Friday, September 10, 2010

திரைப்படம் - The Yes Men Fix The World (2009)

2004ம் ஆண்டு டிசம்பர் மாதம். போபால் விஷ வாயு விபத்து நடந்து 20ம் ஆண்டு நிறைவடையும் வேலை. விபத்தினால் பாதிக்க பட்ட மக்களுக்கோ போதிய இழப்பீடு கிடைக்க வில்லை. இன்னும் பல்லாயிர கணக்கான மக்கள் தினந்தோறும் பலியாகி கொண்டும், பல வகை நோயினால் பாதிக்க பட்டு கொண்டும் உள்ளனர். விபத்தை உண்டாக்கிய தொழிற்சாலை இன்னும் விஷத்தை நிலத்தடி நீரிலும், மண்ணிலும் கக்கி கொண்டே இருக்கிறது. விபத்தில் பாதிக்க பட்டவர்கள் இழப்பீடுக்காக பல ஆண்டுகளாக போராடி கொண்டே இருந்த நேரம்.

அப்போது BBC தொலைகாட்சியில் DOW Chemicals கம்பெனியின் செய்தி தொடர்பாளர் தோன்றி DOW Chemicals போபால் விஷவாயு விபத்துக்கான பொறுப்பை ஏற்று $12 பில்லியன் பணத்தை விபத்தில் பாதிக்க பட்ட மக்களுக்காக கொடுக்க போகிறது என்றும் அவர்களுக்கு மருத்துவ வசதி மற்றும் தொழிற்சாலையில் மீதமுள்ள விஷ கழிவுகளை அகற்ற ஒப்பு கொண்டதாக அறிவித்த உடன் உலகமே( DOW Chemicals பங்கு வைத்திருப்பவர்கள் தவிர) மகிழ்ச்சியில் ஆரவாரித்தது.
ஆனால் அந்த மகிழ்ச்சி சில மணி நேரங்களுக்கு பின் நீடிக்கவில்லை. பின்னர் தான் தெரிந்தது, அந்த அறிவிப்பை வெளியிட்டவர் DOW Chemicals கம்பெனிக்கு சம்பந்தமில்லாத போலி என்றும் போபால் விஷ வாயு விபத்தையும், அதில் பாதிக்கபட்டவர்களுக்கு இழப்பீடு கிடைக்காததையும்,அந்த தொழிற்சாலையின் இன்றைய நிலையையும் உலக மீடியாவிற்கு வெளிச்சம் போட்டு காட்ட நடத்தபட்ட நாடகம் என்பது.

இதை திட்டமிட்டு நடத்தியவர்கள் Andy Bichlbaum மற்றும் Mike Bonanno. இவர்களுடைய வேலையே இதுபோல் லாப நோக்கை மட்டும் கொண்டு மக்கள் நலம் , அதிலும் ஏழை நாடுகளின் மக்கள் உயிரை கிள்ளு கீரையாக நினைத்து பேரழிவை ஏற்படுத்தும் பன்னாட்டு கம்பெனிகள் மற்றும் தடையில்லா சந்தையும், தனி மனிதனின் பேராசையும் தான் உலக முன்னேற்றத்துக்கு வழி என்று நினைத்து மக்கள் நலனில் கவலை படாத அரசாங்கங்களின் நிஜ முகத்தை உலக மக்கள் முன் காட்ட, பெரிய பன்னாட்டு கம்பெனிகள் அல்லது அரசின் பிரதிநிதிகள் என்று பொய்யாக வேடமணிந்து மிக பெரிய மீடியா அல்லது மிக பெரிய தொழிற் கருத்தரங்குகளுக்கு சென்று, உண்மையை நக்கலாக கூறி அதன் மூலம் நிதர்சனத்தை மீடியாவின் மூலம் மகக்ளிடம் கொண்டு செல்வது.இதையே தனது வேலையாக கொண்டு,உலகில் நல்ல மாற்றத்தை கொண்டு வர த்ங்களால் ஆன சிறிய முயற்சியை செய்கின்றனர்.

அவர்கள் நடத்திய திருவிளையாடல்கள் எலலாம் படத்துக்காக எழுத பட்ட கதையல்ல நிஜம்!

போபால் பிபீசி பேட்டி அவர்கள் நடத்திய திருவிளையாடள்களில் ஒன்று. இது போல் அவர்கள் நடத்திய பல நாடகங்களை தொகுத்து படமாக வெளியிட்டுள்ளனர். அந்த படம் தான் The Yes Men Fix the World (2009)

இது தான் அந்த படத்தின் டிரெயிலர்இதை நடத்த அவர்கள் என்ற DowEthics பொய்யான வலை தளத்தை உருவாக்கி பல காலம் காத்திருந்தனர். அப்போது தான் பிபீசி தொலைகாட்சி நிறுவனம் அவர்களது வலை தளத்தை Dow Chemicals நிறுவனத்தின் உண்மையான வலைதளம் என்று நம்பி, போபால் விபத்தின் 20ஆவது ஆண்டு நிறைவின் போது, அவர்களை பேச அழைத்தது. அது நடந்த விதம் பற்றி தெரிந்து கொள்ள கட்டாயம் இங்கு போய் பாருங்கள்.

அவர்கள் செய்த வேறு சில திருவிளையாடல்கலையும் இந்த படத்தில் காட்டியுள்ளனர். அவற்றில் சில.

லண்டனில் நடந்த மற்றொரு கான்பிரன்ஸில் டௌ நிறுவன அதிகாரி போல் சென்றுள்ளனர். அங்கு டௌ நிறுவனம் புதிதாக கண்டு பிடித்துள்ளதாக கூறி Acceptable Risk Calculator என்ற ஒன்றை அறிமுக படுத்தினர். Acceptable Risk Calculator என்பது ஒரு புதிய பிராஜெக்டை தொடங்கும் போது, அதன் விளைவாக மனித உயிர்கள் பலியாக வாய்ப்பு இருந்தாலும் , லாபம் கொடுக்கும் தொழிலாக இருந்தால் எவ்வாறு ஏற்புடைய ரிஸ்க்கை கணக்கிடுவது என்பது பற்றியது.அதாவது எந்த பகுதியில் அந்த தொழிற்சாலையை கட்டலாம்(ஏழை மற்றும் வளரும் நாடுகளில்), எந்த மக்கள் இறந்தால் கம்பெனிக்கு பாதிப்பு ஏற்படுத்தாது போன்றவை பற்றியது.தங்க முலாம் பூசபட்டை எலும்புகூட்டை அதற்கு குறியாக காட்டி உலக மக்களின் கவனத்தை டௌ மருந்து கம்பெனியின் மீது விழ வைத்தனர்.

கனடாவில் 2007ம் ஆண்டு நடந்த Gas & Oil Exposition 2007 ல் அவர்கள் நடத்திய கூத்து தான் அற்புதமானது. இது எண்ணெய் கம்பெனிகள் சுற்றுபுற சூழல் பற்றி கவலை படாமல் பொறுப்பில்லாமல் நடந்து கொள்வதை உலகுக்கு காட்ட செய்த ஏற்பாடு.

Exxon Mobil என்ற மாபெரும் கம்பெனியின் முன்னாள் தலைவர் Lee Raymond, தனது வேலையிலிருந்து ஓய்வு பெற்றபின், அமெரிக்க அரசுக்கு பெட்ரோலிய கொள்கை பற்றி ஆலோசனை கூறும் National Petroleum Council என்ற அமைப்பின் தலைவரானார்.அவருக்கு பதிலாக அவரது ஆலோசகராக அந்த கான்பிரன்ஸில் முக்கிய பேச்சாளராக உள் நுழைந்தார் நமது ஹீரோ.NPC செய்து வரும் புதிய ஆராய்ச்சியின் விளைவாக வரும் புதிய கண்டுபிடிப்பை பற்றி அறிவிப்பு வரும் என்று அனைவரும் ஆவலாக எதிர்பார்த்து கொண்டிருந்தார்கள்

மக்களின் எதிர்பார்ப்பை ஏமாற்றாமல் புதிய வகை எண்ணெய் விவீலியம் கண்டு பிடிக்க பட்டதாக அறிவித்தார். அது எதிலிருந்து எடுக்க பட்டது தெரியுமா? உலகில் மிக எளிதாக, மலிவாக கிடைக்கும் பொருளான மனித உடல் பகுதியிலிருந்து எடுக்கபட்டது. புவி வெப்பமாவதால் வருடந்தோறும் ஏழை நாடுகளில் பல்லாயிய கணக்கான மக்கள் சாவதால்,சாவிலிருந்தும் பணம் பண்ணுவதுதான் முதலாளித்துவத்தின் குறிக்கோள் என்று கூறி, அந்த உடலிலிருந்து எண்ணெய் எடுக்கும் புதிய தொழில் நுட்பத்தை உலகுக்கு காட்டி உலகெங்கிலும் அதிர்வலை ஏற்படுத்தினார். எக்சான் மொபில் கம்பெனியின் கழிவுகளை அகற்றி நோய் வந்து இறந்த தொழிலாளியின் உடல் பாகத்திலிருந்து மெழுகு வர்த்தியை தயாரித்து அதை அனைவரையும் ஏற்ற வைத்தார்.

காட்ரீனா புயலுக்கு பின் அங்கு வாழ்ந்த ஏழை மக்களின் வீடுகளை அபகரித்து ஏழைகளுக்கு அரசு கட்டி தரும் திட்டத்தை ஒழித்து பண முதலைகளை உள் கொண்டுவரும் அரசின் முயற்சியையும், நியூ ஆர்லியன்ஸ் மறுவாழ்வு என்ற பெயரில் மக்களின் பயன்பாட்டிற்கு நடக்கும் கண்காட்சிகளில் நடக்கும் கூத்தினை அவர்கள் வெளி கொண்ட விதம் பற்றியும் ,அவர்களாகவே வெளியிட்ட Newyork Times பத்திரிக்கை பிரதி பற்றியும் படத்தை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

இந்த படத்தின் ( உண்மையிலேய தான் நடத்திய திருவிளையாடல்கள்) மூலம் சந்தையில் அரசின் தலையீட்டின் அவசியத்தை அழகாக மக்கள் மனத்தில் பதிய வைத்திருக்கிறார்கள்.இந்த படம் சந்தை பொருளாதாரம் ஏற்படுத்தும் விளைவுகளை மிக நகைச்சுவையான முறையில் அழகாக எடுத்து காட்டுகிறது. விழிப்புணர்ச்சிக்கு இல்லை என்றாலும் கூட ஒரு நல்ல நகைச்சுவை படமாகவாவது கட்டயம் அனைவரும் பார்க்க வேண்டிய படம்.


இந்த படத்தின் நாயகர்கள் தற்போதும் Yes Lab என்ற பெயரில் லேப் நடத்தி வருகிறார்கள். மகக்ளை பலிகடா ஆக்கும் பன்னாட்டு/ அரசு நிறுவங்களின் தோலுரித்து காட்ட நினைக்கும் தன்னார்வ நிறுவனக்கள், இந்த லேபை அனுகினால் அவர்கள் நல்ல ஐடியா கொடுப்பதுடன் அதை நடத்தி முடிக்க திட்டமிட்டு, அது முழுதும் கூட இருந்து நடத்தி முடிப்பார்கள். சமுதார நலனுக்காக அவர்கள் நடத்தும் நாடகத்தில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் அவர்களை தொடர்பு கொண்டால், நீங்கள் இருக்கும் இடத்தின் அருகாமையில் அவர்கள் எதாவது நாடகம் நடத்தினால் உங்களை பயன் படுத்தி கொள்வார்கள்.

பின் குறிப்பு: முதலாளிகளை எதிர்த்து இந்தியாவில் இது போல் செய்தால், அதில் கலந்து கொள்பவர்களின் நிலை என்னவாகும் என்பது அவர்களுக்கு தெரியாது என்று நினைக்கிறேன்.

--

--

No comments: