Tuesday, January 10, 2012

ரான் பால் - மாற்றமா? ஏமாற்றமா?

அமெரிக்காவில் பொதுஜன பத்திரிக்கைகளால் முற்றிலும் புறக்கணிக்க பட்டும் குடியரசு கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர்க்கான போட்டியில் முன்னனியில் நிற்கும் தலைவர் தலைவர் ரான் பால்.அமெரிக்க அரசியலில் லிபரடேரியன் என அழைக்கபடும் தனி மனித சுதந்திரம் தத்துவத்தை அடிப்படையாக கொண்டு ஜனாதிபதி வேட்பாளர் வரை நெருங்கியிருக்கும் தலைவர் ரான் பால்.இவருக்கு ஆதரவு வலது சாரி தேநீர் விருந்து (Tea party Movement) இயக்கத்தினரிடமும் இருக்கிறது. இடது சாரி வால் ஸ்ட்ரீட் ஆக்கிரமிப்பு (Occupy Wallstreet) இயக்கத்தினரிடமும் இருக்கிறது.இவர் ஒரு ஆஸ்திரிய பொருளாதார வல்லுனர் ஆவார். போலி முதலாளித்துவத்திற்கும் லிபரடேரியன் இயக்கத்திற்குமான வித்தியாசத்தை அமெரிக்க மக்களுக்கு மாநிலம் மாநிலமாக சென்று பிரச்சாரம் செய்து வருகிறார்.(நம்மூரில் கூட இந்த வித்தியாசம் புரியாமல் பல பேர் லிபரடேரியன் இயக்க ஆதரவாளர்களாக தங்களை நினைத்து குழம்பி உள்ளனர். இங்கு வந்து அவர்களுக்கும் விளக்கம் கூறினால் நன்றாக இருக்கும்).

முதலில் லிபரடேரியன் தத்துவம் என்றால் என்ன என்று பார்ப்போம்.லிபரடேரியன் இயக்கம் என்பது தனி மனித சுதந்திரம் தான் சமூகத்தின் அடிப்படை தேவை என்ற தத்துவத்தை அடிப்படையாக கொண்டது. மேலை நாடுகளில் தற்போது பிரபலமாகி வரும் இந்த தத்துவம் இந்தியாவிலும் கூடிய விரைவில் பரவ வாய்ப்புள்ளதால், இது பற்றி அறிந்து கொள்வது அவசியம் ஆகும்.லிபரடேரியன் தத்துவத்தில் பல பிரிவுகள் உள்ளது. உண்மையான தனி மனித சுதந்தரம் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்றால் அதற்கேற்ற பொருளாதார மற்றும் சமூக சமநிலை நாட்டில் நிலவ வேண்டும். அதை கொண்டுவருவதற்கு அரங்காத்தின் தலையீடும் முதலீடும் தேவை என்பதே சமூக லிபரடேரியன்களின்(Social Liberalism) கொள்கை. இது இந்தியா போன்ற சமூக மற்றும் பொருளாதார ஏற்ற தாழ்வுகள் நிறைந்த நாடுகளுக்கு ஏற்றதாகும்.

லிபரடேரியன்களின் அடுத்த பிரிவு நியோலிபரடேரியனிஸம்(Neoliberalism) ஆகும்.இது பொருளாதார மற்றும் சமூக கொள்கைகள் மற்றும் செயல்பாடுகளில் அரசின் தலையீட்டை முழுமையாக எதிர்க்கிறது.மிக சிறிய அளவான அரசாங்கம், முற்றிலும் தனியார் மயமாக்கபட்ட தொழிற்துறை,குறைவான வரி,தாரளமயமாக்கபட்ட பொருளாதாரம்,அரசின் கட்டுபாடுகள் தளர்த்த பட்ட வணிகம் மற்றும் தொழில் துறை,ஒழிக்க பட்ட அரசு மான்யம் மற்றும் குறைக்க பட்ட நலிந்தோருக்கான நிதி உதவி போன்றவையே வலது லிபரடேரியன்களின் கொள்கைகள்.ரான் பால் இந்த வகை நியோலிபரல் மற்றும் அடிப்படையில் சிறிது (குடியரசு கட்சியினருக்கே உரித்தான) பழமைவாத கொள்கை உள்ளவர் என்று கூறலாம்.

சந்தையில் அரசின் கட்டுபாடு இல்லாததால் தான் தற்போதய அமெரிக்க பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது என்பது பெரும்பாலானோரால் ஏற்கபட்ட கருத்து ஆகும். ஆனால் ரான் பாலின் கருத்து படி அரசாங்கத்தின் முறையற்ற உதவியோடு கார்பொரேட்டுகள் தடையற்ற சந்தயை(Free Market capitalism) அழித்து போலி முதலாளித்துவத்தை(Crony Capitalism) உருவாக்கியது தான் பொருளதார நெருக்கடிக்கு காரணம் என்று கருதுகிறார்.

சோவியத் மறைவிற்கு பின் தற்போது அதிகரித்து வரும் விவாதம் தடைகள் மற்றும் கட்டுபாடற்று முற்றிலும் தனியார் மயமாக்க பட்ட பொருளாதாரமா அல்லது மக்கள் நலனை பேணும் அரசாங்கமும் மக்கள் நலனுக்காக கட்டுபடுத்த பட்ட சந்தையை கொண்ட அரசாங்கமா என்பதாக உள்ளது. இதனிடையே தடையற்ற பொருளாதரம் என்ற பெயரில் மறைமுக செல்வாக்கு கொண்ட போலி முதலாளித்துவம் உலகெங்கிலும் பரவி வருகிறது.இந்தியாவிலும் இது போன்ற சிந்தனைகள் மற்றும் விவாதம் விரைவில் பரவலாம். எனவே லிபரடேரியன் சிந்தனையாளர்களின் கருத்து மற்றும் செயல்பாடுகளை அறிந்து கொள்வது மிகவும் அவசியமாகிறது.

இந்த கட்டுரை லிபரடேரியன் சிந்தனையாளர் ரான் பால் கருத்துகளை ஆதரித்தோ எதிர்த்தோ எழுத பட்டது அல்ல. ஆனால் அதன் அடிப்படையை புரிந்து கொண்டு அது இந்தியாவிற்கு வந்தால் எந்தெந்த இயக்கங்களால் எவ்வாறு உபயோகிக்க பட்டு எந்த வடிவில் இந்த சிந்தனை வெளிப்படும் என்பதை வாசகர்களே புரிந்து கொள்ள உதவியாக இருக்கும் என நம்புகிறேன்.

இனி அவருடைய கருத்துகளையும் அது அமெரிக்க அரசியலில் ஏற்படுத்த கூடிய எதிர் விளைவுகளையும் ,அவர் சார்ந்த லிபரடேரியன் கொள்கை இந்தியாவில் நடைமுறை படுத்தபட்டால் என்ன விளைவு ஏற்படுத்தபடும் என்றும் பார்ப்போம்.

1.போர் எதிர்ப்பு
அவருடைய மிக முக்கியமான கொள்கை போர் எதிர்ப்பு. ஈராக் போரை கடுமையாக எதிர்த்தவர் அவர். ஈரான் மீது போர் தொடுக்க கூடாது என்று ஆணித்தரமாக பேசுகிறார். தற்போதைய அமெரிக்க அரசியல்வாதிகளிளேயே கடுமையான் போர் எதிர்ப்பு கொள்கை கொண்டவர். அமெரிக்க தீவிரவாத தாக்குதலுக்கு அடிப்படை காரணம் அமெரிக்க வெளியுறவு கொள்கை தான் என்று வெளிபடையாக பேசியவர் அவர்.ராணுவத்துக்கான செலவை பெருமளவில் குறைக்க வேண்டும் என்று கோரி வருகிறார்.போர் ஆதரவு மற்றும் அமெரிக்காவின் உலகளாவிய செல்வாக்கை வளர்க்க விரும்பும் பழமைவாத ஜனநாயக கட்சியினரிடம் இவரது கொள்கையால் அதிருப்தியை சம்பாதித்து கொள்ள சாத்தியம் இருந்தாலும் தனது கொள்கையில் உறுதியாக இருக்கிறார் ரான் பால்.போர்கள் காரணமாக அரசின் கடன் அதிகரிக்கிறது என்பதும் போரின் பின் விளைவுகளால் அமெரிக்காவின் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் ஏற்படும் என்பதும் அவரின் போர் எதிர்ப்பு கொள்கைக்கு முக்கிய காரணம்.

