Monday, September 10, 2012

எழில் மிகு ஹவாய் 2 - அழகிய கடற்கரைகள்

                ஹவாய்  என்றவுடன் அனைவரின் மனதுக்கும் முதலில் வரும் நினைவு அழகிய கடற்கரைகள். நீல நிற கடல், கண்ணாடி போல் தெளிந்த நீர், இதமான தட்பவெட்ப நிலையில் நீச்சலுக்கேற்ற மிதமான நீர், தூய்மையான கடற்கரை,தெளிவான வெண்ணிற மணல் என அனைத்து வித மனிதர்களும் விரும்பும் அனைத்து குணாதிசியங்களும் கொண்டது ஹவாய் கடற்கரைகள். இயற்கை அழகு மட்டுமன்றி மனிதன் அறிமுகபடுத்திய பல்வேறு வகை தீர தண்ணீர் விளையாட்டுகளை அனுபவிக்கவும் இங்கு வசதி உண்டு.

ஹவாய் பெருந்தீவின் மற்றொரு சிறப்பம்சம் அங்கு பல்வேறு வண்ணங்களை கொண்ட மணலை கொண்ட  கடற்கரைகள். இங்கு வெண்ணிற மணலை கொண்ட கடற்கறை மட்டுமில்லாமல் கருப்பு மற்றும் பச்சை நிற மணலை கொண்ட கடற்கரைகளும் உள்ளன.

கடற்கரை என்று பார்த்தோமானால் பெருந்தீவின் மேற்கு பகுதியில் உள்ள கோனா கடற்கரை பகுதியும் கேலகெக்குவா குடா பகுதி கடற்கரைகளும் உலக பிரசித்தம்.இங்கு இருக்கும் கடற்கரைகள் மெரினா கடற்கரை போன்று மிக பெரியதாக இருக்காது. ஆனால் மிக சிறிய கடற்கரைகள் மேற்கு பெருந்தீவு முழுதும் நிறைய உள்ளது. இந்த கடற்கரைகள் வெண்மையான மணலையும்,தெளிந்த கண்ணாடி போன்ற நீரையும் கொண்டு மிகவும் தூய்மையாக காணபடுகிறது. கடல் நீரின் தட்ப வெட்பம் ஆண்டு முழுதும் மிதமாக இருக்கும். கடற்கரை ஓர பகுதிகளிலேயே பல அழகிய வண்ண மய மீன்களையும், பவள பாறைகளையும் நீந்திய படியே கண்டு களிக்களாம்.கடலின் அடியில் நீச்சலின்  போது குனிந்து பார்க்க(ஸ்னார்களிங்) தேவையான உபகரணங்கள் அனைத்தையும் இங்கு வாடகைக்கு எடுத்து உபயோக படுத்தலாம். அதே போல் கடல் ஓரத்தில் சிறிய அளவு படகோட்ட கூட பயிற்சியுடன் கூடிய உபகரணங்களை வாடகைக்கும் தருகிறார்கள்.
பாறைகள் அறிக்க பட்டு தான் மணல் தோன்றும் என்று நாம் கேள்வி பட்டிருக்கிறோம். ஆனால் ஹவாய் கடற்கரையில் மணல் தோன்றிய வரலாறு வேறு விதமானது. ஹவாய் தீவின் கடற்கரைகளில் பவள பாறைகள் அதிக அளவு உள்ளது.  இந்த பவள பாறையை உண்ணும் மீன்கள் வெளியேற்றும் கழிவுதான் வெண்ணிற சிறு மணற் துகள்கள். மீன்கள் எவ்வளவு மணலை உற்பத்தி செய்து விட போகிறது என்று நினைக்கிறீர்களா? சராசரியாக ஒரு டன்(1000கிலோகிராம்) மணலை ஒரு மீன் ஒரு வருடத்தில் உற்பத்தி செய்யும்.

மிதமான தட்ப வெட்ப நிலையில், ரம்மியமான சூழ்நிலையில் ஹவாய் கடற்கரைகளில் பல மணி நேரம் இனிமையாக பொழுதை கழிக்கலாம்.

ஹவாய் பெருந்தீவின் மற்றொரு சிறப்பம்சம் அங்கு உள்ள கருங்கடற்கரைகள். புனலூலு பகுதியில் உள்ள கடற்கரையின் மணல் கருமை நிறத்தை கொண்டுள்ளது. ஹாவாய் எரிமலையிலிருந்து வெளியேறிய எரிமலைகுழம்பு கடலின் மோது மோதி குளிர்வதால் உண்டானது தான் இந்த கருங்கடற்கரைகள்.பசால்ட் வகை பாறைகளின் துகள்களை இந்த கடற்கரைகள் கொண்டிருக்கும்.இங்கு கருப்பு நிற மணல் படிகங்கள் வடிவில் பளபளவென பார்வைக்கு குளிர்ச்சியாக இருக்கும்.இந்த கடற்கரையின் மற்றொரு சிறப்பம்சம் இங்கு அழிவு நிலையில் உள்ள(Endangered Species) பச்சை கடல் ஆமையை  பெரும்பான்மையான நேரங்களில் காணலாம்.நாங்கள் சென்ற போது கூட ஏழெட்டு பசுமை கடலாமைகளை காணும் வாய்ப்பு கிடைத்தது.இந்த கடலாமைகளை தொடுவதோ, கருப்பு நிற மணலை எடுத்து வருவதோ சட்டபடி குற்றமாகும்(அருகில் உள்ள கடையில் கருப்பு மணலை காசு கொடுத்து வாங்கி வருவது மட்டும் சட்டபடி குற்றமாகாது!).
ஹவாய் பெருந்தீவின் தனி சிறப்பு அங்குள்ள பச்சை வண்ண மணல்  கடற்கரை என்றால் மிகையாகாது.என்னது பச்சை வண்ண மணல் கடற்கரையா? கேட்கவே ஆச்சரியமாக உள்ளதா? ஆம் உலகிலேயே இரு இடங்கிளில் பச்சை வண்ண மணல்களை கொண்ட கடற்கரை உள்ளது.அவற்றில் ஒன்று மடகாஸ்கர் தீவிலும் மற்றொன்று ஹவாய் பெருந்தீவிலும் உள்ளது.

அமெரிக்காவின் தெற்கு எல்லை முனை ஹாவாய் பெருந்தீவில் தான் உள்ளது. இதை South point என்று அழைப்பார்கள்.பச்சை மணல் கடற்கரை இந்த சவுத் பாயிண்ட் அருகில் உள்ளது என்ற செய்தியும் பெப்பகோலியா என்ற பகுதியில் உள்ளது என்ற செய்தி மட்டும் தெரியும்.இந்த கடற்கரையை எவ்வாறு சென்றடைய வேண்டும் என்று படிக்காமல் GPSல் சவுத் பாயிண்ட்  விலாசத்தை போட்டு மாலை 3 மணி போல் கிளம்பி விட்டோம்.ஆனால் அருகில் செல்ல செல்ல பச்சை மணல் கடற்கரை செல்ல எந்த குறியும் இல்லை. சரியான பாதையில் தான் செல்கிறோமா என்ற சந்தேகம் ஏற்பட்டது.  அந்த கடற்கரையை அடைய "சிறிது தூரம்" நடக்க வேண்டும் என்று கேள்வி பட்டிருந்தோம். அதற்கு நேரம் கிடைக்குமா என்ற சந்தேகம் ஏற்பட்டது. சவுத் பாயிண்ட் நோக்கி செல்லும் ஒரு குறுகிய சாலையில் கடைசியாக பச்சை மணல் கடற்கரைக்கு செல்லும் ஒரு குறியீட்டை பார்த்தோம்.கார் போகும் பாதை முடிந்தவுடன் தான் ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. அந்த இடத்திலிருந்து கடற்கரை சென்றடைய சுமார் 5 கிலோமீட்டர்கள் ஏற்ற இறக்கத்துடன் கூடிய பாதையில் நடக்க  வேண்டும் என்பது. நாங்கள் சென்றது மாலை நேரம். எனவே அங்கு கால் நடையாக சென்று வர சுமார் 4 மணி நேரம் ஆகும். அதுவும் குழந்தையை வைத்து கொண்டு நடந்து செல்வது என்பது முடியாத காரியம். எங்கிருந்தாவது எட்டி பார்த்த பச்சை நிற கடற்கரையை தூரத்திலிருந்து பார்த்து திருப்தி அடையலாம் என்றால் கண்ணுக்கெட்டிய தூரம் வரை பச்சை மணலை பார்க்கவே முடியவே இல்லை.

 சரி கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை என்று எண்ணி  கொண்டிருந்தோம் கடைசியாக அதிர்ஷ்டம் அங்கு உள்ள அந்த பகுதியில் குடியிருப்போர் வழியில் அடித்தது. அங்கு குடியிருக்கும் ஒரு சிலர் மக்களை தங்களது கனரக வாகனங்கள் மூலம் டிரிப் அடித்து சம்பாதித்து கொண்டுள்ளார்கள்.(அட நம்மூர் போல தான்!) நாங்கள் சென்ற நேரத்தில் அவரகள் மூட்டையை கட்டி விட்டாலும் ஒரே ஒரு நபர் மட்டும் எங்களை பச்சை மணல் கடற்கரைக்கு அழைத்து செல்ல சம்மதித்தார். ஒரு நபருக்கு 15$ என பெற்று கொண்டு தனது வண்டியில் ஏற்றி கொண்டு எங்களை அந்த கடற்கரைக்கு அழைத்து சென்றார். மிக கடுமையான மோசமான பாதை. நடந்து செல்ல மட்டுமே ஏற்ற பாதையில் ஒருவாராக எங்களை அவரது வண்டியில் அழைத்து சென்றார்.அவர் கூறிய தகவலின் படி அங்கு உள்ள உள்ளூர்காரர்கள் தான் இந்த கடற்கரைக்கு வழி காட்டும் போர்டுகளை உடைத்து எடுத்து சென்றுவிட்டாரகள்.குண்டும் குழியுமான ஏற்ற இறக்க பாதையை கடந்து கடைசியாக பச்சை மணல் கடற்கரையை அடைந்தோம். இரவு நேரம் நெருங்கி விட்டதால் அங்கு நாங்கள் மட்டுமே இருந்தோம். மலை,பாறை,மரங்களுக்கு அருகில் பச்சை மணல் கடற்கரை ஜொலித்தது. எதிர்பார்த்தது போல் செடி பச்சையாக இல்லாமல் லேசான ஆலிவ் நிற பச்சை வண்ணத்தில் கடற்கரை இருந்தது.

(புகை படம் எடுக்கும் போது போதிய வெளிச்சம் இல்லாத காரணத்தால் பசுமை நிறம் புகை படத்தில் சரியாக தெரியவில்லை.)

பல்லயிரம் ஆண்டு முன்பு ஏற்பட்ட எரிமலை குழமிலிருந்து  உண்டான சின்டர் கோன் என்னும் சிறுமலை குன்று ஒலிவின்(Mg,Fe)2SiO4.) என்ற உலோகத்தை அதிகம் கொண்டிருந்தது. இந்த ஒலிவீன் பச்சை நிறத்தை கொண்டது.கடல் அலை இந்த மலையில் மோதி மோதி ஒலிவினை அறித்து பச்சை மணலை ஏற்படுத்தியுள்ளது. இங்கு உள்ள ஒலிவீன் எல்லாம் அறித்து கடலில் அடித்து செல்ல பட்டவுடன் இது மற்ற கடற்கரையை போல் ஆகிவிடும்.

கடற்கரைகளை பற்றி பார்த்து விட்டோம். ஆழ்கடலில் எழில் கொஞ்சும் பவழ பாறைகளையும் வண்ண மய மீன்களையும் எப்படி பார்ப்பது? அதை அடுத்த பதிவில் பார்ப்போம்!

இந்த பதிவின் முதல் பகுதி

எழில் மிகு ஹவாய் 1 - அலோஹா!

இந்த பதிவின் அடுத்த பகுதி

எழில் மிகு ஹவாய் 3 - ஆழ் கடலில் பவழபாறைகளும் வண்ண மீன்களும்

--
-- 

No comments: