Sunday, November 21, 2010

ஒபாமாவின் இந்திய படையெடுப்பு

உலகின் மிக பெரிய வர்த்தக நிருவனங்களின் முன்னனி அதிகாரிகள் 250 பேருடன் இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ளார் அமெரிக்க பிரதமர்.அமெரிக்க சரித்திரத்தில் வேறு எந்த ஜனாதிபதியின் வெளி நாட்டு விஜயத்திலும் இத்தனை வர்த்தக நிறுவனங்களின் தலைவர்கள் வந்ததில்லை. இது ஒரு பயணமா? அல்லது படையெடுப்பா?.

ஒபாமாவின் இந்திய பயணத்திற்கான காரணம் பற்றி பலவிதமாக பலர் கூறி வந்தாலும் ஒபாமா வெளிபடையாக கூறும் காரணம் அமெரிக்க உற்பத்தி பொருளுக்கு இந்தியாவில் சந்தை ஏற்படுத்த வேண்டும் என்பது தானாக இருக்கும்.

சரி ஒபாமா கூற வருவது எந்த வகை உற்பத்தி பொருட்கள் என்றும் அது எவ்வாறு உற்பத்தி செய்யபடுகிறது என்றும் பார்ப்போம். முதலில் பல்லாயிரம் கோடி பெருமான ஆயுதங்களை இந்தியாவிற்கு விற்க கையொப்பம் இட்டுள்ளார். நிச்சயம் இந்த ஆயுத தடவாடங்களின் பெரும் பகுதி அமெரிக்காவில் தான் உற்பத்தி செய்ய படும். இதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் ஒபாமா மூச்சிக்கு முன்னூறு தடவை தன்னுடைய ஆதர்ச நாயகனாக கூறுவது மகாத்மா காந்தியடிகளையும் அவரது அகிம்சை தத்துவத்தையும் தான். காந்தியின் அகிம்சை வழியில் நாடுகளுக்கெல்லாம் ஆயுதத்தை விற்பது வடிவேலு பட காமெடி போல் தான் உள்ளது.

அமெரிக்காவில் முக்கியமாக உற்பத்தி செய்யும் பொருள் ஆயுதத்துக்கு அடுத்த படியாக கம்ப்யூட்டர் மென்பொருட்களாகத்தான் இருக்கும் . தற்போது இந்தியாவில் மென்பொருட்கள் விற்பனைக்கு எந்த கட்டுபாடும் இல்லை. எனவே அவர் கூற வருவது நிச்சயம் கம்ப்யூட்டர் மென்பொருட்களாக இருக்காது.ஒபாமா முக்கியமாக கேட்பது சில்லறை வியாபாரத்தில் வால்மார்ட் போன்ற அமெரிக்க நிறுவனங்களுக்கு முழுமையான அனுமதியும் அமெரிக்க நிதி நிறுவனங்களுக்கு இந்திய வங்கி மற்றும் காப்பீட்டு துறையில் முழுமையான அனுமதியும் தான்.

முதலில் வால்மார்ட் கதைக்கு வருவோம். வால்மார்ட்டுக்கு இந்தியாவில் முழு அனுமதி கொடுப்பதால் எப்படி அமெரிக்க பொருட்களுக்கு சந்தை விரிவாகுமா என்று பார்ப்போம். இன்று அமெரிக்காவில் வால்மார்ட்டில் விற்க படும் பொருட்களில் பெரும்பாலான பொருட்கள் உற்பத்தி செய்ய படும் இடம் சீனா தான். எனவே வால்மார்ட் இந்தியாவில் கடைகளை தொடங்கினால் நிச்சயம் அமெரிக்க பொருட்களுக்கான சந்தை விரிவடைய போவது இல்லை. அப்படி என்றால் ஒபாமா கூறிய அமெரிக்க உற்பத்தி பொருள் எதுவாக இருக்கும்? இது பற்றி அறிந்து கொள்ள அமெரிக்க பொருளாதாரத்தில் கடந்த இரு ஆண்டுகளாக நடந்து வரும் நிகழ்வுகளை பற்றி பார்ப்போம்.