2.அமெரிக்க வெளியுறவு கொள்கை
ரான் பால் அமெரிக்காவின் வெளி நாட்டு தலையீடுகளை அறவே ஒழிக்க வேண்டும் என்று கூறுகிறார். அதாவது அவர் அமெரிக்காவை மட்டுமே ஆள விரும்புவதாகவும் உலகத்தை ஆள விரும்ப வில்லை என்றும் கூறுகிறார்.லிபரடேரியன் தத்துவ படி எந்த ஒரு நாட்டின் பிரச்ச்னையையும் அவர்கள் தான் தீர்த்து கொள்ள வேண்டுமே அன்றி அயல்நாடுகளின் தலையீடு கூடது என்பதும் ஒரு காரணம்.அவருடைய கூற்றுபடி (கார்போரேட்டுகளின் நன்மைகளுக்காக கொடுக்க படும்) வெளி நாட்டு உதவி தொகைகள் நிறுத்தபட வேண்டும் என்கிறார்.இதன் விளைவாக உண்மையிலேயே ஏழை நாடுகளுக்கு வறுமை ஒழிப்புக்கு கொடுக்கபடும் நிதிகள் குறைய வாய்ப்புள்ளது. ஆனால் அமெரிக்க கார்ப்போரேட்டுகளின் நலன்களுக்காக தான் இந்த நிதிகள் பயன் படுத்தபடுகிறது என்று இடதுசாரி இயக்கங்கள் கூறுவதையும் கருத்தில் எடுத்து கொள்ள வேண்டும்.

3.இஸ்ரேல் உறவு
அவருடைய வெளி நாட்டு கொள்கையில் அமெரிக்க பத்திரிக்கையாளர்களால் கூர்ந்து கவனிக்க படுவது இஸ்ரேலுடனான உறவு குறித்த கொள்கை.இஸ்ரேலுக்கு நிதி மற்றும் ராணுவ உதவிகளை அளிப்பதை கடுமையாக எதிர்க்கிறார். இஸ்ரேல் பாலஸ்தீன பிரச்ச்னைக்கு அமெரிக்க தலையீட்டை எதிர்க்கும் அவர் அமெரிக்க மீது நடத்தபட்ட தீவிரவாத தாக்குதலுக்கு அமெரிக்காவின் பாலஸ்தீன விரோத போக்கும் அரபு நாடுகளில் அமெரிக்க தலையீடுமே காரணம் என்கிறார். பாலஸ்தீன மக்களின் குரலுக்கும் மதிப்பளிக்க வேண்டு என்கிறார். அமெரிக்காவில் ஊடக துறை மற்றும் நிதி துறையில் ஆதிக்கம் செலுத்தி வரும் யூத மக்களிடம் அவர் பெரும் எதிர்ப்பை பெற்று வருகிறார்.

4.போதை பொருள் மற்றும் துப்பாக்கி தடை
போதை பொருள் மற்றும் துப்பாக்கி தடை போன்றவற்றை மத்திய அரசாங்கம் சட்டம் போட்டு தடை செய்வதை எதிர்க்கிறார்.இது போன்ற தடைகள் பிரச்ச்னையை அதிகம் ஆக்குகின்றது என்றும் அவற்றை சட்ட ரீதியாக விற்பனை செய்ய அனுமதிப்பது மூலம் பிரச்ச்னைக்கு தீர்வு காணமுடியும் என்கிறார். போதை பொருள் விற்பனையை சட்ட படுத்துவதை ஆதரிக்கும் கல்லூரி மாணவர்களின் கூட்டம் அவருக்கு அதிகம் வருவதாக அவருடைய போட்டி வேட்பாளர்கள் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

5.பெடரல் ரிசர்வ்
பெடரல் ரிசர்வ் மீதான அவரது பார்வை அமெரிக்க அரசியலில் வேறு யாரிடமும் இல்லாதது. அடிப்படையில் ஆஸ்திரிய பொருளாதார வல்லுனரான அவர் மத்திய அரசாங்கம் எந்த அடிப்படையும் இல்லாமல் பணம் உற்பத்தி செய்வதை எதிர்க்கிறார். பழங்காலத்தில் இருந்தது போல் தங்கத்துக்கு மாற்றுரிமை உடைய பணத்தை அடிப்படையாக கொண்ட பொருளாதாரத்தை கொண்டு வர ஆதரவு தெரிவிக்கிறார். பெடரல் ரிசர்வ் கணக்கில்லாமல் பணத்தை உற்பத்தி செய்வதால் அரசாங்கம் பொது நலம் மற்றும் ராணுவ செலவை அளவுக்கு அதிகமாக கடன் வாங்கி செலவு செய்ய முடிகிறது. அதனால் டாலர் உற்பத்தி அதிகமாகி, பணவீக்கம் அதிகமாகி மக்கள் வாழ்க்கை தரம் குறைகிறது என்பது அவரது கருத்து.

அது மட்டுமன்றி ஒரு சில பெரிய பன்னாட்டு வங்கிகள் பணபலம் மற்றும் அதிகார பலம் மூலம் பெடரல் ரிசர்வ் மற்றும் அரசாங்கத்தின் மீது நேரடி மற்று மறைமுக செல்வாக்கு செலுத்தி அமெரிக்க மற்றும் உலக பொருளாதாரத்தை தங்கள் கையில் கொண்டுள்ளதை எதிர்க்கிறார்.பெடரல் ரிசர்வ் வங்கி ட்ரில்லியன் கணக்கிலான பணத்தை பல்வேறு பன்னாட்டு நிதி நிறுவனங்கள் மற்றும் தொழில் துறைக்கு வெளியில் யாருக்கும் தெரியாமல் கொடுக்கிறது. ஆனால் அதை தணிக்கை செய்ய அமெரிக்க சட்டத்தில் வழி வகை இல்லை. அதனால் பன்னாட்டு நிறுவனங்கள் மற்ற சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை அழித்து தனியுறிமை ஏகாப்திபத்தியத்தை ஏற்படுத்துகின்றன. எனவே அவரது முக்கிய கோரிக்கை பெடரல் ரிசர்வ் வங்கி கணக்குகளை தணிக்கை(audit) செய்ய வேண்டும் என்பதாகும்.

ஆனால் தற்போதைய நிலையில் உடனடியாக தங்க மற்றும் பணத்தை அறிமுகபடுத்த போவதாக அவர் கூற வில்லை.

ஆஸ்திரிய பொருளாதார தத்துவப்படி தடையற்ற பொருளாதாரத்தில் சிறிய அளவிலான வளர்ச்சிகளும் சிறிய அளவிளான வீழ்ச்சிகளும் அவ்வப்போது ஏற்படுவது வழக்கம். ஆனால் சிறிய வீழ்ச்சிகளை அரசும் பெடரல் ரிசர்வும் சேர்ந்து பண புழக்கத்தின் மூலம் தடை செய்வதால் , பொருளாதார வளர்ச்சிக்கு பதில் வீக்கங்கள் ஏற்பட்டு மிக பெரிய பொருளாதார வீழ்ச்சியை அமெரிக்கா சந்திக்கிறது என்பது அவரது கருத்து.

