Sunday, February 24, 2013

6 நாளில் புல் வளர்ப்பது எப்படி? -World AgriExpo 2

கலிபோர்னியாவில் நடந்த உலகின் மிக பெரிய வேளாண் பொருட்காட்சியில் பார்த்தவற்றில் தமிழக சூழ்நிலைக்கு ஏற்ற தொழில் நுட்பங்கள் பற்றி பதிவிடுவதாக  முன் பதிவில் கூறி இருந்தேன். நூதன முறையில் புல் வளர்க்கும் தொழில்நுட்பம் பற்றி இந்த பதிவில் காண்போம்.

மாட்டு பண்ணையை வைத்திருப்பவர்களுக்கு மாடுகளுக்கு தினமும் புல் கொடுத்து வளர்ப்பது மற்றும் விலையுயர்ந்த தீவனத்தை கொடுப்பது மிக முக்கியமான பணியாக உள்ளது. அதிக மாடுகளை வைத்திருப்பவர்கள் அதிக அளவு புல்களை வளர்க்க அதிக இடமும், அதிக அளவு தண்ணீர் மற்றும் இதர இடுபொருட்களும் தேவை படுகிறது. அது மட்டுமன்றி தட்ப வெட்ப நிலையும் முக்கிய பங்கு வகிக்கிறது.(முக்கியமாக மேலை நாடுகளில் குளிர் காலங்களில் புல் வளர்க்க முடியாது). அதே போல் நகர் மற்றும் புறநகர் பகுதியில் மாடு வளர்ப்பவர்கள் (தற்போது எண்ணிக்கையில் குறைந்து வந்தாலும்) புல் வளர்க்க போதுமான இடம் இருப்பதில்லை.

இந்த பிரச்சனையை தீர்க்க Fodder Solutions என்ற நிறுவனம் புதிய தொழில்நுட்பத்தை அறிமுக படுத்தி உள்ளது (Seed to Feed in 6 Days). தொழில்நுட்பம் என்றால் எதோ பெரிய ராக்கெட் சயின்ஸ் என்று நினைத்து விடாதீர்கள். மிகவும் எளிதான யோசனைதான் அது. நாம் முளை கட்டிய பயிரை சாப்பிடுகிறோம் அல்லவா? அதே முறையை கால்நடைகளுக்கும் விரிவு படுத்தி விட்டர்கள்!.புற்களோடு  தீவனத்தையும் சேர்த்து நூதன முறையில் கால்நடைகளுக்கு உணவிட இம்முறையை இந்த நிறுவனம் அறிமுக படுத்தியுள்ளது.

அதற்கு செய்ய வேண்டியன கீழ் காண்பவை.

1.தேர்ந்து எடுக்கபட்ட தானியம் மற்றும் பயிறு விதைகளை அவர்கள் கொடுக்கும் பிரத்யேகமான டிரேயில் போட வேண்டும்.அந்த டிரேயை,Fodder Solutions நிறுவனம் கொடுக்கும் பிரத்யோக அறையில் வைத்து வளர்க்க வேண்டும்.

2. தண்ணீரை குறிபிட்ட இடைவெளியில் தெளித்து கொண்டு இருக்க வேண்டும்.

3.அவர்கள் கொடுக்கும் அறையில் வெப்பநிலை, ஈரபதம் போன்றவை தக்கவைக்க படுகிறது.




புல் வளர்க்கும் அறை


4. நீர் மற்றும் தட்பவெப்ப நிலை இருப்பதால் விதை முளை விட்டு ஆறே நாட்களில் சுமார் 12 செமீ உயரம் வளர்ந்து விடுகிறது.

5.வளர்ந்த புல்லை டிரேயிலிருந்து அப்படியே எடுத்து மாட்டிற்கு உணவாக கொடுக்கலாம். டிரேயில் உள்ள பயிரில் செடியும் வேரும் மட்டும் இருப்பதால் கால்நடைகள் அப்படியே முழுவதுமாக சாப்பிட்டு விடும்.

வளர்ந்த புல்

6.இது போல் டிரேயை சுழற்சி முறையில் உபயோக படுத்தினால் தினமும் புல் கிடைத்து கொண்டே இருக்கும்.


7.அடுக்கடுக்காக டிரேக்களில் வளர்ப்பதன் மூலம் மிக குறுகிய இடத்தில்  பல மாடுகளுக்கு தேவையான புல்களை வளர்க்களாம்.

பெரிய புல் வளர்க்கும் அறை


இவ்வாறு பெறபடும் முளை கட்டிய பயிரிலிருந்து கிடைக்கும் சக்தி  மார்கெட்டில் கிடைக்கும் பிற தீவன பொருட்களுக்கு இணையானது என்கிறார்கள். அது மட்டுமன்றி விதை முளை விடும் போது அதன் என்சைம் செயலாக்கம் அதிரிக்கிறது. இந்த என்சைம், புரோட்டீன்களை எளிதில் செரிக்ககூடிய அமினோ அமிலங்களாகவும், கார்போஹைடிரேட்டை எளிய சர்க்கரை பொருட்களாகவும், கொழுப்பை, எளிய கொழுப்பு அமிலங்களாகவும் மாற்றி கொடுக்கிறது. அதாவது  இந்த உணவை செரிக்கபட்ட உணவு எனலாம்.அது மட்டுமல்ல. இவ்வாறு முளைகட்டும் போது கால்நடைக்கு தேவையான  வைட்டமின்A,E,பயோட்டின்,நார்சத்து,Anti-oxidants மற்றும் போலிக் அமிலம் போன்றவற்றின் அளவும் அதிகரிப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

முளைவிடும்போது எதிர்ப்பு சத்து காரணியாக(Anti Nutritional factor) உள்ள பைட்டேசின் அளவு குறைவதாகவும் ஆய்வுகள்  உறுதி செய்கிறது.

                                                                           விவரண படம்

தமிழகத்தில் இயற்கையே விதையை முளைத்து வளர்க்க நல்ல  தட்ப வெப்பநிலையை கொடுக்கிறது.விதை தவிர எந்த பெரிய முதலீடும் இல்லாமல் இதை தமிழக விவசாயிகள் பரிசோதனை செய்து பார்க்கலாம் அல்லவா? இந்த எளிய தொழில்நுட்பத்தை இந்தியாவில் கூட பயன்படுத்தலாம் அல்லவா?

இது பற்றி மேல் விவரங்கள் அறிய http://www.foddersolutions.co.uk என்ற தளத்துக்கு செல்லுங்கள்.

முந்தைய பகுதி

உலக வேளாண் பொருட்காட்சி - Tulare, கலிபோர்னியா

 

6 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

வியப்பாக இருக்கிறது... இணைப்பிலும் பார்க்கிறேன்...

நண்பர்களுக்காக பகிர்கிறேன்...

நன்றி...

Anonymous said...

நல்ல செய்தி. நன்றி

சதுக்க பூதம் said...

//நண்பர்களுக்காக பகிர்கிறேன்...
//

மிக்க நன்றி திண்டுக்கல் தனபாலன்

இது போன்ற தொழில்நுட்பங்கள் தமிழக விவசாயிகளை சென்றடைந்தால் மிக்க மகிழ்ச்சி. இனி வரும் பதிவுகளில் பகிர உள்ள பல தொழில்நுட்பங்களில் ஒரு சில தொழில்நுட்பங்களாவது தமிழக சூழ்நிலையில் பொருளாதார ரீதியாக லாபம் அளிக்கும் வகையில் இருந்து பலரால் பின்பற்ற பட்டால் மிக்க மகிழ்ச்சி.
மிகுந்த சிரமங்களுக்கு இடையில் மிக்க பொருட்செலவோடு இந்த பொருட்காட்சியை பார்த்ததற்கு பயனுள்ளதாக இருக்கும் (என்னுடைய interestக்கு பார்க்க சென்றாலும் கூட!)

சதுக்க பூதம் said...

//நல்ல செய்தி. நன்றி//
நன்றி velanarangam
உங்கள் தளத்தில் கூட இது பற்றிய செய்தி வெளியிடுங்கள். இந்த செய்தி நிறைய பேருக்கு சென்று சேரட்டும்

Unknown said...

நல்ல செய்தி

சதுக்க பூதம் said...

நன்றி Gnanam Sekar