Sunday, March 31, 2013

வறட்சியிலிருந்து காக்கும் Anti-Stress - World AgriExpo 6

பொய்க்கும் பருவ மழையும், தண்ணீர் விட மறுக்கும் அண்டை மாநிலங்களும் தமிழக பயிர்களை வாட விட்டு கருக செய்வது வாடிக்கையாகி விட்ட இந்த காலத்தில் வறட்சியால் பயிர்கள் வாடும் போது  வறட்சியிலிருந்து பயிரை சிறிது காலத்துக்கு காக்கும் தொழில்நுட்பம் இன்றைய காலத்தின் கட்டாயமாக உள்ளது.உலக வேளாண் பொருட்காட்சியில் அது சம்பந்தமான ஒரு தொழில் நுட்பத்தை பார்த்தேன்.

 

Polymer AG என்ற நிறுவனத்தினர் Anti-Stress 2000 என்ற நூதன தொழில்நுட்பத்தை பார்வைக்கு வைத்திருந்தார்கள். Anti-Stress 2000 என்பது 44% கொண்ட கரைசல் ஆகும்.இந்த கரைசலை தண்ணீரோடு கலந்து செடியின் மீது தெளிக்கையில் பகுதி அளவு ஊடுருவ வள்ள மேல் பூச்சு (Semi permeable coating ) இலைகளின் மீது படிகிறது.இந்த பூச்சானது நீராவி போக்கை( evapro transpiration ) 35 முதல் 50 சதவீதம்  வரை குறைக்கிறது.தண்ணீர் வறட்சி மட்டுமின்றி, கடுங்குளிர், நடவு நடும் போது ஏற்படும் தாக்கம், சூடான காற்று போன்றவற்றினால் ஏற்படும் தாக்கத்தை கூட மட்டுபடுத்துவதாக கூறுகிறார்கள்.

Highly Concentrated Anti-Stress thin flim for demonstartion (It will not be this thick when applied to plant)


வறட்சியிலிருந்து பயிரை காக்க இந்த கரைசலை வறட்சி ஏற்படுவதற்கு சிறிது முன்னராக தண்ணீர் நன்கு பாயவிட்டு தெளித்து விட வேண்டும். இது படத்தில் உள்ளது போல் சவ்வு போன்ற பகுதி ஊடுருவ கூடிய பூச்சை ஏற்படுத்தும். இந்த பூச்சானது சிறிய மழையினால் கூட கரையாது.நீராவி போக்கை குறைப்பதால் செடியில் உள்ள தண்ணீர் வெளியில் ஆவியாகி செல்ல விடாமல் செடியின் உபயோகத்துக்கு பயன் படுத்த உதவுகிறது. ஒரு முறை இக்கரைசலை தெளித்தால் 45 முதல் 60 நாட்களுக்கு பயிரை வறட்சியிலிருந்து காக்கலாம்.

இலைகளின் மேல் பூச்சு பூசுகிறது என்றவுடன் நமக்கு உடனே ஏற்படும் கேள்வி ஒளிசேர்க்கை(Photosynthesis) நடைபெறுவது தடை பெற்று விடாதா? என்பதாக இருக்கும்.பகுதி ஊடுறுவும் மேல் பூச்சு ஏற்படுத்த படுவதால் அது கரியமில வாயு மற்றும் பிராண வாயு பரிமாற்றம் எந்த தடையும் இல்லாமல் நடைபெறும் என்கிறார்கள் இந்த நிறுவனத்தினர். அதனால் ஒளிசேர்க்கை பாதிக்க படாது என்கிறார்கள்.இந்த கலவையில் உள்ள பொருட்கள் சுற்றுபுற சூழலுக்கு தீங்கை ஏற்படுத்தாததாகவும், எளிதில் மக்கி போகும் தன்மை உள்ளதாகவும் கூறுகிறார்கள்.இருபது ஆண்டுகளாக அமெரிக்காவிலும், இஸ்ரேலிலும், சில ஐரோப்பிய நாடுகளிளும் வெற்றிகரமாக விவசாயிகள் பயன் படுத்துவதாக கூறுகிறார்கள்.

Shatter-Proof  என்ற அவர்களது மற்றொரு பொருள் பூஞ்சாடிகளில் வைக்கும் மலர்கள் நிறைய நாட்கள் வாடாமல் இருக்க பயன் படுகிறது.

உலக வேளாண் பொருட்காட்சி பற்றிய முந்தய பதிவுகள்

 

Sunday, March 17, 2013

சைப்ரஸ் - கந்து வட்டிகாரனாகும் ஐரோப்பிய யூனியன்


கடந்த சில வருடங்களாகவே ஐரோப்பிய யூனியனில் பல நாடுகள் கடனில் மூழ்குவதையும் ,அவற்றை வெவ்வேறு விதமாக பெயில் அவுட் செய்து வருவதையும் பார்த்திருக்கிறோம்.பொதுவாக பெயில் அவுட் செய்யும் போது அரசிடம் இருக்கும் ஒரு சில தொழிற்துறையை தனியாரிடம் விற்று பணத்தை பெறவும், மக்கள் நல்வாழ்வு திட்டங்களை நிறுத்தி பணத்தை சேமிக்கவும் மற்றும் அரசின் செலவினங்களை குறைக்கவும் அறிவுறுத்த படும். பல நேரங்களில் இது விவாதத்திற்கு உரிய பொருளாக இருக்கும். அயர்லாந்து பெயில் அவுட் பற்றி பிரிதொரு பதிவில் எழுதி இருந்தேன்.தற்போது ஐரோப்பிய யூனியனின் மற்றொரு சிறிய நாடான சைப்ரஸ் நாடு தற்போது பெயில் அவுட் வாங்க வேண்டிய நிலைக்கு தள்ளபட்டுள்ளது.மற்ற நாடுகளில் நடந்தது போல் அரசாங்கம் மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றவும், வளமாக வாழ வைக்கவோ அதிகம் செலவு செய்து, அதன் சுமைகளை அந்த நாட்டு மக்களின் மீது ஏற்றும் நிகழ்வும் சைப்ரசில் நடக்கவில்லை. ஆனாலும் பெயில் அவுட் வாங்க வித்தியாசமான விதிமுறையை விதித்துள்ளது ஐரோப்பிய யூனியன்.

வங்கியில் பணம் சேமிப்போர்க்கு ஆப்பு!

ஐரோப்பிய யூனியனின் கடனை வாங்க சைப்ரஸ் நாட்டில் உள்ள வங்கிகள் எல்லாம் தங்களது வங்கியில் பணத்தை போட்டிருப்பவர்களிடமிருந்து சுமார் 10% பணத்தை வரியாக எடுத்து கொள்ளவேண்டும். அதாவது ஒரு யூரோ முதல் 1 லட்சம் யூரோ வரை வங்கியில் டெப்பாசிட் வைத்திருப்பவர்களிடமிருந்து 6.75 சதவிதம் பணமும் அதற்கு மேல் இருக்கும் பணத்தில் 9.9 சதவிதமும் வரியாக வங்கிகள் தனது வாடிக்கையாளரிடமிருந்து எடுத்து கொள்ளும்.இந்த வரி விதிப்புக்கு பென்சன் பணத்தை வங்கியில் இட்டு செலவு செய்து உயிர் வாழும் முதியவரோ, கணவர் இறந்த இன்சூரன்சு பணத்தை வங்கியில் போட்டு அதில் வாழ்க்கை நடத்தி வரும் விதவையோ, தங்களின் குழந்தைகளுக்கான படிப்பு செலவுக்கு பணம் சேர்ப்பவரோ விதி விலக்கு கிடையாது!இதற்கு பதிலாக அதற்கு ஈடான வங்கியின் பங்கு டெபாசிதாரர்களுக்கு அளிக்க படும்.இந்த அளவு மோசமான பெயில் அவுட் condition ஆக இருக்கிறதே என்று நினைக்கிறீர்களா? அதற்கு அந்த நாட்டின் அதிபரின் பதிலோ, பேச்சுவார்த்தையில் ஐரோப்பிய யூனியனின் மற்ற பரிந்துரைகளை ஒப்பிடும் போது இதுதான் ரொம்பவே decent ஆக இருந்ததாம்!. இந்த புதிய வரி பற்றிய மசோதா நாளை சைப்ரஸ் நாட்டு மக்களவையில் ஒப்புதலுக்காக தாக்கல் செய்ய பட இருக்கிறது. அதன் முடிவு  தெரியும் வரை அந்நாட்டு மக்கள் யாரும் வங்கியிலிருந்து பணம் எடுக்க முடியாது!



