தேசியம், மதம் எனப் பல்வேறு காரணங்களால் நாட்டின் பல்வேறு மொழிகள் மீதும் ஏற்படுத்தப்பட்ட தாக்குதல்கள், அம்மொழிகளைத் தாய்மொழியாய்க் கொண்ட உள்நாட்டு மக்களுக்கு பொருளாதாரம், அரசியல், பண்பாடு ஆகியவற்றில் பின்னடைவு ஏற்படுத்தியது என்பதை சோவியத் யூனியன், வங்காள தேசம், இந்தோனேசியா ஆகிய நாடுகளின் வரலாறுகள் மூலம் அறிந்தோம்.
இந்தியாவில் தேசிய மொழி திணிப்பு வரலாறு
தாய்மொழி என்பது மக்களின் அடையாளம் மட்டும் அல்ல; அது மக்களைச் சமூகமாக ஒன்றிணைப்பதால் உருவாகும் பெரும் வலிமை. மொழி அடிப்படையிலான சமூகங்கள் பிற மொழிகளின் ஆதிக்கத்தை ஏற்றுக் கொண்டால், அவை தொடர்ந்து அடக்குமுறைகளுக்கு உள்ளாகும் என்பது வரலாறு நமக்கு உணர்த்தும் பாடம். அடிமைத்தனத்தில் இருந்து மீண்டு எழும் போராட்டம் மிகவும் வலி மிகுந்தது. சில தலைமுறைகள் வரை அடிமைத்தனம் நீண்டுவிட்டால் மீள்வதே கேள்விக்குறியாகிவிடும்.
மொழி மீதான அடக்குமுறை உள்நாட்டு அரசினால் மட்டுமில்லாமல், அன்னியப் படையெடுப்பின் மூலமும் நிகழ்கிறது. இதனால், தொன்மையான வரலாறு கொண்ட மொழிகள் அழிவை நோக்கி நகர்கின்றன. இன்று மக்கள் தொடர்புக்கான உலகப் பொதுமொழி என்று ஏற்றுக் கொள்ளப்பட்ட ஆங்கிலம், ஒருகாலத்தில் இங்கிலாந்தின் தாய்மொழியாக மட்டுமே இருந்தது. பிறநாடுகள் மீதான இங்கிலாந்தின் படையெடுப்பு ஆங்கிலம் உலகப் பொதுமொழி ஆனதற்கான ஒரு காரணம். இவ்வாறு இங்கிலாந்து நாட்டின் அரசியல் ஆதிக்கத்துக்கு உட்பட்ட அதன் அண்டை நாடுகளான அயர்லாந்திலும், ஸ்காட்லாந்திலும், வேல்ஸ்ஸிலும் ஆங்கிலம் அந்த நாடுகளின் தாய்மொழிகளை ஏறத்தாழ அழித்தேவிட்டது.
ஐரீஷ் மொழியின் வரலாறு
ஆங்கில மொழி உருவாவதற்குப் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே தோன்றியது தொன்மையான ஐரீஷ் மொழி. அது மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஒலி வடிவில் தோன்றி, கி.பி 300 வாக்கில் எழுத்து வடிவம் பெற்ற மொழி.
அயர்லாந்து மீது இங்கிலாந்து உட்பட பிற ஐரோப்பிய நாடுகள் படையெடுப்பு நிகழ்ந்திருக்கிறது. இப்படையெடுப்புகள் கி.பி 11 ஆம் நூற்றாண்டில் சிறிய அளவில் இருந்தாலும், அயர்லாந்து மக்களின் அரசியல் அதிகாரமும், ஐரீஷ் மொழியின் முழுமையான பயன்பாடும் கி.பி 15 ஆம் நூற்றாண்டு வரை பாதிப்புக்கு உள்ளாக்கவில்லை.
கி.பி 1536 ஆம் ஆண்டு இங்கிலாந்து நாட்டின் எட்டாம் ஹென்றி மன்னர் அயர்லாந்தை வெற்றி கொள்ள முடிவு செய்து அதன் மீது போர் தொடுத்தார். அதைத் தொடர்ந்து இங்கிலாந்துக்கும் அயர்லாந்துக்கும் இடையே பல போர்கள் நடந்தன. கி.பி 1600 ஆம் ஆண்டு வாக்கில் அயர்லாந்து இங்கிலாந்தின் கட்டுபாட்டின் கீழ் வந்தது. அதன்பின், அயர்லாந்து மக்களின் வழக்கு மொழியாகவும் ஆட்சி மொழியாகவும் இருந்த ஐரீஷ் மொழியின் சரிவு ஆரம்பமானது.
அயர்லாந்து மக்களின் வலிமை அவர்களின் பண்பாட்டின் அடிப்படையான ஐரீஷ் மொழியே. ஐரீஷ் மொழியை அழிப்பதும், அதன் மூலம் ஐரீஷ் பண்பாட்டை அழிப்பதும் இங்கிலாந்தின் அரசியல் வலிமைக்குத் தேவை என்று இங்கிலாந்து உணர்ந்தது. அதன் காரணமாக, இங்கிலாந்தின் ஆதிக்கத்துக்கு உட்பட்ட அயர்லாந்து அரசு முழுவதுமாக ஆங்கிலத்தில் செயல்படத் தொடங்கியது.
இது ஒருபுறமிருக்க, கி.பி 16, 17 ஆம் நூற்றாண்டுகளில் அயர்லாந்து மக்களின் நிலங்கள் அரசால் அபகரிக்கப்பட்டன. இங்கிலாந்திலிருந்து பெருமளவில் முதலாளிகளையும், தொழிலாளிகளையும் கொண்டு வந்து, அவர்கள் வசம் பிடுங்கப்பட்ட நிலங்கள் ஒப்படைக்கப்பட்டன. இதன் விளைவாக ஆங்கிலம் பேசும் மக்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியது. அயர்லாந்து மக்கள் தங்கள் தாய்நாட்டிலேயே உரிமை இழந்து, உடைமை இழந்து, கேட்பாரற்ற அகதிகள் போன்று வாழும் அவலம் நேர்ந்தது.
உள்நாட்டிலேயே உரிமை இழந்தோருக்கும், அடிமைகளுக்கும் எந்த வேறுபாடும் இல்லை. எனவே, கி.பி 16 ஆம் நூற்றாண்டில், பல லட்சம் அயர்லாந்து மக்கள் அடிமைகளாக மேற்கிந்தியத் தீவுகளில் விற்கப்பட்டனர்.
கல்வியில் மொழித்திணிப்பும், ஐரீஷ் மொழியின் பேரழிவும்
தலைமுறை பல கடந்தன. கி.பி 19 ஆம் நூற்றாண்டின் இறுதியில் ஐரீஷ் மொழி சிறுபான்மை மக்களால் பேசப்படும் மொழி என்னும் நிலைக்கு வந்தது. ஆங்கிலமே முன்னேற்றத்தின் அடையாளமானது. இது எவ்வாறு நிகழ்ந்தது?
இன்றைய அறிவு சார்ந்த தொழிற்மயமான உலகில், பள்ளியில் கற்பிக்கப்படும் மொழியின் பங்கு குறிப்பிடத்தக்கது. பள்ளியில் கற்பிக்கப்படும் மொழி சார்ந்தே வேலைவாய்ப்பும், வேலை வாய்ப்பு சார்ந்தே பள்ளியில் மொழி கற்பிக்கப்படுதலும் என்று ஒன்றை ஒன்று சார்ந்திருக்கின்றன. ஒரு மொழி அழிய வேண்டும் என்றால், ஒன்று அந்த மொழி பள்ளிகளில் இருந்து நீக்கப்பட வேண்டும்; இல்லையேல், மொழி பயின்றால் வேலை கிடைக்காது என்ற நிலை உருவாக வேண்டும். எனவேதான் எந்த ஒரு மொழியையும், அதன் பண்பாட்டையும் அழிக்க, வேலை வாய்ப்பு அல்லது தேசியமொழி என்று ஏதேனும் ஒரு காரணம் கொண்டு பிறமொழித் திணிப்பு என்பது பள்ளிகளில் இருந்தே தொடங்கப்படுகிறது. காலப்போக்கில், மக்கள் வேலைவாய்ப்புக்குத் தேவையான மொழியை மட்டுமே பயிலத் தொடங்குவார்கள். இதுதான் ஐரீஷ் மொழி அதன் மண்ணான அயர்லாந்திலேயே சிறுபான்மை மொழியானதின் அடிப்படைக் காரணம்.
தாய்மாண்ணிலேயே அடிமைகளான அவலம், பசிக்கொடுமை, பஞ்சம், போர் ஆகியவற்றின் விளைவாக ஐரீஷ் மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட மக்களின் எண்ணிக்கை அயர்லாந்தில் குறையத் தொடங்கியது. எஞ்சிய மக்கள் கி.பி 17 ஆம் நூற்றாண்டு வரை ஐரீஷ் மொழியிலேயே பேசி வந்தனர். இருப்பினும், ஆங்கிலம் ஆட்சி மொழியாக நாடாளுமன்றம், நீதிமன்றம், வணிகம் என்று அனைத்திலும் பயன்படுத்துமாறு திணிக்கப்பட்டதால் ஐரீஷ் மொழியின் தேவை முழுமையாக நீக்கப்பட்டது. இதை ஐரீஷ் மக்கள் உணரவில்லை.
இங்கிலாந்து அயர்லாந்தை வென்றவுடன் முதற்கட்டமாக அயர்லாந்து மக்களின் உழைப்பில் பெறப்பட்ட வரிப் பணத்தைக் கொண்டு, தேசியப் பள்ளிகள் என்ற பெயரில் “ராயல் பள்ளிகள்” என்னும் ஆங்கிலப் பள்ளிகளை அயர்லாந்தின் அனைத்துப் பகுதிகளிலும் தொடங்கினர். கி.பி 1830 களில் அயர்லாந்து நாட்டில் பள்ளிகள் தனியாரால் நடத்தபட்ட காலம் அது. மக்கள் பணம் கொடுத்துப் பள்ளிக்குச் செல்ல வேண்டிய நிலையில் இருந்தனர். எனவே இலவசக் கல்வி தரும் ராயல் பள்ளிகள் அயர்லாந்து மக்களுக்கு பெரும் உதவியாக இருந்தன.
தொடக்கப்பள்ளி முதல் உயர்நிலைப் பள்ளி வரை கொண்ட இந்தப் பள்ளிகளில் ஆங்கில வழிப் பாடம் கட்டாயப்படுத்தப்பட்டது. ஆங்கில வழிக் கல்விக் கூடங்களில் ஆங்கிலம் மட்டுமே பேசப்படவேண்டும் என்பதும் வலியுறுத்தப்பட்டது. எனவே, இப்பள்ளிகளில் ஐரீஷ் மொழி முற்றிலுமாகப் புறக்கணிக்கப்பட்டது. அது மட்டுமின்றி, ராயல் பள்ளியில் ஐரீஷ் மொழி பேசும் குழந்தைகள் மிகக் கடுமையாகத் தண்டிக்கப்பட்டனர்.
பள்ளிகளில் ஆங்கிலத் திணிப்பும், ஐரீஷ் மொழியின் புறக்கணிப்பும் அயர்லாந்து மக்களின் தாய்மொழியை நிலைகுலைய வைத்தன. இவற்றுடன் ஆட்சி அலுவல்களில் ஆட்சி மொழியான ஆங்கிலத்தின் கட்டாயத்தேவை ஐரீஷ் மொழியை அழிவின் விளிம்புக்குக் கொண்டு சென்றது. அயர்லாந்தின் ஆங்கில மொழிக் கல்விமுறை பற்றி பி.எச். பியர்ஸ் (P.H. Pearse) என்ற பேரறிஞர் The Murder Machine என்ற கட்டுரை எழுதினர். அந்த மிகவும் புகழ் பெற்ற கட்டுரை, மொழியும் கல்விமுறையும் எவ்வாறு மக்களின் பண்பாட்டை அழிக்கும் கொலைக்களமாகப் பயன்பட்டது என்பதை அது விளக்குகிறது.
அன்னிய ஆதிக்கத்தின் விளைவாக அயர்லாந்து மக்கள் பெருமளவு கிராமப் பகுதிகளில் ஏழ்மையில் வாழும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். இங்கிலாந்திலிருந்து நகரங்களில் குடியமர்த்தப்பட்டவர்கள் வசதியாக வாழ்ந்து வந்தனர். கி.பி 1840 களில் அயர்லாந்தில் ஏற்பட்ட பஞ்சம் கிராம மக்கள் பெரும்பாலானவர்களை பசியால் சாகடித்ததோடு, பிழைப்புக்காகப் பலரை வேறு நாடு தேடி செல்லவேண்டிய நிலைக்கு உட்படுத்தியது. இதுவும் ஐரீஷ் மொழியின் பேரழிவுக்கு ஒரு காரணமாக ஆகியது.
ஐரீஸ் மொழியின் இன்றைய நிலை
கி.பி 1922 ஆம் ஆண்டு அயர்லாந்து நாடு விடுதலை ஆகும்போது ஐரீஷ் மொழி அழிவின் விளிம்பில் இருந்தது. மிகவும் சிறுபான்மையினரால் பேசப்படுவதால் ஐரீஷ் மொழிக்குத் தன் சொந்த மண்ணிலேயே அரசின் ஆட்சிமொழித் தகுதியில்லை என்னும் கொடுமையான சூழல். எனவே, அரசு எந்திரத்தைத் தொடர ஆங்கிலமே பயன்படுத்தப்பட்டது. விடுதலைக்குப் பின் ஐரீஷ் மொழியை ஒரு பாடமாக பள்ளிகூடங்களில் நடத்துவது கட்டாயமாக்கபட்டது. ஆனால், ஐரீஷ் மொழிவழிக் கல்வி ஊக்குவிக்கப்படவில்லை. அதன் விளைவாக ஐரீஷை முதல் மொழியாக கொண்டவர்கள் எண்ணிக்கை குறைவதும், இரண்டாம் மொழியாக பேசுபவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பதும் தொடர்ந்தது.
இன்று தொன்மையான ஐரீஷ் மொழியைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை வெறும் எழுபதாயிரம் தான். இருப்பினும், பல இடங்களில் நம்பிக்கை துளிர்விட்டுக் கொண்டுதான் இருக்கிறது. அயர்லாந்து நாட்டின் நகரப்புறங்களில் ஐரீஷ் மொழி பேசுவோரின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டு வருகிறது. Gaelscoil என்று அழைக்கபடும் ஐரீஷ் மொழி அடிப்படையிலான கல்விக்கூடங்கள் தற்போது அயர்லாந்தில் பெருகி வருகின்றன. சுமார் 50,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஐரீஷ் வழிக் கல்வி பயிற்றுவிக்கப்படும் பள்ளிகளில் படித்து வருகிறார்கள். அது மட்டுமின்றி, இந்தப் பள்ளிகளில் படித்து வெளிவரும் மாணவர்கள் ஆங்கில வழி மாணவர்களை விட அதிகத் தேர்ச்சி விகிதத்தோடு வருவது குறிப்பிடத்தக்கது. இந்தப் பள்ளிகள் ஐரீஷ் மொழியை அழிவிலிருந்து பாதுகாக்க அதிகளவு வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது.
ஸ்காட்லாந்து கேலிக் மொழியின் அழிவு
ஸ்காட்லாந்து கேலிக் (Scottish Gaelic) மொழி ஐரீஸ் மொழியுடன் மிக நெருங்கிய தொடர்புடையது. ஒரு காலத்தில் ஸ்காட்லாந்து நாட்டில் பெரும்பான்மையான மக்களால் இம்மொழி பேசப்பட்டது. ஸ்காட்லாந்து நாட்டில் இங்கிலாந்தின் ஆதிக்கத்தின் போது இந்த மொழி சிறிது சிறிதாக அழிவுக்கு உள்ளாகியது. 1609 ஆம் ஆண்டு கையெழுத்திடப்பட்ட Statutes of Iona சட்டத்தின் படி ஸ்காட்லாந்து நாட்டின் உள்ளூர் தலைவர்கள் தங்களது குழந்தைகளை ஆங்கிலவழிப் பள்ளிக்குக் கட்டாயமாக அனுப்ப வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாயினர். அயர்லாந்து போலவே ஸ்காட்லாந்திலும் பள்ளிகளின் மூலம் ஆங்கிலம் திணிக்கப்பட்டு ஸ்காட்லாந்து கேலிக் மொழி முற்றிலுமாக அழிவின் விளிம்புக்குத் தள்ளப்பட்டது. 1872 ஆம் ஆண்டு நடைமுறைப் படுத்தப்பட்ட கல்விச் சட்டத்தின்படி பள்ளியில் ஸ்காட்லாந்து கேலிக் மொழி பயிற்றுவிப்பது முழுமையாகத் தடை செய்யப்பட்டது. மாணவர்கள் தங்களது தாய்மொழியில் பேசுவதும் தடுக்கப்பட்டது. அதன் விளைவாகத் தற்போது சுமார் 1% ஸ்காட்லாந்து மக்கள் மட்டுமே ஸ்காட்லாந்து கேலிக் மொழி பேசிவருகின்றனர்.
வேல்ஸ் மொழியின் அழிவு
அயர்லாந்து, ஸ்காட்லாந்து போலவே வேல்ஸ் நாட்டிலும் ஆங்கிலத் திணிப்பு நடைபெற்றது. வேல்ஸ் மொழி கி.பி 6 ஆம் நூற்றாண்டில் தோன்றி, கி.பி 15 ஆம் நூற்றாண்டு வரை வேல்ஸ் நாட்டில் பெரும்பான்மையினரால் பேசப்படும் மொழியாக இருந்து வந்தது. ஆனால், இங்கிலாந்து நாட்டின் ஆதிக்கத்தின் விளைவாக வேல்ஸ் மொழியின் செல்வாக்குக் குறைந்தது. கி.பி 1535 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட சட்டத்தின் மூலம் ஆங்கிலம் ஆட்சி மொழியாகவும், அனைத்து அரசு வேலைக்கும் ஆங்கிலம் கட்டாயத் தேவையானது. கி.பி 1846 ஆம் ஆண்டு வேல்ஸ் நாட்டுப் பள்ளிக் கல்வி பற்றி ஆராய அமைக்கப்பட்ட குழு, தனது பரிந்துரையை Treachery of the Blue Books என்ற புத்தகத்தின் வாயிலாக வெளியிட்டது. இதில் வேல்ஸ் மக்களின் முன்னேற்றமின்மைக்குக் காரணம் வேல்ஸ் மொழி தான் என்றும், ஆங்கிலம் கற்பிப்பதின் மூலமே அவர்களை முன்னேற்ற முடியும் என்றும் பரிந்துரைக்கப் பட்டிருந்தது.
அதன் விளைவாக, பள்ளிகளில் வேல்ஸ் மொழி முழுமையாகத் தடை செய்யப்பட்டது. ஆங்கிலமே சிறிதும் தெரியாத மக்கள் உள்ள பகுதியில் கூட ஆங்கிலவழிப் பாடம் மட்டுமே நடத்தப்பட்டது. மாணவர்கள் பள்ளியில் வேல்ஸ் மொழியில் பேசினால் தண்டனை அளிக்கபட்டது. பள்ளிகளில் வேல்ஸ் மொழியில் பேசும் மாணவர்கள் கழுத்தில் WELSHN (Welsh Not) என்று எழுதபட்ட பலகை மாட்டப்படும். அடுத்தடுத்து யார் வேல்ஸ் மொழியில் பேசுகிறார்களோ அவர்கள் கழுத்துக்கு அந்தப் பலகை மாற்றப்படும். பள்ளி முடியும் போது அந்தப் பலகை யார் கழுத்தில் உள்ளதோ அந்த மாணவன் கடுமையாக தண்டிக்கப்படுவான். தாய்மொழியைப் பேசுவதால் குழந்தைகள் தண்டிக்கப்படுவது போன்று ஒரு கொடுமையான செயல் வேறேதும் இல்லை. அதையும் தாண்டி குற்றவாளிபோல் பலகை மாட்டி மாணவர்களை அவமானப்படுத்தி வதைப்பது மிகவும் கொடுமையான துன்பம்.
கி.பி 20 ஆம் நூற்றாண்டில் இந்த நிலை சிறிது சிறிதாக மாறத் தொடங்கியது. பள்ளிகளில் வேல்ஸ் மொழி மீண்டும் அறிமுகப்படுத்தப்படத் தொடங்கியது. அரசாங்கமும் தேசிய மொழியாக வேல்ஸ் மொழியை அறிவித்து அதன் வளர்ச்சிக்குத் துணை புரிந்தது. தற்போது 26% பள்ளிகள் வேல்ஸ் மொழியின் வாயிலாகவே நடைபெற்று வருகின்றன. அனைத்துப் பள்ளி மாணவர்களும் வேல்ஸ் மொழி படிப்பது கட்டாயமாக்கப்பட்டது. அதன் விளைவாகத் தற்போது வேல்ஸ் மொழி மீண்டும் மறுமலர்ச்சி பெறத் தொடங்கியுள்ளது.
வரலாறு உணர்த்தும் உண்மை
உலக வரலாற்றில் இது போன்ற நிகழ்வுகள் உலகெங்கிலும் நடந்துள்ளன. ஏன், இப்பொழுதும் நடக்கின்றன. தாய்மொழியையும், பண்பாட்டையும் பாதுகாக்க ஒவ்வொருவரும் விழிப்பாக இருந்து போராட வேண்டிய காலமாக இன்றைய சூழல் உள்ளது. தற்போதும் கூட ஹிந்தி திணிப்பு என்பது தமிழ் நாட்டில் நடந்து வருகிறது. தமிழகம் மட்டுமே ஹிந்தியை எதிர்க்கிறது என்ற பொய்மை தகர்வதும் தற்பொழுது இந்தியாவில் நிகழ்கிறது. கேரளா மலையாளத்தை அலுவல்மொழியாக அரசு நிறுவனங்களில் கட்டாயப்படுத்தியுள்ளது. கர்நாடகா பள்ளிகளில் கன்னடம் கட்டாயப்பாடம் என்று உறுதி செய்துள்ளது. ஹிந்தி மாநிலம் என்று அடையாளப்படுத்தப்பட்ட பீகாரில் கூட போஜ்பூரி போன்ற சிறுபான்மை மொழிகள் அழிவது உணரப்பட்டு ஹிந்தியின் திணிப்புக்கு எதிர்ப்பு எழுந்துள்ளது. இவ்வாறான எதிர்ப்புணர்வு எழுவது காலத்தின் தேவை. இன்று இந்த உணர்வு எழாவிட்டால் சிலநூறு ஆண்டுகளுக்குப் பின் எந்த ஒரு இந்திய மொழியையும் அழிவிலிருந்து பாதுகாப்பது என்பது இயலாமல் போய்விடும்.
இந்த கட்டுரை சான்பிராசிஸ்கோ தமிழ் மன்றத்தின் விழுதுகள் இதழில் வெளிவந்தது
இந்த கட்டுரை சான்பிராசிஸ்கோ தமிழ் மன்றத்தின் விழுதுகள் இதழில் வெளிவந்தது
2 comments:
அருமையான பதிவு கருத்துக்கள் திரு. சதுக்ககுதம்
நன்றி சுரன்
Post a Comment