Sunday, August 10, 2014

இந்தி திணிப்பு எதிர்ப்பு - வரலாறு முக்கியம் -உக்ரேனிய பிரச்சனையும் இந்தி எதிர்ப்பு போராட்டமும்

1960களின் இறுதி காலத்தில் தமிழ் இளைஞர்களின் தியாகத்தால் ஜாடிக்குள் அடைக்க பட்ட இந்தி திணிப்பு என்ற பூதம் தற்போது சிறிது சிறிதாக வெளியே எட்டி பார்க்க  தொடங்கியுள்ளது.இன்றைய தலைமுறையினரில் (முக்கியமாக உயர் நடுத்தர வர்க்க மக்கள்) பெரும்பான்மையானோருக்கு  இந்தி திணிப்பின் பின்னனியில் உள்ள  அரசியல் பற்றியோ அது ஏற்படுத்த கூடிய  மோசமான தாக்கம் பற்றியோ தெரிவதில்லை. ஆதிக்க வர்க்கத்தினரால் கட்டு படுத்த பட்டுள்ள வெகுஜன ஊடகங்களினால்  மூளை சலவை செய்ய பட்டுள்ள நிலமையையே காண்கிறாம்.இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு அதனால் பயனடைந்த ஒரு சில தலைவர்களின் குடும்பத்தினர்  இந்தி படித்த செய்தியே மக்களிடம் இந்தி திணிப்பிற்கு ஆதரவாய் விளம்பர படுத்த படுகிறது.இந்தி திணிப்பு எதிர்ப்பிற்கு ஒரு சில தனிபட்ட மனிதர்களோ அல்லது  இயக்கமோ மட்டும் பொறுப்பல்ல. அது பல லட்சம் தமிழர்களின் ஒட்டு மொத்த போராட்ட வெளிப்பாடு. மாபெரும் போராட்டங்களில் தலைவர்களும், தொண்டர்களும்  வருவார்கள், செல்வார்கள், வெல்வார்கள், வீழ்வார்கள்  அல்லது மாறுவார்கள். போராட்டத்தின்  தேவையை தீர்மானிப்பது அதற்கான அடிப்படை காரணங்களும், அந்த  போராட்டத்திற்கான தேவை தற்போது இருக்கின்றதா? என்ற ஆய்வு தான். இங்கு தனிபட்ட மனிதர்கள் முக்கியமில்லை. அடிப்படை கொள்கை தான் முக்கியம்.



இந்தி எதிர்ப்பு போராட்டத்தின்  கடந்த கால மற்றும் நிகழ் கால தேவை ,இந்திய மற்றும் உலக வரலாற்றை முழுமையாக படித்தால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும். பன்முக மொழி கலாச்சாரம் உள்ள நாட்டில் பெரும்பான்மையினரின் மொழியையோ ,கலாச்சாரத்தையோ திணிக்க முயல்வதன் அரசியலையும், இது போல் வரலாற்றில் இதற்கு முன் நடந்த நிகழ்வுகள் பற்றியும் இந்த கட்டுரையில் சிறிது காண்போம்.

பெரும்பான்மை மொழியை சிறுபான்மையினர் மீது திணிப்பது அது அவர்களின் தாய் மொழியின் மீது மட்டும் ஏற்படுத்தும் தாக்குதல் அல்ல. அது மக்களின்  கலாச்சாரம் மற்றும்  பொருளாதாரத்தின் மீதும் ஏற்படுத்தும் தாக்குதல் ஆகும்.ஏனென்றால் மொழி என்பது எண்ணங்களை பரிமாற்றம் செய்ய உதவும் காரணி  மட்டுமல்ல. அது மக்களின் கலாச்சாரம் மற்றும் வாழ்வியல் கோட்பாடுகளோடு ஒண்றிணைந்தது.அதானால் தான் உலகில் பெரும்பாலான நாடுகளின் எல்லைகளை  முடிவு செய்வது மொழியாக உள்ளது.

சுதந்திரத்துக்கு பிறகு இந்தியாவின் மொழி கொள்கையை வடிவமைக்க உதாரணமாக எடுத்து கொள்ளபட்ட நாடு சோவியத் யூனியன் ஆகும்.அதற்கு முக்கிய காரணம்  இந்தியாவை போன்று சோவியத் யூனியனிலும் ரஸ்ய மொழியை பேசும் மக்கள் பெரும்பான்மையாகவும், பிற மொழியை பேசும் இனகுழுக்கள் சிறு  நாடுகள்/மாநிலங்களில் மட்டும் பெரும்பான்மையாகவும் உள்ளனர். அதே சமயம் ஒட்டு மொத்தமாக சோவியத் யூனியனில் கணக்கிட்டால்  பிற மொழியை பேசுபவர்கள்  சிறுபான்மையாகவும் உள்ளனர். இந்தியா சுதந்திரம் அடைந்த கால கட்டத்தில் இந்திய அரசியலில் ஆதிக்கம் செலுத்தி வந்த பெரும்பான்மை "இந்தி"யர்களும், இந்து -  இந்தி - இந்தியா என்ற சித்தாந்தத்தை கொண்ட"இந்து"யர்களும்  தங்களது ஆதிக்கத்தை நிலை நாட்ட அன்றைய சோவியத் மாதிரி மொழி கொள்கை உதவியாக   இருக்கும் என்று கருதினர். அன்றைய சோவியத் மாதிரி கொள்கை என்றால் என்ன என்றும் சோவியத் யூனியனின் மொழி கொள்கை லெனின் காலத்தில் எவ்வாறு  வரையறுக்க பட்டது என்றும் , அவரது காலத்திற்கு பிறகு என்ன ஆனது என்பது பற்றியும் அதன் விளைவுகள் மற்றும் தற்போதைய நிலை என்ன என்றும் முதலில்  பார்ப்போம்.

ரஸ்யா - சோவியத் - யுக்ரேன் - மொழி கொள்கை - Russification

சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன் சோவியத் யூனியன் சுக்கு நூறாக உடைந்ததையும் தற்போது யுக்ரேனில் நடக்கும் கலவரங்களில் பலர் கொல்ல படுவதையும்  பார்க்கிறோம். இதற்கு பல காரணங்கள் இருந்தாலும் ரஸ்ய பெரும்பான்மையினரின் மொழி மற்றும் கலாசாரத்தை சிறுபான்மையினர் மீது திணித்ததும் ஒரு முக்கிய   காரணம் என்றால் உங்களுக்கு ஆச்சர்யமாக உள்ளது அல்லவா? ஆனால் அதுவே உண்மை. அந்த உண்மையை கண்டறிய வரலாற்றின் பின்னோக்கி சிறிது  பயணிப்போம். ரஸ்யாவை ஆண்ட சார் மன்னர்களின்  ஆட்சிக்குட்பட்ட பகுதியில் கிழக்கு ஐரோப்பா மற்றும் மத்திய ஆசியாவை சேர்ந்த  பல்வேறு மொழிவாரி  சிறுபான்மையினரின் பகுதிகள் இருந்தது. சார் மன்னரின் ஆட்சி காலத்திலேயே ரஸ்ய மொழியை புகுத்தும் முயற்சிகள்  பல முறை எடுக்க பட்டது. ஆனால் அவை  மிக கடுமையாக புகுத்த படவில்லை. சோவியத் யூனியனில் உள்ள பல்வேறு மொழிவாரி சிறும்பான்மையினரின் வரலாறும் ஒத்துள்ளதால் இன்று உலகளவில்  அனைவராலும் கவனிக்க படும் உக்ரேனிய மொழியினரை சோவியத் மொழி சிறும்பான்மையினருக்கான எடுத்துகாட்டாக எடுத்து கொள்வோம்.

ரஸ்ய புரட்சிக்கு பின் போல்ஷ்விக்குகளிடம் ஆட்சி அதிகாரம் மாறியவுடன் அதுவரை சார் ஆட்சியில் நடைபெற்ற ரஸ்ய திணிப்பு முடிவுக்கு கொண்டு வர முடிவு  செய்யபட்டது.  லெனினால் இது பற்றி ஆராய பணிக்க பட்ட ஸ்டாலின், ஆரம்ப காலங்களில் சோவியத் யூனியனின் மிக பெரிய ஆபத்து அப்போது  பெரும்பான்மையினரான இருந்த ரஸ்ய மொழி மற்றும் அதிகார வெறியர்களின் ரஸ்ய பேரினவாதமும் அதை கண்டு பயம் கொண்ட பிற உள்ளூர் தேசியவாதமும் தான்  என கூறினார். இவற்றில் முக்கிய பிரச்சனை ரஸ்ய பேரிணவாதமே என்றார். (பிற்காலத்தில் கட்டுபாடற்ற அதிகாரத்தை கைப்பெற்ற ஸ்டாலின் ரஸ்ய பேரினவாதத்தை  முன்னெப்போதும் இல்லாதவாறு எடுத்து சென்றது சோக வரலாறு). சிறுபான்மை மக்களின் மொழி மற்றும் கலாச்சாரத்தை காப்பற்றவும் அவர்களுடைய  கலாச்சாரத்துடன் தேசிய நீரோட்டத்தில் இணைக்கவும் Korenizatsiya (உள்ளூர்மயமாக்கம்) என்ற கொள்கை வகுக்கபட்டது. அதன் படி சோவியத் யூனியனின்  அனைத்து பகுதிகளிளும் அந்த பகுதியில் இருந்த தாய் மொழி மொழியின் வாயிலாக கல்வி கற்று கொடுக்க ஊக்க படுத்த பட்டது. மக்கள் தங்கள் தாய் மொழியில்  படிக்கவாய்ப்பு கிடைத்ததாலும், கல்விக்கு அதிக அளவு செலவு  செய்ததாலும், நகரங்கள் மட்டுமின்றி கிராமங்களிலும்மக்களிடம் வரலாறு காணாத அளவு  எழுத்தறிவு பரவியது.கிராமங்களில் இருந்த உக்ரேனிய மக்களின் படிப்பறிவு அதிகமானதால் பலர் படித்து நகரங்களுக்கு இடம் பெயர்ந்தார்கள்.   அப்போது படித்த  ரஸ்ய மக்கள் முழுவதுமாக நகரங்களில் உருவாகும் வேலை வாய்ப்புகளை எடுத்து கொண்டிருந்த நிலை மாறி  கிராமங்களிலிருந்து இடம் பெயர்ந்த உக்ரேனியர்களும்  வேலை வாய்ப்பை பெற முடிந்தது.கிராமங்களில் இருந்த மொழி அடிப்படையில் நடந்த புரட்சி மொழியினை தொடர்ந்து உக்ரேனிய மக்களின் கலாச்சாரம், உக்ரேனிய  மொழி பேசும் மக்களின் பொருளாதார வளர்ச்சி, சமூக முன்னேற்றம் என தொடர்ந்தது. முக்கியமாக பெரும்பான்மை ரஸ்யர்களின் மத்திய அதிகார திணிப்பு குறைவாக  இருந்ததால் உள்ளூர் உக்ரேனியர்கள் பொருளாதாரத்தில் முன்னேற முடிந்தது. இந்த மாற்றத்தை ஏற்படுத்திய பெருமை அப்போது கல்விஅதிகாரியாக  நியமிக்க  பட்டிருந்த Mykola Oleksiyovych Skrypnyk என்பவரையே சாரும். இந்த காலத்தில் உக்ரேனிய மொழியின் எழுத்து இலக்கணம் வரையரை செய்யபட்டது.  இதைSkrypnykivka அல்லது கார்கிவ் எழுத்திலக்கணம் என்ற பெயர் பெற்றது. உக்ரேனிய மொழியிலும் ஒரு மறுமலர்ச்சி ஏற்பட்டது.,இந்த மறுமலர்ச்சி மொழி,  கலாச்சாரம், வாழ்க்கைதரம் மற்றும் பொருளாதார வளர்ச்சியில் மட்டும் நடைபெறவில்லை.அப்போதைய கம்யூனிச கட்சி மற்றும் அரசியலில் முழுமையாக ரஸ்யர்களே  அதிக்கத்தில் இருந்த நிலை மாறி உக்ரேனியர்கள் பலர் கம்யூனிச கட்சியின் முக்கிய பதவிகளிலும் அரசு பதிவிகளிலும் பங்கு பெற்றனர்.

ரஸ்ய பேரினவாதத்தின் துணையோடு ஸ்டாலின் கட்டற்ற அதிகாரத்தை எடுக்க முனைந்த பின் நிலைமை மாற தொடங்கியது. (இதில் ரஸ்ய பேரினவாதத்தின் துணை  கொண்டு அதிகாரத்தை எடுக்க கடுமையான வழிமுறைகளை கையாண்ட ஸ்டாலின் ரஸ்யாவை சேர்ந்தவர் அல்ல என்பது சோகமான வரலாறு.). லெனின் ஆதரவுடன்  வந்த உள்ளூர்மயமாக்கல் முடிவுக்கு கொண்டு வரபட்டது. ரஸ்ய பேரினவாதம் முழுமையாக மொழிவாரி சிறும்பான்மையினரின் மேல் திணிக்கபட்டது.உக்ரேனில் ரஸ்ய  மொழி திணிப்பு மற்றும் ரஸ்ய பேரினவாத திணிப்பிற்கு ஸ்டாலினால் உக்ரேனுக்கு அனுப்பபட்ட அதிகாரியின் பெயர் PavelPostyshev. அவர் பதவியேற்ற சில  மாதத்திலேயே Skrypnyk பதவி விலகி சித்ரவதையிலிருந்து தப்பிக்க தற்கொலை செய்து கொண்டார். அதை தொடர்ந்து உக்ரேனில் ரத்த அறு ஓட  தொடங்கியது.உக்ரேனிய மக்கள் தாய் மொழியில் படிக்கும் உரிமை சிறிது சிறிதாக பறிக்க பட்டு அனைத்து பள்ளிகளிலும்  ரஸ்ய வழி கல்வி கட்டாயமாக்கபட்டது.  மக்களின் தாய் மொழியான உக்ரேனிய மொழி சிறிது சிறிதாக வழக்கத்திலிருந்து மறைக்க பட தொடங்கி இரண்டாம் தர மொழியாக தாய் நாட்டிலேயே  பொலிவிழக்கபட தொடங்கியது.அனைத்து பத்திரிக்கைகள், புத்தக அச்சகம்  போன்றவை உக்ரேனிய மொழியிலிருந்து  ரஸ்ய மொழிக்கு மாற்றபட்டது.மொழியின்  எழுத்துருவின் மீதும் தாக்குதல் தொடங்கியது. உக்ரேனிய மொழியின் எழுத்து வடிவத்தில் பல மாறுதல்களை ஏற்படுத்தி ரஸ்ய மொழியின் எழுத்து வடிவுடன் அதிக  அளவு ஒத்து போகும் படி செய்தனர் . (ஜெயமோகனின் எழுத்து சீர்திருத்ததுடன் இந்த எழுத்து சீர்திருத்தத்தை ஒப்பிட்டு நீங்கள் பார்த்தால் நான்  பொருப்பல்ல,)பல்லாயிரக்கணக்கான உக்ரேனிய மொழியியல் அறிஞர்கள் மற்றும் மொழியியலாளர்கள் கடுங்குளிரில் அடிமை முகாமுக்கு கொண்டு செல்ல பட்டனர்  அல்லது கொலை செய்ய பட்டனர். இதற்கு Executed Renaissance என்று பெயர்(The term Executed Renaissance is used to describe generation of Ukrainian writers and  artists of 1920s and early 1930s who were performing in Ukrainian Socialist Soviet Republic and were executed  or repressed by Stalin's totalitarian regime.).சுமார் 2.5 லட்சம் உக்ரேனியர்கள் அரசியல் அதிகாரம் கொண்ட கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து  வெளியேற்றபட்டு,பெரும் பாலோனோர் படுகொலை செய்யபட்டனர். ரஸ்ய மொழி ஆதிக்கமும், ரஸ்ய பேரினவாதமும் நாம் கனவிலும் காண முடியாத கோர  தாண்டவத்தை உக்ரேனில் நிகழ்த்தியுள்ளது. உக்ரேன் நாட்டை சோவியத்தின் கோதுமை களஞ்சியம் என்பார்கள்.  உக்ரேனிய விவசாயம் பிரசித்தி பெற்றது. கூட்டு  பண்ணை விவசாயத்தை  நடைமுறை படுத்தி விவசாயிகளிடமிருந்து பெரும்பான்மையான விளை பொருட்களை பறிமுதல் செய்து ரஸ்யர்களுக்கு உணவளிக்க  ரஸ்யாவிற்கு அனுப்பி விட்டு உக்ரேனிய மக்களிடம்செயற்கையான பஞ்சத்தை ஏற்படுத்தி சுமார் 40 லட்சம் உக்ரேனியர்களை படுகொலை செய்தனர்.இதற்கு   Holodomor என்று பெயர்.ஒரு புறம் உக்ரேனியர்கள் படுகொலை செய்யபட்டனர். மறுபுறம் ரஸ்யர்கள் மிக பெரிய அளவில் ரஸ்யாவிலிருந்து கொண்டு வரபட்டு  உக்ரேனில் குடியமர்த்த பட்டனர்.நகர்புற தொழிற்சாலை சார்ந்த வேலைகள் பெருமளவில் ரஸ்யர்களுக்கு கிடைத்தது. அதிகாரம் மிக்க   உக்ரேனிய கம்யூனிஸ்ட்  கட்சியிலும் ரஸ்யர்கள் பெருமளவு நிரப்பபட்டு அரசியல் அதிகாரத்தை கைப்பற்றினர். பெரும்பான்மை  பள்ளி , உயர் கல்வி மற்றும் அரசு வேலைவாய்ப்புகளில் ரஸ்ய  மொழி கட்டயமாக்க பட்டு உக்ரேனிய மொழி வீழ்த்தபட்டது. இந்த கொடுமையான நிலை ஸ்டாலின்  உயிருடன் இருக்கும் வரை தொடர்ந்தது.இதற்கு  Russification  என்பார்கள்

Holodomor - நன்றி www.worldtruth.org/


குருசேவ் பதவி ஏற்றவுடன் ரஸ்ய பேரிணவாதம் மற்றும் மொழி ரீதியான அடக்குமுறை குறைந்தது. எந்த மொழியில் படிக்க வேண்டும் என்பதை படிப்பவர்கள் முடிவு  செய்ய வாய்ப்பளிக்க பட்டது. ஆனால் பெரும்பாலான அரசு வேலைகள் மற்றும் வெகுஜன தொடர்பு போன்றவற்றிற்கு ரஸ்ய மொழியை கட்டாயமாக்கி மற்ற  மொழியினருக்கு வாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்காததால் கட்டயத்தின் மூலம் ரஸ்ய மொழி திணிக்காவிட்டலும் அவசியத்தின் மூலம் ரஸ்ய மொழி திணிக்க  பட்டது.

அன்று ஸ்டாலின் காலத்தில் இடபட்ட ரஸ்ய மொழி திணிப்பு மற்றும் ரஸ்ய பேரிணவாத தீ 1980 களில் சோவியத் நாட்டின் முப்புறத்திலும் கொழுந்து விட்டு  எரிந்து மாபெரும் மக்கள் புரட்சிக்கு  ஒரு காரணியாக வித்திட்டு  சோவியத் யூனியனை சுக்குநூறாக செய்தது.

உக்ரேனின் இன்றைய நிலை

சோவியத் யூனியன் உடைந்து உக்ரேன் தனி நாடான பின்  உக்ரேனிய மொழியை படிப்பு, அரசு அலுவல் , வணிகம்  என அனைத்து வழிகளில் மீண்டும் உயிரூட்ட தொடங்கி உள்ளனர். ஆனால்  50 க்கும் மேற்பட்ட ஆண்டுகளாக ரஸ்ய மொழியும், ரஸ்ய பேரிணவாதமும் பெருமளவில் திணித்து  உக்ரேனிய  தாய் மொழியை அழித்து வந்ததால் உக்ரேனிய மக்கள் பெருமளவு russified  ஆகி விட்டிருந்தனர்.
2001 புள்ளி விவரத்தின் படி உக்ரேனின் தலைநகரான கீவ் நகரில் தாய் மொழியாக மக்கள் கூறிய மொழி
75% உக்ரேனை தாய் மொழியாகவும்
25% ரஸ்ய மொழியை தாய்மொழியாகவும் கொண்டுள்ளதாக கூறியுள்ளனர்.

அதே நேரத்தில் பெரும்பான்மையாக உபயோகிக்க படும் மொழியாக
52% பேர் ரஸ்ய மொழியையும்
32% ரஸ்ய மற்றும் உக்ரேனிய மொழியையும்
14% பெரும்பாலும் உக்ரேனிய மொழியையும்
4.3% முழுமையாக உக்ரேனிய மொழியய்யும்  பயன் படுத்துவதாக கூறியுள்ளனர்.
அதாவது சுமார் 60% உக்ரேனிய மொழியை தாய் மொழியாக கொண்ட மக்கள் ரஸ்ய மொழியை பெரும்பான்மையாக பயன்படுத்த தொடங்கியுள்ளனர்..ஆனால் தற்போது  நிலைமை  சிறிது சிறிதாக மாற தொடங்கி உள்ளது.

இதுதான் பெரும்பான்மையானோரின்  மொழி திணிப்பும் , பெரும்பான்மையானோரின் பேரிணவாத  திணிப்பும் மொழிவாரி சிறும்பான்மையினர் மீது திணிக்கபடுவதன்  விளைவு..இன்று உக்ரேனில் நடக்கும் பிரச்ச்னைகளின் அடிப்படையும் அன்று ரஸ்ய பேரிணவாத திணிப்பின் விளைவே ஆகும். அதாவது  ரஸ்ய பேரிணவாதிகளால்  குடியேற்ற பட்டு பல்கி பெருகி வந்த ரஸ்ய மொழி வாரி மக்களுக்கும் , உக்ரேனிய மக்களுக்கும் இடையே நடைபெறும் போராட்டமே இன்று உக்ரேனில் நடக்கும்  போராட்டம. உக்ரேனியர்கள் தங்களது மொழி, கலாச்சாரம் மற்றும் தனித்தன்மை வாய்ந்த அரசை மீண்டும் நிலை நாட்ட துடிக்கிறார்கள்.உக்ரேனியர்களுக்கோமீண்டும் ரஸ்யாவுடன் தங்களது பகுதி இணைக்க பட்டால் மீண்டும் ரஸ்ய  பேரிணவாத திணிப்பு ஆரம்பித்து மீண்டும் மாபெரும் சமுதாய கொலை (genocide) நடக்குமோ என்று பயப்படுகிறார்கள்.எனவே உக்ரேனியர்கள் ரஸ்யாவின்  ஆபத்திலிருந்து தப்பிக்க ஐரோப்பிய யூனியனுடன் சேர்ந்து விட வேண்டும் என துடிக்கின்றனர்.ஆனால் உக்ரேனிய பொருளாதாரம் எரிசக்தி, ஏற்றுமதி, இறக்குமதி  போன்றவற்றில் ரஸ்ய நாட்டினை சார்ந்து இருக்க வேண்டி உள்ளது.அதை துருப்பு சீட்டாக ரஸ்யா தற்போது பயன்படுத்தி மக்களால் தேர்ந்தெடுக்க பட்ட அரசுகளை  மிரட்டி வந்தது. தற்போது நிலமை கைமீறி போய் உள்னாட்டு போர் தொடங்கி உள்ளது. உக்ரேனிய தேசியவாத அரசுகளால் தங்களது உயிருக்கும் உடமைக்கும் பாதிப்பு ஏற்படும் என்று கருதி ரஸ்யர்கள் அதிகம் இருக்கும் பகுதிகளில் உள்ள  மக்கள் ரஸ்யாவோடு தங்களது பகுதியை இணைக்க துடிக்கின்றனர். சுமார் 80 ஆண்டுகளுக்கு முன் ரஸ்யாவிலிருந்து குடியேறி  சில தலைமுறைகளாக உக்ரேனில் வாழ்ந்து , அதிக கல்வி அறிவு மற்றும் முக்கிய பதிவியில் இருக்கும் ரஸ்ய இனத்தவரின் எதிர்காலமும் கேள்வி குறியாகியுள்ளது.

வரலாற்றை படிக்கும் போது நாம் அறிந்து கொள்ளூம் உண்மை என்னவென்றால்  பெரும்பான்மையான தலைவர்கள் மற்றும் சமூகத்தின் தோல்விகளுக்கு காரணம்  அவர்கள் வரலாறை படித்து உண்மையை உணர்ந்து கொள்ளாதது தான் எனலாம்.அன்று நெப்போலியன் சீதோஷ்ண நிலை மற்றும் புவியியல் அமைவிடம்பற்றி புரிந்து  கொள்ளாமல் ரஸ்யாவின் மீது போரிட்டு தன் பெரும்பான்மை படைகளை இழந்து, நம்பிக்கை இழந்து தனது உலகளாவிய பேரரசு லட்சியத்தை கனவாக்கி மாய்ந்து  போனான். அந்த சரித்திர உண்மையை படித்து உணராத  ஹிட்லர் மீண்டும் அதே தவறை செய்து அழிந்து போனான். அதே போல, மத, இனம் மற்றும் கலாச்சார வழி  பன்முக சமுதாயமான சோவியத் யூனியன் ரஸ்ய மொழி திணிப்பு மற்றும் ரஸ்ய பேரினவாத திணிப்பு மூலம் சிதறுண்டு போனது. அந்த உண்மையை உணராத "இந்து -  இந்தி - இந்தியா"  தேசியவாதிகள் இந்தி மொழியையும், இந்து ஆதிக்கவாதத்தையும் திணித்து பேரழிவுக்கு இட்டு செல்ல முயல்கிறார்கள்.

இதே நிலையை ஈழத்தில் சிங்கள பேரினவாதம் நடைமுறைபடுத்த துடிக்கிறது.உக்ரேனிய மொழிக்கும் உக்ரேனிய மக்களுக்கும் ஏற்பட்ட கையறு நிலை பிற்கால தமிழ் சந்ததியினருக்கு வராமல் தடுத்த பெருமை அன்று இந்தி திணிப்பு எதிர்ப்பு  இயக்கத்தில் கலந்து கொண்ட  தியாகிகளின் ரத்தத்தினால் தான் என்றால் மிகையாது. 


சிறகுவில் வெளி வந்த கட்டுரை


5 comments:

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்

கட்டுரையை படித்தேன் மிக அருமையாக எழுதியுள்ளீர்கள். சிறந்த திறனாய்வுக் கட்டுயை
சிறகு மின்னிதழில் வெளிவந்தமைக்கு வாழ்த்துக்கள்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

சதுக்க பூதம் said...

நன்றி ரூபன்

saamaaniyan said...

நண்பரே,

இணையத்தின் மிக சிறந்த கட்டுரைகளில் இதுவும் ஒன்று என தீர்மானமாய் கூறுவேன் !

தமிழ் மொழி சந்திக்கும் இன்றைய இக்கட்டுகளை உலக வரலாறு மற்றும் இன்றைய உலக அரசியல் சூழலும் ஒப்பிட்டு ஆதாரப்பூர்வமாக விளக்கியுள்ளீர்கள்.
ஒவ்வொரு தமிழனும் படித்து மனதில் இருத்திகொள்ள வேண்டிய பதிவு.

தங்களுக்கு நேரமிருப்பின் ,தமிழ் மொழிக்கு நேரும் அபாயம் பற்றி நான் எழுதிய " தமிழன் என்று சொல்லடா தமிழில் பேசடா ! " பதிவை படித்து தங்கள் கருத்தினை பின்னூட்டபமிடுங்கள்.நன்றி

http://saamaaniyan.blogspot.fr/2014/07/blog-post.html

சாமானியன்
saamaaniyan.blogspot.fr

சதுக்க பூதம் said...

நன்றி saamaaniyan saam. பதிவு படித்தேன். நன்றாக உள்ளது

saamaaniyan said...

இதுவரை நான் அறியாத பல தகவல்கள் அடங்கிய பதிவு !

தமிழர்கள் வாய்ச்சொல் வீரர்கள்... உண்மை அதுவும் மொழி விசயத்தில்... சொல்லவே வேண்டாம் !

" தமிழை இழித்தவனை தாய் தடுத்தாலும் விடேன் " என பேசுவதோடு சரி !

நன்றி
சாமானியன்
saamaaniyan.blogspot.fr

எனது புதிய பதிவு : தேங்காய்க்குள்ள பாம் !

http://saamaaniyan.blogspot.fr/2014/10/blog-post_15.html

தங்களுக்கு நேரமிருப்பின் படித்துவிட்டு எண்ணங்களை பதியுங்கள். நன்றி