Wednesday, October 07, 2009

அமைதியாக நடக்கும் ஒரு சமுதாய புரட்சி


எதிர் மறையான செய்திகளை பார்த்து பார்த்து சமச்சீரான வளர்ச்சியே நடக்க வாய்ப்பில்லை என்று அலுத்து போனவர்களுக்கு நம்பிக்கையூட்டும் பதிவுதான் இது.

தற்போது உண்மையான வளர்ச்சி என்பது நகர் புறங்களை நோக்கி கடத்த பட்டு விட்டது. உலகமயமாதல் விளைவாக லண்டனுக்கும் சென்னைக்கும் உள்ள இடைவெளியை விட சென்னைக்கும் அதன் அருகில் 100 கி.மீ தொலைவில் இருக்கும் கிராமத்திற்கும் இடைபட்ட இடைவேளி தான் அதிகம் ஆகி உள்ளது. அமெரிக்காவில் உள்ள மக்களின் வாழ்க்கை தரமும், நன்கு படிக்க வாய்ப்பு வசதி பெற்று, மூலதனம் அதிகம் உள்ள குடும்பத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை தரமும் ஒரளவு ஒப்பீடு செய்ய கூடியதாக இருக்கிறது. ஆனால் அதே வாய்ப்பு வசதி பெற்ற நகரத்தில் இருக்கும் மக்களின் வாழ்க்கை தரமும் , கிராமத்தில் விவசாயத்தை மட்டுமே நம்பியுள்ளவர்களின் வாழ்க்கை தரமும் இரு வேறு துருவங்களை நோக்கி நகர தொடங்கி உள்ளன. நகர் புறத்தில் வேலை வாய்ப்பு மிக அதிகமாக உள்ளது. அதிக சம்பளம் கிடைக்காவிட்டாலும் வருடத்தில் அதிக நாட்கள் வேலை கிடைக்கும் வசதியும் அங்கு உள்ளது. ஆனால் அதே சமயம் ஆட்கள் தட்டுபாடும் பெரு நகரங்களில் அதிகம் உள்ளது. இன்றைய விவசாயத்தின் போக்கும் கவலைகுறியதாக இருக்கிறது. இடு பொருட்களின் விலை ஏறி கொண்டே போகிறது. விவசாயிகளுக்கும் உண்மையிலேயே விஞ்ஞான ரீதியான அறிவுரை கிடைப்பது அரிதாகி, தேவையான தொழில் நுட்பங்கள் மற்றும் அறிவுரை கிடைக்காமல் தேவையான இடுபொருட்களை தேவையான நேரத்தில் இடாமல், தேவையற்ற இடுபொருட்களை இட்டு பணத்தை விரையமாக்கி கடன் சுமையில் வாழ்க்கையை தள்ள வேண்டிய பரிதாப நிலையில் உள்ளனர்.

இந்த நிலையை மாற்ற யார் தான் முன் வர போகிறார்கள் என்று அனைவரும் நினைக்க தோன்றும். இந்த மாற்றத்தை கொண்டு வர ஆங்காங்கு ஒரு சில அரசு சாரா நிறுவனங்கள் முயன்று வருகின்றன. அந்த முயற்சியில் வெற்றிகரமாக குறிப்பிட்டு சொல்ல கூடிய அளவு செய்து வரும் நிறுவனங்களில் ஒன்று தான் தேசிய வேளாண் நிறுவனம். வெளி உலகுக்கு தெரியாமல் கிராம புறங்களில் ஒரு மறுமலர்ச்சியே செய்து வருகிறது இந்த நிறுவனம்.

பசுமை புரட்சியை ஏற்படுத்தி உணவு உற்பத்தியில் தன்னிறைவை ஏற்படுத்திய சி.சுப்ரமணியம் அவர்களால் ஆரம்பிக்கபட்ட நிறுவன்ம் தான் தேசிய வேளாண் நிறுவனம். 60களில் தொடங்கிய பசுமை புரட்சியால் ஏற்பட்டு வந்த முன்னேற்றம் 90களில் முடிவடைய தொடங்கியதையும், பசுமை புரட்சியின் நன்மை பெரும்பாலும் சிறு மற்றும் குறு விவசாயிகளை அடைய முடியவில்லை என்பதையும் கண்டார். மேலும் தற்போது மண்வளம் பெருக்கத்திற்கான முக்கியத்துவம் மிகவும் குறைந்து வருவதையும் கண்டார். விவசாயிகளுக்கும் சந்தைக்கும் நேரடி தொடர்பு இல்லாததால், பெரும்பான்மையான லாபம் விவசாயிகளை சென்றடையாமல் இருப்பதையும் கண்ட அவர் இந்த பிரச்சனைக்கு தீர்வு காண ஆரம்பித்த தொண்டு நிறுவனம் தான் தேசிய வேளாண் நிறுவனம்.

இந்த நிறுவனம் விவசாய வளர்ச்சிக்கு மற்றும் கிராம புற வளர்ச்சிக்கு எடுத்து வரும் முயற்சிகள் பற்றி பார்ப்போம்.

விவசாய வளர்ச்சி
1.நவீன விஞ்ஞான ரீதியான யுக்திகளை கடை பிடித்து விவசாய உற்பத்தி திறனை பெருக்கும் முறைகளை விவசாயிகளின் நிலங்களிளே நேரடியாக செயல் படுத்தி காட்டி, நவீன விவசாயத்திற்கும் இதுவரை அவர்கள் செய்யும் விவசாயத்திற்கும் இடையே உள்ள வேறூபாட்டை எடுத்து காட்டி அறிவியல் ரீதியான விவசாயத்தில் கிடைக்கும் லாபத்தை உணர்த்துகிறார்கள். காஞ்சீபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் சுமார் 1000க்கும் மேற்பட்ட பண்ணைகளில் இந்த முறையை கையாண்டு உள்ளனர்.




2.நவீன தொழில் நுட்பங்களை செயல்படுத்தி விவசாயம் செய்த விவசாயிகளின் லாபமும் நன்கு உயர்ந்துள்ளது.ஒரு சில பயிர்வகைகளில் கிடைத்த உற்பத்தி பெருக்கம் கீழே தர பட்டுள்ளது.
மக்காசோளம் - 150%
தர்பூசனி - 116%
நிலகடலை - 113%
நெல் - 55%
கரும்பு - 40%


3.மதுராந்தகம் அருகில் உள்ள சூனாம்பேடு என்ற கிரமத்தில் ஊரக மேம்பாட்டு மையம் ஒன்றை ஆரம்பித்துள்ளனர். அங்கு விவசாயிகளுக்கு தேவையான பயிற்ச்சிகளை கொடுக்க தரமான ஒலி-ஒளி சாதனங்களுடன் தரமான வகுப்பரை கட்டி உள்ளனர். அது மட்டுமின்றி விவசாயிகள் தங்குவதற்கு வசதியும் உள்ளது. இங்கு விவசாயிகள் மட்டுமின்றி வேளாண் விரிவாக்க துறையினரும் பயிற்ச்சி எடுக்கின்றனர்


4.அங்கு ஒரு மாதிரி பண்ணையும் அமைக்க பட்டுள்ளது. புது வகை பயிர்களை அந்த பகுதியில் பயிரிட தேவையான தொழில் நுட்பங்கள் அங்கு இறுதி செய்ய படுகிறது.அது மட்டுமின்றி மதிரி பண்ணையாகவும் அது செயல் படுகிறது.



அந்த நிறுவனம் ஆற்றும் பிற பணிகளை அடுத்த பதிவில் தொடர்கிறேன்.

--

5 comments:

SPIDEY said...

அந்த நிறுவனம் ஆற்றும் பிற பணிகளை அடுத்த பதிவில் தொடர்கிறேன்//

eagerly waiting. nice blog and a good work

Kumky said...

மிக மிக பயனுள்ள பதிவு..
நன்றி...நண்பரே.
தொடர்ந்து வாசிக்க ஆவலாய் உள்ளோம்.

சதுக்க பூதம் said...

நன்றி SPIDEY மற்றும் கும்க்கி .விரைவில் இது பற்றி அடுத்த பதிவை தொடர்ந்து எழுதுகிறேன்

Maximum India said...

பதிவு மிகச் சிறப்பாக உள்ளது. இது போன்ற தொண்டு நிறுவனங்கள் நாடெங்கும் பெருகி விவசாயமும் விவசாயிகளும் சிறப்புற உதவ வேண்டும்.

நன்றி மற்றும் வாழ்த்துக்கள்!

சதுக்க பூதம் said...

நன்றி Maximum India.தற்போது ஒரு சில தொண்டு நிறுவனங்கள் இது போன்ற பணிகளை நன்றாக செய்கின்றன