கடந்த சில வருடங்களாக ஊடகங்களை தொடர்ந்து படித்து வருபவர்களுக்கு மான்சான்டோவின் மரபணு மாற்ற பருத்தியை எதிர்த்து இந்தியாவில் முக்கியமாக தமிழகத்தில் விவசாயிகள் மிக பெரிய அளவில் எதிர்த்து அதை தமிழகத்திலிருந்தே துரத்தி அடித்த செய்தி தெரிந்திருக்கும். இந்த மரபணு மாற்ற பருத்திக்கு எதிராக தினமும் ஊடகங்களிலும் செய்தி வருவது வாடிக்கையாக உள்ளது.
இந்த முறை இந்தியா சென்ற போது மரபணு பருத்தியின் எச்சங்கள் எங்காவது தென் படுகிறதா என்று எட்டி பார்க்கலாம் என பருத்தி நிறைய வளரும் ஆத்தூர் பக்கம் போய் பார்த்தேன்ஆத்தூரில் உள்ள பிரபல வேளாண் இடுபொருள் கடைக்கு சென்றிறுந்தேன். அந்த கடை நிறுவனரிடம் இப்பெல்லாம் இந்த பக்கம் எந்த பருத்தி அதிகம் பயிரிடுகிறார்கள் என்று கேட்டேன்? ஒரெ ஒரு ரகம் மட்டும் எல்லாம் போடுறதில்லை பல வகை ரகங்கள் போடுகிறார்கள் என்றார். அப்பாடா! மான்சான்டோவின் பருத்தி இன்னும் மோனோபொலி ஆகவில்லை என்று பெருமூச்சு விட்டேன்..இதோ இங்க இருக்குற ரகங்கள் தான் பெரும்பான்மையாக பயிரிடுகிறார்கள் என்று ஒரு அடுக்கை காண்பித்தார்.அங்கு பல கம்பெனிகளின் விதைகள் குவிக்க பட்டிருந்தது.அங்கு இருந்த விதைகளின் பெரும் பகுதி இந்திய கம்பெனிகளுடையதாக இருந்தது.
ஒவ்வொரு விதை பாக்கெட்டையும் எடுத்து பார்த்த போது மிக பெரிய ஆச்சர்யம் ஏற்பட்டது. ஆச்சர்யம் என்ன என்றால் அனைத்து விதைகளும் மிக பெரிய அளவில் தங்களை விளம்பர படுத்தி இருந்தது அந்த விதைகளில் இருந்த cry ஜீன் எனப்படும் மரபு பொருள் பற்றி தான். cry ஜீன் என்ற பெயர் எங்கோ கேட்டது போல் இல்லை?இது வேறொன்றுமில்லை. மான்சாண்டோ தனது மரபணு மாற்ற பருத்தியில் இருப்பதாக கூற பட்டுள்ள பூச்சு கொள்ளியை உருவாக்கும் மரபு பொருள் தான்.மரபணு மாற்ற பருத்தி வந்தால் இந்தியாவில் மான்சாண்டோ தவிர வேறெந்த பருத்தி விதையும் இருக்காது என்றார்களே? தற்போது பல கம்பெனிகளும் இருக்கிறதே என்ற குழப்பம் பலருக்கு வரலாம்.பெரும்பாலானவர்கள் நினைப்பது போல் மான்சான்டோ தனது பருத்தி விதையை மட்டும் கொண்டு ஒட்டு மொத்த இந்திய மார்கெட்டையும் கை பெற்றவில்லை. ஆனால் அதன் விற்பனை யுக்தியே வேறு.அது பற்றி அறிய கொஞ்சம் விவசாய அறிவியல் பற்றியும் பின் சென்று பார்ப்போம்.
ஆதி மனிதன் நாடோடியாக திரிந்து கொண்டிருந்த போது ,போகும் இடத்தில் தனக்கு கிடைக்கும் காய் கனிகளையும் மாமிசத்தையும் உண்டு வாழ்ந்தான்.அதன் பிறகு ஒரு இடத்தில் இயற்கையாக இருந்த மரம் மற்றும் பிற செடிகளை அழித்து தொடர்ந்து பயிரிட தொடங்கினான். இந்த இயற்கைக்கு மாறாக செயற்கையாக செய்யும் செயலே விவசாயம் ஆனது. ஆற்றங்கரை நாகரீகங்கள் தொடங்கிய போது ஏற்பட்ட நகரமயமாதலின் அடிப்படையே இந்த செயற்கையான விவசாயம் தான். அதாவது நகரத்தில் விவசாயம் அல்லாத தொழிலில் ஈடு பட்டவரக்ளுக்கு கிராமங்களில் இருந்து பெரிய அளவில் உணவு பொருட்களை விவசாயம் மூலம் கொடுக்க முடிந்தது. மனிதனும் நீண்ட நாள் சேமிப்புக்கு ஏற்ற தானியம் மற்றும் தனக்கு தேவையான காய் கறிகளை அந்தந்த இடங்களில் இருக்கும் தாவரவகைகளை அழித்து பயிரிட தொடங்கினான்.
கடந்த சில நூற்றாண்டுகள் வரை போர், நோய், பஞ்சம் போன்றவற்றால் மக்கள் தொகை பெருக்கம் ஓரளவு கட்டுபடுத்த பட்டு வந்தது.கடந்த சில நூற்றாண்டுகளில் ஏற்பட்ட மருத்துவ வசதி காரணமாக மக்கள் பெருக்கம் கட்டு கடங்காமல் போனது.பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஈடாகவும், தொழில் நுட்ப வளர்ச்சி காரணமாகவும் மனிதன் அளவுக்கு மீறி இயற்கை வளத்தை உபயோகிக்க ஆரம்பித்தான்.
பெருகி வரும் மக்களின் பசியை போக்க உற்பத்தியை பெருக்க வேண்டியது அவசியமானது. அதற்கு விளைநிலங்களின் பரப்பை அதிகரித்து உற்பத்தியை அதிகரித்தனர். ஆனால் ஓரளவுக்கு பின் புதிய விலைநிலங்கள் கிடைப்பது அரிதானவுடன் உற்பத்தி திறனை அதிகரிக்க வேண்டியதின் அவசியம் அதிகரித்தது.அதற்கு விவசாய துறை மற்றும் உயிரியல் துறைகளில் மாபெரும் ஆராய்ச்சிகள் நடந்தன.பதினெட்டாம் நூற்றாண்டில் கிரிகர் மெண்டல் என்னும் துறவி பெற்றோர்களிடம் இருந்து எவ்வாறு குழந்தைகளுக்கு பண்புகள் கடத்தபடுகிறது என்று பட்டணி செடியில் ஆய்வு செய்து கண்டறிந்தார்.இரு வேறு பண்புடைய செடிகளை மகரந்த சேர்க்கை செய்து நமக்கு தேவையான பண்புகளை பெரும்பான்மையாக கொண்ட செடிகளை உருவாக்க பயிர் பெருக்க அறிவியல்(Plant Breeding)பெருமளவில் வளர்ந்தது.
டீ-ஜீ-வோ-ஜென் என்ற நெல் பயிரில் இருந்த குட்டையாக வளர செய்யும் மரபு பொருளை கொண்டும் Norin 10 என்னும் கோதுமை வகை கொண்டும் பசுமை புரட்சியை உருவாக்கி பட்டினியிலிருந்து 1970 களில் இந்தியாவை காத்தனர். இந்த டீ-ஜீ-வோ-ஜென் என்ற நெற் பயிரை பிற தேவையான பண்புகளை கொண்ட நெற் பயிர்களுடன் கலப்பினம் செய்து பல நூறு வகையான நெற்பயிற்கள் உருவாக்கபட்டன.பெரும்பாலான ஆராய்ச்சிகள் அரசு மற்றும் சர்வதேச ஆராய்ச்சி நிலையங்களில் தான் நடைபெற்றது. எனவே அதன் கண்டு பிடிப்புகளுக்கு விவசாயிகள்பணம் கொடுக்க தேவை இல்லை.
உயிர் தொழில்நுட்பவியலில் ஏற்பட்ட ஆராய்ச்சியின் பயனாக பண்புகளை நிர்ணயிக்கும் மரபு பொருளை (gene) ஆராய்ச்சி கூடத்தில் தனியே பிரித்தெடுத்து அதனை மற்றொரு உயிரிக்குள் செலுத்தி புதிய பண்புகளை மற்றொரு உயிரியில் வெளி படுத்த முடிந்தது.1970களில் மரபு பொருளான ஜீனை ஒரு பாக்டீரியாவிலிருந்து மற்றொரு பாக்டீரியாவுக்கு மாற்றி முதல் காப்புரிமையை இந்திய விஞ்ஞானி ஆனந்த சக்ரவர்த்தி GE கம்பெனியில் வேலை செய்யும் போது பெற்றார். .இந்த தொழில்நுட்பம் எந்த உயிரியின் பண்பையும் எந்த உயிரியிலும் வெளிபடுத்த கூடிய அளவிற்கான ஆராய்ச்சிக்கு இட்டு சென்றது..முக்கியமாக நுண்ணியிரியில் உள்ள பண்புகளை தாவரத்துக்கு கொண்டு செல்ல முடிந்தது.
பணபயிற்களில் முக்கிய ஒன்றாக இருப்பது பருத்தியாகும். நல்ல விளைச்சல் இருந்து, மார்கெட்டிலும் நல்ல விலை இருக்கும் போது பருத்தி விவசாயிகளுக்கு கிடைக்கும் லாபமும் அதிகம். பருத்தியை தாக்கும் பூச்சுகளில் முக்கியமானது காய்புழு(Helicoverpa armigera) ஆகும். இதை கட்டுபடுத்த விவசாயிகள் பல வகையான பூச்சி மருந்தை பல முறை அடிப்பர்.இதற்காக ஏக்கருக்கு பல ஆயிரம் செலவாகும். பூச்சி மருந்தின் பயன் அதிகமாக, அதிகமாக பூச்சிகளின் நோயெதிர்ப்பு தன்மையும் அதிகமானது. அதற்கு ஈடாக புதிய வகை பூச்சிகொள்ளி மருந்துகள் அறிமுகமாகி கொண்டே இருந்தன.விவசாய இடு பொருட்களின் செலவு அதிகமானதால் வறட்சி காலங்களில் விளைச்சல் குறைந்தாலோ, பூச்சிகள் கட்டு படுத்த முடியாத அளவு சென்றாலோ விவசாயிகளின் கடன் சுமை அதிகமாகி தற்கொலை வரை இட்டு சென்றது.
Bacillus thuringiensis என்ற நுண்ணுயிரி பருத்தியை அழிக்கும் காய்புழுவுக்கு நோயை ஏற்படுத்தி கொல்ல கூடிய தன்மையை கொண்டிருந்தது. அது புழுவை எவ்வாறு கொல்கிறது என்று ஆராய்ந்த போது அது சுரக்கும் ஒருவகை புரதம் தான் புழுவின் சாவுக்கு காரணம் என்று தெரிந்தது. அந்த நுண்ணியிரி சுரக்கும் புரதம் கார தன்மையுள்ள புழுக்களின் இரைப்பையில் அதுவும் குறிப்பிட்ட இரைப்பை உட்சுவர் கொண்ட புழுக்களின் மீது மட்டும் தீங்கை விளைவிக்க கூடியது. அந்த நுண்ணியிரியை கொண்டு இயற்கையான
உயிரியல் முறையில் பூச்சியை கட்டு படுத்தும் முறை பல வருடங்கள் கடை பிடிக்கபட்டன. முன் கூறிய படி உயிர் தொழில் நுட்ப ஆராய்ச்சியில் ஏற்பட்ட முன்னேற்றம் காரணமாக நுண்ணியிரியில் புழு கொல்லி புரதத்தை உற்பத்தி செய்யும் மரபு பொருள் கண்டுபிடிக்க பட்டு அந்த மரபு பொருளை பருத்தி செடியில் புகுத்தி விட்டனர்.அதன் விளைவாக மரபணு மாற்ற பட்ட பருத்தியை உண்ணும் புழுக்கள் இறந்துவிடும்.இந்த தொழில்நுட்பத்தை உருவாக்கிய மான்சாண்டோ நிறுவனத்திடம் தான் இந்த பண்புகளை உடைய விதையை வாங்க வேண்டும்.இத்துடன் இந்த பிளாஷ் பேக் முடிவடைகிறது.
மான்சான்டோ - பருத்தி - cry ஜீன்
பொதுவாக ஊடகங்களில் வரும் செய்தியை படிப்பவர்கள் மனதில் மான்சான்டோவின் இந்த தொழில்நுட்பம் மூலம் ஒட்டு மொத்த பருத்தி விதை உற்பத்தியின் மோனோபோலி ஆக மான்சான்டோ ஆகி விடக்கூடைய அபாயம் உள்ளது என்ற பயம் இருக்கும்.அதாவது
மரபணு மாற்ற பட்ட பருத்தியை விற்பதன் மூலம் பிற பருத்தி ரகங்கள் எல்லாம் அழிந்து மான்சான்டோவின் பருத்தி விதை மட்டும்பிற்காலத்தில் இருக்கும் என்று எண்ண தோன்றும்.ஆனால் உண்மை அதுவல்ல.
மான்சான்டோ பிடி புரத பொருளை உருவாக்கும் மரபு பொருளை பயிரில் உபயோக படுத்துவதை காப்புரிமை செய்துள்ளது. மான்சான்டோ தனது பருத்தி விதையில் பிடி மரபணு மாற்ற பருத்தியை விற்றாலும் அது பிற நிறுவனங்களின் விதைகளிலும் அந்த மரபணுவை உபயோகிக்க அனுமதிக்கிறது. ஆனால் அதை உபயோகபடுத்தும் விதை நிறுவனங்கள் மான்சான்டோவிற்கு ராயல்டி பணத்தை கொடுத்து விட வேண்டும்.(இதுவே மிக பெரிய லாபகரமான வியாபாரம்! கண்டுபிடிப்பு செலவு தவிர வேறு செலவு இல்லாமல் தொடர்ச்சியாக வருமானம் வந்து கொண்டு இருக்கும்). பிற
நிறுவனங்களை பொருத்தவரையில் அவர்களிடம் நல்ல விளைச்சல் தருவதோடு வேறு பல நல்ல பண்புகளை கொடுக்கும் விதை ரகங்கள் உள்ளன. அவர்கள் உண்மையிலேயே பிடி மரபணுவுக்கு நல்ல பூச்சு கொல்லி தன்மை இருக்கும் வரை அவர்களது ரகங்களில் மான்சான்டோவின் மரபணு பொருளை இணைத்து விற்பார்கள். விதையின் விலையின் ஒரு பங்கை மான்சான்டோ நிறுவனத்துக்கு கொடுப்பார்கள்.
ஆத்தூரில் உள்ள கடையில் விற்பனைக்கு வைத்திருந்த பருத்தி விதைகளில் பெரும்பான்மையான விதைகள் இது போல் பல் வேறு நிறுவனக்கள் மார்கெட்டில் பெயர் போன தங்களது விதைகளில் மான்சான்டோவின் மரபணு பொருட்களை இனைத்து விற்பனை செய்யும் விதைகள் தான். இந்த கம்பெனிகளின் வரிசையில் மக்களுக்கு பரிட்சமான ராசி, மகிக்கோ என அனைத்து நிறுவனங்களும் உள்ளன.
பொதுவாக ஊடகங்களில் வரும் செய்திகள் அனைத்தும் மரபணு மாற்ற தொழில் நுட்பத்துக்கு எதிரானதாகவே இருக்கும். மரபணு மாற்ற தொழில் நுட்பத்தின் தீமைகளை பற்றி விலாவாரியாக எழுதி விட்டன. ஆனால் நாட்டில் சாதாரண விவசாயிகளின் மனோநிலை என்ன? இன்றைய சந்தையில் இந்த தொழில்நுட்பத்தின் உண்மையான நிலவரம் என்ன என்று அறிய ஆவல் எனக்கு நிறையவே இருந்தது. அப்போது அந்த கடையின் உரிமையாளர், கடைக்கு வந்திருந்த சில விவசாயிகள் மற்றும் அப்போது அங்கிருந்த வேளாண் அறிஞர் என அனைவரிடமும் உரையாட வாய்ப்பு கிடைத்தது. அந்த உரையாடலின் ஒரு பகுதியை இங்கு பகிர்கிறேன்.
தமிழகத்தில் பிடி காட்டனை விவசாயிகள் எதிர்த்து ஒட்டு மொத்தமாக விரட்டி விட்டார்களே உண்மைதானே?
பெரும்பான்மையான விவசாயிகள் தற்போது வாங்குவது பிடி மரபணு மாற்றபட்ட விதைகளை தான். அதனால் மார்கெட்டில் இருக்கும் மிக முக்கிய நிறுவனங்கள் அனைத்தும் தங்களது விதையில் பிடி ஜீனை பொருத்தி விற்று வருகிறார்கள்.வேண்டுமென்றால் இங்கு அடுக்கியிருக்கும் விதைகளை எடுத்து பார்த்து கொள்ளுங்கள். விற்பனையான விதைகள் அளவு வேண்டுமானாலும் பார்த்து கொள்ளுங்கள்.
பிடி பருத்தி வாங்கிய விவசாயிகள் பிற மாநிலங்களில் தற்கொலை செய்து கொள்வதாக செய்தி வருகிறதே? உண்மையிலேயே பிடி பருத்தியினால் லாபம் உள்ளதா? அல்லது மருந்து கம்பெனி மற்றும் அரசாங்கத்தின் அச்சுறுத்தலுக்கு பயந்து வாங்குகிறீர்களா?
அரசாங்கமோ அல்லது மருந்து கம்பெனிகளோ யார் எங்களை அச்சுறுத்த?. கடன் வாங்கி எங்களது சொந்த முயற்சியில் செலவு செய்து விவசாயம் செய்கிறோம். நஷ்டம் வந்தால் பாதிக்கபட போவது எங்க குடும்பம் தான். எனவே எங்களுக்கு எது சரி என படுகிறதோ, எது லாபாமாக இருக்கிறதோ அதை நாங்கள் கடை பிடிப்போம்.முன்பெல்லாம் காய் புழுவிடமிருந்து பருந்தியை காப்பாற்ற பலமுறை மருந்து அடிப்போம். அதற்கான செலவு பல்லாயிரத்தை தாண்டும். பிடி காட்டனை போடுவதால் உபயோக படுத்தும் மருந்தின் அளவு பல மடங்கு குறைந்துள்ளது. அது மட்டுமன்றி விளைச்சளும் ஓரளவுக்கு நன்றாக உள்ளாது. அதனால் தான் வாங்குகிறோம்.
மரபணு மாற்ற பருத்தி விதையின் விலை அதிகம் என்கிறார்களே அது உண்மையா?
உண்மை தான். ஒரு 500 ரூபாய் அதிகம் கொடுத்தாலும் , அது பூச்சு கொல்லி மருந்தின் செலவில் பல ஆயிரம் குறைகிறது. அதனால் விதைக்கு செய்யும் அதிக செலவு குறிப்பிட தகுந்த அளவில் தெரிவதில்லை.
அப்ப மரபணு மாற்ற விதை உபயோக படுத்துவதால் பூச்சி தாக்குதலே இல்லாமல் பூச்சு மருந்தே தெளிப்பதில்லை என்று கூறுகிறீர்களா?
உண்மை அதுவல்ல. பருத்தியை தாக்கும் முக்கிய பூச்சியான காய்புழுவின் தாக்குதல் குறைந்து விட்டது. ஆனால் பருத்தி இலையை தாக்கும் சாறுண்ணி பூச்சிகளின் தாக்குதல் அதிகமாகவே உள்ளது. அதற்கு பூச்சு கொல்லி மருந்தை உபயோக படுத்த வேண்டியுள்ளது. ஆனால் இப்ப்பொதெல்லாம் முன்பு போல் மிக அதிக அளவில் பூச்சி மருந்து அடிக்க தேவை இல்லை.
மரபணு மாற்ற விதைகளால் மனிதர்களின் உடல் நலத்திற்கு மிக பெரிய அளவில் பாதிப்பு ஏற்படும் என்கிறார்களே? அதை பற்றியெல்லாம் கவலை இல்லையா?
கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக அமெரிக்காவில் உற்பத்தியாகும் சோயா, மக்காசோளம் போன்றவற்றில் பெரும்பான்மையான பகுதி மரபணு மாற்ற விதைகளை உபயோகபடுத்தி பயிராகிறது. அதை உட்கொள்ளும் அமெரிக்கர்களுக்கும், அந்த பொருட்கள் ஏற்றுமதியாகி செல்லும் பிற நாடுகளில் உள்ளவர்களுக்கும் எதுவும் ஏற்படுவதில்லை. அதை விடுங்கள், அங்கு உற்பத்தியாகும் பொருட்களை வைத்து தான் food preservative மற்றும் packed foods போன்ற பலவற்றை தயாரிக்கிறார்கள் அதை நாம் அனைவரும் உண்டு கொண்டு தான் உள்ளோம். என்ன ஆயிற்று?
பிடி பருத்தியை உண்டு வாழ கூடிய எதிர்ப்பு தன்மை புழுவிற்கு வந்து விட்டால் பருத்தியையே காக்க முடியாது என்கிறார்களே?
எந்த ஒரு பூச்சியையும் கட்டு படுத்த பல வகையிலான பூச்சி கொல்லிகள் உள்ளன. ஒவ்வொரு பூச்சி கொல்லியும் வெவ்வேறு வகையில் பூச்சிகளின் உயிர்வேதியல் பாதைகளில் குறுக்கீடு செய்து பூச்சிகளை கொல்கின்றன. முன்பெல்லாம் ஒரு பூச்சு கொல்லியை தொடர்ந்து உபயோகிக்கும் போது, சில ஆண்டுகளில் அந்த பூச்சுகளுக்கு அந்த பூச்சு கொல்லியிலிருந்து எதிர்ப்பு தன்மை அடைந்தவுடன் வேறு பூச்சுகொல்லியை உபயோகிக்க ஆரம்பிப்போம். அது போல பிடி பருத்தியின் பூச்சி எதிர்ப்பு தன்மை குறைந்தால் அதை உபயோக படுத்துவதை நிறுத்தி விடுவோம். வேறு பூச்சு கொல்லியை பார்த்து போக வேண்டியது தான்.
இது இயற்கைக்கு எதிரான தொழில்நுட்பம் என்கிறார்களே?
உங்களுக்கு உடம்புக்கு நோய் வந்தால் நீங்கள் வாங்கும் மருந்தின் பல, இதே மரபணு மாற்ற தொழில்நுட்பத்தின் மூலம் தான் தயாராகிறது. அது இயற்கைக்கு மாறானது என்று ஒதுக்க வேண்டியது தானே. ஒவ்வொரு தொழிலிலும் தொழில்நுட்ப வளர்ச்சி எங்கோ போய் கொண்டிருக்கிறது. உடுக்கும் உடையிலிருந்து, சுகாதாரம், கட்டிடம், உடை, நுகர் பொருள் என்று அனைத்திலுமே இயற்கைக்கு மாறான தொழில்நுட்பம் தான் பயனாகிறது. அவை அனைத்தும் சுற்றுசூழல் கேட்டை தான் ஏற்படுத்தும். இருந்தும் மக்கள் தொகை வளர்ச்சி, மனிதனின் quality of life கருத்தில் கொண்டு அனைத்தையும் ஏற்று கொள்கிறோம். ஆனால் அதே தொழில்நுட்பத்தை விவசாயிகள் மட்டும் பயன் படுத்த கூடாது என்று சொன்னால் என்ன நியாயம்?இவ்வளவு பேசும் நீங்கள் இங்கு இயற்கையான மாட்டு வண்டியில் வருவது தானே? ஏன் புவி வெப்பமாக்கும் காரில் வருகிறீர்கள்?
இந்த பதிவு பத்திரிக்கைகளிலும், Facebookலும் வரும் செய்திகளை தாண்டி தமிழக கிராமங்களில் உண்மையான நிலவரம் எவ்வாறு உள்ளது என்று தெரிந்து கொள்வதற்காக எழுத பட்டது தான்.மற்ற படி பிடி தொழில்நுட்பத்தை பற்றி என்னுடைய ஆதரவோ அல்லது எதிர்ப்பு பதிவோ அல்ல.
பின் குறிப்பு:
மரபணு மாற்று தொழில்நுட்பம் பற்றி அறிவியல் ரீதியாகவும், சந்தை படுத்துதல் ரீதியாகவும், நீதி நெறி (ethics) ரீதியாகவும், சுற்றுசூழல் பாதிப்பு ரீதியாகவும், பிற்கால விவசாய தொழிலை உலகளவில் எவ்வாறு பாதிக்க கூடும் என்றும் விரிவான தொடர் பதிவை "நேரம் கிடைக்கும் போது எழுதலாம் " என்று பல மாதங்களாக நினைத்து வருகிறேன். நினைத்து கொண்டே உள்ளேன்!