இந்தியாவின் கல்வி முறை மேற்கத்திய கல்விக்கு இணையாக வளராததற்கு முக்கிய காரணமாக பொது ஜன ஊடகம் மூலம் ஒட்டு மொத்தமாக பரப்பப்படும் காரணி மெக்காலே கல்வித் திட்டமாகத் தான் இருக்கும். மெக்காலே வழி கல்வி கற்றவர்களை மெக்காலைட்டுகள் என்றும், சொந்த நாட்டின் கலாச்சாரத்தை மதிக்காதவர்கள் என்றும் சொல்லாடலாக வலம் வருகிறது. மெக்காலே கல்வித் திட்டம் என்றால் என்ன என்றும் அது பரிந்துரைக்கப்பட்ட காலத்தின் பின்னனியைப் பற்றியும் அறிமுகம் இல்லாத பெரும்பாலோர் அது உண்மை என்றே நம்பி வருகின்றனர். மெக்காலே கல்வித் திட்டம் பரிந்துரைக்கப்பட்ட ஆண்டு 1835ம் ஆண்டு. முதலில் அந்த காலத்தில் கல்வி முறை எப்படி இருந்தது என்று பார்ப்போம்.
இரண்டாயிரம் ஆண்டுகளாக இந்திய மண்ணில் வர்ணாஸ்ரம முறை வலுவாக காலை ஊன்றி இருந்தது. இதன் விளைவாக கல்வி என்பது மதத்தின் பெயரால் பெரும்பான்மையான மக்களுக்கு மறுக்கபட்டு வந்தது. புத்த மதம் இந்தியாவில் ஆட்சி செய்தபோது தற்போதைய பல்கலைகழகங்களைப் போன்றே நாலந்தா போன்ற இடங்களில் பல்கலைக்கழகங்கள் சாதி பாகுபாடு இன்றி அனைவருக்கும் கல்வி அளித்தது (அந்தக் காலத்தில் கல்வி என்பது மத போதனை தான் என்பது வேறு செய்தி). ஆனால் அதன் பிறகு இந்து மதம் தழைத்தோங்கிய பின் சமஸ்கிருத வழி குருகுல கல்வி வளர்ந்து அது உயர் சாதியினருக்கும் மட்டும் சென்றடைந்தது. அதுமட்டுமன்றி இந்தியாவில் இருந்த பல்வேறு சிறு மற்றும் குறுநில மன்னர்களைச் சுற்றி உயர் சாதியினரை மட்டும் உள்ளடக்கிய பெரிய அதிகார வர்க்கம் உருவானது. அந்த அதிகார வர்க்கம், கல்வி சாமனியரை சென்றடைவதைத் தடுத்து, அவர்கள் மட்டும் பயனடைய உதவி செய்தது.
அது மட்டுமன்றி சமஸ்கிருத மொழி கடவுள் பேசும் தேவ மொழி என்ற செய்தி பரப்பப்பட்டு அதைப் படிக்கும் உரிமை ஒரு சில உயர் சாதியினருக்கே உரியது என்பதும் பெரும்பான்மையான உழைக்கும் மக்கள் அதைப் படிக்க முயல்வது பாவம் என்பதும் நீதி ஆனது. அப்போதைய கல்விக் கூடங்களில் கற்றுக் கொடுக்கப்படும் பாடங்களும் சமஸ்கிருத மொழியில் வேதம் ஓதுவது எப்படி என்பது பற்றிய பாடங்களும் பிற மத ரீதியான பாடங்களும் தான். இது ஒரு புறம் இருக்க மறுபுறம் இஸ்லாமிய மன்னர்கள் தொடங்கிய கல்விக் கூடங்களில் குரான் மற்றும் இசுலாமிய மதரீதியான பாடங்கள் தான் இருக்கும். ஒரு புறம் இந்து மன்னர்களின் பள்ளிகளில் சமஸ்கிருதத்தை அடிப்படையான இந்து சமய பாடமுறைகளும், மறுபுறம் இசுலாமியப் பள்ளிகளில் அராபிய மற்றும் பெர்சிய மொழிகளில் இசுலாமிய மத பாட முறைகளும் தான் இருந்தது.
இந்தச் சூழ்நிலையில் கிழக்கிந்தியக் கம்பெனி இந்தியாவில் சிறிது சிறிதாக காலூன்ற ஆரம்பித்தது. பிரிட்டன் பாராளுமன்றம், கிழக்கு இந்தியக் கம்பெனி கட்டாயமாக இலட்சம் ரூபாயை இந்தியர் கல்விக்காக செலவிட வேண்டும் என்று உத்திரவிட்டது. அந்த லட்சம் ரூபாயை எவ்வாறு செலவிடுவது என்று கிழக்கிந்தியக் கம்பெனி சிந்தித்தபோது அப்போதைய கல்வியாளர்களால் இறுதி செய்யபட்டது இரண்டு முறைகள். ஒன்று இந்தியாவில் அப்போது நடைமுறையில் இருந்த "தாய் மொழி" வடிவில் கற்று கொடுக்கப்பட்டு வந்த கல்விமுறை. மற்றொன்று ஆங்கில் முறையில் மேற்கத்திய வழிக் கல்வி. அந்த இரண்டில் மெக்காலே தேர்ந்து எடுத்தது மேற்கத்திய முறை அடிப்படையான ஆங்கில வழிக் கல்வி. அது தான் இன்றைய தேசியவாதிகளாலும், இந்து மத அடிப்படைவாதிகளாலும் சாடப்பட்டு வருகிறது.
தாய்மொழிக் கல்வி என்றவுடன் ஏதோ இந்தியாவில் இருந்த அனைத்து மக்களும் தங்களது தாய் மொழியில் கற்க வாய்ப்பு கிடைத்து அதை மெக்காலே தடுத்து விட்டதாக நினைத்து விட வேண்டாம். அந்தக் கால தாய்மொழிக் கல்வி என்று குறிப்பிடப்படுவது சமஸ்கிருதம், அரேபிய மற்றும் பெர்சிய மொழி வழிக் கல்விதான். இது அவரது குறிப்புகளில் தெளிவாக இருக்கிறது. அன்று மெக்காலே பாரம்பரிய கல்வி முறையை தேர்ந்து எடுத்து இருந்தால், அதன் விளைவாக இந்தி ஆதிக்கம் இந்தியா முழுதும் படர்ந்து மற்றைய பிராந்திய மொழிகளின் அடிப்படையிலான கல்வியை முழுமையாக அழித்திருக்க வாய்ப்புள்ளது. அது மட்டுமன்றி மத ரீதியான காரணங்களைச் சொல்லி 1000 ஆண்டுகளாக நடந்து வந்ததைப் போல் கல்வி செல்வத்தையும் அதன் மூலம் வரும் வளர்ச்சி மற்றும் பொருள் செல்வத்தையும் ஒரு சில ஆதிக்க சாதியினருக்கு மட்டும் தனியுடமை ஆக்கி, தங்களின் வளர்ச்சிக்கு ஒரு போட்டியே இல்லாத சூழ்நிலையை உருவாக்கிக் கொள்ளவும் வாய்ப்பு உள்ளது. இவையெல்லாம் உண்மை என்றாலும் மேற்கத்தைய கல்விக்கு ஆதரவாக மெக்காலே சொன்ன காரணங்கள் இவை இல்லை. அவரது கல்வித் திட்டத்திற்கு ஆதரவாக அவர் கூறிய காரணங்களைப் பார்ப்போம். .
“மெக்காலேயின் கருத்துப்படி ஆங்கிலத்தில் தான் கலை, அறிவியல், வரலாறு என அனைத்துத் துறைகளிளும் அதிக அளவு புத்தகம் உள்ளது. சமஸ்கிருதத்தில் உள்ள புத்தகங்களில் உள்ள கருத்துகள் ஒரு பீரோவின் பாதி அளவில் உள்ள ஆங்கிலப் புத்தகங்களில் உள்ளதை விட குறைவாகவே இருந்தது என்பது தான். அது மட்டுமன்றி கம்பெனியினரின் பணத்தை அறிவியல் சார்ந்த கல்விக்காக செலவிடுவதை விடுத்து மத போதனைகளை மட்டும் கற்றுத் தரும் இந்திய பாரம்பரிய ரீதியான கல்விக்கு செலவிடுவது என்பது வீண். இந்தியர்களின் அறிவுத் திறனை வளர்க்கும் விதமாக புதிதாக அறிமுகப்படுத்தும் கல்வி முறை இருக்க வேண்டும். இந்தியர்களின் அறிவுத் திறனை வளர்க்க உதவுவது ஏராளமான கலை பொக்கிஷங்களை உள்ளடக்கிய ஆங்கில மொழி வழியில் இருப்பது தான் நன்று. எனவே இந்தியர்கள் ஆங்கிலத்தைப் படித்தால் அவர்களுக்கும் உலகில் உள்ள அனைத்து கலை பொக்கிஷங்களையும் படிக்கும் வாய்ப்பு கிடைக்கும். அது அவர்களது அறிவின் வளர்ச்சிக்கு உதவும். அந்த சமயத்தில் கூட இந்திய அதிகார வர்க்கத்தினர் ஆங்கிலத்தில் நன்கு பேசும் புலமை பெற்று ஆங்கிலப் புத்தகங்களை படிக்கின்றனர். எனவே ஆங்கில மொழிக் கல்வியை அனைவருக்கும் அளித்தால் அது அனைத்து மக்களின் வளர்ச்சிக்கும் உதவும்.
ஆங்கிலேயர்களின் ஆதிக்கம் ஆப்ரிக்கா, ஆஸ்திரேலியா என பல நாடுகளில் விரிவடைகிறது. இனி வரும் காலங்களில் ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்தில் உள்ள நாடுகளிடையே ஏற்படும் வர்த்தகத்தின் அளவு மிக அதிகமாக இருக்கும். எனவே ஆங்கில வழிக் கல்வி பிற்காலத்தில் இந்தியர்களுக்கு இந்த வர்த்தகத்துக்கும் உதவியாக இருக்கும். 15ம் நூற்றாண்டில் கிரேக்க மற்றும் லத்தீன் மொழிகளில் இருந்த அளவு கலை செல்வம் ஆங்கிலத்தில் இல்லை. ஆனால் அப்போது இங்கிலாந்தில் இருந்தவர்கள் ஆங்கிலத்தில் தான் படிப்போம் என்று கூறி பிற மொழிகளில் இருந்த கருத்துகளைப் புறக்கணிக்கவில்லை. மாறாக சில காலத்துக்குப் பின் அவற்றை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார்கள். அனைத்து புத்தகங்களையும் சமஸ்கிருதத்திலும் அரேபிய மொழியிலும் குறைந்த காலத்தில் மொழி பெயர்ப்பது என்பது கடினம். அதுமட்டுமின்றி இந்தியர்களும் ஆங்கில வழி கற்று உலக நடப்புகள் மற்றும் அறிவியலைக் கற்றால், இந்தியர்களும் மேற்கத்திய சிந்தனை மற்றும் மேற்கத்திய நீதி நெறிமுறைகளை அறிந்து அதை பின்பற்றப் வாய்ப்பாகவும் இருக்கும்.”
இனி அவர் மீது தொடுக்கப்படும் தாக்குதல் பற்றி பார்ப்போம். மெக்காலேவின் கல்வியின் நோக்கமே இந்தியர்களை மொழிபெயர்ப்பாளர்களாக உருவாக்கி சிந்தனை ரீதியான அடிமைகளாக உருவாக்க முயன்றார் என்பது தான். அதற்கு அவர்கள் காட்டும் மேற்கோள்
"We must at present do our best to form a class who may be interpreters between us and the millions whom we govern; a class of persons, Indian in blood and colour, but English in taste"
ஆனால் இந்த மேற்கோள் பாதியை மட்டும் கொண்டது. அந்த மேற்கோளின் மீதி பாதியை பெரும்பான்மையானோர் மறைத்து விடுவர். அதன் முழு செய்தியையும் படித்துப் பாருங்கள். அவர் கூறியதற்கான காரணம் உங்களுக்கு புரியும்.
"In one point I fully agree with the gentlemen to whose general views I am opposed. I feel with them, that it is impossible for us, with our limited means, to attempt to educate the body of the people. We must at present do our best to form a class who may be interpreters between us and the millions whom we govern; a class of persons, Indian in blood and colour, but English in taste, in opinions, in morals, and in intellect. To that class we may leave it to refine the vernacular dialects of the country, to enrich those dialects with terms of science borrowed from the Western nomenclature, and to render them by degrees fit vehicles for conveying knowledge to the great mass of the population. "
அதாவது கல்விக்காக ஒதுக்கப்பட்டுள்ள பணத்தில் அனைத்து இந்தியருக்கும் கல்வி அளிப்பதும், ஆங்கிலத்தில் உள்ள புத்தகங்கள் அனைத்தையும் பிராந்திய மொழிகளில் மொழி பெயர்ப்பதும் கடினம். அது மட்டுமன்றி ஆங்கிலேயர்களுக்கு அவர்களது மொழியைப் புரிந்து கொண்டு அதை அவர்கள் ஆளும் மக்களிடம் அவர்களது மொழியில் பேச ஆட்கள் உடனடியாக தேவைபட்டது. எனவே முதலில் ஆங்கிலத்தை இந்தியாவில் உள்ள ஒரு சிலரிடம் கற்று கொடுப்போம். அவர்கள் ஆங்கிலத்தில் உள்ள புத்தகங்கள் எல்லாவற்றையும் படித்து தங்களது மொழியில் மொழி பெயர்த்து அனைவருக்கும் கொண்டு செல்லட்டும் என்பதேயாகும்.
தற்போது வலையுலகத்தில் வேகமாகப் பரவி வரும் செய்தி மெக்காலே இங்கிலாந்து பார்லிமெண்டில் பேசியதாக வரும் செய்தி. அதில் கூறபட்டுள்ள செய்தி
"I have travelled across the length and breadth of India and I have not seen one person who is a beggar, who is a thief. Such wealth I have seen in this country, such high moral values, people of such calibre, that I do not think we would ever conquer this country, unless we break the very backbone of this nation, which is her spiritual and cultural heritage, and, therefore, I propose that we replace her old and ancient education system, her culture, for if the Indians think that all that is foreign and English is good and greater than their own, they will lose their self-esteem, their native self-culture and they will become what we want them, a truly dominated nation. "
அதாவது இந்தியாவில் ஏழைகளே இல்லையாம். பாலாறும் தேனாறும் ஓடியதாம். வருணாஸ்ரம வழி கல்வி முறையால் தான் இந்தியா இவ்வாறு வளமாக இருந்ததாம். என்வே அந்தக் கல்வி முறையை அழித்து ஆங்கிலக் கல்வி முறையை நடைமுறைப்படுத்தினால் மட்டுமே இந்தியாவை அடிமைப்படுத்த முடியுமாம். இந்தச் செய்தியை படிக்கும் யாவருக்கும் அது உண்மையான செய்தியா என்பது புரிந்து இருக்கும். 1835ம் ஆண்டு மெக்காலே இங்கிலாந்து பார்லிமெண்ட்டில் மேற்கூறியவற்றை கூறியதாக சொல்கிறார்கள். ஆனால் மெக்காலே பற்றிய எந்த வரலாற்று குறிப்புகளிலும் இது பற்றி இல்லை. அது மட்டுமன்றி 1835ம் ஆண்டு மெக்காலே இந்தியாவில் தான் இருந்தார். எனவே பிரிட்டன் பார்லிமெண்ட்டில் அவர் இவ்வாறு பேசியிருப்பது சாத்தியமில்லை.
மெக்காலே ஆங்கிலக் கல்வி முறையை அறிமுகப்படுத்தாமல் பாரம்பரிய கல்வியை சிபாரிசு செய்திருந்தால் ஆங்கிலேயர்களுக்கு அன்றைய இந்திய ஆளும் அதிகார வர்க்கத்தினரின் நன்மதிப்பைப் பெற்றிருக்க முடியும். அது மட்டுமன்றி, சமஸ்கிருத மற்றும் அரேபிய வழி இரு மொழிக் கல்வியை தனித்தனியே கொடுப்பதின் மூலம் இந்து முஸ்லீம் பிரிவினையை நன்கு வளர்த்து ஆங்கில ஏகாதிபத்தியத்திற்கான எதிர்ப்பையும் திசை திருப்பி இருக்கலாம். மேலும் சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் போன்ற மேற்கத்தைய சிந்தனைகளை இந்தியாவில் வளர விடாமல் வருணாஸ்ரமம் சார்ந்த குறுகிய மனப்பான்மையிலேயே இந்தியர்களை வளர விட்டிருக்கலாம். அன்று அவர் கொடுத்த ஆங்கிலக் கல்வி முறை தான் பிற்காலத்தில் பல்லாயிரம் இந்தியத் தலைவர்கள் சிந்தனாவாதியாக உருவாகி, இந்திய சுதந்திர இயக்கத்தை வளர்க்க உதவியது என்பதும் மறுக்க இயலாது.
மெக்காலே கல்வித் திட்டத்தின் பயனாகக் கிடைத்த ஆங்கில அறிவின் மூலம் இன்று ஏராளமான இந்தியர்கள் உலகின் பல நாடுகளிளும் வேலை வாய்ப்பைப் பெற உதவி செய்து வருகிறது. இந்தியாவில் ஆங்கில அடிப்படையிலான கல்வியை அறிமுகப்படுத்தி சமஸ்கிருத/இந்தி வழிக் கல்வியை தடுத்ததன் விளைவாக பிராந்திய மொழி தொடக்கக் கல்வியை எளிதாக அறிமுகப்படுத்தவும் காரணியாக இருந்தது என்பதும் மறுக்க முடியாத உண்மை. மெக்காலே சமஸ்கிருத வழிக் கல்வியை அறிமுகப்படுத்தி இருந்தால், இந்திய தேசியவாதத்தைக் காரணம் காட்டி, மற்ற பிராந்திய மொழி கல்வி வளர்ச்சிக்கு முழுமையாக சமாதி கட்டி இருப்பார்கள். ஆங்கிலம் என்பது வெளிநாட்டினரின் மொழியாக இருந்ததால், பிராந்திய மொழி வழி தொடக்கக் கல்வியை ஆங்கிலத்துக்கு இணையாக அறிமுகப்படுத்திய போது எதிர்ப்பு இல்லாமல் இருந்தது.
தற்போது பாக்கிஸ்தானிய மதராசாக்களிலும், ஆப்கானிஸ்தானிலும் கற்று கொடுக்கப்படும் கல்வி அன்றைய இந்தியாவில் பின்பற்றப்பட்டு வந்த கல்வி முறையாகத் தான் உள்ளது. இன்றைய இந்து தேசியவாதிகளும் முன்னனி ஊடகங்களும் பாராட்டிப் பேசும் இந்திய பாரம்பரியக் கல்விமுறையை மெக்காலே அறிமுகப்படுத்திய மேற்கத்தைய கல்விமுறைக்கு பதில் நடைமுறைப்படுத்தி இருந்தால், இந்தியாவும் அறிவு சார் சமுதாயமாக வளராமல், ஆப்கானில் இருப்பதுபோல் மத அடிப்படைவாத சமுதாயமாக வளர்ந்து இருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.
மெக்காலே கல்வித் திட்டம் பற்றி முழுமையாகத் தெரிந்து கொள்ள இங்கு சென்று தெரிந்து கொள்ளுங்கள்.
http://www.english.ucsb.edu/faculty/rraley/research/english/macaulay.html
--
11 comments:
உங்களுடைய மற்ற பதிவுகளைப் போன்றே இந்த பதிவும் சிறப்பாக உள்ளது. இன்னும் அதிகமான பதிவுகளை எதிர்பார்க்கிறேன்... நன்றி..
பல புதிய தகவல்களை உள்ளடக்கிய அருமையான பதிவு.
(சுதந்திர போராட்ட வரலாறு உட்பட) நமது சரித்திரத்தில் பெரும்பாலானது, அரசியல் காரணங்களுக்காக திரிக்கப் பட்டு உருவாக்கப் பட்டது என்றே நான் நம்புகிறேன். என்னுடைய நம்பிக்கைக்கு உங்கள் பதிவு மேலும் வலு சேர்த்துள்ளது.
//vasu said...
உங்களுடைய மற்ற பதிவுகளைப் போன்றே இந்த பதிவும் சிறப்பாக உள்ளது. இன்னும் அதிகமான பதிவுகளை எதிர்பார்க்கிறேன்... நன்றி..//
வழி மொழிகிறேன்!
மிக்க நன்றி!
//உங்களுடைய மற்ற பதிவுகளைப் போன்றே இந்த பதிவும் சிறப்பாக உள்ளது. இன்னும் அதிகமான பதிவுகளை எதிர்பார்க்கிறேன்... //
நன்றி வாசு.நிச்சயம் எழுத முயற்ச்சிக்கிறேன்
//பல புதிய தகவல்களை உள்ளடக்கிய அருமையான பதிவு.
//
நன்றி Maximum India
// நமது சரித்திரத்தில் பெரும்பாலானது, அரசியல் காரணங்களுக்காக திரிக்கப் பட்டு உருவாக்கப் பட்டது என்றே நான் நம்புகிறேன். என்னுடைய நம்பிக்கைக்கு உங்கள் பதிவு மேலும் வலு சேர்த்துள்ளது.
//
உண்மை தான் Maximum India
நீண்ட காலமாக இருந்து வந்த வரலாற்று தவறை சரியாக காட்டியது அருமை.பொருளாதாரம் பற்றிய சிறந்த கட்டுரைகளை மீண்டும் எதிர்பார்க்கிறேன்.
அப்படி போடு அருவாள!
அம்பேத்கர் போன்றோர் வெளிச்சம் கண்டிருக்க முடியாது..
ராஜா ராம் மோகன் ராய் ஒரு சராசரி பிராமணனாக இருந்திருப்பார்..
நேரு சுதந்திரம் கிலோ என்ன விலை என்று கேட்டிருப்பார்..
ஆங்கிலையர் அவர்கள் சவ குழிகளை அவர்களே தோண்டிகொண்டார்கள், இந்தியர்களை கல்வி கற்பதன் மூலம். இந்தியர்கள் apt pupils.
macaulay இவ்வாறு விசுவரூபம் எடுக்கும் என்று எதிபார்தாரா? அல்லது அவரும் ripon போன்ற நல்லவரா?
இப்போது கூட open source விசியத்தில் எத்தனை இந்தியர்கள் உள்ளனனர்? கல்வியை கோயில் என்று கூறி அடைத்து வைப்பதில் தான் நமக்கு ஆர்வம்.
என்னை கேட்டால் ஒரு புத்தகத்தை மதிக்க சரியான வழி, அதை படித்து கிழிப்பது தான். சரஸ்வதி பூஜை செய்வது அல்ல.
do you know of any social reformers who tried to destroy the caste system, before the arrival of the europeans? i can't find someone in the league of marx or even william wilberforce. social science as it is known now, seems non existent in ancient india.
வாங்க suman.நிச்சயம் விரைவில் பொருளாதாரம் சார்ந்த பதிவுகளை எழுதுகிறேன்
வாங்க whatsinaname.
//macaulay இவ்வாறு விசுவரூபம் எடுக்கும் என்று எதிபார்தாரா? அல்லது அவரும் ripon போன்ற நல்லவரா?
//
அவருடைய வரலாறு பற்றி படித்த மட்டில், அவர் இந்தியாவுக்கு முடிந்த வரை ஒரு நல்ல கல்வி திட்டத்தை கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இருந்தது போல் தான் தோன்றுகிறது. ஆனால் அவரிடம் ஆங்கிலேயர்களுக்கே உரித்தான 'ego' மற்றும் 'european pride' அதிகமாகவே இருந்ததாகவே தோன்றுகிறது
//என்னை கேட்டால் ஒரு புத்தகத்தை மதிக்க சரியான வழி, அதை படித்து கிழிப்பது தான். சரஸ்வதி பூஜை செய்வது அல்ல.
//
நல்ல கருத்து
//do you know of any social reformers who tried to destroy the caste system, before the arrival of the europeans? i can't find someone in the league of marx or even william wilberforce. social science as it is known now, seems non existent in ancient india.//
our indian history was not documented properly. most of the history that we know was derived from temple inscription and others. So if some social reformers happened to be live early, those people name might not have documented or removed from history by others.
I feel that Buddha is also a good social reformer. Some people says that kalapirar's and jain/buddists are social reformers.
இன்னும் அதிகமான பதிவுகளை எதிர்பார்க்கிறேன்... நன்றி..
வாங்க சத்தீஸ்.நிச்சயம் விரைவில் பதிவிடுகிறேன்
நல்ல பதிவு. பலரைப் போல, மூத்த பதிவர் இராம.கி கூட திரிக்கப்பட்ட மெக்காலேவின் பேச்சை அப்படியே எடுத்துக்காட்டி இருந்தார். மேல் விவரம் தேடியபோதுதான் எனக்கு உண்மை புரிந்தது. உங்கள் விரிவான இடுகை சுட்டிக்காட்ட உதவும்.
அது மெக்காலே பேசியது அல்ல
ஆதாரம் : இந்த வலைப்பதிவில் உள்ளது
இது குறித்து இந்த வாரம் நீங்க தமிழில் ஒரு இடுகை எழுதுவது சாலச்சிறந்தது
பலருக்கும் உண்மை போய் சேரும்
Post a Comment