Monday, August 02, 2010

கிழக்கிந்திய கம்பெனி 4 - இந்தியாவின் நெசவு தொழில் - வளர்ச்சியும் வீழ்ச்சியும்



கிழக்கிந்திய கம்பெனி இந்தியாவை சுரண்டிய கதை 1

கிழக்கிந்திய கம்பெனி 2 - ஆரம்ப காலம்

கிழக்கிந்திய கம்பெனி 3 - தேயிலை அரசியல்


கிழக்கிந்திய கம்பெனியின் தோற்றம்,ஆரம்ப கால வளர்ச்சி மற்றும் தேயிலை தொடர்பு பற்றியும் முந்தைய பதிவுகளில் பார்த்தோம். அது இந்திய தொழில் துறையை எப்படி நசித்தது என்பது பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.கி.இ.கம்பெனி வியாபாரத்தை மட்டும் நடத்திய வரை அது ஒரளவுக்கு இந்தியாவிற்கு நல்லதாகத்தான் இருந்தது.அவுரங்கசீப்பின் கடைசி காலத்திலிருந்து முகலாய பேரரசு பலமிழக்க தொடங்கியது. அவரின் மறைவிற்கு பிறகு முகலாய பேரரசு இந்தியாவின் மீது இருந்த தன் கட்டுபாட்டை இழக்க தொடங்கியது. அந்த காலத்தில் நாதிர்ஷா இந்தியாவின் மீது படையெடுத்து இந்தியாவை வெற்றி கொண்டதோடு இல்லாமல் டெல்லியில் ஒரு ரத்த ஆறையே ஓட விட்டு சென்றான். இது முகலாய பேரரசை மேலும் பலவீனபடுத்தியது. இந்நிலையில் இங்கிலாந்து மற்றும் பிரான்சு கிழக்கிந்திய கம்பெனிகள் இந்தியாவின் தெற்கு பகுதி மற்றும் பிற பகுதிகளை சிறிது சிறிதாக தன் ஆதிக்கத்தில் எடுத்து வர ஆரம்பித்தார்கள்.பல்வேறு மகாணங்களை வென்று அல்லது அங்கு தனது அதரளாவர்களை பொம்மை அரசாக வைத்து தன் ஆதிக்கத்தை நிலை நாட்டினர். பிளாசி போரின் வெற்றிக்கு பிறகு பிரன்ச்சு ஆதிக்கம் சிறிது சிறிதாக குறைந்து இங்கிலாந்தின் கிழக்கிந்திய கம்பெனியின் ஆதிக்கம் விரிய தொடங்கியது.இந்த கால கட்டத்தில் இந்தியாவின் நெசவு தொழில் எவ்வாறு வளர்ச்சி அடைந்து வீழ்ச்சி அடைந்தது என்று பார்ப்போம்.

நெசவு தொழில் முதலீடு - இங்கிலாந்து,இந்தியா - இரு வேறு முறைகள்

முன் பதிவில் கூறியது போல் கி.இ.கம்பெனியின் ஆரம்ப காலத்தில் இந்தியாவிலிருந்து இங்கிலாந்து, அய்ரோப்பா மற்றும் ஆசிய நாடுகளுக்கு துணிகளை அதிக அளவு ஏற்றுமதி செய்தது. அதன் விளைவாக இந்தியாவில் நெசவு தொழிலின் வளர்ச்சி மிக வேகமாக இருந்தது.இந்த வளர்ச்சி இந்தியாவில் பிற தொழிலில் இருப்பவர்கள் பலரை நெசவு தொழில் நோக்கி கொண்டு வந்தது. இதில் முக்கியமாக கவனிக்க பட வேண்டியது நெசவு தொழில் வளர்ச்சி நவீன தொழில்நுட்பம் மூலம் வளர்ச்சி அடைய வில்லை.இதன் வளர்ச்சி இந்தியாவில் அதிக மக்களை இழுப்பதன் மூலம் வளர்ந்தது. புதியவர்கள் நெசவு தொழிலில் இறங்கும் போது முதலீடு தேவை பட்டது. நெசவு தொழிலாளர்களுக்கு டாட்னி எனப்படும் முறைப்படி கடன் கொடுக்க பட்டது.முதலீட்டாளர்கள் பணத்தை நெசவு தொழிலாளிகளிடம் முதலீடாக கொடுப்பர்.உற்பத்தி செய்யும் துணிகளை முதலீட்டாளர்களிடம் முன்பே நிர்ணயிக்கபட்ட விலையில் விற்க வேண்டும். இங்கிலாந்தில் அதே கால கட்டத்தில் புட்டிங் அவுட் முறையில் கடன் கொடுக்க பட்டது. அதன் படி வியாபாரி உற்பத்தியாளரிடம் பருத்தி போன்ற மூல தனங்களை கொடுத்து உற்பத்தி செய்ய சொல்வார்கள். உற்பத்தியாளர்கள் துணியாக நெய்த பின் அதை வந்து வாங்கி கொள்வார்கள். இந்திய வியாபாரிகளோ பருத்தி வாங்குவது, எவ்வாறு உற்பத்தி செய்பது போன்ற முடிவுகளை உற்பத்தியாளர்களிடமே விட்டு விடுவார்கள்.இங்கிலாந்தில் மேற் கூறிய படி தொடங்கிய நெசவு தொழில் நாளாக நாளாக வேறு வடிவம் எடுக்க தொடங்கியது. வியாபாரிகள் ஒவ்வொரு உற்பத்தியாளரையும் பார்த்து மூலப்பொருட்களை கொடுத்து, உற்பத்தியை கண்காணித்து, துணியை வாங்குவதை விட, அனைத்து உற்பத்தியாளரையும் ஒரே இடத்துக்கு வர செய்து அங்கு அவர்களுக்கு மூல பொருட்களை கொடுத்து அங்கேயே துணியை நெய்ய வைத்து அவர்களிடம் நெய்ய பட்ட துணிகளை வாங்க தொடங்கினர். இது பிற்காலத்தில் தொழிற்கூட முறையில் (Industrial Production) உற்பத்தியை தொடங்க முன் மாதிரியாக இருந்தது .அதே நேரத்தில் அப்போது இங்கிலாந்தில் ஏற்பட்ட பருத்தி தட்டு பாடும்,இவ்வகை தொழிற்கூட முறை துணி உற்பத்தியும் இங்கிலாந்தில் தொழில் புரட்சி ஏற்பட ஒரு காரணியாக இருந்தது எனலாம்.

கிழக்கிந்திய கம்பெனி போட்டியாளர்களை விட அதிக துணிகளை வாங்க இந்த டாட்னி முறையை உபயோக படுத்த தொடங்கியது. கி.இ.கம்பெனி டாட்னி கடன்களை கொடுத்து நெசவாளர்களை தங்கள் பக்கம் இழுத்தது .நெசவாளர்களிடம் இருத்து பல முறை துணிகளை வாங்க முடியாமல் இம்முறை பல தடவை கடை பிடிக்க படுவதும், விட்டு விடுவதாகுமாக இருந்தது.

கி.இ.கம்பெனியின் கட்டுபாட்டில் இந்திய நெசவாளர்கள்

கி.இ.கம்பெனி வியாபாரம் மட்டும் செய்து வந்த வரை இந்திய நெசவு தொழிலாளர்கள் நல்ல லாபமடைந்தனர். ஆனால் கி.இ.கம்பெனியினரிடம் அரசியல் அதிகாரம் கிடைக்க ஆரம்பித்தவுடன் நிலமை மாற தொடங்கியது.டாட்னி முறை வணிகம் மாறி, கம்பெனி படித்த இந்திய உயர் சாதியினரை குமாஸ்தாக்களாக பணியில் அமர்த்தி அவர்கள் மூலம் கடன் கொடுத்து நெசவாளர்களை கண்காணிக்க செய்து துணிகளை வாங்க ஆரம்பித்தது. நெசவாளர்களும் கி.இ.கம்பெனிக்கு மட்டும் துணிகளை நெய்து கொடுக்க கட்டாயபடுத்த பட்டனர். மறுத்தவர்கள் துன்புறுத்தபட்டார்கள். கி.இ.கம்பெனியினர் நிர்ணயித்த விலையிலேயே துணிகளை விற்க கட்டாய படுத்தபட்டார்கள்.இதன் விளைவி கி.இ.கம்பெனிக்கு இந்திய துணி ஏற்றுமதி மிக பெரிய லாபத்தை கொடுத்தது. இங்கிலாந்துக்கு ஏற்றுமதி செய்யும் துணிகளை பிற ஐரோப்பிய நாடுகளுக்கு மீண்டும் ஏற்றுமதி செய்து மிக பெரிய பணம் பார்த்தனர் கி.இ.கம்பெனி. இவ்வகை துணி வர்த்தகத்தில்,கம்பெனிக்கு முதலீட்டை விட மும்மடங்கு லாபம் கிடைத்தது.

இங்கிலாந்து நெசவாளர்கள் லாபி

இங்கிலாந்தில் இந்திய துணிகள் கடல் போல் பரவ தொடங்கியதால் இங்கிலாந்து நெசவு தொழில் பாதிக்க பட தொடங்கியது.இங்கிலாந்து நெசவு தொழிலாளர்கள் லாபி இதை தடுக்க மிக வேகமாக செயல்பட்டது. அவர்களின் வற்புறுத்தளால் 1685ம் ஆண்டு இந்திய துணிகளுக்கு 10 சதம் சுங்க வரி விதித்தது. 5 ஆண்டுகளில் அது 10 சதமாக உயர்த்தபட்டது.1719 ம் ஆண்டு இந்திய துணிகளை அணிபவர்களுக்கு 5 பவுண்டும் விற்பவர்களுக்கு 20 பவுண்டும் அபராதம் விதிக்கும் அளவுக்கு சென்றது.1813ம் ஆண்டு சுங்க வரி 85% அளவுக்கு உயர்த்த பட்டது.

இங்கிலாந்தில் ஒரு புரட்சி



அப்போது இங்கிலாந்தில் நடந்த ஒரு புரட்சி உலக பொருளாதாரம் மற்றும் வாணிபத்தின் போக்கையே மாற்ற தொடங்கியது. அந்த புரட்சி கத்தியின்றி ரத்தமின்ற நடந்தது. அது ஒரு அரசியல் புரட்சி அல்ல. அது ஒரு அறிவியல் புரட்சி அது தான் தொழிற்புரட்சி. உற்பத்திக்கு மனிதர்களை மட்டும் நம்பி கொண்டிருந்த நிலையை மாற்றி இயந்திரங்களை கொண்டு உற்பத்தியை தொடங்க ஆரம்பித்தனர். Production by mass என்ற நிலையை மாற்றி mass production என்ற சிந்தனைக்கு உலகை கொண்டு சென்றது.சாமுவேல் கிராம்டன் 1779ம் ஆண்டு கண்டு பிடித்த நெசவு இயந்திரம் தொழில் புரட்சிக்கு வித்திட்டது..

இந்திய நெசவு தொழிலின் வீழ்ச்சி

இந்திய நெசவு தொழிலின் அழிவுக்கு இங்கிலாந்து தொழிற்புரட்சி தான் காரணம் என்பது பெரும்பாலான ஆய்வாளர்களின் கருத்தாக உள்ளது. ஆனால் உண்மையில் இந்திய துணிகளின் தரத்திற்கு இணையாக இங்கிலாந்து தொழிற்சாலைகளில் நெய்ய பட்ட துணிகள் போட்டி போட முடியவில்லை.தொழிற்புரட்சி ஏற்பட்டு பல ஆண்டுகள் ஆகியும், அதாவது 1815ம் ஆண்டு இந்தியாவில் இருந்து இங்கிலாந்திற்கு ஏற்றுமதி செய்ய பட்ட நெசவு பொருட்களின் மதிப்பு 1.3 மில்லியன் பவுண்டுகளாக இருந்தது. அதே நேரம் இங்கிலாந்திலிருந்து இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்ய பட்ட நெசவு பொருட்களின் மதிப்பு 26000 பவுண்டுதான் இருந்தது. இதிலிருந்து இங்கிலாந்து தொழிற்புரட்சியால் இந்தியாவின் நெசவு தொழிலை நேர்மையான வாணிபத்தில் ஒன்றும் செய்ய முடியவில்லை என்று தெரிகிறது.

அதன் பிறகு இந்தியாவின் நெசவு தொழில் மிக வேகமாக அழிய தொடங்கியது.1832 ம் ஆண்டு முதல் இந்தியா இங்கிலாந்துக்கு ஏற்றுமதி செய்த நெசவு பொருட்களை விட, இங்கிலாந்திலிருந்து இந்தியாவிற்கு இறக்குமதி செய்த நெசவு பொருட்களின் மதிப்பு அதிகமாக தொடங்கியது.இந்தியாவின் நெசவு தொழிலின் வீழ்ச்சிக்கு பல காரணங்களை கூறலாம்.. முதலாவதாக இங்கிலாந்து தொடர்ச்சியாக இந்திய தூணிகளுக்கு விதித்த சுங்க வரையை தொடர்ச்சியாக அதிகரித்ததை கூறலாம். அடுத்ததாக நெப்போலியன் கால பிரான்ஸுக்கு எதிரான போரின் காரணமாக இங்கிலாந்தில் இருந்து மற்ற ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய பட்ட துணிகளை தடை செய்தது.இந்தியாவிலிருந்து இங்கிலாந்திற்கு ஏற்றுமதி செய்ய பட்ட துணிகளில் பாதிக்கு மேல் பிற ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய பட்டது. ஆனால் பிரான்சுக்கு எதிரான போரின் போது, இங்கிலாந்து இவ்வகை ஏற்றுமதிக்கு தடை செய்தது. இதனால் இந்திய நெசவு வணிபம் பெரிதும் பாதிக்க பட்டது. கிழக்கிந்தய கம்பெனி அரசியல் அதிகாரம் பெரும் வரை,விவசாயிகளிடமிருந்து அரசு பெற்ற வரியின் மூலம் பெருமளவு நகர் புற வசதி படைத்தவர்களின் எண்ணிக்கையும் மற்றும் ஆட்சியாளார்களின் செலவினங்களும் அதிகரித்திருந்தது, அதனால் அவர்களின் தேவையை பூர்த்தி செய்ய அதிக நெசவு தொழில் வளர்ச்சி தேவை பட்டது, ஆனால் கி,இ.கம்பெனி வரி வசூல் செய்ய அரம்பித்தவுடன் அந்த செல்வங்கள் இங்கிலாந்து நோக்கி செல்ல தொடங்கிஅதால் இந்திய நகர் புர வர்க்கத்தின் எண்ணிக்கையும் குறைந்தது, இதன் விளைவாக நெசவு பொருட்களுக்கு உள்நாட்டு தேவையும் குறைய ஆரம்பித்தது.ஆரம்ப காலங்களில் கி.இ.கம்பெனிக்கு இங்கிலாந்து அரசின் மீது அதிக தாக்கம் (influence) இருந்தது. அப்போது அதன் லாபத்திற்காக இந்திய துணிகளை இங்கிலாந்தில் விற்பதற்கு ஏற்ற சூழ்நிலையை அரசின் மீது முடிந்த வரை அழுத்தம் கொடுத்து ஏற்படுத்தி வந்தது. ஆனால பிற்காலத்தில் அதன் தாக்கம் சிறிது சிறிதாக குறைய ஆரம்பித்தது. 1813ம் ஆண்டு ஆங்கில அரசின் சட்டத்தின் மூலம் அதன் அதிகாரம் பெருமளவு குறைக்க பட்டு ஆங்கில அரசுக்காக இந்தியவை ஆளும் ஒரு ஏஜென்டு மட்டும் தான் என்ற நிலைக்கு தள்ள பட்டது. ஆங்கில அரசின் கட்டுபாட்டிற்கு இந்தியா வர ஆரம்பித்தவுடன், ஆங்கில அரசு தன் நாட்டு நெசவு தொழிலை ஊக்குவிப்பதே முதல் குறிக்கோளாக கொண்டு இந்திய நெசவு தொழிலை முழுமையாக அழிக்க தொடங்கியது. கடைசியாக இங்கிலாந்தில் ஏற்பட்ட தொழில் புரட்சியும் இந்திய சவு தொழிலின் அழிவுக்கு ஒரு காரணமாக இருந்தது எனலாம்.

அடுத்த பதிவில் கி.இ.கம்பெனியால் எவ்வாறு இந்திய செல்வங்கள் கொள்ளை போயின என்று பார்க்கலாம்.

--

2 comments:

SAKTHI said...

dont have any practice to write comments... its really nice.. i was reading your blog past 4 hrs continuously

சதுக்க பூதம் said...

நன்றி சக்தி. தொடர்ந்து இது போலே தரமான பொருளாதாரம் சார்ந்த பதிவுகளை இட முயல்கிறேன்