Tuesday, February 21, 2023

மூன்று கோலியாத்களை எதிர்த்து வென்ற டேவிட் - செக் மொழி

 

 

தாய்மொழி என்பது மக்களின் அடையாளம். சுமார் 500 ஆண்டுகளாக இரு பெரும் அந்நிய நாடுகள் தங்கள் மொழியைத் திணித்து அந்த நாட்டு மக்களின் மொழி மற்றும் பண்பாட்டை அழிக்க முயற்சி செய்தும் அந்த தாக்குதலில் இருந்து தப்பித்து தன் தாய் மொழியை காத்த வரலாற்றை அறிய செக் குடியரசு நாட்டின் வரலாற்றை நாம் அறிந்து கொள்ள வேண்டும். அதுவும் அந்த  தாக்குதலின் போது அவர்களின் தாய்மொழி முதிர்ச்சி  அடையாமல் இளம் நிலையிலேயே இருந்தது. தாய்மொழியை  முளையிலேயே கிள்ளி எறியும் முயற்சியை ஒரு புறம் எதிர்கொண்டு , அந்த மொழியின் பரிணாம வளர்ச்சியையும் முன்னெடுத்து இன்று மொழிப் போராட்டத்திற்கே ஒரு கலங்கரைவிளக்கமாக செக் மொழி உள்ளது.  வாருங்கள் வரலாற்றை புரட்டிப் பார்ப்போம்.

 

செக் மொழி மற்றும் நாட்டின் ஆரம்ப வரலாறு

 

ஒரு நிலத்தில் பல நூற்றாண்டுகளாக வாழும் இனக்குழுவினர், தங்களுக்கென்று ஒரு பண்பாட்டை பெற்றபின் தனிநாடு உருவாவதற்கான அடிப்படை காரணங்களில் ஒன்று தாய்மொழி. செக் குடியரசு, மொழியின் அடிப்படையில் தேசியம் உருவாவதற்கான சிறந்த எடுத்துக்காட்டாக கொள்ளலாம். கி.மு. நான்காம் நூற்றாண்டில்  செல்டிக் இனக்குழுவின் ஒரு பிரிவான பாய் இன மக்கள் செக் பகுதியில் குடியிருந்தனர். அதன் பின்னர் செர்மானிய பழங்குடியினரும் , ஸ்லாவ் இன மக்களும் பெருமளவு குடியேறினர்.இன்றைய செக் குடியரசு பகுதிகள் பொஹிமியா என்று அழைக்கப்பட்டன. 12வது நூற்றாண்டில் உருவான செக் மொழியில், 13வது நூற்றாண்டில் இலக்கியமும் 14வது நூற்றாண்டில் அரசு ஆவணங்களும் உருவாக தொடங்கியது.15வது நூற்றாண்டில் முதிர்ச்சி பெற்ற எழுத்துருவும், இலக்கியமும் தோன்றி முழுமையான மொழியானது. சார்லஸ் V ஆட்சி செய்த 14ம் நூற்றாண்டிலேயே செக் மொழி அரசு மொழியாக அங்கீகரிக்கபட்டது. அதே காலகட்டத்தில் ஸ்லாவக் மொழியும் அங்கு தோன்றியது. இரண்டு மொழிகளுக்கும் அடிப்படை ஒன்றே. 16வது நூற்றாண்டுவரை பெரும்பான்மையான காலங்களில்  அந்த நாட்டு ஆட்சியாளர்களாலேயே ஆளப்பட்டு வந்ததால், இந்த மொழி மற்றும் பண்பாட்டு வளர்ச்சி சாத்தியமாக இருந்தது.15ம் நூற்றாண்டு வரை கத்தோலிக்க பிரிவை பின்பற்றிய செக் மக்கள், அப்போது கத்தோலிக்க  சர்ச்சுகளின் ஊழலுக்கு எதிராக தோன்றிய புராட்டஸ்டென்ட் பிரிவை சிறிதுசிறிதாக பின்பற்ற தொடங்கினர்.செக் மற்றும் ஸ்லோவக் மொழி 16வது நூற்றாண்டு வரை தரப்படுத்தப்படாமல் பெருமளவில் ஒத்து போயிருந்தது. ஆனால் கத்தோலிக்க ,புராட்டஸ்டண்ட் என்ற மத அடிப்படையிலான பிரிவு ஆரம்ப காலங்களில் மொழிகளுக்கிடையேயான வேற்றுமையை பெரிது படுத்தியது. கத்தோலிக்கக் கிறித்துவர்கள் ஸ்லாவக் மொழியையும், புராட்டஸ்டன்ட் கிறித்துவர்கள் செக் மொழியையும் பயன் படுத்த தொடங்கினர். இரு மொழிகளும் தன் வழியே முதிர்ச்சி பெற தொடங்கின.

 

முதல் தாக்குதல் - ஹாப்ஸ்பர்க் முடியாட்சி

ஐரோப்பிய வரலாற்றில் மிக முக்கியமான பேரரசுகளுள் ஒன்று ஹாப்ஸ்பர்க் முடியாட்சி. ஆஸ்திரியாவின் வியன்னாவை தலைமை இடமாக கொண்டு இடைக்காலத்தில் ஐரோப்பாவின் பல பகுதிகளை தன்னகத்தே கொண்டிருந்தது. கத்தோலிக்க கிருத்துவ மதத்தை அரசு சமயமாக கொண்ட அரசு இது. இந்த அரசு ஒரு கூட்டாட்சி போன்ற அமைப்பில் செயல்பட்டது. ஐரோப்பாவின் ஒவ்வொரு பகுதிகளையும் அந்த பகுதியை சேர்ந்தவர்களோ, அரசின் பிரதிநிதிகளோ ஓரளவு சுதந்திரத்தோடு முடியாட்சியின் தலைமையில் ஆண்டு வந்தனர். இந்த அரசு கத்தோலிக்க மதம் சார்புள்ளதாக இருந்ததால் லத்தீன் மொழி அரசு மொழியாக இருந்தது. அனால் இந்த அரசின் அதிகார மையங்களில் ஜெர்மானியர்கள் பெருமளவு இருந்ததால் லத்தீன் மற்றும் ஜெர்மானிய மொழி பெருமளவு தொடர்புமொழியாக இருந்தது.1620ம் ஆண்டு நடைபெற்ற வெள்ளைமலைப் போரில் ஏற்பட்ட தோல்விமூலம் ஹாப்ஸ்பர்க்  முடியாட்சியின் கீழ் முழுமையாக  செக் பகுதிகள் வந்தது. அடுத்த 300 ஆண்டுகளுக்கு செக் மொழிக்கோ அதன் பண்பாட்டிற்கோ அரசாட்சி வழியில் எந்த ஒரு உதவியும் கிடைக்கவில்லை. இந்த கால கட்டத்தை செக் மொழியின்    இருண்ட காலம் என்று கூட சொல்லலாம். செக் மொழியையும், தன் பண்பாட்டையும் இந்த கடினமான காலத்தில் வளர்த்தெடுத்தது சாதாரண மனிதர்களே. தமிழ்மொழிக்கும்  சங்ககாலத்திற்குப் பிறகு சுமார் 1500 ஆண்டுகள் அரசுகளின் உதவி எதுவும் இல்லாமல் சாதாரணத் தமிழர்களே வளர்த்தெடுத்தர்கள் என்பதை இங்கு ஒப்பீடு செய்து பார்க்கலாம்.

இரண்டாம் ஜோசப் என்ற மன்னர் காலத்தில் பாரிய மாற்றங்கள் ஏற்பட தொடங்கின. அவர்  கத்தோலிக்க கிருத்துவ சபையின் அதிகாரத்தைப் பெருமளவு குறைத்து அரசின் அலுவல் மொழியை லத்தீன் மொழியிலிருந்து ஜெர்மானிய மொழிக்கு மாற்றினார். அடிப்படை  பள்ளிக்கல்வியை கட்டாயமாக்கினார். பிரபுத்துவத்தை ஒழிக்க முயற்சி செய்தார். இதன் காரணமாக ஏழைமக்கள் பலர் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது தோன்றிய தொழிற்புரட்சி மக்களின் வாழ்க்கைத்தரம் உயரவும் உதவி செய்தது.

 

ஹாப்ஸ்பர்க் முடியாட்சி  பல்வேறு நாடுகளை கொண்ட ஆட்சி. இங்கு முக்கியமாக கவனிக்கபட வேண்டிய செய்தி என்னவென்றால் , ஆரம்ப காலங்களில் மத்திய அரசு மாகாண அரசுகளுக்கு அதிகக் கட்டுப்பாடுகளை விதிக்காமல் , மொழி மற்றும் பண்பாட்டு  ரீதியாக அதிக அழுத்தம் கொடுக்காமலே இருந்தது.  அரசியல்ரீதியான எழுச்சிகளை அனுமதிக்காமலும் , பண்பாட்டு ரீதியான மறுமலர்ச்சியை ஓரளவு அனுமதித்தது. மாகாண சுதந்திரம் பின்வரும் காலங்களில் பறிக்கப்பட்டு அதிகாரங்களை நடுவணபடுத்தும் நிலை உருவாகத் தொடங்கியது. அப்போது பள்ளிகளில் ஜெர்மானிய மொழி கட்டாயப் பாடமாக்கப்பட்டது. அலுவல் மொழியாக ஜெர்மானிய மொழி இருந்ததாலும், பேரரசின் அதிகார வட்டம் ஜெர்மானிய மொழி  பேசியதாலும், பொஹிமியா (செக்) நாட்டின் பிரபுக்கள், செல்வந்தர்கள்  மற்றும் படித்தவர்கள் மத்தியில் ஜெர்மானிய  மொழி பிரபலமாக இருந்தது. செக் மொழியில் படிக்க விரும்பும் மக்கள்கூட ஆரம்பக் கல்வி தவிர்த்து , நடுநிலை மற்றும் மேற்படிப்புகளும் படிக்க - முக்கியமாக அறிவியல், கணிதம், வரலாறு போன்ற பாடங்களை ஜெர்மானிய மொழி மூலம் படிக்கும் நிலையிலேயே இருந்தனர். ஏற்கனவே  முழுமையான முதிர்ச்சி  பெற்ற  மொழியாக இல்லாததால்  செக் மொழிக்கு அழிவை நோக்கி செல்லும் நிலை ஏற்பட்டது. 1798ம் ஆண்டு லத்தீன் மொழியிலிருந்து ஜெர்மானிய மொழி  அலுவல் மொழியாக்கப்பட்டது. லத்தீன் அரசு மொழியாக இருந்தவரையாவது உள்நாட்டு மொழிக்கு சிறிதளவாவது அரசு நிர்வாகத்தில் பங்கு இருந்தது. ஏற்கனவே அதிகார வர்க்கத்தில் ஜெர்மனிய மொழி பிற நாடுகளில் பரவலாக இருந்ததால், ஜெர்மானிய மொழி திணிப்பு உள்நாட்டில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இடைநிலைப் பள்ளி பாடப்படிப்பு முழுவதும் ஜெர்மானிய மொழியில் படிக்க வேண்டும் என்று  ஆணையிடப்பட்டது.  அரசு வேலை கிடைப்பதற்கு ஜெர்மானிய மொழி அவசியமானதால் பெரும்பாலானோர் ஜெர்மானிய மொழியிலேயே படித்தனர்.  செக் மொழியை நாட்டுப்புறத்தில் இருந்த விவசாயிகளும் , ஏழைகளும் மட்டுமே படித்து வந்தனர். அவர்கள் தன் தாய்மொழிக்கு கொடுத்த முக்கியத்துவம் , செக் மொழிக்கு உயிர்க் காற்றாக இருந்தது. இது மொழிக்கு மட்டும் ஏற்பட்டுக் கொண்டிருக்கும் அழிவாக இல்லை. மாறாக மக்களின் பண்பாட்டிற்கே ஏற்பட்ட அழிவாக இருந்தது என்பதை நம்மால் உணர்ந்து கொள்ள முடியும்.

 

செக் மொழியின் அடித்தளத்தில் தேசிய மறுமலர்ச்சி

 

செக் நாட்டு அதிகாரவர்க்கத்தினரும், பிரபுக்களும் ஜெர்மானிய மொழி மற்றும் அதன் பண்பாட்டில் ஊறித் திளைத்து தன் சொந்த மொழியையும் , பண்பாட்டையும் மறக்க தொடங்கினர். அந்தக் காலகட்டத்தில் கட்டாயக்கல்வி மூலம் அனைத்து ஏழை மற்றும் நகர்ப்புற மக்களும் படிக்கும் நிலை ஏற்பட்டது. படிப்பறிவு பெற்று வளர்ந்துவந்த சாதாரண மக்கள் தங்கள் நாடு மற்றும் மொழியின் நிலையை குறித்து சிந்திக்க தொடங்கினர். நாம் அடிமைத்தளையிலிருந்து மீள வேண்டும் என்றால் முதலில் நமது தாய்மொழியை வளமைப்படுத்த வேண்டும். பிறகு தங்களுக்கே உரிய கலை, பண்பாடு மற்றும் அறிவியல் ரீதியான நிறுவனங்களை உருவாக்க வேண்டும் என்று முடிவெடுத்தனர். அதற்கு முதலில் செக் மொழியை வளமைப்படுத்தி, உலக மொழிகளுக்கு இணையாக வளர்த்தெடுக்க வேண்டும் என்று முடிவு செய்தனர்.

 

18ம் நூற்றாண்டின் இறுதி காலகட்டத்தை செக் நாட்டின் தேசிய மறுமலர்ச்சிக் காலத்தின் தொடக்கமாக கூறப்படுகிறது. அப்போது தான் ஒரு ஆச்சர்யம் நடைபெற தொடங்கியது. அழிவின் விளிம்பில் இருந்த ஒரு இளமையான மொழி கொண்டு தன் பண்பாடு மற்றும் தேசிய அடையாளங்களை மீட்டெடுக்கும் முயற்சியில் சாதாரண மக்களே அரசின் உதவி இன்றி இறங்கினர். மொழியியல் வரலாற்றில் இந்த வரலாறு அழிவின் விளிம்பில் இருக்கும் மொழி மற்றும்  மொழி அடிப்படையிலான தேசியவாதத்தை மீட்டெடுப்போருக்கு  ஒரு உதாரணமாக இருக்கும்.  செக் மொழி மறுமலர்ச்சி நடைபெற்றதை மூன்று கட்டமாக பிரிக்கலாம்.

 

1.    மறுமலர்ச்சியின் முதல் காலகட்டம் - அடையாள சின்னமாக மொழி :  பொருளாதார, சமூக மற்றும் பண்பாட்டு மாற்றங்கள் நடந்த அந்த கால கட்டத்தில் தங்களது சமூகத்தின் எல்லையை வகுப்பது முதல் தேவையாக இருந்தது. அதற்கு பொதுவான அடையாளங்கள் தேவைப்பட்டன. அந்த அடையாளங்களை பொது வரலாறு, இலக்கியம், மொழி மற்றும் பண்பாட்டு அடையாளங்கள்  கொண்டு கட்டமைக்க முயன்றனர். ஒரு சமுதாயத்தை கட்டமைக்க மிக முக்கியமான அடிப்படை காரணியாக இருப்பது  மொழி ஆகும். மொழியானது மக்களிடையே கருத்து பரிமாற உதவும் கருவி மட்டும் அன்று. அது பல நூறு நூற்றாண்டுகளாக சேர்த்து வைத்துள்ள தொன்மங்களை தலைமுறை தலைமுறையாகக் கடத்தி வந்து மக்களின் பண்பாட்டை கட்டமைக்க கூடிய சக்தியாகவும் உள்ளது. இந்த  தொன்மங்கள் என்ற கண்ணாடி மூலம் தான் அந்த சமூகத்தில் வாழும் மக்கள் அன்றாட நிகழ்வுகளை பார்ப்பதோடு, அவர்களின் செயல்பாடுகளும் உள்ளது. ஆனால் செக் மொழி நுட்பமான  மொழியாக இருந்தால்கூட அந்தக் காலகட்டத்தில்  அதிக அளவு மதிக்கப்படும் மொழியாகவோ, அல்லது  ஐரோப்பாவில் உள்ள பிற மொழிகளோடு  ஒப்பீடு செய்யும் அளவில் முதிர்ச்சி அடையும் நிலையிலோ இல்லை. இந்த நிலையில் ஆரம்ப கட்ட செக் மொழியின் மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர் ஜோசப் டோப்ரோவ்ஸ்கி. அவர் முதலாவதாக செக் மொழிக்கான குறீயீடுகளை ஏற்படுத்த தொடங்கினார்.  செக் மொழிக்கான இலக்கணத்தை முதன் முதாலாக 1782 ம் ஆண்டு எழுதி வெளியிட்டார். ( தமிழ் மொழிக்கான இலக்கண நூல் தொல்காப்பியம் சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்பே எழுதபட்டுவிட்டது!). முக்கியமாக செக் மொழியின் எழுத்துவடிவம் அதிகத் தரம் வாய்ந்தாக இருக்கும் வகையில் தரப்படுத்தினார். செக் மொழியை முறையாக பின்வரும் காலங்களில் மாணவர்கள் பயில 1791ம் ஆண்டு ப்ராக் பல்கலைக்கழகத்தில் செக் மொழிக்கான இருக்கையை நிறுவினார். (சொந்த நாட்டிலேயே பல்கலைக்கழகத்தில் தாய்மொழிக்கு அப்போது தான் இருக்கை நிறுவ பட்டது!). 1792ம் ஆண்டு பொஹிமிய மொழிகளின் வரலாறும் இலக்கியமும் என்ற நூலின் மூலம் செக் மொழியின் வரலாற்றையும் அதன் இலக்கிய வளத்தையும் அடையாளப்படுத்தினார்.அதை தொடர்ந்து க்ரேமரியுஸ் என்பவர் பல செக் மொழி நூல்களை அச்சிடத் தொடங்கினார்.

Josef Dobrovský – (From Wiki)

 

2.    மறுமலர்ச்சியின் இரண்டாம்  காலகட்டம் - தேசிய பிரச்சாரம் : 19ம் நூற்றாண்டின் ஆரம்ப கால கட்டத்தில் இந்த மாற்றம் நிகழ்ந்தது. நாட்டுப்பற்றுள்ள இளைஞர்கள் அனைத்து தளங்களிலும் செக் மொழியின் பயன்பாட்டை அதிகபடுத்த முழுமுயற்சி செய்தனர், முக்கியமாக ஜோசப் ஜங்மான் செக் மொழிக்கான முதல் அகராதியை எழுதி வெளியிட்டார். அதுமட்டுமின்றி அந்த காலத்தில் செக் மொழியில் இல்லாத சொற்களுக்கு புதிய சொற்களை செக் மொழியில் உருவாக்கினார். முக்கியமாக அறிவியல் சார்ந்த சொற்கள் அனைத்தையும் செக் மொழியில் உருவாக்கினார். அதனால் செக் மொழி அறிவியலுக்கு உகந்த மொழியானது. கவிதை, மொழி பெயர்ப்புகள், நாவல்கள் என்று செக் மொழியில் பல இலக்கியங்கள் தோன்றின . நடுநிலை மற்றும் உயர்நிலைக் கல்விக்கூடங்களில் செக் மொழியை முழுமையான பயிற்றுவிக்கும் மொழியாக கோரிக்கைகள் எழுப்பி அதை நடைமுறைப்படுத்த வைத்தனர்.  அதற்காக பாட புத்தகங்கள் செக் மொழியில் மொழிபெயர்க்கத் தொடங்கினர். இந்த காலகட்டத்திற்குமுன் செக் மொழியும்,  ஜெர்மானிய மொழியும் இணைந்து ஆதிக்கம் செலுத்தியது ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஆனால் இந்த காலகட்டத்தில் முதன் முறையாக ஜெர்மானிய மொழியின் ஆதிக்கம் குறித்த கேள்வி எழுப்ப பட்டது.  நகர்ப்புறம் மற்றும் சிறு நகரங்களில் வசித்த மக்கள் செக் மொழி அறிவு மட்டும் பெற்றிருந்தனர். ஆனால் ஜெர்மானிய அறிவு மிகக் குறைவாகவே (ஆரம்ப கல்வியளவில் மட்டும்)  பெற்றிருந்தனர். அரசு வேலைவாய்ப்புகளுக்கு ஜெர்மானிய மொழி மட்டும் அடிப்படையாக இருந்ததால் பொதுமக்களிடையே இது கோபத்தை ஏற்படுத்தியது.  அரசு வேலைக்கு செக் மொழி மற்றும் ஜெர்மானிய மொழி இரண்டின் திறமையும் தேவை என்று அறிவிக்க போராடி வெற்றியும் பெற்றனர்.  மிகப்பெரிய நிறுவனங்கள் மூலம் இந்த மாற்றங்கள் ஏற்படவில்லை. பெரும்பாலும் தன்னார்வம் கொண்ட தனிபட்ட மனிதர்கள் மூலமாகவோ அல்லது சிறு குழுவினர் மூலமாகவோ நடந்தேறியது.

 

3.    மறுமலர்ச்சியின் மூன்றாம்   காலகட்டம் -  இன அடையாளம் நிறுவப்படல் :  19ம் நூற்றாண்டின் மத்திய பகுதியில் இந்த மாற்றங்கள் தொடங்கின.  ஒட்டுமொத்த சமுதாயமே தன் இன அடையாளங்களை காக்கவும், உரிமைகளை மீட்கவும் அனைத்து துறைகளிலும் போராடி வெற்றி பெறத் தொடங்கின. இந்த காலகட்டத்தில் ஆஸ்திரிய அரசும் அரசியலமைப்பு அடிப்படையிலான அரசாக மாறியது மொழி உரிமைகளை பெறுவதற்கு உதவியாக இருந்தது. செக் மக்களின் கடுமையான போராட்டத்திற்கு பிறகு 1848ம் ஆண்டு ஜெர்மானிய மொழிக்கு இணையாக செக் மொழியும் தேசிய மொழியாக அறிவிக்கபட்டது. இதன் விளைவாக அனைத்து சட்டதிட்டங்களும் செக் மொழியில் மொழி மாற்றம் செய்யப்பட்டன. உயர்நிலை பள்ளிகளில் செக் மொழிவழிப் பள்ளிகள் தொடங்கபட்டன. முன்பு அலுவல் மொழியாக ஜெர்மானிய மொழி  மட்டும் இருந்ததால், அனைத்து பள்ளிகளிலும் ஜெர்மானிய மொழி கட்டாயப் பாடமாக இருந்தது. ஆனால் செக் மொழிக்கு இணையாக அந்தத் தகுதி கிடைத்ததால் , பள்ளிகளில் ஜெர்மானிய மொழி படிக்க வேண்டியது கட்டாயமாக்கப்படவில்லை. செக் மொழி மட்டும் படிக்கும் பள்ளிகள் உருவாக தொடங்கின. செக் மற்றும் ஜெர்மானிய மொழி இரண்டுமே பயிற்றுவித்து வந்த பிராக் பல்கலை கழகம் இரண்டாக பிரிக்கபட்டு செக் மொழி வழியில் மட்டும் பயிற்றுவிக்கும் செக் பல்கலைகழகம் தொடங்கபட்டது. சுமார் ஒரு நூற்றாண்டு காலத்தில்  குரலற்றவர்களின் குரலாக இருந்த செக் மொழி தேசியமொழி என்றும் அடையாளத்தைப் பெற்றது.

 

செக் மொழியை தேசிய மொழியாக்கியதில் மற்றொரு முக்கிய மாற்றமும் ஏற்பட்டது.அரசு வேலை வாய்ப்புகளில் செக் மொழியும் அவசியம் என்பதால் , செக் மொழி படித்த கிராம மற்றும் நகர்ப்புற சாதாரண மக்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்க வாய்ப்பு பெற்று, அரசு வேலைவாய்ப்புகளில் அதிக பிரதிநிதித்துவம் பெற தொடங்கினர். அதே காலகட்டத்தில் மொழி வளர்ச்சி போலவே பண்பாட்டு வளர்ச்சியும் நடைபெற தொடங்கியது. செக் பண்பாட்டு நிறுவனங்களைக் கட்டமைப்பு செய்யும் பணி வேகமாக நடைபெற்றது.  செக் நாட்டு வரலாற்றை விளக்கும் செக் அருங்காட்சியகம் அமைக்கபட்டது. செக் மக்களின் வரலாறு மற்றும் பண்பாடு  பற்றிய புத்தகங்கள் எழுதப்பட்டது. அடுத்த முக்கிய முன்னெடுப்பாக செக் தேசிய  அரங்கம் கட்டப்பட்டது. அந்த அரங்கில் செக் மொழி இசை நிகழ்ச்சிகள், நாடகங்கள் தொடர்ச்சியாக நடைபெற்றது. இந்த அமைப்பு பல்வேறு செக் இசைக் கலைஞர்கள் தோன்ற வழிவகை செய்தது. செக் மொழியில் மரபுக்கதைகளை ஆவணப்படுத்துவது, மரபுக்கதை நாயகர்களை உருவகப்படுத்துவது என பல செயல்பாடுகள் நடைபெற்றது. (இந்த இடத்தில் தமிழகத்தில் தமிழ் இசை புறக்கணிக்கப்பட்ட காலகட்டத்தில் தமிழ் இசையை வளர்த்தெடுக்க ராஜா சர் அண்ணாமலை செட்டியார் அவர்கள் தமிழகமெங்கும் தமிழிசை மன்றத்தை அமைத்தது  நினைவு கூறத்தக்கது).சுமார் நூறு ஆண்டுகள் செக் மக்களின் கடும் உழைப்பால் செக் மொழி மற்றும் செக் பண்பாடு ஆகியவை பிற ஐரோப்பிய மொழி மற்றும் பண்பாட்டிற்கு இணையானது என்று நிரூபிக்கப்பட்டது.  செக் தேசியத்தின் அடிப்படை செக் மொழி என்ற நிலையை பெரும்பாலானோர் ஏற்று  கொள்ள ஆரம்பித்தனர். 

 

முன்பே குறிப்பிட்டது போல் ஸ்லாவ் மொழியும் செக் மொழியும் அதிக ஒற்றுமை கொண்ட மொழியானாலும், இரண்டும் தனித்தனியே பரிணமிக்கத் தொடங்கிவிட்டன. செக் தேசியத்தின் அடிப்படை செக் மொழி என பெரும்பாலானார் விரும்பினாலும், செக் நிலப்பகுதியில் ஆரம்ப காலக்கட்டங்களில்   குடியேறிய இரண்டு  மொழிப்பிரிவினரும்  (செக் மொழி மற்றும் ஸ்லாவ் மொழி) உள்ளடக்கியதாக செக் தேசியம் இருக்க வேண்டும் என பலர் விரும்பினர். அவர்களில் ஒருவர் தான் டோமாஸ் மொசாரிக். செக்கோஸ்லோவியா நாடு சுதந்திரம் அடைவதில் இவரது பங்கு மிக முக்கியமானது.

 

உருவானது செக்கோஸ்லாவியா சுதந்திர நாடு

 

ஆஸ்திரிய - ஹங்கேரிய நாடுகளிடம் அடிமைப்பட்டிருந்த செக் மற்றும் ஸ்லோவாக் மக்கள் விடுதலை அடைய தக்க தருணத்தை எதிர்நோக்கியிருந்தார்கள். அதற்கு ஏற்றார்போல் முதல் உலகப்போர் அப்போது தொடங்கியது. செக் மக்களை அடிமைப்படுத்தி இருந்த ஆஸ்திரிய - ஹங்கேரி அரசு , ஜெர்மனியுடன் சேர்ந்து ஒரு அணியாகவும், அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன் மற்றும் பிரான்சு ஒன்றினைந்து நேச நாடுகள் என்ற பெயரில் ஒரு அணியாகவும் போரிட்டனர். டோமாஸ் மசாரிக், இந்தப் போரில் நேச நாடுகளுக்கு உதவ முடிவு செய்தார். செக் நாட்டிலிருந்து வெளியேறி ரஷ்யா நாட்டில் செக் மற்றும் ஸ்லோவ் மக்களைக் கொண்டு ஒரு தனிப்படை அமைத்தார். (சுபாஷ் சந்திரபோஸ் சிங்கப்பூரில் அங்கு இருந்த இந்தியர்களை வைத்து இந்திய தேசியப் படை உருவாக்கியதற்கு இணையான வரலாறு) . அந்த படை ரஷ்யப் படையினருடன் சேர்ந்து போரிட்டது.  உலகில் உள்ள அனைத்து செக் மக்களையும் ஒன்றுதிரட்டி அவர்களை நேச நாடுகளுக்கு ஆதரவான செயலில் ஈடுபட  வைத்தார். முக்கியமாக அவர் அறிவுசார் சமுதாயம் மற்றும் ஐரோப்பிய அதிகார மையங்களிடம் அதிக அளவில் பிரச்சாரம் செய்வதற்கு முக்கியத்துவம் கொடுத்தார். இலண்டனில் உள்ள புகழ்பெற்ற கிங்ஸ் கல்லூரியில் ஸ்லேவிக் மொழி ஆராய்ச்சியாளராகப் பணிபுரிந்தார். அவர் மேற்கத்திய நாடுகள் அனைத்திலும் "சிறிய நாடுகள் உருவாக்கத்தின் அவசியம்" குறித்த உரையாடலை துவக்கி வைத்தார். முக்கியமாக பிரிட்டன், பிரான்ஸ் நாடுகளில் அவரது பிரச்சாரம் நல்ல வரவேற்பை பெற்றது. அமெரிக்காவிற்கு சென்று அங்குள்ள தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள், மக்கள் என அனைவரையும் சந்தித்து செக் நாடு உருவாக்கத்தின் தேவையை பரப்புரை செய்தார்.1918ல் செக் நாடு உருவாக்குவதற்கு அடிப்படையான "வாஷிங்டன்  பிரகடனத்தை" அமெரிக்க அதிபரான உட்ரோ வில்சனிடம் அளித்தார்.செக் மக்களின் அர்ப்பணிப்பாலும், மசாரிக்கின் உழைப்பாலும் நவம்பர் மாதம் 1918ம் ஆண்டு செக் மற்றும் ஸ்லோவ் மக்களுக்கு விடுதலை கிடைத்து செக்கோஸ்லாவியா என்ற புதிய நாடு உதயமானது.

 

தேசிய மொழி பிரச்சனை

புதிதாக தோன்றிய நாட்டின் அடிப்படை அந்த நில பகுதியில் பல நூற்றுண்டுகளாக வாழ்ந்த பல்வேறு மொழிகளை பேசும்  இனக்குழுக்களை இணைத்ததாக என்று கருதிய மசாரிக் மொழிவாரி நாடு உருவாவதை தவிர்த்தார். பல மொழிகளை பேசுபவர்கள் வாழும் நிலப்பகுதிகளை ஒன்றினைத்து செக்கோஸ்லாவியா என்ற நாட்டை உருவாக்கினார்..அந்த நாட்டின் தேசிய மொழி என்ன வைப்பது என்ற விவாதம் எழுந்தது. அப்போது அந்த நாட்டில் பெரும்பான்மையாக செக் மொழியினரும் , ஸ்லோவ் மொழி பேசுபவர்களும் வாழ்ந்து வந்தனர்.  முன்பே குறிப்பிட்டிருந்ததுபோல இரண்டு மொழிகளும் நெருங்கிய தொடர்புடைய மொழிகள். இரண்டு மொழிகளுக்கும்  சம உரிமை அளிக்கும் விதத்தில் ஒரு புதிய முயற்சி மேற்கொள்ள பட்டது. புதிதாக இரண்டு மொழிகளையும் ஒன்றினைத்து செக்கோஸ்லோவாக் என்ற புதிய மொழியை உருவாக்கி அந்த மொழியை தேசிய மொழியாக அறிவித்தனர். செக்கோஸ்லாவாக் என்ற மொழி பெரும்பான்மையாக செக் மொழியையும் , அவற்றுடன் குறைந்த அளவில் ஸ்லேவ் மொழி வார்த்தைகளையும் சேர்த்து உருவாக்கபட்டது. அந்த புதிய மொழியை பரவலாக்கி செக் மற்றும் ஸ்லாவ் மொழி பேசும் மக்களை ஒரே மொழி பேசுபவர்களாக வருங்காலத்தில் உருவாக்கலாம் என்ற முயற்சி இதன் பின்னனியில் இருந்தது.  இதன் மூலம் மொழி  அடிப்படையிலான வலுவான தேசமாக இருக்கவும் வாய்ப்புள்ளதாக கருதினர்  இது ஒரு புதிய பரிசோதனையாகவும் பார்க்கப்பட்டது.  உண்மையில் இந்த முயற்சி பெரும்பான்மையாக இருந்த செக் மொழி,  மிகப்பெரிய அளவில் வேற்றுமை அடையாமலும், சிறுபான்மையாக இருந்த ஸ்லாவ் மொழியை செரித்து செக்கொஸ்லாவ் என்ற பெயரில் பெரும்பான்மை செக் மொழியை நிலை நிறுத்தும் முயற்சியாகவும்தான் இருந்தது. ஆனால் ஸ்லாவ் மொழியினரின் எதிர்ப்பாலும்  அதற்கான முழு முயற்சிகளை எடுக்காததாலும் இந்த முயற்சி வெற்றி அடையவில்லை. 1930க்களில் ப்ராக் மத்திய அரசு,  ஸ்லோவ் மொழிக்கான இலக்கண மற்றும் எழுத்தாக்கம் சார்ந்த தர அடிப்படைகளை செக் மொழி சார்ந்து உருவாக்கம் செய்ய முயன்றனர். இந்த முயற்சி வெற்றி அடைந்தால் ஸ்லாவ் மொழி செக் மொழிக்குள் செரித்துக் கொள்ளபட்டிருக்கும். ஆனால் ஸ்லாவ் மொழியினரின் எதிர்ப்பால் அது கைவிடப்பட்டது

 

தேசிய மொழியாக செக்கொஸ்லாவக் அறிவிக்கப்பட்டாலும் சிறுபான்மை மொழிகளுக்கு தகுந்த இடம் அளிக்கபட்டது. பெருமளவு மொழித் திணிப்பும் நடைபெறவில்லை. புதிய மொழியை பெருமளவு மக்கள் ஏற்று கொள்ளாததால் 1920 ஆம் ஆண்டில்  20 சதவிகிதத்திற்கும் அதிகமான மக்கள் ஒரு பகுதியில் ஒரு குறிப்பிட்ட மொழியை பேசினால் அந்த மொழியை அந்த பகுதியில் முழுமையாக பயன்படுத்த அனுமதிக்க சட்டமியற்றபட்டது. செக் மொழி பெரும்பான்மையாக பேசும் மக்கள் செக் மொழியையும், ஸ்லாவ் மொழி பெரும்பான்மையாக பேசும் மக்கள் ஸ்லாவ் மொழியையும் பயன்பாட்டில்  கொண்டிருந்தனர்.

 

அதிகாரத்தில் இருக்கும் மொழி , குரலற்றவர்களின் மொழியை தன்னோடு இணைத்து செரிக்க செய்யபட்ட முயற்சி தமிழக வரலாற்றிலும் நடந்துள்ளது.  சமஸ்கிருதம் ஆட்சிமொழியாக இருந்த பல்லவர்கள் காலத்தில் சமஸ்கிருதத்தை எழுத உருவாக்க பட்ட எழுத்துருதான் பல்லவ கிரந்த எழுத்து.   சோழர் காலத்தில் தமிழ் மொழியோடு , பெரும்பான்மையாக சமஸ்கிரதத்தை கிரந்த எழுத்து முறையில் கலந்து உபயோகிக்கும் முறை மணிப்பிரவாள நடை என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்பட்டது.  வடமொழியின் ஆதிக்கம் அதிகம் இருந்த அப்போதைய தமிழகத்தின் பகுதியான கேரளத்தில் , இந்த நடையின் பயன்பாடு மிக அதிகம் இருந்தது. அதனால் நாளடைவில் வடமொழி ஆதிக்கம் கொண்ட மலையாளம் என்ற புதிய மொழி அங்கு தோன்றி தமிழ்மொழி மறைந்து விட்டது. ஆனால மற்ற தமிழக நிலப்பரப்பில் அதற்கு தொடர்ந்து எதிர்ப்பு இருந்தாலும் , அந்த வழக்கம் பிற்கால சோழர் காலம் ஆரம்பித்து, பாண்டியர் , விஜயநகர மன்னர்கள், மராட்டியர் காலத்தில் வலுப்பெற்றது. ஆனால் ஆங்கிலேயர் காலத்தில் மறைமலை அடிகள்  போன்றோரின் பெரு முயற்சியால் தனித்தமிழ் இயக்கம் தோற்றுவிக்கப்பட்டு அந்த முயற்சி முறியடிக்கபட்டது.

 

நாஜி ஜெர்மனியின் பிடியில் செக்கோஸ்லோவியா

 

இரண்டாம் உலகப்போரின் போது ஜெர்மனி நாடு முதலில் ஜெர்மானியர்கள் அதிகம் வாழ்ந்த செக் எல்லை பகுதிகளை தன்னுடன் இணைத்தது. செக் மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியை பிறகு ஜெர்மனி ஆக்கிரமித்து ஜெர்மனி கட்டுப்பாட்டிலான ஒரு பொம்மை அரசாங்கத்தை அமைத்தது.  ஸ்லாவ் மக்கள் அதிகம் உள்ள பகுதியில், டிசோ தலைமையில் ஜெர்மனி ஆதரவு அரசை அமைத்து தனிநாடாகப் பிரகடனம் செய்தனர். நாஜி ஜெர்மனியின் ஆக்கிரமிப்புக் காலம் செக் வரலாற்றில் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.ஹிட்லரின் கொள்கைகளில் மிக முக்கியமானது ஆரிய இனவாதம் ஆகும். நாஜிக்களின் கருத்துப்படி ஆரிய இனம், மிகவும் சக்தி வாய்ந்த தலைமை இனம் (Master Race) ஆகும். ஒரு சில இனங்களில் ஆரிய இன மரபுப்பொருள்  ஓரளவு இருந்தால் அவர்களை மீண்டும் ஆரியமயமாக்க முடியும் என்றும், அப்படி இல்லை என்றால் அவர்கள் தாழ்வான இனத்தவர்கள் என்றும் முடிவு செய்தனர்.  அதனடிப்படையில் யூத இனம், ரோமா இனம் போன்றவர்களை தாழ்வானவர்கள் என்று முடிவு செய்து அவர்களை முழுமையாக அழித்து, வலிமை பொருந்தியவர்கள் மட்டும் வாழக்கூடிய புதிய உலகத்தை உருவாக்க வேண்டும் என்ற கருதுகோளைக் கொண்டு செயல்பட்டனர். செக் இன மக்கள் ஆரியமயமாக்களுக்கு தகுதியானவர்களா? என்பது குறித்த விவாதம் ஹிட்லரிடம் தொடர்ந்து இருந்தது. இறுதியாக 50 சதவித செக் மக்கள் ஆரியமயமாக்களுக்கு தகுதியானவர்கள் என்று முடிவு செய்யபட்டது. மீதி பேரை நாஜிக்கைதிகளுக்கான சிறைச்சாலையில் குளிர்ப் பிரதேசத்தில் அடைக்க விவாதம் நடந்தது. ஆனால் அதற்குள் இரண்டாம் உலகப்போர் இறுதிக் கட்டத்தை நெருங்கியதால் அதை செயல்படுத்த முடியவில்லை.

 

           1938 - 1945 வரை ஜெர்மனிமயமாக்கல் செக் நாட்டில் நடைமுறைப் படுத்தப்பட்டது. ஜெர்மனி மொழி முதல் அலுவல் மொழியாக அறிவிக்கப்பட்டது. அனைத்து பொது இடங்களிலும் அறிவிப்புப்பலகையில் செக் மொழியோடு ஜெர்மனியிலும் எழுத்துக்கள் எழுதுவது கட்டாயமாக்கப்பட்டது. ரேடியோக்களில் ஜெர்மனி மொழி நிகழ்ச்சிகள் திணிக்கப்பட்ட்டது. செக் மொழி நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டாலும் ஜெர்மனி மொழியில் துணை தலைப்பு கட்டாயமாக்கப்பட்டது. ஆரம்பப் பள்ளியிலிருந்து ஜெர்மனி மொழி கட்டாயமாக்கப்பட்டது.  ஒரு சில பாடங்களும் பல பள்ளிகளில் ஜெர்மனி மொழியிலேயே கற்றுக் கொடுக்க பணிக்கப்பட்டது. இதுபோன்ற அடக்குமுறையுடன் கூடிய மொழித்திணிப்பின் காரணமாக செக் மொழி அறிவுஜீவிகள் மிகுந்த அழுத்தத்திற்கு உள்ளானர். இதை எதிர்த்த பள்ளி ஆசிரியர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். பல்லாயிரம் ஆசிரியர்கள் அரசியல் கைதிகள் முகாமில் அடைக்கபட்டனர். நாஜிப் படையினரின் வெறியால் செக் நாடு முழுவதும் இலட்சக் கணக்கானோர் கொல்லப்பட்டு ரத்த ஆறு ஓடியது. இரண்டாம் உலகப்போர் முடிவுக்கு வந்த உடன் செக் மக்களின் ஜெர்மானிய வெறுப்பு  காரணமாக பல்லாயிரம் ஜெர்மானிய மக்கள் செக் நாட்டிலிருந்து வெளியேற்றப்பட்டனர். ஒரே இனம்! ஒரே மொழி!! என்ற  ஜெர்மானிய நாஜி பாசிசத்தத்துவத்தின் வெறியால் முழுவதுமாக அழிக்கப்படவிருந்த செக் மொழி, இரண்டாம் உலகப்போரில் ஜெர்மனி நாட்டின் தோல்வியால் தப்பியது. அதுமட்டுமன்றி ஹாப்ஸ்பர்க் முடியாட்சி காலத்திலிருந்து ஆதிக்கம் செலுத்திய ஜெர்மனி மொழி  செக் நாட்டிலிருந்து முழுவதுமாக நீக்கபட்டது.

 

சோவியத் யூனியன் செல்வாக்கின் பிடியில் செக்கோஸ்லாவியா

 

இரண்டாம் உலகப்போருக்கு பின் நடந்த கம்யூனிச புரட்சி, செக்கோஸ்லாவியா நாட்டை கம்யூனிச நாடாக மாற்றியது. கிழக்கு ஐரோப்பா முழுவதும் சோவியத் யூனியனின் செல்வாக்கின் கீழ் வந்தது. தன்னுடைய செல்வாக்குக்கு உட்பட்ட நாடுகளில் ரஷ்ய மொழியை திணிப்பதில் சோவியத் யூனியன் மும்முரமாக ஈடுபட்டது. இதற்கு முக்கிய காரணம் கிழக்கு ஐரோப்பிய நாடுகளின் பொருளாதாரம், பண்பாடு , அரசியல், சுற்றுலா என அனைத்துத் துறைகளையும் சோவியத் நாடு சார்பாக கட்டமைத்து  ஒரு வலுவான அரசியல் கூட்டணியை உருவாக்க நினைத்ததே ஆகும்.  ரஷ்யமொழி அலுவல் ரீதியான முதல் மாற்றுமொழியாக அறிவிக்கப்பட்டது.  ஜெர்மனி மொழியாவது பல நூற்றாண்டுகளாக ஹாப்ஸ்பர்க்  அரசின் மூலமாக தொடர்ச்சியாக திணிக்கப்பட்டு, அனைவராலும் படிக்கப்பட்டு வந்தது. ஆனால் ரஷ்ய மொழிக்கும் செக் நாட்டிற்கும் அதுவரை அதிக தொடர்பு இல்லை. ரஷ்ய மொழியை  அனைத்து பள்ளிகளிலும் நான்காம் வருடத்திலிருந்து  கட்டாயப்பாடமாக்கப்பட்டது. பள்ளிக்கூடத்தை முடிக்கும் மாணவர்கள் 6  ஆண்டுகளாவது ரஷ்ய மொழியை கட்டாயமாக படிக்க வைக்கப்பட்டனர். சோவியத் யூனியனின் கட்டுப்பாடுகள் மற்றும் கலாச்சாரத் தாக்குதலை எதிர்த்து 1968ல் மக்கள் வீதியில் இறங்கி போராடினர். இதற்கு ப்ராக் எழுச்சி என்று பெயர் பெற்றது. இதன் விளைவாக கட்டாய ரஷ்ய மொழிப் படிப்பிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டது. ஆனால் அடுத்த ஓரிரு ஆண்டுகளில் சோவியத் யூனியன் மற்றும் அதன் நட்பு நாடுகளின் ராணுவம் மக்கள் எழுச்சியை  நசுக்கி மீண்டும் தீவிர கம்யூனிச கொள்கை மற்றும் ரஷ்ய மொழித் திணிப்பை தொடர்ந்தது. ஆனாலும் ரஷ்ய மொழியில் தேர்ந்தவர்கள் என்ணிக்கை சுமார் 50 சதவிதம் மட்டுமே இருந்தது.1989ம் ஆண்டில் கம்யூனிசத்திற்க்கு எதிரான வெல்வெட் புரட்சி கம்யூனிச ஆட்சியையும் , ரஷ்ய ஆதிக்கத்தையும் முழுமையாக உடைத்து எறிந்தது.

 

உருவானது செக் குடிஅரசு

 

சோவியத் பிடியிலிருந்து விடுபட்ட செக்கோஸ்லாவியா நாடு, தன்னை தனி குடியரசு நாடாக பிரகடன படுத்தியது.  செக்கோஸ்லாவியா என்பது செக் மற்றும் ஸ்லாவ் இன மக்கள் இருவரும் இணைந்து வாழும் நாடு.  செக்கோஸ்லாவியா சோசியலிச நாடு என்ற தன்னுடைய பெயரை மாற்றி  செக்கோஸ்லாவிய குடியரசு என்று அறிவித்தது. ஸ்லாவ்  இன மக்கள் தங்கள் இரண்டாம் தர குடிமக்களாக பாவிப்பதுபோல உள்ளது  என கருதி, நாட்டின் பெயரை  செக்கோ -ஸ்லாவக் என்று ஹைபன் (-) உடன் வைக்க வேண்டும் என்று கூறினர். இதை "ஹைபன் போர்" என்றழைப்பர். ஆனால் முதலில் பெயரை செக் மற்றும் ஸ்லாவக் கூட்டாட்சி குடியரசு என்று முதலில் மாற்றினர். இது போர்க்களத்தில் நடந்த போர் அல்ல. ஆனால் இது மொழி சார்ந்த அடையாள குறியீடு பிரச்சனையேயாகும். தொடர்ச்சியாக இரு மொழியினருக்கும் பல்வேறு வேறுபாடுகள் தொடர்ந்து கொண்டே இருந்ததால், இரு தரப்பினரும் ஒன்றாக பேச்சுவார்த்தை நடத்தினர்.  அதன்முடிவில் இருவரும் தனிநாடாகப் பிரிவதே சிறந்தது என்று ஒப்புக்கொண்டு செக் குடியரசு மற்றும் ஸ்லாவக் குடியரசு என்ற இரண்டு நாடுகளாக பிரிந்தது. கிழக்கு ஐரோப்பாவில் கம்யூனிசம் உடைந்தபோது உருவான பல நாடுகளில் அண்டை நாடுகளுக்கிடையேயும் மற்றும் உள்நாட்டிலும் போர் நடந்து வருகிறது. ஆனால் செக் மற்றும் ஸ்லாவக் நாடுகள் மட்டும் எந்த போரும் இல்லாமல் சகோதரத்துவத்துடன் , அண்டை நாடுகளாக அமைதியாக பயணிக்கின்றனர். இதற்கு முக்கிய காரணம்  முந்தைய 300 ஆண்டுகால வரலாற்றில் செக் மற்றும் ஸ்லாவ் மொழி பேசும் மக்களிடையே தங்களுடைய  மொழி மற்றும் பண்பாட்டு திணிப்பை அடுத்தவர்மீது  நடைமுறைப்படுத்தவில்லை. அதேபோல மொழி சார்ந்த தேசமாக செக் குடியரசு உருவானாலும் நாட்டின் தேசிய மொழியாக செக் மொழியை அறிவிக்கவில்லை. ஆனால் அனைத்து அரசு அலுவல்களும் செக் மொழி கொண்டே நடைபெற அரசியல் சாசனம் உறுதி அளித்தது. மொழிரீதியான சிறுபான்மையினருக்கு முழுமையான உரிமையும் பாதுகாப்பும் அளிக்கிறது. அரசு பள்ளிகளில் செக் மொழி வழியில் நடத்தபட்டாலும் , குறிப்பிட்ட அளவிற்குமேல் சிறுபான்மை மொழியை தாய்மொழியாக கொண்டவர்கள் இருந்தால் அவர்களுக்கு அவர்களது தாய்மொழியில் பயிற்றுவிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

 

செக் குடியரசு உருவானவுடன் ரஷ்ய மொழியை இரண்டாவது மொழியாக படிக்கும் ஆர்வம் முழுவதும் குறைந்து ஜெர்மானிய மொழிமீது ஆர்வம் சில காலம் இருந்தது. ஆனால் ஆங்கில மொழியின் தேவையை உணர்ந்து அனைத்து மக்களும் ஆங்கிலத்தை இரண்டாவது மொழியாகப் படிக்கத் தொடங்கினர். அதனால்  உலகமயமாதல் மூலம் இளையதலைமுறையினர் பயனடைந்தனர். ஆங்கிலம் தவிர மற்றொரு மொழி பயிற்றுவித்த வந்த செக் குடியரசு அதன்  அவசியம் தற்போது இல்லை என்று அறிந்து அதை தேவைப்பட்டோர் மட்டும் படிக்கும் விருப்பப் பாடமாக மாற்ற முடிவு செய்தது.

 

பல்வேறு மொழி மற்றும் இன ரீதியான திணிப்புகளை எதிர் கொண்ட செக் மொழி, அந்த அடக்குமுறை காலத்திலேயே மொழியை செம்மையாக்கி முதிர்ச்சி பெறச்செய்து இன்று வளர்ந்து தனது பண்பாட்டை அடுத்த தலைமுறைக்கு கடத்துவதை நாம் காண்கிறோம். பெரும்பாலான காலக்கட்டத்தில் ஆட்சியாளர்களின் உதவி இல்லாமல் குடிமக்களின் உழைப்பு, தியாகம் மற்றும் முயற்சியால் தான் இந்த அற்புதம் நிகழ்ந்துள்ளது. இந்த வரலாற்றுப்போக்கை உலகின் வழக்கத்தில் உள்ள பல மொழிகளில் காணலாம். ஏன் தமிழ் மொழி உட்பட !.

 

“If you want Present to be different from the Past, Study the Past”

-        Baruch Spinoza

 

 https://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/44727-2023-01-30-07-30-06