Monday, February 25, 2013

விவசாயத்திற்கு ஆற்றலேற்ற பட்ட நீர் - World AgriExpo 3


தமிழகத்தில் பல ஆண்டுகளுக்கு முன்னரே காந்த சக்தி ஏற்றம் செய்ய பட்ட மருத்துவ குணம் கொண்ட நீர் என்ற பேச்சு அடிபட்டு கொண்டு இருந்தது.அது அறிவியலா அல்லது போலி அறிவியலா என்ற கேள்வி பலர் மனதில் இருந்தது. தற்போது விவசாயத்திற்கு அந்த தொழில்நுட்பத்தை Omnienviro என்ற நிறுவனத்தினர்  விரிவு படுத்தியுள்ளனர்.

நீர் என்பது ஹைடிரஜன் மற்றும் ஆக்சிசன் மூலக்கூறுகளால் உருவானது. பொதுவாக பல நீர் மூலகூறுகள் ஒன்றினைந்து கூட்டாக இருக்கும். சாதரண தண்ணீரில் இந்த மூலகூறின் அளவு பெரும்பாலும் பெரியதாக இருப்பதால் அனைத்து நீர் மூலக்கூறு குழுமங்களும் வேரின் துளை மூலம் செல்ல முடியாது.இந்த பிரச்ச்னையை தீர்க்க ஆம்னிஎன்விரோ என்ற கம்பெனி Hydrodynamic Magnetic Resonance (HDMR) தொழில்நுட்பம் மூலம் H2O ENERGIZER என்ற கருவியை அறிமுகபடுத்தி உள்ளது.நீர் ஆற்றலேற்றி பெரிய நீர் மூலகூறு குழுமங்களை உடைத்து சிறிய மூலகூறு குழுமங்களாக ஆக்குகிறது. அதன் மூலம் கொடுக்கபடும் நீரின் பெரும்பான்மையான பகுதி பயிரின் வேருக்கு செல்கிறது.பயிருக்கும் அளிக்கும் பெரும்பான்மையான நீர் வேர் வழியே உறிஞ்சபடுவதால் குறைந்த அளவு நீர் கொடுத்தாலே போதும்.


காந்த சக்தியானது ஹைடிரஜன் ஆக்சிஜன் இடையே இருக்கும் பிணைப்பின் கோணத்தை 104 டிகிரியிலிருந்து 103 டிகிரியாக குறைக்கிறதாம். அதன் விளைவாக 10 - 12 நீர் மூலக்கூறுகள் இருக்கும் குழுமம் பிரிந்து 6 - 7 நீர் மூலகூறுகள் உடைய குழுமமாக பிரிகிறது.இந்த சிறிய நீர் மூலகூறு குழுமம் வேர்கள் அதிக அளவு நீரை உறிஞ்சுவதற்கு ஏதுவாக ஆக்குகிறது.


உப்புதன்மை உடைய நீரை நீர்பசனத்துக்கு உபயோக படுத்தவும், மண்ணில் உள்ள உப்பு தன்மையை flooding மூலம் அதிக திறனுடன் வெளியேற்றவும் இக்கருவி உதவுவதாக கூறுகிறார்கள். இந்த கருவியை கொண்டு 2000 PPM -  7000 PPM உப்பு கலந்துள்ள நீரை கூட நீர்பசனத்துக்கு பயன் படுத்தலாம் என்று கூறுகின்றனர்.இந்த தொழில்நுட்பம் விவசாயம், கால்நடை துறை ஏன் மனிதரக்ளுக்கே பயனளிக்கிறது என்று கூறுகிறார்கள்.


காந்த சக்தி ஏற்றபட்ட நீரை அளிப்பதால் ஏற்படும் நன்மைகள்.

1.30% குறைந்த அளவு நீர் தேவை
2.10 - 30% விளைச்சல் அதிகரிப்பு
3. அதிக அளவு நீர் மற்றும் ஊட்ட சத்துக்களை பயிரால் இழுத்து கொள்ள முடியும்
4.அதிக அளவு பிராண வாயு கிடைக்க கூடிய தன்மை
5. வேளாண் பொருட்களின் எடை மற்றும் அளவு அதிகமாவது
6. அதிக முளைப்பு தன்மை
7. அறுவடை செய்ய பட்ட காய் கனிகள் அதிக நாட்கள் கெடாமல் இருக்கும் தன்மை
8. உப்பு தன்மையை விரைவில் நீக்கும் தன்மை.
9. பயிர்,கால்நடை மற்றும் மீன்களுக்கு நோய் எதிர்ப்பு தன்மை
10.நீர் பாசன உபகரணங்களில் செதில்கள்  உருவாவது குறைவது

பல்வேறு நீர்பாசன (சொட்டு நீர், தெளிப்பு நீர்,flooding) முறைகளில் இணைத்து உபயோகபடுத்துவது ஏற்றார் போல் இந்த கருவி வடிவமைக்க பட்டுள்ளது.

 
 
இது பற்றிய மேல் விவரங்கள் அறிய இங்கு   சென்று பாருங்கள்.

இது போன்ற காந்த புலம் ஏற்படுத்தி நீருக்கு காந்த சக்தி ஏற்படுத்தும் கருவியை உள்ளூர் ஐன்ஸ்டீன்கள் எளிதாகவும், மலிவாகவும்  தயாரித்து விடுவார்கள். தமிழகத்தில் கூட இதை எளிதாக பரிசோதித்தும் உபயோகித்தும் பார்த்து விடலாம் அல்லவா?

உலக வேளாண் பொருட்காட்சி பற்றிய முந்தய பதிவுகள்

உலக வேளாண் பொருட்காட்சி - Tulare, கலிபோர்னியா

6 நாளில் புல் வளர்ப்பது எப்படி? -World AgriExpo 2
 

12 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

இப்போது பெய்கிற மழை அளவிற்கு இந்த "குறைந்த அளவு நீர் கொடுத்தாலே போதும்" என்னும் நுட்பம் அறிய வேண்டியவை... குறிப்பிட்ட தளத்தில் பல அறிய தகவல்கள் உள்ளன... அவற்றிலிருந்து முக்கியமானத்தை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி... தொடர்க...

விவசாய நண்பர்களுக்காக G +

சதுக்க பூதம் said...

நன்றி திண்டுக்கல் தனபாலன்

புரட்சி தமிழன் said...

அது எப்படி நீங்கள் கொடுக்கும் நீர் பயிரின் வேருக்கு நேரடியாக கொடுத்தால் பயிர் நன்றாக வளாரும்? இது ஏமாற்றுவேலை. நீர் வேரைசுற்றி யுள்ள மன்பகுதியையும் நனைத்து புவியில் இருந்து வரும் நீர் ஆவியாதல் மூலம் பயிரின் இலைகளை குளிரூட்டவேண்டும் அப்போதுதான் பயிர் நல்ல திரட்சியும் தெளிவுமாக வளாரும்.

வவ்வால் said...

பூதம்,

இந்த டெக்னிக் "காந்தப்படுக்கை மோசடி"போலனு தோன்றுகிறது.

தாவரங்கள் நீரை நேரடியாக எடுப்பதில்லை,மண்ணில் இருந்தே உறிஞ்சுகின்றன,மண்ணில ஊறி வரும் வரைக்கும் தண்ணீரில் காந்த சக்தி நிற்குமா?

மேலும் அப்போ தண்ணீரின் மூலக்கூறு அளவு மாறிடும்.

தண்ணீரில் கரைந்த நிலையில் தான் நைட்ரஜன்,பாஸ்பரஸ்,பொடாஷ் போன்றவையும், தாமிரம்,துத்தநாகம்,போரான் இன்ன பிற மைக்ரோ நியுட்ரியன்ட்களும் தாவரத்துக்கு கிடைக்கின்றன.அவற்றை எல்லாம் தாவரத்தின் வேர்கள் உறிஞ்சும் போது நீர் மூலக்கூறு பெருசா இருக்கு உள்ளப்போகாதுனு சொல்வதெல்லாம் நம்பும்படியாக இல்லை.

இப்படித்தண்ணீருடன் ஊட்டச்சத்துக்கள் கலந்த பின் அதன் காந்தசக்தி இருக்குமா?

வேர்களில் உள்ள நுண் துளைகளுக்கு நீர் மூலக்கூறின் அளவு ஒன்றும் பெரிதல்ல.

ஃபேன்சியா ஒரு தொழில்நுட்பம்னு சொல்லி விற்கிறார்கள் என நினைக்கிறேன்.

சதுக்க பூதம் said...

வாங்க புரட்சி தமிழன்
//இது ஏமாற்றுவேலை//
இது பற்றி அடுத்த பின்னூட்டத்தில் கூறுகிறேன்.
//புவியில் இருந்து வரும் நீர் ஆவியாதல் மூலம் பயிரின் இலைகளை குளிரூட்டவேண்டும் அப்போதுதான் பயிர் நல்ல திரட்சியும் தெளிவுமாக வளாரும்.//
இந்த நிறுவனத்தினர் குறிப்பிடுவது வேர் மூலம் உறிஞ்ச படும் நீரை பற்றி. சொட்டு நீர் பாசனம், தெளிப்பு நீர் பாசனம், வடிவமைக்க பட்ட நீர் பாசனம் மூலம் வேர் மற்றும் செடிக்கு அருகில் செலுத்த படும் பாசன நீர் முழுமையாக செடிக்கு சென்றடையும் என்கிறார்கள்.

சதுக்க பூதம் said...

வாங்க வவ்வால்.
//இந்த டெக்னிக் "காந்தப்படுக்கை மோசடி"போலனு தோன்றுகிறது//
இந்த பின்னூட்டத்தை நான் நிறையவே எதிர்பார்த்திருந்தேன். ஆரம்பத்திலேயே காந்த நீர் என்பது அறிவியலா அல்லது போலி அறிவியலா என்ற என் ஐயத்தை எழுப்பியிருந்தேன்.

பொதுவாக அமெரிக்காவில் ஒவ்வொரு பண்ணையும் பல்லாயிரம் ஏக்கர் கொண்டவை. அங்கு இது போன்ற தொழில்நுட்பத்தை செயல் படுத்த சில லட்சத்திலிருந்து, மில்லியன் டாலர் வரை செலவு செய்ய வேண்டியிருக்கும். அப்படி இருந்தும் பல பண்ணைகளில் இதை பயன் படுத்துகிறார்கள் (என்று சொல்கிறார்கள்!) என்றால் நிச்சயம் பயன் இருந்திருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.

//
தாவரங்கள் நீரை நேரடியாக எடுப்பதில்லை,மண்ணில் இருந்தே உறிஞ்சுகின்றன,மண்ணில ஊறி வரும் வரைக்கும் தண்ணீரில் காந்த சக்தி நிற்குமா?//
காந்த சக்தி தண்ணீர் மூலக்கூறின் கோணத்தை மாற்றி குழுமத்தின் அளவை மட்டும் குறைப்பதாக கூறுகிறார்கள். அதன் பிறகு காந்த சக்தி இருப்பதாக கூறவில்லை.

//
தண்ணீரில் கரைந்த நிலையில் தான் நைட்ரஜன்,பாஸ்பரஸ்,பொடாஷ் போன்றவையும், தாமிரம்,துத்தநாகம்,போரான் இன்ன பிற மைக்ரோ நியுட்ரியன்ட்களும் தாவரத்துக்கு கிடைக்கின்றன.அவற்றை எல்லாம் தாவரத்தின் வேர்கள் உறிஞ்சும் போது நீர் மூலக்கூறு பெருசா இருக்கு உள்ளப்போகாதுனு சொல்வதெல்லாம் நம்பும்படியாக இல்லை.//
எனக்கும் அந்த சந்தேகம் இருந்தது. ஆனால் ஸ்டாலில் இருந்தவர்கள் அங்கு வரும் பெரு விவசாயிகளிடம் பேசுவதற்கு மட்டுமே ஆர்வம் காட்டினர். நாமெல்லாம் டம்மி பீசுன்னு அவுன்களுக்கு நல்லாவே தெரியுது.

அவர்கள் கூற வருவது பெரிய மூலக்கூறு குழுமங்கள் இருக்கும் போது தண்ணீர் முழுவதும் உள்ளேயே செல்லாது என்று கூற வரவில்லை என்று நினைக்கிறேன். ஒரு பகுதி நீர் தான் உள்ளே செல்லும் என்று கூற வருகிறார்கள் என்று நினைக்கிறேன்.
//மேலும் அப்போ தண்ணீரின் மூலக்கூறு அளவு மாறிடும்//
//இப்படித்தண்ணீருடன் ஊட்டச்சத்துக்கள் கலந்த பின் அதன் காந்தசக்தி இருக்குமா?
//
ஒரு முறை காந்த புலங்களுக்குடையே சென்றவுடன் ஹைடிரஜன் - ஆக்சிசன் கோணம் 1 டிகிரி குறைந்து விடும். அது தான் மூலகூறின் அளவை குறைப்பதாக கூறுகிறார்கள். காந்த சக்தியின் வேலை அதோடு முடிந்து விடுகிறது.

//ஃபேன்சியா ஒரு தொழில்நுட்பம்னு சொல்லி விற்கிறார்கள் என நினைக்கிறேன்.//
இது உண்மையாக இருக்கலாம். இதை எளிதாக Pot culture experiment மூலம் பரிசோதித்து பார்த்து விடலாம். எனக்கு தெரிந்த வேளாண் கல்லூரி ஆசிரியர்களிடம் சொல்லி ஆர்வம் உள்ள மாணவர்களுக்கு இதை ஒரு project ஆக கொடுத்து பரிசோதனை செய்ய சொல்கிறேன்.

வின்சென்ட். said...

இந்த காந்தசக்தி உபகரணத்தை கோவையில் உபயோகத்த நண்பர் சென்னது 'குழாய்களில் உப்பு படிவதில்லை விளைச்சல் முன்பை காட்டிலும் அதிகம் என்றார். இதனை சொந்தமாக வாங்கவுள்ளார்.

சதுக்க பூதம் said...

வாங்க வின்சென்ட் sir.
எனக்கு கூட இந்த தொழில்நுட்பத்தில் சிறிது சந்தேகம் இருந்தது. இதை உபயோக படுத்தி அதன் பயனை கண்கூடாக ஒருவர் பார்த்திருப்பதால் நிச்சயம் இந்த தொழில்நுட்பம் உபயோகம் ஆனதாக தான் இருக்கும். இந்த பயனுள்ள செய்தியை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

வவ்வால் said...

பூதம்,

நன்றி!

குழாய்களில் ஸ்கேல் உருவாவதை தடுக்கிறது என்பதை வைத்தே ,சோடியம் பைகார்பனேட் போன்ற உப்புக்களை குறைக்க செய்யும் தொழில்நுட்பம்/ஃபில்டர் பயன்ப்படுத்தி இருக்கலாம், வழக்கமாகவே நிலத்தடி நீர் கடினத்தன்மையாக இருந்தால் தாவரங்களின் வளர்ச்சி பாதிக்கப்படும்.

எனவே நீர் சுத்திகரிப்பு செய்யும் ஒரு தொழில்நுட்பமே இதில் இருக்கிறது, அதனை காந்த சக்தி என ஃபேன்சியாக்கி விற்கிறார்கள்.

சொட்டு நீர் பாசனம் செய்யும் அமைப்பில் , ஒரு ரிவர்ஸ் ஆஸ்மாசிஸ் ஃபிலடர்,சாண்ட் ஃபில்டர் எல்லாம் வைத்து பாசனம் செய்வதை பார்த்துள்ளேன், கடற்கரையோரபகுதிகளில் இவ்வாறு செய்தால் தான் டிரிப் இர்ரிகேஷன் செய்ய முடியும் இல்லை எனில் டிரிப்பர் அடைத்து கொள்ளும்.

கடின நீரில் உள்ள உப்பு நீக்கப்படுவதால் தாவரங்களும் நன்கு வளரும்.

வின்சென்ட். said...

உங்களுக்கு மேலும் ஒரு தகவல் சென்ற ஞாயிறு அன்று 'புதிய தலைமுறை விவசாயக் கண்காட்சி (கோவை)கருத்தரங்கில் பிரபல காய்கறி உற்பத்தி செய்யும் விவசாயி ஒருவர் மிக அனுபவம் வாய்ந்த முதியவர் அதிக உப்புள்ள நீருக்கு 2 பரிந்துரைகள் கூறினார். 1. கறிவேப்பிலை பயிர் செய்தல் 2. காந்தசக்தி நீர். பல முன்னோடி பரிசோதனைகளை செய்து நடைமுறைபடுத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சதுக்க பூதம் said...

வாங்க வவ்வால்.
தங்கள் ஆக்க பூர்வமான விவாத கருத்துக்கும் , உவர் தன்மை பற்றிய தொழில்நுட்ப செய்திக்கும் நன்றி

மண்ணின் உவர் தன்மையை மட்டு படுத்த உதவும் என்பது ஒரு உபரி பயனாக மட்டும் கூறுகிறார்கள். உண்மையில் காந்த சக்தியால் விளைச்சல் அதிகம் என்று கூறுகிறார்கள். அவர்களை பொருத்தவரை அவர்களுடைய தொழில்நுட்பத்தை நிருபிக்க மதிப்புள்ள ஆராய்ச்சி பத்திரிக்கைகளில் உள்ள ஆராய்ச்சி கட்டுரைகளை காட்டுகிறார்கள். மண்ணின் உவர் தண்மையை மட்டு படுத்தி விவசாயத்துக்கு பயன் படுத்த பல தொழில்நுட்பங்கள் உள்ளன. இந்த காந்த சக்தி தொழில்நுட்பம் அவற்றுள் மலிவானதாகவும் பயனுள்ளதாகவும் இருந்திருக்களாம். திரு. வின்சென்ட் அவர்கள் முன்னோடி விவசாயி. மேலும் விவசாய பல்கலைகழகம் மற்றும் பல்வேறு முன்னோடி விவசாயிகளிடம் நெருங்கிய தொடர்புள்ளவர். இந்த தொழில்நுட்பத்தை பயன் படுத்திய முன்னோடி விவசாயிகள் உண்மையிலேயே பயன் அடைந்திருப்பதாக கூறியிருக்கிறார். அறிவியல் ஆதாரம் மற்றும் பயனடைந்தவர்கள் கூறிய ஆதாரம் இருப்பதால் இந்த தொழில்நுட்பம் உண்மையிலேயே பயனுடையதாக இருக்க வாய்ப்புள்ளது.

மேலும் நான் சொன்னது போல் அமெரிக்காவில் காந்த படுக்கையை விற்பது போல் கவர்ச்சி பேச்சால் விற்பது கடினம். அவர்கள் அறிவாளி என்று கூறவரவில்லை. அங்கு இருக்கும் விவசாயிகளின் விவசாய நிலம் பல ஆயிரம் ஏக்கர் இருப்பதால் இது போன்ற தொழில்நுட்பத்தை செயல் படுத்த சில நூறு ஆயிரம் செலவாகும். உண்மையிலேயே அவர்களுக்கு பலன் இருந்தால் தான் செயல் படுத்துவார்கள். இந்த கம்பெனியினரும் இது போன்ற பல ஆயிரம் கொண்ட பெரிய பண்ணைகளை ரெபரன்சாக வைத்துள்ளனர்.

தியரிட்டகலாக பேசும் நம்மை விட பிராக்டிகலாக செலவு செய்து பயனடைந்த விவசாயிகளின் கருத்துகளுக்கு மதிப்பு அதிகம்.உண்மையில் தமிழகத்தில் முன்னோடி விவசாயிகள் மிக shrude ஆக உள்ளனர்.
அது மட்டுமன்றி இது பற்றி விவசாய கல்லூரி பேராசிரியரிடம் பேசி கொண்டிருந்த போது அவரும் ஒரு சில முன்னோடி விவசாயிகள் பயன் படுத்தி பயனடைந்ததாக தெரிவித்ததாக கூறி இருந்தார்.

சதுக்க பூதம் said...

வாங்க வின்சென்ட் சார்.
//உங்களுக்கு மேலும் ஒரு தகவல் சென்ற ஞாயிறு அன்று 'புதிய தலைமுறை விவசாயக் கண்காட்சி (கோவை)கருத்தரங்கில் பிரபல காய்கறி உற்பத்தி செய்யும் விவசாயி ஒருவர் மிக அனுபவம் வாய்ந்த முதியவர் அதிக உப்புள்ள நீருக்கு 2 பரிந்துரைகள் கூறினார். 1. கறிவேப்பிலை பயிர் செய்தல் 2. காந்தசக்தி நீர். பல முன்னோடி பரிசோதனைகளை செய்து நடைமுறைபடுத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.//

உங்களுடைய இந்த கருத்து பிற்காலங்களில் இந்த பதிவை படிப்பவர்களுக்கும் உதவியாக இருக்கும்.தமிழகத்தில் இது போன்ற தொழில்நுட்பங்களை முன்பே பயன் படுத்தி பயனடைந்திருப்பதை கேட்க மகிழ்ச்சியாக உள்ளது. நன்றி