Sunday, October 25, 2009

இப்படியும் ஒரு பொழைப்பு!

ஒவ்வொரு கம்பெனியும் திவாலாகும் போது அதை ஏற்று நடத்தும் நிறுவனத்திற்கு ஏற்படும் இழப்பு அளவிட முடியாததாக இருக்கும். இது தானே நாம் அனைவரும் நினைப்பது.ஆனால் உண்மை அது இல்லை. கேட்க ஆச்சிரியமாக இருக்கிறதா? திவாலாகும் நிறுவனத்தை ஏற்று நடத்திய நிறுவனங்கள் கொள்ளை லாபம் அடிக்கின்றன. இது நடப்பது அமெரிக்காவில்.

சந்தையில் ஏற்படும் ஏற்ற இறக்கத்தின் போது ஒரு சில வலுவான கம்பெனிகளும் நட்டமடைந்து திவாலாகும் நிலைக்கு வர வாய்ப்புண்டு. ஆனால் அந்நிறுவனங்களுக்கு அதிக அளவு சொத்துக்களும், சந்தையில் நல்ல பிராண்டு பெயரும் இருக்கும். அதை வீணாக்காமல் புதிய தனியார் முதலீட்டு நிறுவனம் அது போன்ற திவாலாகும் நிறுவனங்களை திவாலுக்கு பின் புதிதாக எடுத்து நடத்தும். ஒரு முறை இது போல் தனியார் முதலீட்டு நிறுவனங்கள் கையில் மாட்டினால் அவ்வளவு தான். அடுத்த சில வருடங்களில் தொடர்ச்சியாக இது போன்ற தனியார் முதலீட்டு நிறுவனங்கள் வீழும் நிறுவனத்தை சூறையாடி விடுவார்கள். அதன் முதன்மை முதலீட்டாளர்கள் பணத்தை இழப்பர். வேலை செய்பவர்களும் பல இன்னலுக்கும் வேலை இழப்பிற்கும் உள்ளாவார்கள் ஆனால் அதை ஏற்று நடத்தும் தனியார் முதலீட்டு நிறுவனங்கள் கொள்ளை லாபம் அடிப்பார்கள்.

எப்படி என்கிறீர்களா?. உதாரணமாக ஒரு நிறுவனம் திவாலாக போகிறது என்று வைத்து கொள்வோம். அது திவாலான உடன் ஒரு சில தனியார் நிறுவனங்கள் அதை புதிதாக எடுத்து நடத்தும். திவாலாகும் நிலையில் உள்ள நிறுவனங்களின் மதிப்பு அடிமாட்டு விலையில் இருக்கும். தனியார் முதலீட்டு நிறுவனங்கள் பெரும்பாலும் கடன் மூலம் கிடைத்த பணத்தை கொண்டு குறைந்த விலைக்கு இந்த நிறுவனத்தை வாங்குவார்கள். அதை வாங்குவதற்கு மற்றும் நடத்துவதற்கு என்று அந்நிறுவன பணத்தையே தட்சணையாக பெருவர். பல மில்லியன் டாலர்களையும் சிறப்பு டிவிடெண்டாக பெருவர். அமெரிக்க வங்கிகளும் இந்த நிர்வாக மாற்றம் மற்றும் பாண்டுகளை விற்க என பல மில்லியன் லாபம் அடைவர்.

இதற்கெல்லாம் பணம் எவ்வாறு வருகிறது என்று கேட்கிறீர்களா? இந்நிறுவனத்தை அளவுக்கு மீறி கடன் வாங்க வைப்பர்கள்.வாங்கிய கடனின் பெரும் பகுதியை மேற் கூறிய வகையில் சுருட்டி கொள்வார்கள். மீதி பணம் மட்டும் கம்பெனியின் வளர்ச்சிக்கு செலவிடபடும்.இவ்வாறாக ஏற்று நடத்தும் ஒரு சில வருடத்தில் முதலை எடுத்து கொண்டு நன்கு லாப பணத்தையும் எடுத்து கொல்வார்கள். பிறகு கம்பெனி நிலை மீண்டும் மோசமானவுடன் அதை மீண்டும் திவாலாக்க அறிவிப்பார்கள். தற்போது வேறொரு தனியார் முதலீட்டு நிறுவனம் அதை எடுத்து நடத்தும். ஆனால் நடக்கும் நிகழ்வுகள் ஒன்றாகாவே இருக்கும். கம்பெனியின் கடன் அதிகமாகும். அதை எடுத்து நடத்தும் நிறுவனம் மட்டும் ஒன்றன் பின் ஒன்றாக லாபமடையும்.10 - 12 வருடங்களில் கரும்பு சக்கையை புழிவது போல் பணத்தை ஒவ்வொரு தனியார் நிதி நிறுவனங்களாக புழிந்து எடுத்து சக்கையாக்கி போட்டு விடுவார்கள்.

உதாரணமாக சிம்மன்ஸ் என்கின்ற படுக்கை தயாரிப்பு கம்பெனி 1991ம் ஆண்டு வெறும் $164 மில்லியன் கடன் கொண்டிருந்தது. ஆனால் அதன் பிறகு மேற்கூறியவாறு பல தனியார் முதலீட்டு கம்பெனிகளின் கைக்கு சென்று அதன் கடன் $1.3 பில்லியனாக மாறி விட்டது. தனியார் முதலீட்டு நிறுவனக்களோ திவாலாகி கொண்டிருந்த அந்த நிறுவனத்திலிருந்து சுமார் $750 மில்லியன் லாபம் எடுத்து விட்டனர். அந்த கம்பெனியின் கடன் பாண்டுகளை வாங்கியவர்களுக்கோ $575 மில்லியனுக்கும் மேலாக நட்டம். ஒவ்வொரு முறை அது கடன் வாங்கும் போதும் அதன் வட்டி அதிகமாகி கொண்டே செல்வதால் அது போன்ற நிறுவனக்களை பொருளாதார சரிவு நேரங்களில் வெற்றிகரமாக நடத்துவதும் கடினம்..

ஒரு சில தனியார் நிதி நிறுவனங்கள் கம்பெனியை மீண்டும் லாபமாக நடத்த முயற்சி செய்கிறார்கள் என்பது உண்மை தான். ஆனால் தற்போது ஒட்டுண்ணியாக பணத்தை உறிஞ்சும் செயல் இவ்வகை நிறுவனங்களிடம் அதிகரித்து உள்ளது

2003 லிருந்து 2008ம் ஆண்டு வரை மட்டும் தனியார் நிதி நிறுவனங்களால் கட்டு பாட்டுக்கு எடுக்க பட்ட 188 கம்பெனிகளிலிருந்து மட்டும் சுமார் $75 பில்லியன் கடனாக பெறபட்ட பணம் தனியார் நிதி நிறுவனக்களுக்கு டிவிடென்டாக சென்று கம்பெனிகளை கடனில் மூழ்கடிக்க செய்துள்ளது.

திவாலாகும் நிறுவனத்திலிருந்தும் பணத்தை கறக்கும் அதிசயம் இன்றும் நடந்து கொண்டுள்ளது. இப்படியும் ஒரு பொழைப்பு!

--

Monday, October 19, 2009

சீனாவிடம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்

இந்தியாவுக்கு எதிராக சீனா நகர்த்தி வரும் காய்களை பற்றி தெளிவாக விவரிக்கும் இந்திய பத்திரிக்கைகள், சீனா வளர்ச்சி அடைய செய்யும் முயற்சிகளை பற்றியும் இந்தியா எந்த அளவு பின் தங்கி உள்ளது என்பது பற்றியும் முக்கியத்துவம் கொடுத்து செய்தி வெளியிடுவதில்லை!. இது பற்றிய செய்தியும் விழிப்புணர்வும் சராசரி இந்தியருக்கு மிகவும் குறைவாகவே உள்ளது. அரசியல்வாதிகளுக்கு அது பற்றிய அக்கறை சிறிதும் இல்லை. அமெரிக்காவில் உயர் கல்வி படிக்கும் என் நண்பன் ஒருவன் பேசும் போது கூறிய செய்திகள் மிகவும் ஆச்சிரியமாக இருந்தது.

சீனாவின் பல்கலைகழகங்கள் எவ்வாறு அடிப்படை ஆராய்ச்சி மற்றும் தொழில் நுட்ப ஆராய்ச்சிகளில் மனித வளத்தை பெருக்க முயற்சி செய்கிறது என்பது பற்றியது தான் அந்த செய்தி. சீனாவிலிருந்து ஒரு சில அறிவியல் வல்லுனர்கள் அமெரிக்காவுக்கு சில மாத காலத்திற்கு வந்து தங்கி இருந்து, அமெரிக்காவில் ஆராய்ச்சியில் ஈடு படும் சிறபபான சீன மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களை நேரடியாக சந்தித்து அவர்களிடம் பேசி அவர்களுக்கு வேண்டிய வசதிகளை செய்து கொடுத்து சீன பல்கலைகழகங்களில் வேலை செய்ய அழைத்து செல்கிறார்கள். அவ்வாறு வருபவர்களின் வேலையே இது போல் அறிவியல் வல்லுனர்களை அங்கு கூட்டமாக அழைத்து செல்வது தானாம். அது மட்டுமின்றி அமெரிக்காவிலிருந்து செல்லும் பேராசிரியர்களுக்கு ஐந்து வருடத்திற்கு இத்தனை அறிஞ்சர்களை அமெரிக்காவிலிருந்து அழைத்து வர வேண்டும் என்று ' Target ' வைத்து ஆட்களை இழுக்கிறார்களாம். இது மட்டுமன்றி பலவாறாக அறிவியல் வல்லுனர்களை சீனா நோக்கி தூண்டில் போட்டு கொண்டு செல்கின்றனராம். தற்போது சீனா வெளிநாட்டு விஞ்ஞானிகளையும் அழைத்து கொள்ள முடிவெடுத்துள்ளனராம்.

அதே நேரத்தில் இந்தியாவில் உள்ள என் நண்பர் (மரபனு மாற்றம் மூலம் வெற்றிகரமாக புதிய பயிர் வகையை இந்தியவில் உள்ள ஆராய்ச்சி நிறுவனத்தில் இருந்தே உருவாக்கியவர்) ஒருவரிடமிருந்து கேட்ட செய்தி. இந்தியாவில் தமிழகத்தில் இருக்கும் ஒரு புகழ் பெற்ற பல்கலை கழகத்தில் ஆராய்ச்சி பணிக்கு ஆட்கள் எடுக்க போகிறார்கள். அதற்கு அடிப்படை தேவை 10 - 25 லட்சம் மந்திரி மற்றும் அதிகாரிகளுக்கு லஞ்சமாக கொடுக்க வேண்டும். இந்தியாவில் பெரும்பான்மையான பல்கலை கழகங்களில் லஞ்சம் புகுந்து விளையாடுகிறது. இந்த ஊழல் துனைவேந்தர் பதவி நியமனத்தில் இருந்து தொடங்குகிறது. எல்லா மட்டத்திலும் இது புகுந்து விளையாடுகிறது.

ஒரு நாட்டின் தொழில் வளர்ச்சி மற்றும் அதன் மூலம் ஒட்டு மொத்த வளர்ச்சிக்கு ஆதாரமாக இருப்பது பல்கலை கழகங்கள். அமெரிக்கா மற்றும் மேலை நாடுகளின் தொழில் வளர்ச்சியின் முழு முதல் காரணம் பல்கலை கழகங்கள். பெரும்பான்மையான கண்டு பிடிப்புகள் நடப்பது பல்கலை கழகத்தில் தான். முக்கியமாக அடிப்படை ஆராய்ச்சிகள் அனைத்தும் நடப்பது பல்கலை கழகத்தில் தான். முதலாளித்துவ நாடுகளில் பல்கலை கழகத்தில் நடக்கும் ஆராய்ச்சியின் பயனை இறுதில் தனியார் கம்பெனிகள் அறுவடை செய்யும்.

இந்திய அரசு துறையினரால் ஆராய்ச்சிக்கு வழங்கும் நிதியும் அரசியலில் இருக்கும் அரசியல்வாதிகளுக்கும், பல்கலை கழகங்களில் இருக்கும் அரசியல்வாதிகளின் கைகளுக்கும் தான் பெருமளவு செல்கிறதே அன்றி உண்மையான விஞ்ஞானிக்கு ஒரு பகுதியே செல்கிறது.
பன்னாட்டு கம்பெனியினர் தன் அறிவியல் தொழில் நுட்பம் மூலம் பெரு வளர்ச்சி அடைவதை பற்றி பேசுபவர்கள் கூட இந்தியாவில் ஆராய்ச்சிக்காக செலவிட படும் தொகை எந்த அளவுக்கு ஒழுங்காக ஆராய்ச்சிக்கு செல்கிறது, அதன் மூலம் கண்டு பிடிக்க பட்டவை என்ன? என்று யாரும் கேள்வி எழுப்புவதில்லை.
அதைவிட மிக கவலைக்குறிய செய்தி தற்போது ஆராய்ச்சி செய்ய வரும் இடுத்த தலை முறையினர் நிலை. தற்போது பேராசிரியர்களாக இருப்பவர்கள் 20 - 40 வருடத்திற்கு முந்தய தொழில்நுட்பம் மட்டும் தெரிந்தவர்கள். அவர்களிடம் ஆராய்ச்சி செய்ய வரும் மாணவர்களுக்கு அவர்கள் கொடுக்கும் தலைப்பு ஒன்றுக்கும் உதவாத 20 வருட பழைய ஆராய்ச்சி தலைப்பாக இருக்கும். தற்போது இந்தியாவில் செய்யபடும் ஆராய்ச்சிகளில் பெரும்பான்மையானவற்றை தலைப்பு கொடுத்தவுடனேயே அறையில் அமர்ந்தே 4 மாதத்தில் எழுதி விட முடியும்.. ஒரு சில பல்கலைகழகங்களில் ஆராய்ச்சி கட்டுரையை பரிசீலிக்கும் பொறுப்பு அந்த துறையில் புகழ் வாய்ந்த வெளி நாட்டு அறிஞ்சர்களிம் அனுப்புவார்கள். முன்பெல்லாம் அது அமெரிக்கா மற்றும் அய்ரோப்பா போன்ற இடங்களில் உள்ள பெரிய ஆரய்ச்சி கூடத்தில் வேலை செய்யும் விஞ்ஞானிகளிடம் செல்லும். தற்போது அது வங்காளதேசம், சூடான், எத்தியோப்பியா போன்ற தேசங்களில் வேலை பார்க்கும் பேராசிரியர்களிடம் செல்கிறது.

இந்தியாவில் CCMB(Center for cellular and Molecular Biology)போன்ற ஒரு சில ஆராய்ச்சி நிறுவனங்கள் இதற்கு மாற்றாக நல்ல ஆராய்ச்சியாளர்களை இருத்து உலக தரம் வாய்ந்த ஆராய்ச்சி செய்தாலும் 1 பில்லியன் மக்கள் தொகை கொண்ட இந்தியா போன்ற நாட்டில் ஒவ்வொரு மாநிலத்திலும் தரம் வாய்ந்த 10 பல்கலைகழகங்களாவது இருக்க வேண்டும்

பல்கலை கழகத்தையும் அங்கு நடக்கும் ஆராய்ச்சியையும் வலுபடுத்தாமல் எந்த நாடும் வல்லரசாக முடியாது. மிகவும் அதிர்ச்சியான செய்தி,இந்தியாவில் இது பற்றிய விவாதம் கூட பெரிய அளவில் தொடங்க வில்லை. இந்தியாவில் அரசயல்ப்வாதிகளுக்கும் இது பற்றி கவலை இல்லை. இந்தியா வல்லரசாகும் என்று கனவு கொண்டிருக்கும் சிந்தனை வாதிகளும் கனவில் இருந்து வெளி வந்து அதை செயல் படுத்த நேரம் இல்லை.

Sunday, October 11, 2009

அமைதியாக நடக்கும் ஒரு சமுதாய புரட்சி - 2



அமைதியாக நடக்கும் ஒரு சமுதாய புரட்சி - 1


சென்ற பதிவில் தேசிய வேளாண் நிறுவனம் பற்றியும் அது விவசாய வளர்ச்சிக்கு ஆற்றி வரும் பணிகள் பற்றியும் பார்த்தோம். இப்பதிவில் அந்நிறுவனம் வேளாண் வளர்ச்சிக்கு ஆற்றி வரும் பிற பணிகளை பார்ப்போம்.



5.சென்னை தரமணியில் உள்ள அண்ணா பல்கலை கழக வளாகத்தில் இந்நிறுவனத்தின் ஆராய்ச்சி மையம் செயல் பட்டு வருகிறது.பயிரின் வளர்ச்சி மற்றும் மகசூலுக்கு முக்கிய பங்கை அளிப்பது மண்ணின் வளம். பயிருக்கு தேவையான சத்துக்கள் எந்த அளவு மண்ணில் உள்ளது என்பதை கண்டறிந்து மீதி தேவையான சத்துக்களை உரம் மூலம் அளிப்பதன் மூலம் மகசூலை பெருக்க முடியும். இந்த மண் பரிசோதனையை துள்ளியமாக செய்ய மண் பரிசோதனை மையத்தை இங்கு அமைத்துள்ளனர்.அமெரிக்காவில் உயர் பரிசோதனை கூடங்களில் பயன் படுத்தும் முறையை இந்தியாவிலும் கையாண்டு துள்ளிய மண் பரிசோதனை செய்கிறார்கள். தழை,மணி மற்றும் சாம்பல் சத்துக்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை பிற நுண்ணூட்ட சத்துக்களுக்கும் கொடுக்கிறார்கள். அந்த பரிசோதனையின் முடிவுகளை வேளாண் வல்லுநர்கள் ஆராய்ந்து பயிர்களுக்கு தேவையான சத்துக்களை சரியான அளவு, சரியான நேரத்தில், சரியான முறைப்படி இட பரிந்துரை செய்கிறார்கள்.

6.மகளிர் சுய உதவி குழுக்களால் உற்பத்தி செய்ய படும் உணவு பொருட்களின் தர கட்டு பாடு மற்றும் அவ்வுணவு பொருட்களில் இருக்கும் சத்துக்களின் அளவை பட்டியலிடுவது போன்றவை அப்பொருட்களை சந்தை படுத்துவதற்கு மிகவும் அவசியமானவை ஆகும். இந்த ஆராய்ச்சி மையத்தில் இதற்கான வசதியும் உள்ளது.

7.உயிர் தொழில்நுட்பம் மூலம் நோய் தாக்குதல் குறைந்த அதிக மகசூல் கொடுக்க கூடிய செடிகளை உற்பத்தி செய்யவும் இங்கு ஆராய்ச்சி நடைபெருகிறது.

8.தற்போது வேளாண் கூலி தொழிலாளர்கள் எல்லாம் வேலை வாய்ப்பை தேடி நகர் புறங்களுக்கு சென்று விட்டதால் விவசாய வேலைக்கு ஆட்கள் கிடைப்பது அரிதாக உள்ளது. எனவே விவசாயத்தை தொடர்ந்து நடத்த பண்ணை உபகரணங்களின் தேவை முக்கியமாக உள்ளது. இந்நிறுவனம் தமிழ்நாட்டு நிலவரத்திற்கு ஏற்ற பண்ணை உபகரணங்களை கண்டறிந்து அவற்றை விவசாயிகளுக்கு விளக்கி அவர்கள் உபயோகபடுத்த ஊக்குவிக்கிறது.வெளிநாட்டிலிருந்து கூட நமக்கு தேவையான உபகரணங்களை தருவித்து இங்கு உபயோகபடுத்த முடியுமா என்று முயற்சி செய்கிறார்கள்.







9.இந்திய விவசாயத்தில் தற்போது முக்கிய பிரச்சனையாயிருப்பது தண்ணீர் தான். அவ்வப்போது அதிகம் பெய்யும் மழை நீரை தேக்கி வைத்து வறட்சி காலத்தில் விவசாயத்திற்கு உபயோக படுத்துவது அவசியம். தேசிய வேளாண் நிறுவனம், நாபார்டு வங்கியுடன் இணைந்து கிராம அளவில் நீர் சேமிப்பு கலங்களை அமைத்து, வாய்க்கல்களை சுத்த படுத்தி அதை அந்த கிராம மக்களே நிர்வகிக்கவும் ஏற்பாடு செய்துள்ளது. இதன் பயனை பல கிராம விவசாயிகள் தற்போது அனுபவித்து வருகிறார்கள்.



10.மாடு வளர்ப்பது என்பது விவசாயிகளுக்கு மற்ரொரு லாபம் தரும் தொழிலாக உள்ளது. மிகவும் தரம் வாய்ந்த வெளி நாட்டு மாடுகளின் விந்துக்களை உபயோகபடுத்தி உள் நாட்டு மாடுகளுடன் கலப்பு ஏற்படுத்தி அதிக பால் உற்பத்தி மற்றும் நோய் ஏதிர்த்து வளர கூடிய மாடுகளை விவசாயிகள் பெற உதவி செய்கிறது.

11.விவசாயிகளை தொழில் நிறுவனங்களோடு நேரடி தொடர்பை ஏற்படுத்தி, உற்பத்தியின் லாபம் இடை தரகர்களுக்கு கிடைக்காமல் விவசாயிகளுக்கு கிடைக்க உதவி செய்கிறது. உதாரணமாக பால் உற்பத்தி, love birds பறவை வளர்ப்பு மற்றும் பலவற்றில் இது போல் உதவி செய்கிறது.

12.விவசாயிகளுக்கு வங்கியில் கடன் வாங்க தானே முன்னின்று உதவி செய்து அந்த கடனில் தொடங்கும் வேளாண் தொழிலுக்கும் இறுதி வரை தொழில்நுட்ப ஆலோசனை வழங்குகிறது.

அடுத்த பதிவில் பிற பணிகளை பற்றி தொடர்ந்து பார்ப்போம்

--

Wednesday, October 07, 2009

அமைதியாக நடக்கும் ஒரு சமுதாய புரட்சி


எதிர் மறையான செய்திகளை பார்த்து பார்த்து சமச்சீரான வளர்ச்சியே நடக்க வாய்ப்பில்லை என்று அலுத்து போனவர்களுக்கு நம்பிக்கையூட்டும் பதிவுதான் இது.

தற்போது உண்மையான வளர்ச்சி என்பது நகர் புறங்களை நோக்கி கடத்த பட்டு விட்டது. உலகமயமாதல் விளைவாக லண்டனுக்கும் சென்னைக்கும் உள்ள இடைவெளியை விட சென்னைக்கும் அதன் அருகில் 100 கி.மீ தொலைவில் இருக்கும் கிராமத்திற்கும் இடைபட்ட இடைவேளி தான் அதிகம் ஆகி உள்ளது. அமெரிக்காவில் உள்ள மக்களின் வாழ்க்கை தரமும், நன்கு படிக்க வாய்ப்பு வசதி பெற்று, மூலதனம் அதிகம் உள்ள குடும்பத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை தரமும் ஒரளவு ஒப்பீடு செய்ய கூடியதாக இருக்கிறது. ஆனால் அதே வாய்ப்பு வசதி பெற்ற நகரத்தில் இருக்கும் மக்களின் வாழ்க்கை தரமும் , கிராமத்தில் விவசாயத்தை மட்டுமே நம்பியுள்ளவர்களின் வாழ்க்கை தரமும் இரு வேறு துருவங்களை நோக்கி நகர தொடங்கி உள்ளன. நகர் புறத்தில் வேலை வாய்ப்பு மிக அதிகமாக உள்ளது. அதிக சம்பளம் கிடைக்காவிட்டாலும் வருடத்தில் அதிக நாட்கள் வேலை கிடைக்கும் வசதியும் அங்கு உள்ளது. ஆனால் அதே சமயம் ஆட்கள் தட்டுபாடும் பெரு நகரங்களில் அதிகம் உள்ளது. இன்றைய விவசாயத்தின் போக்கும் கவலைகுறியதாக இருக்கிறது. இடு பொருட்களின் விலை ஏறி கொண்டே போகிறது. விவசாயிகளுக்கும் உண்மையிலேயே விஞ்ஞான ரீதியான அறிவுரை கிடைப்பது அரிதாகி, தேவையான தொழில் நுட்பங்கள் மற்றும் அறிவுரை கிடைக்காமல் தேவையான இடுபொருட்களை தேவையான நேரத்தில் இடாமல், தேவையற்ற இடுபொருட்களை இட்டு பணத்தை விரையமாக்கி கடன் சுமையில் வாழ்க்கையை தள்ள வேண்டிய பரிதாப நிலையில் உள்ளனர்.

இந்த நிலையை மாற்ற யார் தான் முன் வர போகிறார்கள் என்று அனைவரும் நினைக்க தோன்றும். இந்த மாற்றத்தை கொண்டு வர ஆங்காங்கு ஒரு சில அரசு சாரா நிறுவனங்கள் முயன்று வருகின்றன. அந்த முயற்சியில் வெற்றிகரமாக குறிப்பிட்டு சொல்ல கூடிய அளவு செய்து வரும் நிறுவனங்களில் ஒன்று தான் தேசிய வேளாண் நிறுவனம். வெளி உலகுக்கு தெரியாமல் கிராம புறங்களில் ஒரு மறுமலர்ச்சியே செய்து வருகிறது இந்த நிறுவனம்.

பசுமை புரட்சியை ஏற்படுத்தி உணவு உற்பத்தியில் தன்னிறைவை ஏற்படுத்திய சி.சுப்ரமணியம் அவர்களால் ஆரம்பிக்கபட்ட நிறுவன்ம் தான் தேசிய வேளாண் நிறுவனம். 60களில் தொடங்கிய பசுமை புரட்சியால் ஏற்பட்டு வந்த முன்னேற்றம் 90களில் முடிவடைய தொடங்கியதையும், பசுமை புரட்சியின் நன்மை பெரும்பாலும் சிறு மற்றும் குறு விவசாயிகளை அடைய முடியவில்லை என்பதையும் கண்டார். மேலும் தற்போது மண்வளம் பெருக்கத்திற்கான முக்கியத்துவம் மிகவும் குறைந்து வருவதையும் கண்டார். விவசாயிகளுக்கும் சந்தைக்கும் நேரடி தொடர்பு இல்லாததால், பெரும்பான்மையான லாபம் விவசாயிகளை சென்றடையாமல் இருப்பதையும் கண்ட அவர் இந்த பிரச்சனைக்கு தீர்வு காண ஆரம்பித்த தொண்டு நிறுவனம் தான் தேசிய வேளாண் நிறுவனம்.

இந்த நிறுவனம் விவசாய வளர்ச்சிக்கு மற்றும் கிராம புற வளர்ச்சிக்கு எடுத்து வரும் முயற்சிகள் பற்றி பார்ப்போம்.

விவசாய வளர்ச்சி
1.நவீன விஞ்ஞான ரீதியான யுக்திகளை கடை பிடித்து விவசாய உற்பத்தி திறனை பெருக்கும் முறைகளை விவசாயிகளின் நிலங்களிளே நேரடியாக செயல் படுத்தி காட்டி, நவீன விவசாயத்திற்கும் இதுவரை அவர்கள் செய்யும் விவசாயத்திற்கும் இடையே உள்ள வேறூபாட்டை எடுத்து காட்டி அறிவியல் ரீதியான விவசாயத்தில் கிடைக்கும் லாபத்தை உணர்த்துகிறார்கள். காஞ்சீபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் சுமார் 1000க்கும் மேற்பட்ட பண்ணைகளில் இந்த முறையை கையாண்டு உள்ளனர்.




2.நவீன தொழில் நுட்பங்களை செயல்படுத்தி விவசாயம் செய்த விவசாயிகளின் லாபமும் நன்கு உயர்ந்துள்ளது.ஒரு சில பயிர்வகைகளில் கிடைத்த உற்பத்தி பெருக்கம் கீழே தர பட்டுள்ளது.
மக்காசோளம் - 150%
தர்பூசனி - 116%
நிலகடலை - 113%
நெல் - 55%
கரும்பு - 40%


3.மதுராந்தகம் அருகில் உள்ள சூனாம்பேடு என்ற கிரமத்தில் ஊரக மேம்பாட்டு மையம் ஒன்றை ஆரம்பித்துள்ளனர். அங்கு விவசாயிகளுக்கு தேவையான பயிற்ச்சிகளை கொடுக்க தரமான ஒலி-ஒளி சாதனங்களுடன் தரமான வகுப்பரை கட்டி உள்ளனர். அது மட்டுமின்றி விவசாயிகள் தங்குவதற்கு வசதியும் உள்ளது. இங்கு விவசாயிகள் மட்டுமின்றி வேளாண் விரிவாக்க துறையினரும் பயிற்ச்சி எடுக்கின்றனர்


4.அங்கு ஒரு மாதிரி பண்ணையும் அமைக்க பட்டுள்ளது. புது வகை பயிர்களை அந்த பகுதியில் பயிரிட தேவையான தொழில் நுட்பங்கள் அங்கு இறுதி செய்ய படுகிறது.அது மட்டுமின்றி மதிரி பண்ணையாகவும் அது செயல் படுகிறது.



அந்த நிறுவனம் ஆற்றும் பிற பணிகளை அடுத்த பதிவில் தொடர்கிறேன்.

--