6.அதிகார பரவலாக்கம்
அவருடைய மற்றொரு கருத்து மத்திய அரசிடம் இருந்து அதிகாரகங்கள் குறைக்கபட்டு மாநில அரசிற்கு அதிக அதிகாரம் கொடுக்க பட வேண்டும் என்பதாகும். இந்தியா போன்ற வேற்றுமைகள் நிறைந்த நாடுகளில் அவர் கூறும் மாநில சுயாட்சி நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும். மத்திய அரசாங்கம் மொழி,குறிப்பிட்ட தத்துவம் , இனம், மதம் சார்ந்த கருத்துக்களை புகுத்துவதை தடுக்க முடியும்.மத்திய அரசிடமிருந்து மாநில அரசிற்கு அதிகாரம் பரவலாக்குவதை ஆதரிக்கும் அவர் மாநில அரசின் அதிகாரத்திலிருந்து தனிமனித சுதந்திரம் பாதுகாப்பது பற்றி முழுவதுமாக கூறவில்லை.

7.பொது நல அரசாங்கம்(Welfare state)
அவர் பொதுநல அரசாங்கத்தை கடுமையாக எதிர்க்கிறார். சொத்துரிமை மற்றும் பேச்சுரிமை மட்டுமே தனி மனித உரிமை என்பது அவர் கருத்து. கல்வி மற்றும் மருத்துவம் போன்றவை தனி மனித உரிமை இல்லை என்கிறார். அதாவது அரசு பொது பள்ளிகள், படிக்க அரசு நிதி உதவி போன்றவறை எதிர்க்கிறார். அமெரிக்காவில் அரசு பொது பள்ளிகள் இல்லை என்றால் நடுத்தர மற்றும் ஏழை மக்கள் தங்கள் பிள்ளைகளை பணம் கொடுத்து படிக்க வைப்பார்களா என்பது கேள்வி குறியே. இது போன்ற கொள்கைகள் தற்போது பணக்காரர்களாக இருப்பவர்களது பிள்ளையை மட்டும் படிக்க வைத்து படித்து முடித்த பின் அவர்களுக்கு எளிதில் வேலை வாய்ப்பு கிடைக்க வாய்ப்பளிக்களாம். நல்ல வேலையாக அவர் உடனடியாக அரசு பொது பள்ளிகளை மூட போவதாக கூறவில்லை. அவர் கூறுவது போல் பள்ளிகளை முழுமையாக தனியார் மயமாக்கினால் தனியார் பள்ளிகளின் கட்டணம் குறைந்து அனைவருக்கும் கட்டுபடியாகும் தனியார் கல்வி கிடைக்குமா என்பது கேள்விகுறியே..மேலும் சமூகம் மற்றும் பொருளாதார ரீதியில் பின் தங்கியவர்களுக்கு அளிக்கும் எந்த உரிமையையும் எதிர்க்கிறார். இந்தியாவில் பள்ளி மற்றும் வேலைவாய்ப்புகளில் இட ஒதிக்கீட்டிற்கு எதிர்ப்பதற்கு இணையானது இது. இந்தியாவில் இது போன்ற கொள்கைகள் நிலை நிறுத்தபட்டால் பொருளாதார மற்றும் சமூக ரீதியில் பின் தங்கிய மக்கள் இனி வரும் தலைமுறைகளில் முன்னேறவே வாய்ப்பு இல்லாமல் போகலாம்.

அரசு ஆதரவிலான முதியோர் காப்பீட்டு மற்றும் ஓய்வூதிய திட்டத்தை கடுமையாக எதிரிக்கிறார். தற்போதைய மருத்துவ காப்பீட்டு திட்டத்தையும் எதிர்க்கிறார். தற்போது அமெரிக்காவில் முழுமையான தனியார் மயமான மருத்துவ காப்பீடு தான் உள்ளது. மருத்துவ காப்பீடின் செலவு மக்களுக்கு கட்டுபடி ஆகாத அளவிற்கு இமாலய அளவில் உள்ளது.இந்த நிலையில் அரசின் உதவிகளையும் கட்டுபாடுகளையும் எடுத்துவிட்டால் மருத்துவ செலவு அனைவருக்கும் கட்டுபடியாகும் நிலையில் குறையும் என்ற கோட்பாட்டை ஏற்று கொள்வது கடினம்.

வசதி இல்லாதவர்கள் மருத்துவ உதவிக்கு டாக்டர்களின் இலவச உதவியையும் கிறித்துவ மதவாத மிசனரிகளின் கடைக்கண்ணையும் எதிர்பார்க்க வேண்டும் என்று கூறுவதையும் கூர்ந்து கவனிக்க வேண்டும். இது போன்ற கொள்கைகள் பழமைவாத குடியரசு கட்சியினர் விரும்பும் மதம் சார்ந்த அமைப்பினருக்கு அதிகாரத்தை பெற்று தருவதையே வரவேற்கும்.

அவரது கொள்கை படி ஒருவரது வரிபணத்தை பொருளாதார ரீதியாக பின் தங்கிய மற்றொரு ஏழையின் நலனுக்காக செலவு செய்வதை ஏற்று கொள்ள கூடியது அல்ல. ஏற்ற தாழ்வுகள் நிறைந்த இந்தியா போன்ற நாடுகளுக்கு இந்த கொள்கை பொருந்துமா என்பது சிந்திக்க வேண்டிய செய்தி.

ஓய்வூதியம் தர அரசு சார்பில் வரி வசூலிக்க படுகிறது. ரான் பால் அரசுக்கு வரி கொடுத்து பின் அரசை நம்பி இருக்காமல் தனி நபர்களே தங்கள் ஓய்வு கால தேவைக்கு முதலீடு செய்து கொள்ள வேண்டும் என்கிறார்.

அதே போல் அரசு மான்யங்கள் விவசாயம் உட்பட அனைத்து தொழில்களிலும் ஒழிக்க படவேண்டும் என்கிறார்.இந்தியாவில் விவசாயத்திற்கான உர மான்யம் ஒழித்தால் விவசாயம் முழுமையாக அழிந்து விடும் அல்லது விவசாய விளை பொருட்களின் விலை கடுமையாக அதிகரித்து விடும். அதே போல் மான்ய விலையில் அரசு பொது விநியோக துறையில் மலிவு விலையில் உணவு பொருட்களை விநியோகிப்பதை நிறுத்திவிட்டால் பசியும் பட்டினி சாவும் அதிகமாக வாய்ப்புள்ளது.

8.மெல்லிய அரசு(Lean Government)

ரான் பால் அதிகாரம் குறைந்த முழுதும் தனியார் மயமாக்க பட்ட அரசாங்கத்தை ஆதரிக்கிறார். அரசாங்கம் எந்த துறையிலும் ஈடுபடகூடாது என்கிறார். இது தனி மனித சுதந்திரம் மற்றும் கட்டுபாடற்ற சந்தைக்கு வழி வகுக்கும் என்பது அவர் கருத்து. இந்தியா போன்ற ஏழை நாடுகளில் இது எந்த அளவிற்கு நன்மை தரும் என்பது கேள்விகுறியே. உதாரணமாக கிராமங்களில் வங்கி நடத்துவதால் லாபம் கிடைக்காததால் ஏழை மக்களுக்கு நியாயமான கடன் கிடைக்க இந்தியாவில் வங்கிகள் தேசிய மயமாக்க பட்டன. கிராமங்களுக்கு பேருந்து வசதி கிடைத்ததும் போக்குவரத்து துறையில் அரசு நுழைந்தது தான். ஆனால் இது போன்ற கொள்கைகளால் ஒர் சில நன்மையும் உள்ளது. இருபது ஆண்டுகளுக்கு முன்பு வரை தொலைகாட்சி அரசு வசம் இருந்த போது அது இந்தி திணிப்புக்கு ஒரு கருவியாகவே பயன் பட்டு மக்கள் விரும்பும் தாய் மொழி நிகழ்ச்சிகள் முற்றிலும் புறக்கணிக்க பட்டன. தொலைகாட்சியில் தனியார் பங்களிப்பு கிடைத்த் பின்பு தான் நாம் தினம் தோறும் முழுமையாக தமிழ் நிகழ்ச்சிகள் பார்க்க முடிகிறது.

