Tuesday, March 17, 2009

கல்லூரி நினைவுகள் 2 - தேர்வு திருவிழா

கல்லூரியில் திருவிழா என்றால் நான்கு சம்பவ தினங்களை கூறலாம்.அது கல்லூரி கலை நிகழ்ச்சி தினம், கல்லூரி மாணவர் அமைப்புக்கான தேர்தல்(இப்போது எல்லாம் அது உண்டா என்று தெரியவில்லை),சுற்றுல்லா மற்றும். தேர்வு காலங்கள். தேர்வு காலம் என்பது கஷ்ட காலம் தானே இதில் திருவிழா எங்கு வந்தது என்று நினைக்கிறீர்களா? தேர்வுக்கு முன் நடுக்கும் ஏற்பாடுகளையும்,தேர்வு அன்று இரவு மாணவர்கள் விதம் விதமாக படிக்கும் முறை மற்றும் தேர்வு நடக்கும் போது நடக்கும் நிகழ்வுகளை இப்போது நினைத்து பார்த்தால் அது ஒரு திருவிழா என்று தான் கூற வேண்டும். நீங்களும் படித்து பார்த்து சொல்லுங்களேன்!
தேர்வுக்கான அணுகுமுறையை கையாளும் விதத்தை வைத்து மாணவர்களை பல பிரிவுகளாக பிரிக்கலாம். அவர்களில் சில முக்கிய பிரிவுகள்.

1.சிலபஸ்ஸில் உள்ள பாட திட்டத்தை வைத்து தேவையான பாடத்துக்கு மட்டும் கல்லூரி லக்ச்சரின் நோட்ஸ் வைத்தும், சரியாக கவர் ஆகாத பாடங்களை வாங்கிய புத்தகங்கள் மட்டும் நூலக புத்தகங்கள் மூலம் கவர் செய்து படிக்க நினைப்பவர்கள். இந்த பிரிவினரது எண்ணிக்கையை விரல் விட்டு எண்ணி விடலாம்.

2.இவ்வகை மாணவர்களுக்கு சிலபஸ் பற்றி எல்லாம் கவலை இல்லை. இவர்கள் ஆசிரியர் தரும் நோட்ஸை மட்டும் படிப்பார்கள்.அது தான் அவர்களுக்கு வேத வாக்கு.(இவர்கள் பார்வையில் நன்றாக, படிக்க எளிதான நோட்ஸ் வாசிக்கும் ஆசிரியர்கள் சிறந்த ஆசிரியர்கள்!)

3.மூன்றாவது வகை மாணவர்களுக்கு ஆசிரியர், நோட்ஸ் பற்றி எல்லாம் கவலை இல்லை. அவர்கள் நம்பி இருப்பது தேர்வுக்கு முந்தய group study யை தான். பல குழுக்களாக இந்த மாணவர்கள் இருப்பார்கள். ஒவ்வொரு குழுவுக்கும் ஒரு தலைவன் இருப்பான். அவனது வேலை படத்திற்கு தேவையான் நோட்ஸ் மற்றும் தேவையெனில் புத்தகம் எடுத்து வைத்து பரிட்சைக்கு முந்தய நாள் குரூப் ஸ்டடியில் அவரது குழு மாணவர்களுக்கு சொல்லி கொடுக்க வேண்டும்

4. நான்காவது வகை மாணவர்கள் புத்தகம், நோட்ஸ்,மாணவர்கள் எதையும் நம்பாதவர்கள். அவர்கள் நம்புவது எல்லாம் பிட் அடிப்பதை மட்டும் தான். படிப்பது என்பது அவர்களை பொருத்தவரை விஷயம் தெரிந்தவர்களிடம் முக்கிய கேள்விகளை collect செய்து அதற்கான பிட்களை பக்குவமாக எழுதி வைப்பதுதான். இதிலும் இரு பிரிவினர் உள்ளனர். புத்திசாலி பிட் அடிப்பவர்கள். கொஞ்சம் மந்தமானவர்கள். புத்திசாலி பிட் அடிப்பவர்களுக்கு அவர்கள் எழுதியுள்ள விடையை எப்படி கேள்வியாக மற்றி கேட்டிருந்தாலும் சரியான பிட்டை கண்டு பிடித்து விடுவார்கள். மந்தமானவர்கள் பரிட்சையின் போது சரியான பிட்டை புத்திசாலி பிட் அடிப்பவர்களிடம் சைகை முறையில் கேள்விக்கேற்ற பிட்டை கேட்டு பதில் எழுதுவர்.


இனி கல்லூரிக்கு வருவோம். செமஸ்டரின் கடைசி வேலை நாள் வந்த உடன் பெரும்பான்மை மாணவர்களின் முதல் வேலை நன்றாக கையெழுத்துள்ள மாணவர்களின் நோட்ஸை ஜெராக்ஸ் எடுப்பது. ஜெராக்ஸ் எடுப்பதற்கென்று ஒவ்வொரு குழு மாணவர்களும் ஒவ்வொரு மாணவரின் நோட்ஸை தேர்ந்தெடுத்திருப்பர். அந்த குழுவுக்குள் ஒரு ஏஜெண்ட் இருப்பார். அவர் எத்தனை பேருக்கு நோட்ஸ் வேண்டும் என்று கணக்கிட்டு மொத்தமாக ஜெராக்ஸ் எடுத்து வருவார். அவரிடம் தேவையானவர்கள் பணம் கொடுத்து நோட்ஸ் ஜெராக்ஸ் பெற்று கொள்வர். ஜெராக்ஸ் கடைகளில் இது போன்ற நாட்களில் கூட்டம் நிரம்பி வழியும்.

இனி தேர்வுக்கான படிப்பிற்கான விடுமுறை ஆரம்பித்த பின் நடை பெறுவதை பார்ப்போம். விடுமுறை ஆரம்பித்தவுடன் எப்பொழுதும் மனதில் நினைப்பது, சென்ற செமஸ்டருக்கான படிப்பு விடுமுறையை வீணாக்கியது போல் இந்த முறையும் வீணாக்க கூடாது(கடைசி செமஸ்டர் வரை இதே நினைப்புதான்!). திட்டமிடல் மட்டும் மிக தெளிவாக இருக்கும்.எந்தெந்த நாள் எந்த பேப்பருக்கு செலவிடுவது எவ்வளவு நேரம் எந்த சாப்டருக்கு செலவிடுவது, ரிவிசன் செய்ய எவ்வளவு நேரம் என்று எல்லாம் செயற்கோளுக்கு எழுதும் மென்பொருள் போல துள்ளியமாக இருக்கும். முதல் நாள் விடுமறை வந்தவுடன் காலை மெதுவாக எழுந்து(technically speaking மதியம் எழுந்து) ஆற அமர மதிய உணவு உண்டு ,மெஸ்ஸிலிருந்து ரூம் செல்வதற்குள் பலருடன் அரட்டை அடித்து மதியம் குட்டி தூக்கம் போட்டு( இன்னும் நிறைய நாள் விடுமுறை இருக்கிறதல்லவா) மாலை எழுந்ததும் நண்பர்கள் கூறுவார்கள்- ஒழுங்கா கோவிலுக்கு போய் சாமி கும்பிட்டு பாடம் படிக்க ஆரம்பிக்கலாம். சிதம்பரம் நடராஜர் கோவில் மடபள்ளி புளி சாதம் மற்றும் வெளியில் விற்கும் பஜ்ஜி மீது அலாதி பிரியம் உண்டு.சரி என்று கிளம்பி விடுவோம் கோவில் போய் வந்து, அரட்டை அடித்தால் அன்று போய்விடும். சரி நளையிலிருந்து படிக்கலாம் என்று முடிவு செய்வோம். மறு நாள், எங்களிடம் விவாதிக்க படும் செய்தி, இனி தேர்வு முடியும் வரை கண்டிப்பா கடினமாக(?) படிக்க வேண்டும். அதை ஆரம்பிக்கும் முன் fresh ஆக ஒரு படம் பார்த்து விட்டு ஆரம்பித்தால் என்ன? இதுகூட லாஜிக்கலாக தான் தெரிகிறது என அன்று படம் பார்க்க கிளம்பி விடுவோம்.

இரண்டு நாள் வீணாகி விட்டதால் இனி நாட்களை வீணாக்க கூடாது என்று முடிவெடுப்போம். இனி அடுத்த நாள்.

காலை(?) வழக்கம் போல் மெதுவாக எழுந்து மதிய உணவு உண்டவுடன் நன்றாக களைப்பு வரும். இன்று night out செய்து விட வேண்டியது தான் என்று முடிவு எடுத்து விடுவோம். அதற்கு மதியம் நன்றாக தூங்கி எழுந்தால் தான் முடியும்.எனவே மீண்டும் ஒரு நல்ல தூக்கம். மாலை எழுந்து ஒரு நள்ள குளியல் போட்டு fresh செய்து வெளியில் வந்தால் நண்பர்களிடமிருந்து அழைப்பு வரும். PC போய் சண்முகம் கடையில் ஒரு தேனீர், பஜ்ஜி சாப்பிட்டு விட்டு படிக்க உட்காரலாம். இது கூட நல்ல ஐடியா தானே. உடனடியாக நண்பர்கள் கூட்டத்துடன் PC நோக்கி செல்வோம். சண்முகம் கடையில் டீ,பஜ்ஜி சாப்பிட்டு விட்டு கல்லூரி,மாநில மற்றும் உலக விஷயத்தை எல்லாம் அலசி முடிப்பதற்குள் இரவு 9 ஆகி விடும். மீண்டும் விடுதி வந்து இரவு உணவு உண்டு வரும் வழியில் மாணவர்களுடன் பேசி ரூமுக்குள் வந்து செட்டில் ஆவதற்குள் இரவு 10.30 ஆகி விடும். ரூமில் உள்ள மாணவர்களிடம் பேசி விட்டு புத்தகத்தை எடுத்து படிக்க ஆரம்பித்தால் சிறிது பசிப்பது போல் தெரியும். பசியா? இருக்கவே இருக்கிறது சண்முகம் கடை. மீண்டும் நண்பர்களுடன் அரட்டையுடன் கடை நோக்கி பயணம். ஆம்லெட் அல்லது தோசை உண்டு டீ குடித்து, அரட்டை முடித்து விடுதி வந்து சேர இரவு 12 மணிக்கு மேல் ஆகிவிடும். சரி இனி என்ன படிக்க போகிறோம் என்று நினைத்து, இன்று நாளே சரியில்லை என்று முடிவு செய்து நாளையிலிருந்து படிக்கலாம் என்று முடிவெடுத்து மீண்டும் தூக்கம்.

இனி அடுத்த நாள்.இது நாள் வரை நடந்த நிகழ்வுகளிளிருந்து கற்ற பாடம்- எப்படியும் பசங்களோடு சேர்ந்து இருக்கும் வரை படிக்க முடியாது. எனவே realisticகாக பிளான் செய்ய வேண்டும் என்று முடிவெடுப்போம். படிப்பதற்கு சரியான் நேரம் அதிகாலை தான். அப்பொழுதுதான் நண்பர்கள் எல்லாம் தூங்குவார்கள். எனவே disturbance இல்லாமல் படிக்கலாம்.

சரி அதிகாலை படிப்பு என்று தான் முடிவெடுத்து விட்டோமே. இன்றைய தினத்தை நன்றாக enjoy செய்ய வேண்டியது தான். அன்றைய தினமும் வழக்கம் போல் ஓடும். காலை 1 மணிக்கு(?) அலாரம் வைத்து படுப்போம். அலாரத்தில் ஸ்னூஸ் என்ற ஆப்சனை யார் தான் கண்டு பிடித்தார்களோ தெரியவில்லை. மீண்டும் மீண்டும் கடிகார அலாரம் ஸ்ணூஸ் செய்ய பட்டு பிறகு நிறுத்த படும்.

இப்படியாக ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாக படிக்காமல் சென்று கொண்டிருக்கும். விடுமுறை நாட்களின் முடிவை நெருங்கும் போது , சரி தலைக்கு மேல் வெள்ளம். இனி சாண் என்ன? முழம் என்ன? என்று பரிட்சை தினத்திலேயே பாடங்களை அட்டாக் செய்து விடலாம் என்று முடிவாகும். எங்களை தேற்றி கொள்ள மர்பி'ஸ் லா கை கொடுக்கும். அதான்
Time and efforts are inversely proportional to each other.

இது போன்ற தேர்வுக்கான விடுமுறை காலங்களில் நடக்கும் அதிசயம் ஒன்றுள்ளது. பெண்கள் விடுதியின் வாசலே கதி என்று இருக்கும் நண்பர்களை சாதாரன நாட்களில் அவ்வளவு எளிதாக பார்க்க முடியாது. ஆனால் பெரும் பாலான பெண்கள் இவ்விடுமுறைகளில் ஊருக்கு சென்று விடுவதால் அந்த குரூப் மணவர்களிடம் நிறைய நேரம் செலவிடலாம். க்ரூப் ஸ்டடி மட்டும் நம்பி பாஸ் செய்தால் போதும் என்றும் நினைக்கும் மாணவர்களும் பிட் அடிக்கும் மாணவர்களும் தான் மனதில் படிக்க வேண்டும் என்ற கவலை இல்லாமல் மிகவும் enjoy செய்வார்கள்(மற்றவர்கள் படிக்க வேண்டும் என்று மனதில் நினைத்து கொண்டே enjoy செய்வார்கள்).

இவ்வாறு விடுதியில் இருந்தால் படிக்க முடியவில்லை என்று ஊருக்கு சென்று படிக்கலாம் என்ற் நினைத்து ஒரு மூட்டை புத்தகத்தை ஊருக்கு கொண்டு சென்றாலும் அங்கும் படிக்கும் மூட் வராது. ஒரு முறை இவ்வாறு புத்தகத்தை ஊருக்கு எடுத்து வந்த போது, எப்படியும் இங்க படிக்க போறதில்லை. அப்புறம் எதற்கு இந்த மூட்டையை இங்க தூக்கிட்டு வர? என்று என் அம்மா கூறியது நினைவிற்கு வருகிறது.

சரி படிப்பிற்கான விடுமுறை தான் இப்படி போய் விட்டது. எனி தேர்வு அன்று எப்படி போகிறது என்று பார்ப்போம். தேர்வு வந்தவுடன் அன்று இரவு அனைவரும் உண்மையிலேயே படிக்க ஆரம்பிப்பர். குரூப் ஸ்டடி படிக்கும் ரூம்களில் கலை கட்டும். பெரிய கும்பல் சேரும். கும்பலின் தலைவன் நோட்ஸை ஒரு பகுதியை படிப்பான். கூட்டத்தில் இருப்பவர்கள் நன்றாக கேட்பார்கள். மீண்டும் அவன் அதை அனைவருக்கும் புரியும் படி விளக்குவான். அனைவரும் அவரவருக்கு புரியும் படி புரிந்து கொண்டு, ரிவிசன் செய்ய தலைப்புகள் மட்டும் முக்கிய குறிப்புகளை குறிப்பெடுத்து கொள்ளுவார்கள். கொஞ்சம் கடுமையான பாடம் வந்தால் அதை எப்படி சாய்ஸ்ல் விடலாம் என்று ஆராய்வார்கள். அல்லது அதில் உள்ள முக்கிய தலைப்புகளை மட்டும் வைத்து எப்படி கதை எழுதி சமாளிக்கலாம் என்று திட்டமிடுவர். சில கடினமான பாடம் படித்தே ஆகவேண்டிய பகுதி வந்தால் முன்பு குறிபிட்டதில் உள்ள முதல் வகை பிரிவு மாணவர்களிடம் சென்று விளக்கம் கேட்டு கொள்வார்கள். குரூப் ஸ்டடியில் கலந்து கொள்ளும் மாணவர்களில் சிலரின் முக்கிய நோக்கம், பரிட்சையின் போது காப்பி அடிக்கும் போது ஒரு சில பகுதி மட்டும் பார்த்து மற்றதை தம் கேள்வி ஞானத்தில் வந்த சொந்த சரக்கின் மூலம் ஒப்பேத்தலாம் என்பது. மேலும் அவர்களில் சில சாதூரியமான மாணவர்கள் காப்பி அடிக்கும் போது ஒரு மாணவர் தவறாக எழுதினால் , அதை அறிந்து அடுத்தவரிடம் காப்பி அடித்து ஒரளவு நல்ல மதிப்பெண் பெறுவர். இவ்வகை மாணவர்கள் இரவு குரூப் ஸ்டடி செய்து நள்ளிரவு அல்லது அதிகாலை ரிவிசன் செய்து விடுவார்கள். பிட் அடிக்கும் மாணவர்கள் அதற்குள் தெளிவாக பிட் எழுதி வைத்து கொள்வர். நன்றாக படிப்பவர்களில் சிலர் இரவு நண்பர்களுக்கு அவ்வப்போது தேவையான் கடினமான பாடத்தை சொல்லி கொடுத்து விட்டு அதிகாலை எழுந்து முறையாக படிப்பர்.
இனி தேர்வு அன்று நடப்பதை பார்ப்போம்.

தேர்வு கூடத்தில் யார் மேற்பார்வையளராக வருவார்? இது தான் காப்பி அடிப்பவர்கள் மற்றும் பிட் அடிப்பவர்களின் கேள்வி. ஒரு சில ஆசிரியர்கள் பிட்/காப்பி அடிப்பவர்களை பிடிப்பதில் பேர் போனவர்கள். அவ்வகை ஆசிரியர்கள் வந்தால் பிட் அடிப்பவர்கள் எந்த முயற்சியும் செய்யாமல் விதியை நொந்த படியே அரை மணி நேரத்தில் தேர்வு கூடத்தை விட்டு வெளியில் சென்று விடுவர்.

ஒரு சிலருக்கு தேர்வின் மதிப்பெண்ணும் தான் எழுதும் கூடுதல் விடை தாளின் என்ணிக்கையும் நேர் விகிதத்தில் இருக்கும் என்று நினைப்பு. பரிட்சை எழுத ஆரம்பித்த 10 நிமிடத்தல் கூடுதல் விடைதாள் கேட்டு விடுவர்.அது கடினமான வினா தாளாக இருந்தாலும் சரி.எளிதான வினா தாளாக இருந்தாலும் சரி. கல்லூரியில் நான்காம் ஆண்டு படிக்கும் போது என்று நினைக்கிறேன். பரிச்சையின் போது மூன்றாம் ஆண்டிற்கான வினாதாளை தவறுதலாக கொடுத்து விட்டனர். வினாதாளை வாங்கி முதலில் கேள்வியை பார்த்த போது குழப்பமடைந்தோம். பிறகு தவறு புரிந்து விட்டது. எங்களுக்குள் சைகையில் தகவல் பறிமாரி கொண்டிருந்தோம்.யார் அதை மேற்பார்வையாளரிடம் சொல்வது. யோசித்தி கொண்டு இருக்கும் போதே 10 நிமிடம் ஆகி விட்டது. பிறகு மெதுவாக நான் எழுந்து மேற்பார்வையாளரிடம் சொல்லி கொண்டிருந்த போது ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. அப்போது ஒரு மாணவர் எழுந்து கூடுதல் விடைதாள் கேட்டார். மேற்பார்வையாளரும் என்னப்பா? கூடுதல் விடைதாள் வாங்கி அவர் எழுதுகிறார். நீ தவறான கேள்விதாள் என்கிறாயே? என்றார். நாங்கள் எல்லாம் அந்த மாணவரை பார்த்து ஆடி போய் விட்டோம். பிறகு அந்த எக்சாம் கேன்சல் செய்ய பட்டு மறு தேர்வுக்கு ஆணையிட்டனர். இன்று வரை அந்த மாணவர் விடை தாளில் என்னதான் எழுதினார் என்பது எங்கள் அனைவருக்கும் கேள்விகுறியே.

தேர்வு எழுதும் தினத்தின் ஹீரோ என்றால் பிட் அடிக்கும் மாணவர்களை தான் கூற வேண்டும். பிட் அடிப்பதை கலை என்றும் கூறலாம் அறிவியல் என்றும் கூறலாம். ஒவ்வொரு முறை அவர்கள் பிட் அடிக்க கடை பிடிக்கும் முறைகளை கண்டால் பிரமிப்பை ஏற்படுத்தும்.

நான் படிக்கும் காலத்தில் இருந்த சில பிட் அடிக்கும் முறைகள்

1. முழு கை சட்டையின் கை பகுதியின் பின் புறம் பிட் எழுதுவர்
2. டேபிலின் அடியில் மடித்து வைக்க பட்ட பேப்பரை ஒட்டி வைத்தல்
3. ஸ்கேலின் பின் புறம்
4. ரீபில் பேனாவின் ரீபிலை எடுத்து விட்டு அதனுள் பிட் சுருள் வைத்தல்
5. சட்டை காலர் உள் பகுதி
6. கால்குலேட்டர் பின் புறம்
7. சிலீப்பரின் பின் புறம்
8. சட்டை அடிபுறத்தின் பின் புறம் பிட் எழுதி டக் செய்து கொள்வர்

இவை எல்லாம் சில வகை பிட் அடிக்கும் தொழில் நுட்பங்கள்.


பரிட்சை காலத்தில் தான் தூக்கத்தின் அருமை புரியும். அனைத்து தேர்வும் முடிந்தால் நிம்மதியாக ஒரு தூக்கம் போடுவோமே? அது உண்மையிலேயே ஒரு சுகமான அனுபவம்.

அண்ணாமலை பல்கலை நினைவுகள்- சண்முகம் கடை பஜ்ஜி


--

No comments: