Friday, November 02, 2007

வஞ்சிக்கப்படும் நெல் விவசாயிகள்

நெல் தமிழக விவசாயிகளின் ஜீவாதார பயிர்.தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பயிரிடபடும் பயிர்.தமிழகத்தின் 85% உணவு தானிய பயிர் பரப்பையும்,34% மொத்த பயிர் பரப்பையும் தன்னகத்தே கொண்டுள்ளது.நெற்பயிரின் மகசூலை நம்பி பல லட்சம் விவசாயிகளும்,விவசாய கூலி தொழிலாளிகலும் உள்ளனர்.
விவசாயிகள் வறட்சி காலத்தில் அண்டை மாநில அரசுகளை, ஆற்று பாசனத்திற்காக நம்பியும்,பருவ மழை குறுகிய காலத்தில் அதிக அளவில் பெய்யும் போது அந்த மழை நீரில் மூழ்கி கிடக்கும் பயிரை பார்த்தும் தங்களுடைய பெரும்பாலான நாட்களை கழிக்க வேண்டி உள்ளது.மேலும் விதை, உரங்கள் மற்றும் பூச்சி மருந்துகளின் விலை வெகுவாக உயர்ந்து வருகிறது. கூலி தொழிலாளர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருவதால், அவர்களுக்கான கூலியும் அதிகரித்து வருகிறது.இப்படிபட்ட சூழ்நிலையில் எதாவது ஒரு பருவத்தில் கிடைக்கும் லாபத்தை கொண்டு பிற பருவங்களில் ஏற்படும் இழப்பை சரிகட்டி விவசாயம் செய்து வருகின்றனர்.
இவ்வாறு பல பிரச்சனைக்கிடையே விவசாயம் செய்துவரும் நெல் விவசாயிகளுக்கு மத்திய அரசு மாபெரும் வஞ்சனை செய்து உள்ளது.விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டும், பொது வினியோக தேவையை கருத்தில் கொண்டும் அரசாங்கம் விவசாயிகளிடம் வாங்கும் உணவு பயிர்களுக்கு குறைந்த பட்ச ஆதார விலை அதாவது Minimum Support Price(MSP) அறிவிக்கும்.விவசாயிகள் தங்கள் பயிரை இந்த விலைக்கு அரசாங்கத்திடமோ அல்லது தனியாரிடம் வேறு விலைக்கோ விற்கலாம்.அரசாங்கம் நிர்ணயிக்கும் இந்த ஆதார விலை மறைமுகமாக வெளிசந்தை விளையையும் பாதிக்கிறது.இந்த ஆதார விலையை பயிர் உற்பத்தி செலவு, அந்த பயிரின் தேவை மற்றும் உற்பத்தி, இடு பொருள்களின் விலை உயர்வு மற்றும் பல காரணிகளை கொண்டு நிர்ணயிக்கின்றனர்.இதன் மூலம் விவசாயிகள் தங்கள் பயிருக்கு குறைந்த பட்சம் ஆதார விலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் பயிரிடலாம்.
1994ம் ஆண்டு இந்த ஆதார விலை குவிண்டாலுக்கு- கோதுமைக்கு 360 ரூபாயாகவும்,நெல்லுக்கு 340 ரூபாயாகவும் இருந்தது.அதாவது ஏறத்தாழ ஒரே அளவு இருந்தது. இந்த வித்தியாசம் ஒவ்வொரு ஆண்டும் அதிகமாகி கடந்த ஆண்டு கோதுமைக்கு 850 ரூபாயும் நெல்லுக்கு 650 ரூபாயும் நிர்ணயிக்க பட்டிருந்தது. இந்த வேறுபாடே மிகவும் அதிகம் என்றும், இந்த நிலை மாறவேண்டும் என்றும் விவசாயிகளும், வேளான் அறிஞ்சர்களும் கூறி வந்தனர். இப்படி பட்ட சூழ்நிலையில் இந்த வேறுபாட்டை இந்த ஆண்டாவது மத்திய அரசு குறைத்து நெல் விவசாயிகளுக்கு நல்ல கொள்முதல் விலையை கொடுக்கும் என்று நம்பியிருந்த விவசாயிகளின் நம்பிக்கையை தகர்க்கும் வகையில் அமைந்துள்ளது இந்த ஆண்டுக்கான ஆதாரவிலை அறிவிப்பு.இந்த ஆண்டு கோதுமையின் குறைந்த பட்ச ஆதார விலை 1000 ரூபாயாகவும் நெல்லின் ஆதாரவிலை 695-725 ஆகவும் நிர்ணயித்து உள்ளது. 1994ல் 20 ரூபாயாக இருந்த வித்தியாசம் இன்று 300 ரூபாயாக வளர்ந்துள்ளது.
இத்தனை நாட்களாக ஆதார விலை நிர்ணயிக்க உற்பத்தி செலவை மட்டும் கணக்கில் எடுத்து கொண்டிருந்த மத்திய அரசு,இப்பொழுது நெல்லிலிருந்து அரிசியாக மாற்றும் போது ஏற்படும் இழப்பையும் கணக்கில் கொண்டு விலை நிர்ணயம் செய்துள்ளதாக கூறி உள்ளது. ஆனால் அரிசியின் விலை மற்றும் உற்பத்தி செலவு போன்றவற்றை பின்னுக்கு தள்ள முயலுகிறது மத்திய அரசு.இந்த நிலை தொடர்ந்தால் அரிசி இந்தியாவில் இரண்டாம் தர பயிராக மாற்ற பட்டு விடும். வடநாட்டு விவசாயிகள் நெல்லுக்கு பதிலாக கோதுமை பயிரிட்டு நல்ல லாபம் அடைவார்கள்.ஆனால் தமிழ் நாட்டு தட்பவெப்ப நிலைக்கு கோதுமை பயிரிட முடியாது.எனவே தமிழக விவசாயிகள் நெல் பயிரிட்டு குறைந்த லாபம் அடைவர் அல்லது நட்டம் அடைவர். தமிழக விவசாயிகளின் பொருளாதார வளர்ச்சி குறைந்து விடும்."வடக்கு வளர்கிறது! தெற்கு தேய்கிறது!" என்ற வாக்கு உண்மையான வாக்காக மாறிவிடும்.
தமிழகத்தின் ஜீவாதார பிரச்சனையாக உள்ள இந்த பிரச்சனையை தமிழக அரசியல் கட்சிகள் அணுகும் விதம்தான் மிகவும் கவலைக்குரியதாக உள்ளது.மாநில அரசோ வெறும் கடிதத்தை மத்திய அரசுக்கு அனுப்பிவிட்டு வேறெந்த முயற்சியும் எடுக்காமல் உள்ளது. எதிர்கட்சிகள் வெறும் அறிக்கையோடு நின்று விட்டனர்.இந்த பிரச்சனைக்கு ஆந்திர முதல்வர் கொடுக்கும் முக்கியத்துவம் கூட தமிழ்நாட்டில் யாரும் கொடுக்கவில்லை.அதைவிட வருத்தபட வேண்டிய விஷயம் தமிழக விவாயிகளின் அணுகுமுறை.இதை எதிர்த்து ஒரு கடுமையான போராட்டம் கூட அவர்கள் நடத்தவில்லை.இன்றே இந்த பிரச்சினையை அனைவரும் ஒன்று சேர்ந்து தீர்க்காவிட்டால், பிற்காலத்தில் இதுவும் ஒரு காவிரி பிரச்சனையை போல தீராத பிரச்சனையாக உருவெடுக்கும். பிற்காலத்தில் இதற்க்காக பந்த், உண்ணாவிரதம் என்று எதிர்ப்பை காட்டுவதை விட்டு இன்றே அதை செய்யலாமே.தமிழக அரசியல் கட்சிகளே!இந்த ஜீவாதார பிரச்சனையை அனைவருக்கும் தெரிய படுத்தி, அனைத்து வகையிலும் மத்திய அரசை நிர்பந்தித்து ஒரு நல்ல தீர்வை உருவாக்குங்கள்.அது நாளைய விவசாயிகளின் தற்கொலையையும், பட்டினி சாவையும் நிச்சயம் தடுக்கும்.

இந்த பதிவை கீற்று இணைய தளத்திலிருந்தும் படிக்கலாம்

8 comments:

முரளிகண்ணன் said...

தேவையான நேரத்தில் தேவையான பதிவு

சதுக்க பூதம் said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி முரளி கண்ணன்

Unknown said...

நல்ல கருத்துக்கள், நியாயமான கவலை.

- ஒரு விவசாயி மகன்

சதுக்க பூதம் said...

//நல்ல கருத்துக்கள், நியாயமான கவலை.//

இந்த பிரச்சனையை அரசியல்வாதிகளும் விவசாயிகளும் ஆக எடுத்து கொண்டால் அது அனைவருக்கும் நல்லது.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தஞ்சாவூரான் அவர்களே.

கோவை சிபி said...

good post.now state government asked rs 1000.farmers must raise the voice.

சதுக்க பூதம் said...

//now state government asked rs 1000//
They are JUST sending request letter to PM.If karunanidhi makes just a phone call to sonia/Manmohan, this problem will be solved immediately.But the big question is Will he do?

//farmers must raise the voice.
//
Yes. They have to raise voice.Not only voice. They have to unite and protest

சதுக்க பூதம் said...

நெல்லுக்கு விலை-நவ.27ல் விவசாயிகள் ரயில் மறியல்
புதன்கிழமை, நவம்பர் 14, 2007


திருச்சி: மத்திய அரசு நெல்லுக்கு குவிண்டாலுக்கு குறைந்தபட்ச ஆதார விலையாக ரூ. 1000 நிர்ணயம் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி வருகிற 27ம் தேதி தமிழகத்தில் விவசாயிகள் ரயில் மறியல் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர்.

நெல்லுக்கு குறைந்த பட்ச ஆதார விலையாக குவிண்டால் ஒன்றுக்கு (100 கிலோ) ரூ.1,000 தரக்கோரி விவசாய சங்கங்கள் அனைத்தும் அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றன. ஆனால் மத்திய அரசோ இதுகுறித்து மவுனம் காத்து வருகிறது.

இதுதொடர்பாக பல்வேறு மாநிலங்களிலும் விவசாயிகள் போராட்டத்தில் குதித்து வருகின்றனர். இந்த நிலையில் தமிழக விவசாயிகள் ரயில் மறியல் போராட்டத்தை அறிவித்துள்ளனர்.

இதுகுறித்து தமிழக விவசாயிகள் சங்கத்தின் தலைவர் ராஜா சிதம்பரம் திருச்சியில் செய்தியாளர்களிடம் கூறுகையில், நெல்லுக்கு குறைந்த பட்ச விலையாக ரூ.1,000 தரக்கோரி வரும் 27ம் தேதி காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகள் அனைவரும் ரயில் மறியல் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம்.

மேலும் விவசாயிகளுக்கு சர்க்கரை ஆலைகள் தர வேண்டிய ரூ.300 கோடி பாக்கி தொகையை உடனடியாக வழங்கக் கோரி அவசரக் கூட்டம் நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்

Thanks- Thatstamil.com

சதுக்க பூதம் said...

திருவாரூர்: நெல்லுக்கு குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 1000 குறைந்தபட்ச ஆதரவு விலை தரக் கோரி தமிழகத்தின் காவிரி டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட இடங்களில் நேற்று நள்ளிரவு முதல் விவசாயிகளின் ரயில் மற்றும் சாலை மறியல் போராட்டம் தொடங்கியது. நூற்றுக்கணக்கான விவசாயிகள் கைது செய்யப்பட்டனர்.

கோதுமைக்கு மத்திய அரசு குவிண்டாலுக்கு ரூ. 1000 குறைந்தபட்ச ஆதரவு விலையைத் தருகிறது. அதேபோல நெல்லுக்கும் தர வேண்டும் என்று விவசாயிகள் கோரி வருகின்றனர். இதை வலியுறுத்தி ஆந்திராவில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். தமிழகத்திலும் தற்போது விவசாயிகள் தீவிரப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர்.

நேற்று நள்ளிரவு முதல் விவசாயிகளின் இந்தப் போராட்டம் தொடங்கியது. காவிரி டெல்டா மாவட்டங்கள் அனைத்திலும் நேற்று நள்ளிரவில் நூற்றுக்கணக்கான விவசாயிகள் போராட்டத்தில் குதித்தனர்.

திருவாரூர், நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் சாலை மறியலும், ரயில் மறியல் போராட்டமும் நடந்துள்ளன.

திருவாரூரில் கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ உலகநாதன் தலைமையில் 200க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அனைவரையும் போலீஸார் கைது செய்தனர்.

கோட்டூரில் 100க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் செய்தனர். அவர்களையும் போலீஸார் கைது செய்தனர்.

திருத்துறைப்பூண்டியில் இன்று அதிகாலை பயணிகள் ரயிலை மறித்து விவசாயிகள் போராட்டம் நடத்தினர். அனைவரையும் போலீஸார் கைது செய்து அப்புறப்படுத்தினர்.

காவிரி டெல்டா மாவட்டங்களில் மட்டும் 50க்கும் மேற்பட்ட இடங்களில் போராட்டம் நடந்துள்ளது. இன்று முதல் தொடர் மறியல் போராட்டத்தையும் விவசாயிகள் அறிவித்துள்ளனர்.

காவிரி டெல்டா மாவட்டங்கள் தவிர மதுரை, தஞ்சை, திருச்சி, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களிலும் பெரும் திரளான விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விவசாயிகளின் போராட்டத்திற்கு கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.