9.அரசு கட்டுபாடுகள் தளர்வு
அரசு கட்டுபாடுகளை முழுமையாக விலக்க வேண்டும் என்பது அவரது கொள்கை.உதாரணமாக குழந்தைகளின் விளையாட்டு பொருட்களில் காரீயம் (lead) கலப்பதை தடை செய்யவும் (காரீயம் குழந்தைகளுக்கு அபயகரமான பின் விளைவுகளை ஏற்படுத்தும் என்பதால்) காரீயம் கலப்பதை அரசு சோதிக்க அனுமதி அளிக்க மசோதா வந்த போது அதை எதிர்த்தவர் ரான் பால்.பொருளாதார துறைகளில் அரசு கட்டுபாடுகளை குறைத்ததன் மூலம் அமெரிக்கா பெரும் பொருளாதார நெருக்கடியில் வீழ்ந்தது நினைவு கூற தக்கத

எரிசக்தி துறை,கல்வி துறை,வீட்டுவசதி & நகர்புற வளர்ச்சி துறை மற்றும் வணிக துறைகளை முழுமயாக ஒழிக்க வேண்டும் என்பது அவர் கொள்கை.மேற் கூறிய துறைகள் அமெரிக்காவில் முக்கிய பங்கு அளிக்கிறது. அவை ஒழிக்கபட்டால் பெருமளவு பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.

10.உலகமயமாதல்
உற்பத்தி பொருட்கள் மற்றும் சேவை துறை வேலைகள் (Goods and Services) நாடுகளை கடந்து செல்ல கட்டுபாடுகளை எதிர்க்கும் ரான் பால், வேலையாட்கள் (Labour) மட்டும் வெளிநாடுகளில் இருந்து அமெரிக்காவிற்கு வெருவதை எதிர்க்கிறார்.

11.மதம்,அறிவியல் மற்றும் நிறவெறி எதிர்ப்பு
ரான் பால் அரசாங்கத்தில் மதம் கலப்பதை முழுமையாக ஆதரிக்கிறார்.மேலும் பள்ளிகளில் கிறித்துவ கொள்கைகளை கட்டாயமாக திணிப்பதையும் சிறுபான்மையினர் தங்கள் மத சுதந்திரத்தை இழந்து பெரும்பான்யோரின் மத திணிப்பிற்கு கட்டாய படுத்துவதையும்ஆதரிக்கிறார். இதுபோன்ற கொள்கைகள் இந்தியாவில் வந்தால் இந்துத்துவா வாதிகளின் கனவு நிறைவேறும் நாள் நெருங்கி விடும்.

ஆப்ரிக்க அமெரிக்க்கர்கள் மற்றும் பெண்களை பாகுபடுத்தி பார்ப்பதை தடை செய்யும் கென்னடியின் கனவு சட்டத்தை எதிர்ப்பவர் ரான் பால். நிறவெறி கொள்கையை கடை பிடிப்பதை தடுப்பது தனி மனித உரிமையை பறிக்கும் செயல் என்பது அவர் கருத்து. அதாவது நிறவெறி கொள்கையை கடை பிடிப்பது தனி மனித உரிமை எனவும் அதை தடை செய்வதை செயல் படுத்த கண்காணிக்க அரசாங்கம் நுழைவதும் தனி மனித உரிமையை பறிக்கும் செயல் என்கிறார். இந்தியாவில் இந்த கொள்கை நடைமுறை படுத்த பட்டால் வர்ணாஸ்ரம கொள்கைகள் நாடெங்கும் தழைத்தோங்க வழிவகுக்கும்.

சில வருடங்களுக்கு முன்பு வரை அவரது பெயரில் அவரது ஆதரவாளர்களால் வெளியிட படும் பத்திரிக்கைகளில் நிறவெறி ஆதரவு கருத்துகள் பெருமளவில் வெளி வந்தன.பத்திற்கும் மேற்பட்ட நிறவெறி ஆதரவு அமைப்புகள் அவருக்கு ஆதரவளித்த போது அவர் அதனை ஏற்று கொள்ள மறுக்கவில்லை..தற்போது அவரது ஆதரவு அமைப்புகள் அவரது போட்டி வேட்பாளர் சீன மற்றும் இந்திய குழந்தைகளை தத்தி எடுத்ததை அமெரிக்க எதிர்ப்பு செயலாக சித்தரித்து விளம்பரம் செய்து வருகிறது.

புவி வெப்பமயாமாதல் ஆராய்ச்சி முடிவுகளை கடுமையாக எதிர்ப்பவர் ரான் பால்.அதற்கு அவரது மத நம்பிக்கைகூட காரணமாக இருக்களாம்.அல்லது சுற்றுசூழலை பாதுகாக்க மற்றும் கரியமில வாய்வு கசிவை தடுக்க அரசு எடுக்கும் முயற்சிகளால் பெட்ரோல் சார்ந்த தொழில்கள் வளர்ச்சி பாதிக்கபடும் என்ற காரணமாக கூட இருக்களாம்.டார்வினின் பரிணாம வளர்ச்சி கொள்கையில் நம்பிக்கை இல்லாதவர் ரான் பால்.சில ஆண்டுகளுக்கு முன் வாட்டிகன் போப்பால் ஏற்று கொள்ள பட்ட கலிலியோவின் பூமி சூரியனை சுற்றி வருகிறது என்ற கொள்கையை ஏற்று கொண்டவரா என்று தெரியவில்லை.அவர் ஆட்சிக்கு வந்தால் அறிவியல் பூர்வமான கருத்துகளை பள்ளி பாடமாக வைப்பதை விட்டு தனி மனித சுதந்திரம் என்ற பெயரில் மதம் சார்ந்த கொள்கைகளை அறிவியல் பாடமாக கொண்டு வர வாய்ப்புகள் நிறையவே உள்ளது.

பொதுவாக அமெரிக்காவில் எந்த கட்சியை சேர்ந்தவர்கள் அதிபர்களாக வந்தாலும் அரசு நிர்வாகத்தில் பெரிய அளவில் மாற்றம் இருக்காது. ஆனால் ரான் பாலுடைய கொள்கைகள் அமெரிக்க அரசியலில் பெரிய அளவில் மாற்றம் ஏற்படுத்த கூடியவை. ஆனால் அந்த மாற்றங்களால் ஏற்பட போவது மகிழ்ச்சியா அல்லது ஏமாற்றாமா என்பது கேள்வி கேள்வி குறியே.

மேற்கோள்கள

1.http://www.ronpaul.com/2011-08-19/its-official-ron-paul-was-ignored-by-the-media/
2.http://en.wikipedia.org/wiki/Social_liberalism
3.http://spectator.org/archives/2011/08/23/ron-paul-and-the-neoliberal-re/
4.http://www.nytimes.com/2011/12/29/us/politics/ron-pauls-young-iowa-volunteers-clean-up-for-the-cause.html?_r=1&hp=&adxnnl=1&adxnnlx=1325162791-ncDd9xJQpqPrWHSRf3nbgg 5.http://www.youtube.com/watch?v=BvaWLcgc-hc
6.http://mondoweiss.net/2011/09/ron-paul-says-our-unfairness-to-palestinians-led-to-911-attacks.html (palestine)
7.http://www.ronpaul.com/on-the-issues/health-care/ ( healthcare)
8.http://lewrockwell.com/paul/paul767.html ( self determination)
9.http://www.nytimes.com/2011/09/16/opinion/krugman-free-to-die.html
10.http://www.ronpaul.com/on-the-issues/health-care/ (missionary)
11.http://www.youtube.com/watch?v=tD8rJCbEVMg - (education for poor)
12.http://abcnews.go.com/blogs/politics/2011/10/ron-pauls-economic-plan-eliminates-department-of-education-and-5-others/ (dept abolition)
13.http://www.nytimes.com/2011/12/28/opinion/mr-pauls-discredited-campaign.html?_r=2 ( racial)
14.http://www.irregulartimes.com/ronpaulseparation.html (Chrurch-State)
15.http://www.mediaite.com/tv/ron-paul-tells-cnns-candy-crowley-civil-rights-act-destroyed-privacy/ (civil right)


--

No comments: