எரிமலை பற்றிய செய்திகளை பாடத்திலும், ஊடகங்கள் மூலமும் சிறு வயதிலேயே கேள்வி பட்டிருப்பதால் எரிமலையை காணும் ஆசை எப்போதும் மனதில் இருந்து கொண்டே இருப்பதில் வியப்பில்லை. உலகிலேயே மிக பெரிய எரிமலையான மோன லோவா எரிமலையும், .உலகில் உள்ள மிக பெரிய செயல் திறன் உள்ள எரிமலைகளாகிய மோன லோவா மற்றும் கிளோவியா எரிமலைகளும் ஹவாய் தீவின் பெருந்தீவில் உள்ளது. இந்துக்கள் இயற்கை சக்திகளை பஞ்ச பூதமாக வழி படுவதை போல ஹவாய் பழங்குடியினரும் இயற்கை சக்திகளை வழி பட்டனர். அவர்களின் எரிமலைக்கான (நெருப்பு) கடவுளின் பெயர் பீலே.கிளோவியா எரிமலை தான் கடவுளின் உடலாக கருதபடுகிறது.ஹவாய் பழங்குடி இனத்தவரின் மதத்திற்கும் இந்து மதத்திற்கும் பல ஒற்றுமை உள்ளது. அது பற்றி பிரிதொரு பதிவில் விரிவாக எழுதுகிறேன்.
உலகிலேயே மிக பெரிய மலையான மோனலோவா மலை சுமார் 19000 கன மைல்கள் கொள்ளளவு கொண்டது. கடல் மட்டத்திற்கு கீழே உள்ள அதன் அடி பகுதியிலிருந்து அதன் உயரத்தை கணக்கிட்டால் அது சுமார் 56000 அடிகள்(17000 மீ) ஆகும். அதாவது எவரெஸ்ட் சிகரத்தை விட சுமார் 27000 அடிகள் உயரமானது.
ஹவாய் தீவில் உள்ள இந்த எரிமலைகளை கண்டு களிக்க பல்வேறு வழிமுறைகள் உள்ளன. அமெரிக்க அரசாங்கம் கிளோவியா எரிமலை பகுதியில் எரிமலை தேசிய பூங்காவை அமைத்து உள்ளது. அங்கு பார்வையாளர்கள் அரங்கமும் அதனுள் எரிமலை அருங்காட்சியகமும் உள்ளது.எரிமலை பற்றிய அறிவியல் பூர்வமான செய்திகளை இங்கு காணலாம். பார்வையாளர்கள் அரங்கத்திற்கு வெளியில் இருந்து பார்த்தால் தற்போது ஆயத்த நிலையில் உள்ள ஒரு எரிமலையை பார்க்களாம். எரிமலையிலிருந்து வெளியாகும் கந்தக வாயுவை அருகில் இருந்து பார்க்களாம்.
எரிமலை தேசிய பூங்கா பார்வையாளர் அரங்கிலிருந்து எரிமலை |
லாவா குழாய்கள் |
அது மட்டுமின்றி டிரக்கிங் செய்ய விருப்பம் உடையவர்களுக்கும், கேம்பிங் செய்ய விருப்பம் உடையவர்களுக்கும் அதற்கான வாய்ப்பு உள்ளது.
நிலம் மூலம் எரிமலையை பார்த்தால் ஓரளவிற்கு தான் பார்க்க முடியும்.
புகை படங்களிலும். வீடியோக்களிலும் காண்பது போன்ற சீறி பாயும் எரிமலையை காணலாம் என்ற நினைப்போடு எரிமலையை காண சென்றால் ஏமாற்றம் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். எப்போதாவது ஒரு சில சமயங்களில் தான் எரிமலையிலிருந்து லாவா போக்கு அதிகம் இருக்கும். பெரும்பாலான சமயங்களில் எரிமலை குழம்பு சிறிய அளவே இருக்கும்.அவ்வாறு குறைவான எரிமலை குழம்பு இருக்கும் நேரத்தில் எரிமலையை ஓரளவு நன்கு பார்க்க வேண்டுமானால் ஹெலிகாப்டர் பயணத்தின் மூலம் தான் பார்க்க முடியும்.எரிமலையின் முழுமையான பார்வை கிடைக்க ஒரே வழி எரிமலைக்கு நேர் மேலே வானத்திலிருந்து பார்ப்பது தான். ஹெலிகாப்டர் பயண செலவு அதிகமாக இருந்தாலும் வாழ்நாளில் எப்போதாவது ஒரு முறை கிடைக்கும் இந்த வாய்ப்பிற்காக செலவழிப்பதில் தவறில்லை என்று முடிவெடுக்க தோன்றியது.எரிமலை உள்ள ஹீலோ பகுதியில் பெரும்பான்மையான நேரங்களில் மேக மூட்டத்துடன் காணபடும். மேக மூட்டம் உள்ள நேரத்தில் ஹெலிகாப்டரிலிருந்து பார்த்தால் கூட எரிமலை தெளிவாக தெரியாது. அதிர்ஷ்டவசமாக நாங்கள் சென்ற நேரத்தில் மேக மூட்டம் இல்லாமல் இருந்ததால் எரிமலையை நன்றாக தரிசிக்க வாய்ப்பு கிடைத்தது.
ஹீலோ விமான நிலையம் மற்றும் கோனா விமான நிலையத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலம் சுமார் 1- 2 மணி நேரத்திற்கு எரிமலை பகுதிகளை சுற்றி பார்க்கவும், எரிமலையின் நேர் மேலேயிலிருந்து பார்த்து ரசிக்கவும் வழி வகை உள்ளது.ஹவாய் பெருந்தீவின் எரிமலையையும், அழகிய கடற்கறை பகுதிகளையும்,நீர் வீழ்ச்சிகள் நிறைந்த அடர்ந்த காட்டு பகுதிகளையும் பறவையை போல் வானத்தின் மேலிருந்து பார்த்து ரசிப்பது வாழ்நாளின் மறக்க முடியாத அனுபவம் என்றால் மிகையாகாது.
Bird's Eye View எரிமலை குழம்பு படர்ந்த இடம் |
விரியும் தீவு - அமெரிக்காவின் தென் முனை |
பழைய எரிமலை( crater) |
மலை அருவி |
ஹவாயின் கடற்கரை அழகையும் , எரிமலை பற்றியும் பார்த்து விட்டோம். இனி வரும் பதிவில் ஹவாயின் பசுமை அழகை பற்றி பார்ப்போம்.
முந்தய பகுதி
எழில் மிகு ஹவாய் - 4 Snorkeling Parasailing
அடுத்த பகுதி
எழில் மிகு ஹவாய் 6 - பசுமை அழகு