Thursday, July 30, 2009

அசர வைக்கும் மைக்ரோசாப்டின் Project Natal

பொதுவாகவே மைக்ரோசாப்டுக்கு பிற நிறுவனங்களை காப்பி அடித்து(reengineering செய்து) புதிய பிராடக்ட்கள் வெளியிடும் என்ற பெயர் உள்ளது.அந்த பெயரை மாற்றும் வகையில் தற்போது Project Natal என்ற புதிய முயற்சியில் இறங்கி உள்ளது.கையின் அசைவுகளை கண்டு பிடித்து அதன் மூலம் வீடியோ விளையாட்டு கொண்டு வந்து Wii விளையாட்டு மாபெரும் புரட்சி செய்த்தது.மைக்ரோசாப்ட் நிறுவனம் அதை காப்பி செய்யாமல் தற்போது புதிய புரட்சிகரமான தொழில்நுட்பத்தில் அடுத்த தலைமுறைக்கான வீடியோ விளையாட்டுக்கான தொழில்நுட்பத்தில் இறங்கி உள்ளது.அதற்கு தான் Project Natal என்று பெயர்.

இந்த விளையாட்டை விளையாட எந்த சென்சார்கலையும் உடலில் அணிய வேண்டியது இல்லை. மேலும் மற்ற விளையாட்டை போல கையை மட்டும் பயன் படுத்த வேண்டியது இல்லை.நம் உடலின் அனைத்து பகுதிகளையும் விளையாட்டிற்கு பயன் படுத்தலாம். நம் உடலின் அசைவுகளை இன்ப்ரா ரெட் கேமரா மூலம் பல புள்ளிகளிலிருந்து கண்டறிந்து அதன் மூலம் கம்ப்யூட்டரின் உள் முப்பரிமான உருவம் செயற்கையாக வடிவமைக்கிறது. பிறகு நாம் செய்யும் அசைவுகள் அனைத்தையும் அந்த உருவத்தின் மூலம் செய்ய வைத்து உண்மையான விளையாட்டு போல் உணர செய்கிறார்கள்.

நான் கூறுவதை கேட்பதை விட மைக்ரோசாப்ட்டின் இந்த demo வீடியோவை நீங்களே பாருங்களேன்! இது Science Fiction படத்தை விட அருமையாக உள்ளது. உண்மையிலேயே நம்பவே முடியவில்லை.



http://www.xbox.com/en-US/live/projectnatal/


http://www.youtube.com/watch?v=I9tmr8VDqN8



வீடியோ விளையாட்டு துறையில் நிச்சயமாக இது evolution ஆக இருக்காது.revolution ஆக இருக்கும்!


--

Thursday, July 23, 2009

சீனா, அமெரிக்கா ஆடும் பொருளாதார சதுரங்கம்

.

கடந்த சில ஆண்டுகளாக உலகளவில் உள்ள அனைத்து பொருளாதாதார வல்லுனர்களாலும் கேட்க படும் கேள்வி -சீனா மேலை நாடுகளை மீறி பொருளாதார வல்லரசாக மாறுமா என்பதாக தான் இருக்கும். இன்றைய உலக பொருளாதாரத்தில் நடப்பது தான் என்ன? சீனாவின் இன்றைய உண்மையான நிலை தான் என்ன? அது பற்றி இப்போது பார்ப்போம்.

1970 வரை சீன கம்யூனிச தலைவர்களுக்கும் மேலை நாடுகளுக்கும் சரியான உறவில்லை. ஆனால் மா.சே.துங்கிற்கு பிறகு சீனாவின் அணுகுமுறையில் மாற்றம் ஏற்பட தொடங்கியது.அந்த கால கட்டத்தில் தான் அமெரிக்காவும் (ஓரளவுக்கு?) தங்கம் கையிருப்பு அடிப்படையில் டாலரை அச்சடிப்பதை நிறுத்தி விட்டு சந்தையின் தேவைகேற்ப டாலரை அச்சடிக்க தொடங்கியது. டாலரின் மதிப்பை நிலை நிறுத்த அரபு நாடுகளிடம் பெட்ரோலை டாலருக்கு மட்டும் விற்க ஒப்பந்தமிட்டது.இதன் மூலம் மேலை நாட்டு பொருளாதார நிறுவனங்கள்(வங்கிகள்,காப்பீட்டு நிறுவனங்கள், Investment bank போன்றவை) குறைந்த வட்டிக்கு அதிக பணத்தை பெற்று பன்னாட்டு கம்பெனிகளின் அசுர வளர்ச்சிக்கு உதவியதோடு,உலகளவில் பெரும் சொத்துக்கள் இந்த பொருளாதார நிறுவனங்கள் மற்றும் சில ஆயிரம் பணகாரர்களின் கைக்கு மாறியது.

மேலை நாடுகளின் பொருளாதார வளர்ச்சி இருந்த அளவு மக்கள் தொகை வளர்ச்சி இல்லை.பொருளாதார வளர்ச்சி மற்றும் பணத்தின் புழக்கம் நாட்டு மக்கள் அனைவரிடமும் அதிகமாக இருந்தால் பண வீக்கம் அதிகமாகி, அவர்கள் உற்பத்தி செய்யும் பொருட்களின் விலையும் அதிகமாக கூடும்.

பொருளாதார வளர்ச்சி அதிகம் இருக்க வேண்டும். அப்போது தான் பெரும் நிறுவனக்களின் லாபம் அதிகம் இருக்கும்.ஆனால் சாதாரண மக்களிடம் வளர்ச்சியின் முழு பயனும் செல்லாமல் முதலீட்டாளர்களிடம் பெரும் பங்கு செல்ல வேண்டும்.சாதாரண மக்கள் இதனால் அதிகம் பாதிப்படையாமல் இருக்க அவர்கள் வாங்கும் பொருட்களின் விலை குறைவாக இருக்க வேண்டும்.
அதற்கு பொருட்களை மலிவாக உற்பத்தி செய்ய வளரும் நாடுகளின் உதவி தேவை பட்டது.அப்போது அமெரிக்க அரசு மற்றும் பன்னாட்டு கம்பெனிகளின் கண்ணில் பட்டதுதான் சீனா. சீனாவில் சர்வாதிகாரம் கம்யூனிசத்தின் பெயரில் வலுவாக இருந்ததால் ஒரு முடிவை எடுத்து பெரிய அளவில் எந்த எதிர்ப்பும் இல்லாமல் விரைவில் செயல் படுத்துவது வசதியாக இருந்தது. சீனாவும் அதிக மக்கள் தொகையை விவசாயத்திலிருந்து உற்பத்தி துறைக்கு மாற்ற வேண்டிய கட்டயத்தில் இருந்ததால், அந்நாட்டு விவசாயிகளை அமெரிக்காவிற்கு தேவையான பொருட்களை உற்பத்தி செய்ய தொழிற் துறைக்கு மாற்ற தொடங்கியது. இதன் மூலம் நாட்டின் தொழிலாளர்களின் உற்பத்தி திறன் அதிகரித்தது.

சீனர்கள் பொதுவாகவே சேமிப்புக்கு பெயர் போனவர்கள்.மக்களின் சேமிப்பு அதிகமானது.கடந்த சில ஆண்டுகளாக உலகமயமாதல் உச்சத்திற்கு சென்ற போது அமெரிக்காவுக்கு சீனா செய்த ஏற்றுமதியின் அளவு மிகவும் அதிகரிக்க ஆரம்பித்தது. அதன் விளைவாக சீனாவின் டாலர் கையிருப்பு பில்லியனிலிருந்து சில டிரில்லியனுக்கு உயர்ந்தது. மறுபுறம் போர்,ஆயுத உற்பத்தி மற்றும் பிற காரணிகளால் அமெரிக்க அரசின் பற்றாகுறையும், ஏற்றுமதியை விட இறக்குமதி குறைந்து வணிப பற்றாக்குறையும் அதிகமாகியது. இந்த பற்றாக்குறையை சரி செய்ய வெளி நாடுகளிடம் கடன் வாங்க வேண்டும். உலக சேமிப்பு நாணயமாக டாலர் இருப்பதாலும், சீனா,ஜப்பான் போன்ற நாடுகளிடம் கையிருப்பாக டாலர் அதிகம் இருந்ததாலும், அமெரிக்காவிற்கு குறைந்த வட்டிக்கு டாலரை சீனா கொடுக்க ஆரம்பித்தது.

சீனாவின் வளர்ச்சியை பாராட்டுபவர்கள் அமெரிக்க அரசாங்கமே சீனாவை நம்பி தான் உள்ளது. எனவே சீனா தான் மிக பெரிய பொருளாதார சக்தி என்பார்கள். ஆனால் இந்த வளர்ச்சியின் மறுபுறத்தையும் பார்க்க வேண்டும். சீனா அமெரிக்காவிடம் நடை பெரும் வாணிபத்தை பார்த்தால், சீனாவின் ஏற்றுமதி இறக்குமதியை விட மிக அதிகமாக உள்ளது. சீனாவின் நாணயமான யுவானின் மதிப்பை சந்தையின் காரணிகளால் கட்டுபாடற்ற முறையில் நிர்ணயிக்க பட்டால் (floating exchange rate), அதன் மதிப்பு மிக அதிகமாகி இருக்கும்.அவ்வாறு யுவானின் மதிப்பு அதிகமானால் அமெரிக்காவிடம் இவ்வளவு மலிவாக பொருட்களை ஏற்றுமதி செய்ய முடியாது.தற்போது சீனாவின் பொருளாதாரத்தில் ஏற்றுமதியின் பங்கு 40 சதம் உள்ளது.சீனாவின் ஏற்றுமதி குறைந்தால் உள் நாட்டில் மாபெரும் வேலையில்லா திண்டாட்டம் உண்டாகி , பெரிய சமூக பிரச்சனைகளை உருவாக்கும்.
இதை சீனா தடுத்தே ஆக வேண்டும். அதற்கு யுவானின் மதிப்பை ஓரளவு கட்டுபாடன முறையில் நிர்ணயித்துள்ளது. இவ்வாறு குறிபிட்ட மதிப்பை பராமரிக்க சந்தையில் குவியும் டாலர் சொத்துக்களான அமெரிக்க அரசு பத்திரம் போன்றவற்றை வாங்கியே ஆக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

தற்போதைய நிதி நெருக்கடியை அடுத்து அமெரிக்கா அரசின் பற்றாகுறை பெரிய அளவில் அதிகமாவதாலும், அதிக அளவு டாலரை அச்சிட்டு வருவதாலும் டாலரின் மதிப்பு குறையுமோ என்ற அச்சம் சீனாவுடம் எழுந்துள்ளது.

சீனாவின் சேமிப்பு செல்வத்தில் 70 சதவிதம் டாலர் சார்ந்த சொத்துக்களாக உள்ளது.டாலரின் மதிப்பு குறைந்தால் அது அந்நாட்டுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பாக இருக்கும்.அதனாலேயே சீனா மிகவும் கலக்கம் அடைந்து உள்ளது. இதிலிருந்து தப்பிக்க டாலர் மதிப்பு நன்கு இருக்கும் போதே தன் டாலர் சொத்துக்களை விற்று விடலாம் என நீங்கல் எண்ண தோன்றும். தற்போது உள்ள சூழ்நிலையில், சீனா அவ்வாறு டாலர் சொத்துக்களை சர்வ தேச சந்தையில் விற்க ஆரம்பித்தால்,டாலரின் மதிப்பு வேகமாக குறைந்து சீனாவுக்கு இழப்பு தான் ஏற்படும். அது மட்டுமன்றி சீனாவின் ஏற்றுமதியும் பாதிக்கபடும


இந்த வலையிலிருந்து சீனாவால் மீளவே முடியாதா? இதிலிருந்து தப்பிக்க சீனா என்னதான் செய்ய போகிறது? அது தற்போது எடுத்து வரும் முயற்சி தான் என்ன? அடுத்த பதிவில் பார்ப்போம்


--

Monday, July 13, 2009

அமெரிக்காவுக்கு ஏன் இந்தியாவின் வளர்ச்சி தேவை?

India’s prosperity is good news for US - ஒபாமாவின் இந்த பேச்சை தான் இந்தியாவில்(மட்டும்) அனைத்து பத்திரிக்கைகளும் முக்கிய செய்தியாக வெளியிட்டு உள்ளது. அமெரிக்காவில் தற்போதுள்ள பொருளாதார பின்னடைவு காரணமாக ஏற்பட்ட அமெரிக்க கம்பெனிகளின் இழப்பை ஈடுகட்ட இந்தியாவின் வளரும் பொருளாதாரம் உதவியாக இருக்கும் என்று தான் அனைவரும் நினைக்க தோன்றும். அதற்கு பின் வேறொரு முக்கிய காரணமும் உள்ளது. அது என்ன காரணம் என்று பார்ப்போம்.

எந்த ஒரு நாட்டின் வளர்ச்சிக்கும் முக்கிய காரண கார்த்தாவாக உள்ளது அந்நாட்டில் உள்ள இளைஞர்களின் சக்தியே. இளைஞர்களிடம் கடின உழைப்பு, புதுமையான சிந்தனை எளிதில் மாற்றத்தை ஏற்று கொள்ளும் தன்மை போன்றவை இருப்பதுடன் அதிகம் செலவழிக்கும் மன போக்கு இருப்பதால் நாட்டின் வளர்ச்சிக்கு அச்சாணியாக உள்ளனர்.

வருங்காலத்தில் அமெரிக்கா மற்றும் மேலை நாடுகளை எதிர் நோக்கி இருக்கும் மிக பெரிய பிரச்சனை இளைஞர்கள் எண்ணிக்கை குறைந்து முதியவர்கள் எண்ணிக்கை பெருக போவதுதான்.அங்கு மக்கள் தொகை பெருக்கம் என்ற நிலை மாறி மக்கள் தொகை குறைய தொடங்க போகிறது. அங்கு 2050ல் இரண்டு பேர் வேலை பார்த்தால் ஒருவர் பென்ஷன் வாங்குபவராக இருப்பார். பத்தில் ஒருவர் 80 வயதிற்கு மேற்பட்டவராக இருப்பர்.கீழே உள்ள புள்ளிவிவரத்தை பார்த்தால் இது பற்றிய விவரம் உங்களுக்கு புரியும்.



15 முதல் 59 வயது வரை உள்ள மக்களின் எண்ணிக்கை அமெரிக்காவில் சிறிது சிறிதாக குறைந்து கொண்டே வருகிறது. அதே சமயம் 60 வயதிறிகும் மேற்பட்டவர்களின் எண்ணிக்கை மிக கணிசமாக உயர்ந்து கொண்டே வருகிறது. 2050 வரை இந்தியாவில் இந்த மாற்றம் மிக குறைவாகவே இருக்கும். இந்தியாவின் மக்கள் தொகையை கணக்கில் எடுத்து கொண்டால் இளைஞர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாக இருக்கும்.

மேல் நாட்டு பன்னாட்டு கம்பெனியின் முக்கிய சந்தையாக அமெரிக்கா இது வரை இருந்து வந்தது. மக்கள் தொகை பெருக்கம் குறைவால் பன்னாட்டு கம்பெனிகள் தங்கள் வளர்ச்சிக்கு புதிய சந்தைகளை தேட வேண்டிய கட்டாயத்திற்கு தள்ள படும். அப்போது அதிக இளைஞர்களை கொண்ட வளரும் நாடுகளாக இருப்பது இந்தியாவும் சீனாவும் தான். எனவே இந்தியாவின் வளரும் மத்திய தர மக்கள் தான் பன்னாட்டு நிறுவனங்களின் வளர்ச்சியின் அச்சாணியாக இருக்க போகிறது.

பொருட்களின் மதிப்பிற்கும் உற்பத்தி செலவிற்கும் உள்ள வித்தியாசம் அதிகரிக்கப்படும். ஏனென்றால் மேலை நாடுகளில் வேலை செய்பவர்கள் எண்ணிக்கை குறைய போவதால் உற்பத்தி இந்தியா போன்ற நாடுகளுக்கு அவுட்சோர்ஸ் செய்ய பட்டு விடும். உலக வர்த்தக நிறுவனம் மூலம் பொருட்களுக்கான உரிமமுறை(patent) உலகெங்கிலும் கடுமையாக பின் பற்ற பட்டு, பன்னாட்டு நிறுவனக்களின் உற்பத்தி பொருட்களுக்கான விலையும் லாபமும் அதிகரிக்கப்படும்(அவுட்சோர்சிங் மூலம் உற்பத்தி செலவு கணிசமாக குறைக்க படும்). அதற்காக தான் உலக வர்த்தக பேச்சுவார்த்தையை மேலை நாடுகள் துரித படுத்துகிறது.

அடுத்ததாக வேகமாக குறைந்து வரும் தொழிளாளர்களின் எண்ணிக்கையை ஒரளவாவது அதிகரிக்க வேண்டும். நல்ல தரமான புதிய தொழிளாளர்கள் உலக சந்தையில் உருவாக்க பட வேண்டும்.அதற்கு இந்தியா போன்ற நாடுகளின் வளர்ச்சி மிகவும் தேவை. அப்போது தான் நல்ல தரமான தொழிளாளர்கள் இந்தியா போன்ற நாடுகளில் அதிக அளவு உற்பத்தி செய்யப்படுவர். தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார சுனக்கம் காரணமாக வெளி நாட்டு தொழிளாளர்களின் தேவை சிறிது குறைந்து இருந்தாலும், பொருளாதாரம் வளர்ச்சி பெற ஆரம்பிக்கும் போது வெளி நாட்டு தொழிளாளர்களின் தேவையும் அதிகமாகும்.தற்போது அமெரிக்க மக்கள் தொகை பெருக்கத்தில் 40 சதவிதம் புதிதாக வெளி நாடுகளிருந்து வரும் தொழிளாளர்களே என்பது குறிப்பிட தக்கது.

அமெரிக்காவிற்கு இந்திய மத்திய வர்க்கத்தின் வளர்ச்சியின் தேவைக்கான முழு காரணமும் உங்களுக்கும் இப்போது தெரிந்திருக்கும் என நினைக்கிறேன். அடுத்த பதிவில் அமெரிக்காவில் வயதானவர்களால் ஏற்பட போகும் பிரச்ச்னை பற்றி பார்போம்

--

Tuesday, July 07, 2009

பெட்ரோல் விலை ஏற்றத்திற்கு கடிவாலம் போட ஒபாமா முயற்சி?

    கடந்த ஒரிரு ஆண்டுகளாக கச்சா எண்ணெய் விலை தாறுமாறாக ஏறுவதும் இறங்குவதும் ஆக இருப்பது அனைவரும் அறிந்ததே.இதற்கு காரணம் உலக பொருளாதாரத்தில் ஏற்படும் வளர்ச்சியும் பின்னடைவும் என்று கூற பட்டாலும், அது மட்டும் உண்மையான காரணமாக இருப்பதில்லை. இந்த ஏற்ற இறக்கத்திற்கு முக்கிய காரணம் மிக பெரிய பன்னாட்டு வங்கிகள், முதலீட்டு நிறுவனங்கள் , தனியார் முதலீட்டார்கள் போன்றவை கச்சா எண்ணை விலையை ஏற்ற இறக்க கணிப்பு வர்த்தகம்(speculative trading) மூலம் கட்டுபடுத்துவது தான் என்று பெரும்பாலானோரால் நம்ப பட்டது.பொருளாதாரம் மந்த நிலையில் உள்ள கடந்த மாதத்தில் கூட இது போன்ற நிதி நிறுவனங்களின் பங்கு மட்டும் 20 சதவிதத்தை தாண்டி இருந்துள்ளது.

அமெரிக்காவில் இது போன்ற வர்த்தகங்களை கட்டு படுத்தும் Commodity Futures Trading Commission என்ற அமைப்பு கச்சா எண்ணையில் நடக்கும் கணிப்பு வர்த்தகத்தை தடுக்க முயற்ச்சி எடுக்க தொடங்கி உள்ளது. எண்ணெயை உபயோகபடுத்தும் நிறுவனங்கள் கச்சா எண்ணெயின் விலை ஏற்ற இறக்க அபாயத்திலிருந்து காக்க உதவும் வர்த்தகத்தை தவிர்த்து(Futures Trading),குறுகிய லாப நோக்கோடு இது போன்ற வர்த்தகத்தில் ஈடுபடும் நிதி நிறுவனங்களின் வர்த்தகத்தை தடை செய்ய முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

அமெரிக்காவில் உள்ள பலமான லாபிக்களை எல்லாம் தாண்டி இது நடைமுறபடுத்த பட்டால் ஒபாமாவின் சாதனையாகவே இது இருக்கும். எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகளை எல்லாம் இது போன்ற செயற்கையான விலை ஏற்றத்திலிருந்து அமெரிக்கா காப்பாற்றினால் பல கோடி ஏழை மக்கள் பயனடைவார்கள்.


--

Sunday, July 05, 2009

இந்தியா கற்க மறுக்கும் பாடம்

" Too Big to Fail. " இது தான் அமெரிக்கர்கள் அனைவராலும் வெறுப்பாக பேச படும் பாடம். "Too Big to Fail" என்றால் என்ன? கடந்த எழுபது ஆண்டுகளாக அவ்வப்போது நடைபெற்ற பொருளாதார பின்னடைவின் காரணமாக அமெரிக்க வங்கி துறையில் சிறிய, நடுத்தர மற்றும் பெரிய வங்கிகளை எல்லாம் ஒரு சில வங்கிகள் முழுங்கி விட்டன. அதன் விளைவு தற்போது அமெரிக்காவில் மூன்று மாபெரும் வங்கிகளும் சில சிறிய வங்கிகளும், பல மிக சிறிய வங்கிகளும் மட்டும் நிலைத்து நிற்கின்றன. அமெரிக்காவில் மூன்று வங்கிகள் மட்டும் 30 சதவிதத்துக்கும் மேற்பட்ட சேமிப்புகளை வைத்துள்ளது. அதன் விளைவு - இந்த மூன்று வங்கிகளில் ஒன்று வீழ்ந்தாலும் அமெரிக்க பொருளாதாரமே நிலை குலையும் நிலையில் உள்ளது. எனவே மிக பெரிய வங்கிகள் வீழவே கூடாது(Too big to fail) என்ற நிலை ஏற்பட்டது.அதை நன்கு உணர்ந்த பெரிய வங்கிகளும் பொறுப்பில்லாமல் பெரிய அளவில் ஆபத்தான முடிவுகளை குறுகிய கால அதிக லாபத்துக்கு எடுக்க தொடங்கின.நீண்ட கால அளவில் அது பெரும் நட்டத்தை ஏற்படுத்தும் என்றும் தெரிந்தும், நட்டத்திலிருந்து அரசாங்கம் தங்களை காத்து ஆக வேண்டும் என்ற கட்டயத்தில் இருப்பதை நன்கு பயன் படுத்தி கொள்ள ஆரம்பித்தன. அமெரிக்க அரசாங்கமே பெரிய வங்கிகளின் கட்டு பாட்டில் வந்தது போன்ற நிலை ஏற்பட்டுள்ளது.