கடந்த பொருளாதார நெருக்கடியை அடுத்து அமெரிக்காவில் பண புழக்கத்தை அதிகரிக்க முதல் கட்டமாக பெடரல் ரிசர்வ் வட்டி விகிதத்தை சிறிது சிறிதாக குறைத்தது. தற்போது அங்கு வட்டி விகிதம் கிட்ட திட்ட 0 சதவிதமாக இருக்கிறது. எனவே அமெரிக்காவில் உள்ள நிதி நிறுவனங்கள் வட்டி இல்லா பணத்தை வாங்கி குவித்து உள்ளனர். அது மட்டுமன்றி அமெரிக்க நிதி நிறுவனங்களிடம் இருந்த நட்டத்தை கொடுக்கும் கடன் பத்திரங்களை எல்லாம் பணம் கொடுத்து வாங்கி விட்டது. அதன் விளைவு அமெரிக்க நிதி நிறுவனங்களிடம் பண கையிருப்பு நிறைய உள்ளது. தற்போது இந்தியாவில் கடனுக்கான வட்டி விகிதம் மிக அதிகமாகவே உள்ளது. மேலும் பொருளாதாரமும் மிக வேகமாக வளர்ந்து வருவதால் இந்திய நிதி நிறுவனங்களில் அன்னிய முதலீட்டை முழுமையாக திறந்து விட்டால், அமெரிக்காவில் வட்டி இல்லாமல் வாங்கிய பணத்தை இந்தியாவில் முதலீடு செய்து மிக பெரிய லாபம் அடைய முடியும். அவ்வாறு செய்வதால், அமெரிக்க நிதி நிறுவனங்கள் இந்திய பொருளாதாரத்தையும் அமெரிக்க பொருளாதாரத்தை போல சூதாட்ட களமாக்கி நடுத்தர மற்றும் ஏழை மக்களின் எதிர்காலத்தை, முக்கியமாக பணி ஓய்வு பெற்ற பின் வரும் வாழ்க்கையை கேள்வி குறியாக்கி விட வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

அடுத்தது வால்மார்ட் போன்ற கம்பெனிகளின் கதைக்கு வருவோம். அமெரிக்க மத்திய வங்கி கடன் விகிதத்தை 0% கொடுப்பதால் வெளி மார்க்கெட்டில் கம்பெனிகளின் பாண்டுகளுக்கான கடன் விகிதம் மிக குறைவாக உள்ளது. உதாரணமாக வால்மார்ட் நிறுவனம் 0.75% வட்டிக்கு அமெரிக்காவில் கடன் வாங்கியுள்ளது. இது போல் வட்டியில்லா கடன் மூலம் பல பில்லியன் வைத்திருக்கும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு இந்தியாவில் தொழில் நடத்த முழு அனுமதி கொடுத்தால், இவர்களுடன் தினமும் கந்து வட்டிக்கு கடன் வாங்கி கடை நடத்தும் சிறு மற்றும் நடுத்தர வியாபாரிகள் போட்டியிட முடியாமல் நலிந்து போக போவது திட்ட வட்டம்.

அதைவிட முக்கிய நிகழ்வு தற்போது Quantitative Easing என்ற பெயரில் அமெரிக்காவில் நடந்து வருவது. தற்போது QE என்ற பெயரில் அமெரிக்க மத்திய வங்கி அமெரிக்க அரசின் கடனையும், அமெரிக்க நிதி நிறுவனங்களின் கடனையும் வாங்கி வருகிறது. மத்திய வங்கி அரசின் கடனை வாங்குகிறது என்றால், அது எந்த அடிப்படையும் இல்லாமல் பணத்தை பிரிண்ட் செய்து வெளியிடுகிறது என்று பொருள்.அதாவது எந்த அடிப்படையும் இல்லாமல் பணத்தை உற்பத்தி செய்கிறது. இவ்வாறு உற்பத்தி செய்ய படும் பணத்தின் விளைவாக தான் அமெரிக்க வட்டி விகிதமும், பெரிய நிறுவனங்களின் கடன் பத்திரத்துக்கான வட்டியும் மிக குறைவாக உள்ளது. இது போல் உற்பத்தி செய்யபடும் பணம் வளரும் நாடுகளுக்குள் வெள்ளமாக புகுந்து பங்கு சந்தை வீக்கம்-வாட்டத்தையும், வளரும் நாடுகளின் தொழில் துறையின் கட்டு பாடுகளை மிக பெரிய பன்னாட்டு நிதி நிறுவனங்கள் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களின் கைக்கும் கொண்டு செல்ல உதவுகிறது. இந்த நிகழ்வுகள் சுலபமாக நடக்க தேவையானவற்றை செய்ய வலியுறுத்துவதுதான் அமெரிக்க அதிபரின் பயணத்தின் முக்கிய குறிக்கோள்.



உண்மையில் இதன் மூலம் சாதாரண இந்தியருக்கோ அல்லது சாதாரண அமெரிக்கருக்கோ அதிக பயன் இருக்க போவது இல்லை. பலன் அனைத்தும் மிக பெரிய நிதி நிறுவனங்களுக்கும், மிக பெரிய பன்னாட்டு நிறுவனங்களுக்கும் தான்.

தைமூர் மற்றும் நாதிர் ஷா போன்றோரின் படையெடுப்பின் மூலம் இந்திய செல்வம் ஒரு முறை மட்டும் கொள்ளை போனது. ஆங்கிலேயர்களின் ஆட்சி மூலம் ஒரு சில நூற்றாண்டு செல்வம் கொள்ளை போனது. ஆனால் தற்போதைய ஒபாமாவின் படையெடுப்பின் விளைவு எப்படி இருக்கும் என்பதை காலம் தான் பதில் சொல்லும்.

அமெரிக்க அதிபர் கூறிய படி இந்திய சந்தையில் அதிக இடம் தேடும் அமெரிக்க உற்பத்தி பொருள், தற்போது அமெரிக்க மத்திய வங்கி பெருமளவில் உற்பத்தி செய்யும் டாலராகத்தான் இருக்க வாய்ப்பு உள்ளது. இதன் மூலம் இன்றைய மற்றும் பிற்கால இந்தியர்களின் உழைப்பின் பலன்கள் பன்னாட்டு நிறுவனங்களுக்கு செல்ல வாய்ப்புள்ளது.

--

12 comments:

vasu said...

spectrum பற்றிய இடுகையை எதிர்பார்க்கிறேன்.

சதுக்க பூதம் said...

வாங்க வாசு. அது பற்றிய முழு விவரம் எனக்கு புரியவில்லை. முதலில் லஞ்சத்தில் பெரும் பணம் ராஜாவுக்கு சென்றிருக்கலாம் என்ற் நினைத்தேன். பிறகு முதல்வரின் குடும்பத்திற்கு சென்றிறுக்கும் என்று நினைத்தேன். தற்போது வரும் செய்தியை பார்த்தால் அதற்கு பின்னனியில் இந்தியாவின் பெரும் தனியார் நிறுவனங்களும், மிக பெரிய அரசியல் புரோக்கர்களும் அதை விட முக்கியமாக முன்னனி வட இந்திய செய்தி நிறுவனங்கள் புரோக்கர்களாக செயல் பட்டு வருவதாகவும் தெரிகிறது. இந்த கூட்டணி Spectrum மட்டுமல்ல பாதுகாப்பு துறை உட்பட அனைத்து துறைகளிளும் இருக்கலாம் என அனுமானிக்க்கிறேன்.
இது போல் மீடியாக்களுக்கும் புரோக்கர்களுக்கும் இடைபட்ட தொடர்பு மிகவும் அபாயகரமானது. அரசியல்வாதிகள் ஊழல் செய்வது எதிர்பார்க்க கூடியது. ஆனால் அனைத்து முன்னனி ஊடகங்களும் கார்டெல் போல் செயல்படுவது அபாயகரமானது.
ஓரளவு முழுமையான உண்மை தெரிந்தது என்னும் நம்பிக்கை ஏற்படும் போது நிச்சயம் பதிவிடுகிறேன். நான் முன் பதிவின் பின்னூட்டத்தில் கூறியது போல் டாலர் உற்பத்தி பற்றி விரிவான பதிவுக்கு தயார் செய்து கொண்டு உள்ளேன்

vasu said...

//நான் முன் பதிவின் பின்னூட்டத்தில் கூறியது போல் டாலர் உற்பத்தி பற்றி விரிவான பதிவுக்கு தயார் செய்து கொண்டு உள்ளேன்//

மிகவும் மகிழ்சிகரமான செய்தி....

spectrum விவகாரத்தில் நீங்கள் குறிப்பிட்டது போலவே மிக பெரிய கூட்டணியில் பெரிய மோசடி நடந்திருப்பதாக தான் நானும் நம்புகிறேன். இது தொடர்பான விரிவான பதிவிட நீங்கள் முக்கியத்துவம் அளித்தால் மிக்க மகிழ்ச்சி அடைவேன்.

இந்த இடுகையும் அருமையாக உள்ளது.... (இதற்க்கு முந்தைய commentகள் பதிவை படிக்கும் முன்பே இட்டவை..)

நன்றி....

Saravanakumar said...

what the heck going around us?

Knowing all these facts - Will our govt. sign with Obama?

Now itself eyes are closing !

Rajasurian said...

//நான் முன் பதிவின் பின்னூட்டத்தில் கூறியது போல் டாலர் உற்பத்தி பற்றி விரிவான பதிவுக்கு தயார் செய்து கொண்டு உள்ளேன்//

காத்திருக்கிறேன் மிகுந்த எதிர்பார்ப்புடன்...

பகிர்விற்கு நன்றி

சதுக்க பூதம் said...

வாங்க ஜோ

//what the heck going around us?

Knowing all these facts - Will our govt. sign with Obama?

Now itself eyes are closing !

//

அரசியல்வாதிகள் தாங்கள் ஆட்சியில் இருக்கும் வரை காலத்தை ஓட்டுவதையும் லாபம் அடைவதையும் தான் பார்க்கிறார்கள்.

சில ஆண்டுகளுக்கு முன் சேமிப்பு கலனில் இருக்கும் அரிசி எலிக்கு உணவாவதை தடுத்து அதை பசியில் வாடுபவர்களுக்கு உணவாக கொடுக்க சொன்னது உச்ச நீதி மன்றம். அதை எதிர்த்த மன் மோகன் சிங், அதற்கு பதில் நாடெங்கும் சேமிப்பு கலன் கட்டுவது பற்றி சிந்தித்ததாக தெரியவில்லை. ஆனால் பல பில்லியன் டாலருக்கு ஆயுதம் வாங்கி குவிப்பதை பற்றி மட்டுமே அரசியல்வாதிகளுக்கு சிந்தனை உள்ளது.

சதுக்க பூதம் said...

வாங்க வாசு,ராஜ சூரியன்.
//காத்திருக்கிறேன் மிகுந்த எதிர்பார்ப்புடன்...

//
//மிகவும் மகிழ்சிகரமான செய்தி....

//
நிச்சயம் அது பற்றி சீக்கிரம் பதிவிடுகிறேன்

Santhosh said...

அருமையான ஒரு அலசல் சதுக்க பூதம்..

சதுக்க பூதம் said...

நன்றி சந்தோஷ் = Santhosh

Gawaskar said...

எளிய நடையில் புரியும் படியாக இருக்கிறது .

Unknown said...

நன்றி, சதுக்கபூதம்.

இன்னுமொரு அடிமைத்தனமாக்கல் சில பல இந்தியர்களின் முழு விருப்பத்துடன்.

ஒபாமா மட்டுமல்ல, எந்தவொரு அமெரிக்க அதிபரின் வருகையும், இந்தியச் சந்தையைக் குறிவைத்துதான்.

சதுக்க பூதம் said...

வாங்க Gawaskar and தஞ்சாவூரான்
//ஒபாமா மட்டுமல்ல, எந்தவொரு அமெரிக்க அதிபரின் வருகையும், இந்தியச் சந்தையைக் குறிவைத்துதான்.//
உண்மை தான் தஞ்சாவூரான். இந்த பயணங்களில் இருந்து முடிந்த வரை இந்தியா நன்மையை கறந்தால் பரவாயில்லை. புஷ் பயணத்தால் ஓரளவு இந்தியாவுக்கும் நன்மை கிடைத்தது