவர்


தங்கத்தை பொதுமக்கள் முதலீடு செய்வதற்காகவும் ஆபரணம் செய்வதற்காகவும் வாங்குவார்கள். அரசோ செல்வ கையிருப்புக்காக (Reserve) வாங்குவர். உலகில் உள்ள தங்கத்தில் 19% நடுவண் வங்கிகளில்(Central Banks) சேமிப்பாக உள்ளது. பிற முதலீடுகளில்(அதாவது பாண்டுகள்,பங்கு சந்தை, நிலம் etc) அதிக அளவு லாபம் ஏற்படவிலலை என்றாலும், தங்கள் நாட்டின் நாணய மதிப்பு மிகவும் வீழ்ச்சி அடையும் என்று நினைத்தாலும் பொதுவாக மக்கள் தங்கத்தில் முதலீடு செய்ய முற்படுவர். உலகிலேயே அதிக அளவு தங்கத்தை இறக்குமதி செய்யும் நாடு இந்தியா. இதற்கு காரணம் தங்கம் ஒவ்வொரு இந்தியராலும் முதலீடு செய்வதற்காகவோ அல்லது ஆபாரணம் செய்வதற்காகவோ வாங்குவதால் தான்.கடந்த சில வருடங்களாக சீன மக்களும் தங்கத்தை வாங்கி குவிக்க ஆரம்பித்து விட்டனர்.அவர்களுடைய தங்கம் வாங்கும் திறன் அமெரிக்காவை தாண்டி விட்டது.


தங்கத்திற்கு எதிராக கூறப்படும் வாதம்.

1. தங்கத்திற்கு என்று தொழிற்சாலைகளில் பெரிய உபயோகம் கிடையாது. கச்சா எண்ணெய் போன்ற commodityகளுக்கு அனைத்து துறைகளிலும் உள்ள உபயோகம் போல் தங்கத்திற்கு இல்லை.டாலரை கொடுத்து தங்கத்தை திருப்பி பெற(convertibility to gold) வாய்ப்பு முன்பு இருந்ததால்(விவரத்திற்கு டாலர் அரசியல் படிக்கவும்) தங்கத்திற்கு மதிப்பு இருந்தது. ஆனால் இன்று அவ்வாறு இல்லாததால் தங்கத்திற்க்கு மதிப்பு எப்போதும் இருக்கும் என்று சொல்ல முடியாது.

2. உலகில் மிக பெரிய பொருளாதார வீழ்ச்சி ஏற்படும் போது பணத்தின் மதிப்பு குறையும் என்பதால் தங்கத்தின் மதிப்பு கூடும் என்பர், ஆனால் பொருளாதார விழ்ச்சியின் போது அடிபடை பொருட்களின் தட்டுபாட்டாலும், மக்கள் வாங்கும் திறன் குறைவதாலும் அதன் மதிப்புதான் கூடுமே தவிர தங்கத்தின் விலை கூடபோவதில்லை.

3. பொருள்களுக்கு மதிப்பு உள்ளது.அனால் பணத்திற்கு? (டாலருக்கு) பணம் என்பது வெறும் பேப்பர் தான்.அதன் மதிப்போ மக்கள் அதன் மீது வைக்கும் நம்பிக்கையில் தான் உள்ளது. இதே போல் தான் தங்கதிற்கும். நாம் நம்பிக்கை வைத்துள்ளவரை தான் அதற்கு மதிப்பு. எனவே தங்கம் மற்றும் டாலர் இரண்டும் ஒரே நிலையில் தான் உள்ளது
‘Confidence is the most important thing, more important than gold or currency’

4. கடந்த கால வரலாற்றை பார்த்தால் பங்கு சந்தை மற்றும் Bondல் செய்த முதலீடு தங்கத்தை விட அதிக லாபத்தை தந்துள்ளது. உதாரணமாக 1801ம் ஆண்டு ஒரு டாலர் பங்கு சந்தையில் முதலீடு செய்திருந்தால் இன்று அதன் மதிப்பு $8.8 மில்லியனாக பெருகியிருக்கும். அதையே Bondல் முதலீடு செய்திருந்தால் அது $14,000 அகியிருக்கும். அதையே தங்கத்தில் முதலீடு செய்தால் அது இன்று $150 ஆக மட்டுமே ஆகியிருக்கும்.

தங்கத்திற்கு ஆதரவாக கூறப்படும் வாதம்

1. தங்கத்தையும் பணத்தையும் ஒப்பீடு செய்பவர்கள் 1700ஆம் ஆண்டிலிருந்து கணக்கை எடுப்பர். ஆனால் 1971 வரை தங்கத்தின் விலை நிர்ணயம் செய்யபட்டதாக(Fixed Price) இருந்தது.அது முதலீடாக பார்க்க பட்டதை விட பணமாக தான் பார்க்க பட்டுள்ளது. அது போல் 1700ல் இருந்த எந்த கம்பெனியும் தற்போது இல்லை.எனவே தங்கத்தின் விலையை 1970க்கு பிறகுதான் பார்க்க வேண்டும் 1968- 80 க்குள் தங்கதின் விலை 230% உயர்ந்துள்ளது. ஆனால் பங்கு சந்தை அந்த அளவு உயரவில்லை. மேலும் பங்கு சந்தை வளர்ச்சியை, மூடிய நிறுவனங்கள் மற்றும் தோல்வி அடைந்த நிறுவனங்களை நீக்கி செயற்கையாக உயர்த்தி காண்பித்தும் தங்கதின் வளர்ச்சி அளவுக்கு அது இல்லை.

2. உலகின் சேமிப்பு செல்வமாக அதிக அளவில் இருப்பது டாலர் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம். அமெரிக்க நிதி நெருக்கடியும் , அதன் அதிகரித்து வரும் பற்றாக்குறை பட்ஜெட் காரணமாகவும் அது அதிக அளவில் டாலரை அச்சடித்து வினியோகம் செய்வதால் டாலரின் மதிப்பு நீண்ட கால அளவில் எவ்வாறு நீடிக்கும் என்பது கேள்விக்குறியே. டாலருக்கு மாற்றாக கருதபட்ட யூரோவும் பல பிரச்சனைகளை சந்தித்து வருகிறது. எனவே உலக அளவில் அனைவரின் கவனமும் தங்கத்தின் பக்கம் திரும்பியுள்ளது. உலகில் உள்ள நாடுகள் அனைத்தும் அதிக பணத்தை அடிப்பதால் பண வீக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது.என்வே பணத்தின் மதிப்பு மிக அதிக அளவில் குறையலாம். அவ்வாறு குறையும் போது தற்போது உள்ள செல்வத்தை மதிப்பிழக்காமல் பாதுகாக்க தங்கத்தில் முதலீடு செய்தால் தான் முடியும்.எனவே தங்கத்தில் அதிக அளவு மக்கள் முத்லீடு செய்வர்(Gold is best inflation hedge). இதன் மூலம் தங்கத்தின் விலை உயர வாய்ப்புள்ளது.

3. தங்கத்தை நல்ல முதலீடாக கருதுபவர்கள் அதன் விலை பெருமளவுக்கு உயராமல் இருப்பதற்கான காரணம் தங்கத்தின் விலையை அமெரிக்க மற்றும் ஐரோப்பிய யூனியனை சேர்ந்த முதலீட்டு வங்கிகளும், மேல்நாட்டு மத்திய வங்கிகளும் நேரடியாக/மறைமுகமாக செய்த பரிவர்த்தணை காரணமாக செயற்கையாக குறைத்து வைத்து இருந்தது தான் என்கிறார்கள். இது நாள் வரை தங்கத்தின் விலை டாலரின் மதிப்பை சார்ந்து ஏற்ற இறக்கமாக இருந்தது.அதாவது இரண்டின் விலையும் ஒன்றை ஒன்று சார்ந்ததாக கருத பட்டது.தற்போது ஏற்பட்ட முதலீட்டு வங்கிகளின் வீழ்ச்சியால், இனி அவர்களால் இது போல் செய்வது கடினம் என்று கருதுகிறார்கள். அவர்களின் கருத்தை ஆமோதிப்பது போல் சர்வ தேச சந்தையிலும் தங்கத்தின் மதிப்பு கடந்த சில காலமாக டாலரின் ஏற்ற இறக்கத்திர்கு மதிப்பளிக்காமல் சீராக விலை ஏற தொடங்கி உள்ளது

4. Gold convertibility to dollar இல்லாததால் தங்கத்திற்கு மதிப்பு இல்லை என்று சொல்ல படுவது உண்மை என்றால், தங்கத்தின் விலை 1971க்கு பிறகு பெருமளவு குறைந்திருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு ந்டக்க வில்லை. தங்கத்தின் விலை 1971 க்கு பிறகு gold convertibility to dollar மறைந்த பின்னும் விலை ஏறி கொண்டு தான் உள்ளது. எனவே அந்த கூற்று உண்மையில்லை.


உலக பொருளாதாரத்தில் எது எப்பொழுது நடைபெறும் என்று கணிப்பது இயலாத காரியம். சமீப காலமாக பொருளாதாரத்தின் அடிப்படை விதிகள் களங்கடிக்கப்பட்டுள்ளது. உதாரணமாக ரியல் எஸ்டேட் துறை 30% மேல் வீழ்ச்சி அடையாது என்பது அனைவரின் கருத்து.அது பொய்த்து போனது தான் சமீபத்திய பொருளாதார நெருக்கடிக்கு காரணமானது. இந்த பதிவை படிப்பவர்கள் தங்கத்திற்கான ஆதரவு மற்றும் எதிப்பு கருத்துகளை படித்து இனி வரும் காலங்களில் எந்த கருத்துக்கு அதிக வாய்ப்புள்ளது என்று முடிவு செய்து அதன் ஏற்றம் பற்றி முடிவு செய்யலாம்.

என்னை பொருத்தவரையில் தற்போதய நிதி நெருக்கடியால் டாலரின் தேவை அதிகம் இருப்பதால் தங்கம் விலை குறுகிய கால அளவில் தொடர்ந்து ஏறி கொண்டிருப்பது கடினம். ஆனால் தற்போது அமெரிக்க அரசு பல்லாயிரம் பில்லியன் பணத்தை வங்கிகளுக்கு கொடுத்துள்ளது. தற்போதைய பொருளாதார சூழ்நிலை சரியில்லாததால் வங்கிகள் அவற்றை இன்னும் கடனுக்கு கொடுக்க ஆரம்பிக்கவில்லை. அவற்றை கடன் கொடுக்க ஆரம்பித்தால் அது பல டிரில்லியன் டாலர்கள் பண புழக்கத்தை மக்களிடம் ஏற்படுத்தும்(பில்லியன் எவ்வாறு ட்ரில்லியன் ஆகிறது என்று அடுத்த பதிவில் விளக்குகிறேன்).அப்போது பண வீக்கம் பெருமளவு அதிகரித்து டாலரின் மதிப்பு குறைய வய்ப்புள்ளது. எனவே அது போன்ற சூழ்நிலை(1-2 ஆண்டுகளில்) வந்தால் அல்லது வரும் என்று யூகம் கிளம்பும் போது தங்கம் விலை பெருமளவு உயர வாய்ப்புள்ளது. அதேசமயம் அமெரிக்கா மற்றும் மேலை நாடுகள் 1971 ல் Convertibility to gold எடுத்தது போன்ற தார்மீக ரீதியாக தவறான மற்றும் யாரும் எதிர் பார்க்காத unconventional ந்டவடிக்கை ஏதேனும் எடுத்து தங்கத்தின் விலையை குறைத்து டாலரின் மதிப்பை தக்க வைக்க முயலலாம்.

கடந்த சில ஆண்டுகளாக அமெரிக்க மற்றும் மேலை நாடுகளின் வங்கிகள் தங்களிடம் உள்ள தங்கத்தை சிறிது சிறிதாக விற்க தொடங்கி உள்ளது.அதற்கு காரணம் அரசுகளின் பணத்தை(டாலர்) அடிப்படையான முதலீடுகளின் லாபம், தங்கத்தினால் கிடைக்கும் லாபத்தை விட அதிகம் என்று கூற பட்டாலும், உலகலவில் தங்கத்தை சேமிப்பு செல்வமாக இருக்கும் பழக்கத்தை சிறிது சிறிதாக அழித்து நாடுகள் அடிக்கும் பணத்திற்கு மற்றாக பெரிய அளவில் எந்த செல்வமும்(govt reserve) முக்கியமாக தங்கம் வந்து விட கூடாது என்பதே என்று கருத பட்டது. (இங்கிலாந்து சுமார் 400 டன் தங்கத்தை 1999- 2002 ல் விற்று, தற்போதைய தங்க விலை ஏற்றத்தால் $10 பில்லியன் நட்டத்தை சந்தித்துள்ளத்து என்பது வேறு விஷயம்! )தற்போது உலகில் உள்ள பல பெரிய வங்கிகள் வீழ்ந்து உலக அளவில் விரல் விட்டு எண்ண கூடிய அளவில் மிக பெரிய வங்கிகள் உருவாவதால், இது போன்ற குறுக்கு வழி மற்றும் தார்மீகத்திற்கு அப்பாற்பட்ட வழிகளை உலக நாடுகளும் வங்கிகளும் சேர்ந்து பின் பற்றுவது மிகவும் எளிதாகலாம்.

Warren Buffett on Gold:
It gets dug out of the ground in Africa, or someplace. Then we melt it down, dig another hole, bury it again and pay people to stand around guarding it. It has no utility. Anyone watching from Mars would be scratching their head.--