Sunday, October 17, 2010

Food Inc -விவசாயமும் உணவு சார்ந்த தொழிலிலும் பன்னாட்டு கம்பெனிகளின் ஆதிக்கம்

உணவு உற்பத்தி, உணவு பதபடுத்துதல் மற்றும் உணவை சந்தை படுத்தும் தொழில் ஒரு சில கம்பெனிகளின் கைக்கு சென்றதால் அமெரிக்காவில் ஏற்படும் பிரச்ச்னைகள் பற்றி விளக்கும் அழகிய படம் இது.


முதல் பகுதி அமெரிக்கவில் துரித உணவு எவ்வாறு வளர்ச்சி அடைந்துள்ளது என்றும் அதன் விளைவுகளை பற்றியும் அளசுகிறது. அமெரிக்காவில் McDonalds போன்ற துரித உணவு கூடங்கள் மக்களின் உணவு தேவையின் பெரும் பகுதியை பூர்த்தி செய்கிறது. அவர்களிடம் உள்ள உணவுகளை தயாரிப்பதற்கும் தொழிற்சாலை முறையை பின்பற்றுகிறார்கள். ஒவ்வொரு தொழிலாளியும் ஒரே வேலையை மீண்டும் மீண்டும் செய்ய வேண்டும். அதன் விளைவு எளிதாக வேறு ஒருவரை அந்த வேலைக்கு மாற்ற முடியும் .எனவே சம்பளம் குறைவாக கொடுத்தால் போதுமானது. இந்த விரல் விட்டு எண்ண கூடிய ஒரு சில துரித உணவு நிறுவனங்கள் அமெரிக்காவின் பெரும்பான்மையான மாமிசம்(மாடு, கோழி, பன்னி) போன்றவற்றை வாங்குகிறார்கள். எனவே அவர்களுக்கு இத்தகைய பொருட்களை வினியோகிக்க பெரிய நிறுவனங்கள் தேவை படுகிறது. மேலும் அனைத்து பொருட்களின் சுவையும் ஒன்றாக இருக்க வேண்டும். அதன் விளைவு, இந்த மாமிச வினியோகம் என்பது ஒரு சிலரின் கைக்கு சென்று விட்டது.

பல்வேறு விவசாயிகள் மாமிசத்தை உற்பத்தி செய்தாலும் அதை வாங்க போவது இந்த ஒரு சில நிறுவனங்கள் தான். அதன் விளைவு ஒட்டு மொத்த மாமிச தொழிலையும் இந்த நிறுவனங்கள் கையில் உள்ளது. அதாவது தற்போது விவசாயிகள் தங்கள் உற்பத்தி செய்யும் கோழியை உரிமை கொண்டாட முடியாது. இக்கம்பெனிகள் கொடுக்கும் கோழியை இவர்கள் வளர்த்து கொடுக்க வேண்டியதுதான்.

அதாவது இந்தியாவில் சுகுணா கோழி நிறுவனம் செய்வது போல்.

இந்தியாவிலாவது கோழியை வெளி சந்தையில் விற்கலாம். ஆனால் அமெரிக்காவில் ஒட்டு மொத்த வினியோக உரிமையும் இந்த ஒரு சில நிறுவனங்கள் கையில் உள்ளதால், இந்த நிறுவனங்களை எதிர்த்து தனியே கோழியை உற்பத்தி செய்தாலும் அவற்றை பெரிய அளவு வாங்க யாருமே இருக்க மாட்டார்கள். அதன் விளைவு விவசாயிகள் இந்த நிறுவனங்களின் அடிமையாக மாற தொடங்கி விட்டார்கள்.

ஒரு சிறிய கோழி பண்ணை ஆரம்பிக்க ஆகும் செலவு சுமார் $3,00,000. ஆனால் அதை ஆரம்பித்தவுடன் இந்த கம்பெனிகள் அந்த பண்ணையில் மாற்றம் செய்ய வேண்டும் என்று பல்லாயிரம் பெருமான இயந்திரங்களையும், மாற்றியமைப்புக்கும் செலவு செய்ய கூறுவார்கள். விவசாயிகளுக்கோ வேறு வழி இல்லை. செலவு செய்தே ஆக வேண்டும். இல்லையென்றால் கம்பெனியுடனான ஒப்பந்தம் ரத்து செய்ய படும். அதன் விளைவு விவசாயி கடனாளியாக மாறுகிறார். ஆனால் அவர்களது வருமானமோ $10000 மட்டும் தான்!
1970களில் முதல் ஐந்து மாமிச பதபடுத்துவோர் 25% சந்தையையை மட்டும் கொண்டிருந்தார்கள். ஆனால் தற்போது முதல் 4 கம்பெனிகள் 80% சத சந்தையை தன்னகத்தே கொண்டு உள்ளது!அடுத்து மக்காசோளம் விவசாயத்தை பற்றி விளக்குகிறது. அமெர்க்கவில் கடைகளில் விற்கும் பெரும்பாலன உணவு பொருட்கள் சோளத்திலிருந்து தயாரிக்க பட்டதாகத்தான் இருக்கும். ஆடுமாடுகளுக்கு உணவாகவும் சோளம் தான் அதிக அளவு இருக்கிறது. எனவே மிக பெரிய கம்பெனிகள் சோளத்தை குறைந்த விளைக்கு வாங்க அரசாங்கத்திடம் தங்களுக்குள்ள செல்வாக்கை பயன்படுத்தி சோளம், சோயா போன்ற விவசாய் பொருட்களுக்கு அதிக மானியம் பெற்று தருகிறார்கள். அதன் விளைவு அவர்களால் தானியங்களை உற்பத்தி விளையிலிருந்து மிக குறைவான விளைக்கு வாங்க முடிகிறது( இந்தியாவில் உர மானியம் போன்றவற்றால் தானியங்கள் விலை ஒரளவு குறைவாக சந்தையில் அரசால் வாங்கபட்டு பொது வினியோக முறைபடி குறைந்த விளைக்கு ஏழைகளுக்கு விற்க படுகிறது. ஆனால் அமெரிக்காவிலோ அந்த லாபம் பன்னாட்டு கம்பெனிகளுக்கு தான் போகிறது)

அதன் விளைவு, உலக சந்தையில் தானியத்தின் விலை குறைவாக உள்ளது. இது நல்லது தானே என்று நீங்கள் நினைக்க கூடும் . ஆனால் இந்த செயற்கையான மலிவான தனிய உற்பத்தியை எதிர்த்து போட்டி போட முடியாமல் ஏழை ஆப்ரிக்க நாட்டு விவசாயிகள் விவசாயத்தை விட்டு விட தொடங்கி உள்ளனர். அதன் விளை இந்த நாடுகளில் பசியும் பட்டினியும் தலை விரித்து ஆடுவதோடு இல்லாமல் எப்போதும் உணவுக்கு மேலை நாடுகளை நோக்கி கையேந்த வேண்டி உள்ளது.

குறைந்த இடத்தில் அதிக கல்நடைகளை உற்பத்தி செய்ய தொழிற்சாலை முறை இருப்பதால் அதிக சுகாதாரம் இன்மை காணபடுகிறது. மனிதனுக்கு நோய் ஏற்படுத்தும் வகை E.Coli பாக்டீரியாக்கள் உணவு பொருளில் கலந்து விடுகிறது. இதை தடுக்க அரசு இது போன்ற தொழிற்சாலைகளில் தணிக்கை செய்து இந்த பாக்டிரியாக்கள் அதிகம் இருக்கும் தொழிற்சாலையை மூட அதிகாரம் கேட்டு புதிய சட்டம் இயற்ற முயன்றால் பணம் படைத்த பன்னாட்டு கம்பெனிகளின் பணபலத்தால் அது தடுக்க பட்டுள்ளதையும் காட்டுகிறார்கள்.

அது மட்டுமன்றி இது போன்ற தொழிலை கட்டு படுத்தும் அரசின் அமைப்புகளுக்கு இந்த நிறுவங்களின் அதிகாரிகளையே தலைவர்கள் ஆக நியமித்து ஒட்டு மொத்த அமைப்பையே கடந்த 25 ஆண்டுகளாக சிறிது சிறிதாக கேளிகூத்தாக ஆக்க தொடங்கி உள்ளனர்.


இந்த துரித உணவகங்களில் விற்க படும் உணவுகளும் ஆரோக்கியம் குறைந்ததாக உள்ளது. அதன் விளைவு மக்கள் அதிக அளவு நோய்வாய் படுகின்றனர். அரசும் தானியங்களுக்கு கொடுக்கும் மானியத்தை போல் காய்கறி மற்றும் பழம் போன்றவற்றிற்கு கொடுப்பத்தில்லை. எனவே குறைந்த வருமானம் பெருவோர், இது போன்ற துரித உணவு வகைகளையே வாழ்நாள் முழுதும் உண்கிறார்கள்.

ஆனாலும் ஒரு சில கம்பெனிகள் ஆர்கானிக் உணவு பொருட்களை உற்பத்தி செய்ய ஆரம்பித்தனர். இந்த உணவு பொருட்களை மக்களும் விரும்பி உண்ண ஆரம்பித்த உடன் இது போன்ற ஆர்கானிக் உணவு பொருட்களை உற்பத்தி செய்யும் கம்பெனிகளை பன்னாட்டு கம்பெனிகள் வாங்க தொடங்கி விட்டனர்.

இந்த படத்தை பார்த்து கொண்டு இருக்கும் போது வினவின் தளத்தில் உள்ள இந்த பதிவை பார்த்தேன். இந்த பதிவில் அவர்கள் கூறியிருக்கும் செய்தியும் இந்த படத்தில் வரும் செய்தியும் அப்படியே ஒத்து போய் உள்ளது.

இது போன்ற பிரச்ச்னைகள் தற்போது இந்தியாவிலும் வர தொடங்கி உள்ளது. வரும் முன் காப்பதே நலம்!

அடுத்தது தான் மிக முக்கியமான பகுதி. அது விவசாய விதை உற்பத்தியில் மான்சான்டோவின் பங்கு பற்றியது. அது பற்றி மருதம் தளத்தில் தனி பதிவிடுகிறேன்

--

2 comments:

எஸ்.கே said...

சிறப்பான பதிவு. அப்படம் உண்மைநிலையை விவரிக்கிறது. இதுபோல் இந்தியாவிலும் நடக்கிறதுதானே!

சதுக்க பூதம் said...

வாங்க எஸ்.கே.சுகுனா நிறுவனம் செய்வது ஓரளவு விவசாயத்துக்கு நன்மை தரும் முயற்சி என்று நினைத்திருந்தேன்!ஆனால் இந்த படத்தை பார்த்தவுடன், அது பற்றி சிந்திக்க வேண்டியதாக உள்ளது