Tuesday, April 14, 2009
பாதை மாறும் முதலாளித்துவமும், சந்தை பொருளாதாரமும்
1970 க்கு பிறகு உலகம் முழுதும் மிக வேகமாக பரவ தொடங்கிய தத்துவம் முழுமையான சந்தை பொருளாதாரம்(Free Market) மற்றும் முதலாளித்துவம். அப்போது மிக வேகமாக ஏறிய எண்ணெய் விலை உயர்வால் வளரும் நாடுகளின் அன்னிய கையிருப்பின் நிலை மோசமாக போனது. அன்னிய கையிருப்பின் தேவையை நிவர்த்தி செய்ய வளரும் நாடுகள் மேலை நாடுகள் மற்றும் அது சார்ந்த நிதி அமைப்புகளை நோக்கி கையேந்தி நிற்க தொடங்கியது.அதற்கு வளரும் நாடுகள் மீது விதிக்க பட்ட கட்டுபாடு - முழுமையான சந்தை பொருளாதாரத்தை அமல் படுத்த பட வேண்டும், அரசின் கட்டுபாட்டை முழுமையாக விளக்க வேண்டும் மற்றும் பன்னாட்டு தனியார் நிறுவங்களுக்கு தடங்கள் இல்லாமல் முதலீடு செய்ய அனுமதிக்க வேண்டும்.சோவியத் யூனியன் வீழ்ச்சிக்கு பிறகு இந்த சந்தை பொருளாதாரம் தான் பெரும் பாலான உலக நாடுகளின் ஒரே வாய்ப்பாக மாற தொடங்கியது. சில காலம் இந்த சந்தை பொருளாதாரமும் ஓரளவு அனைவருக்கும் நன்மை பயப்பதாகவே அறிய பட்டது.
ஆனால் சந்தை பொருளாதாரத்தின் அடிப்படை மாற தொடங்கிய பின் தான் பல பிரச்சனைகள் வெடிக்க ஆரம்பித்தது. பொதுவாக சந்தை பொருளாதாரத்தில் தேவை அதிகமாக இருக்கும் போது அதை உற்பத்தி செய்ய பல நிறுவனங்கள் போட்டி போட்டு கொண்டு வரும்.பல நிறுவனங்கள் உற்பத்தி செய்ய போட்டி இருப்பதால், நல்ல தரமான பொருட்கள் குறைந்த விலையில் கிடைக்கும். நிறைய நிறுவனக்கள் தொடங்க படுவதால் வேலை வாய்ப்பும் அதிகரிக்கும். அதிக வேலை வாய்ப்பு பெருகுவதால் மக்களின் வாங்கு திறன் கூடி ஒட்டு மொத்த பொருளாதாரத்தையே வளர்க்கும். ஆனால் உண்மையில் நடப்பது அதுவல்ல.வளரும் நாடுகளுக்கு வரும் முதலிடு அதிகம் உள்ள பெரிய பன்னாட்டு நிறுவனங்கள் விளம்பர யுக்தி மற்றும் பிற வழிகளில் வியாபாரத்தை பெருக்கி உள் நாட்டில் உள்ள சிறு மற்றும் நடுத்தர நிறுவனக்களை ஒட்டு மொத்தமாக அழிக்கிறது. பொதுவாக இவ்வகை சிறு நிறுவனங்கள் அதிக மக்களை வேலைக்கு வைத்திருப்பர். பன்னாட்டு நிறுவனங்கள் இயந்திரமயமான தொழிற் சாலை வைத்திருப்பதால் அவற்றின் வேலைக்கான ஆட்களின் தேவையும் குறைவு. இந்தியாவில் மட்டும் நடக்கும் நிகழ்வு அல்ல இது. வளர்ந்த நாடுகளிலும் இது தான் நடக்கிறது. ஆனால் அங்கு மக்கள் தொகை வளர்ச்சி மிகவும் குறைவாக இருப்பதால் அதன் விளைவு அதிகம் தெரிவதில்லை.
கடந்த சில காலமாக முதலாளித்துவம் தன் முழு வேகத்தை அடைய தொடங்கி உள்ளது. மிக பெரிய பன்னாட்டு நிறுவனங்கள் எல்லாம் ஒன்றுடன் ஒன்று இணைந்து மிக பெரிய ஜெயன்ட்களாக மாற தொடங்கி உள்ளது. அவ்வாறு பெரிதாக வளர்ந்த நிறுவனங்களும் அத்துறையில் உள்ள பிற நிறுவனக்களை வாங்கி தன் துறையில் போட்டி இல்லாத மோனோபொலி என்ற நிலைக்கு முன்னேறுகிறது. முன்பு அரசாங்கம் துறைகளை தன் கட்டு பாட்டில் வைத்திருந்த போது இதே மோனோபொலி தான் இருந்தது. அரசாங்கமாவது ஒரு சில நேரத்தில் மக்களுக்கு பதில் சொல்ல வேண்டும். ஆனால் இந்த தனியார் நிறுவனக்களின் நோக்கம் லாபம் மட்டும் தான். அவர்களுக்கு சமூக அக்கறை எல்லாம் இல்லை. இந்த நிறுவனங்கள் சந்தையில் போட்டி என்பதையும் வெகுவாக குறைத்து சந்தை பொருளாதாரத்தின் நோக்கத்தையே கேள்வி குறியாக்கி உள்ளது.
சந்தை பொருளாதாரத்தின் அடிப்படை, வாழ்க்கை போராட்டம் மற்றும் தகுதி உள்ளவை பிழைத்தல் போன்ற டார்வின் கொள்கை. அதாவது சந்தையின் போக்கை உணர்ந்து அதற்கேற்ற வியாபார நுணுக்கம் பின் பற்றும் திறமையான நிறுவனங்கள் சந்தையில் நிலைத்து நிற்கும். வியாபார நிறுவனக்களின் அசுர வளர்ச்சியால், தனிபட்ட நிறுவனங்கள் பொருளாதாரத்தில் ஏற்படுத்தும் தாக்கம் அதிகமாகிறது. சந்தையின் வளர்ச்சி நன்றாக இருக்கும் போது அந்நிறுவன அதிகாரிகள் பெரும் பணத்தை வருமானமாக குவிக்கின்றனர். ஆனால் சரியான முடிவை சரியான நேரத்தில் எடுக்காமல் அந்நிறுவனக்கள் வீழ்ச்சியை சந்திக்கும் போது நிறுவனங்களின் அழிவை ஏற்று கொள்ளாமல் மக்களின் வரி பணத்தை கொண்டு அந்நிறுவனங்களை காப்பாற்ற அரசை நிர்பந்திக்கின்றது. அரசும் அந்நிறுவங்கள் அழிந்தால் நாட்டின் பொருளாதாரத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் மக்களின் வரி பணத்தை கொண்டு காப்பற்ற வேண்டிய கட்டயத்தில் உள்ளது. அது மட்டும் அல்ல. இந்த பெரிய நிறுவனங்களின் தாக்கம் மிக பெரியது என்பதால் அரசை மிரட்டி பணம் பறிக்கும் நிலையில் உள்ளன. இதற்கு அமெரிக்க மோட்டார் நிறுவங்களும், நிதி நிறுவனக்களும் சிறந்த உதாரணங்கள் ஆகும். சுருங்க கூற வேண்டும் என்றால் லாபம் முதலாளிகளுக்கு, நட்டம் பொதுமக்களுக்கு என்பது விதியானது. அதாவது
Privatizing the Profit
Socializing the Loss.
சந்தை பொருளாதாரத்தின் அடுத்த அடிப்படை போட்டி அதிகம் என்பதால் புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கும் என்பது. ஆனால் உண்மையில் அப்படி நடக்க வில்லை. உதாரணமாக அதிக கண்டுபிடிப்புகள் தேவை படும் மருந்து தொழிலை பார்த்தால் புரியும். மற்ற துறை போல் இங்கும் ஒரு சில நிறுவனங்களின் ஆதிக்கம் தான் அதிகம் உள்ளது. மருந்து கம்பெனிகள் கண்டுபிடிப்புக்கு அதிகம் செலவு செய்யாமல் சந்தையில் உள்ள மருந்துகளையே சிறு மாறுதல் செய்து தனிபட்ட விற்பனை உரிமம் பெற்று விளம்பரம் மற்றும் பண பலத்தின் மூலம் தன் வளர்ச்சியை பெருக்குகின்றனர்.மேலும் அவர்களின் பெரும்பான்மையான கண்டு பிடிப்புகள் அமெரிக்க அரசின் வரி பணத்தில் நடக்கும் ஆராய்ச்சிகள் மூலம் வருபவையே. மருந்து கம்பெனிகளின் ஆராய்ச்சியை பற்றி அறிய அனைவரும் கட்டாயம் படிக்க வேண்டிய புத்தகம் The Truth About the Drug Companies: How They Deceive Us and What to Do About It
அதை விட மிகவும் கவலை பட வேண்டிய செய்தி மேலை நாடுகளின் நிதி நிறுவனக்களின் வளர்ச்சி. இந்த நிதி நிறுவனங்கள் எந்த கண்டு பிடிப்பும் இல்லாமல் வெறுமனே கணிப்புகளை(speculation) மட்டுமே முதலீடாக கொண்டு , எந்த வித பொருளாதார செயல் பாடும் இல்லாமல் ஒருவரிடமிருந்து ஒருவருக்கு பணத்தையும்,ரிஸ்க்கையும் வரிசையாக கைமாற்றி ஒட்டு மொத்த பொருளாதாரத்தின் மதிப்பை செயற்கையாக உயர்த்தி மாபெரும் அழிவிற்கு இட்டு சென்றனர். கடந்த வருடத்தில் உச்ச கட்டத்தில் அமெரிக்காவின் கார்ப்போரேட்டுகலின் லாபத்தில் இது போன்ற நிதி பரிமாற்ற மதிப்பு மட்டும் 41% அடைந்தது. எந்த அளவிற்கு தங்களுக்குள் பணத்தை பறிமாறிகொள்கிறார்களோ அந்த அளவு நிதி நிறுவனங்களின் மதிப்பும் வளர்ச்சியும் இருக்கும். அந்த அளவு அந்நிறுவனக்களில் பணியாற்றும் இடை தரகர்களின் லாபமும் இருக்கும். செயற்கையாக இது போல் மிக பெரிய வளர்ச்சி அடைந்த நிறுவங்கள் உண்மை நிலை தெரிந்த உடன் நட்டமடையும் போது, இதன் அளவு மற்றும் அது பொருளாதாரத்தில் அதன் பாதிப்பு கருதி அதை அரசு காப்பாற்ற வேண்டிய கட்டயத்தில் உள்ளது.
மொத்தத்தில் சந்தை பொருளாதாரம் என்பது அதன் அடிப்படையை இழந்து, லாபம் ஒன்றையே குறிக்கோளாக கொண்ட சிறிய அளவிலான முதலாளிகளின் கையில் சிக்கி திசை மாறி செல்ல தொடங்கி உள்ளது. அரசாங்கத்தால் எந்த அளவு இப்போக்கை கட்டு படுத்த முடியும் என்பது ஒரு கேள்வி குறியே.
--
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment