Sunday, March 17, 2013

சைப்ரஸ் - கந்து வட்டிகாரனாகும் ஐரோப்பிய யூனியன்


கடந்த சில வருடங்களாகவே ஐரோப்பிய யூனியனில் பல நாடுகள் கடனில் மூழ்குவதையும் ,அவற்றை வெவ்வேறு விதமாக பெயில் அவுட் செய்து வருவதையும் பார்த்திருக்கிறோம்.பொதுவாக பெயில் அவுட் செய்யும் போது அரசிடம் இருக்கும் ஒரு சில தொழிற்துறையை தனியாரிடம் விற்று பணத்தை பெறவும், மக்கள் நல்வாழ்வு திட்டங்களை நிறுத்தி பணத்தை சேமிக்கவும் மற்றும் அரசின் செலவினங்களை குறைக்கவும் அறிவுறுத்த படும். பல நேரங்களில் இது விவாதத்திற்கு உரிய பொருளாக இருக்கும். அயர்லாந்து பெயில் அவுட் பற்றி பிரிதொரு பதிவில் எழுதி இருந்தேன்.தற்போது ஐரோப்பிய யூனியனின் மற்றொரு சிறிய நாடான சைப்ரஸ் நாடு தற்போது பெயில் அவுட் வாங்க வேண்டிய நிலைக்கு தள்ளபட்டுள்ளது.மற்ற நாடுகளில் நடந்தது போல் அரசாங்கம் மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றவும், வளமாக வாழ வைக்கவோ அதிகம் செலவு செய்து, அதன் சுமைகளை அந்த நாட்டு மக்களின் மீது ஏற்றும் நிகழ்வும் சைப்ரசில் நடக்கவில்லை. ஆனாலும் பெயில் அவுட் வாங்க வித்தியாசமான விதிமுறையை விதித்துள்ளது ஐரோப்பிய யூனியன்.

வங்கியில் பணம் சேமிப்போர்க்கு ஆப்பு!

ஐரோப்பிய யூனியனின் கடனை வாங்க சைப்ரஸ் நாட்டில் உள்ள வங்கிகள் எல்லாம் தங்களது வங்கியில் பணத்தை போட்டிருப்பவர்களிடமிருந்து சுமார் 10% பணத்தை வரியாக எடுத்து கொள்ளவேண்டும். அதாவது ஒரு யூரோ முதல் 1 லட்சம் யூரோ வரை வங்கியில் டெப்பாசிட் வைத்திருப்பவர்களிடமிருந்து 6.75 சதவிதம் பணமும் அதற்கு மேல் இருக்கும் பணத்தில் 9.9 சதவிதமும் வரியாக வங்கிகள் தனது வாடிக்கையாளரிடமிருந்து எடுத்து கொள்ளும்.இந்த வரி விதிப்புக்கு பென்சன் பணத்தை வங்கியில் இட்டு செலவு செய்து உயிர் வாழும் முதியவரோ, கணவர் இறந்த இன்சூரன்சு பணத்தை வங்கியில் போட்டு அதில் வாழ்க்கை நடத்தி வரும் விதவையோ, தங்களின் குழந்தைகளுக்கான படிப்பு செலவுக்கு பணம் சேர்ப்பவரோ விதி விலக்கு கிடையாது!இதற்கு பதிலாக அதற்கு ஈடான வங்கியின் பங்கு டெபாசிதாரர்களுக்கு அளிக்க படும்.இந்த அளவு மோசமான பெயில் அவுட் condition ஆக இருக்கிறதே என்று நினைக்கிறீர்களா? அதற்கு அந்த நாட்டின் அதிபரின் பதிலோ, பேச்சுவார்த்தையில் ஐரோப்பிய யூனியனின் மற்ற பரிந்துரைகளை ஒப்பிடும் போது இதுதான் ரொம்பவே decent ஆக இருந்ததாம்!. இந்த புதிய வரி பற்றிய மசோதா நாளை சைப்ரஸ் நாட்டு மக்களவையில் ஒப்புதலுக்காக தாக்கல் செய்ய பட இருக்கிறது. அதன் முடிவு  தெரியும் வரை அந்நாட்டு மக்கள் யாரும் வங்கியிலிருந்து பணம் எடுக்க முடியாது!



சைப்ரசுக்கு பிடித்த கிரகம்

இந்த நிலைக்கு சைப்ரஸ் எப்படி வந்தது என்று பார்ப்போம்.2008 ம் ஆண்டு சர்வதேச நிதி அமைப்பின் கணிப்பு படி சைப்ரஸ் நாடு நீண்ட காலம் வளர்ச்சி அடையும்,குறைந்த வேலை வாய்ப்பின்மை கொண்ட மற்றும் சிறந்த முறையில் அரசால் பொருளாதாரத்தை நிர்வகிக்கும் நாடாகவே கருத பட்டது. அனால் சைப்ரசிலும் பெரும்பான்மையான மேலை நாட்டில் உள்ளது போலவே கட்டுபாடற்ற வங்கிகள் உள்ளன.அந்த நாட்டு வங்கிகள் கொடுத்துள்ள கடனின் ஒப்பீட்டு அளவனாது, அந்த நாட்டின் யை
GDPவிட சுமார் 9 மடங்கு அதிகம்.இதில் முக்கியமாக கவனிக்க வேண்டிய செய்தி சைப்ரஸ் நாட்டின் வாங்கிகள் பெருமளவு பணத்தை கிரீஸ் நாட்டின் கடன் பத்திரத்தில் முதலீடு செய்திருந்தன. கிரீஸ் நாட்டை பெயில் அவுட் செய்ய ஐரோப்பிய யூனியன் அந்நாட்டின் கடனை சென்ற ஆண்டு பெருமளவு தள்ளுபடி செய்திருந்தது. அதனால் சைப்ரஸ் நாட்டின் வங்கிகளின் நிலை மோசமானது. அதே போல் கட்டுபாடற்ற வீட்டு கடன் பலவற்றையும் அள்ளி வீசியதன் விளைவு பிரச்ச்னையை இன்னும் மோசமாக்கி இருந்தது. ரஸ்ய நாட்டின் பணக்காரர்கள் பலர் சைப்ரஸ் நாட்டின் வங்கி மூலம் கிரீஸ் நாட்டு கடன் பத்திரத்தில் அதிகம் முதலீடு செய்ததும் குறிப்பிட தக்கது.

வங்கிகளின் கடனின் அளவு அந்த நாட்டு உற்பத்தியை விட பல மடங்கு இருப்பதால் அந்த நாட்டின் அரசால் அந்நாட்டு வங்கியை காப்பாற்ற வாய்ப்பில்லை.ஒரு நாட்டின் வங்கியின் வீழ்ச்சி அந்த நாட்டின் பொருளாதாரத்தின் ஒட்டு மொத்த வீழ்ச்சியாகும். சைப்ரஸ் ஐரோப்பிய யூனியனில் இருப்பதால் பொது நாணயத்தை தேவையான அளவு பிரிண்ட் செய்யவும் முடியாது. எனவே சைப்ரஸ் அரசு தனது நாட்டின் வங்கியை காப்பற்ற ஐரோப்பிய யூனியனை நோக்கி கையேந்தியது. அதற்கு ஐரோப்பிய யூனியன் விதித்த விதி முறைதான் நீங்கள் மேலே பார்த்தது.ஆக மொத்தம் வங்கிகள் அடித்த கொள்ளையால் பாதிக்க பட போவது அப்பாவி மக்கள் தான்.

இன்றைய உலக பொருளாதாரத்தின் அடிப்படையாகவும் உயிர் நாடியாகவும் இருப்பது வங்கிகள். வங்கிகள் என்ற அமைப்பின் அடிப்படையே "நம்பிக்கை" அடிப்படையில் செயல்படுவது தான்.தற்போது ஐரோப்பிய யூனியன் விதித்துள்ள இந்த தண்டனையால் மக்களுக்கு வங்கிகள் மீது ஏற்படும் நம்பிக்கை குறைய வாய்ப்புள்ளது. ஏனெனில் இன்று சைப்ரசில் நடைபெறும் நிகழ்வு நாளை எந்த நாட்டிளும் நிகழலாம் அல்லவா?இது உலக மற்றும் நாடுகளின் பொருளாதாரத்திற்கு நல்லதல்ல.

இது போல் பெயில் அவுட்டுக்கு நூதன நிபந்தனைகளை ஐரோப்பிய யூனியன் விதித்து வருவாதால் அனைவரின் மனதிலும் நிற்கும் செய்தி


அவர்களது
HitListல் இருக்கும் அடுத்த நாடு எது?

அவர்களது அடுத்த நூதன நிபந்தனை என்னவாக இருக்கும்?

இந்தியாவில் ஓரளவு கட்டுபாடோடு இருக்கும் வங்கி துறையின் கட்டுபாடுகளை தளர்த்துவதே தனது குறி என்று திரியும் மன் மோகன் சிங் இது போன்ற செய்திகளை படிப்பாரா என்று தெரியவில்லை.

No comments: