
வழக்கமான நான் இடும் பதிவை விட வேறுபட்ட பதிவு இது. தர்மபுரியில் வேளாண் கல்லூரி மாணவிகளை அநியாயமாக உய்ரோடு கொளுத்தி எரிய செய்த செய்தி அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்த செய்தி. அந்த நிகழ்வு பற்றி அனைவருக்கும் தெரிந்திருக்கும்.ஆனால் அந்த நிகழ்ச்சி நடந்த அன்று கோவை வேளாண் பல்கலை கழகத்தில் மாணவர்கள் போராட்டம் நடத்திய செய்தியும் அதை எவ்வாறு நடந்தது என்பதும் ஒரு சிலருக்கே தெரிந்திருக்கும். அது பற்றி பல நாட்களாக எழுத வேண்டும் என்று நினைத்திருந்தேன்.அந்த போரட்டத்தில் பங்கு பெற்றவன் என்பதாலும் அப்போது நடந்த செய்திகள் பற்றி அனைவரும் அறிய வேண்டும் என்பதால் இதை எழுதுகிறேன். இது எந்த கட்சியையும் குறை கூற எழுதபட்டதல்ல. ஆனால் உண்மையில் நடந்த செய்தி
இந்த துயர செய்தி நடந்து பல காலங்கள் ஆகி விட்டதால், அன்று நடந்த ஒரு சில நிகழ்வுகள் மறந்து இருக்கவும் ஒரு சில பிழைகள் இருக்கவும் சாத்தியகூறு உள்ளது. ஆனால்
தற்காலத்தில் நடக்கும் மாணவர் போராட்டம் எவ்வாறு தலைமை, வழி நடத்தல் மற்றும் தெளிவான குறிக்கோள் இல்லாமல் நடை பெறுகிறது என்றும் எவ்வாறு அரசியல் கட்சிகள் குறுக்கிடுகின்றன என்றும் அதிகாரம் எப்படி பயன் படுத்தபடுகின்றன என்பது பற்றியும்
அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இந்த பதிவை எழுதுகிறேன்.
பிப்ரவரி 2ம் நாள் 2000ம் ஆண்டு அந்த துயர நிகழ்ச்சி நடந்த போது கோவை வேளாண் பல்கலையில் அனைத்து இளம் அறிவியற் (Bachelors) படிக்கும் மாணவர்களும் வெவ்வேறு காரணங்களுக்காக கல்லூரியை விட்டு வெளியே சென்றிருந்தனர். எனவே அங்கு இருந்தது
முதுகலை மாணவர்களும் ஆராய்ச்சி மாணவர்களும் தான்.மாணவர்கள் மத்தியில் மாபெரும் துயரமும் மறுபுறம் கொந்தளிப்பும் இருந்தது. ஏதாவது போராட வேண்டும் என்ற வெறி இருந்தது. ஆனால் இந்த கொடுஞ்செயலை நிறைவேற்றியவர்களோ அப்போதைய எதிர்
கட்சியினர். எனவே ஆளுங்கட்சி நடைவடிக்கை எடுக்க போவது நிச்சயம். அது மட்டுமன்றி போராட்டம் என்று போராடி என்ன கோரிக்கையை வைப்பது? ஆனாலும் உணர்வு ரீதியாக கொந்தளித்திருந்த மாணவர்கள் நீதி கேட்டு ஏதாவது போராட வேண்டும் என்ற வெறியில் இருந்தனர். மாணவர்கள் அனைவரும் போராட்டத்திற்கு ஆயத்தமானார்கள்.
ஆனால் போராட்டத்தை தலைமை ஏற்று, நூதனமான முறையில் வழி நடுத்தும் அளவிற்கு திறமை வாய்ந்த மாணவர்கள் யாரும் இல்லை. இந்த போராட்டத்தை நடத்த வேண்டும் என்று முடிவு செய்தது முழுக்க முழுக்க மாணவர்கள் தான். ஆனால் அப்போது என்ன
கோரிக்கைகளை வைப்பது என்று முடிவாக இல்லை. அந்த நேரத்தில் தான் பெரும்பாலான மாணவர்கள் அறியாமலேயே ஒரு நிகழ்வு நடந்தது. மணவர்களில் ஒரு சிலர் கம்யூனிச கட்சிகளுடன் தொடர்பு இருந்தது(அந்த மாணவர்கள் போராட்ட களத்தில் முன்னனியில் இல்லை என்பது வேறு விஷயம்). அந்த மாணவர்களுக்கு கம்யூனிச மாணவர்கள் அமைப்பிலிருந்து தொலைபேசி வந்தது. அப்போது கை தொலைபேசி எல்லாம் இல்லை. மாணவர்களை தொடர்வு கொள்ள ஒரே வழி விடுதியில் இருக்கும் பொது தொலைபேசி தான். விடுதி பொது தொலை பேசி மூலம் மாணவர்களை அவர்கள் தொடர்பு கொண்டனர். ஆனால் விடுதி தொலைபேசி முழுவது அரசாங்கத்தால் ஒட்டு கேட்க பட்டது அவர்களுக்கு அப்போது தெரியாது.
அப்போது கம்யூனிஸ்டு கட்சி அ.தி.மு.க வுனருடன் கூட்டில் இருந்தனர். அது மட்டுமன்றி தமிழக சட்டமன்றத்திற்கான இடை தேர்தல் அப்போது நடை பெற இருந்த சமயம். தர்மபுரி சம்பவத்தால் மக்களிடம் அதிமுக எதிர்ப்பு அலை பரவ தொடங்கி இருந்தது. அந்த எதிர்ப்பு அலையை எப்படியாவது தணிக்க வேண்டிய சூழ்நிலையில் இருந்தனர் எதிர்கட்சி கூட்டணியினர். அதனால் மிக பெரிய அளவில் மாணவர்கள் போராட்டத்தை நடத்துவதன் மூலம் இந்த எதிர்ப்பு அலையை ஆளும் கட்சிக்கு எதிராக திருப்பியோ அல்லது
இடைதேர்தலை சிறிது காலம் தள்ளி போடவைப்பதோ அவர்களுடைய முக்கிய நோக்கமாக இருந்தது.மேலும் பஸ் எரிப்பு விசாரனையை CBI வசம் ஒப்ப்டைக்க வேண்டும் போன்ற கோரிகைகளும் இருந்தது. ஆனால் கம்யூனிஸ்டுகள் மாணவர்களிடையே தொடர்பு
கொண்ட செய்தியை அறிந்தவுடன் ஆளும் அரசு தரப்பினர் உஷாராக ஆகினர். அது மட்டுமன்றி மாணவர் போராட்டமே எதிர் கட்சியினரின் தூண்டுதல் பேரில் தான் நடக்க உள்ளதோ என்ற சந்தேகம் ஆளும் தரப்பினரிடம் பரவ தொடங்கியது.
வழக்கமான மாணவர் போராட்டங்கள் எதிர் நோக்கும் அத்தனை பிரச்சனைகளையும் இந்த போராட்டம் எதிர் கொண்டது. கல்லூரிக்கு கால வரையற்ற விடுமுறை விட்டு கல்லூரி விடுதியிலுருந்து வலுகட்டாயாமாக மாணவர்கள் வெளியேற்ற பட்டனர்.உணவு, தண்ணீர் போன்ற அடிப்படை தேவைகள் கூட மறுக்க பட்டன. (அப்போதைய விடுதி வார்டன் மிகவும் நல்ல மனிதர் என்பதால் சில உதவிகளை செய்தார்) அப்போது போராட்டத்தில் ஈடுபட்டது முதுகலை மற்றும் ஆராய்ச்சி மாணவர்கள் என்பதால் அவர்களுடைய ஆராய்ச்சிக்கு பொறுப்பான ஆசிரியர்கள் மூலமாக மாணவர்களுக்கு அழுத்தம் கொடுக்க பட்டு போராட்டத்தை கைவிட அறிவுருத்தபட்டனர்.கல்லூரி எங்கும் போலீஸ்
குவிக்க பட்டு தீயணைப்பு வண்டி என அனைத்தும் கல்லூரியை சுற்றி நிறுத்த பட்டது.பல்கலையின் கதவுகள் அனைத்தும் மூட பட்டு அதை சுற்றியும் பல்லாயிரகணக்கான போலீசார் குவிக்க பட்டனர். வெளியிலிருந்து எந்த மாணவர்களோ அல்லது பொது மக்களோ
பல்கலை கழகத்தின் உள்வர தடை விதிக்க பட்டது பல்கலை கழகம் இருந்த தெருவே போலிசாரால் மறிக்க பட்டது. இதன் மூலம் பிற கல்லூரி மாணவர்களோ அல்லது மாணவர் அமைப்புகளோ போராடத்தில் ஈடுபடும் மாணவர்களை தொடர்பு கொள்வது தடுக்க பட்டது.கல்லூரி எங்கிலும் ஒரு சில புது முகங்கள் உலவ ஆரம்பித்தனர். அவர்கள் அனைவரும் உளவு துறையை சேர்ந்தவர்கள். மாணவர்கள் அவர்களை ஒவ்வொருவராக விரட்டி அடித்து கொண்டு இருந்தார்கள்
இனி மாணவர்கள் பக்கம் வருவோம். போராட்டம் ஆரம்பித்தாகி விட்டது. இனி கோரிக்கைகளை தொகுக்க வேண்டுமே. போராட்டத்திற்கான கோரிக்கைகள் பற்றி மாணவர்களிடையே விவாதிக்க பட்டது. ஒரு புறம் மாணவர்கள்(முக்கியமாக மாணவிகள்) உணர்ச்சி வசத்தில் இருந்தனர். மறுபுறம் எதிர்கட்சி சார்பு கொண்ட மாணவர்களோ மாணவர்களின் இந்த மனநிலையை நன்கு பயன் படுத்த தொடங்கினர். ஒரு சிலர் இடை தேர்தலை தள்ளி வைக்க வேண்டும் என்றனர். ஒரு மாணவர் முதல்வர் நேராக கோவை பல்கலை கழகத்திற்கு வந்து போராட்ட மாணவர்களிடம் நேரிடையாக பேச வேண்டும் என்றார். (அப்போது முதல்வன் திரைப்டம் வந்த சமயம் என்று நினைக்கிறேன்). அது நடக்கும் விஷயமா என்று ஒரு சிலர் கேட்டவுடன், கட்சி காரர்களின் திருமண விழாவுக்கு வரும் முதல்வர் இதற்கு ஏன் வர கூடாது? என்றார். பிறகு அது போராட்டத்தின் முக்கிய கோரிக்கையாக வைக்க பட்டது. முதல்வர் வந்து நேரிடையாக பேசும் வரை போராட வேண்டும் என்று கோரினர்.இறந்த மாணவிகளின் குடும்பத்தினருக்கு வேலை வாய்ப்பு கொடுக்க வேண்டும், இந்த பிரச்ச்னையை தேர்தலுக்கு பயன் படுத்த கூடாது(அவ்வாறு பயன் படுத்தினால் பிறகு ஒவ்வொரு தேர்தலிலும் யாராவது மாணவர்களை கொன்று பிரச்ச்னையாக்க முயல்வார்கள் என்ற சந்தேகத்தால்), மாணவர்கள் மேல் தாக்குதல் நடத்தும் சமூக விரோதிகள் மேல் நடவடிக்கை எடுக்க புதிய சட்டம் வேண்டும், நடு நிலையான விசாரணை வேண்டும் என்று பல கோரிக்கைகள் வைக்க பட்டன.அது தவிர பலகலை கழகம் சார்ந்த பொதுவான கோரிக்கைகளும் இருந்தது. முதல்வர் நேரில் வர வேண்டும் என்பது தவிர மற்ற கோரிக்கைகள் பற்றி அரசு பேச்சுவார்த்தை நடத்த தயாராகவே இருந்தனர்.
ஆனால் முதல்வர் நேரில் வர வேண்டும் என்ற கோரிக்கையால் போராட்டம் இழுத்து கொண்டே சென்றது. அப்போது த.மா.க மற்றும் பிற கட்சியினரும் இதை பயன் படுத்த முனைந்தனர். த.மா.கவின் உள்ளூர் தலைவர் மூலம் மாணவர்கள் ஆமோதித்தால் மூப்பனார் உடனடியாக மாணவர்களை சந்திக்க வர தயாராயிருப்பதாக் தெரிவிக்க பட்டது. மாணவர்கள் இதை ஒட்டு மொத்தமாக நிராகரித்தனர். அது மட்டுமன்றி ஒரு சில உள்ளுர் வாரிசு அரசியல்வாதிகள் இப்பிரச்ச்னைக்குள் நுழைந்து சமரசம் செய்து தன் நிலையை உயர்த்தி கொள்ள பார்த்தனர். ஆனால் மணவர்கள் அதற்கும் ஒத்து கொள்ளவில்லை.
அப்போதைய துணைவேந்தர் கண்ணையன் பிரச்ச்னையை தீர்க்க கடுமையாக முயற்சி செய்தாலும், அவர் சசிகலா சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் ஆளும் கட்சிக்கு அவர் மேலும் சிறிய சந்தேகம் இருந்ததாக தெரிகிறது.அப்போது தீவிரமாக போரட வேண்டும் என்பதில் மாணவர்களை விட மாணவிகள் தீவிரமாக இருந்தனர்.போராட்டம் அப்படியே சென்று கொண்டு இருந்த போது கடைசியாக மாணவர்களில் ஒரு 10 பேரை தேர்ந்து எடுத்து அவர்கள் துணைவேந்தரிடம் பேச்சுவார்த்தை நடத்த சென்றனர்.துணைவேந்தருடனான பேச்சு வார்த்தைக்கு பிறகு அந்த மாணவர்கள் குழு சனி ஞாயிறு விடுமுறைக்கு பின் முதல்வரை சென்னை கோட்டையில் சந்திப்பது என முடிவானது.பிறகு தான் பிரச்சனைகள் பின் புறமாக வர தொடங்கின. முதல்வரை சந்திக்க சென்ற 10 மாணவர்கள் வீட்டு விலாசமும் காவல் துறையினரால் சேகரிக்க பட்டு அனைவரின் வீட்டுக்கும் போலீசார் நேரிடையாக சென்றனர். மாணவர்களின் பெற்றோரிடம் போலீசார் நேரிடையாக அழுத்தம் கொடுக்க தொடங்கினர். போராட்டத்தை உடனடியாக முடிக்கவில்லை என்றால் ஏற்பட போகும் பின் விளைவுகளை(மிரட்டல்?) அவர்களிடம் சொன்னார்கள். அதன் விளைவு பெரும்பாலான பெற்றோர்கள் உடனடியாக கோவை கல்லூரி விடுதிக்கே வந்து மாணவர்கள் போராட்டத்தை உடனடியாக முடிக்க நடவடிக்கை எடுக்க சொல்லி வற்புறுத்தினார்கள்.
பிறகு மாணவர்கள் குழு தனி வேனில் சென்னை நோக்கி சென்றது. முன்புறம் பின் புறம் காவல் துறை பாதுகாப்பு வாகனங்களோடு வேறு யாரும் மாணவர்களை இடையில் சந்திக்காத படி வாகனம் சென்னை சென்றது. பேச்சி வார்த்தையின் போது மாணவர்களின் பெரும்பாலான கோரிக்கைகள் ஏற்று கொள்ளபட்டன அல்லது பரிசீலனை செய்வதாக ஒத்து கொள்ள பட்டன. மாணவர்கள் இந்த பிரச்சனையை தேர்தல் பிரச்சாரத்துக்கு பயன் படுத்த கூடாது என்று முதல்வரிடம் கோரிக்கை வைத்த போது அவர் கூறியது-
நாங்கள் சாதனைகளை சொல்லி தான் ஓட்டு வாங்குவோமே தவிர
வேதனைகளை சொல்லி ஓட்டு வாங்க மாட்டோம்
இறந்த மாணவியின் குடும்பத்தில் ஒருவருக்கு வேலை கொடுப்பதாக கூறிய அரசு அதை நிறைவேற்றவும் செய்தது.
இந்த சம்பவத்திலேயே மிகவும் சோகமான செய்திகள் சில.
தர்மபுரியில் பஸ்ஸில் மாணவிகள் எரிந்து கொண்டிருந்த போது அந்த பகுதியில் இருந்த பொது மக்கள் வேடிக்கை பார்த்தார்களே தவிர , யாருமே காப்பாற்ற முன்வரவே இல்லை. மனித நேயம் எங்கு போனது என்றே தெரியவில்லை.
மேலும் இந்த நிகழ்ச்சியை மூவர் இறந்த செய்தியாகவே பார்க்கிறோம். ஆனால் உண்மையில் அந்த பஸ்ஸில் இருந்த அனைத்து மாணவிகளையும் முழுவதுமாக எரிப்பதே இந்த செயலை நடத்தியவர்களின் நோக்கம். பஸ்ஸில் பின் புறம் முழுவதும் மாணவிகளின் பெட்டிகள் இருந்ததால் பின் புற கதவை திறக்க வழியே இல்லை. வன்முறை கும்பலோ பஸ்ஸின் முன் வாசம் முழுவதும் பெட்ரோலை ஊற்றி எறிய விட்டு விட்டதால் முன் வாசல் வழியேயும் தப்ப வழி இல்லை. அப்போது அடுத்த பஸ்ஸில் இருந்த வேளாண் கல்லூரி மாணவர்களின் துணிச்ச்லான முயற்சியால் தான் மற்ற மாணவிகளை காப்பாற்ற முடிந்தது. பின் கதவின் கண்ணாடியை உடைக்க கூட அப்பகுதி பொது மக்களிடமிருந்து அவர்களுக்க உதவி கிடைக்க வில்லை.அந்த மாணவர்களின் துணிச்சலையும் முயற்சியையும் அளவிடவே முடியாது.
பேருந்தில் தர்மபுரி அருகே சென்று கொண்டு இருந்த போது ஜெயலலிதாவின் கோர்ட் தீர்ப்பு பிரச்சனை பற்றி தெரிந்தவுடன் அந்த வாகன ஓட்டுனர் பாதுகாப்பான பகுதியில் நிறுத்த வேண்டும் என்பதால் தர்மபுரி கலெக்டர் அலுவலகம் அருகில் நிறுத்தினார்.கலெக்டர்
அலுவலகம் அருகில் பஸ் நிறுத்தினாலும் பஸ் முழுமையாக கருகி எரியும் வரை தீயணைப்பு வண்டி அங்கு வரவே இல்லை.
கல்லூரி நிர்வாகத்தினர் மாணவர்களை ஒரு பஸ்ஸிலும் மாணவிகளை ஒரு பஸ்ஸிலும் அமர்த்தி அழைத்து சென்றுள்ளனர். மாணவர்களுக்கு உள்ள maturityகூட ஆசிரியர்களுக்கு இல்லாதது கொடுமை. மாணவ மாணவிகள் என்று பிரிக்காமல் பேட்ச் வாரியாக பிரித்து
இருந்தால் அந்த பஸ்ஸின் உள் இருந்திருக்க கூடிய மாணவிகளை மாணவர்கள் நிச்சயம் முழுமையாக காப்பாற்றி இருப்பார்கள்.
அப்போது போலீசார் நடந்து கொண்ட விதம் கொடுமையிலும் கொடுமை.கதறிய வேளாண் கல்லூரி மாணவர்களை மிரட்டிய சம்பவம் கூட நடந்துள்ளது.
அந்த மாணவர்கள் கூறிய ஒரு சில போலீஸ் அதிகாரிகள் மேல் நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைக்கபட்டது. ஆனால் அவர்கள் மேல் நடவடிக்கை எடுத்தனரா என்று தெரியவில்லை.
கோர்ட்டில் வன்முறை கும்பலின் பலவகை மிரட்டலையும் மீறி தைரியமாக சாட்சி சொன்ன பேராசிரியர்கள் மற்றும் மாணவிகளின் நெஞ்சுரம் அதசயிக்க தக்கது.
அதன் பிறகு இறந்த குடும்பத்தினரின் குடும்பத்துக்கு ஆறுதல் சொல்ல பல்கலை கழகம் சார்பில் சென்ற குழுவில் நாமக்கல்லை சேர்ந்த மாணவியின் வீட்டுக்கு சென்றிருந்தேன். தன் மகளை எறியும் தீயில் இழந்த அந்த குடும்பத்தினரின் கதறல் மிகவும் கொடுமையாக இருந்தது.
இந்த போராட்டத்தின் விளைவாக முதல்வருக்கு கோவை வேளாண் பல்கலை கழகம் மேல் ஏற்பட்ட கோபத்தை தவிர்க்க, புதிதாக கட்டபட்ட பட்டமளிப்பு விழா கட்டிடத்துக்கு "கலைஞர் அரங்கம்" என்று பெயர் வைக்க பட்டது. கோவை வேளாண் பல்கலைகழகத்தின்
மேல் ஜெயலலிதாவுக்கு இருந்த கோபத்தை அகற்ற மகராசி சிலை( மக - ராசி- ஜெயலலிதா மக ராசியை சேர்ந்தவர்) வைக்க பட்டது.
இந்த பதிவை எழுதி முடிக்கும் போது அந்த கொடும்பாவிகளுக்கான தூக்கு தண்டனை உறுதி செய்யபட்ட செய்தி வந்துள்ளது. நீதி இன்னும் இந்தியாவில் முழுமையாக சாகவில்லை!
--