சைப்ரசுக்கு பிடித்த கிரகம்

இந்த நிலைக்கு சைப்ரஸ் எப்படி வந்தது என்று பார்ப்போம்.2008 ம் ஆண்டு சர்வதேச நிதி அமைப்பின் கணிப்பு படி சைப்ரஸ் நாடு நீண்ட காலம் வளர்ச்சி அடையும்,குறைந்த வேலை வாய்ப்பின்மை கொண்ட மற்றும் சிறந்த முறையில் அரசால் பொருளாதாரத்தை நிர்வகிக்கும் நாடாகவே கருத பட்டது. அனால் சைப்ரசிலும் பெரும்பான்மையான மேலை நாட்டில் உள்ளது போலவே கட்டுபாடற்ற வங்கிகள் உள்ளன.அந்த நாட்டு வங்கிகள் கொடுத்துள்ள கடனின் ஒப்பீட்டு அளவனாது, அந்த நாட்டின் யை
GDPவிட சுமார் 9 மடங்கு அதிகம்.இதில் முக்கியமாக கவனிக்க வேண்டிய செய்தி சைப்ரஸ் நாட்டின் வாங்கிகள் பெருமளவு பணத்தை கிரீஸ் நாட்டின் கடன் பத்திரத்தில் முதலீடு செய்திருந்தன. கிரீஸ் நாட்டை பெயில் அவுட் செய்ய ஐரோப்பிய யூனியன் அந்நாட்டின் கடனை சென்ற ஆண்டு பெருமளவு தள்ளுபடி செய்திருந்தது. அதனால் சைப்ரஸ் நாட்டின் வங்கிகளின் நிலை மோசமானது. அதே போல் கட்டுபாடற்ற வீட்டு கடன் பலவற்றையும் அள்ளி வீசியதன் விளைவு பிரச்ச்னையை இன்னும் மோசமாக்கி இருந்தது. ரஸ்ய நாட்டின் பணக்காரர்கள் பலர் சைப்ரஸ் நாட்டின் வங்கி மூலம் கிரீஸ் நாட்டு கடன் பத்திரத்தில் அதிகம் முதலீடு செய்ததும் குறிப்பிட தக்கது.

வங்கிகளின் கடனின் அளவு அந்த நாட்டு உற்பத்தியை விட பல மடங்கு இருப்பதால் அந்த நாட்டின் அரசால் அந்நாட்டு வங்கியை காப்பாற்ற வாய்ப்பில்லை.ஒரு நாட்டின் வங்கியின் வீழ்ச்சி அந்த நாட்டின் பொருளாதாரத்தின் ஒட்டு மொத்த வீழ்ச்சியாகும். சைப்ரஸ் ஐரோப்பிய யூனியனில் இருப்பதால் பொது நாணயத்தை தேவையான அளவு பிரிண்ட் செய்யவும் முடியாது. எனவே சைப்ரஸ் அரசு தனது நாட்டின் வங்கியை காப்பற்ற ஐரோப்பிய யூனியனை நோக்கி கையேந்தியது. அதற்கு ஐரோப்பிய யூனியன் விதித்த விதி முறைதான் நீங்கள் மேலே பார்த்தது.ஆக மொத்தம் வங்கிகள் அடித்த கொள்ளையால் பாதிக்க பட போவது அப்பாவி மக்கள் தான்.

இன்றைய உலக பொருளாதாரத்தின் அடிப்படையாகவும் உயிர் நாடியாகவும் இருப்பது வங்கிகள். வங்கிகள் என்ற அமைப்பின் அடிப்படையே "நம்பிக்கை" அடிப்படையில் செயல்படுவது தான்.தற்போது ஐரோப்பிய யூனியன் விதித்துள்ள இந்த தண்டனையால் மக்களுக்கு வங்கிகள் மீது ஏற்படும் நம்பிக்கை குறைய வாய்ப்புள்ளது. ஏனெனில் இன்று சைப்ரசில் நடைபெறும் நிகழ்வு நாளை எந்த நாட்டிளும் நிகழலாம் அல்லவா?இது உலக மற்றும் நாடுகளின் பொருளாதாரத்திற்கு நல்லதல்ல.

இது போல் பெயில் அவுட்டுக்கு நூதன நிபந்தனைகளை ஐரோப்பிய யூனியன் விதித்து வருவாதால் அனைவரின் மனதிலும் நிற்கும் செய்தி


அவர்களது
HitListல் இருக்கும் அடுத்த நாடு எது?

அவர்களது அடுத்த நூதன நிபந்தனை என்னவாக இருக்கும்?

இந்தியாவில் ஓரளவு கட்டுபாடோடு இருக்கும் வங்கி துறையின் கட்டுபாடுகளை தளர்த்துவதே தனது குறி என்று திரியும் மன் மோகன் சிங் இது போன்ற செய்திகளை படிப்பாரா என்று தெரியவில்லை.

Monday, March 11, 2013

மண் வளம் காக்கும் மரக்கரி (Biochar) - World AgriExpo 5

மரக்கரியை எரிபொருளாக உபயோக படுத்துவது பற்றி அனைவரும் அறிந்ததே. ஆனால் அதே மரக்கரியை கொண்டு மண்ணின் வளத்தை பெருக்க முடியும் என்கிறார்கள் Cool Planet என்ற நிறுவனத்தார். CoolPlanet என்ற நிறுவனத்தார் தாவரத்திலிருந்து பெட்ரோல்( biofuel) எடுக்கும் நிறுவனம் ஆகும். இந்த நிறுவனம் பெட்ரோல் எடுத்தபின் வெளிவரும் தாவர கழிவை பயோகார் என்னும் உரமாக உற்பத்தி செய்து விற்பனை செய்கிறார்கள்.உண்மையில் இது போன்ற மரக்கரி உரங்களை உலகில் பல்வேறு நிறுவனங்கள் தயாரித்து விற்பனை செய்ய தொடங்கி உள்ளன.முதலில் biochar என்றால் என்ன என்று பார்ப்போம்.

Biochar என்றால் என்ன?

வேளாண் மற்றும் தாவர கழிவுகளை ஆக்சிசன் இல்லாமல் (அல்லது குறைந்த ஆக்சிசனில்) 400 - 500 டிகிரி செல்சியசில் எரிக்க வைப்பதன் மூலம் வெளி வரும் கரியே biochar அல்லது agrichar என்னும் உரமாகும்.இவ்வாறு ஆக்சிசன் இல்லாமல் எரிக்கும் முறைக்கு பைரோலிசிஸ் (Pyrolysis) என்பார்கள். ஆக்சிசன் இல்லாமல் எரிக்கும் போது தவரத்தில் உள்ள கார்பன், கார்பன் டை ஆக்சைடாக மாறி காற்றில் கரைந்து விடுவது தடுக்க படுகிறது. எனவே பயோகேரில் அதிக அளவு கார்பன் உள்ளது. இது சிறந்த கரிம உரமாக (organic matter) பயன் படுகிறது.இவ்வகை மரக்கரி மண்ணில் சில நூறு ஆண்டுகள் வரை இருந்து நல்லது செய்கிறது என்கிறார்கள் இதனால் கிடைக்கும் நன்மைகள் இயற்கை செயல்முறை (Natural process) மூலம் ஆண்டுகள் அதிகமாக அதிகமாக அதிகரிக்கும் என்கிறார்கள்.


முன்னோர்களின் கண்டுபிடிப்பு!

இந்த தொழில்நுட்பத்தை கண்டு பிடித்தது மேலை நாட்டு பல்கலைகழங்கள் அல்ல. அமேசான் காடுகளில் வாழ்ந்த ஆதி குடியினர் இந்த தொழில்நுட்பத்தை கண்டுபிடித்துள்ளனர்.அமேசான் காட்டில் பழங்குடியினர் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வேளாண் மற்றும் காட்டு கழிவு பொருட்களை மண்ணுக்கு அடியில் குழிகளில் குறைந்த பிராண வாயு கொண்டு எரித்து வெளி வரும் கரியை உரமாக பயன் படுத்தியுள்ளனர்.  ஐரோப்பியர்கள் அமேசான் காட்டின் சில பகுதிகளை ஆராய்ந்த போது இந்த உண்மையை கண்டு பிடித்து இதனை terra preta என்று அழைத்தனர்.

நன்றி விக்கிபீடியா

நன்மைகள்

1.பயோகேரை மண்ணுக்கு உரமாக இடுவதன் மூலம் மண்ணின் structure மற்றும்  textureல் விரும்ப தக்க மாற்றம் ஏற்படுவதாக கூறுகின்றனர்.

 2. மண்ணின் கரிமவளம் அதிகரிக்கிறது.

 3.பயோகேரில் பல நுண்ணிய ஓட்டைகள் உள்ளன. இந்த ஓட்டைகளை எலக்ட்ரான் மைக்ராஸ்கோப் கொண்டு பார்த்தால் நன்றாக தெரியும்.  இது தண்ணீரை ஓரளவு இழுத்து வைத்து கொள்வதால் நீர் பாசனத்தின் போது தண்ணீர் வீணாவது குறைந்து நீர் மண்ணில் காய்ந்த பின் செடிக்கு நீரை தருகிறது.


4.மண்ணில் உள்ள மற்றும் உர சத்துக்கள் இந்த சிறு துளைகளுக்கு செல்வதால் மண்ணில் கசிந்து(leaching) மற்றும் பிற வழிகளில் பயிருக்கு தேவையான சத்துக்கள் வீணாவது தடுக்க படுகிறது.செடியின் வேர் பயோகேரில் உள்ள சிறு துளைகளுக்குள் சென்று சத்துக்களை எடுத்து கொள்ளும்.

 5.நுண்ணியிரிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து மண்ணின் வளமும் அதிகமாகிறது.

 6.வளம் குன்றிய மண் மற்றும் இயற்கை எரு குறைவாக கிடைக்கும் இடங்களில் இந்த மரக்கரியை ஒரு முறை இட்டு பல நூறு ஆண்டுகள் பயன் பெறலாம்.

 7, சமீப காலமாக பேசபட்டு வரும் புவி வெப்பமடைதல் பிரச்ச்னைக்கு இதுவும்  ஒரு நல்ல தீர்வாக கருதபடுகிறது. ஏனெனில் செடிகளில் உள்ள கார்பனை மண்ணுக்குள் நிலை நிறுத்தி விண்ணில் கலந்து விடாமல் வைக்கிறது. இது Carbon negative தொழில்நுட்பமாக கருதபடுகிறது.

