Monday, December 27, 2010

பெரிய வங்கிகளின் பிடியில் உலக வர்த்தகம்

அமெரிக்காவை உலக அதிகார மையமாக உலகமே பார்க்கிறது. அமெரிக்காவைவிட ஒரு பெரிய அதிகார மையம் உலகில் உருவாகி இருப்பது நம்மில் பெரும்பாலோருக்குத் தெரியாது. அது என்ன பெரிய அதிகார மையம் என்று அறிய ஆவலாக இருக்கிறதா? தொடர்ந்து இந்த பதிவைப் படியுங்கள்.

உலகிலேயே பணக்கார நாடாக இருக்கும் அமெரிக்காவின் ஒட்டு மொத்த GDP மதிப்பு 15 ட்ரில்லியன் டாலர்கள். ஆனால் 700 ட்ரில்லியன் டாலர் பெருமான வர்த்தகங்களை 9 வங்கிகள் மட்டும் வெளி உலகத்துக்குத் தெரியாதபடி செய்கிறது என்றால் அந்த வங்கள் எவ்வளவு வலிமையானதாக இருக்கும் என்று நீங்கள் யூகித்து கொள்ளுங்கள்.

தற்போது உலகிலேயே அதிக லாபம் கொழிக்கும் தொழிலாக இருப்பது வங்கித் துறை தான்(பொருளாதார சரிவின்போது பெரிய வீழ்ச்சி ஏற்பட இருந்தாலும் அரசாங்கத்தை மிரட்டி தங்களைக் காப்பாற்றிக் கொள்வது தொடர்கதையாகத் தான் இருந்து வருகிறது). கடன் கொடுப்பது, கடன் அட்டை கொடுப்பது, பெரிய அளவில் பணத்தை பல வகையில் முதலீடு செய்து பணம் சம்பாதிப்பது போன்ற வழி முறை தான் அதிக பணம் சம்பாதிக்கும் முறையாக நாம் நினைத்துக் கொண்டுள்ளோம். ஆனால் அதை விட அதிக அளவு பணம் சம்பாதிக்கும் முறை ஒன்று உள்ளது அது தான் பங்குகளைச் சார்ந்த வர்த்தகம். ஆங்கிலத்தில் derivatives என்று கூறுவார்கள்.

எந்தத் தொழிலிலும் ஏற்படக்கூடிய அபாயத்தை குறைக்க காப்பீடு எடுப்பது போல், இதுவும் ஒரு அபாயத்தைக் குறைக்க ஏற்படுத்தப்பட்ட பொருளாதார வழி முறை. நாம் தற்போது அதிகம் கேள்விப்படும் Commodity Tradingம் இதில் ஒரு வகையில் அடக்கம். கடந்த பத்தாண்டுகளில் இந்த derivative வர்த்தகத்தின் மதிப்பு $700 டிரில்லியனைத் தாண்டி விட்டது. இது ஒட்டு மொத்த உலக GDP மதிப்பை விட ($59 டிரில்லியன்) பல மடங்கு அதிகம்!

உதாரணமாக அரிசி சார்ந்த உணவுப்பொருளை உற்பத்தி செய்யும் ஒரு நிறுவனம் (Hotel உரிமையளர்), உலகில் அரிசி ஏற்றுமதி செய்யும் ஒரு நாட்டில் ஏற்படும் இயற்கை சீரழிவு காரணமாக 6 மாதம் கழித்து கடுமையான விலை ஏற்றம் ஏற்படும் என்று அனுமானித்து அந்த விலை ஏற்றத்திலிருந்து தன்னை காத்து கொள்ள வேண்டும் என நினைக்கிறார் என்று வைத்து கொள்வோம்.

மறுபுறம் பெரிய அளவில் நெல் விளைவிக்கும் கம்பெனி அல்லது அரிசி கொள்முதல் செய்து விற்கும் கம்பெனி (Producer) 6 மாதத்திற்குப் பிறகு ஓரளவு லாபம் தரகூடிய விலையில் அரிசியை விற்றால் லாபகரமானதாக இருக்கும் என நினைக்கிறது என்று கொள்வோம்.

உணவுப் பொருளை விற்கும் கம்பெனி (Hotel உரிமையளர்) 6 மாதத்திற்குப் பிறகு சந்தை நிலவரத்தின் போக்கு எப்படி இருக்கும் என்பதைக் கணித்து குறிப்பிட்ட விலைக்கு வாங்க பத்திரம் கொடுப்பார். அதே போல் நெல்லை விளைவிக்கும் கம்பெனி (producer) 6 மாதம் கழித்து அரிசியை குறிபிட்ட விலைக்கு விற்க பத்திரம் கொடுக்கும். உற்பத்தியாளர் பத்திரத்தை வாங்குபவர்க்கு வங்கிகள் மூலம் விற்பார்.

ஆறு மாதத்துக்குப் பின் அரிசியின் விலை, விற்ற விலைக்குக் குறைவாக வந்தால் விற்பவருக்கு லாபம். வாங்கியவருக்கும் அவரால் தாக்குப் பிடிக்க முடிந்த விலையில் வாங்கி இருப்பதால் நட்டம் ஏற்று கொள்ளக் கூடியதாக தான் இருக்கும். அதே நேரம் 6 மாதத்துக்குப் பின் அரிசியின் விலை விற்ற விலையை விட அதிகமானால் வாங்கியவருக்கு லாபம். விற்பவரும் கட்டு படியாகும் விலையில் விற்பதால் விற்பவருக்கு நட்டம் அதிகமில்லை. உற்பத்தியாளர் மற்றும் வாங்கியவர் இருவருக்குமே இந்த ஏற்பாடு நல்லதுதானே என்று உங்களுக்குத் தோன்றும். இந்த வியாபாரத்தில் விற்பவர் மற்றும் வாங்குபவர் மட்டும் இருந்தால் இது நல்லது தான். ஆனால் இடையில் தரகர்களாக வரும் பெரிய வங்கிகளால் தான் பிரச்சனையே!

விவசாயப் பொருட்கள், பெட்ரோல் என்றில்லை, அமெரிக்க வீட்டுக் கடன்கள் கூட இம்முறையில் தான் பெருமளவில் நடை பெருகிறது. உலக அளவில் உணவு பொருட்கள், பெட்ரோல், அமெரிக்க வீட்டு கடன் பத்திர வர்த்தகம் போன்றவற்றின் derivative வர்த்தகத்தின் பெரும்பான்மையான பகுதி நடைபெருவது Inter Continental Exchange(ICE) என்ற அமைப்பின் மூலம் தான்.இந்த வர்த்தகத்தை முழுமையாகக் கட்டுபடுத்துவது JPMorgan Chase, Goldman Sachs, Morgan Stanley, Citigroup, UBS, Barclays, Credit Suisse, Bank of america போன்ற வங்கிகள் மட்டும் தான்.

பங்குச் சந்தையில் நடக்கும் வர்த்தகம் அனைத்தும் மையப்படுத்தப்பட்ட கணிணி மயமாக்கப்பட்டு விட்டதால் பங்கு வர்த்தகத்தில் அந்த நிமிடத்தில் நடக்கும் வர்த்தகம் அனைவருக்கும் தெரியும். ஆனால் derivativeல் நடக்கும் வர்த்தகம் அனைத்தும் ரகசியமாகவே நடக்கிறது. அதாவது தற்போது அரிசிக்கு 6 மாதம் பின் derivative மூலம் விற்கும் விலை வெளி உலகத்துக்கு சரியாக தெரியாது. அது போல் இந்த வர்த்தகத்தில் வங்கிகள் வாங்கும் கட்டணமும் யாருக்கும் தெரியாது. அதன் விளைவு வாங்குபவர்களுக்கும், விற்பவர்களுக்கும் சந்தையின் உண்மை நிலவரம் தெரியாது. வாங்குபவர்களின் விலைக்கும் விற்பவர்களின் விலைக்கும் இடையில் உள்ள வித்தியாசம் வங்கிகள் கைக்கு லாபமாக சென்றடையும். இதன் மொத்த மதிப்பு மிக பெரிய அளவிற்கு இருக்க வாய்ப்புள்ளது. ஒரு சில கணக்குகள்படி பெரிய வங்கிகள் வாங்கும் கட்டணம் மட்டும் $700 பில்லியன் தாண்டி இருக்க கூடும் என்று கருதப்படுகிறது.

இத்தகைய வர்த்தகத்தை கணிணிமயமாக்கி பங்கு வர்த்தகம் போல் செயல்படவும், பிற வங்கிகளை இந்த வர்த்தகத்தின் உள் நுழைய அனுமதிக்கவோ அல்லது கூடுதல் அரசு கட்டுப்பாட்டை கொண்டு வரவோ இந்த வங்கிகள் அனுமதிப்பது இல்லை. அதற்கு அரசாங்கம் எடுத்த முயற்சிகள் அனைத்தும் ஓரளவு தோல்வியிலேயே முடிவடைந்துள்ளது.

இன்னொரு முக்கிய செய்தி இது போன்ற வர்த்தகத்தில் derivativeஐ வாங்குபவர்கள் கட்டாயம் அந்தப் பொருளை வாங்க வேண்டும் என்று இல்லை. அவர்கள் அந்தப் பொருளை கையில் எடுத்துக் கொள்ளாமல் அடுத்தவர்களுக்கு derivative ஆக விற்று விடலாம். அதன் விளைவு யூக வர்த்தகர்கள் (Speculative Traders) பொருளின் விலையைத் தாறுமாறாக ஏற்றிவிட வாய்ப்பு உள்ளது.

அது மட்டுமல்ல ஒரு வங்கி ஒரு derivativeஐ மற்றொரு வங்கிக்கு ஒரு குறிபிட்ட விலைக்கு விற்கும். மீண்டும் அதே வங்கி விற்ற வங்கியிடமிருந்து அதே derivativeஐ கிட்டதட்ட அதே விலைக்கு வாங்கிக் கொள்ளும். இதனால் ஒட்டு மொத்த வர்த்தக மதிப்பு அதிகரித்துக் காட்டப்படும். (வங்கியின் வருமானமும் அதிமாக காட்டப்படும்). இந்த அளவைக் கொண்டு பொருளின் விலை உயர வாய்ப்புள்ளது. அது மட்டுமன்றி இந்த வர்த்தகத்துக்கு கட்டணத்தையும் வங்கிகள் வசூலித்துக் கொள்ளும். அதனால் ஏற்படும் விலை ஏற்றத்தை பொருளை கடைசியாக வாங்கும் சாதாரண மனிதன் தான் கொடுக்க வேண்டும். அதாவது செல்வம் சாதாரண மனிதர்களிடமிருந்து வங்கிக்கு இடம் பெயர்கிறது. இதற்கு சுற்று வட்ட வர்த்தகம் (round trip trade) என்று கூறுவார்கள்.

இதற்கு சிறந்த உதாரணமாக பெட்ரோல் விலை ஏற்றத்தை கூறலாம். 5 பில்லியன் பேரல் கச்சா எண்ணெய் ஒவ்வொரு மாதமும் அமெரிக்காவில் இது போல் derivative மூலம் விற்பனை செய்யப்படுகிறது. ஒவ்வொரு விற்பனைக்கும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால் 40 மில்லியன் பேரல் மட்டுமே வாங்கப்பட்டுள்ளது. அப்படி என்றால் 99.2% விற்பனை வெறும் புத்தகத்தில் தான் நடந்து உள்ளது. அதில் வசூலிக்கப்படும் கட்டணம் அனைத்தும் நுகர்வோர் தலையில் தான் விடிந்துள்ளது. இது ஒரு புறமிருக்க தற்போதைய பொருளாதார வீழ்ச்சியால் எண்ணெய் விலை ஏற்றம் குறைவாக இருப்பதால், அது மேலும் குறையாமல் இருக்க பெரிய எண்ணெய் கம்பெனிகளும், வங்கிகளும் நடுக்கடலில் கப்பலில் சுமார் 100 - 120 மில்லியன் பேரல் எண்ணெயை சேமித்து (பதுக்கி) நிறுத்தி வைத்துள்ளார்கள்.

மேற்சொன்ன speculative Trading மூலம் எண்ணெய் விலையை உயர்த்தி சில மாதம் கழித்து கொள்ளை லாபத்துக்கு விற்பதற்கான வழி முறை இது! பொதுவாக அரசாங்கம் தான் இந்த அளவு எண்ணையை அவசரத் தேவைக்காக சேர்த்து வைப்பது வழக்கம்.

சமீபத்தில் ஐரோப்பாவில் தேவையையும் (24000 டன் - $1 பில்லியன் மதிப்பு) 7 பேர் (வங்கிகளின் இடைத்தரகர்கள் மற்றும் hedge fund) வாங்கி எடுத்துக்கொண்டு கொக்கோவின் விலையை தாறுமாறாக உயர்த்தி மிகுந்த லாபம் கண்டு உள்ளனர். மிக அதிக அளவு பணம் வங்கிகளிடமும், ஒரு சில தனி மனிதர்கள் கைக்கும் செல்வதால் இனி வரும் காலங்களில் இது போன்ற விலை ஏற்றம் பிற உணவுப் பொருட்களுக்கும் உலக சந்தையில் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

உலகின் பெரும்பான்மையான நுகர்வுப் பொருட்களின் ஒட்டு மொத்த வர்த்தகம் ஒரு சில வங்கிகளின் வசம் சென்றுள்ளது. அதன் மதிப்பு உலகின் ஒட்டு மொத்த உற்பத்தி மதிப்பை விட பல மடங்கு அதிகம். பெரிய வங்கிகளின் வளர்ச்சியும் அளப்பறியதாக உள்ளது. மேலை நாடுகளின் அரசின் கடன் சுமையும் தற்போது அதிகரித்து வருகிறது. மேலை நாடுகளின் பொருளாதாரம் வளர்ச்சிப் பாதையை நோக்கிச் செல்லும்போது இந்த வங்கிகளின் வளர்ச்சி நினைத்துப் பார்க்க முடியாததாக இருக்கும். அதன் விளைவு விரைவில் அதிகாரங்கள் மற்றும் அரசாங்கம் எடுக்கும் முடிவுகளைக் கட்டுப்படுத்தும் திறன் அரசிடமிருந்து இந்த வங்கிகளுக்கு இடம் பெயர அதிக வாய்ப்புள்ளது.


--

4 comments:

vasu said...

இடையில் வங்கிகளின் 'பங்கு' பற்றிய விஷயங்களை தெளிவாக விளக்கியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்....
நிறைய தகவல்களுடனே எழுதுகிறீர்கள் வழக்கம் போல பதிவு அருமை....

சதுக்க பூதம் said...

வாங்க வாசு. இதை முடிக்கவே அதிக நேரம் ஆயிற்று. இதை விட அதிக விளக்கமாக எழுத நேரமின்மை காரணமாக முடியவில்லை.

vasu said...

அவற்றையும் குறிப்பிட்டிருக்கலாமே என்று எண்ணினேன். மற்றபடி பதிவு அருமை... நன்றி....

Anand Kumar said...

அருமையான பதிவு.ஒன்றுமே தெரியாமல் இருபர்க்கு இந்த கட்டுரை தரும் அறிவு நல்லதே.இருந்தபோதிலும் இதில் தொடர்ந்து எழுதவேண்டும்.