தற்போது உலகெங்கிலும் பரபரப்பாக பேச படும் செய்தி அயர்லாந்து பெயில் அவுட். வெளிப்படையாக செய்தியை பார்ப்போர் எல்லாம் அனுமானிப்பது அயர்லாந்து அரசு பொறுப்பில்லாமல் வரவுக்கு மீறி செலவு செய்து நாட்டை படு பாதாளத்தில் தள்ளி இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய நாடுகளின் உதவியால் மீட்க படுகிறது என்ற செய்தி. ஆனால் உண்மையான செய்தி அதுவல்ல. தற்போது உண்மையில் பெயில் அவுட் நடப்பது அயர்லாந்துக்கு அல்ல. இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய தனியார் வங்கிகளுக்கு தான். இதன் பயனை அனுபவிக்க போவது அயர்லாந்து மக்கள் அல்ல. ஐரோப்பிய தனியார் வங்கிகளும் , இங்கிலாந்து மற்றும் யூரோ அரசாங்கமும் தான். ஆனால் இதனால் ஏற்பட போகும் இழப்புகள் விழ போவது அயர்லாந்து மக்களின் தலை மீது தான். ஆச்சரியமாக இருக்கிறதா? அது தான் உண்மை. முன் பதிவில் அமெரிக்காவில் உள்ள வங்கிகளை காக்க நடந்த நூதன பெயில் அவுட் பற்றி எழுதி இருந்தேன். இது ஐரோப்பிய வங்கிகளை காக்க நடக்கும் நூதன பெயில் அவுட்.
ஒவ்வொரு நாடும் தனது வரவுக்கு மீறி செலவு செய்யும் போது மிக பெரிய பட்ஜெட் பற்றாக்குறை ஏற்படுகிறது. பொதுவாக அரசுகள் போரில் ஈடு படும் போது இந்த நிலை ஏற்படும். மக்கள் நல பணிகளை வரவுக்கு மீறி அதிக அளவு செய்தாலும் இது போல் பற்றாக்குறை ஏற்படும். பற்றாக்குறையின் அளவு நாட்டின் உற்பத்தியை விட மிக அதிகமாக சென்றால் அந்த நாட்டினால் கடனை திருப்பி தர முடியுமா? என்ற சந்தேகம் வருவதால், ரிஸ்க் அதிகமாக இருப்பதை காரணம் காட்டி கடனுக்கான வட்டி வீதம் மிக அதிகமாகும். இதன் விளைவாக புதிய கடனை வாங்கும் போதும், பழைய கடனை புதுப்பிக்கும் போதும் நிதி பிரச்ச்னை ஏற்பட்டு பெயில் அவுட் தேடி நாடுகள் செல்ல கூடும். ஆனால் அயர்லாந்தின் உண்மை நிலை அதுவல்ல. கடந்த இரு ஆண்டுக்கு முன்பு வரை அந்நாட்டு அரசின் பட்ஜெட் பற்றாக்குறை விகிதம் GDP இல் 12% தான் இருந்தது. இது பிற ஐரோப்பிய நாடுகளை(ஜெர்மனி - 40% , பிரான்ஸ் - 60% ) விட குறைவு.அப்படி என்றால் அரசு மிகவும் பொறுப்பாக அரசாங்கம் நடத்தி வந்து இருக்கிறது.
அயர்லாந்துக்கு வில்லன் ஐரோப்பிய வங்கிகள் மற்றும் அந்நாட்டு நிதி துறையில் இருந்த கட்டு பாடற்ற சுதந்திரத்தால் வந்தது.அமெரிக்க வங்கிகள் அமெரிக்க அரசு நடத்திய போர்களாளும், SubPrime கடன்களாளும் மிக பெரிய லாபத்தை குறுகிய காலத்தில் காட்ட தொடங்கிய போது, ஐரோப்பிய வங்கிகளும் அவர்களோடு போட்டி போட்டு லாபம் காட்ட எதாவது செய்ய முயன்றன.(அமெரிக்காவிலிருந்தும் ஐரோப்பிய வங்கிகள் பெருமளவு லாபம் காட்டியது என்பதும் குறிப்பிட தக்கது).ஜெர்மனி பிரான்சு நாட்டு வங்கிகள் தங்கள் நாடுகளில் நிதி துறையில் கட்டுபாடு அதிகம் இருந்ததால் அங்கு கண்ட படி கடன் கொடுத்து லாபம் காட்ட முடியவில்லை. இந்த ஐரோப்பிய வங்கிகளோடு இங்கிலாந்து மற்றும் அமெரிக்க வங்கிகளும் புதிய சந்தை தேடி ஐரோப்பாவில் வேட்டையை தொடங்கின. அப்போது ஐரோப்பாவில் அதிக அளவு செலவு செய்து கொண்டு இருந்த நாடுகளின் பட்ஜெட் பற்றாகுறையை தீர்க்க கடன் கொடுத்தும் , அங்கு வங்கி துறை கட்டுபாடு குறைவாக இருந்த நாடுகளில் கடனை அள்ளி கொடுத்தும் தன் பேலென்ஸ் ஷீட்டை பெருக்கி காட்டினர்
.அயர்லாந்து நாடு இதில் இரண்டாவது ரகம்.வங்கிகள் தங்கள் கட்டுபாட்டில் இருந்த மீடியா மூலம் அயர்லாந்தில் மிக பெரிய வளர்ச்சி தொடர்ச்சியாக பல ஆண்டுகளுக்கு வர போவதாகவும்,நாட்டின் ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமான துறை வரலாறு காணாத வளர்ச்சி காண போவதாக செய்திகளை பரப்பின.அயர்லாந்தில் நிதி துறையில் கட்டுபாடு சிறிதளவே இருந்ததால் கட்டுமான துறை மற்றும் ரியல் எஸ்டேட் துறைக்கு அளவில்லா கடன் வழங்க பட்டது.இந்த கடனுக்கான பணம் எல்லாம் ஐரோப்பிய மற்றும் அமெரிக்க வங்கிகள் மூலம் வந்தது. இந்த கடனின் அளவு எவ்வளவு அதிகம் என்று அறிய கீழ் காணும் படத்தை பார்த்தால் புரியும். இந்த படத்தில் ஐரோப்பிய நாடுகளின் அரசின் பட்ஜெட் பற்றாகுறையும், அந்த நாடுகளின் தனியார் வங்கிகள் அயர்லாந்துக்கு அளித்த கடனும் ஒப்பிட பட்டுள்ளது.ஜெர்மனி நாட்டின் பட்ஜெட் பற்றாகுறையை விட அந்நாட்டு வங்கிகள் அயர்லாந்துக்கு கொடுத்துள்ள கடன் தொகை அதிகம்!
வழக்கம் போல் ஒரு வீக்கம் வந்தால் ஒரு வாட்டம் வரத்தானே வேண்டும். அந்த வாட்டம் வர தொடங்கிய போது அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தில் நடந்ததை போலே ரியல் எஸ்டேட் வீழ்ச்சி அடைந்தது. உண்மையில் சந்தை பொருளாதார கூற்று படி பார்த்தால் தவறான கணிப்பின் மூலம் கடன் கொடுத்த ஐரோப்பிய வங்கிகள் தங்கள் முதலீட்டில் நட்டத்தை சந்திக்க வேண்டும்.தாங்க முடியாத நட்டத்தை அடையும் அயர்லாந்து வங்கிகள் திவாலாக வேண்டும்.ஆனால் தங்களது தவறான முடிவால் ஏற்பட்ட நட்டத்தை ஏற்று கொள்ள ஐரோப்பிய வங்கிகள் தயாரக இல்லை. அயர்லாந்து நாட்டுக்கு ஐரோப்பிய யூனியன் மற்றும் IMF மூலம் அழுத்தம் தர பட்டது.அரசு வேறு வழியின்றி திவாலை சந்திக்க இருந்த வங்கிகளை அரசுடமையாக்கியது. அதாவது வங்கிகள் சுமக்க வேண்டிய சிலுவையை அரசு சுமக்க தொடங்கியது. இதுவே அமெரிக்காவாக இருந்தால் பணத்தை வேண்டிய அளவு பிரிண்ட் செய்து Quantitative Easing என கூறி நிலமையை சமாளித்து விடலாம்.அயர்லாந்து ஐரோப்பிய ஒன்றியத்தில் இல்லாவிட்டலாவது நாணய மதிப்பை குறைத்தல் அல்லது வேறு எதாவது யுக்தியை பின் பற்றி இருக்கலாம்.பாவம் அதற்கும் வழி இல்லாமல் போய் விட்டது.
வங்கிகளின் கடன் அரசின் தலையில் விழுந்ததால் அதன் கடன் சுமை அதிகமாகியது. அதன் கடனை திருப்பி செலுத்துமா என்ற நம்பக தன்மையும் குறைய ஆரம்பித்தது.அது மட்டுமல்ல, சந்தையில் அனுமானிப்பவர்கள் (Speculators) வெந்த புண்ணில் வேலை பாய்ச்ச ஆரம்பித்து விட்டனர்.சந்தையில் அயர்லாந்து கடன் பெற 8% க்கும் மேலாக வட்டி செலுத்த வேண்டிய கட்டயத்திற்கு தள்ள பட்டது. தனது அதிகமான கடனை 8% மேல் கொடுத்து வாங்கினால் , அந்நாடு மீண்டும் கடனுக்கான Vicious Circleல் வீழ வாய்ப்புள்ளது.அயர்லாந்து அரசு வட்டிக்கு கடன் வாங்க ஐரோப்பிய யூனியன் மற்றும் IMF நோக்கி செல்ல ஆரம்பித்தது. IMF இடம் சென்றால் தான் என்ன நடக்கும் என்பது உங்களுக்கு தெரியுமே!. அது ஐரோப்பிய தனியார் வங்கிகளுக்கு விழுந்திருக்க வேண்டிய பாரத்தை அயர்லாந்து மக்களிடம் இறக்கி வைக்க சொல்லி விட்டது. இந்த பிர்ச்ச்னைக்கு முன் நியாயமான பட்ஜெட் போட்டு அளவோடு மக்கள் நலனுக்காக செலவு செய்த அரசை மக்கள் நலனுக்கு எதிரான முடிவுகளை எடுக்க சொல்லி அழுத்தம் கொடுத்து வெற்றியும் பெற்று விட்டது.அரசு எடுத்துள்ள ஒரு சில முடிவுளை நீங்கள் பார்த்தால் என்ன நடக்கிறது என்று நீங்களே யூகித்து கொள்வீர்கள்.
1.குறைந்த பட்ச தொழிலாளர் ஊதியம் 10 சதத்துக்கும் மேலாக குறைக்க பட்டுள்லது
2. ஏற்கனவே வீட்டு கடனை கட்ட முடியாதவர்கள் இருக்கையில் 530மில்லியன் யூரோவுக்கான புதிய வீட்டு வரி
3.மக்கள் நலவாழ்வுக்கான பட்ஜெட் 3பில்லியனுக்கும் மேல் கட்.
4. வருமான வரி உயர்வு.
5. பொது துறை தொழிலாளர்கள் ஆட் குறைப்பு மற்றும் சம்பள குறைப்பு.
இது போன்ற முடிவுகளை எடுத்துள்ளதால் அயர்லாந்து அரசுக்கு சிறிது குறைந்த வட்டியில் ஐரோப்பிய மத்திய வங்கியிலிருந்தும் இங்கிலாந்திடமிருந்தும் IMFஇடமிருந்தும் கடன் கிடைக்கும்.இதில் முக்கியமாக கவனிக்க வேண்டியது இந்த கடன் அயர்லாந்து மக்களின் நன்மைக்காக செலவிட போவது இல்லை. இவை ஐரோப்பிய வங்கிகளின் கடனை வட்டியோடு திருப்பி செலுத்த தான் இவை உதவும். அதாவது ஐரோப்பிய மத்திய வங்கி மற்றும் இங்கிலாந்து மத்திய வங்கியிடம் கடன் வாங்கி ஐரோப்பி மற்றும் இங்கிலாந்து தனியார் வங்கிகளுக்கு பணத்தை கொடுப்பார்கள். இரண்டு கடனுக்கான வட்டியையும் முதலையும் அயர்லாந்து மக்களின் உழைப்ப்பின் மூலம் திருப்பி கொடுக்க வேண்டும்.இதை பார்த்தால் நம்மூர் கந்து வட்டி காரர்களின் கதை போல் உள்ளதள்ளவா?
இங்கிலாந்தில் பலர் அயர்லாந்துக்கு பெயில் அவுட் பணம் கொடுப்பதை எதிர்க்கிறார்கள். இங்கிலாந்து மத்திய வங்கி அயர்லாந்துக்கு பணம் கொடுக்கவில்லை என்றால் இங்கிலாந்தின் பல தனியார் வங்கிகளின் கதியும் அதோ கதி தான்!.உண்மையில் என்ன நடக்கிறது என்றால் இதன் மூலம் இங்கிலாந்து நாட்டிற்கு தான் மிக பெரிய லாபம். அயர்லாந்து நாடு வெளி சந்தையிலிருந்து கடன் வாங்க வேண்டும் என்றால் 8% வட்டி கொடுக்க வெண்டும். ஆனால் இங்கிலாந்து 3.3% வட்டிக்கு பணம் வாங்க முடியும்( Quantitative easing முறையிலும் பணத்தை 0% வட்டியிலும் உற்பத்தி செய்யலாம்). எனவே இங்கிலாந்து அரசு 3.3% க்கு கடன் வாங்கி 5.8%க்கு அயர்லாந்துக்கு கொடுக்க போகிறது. ஆக மொத்தம் அனைத்து வகையிலும் இங்கிலாந்துக்கு லாபம் தான்.
இந்தியாவும் அயர்லாந்தின் நிலைக்கு வராது என்று நம்புவோம்.
--
19 comments:
அருமையாக,எளிமையாக புரியும்படியாக பகிர்ந்துயுள்ளீர்கள் பகிர்வுக்கு நன்றி நண்பரே.
//இந்தியாவும் அயர்லாந்தின் நிலைக்கு வராது என்று நம்புவோம்//
இப்போது உள்ள நிலையில் இந்தியாக்கு ஒரு நல்ல தலைமை கிடைக்கும்வரை கேள்விக்குறியாகவே உள்ளது .
நம்பிக்கையே வாழ்க்கை நல்லதே நடக்கும்னு நம்புவோம்..
//அயர்லாந்து நாடு இதில் இரண்டாவது ரகம்.வங்கிகள் தங்கள் கட்டுபாட்டில் இருந்த மீடியா மூலம் அயர்லாந்தில் மிக பெரிய வளர்ச்சி தொடர்ச்சியாக பல ஆண்டுகளுக்கு வர போவதாகவும்,நாட்டின் ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமான துறை வரலாறு காணாத வளர்ச்சி காண போவதாக செய்திகளை பரப்பின//
அதாவது இப்போது இந்தியா செய்து கொண்டிருப்பது போல!!!
வலுத்தவன் வாழ்வான் என்பது நன்றாகவே புரிகிறது.... இச்சிறந்த பதிவிட்டதற்கு நன்றி...
அயர்லாந்து ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்திருப்பதால் தான் பணத்தை வேண்டிய அளவு பிரிண்ட் செய்ய முடியவில்லையா?
//இங்கிலாந்து ( Quantitative easing முறையிலும் பணத்தை 0% வட்டியிலும் உற்பத்தி செய்யலாம்)//
பணத்தை இந்த அளவு தான் பிரிண்ட் செய்ய வேண்டும் என்ற வரைமுறை எதுவும் இல்லையா?
நன்றி தாமஸ் ரூபன், வாசு
//இப்போது உள்ள நிலையில் இந்தியாக்கு ஒரு நல்ல தலைமை கிடைக்கும்வரை கேள்விக்குறியாகவே உள்ளது .
நம்பிக்கையே வாழ்க்கை நல்லதே நடக்கும்னு நம்புவோம்..
//
தலைமை - முக்கியமாக தற்போது உருவாகி உள்ள மீடியா- இடை தரகர்கள் - பெரிய உள் நாட்டு வெளி நாட்டு கார்போரேட்டுகள் இணைந்து உருவாக்கி வரும் Crony Capitalism ஐ தகர்க்கும் தைரியம் உள்ள தலைவர்
//அதாவது இப்போது இந்தியா செய்து கொண்டிருப்பது போல!!!
//
ஓரளவு உண்மை தான் தாமஸ் ரூபன்.ஆனால் இந்தியாவில் வளர்ந்து வரும் மக்கள் தொகையால் ஓரளவு வளர்ச்சி எப்படியும் இருக்கும். ஆனால்
வளர்ச்சி சம சீராக மற்றும் எல்லா துறையிலும் இருக்க வேண்டும். ரியல் எஸ்டேட் துறையில் மட்டும் வளர்ச்சி இருந்தால் அது மிக பெரிய பிரச்ச்னையே
//அயர்லாந்து ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்திருப்பதால் தான் பணத்தை வேண்டிய அளவு பிரிண்ட் செய்ய முடியவில்லையா?
//
ஆம். அயர்லாந்து தற்போது யூரோ கரன்ஸியை ஏற்று கொண்டுள்ளது. எனவே அதனால் முடியாது.
//பணத்தை இந்த அளவு தான் பிரிண்ட் செய்ய வேண்டும் என்ற வரைமுறை எதுவும் இல்லையா?
//
முற்காலத்தில் தங்கத்துக்கு இணையாக கரண்சியை பிரிண்ட் செய்தார்கள். பிறகு இரண்டாம் உலக போருக்கு பின் அமெரிக்கா டாலரை ரிசர்வ் கரன்சியாக மாற்றியது. மற்ற நாடுகள் டாலரை கொடுத்து தங்கத்தை வாங்க முடியும் அப்போது. ஆனால் வியட்னாம் போர் மற்றும் பிற காரணத்தால் அமெரிக்கா அளவுக்கு மீறி டாலரை பிரிண்ட் செய்ததால் அதனால் டாலருக்கு ஏற்ற தங்கம் தர முடியவில்லை. எனவே 1971ல் டாலருக்கு இணையான தங்கத்தை தர முடியாது என்று அறிவித்து விட்டது(இது திவால் போல் தான்). அதன் பிறகு நாணயங்களின் மதிப்பை சந்தை தான் முடிவு செய்கிறது. அதாவது பணமும் ஒரு கமாடிட்டி போல் ஆகிவிட்டது. இது பற்றி பதிவு எழுத நினைத்து கொண்டே இருக்கிறேன். ஆனால் போதிய நேரம் கிடைக்க வில்லை.
உங்கள் விளக்கத்திற்கு நன்றி நண்பரே.
அமெரிக்கா போலவே எல்லா நாடுகளும் நினைத்தால் அது மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் அல்லவா...
// இது பற்றி பதிவு எழுத நினைத்து கொண்டே இருக்கிறேன். ஆனால் போதிய நேரம் கிடைக்க வில்லை.//
நேரம் கிடைக்கப் போது பதிவிடுங்கள் எங்களுக்கு பயனுள்ளதாக அமையும் நன்றி.
//அமெரிக்கா போலவே எல்லா நாடுகளும் நினைத்தால் அது மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் அல்லவா...
//
தற்போதைய உள்ள உலக பொருளாதார சூழ்நிலையில் பாதிப்பு ரூபாயை அச்சடிக்கும் நாடுக்கு அதிகம் இருக்கும்(அமெரிக்கா தவிர). சிம்பாப்வேயில் நடந்தது போல்!
//தற்போதைய உள்ள உலக பொருளாதார சூழ்நிலையில் பாதிப்பு ரூபாயை அச்சடிக்கும் நாடுக்கு அதிகம் இருக்கும்(அமெரிக்கா தவிர). சிம்பாப்வேயில் நடந்தது போல்!//
அமெரிக்கா தவிர ஏன்? புரியவில்லை நண்பரே
//அமெரிக்கா தவிர ஏன்? புரியவில்லை நண்பரே
//
அமெரிக்க நாணயம் உலக சேமிப்பு நாணயமாக இருப்பதால் உலகின் பெரும் பாலான வர்த்தகங்கள் டாலர் அடிப்படையில் நடக்கிறது. உதாரணமாக இந்தியா காரை உற்பத்தி செய்து மலேசியாவிற்கு விற்றால் டாலரில் தான் வர்த்தகம் இருக்கும். எனவே காரை வாங்க மலேசியாவிற்கு டாலர் தேவை. நாம் மலேசியாவிலிருந்து பாம் ஆயில் வாங்கினால் டாலர் கொடுத்து தான் வாங்க முடியும். அதுமட்டுமன்றி முக்கியமாக உலக நாடுகள் அனைத்தும் பெட்ரோலை டாலரில் வாங்க வேண்டும். அதுமட்டுமன்றி ஒவ்வொரு நாடும் குறிபிட்ட செல்வத்தை சேமிப்பு செல்வமாக வைக்க வேண்டும். தற்போது உலக நாடுகளின் சேமிப்பு செல்வம் 60% டாலராக உள்ளது.எனவே டாலரின் தேவை எப்போதும் உலகில் அதிகம் மேலும் பெரும்பாலான நாடுகளின் நாணயத்தின் மதிப்பு டாலரோடு ஒப்பீடு செய்ததாக உள்ளது.அமெரிக்கா டாலரை அதிகம் அச்சடித்து வெளியிட்டால் அதன் மதிப்பு குறைய நேரிடும். டாலரின் மதிப்பு குறைவது என்பது பிற நாடுகளின் நாணயத்தின் மதிப்பு அதிகமாகிரது என்று பொருள். அவ்வாறு பிற நாடுகளின் நாணய மதிப்பு அதிகரித்தால் அவர்களின் ஏற்றுமதி பாதிக்க படும்(அந்நாட்டு பொருள் அதிக காஸ்ட்லியாக இருக்கும்). இதை தவிர்க்க பிற நாடுகள் டாலரின் மதிப்பை குறைக்காமல் பார்த்து கொள்வார்கள். அது மட்டுமன்றி டாலரின் மதிப்பு குறைந்தால் பிற நாடுகளின் சேமிப்பின் மதிப்பும் குறையும். அமெரிக்கர்கள் இதைதான்
Dollar is our(american) currency.
But your problem
என்று கூறுகிறார்கள். இது பற்றி ஓரளவு கீழ் காணும் பதிவில் விளக்கியுள்ளேன்
http://tamilfuser.blogspot.com/2007/09/blog-post.html
நன்றி நண்பரே.
//
இந்தியாவும் அயர்லாந்தின் நிலைக்கு வராது என்று நம்புவோம்.//
நம்புவோம்!!
பதிவும் பின்னூட்ட விளங்கங்களும் மிகவும் பயனுள்ளவை.
நன்றி
Post a Comment