Monday, February 18, 2013

உலக வேளாண் பொருட்காட்சி - Tulare, கலிபோர்னியா

உலக வேளாண் பொருட்காட்சி  1968ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் கலிபோர்னியாவில் உள்ள டுலேரியில் நடைபெறுகிறது. அமெரிக்காவின் தோட்டகலை விவசாயத்தின் தலைநகரமாக விளங்குவது கலிபோர்னியா மாநிலம். உலக வேளாண் பொருட்காட்சி கலிபோர்னியா- டுலேரியில் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 12 முதல் 14 வரை நடை பெற்றது. இந்த விவசாய பொருட்காட்சிதான் உலகிலேயே மிக பெரிய வேளாண் பொருட்காட்சி ஆகும். இங்கு வேளாண் பொறியியல், வேளாண், தோட்டகலை,கால்நடைதுறை,வேளாண் கல்வி மற்றும் சர்வதேச வேளாண் வர்த்தகம் சார்ந்த பல்லாயிரம் நிறுவனங்கள் தங்களது ஸ்டாலை வைத்து இருப்பார்கள்.

கடந்த சில ஆண்டுகளாகவே இந்த பொருட்காட்சிக்கு செல்ல வேண்டும் என்று நினைத்திருந்தேன். நான் இருக்கும் இடத்திலிருந்து சுமார் 250 மைல் பயணம் செய்ய வேண்டும் என்பதாலும், இந்த பொருட்காட்சி எப்போதும் அலுவலக நாட்களில் (செவ்வாய் முதல் வியாழன் வரை) நடை பெறுவதாலும் கடந்த ஆண்டு வரை யோசித்து கொண்டே செல்லாமல் இருந்து விட்டேன். ஆனால் இந்த ஆண்டு கட்டாயம் செல்ல வேண்டும் என்று முடிவு செய்து பிப்ரவரி 12ம் தேதி காலை கிளம்பி விட்டேன்.சர்வதேச பார்வையாளர்கள் வருவதற்கு வசதியாக சிறு நகரமாக இருந்தாலும் இங்கேயே ஒரு விமான நிலையம் உள்ளது. சர்வதேச பொருட்காட்சி என்பதால் இங்கு பல்லாயிரம் பேர் வந்தாலும் போக்குவரத்தை அழகாக திட்டமிட்டு சுலபமாக பொருட்காட்சிக்கு செல்ல ஏற்பாடு செய்திருந்தினர்.

இந்த பொருட்காட்சியில்  சுமர் 2.6 மில்லியன் சதுர அடிகளில் பல்வேறு நிறுவனத்தார் ஸ்டால்கள் வைத்திருந்தனர்.1400க்கும் மேற்பட்ட நிறுவனத்தினர் உலகின் பல்வேறு பகுதியிலிருந்து(அமெரிக்கா,ஐரோப்பா,ரஸ்யா,சீனா,இந்தியா) வந்திருந்து தங்களது தயாரிப்புகளை உலகின் பல பகுதியிலிருந்து வந்திருந்த லட்சகணக்கான விவசாயிகளுக்கும், விவசாயம் சார்ந்த துறையினருக்கும் அறிமுகபடுத்தினர்.


அமெரிக்காவில் சாதாரணமாக விவசாய நிலங்களின் அளவு சில ஆயிரம் ஏக்கராவது இருக்கும். எனவே அமெரிக்க விவசாயிகளின் அத்யாவசிய தேவை குறைந்த வேலையாட்களை கொண்டு அதிக நிலத்தில் வேலை செய்ய ஏதுவான மிக பெரிய பண்ணை இயந்திரங்களும், தானியங்கி இயந்திரங்களும் தான். எனவே இந்த பொருட்காட்சியில் சுமார் 70% இது போன்ற இயந்திரங்களை தயாரிக்கும் நிறுவனங்கள் தங்களது இயந்திரங்களை பார்வையாளர்களின் பார்வைக்கு வைத்திருந்தனர். பெரும்பான்மையான பண்னை இயந்திரங்கள் ராட்சத வடிவில் இருந்தன. இந்திய சூழ்நிலைக்கு இது போன்ற இயந்திரங்களின் தேவை இன்னும் சில காலம் கழித்து தேவை பட்டாலும் தேவை படும் என்ற எண்ணத்துடன் பிற பகுதிகளை பார்வையிட தொடங்கினேன்.



பொருட்காட்சியில் அமெரிக்க வேளாண் வரலாறை பறைசாற்றும் வகையில் ஒரு கண்காட்சி வைக்க பட்டிருந்தது. அங்கு சுமார் 100 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் பயன் படுத்திய வேளாண் உபகரணங்களை பார்வைக்கு வைத்திருந்தனர்.

1928ம் ஆண்டு  Ford Husker

கண்காட்சியில் ஐந்து பெரிய அரங்குகளும், கால்நடை துறைக்கு தனி அரங்கும், வேளாண்மையில் பெண்கள், வேளாண் கல்வி, பண்ணை வீட்டுத்தேவை,வேளாண் ஏற்றுமதி அகியவற்றிற்கு தனி அரங்கும் திறந்த வெளியில் வேளாண் உபகரணங்களுக்கு இடமும் கொடுத்து இருந்தனர்.பொருட்காட்சி நடந்த மூன்று நாட்களும் விவசாயம், வர்த்தகம்,நீர் பாசனம் போன்றவை பற்றி தொடர்ந்த பல்வேறு தலைப்புகளில்
கருத்தரங்கு நடைபெற்று கொண்டிருந்தது. வேளாண்மை கல்வி அரங்கில் கலிபோர்னியா பகுதி பல்கலைகழகங்கள் அளிக்கும் விவசாயம் சார்ந்த கல்வி பற்றியும், வேளாண் மகளிர் பகுதியில் சமையல் போட்டி மற்றும் விளக்கமும் நடந்து கொண்டிருந்தது.

இந்தியாவிலிருந்து ஜெயின் நிறுவனத்தாரின் சொட்டுநீர் பாசன ஸ்டாலுக்கு நிறைய பார்வையாளர்கள் வந்த வண்ணம் இருந்தனர். அதே போல் இந்தியாவிலிருந்து  வேப்பம் எண்ணெய் சார்ந்த பொருட்களை விற்கும் ஒரு நிறுவனமும், நுண்ணூட்ட பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனமும் தங்களது ஸ்டால்களை வைத்திருத்தனர்.கிழக்கு அய்ரோப்பா மற்றும் ரஷ்யா நாட்டை சேர்ந்தவர்களிடம் பல இயற்கை விவசாயம் சார்ந்த நூதன கண்டுபிடிப்புகளும் இருந்தன.



ஆறே நாளில் தீவனபுல் தயாரிப்பு, காந்த சக்தி பெற்ற நீர், நூதன நுண்ணியிர் உரங்கள், உழவாகும் செடிகள்,வறட்சியை தவிர்க்கும் கரைசல், இயற்கை வளர்ச்சி ஊக்கிகள் என இந்தியாவில் பின்பற்ற கூடிய பல நூதன தொழில்நுட்பங்கள்  அங்கு இருந்தன.

சென்றிடுவீர் எட்டு திக்கும்
கலை செல்வங்கள் யாவும்
கொணர்ந்திங்கு  சேர்ப்பீர்

என்றார் பாரதி. ஏதோ என்னால் முடிந்தது, தமிழக விவசாயிகளுக்கும் ஆர்வலர்களுக்கும் இந்த தொழில் நுட்பங்களை அறிமுக படுத்தலாம் என எண்ணி இனி வரும் பதிவுகளில் எனக்கு பிடித்த மற்றும் இந்தியாவிற்கு ஏற்றதாக உள்ள ஒரு சில வேளாண் தொழில்நுட்பங்களை பற்றி பதிவிடுகிறேன் .

7 comments:

வவ்வால் said...

நல்ல விஷயம், நவீன வேளாண் கருவிகள் நமக்கு எட்ட்டாக்கனியாக உள்ள சூழலில் தெரிந்தாவது வைத்துக்கொள்ள உதவும், அறிமுகப்படுத்துங்கள்.

வீடியோவில் பார்த்துள்ளேன் பலக்கருவிகள் மிகப்பிரம்மாண்டமாக இருக்கும்,அதெல்லாம் என்ன விலையில் இருக்கும்,விவசாயிகள் அங்கு எப்படி வாங்க முடியுது,?

சதுக்க பூதம் said...

வாங்க வவ்வால்.
//நல்ல விஷயம், நவீன வேளாண் கருவிகள் நமக்கு எட்ட்டாக்கனியாக உள்ள சூழலில் தெரிந்தாவது வைத்துக்கொள்ள உதவும், அறிமுகப்படுத்துங்கள்.

வீடியோவில் பார்த்துள்ளேன் பலக்கருவிகள் மிகப்பிரம்மாண்டமாக இருக்கும்,அதெல்லாம் என்ன விலையில் இருக்கும்,விவசாயிகள் அங்கு எப்படி வாங்க முடியுது,?//
அமெரிக்காவில் ஒவ்வொரு விவசாயியின் நிலமும் 5000 ஏக்கருக்கு மேல் இருப்பதால் அவர்களால் எளிதாக வாங்க முடிகிறது. அது மட்டுமல்ல வாங்க வேண்டியேயும் உள்ளது.
இந்த பொருட்காட்சி மிகவும் பெரிதாக இருந்ததாலும், நம்மூரில் இந்த உபகரணங்களை தற்போது உப்யோக படுத்த முடியாது என்பதாலும் நான் அதிகம் வேளாண் உபகரணங்கள் பகுதியில் concentrate செய்யவில்லை. அதே நேரம் பல innovative technologies , இந்தியாவில் உபயோகபடுத்த கூடிய அளவில் உள்ளது. அவற்றை அதிகம் concentrate செய்து செய்தி சேகரித்துள்ளேன். அது பற்றி விரிவாக எழுதலாம் என்று உள்ளேன்

✨முருகு தமிழ் அறிவன்✨ said...

நல்ல முயற்சி...

பாராட்டுகள்.

சதுக்க பூதம் said...

நன்றி அறிவன்

Anonymous said...

செய்திக்கு நன்றி

nithyabhakthapriyan said...

Thanks for the information. You may a provide the information in English also so that the reach can be more.

Rajasekaran V
Chennai
India

சதுக்க பூதம் said...

வாங்க வேளாண் அரங்கம், திரு ராஜசேகர்.தமிழில் எழுதவே நேரம் பத்தவில்லை. மேலும் ஆங்கிலத்தில் இது பற்றி நிறைய உள்ளது