Monday, February 25, 2013

விவசாயத்திற்கு ஆற்றலேற்ற பட்ட நீர் - World AgriExpo 3


தமிழகத்தில் பல ஆண்டுகளுக்கு முன்னரே காந்த சக்தி ஏற்றம் செய்ய பட்ட மருத்துவ குணம் கொண்ட நீர் என்ற பேச்சு அடிபட்டு கொண்டு இருந்தது.அது அறிவியலா அல்லது போலி அறிவியலா என்ற கேள்வி பலர் மனதில் இருந்தது. தற்போது விவசாயத்திற்கு அந்த தொழில்நுட்பத்தை Omnienviro என்ற நிறுவனத்தினர்  விரிவு படுத்தியுள்ளனர்.

நீர் என்பது ஹைடிரஜன் மற்றும் ஆக்சிசன் மூலக்கூறுகளால் உருவானது. பொதுவாக பல நீர் மூலகூறுகள் ஒன்றினைந்து கூட்டாக இருக்கும். சாதரண தண்ணீரில் இந்த மூலகூறின் அளவு பெரும்பாலும் பெரியதாக இருப்பதால் அனைத்து நீர் மூலக்கூறு குழுமங்களும் வேரின் துளை மூலம் செல்ல முடியாது.இந்த பிரச்ச்னையை தீர்க்க ஆம்னிஎன்விரோ என்ற கம்பெனி Hydrodynamic Magnetic Resonance (HDMR) தொழில்நுட்பம் மூலம் H2O ENERGIZER என்ற கருவியை அறிமுகபடுத்தி உள்ளது.நீர் ஆற்றலேற்றி பெரிய நீர் மூலகூறு குழுமங்களை உடைத்து சிறிய மூலகூறு குழுமங்களாக ஆக்குகிறது. அதன் மூலம் கொடுக்கபடும் நீரின் பெரும்பான்மையான பகுதி பயிரின் வேருக்கு செல்கிறது.பயிருக்கும் அளிக்கும் பெரும்பான்மையான நீர் வேர் வழியே உறிஞ்சபடுவதால் குறைந்த அளவு நீர் கொடுத்தாலே போதும்.


காந்த சக்தியானது ஹைடிரஜன் ஆக்சிஜன் இடையே இருக்கும் பிணைப்பின் கோணத்தை 104 டிகிரியிலிருந்து 103 டிகிரியாக குறைக்கிறதாம். அதன் விளைவாக 10 - 12 நீர் மூலக்கூறுகள் இருக்கும் குழுமம் பிரிந்து 6 - 7 நீர் மூலகூறுகள் உடைய குழுமமாக பிரிகிறது.இந்த சிறிய நீர் மூலகூறு குழுமம் வேர்கள் அதிக அளவு நீரை உறிஞ்சுவதற்கு ஏதுவாக ஆக்குகிறது.


உப்புதன்மை உடைய நீரை நீர்பசனத்துக்கு உபயோக படுத்தவும், மண்ணில் உள்ள உப்பு தன்மையை flooding மூலம் அதிக திறனுடன் வெளியேற்றவும் இக்கருவி உதவுவதாக கூறுகிறார்கள். இந்த கருவியை கொண்டு 2000 PPM -  7000 PPM உப்பு கலந்துள்ள நீரை கூட நீர்பசனத்துக்கு பயன் படுத்தலாம் என்று கூறுகின்றனர்.இந்த தொழில்நுட்பம் விவசாயம், கால்நடை துறை ஏன் மனிதரக்ளுக்கே பயனளிக்கிறது என்று கூறுகிறார்கள்.


காந்த சக்தி ஏற்றபட்ட நீரை அளிப்பதால் ஏற்படும் நன்மைகள்.

1.30% குறைந்த அளவு நீர் தேவை
2.10 - 30% விளைச்சல் அதிகரிப்பு
3. அதிக அளவு நீர் மற்றும் ஊட்ட சத்துக்களை பயிரால் இழுத்து கொள்ள முடியும்
4.அதிக அளவு பிராண வாயு கிடைக்க கூடிய தன்மை
5. வேளாண் பொருட்களின் எடை மற்றும் அளவு அதிகமாவது
6. அதிக முளைப்பு தன்மை
7. அறுவடை செய்ய பட்ட காய் கனிகள் அதிக நாட்கள் கெடாமல் இருக்கும் தன்மை
8. உப்பு தன்மையை விரைவில் நீக்கும் தன்மை.
9. பயிர்,கால்நடை மற்றும் மீன்களுக்கு நோய் எதிர்ப்பு தன்மை
10.நீர் பாசன உபகரணங்களில் செதில்கள்  உருவாவது குறைவது

பல்வேறு நீர்பாசன (சொட்டு நீர், தெளிப்பு நீர்,flooding) முறைகளில் இணைத்து உபயோகபடுத்துவது ஏற்றார் போல் இந்த கருவி வடிவமைக்க பட்டுள்ளது.

 
 
இது பற்றிய மேல் விவரங்கள் அறிய இங்கு   சென்று பாருங்கள்.

இது போன்ற காந்த புலம் ஏற்படுத்தி நீருக்கு காந்த சக்தி ஏற்படுத்தும் கருவியை உள்ளூர் ஐன்ஸ்டீன்கள் எளிதாகவும், மலிவாகவும்  தயாரித்து விடுவார்கள். தமிழகத்தில் கூட இதை எளிதாக பரிசோதித்தும் உபயோகித்தும் பார்த்து விடலாம் அல்லவா?

உலக வேளாண் பொருட்காட்சி பற்றிய முந்தய பதிவுகள்

உலக வேளாண் பொருட்காட்சி - Tulare, கலிபோர்னியா

6 நாளில் புல் வளர்ப்பது எப்படி? -World AgriExpo 2
 

Sunday, February 24, 2013

6 நாளில் புல் வளர்ப்பது எப்படி? -World AgriExpo 2

கலிபோர்னியாவில் நடந்த உலகின் மிக பெரிய வேளாண் பொருட்காட்சியில் பார்த்தவற்றில் தமிழக சூழ்நிலைக்கு ஏற்ற தொழில் நுட்பங்கள் பற்றி பதிவிடுவதாக  முன் பதிவில் கூறி இருந்தேன். நூதன முறையில் புல் வளர்க்கும் தொழில்நுட்பம் பற்றி இந்த பதிவில் காண்போம்.

மாட்டு பண்ணையை வைத்திருப்பவர்களுக்கு மாடுகளுக்கு தினமும் புல் கொடுத்து வளர்ப்பது மற்றும் விலையுயர்ந்த தீவனத்தை கொடுப்பது மிக முக்கியமான பணியாக உள்ளது. அதிக மாடுகளை வைத்திருப்பவர்கள் அதிக அளவு புல்களை வளர்க்க அதிக இடமும், அதிக அளவு தண்ணீர் மற்றும் இதர இடுபொருட்களும் தேவை படுகிறது. அது மட்டுமன்றி தட்ப வெட்ப நிலையும் முக்கிய பங்கு வகிக்கிறது.(முக்கியமாக மேலை நாடுகளில் குளிர் காலங்களில் புல் வளர்க்க முடியாது). அதே போல் நகர் மற்றும் புறநகர் பகுதியில் மாடு வளர்ப்பவர்கள் (தற்போது எண்ணிக்கையில் குறைந்து வந்தாலும்) புல் வளர்க்க போதுமான இடம் இருப்பதில்லை.

இந்த பிரச்சனையை தீர்க்க Fodder Solutions என்ற நிறுவனம் புதிய தொழில்நுட்பத்தை அறிமுக படுத்தி உள்ளது (Seed to Feed in 6 Days). தொழில்நுட்பம் என்றால் எதோ பெரிய ராக்கெட் சயின்ஸ் என்று நினைத்து விடாதீர்கள். மிகவும் எளிதான யோசனைதான் அது. நாம் முளை கட்டிய பயிரை சாப்பிடுகிறோம் அல்லவா? அதே முறையை கால்நடைகளுக்கும் விரிவு படுத்தி விட்டர்கள்!.புற்களோடு  தீவனத்தையும் சேர்த்து நூதன முறையில் கால்நடைகளுக்கு உணவிட இம்முறையை இந்த நிறுவனம் அறிமுக படுத்தியுள்ளது.

அதற்கு செய்ய வேண்டியன கீழ் காண்பவை.

1.தேர்ந்து எடுக்கபட்ட தானியம் மற்றும் பயிறு விதைகளை அவர்கள் கொடுக்கும் பிரத்யேகமான டிரேயில் போட வேண்டும்.அந்த டிரேயை,Fodder Solutions நிறுவனம் கொடுக்கும் பிரத்யோக அறையில் வைத்து வளர்க்க வேண்டும்.

2. தண்ணீரை குறிபிட்ட இடைவெளியில் தெளித்து கொண்டு இருக்க வேண்டும்.

3.அவர்கள் கொடுக்கும் அறையில் வெப்பநிலை, ஈரபதம் போன்றவை தக்கவைக்க படுகிறது.




புல் வளர்க்கும் அறை


4. நீர் மற்றும் தட்பவெப்ப நிலை இருப்பதால் விதை முளை விட்டு ஆறே நாட்களில் சுமார் 12 செமீ உயரம் வளர்ந்து விடுகிறது.

5.வளர்ந்த புல்லை டிரேயிலிருந்து அப்படியே எடுத்து மாட்டிற்கு உணவாக கொடுக்கலாம். டிரேயில் உள்ள பயிரில் செடியும் வேரும் மட்டும் இருப்பதால் கால்நடைகள் அப்படியே முழுவதுமாக சாப்பிட்டு விடும்.

வளர்ந்த புல்

6.இது போல் டிரேயை சுழற்சி முறையில் உபயோக படுத்தினால் தினமும் புல் கிடைத்து கொண்டே இருக்கும்.


7.அடுக்கடுக்காக டிரேக்களில் வளர்ப்பதன் மூலம் மிக குறுகிய இடத்தில்  பல மாடுகளுக்கு தேவையான புல்களை வளர்க்களாம்.

பெரிய புல் வளர்க்கும் அறை


இவ்வாறு பெறபடும் முளை கட்டிய பயிரிலிருந்து கிடைக்கும் சக்தி  மார்கெட்டில் கிடைக்கும் பிற தீவன பொருட்களுக்கு இணையானது என்கிறார்கள். அது மட்டுமன்றி விதை முளை விடும் போது அதன் என்சைம் செயலாக்கம் அதிரிக்கிறது. இந்த என்சைம், புரோட்டீன்களை எளிதில் செரிக்ககூடிய அமினோ அமிலங்களாகவும், கார்போஹைடிரேட்டை எளிய சர்க்கரை பொருட்களாகவும், கொழுப்பை, எளிய கொழுப்பு அமிலங்களாகவும் மாற்றி கொடுக்கிறது. அதாவது  இந்த உணவை செரிக்கபட்ட உணவு எனலாம்.அது மட்டுமல்ல. இவ்வாறு முளைகட்டும் போது கால்நடைக்கு தேவையான  வைட்டமின்A,E,பயோட்டின்,நார்சத்து,Anti-oxidants மற்றும் போலிக் அமிலம் போன்றவற்றின் அளவும் அதிகரிப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

முளைவிடும்போது எதிர்ப்பு சத்து காரணியாக(Anti Nutritional factor) உள்ள பைட்டேசின் அளவு குறைவதாகவும் ஆய்வுகள்  உறுதி செய்கிறது.

                                                                           விவரண படம்

தமிழகத்தில் இயற்கையே விதையை முளைத்து வளர்க்க நல்ல  தட்ப வெப்பநிலையை கொடுக்கிறது.விதை தவிர எந்த பெரிய முதலீடும் இல்லாமல் இதை தமிழக விவசாயிகள் பரிசோதனை செய்து பார்க்கலாம் அல்லவா? இந்த எளிய தொழில்நுட்பத்தை இந்தியாவில் கூட பயன்படுத்தலாம் அல்லவா?

இது பற்றி மேல் விவரங்கள் அறிய http://www.foddersolutions.co.uk என்ற தளத்துக்கு செல்லுங்கள்.

முந்தைய பகுதி

உலக வேளாண் பொருட்காட்சி - Tulare, கலிபோர்னியா

 

Monday, February 18, 2013

உலக வேளாண் பொருட்காட்சி - Tulare, கலிபோர்னியா

உலக வேளாண் பொருட்காட்சி  1968ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் கலிபோர்னியாவில் உள்ள டுலேரியில் நடைபெறுகிறது. அமெரிக்காவின் தோட்டகலை விவசாயத்தின் தலைநகரமாக விளங்குவது கலிபோர்னியா மாநிலம். உலக வேளாண் பொருட்காட்சி கலிபோர்னியா- டுலேரியில் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 12 முதல் 14 வரை நடை பெற்றது. இந்த விவசாய பொருட்காட்சிதான் உலகிலேயே மிக பெரிய வேளாண் பொருட்காட்சி ஆகும். இங்கு வேளாண் பொறியியல், வேளாண், தோட்டகலை,கால்நடைதுறை,வேளாண் கல்வி மற்றும் சர்வதேச வேளாண் வர்த்தகம் சார்ந்த பல்லாயிரம் நிறுவனங்கள் தங்களது ஸ்டாலை வைத்து இருப்பார்கள்.

கடந்த சில ஆண்டுகளாகவே இந்த பொருட்காட்சிக்கு செல்ல வேண்டும் என்று நினைத்திருந்தேன். நான் இருக்கும் இடத்திலிருந்து சுமார் 250 மைல் பயணம் செய்ய வேண்டும் என்பதாலும், இந்த பொருட்காட்சி எப்போதும் அலுவலக நாட்களில் (செவ்வாய் முதல் வியாழன் வரை) நடை பெறுவதாலும் கடந்த ஆண்டு வரை யோசித்து கொண்டே செல்லாமல் இருந்து விட்டேன். ஆனால் இந்த ஆண்டு கட்டாயம் செல்ல வேண்டும் என்று முடிவு செய்து பிப்ரவரி 12ம் தேதி காலை கிளம்பி விட்டேன்.சர்வதேச பார்வையாளர்கள் வருவதற்கு வசதியாக சிறு நகரமாக இருந்தாலும் இங்கேயே ஒரு விமான நிலையம் உள்ளது. சர்வதேச பொருட்காட்சி என்பதால் இங்கு பல்லாயிரம் பேர் வந்தாலும் போக்குவரத்தை அழகாக திட்டமிட்டு சுலபமாக பொருட்காட்சிக்கு செல்ல ஏற்பாடு செய்திருந்தினர்.

இந்த பொருட்காட்சியில்  சுமர் 2.6 மில்லியன் சதுர அடிகளில் பல்வேறு நிறுவனத்தார் ஸ்டால்கள் வைத்திருந்தனர்.1400க்கும் மேற்பட்ட நிறுவனத்தினர் உலகின் பல்வேறு பகுதியிலிருந்து(அமெரிக்கா,ஐரோப்பா,ரஸ்யா,சீனா,இந்தியா) வந்திருந்து தங்களது தயாரிப்புகளை உலகின் பல பகுதியிலிருந்து வந்திருந்த லட்சகணக்கான விவசாயிகளுக்கும், விவசாயம் சார்ந்த துறையினருக்கும் அறிமுகபடுத்தினர்.


அமெரிக்காவில் சாதாரணமாக விவசாய நிலங்களின் அளவு சில ஆயிரம் ஏக்கராவது இருக்கும். எனவே அமெரிக்க விவசாயிகளின் அத்யாவசிய தேவை குறைந்த வேலையாட்களை கொண்டு அதிக நிலத்தில் வேலை செய்ய ஏதுவான மிக பெரிய பண்ணை இயந்திரங்களும், தானியங்கி இயந்திரங்களும் தான். எனவே இந்த பொருட்காட்சியில் சுமார் 70% இது போன்ற இயந்திரங்களை தயாரிக்கும் நிறுவனங்கள் தங்களது இயந்திரங்களை பார்வையாளர்களின் பார்வைக்கு வைத்திருந்தனர். பெரும்பான்மையான பண்னை இயந்திரங்கள் ராட்சத வடிவில் இருந்தன. இந்திய சூழ்நிலைக்கு இது போன்ற இயந்திரங்களின் தேவை இன்னும் சில காலம் கழித்து தேவை பட்டாலும் தேவை படும் என்ற எண்ணத்துடன் பிற பகுதிகளை பார்வையிட தொடங்கினேன்.



பொருட்காட்சியில் அமெரிக்க வேளாண் வரலாறை பறைசாற்றும் வகையில் ஒரு கண்காட்சி வைக்க பட்டிருந்தது. அங்கு சுமார் 100 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் பயன் படுத்திய வேளாண் உபகரணங்களை பார்வைக்கு வைத்திருந்தனர்.

1928ம் ஆண்டு  Ford Husker

கண்காட்சியில் ஐந்து பெரிய அரங்குகளும், கால்நடை துறைக்கு தனி அரங்கும், வேளாண்மையில் பெண்கள், வேளாண் கல்வி, பண்ணை வீட்டுத்தேவை,வேளாண் ஏற்றுமதி அகியவற்றிற்கு தனி அரங்கும் திறந்த வெளியில் வேளாண் உபகரணங்களுக்கு இடமும் கொடுத்து இருந்தனர்.பொருட்காட்சி நடந்த மூன்று நாட்களும் விவசாயம், வர்த்தகம்,நீர் பாசனம் போன்றவை பற்றி தொடர்ந்த பல்வேறு தலைப்புகளில்
கருத்தரங்கு நடைபெற்று கொண்டிருந்தது. வேளாண்மை கல்வி அரங்கில் கலிபோர்னியா பகுதி பல்கலைகழகங்கள் அளிக்கும் விவசாயம் சார்ந்த கல்வி பற்றியும், வேளாண் மகளிர் பகுதியில் சமையல் போட்டி மற்றும் விளக்கமும் நடந்து கொண்டிருந்தது.

இந்தியாவிலிருந்து ஜெயின் நிறுவனத்தாரின் சொட்டுநீர் பாசன ஸ்டாலுக்கு நிறைய பார்வையாளர்கள் வந்த வண்ணம் இருந்தனர். அதே போல் இந்தியாவிலிருந்து  வேப்பம் எண்ணெய் சார்ந்த பொருட்களை விற்கும் ஒரு நிறுவனமும், நுண்ணூட்ட பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனமும் தங்களது ஸ்டால்களை வைத்திருத்தனர்.கிழக்கு அய்ரோப்பா மற்றும் ரஷ்யா நாட்டை சேர்ந்தவர்களிடம் பல இயற்கை விவசாயம் சார்ந்த நூதன கண்டுபிடிப்புகளும் இருந்தன.



ஆறே நாளில் தீவனபுல் தயாரிப்பு, காந்த சக்தி பெற்ற நீர், நூதன நுண்ணியிர் உரங்கள், உழவாகும் செடிகள்,வறட்சியை தவிர்க்கும் கரைசல், இயற்கை வளர்ச்சி ஊக்கிகள் என இந்தியாவில் பின்பற்ற கூடிய பல நூதன தொழில்நுட்பங்கள்  அங்கு இருந்தன.

சென்றிடுவீர் எட்டு திக்கும்
கலை செல்வங்கள் யாவும்
கொணர்ந்திங்கு  சேர்ப்பீர்

என்றார் பாரதி. ஏதோ என்னால் முடிந்தது, தமிழக விவசாயிகளுக்கும் ஆர்வலர்களுக்கும் இந்த தொழில் நுட்பங்களை அறிமுக படுத்தலாம் என எண்ணி இனி வரும் பதிவுகளில் எனக்கு பிடித்த மற்றும் இந்தியாவிற்கு ஏற்றதாக உள்ள ஒரு சில வேளாண் தொழில்நுட்பங்களை பற்றி பதிவிடுகிறேன் .

Sunday, February 17, 2013

சான்பிரான்சிஸ்கோவில் திரு.அப்துல் கதர் தலைமையில் பட்டிமன்றம் மற்றும் கவியரங்கம்

சான்பிரான்சிஸ்கோ வளைகுடா பகுதி தமிழ் மன்றம் சார்பில் கலைமாமனி திரு.அப்துல் காதர் அவர்கள்  தலைமையில் கவியரங்கம் மற்றும் பட்டிமன்றம் சான்பிரான்சிஸ்கோ வளைகுடா பகுதி டப்ளின் நகரில் பிப்ரவரி மாதம் 16ம் தேதி  மிக சிறப்பாக நடைபெற்றது.

வற்றாத நதிகள் என்ற தலைப்பில் கவியரங்கம் நடைபெற்றது. பெண்ணின் கண்ணீர், தியாகியின் ரத்தம்,உழைப்பாளியின் வியர்வை ,விண்ணின் மழைதுளி மற்றும் எழுத்தாளனின் மைத்துளி என்ற தலைப்புகளில் மிக அருமையான கவிதைகளை வாசித்தனர்.

அதனை தொடர்ந்து மகிழ்ச்சியும் நிறைவும் அதிகம் கிடைப்பது திருமணத்துக்கு முன்பே! திருமணத்துக்கு பின்பே! என்ற தலைப்பில்  பட்டிமன்றம் நடைபெற்றது.தலைப்பே மிக சுவையாக இருந்தாலும் பட்டிமன்றத்தில் பேசிய பேச்சாளர்கள் அதிரடியாகவும்,மிகவும் சுவையாகவும், தலைப்புக்கு பொருந்தும் படியும், அனைவரும் ரசிக்கும் படியும் பேசி மக்களை மகிழ்வித்தனர்.

கவியரங்க  மற்றும் பட்டிமன்ற நடுவர் திரு. அப்துல் காதரின் உரையும், நிகழ்ச்சி நடு நடுவே நாவண்மையுடனும், நகைச்சுவையுடனும் அவர் செய்த குறுக்கீடுகளும் நிகழ்ச்சிக்கு முத்தாய்பாக இருந்தது. குடா பகுதியில் பட்டிமன்றம் மற்றும் கவி அரங்கத்தில் பேசியவர்களின் நாவன்மையை பாராட்டிய திரு.அப்துல் காதர், பட்டிமன்றத்தில் பேசியவர்கள் அருமையாகவும், கண்ணியத்துடனும் அனைவரும் ரசிக்கும் படியும், மிகுந்த தரத்துடன் பேசியதாகவும் அவரக்ளின் புகழை ராஜ் டிவி அகட விகடம் மூலம் அனைவருக்கும் கொண்டு செல்லபோவதாகவும் கூறினார்.

80க்களிலும் 90க்களிலும் தமிழ் இளைஞர்களிடையே எழுச்சியை உருவாக்கிய அமரர் M.S. உதயமூர்த்தி அவரகளுக்கு மௌன அஞ்சலி செலுத்தி கூட்டம் தொடங்கபட்டது.

அறுபது வயதிற்கு மேலும்  திரு அப்துல் காதர் போன்ற தமிழ் பெரியோர் அலுப்பில்லாமல் வெளிநாடுகளில் இது போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள கனிவுடன் வருவது வெளி நாடுகளில் வாழும் தமிழர்களின் தமிழார்வத்தை தொடர ஏதுவாக இருக்கிறது என்றால் மிகையில்லை.
அதுமட்டுமன்றி திரு.அப்துல் காதர் அவர்கள் தனக்கு வரும் வருவாய் அனைத்தையும் தமிழகத்தில் அவர் தொடங்கியுள்ள ஊனமுற்றோர் நலவாழ்வு மையத்துக்கு கொடுத்து வருகிறார் என்பது குறிப்பிட தக்கது.

திரு.அப்துல் காதர்  அவர்களின்  திறமைகளை உலகுக்கு வெளி கொணர்ந்தது கவியரசு கண்ணதாசன் என்பது குறிப்பிட தக்கது. அவருடைய இருபத்தி ஓராவது வயதில் நரைகள் என்ற தலைப்பில் அவர் எழுதிய கவிதையை கண்ட கண்ணதாசன் , அந்த  கவிதையை தன் புத்தகத்தில் வெளியிட்டதோடு நின்று விடாமல் கவிக்கோ அப்துல் ரகுமானுக்கு கடிதம் எழுதி மிக திறமை வாய்ந்த இந்த இளைஞரை கவனித்து வளர்க்குமாறு கூறி இருக்கிறார். பிறகு அப்துல் ரகுமான் அவரை சந்தித்து வாணியம்படி இஸ்லாமிய கல்லூரியில் ஆசிரியர் பதவி பெற உதவி இருக்கிறார்.

இது போன்ற நல்ல நிகழ்ச்சிகளை சான்பிரான்சிஸ்கோ வளைகுடா பகுதியில் தொடர்ந்து நடத்த முயற்சி எடுக்கும் வளைகுடா பகுதி தமிழ் மன்றம் மிகவும் பாராட்டுக்குறியது.

தமிழை கொண்டு தம் குடும்பத்தை வளர்க்கும் மனிதரக்ளுக்கு நடுவில் வருங்காலத்தில் தமிழை வளர்க்க, திறமையுள்ள இளயதலைமுறையினரை கண்டெடுத்து அவர்களை வளர்க்க உதவிய கண்ணதாசன் போன்ற தமிழ் அறிஞர்களை இந்த தலைமுறையில் காண்பது அறியது.

Sunday, February 03, 2013

விஸ்வரூபமாகும் மாலி - மதமும் மத அடிப்படைவாதமும்

விஸ்வரூபம் படம் இஸ்லாமியரை இழிவு படுத்துவதாக மாபெரும் போராட்டம் தமிழகத்தில்  வெடித்திருந்த நிலையில் அது இஸ்லாமியருக்கு எதிரான படம் அல்ல என்று பலர் கூறி வருகின்றனர். அந்த படம் உண்மையான இஸ்லாமிய மதத்தினரையும் மத அடிப்படை வாதிகளையும் சரியாக வேறு படுத்தி காட்டவில்லை என்று முன் பதிவில் கூறி இருந்தேன்.


மாலி நாட்டில் நடக்கும் மத தீவிரவாதத்துக்கு எதிரான போர் பற்றி நியூயார்க் டைம்ஸில் ஒரு செய்தி வந்திருந்தது.அது அனைவரும் படிக்க வேண்டிய செய்தி. அதை படித்தால் யார் மதவாதி, யார் மத அடிப்படைவாதி என்று தெரிந்து விடும்.

இஸ்லாமிய மத அடிப்படைவாதிகள் உண்மையான இஸ்லாமியர்களை கொடூரமாக கொல்வதால் தான் பல்லாயிரகணக்கான உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. பல்வேறு இஸ்லாமிய நாடுகள் முக்கியமாக ஈராக், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் வாரந்தோறும் சில நூறு இஸ்லாமியர்களாவது இஸ்லாமிய மத அடிப்படைவாதிகளால் கொல்லபட்டு வருகிறார்கள்.

பாகிஸ்தானில் பெரும்பாலான குண்டு வெடிப்புகள் நடைபெறுவது இஸ்லாமிய வழிபாட்டு தலங்களில் தான். உண்மையில் சொல்ல போனால் தற்போது இஸ்லாமிய நாடான பாகிஸ்தானில் இஸ்லாமியரால் நிம்மதியாக வழிபாட்டு தலத்துக்கு சென்று வழி படுவதோ, மதம் சார்பான திருவிழாக்களை கொண்டாடுவதோ இயலாத நிலையில் உள்ளனர்,மத அடிப்படைவாதிகளை வளரவிட்டால் நாட்டில் என்ன நடக்கும் என்பதற்கு இஸ்லாமிய நாடுகளே சிறந்த உதாரணம்.பாகிஸ்தானின் Dawn போன்ற பத்திரிக்கைகளை தினமும் படித்தால் இது போன்ற உண்மைகள் தெரியவரும்.

இனி மாலியில் நடக்கும் நிகழ்ச்சிக்கு வருவோம்.மாலியில் வாழும் இஸ்லாமியர்கள் வன்முறையை விரும்பாத ஆனால தீவிரமாக இஸ்லாமிய மதத்தை கடை பிடிக்கும் மக்கள். பல நூறு ஆண்டுகளாக பல தடைகளையும் தாண்டி தொடர்ந்து இஸ்லாத்தை தீவிரமாக பின் பற்றி வருகின்றனர். ஆனால் அவரகளுக்கு வன்முறையை அடிப்படையாக கொண்ட இஸ்லாமிய பிரிவில் நம்பிக்கை இல்லை.தற்போது ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானில் இருந்து வெளியேறிய சில  தீவிரவாதிகள் தங்கள் சனி பார்வையை மாலி பக்கம் திருப்பினர்.கடந்த 10 மாதமாக  தங்கள் வெறியாட்டத்தை நடத்தினர்.

அங்கு நடப்பதை மாலி மக்கள் கூறுவதை பாருங்கள்
http://www.nytimes.com/2013/02/01/world/africa/timbuktu-endured-terror-under-harsh-shariah-law.html?pagewanted=all&_r=0
It started with the women.If they showed their faces in the market they would be whipped. The local men grew angry at attacks on their wives, so they organized a march to the headquarters of the Islamic police, who had installed themselves in a bank branch.

The Islamists greeted the protesters by shooting in the air. Many fled, but a small group, including Mr. Tandina, insisted that they be heard.

A young, bearded man came out to meet them. Much to Mr. Tandina’s surprise, he recognized the Islamic police official. His name was Hassan Ag, and before the fighting began he had been a lab technician at the local hospital.

“When I knew him he was cleanshaven, and he wore ordinary clothes of a bureaucrat,” Mr. Tandina said.
 
Now he was dressed in the uniform of the Islamist rebellion: a tunic, loose trousers cut well above the ankle, in imitation of the Prophet Muhammad, and a machine gun slung across his shoulder.

“I told him our women were being harmed,” he said.

Mr. Ag was unmoved.
 
“This is Islamic law,” he said, according to Mr. Tandina. “There is nothing I can do. And the worst is yet to come.”

அதை விட முக்கியமானது

“What they call Islam is not what we know is Islam,” said Dramane Cissé, the 78-year-old imam at one of the city’s biggest and oldest mosques. “They are arrogant bullies who use religion as a veil for their true desires.”

அங்கெல்லாம் சட்டத்தை நிலை நிறுத்த காவல்துறை இல்லை.பழம் பெருமை வாய்ந்த இஸ்லாமிய வழிபாட்டிடங்களை இடித்து தரை மட்டமாக்க தொடங்கி விட்டனர்.ஏன் இதை குறிப்பிடுகிறேனென்றால் தமிழகத்திலும் அது போன்ற ஒர் சிலர் கிளம்பியுள்ளனர். உதாரணமாக  தமிழகத்தில் பல நூறு ஆண்டுகளாக இருந்த இஸ்லாமிய வழிபாட்டிடங்களை அவமதிக்கும் வகையிலும் போஸ்டர் ஒட்டி வருகின்றனர்.சிலர் புனிதமான நாகூர் இஸ்லாமிய வழிபாட்டிடத்தை அழிப்போம் என்றெல்லாம் கூறுகிறார்கள்.இன்று மாலியில் உள்ள மத தீவிரவாதிகள் செய்வது போல் தமிழகத்தில் பல நூறு ஆண்டுகளாக வன்முறையை விரும்பாமல் அமைதியாக ஆனால் தீவிரமாக இஸ்லாத்தை கடைபிடிப்பவர்களை அவமதிக்கிறார்கள்

பொதுவாக நாகரீகம் அடைந்த நாடுகளில் தங்களது நம்பிக்கைக்கு ஏற்ப மத வழிபாடுகளை  பின்பற்றுவார்கள்.  அடுத்தவர்களது வழிபாட்டு முறையில் தலையிட மாட்டார்கள்.இது நாள் வரை அந்த நிலை தமிழகத்தில் நீடித்து வருகிறது.அதே நிலை நீடிப்பது தான் அனைவருக்கும் நலம்.

விஸ்வரூபம் போன்ற படங்கள் எதிர்ப்பு என்ற பெயரில் தற்போது வளர்ந்து வரும் மத அடிப்படைவாதிகள் உணர்வு பூர்வமாக வெறியூட்டி அமைதியான இஸ்லாமியர்களை பாதை மாற்றாமல் இருந்தால் சரி தான்.

திரைபடத்தில் தமிழக இஸ்லாமியரை அவமதித்ததை தீவிரமாக எதிர்த்து போராடிய இஸ்லாமிய இயக்கத்தினர், பல நூறு ஆண்டுகளாக தமிழக முஸ்லீம்களால் வழிபட்டு வரும் வழிபாட்டு தலங்களையும், அங்கு தொழும் இஸ்லாமியர்களையும் நிஜ வாழ்க்கையில் அவமதிக்கும் கூட்டத்தினரை எதிர்த்து மாநிலம் தழுவிய தீவிர போராட்டத்தை முன்னெடுப்பது இன்றைய காலத்தின் கட்டாயம் என்றால் மிகையாகாது.