 இவ்வகை மரக்கரியை கரும்பு , மரவள்ளி கிழங்கு தொழிற்சாலை கழிவுகளிலிருந்தும் தயாரிக்களாம். தமிழகத்தில் கரும்பு சக்கையிலிருந்து கம்போஸ்ட் தயாரித்து விற்பது பற்றி பார்த்திருக்கிறேன். மரக்கரி தொழில்நுட்பத்தையும் இனி பயன் படுத்தலாம் என்று நினைக்கிறேன். பைரோலிசிஸ் தொழில்நுட்பம் என்றால் பெரிய தொழில்நுட்பம் என்று  நினைத்து விடாதீர்கள். இதை குடிசை தொழில் போல கூட கீழ் காணும் விடியோவில் உள்ள படி செய்யலாம்.


இணையத்தில் தேடிய போது இந்தியாவில் கூட இது போல் ஒரு  சிலர் முயற்சி செய்வதாக பார்த்தேன். மண்ணில் வளம் குறைந்து வரும் இந்த காலத்தில் இயற்கையாக மண்ணின் வளத்தை அதிகரிக்க உதவும்  அமேசான் பழங்குடியினர் தந்த மரக்கரி தொழில்நுட்பமும் ஒரு வரபிரசாதம் தானே.


உலக வேளாண் பொருட்காட்சி பற்றிய முந்தய பதிவுகள்

Monday, March 04, 2013

உழவாகி உரமாகி தீவனமாகும் முள்ளங்கி! - World AgriExpo 4

மண்ணின் வளத்தை பெருக்க மூடு பயிர் வளர்ப்பது தமிழக விவசாயிகளுக்கு புதிதல்ல. நெல்லை அறுவடை செய்து கோடை காலங்களில் வேர் முடிச்சி தாவரமான சணப்பையையும், தண்டு முடிச்சி தாவரமான செஸ்பேனியா ரோஸ்டிரேட்டாவையும் தமிழகத்தில் பல காலமாகவே இயற்கை உரத்திற்காக வளர்த்து வருகின்றனர்.மேலை நாடுகளில் இந்த தொழில்நுட்பம்  இதுவரை அதிகம் பிரபலமாகவில்லை. தற்போது மேலை நாடுகளிலும் இது போன்ற தொழில்நுட்பத்தை மூடு பயிராக அறிமுக படுத்த தொடங்கி உள்ளனர். Cover Crops என்ற நிறுவனம் மிக பெரிய அளவில் இது போன்ற மூடு பயிர்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த நிறுவனம் கீழ் காணும் மூடுபயிர்களை விற்கிறார்கள்

1.ஆழ ஊடுருவி வளரும் ரை புல்வகைகள்.

2. மித வெப்பத்தில் வளரும் வேர் முடிச்சு பயிறு வகைகள் - சணப்பை

3. குளிர்கால பயிறுவகைகள் Winter Pea,Hairy Vetch,Crimson Clover,Medium Red Clover,Sweet Blue Lupin

4.முள்ளங்கி

5.மேற்கூறிய பயிர்களின் கலவை


முள்ளங்கி

 தமிழ தட்பவெப்பத்துக்கு ஏற்ற வகையில் வளரும் பெரும்பாலான பயிர்களை பற்றி தமிழக விவசாயிகள் அறிந்து இருப்பார்கள்.ஆனால் முள்ளங்கியை மூடு பயிராக பயன்படுத்துவது உண்மையிலேயே நூதன முயற்சியாகும்.முக்கிய பயிரை அறுவடை செய்து அடுத்த வருட பயிர் போடும் முன் முள்ளங்கியை மூடுபயிராக வளர்ப்பதன் மூலம் உழவுக்கும் (no tilage), அடுத்த பயிரின் வளர்ச்சிக்கு தேவையான உணவை அளிக்கவும், மண்ணின் கரிம வளத்தை அதிகரிக்கவும், களையை கட்டுபடுத்தவும், கால்நடைகளுக்கு தீவனமாகவும் பயன் படுத்தலாம் என்கிறார்கள்.

பயன்கள்

1.முள்ளங்கியின் ஆணி  வேர் சுமார் 50 செமி நீளத்திற்கு வளர கூடியது. இது சாதாரண உழவு எந்திரம் மண்ணுக்கு கீழே ஊடுருவி செல்லும் ஆழத்தை விட அதிகம். இவ்வாறு ஆழமாக ஊடுருவி சென்று மண்ணுக்கு அடியில் இருக்கும் அனைத்து வகை சத்துக்களையும் எடுத்து முள்ளங்கி தண்டில் சேமிக்கிறது. இந்த முள்ளங்கி தண்டை மண்ணில் மக்க விடுவதன் மூலம் அடுத்து பயிரிடும் பயிர்களுக்கு தேவையான நேரத்தில் (முதல் 3 மாதங்களுக்கு) வேர் பகுதியிலேயே எளிதான  உணவு கிடைக்கிறது.(Bio-Drilling)

2.அவ்வாறு வேர் மற்றும் வேர் தண்டு மக்கும் போது காற்று மற்றும் நீர் ஊடுருவி செல்ல ஏதுவாக இருக்கிறது.

3.முள்ளங்கி வளரும் போது தனது இலைகளால் பூமியின் மேல் பரப்பை மறைத்து விடுவதால் களை செடிகள் வளர்வது கட்டு படுத்த படும்.

4.முள்ளங்கி மக்கும் போது ஐசோதயோசயனேட் போன்ற குளுகோசினோலேட்குகள் வெளியாகிறது. அவை பயிருக்கு நோயை உருவாக்கும்  நெமட்டோட் மற்றும் காளான்களை அழிக்கும் தன்மை உள்ளதாக ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன.

5.மக்கிய முள்ளங்கி அதிக அளவு மண்புழுக்களையும் நல்லது செய்யும் நுண்ணியிரிகளையும் கவர்ந்திழுக்கிறது.

6.கால்நடைகளை இந்த முள்ளங்கியை மேயவிட்டு தீவனமாகவும் உபயோக படுத்தலாம் என்கிறார்கள். முள்ளங்கியோடு சில புல் வகைகளையும் கலந்து பயிரிட்டால் கால்நடைகளுக்கு நல்ல உணவாகும் .

எப்படி பயன் படுத்துவது?




அமெரிக்காவில் கடுங்குளிர் வருவதற்கு 3 - 10 வாரம் முன் இந்த முள்ளங்கியை பயிரிட பரிந்துரைக்கிறார்கள். குளிர் காலம் வந்தவுடன் தானாகவே பயிர் இறந்துவிடும் . அடுத்த வருடம் மார்ச் முதல் ஜூலை வரை மண்ணில் மக்கி அதிக சத்துக்களை அப்போது வளரும் முக்கிய பயிருக்கு அளிக்கிறது..குளிர் இல்லாவிட்டால் கால்நடைகளை மேய விட்டோ, களைகொல்லி மூலமாகவோ, mowing மூலமாகவோ பயிரை அழித்துவிடலாம் இந்தியாவின் தட்ப வெப்பத்திற்கு ஏற்ப முள்ளங்கியை எப்போது பயிட்டால் அடுத்த பயிருக்கு முழுமையாக பலன் கிடைக்கும் என்று ஆராய்ச்சி செய்து standardise செய்ய வேண்டியிருக்களாம்


Covercrops என்ற நிறுவனத்தினர் அவர்களது முள்ளங்கி விதை இது போன்ற மூடு பயிருக்கு ஏற்றதாக உள்ளதாக  கூறுகின்றனர். இது பற்றி மேலும் அறிய அவர்களது தளத்திற்கு சென்று பாருங்கள்.

விசாரித்து பார்த்ததில் ஒரு ஏக்கருக்கு தேவையான முள்ளங்கி விதையின் விலை சுமார் 400 ரூபாய் என்று தெரிய வந்தது.உபயோகபடுத்தி பார்க்க எனக்கு கொஞ்சம் மாதிரி விதையை கொடுத்தார்கள்.அதை உபயோகித்து பார்த்த பின் எனது அனுபவத்தை நான் பகிர்கிறேன்.

உலக வேளாண் பொருட்காட்சி பற்றிய முந்தய பதிவுகள்