Monday, January 24, 2011

பள்ளியில் இந்தி - தேவை ஒரு உடனடி மாற்றம்

இந்தியா சுதந்திரம் அடைந்த போது பள்ளிகளில் மும்மொழி கொள்கை அறிமுக படுத்த பட்டது. மும்மொழி கொள்கையின் படி வட இந்திய மாணவன் தன் தாய் மொழியான இந்தி, உலக மொழியான ஆங்கிலம் மற்றும் வேறொரு இந்திய மொழி(தென்னிந்திய மொழியாக இருக்களாம்) கற்க வேண்டும். தென்னிந்திய மாணவர்கள் தங்களது தாய் மொழி, ஆங்கிலம் மற்றும் இந்தி கற்க வேண்டும்.உண்மையில் கொள்கை மேற்சொன்னதாக இருந்தாலும் நடைமுறையில் தென்னிந்திய மாணவர்கள் தாய் மொழி, ஆங்கிலம் மற்றும் இந்தி கற்க வேண்டும் என்றும் வட இந்திய மாணவர்கள் இந்தி மட்டும் கற்றால் போதும் என்ற நிலையில் இருந்தது. இந்தியா முழுமைக்கும் இந்தியை திணிக்க இது ஒரு கருவியாக பயன்பட்டது.அதற்கு அன்றைய அரசியல்வாதிகள் சொல்லும் காரணம் தென்னாட்டு மக்கள் வட நாட்டுக்கு வேலை பார்க்க வரும் போது,இந்தி தெரிந்து இருப்பது அவசியம் என்பதாகும்.

சுதந்திரம் அடைந்த போது காங்கிரஸ் கட்சியின் பெரும்பான்மையான எம்.பிக்கள் வட இந்தியாவிலிருந்து வந்ததாலும், அவர்களின் அழுத்தம் காரணமாக பெரும்பான்மையான பொது துறை நிறுவனங்கள் வட இந்தியாவில் தொடங்க பட்டது. வேலை வாய்ப்பும் அங்கு பெருகியது. அப்போது இந்தியா சோசியலிச பாதையில் இருந்ததால் அரசின் முதலீடு அதிகம். தனியாரின் பங்கு குறைவு. எனவே தமிழகத்திலிருந்து வட நாடு தேடி வேலை போவோரின் எண்ணிக்கையும் அதிகமாக இருந்தது.அப்போது வெளிநாடுகளுக்கு வேலை தேடி போவோரின் எண்ணிக்கையும் மிக குறைவு.

வேலைக்கு போகும் போது இந்தி கற்று கொள்வது ஒன்றும் கடினமான காரியமாக இல்லாவிட்டால் கூட அன்றைய சூழ்நிலையில் இந்தி படிக்க்காதது தான் தமிழக மக்களின் வளர்ச்சிக்கு பெரும் தடையாக இருந்ததாக தேசியவாதிகளால் செய்தி பரப்பபட்டது.

மாற்றம் தானே வாழ்வின் நியதி. மாற்றத்திற்கு ஏற்ப தன்னை தகவமைத்து கொள்பவர்கள் தானே வெற்றி கொள்ளவும் முடியும்.

தற்போது அரசு முதலீடு என்பது மிகவும் குறைந்து விட்டது. தனியார் முதலீடு தான் தொழிற்வளர்ச்சியில் பெரும் பங்கு வகிக்கிறது. தற்போதைய தொழிற் வளர்ச்சி அனைத்தும் தென்னிந்தியாவிலும், மகாரஷ்ட்ரா போன்ற மாநிலங்களிளும் தான் உள்ளது. அதன் விளைவு வட இந்தியாவை சேர்ந்த மாணவர்கள் தெற்கு நோக்கி சாரை சாரையாக இடம் பெயர ஆரம்பித்து உள்ளனர்.தென்னிந்தியாவின் நகர் புறங்களில் பெரும்பான்மையான கூலி தொழிலாளர்கள் வட இந்தியாவிலிருந்து தான் வந்து கொண்டிருக்கிறார்கள். வேலை மட்டும் என்று இல்லை. தொழிற்கல்வி படிக்க கூட வட இந்திய மாணவர்கள் தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களுக்கு வர வேண்டி உள்ளது.

அவர்களுக்கு பெரும் பிரச்ச்னையாக உள்ளது மொழி தான். மகாராஷ்டிராவில் கூட மராட்டி தெரியாமல் நாள் தோறும் அடி வாங்கும் வட இந்திய தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகம்.தமிழகத்தில் அவர்கள் இந்தியை மட்டும் வைத்து கொண்டு பரிதவிப்பது பார்க்கவே பரிதாபமாக உள்ளது. .இதை உணர்ந்து கொண்டு மத்திய அரசு உடனடியாக புதிய மொழி கொள்கையை அறிவிப்பது அவசியம். வட இந்திய பள்ளிகளில் தமிழ் உட்பட தென்னிந்தய மொழிகள் மற்றும் மராட்டி போன்ற மொழிகளை கட்டாய பாடமாக்க வேண்டும். இதை மத்திய அரசு செய்ய வேண்டும் என்று இல்லை. நித்தீஷ் குமார் போன்ற "மக்கள் நலம்" உயர விரும்பும் மாநில முதல்வர்கள் தங்களது மாநில அளவிளாவது உடனடியாக இதை நிறைவேற்ற வேண்டும்.

கபில் சிபல் போன்ற அமைச்சர்கள் மொழி கொள்கையில் உணர்ச்சி பூர்வமாக சிந்திப்பதை விட்டு அறிவு பூர்வமாக சிந்திக்க கற்றுகொள்ள வேண்டும்.வட இந்திய மாணவர்கள் மட்டும் மூன்று மொழிகளை படிப்பது தென்னிந்திய மாணவர்கள் இரு மொழி மட்டும் படிப்பது ஏற்று கொள்ள முடியாது தான்.இதற்கு என்ன தீர்வு? தமிழர்கள் வட இந்தியர்களை போல் தேசியவாதி இல்லை என்பது சோகமான உண்மை தான். எனவே நமக்கு பிரன்ச்சு, ஜெர்மனி, சீன மொழி போன்ற அன்னிய மொழி படிப்பது ஏற்று கொள்ள கூடியது தான். எனவே தமிழக பள்ளிகளில் மூன்றாம் மொழியாக ஒரு அன்னிய மொழியை அறிமுகபடுத்தலாம். தமிழர்களும் வெளி நாடுகளுக்கு வேலை தேடி செல்வதும் மிக அதிகமாக உள்ளது. எனவே தமிழக மாணவர்களுக்கும் இது உதவும்.

--

18 comments:

செந்திலான் said...

மூன்றாம் மொழியை ஒரு தெரிவாக (optional) அறிமுகப் படுத்தலாம்.கட்டாயம் என்று தேவை இல்லை.பட்டயப் படிப்பு மாதிரி தேவை உள்ளவர்கள் படிக்கலாம் என்று வைக்கலாம்.மொழியியல் மாணவர்களுக்கு அது உதவி செய்யும் ஆனால் சாதாரண மாணவர்களுக்கு அது சுமை தான்

எண்ணத்துப்பூச்சி said...

சதுக்கபூதம்,

பதிவர் மொழியில் சொன்னால் "உங்கள் கருத்து" மொக்கை.

தேவையெனில் தமிழன் இந்தி படிப்பான்.நான் கூட அரபு
நாட்டுக்கு போன போது தமிழ்,அரைகுறை ஆங்கிலம் தவிர
ஒன்றும் தெரியாது.ஆனால் "இந்தி"ய நண்பர்களுடன் பணிசெய்யும்
போது தானாக கற்க முடிந்தது.இது தேவை என்பதினால் அல்ல...
ஆர்வத்தினால்.

இந்தியா ஒரு நாடு அல்ல...அது பலதரப்பட்ட மக்களின் கூட்டனி.

மேலும் எந்த மனிதனுக்கும் மொழி ஒரு தடைக்கல்லாய் இருக்காது.

புதுச்சேரியை எடுத்துக்கொள்ளுங்கள் இங்கு சுமார் 2000 வட இந்திய
கூலி தொழிலாளர்கள் உள்ளனர்.ஆனால் அவர்கள் இந்தியிலும்,வங்காளத்திலும்
பேசி, தன் வாழ்க்கையை நடத்துகின்றனர்.நான் நிறைய முறை கண்டுள்ளேன்.....
நம் மளிகை கடைக்காரர்களும்,காய்கறி கடைகாரர்களும் ஓரளவு இந்தி தெரிந்து
கொண்டு சமாளிக்கின்றனர்.

அதனால் இந்தி படித்தால் பணம் சம்பாதிக்கலாம்
வாழ்க்கை சிறக்கும் என்ற கூற்று அர்த்தமற்றது.

vasu said...

//Labels: நட்சத்திர வாரம், நையாண்டி//

நையாண்டி என குறிப்பிட்டுள்ளதால் உங்கள் கருத்தை துல்லியமாக அறிய முடியவில்லை...

சதுக்க பூதம் said...

வாங்க செந்திலான்,வாசு
இந்திய தேசியம் என்பது இந்தி மற்றும் இந்து மத அடிப்படையில் உருவானது அல்ல. மேலும் ஒரு மொழியை மற்றவர்கள் திணிப்பது அவசியம் அற்றது. தேசிய மொழி என்ற காரணம் சொல்லி இந்தியை திணிப்பது அர்த்தமற்றது. யாருக்கும் தேவை என்றால் எந்த மொழியையும் எப்போது வேண்டுமானாலும் கற்று கொள்ள முடியும்.
நியாயபடி பார்த்தால் தமிழர்களுக்கு இந்தியின் தேவையை விட வட இந்தியர்களுக்கு பிற தென் மொழி/மராட்டிய மொழி போன்ரவற்றின் தேவை தான் அதிகம்

சதுக்க பூதம் said...

வாங்க எண்ணத்துப்பூச்சி.

லேபிலில் நையாண்டி என்று குறிப்பிட்டுள்ளேன்
நீங்கள் தலைப்பை மட்டும் பார்த்து பின்னூட்டம் இட்டுள்ளீர்கள் என்று நினைக்கிறேன். மீண்டும் ஒரு முறை பதிவை படியுங்கள்.

//அதனால் இந்தி படித்தால் பணம் சம்பாதிக்கலாம்
வாழ்க்கை சிறக்கும் என்ற கூற்று அர்த்தமற்றது.
//

இந்த கருத்தை தான் வலியுறுத்த விரும்புகிறேன்.

vasu said...

நன்றி....

புருனோ Bruno said...

//அவர்களுக்கு பெரும் பிரச்ச்னையாக உள்ளது மொழி தான். மகாராஷ்டிராவில் கூட மராட்டி தெரியாமல் நாள் தோறும் அடி வாங்கும் வட இந்திய தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகம்.தமிழகத்தில் அவர்கள் இந்தியை மட்டும் வைத்து கொண்டு பரிதவிப்பது பார்க்கவே பரிதாபமாக உள்ளது. .இதை உணர்ந்து கொண்டு மத்திய அரசு உடனடியாக புதிய மொழி கொள்கையை அறிவிப்பது அவசியம். வட இந்திய பள்ளிகளில் தமிழ் உட்பட தென்னிந்தய மொழிகள் மற்றும் மராட்டி போன்ற மொழிகளை கட்டாய பாடமாக்க வேண்டும். இதை மத்திய அரசு செய்ய வேண்டும் என்று இல்லை. நித்தீஷ் குமார் போன்ற "மக்கள் நலம்" உயர விரும்பும் மாநில முதல்வர்கள் தங்களது மாநில அளவிளாவது உடனடியாக இதை நிறைவேற்ற வேண்டும்.
//

கடுமையாக வழிமொழிகிறேன் :) :)

புருனோ Bruno said...

//பதிவர் மொழியில் சொன்னால் "உங்கள் கருத்து" மொக்கை.
//

எப்படி என்று விளக்க முடியுமா

ஏனென்றால்

வட இந்தியர்கள் ஏன் தமிழ் படிக்க வேண்டும் என்று அவர் தெளிவாகவே விளக்கியுள்ளார்

அது மொக்கை என்று கூறும் நீங்கள் தரும் ஆதாரங்கள் யாவை

புருனோ Bruno said...

அப்படியே இதையும் படித்து விடுங்கள்

Samudra said...

நட்சத்திர அந்தஸ்திற்கு வாழ்த்துக்கள்..

கோகுலகிருட்டிணன் said...

வணக்கம் தோழர்களே,

தயவு செய்து ஒன்றை எல்லோரும் மனதில் கொள்ளுங்கள் இந்தி இந்தியாவின் தேசிய மொழி இல்லை,தங்களுக்கு ஆதாரம் வேண்டிமேன்றால் கடந்த ஆண்டு குசராத் உயர் நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பைச் சொல்கிறேன்,
வழக்கு இதுதான்: ஒருவர் (பெயர் தெரியவில்லை) குசராத் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடுத்தார் அனைத்து பொருட்களிலும் அதன் விவரங்கள் இந்தியிலும் குறிப்பிடப்பட வேண்டும் ஏனென்றால் இந்தி தேசிய மொழி என்று.
நீதிபதிகள் இவ்வழக்கைத் தள்ளுபடி செய்துவிட்டார்கள் நீதிபதிகள் கூறிய காரணம் இதுதான் இந்தி ஒரு தேசிய மொழி இல்லை அப்படி எங்கேயும் இந்திய அரசியலைமைப்புச் சட்டத்தில் குறிப்பிடப்படவில்லை எந்த மொழியில் பொருட்களின் விவரங்கள் இருக்கவேண்டும் எனபது அவரவர் தனிப்பட்ட விருப்பத்தைப் பொறுத்தது யாரும் கட்டயப்படுத்த் இயலாது என்று கூறிவிட்டார்கள்.

வாடா இந்தியர்கள் மற்றவர்களை ஏய்க்கப் பயன்படுத்தும் ''இந்தி இந்தியாவின் தேசிய மொழி'' என்ற ஏமாற்று வசனத்தை எங்கும் கூறாதீர்கள். மொழியைக் கற்பது என்பது அவரவர் தனிப்பட்ட விருப்பம் சார்ந்தது.

செந்தழல் ரவி said...

இந்தி, மராட்டி, குஜராத்தி, கன்னடா, தெலுகு, சைனீஸ், கொரியன் ஆகியவற்றின் அடிப்படையான வார்த்தைகள் கொண்ட ஒரு பாடத்தை வைக்கலாம். இதுக்கு பலமொழி பாடம் என்று பெயர் வைக்கலாம். (Basic's மட்டும். 30 நாளில்' புத்தகத்தில் இருப்பது போல கொஞ்சம்.)

அட்லீஸ்ட் மாணவர்களுக்கு பிற மொழிகளில் கொஞ்சம் அறிமுகம் கிடைக்கும். பிறகு அந்த மொழியை கற்கவேண்டிய தேவை ஏற்படும்போது எவ்வித மனத்தடை இல்லாமல் எளிமையாக அணுக / கற்க முடியும்.

நல்ல சிந்தனை !

புருனோ Bruno said...

கோகுலகிருட்டிணன் சார்

இந்தி தேசிய மொழி அல்ல

இந்தியும் ஆங்கிலமும் அலுவலக மொழிகள்

அவ்வளவு தான்

ராஷ்ட்ரபாஷா என்பது மூன்றாவது இந்தி தேர்வு, அம்புடுதான் !!!

சதுக்க பூதம் said...

தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி புருனோ Bruno.உங்கள் பதிவை பார்த்தேன் மிக்க நன்றாக இருந்தது.

நன்றி சமுட்ரா
தங்கள் கருத்துக்கு நன்றி கோகுலகிருட்டிணன்

//கோகுலகிருட்டிணன் சார்

இந்தி தேசிய மொழி அல்ல

இந்தியும் ஆங்கிலமும் அலுவலக மொழிகள்

அவ்வளவு தான்

ராஷ்ட்ரபாஷா என்பது மூன்றாவது இந்தி தேர்வு, அம்புடுதான் !!!

//

சரியாக சொன்னீர்கள்.U.P,M.P மற்றும் Biharல் காங்கிரஸ் மற்றும் பா,ஜ,க பெரிய அளவில் வெற்றி பெரும் வரை இந்தி திணிப்பு தொல்லை இருக்காது என்று நினைக்கிறேன்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி செந்தழல் ரவி.

கே.பழனிசாமி, அன்னூர் said...

முயற்சி செய்தால் இந்தி என்ன எதனை மொழிகளையும் கற்றுகொள்ளலாம். தடை அரசியல்வாதிகளே தவிர மாணவர்கள் அல்ல. இளம் வயதில் தற்போது உள்ள குழந்தைகளின் அறிவாற்றல் வியக்க செய்கிறது. இந்த அரசியல் வாதிகள் மனது வைத்தால் நமது தமிழர்களும் வட இந்தியர்களை ஆட்டிப்படைக்கலாம். இந்தி மொழி விருப்பமுள்ளோர் கற்றுக்கொள்ளலாம் என்ற நிலை மட்டும் கொண்டு வந்தால் போதும். எழுபது சதவீத மாணவர்கள் கற்றுக்கொள்ள தயாராக உள்ளார்கள்

கோவி.கண்ணன் said...

இந்தியர்கள் சீன மொழியும், சீனர்கள் ஆங்கிலமும் கற்றுக் கொண்டால் பரந்து விரிந்த இரு நாட்டிலும் வேலை வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ள முடியும்.

*****

இந்தி இந்தியாவில் உருவான காலத்திற்கும் ஆங்கிலம் இந்தியாவில் நுழைந்த காலத்திற்கும் வெறும் 200 ஆண்டுகளே வேறுபாடு, இந்தியைவிட ஆங்கிலத்தின் பயன்பாடு இந்தியர்களுக்கு இன்றியமையாதது. உலக அளவில் புகழ்பெற இந்தியர்களுக்கு ஆங்கிலம் இரண்டாம் பாடமாக இருப்பது மிகத் தேவையான ஒன்று

சதுக்க பூதம் said...

// நமது தமிழர்களும் வட இந்தியர்களை ஆட்டிப்படைக்கலாம்.//

இந்தி தெரிந்தால் மட்டும் தான் வட இந்தியரை ஆட்டி படைக்க முடியுமா என்ன? அவ்வாறு ஆட்டி படைத்து என்ன ஆக போகிறது. உலகம் பெரியது. ஆங்கிலம் நம்மை உலகின் எந்த மூலைக்கும் இட்டு செல்லும்.

//இந்தி மொழி விருப்பமுள்ளோர் கற்றுக்கொள்ளலாம் என்ற நிலை மட்டும் கொண்டு வந்தால் போதும். எழுபது சதவீத மாணவர்கள் கற்றுக்கொள்ள தயாராக உள்ளார்கள்

//

இந்தி திணிப்பை ஏற்று கொள்வது தமிழர்களை இந்தியாவின் இரண்டாம் குடிமக்களாக ஏற்று கொள்வதற்கு சமம். வேலைக்கு போகும் போது இந்தி தேவை பட்டால் அப்போது படித்து கொள்ளலாம்

சதுக்க பூதம் said...

//இந்தி இந்தியாவில் உருவான காலத்திற்கும் ஆங்கிலம் இந்தியாவில் நுழைந்த காலத்திற்கும் வெறும் 200 ஆண்டுகளே வேறுபாடு, இந்தியைவிட ஆங்கிலத்தின் பயன்பாடு இந்தியர்களுக்கு இன்றியமையாதது. உலக அளவில் புகழ்பெற இந்தியர்களுக்கு ஆங்கிலம் இரண்டாம் பாடமாக இருப்பது மிகத் தேவையான ஒன்று
//


வாங்க கோவி.கண்ணன். உங்கள் கருத்தை வழி மொழிகிறேன்