Tuesday, August 25, 2009

சீனாவின் பிரம்மாஸ்த்திரம்



சீனா, அமெரிக்கா ஆடும் பொருளாதார சதுரங்கம்

சீனா ஏற்படுத்தும் பொருளாதார சுனாமி

சீனாவின் Shopping Mania

சீனாவின் அசுர வேக வளர்ச்சியின் பின்னனியை பற்றியும், அது டாலர் வலையில் சிக்கிய நிலை பற்றியும், சீனாவின் தற்போதைய முயற்சிகள் பற்றியும் முற்பதிவுகளில் பார்த்தோம். வருங்காலத்தில் சீனா எவ்வாறு பொருளாதார வல்லரசு நிலையை மேலை நாடுகலிடமிருந்து பறிக்க முயலுகிறது என்று இப்பதிவில் பார்ப்போம்.

உலகில் எந்த ஒரு நாடும் பொருளாதார வல்லரசாக ஆக வேண்டுமானால் அதற்கு தேவைபடும் முக்கிய தகுதி, அந்நாட்டின் நாணயம் உலக நாடுகளிடம் இருக்கும் சேமிப்பு செல்வத்தில் முக்கிய பங்காக இருக்க வேண்டும். உலக சேமிப்பு நாணயமாக இருப்பதன் மூலம் அந்த நாணயத்தின் தேவை உலக சந்தையில் மிகவும் அதிகமாக இருக்கும். வியாபார பரிவர்த்தனைக்கும், நாடுகளின் சேமிப்பிற்கும் அந்த நாணயம் தேவையாக இருப்பதால் அந்நாணயத்திற்கு அதிக கிராக்கி ஏற்படுகிறது.

சீனாவின் அடுத்த குறி, உலக சந்தையில் யுவானை சேமிப்பு நாணயமாக ஆக்க முயற்சி செய்வதாக தான் இருக்கும். ஒரு நாணயத்தை உலக சேமிப்பு நாணயமாக மாற்றுவது அவ்வளவு எளிதான செயல் அல்ல. அதுவும் சீனா போன்ற மூடிய பொருளாதார கொள்கை கொண்ட நாடுகளின் கரண்சியை பொது நாணயமாக ஆக்குவது மிகவும் கடினமே. ஆனால் சீனா அதற்கான ஆய்த்த வேலையில் தற்போதே இறங்க தொடங்கி விட்டது.

உலக சேமிப்பு செல்வத்தில் தற்போது டாலரின் பங்கு 65%. அதே போல் உலக டாலர் சேமிப்பு செல்வத்தில் 30%க்கும் மேலாக சீனாவிடம் உள்ளது!.எனவே டாலரின் மதிப்பு உடனடியாக குறையாமல், சீனா சிறிது சிறிதாக யுவானின் பங்கை உலக வர்த்தகத்தில் அதிகரிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

இதன் முதல் முயற்சியாக சீனாவின் மத்திய வங்கி தலைவர், டாலருக்கு பதிலாக உலக நிதி நிறுவனத்தின் SDRஐ(Special Drawing Right) சேமிப்பு கரண்சியாக்க வேண்டும் என்று குரல் எழுப்பி உள்ளார். SDR என்பது ஒரு நாட்டின் நாணயம் அல்ல. இது டாலர், யூரோ,பவுண்ட் மற்றும் யென் ஆகிய நாணயங்களை கூட்டாக கொண்ட ஒரு கணக்கீட்டு அளகு. தற்போது டாலரின் பங்கு தான் இதில் முக்கியமாக இருக்கிறது. ஆனால் சீனா தற்போது இந்த SDRல் யுவான் உள்பட பிற நாணயங்களையும் சேர்க்க வேண்டும் என்று போர் கொடி எழுப்பி உள்ளது. இதன் மூலம் யுவானையும் சிறிது சிறிதாக உலக சந்தையில் கலக்க முடியும். இதன் மூலம் நாடுகள் டாலர் சேமிப்புகளை சர்வதேச நிதி இணையத்திடம் கொடுத்து SDR வாங்கி கொள்ளவும் கோரிக்கை விடுத்துள்ளது. இதன் மூலம் சீனாவும் தன்னிடம் உள்ள டாலர் சொத்துக்களை இழப்பின்றி விடுவிக்க முடியும். ஆனால் தற்போது SDR சார்ந்த பாண்டுகளை மத்திய வங்கிகள் தான் வாங்கி விற்க முடியும். தனியார் நிதி நிறுவனக்கள் இவ்வர்த்தகத்தில் ஈடு பட முடியாது.

அடுத்ததாக உலக வர்த்தகத்தில் டாலரின் தேவையை குறைத்து யுவானின் தேவையை அதிகரிக்க தேவையான யுக்திகளை எடுத்து வருகிறது. இதன் முதல் கட்டமாக சீனாவின் சில கம்பெனிகளின் வெளிநாட்டு வர்த்தகத்திற்கு (முக்கியமாக ஹாங்காங், ஆசியான் ஆகிய பகுதிகளுக்கு) யுவானை உபயோகிக்க அனுமதி அளித்துள்ளது. இதனால் வெளி நாடுகள் தங்களுக்கு தேவையான யுவானை சீனாவிடமிருந்து கடனாகவோ அல்லது வாங்கவோ முடியும்.

ரஸ்யாவும் சீனாவும் தங்களுக்கிடையான வர்த்தகத்தில் தங்கள் சொந்த நாடுகளின் நாணயத்தை உபயோகிக்க முடிவு செய்துள்ளது. பிரேசிலுடனும் இவ்வாறு சொந்த நாணயத்தில் வத்தகம் செய்ய முயற்சி செய்து வருகிறது. இதனால் டாலரின் தேவை சிறிதளவு உலக வர்த்தகத்தில் குறைய வாய்ப்புள்ளது.
அது மட்டுமின்றி அர்ஜென்டினா,பெலாரஸ்,இந்தோனேசியா,மலேசியா,தென் கொரியா போன்ற நாடுகளிடம், டாலருக்கு பதில் யுவானில் வர்த்தகம் செய்ய வசதியும் செய்து கொடுத்துள்ளது.அதன் மூலம் யுவான் பணத்தை கடனாக சீனாவிடம் இந்நாடுகள் வாங்க முடியும்.

ஒரு சில பொருளாதார வல்லுனர்களின் கணிப்பு படி 2012ல் உலக வர்த்தகத்தில் $2 டிரில்லியன் மதிப்பு யுவான் அடிப்படையில் நடைபெற வாய்ப்புள்ளது.

ஆனால் யுவானை சேமிப்பு நாணயாமாக்க சீனா தன் பொருளாதாரத்தில் பல மாறுதல்கள் செய்ய வேண்டும். முக்கியமாக வெளிநாட்டினர் சீன சொத்துக்களில் எளிதாக முதலீடு செய்வது போலவும், அதில் கிடைக்கும் லாபத்தை எளிதாக வெளியில் எடுத்து செல்லவும் அனுமதிக்க வேண்டும். அது மட்டுமன்றி யுவான் அடிப்படையிலான பாண்டு மார்க்கெட் அரசு கட்டுபாடு இன்றி எளிதில் வர்த்தகம் செய்ய கூடியதாக இருக்க வேண்டும். கம்யூனிச அரசால் இது போன்ற முடிவுகளை அவ்வளவு எளிதில் எடுக்க முடியுமா என்பது சந்தேகமே. அமெரிக்காவின் மொத்த உற்பத்தி சீனாவை விட 3 மடங்கு அதிகம் என்பதையும் மறந்து விட கூடாது.

எனவே யுவான் சேமிப்பு நாணயமாகும் காலம் வெகு விரைவில் இல்லை என்றாலும் அந்த மாற்றத்தின் தொடக்கம் ஆரம்பித்து விட்டதாகவே தோன்றுகிறது.

--

3 comments:

Thomas Ruban said...

உங்கள் பதிவு வழியாக பல புதிய பொருளாதார விசியங்களை அறிந்துக்கொள்கிறேன். வாழ்த்துகள் தொடருங்கள் .

பதிவுக்கு நன்றி .

அமேரிக்கா மற்றும் சீனா இடையான டாலர்யுத்தம் எப்போது முடிவுக்கு வரும்?

இந்த டாலர்யுத்தத்தில் யார் வெற்றி பெறுவார்கள் என நினைக்கிறேர்கள்? யார் வெற்றி பெற்றால் நம்முடைய தேசத்திற்கு நல்லது?

நன்றி சார்.

சதுக்க பூதம் said...

வாழ்த்துக்கு ரொம்ப நன்றி Thomas Ruban .
//அமேரிக்கா மற்றும் சீனா இடையான டாலர்யுத்தம் எப்போது முடிவுக்கு வரும்?

இந்த டாலர்யுத்தத்தில் யார் வெற்றி பெறுவார்கள் என நினைக்கிறேர்கள்? //
இதற்கு முடிவெல்லாம் கிடையாது. சர்வ தேச சந்தையில் டாலரின் இடத்தில் ஒரு பகுதியை யுவானும்,யூரோவும் பிடிக்கும் என்று நினைக்கிறேன். அதற்கு சில (10- 15 வருடங்கள்) காலம் ஆகும். அமெரிக்காவின் பங்கு அதிகமாகவே இருக்கும் என்று தோன்றுகிறது. அதற்கு முன் உலக அளவில் சக்தி படைத்தவர்கள் ஒன்று சேர்ந்து பணத்தை உருவாக்கும் சக்தியை பெற்றுவிட்டால், இந்த பிரச்சனை நாடுகளை தாண்டி சென்று விடும்(தற்போது இது conspiracy theory ஆக மட்டும் இருந்தாலும், பிற்காலத்தில் உண்மையாக வாய்ப்புள்ளது).

//யார் வெற்றி பெற்றால் நம்முடைய தேசத்திற்கு நல்லது?
//
தற்போதைய சூழ்நிலையில் சீனாவின் வளர்ச்சி பொருளாதார ரீதியாக இந்தியாவிற்கு மிகவும் தீயது. அது பற்றி விரிவாக பதிவிடுகிறேன்

Thomas Ruban said...

உங்களுடைய தெளிவான பதிலுக்கு நன்றி. நன்றி..

//தற்போதைய சூழ்நிலையில் சீனாவின் வளர்ச்சி பொருளாதார ரீதியாக இந்தியாவிற்கு மிகவும் தீயது. அது பற்றி விரிவாக பதிவிடுகிறேன்//

நன்றி சார்.