Thursday, July 23, 2009

சீனா, அமெரிக்கா ஆடும் பொருளாதார சதுரங்கம்

.

கடந்த சில ஆண்டுகளாக உலகளவில் உள்ள அனைத்து பொருளாதாதார வல்லுனர்களாலும் கேட்க படும் கேள்வி -சீனா மேலை நாடுகளை மீறி பொருளாதார வல்லரசாக மாறுமா என்பதாக தான் இருக்கும். இன்றைய உலக பொருளாதாரத்தில் நடப்பது தான் என்ன? சீனாவின் இன்றைய உண்மையான நிலை தான் என்ன? அது பற்றி இப்போது பார்ப்போம்.

1970 வரை சீன கம்யூனிச தலைவர்களுக்கும் மேலை நாடுகளுக்கும் சரியான உறவில்லை. ஆனால் மா.சே.துங்கிற்கு பிறகு சீனாவின் அணுகுமுறையில் மாற்றம் ஏற்பட தொடங்கியது.அந்த கால கட்டத்தில் தான் அமெரிக்காவும் (ஓரளவுக்கு?) தங்கம் கையிருப்பு அடிப்படையில் டாலரை அச்சடிப்பதை நிறுத்தி விட்டு சந்தையின் தேவைகேற்ப டாலரை அச்சடிக்க தொடங்கியது. டாலரின் மதிப்பை நிலை நிறுத்த அரபு நாடுகளிடம் பெட்ரோலை டாலருக்கு மட்டும் விற்க ஒப்பந்தமிட்டது.இதன் மூலம் மேலை நாட்டு பொருளாதார நிறுவனங்கள்(வங்கிகள்,காப்பீட்டு நிறுவனங்கள், Investment bank போன்றவை) குறைந்த வட்டிக்கு அதிக பணத்தை பெற்று பன்னாட்டு கம்பெனிகளின் அசுர வளர்ச்சிக்கு உதவியதோடு,உலகளவில் பெரும் சொத்துக்கள் இந்த பொருளாதார நிறுவனங்கள் மற்றும் சில ஆயிரம் பணகாரர்களின் கைக்கு மாறியது.

மேலை நாடுகளின் பொருளாதார வளர்ச்சி இருந்த அளவு மக்கள் தொகை வளர்ச்சி இல்லை.பொருளாதார வளர்ச்சி மற்றும் பணத்தின் புழக்கம் நாட்டு மக்கள் அனைவரிடமும் அதிகமாக இருந்தால் பண வீக்கம் அதிகமாகி, அவர்கள் உற்பத்தி செய்யும் பொருட்களின் விலையும் அதிகமாக கூடும்.

பொருளாதார வளர்ச்சி அதிகம் இருக்க வேண்டும். அப்போது தான் பெரும் நிறுவனக்களின் லாபம் அதிகம் இருக்கும்.ஆனால் சாதாரண மக்களிடம் வளர்ச்சியின் முழு பயனும் செல்லாமல் முதலீட்டாளர்களிடம் பெரும் பங்கு செல்ல வேண்டும்.சாதாரண மக்கள் இதனால் அதிகம் பாதிப்படையாமல் இருக்க அவர்கள் வாங்கும் பொருட்களின் விலை குறைவாக இருக்க வேண்டும்.
அதற்கு பொருட்களை மலிவாக உற்பத்தி செய்ய வளரும் நாடுகளின் உதவி தேவை பட்டது.அப்போது அமெரிக்க அரசு மற்றும் பன்னாட்டு கம்பெனிகளின் கண்ணில் பட்டதுதான் சீனா. சீனாவில் சர்வாதிகாரம் கம்யூனிசத்தின் பெயரில் வலுவாக இருந்ததால் ஒரு முடிவை எடுத்து பெரிய அளவில் எந்த எதிர்ப்பும் இல்லாமல் விரைவில் செயல் படுத்துவது வசதியாக இருந்தது. சீனாவும் அதிக மக்கள் தொகையை விவசாயத்திலிருந்து உற்பத்தி துறைக்கு மாற்ற வேண்டிய கட்டயத்தில் இருந்ததால், அந்நாட்டு விவசாயிகளை அமெரிக்காவிற்கு தேவையான பொருட்களை உற்பத்தி செய்ய தொழிற் துறைக்கு மாற்ற தொடங்கியது. இதன் மூலம் நாட்டின் தொழிலாளர்களின் உற்பத்தி திறன் அதிகரித்தது.

சீனர்கள் பொதுவாகவே சேமிப்புக்கு பெயர் போனவர்கள்.மக்களின் சேமிப்பு அதிகமானது.கடந்த சில ஆண்டுகளாக உலகமயமாதல் உச்சத்திற்கு சென்ற போது அமெரிக்காவுக்கு சீனா செய்த ஏற்றுமதியின் அளவு மிகவும் அதிகரிக்க ஆரம்பித்தது. அதன் விளைவாக சீனாவின் டாலர் கையிருப்பு பில்லியனிலிருந்து சில டிரில்லியனுக்கு உயர்ந்தது. மறுபுறம் போர்,ஆயுத உற்பத்தி மற்றும் பிற காரணிகளால் அமெரிக்க அரசின் பற்றாகுறையும், ஏற்றுமதியை விட இறக்குமதி குறைந்து வணிப பற்றாக்குறையும் அதிகமாகியது. இந்த பற்றாக்குறையை சரி செய்ய வெளி நாடுகளிடம் கடன் வாங்க வேண்டும். உலக சேமிப்பு நாணயமாக டாலர் இருப்பதாலும், சீனா,ஜப்பான் போன்ற நாடுகளிடம் கையிருப்பாக டாலர் அதிகம் இருந்ததாலும், அமெரிக்காவிற்கு குறைந்த வட்டிக்கு டாலரை சீனா கொடுக்க ஆரம்பித்தது.

சீனாவின் வளர்ச்சியை பாராட்டுபவர்கள் அமெரிக்க அரசாங்கமே சீனாவை நம்பி தான் உள்ளது. எனவே சீனா தான் மிக பெரிய பொருளாதார சக்தி என்பார்கள். ஆனால் இந்த வளர்ச்சியின் மறுபுறத்தையும் பார்க்க வேண்டும். சீனா அமெரிக்காவிடம் நடை பெரும் வாணிபத்தை பார்த்தால், சீனாவின் ஏற்றுமதி இறக்குமதியை விட மிக அதிகமாக உள்ளது. சீனாவின் நாணயமான யுவானின் மதிப்பை சந்தையின் காரணிகளால் கட்டுபாடற்ற முறையில் நிர்ணயிக்க பட்டால் (floating exchange rate), அதன் மதிப்பு மிக அதிகமாகி இருக்கும்.அவ்வாறு யுவானின் மதிப்பு அதிகமானால் அமெரிக்காவிடம் இவ்வளவு மலிவாக பொருட்களை ஏற்றுமதி செய்ய முடியாது.தற்போது சீனாவின் பொருளாதாரத்தில் ஏற்றுமதியின் பங்கு 40 சதம் உள்ளது.சீனாவின் ஏற்றுமதி குறைந்தால் உள் நாட்டில் மாபெரும் வேலையில்லா திண்டாட்டம் உண்டாகி , பெரிய சமூக பிரச்சனைகளை உருவாக்கும்.
இதை சீனா தடுத்தே ஆக வேண்டும். அதற்கு யுவானின் மதிப்பை ஓரளவு கட்டுபாடன முறையில் நிர்ணயித்துள்ளது. இவ்வாறு குறிபிட்ட மதிப்பை பராமரிக்க சந்தையில் குவியும் டாலர் சொத்துக்களான அமெரிக்க அரசு பத்திரம் போன்றவற்றை வாங்கியே ஆக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

தற்போதைய நிதி நெருக்கடியை அடுத்து அமெரிக்கா அரசின் பற்றாகுறை பெரிய அளவில் அதிகமாவதாலும், அதிக அளவு டாலரை அச்சிட்டு வருவதாலும் டாலரின் மதிப்பு குறையுமோ என்ற அச்சம் சீனாவுடம் எழுந்துள்ளது.

சீனாவின் சேமிப்பு செல்வத்தில் 70 சதவிதம் டாலர் சார்ந்த சொத்துக்களாக உள்ளது.டாலரின் மதிப்பு குறைந்தால் அது அந்நாட்டுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பாக இருக்கும்.அதனாலேயே சீனா மிகவும் கலக்கம் அடைந்து உள்ளது. இதிலிருந்து தப்பிக்க டாலர் மதிப்பு நன்கு இருக்கும் போதே தன் டாலர் சொத்துக்களை விற்று விடலாம் என நீங்கல் எண்ண தோன்றும். தற்போது உள்ள சூழ்நிலையில், சீனா அவ்வாறு டாலர் சொத்துக்களை சர்வ தேச சந்தையில் விற்க ஆரம்பித்தால்,டாலரின் மதிப்பு வேகமாக குறைந்து சீனாவுக்கு இழப்பு தான் ஏற்படும். அது மட்டுமன்றி சீனாவின் ஏற்றுமதியும் பாதிக்கபடும


இந்த வலையிலிருந்து சீனாவால் மீளவே முடியாதா? இதிலிருந்து தப்பிக்க சீனா என்னதான் செய்ய போகிறது? அது தற்போது எடுத்து வரும் முயற்சி தான் என்ன? அடுத்த பதிவில் பார்ப்போம்


--

2 comments:

Maximum India said...

தற்போதைய பொருளாதார சிக்கலுக்கு சீனாவும் ஒரு முக்கிய காரணம் என்பதை தெளிவாக விளக்கியிருக்கிறீர்கள். உண்மையில் நானே இதை பற்றி ஒரு பதிவு போட வேண்டும் என்று எண்ணி இருந்தேன்.

தனி மனித சுதந்திரங்கள் இல்லாத சீனாவில், மக்களை அமைதியாக வைத்திருக்க அசுரத்தனமான பொருளாதார வளர்ச்சி தேவைப் படுகிறது. ஆனால் எத்தனை நாளைக்கு என்பதை காலம்தான் சொல்ல வேண்டும்.

இன்னும் இது போன்ற பதிவுகள் பல இட வாழ்த்துக்கள்.

நன்றி.

சதுக்க பூதம் said...

வாழ்த்துக்கு மிகவும் நன்றி Maximum India . உங்கலுடைய சீனா பற்றிய பதிவை ஆவலோடு எதிர்பார்க்க்றேன்.

//தனி மனித சுதந்திரங்கள் இல்லாத சீனாவில், மக்களை அமைதியாக வைத்திருக்க அசுரத்தனமான பொருளாதார வளர்ச்சி தேவைப் படுகிறது. ஆனால் எத்தனை நாளைக்கு என்பதை காலம்தான் சொல்ல வேண்டும்//

உண்மை தான் Maximum India .
முக்கியமாக பொருளாதார வளர்ச்சியினால் ஏற்பட வேண்டிய நாணய மதிப்பு முன்னேற்றத்தை எப்படி கையாள போகிறது என்பது முக்கிய கேள்விகுறி