Wednesday, January 02, 2013

சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு - மேலை நாடுகளும் இந்தியாவும்


சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு பற்றி பலரும் பல்வேறு கோணத்தில் விவாதத்தை எடுத்து வைத்துள்ளனர். இந்த கட்டுரையில் விவசாயம் சார்ந்த உணவு பொருட்கள் மற்றும் இதர நுகர்வு பொருட்களில் மேலை நாடுகளில் பெரு நிறுவனங்களின் தாக்கம்பற்றியும் இந்தியாவில் அது ஏற்படுத்த கூடிய தாக்கம் பற்றியும் சாதக மற்றும் பாதக அம்சங்களையும் விவாதிப்போம். உணவு பொருட்கள் மற்றும் பிற வணிப பொருட்களை வேறு பட்ட கோணத்தில் பார்ப்பது முக்கியம்

1.சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டினால் நுகர்வோருக்கு குறைந்த விலையில் உணவு பொருட்கள் கிடைக்கும் என்பது ஒரு முக்கிய வாதமாகும். மிக பெரிய நிறுவனங்கள் பல்வேறு நிலைகளில் உள்ள இடை தரகர்களை ஒழித்து திறமை வாய்ந்த விநியோகசங்கிலியை உருவாக்கி நுகர்வோருக்கு குறைவான விலையில் உணவு பொருட்களை கொடுப்பர் என்பது வாதமாகும். ஆனால் உண்மையில் நடக்க போவது அதீதமான முதலீட்டின் மூலம் ஆரம்ப காலத்தில் குறைந்த விலையில் (நஷ்டம் ஏற்பட்டால் கூட) உணவுபொருட்களை விற்க ஆரம்பித்து , போட்டியின் மூலம் பிற சிறு கடைகளை மூடிய பின் போட்டிகளற்ற நிலையில் பழைய விலைவாசியை நோக்கி போகத்தான வாய்ப்பு அதிகம் உள்ளது.

அமெரிக்கா மற்றும் மேலை நாடுகளின் வர்த்தகத்தில் முழுமையாக தற்போது பெரு நிறுவனங்களிடம் தான் உள்ளது. ஆனாலும் ஒரு சில ஆசிய மற்றும் ஆப்ரிக்க கடைகள் அந்தந்த குறிபிட்ட மக்களின் தேவையை பூர்த்தி செய்ய சிறு கடைகளை வைத்துள்ளனர். மேலேகுறிபிட்ட வாதத்தில் உண்மை இருக்கும் என்றால் அந்த சிறு கடைகளில் காய்கறிகளின் விலை அதிகமாகவும் பெரு நிறுவனங்களில் விலை குறைவாகவும் இருக்க வேண்டும். இரண்டு கடைகளிலும் கிடைக்கும் பொதுவான காய் கறிகளான தக்காளி, பீன்ஸ், காரட், வெள்ளரி, லெட்டியூஸ், கொத்தமல்லி, காளான்மற்றும் திராட்சை , மாதுளை , செர்ரி போன்ற பழங்களின் விலைகளை ஒப்பிட்டு பார்த்தால் உங்களுக்கு ஆச்சர்யம் தான் மிஞ்சும்.

மேலே குறிபிட்ட அனேகமான காய்கறி மற்றும் பழங்களின்விலை இந்திய மற்றும் ஆசிய கடைகளில் 50 முதல்100 விழுக்காடு குறைவாக இருக்கும். அதனால் எந்த ஒரு இந்தியரும் இந்திய மற்றும் ஆசிய (சிறு) கடைகளுக்கு தான் காய் கறிகளை வாங்க செல்வர். இதற்கு சில விதி விலக்குகளும்இருக்களாம். பொதுவாக இந்திய மற்றும் ஆசிய கடைகளில் தான் காய் கறி மற்றும் பழங்களின் விலை குறைவாக இருக்கும்.

2.சில நேரங்களில் காய்கறிகளை அதிக கொள்முதல் செய்து விட்டாலோ அல்லதுஅதன் சேமிப்பு திறன் முடியும் நிலை வந்தாலோ அந்த காய்கறி/பழங்களை முழுமையாக விற்று விட தள்ளுபடி விலையில் பெரு நிறுவனங்கள் விற்கும் போது அதன் விலைஉண்மையிலேயே குறிப்பிடும்அளவில் குறைவாகவே இருக்கும். இது ஜவுளி மற்றும் பிற பொருட்களுக்கும் பொருந்தும். இந்த அளவு விலை குறைப்பை சிறு கடைகளில் எதிர்பார்க்க முடியாது.

3.பெரு நிறுவனங்களால் மேலை நாடுகளில் ஏற்பட்ட மிக பெரிய ஆபத்து காய் கறி மற்றும் பழங்களின் பன்முக தன்மை (diversity) அழிய தொடங்கியதுநாடு முழுவதும் ஒரே வடிவமைப்பு மற்றும் சுவையை கொடுக்க கூடிய, குறைந்த விலையில் உற்பத்திசெய்ய கூடியமற்றும் அதிக நாள் சேமித்து வைக்க கூடியகாய் கறி/பழங்களின் வகைகள் தேர்வு செய்ய பட்டு அவை மட்டுமே அனைத்து கடைகளிலும் விற்க படும்.இதனால் நுகர்வோருக்கு ஒரே மாதிரியான வடிவமைப்பு மற்றும் சுவை உடைய பொருட்கள்கிடைத்தாலும் அவர்கள் பல்லாயிர கணக்கான சுவைகளை இழக்கிறார்கள். இந்தியாவில் இந்த கலாச்சாரம் தொடங்கி விட்டாலும் பெருநிறுவனக்களின் வருகை இதை வேகமாக்கி நிரந்திரமாக்கும்.

4.பெரு நிறுவனங்களின் லாபத்திற்கு முக்கிய காரணி அவர்களுடைய மிக நீண்ட உலகளாவிய உணவு சங்கிலி மற்றும்நீண்ட கால குளிர் பதன சேமிப்பு முறைகளும் ஆகும். அதன் விளைவு நுகர்வோருக்குfresh காய் கறி மற்றும் பழங்கள் கிடைப்பது அரிதாகிவிடும்.அது மட்டுமன்றி உடலுக்குபக்க விளைவுகளை ஏற்படுத்தும் வேதி பொருட்களின் பயன்பாடும் அதிகரிக்கும்.

5.சிறு மற்றும் பெரு விவசாயிகளை கொண்டு ஒரே மாதிரியான வடிவமைப்பு, தரம் கொண்ட காய் கறி பழங்களை உற்பத்தி செய்வது என்பது இயலாத காரியம். அதன் விளைவு மேலை நாடுகளில் சிறு மற்றும் பெரு விவசாயிகளிடம் இருந்து காய் கறி உற்பத்தி ஒரு சிலமாபெரும் நிறுவனங்களிடம் அடைந்தது. சிறு மற்றும் பெரு விவசாயிகள் முற்றிலும் விவசாய தொழிலிருந்து வெளியேறினர். உதாரணமாக அமெரிக்காவின் ஒட்டு மொத்த கேரட் உற்பத்தியில் 85% போல்ட்ஹவுஸ் மற்றும் மற்றொரு நிறுவனத்திடம் உள்ளது. மேலைநாடுகளில் விவசாயத்தை நம்பி இருந்த குறைந்த மக்கள்வளர்ந்த பொருளாதாரத்தில் கூடுதலாக ஏற்படுத்த பட்ட சேவை துறை மற்றும் பிற தொழில் துறைகளில் வேலை தேடி செல்ல முடிந்தது. ஆனால் இந்தியாவில் இந்த நிலை ஏற்பட்டால் வாழ்வாதாரத்தைஇழந்து நிற்க போகும் பல கோடி மக்களுக்கு இந்தியாவின் பிற துறைகள் வேலை கொடுத்து காப்பாற்றுமா என்பது கேள்வி குறியே.

6.சில்லறை வர்த்தகத்தில் முழுமையான அன்னிய முதலீட்டினால் ஏற்பட போகும் மற்றொரு முக்கிய தாக்கம் விவசாயம் சாராத பிற பொருட்களின் உற்பத்தியில் ஏற்பட கூடிய தாக்கம் ஆகும். பன்னாட்டு கம்பெனிகளின் லாபத்தின் அடிபடையே மலிவாக பொருளைஉற்பத்தி செய்யும் நாடுகளில் பொருட்களை கொள்முதல் செய்து பிற நாடுகளில் குறிபிட்ட லாபம் வைத்து அந்நாட்டு பொருட்களின் உற்பத்தி செலவை விட குறைத்து விற்பதாகும். அதன் படி நாணய மதிப்பு குறைவாக உள்ள அண்டை நாடுகள் அல்லது அரசு ஆதரவோடுகுறைந்த விலையில் பொருட்களை உற்பத்தி செய்ய கூடிய சீனா போன்ற நாடுகளில் உற்பத்தியாகும் பொருட்கள் பெரிய அளவில் இந்தியாவில் இறக்குமதி செய்ய பட்டு இந்திய தொழிற்துறை மிக பெரிய அளவில் பாதிக்கபட வாய்ப்புள்ளது.சீனாவில் மலிவாக உற்பத்திசெய்தால் இந்தியாவில் அதையே பின்பற்ற வேண்டியது தானே என்ற கேள்வி எழ கூடும். சீனா தொழிற்துறைக்கு தேவையான மூல பொருட்களை எல்லாம் குறைந்த விலையிலும் தடையில்லாமலும் கிடைக்க ஆப்ரிக்க, தென்னமெரிக்கா, ஆஸ்திரேலியா என அனைத்துகண்டங்களிளும் உள்ள நாடுகளில் தொடர்பை ஏற்படுத்தி தானே உற்பத்தியை கையக படுத்தி உள்ளது. அது மட்டுமன்றி சிறு,பெரு மற்றும் மாபெரும்தொழிற்சாலைகளுக்குதேவையான அனைத்து கட்டமைப்பு வசதிகளையும் செய்து கொடுத்துள்ளது. அதற்கும் மேலாகதெளிவான திட்டமிடல் மூலம் தொழிற்சாலை வெற்றிகரமாகஇயங்க உதவுகிறது. அதுமட்டுமன்றி பெருமளவு நேரடி மற்றும் மறைமுக மானியமும் கொடுக்கிறது. அப்படிபட்ட சீன தொழிற்துறையோடு எந்த அடிப்படை கட்டமைப்பு வசதியும் இல்லாத நிலையில் ஒருநாளுக்கு 2 மணி நேரம் மட்டும் மின்சாரம் பெற்று இயங்கி கொண்டிருக்கும் இந்திய தொழிற்துறை போட்டி இட முடியுமா என்பது கேள்வி குறியே. ஏற்கனவே விவசாய துறையில் வேலை இழந்து இருக்கும் மக்களுடன் இந்த தொழிற்துறை வேலை இழப்பும் சேர்ந்துகொண்டால் மிக பெரிய சமூக பிரச்ச்னையாக உருவெடுக்க வாய்ப்புள்ளது..

7.மேலை நாடுகளில் தற்போது வட்டியில்லா கடனுக்கு கிடைத்த முதலீட்டுடன் வர கூடிய பெரு நிறுவனங்களுடன் கந்து வட்டிக்கு வாங்கி பிழைப்பை நடத்தும் இந்திய சிறு வியாபாரிகள் போட்டியிட கூடிய நடைமுறை சாத்தியம் இல்லை.

8.பன்னாட்டு பெரு நிறுவனங்கள் உலகளவில் பரந்து இருப்பதால் அவர்களுடைய நிகர விற்பனை மதிப்பு மிக அதிகம். இந்தநிறுவனங்கள் ஆரம்பத்தில் சில வருடங்கள் மிக குறைந்த விலையில் நட்டத்திலேயே பொருட்களை விற்று சந்தையில் பெரு விழுக்காட்டைஅடைய முடியும். அதன் பிறகு போட்டி இல்லாத நிலையில் அதிக விலையில் மீண்டும்வியாபாரத்தை தொடர முடியும்.

9.தற்போது சில்லறை வர்த்தகத்தில் மொத்த விற்பனையில் ஒரு குறிபிட்ட வட நாட்டு சாதியினரிடமும் சில்லறை வர்த்தகத்தில், ஒரு குறிபிட்ட தமிழக சாதியிடனரிடமும் தான் பெருமளவு உள்ளது. சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டினால் இந்த நிலை மாறிகல்லூரி படித்த பல்வேறு பிரிவினருக்கு அந்த துறையில் வேலைவாய்ப்பு கிடைக்க வாய்ப்பிருக்கும். இட ஒதுக்கீட்டை முழுமையாக செயல்படுத்தும் தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் அனைத்து சாதியினரும் பயனடைவர். ஆனால் பெரும்பான்மை வடமாநிலங்களில்கல்வி வாய்ப்பு கிடைத்த உயற்சாதியினர் மட்டுமே பயனடைவர். அதே நேரத்தில் தற்போதைய அமைப்பு அதிக முதலாளிகளை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் அன்னிய நேரடி முதலீடு பெருமளவில் தொழிலாளிகளை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.

10.பன்னாட்டு பெரு நிறுவனங்களின் வருகையால் உயர் நடுத்தர மற்றும் உயர் வர்க்க மக்கள் விரும்பும் பிராண்டேட் நுகர் பொருட்கள் ஒரளவு மலிந்த விலையில்தங்கு தடையின்றி கிடைக்க வாய்ப்புள்ளது.

11.ஏற்கனவே அதிகரித்து வரும் ஏற்றுமதி - இறக்குமதிக்கான பற்றாக்குறை, இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.இது இந்தியாவின் பெரும பொருளியிலில் (macroeconomic) மிக பெரிய தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.ஆரம்ப காலங்களில் கிடைக்கும் சிறியஅளவு அன்னிய முதலீட்டிற்கு ஆசை பட்டு நீண்ட காலத்தைய பேரழிவிற்கு கொண்டு செல்ல வாய்ப்புள்ளது.

12. பொதுவாக அமெரிக்காவில் வால்மார்ட் போன்ற நிறுவனங்கள் ஒரு கடையை தொடங்க வேண்டுமானால் அந்த பகுதியில் வாழும் மக்களின் ஒப்புதலை பெற வேண்டும். இதற்காக  பல வருடம் மல்லு கட்டி நின்று தோற்ற சம்பவம் எல்லாம் உள்ளது. சில இடங்களில் குறுக்கு வழியில் ஆரம்பிக்க முனைந்து மக்கள் எதிர்ப்பை சமாளிக்க முடியாத சம்பவம் எல்லாம் உண்டு. ஆனால் இந்தியாவில் அது போன்ற நிலை இருக்குமா என்பது கேள்விகுறியே.(அரசியல் தலைவரின் மூன்றவது மனைவியின் 4 வது பிள்ளையின் இரண்டாவது மனைவிக்கு ஒரு பெட்டியை கொடுத்தால் சுலபமாக காரியம் முடிந்து விடகூடும்!))
வளர்ந்த மற்றும் நாணய மதிப்பு உள்ள  பொருளாதாரத்தை கொண்ட மக்கள் தொகை குறைவாக உள்ள நாடுகளில் பெரு வணிக நிறுவனங்கள் மலிவான இறக்குமதி மூலம் விற்பனை செய்வதால் பண வீக்கத்தை கட்டுபாட்டில் வைத்து கொள்வதில் முக்கிய பங்கை வகிக்கிறது. அதை "Magic Wand" ஆக நினைத்து இந்தியாவிலும் உபயோகபடுத்தலாம் என்று மன்மோகன்சிங் போன்ற பொருளாதார மேதைகள் நினைக்க கூடும். இந்தியாவின் பொருளாதாரத்தை பற்றியோ, பெரும்பான்மை இந்தியர்களின் வாழ்வாதாரத்தையோ அவர்கள் மனதில் கொள்வார்களா என்பது கேள்விகுறியே.

அமெரிக்கா மற்றும் மேலை நாடுகளிடமிருந்து இந்தியா கற்க வேண்டிய பாடங்கள் பல நூறு உள்ளது. நிச்சயம் சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீடு என்பது அவற்றில் ஒன்றல்ல.
 
என்னதான் பொதுமக்கள் இது பற்றி விவாதித்தாலும் மத்திய அரசின் முடிவு இறுதியானதாக இருப்பதால் பொதுமக்கள் குறைவான பாதிப்புடன் எப்படி தப்பிப்பது அல்லது அதிக பயனடைவது என்று விவாதிக்கவும் திட்டமிடலை தொடங்கவும் நேரம் வந்தாயிற்று

2 comments:

DiaryAtoZ.com said...

நிறைய விஷயங்கள் தெரிந்து கொண்டேன் நன்றி நண்பரே

Anonymous said...

டாலர் அரசியல் படித்தேன் சுவாரசியமாக இருந்தது.இது போல் இந்திய ரூபாய் மத்ப்பு சரிவதால் யாருக்கு சாதகம்,பாதகம் தடுக்கமுடியுமா?பங்குச்சந்தையில் நடக்கும் மோசடிகள் பற்றியும் எழுதுங்கள்