Tuesday, December 10, 2013

Genetically Modified சோளமும் கேன்சரும் - ஆய்வு கட்டுரையை திரும்ப பெற்ற பத்திரிக்கை!

மான்சாண்டோ நிறுவனம் ரவுண்ட் அப் என்ற களைகொல்லி மருந்தை பல காலமாக விற்பனை செய்கிறது. இந்த களை கொல்லி மிகவும் சக்தி வாய்ந்தது. பெரும்பாலான களைசெடிகளை இந்த களைகொல்லி அழித்துவிடும். முக்கியமாக பல புல் வகைகளை அழிப்பதால்  விவசாயிகளிடமும் பிரபலமானது. ரேசன் கடைகளில் பெரிய கேன்களில் பிடித்து மண்ணெண்ணெயை விற்பனை செய்வது போல் இந்த களைகொல்லியை விற்பனை செய்யும் காலம் எல்லாம் இருந்தது.சில களைகளுக்கு எதிர்ப்பு தன்மை வந்து விட்டதாகவும், சில உடல் நல தீங்குகள் ஏற்படும் என்றும் பேச்சுகள் அடிபடுகின்றன. இருந்தாலும் தற்போது உபயோகத்தில் உள்ள களை கொல்லிகளில் மிக பிரபலமானவற்றில் ஒன்று இது என்றால் அது மிகையாகாது.

இந்த களைகொல்லியை அடித்தால் வளர்ந்த நிலையில் உள்ள களை செடியுடன் பயிரையும் அழித்துவிடும் தன்மையுள்ளது.எனவே பயிரை விளைவிக்கும் முன் தண்ணீர் விட்டு களையை வளர செய்து இந்த களை கொல்லியை அடித்து களைகளை அழிக்க முடியும். ஆனால் வளர்ந்த நிலையில் உள்ள பயிர் இருக்கும் போது அதனுடன் வளர்ந்த களையை அழிக்க இதை பயன் படுத்த முடியாது.இதற்காக மாண்சான்டோ நிறுவனம் புதிய வகை ஜீன் மாற்றம் செய்ய பட்ட விதைகளை அறிமுகபடுத்தியது. அந்த விதைகள் ரவுண்ட் அப் களைகொல்லிகளை தாங்கி வளரும் தன்மை கொண்டது. எனவே பயிர் வளரும் போதும் இந்த களைகொல்லியை தெளித்தால் பயிர் உயிரோடு இருக்கும் ஆனால் பயிரின் ஊடே வளரும் களை அழிந்து விடும்.

இதனால் உலகளவில் விவசாயிகளிடம் இந்த தொழில்நுட்பம் பிரபலமடைந்து இருந்தது. மான்சான்டோ மற்றுமல்லாது பிற விதை நிறுவனங்களும் தங்களது விதைகளில் ரவுண்ட் அப் எதிர்ப்பு ஜீனை இணைத்து விற்பனை செய்தார்கள். இதனால் மான்சான்டோவை பொருத்த வரையில் பிற விதை நிறுவனங்களிடமிருந்த ராயல்டியாக இந்த தொழில்நுட்பத்தை பயன் படுத்த பணமும், இதனால் ரவுண்ட் அப் களைகொல்லியின் விற்பனை ஏற்றமும் கிடைத்தது. பிற விதை நிறுவனங்கள் அதிக விளைச்சளை தரும் தங்களது விதைகளை உபயோகபடுத்தும் போது களை கட்டுபாட்டுக்கான எளிய வழியாக கூறி தனது நிறுவன விதைகளை விற்றன. விவசாயிகளை பொருத்தவரை விளைச்சளும் களை கட்டுபாட்டிற்கான ஒரு தீர்வாகவும் இது இருந்தது.

உலகை அதிர வைத்த ஆராய்ச்சி

அமெரிக்கா மற்றும் பல நாடுகளில் உற்பத்தியாகும் சோளத்தில் பெரும் பகுதி இந்த தொழில்நுட்பத்தில் வளர்ந்ததே. இந்த வகை சோளம் மற்றும் சோளத்திலிருந்து தயாரிக்க படும் உணவு பொருட்களை சில வருடங்களாக மக்கள் உண்டு வருகின்றனர்.2012ம் ஆண்டு நவம்பர் மாதம்  The Journal of Food and Chemical Toxicology  என்ற ஆராய்ச்சி பத்திரிக்கையில் பிரான்சை சேர்ந்த செராலினி என்ற அறிஞரது ஆராய்ச்சி கட்டுரை அறிவியல் உலகத்தை அதிர வைத்தது.அவரது ஆராய்ச்சியின் படி ரவுண்ட் அப் ஜீன் மாற்றம் செய்ய பட்ட சோளம் எலிகளுக்கு பல்வேறு சுகாதார  கேட்டினை ஏற்படுத்துவதுடன் கேன்சர் கூட ஏற்படுத்தும் தன்மையுடையது. இது 2007ம் ஆண்டு ஜப்பான் நாட்டின் Department of Environmental Health and Toxicology செய்த ஆராய்ச்சிக்கும் 2012ம் ஆண்டு University of Nottingham செய்த ஆராய்ச்சியின் முடிவுக்கும் எதிர்மறையாக இருந்தது.

இந்த ஆராய்ச்சி பற்றி கூறிய செரிலினி, ஜீன் மாற்றம் செய்ய பட்ட சோளத்தை ஒரு வருடத்துக்கு மேலாக எலியை சாப்பிட வைத்தால் தான் இந்த தீங்கு ஏற்படும் என்றும் பெரும்பாலான ஆராய்ச்சிகள் குறைந்த கால அளவிலேயே செய்து முடிக்க படுவதாகவும் அதனால் இந்த தீய விளைவை கண்டு பிடிக்க முடியாது என்றும்  கூறினார்.

இந்த ஆராய்ச்சி முடிவு உலகளவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. பிரான்சு அதிபர் ஐரோப்பிய அளவிலான தடையை NK603 என்ற சோள வகைக்கு ஏற்படுத்த வேண்டும் என்றார்.ரஸ்யா இந்த வகை பயிரை இறக்குமதி செய்ய தடை விதித்தது. கென்யா மரபணு மாற்ற பயிர்களுக்கு தடை விதித்தது.பொதுவாக ஐரோப்பிய கம்பெனிகள் அதிக அளவில் பூச்சு மருந்து வேதி பொருட்களையும், அமெரிக்க கம்பெனிகள் மரபணு மாற்ற விதைகளையும் உற்பத்தி செய்வதால் ஐரோப்பிய நாடுகளிடம் மரபணு மாற்ற விதைகளுக்கு எதிர்ப்பு இருப்பதாக பெரும் பாலானோரால் நம்ப படுகிறது. இந்த ஆராய்ச்சி முடிவு ஐரோப்பாவில் மரபணு மாற்ற பயிர்களுக்கு எதிரான எதிர்ப்பை அதிக படுத்தியது.

ஆராய்ச்சி முடிவை திரும்ப பெற்ற பத்திரிக்கை

கடந்த நவம்பர் மாதம் 29ம் தேதி இந்த ஆராய்ச்சி கட்டுரையை The Journal of Food and Chemical Toxicology  திரும்ப பெற்று  கொண்டது அனைவருக்கும் பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.இந்த ஆராய்ச்சிக்கு பயன் படுத்த பட்ட எலிகளுக்கு கான்சர் பெரும் தன்மை அதிகமாக இயல்பிலேயே இருப்பதாகவும், இந்த ஆராய்ச்சியில் பயன் படுத்த பட்ட உணவை உட்கொண்டதால் தான் கான்சர் ஏற்பட்டது என்று மதிப்பிட சரியான புள்ளியியல் கோட்பாடுகளை பயன் படுத்த படவில்லை என்று காரணம் கூறியது. அதே போல் ஆராய்ச்சியாளர் எவ்வாறு மரபணு மாற்ற பயிர் கான்சரை ஏற்படுத்தும் என்று ஆராய்ச்சி பூர்வமாக விளக்க வில்லை என்றும் கூறியது. இந்த ஆராய்ச்சி கட்டுரையை திரும்ப பெற்றதனால் மரபணு மாற்ற பயிருக்கு எதிரான உடல்நல கேட்டினை ஏற்படுத்தும் ஆராய்ச்சி முடிவுகள்  மிக பெரிய அராய்ச்சி புத்தகங்களில் இல்லாமல் போனது.

இந்த ஆராய்ச்சிக்கு ஆதரவாக பல ஐரோப்பிய ஆராய்ச்சியாளர்களும், மரபணு மாற்ற பயிருக்கு எதிரானவர்களும் உள்ளனர். இந்த ஆராய்ச்சி வெளி வந்த ஆறு மாதம் கழித்து, அந்த ஆராய்ச்சி பத்திரிக்கை Associate Editor for Biotechnology என்ற பதவியை ஏற்படுத்தி அந்த பதவிக்கு மான்சான்டோவின் முன்னாள் பணியாளரான Richard E. Goodman என்பவரை நியமித்தது அனைவரிடமும் ஒரு கேள்விகுறியை ஏற்படுத்தியது.

வளர்ந்து வரும் மக்கள் தொகையும், குறைந்து வரும் விவசாய தொழிலாளர்களும், குறைந்து வரும் விவசாய நில பரப்பும் நவீன வேளாண் தொழில்நுட்பத்தை நோக்கி இட்டு செல்கின்றன. மேலை நாடுகளில் சென்ற நூற்றண்டுகளில்  இருந்தது போல்  அடிமை முறை கொண்ட மலிவான தொழிலாளர்களோ, இந்தியாவில் இருந்தது போல் வர்ணாஸ்ரம முறைபடி சொந்த மக்களையே  அடிமையாக வைத்து மலிவான கூலி தொழிலாளர்களாக உபயோக படுத்தி அதிக தொழிலாளர்களை கொண்ட விவசாயத்தை செய்வது தற்போது வாய்ப்பில்லை. அதே போல் குறைந்த நில பரப்பில் தொழில்நுட்பம் கொண்டு உற்பத்தி திறனை அதிக படுத்தினால் தான் அனைவருக்கும் கட்டுபடியாகும் விலையில் உணவு பொருட்களை உற்பத்தி செய்ய முடியும். மேலை நாடுகளில் இருப்பது போல் இயற்கை விவசாயத்தில் இரு மடங்கு விலையில் உணவு பொருட்களை உற்பத்தி செய்து வசதி வாய்ப்புள்ளவர்களுக்கு மட்டும்  கொடுத்தால் கூட கோடி கணக்கான ஏழை மக்களுக்கு குறைந்த விலையில் உணவு உற்பத்தியை தொழில் நுட்பம் மூலம் உற்பத்தி செய்யத்தான் வேண்டும்.

ஆனால் இது போன்ற சுகாதார ஆபத்து இருக்குமா அல்லது இல்லையா என்பது போன்ற ஆராய்ச்சிகளை ஒரு சில வருடங்கள் பல்வேறு நாடுகளில் கூட்டாக யாருடைய குறுக்கீடும் இல்லாமல் நடு நிலமையுடன் செய்வது அவசியம்.அப்போது தான் மக்களும் பயமின்றி இந்த தொழில்நுட்பத்தை பயன் படுத்துவர். நடு நிலமையிலான பல்வேறு ஆராய்ச்சிகளால் இந்த தொழில்நுட்பத்தின் நம்பகத்தன்மை உறுதி செய்ய பட்டால் இந்த ஆராய்ச்சியின் பயன் அனைத்து பயிர்களுக்கும் அனைத்து மக்களுக்கும் சென்றடையும். அதே சமயம் மிக பெரிய சுகாதார ஆபத்து இருக்குமானால் ஆரம்பத்திலேயே அதற்கு ஒரு மாற்று முறை  நோக்கி ஆராய்ச்சியை கவனம் செலுத்தலாம்.

1940களில் பூச்சு கொல்லியாக அறிமுகபடுத்த பட்ட DDT,  இயற்கை மற்றும் மனித சுகாதாரத்துக்கு ஏற்படுத்தும் சீர்கேட்டை பற்றி ராச்சல் கார்ல்சன் என்ற அறிஞ்சர் 1962ல் மவுன வசந்தம் என்ற புத்தகம் மூலம் வெளி படுத்தினார்.அவருக்கு எதிராகவும் பெரும் அவதூறுகள் வெளியிட பட்டன.1972ல் அவரது கருத்தில்  உண்மை இருப்பதை அறிந்து DDT விவசாய உபயோகத்துக்கு தடை செய்ய பட்டது.அதே நிலை தற்போதைய மரபணு மாற்ற ஆராய்ச்சிக்கும் வந்து விட கூடாது.

Sunday, October 27, 2013

மஞசத்தூளை கேப்சூயூலில் சாப்பிடும் அமெரிக்கர்கள்!

மஞ்சளின் மருத்துவ குணத்தை இந்தியர்கள் பல நூற்றாண்டுக்கு முன்பே கண்டறிந்து விட்டனர். தமிழர்களின் உணவு பழக்கவழக்கங்களில் மஞ்சள் ஒரு முக்கிய பங்கை ஆற்றி வருகிறது. உணவோடு உட்கொள்வது மட்டும் அல்லாமல் பெண்கள் உடம்பின் மேல் பூசி குளிக்கவும் பல காலமாக பயன் படுத்துகிறார்கள்.மஞ்சள் பற்றிய குறிப்புகள் சங்கத்தமிழ் இலக்கியங்களிலேயே வந்துள்ளது குறிப்பிட தக்கது.

குஞ்சி யழகும் கொடுந்தானைக் கோட்டழகும்
மஞ்சள் அழகும் அழகல்ல - நெஞ்சத்து
நல்லம்யாம் என்னும் நடுவு நிலைமையால்
கல்வி அழகே அழகு.  - நாலடியார்



இன்றைய விஞ்ஞானமும் மஞ்சளுக்கு புற்று நோய், நீரழிவு நோய், மூட்டு வலி  போன்ற நோய்களுக்கு நோய் எதிர்ப்பு தன்மையும் , கிருமி நாசினி தன்மையும் இருப்பதாக தெரிவிக்கிறது,

சமீபத்தில் வால்மார்ட் சென்ற போது  Food Supplement பகுதியில் இருந்த ஒரு மருந்து என் கவனத்தை கவர்ந்தது. அது வேறொன்றும் இல்லை. நம்மூர் மஞ்சத்தூள் தான். மஞ்சத்தூளை 500 மில்லிகிராம் அளவு சிறு காப்சூல்களில் அடைத்து விற்கிறார்கள். தினமும் ஒரு காப்சூல் சாப்பிட வேண்டுமாம்.

லேபிலில் தவறாமல்  மஞ்சளின் உபயோகத்தை இந்தியாவில் பல காலமாக உபயோகிப்பது பற்றி தெரிவிக்கபட்டிருந்தது.



சில வருடங்களுக்கு முன் மஞ்சளை காப்புரிமை பெற்று தனியுடமை கொண்டாட சிலர் முயன்றதாக குற்றசாட்டு வைக்க பட்டது. அது போல் இல்லாமல் உலக மக்கள் அனைவருக்கும் நம் முன்னோர்களின் கண்டுபிடிப்பு தடையின்றி சென்றடைந்து பயனுள்ளதாக இருந்தால் மகிழ்ச்சியே!

Tuesday, October 15, 2013

BT பருத்தியும் தமிழகமும்

   கடந்த சில வருடங்களாக ஊடகங்களை தொடர்ந்து படித்து வருபவர்களுக்கு மான்சான்டோவின் மரபணு மாற்ற பருத்தியை எதிர்த்து இந்தியாவில் முக்கியமாக தமிழகத்தில் விவசாயிகள் மிக பெரிய அளவில் எதிர்த்து அதை தமிழகத்திலிருந்தே துரத்தி அடித்த செய்தி தெரிந்திருக்கும். இந்த மரபணு மாற்ற பருத்திக்கு எதிராக தினமும் ஊடகங்களிலும் செய்தி வருவது வாடிக்கையாக உள்ளது.

     இந்த முறை இந்தியா சென்ற போது மரபணு பருத்தியின் எச்சங்கள் எங்காவது தென் படுகிறதா என்று எட்டி பார்க்கலாம் என பருத்தி நிறைய வளரும் ஆத்தூர் பக்கம் போய் பார்த்தேன்ஆத்தூரில் உள்ள பிரபல வேளாண் இடுபொருள் கடைக்கு சென்றிறுந்தேன். அந்த கடை நிறுவனரிடம் இப்பெல்லாம் இந்த பக்கம் எந்த பருத்தி அதிகம் பயிரிடுகிறார்கள் என்று கேட்டேன்? ஒரெ ஒரு ரகம் மட்டும் எல்லாம் போடுறதில்லை பல வகை ரகங்கள் போடுகிறார்கள் என்றார். அப்பாடா! மான்சான்டோவின் பருத்தி இன்னும் மோனோபொலி ஆகவில்லை என்று பெருமூச்சு விட்டேன்..இதோ இங்க இருக்குற ரகங்கள் தான் பெரும்பான்மையாக பயிரிடுகிறார்கள் என்று ஒரு அடுக்கை காண்பித்தார்.அங்கு பல கம்பெனிகளின் விதைகள் குவிக்க பட்டிருந்தது.அங்கு இருந்த விதைகளின் பெரும் பகுதி இந்திய கம்பெனிகளுடையதாக இருந்தது.

     ஒவ்வொரு விதை பாக்கெட்டையும் எடுத்து பார்த்த போது மிக பெரிய ஆச்சர்யம் ஏற்பட்டது. ஆச்சர்யம் என்ன என்றால் அனைத்து விதைகளும் மிக பெரிய அளவில் தங்களை விளம்பர படுத்தி இருந்தது அந்த விதைகளில் இருந்த cry ஜீன் எனப்படும் மரபு பொருள் பற்றி தான். cry ஜீன் என்ற பெயர் எங்கோ கேட்டது போல் இல்லை?இது வேறொன்றுமில்லை. மான்சாண்டோ தனது மரபணு மாற்ற பருத்தியில்  இருப்பதாக கூற பட்டுள்ள பூச்சு கொள்ளியை உருவாக்கும் மரபு பொருள் தான்.மரபணு மாற்ற பருத்தி வந்தால் இந்தியாவில் மான்சாண்டோ தவிர வேறெந்த பருத்தி விதையும் இருக்காது என்றார்களே? தற்போது பல கம்பெனிகளும் இருக்கிறதே என்ற குழப்பம் பலருக்கு வரலாம்.பெரும்பாலானவர்கள் நினைப்பது போல் மான்சான்டோ தனது பருத்தி விதையை மட்டும் கொண்டு ஒட்டு மொத்த இந்திய மார்கெட்டையும் கை பெற்றவில்லை. ஆனால் அதன் விற்பனை யுக்தியே வேறு.அது பற்றி அறிய கொஞ்சம் விவசாய அறிவியல் பற்றியும் பின் சென்று பார்ப்போம்.

     ஆதி மனிதன் நாடோடியாக திரிந்து கொண்டிருந்த போது ,போகும் இடத்தில் தனக்கு கிடைக்கும் காய் கனிகளையும் மாமிசத்தையும் உண்டு வாழ்ந்தான்.அதன் பிறகு ஒரு இடத்தில் இயற்கையாக இருந்த மரம் மற்றும் பிற செடிகளை அழித்து  தொடர்ந்து பயிரிட தொடங்கினான். இந்த இயற்கைக்கு மாறாக செயற்கையாக செய்யும் செயலே விவசாயம் ஆனது. ஆற்றங்கரை நாகரீகங்கள் தொடங்கிய போது ஏற்பட்ட நகரமயமாதலின் அடிப்படையே  இந்த செயற்கையான விவசாயம் தான். அதாவது நகரத்தில் விவசாயம் அல்லாத தொழிலில் ஈடு பட்டவரக்ளுக்கு கிராமங்களில் இருந்து பெரிய அளவில் உணவு பொருட்களை விவசாயம் மூலம் கொடுக்க முடிந்தது. மனிதனும் நீண்ட நாள் சேமிப்புக்கு ஏற்ற தானியம் மற்றும் தனக்கு தேவையான காய் கறிகளை அந்தந்த இடங்களில் இருக்கும் தாவரவகைகளை அழித்து பயிரிட தொடங்கினான்.

     கடந்த சில நூற்றாண்டுகள் வரை போர், நோய், பஞ்சம் போன்றவற்றால் மக்கள் தொகை பெருக்கம் ஓரளவு கட்டுபடுத்த  பட்டு வந்தது.கடந்த சில நூற்றாண்டுகளில் ஏற்பட்ட மருத்துவ வசதி காரணமாக  மக்கள் பெருக்கம் கட்டு கடங்காமல் போனது.பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஈடாகவும், தொழில் நுட்ப வளர்ச்சி காரணமாகவும் மனிதன் அளவுக்கு மீறி இயற்கை வளத்தை உபயோகிக்க ஆரம்பித்தான்.

     பெருகி வரும் மக்களின் பசியை போக்க உற்பத்தியை பெருக்க வேண்டியது அவசியமானது. அதற்கு  விளைநிலங்களின் பரப்பை அதிகரித்து உற்பத்தியை அதிகரித்தனர். ஆனால் ஓரளவுக்கு பின் புதிய விலைநிலங்கள் கிடைப்பது அரிதானவுடன்  உற்பத்தி திறனை அதிகரிக்க வேண்டியதின் அவசியம் அதிகரித்தது.அதற்கு விவசாய துறை மற்றும் உயிரியல் துறைகளில் மாபெரும் ஆராய்ச்சிகள் நடந்தன.பதினெட்டாம் நூற்றாண்டில் கிரிகர் மெண்டல் என்னும் துறவி பெற்றோர்களிடம் இருந்து எவ்வாறு குழந்தைகளுக்கு பண்புகள் கடத்தபடுகிறது என்று பட்டணி செடியில் ஆய்வு செய்து கண்டறிந்தார்.இரு வேறு பண்புடைய செடிகளை மகரந்த சேர்க்கை செய்து நமக்கு தேவையான பண்புகளை பெரும்பான்மையாக கொண்ட செடிகளை உருவாக்க பயிர் பெருக்க அறிவியல்(Plant Breeding)பெருமளவில் வளர்ந்தது.

  டீ-ஜீ-வோ-ஜென் என்ற நெல் பயிரில் இருந்த குட்டையாக வளர செய்யும் மரபு பொருளை கொண்டும் Norin 10 என்னும் கோதுமை வகை கொண்டும் பசுமை புரட்சியை உருவாக்கி பட்டினியிலிருந்து 1970 களில் இந்தியாவை காத்தனர். இந்த டீ-ஜீ-வோ-ஜென் என்ற நெற் பயிரை பிற தேவையான பண்புகளை கொண்ட நெற் பயிர்களுடன் கலப்பினம் செய்து பல நூறு வகையான நெற்பயிற்கள் உருவாக்கபட்டன.பெரும்பாலான ஆராய்ச்சிகள் அரசு மற்றும் சர்வதேச ஆராய்ச்சி நிலையங்களில் தான் நடைபெற்றது. எனவே அதன் கண்டு பிடிப்புகளுக்கு விவசாயிகள்பணம் கொடுக்க தேவை இல்லை.

உயிர் தொழில்நுட்பவியலில் ஏற்பட்ட ஆராய்ச்சியின் பயனாக பண்புகளை நிர்ணயிக்கும் மரபு பொருளை (gene) ஆராய்ச்சி கூடத்தில் தனியே பிரித்தெடுத்து அதனை மற்றொரு உயிரிக்குள் செலுத்தி புதிய பண்புகளை மற்றொரு உயிரியில் வெளி படுத்த முடிந்தது.1970களில் மரபு பொருளான ஜீனை ஒரு பாக்டீரியாவிலிருந்து மற்றொரு பாக்டீரியாவுக்கு மாற்றி முதல் காப்புரிமையை இந்திய விஞ்ஞானி ஆனந்த சக்ரவர்த்தி GE கம்பெனியில் வேலை செய்யும் போது பெற்றார்.  .இந்த தொழில்நுட்பம் எந்த உயிரியின் பண்பையும் எந்த உயிரியிலும் வெளிபடுத்த கூடிய அளவிற்கான ஆராய்ச்சிக்கு இட்டு சென்றது..முக்கியமாக நுண்ணியிரியில் உள்ள பண்புகளை தாவரத்துக்கு கொண்டு செல்ல முடிந்தது.

   பணபயிற்களில் முக்கிய ஒன்றாக இருப்பது பருத்தியாகும். நல்ல விளைச்சல் இருந்து, மார்கெட்டிலும் நல்ல விலை இருக்கும் போது பருத்தி விவசாயிகளுக்கு கிடைக்கும் லாபமும் அதிகம். பருத்தியை தாக்கும் பூச்சுகளில் முக்கியமானது காய்புழு(Helicoverpa armigera) ஆகும். இதை கட்டுபடுத்த விவசாயிகள் பல வகையான பூச்சி மருந்தை பல முறை அடிப்பர்.இதற்காக ஏக்கருக்கு பல ஆயிரம் செலவாகும். பூச்சி மருந்தின் பயன் அதிகமாக, அதிகமாக பூச்சிகளின் நோயெதிர்ப்பு தன்மையும் அதிகமானது. அதற்கு ஈடாக புதிய வகை பூச்சிகொள்ளி மருந்துகள் அறிமுகமாகி கொண்டே இருந்தன.விவசாய இடு பொருட்களின் செலவு அதிகமானதால் வறட்சி காலங்களில் விளைச்சல் குறைந்தாலோ, பூச்சிகள் கட்டு படுத்த முடியாத அளவு சென்றாலோ விவசாயிகளின் கடன் சுமை அதிகமாகி தற்கொலை வரை இட்டு சென்றது.

  Bacillus thuringiensis என்ற நுண்ணுயிரி பருத்தியை அழிக்கும் காய்புழுவுக்கு நோயை ஏற்படுத்தி கொல்ல கூடிய தன்மையை கொண்டிருந்தது. அது புழுவை எவ்வாறு கொல்கிறது என்று ஆராய்ந்த போது அது சுரக்கும் ஒருவகை புரதம் தான் புழுவின் சாவுக்கு காரணம் என்று தெரிந்தது. அந்த நுண்ணியிரி சுரக்கும் புரதம் கார தன்மையுள்ள புழுக்களின் இரைப்பையில் அதுவும் குறிப்பிட்ட இரைப்பை உட்சுவர் கொண்ட புழுக்களின் மீது மட்டும் தீங்கை விளைவிக்க கூடியது. அந்த நுண்ணியிரியை கொண்டு இயற்கையான
உயிரியல் முறையில் பூச்சியை கட்டு படுத்தும் முறை பல வருடங்கள் கடை பிடிக்கபட்டன. முன் கூறிய படி உயிர் தொழில் நுட்ப ஆராய்ச்சியில் ஏற்பட்ட முன்னேற்றம் காரணமாக நுண்ணியிரியில் புழு கொல்லி புரதத்தை உற்பத்தி செய்யும் மரபு பொருள் கண்டுபிடிக்க பட்டு அந்த மரபு பொருளை பருத்தி செடியில் புகுத்தி விட்டனர்.அதன் விளைவாக மரபணு மாற்ற பட்ட பருத்தியை உண்ணும் புழுக்கள் இறந்துவிடும்.இந்த தொழில்நுட்பத்தை உருவாக்கிய மான்சாண்டோ நிறுவனத்திடம்  தான் இந்த பண்புகளை உடைய விதையை வாங்க வேண்டும்.இத்துடன் இந்த பிளாஷ் பேக் முடிவடைகிறது.


மான்சான்டோ - பருத்தி - cry ஜீன்

பொதுவாக ஊடகங்களில் வரும் செய்தியை படிப்பவர்கள் மனதில் மான்சான்டோவின் இந்த தொழில்நுட்பம் மூலம் ஒட்டு மொத்த பருத்தி விதை உற்பத்தியின் மோனோபோலி ஆக மான்சான்டோ ஆகி விடக்கூடைய அபாயம் உள்ளது என்ற பயம் இருக்கும்.அதாவது
மரபணு மாற்ற பட்ட பருத்தியை விற்பதன் மூலம் பிற பருத்தி ரகங்கள் எல்லாம் அழிந்து மான்சான்டோவின் பருத்தி விதை மட்டும்பிற்காலத்தில்  இருக்கும் என்று எண்ண தோன்றும்.ஆனால் உண்மை அதுவல்ல.

     மான்சான்டோ பிடி புரத பொருளை உருவாக்கும் மரபு பொருளை பயிரில் உபயோக படுத்துவதை காப்புரிமை செய்துள்ளது. மான்சான்டோ தனது பருத்தி விதையில் பிடி மரபணு மாற்ற பருத்தியை விற்றாலும் அது பிற நிறுவனங்களின் விதைகளிலும் அந்த மரபணுவை உபயோகிக்க அனுமதிக்கிறது. ஆனால் அதை உபயோகபடுத்தும் விதை நிறுவனங்கள் மான்சான்டோவிற்கு ராயல்டி பணத்தை கொடுத்து விட வேண்டும்.(இதுவே மிக பெரிய லாபகரமான வியாபாரம்! கண்டுபிடிப்பு செலவு தவிர வேறு செலவு இல்லாமல் தொடர்ச்சியாக வருமானம் வந்து கொண்டு இருக்கும்). பிற
நிறுவனங்களை பொருத்தவரையில் அவர்களிடம் நல்ல விளைச்சல் தருவதோடு வேறு  பல நல்ல பண்புகளை கொடுக்கும் விதை ரகங்கள் உள்ளன. அவர்கள் உண்மையிலேயே  பிடி  மரபணுவுக்கு நல்ல பூச்சு கொல்லி தன்மை  இருக்கும் வரை அவர்களது ரகங்களில் மான்சான்டோவின் மரபணு பொருளை இணைத்து விற்பார்கள். விதையின்  விலையின் ஒரு பங்கை  மான்சான்டோ நிறுவனத்துக்கு கொடுப்பார்கள்.

   ஆத்தூரில் உள்ள கடையில் விற்பனைக்கு வைத்திருந்த பருத்தி விதைகளில் பெரும்பான்மையான விதைகள் இது போல் பல் வேறு நிறுவனக்கள் மார்கெட்டில் பெயர் போன தங்களது விதைகளில் மான்சான்டோவின் மரபணு பொருட்களை இனைத்து விற்பனை செய்யும் விதைகள் தான்.  இந்த கம்பெனிகளின் வரிசையில் மக்களுக்கு பரிட்சமான ராசி, மகிக்கோ என அனைத்து நிறுவனங்களும் உள்ளன.

    பொதுவாக ஊடகங்களில் வரும் செய்திகள் அனைத்தும் மரபணு மாற்ற தொழில் நுட்பத்துக்கு எதிரானதாகவே இருக்கும். மரபணு மாற்ற தொழில் நுட்பத்தின் தீமைகளை பற்றி விலாவாரியாக எழுதி விட்டன. ஆனால்  நாட்டில் சாதாரண விவசாயிகளின் மனோநிலை  என்ன? இன்றைய சந்தையில் இந்த தொழில்நுட்பத்தின் உண்மையான நிலவரம் என்ன என்று அறிய ஆவல் எனக்கு நிறையவே இருந்தது. அப்போது அந்த கடையின் உரிமையாளர், கடைக்கு வந்திருந்த சில விவசாயிகள் மற்றும் அப்போது அங்கிருந்த வேளாண் அறிஞர் என  அனைவரிடமும் உரையாட வாய்ப்பு கிடைத்தது. அந்த உரையாடலின் ஒரு பகுதியை இங்கு பகிர்கிறேன்.

    தமிழகத்தில் பிடி காட்டனை விவசாயிகள் எதிர்த்து ஒட்டு மொத்தமாக விரட்டி விட்டார்களே உண்மைதானே?

    பெரும்பான்மையான விவசாயிகள் தற்போது வாங்குவது பிடி மரபணு மாற்றபட்ட விதைகளை தான். அதனால் மார்கெட்டில் இருக்கும் மிக முக்கிய நிறுவனங்கள் அனைத்தும் தங்களது விதையில்  பிடி ஜீனை பொருத்தி விற்று வருகிறார்கள்.வேண்டுமென்றால் இங்கு  அடுக்கியிருக்கும் விதைகளை எடுத்து பார்த்து கொள்ளுங்கள். விற்பனையான விதைகள்  அளவு வேண்டுமானாலும் பார்த்து கொள்ளுங்கள்.

பிடி பருத்தி வாங்கிய விவசாயிகள் பிற மாநிலங்களில் தற்கொலை செய்து கொள்வதாக செய்தி வருகிறதே? உண்மையிலேயே பிடி பருத்தியினால் லாபம் உள்ளதா? அல்லது மருந்து கம்பெனி மற்றும் அரசாங்கத்தின் அச்சுறுத்தலுக்கு பயந்து வாங்குகிறீர்களா?


அரசாங்கமோ அல்லது மருந்து கம்பெனிகளோ யார் எங்களை அச்சுறுத்த?. கடன் வாங்கி எங்களது சொந்த முயற்சியில் செலவு செய்து விவசாயம் செய்கிறோம். நஷ்டம் வந்தால் பாதிக்கபட போவது  எங்க குடும்பம் தான். எனவே எங்களுக்கு எது சரி என படுகிறதோ, எது  லாபாமாக இருக்கிறதோ அதை நாங்கள் கடை பிடிப்போம்.முன்பெல்லாம் காய் புழுவிடமிருந்து பருந்தியை காப்பாற்ற பலமுறை மருந்து அடிப்போம். அதற்கான செலவு பல்லாயிரத்தை தாண்டும். பிடி காட்டனை போடுவதால் உபயோக படுத்தும் மருந்தின் அளவு பல  மடங்கு குறைந்துள்ளது. அது மட்டுமன்றி விளைச்சளும் ஓரளவுக்கு நன்றாக உள்ளாது. அதனால் தான் வாங்குகிறோம்.

மரபணு மாற்ற பருத்தி விதையின் விலை அதிகம் என்கிறார்களே அது உண்மையா?

உண்மை தான். ஒரு 500 ரூபாய் அதிகம் கொடுத்தாலும் , அது பூச்சு கொல்லி மருந்தின் செலவில் பல ஆயிரம் குறைகிறது. அதனால் விதைக்கு செய்யும் அதிக  செலவு குறிப்பிட தகுந்த அளவில் தெரிவதில்லை.

அப்ப மரபணு மாற்ற விதை உபயோக படுத்துவதால் பூச்சி தாக்குதலே இல்லாமல் பூச்சு மருந்தே தெளிப்பதில்லை என்று கூறுகிறீர்களா?

உண்மை அதுவல்ல. பருத்தியை தாக்கும் முக்கிய பூச்சியான காய்புழுவின் தாக்குதல் குறைந்து விட்டது. ஆனால் பருத்தி இலையை தாக்கும் சாறுண்ணி பூச்சிகளின் தாக்குதல் அதிகமாகவே உள்ளது. அதற்கு பூச்சு கொல்லி மருந்தை உபயோக படுத்த வேண்டியுள்ளது.  ஆனால் இப்ப்பொதெல்லாம் முன்பு போல் மிக அதிக அளவில் பூச்சி மருந்து அடிக்க  தேவை இல்லை.

மரபணு மாற்ற விதைகளால்  மனிதர்களின் உடல் நலத்திற்கு மிக பெரிய அளவில் பாதிப்பு ஏற்படும் என்கிறார்களே? அதை பற்றியெல்லாம் கவலை இல்லையா?

கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக அமெரிக்காவில் உற்பத்தியாகும் சோயா, மக்காசோளம் போன்றவற்றில் பெரும்பான்மையான பகுதி மரபணு மாற்ற விதைகளை உபயோகபடுத்தி பயிராகிறது. அதை உட்கொள்ளும் அமெரிக்கர்களுக்கும், அந்த பொருட்கள் ஏற்றுமதியாகி  செல்லும் பிற நாடுகளில் உள்ளவர்களுக்கும் எதுவும் ஏற்படுவதில்லை. அதை விடுங்கள், அங்கு உற்பத்தியாகும் பொருட்களை வைத்து தான் food preservative மற்றும் packed foods போன்ற  பலவற்றை தயாரிக்கிறார்கள் அதை நாம் அனைவரும்  உண்டு கொண்டு தான் உள்ளோம்.  என்ன ஆயிற்று?

பிடி பருத்தியை உண்டு வாழ கூடிய எதிர்ப்பு தன்மை புழுவிற்கு வந்து விட்டால் பருத்தியையே காக்க முடியாது என்கிறார்களே?

எந்த ஒரு பூச்சியையும் கட்டு படுத்த பல வகையிலான பூச்சி கொல்லிகள் உள்ளன. ஒவ்வொரு பூச்சி கொல்லியும் வெவ்வேறு வகையில் பூச்சிகளின்  உயிர்வேதியல் பாதைகளில் குறுக்கீடு செய்து பூச்சிகளை கொல்கின்றன. முன்பெல்லாம் ஒரு பூச்சு கொல்லியை  தொடர்ந்து உபயோகிக்கும் போது, சில ஆண்டுகளில் அந்த பூச்சுகளுக்கு அந்த பூச்சு கொல்லியிலிருந்து எதிர்ப்பு தன்மை அடைந்தவுடன் வேறு பூச்சுகொல்லியை உபயோகிக்க ஆரம்பிப்போம். அது போல பிடி பருத்தியின் பூச்சி எதிர்ப்பு தன்மை குறைந்தால் அதை  உபயோக படுத்துவதை நிறுத்தி விடுவோம். வேறு பூச்சு கொல்லியை பார்த்து போக வேண்டியது தான்.

இது இயற்கைக்கு எதிரான தொழில்நுட்பம் என்கிறார்களே?

உங்களுக்கு உடம்புக்கு நோய் வந்தால் நீங்கள் வாங்கும் மருந்தின் பல, இதே மரபணு மாற்ற தொழில்நுட்பத்தின் மூலம் தான் தயாராகிறது. அது இயற்கைக்கு மாறானது என்று ஒதுக்க வேண்டியது தானே. ஒவ்வொரு தொழிலிலும் தொழில்நுட்ப வளர்ச்சி எங்கோ போய்  கொண்டிருக்கிறது. உடுக்கும் உடையிலிருந்து, சுகாதாரம், கட்டிடம், உடை, நுகர் பொருள் என்று அனைத்திலுமே இயற்கைக்கு மாறான தொழில்நுட்பம் தான் பயனாகிறது. அவை அனைத்தும் சுற்றுசூழல் கேட்டை தான் ஏற்படுத்தும். இருந்தும் மக்கள் தொகை வளர்ச்சி,  மனிதனின் quality of life கருத்தில் கொண்டு அனைத்தையும் ஏற்று கொள்கிறோம். ஆனால் அதே தொழில்நுட்பத்தை விவசாயிகள் மட்டும் பயன் படுத்த கூடாது என்று சொன்னால் என்ன நியாயம்?இவ்வளவு பேசும் நீங்கள் இங்கு இயற்கையான மாட்டு  வண்டியில் வருவது தானே? ஏன் புவி வெப்பமாக்கும் காரில் வருகிறீர்கள்?

இந்த பதிவு பத்திரிக்கைகளிலும், Facebookலும் வரும் செய்திகளை தாண்டி தமிழக கிராமங்களில் உண்மையான நிலவரம் எவ்வாறு உள்ளது என்று தெரிந்து கொள்வதற்காக எழுத பட்டது தான்.மற்ற படி பிடி தொழில்நுட்பத்தை பற்றி என்னுடைய ஆதரவோ அல்லது எதிர்ப்பு பதிவோ அல்ல.


பின் குறிப்பு:
 மரபணு மாற்று  தொழில்நுட்பம் பற்றி அறிவியல் ரீதியாகவும், சந்தை படுத்துதல் ரீதியாகவும், நீதி நெறி (ethics) ரீதியாகவும், சுற்றுசூழல் பாதிப்பு ரீதியாகவும், பிற்கால விவசாய தொழிலை உலகளவில் எவ்வாறு பாதிக்க கூடும் என்றும் விரிவான  தொடர்  பதிவை  "நேரம் கிடைக்கும் போது எழுதலாம் " என்று பல மாதங்களாக நினைத்து வருகிறேன். நினைத்து கொண்டே உள்ளேன்!

Sunday, May 12, 2013

சாலமன் பாப்பையா மற்றும் அறிவுமதியுடன் சில நாட்கள்

சான்பிராசிஸ்கோ வளைகுடா பகுதி தமிழ் மன்றம் சாலமன் பாப்பையா தலைமையிலான பட்டிமன்றம் மற்றும் கவிஞர் அறிவுமதி அவர்களுடன் உரையாடலும் நடத்த ஏற்பாடு செய்திருந்தனர்.வெள்ளிகிழமை மாலை திரு சாலமன் பாப்பையா மற்றும் கவிஞர் அறிவுமதி ஆகியோருடன் இரவு உணவுடன் கூடிய சந்திப்பும், அடுத்த நாள் சாலமன் பாப்பையா தலைமையில் பட்டிமன்றமும் ,ஞாயிற்று கிழமை அறிவுமதியுடன் கவிதை பட்டறையும் நடைபெற்றது.

கவிஞர் அறிவுமதி அவர்கள் ஒரு வாரமாக பல்வேறு குடாபகுதி தமிழர்களை குழுக்களாக சந்தித்து அவர்களிடம் படைப்பிலக்கியத்தில் அமெரிக்க தமிழர்களை ஈடுபட ஊக்கபடுத்தி வந்தார்.தினமும் காலையிலிருந்து நள்ளிரவு வரை சலைக்காமல் பல்வேறு குழுக்களை சந்தித்து அவர்களை தமிழில் எழுத ஊக்கபடுத்தி வந்தார்.ஒரு வார காலத்தில் பல்வேறு நிகழ்ச்சியிலும், தனி மற்றும் பொது சந்திப்புகளிலும் அந்த தமிழறிஞ்சர்களிடம் உரையாட வாய்ப்பு கிடைத்தது. அப்போது பேசும் போது பல சுவாரஸ்யமான தகவல்கள் கிடைத்தன. அவற்றில் சில தகவல்கள்.

அப்துல் ரகுமான்

எழுபதுக்களிலிருந்து  இளம் கவிஞர்களை அடையாளம் கண்டறிந்து அவர்களை வெளி உலகத்துக்கு அடையாளம் காட்டி தொடர்ந்து அவர்களது வளர்ச்சிக்கு உதவுவதில் கவிக்கோ அப்துல் ரகுமான் முக்கிய பங்கு வகிக்கிறார். கவிஞர் அறிவுமதி தனது குருவாக அப்துல் ரகுமானை கூறுகிறார். அப்துல் ரகுமான் நல்ல கவிஞர் என்று தெரியும். ஆனால் அவர் இன்றைய தமிழறிஞர்கள் பல பேரை எவ்வாறு வளர்க்க உதவியிருக்கிறார் என்று நினைத்த போது ஆச்சர்யமாக இருந்தது. சில மாதங்களுக்கு முன் அமெரிக்கா வந்த திரு.அப்துல் காதர் கூட அவரை வளர்க்க உதவியது அப்துல் ரகுமான் தான் என்று கூறியிருந்தார் . ஒரு முறை விழுப்புரத்திலிருந்து இரண்டு ஏழை இளைஞர்கள் கவிதை தொகுப்புடன் அப்துல் ரகுமானை காண வந்த போது அப்துல் ரகுமான் அவர்களுக்கு நல்ல உடைகளை வாங்கி வந்து கொடுத்து குளித்து நல்ல உணவு கொடுத்து அவர்களை ஆசுவாசபடுத்தி அவர்களின் கவிதைகளை படித்து அதை செம்மை படுத்த உதவி செய்து அந்த நூலக்கு முகவுரையும் எழுதி கொடுத்துள்ளார்.

அறிவுமதி

கவிஞர் அறிவுமதி 200க்கும் மேலான திரைபட  பாடல்களை எழுதி உள்ளார். அவர் எந்த பாடலிலும் ஆங்கிலம் கலப்பே இல்லாமல் எழுதி உள்ளார். அவரது பாடலில் ஒரு இயக்குனர் ஆங்கில சரணத்தை கலந்து வெளியிட்ட போது அதை தமிழுக்கு செய்த அவமானமாக டைரக்டருக்கு கடிதம் எழுதியதன் விளைவாக அந்த டைரக்டரிடம் மீண்டும் பாடல் எழுத வாய்ப்பே கிடைக்கவில்லையாம் .

கவிஞர் அறிவுமதி விருத்தாசாலம் அருகில் பிறந்தவர். அண்ணாமலை பல்கலைகழகத்தில் தமிழ் கற்றவர்.70க்களில் வைரமுத்துவுடன் மிகவும் நெருங்கிய நண்பர்.ஒன்றாக வளர்ந்தவர்கள்

அறிவுமதி ஆரம்பகாலத்தில் உதவி இயக்குனராக பணியாற்றியவர். பாலுமகேந்திரா மற்றும் பாரதிராஜாவுடன் பல ஆண்டுகள் உதவி இயக்குனராக பணியாற்றி உள்ளார்,

பாலுமகேந்திரா ஒரு படம் எடுக்கும் போது இடைவேளைக்கு முன், பின் எத்தனை காட்சி அமைக்க வேண்டும் என்று முடிவு செய்து, ஒவ்வொரு காட்சியும் எவ்வளவு நேரம் வர வேண்டும் என்று திட்டமிட்டு கச்சிதமாக தேவையான காட்சி மட்டுமே திறம்பட எடுப்பாராம்.

அறிவுமதி பாலுமகேந்திராவிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய போது மதுரையிலிருந்து ஒரு இளைஞர் சினிமா துறையில் சேர ஆசைபட்டு வந்துள்ளார். அவரை பட இயக்கத்தின் போது தினமும் அழைந்து சென்று காலை முதல் இரவு வரை படமெடுக்கும் இடத்தில் இருக்க வைத்து  திரைபட நுணுக்கங்களை கற்று கொள்ள விட்டிருக்கிறார். அந்த படம் முடிந்தபின்  பாலுமகேந்திராவிடம் பணியாற்றிய உதவி இயக்குனர் ஒருவர் வெளியேறி இருக்கிறார். அப்போது பாலுமகேந்திரா புதிய உதவி இயக்குனர் தேவை என்று இவரிடம் சொன்ன போது அறிவுமதி அந்த இளைஞரை பரிந்துரை செய்திருக்கிறார். அதற்கு பாலுமகேந்திரா அவர் எங்கு பணியாற்றியிருக்கிறார் என்று கேட்டதற்கு உங்களிடமே உங்களுக்கு தெரியாமல் என்று கூறி இருக்கிறார். அந்த இளைஞர் பெயர் பாலா!

73, அபிபுல்லா சாலை - இது அறிவுமதியின் அலுவலகம். இந்த அலுவலகம் பல்வேறு இளம் கலைஞர்களை வளர்த்துள்ளது. சுந்தர்.சி, செல்வபாரதி, சீமான், பாலா, பழநிபாரதி, நா.முத்துக்குமார், நந்தலாலா, யுகபாரதி, கபிலன், தபூசங்கர், அஜயன்பாலா, ஜெயா, சரவணன், நெல்லை ஜெயந்தா என பல கலைஞர்களை வளர்த்து விட்டதில் அறிவுமதியின் பங்கு உள்ளது!

70க்களிளிருந்து பல்வேறு கவிதை தொகுதிகளை வெளியிட்டுள்ளார் அறிவுமதி.அவரை பற்றி மக்கள் அவரது கவிதை தொகுதிகள் மூலம் சென்றடையாமல் திரைப்பட பாடல்கள் மூலம் மட்டுமே அறிவது அவருக்கு வருத்தத்தையே அளிக்கிறது,

அறிவுமதி சிறந்த பேச்சாளர். சமூக ஆர்வலர்களிடம் சமூக ஏற்றதாழ்வுகள் பெரியார், திருமாவளவன் போன்றோர் பற்றியும் படைப்பிலக்கியவாதிகளிடம் கதை கவிதை மற்றும் தமிழறிஞர்கள் பற்றியும் அர்த்தமுள்ளதாக பேசுகிறார்.

அமெரிக்க தமிழ் மன்றங்கள் நாட்டுபுற கவிஞர்களையும் மதித்து அவர்களையும் அமெரிக்காவுக்கு அழைத்து அவர்களது திறமைகளை வெளிநாடுகளில் காட்டவைத்து அவர்களையும்  அவர்களது கலைகளையும் ஊக்கபடுத்த வேண்டும் என்றார்

சாலமன் பாப்பையா

சாலமன் பாப்பையா அனைவரிடமும் மிகவும் மரியாதையுடன் பண்புடனும்,அமைதியாகவும், பணிவாகவும்,அன்பாகவும் பழகுகிறார்.முடிந்தவரை சர்ச்சிக்குறிய பேச்சுக்களை தவிர்க்கிறார்.ஓரளவு காங்கிரஸ் சார்புள்ளவரோ என்று நினைக்க தோன்றுகிறது.

தமிழ் சொற்களை ஏன் பெரும்பாலானோர் பயன் படுத்துவதில்லை என்பதற்கு நல்ல காரணம் சொன்னார். திராவிட இயக்கங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் அனைத்து பொருட்களிலும் தமிழிலும் பெயர் போட வேண்டும் என்ற சட்டம் கொண்டு வருவதாக கூறினார்கள்.ஆனால் அதை அவர்கள் நடைமுறைபடுத்தவில்லை. தற்போது லட்சகணக்கான புது வித பொருட்கள் வந்து விட்டது. எதற்குமே தமிழ் பெயர் இல்லை.  இப்போது தமிழ் பெயர் தெரியாத பொருட்களை தமிழில் கூற வேண்டும் என்றால் எப்படி கூறுவார்கள் என்றார்.

திருவள்ளுவரின் இன்றைய உருவம் பல்வேறு மதத்தினரின் கருத்துகளை புகுத்த பட்டு  எப்படி வந்தது என்று விளக்கினார். சைவரகள் அவருக்கு தாடியையும், வைணவர்கள் அவருக்கு குறுக்கு வாட்டு துணியையும் கொடுத்ததாக கூறினார். அவர் அடிப்படையில் சமணராக(கடவுள் = எண்குணத்தான்) இருந்திருக்களாம் என்று கூறுகிறார்.திருக்குறளை எடுத்து சென்றதில் சைவர்களை விட வைணவர்கள் பங்கே அதிகம் என்று கூறுகிறார். (கம்பர் தான் திருக்குறள் மற்றும் அதன் கருத்துக்களை பெரிய அளவில் கம்ப ராமாயணம் மூலம் கொண்டு சென்றவர் என்கிறார். எனக்கு அது எவ்வாறு என்று புரியவில்லை!)

திருக்குறள் முனுசாமி என்பவர் இல்லை என்றால் திருக்குறள் மக்களிடையே இன்றைய முக்கியத்துவம் பெற்றிருக்காது என்கிறார்.  அவருடைய முயற்சியாலும் அன்றைய காங்கிரஸ் கட்சி திருக்குறளை பாட புத்தகத்தில் சேர்த்ததாலுமே திருக்குறள் இன்று அனைவரையும் சேர்ந்தது என்கிறார்.

இது போன்ற நிகழ்ச்சிகளை தமிழ் மன்றங்கள் நடத்துவதால் வெளி நாடுகளில் வசிக்கும் தமிழர்களுக்கு தொடர்ந்து தமிழ் ஆர்வம்  வளர காரணமாக  உள்ளது.

Sunday, March 31, 2013

வறட்சியிலிருந்து காக்கும் Anti-Stress - World AgriExpo 6

பொய்க்கும் பருவ மழையும், தண்ணீர் விட மறுக்கும் அண்டை மாநிலங்களும் தமிழக பயிர்களை வாட விட்டு கருக செய்வது வாடிக்கையாகி விட்ட இந்த காலத்தில் வறட்சியால் பயிர்கள் வாடும் போது  வறட்சியிலிருந்து பயிரை சிறிது காலத்துக்கு காக்கும் தொழில்நுட்பம் இன்றைய காலத்தின் கட்டாயமாக உள்ளது.உலக வேளாண் பொருட்காட்சியில் அது சம்பந்தமான ஒரு தொழில் நுட்பத்தை பார்த்தேன்.

 

Polymer AG என்ற நிறுவனத்தினர் Anti-Stress 2000 என்ற நூதன தொழில்நுட்பத்தை பார்வைக்கு வைத்திருந்தார்கள். Anti-Stress 2000 என்பது 44% கொண்ட கரைசல் ஆகும்.இந்த கரைசலை தண்ணீரோடு கலந்து செடியின் மீது தெளிக்கையில் பகுதி அளவு ஊடுருவ வள்ள மேல் பூச்சு (Semi permeable coating ) இலைகளின் மீது படிகிறது.இந்த பூச்சானது நீராவி போக்கை( evapro transpiration ) 35 முதல் 50 சதவீதம்  வரை குறைக்கிறது.தண்ணீர் வறட்சி மட்டுமின்றி, கடுங்குளிர், நடவு நடும் போது ஏற்படும் தாக்கம், சூடான காற்று போன்றவற்றினால் ஏற்படும் தாக்கத்தை கூட மட்டுபடுத்துவதாக கூறுகிறார்கள்.

Highly Concentrated Anti-Stress thin flim for demonstartion (It will not be this thick when applied to plant)


வறட்சியிலிருந்து பயிரை காக்க இந்த கரைசலை வறட்சி ஏற்படுவதற்கு சிறிது முன்னராக தண்ணீர் நன்கு பாயவிட்டு தெளித்து விட வேண்டும். இது படத்தில் உள்ளது போல் சவ்வு போன்ற பகுதி ஊடுருவ கூடிய பூச்சை ஏற்படுத்தும். இந்த பூச்சானது சிறிய மழையினால் கூட கரையாது.நீராவி போக்கை குறைப்பதால் செடியில் உள்ள தண்ணீர் வெளியில் ஆவியாகி செல்ல விடாமல் செடியின் உபயோகத்துக்கு பயன் படுத்த உதவுகிறது. ஒரு முறை இக்கரைசலை தெளித்தால் 45 முதல் 60 நாட்களுக்கு பயிரை வறட்சியிலிருந்து காக்கலாம்.

இலைகளின் மேல் பூச்சு பூசுகிறது என்றவுடன் நமக்கு உடனே ஏற்படும் கேள்வி ஒளிசேர்க்கை(Photosynthesis) நடைபெறுவது தடை பெற்று விடாதா? என்பதாக இருக்கும்.பகுதி ஊடுறுவும் மேல் பூச்சு ஏற்படுத்த படுவதால் அது கரியமில வாயு மற்றும் பிராண வாயு பரிமாற்றம் எந்த தடையும் இல்லாமல் நடைபெறும் என்கிறார்கள் இந்த நிறுவனத்தினர். அதனால் ஒளிசேர்க்கை பாதிக்க படாது என்கிறார்கள்.இந்த கலவையில் உள்ள பொருட்கள் சுற்றுபுற சூழலுக்கு தீங்கை ஏற்படுத்தாததாகவும், எளிதில் மக்கி போகும் தன்மை உள்ளதாகவும் கூறுகிறார்கள்.இருபது ஆண்டுகளாக அமெரிக்காவிலும், இஸ்ரேலிலும், சில ஐரோப்பிய நாடுகளிளும் வெற்றிகரமாக விவசாயிகள் பயன் படுத்துவதாக கூறுகிறார்கள்.

Shatter-Proof  என்ற அவர்களது மற்றொரு பொருள் பூஞ்சாடிகளில் வைக்கும் மலர்கள் நிறைய நாட்கள் வாடாமல் இருக்க பயன் படுகிறது.

உலக வேளாண் பொருட்காட்சி பற்றிய முந்தய பதிவுகள்

 

Sunday, March 17, 2013

சைப்ரஸ் - கந்து வட்டிகாரனாகும் ஐரோப்பிய யூனியன்


கடந்த சில வருடங்களாகவே ஐரோப்பிய யூனியனில் பல நாடுகள் கடனில் மூழ்குவதையும் ,அவற்றை வெவ்வேறு விதமாக பெயில் அவுட் செய்து வருவதையும் பார்த்திருக்கிறோம்.பொதுவாக பெயில் அவுட் செய்யும் போது அரசிடம் இருக்கும் ஒரு சில தொழிற்துறையை தனியாரிடம் விற்று பணத்தை பெறவும், மக்கள் நல்வாழ்வு திட்டங்களை நிறுத்தி பணத்தை சேமிக்கவும் மற்றும் அரசின் செலவினங்களை குறைக்கவும் அறிவுறுத்த படும். பல நேரங்களில் இது விவாதத்திற்கு உரிய பொருளாக இருக்கும். அயர்லாந்து பெயில் அவுட் பற்றி பிரிதொரு பதிவில் எழுதி இருந்தேன்.தற்போது ஐரோப்பிய யூனியனின் மற்றொரு சிறிய நாடான சைப்ரஸ் நாடு தற்போது பெயில் அவுட் வாங்க வேண்டிய நிலைக்கு தள்ளபட்டுள்ளது.மற்ற நாடுகளில் நடந்தது போல் அரசாங்கம் மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றவும், வளமாக வாழ வைக்கவோ அதிகம் செலவு செய்து, அதன் சுமைகளை அந்த நாட்டு மக்களின் மீது ஏற்றும் நிகழ்வும் சைப்ரசில் நடக்கவில்லை. ஆனாலும் பெயில் அவுட் வாங்க வித்தியாசமான விதிமுறையை விதித்துள்ளது ஐரோப்பிய யூனியன்.

வங்கியில் பணம் சேமிப்போர்க்கு ஆப்பு!

ஐரோப்பிய யூனியனின் கடனை வாங்க சைப்ரஸ் நாட்டில் உள்ள வங்கிகள் எல்லாம் தங்களது வங்கியில் பணத்தை போட்டிருப்பவர்களிடமிருந்து சுமார் 10% பணத்தை வரியாக எடுத்து கொள்ளவேண்டும். அதாவது ஒரு யூரோ முதல் 1 லட்சம் யூரோ வரை வங்கியில் டெப்பாசிட் வைத்திருப்பவர்களிடமிருந்து 6.75 சதவிதம் பணமும் அதற்கு மேல் இருக்கும் பணத்தில் 9.9 சதவிதமும் வரியாக வங்கிகள் தனது வாடிக்கையாளரிடமிருந்து எடுத்து கொள்ளும்.இந்த வரி விதிப்புக்கு பென்சன் பணத்தை வங்கியில் இட்டு செலவு செய்து உயிர் வாழும் முதியவரோ, கணவர் இறந்த இன்சூரன்சு பணத்தை வங்கியில் போட்டு அதில் வாழ்க்கை நடத்தி வரும் விதவையோ, தங்களின் குழந்தைகளுக்கான படிப்பு செலவுக்கு பணம் சேர்ப்பவரோ விதி விலக்கு கிடையாது!இதற்கு பதிலாக அதற்கு ஈடான வங்கியின் பங்கு டெபாசிதாரர்களுக்கு அளிக்க படும்.இந்த அளவு மோசமான பெயில் அவுட் condition ஆக இருக்கிறதே என்று நினைக்கிறீர்களா? அதற்கு அந்த நாட்டின் அதிபரின் பதிலோ, பேச்சுவார்த்தையில் ஐரோப்பிய யூனியனின் மற்ற பரிந்துரைகளை ஒப்பிடும் போது இதுதான் ரொம்பவே decent ஆக இருந்ததாம்!. இந்த புதிய வரி பற்றிய மசோதா நாளை சைப்ரஸ் நாட்டு மக்களவையில் ஒப்புதலுக்காக தாக்கல் செய்ய பட இருக்கிறது. அதன் முடிவு  தெரியும் வரை அந்நாட்டு மக்கள் யாரும் வங்கியிலிருந்து பணம் எடுக்க முடியாது!



சைப்ரசுக்கு பிடித்த கிரகம்

இந்த நிலைக்கு சைப்ரஸ் எப்படி வந்தது என்று பார்ப்போம்.2008 ம் ஆண்டு சர்வதேச நிதி அமைப்பின் கணிப்பு படி சைப்ரஸ் நாடு நீண்ட காலம் வளர்ச்சி அடையும்,குறைந்த வேலை வாய்ப்பின்மை கொண்ட மற்றும் சிறந்த முறையில் அரசால் பொருளாதாரத்தை நிர்வகிக்கும் நாடாகவே கருத பட்டது. அனால் சைப்ரசிலும் பெரும்பான்மையான மேலை நாட்டில் உள்ளது போலவே கட்டுபாடற்ற வங்கிகள் உள்ளன.அந்த நாட்டு வங்கிகள் கொடுத்துள்ள கடனின் ஒப்பீட்டு அளவனாது, அந்த நாட்டின் யை
GDPவிட சுமார் 9 மடங்கு அதிகம்.இதில் முக்கியமாக கவனிக்க வேண்டிய செய்தி சைப்ரஸ் நாட்டின் வாங்கிகள் பெருமளவு பணத்தை கிரீஸ் நாட்டின் கடன் பத்திரத்தில் முதலீடு செய்திருந்தன. கிரீஸ் நாட்டை பெயில் அவுட் செய்ய ஐரோப்பிய யூனியன் அந்நாட்டின் கடனை சென்ற ஆண்டு பெருமளவு தள்ளுபடி செய்திருந்தது. அதனால் சைப்ரஸ் நாட்டின் வங்கிகளின் நிலை மோசமானது. அதே போல் கட்டுபாடற்ற வீட்டு கடன் பலவற்றையும் அள்ளி வீசியதன் விளைவு பிரச்ச்னையை இன்னும் மோசமாக்கி இருந்தது. ரஸ்ய நாட்டின் பணக்காரர்கள் பலர் சைப்ரஸ் நாட்டின் வங்கி மூலம் கிரீஸ் நாட்டு கடன் பத்திரத்தில் அதிகம் முதலீடு செய்ததும் குறிப்பிட தக்கது.

வங்கிகளின் கடனின் அளவு அந்த நாட்டு உற்பத்தியை விட பல மடங்கு இருப்பதால் அந்த நாட்டின் அரசால் அந்நாட்டு வங்கியை காப்பாற்ற வாய்ப்பில்லை.ஒரு நாட்டின் வங்கியின் வீழ்ச்சி அந்த நாட்டின் பொருளாதாரத்தின் ஒட்டு மொத்த வீழ்ச்சியாகும். சைப்ரஸ் ஐரோப்பிய யூனியனில் இருப்பதால் பொது நாணயத்தை தேவையான அளவு பிரிண்ட் செய்யவும் முடியாது. எனவே சைப்ரஸ் அரசு தனது நாட்டின் வங்கியை காப்பற்ற ஐரோப்பிய யூனியனை நோக்கி கையேந்தியது. அதற்கு ஐரோப்பிய யூனியன் விதித்த விதி முறைதான் நீங்கள் மேலே பார்த்தது.ஆக மொத்தம் வங்கிகள் அடித்த கொள்ளையால் பாதிக்க பட போவது அப்பாவி மக்கள் தான்.

இன்றைய உலக பொருளாதாரத்தின் அடிப்படையாகவும் உயிர் நாடியாகவும் இருப்பது வங்கிகள். வங்கிகள் என்ற அமைப்பின் அடிப்படையே "நம்பிக்கை" அடிப்படையில் செயல்படுவது தான்.தற்போது ஐரோப்பிய யூனியன் விதித்துள்ள இந்த தண்டனையால் மக்களுக்கு வங்கிகள் மீது ஏற்படும் நம்பிக்கை குறைய வாய்ப்புள்ளது. ஏனெனில் இன்று சைப்ரசில் நடைபெறும் நிகழ்வு நாளை எந்த நாட்டிளும் நிகழலாம் அல்லவா?இது உலக மற்றும் நாடுகளின் பொருளாதாரத்திற்கு நல்லதல்ல.

இது போல் பெயில் அவுட்டுக்கு நூதன நிபந்தனைகளை ஐரோப்பிய யூனியன் விதித்து வருவாதால் அனைவரின் மனதிலும் நிற்கும் செய்தி


அவர்களது
HitListல் இருக்கும் அடுத்த நாடு எது?

அவர்களது அடுத்த நூதன நிபந்தனை என்னவாக இருக்கும்?

இந்தியாவில் ஓரளவு கட்டுபாடோடு இருக்கும் வங்கி துறையின் கட்டுபாடுகளை தளர்த்துவதே தனது குறி என்று திரியும் மன் மோகன் சிங் இது போன்ற செய்திகளை படிப்பாரா என்று தெரியவில்லை.

Monday, March 11, 2013

மண் வளம் காக்கும் மரக்கரி (Biochar) - World AgriExpo 5

மரக்கரியை எரிபொருளாக உபயோக படுத்துவது பற்றி அனைவரும் அறிந்ததே. ஆனால் அதே மரக்கரியை கொண்டு மண்ணின் வளத்தை பெருக்க முடியும் என்கிறார்கள் Cool Planet என்ற நிறுவனத்தார். CoolPlanet என்ற நிறுவனத்தார் தாவரத்திலிருந்து பெட்ரோல்( biofuel) எடுக்கும் நிறுவனம் ஆகும். இந்த நிறுவனம் பெட்ரோல் எடுத்தபின் வெளிவரும் தாவர கழிவை பயோகார் என்னும் உரமாக உற்பத்தி செய்து விற்பனை செய்கிறார்கள்.உண்மையில் இது போன்ற மரக்கரி உரங்களை உலகில் பல்வேறு நிறுவனங்கள் தயாரித்து விற்பனை செய்ய தொடங்கி உள்ளன.முதலில் biochar என்றால் என்ன என்று பார்ப்போம்.

Biochar என்றால் என்ன?

வேளாண் மற்றும் தாவர கழிவுகளை ஆக்சிசன் இல்லாமல் (அல்லது குறைந்த ஆக்சிசனில்) 400 - 500 டிகிரி செல்சியசில் எரிக்க வைப்பதன் மூலம் வெளி வரும் கரியே biochar அல்லது agrichar என்னும் உரமாகும்.இவ்வாறு ஆக்சிசன் இல்லாமல் எரிக்கும் முறைக்கு பைரோலிசிஸ் (Pyrolysis) என்பார்கள். ஆக்சிசன் இல்லாமல் எரிக்கும் போது தவரத்தில் உள்ள கார்பன், கார்பன் டை ஆக்சைடாக மாறி காற்றில் கரைந்து விடுவது தடுக்க படுகிறது. எனவே பயோகேரில் அதிக அளவு கார்பன் உள்ளது. இது சிறந்த கரிம உரமாக (organic matter) பயன் படுகிறது.இவ்வகை மரக்கரி மண்ணில் சில நூறு ஆண்டுகள் வரை இருந்து நல்லது செய்கிறது என்கிறார்கள் இதனால் கிடைக்கும் நன்மைகள் இயற்கை செயல்முறை (Natural process) மூலம் ஆண்டுகள் அதிகமாக அதிகமாக அதிகரிக்கும் என்கிறார்கள்.


முன்னோர்களின் கண்டுபிடிப்பு!

இந்த தொழில்நுட்பத்தை கண்டு பிடித்தது மேலை நாட்டு பல்கலைகழங்கள் அல்ல. அமேசான் காடுகளில் வாழ்ந்த ஆதி குடியினர் இந்த தொழில்நுட்பத்தை கண்டுபிடித்துள்ளனர்.அமேசான் காட்டில் பழங்குடியினர் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வேளாண் மற்றும் காட்டு கழிவு பொருட்களை மண்ணுக்கு அடியில் குழிகளில் குறைந்த பிராண வாயு கொண்டு எரித்து வெளி வரும் கரியை உரமாக பயன் படுத்தியுள்ளனர்.  ஐரோப்பியர்கள் அமேசான் காட்டின் சில பகுதிகளை ஆராய்ந்த போது இந்த உண்மையை கண்டு பிடித்து இதனை terra preta என்று அழைத்தனர்.

நன்றி விக்கிபீடியா

நன்மைகள்

1.பயோகேரை மண்ணுக்கு உரமாக இடுவதன் மூலம் மண்ணின் structure மற்றும்  textureல் விரும்ப தக்க மாற்றம் ஏற்படுவதாக கூறுகின்றனர்.

 2. மண்ணின் கரிமவளம் அதிகரிக்கிறது.

 3.பயோகேரில் பல நுண்ணிய ஓட்டைகள் உள்ளன. இந்த ஓட்டைகளை எலக்ட்ரான் மைக்ராஸ்கோப் கொண்டு பார்த்தால் நன்றாக தெரியும்.  இது தண்ணீரை ஓரளவு இழுத்து வைத்து கொள்வதால் நீர் பாசனத்தின் போது தண்ணீர் வீணாவது குறைந்து நீர் மண்ணில் காய்ந்த பின் செடிக்கு நீரை தருகிறது.


4.மண்ணில் உள்ள மற்றும் உர சத்துக்கள் இந்த சிறு துளைகளுக்கு செல்வதால் மண்ணில் கசிந்து(leaching) மற்றும் பிற வழிகளில் பயிருக்கு தேவையான சத்துக்கள் வீணாவது தடுக்க படுகிறது.செடியின் வேர் பயோகேரில் உள்ள சிறு துளைகளுக்குள் சென்று சத்துக்களை எடுத்து கொள்ளும்.

 5.நுண்ணியிரிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து மண்ணின் வளமும் அதிகமாகிறது.

 6.வளம் குன்றிய மண் மற்றும் இயற்கை எரு குறைவாக கிடைக்கும் இடங்களில் இந்த மரக்கரியை ஒரு முறை இட்டு பல நூறு ஆண்டுகள் பயன் பெறலாம்.

 7, சமீப காலமாக பேசபட்டு வரும் புவி வெப்பமடைதல் பிரச்ச்னைக்கு இதுவும்  ஒரு நல்ல தீர்வாக கருதபடுகிறது. ஏனெனில் செடிகளில் உள்ள கார்பனை மண்ணுக்குள் நிலை நிறுத்தி விண்ணில் கலந்து விடாமல் வைக்கிறது. இது Carbon negative தொழில்நுட்பமாக கருதபடுகிறது.

 இவ்வகை மரக்கரியை கரும்பு , மரவள்ளி கிழங்கு தொழிற்சாலை கழிவுகளிலிருந்தும் தயாரிக்களாம். தமிழகத்தில் கரும்பு சக்கையிலிருந்து கம்போஸ்ட் தயாரித்து விற்பது பற்றி பார்த்திருக்கிறேன். மரக்கரி தொழில்நுட்பத்தையும் இனி பயன் படுத்தலாம் என்று நினைக்கிறேன். பைரோலிசிஸ் தொழில்நுட்பம் என்றால் பெரிய தொழில்நுட்பம் என்று  நினைத்து விடாதீர்கள். இதை குடிசை தொழில் போல கூட கீழ் காணும் விடியோவில் உள்ள படி செய்யலாம்.


இணையத்தில் தேடிய போது இந்தியாவில் கூட இது போல் ஒரு  சிலர் முயற்சி செய்வதாக பார்த்தேன். மண்ணில் வளம் குறைந்து வரும் இந்த காலத்தில் இயற்கையாக மண்ணின் வளத்தை அதிகரிக்க உதவும்  அமேசான் பழங்குடியினர் தந்த மரக்கரி தொழில்நுட்பமும் ஒரு வரபிரசாதம் தானே.


உலக வேளாண் பொருட்காட்சி பற்றிய முந்தய பதிவுகள்

Monday, March 04, 2013

உழவாகி உரமாகி தீவனமாகும் முள்ளங்கி! - World AgriExpo 4

மண்ணின் வளத்தை பெருக்க மூடு பயிர் வளர்ப்பது தமிழக விவசாயிகளுக்கு புதிதல்ல. நெல்லை அறுவடை செய்து கோடை காலங்களில் வேர் முடிச்சி தாவரமான சணப்பையையும், தண்டு முடிச்சி தாவரமான செஸ்பேனியா ரோஸ்டிரேட்டாவையும் தமிழகத்தில் பல காலமாகவே இயற்கை உரத்திற்காக வளர்த்து வருகின்றனர்.மேலை நாடுகளில் இந்த தொழில்நுட்பம்  இதுவரை அதிகம் பிரபலமாகவில்லை. தற்போது மேலை நாடுகளிலும் இது போன்ற தொழில்நுட்பத்தை மூடு பயிராக அறிமுக படுத்த தொடங்கி உள்ளனர். Cover Crops என்ற நிறுவனம் மிக பெரிய அளவில் இது போன்ற மூடு பயிர்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த நிறுவனம் கீழ் காணும் மூடுபயிர்களை விற்கிறார்கள்

1.ஆழ ஊடுருவி வளரும் ரை புல்வகைகள்.

2. மித வெப்பத்தில் வளரும் வேர் முடிச்சு பயிறு வகைகள் - சணப்பை

3. குளிர்கால பயிறுவகைகள் Winter Pea,Hairy Vetch,Crimson Clover,Medium Red Clover,Sweet Blue Lupin

4.முள்ளங்கி

5.மேற்கூறிய பயிர்களின் கலவை


முள்ளங்கி

 தமிழ தட்பவெப்பத்துக்கு ஏற்ற வகையில் வளரும் பெரும்பாலான பயிர்களை பற்றி தமிழக விவசாயிகள் அறிந்து இருப்பார்கள்.ஆனால் முள்ளங்கியை மூடு பயிராக பயன்படுத்துவது உண்மையிலேயே நூதன முயற்சியாகும்.முக்கிய பயிரை அறுவடை செய்து அடுத்த வருட பயிர் போடும் முன் முள்ளங்கியை மூடுபயிராக வளர்ப்பதன் மூலம் உழவுக்கும் (no tilage), அடுத்த பயிரின் வளர்ச்சிக்கு தேவையான உணவை அளிக்கவும், மண்ணின் கரிம வளத்தை அதிகரிக்கவும், களையை கட்டுபடுத்தவும், கால்நடைகளுக்கு தீவனமாகவும் பயன் படுத்தலாம் என்கிறார்கள்.

பயன்கள்

1.முள்ளங்கியின் ஆணி  வேர் சுமார் 50 செமி நீளத்திற்கு வளர கூடியது. இது சாதாரண உழவு எந்திரம் மண்ணுக்கு கீழே ஊடுருவி செல்லும் ஆழத்தை விட அதிகம். இவ்வாறு ஆழமாக ஊடுருவி சென்று மண்ணுக்கு அடியில் இருக்கும் அனைத்து வகை சத்துக்களையும் எடுத்து முள்ளங்கி தண்டில் சேமிக்கிறது. இந்த முள்ளங்கி தண்டை மண்ணில் மக்க விடுவதன் மூலம் அடுத்து பயிரிடும் பயிர்களுக்கு தேவையான நேரத்தில் (முதல் 3 மாதங்களுக்கு) வேர் பகுதியிலேயே எளிதான  உணவு கிடைக்கிறது.(Bio-Drilling)

2.அவ்வாறு வேர் மற்றும் வேர் தண்டு மக்கும் போது காற்று மற்றும் நீர் ஊடுருவி செல்ல ஏதுவாக இருக்கிறது.

3.முள்ளங்கி வளரும் போது தனது இலைகளால் பூமியின் மேல் பரப்பை மறைத்து விடுவதால் களை செடிகள் வளர்வது கட்டு படுத்த படும்.

4.முள்ளங்கி மக்கும் போது ஐசோதயோசயனேட் போன்ற குளுகோசினோலேட்குகள் வெளியாகிறது. அவை பயிருக்கு நோயை உருவாக்கும்  நெமட்டோட் மற்றும் காளான்களை அழிக்கும் தன்மை உள்ளதாக ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன.

5.மக்கிய முள்ளங்கி அதிக அளவு மண்புழுக்களையும் நல்லது செய்யும் நுண்ணியிரிகளையும் கவர்ந்திழுக்கிறது.

6.கால்நடைகளை இந்த முள்ளங்கியை மேயவிட்டு தீவனமாகவும் உபயோக படுத்தலாம் என்கிறார்கள். முள்ளங்கியோடு சில புல் வகைகளையும் கலந்து பயிரிட்டால் கால்நடைகளுக்கு நல்ல உணவாகும் .

எப்படி பயன் படுத்துவது?




அமெரிக்காவில் கடுங்குளிர் வருவதற்கு 3 - 10 வாரம் முன் இந்த முள்ளங்கியை பயிரிட பரிந்துரைக்கிறார்கள். குளிர் காலம் வந்தவுடன் தானாகவே பயிர் இறந்துவிடும் . அடுத்த வருடம் மார்ச் முதல் ஜூலை வரை மண்ணில் மக்கி அதிக சத்துக்களை அப்போது வளரும் முக்கிய பயிருக்கு அளிக்கிறது..குளிர் இல்லாவிட்டால் கால்நடைகளை மேய விட்டோ, களைகொல்லி மூலமாகவோ, mowing மூலமாகவோ பயிரை அழித்துவிடலாம் இந்தியாவின் தட்ப வெப்பத்திற்கு ஏற்ப முள்ளங்கியை எப்போது பயிட்டால் அடுத்த பயிருக்கு முழுமையாக பலன் கிடைக்கும் என்று ஆராய்ச்சி செய்து standardise செய்ய வேண்டியிருக்களாம்


Covercrops என்ற நிறுவனத்தினர் அவர்களது முள்ளங்கி விதை இது போன்ற மூடு பயிருக்கு ஏற்றதாக உள்ளதாக  கூறுகின்றனர். இது பற்றி மேலும் அறிய அவர்களது தளத்திற்கு சென்று பாருங்கள்.

விசாரித்து பார்த்ததில் ஒரு ஏக்கருக்கு தேவையான முள்ளங்கி விதையின் விலை சுமார் 400 ரூபாய் என்று தெரிய வந்தது.உபயோகபடுத்தி பார்க்க எனக்கு கொஞ்சம் மாதிரி விதையை கொடுத்தார்கள்.அதை உபயோகித்து பார்த்த பின் எனது அனுபவத்தை நான் பகிர்கிறேன்.

உலக வேளாண் பொருட்காட்சி பற்றிய முந்தய பதிவுகள்
 
 
 

Monday, February 25, 2013

விவசாயத்திற்கு ஆற்றலேற்ற பட்ட நீர் - World AgriExpo 3


தமிழகத்தில் பல ஆண்டுகளுக்கு முன்னரே காந்த சக்தி ஏற்றம் செய்ய பட்ட மருத்துவ குணம் கொண்ட நீர் என்ற பேச்சு அடிபட்டு கொண்டு இருந்தது.அது அறிவியலா அல்லது போலி அறிவியலா என்ற கேள்வி பலர் மனதில் இருந்தது. தற்போது விவசாயத்திற்கு அந்த தொழில்நுட்பத்தை Omnienviro என்ற நிறுவனத்தினர்  விரிவு படுத்தியுள்ளனர்.

நீர் என்பது ஹைடிரஜன் மற்றும் ஆக்சிசன் மூலக்கூறுகளால் உருவானது. பொதுவாக பல நீர் மூலகூறுகள் ஒன்றினைந்து கூட்டாக இருக்கும். சாதரண தண்ணீரில் இந்த மூலகூறின் அளவு பெரும்பாலும் பெரியதாக இருப்பதால் அனைத்து நீர் மூலக்கூறு குழுமங்களும் வேரின் துளை மூலம் செல்ல முடியாது.இந்த பிரச்ச்னையை தீர்க்க ஆம்னிஎன்விரோ என்ற கம்பெனி Hydrodynamic Magnetic Resonance (HDMR) தொழில்நுட்பம் மூலம் H2O ENERGIZER என்ற கருவியை அறிமுகபடுத்தி உள்ளது.நீர் ஆற்றலேற்றி பெரிய நீர் மூலகூறு குழுமங்களை உடைத்து சிறிய மூலகூறு குழுமங்களாக ஆக்குகிறது. அதன் மூலம் கொடுக்கபடும் நீரின் பெரும்பான்மையான பகுதி பயிரின் வேருக்கு செல்கிறது.பயிருக்கும் அளிக்கும் பெரும்பான்மையான நீர் வேர் வழியே உறிஞ்சபடுவதால் குறைந்த அளவு நீர் கொடுத்தாலே போதும்.


காந்த சக்தியானது ஹைடிரஜன் ஆக்சிஜன் இடையே இருக்கும் பிணைப்பின் கோணத்தை 104 டிகிரியிலிருந்து 103 டிகிரியாக குறைக்கிறதாம். அதன் விளைவாக 10 - 12 நீர் மூலக்கூறுகள் இருக்கும் குழுமம் பிரிந்து 6 - 7 நீர் மூலகூறுகள் உடைய குழுமமாக பிரிகிறது.இந்த சிறிய நீர் மூலகூறு குழுமம் வேர்கள் அதிக அளவு நீரை உறிஞ்சுவதற்கு ஏதுவாக ஆக்குகிறது.


உப்புதன்மை உடைய நீரை நீர்பசனத்துக்கு உபயோக படுத்தவும், மண்ணில் உள்ள உப்பு தன்மையை flooding மூலம் அதிக திறனுடன் வெளியேற்றவும் இக்கருவி உதவுவதாக கூறுகிறார்கள். இந்த கருவியை கொண்டு 2000 PPM -  7000 PPM உப்பு கலந்துள்ள நீரை கூட நீர்பசனத்துக்கு பயன் படுத்தலாம் என்று கூறுகின்றனர்.இந்த தொழில்நுட்பம் விவசாயம், கால்நடை துறை ஏன் மனிதரக்ளுக்கே பயனளிக்கிறது என்று கூறுகிறார்கள்.


காந்த சக்தி ஏற்றபட்ட நீரை அளிப்பதால் ஏற்படும் நன்மைகள்.

1.30% குறைந்த அளவு நீர் தேவை
2.10 - 30% விளைச்சல் அதிகரிப்பு
3. அதிக அளவு நீர் மற்றும் ஊட்ட சத்துக்களை பயிரால் இழுத்து கொள்ள முடியும்
4.அதிக அளவு பிராண வாயு கிடைக்க கூடிய தன்மை
5. வேளாண் பொருட்களின் எடை மற்றும் அளவு அதிகமாவது
6. அதிக முளைப்பு தன்மை
7. அறுவடை செய்ய பட்ட காய் கனிகள் அதிக நாட்கள் கெடாமல் இருக்கும் தன்மை
8. உப்பு தன்மையை விரைவில் நீக்கும் தன்மை.
9. பயிர்,கால்நடை மற்றும் மீன்களுக்கு நோய் எதிர்ப்பு தன்மை
10.நீர் பாசன உபகரணங்களில் செதில்கள்  உருவாவது குறைவது

பல்வேறு நீர்பாசன (சொட்டு நீர், தெளிப்பு நீர்,flooding) முறைகளில் இணைத்து உபயோகபடுத்துவது ஏற்றார் போல் இந்த கருவி வடிவமைக்க பட்டுள்ளது.

 
 
இது பற்றிய மேல் விவரங்கள் அறிய இங்கு   சென்று பாருங்கள்.

இது போன்ற காந்த புலம் ஏற்படுத்தி நீருக்கு காந்த சக்தி ஏற்படுத்தும் கருவியை உள்ளூர் ஐன்ஸ்டீன்கள் எளிதாகவும், மலிவாகவும்  தயாரித்து விடுவார்கள். தமிழகத்தில் கூட இதை எளிதாக பரிசோதித்தும் உபயோகித்தும் பார்த்து விடலாம் அல்லவா?

உலக வேளாண் பொருட்காட்சி பற்றிய முந்தய பதிவுகள்

உலக வேளாண் பொருட்காட்சி - Tulare, கலிபோர்னியா

6 நாளில் புல் வளர்ப்பது எப்படி? -World AgriExpo 2
 

Sunday, February 24, 2013

6 நாளில் புல் வளர்ப்பது எப்படி? -World AgriExpo 2

கலிபோர்னியாவில் நடந்த உலகின் மிக பெரிய வேளாண் பொருட்காட்சியில் பார்த்தவற்றில் தமிழக சூழ்நிலைக்கு ஏற்ற தொழில் நுட்பங்கள் பற்றி பதிவிடுவதாக  முன் பதிவில் கூறி இருந்தேன். நூதன முறையில் புல் வளர்க்கும் தொழில்நுட்பம் பற்றி இந்த பதிவில் காண்போம்.

மாட்டு பண்ணையை வைத்திருப்பவர்களுக்கு மாடுகளுக்கு தினமும் புல் கொடுத்து வளர்ப்பது மற்றும் விலையுயர்ந்த தீவனத்தை கொடுப்பது மிக முக்கியமான பணியாக உள்ளது. அதிக மாடுகளை வைத்திருப்பவர்கள் அதிக அளவு புல்களை வளர்க்க அதிக இடமும், அதிக அளவு தண்ணீர் மற்றும் இதர இடுபொருட்களும் தேவை படுகிறது. அது மட்டுமன்றி தட்ப வெட்ப நிலையும் முக்கிய பங்கு வகிக்கிறது.(முக்கியமாக மேலை நாடுகளில் குளிர் காலங்களில் புல் வளர்க்க முடியாது). அதே போல் நகர் மற்றும் புறநகர் பகுதியில் மாடு வளர்ப்பவர்கள் (தற்போது எண்ணிக்கையில் குறைந்து வந்தாலும்) புல் வளர்க்க போதுமான இடம் இருப்பதில்லை.

இந்த பிரச்சனையை தீர்க்க Fodder Solutions என்ற நிறுவனம் புதிய தொழில்நுட்பத்தை அறிமுக படுத்தி உள்ளது (Seed to Feed in 6 Days). தொழில்நுட்பம் என்றால் எதோ பெரிய ராக்கெட் சயின்ஸ் என்று நினைத்து விடாதீர்கள். மிகவும் எளிதான யோசனைதான் அது. நாம் முளை கட்டிய பயிரை சாப்பிடுகிறோம் அல்லவா? அதே முறையை கால்நடைகளுக்கும் விரிவு படுத்தி விட்டர்கள்!.புற்களோடு  தீவனத்தையும் சேர்த்து நூதன முறையில் கால்நடைகளுக்கு உணவிட இம்முறையை இந்த நிறுவனம் அறிமுக படுத்தியுள்ளது.

அதற்கு செய்ய வேண்டியன கீழ் காண்பவை.

1.தேர்ந்து எடுக்கபட்ட தானியம் மற்றும் பயிறு விதைகளை அவர்கள் கொடுக்கும் பிரத்யேகமான டிரேயில் போட வேண்டும்.அந்த டிரேயை,Fodder Solutions நிறுவனம் கொடுக்கும் பிரத்யோக அறையில் வைத்து வளர்க்க வேண்டும்.

2. தண்ணீரை குறிபிட்ட இடைவெளியில் தெளித்து கொண்டு இருக்க வேண்டும்.

3.அவர்கள் கொடுக்கும் அறையில் வெப்பநிலை, ஈரபதம் போன்றவை தக்கவைக்க படுகிறது.




புல் வளர்க்கும் அறை


4. நீர் மற்றும் தட்பவெப்ப நிலை இருப்பதால் விதை முளை விட்டு ஆறே நாட்களில் சுமார் 12 செமீ உயரம் வளர்ந்து விடுகிறது.

5.வளர்ந்த புல்லை டிரேயிலிருந்து அப்படியே எடுத்து மாட்டிற்கு உணவாக கொடுக்கலாம். டிரேயில் உள்ள பயிரில் செடியும் வேரும் மட்டும் இருப்பதால் கால்நடைகள் அப்படியே முழுவதுமாக சாப்பிட்டு விடும்.

வளர்ந்த புல்

6.இது போல் டிரேயை சுழற்சி முறையில் உபயோக படுத்தினால் தினமும் புல் கிடைத்து கொண்டே இருக்கும்.


7.அடுக்கடுக்காக டிரேக்களில் வளர்ப்பதன் மூலம் மிக குறுகிய இடத்தில்  பல மாடுகளுக்கு தேவையான புல்களை வளர்க்களாம்.

பெரிய புல் வளர்க்கும் அறை


இவ்வாறு பெறபடும் முளை கட்டிய பயிரிலிருந்து கிடைக்கும் சக்தி  மார்கெட்டில் கிடைக்கும் பிற தீவன பொருட்களுக்கு இணையானது என்கிறார்கள். அது மட்டுமன்றி விதை முளை விடும் போது அதன் என்சைம் செயலாக்கம் அதிரிக்கிறது. இந்த என்சைம், புரோட்டீன்களை எளிதில் செரிக்ககூடிய அமினோ அமிலங்களாகவும், கார்போஹைடிரேட்டை எளிய சர்க்கரை பொருட்களாகவும், கொழுப்பை, எளிய கொழுப்பு அமிலங்களாகவும் மாற்றி கொடுக்கிறது. அதாவது  இந்த உணவை செரிக்கபட்ட உணவு எனலாம்.அது மட்டுமல்ல. இவ்வாறு முளைகட்டும் போது கால்நடைக்கு தேவையான  வைட்டமின்A,E,பயோட்டின்,நார்சத்து,Anti-oxidants மற்றும் போலிக் அமிலம் போன்றவற்றின் அளவும் அதிகரிப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

முளைவிடும்போது எதிர்ப்பு சத்து காரணியாக(Anti Nutritional factor) உள்ள பைட்டேசின் அளவு குறைவதாகவும் ஆய்வுகள்  உறுதி செய்கிறது.

                                                                           விவரண படம்

தமிழகத்தில் இயற்கையே விதையை முளைத்து வளர்க்க நல்ல  தட்ப வெப்பநிலையை கொடுக்கிறது.விதை தவிர எந்த பெரிய முதலீடும் இல்லாமல் இதை தமிழக விவசாயிகள் பரிசோதனை செய்து பார்க்கலாம் அல்லவா? இந்த எளிய தொழில்நுட்பத்தை இந்தியாவில் கூட பயன்படுத்தலாம் அல்லவா?

இது பற்றி மேல் விவரங்கள் அறிய http://www.foddersolutions.co.uk என்ற தளத்துக்கு செல்லுங்கள்.

முந்தைய பகுதி

உலக வேளாண் பொருட்காட்சி - Tulare, கலிபோர்னியா

 

Monday, February 18, 2013

உலக வேளாண் பொருட்காட்சி - Tulare, கலிபோர்னியா

உலக வேளாண் பொருட்காட்சி  1968ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் கலிபோர்னியாவில் உள்ள டுலேரியில் நடைபெறுகிறது. அமெரிக்காவின் தோட்டகலை விவசாயத்தின் தலைநகரமாக விளங்குவது கலிபோர்னியா மாநிலம். உலக வேளாண் பொருட்காட்சி கலிபோர்னியா- டுலேரியில் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 12 முதல் 14 வரை நடை பெற்றது. இந்த விவசாய பொருட்காட்சிதான் உலகிலேயே மிக பெரிய வேளாண் பொருட்காட்சி ஆகும். இங்கு வேளாண் பொறியியல், வேளாண், தோட்டகலை,கால்நடைதுறை,வேளாண் கல்வி மற்றும் சர்வதேச வேளாண் வர்த்தகம் சார்ந்த பல்லாயிரம் நிறுவனங்கள் தங்களது ஸ்டாலை வைத்து இருப்பார்கள்.

கடந்த சில ஆண்டுகளாகவே இந்த பொருட்காட்சிக்கு செல்ல வேண்டும் என்று நினைத்திருந்தேன். நான் இருக்கும் இடத்திலிருந்து சுமார் 250 மைல் பயணம் செய்ய வேண்டும் என்பதாலும், இந்த பொருட்காட்சி எப்போதும் அலுவலக நாட்களில் (செவ்வாய் முதல் வியாழன் வரை) நடை பெறுவதாலும் கடந்த ஆண்டு வரை யோசித்து கொண்டே செல்லாமல் இருந்து விட்டேன். ஆனால் இந்த ஆண்டு கட்டாயம் செல்ல வேண்டும் என்று முடிவு செய்து பிப்ரவரி 12ம் தேதி காலை கிளம்பி விட்டேன்.சர்வதேச பார்வையாளர்கள் வருவதற்கு வசதியாக சிறு நகரமாக இருந்தாலும் இங்கேயே ஒரு விமான நிலையம் உள்ளது. சர்வதேச பொருட்காட்சி என்பதால் இங்கு பல்லாயிரம் பேர் வந்தாலும் போக்குவரத்தை அழகாக திட்டமிட்டு சுலபமாக பொருட்காட்சிக்கு செல்ல ஏற்பாடு செய்திருந்தினர்.

இந்த பொருட்காட்சியில்  சுமர் 2.6 மில்லியன் சதுர அடிகளில் பல்வேறு நிறுவனத்தார் ஸ்டால்கள் வைத்திருந்தனர்.1400க்கும் மேற்பட்ட நிறுவனத்தினர் உலகின் பல்வேறு பகுதியிலிருந்து(அமெரிக்கா,ஐரோப்பா,ரஸ்யா,சீனா,இந்தியா) வந்திருந்து தங்களது தயாரிப்புகளை உலகின் பல பகுதியிலிருந்து வந்திருந்த லட்சகணக்கான விவசாயிகளுக்கும், விவசாயம் சார்ந்த துறையினருக்கும் அறிமுகபடுத்தினர்.


அமெரிக்காவில் சாதாரணமாக விவசாய நிலங்களின் அளவு சில ஆயிரம் ஏக்கராவது இருக்கும். எனவே அமெரிக்க விவசாயிகளின் அத்யாவசிய தேவை குறைந்த வேலையாட்களை கொண்டு அதிக நிலத்தில் வேலை செய்ய ஏதுவான மிக பெரிய பண்ணை இயந்திரங்களும், தானியங்கி இயந்திரங்களும் தான். எனவே இந்த பொருட்காட்சியில் சுமார் 70% இது போன்ற இயந்திரங்களை தயாரிக்கும் நிறுவனங்கள் தங்களது இயந்திரங்களை பார்வையாளர்களின் பார்வைக்கு வைத்திருந்தனர். பெரும்பான்மையான பண்னை இயந்திரங்கள் ராட்சத வடிவில் இருந்தன. இந்திய சூழ்நிலைக்கு இது போன்ற இயந்திரங்களின் தேவை இன்னும் சில காலம் கழித்து தேவை பட்டாலும் தேவை படும் என்ற எண்ணத்துடன் பிற பகுதிகளை பார்வையிட தொடங்கினேன்.



பொருட்காட்சியில் அமெரிக்க வேளாண் வரலாறை பறைசாற்றும் வகையில் ஒரு கண்காட்சி வைக்க பட்டிருந்தது. அங்கு சுமார் 100 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் பயன் படுத்திய வேளாண் உபகரணங்களை பார்வைக்கு வைத்திருந்தனர்.

1928ம் ஆண்டு  Ford Husker

கண்காட்சியில் ஐந்து பெரிய அரங்குகளும், கால்நடை துறைக்கு தனி அரங்கும், வேளாண்மையில் பெண்கள், வேளாண் கல்வி, பண்ணை வீட்டுத்தேவை,வேளாண் ஏற்றுமதி அகியவற்றிற்கு தனி அரங்கும் திறந்த வெளியில் வேளாண் உபகரணங்களுக்கு இடமும் கொடுத்து இருந்தனர்.பொருட்காட்சி நடந்த மூன்று நாட்களும் விவசாயம், வர்த்தகம்,நீர் பாசனம் போன்றவை பற்றி தொடர்ந்த பல்வேறு தலைப்புகளில்
கருத்தரங்கு நடைபெற்று கொண்டிருந்தது. வேளாண்மை கல்வி அரங்கில் கலிபோர்னியா பகுதி பல்கலைகழகங்கள் அளிக்கும் விவசாயம் சார்ந்த கல்வி பற்றியும், வேளாண் மகளிர் பகுதியில் சமையல் போட்டி மற்றும் விளக்கமும் நடந்து கொண்டிருந்தது.

இந்தியாவிலிருந்து ஜெயின் நிறுவனத்தாரின் சொட்டுநீர் பாசன ஸ்டாலுக்கு நிறைய பார்வையாளர்கள் வந்த வண்ணம் இருந்தனர். அதே போல் இந்தியாவிலிருந்து  வேப்பம் எண்ணெய் சார்ந்த பொருட்களை விற்கும் ஒரு நிறுவனமும், நுண்ணூட்ட பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனமும் தங்களது ஸ்டால்களை வைத்திருத்தனர்.கிழக்கு அய்ரோப்பா மற்றும் ரஷ்யா நாட்டை சேர்ந்தவர்களிடம் பல இயற்கை விவசாயம் சார்ந்த நூதன கண்டுபிடிப்புகளும் இருந்தன.



ஆறே நாளில் தீவனபுல் தயாரிப்பு, காந்த சக்தி பெற்ற நீர், நூதன நுண்ணியிர் உரங்கள், உழவாகும் செடிகள்,வறட்சியை தவிர்க்கும் கரைசல், இயற்கை வளர்ச்சி ஊக்கிகள் என இந்தியாவில் பின்பற்ற கூடிய பல நூதன தொழில்நுட்பங்கள்  அங்கு இருந்தன.

சென்றிடுவீர் எட்டு திக்கும்
கலை செல்வங்கள் யாவும்
கொணர்ந்திங்கு  சேர்ப்பீர்

என்றார் பாரதி. ஏதோ என்னால் முடிந்தது, தமிழக விவசாயிகளுக்கும் ஆர்வலர்களுக்கும் இந்த தொழில் நுட்பங்களை அறிமுக படுத்தலாம் என எண்ணி இனி வரும் பதிவுகளில் எனக்கு பிடித்த மற்றும் இந்தியாவிற்கு ஏற்றதாக உள்ள ஒரு சில வேளாண் தொழில்நுட்பங்களை பற்றி பதிவிடுகிறேன் .

Sunday, February 17, 2013

சான்பிரான்சிஸ்கோவில் திரு.அப்துல் கதர் தலைமையில் பட்டிமன்றம் மற்றும் கவியரங்கம்

சான்பிரான்சிஸ்கோ வளைகுடா பகுதி தமிழ் மன்றம் சார்பில் கலைமாமனி திரு.அப்துல் காதர் அவர்கள்  தலைமையில் கவியரங்கம் மற்றும் பட்டிமன்றம் சான்பிரான்சிஸ்கோ வளைகுடா பகுதி டப்ளின் நகரில் பிப்ரவரி மாதம் 16ம் தேதி  மிக சிறப்பாக நடைபெற்றது.

வற்றாத நதிகள் என்ற தலைப்பில் கவியரங்கம் நடைபெற்றது. பெண்ணின் கண்ணீர், தியாகியின் ரத்தம்,உழைப்பாளியின் வியர்வை ,விண்ணின் மழைதுளி மற்றும் எழுத்தாளனின் மைத்துளி என்ற தலைப்புகளில் மிக அருமையான கவிதைகளை வாசித்தனர்.

அதனை தொடர்ந்து மகிழ்ச்சியும் நிறைவும் அதிகம் கிடைப்பது திருமணத்துக்கு முன்பே! திருமணத்துக்கு பின்பே! என்ற தலைப்பில்  பட்டிமன்றம் நடைபெற்றது.தலைப்பே மிக சுவையாக இருந்தாலும் பட்டிமன்றத்தில் பேசிய பேச்சாளர்கள் அதிரடியாகவும்,மிகவும் சுவையாகவும், தலைப்புக்கு பொருந்தும் படியும், அனைவரும் ரசிக்கும் படியும் பேசி மக்களை மகிழ்வித்தனர்.

கவியரங்க  மற்றும் பட்டிமன்ற நடுவர் திரு. அப்துல் காதரின் உரையும், நிகழ்ச்சி நடு நடுவே நாவண்மையுடனும், நகைச்சுவையுடனும் அவர் செய்த குறுக்கீடுகளும் நிகழ்ச்சிக்கு முத்தாய்பாக இருந்தது. குடா பகுதியில் பட்டிமன்றம் மற்றும் கவி அரங்கத்தில் பேசியவர்களின் நாவன்மையை பாராட்டிய திரு.அப்துல் காதர், பட்டிமன்றத்தில் பேசியவர்கள் அருமையாகவும், கண்ணியத்துடனும் அனைவரும் ரசிக்கும் படியும், மிகுந்த தரத்துடன் பேசியதாகவும் அவரக்ளின் புகழை ராஜ் டிவி அகட விகடம் மூலம் அனைவருக்கும் கொண்டு செல்லபோவதாகவும் கூறினார்.

80க்களிலும் 90க்களிலும் தமிழ் இளைஞர்களிடையே எழுச்சியை உருவாக்கிய அமரர் M.S. உதயமூர்த்தி அவரகளுக்கு மௌன அஞ்சலி செலுத்தி கூட்டம் தொடங்கபட்டது.

அறுபது வயதிற்கு மேலும்  திரு அப்துல் காதர் போன்ற தமிழ் பெரியோர் அலுப்பில்லாமல் வெளிநாடுகளில் இது போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள கனிவுடன் வருவது வெளி நாடுகளில் வாழும் தமிழர்களின் தமிழார்வத்தை தொடர ஏதுவாக இருக்கிறது என்றால் மிகையில்லை.
அதுமட்டுமன்றி திரு.அப்துல் காதர் அவர்கள் தனக்கு வரும் வருவாய் அனைத்தையும் தமிழகத்தில் அவர் தொடங்கியுள்ள ஊனமுற்றோர் நலவாழ்வு மையத்துக்கு கொடுத்து வருகிறார் என்பது குறிப்பிட தக்கது.

திரு.அப்துல் காதர்  அவர்களின்  திறமைகளை உலகுக்கு வெளி கொணர்ந்தது கவியரசு கண்ணதாசன் என்பது குறிப்பிட தக்கது. அவருடைய இருபத்தி ஓராவது வயதில் நரைகள் என்ற தலைப்பில் அவர் எழுதிய கவிதையை கண்ட கண்ணதாசன் , அந்த  கவிதையை தன் புத்தகத்தில் வெளியிட்டதோடு நின்று விடாமல் கவிக்கோ அப்துல் ரகுமானுக்கு கடிதம் எழுதி மிக திறமை வாய்ந்த இந்த இளைஞரை கவனித்து வளர்க்குமாறு கூறி இருக்கிறார். பிறகு அப்துல் ரகுமான் அவரை சந்தித்து வாணியம்படி இஸ்லாமிய கல்லூரியில் ஆசிரியர் பதவி பெற உதவி இருக்கிறார்.

இது போன்ற நல்ல நிகழ்ச்சிகளை சான்பிரான்சிஸ்கோ வளைகுடா பகுதியில் தொடர்ந்து நடத்த முயற்சி எடுக்கும் வளைகுடா பகுதி தமிழ் மன்றம் மிகவும் பாராட்டுக்குறியது.

தமிழை கொண்டு தம் குடும்பத்தை வளர்க்கும் மனிதரக்ளுக்கு நடுவில் வருங்காலத்தில் தமிழை வளர்க்க, திறமையுள்ள இளயதலைமுறையினரை கண்டெடுத்து அவர்களை வளர்க்க உதவிய கண்ணதாசன் போன்ற தமிழ் அறிஞர்களை இந்த தலைமுறையில் காண்பது அறியது.

Sunday, February 03, 2013

விஸ்வரூபமாகும் மாலி - மதமும் மத அடிப்படைவாதமும்

விஸ்வரூபம் படம் இஸ்லாமியரை இழிவு படுத்துவதாக மாபெரும் போராட்டம் தமிழகத்தில்  வெடித்திருந்த நிலையில் அது இஸ்லாமியருக்கு எதிரான படம் அல்ல என்று பலர் கூறி வருகின்றனர். அந்த படம் உண்மையான இஸ்லாமிய மதத்தினரையும் மத அடிப்படை வாதிகளையும் சரியாக வேறு படுத்தி காட்டவில்லை என்று முன் பதிவில் கூறி இருந்தேன்.


மாலி நாட்டில் நடக்கும் மத தீவிரவாதத்துக்கு எதிரான போர் பற்றி நியூயார்க் டைம்ஸில் ஒரு செய்தி வந்திருந்தது.அது அனைவரும் படிக்க வேண்டிய செய்தி. அதை படித்தால் யார் மதவாதி, யார் மத அடிப்படைவாதி என்று தெரிந்து விடும்.

இஸ்லாமிய மத அடிப்படைவாதிகள் உண்மையான இஸ்லாமியர்களை கொடூரமாக கொல்வதால் தான் பல்லாயிரகணக்கான உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. பல்வேறு இஸ்லாமிய நாடுகள் முக்கியமாக ஈராக், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் வாரந்தோறும் சில நூறு இஸ்லாமியர்களாவது இஸ்லாமிய மத அடிப்படைவாதிகளால் கொல்லபட்டு வருகிறார்கள்.

பாகிஸ்தானில் பெரும்பாலான குண்டு வெடிப்புகள் நடைபெறுவது இஸ்லாமிய வழிபாட்டு தலங்களில் தான். உண்மையில் சொல்ல போனால் தற்போது இஸ்லாமிய நாடான பாகிஸ்தானில் இஸ்லாமியரால் நிம்மதியாக வழிபாட்டு தலத்துக்கு சென்று வழி படுவதோ, மதம் சார்பான திருவிழாக்களை கொண்டாடுவதோ இயலாத நிலையில் உள்ளனர்,மத அடிப்படைவாதிகளை வளரவிட்டால் நாட்டில் என்ன நடக்கும் என்பதற்கு இஸ்லாமிய நாடுகளே சிறந்த உதாரணம்.பாகிஸ்தானின் Dawn போன்ற பத்திரிக்கைகளை தினமும் படித்தால் இது போன்ற உண்மைகள் தெரியவரும்.

இனி மாலியில் நடக்கும் நிகழ்ச்சிக்கு வருவோம்.மாலியில் வாழும் இஸ்லாமியர்கள் வன்முறையை விரும்பாத ஆனால தீவிரமாக இஸ்லாமிய மதத்தை கடை பிடிக்கும் மக்கள். பல நூறு ஆண்டுகளாக பல தடைகளையும் தாண்டி தொடர்ந்து இஸ்லாத்தை தீவிரமாக பின் பற்றி வருகின்றனர். ஆனால் அவரகளுக்கு வன்முறையை அடிப்படையாக கொண்ட இஸ்லாமிய பிரிவில் நம்பிக்கை இல்லை.தற்போது ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானில் இருந்து வெளியேறிய சில  தீவிரவாதிகள் தங்கள் சனி பார்வையை மாலி பக்கம் திருப்பினர்.கடந்த 10 மாதமாக  தங்கள் வெறியாட்டத்தை நடத்தினர்.

அங்கு நடப்பதை மாலி மக்கள் கூறுவதை பாருங்கள்
http://www.nytimes.com/2013/02/01/world/africa/timbuktu-endured-terror-under-harsh-shariah-law.html?pagewanted=all&_r=0
It started with the women.If they showed their faces in the market they would be whipped. The local men grew angry at attacks on their wives, so they organized a march to the headquarters of the Islamic police, who had installed themselves in a bank branch.

The Islamists greeted the protesters by shooting in the air. Many fled, but a small group, including Mr. Tandina, insisted that they be heard.

A young, bearded man came out to meet them. Much to Mr. Tandina’s surprise, he recognized the Islamic police official. His name was Hassan Ag, and before the fighting began he had been a lab technician at the local hospital.

“When I knew him he was cleanshaven, and he wore ordinary clothes of a bureaucrat,” Mr. Tandina said.
 
Now he was dressed in the uniform of the Islamist rebellion: a tunic, loose trousers cut well above the ankle, in imitation of the Prophet Muhammad, and a machine gun slung across his shoulder.

“I told him our women were being harmed,” he said.

Mr. Ag was unmoved.
 
“This is Islamic law,” he said, according to Mr. Tandina. “There is nothing I can do. And the worst is yet to come.”

அதை விட முக்கியமானது

“What they call Islam is not what we know is Islam,” said Dramane Cissé, the 78-year-old imam at one of the city’s biggest and oldest mosques. “They are arrogant bullies who use religion as a veil for their true desires.”

அங்கெல்லாம் சட்டத்தை நிலை நிறுத்த காவல்துறை இல்லை.பழம் பெருமை வாய்ந்த இஸ்லாமிய வழிபாட்டிடங்களை இடித்து தரை மட்டமாக்க தொடங்கி விட்டனர்.ஏன் இதை குறிப்பிடுகிறேனென்றால் தமிழகத்திலும் அது போன்ற ஒர் சிலர் கிளம்பியுள்ளனர். உதாரணமாக  தமிழகத்தில் பல நூறு ஆண்டுகளாக இருந்த இஸ்லாமிய வழிபாட்டிடங்களை அவமதிக்கும் வகையிலும் போஸ்டர் ஒட்டி வருகின்றனர்.சிலர் புனிதமான நாகூர் இஸ்லாமிய வழிபாட்டிடத்தை அழிப்போம் என்றெல்லாம் கூறுகிறார்கள்.இன்று மாலியில் உள்ள மத தீவிரவாதிகள் செய்வது போல் தமிழகத்தில் பல நூறு ஆண்டுகளாக வன்முறையை விரும்பாமல் அமைதியாக ஆனால் தீவிரமாக இஸ்லாத்தை கடைபிடிப்பவர்களை அவமதிக்கிறார்கள்

பொதுவாக நாகரீகம் அடைந்த நாடுகளில் தங்களது நம்பிக்கைக்கு ஏற்ப மத வழிபாடுகளை  பின்பற்றுவார்கள்.  அடுத்தவர்களது வழிபாட்டு முறையில் தலையிட மாட்டார்கள்.இது நாள் வரை அந்த நிலை தமிழகத்தில் நீடித்து வருகிறது.அதே நிலை நீடிப்பது தான் அனைவருக்கும் நலம்.

விஸ்வரூபம் போன்ற படங்கள் எதிர்ப்பு என்ற பெயரில் தற்போது வளர்ந்து வரும் மத அடிப்படைவாதிகள் உணர்வு பூர்வமாக வெறியூட்டி அமைதியான இஸ்லாமியர்களை பாதை மாற்றாமல் இருந்தால் சரி தான்.

திரைபடத்தில் தமிழக இஸ்லாமியரை அவமதித்ததை தீவிரமாக எதிர்த்து போராடிய இஸ்லாமிய இயக்கத்தினர், பல நூறு ஆண்டுகளாக தமிழக முஸ்லீம்களால் வழிபட்டு வரும் வழிபாட்டு தலங்களையும், அங்கு தொழும் இஸ்லாமியர்களையும் நிஜ வாழ்க்கையில் அவமதிக்கும் கூட்டத்தினரை எதிர்த்து மாநிலம் தழுவிய தீவிர போராட்டத்தை முன்னெடுப்பது இன்றைய காலத்தின் கட்டாயம் என்றால் மிகையாகாது.

 

Monday, January 28, 2013

கமலை அதிர வைத்த அமெரிக்க ரவுடி கூட்டம்!

 விஸ்வரூபம் திரைபடத்தை ஹாலிவுட்டில் சென்ற வியாழகிழமை அறிமுக படுத்தினார் கமல். அதை தொடர்ந்து வெள்ளிகிழமை சான்பிரான்சிஸ்கோ குடா பகுதியில் சில திரையரங்கங்களுக்கு  நேரே வந்து  ரசிகர்களிடம் தனது படத்தை அறிமுக படுத்தினார். இந்த தலைப்பை படித்தவுடன் அமெரிக்காவிலும் இஸ்லாமிய இயக்கங்களின் எதிர்ப்பால் பிரச்சனை என்று நினைக்க வேண்டாம். ஹாலிவுட்டில் இது போல் எத்தனையோ படங்களை எடுத்து விட்டனர். பிரச்சனை படத்தில் அல்ல. கமலின் வருகையின் போது செய்ய பட்டிருந்த ஏற்பாட்டில் தான். பிரச்சனை என்னவென்று பார்ப்போம்.

இந்த படத்துக்கு கமல் வருகை தர இருக்கும் நேரத்தில் சிறப்பு கட்டணம் ($40) என்று அறிவிக்கபட்டிருந்தது.தமிழ் ஊடகங்களில் வந்தது போல் அறிவிப்பு வெளியான இரண்டு மணி நேரத்தில் டிக்கெட்கள்  விற்று தீரவில்லை. கடைசி நேரத்தில் தான் முழுமையாக  விற்று தீர்ந்தது.

கமல் ரசிகர்கள் கட் அவுட் தயார் செய்து திரைபட வாசலில் வைத்திருந்தனர்.எட்டு மணி திரைபடத்திற்கு 7  மணியிலிலிருந்தே கூட்டம் வர ஆரம்பித்து விட்டது. சிறிய தியேட்டர் என்பதால் அந்த பகுதி முழுவதும் சிறிது சிறிதாக கூட்டம் நிரம்ப ஆரம்பித்தது.

பிறகு டிரம்ஸ் போன்ற இசை கருவிகள் வந்திறக்கபட்டன. ஒரு குழுவினர் கமலஹாசன் என்ற பெயரை ஒவ்வொருவரும் ஒரு எழுத்தையும் அவர் படத்தையும் உடையில் அணிந்து  நடனமாட தொடங்கினர்.கட் அவுட்டை  ஊர்வலமாக வாத்திய முழக்கம் மற்றும் நடனத்துடன் ஊர்வலம் சென்றனர். அந்த பகுதி வழியே சென்ற அமெரிக்கர்கள் கூட்டத்தையும், இரைச்சலையும் வேடிக்கை பார்த்தபடியே சென்றனர்.

நேரம் ஆக ஆக கூட்டம் அதிகரித்தது. கூட்டத்தை கட்டு படுத்தவோ, கமல் அங்கு வந்தால் எந்த வழியாக வருவார், எங்கு பேசுவார்,  என்ற அறிவிப்போ அல்லது ஏற்பாடோ எதுவும் செய்யவில்லை. கட்டுபாடற்ற கூட்டமாக இருந்தது. அந்த நேரத்தில் கமல் தன் குழுவினருடன் (ஆண்ட்ரியா,பூஜா குமார்) போன்றோருடன் வந்திறங்கினர். இரண்டு காவலர் மட்டுமே இருந்தனர். கூட்டத்தில் இருந்த மக்கள் முண்டியடித்து கமலருகே செல்ல முயன்றனர். இரு புறமும் கூட்டம் கமலை நோக்கி முண்டியடிக்க கடுமையான நெரிசலில் சிக்கினார். மக்கள் கடலுக்கிடையே நீந்திய படி தியேட்டரின் உள் சென்றார். இவ்வளவு கஷ்டத்திற்கிடையே தியேட்டர் லாபிக்கு சென்றாலும் அங்கும் அவர் பேசுவதற்கு ஏற்ற ஏற்பாடு எதுவும் இல்லை.இதை அடுத்து மிக கோபமாக வந்த வழியே காரை நோக்கி வெளியேறினார். அவரை காணவும் அவர் பேச்சை கேட்கவும் காத்திருந்த ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர்.
                                         இந்த வீடியோ மட்டும்  YouTube தொடுப்பு

அதன் பிறகு திரைபடம் ஆரம்பித்தது.படம் ஓடி கொண்டிருக்கும் போது பாதியில் நிறுத்தபட்டு ஒரு அறிவிப்பாளர் வந்தார். மிகவும் கஷ்டபட்டு கமலை சமாதான படுத்தி மீண்டும் அழைத்து வந்திருப்பதாகவும் ரசிகர்கள் அமைதியாக அமர்ந்து அவர் பேசுவதை கேட்குமாறும் சொன்னார்.(இதை முதல்லே செஞ்சிருக்குலாம்ல!). மேலும் கமல் மிகவும் கோபமாக இருப்பதாகவும் உலகெங்கும் சுற்றி பார்த்த அவர் இது போன்ற ரவுடி கூட்டத்தை வாழ்நாளில் எங்குமே பார்த்ததில்லை என்று கூறியதாக சொன்னார்.

பின் கமல் தன் குழுவினரிடம் வந்து பேசினார்.தமிழகத்தில் அவரது படம் தடை செய்யபட்டதன் வருத்தத்தையும், இஸ்லாமியர்களுக்கு அவரது செய்தியினையும் கூறினார். அந்த வீடியோவை முன் பதிவுகளில் வெளியிட்டிருந்தேன்.

தமிழகத்தில் தீடிரென்று ஏற்பட்ட பிரச்சனையிலும், தான் அமெரிக்க ரசிகர்களை சந்திக்க கொடுத்த உறுதிமொழியை தட்டாமல் ரசிகளை சந்தித்து அன்றிறவே இந்தியா பறந்து சென்றார். அவரது இந்த செயல் உண்மையில் பாராட்டதக்கதே.

எது எப்படியோ? வெளி நாடுகளில் வாழும் தமிழர்கள் மற்ற விஷயத்தில் தங்கள்  பாரம்பர்யத்தை கடை பிடிக்கிறார்களோ இல்லையோ, சினிமா விஷயத்தில் தெளிவாக நமது பாரம்பர்யத்தை கடை பிடிக்கிறார்கள்!

கமல் சார் ! இதுக்கெல்லாம் கோவபட்டா எப்புடி? ரசிகர்கள் அப்படியே maintain ஆனா தானே நீங்க இப்படியே maintain  ஆக முடியும்!

Sunday, January 27, 2013

விஸ்வரூபம் - பிரியாணிக்கு ஆப்பு வைத்தது யார்?

விஸ்வரூபம் படத்தை பார்க்க முதலில் விருப்பம் இல்லாவிட்டாலும்,கமலின் வருகையாலும் இந்த படம் சமீப காலமாக ஏற்படுத்திய சர்ச்சை காரணமாக என்ன தான் இருக்கிறது இந்த படத்தில் என பார்க்கலாம் என்று முடிவு செய்திருந்தேன். படத்தை பற்றி பல பேர் விமர்சன்ம் எழுதியாகி விட்டது. அதை படித்தால் படத்தின் கதை என்ன என்று தெரிந்திருக்கும்.

கமலின் நடிப்பு பற்றி ஒன்றும் சொல்ல தேவையில்லை.பழைய கதையையும் தற்போது நடக்கும் கதையையும் mix  செய்து parallel ஆக  காட்டுவது அந்த அளவு ஒட்டி செல்ல வில்லை என்றே தோன்றுகிறது.படம் நிச்சயம் ஒரு முறை பார்க்கலாம். படத்துடன் ஒத்து போகின்ற வன்முறை நிறைய இருக்கிறது. நிச்சயம்  Adult Only தான். ஹாலிவுட் படங்கள் நிறைய பார்த்து அது போல் எடுக்க வேண்டும் என்று நினைத்திருப்பதால் நிச்சயம் ஓரளவிற்கு ஆங்கில படத்துக்கு இணையாக எடுத்துள்ளார்.  ஆப்கான் செட்கள் பிரமிக்க தக்க வகையில் இருந்தன( செட்கள் அல்லது அது போன்ற பகுதியில் எடுக்க பட்டதா என்று தெரியவில்லை).கொஞ்சம் விறிவிறுப்பு குறைவு.மற்ற படி அதை திரைப்பட பார்வையில் பார்த்தால் படம் நன்றாகவே உள்ளது. (ஆனால் திரை சரித்திரத்தில் பொன்னெழுத்தால் பொறிக்கபட வேண்டிய படம் எல்லாம் இல்லை).அதிகம் ஹாலிவுட் படம் பார்ப்பவர்களுக்கு இது மிகவும் பிடித்த படமாகவே இருக்க வாய்ப்பு உள்ளது.

படத்தின் போக்கு டாக்குமென்ட்ரி போல் உள்ளது. இந்த படத்தை சாதாரண மக்கள் பொருமையாக பார்ப்பார்களா என்பது சந்தேகமே.எந்த ஒரு எதிர்ப்பு, பரபரப்பும் இல்லாமல் இந்த படத்தை வெளியிட்டிருந்தால் ஒரு சில வாரம் மட்டுமே ஓடியிருக்க வாய்ப்பு உள்ளது. DTHல் முதலில் வெளியிட நினைத்திருக்க இது ஓர் காரணமாக கூட இருக்கலாம்.

இனி படத்தில் இஸ்லாமிய எதிர்ப்பு சலசலப்பு பற்றி பார்ப்போம்.ஹே ராம் படத்தின் மூலம் கமல் தெளிக்க முயன்ற இஸ்லாமிய வெறுப்பில் 10% கூட இந்த படத்தில் இல்லை.ஆனால் இந்த படத்தின் கதைகளம் மற்றும் போக்கின் காரணமாக இதை விவாதிப்பது கடினமான செயல்.இந்த கதை களத்தில் தமிழ் படம் தேவைதானா? என்றால் தேவை இல்லை என்பது என் தனி கருத்து. ஆனால் இது கூடாது என்று யாரும் சொல்ல முடியாது.

1. முதலாவதாக இந்த படத்தில் தமிழக முஸ்லீம்களை அவமதித்துள்ளதாக முக்கிய குற்றசாட்டை வைத்துள்ளார்கள். இந்த படம் முழுமையும் ஆப்கான், அமெரிக்க சூழலில் எடுக்க பட்டுள்ளது.எனக்கு தெரிந்து ஒரே ஒரு இடத்தில் மட்டும்  அது சம்பந்தமான காட்சி வருகிறது. (அதை கூட ஒலியை மறைத்து தடுத்திருக்களாம். கதையின் போக்கை அது பாதிக்க போவது இல்லை)ஆப்கான் தீவிரவாத குழுவின் தலைவன் தமிழில் பேசுவதற்கான காரணம் இரு வருடங்கள் கோவை,மதுரை,அயோத்தியா மற்றும் இன்னொரு நகரில் தங்கியுள்ளதாக  கூறுகின்றான். (ரோஜா படத்தில் காஷ்மீர் தீவிரவாதி தமிழில் பேச காரணம் தமிழ்நாடு வேளாண் கல்லூரியில் படித்தது என்று கூறியிருப்பான்). இது ஒன்றும் தமிழக முஸ்லீம்களை இழிவு படுத்துவது போல் இருப்பதாக தெரியவில்லை.
இந்த படத்தை தமிழகத்தில் அனைவரும் பார்க்கும் பட்சத்தில், இந்த குற்றசாட்டை முக்கிய குற்றசாட்டாக கூறியதன் மூலம் முஸ்லீம்
இயக்கங்களின் நம்பகதன்மை மற்றும் அவர்களின் நோக்கம் பற்றி சந்தேகம் எழ வாய்ப்புள்ளது. அவர்களுடைய மற்ற குற்றசாட்டில் கூட சில நியாயம் உள்ளது. ஆனால் மேற்சொன்ன குற்ற சாட்டில் நியாயம் இல்லை. (பிற மொழியில் இந்த படத்தை வெளியிடும் போது அந்த மாநில ஊர்களின் பெயரை சொலவது போல் இருக்க வாய்ப்புண்டு.)
இன்னும் சொல்ல போனால் அந்த தீவிரவாத தலைவன் தற்போது அமெரிக்காவில் தான் இருப்பதாக காட்டுவார்கள். அதற்காக அமெரிக்க முஸ்லிம்களைஒட்டு மொத்தமாக குறை சொல்கிறார் என்று  எடுத்து கொள்ள முடியாது .


2. இந்த படத்தின் முக்கிய கதை களம் ஆப்கான் நாட்டு மக்களும் தலிபான் தீவிரவாதிகளும் தான். அந்த நாட்டில் மத அடிப்படைவாதம் எவ்வாறு மக்களின் வாழ்வியலோடு கலந்துள்ளது என்றும் , மத அடிப்படைவாதிகளின் கையில் அதிகாரம் இருந்தால் மக்களின்  கதி எப்படி இருக்கும் என்பது முக்கியமாக காட்டபட்டிருக்கிறது.இந்த படத்தில் காட்டபடும் தகவல் எல்லாம் நாளேடுகளில் படித்ததும்,  தீவிரவாதிகள் வெளியிடும் வீடியோவில் வந்ததும்  தான்.இதில் ஓரிரு காட்சிகளை விட மற்றவை எல்லாம் வரலாறு ரீதியாக  மிகை படுத்தி எடுக்கபட்டது இல்லை என்பதே என் கருத்து.(கடத்தபட்ட வீரர்களை காப்பாற்ற ஆப்கானிய மக்கள் மேல் நாட்டு தாக்குதலால் செத்து கிடக்கும் போது, பெரிதாக வருத்தம் படாமல் இந்த பாவம் மேல் நாட்டு அரசை தான் போய் சேரும் என்று சொல்வது போன்ற சீன்கள் விதி விலக்கு.)

மத அடிபடைவாத தீவிரவாதிகளின் மதத்துடன் உள்ள தொடர்பின்  நெருக்கம் மறுக்கமுடியாது. படத்தில் நிறைய இடங்களில் தீவிரவாதிகளின் இஸ்லாமிய தொழுகைகள் மற்றும் குரான் உபயோகம், கொலை செய்யும் போதும், தீவிரவாத தாக்குதல் போதும்  செய்வதாக காட்ட படுகிறது.இதை ஆதார பூர்வமாக நிருபிக்க இயலும் என்றாலும், சமூகபொறுப்புணர்வோடு கமல் இது போன்ற காட்சிகளை ஒரு சில இடத்தில் மட்டும் வைத்திருக்க வேண்டும். அப்படி செய்யாததால் அவரது நோக்கத்தில் பலர் நியாயமான  சந்தேகம் எழுப்ப வாய்ப்பு உள்ளது.

3.மேலை நாடுகளின் விமான தாக்குதலின் கொடூரம் காட்டபட்டாலும், அதற்கான நியாயம் காட்ட படுகிறது. தீவிரவாதிகளின் பக்கம் உள்ள ஒரு சில நியாயங்களை அவர்கள் கூறுவது போல் காட்டபடவில்லை.ஆனால் நிச்சயம் தீவிரவாதிகளின் பக்கம் உள்ள நியாயத்தை எடுத்து கூறாததை தமிழகத்தில் யாரும் எதிர்ப்பிற்கான காரணமாக கூற முடியாது. (குருதிபுனல் படத்தில் நக்சல்கள் பக்கம் உள்ள நியாயம் கூறாதது போல்)

4.கமலை பொருத்தவரை மத அடிப்படைவாத தீவிரவாத இஸ்லாமியர்கள் தீவிர மதவாதிகள்.

இந்த படத்தை பார்க்கும் சாதரண் முஸ்லீம்களை பொருத்தவரை, இனி இஸ்லாமிய அடையாளங்களுடன் தொழுவதற்கு சென்றால் கூட பிற மதத்தவர் சந்தேக கண்களுடன் பார்க்க தோன்றும் என்ற பயம்.

தற்போது தமிழகத்தில் வளர்ந்து வரும் இஸ்லாமிய மத அடிப்படைவாத இயக்கங்களை  (ஒரு உதாரணம் - பாக்கிஸ்தானில் தற்போது தீவிர இஸ்லாத்தை கடைபிடிக்காத பிற உட்பிரிவினர்களில் பல்லாயிரம் பேரை ஒவ்வொரு வருடமும் தீவிர மத அடிப்படைவாதிகள் கொன்று குவித்து வருகிறார்கள். தற்போது அதே போன்று தமிழகத்திலும் அதன் ஆரம்பமாக  பல இடங்களில் ஒரு சில இஸ்லாம் மத உட்பிரிவினரை எதிர்த்தும் அவர்களது வழிபாட்டு முறைகளை எதிர்த்தும் போஸ்டர்கள் ஒட்ட பட்டு வருகின்றன in organized way)பொருத்தவரை, அவர்களது சிந்தாந்தங்கள் கடுமையாக கடை பிடிக்க பட்டால் மக்கள் வாழ்க்கை எப்படி இருக்கும் என்று தமிழக முஸ்லீம்கள் இது போல் திரையில் பார்த்தால் நாளை அவர்களின் வளர்ச்சி பாதிக்கபடும் என்ற பயம் இருக்களாம் .

நிச்சயம் தமிழக இஸ்லாமிய மத அடிப்படைவாத இயக்கங்கள் இது போன்ற படங்களை மிகை படுத்தி  உணர்வு ரீதியாக இஸ்லாமியர்களிடம் வெறியை ஊட்டி தங்களது வளர்ச்சிக்கு உபயோகபடுத்த வாய்ப்புள்ளது. மிதவாத இஸ்லாமிய தலைவர்களின் செல்வாக்கு குறைய கூடும். இது இஸ்லாமிய சமூகத்திற்கும் நாட்டிற்கும் நல்லது அல்ல.

அதே நேரத்தில் இந்து மதவாத அமைப்புகள் தலிபான் தீவிரவாதியை குறை கூறினால் தமிழக முஸ்லீம்களுக்கு ஏன்  கோபம் வருகிறது? அவர்களுக்கும் இவர்களுக்கும் தொடர்பா என்று  விஷ பிரச்சாரத்தை ஏற்படுத்துவர்.

 மத அடிப்படைவாதிகளால் ஆப்கான்  மக்கள் பாடும் பாடை காட்டியது பாராட்டுக்குறியது. இந்த அடிப்படைவாதிகளின் செல்வாக்கு பாக்கிஸ்தான்,ஆப்ரிக்க நாடுகள் என்று எங்கும் விரிந்து வருகையில் அந்த ஆபத்தை எதிர்கொள்ள தமிழக இஸ்லாமிய மற்றும் அனைத்து சமூக மக்களும் விழிப்புணர்வோடு இருப்பது அவசியம்.

                                      இஸ்லாமியர்களுக்கு கமலின் விளக்கம்
 
 

கமல் இந்த படத்தில் தீவிரவாதிகள் குரானை உபயோகிக்கும் காட்சிகளையும் , அவர்களின் தொழுகை காட்சிகளையும் நிச்சயம் குறைத்திருக்க வேண்டும்.அவ்வாறு குறைத்திருந்தால் அவர் சொல்லும் "அன்பே அல்லாவின்" எதிரி இஸ்லாம் அல்ல. மத அடிப்படைவாத தீவிரவாதம் தான் என்ற செய்தி தெளிவாக அனைவருக்கும் சென்றிருக்கும்.ஆக பிரியாணிக்கு ஆப்பு வைத்ததில் கமலின் பங்கும் பெரிதாக உள்ளது என்பது மறுப்பதற்கில்லை.