இதிலிருந்து இந்தியா கற்று கொள்ள மறுக்கும் பாடம் என்ன என்று கேட்கிறீர்களா? இந்தியாவின் வங்கி துறையில் அரசு துறை வங்கிகள் மிக முக்கிய பங்கை வகிக்கிறது. அரசு துறை வங்கிகளும் ஒன்றாக இல்லாமல் பலவாக உள்ளது.

தற்போதய மத்திய அரசோ அனைத்து அரசு துறை வங்கிகளையும் ஒன்றினைத்து ஒரு சில பெரிய வங்கிகளாக உருவாக்க வேண்டும் என்றும் அரசு துறை வங்கிகளில் தனியாரின்(முக்கியமாக தற்போது சிக்கலில் சிக்கி தவிக்கும் மேல் நாட்டு வங்கிகளின்) முதலீட்டை அதிகரித்து சிறிது சிறிதாக முடிவில் அவர்களிடமே விற்று விடவும் முயற்சி செய்கிறது.(அதை உடனே நிறைவேற்றா விட்டால் கூட அது தான் அரசின் அனுகுமுறை என்று பல மூறை கூறபட்டுள்ளது) அதற்கு அரசு கூறும் முக்கிய காரணம் வங்கிகளை நடத்தும் செலவை குறைத்து பல வங்கிகளின் கிளையை மூடி லாபத்தை அதிகரிக்க செய்ய வேண்டும் என்பதே.

இதனால் ஏற்படும் விளைவுகளை இப்போது பார்ப்போம்

1. சிறு சிறு வங்கிகளை ஒன்றினைத்து பெரிய வங்கிகளாக ஆக்குவதன் மூலம் ஒவ்வொரு பெரிய வங்கியும் இந்திய பொருளாதாரத்தில் ஏற்படும் தாக்கம் மிக அதிகமாகும். ஒரு வங்கியின் தலைவர் தவறு செய்பவராக இருந்து அதன் மூலம் அந்த வங்கி வீழும் நிலைக்கு தள்ளபட்டால், அந்த வங்கியை காப்பாற்றுவது என்பது அரசுக்கு மிக பெரிய சுமையாகவும், அதே சமயத்தில் அதை காப்பாற்றியே ஆக வேண்டிய நிலைக்கும் தள்ளபடும்.அதுதான் அமெரிக்காவில் தற்போது நடக்கிறது. இதுவே சிறிய வங்கியாக இருந்தால் அதன் தாக்கம் சிறிதாக இருப்பதாலும் அதை காப்பாற்ற அரசுக்கு ஆகும் செலவும் குறைவாக இருக்கும். உதாரணமாக இந்தியன் வங்கி கோபால கிருஷ்ணனின் தலமையில் பல்லாயிரம் கோடி நட்டமடைந்து மூடும் நிலைக்கு வந்த போது அதை அரசால் காப்பற்ற முடிந்தது. அதுவே பல வங்கிகளை ஒன்றினைத்த பெரிய வங்கியாகி வீழும் சூழ்நிலை ஏற்பட்டால் அதை காப்பாற்ற பல லட்சம் கோடி தேவைபடும். இதுவே அமெரிக்கவாக இருந்தால் மிக குறைந்த பின் விளைவில் பல்லாயிரம் கோடி ரூபாய் அச்சிட்டு கொள்ளலாம். ஏனென்றால் அமெரிக்க டாலர் இப்போது உலக சேமிப்பு நாணயமாக உள்ளது.(இதை பற்றி முழுவதும் படிக்க இங்கு சுட்டவும்) ஆனால் இந்தியாவின் நிலை அப்படி இல்லை என்பதால் அதன் விளைவு மிக மோசமானதாக இருக்கும். (பொது துறை வங்கி என்று இல்லை. பெரிய தனியார் துறை வங்கி வீழ்ந்தாலும் அரசு காப்பாற்றி தான் ஆக வேண்டும்). வங்கிகளின் நடவடிக்கையை முழுமையாக நெறிமுறை படுத்துவது என்பதும் தற்போது நடைமுறையில் சாத்தியம் இல்லாத செயல்

2. சிறு வங்கிகளை ஒன்றாக்குவதால் முதலில் மூடபபோவது கிராம் புறங்களை சேர்ந்த வங்கிகளை தான். இதன் விளைவாக ஏழை விவசாயிகள், சுய தொழில் தொடங்கும் ஏழை மற்றும் ந்டுத்தர மக்கள் போன்றோர் மிகவும் அதிக அளவில் பாதிக்க படுவர். தற்போதைய உலகமயமாதல் சூழ்நிலையில் இது போன்ற மிக பெரிய வங்கிகள் பெரிய கார்பொரேட்டுகளுக்கும் பண காரர்களுக்கும் மட்டுமே கடன் கொடுத்து லாபம் செய்ய முனைவர்.

3. ஒவ்வொரு வங்கியும் நாட்டின் ஒவ்வொரு குறிபிட்ட பகுதியில் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். உதாரணத்திற்கு பார்த்தால் இந்தியன் வங்கியும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியும் தமிழகத்தில் அதிக அளவு கவனம் செலுத்துகிறது. அதன் தலமையகமும் தமிழ் நாட்டில் உள்ளது. அது தமிழகத்தில் உள்ளவர்களின் தேவையை உடனுக்குடன் அறிந்து அதற்கேற்ற சேவையை வழங்குகின்றது. இந்தியன் வங்கியை மற்ற வங்கியுடன் சேர்த்தால் இந்த தனி தன்மை முழுமையாக பாதிக்க படும்(முழுமையாக அழியாவிட்டால் கூட பாதிப்பு அதிகம் இருக்கும்). பின் வரும் காலங்களில் வங்கிக்கு வரும் அதிகாரிகளின் தனிபட்ட விருப்பு வெறுப்புக்காக அந்த வங்கியின் கவனிப்பு இருக்கும் இடமும் மாறி போக வாய்ப்புள்ளது

4. அதிகார பரவலாக்கத்தின்(Decentralization) மூலம் தான் எந்த ஒரு துறையின் செயல்பாட்டின் திறனையும் அதிகரிக்க முடியும் என்பது இத்தனை நாள் அனுபவத்திலிருந்து கிடைத்த உண்மை. .தற்போது வங்கிகள் அதிகார பரவலாக்கத்தோடு நன்கு செயல் பட்டு வருகிறது. வங்கிகளை ஒன்றினைப்பது மூலம் அதிகார பரவலாக்கம் என்பது மாறி அதிகரம் ஒருமுனை படுத்த பட்டு அதன் செயல் திறன் குறைய வாய்ப்புள்ளது.

5. வங்கிகள் என்பது ஒவ்வொரு நாட்டின் வளர்ச்சியின் ஆணி வேர். அதை குறுகிய லாப நோக்கம் கொண்ட பன்னாட்டு தனியார் கம்பெனிகளின் கையில் கொடுத்தால் இன்று அமெரிக்கா அடைந்த நிலையை இந்தியாவும் அடையும்.

6. பன்னாட்டு வங்கிகள் சமூகத்தில் பின் தங்கியவர்களின் வளர்ச்சியை பற்றி கவலை பட போவது இல்லை. அவர்களுக்கு லாபம் மட்டுமே குறிக்கோள். பசுமை புரட்சியின் மூலம் உணவு உற்பத்தியில் தன்னிறைவு அடைந்ததிற்கு வங்கிகளின் பங்கு முக்கியம். தற்போதய வளர்ந்து வரும் மக்கள் தொகை சூழ்நிலையில், விவசாய உற்பத்தியை பெருக்க வங்கியின் சேவை மிகவும் தேவை இக்கனம். மத்திய அரசின் தற்போதைய முயற்சியால் அது தடை பெற அதிக வாய்ப்புள்ளது.


இதை உணர்ந்து மத்திய அரசாவது ஒரு சில தனிபட்டவர்களின் நன்மையை பார்க்காமல் இந்தியாவின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு செயல் பட்டால் நன்றாக இருக்கும்.


--